Jump to content

இலங்கையிலும் மாலைதீவிலும் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் இடை ஓய்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இது மீண்டும் முகமலர்ச்சிக்கும் கைகுலுக்கலுக்குமான ஒரு தருணம். அசட்டை மனப்பான்மையுடனான பல வருடகால உறவுகளுக்குப் பிறகு, இந்தியாவும் மாலைதீவும் பாரம்பரிய நட்புறவின் நல்லியல்பான தோழமைப் பண்புக்கு திரும்பியிருக்கின்றன.கடந்த அக்டோபரில் எதிர்பாராத வகையிலான  தேர்தல் வெற்றியைப் பெற்ற மாலைதீவின் புதிய ஜனாதிபதி இப்ராஹிம் முஹம்மத் சோலீ இவ்வாரம் புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.தனது நாட்டின் " மிக நெருக்கமான நட்பு நாடு " என்று இந்தியாவை அவர் வர்ணித்தாார்.

Mohamed_Solih.jpg

ஜனாதிபதி சோலீயின் புதுடில்லி விஜயமும் அறிவிப்புகளும்  அவருக்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த கடுமையான இந்திய எதிர்ப்பாளரான  அப்துல்லா யாமீனினால் கடைப்பிடிக்கப்பட்ட உறுதியான சீனச்சார்பு கொள்கையில் இருந்து ஒரு பாரிய நகர்வைக் குறித்து நிற்கின்றன.மாலைதீவின் முதன்முதலாக ஜனநாயகரீதியாக தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி என்ற பெருமைக்குரிய முஹம்மத் நஷீத்தை பதவியில் இருந்து தூக்கியெறிநது சிறையில் அடைத்ததுடன் ் உச்சநீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் உட்பட உண்மையான எதிரிகளையும் கற்பனையான எதிரிகளையும் கொடூரமானமுறையில் அடக்கியொடுக்கி தனது எதேச்சாதிகார ஆட்சியை யாமீன் நடத்திக்கொண்டிருந்தார்.

நடைமுறையில் நோக்குகையில் இந்தியாவுடனான சகல உறவுகளையும் யாமீன் துண்டித்திருந்தார்.அதனால், 2015 ஆம் ஆண்டில் மாலைதீவுக்கு மேற்கொள்ளவிருந்த அரசுமுறை விஜயத்தை பிரதமர் நரேந்திர மோடி ரத்துச்செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்.அதனால் எந்தவிதத்திலும் குழப்பமடையாத யாமீன் சீனாவுடனான நெருக்கத்தை மேலும் இறுக்கமாக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். சீனாவும் பிரமாண்டமான செலவிலான திட்டங்களுக்காக பணத்தைக் கொட்டியது.மாலைதீவின் தலைநகர் மாலேயை அதன் விமான நிலையத்துடன் இணைக்கும் 2 கிலோ மீற்றர் கடல் பாலமும் அத்தகைய திட்டங்களில் ஒன்று.

மாலைதீவின் 1192 தீவுகளில் சிலவற்றில் துறைமுகங்களையும் இராணுவக் கட்டமைப்புகளையும் நிர்மாணிப்பதற்கான அனுமதியை சீனா பெற்றிருப்பதாக நம்பப்படுகிறது.சீனக் கடற்படைக்கப்பல்களும் மாலைதீவுக்கு வந்துபோயின.புதுடில்லியுடன் திட்டமிடப்பட்ட இராணுவ ஒத்திகையொன்றை மாலைதீவு ரத்துச்செய்தபோது அந்நாடு சீன முகாமுக்குள் விழுந்துவிட்டது என்பது தெளிவாக விளங்கியது.

