Jump to content

சிறிசேன என்ற நோய்க்குறி ; நாட்டையே பணயக்கைதியாக வைத்துள்ளார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறிசேன என்ற நோய்க்குறி ; நாட்டையே பணயக்கைதியாக வைத்துள்ளார்

 

- அமீர் அலி

    

அக்டோபர் 26 க்கு பிறகு இலங்கையில் நடந்துகொண்டிருப்பவை நாட்டின் ஜனநாயகத்தில் முன்னொருபோதுமே நாம் காணாதவை. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் ஒன்று இல்லாமல் இலங்கையர்கள்  முன்னர் ஒருபோதும் இருநந்ததில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகு தற்போதுள்ளவரைப் போன்று  தனது முரண் இயல்புகளையே நிலைபேறானவையாகக்கொண்ட ஒரு ஜனாதிபதியும் முன்னர் ஒருபோதும் இருந்ததில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சிறுபான்மையினக் கட்சிகளும் ஜே.வி.பி.போன்ற சிறிய கட்சியும் எதிர்காலச் சந்ததிகளின் நலனுக்காக ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு  ஐக்கியப்பட நிர்ப்பந்திக்கப்பட்ட விதிவசமான நிலைமையும் முன்னர் ஒருபோதும் தோன்றியதில்லை.  

        mairhtipala.jpg

நாட்டினதும் அதன் ஜனநாயகத்தினதும் மிகவும் குறிப்பாக ஜனாதிபதியின் செயற்பாடுகளினதும் கதி குறித்து நீதித்துறை என்ன கூறப்போகிறதோ என்ற திகைப்புடனும் திண்டாட்டத்துடனும் இலங்கையர்கள் இன்றுபோல் முன்னென்றுமே காலையில் விழித்தெழுந்ததில்லை.இதுவே என்றுமே நினைவைவிட்டு அகலாமல் இருக்கப்போகின்ற பொலனறுவையைச்  சேர்ந்த ஜனாதிபதி சிறிசேன  பதவியைவிட்டு எந்தவித கௌரவிப்பும் இல்லாமல் விலகும்போது இலங்கையர்களிடம் கையளித்துவிட்டுச் செல்லப்போகிற ஒரு ' நோய்க்குறியாகும்.'

தெரிவுசெய்யப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது தனக்கு இருக்கும் தனிப்பட்ட வெறுப்பு காரணமாக ஜனாதிபதி சிறிசேன முழு நாட்டையுமே பணயமாக வைத்திருக்கிறார். ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களால் (தங்களது தலைவர் என்று தெரிவுசெய்யப்பட்ட விக்கிரமசிங்கவின் திறமையின்மையும் தகுதியின்மையும் இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் மக்களால் ஏற்கெனவே மதிப்பிடப்பட்டுவிட்டன. ) தனக்கு