இப்போது யாமீன் ஆட்சியதிகாரத்தில் இல்லை.சோலீயே ஜனாதிபதியாக இருக்கிறார்.நாடுகளுக்கு பெருமளவில் கடனுக்குள் மூழ்கவைத்து பெய்ஜிங்கின் இரும்புப்பிடியை இறுக்குவதற்கான வழமையான தந்திரோபாயத்தின் ஒரு அங்கமே மாலைதீவில் சீனா செய்த முதலீடுகள் என்பது இப்போது தெரியவந்திருக்கிறது.சீனாவிடம் மாலைதீவு 130 கோடி டொலர்களுக்கும் அதிகமாக கடன் பெற்றிருப்பதாக கணிப்பிடப்பட்டிருக்கிறது.இது அந்நாட்டின் நிகர உள்நாட்டு உற்பத்தியின் கால்வாசிக்கும் கூடுதலான தொகையாகும்.       மாலைதீவுக்கு 140 கோடி டொலர்கள்  உதவி வழங்குவதாக பிரதமர் மோடி உறுதியளித்திருக்கிறார். இந்த உதவி சீனா விரித்திருக்கும் கடன்வலையில் இருந்து அந்நாடு விடுபடுவதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கொடுப்பனவு மாலேயை மீண்டும் புதுடில்லியின் வளையத்தீற்குள் கொண்டுவந்துவிடும் என்று நம்பப்படுகிறது.

அதே போன்றே அயல்நாடான  இலங்கையிலும் அரசியல் நிகழ்வுகளில் அண்மையில்  ஏற்பட்ட எதிர்பாராத திருப்பங்கள் புதுடில்லிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.ஜனநாயகரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவிநீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அரசியலமைப்புக்கு முரணான முறையில் பிரதமர் பதவியில் நியமிக்கப்பட்ட சீனச்சார்பாளரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்தவார பிற்பகுதியில் இராஜினாமா செய்யநிர்ப்பந்திக்கப்பட்டார்.விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக்கப்பட்டதை இந்தியா வெளிப்படையாக வரவேற்றிருக்கிறது.' இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் முனனோக்கிய திசையில் தொடர்ந்து நகரும் என்று நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் ' என்று இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

ராஜபக்ச பெய்ஜிங்கிற்கு பெரிய சலுகைகள் சிலவற்றை வழங்கி இறுதியில் இலங்கையை பெரும் கடனுக்குள் மூழ்கடித்திருந்தார்.இதன் விளைவாக கொழும்பு சீனாவுக்கு தென்னிலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு கொடுக்கவேண்டியேற்பட்டது.விக்கிரமசிங்க இந்திய சார்பாளராக இருக்கக்கூடும், ஆனால், இலங்கையின் அரசியல் வர்க்கத்தின் பெரியதும் சக்திமிக்கதுமான பிரிவினர் அவ்வாறானவர்கள் இல்லை.விக்கிரமசிங்கவை அக்டோபர் இறுதியில் பதவிநீக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்தப் பிரிவைச் சேர்ந்தவரே.

மாலைதீவிலும் இலங்கையிலும் இந்தியாவுக்கு தற்போது நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கான ஒரு ஓய்வு  கிடைத்திருக்கக்கூடும்.ஆனால், அது தற்காலிகமானதாகவும் இருக்கலாம்.இரு நாடுகளினதும் உள்ளக அரசியல்தான் இந்தியாவுக்கு அனுகூலமானதாக வேலை செய்திருக்கிறதே தவிர, புவிசார் அரசியலின் இயக்க ஆற்றலில் எந்தவிதமான திடீர் மாறுதலும் எற்பட்டுவிடவில்லை.நாம் விரும்புகிறோமோ இல்லையோ சீனா அதன் பொருளாதார வல்லமை மற்றும் புதுடில்லிக்கு சமநிலையாக விளங்கக்கூடிய ஆற்றல் காரணமாக இந்தப் பிராந்தியத்தில் தொடர்ந்தும் செல்வாக்குடனேயே இருக்கிறது. அதேபோன்றே தெற்காசியாவில் இந்தியாவின் மேலாதிக்கம் பற்றிய அச்சவுணர்வு பிராந்தியத்தின் புவிசார் அரசியலில் விலக்கிவிடமுடியாத காரணியாக நிலைத்திருக்கிறது.

மறுபுறத்திலே, இந்தியாவின் மென்மையான போக்கிற்கு வேறுபட்டதாக அமைந்திருக்கும் சீன வேதாளத்தின் கட்டிப்பிடிப்பு பற்றிய பீதி காரணமாக சீனாவின் மீதே மீண்டும் முற்றுமுழுவதுமாக நம்பிச்செயற்படுவது குறித்து  ஆழமாக யோசிக்கவேண்டிய நிலைக்கு பிராந்தியத்தலைவர்கள் தள்ளப்படக்கூடும்.ஆனால், நீண்டகால நோக்கில் பார்க்கும்போது இந்தியாவின் அயலகத்தில் நிலைவரங்கள் கூடுதலான அளவுக்கு சிக்கலானவையாக மாறக்கூடும்.இதற்கு பிரதான காரணம் இந்து சமுத்திரத்தை தங்களது விளையாட்டு மைதானமாக  மாற்றுவதற்கு சீன ஆட்சியாளர்கள் கொண்டிருக்கும் உள்நோக்கமேயாகும்.

உலகளாவியதாக ஆழ்கடலில் செயற்படக்கூடிய வல்லமையுடையதாக தனது கடற்படையை சீனா துரிதமாக மேம்படுத்திவருகிறது.ஏற்கெனவே சீனக்கடலில் தன்முனைப்புடன் சீனா செயற்படுவதைப்போன்று உலகின் பல பாகங்களிலும் கடற்பரப்புகளில் சீன ஆதிக்க நிலைக்கே இது வழிவகுக்கும்.வம்புச்சண்டைக்காரர் போன்று செயற்படுகின்ற போட்டி நாடொன்று பிராந்தியத்தில் ஏற்கெனவே இந்தியாவின் செல்வாக்கிற்கு கடுமையான சோதனையாக விளங்குவதுடன் புதிதாக நிச்சயமற்றதன்மையை தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது.மாலைதீவிலும் இலங்கையிலும் காணக்கூடியதாக இருப்பதைப் போன்று திடீரென்று இந்திய விரோதப்போக்கு தோன்றுவதும் பிறகு சடுதியாக அந்த நிலை மாறுவதும் விதிவிலக்குகளாக இருக்கப்போவதில்லை.எதிர்காலத்தில் இத்தகைய போக்குகள் வழமையானவையாக வந்துவிடவும் கூடும். எமது பிராந்தியத்தில் இயல்பாகவே நிலையற்றவையாக இருக்கின்ற சிறிய நாடுகளின் சஞ்சலமான அரசியலினால் பாதிக்கப்படாதவையாக எமது நலன்களை பேணுமுகமாக இந்தியா கூடுதல்  விரிவான தந்திரோபாயமொன்றை வகுககவேண்டியது அவசியமானதாகும்.

இந்து சமுத்திரரப் பிராந்தியத்தின் இராணுவ மற்றும் பொருளாதார சூழலைப் பாதுகாப்பானதாக வைத்திருக்க ஜப்பானுடன் நெருக்கமானதும்கூடுதலான அளவுக்கு செயல்முறை நாட்டம் கொண்டதுமான பிணைப்பொன்றை ஏற்படுத்திக்கொள்வதே இந்தியாவுக்கு சாத்தியமானதாக இருக்கக்கூடிய வழிமுறையாகும்.வரலாற்றுப் பின்னணியுடைய கடந்தகாலம் ஒன்றை ஜப்பான் கொண்டிருந்தாலும் கூட தற்போது அந்த நாடு மேற்குலக வல்லாதிக்க நாடுகளைப் போன்று எதிர்மறையான இராணுவ தோற்றப்பாடொன்றைக் கொண்டிருக்கவில்லை.

தற்காப்பை அடிப்படையாகக் கொண்ட ஜப்பானின் இராணுவம் அடாவடித்தனமானதாக   இல்லாமல் ஒரு சமநிலையான படையாக காணப்படுகிறது.சீனாவையோ அல்லது அமெரிக்காவையோ பொறுத்தவரை அவ்வாறு கூறமுடியாது. இரு நாடுகளுமே இன்றைய உலகில் குறிப்பாக, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கணிசமான சந்தேகத்துடன் நோக்கப்படுகின்றன. சீனாவின் சந்தேங்களைப் போக்கும் நோக்குடன்  டோக்கியோ வகுத்திருக்கும் சில வியூகங்களுக்கு மத்தியிலும் அது வல்லமைமிக்கதொரு கடற்படையைக் கட்டியெழுப்புவதை நோக்கி உறுதியாக முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

டிஜிபோட்டியில் இராணுவத்தளம் ஒன்றை அமைப்பதற்கு ஜப்பான் மேற்கொண்ட தீர்மானமும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.அங்கு ஏற்கெனவே அத்தகைய இராணுவ பிரசன்னத்தை அமெரிக்காவும் சீனாவும் கொண்டிருக்கின்றன. இந்த தீர்மானங்கள் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் முக்கியமான பாதுகாப்புப் பாத்திரத்தை வகிப்பதில் ஜப்பானுக்கு  இருக்கும் தீவிரமான அக்கறையை வெளிக்காட்டுகின்றன.டோக்கியோவின் அந்த திட்டங்களுடன் இறுகப்பொருந்தக்கூடியதாக தனது திட்டங்களை வகுப்பது புதுடில்லிக்கு பயனுடையதாக இருக்கும்.அத்தகைய கூட்டு மாத்திரமே பரஸ்பரம் உதவியானதாக அமையும்.பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களைப் பெருமளவில் கொண்ட இந்தப் பிராந்தியத்தில் முதலீடுசெய்யக்கூடிய பாரிய மூலதனத்தையும் ஜப்பான் கொண்டுள்ளது.

இந்த திசையில் சிறிய அடிகளை  எடுத்துவைத்திருக்கும் புதுடில்லி ,  பெய்ஜிங்கின் உணர்வுகள் பற்றிய அதீத அக்கறை காரணமாக தடுமாறுகிறது.எல்லையோரம் இராணுவ நெருக்குதல்களைத் தவிர்க்கவேண்டும் என்ற பெய்ஜிங்கின் கண்டிப்பான கோரிக்கைகள் விடயத்தில்  ஓரளவுக்கு இணங்கிச் செயற்படவேண்டியது அவசியம் என்கின்ற அதேவேளை, ஏககாலத்தில் புதுடில்லி டோக்கியோவுடன் அரசியல் - பொருளாதார - இராணுவக் கூட்டணியொன்றையும் வெளிவெளியாக ஏற்படுத்திக்கொள்ளவும் வேண்டும்.

இந்து சமுத்திரத்தில் பலம்பொருந்தியதும் நம்பகமானதுமான புவிசார் அரசியல் கூட்டணியொன்றே மிகப்பெரிய உறுதிப்பாட்டுச் சக்தியாக இருக்கும். மாலைதீவிலும் இலங்கையிலும் காணக்கூடியதாக இருந்தததைப் போன்ற பாதகமான உடன்படிக்கைகளும் உறுப்பாடில்லாத கூட்டணிகளும் எதிர்காலத்தில் உருவாகாமல் முன்கூட்டியே தடுப்பதற்கும் அத்தகைய கூட்டணி பயனுடையதாக இருக்கமுடியும்

இந்திரனில் பானர்ஜி

( கட்டுரையாளர் சுயாதீனமான பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகார ஆலோசகர்)

http://www.virakesari.lk/article/46725

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.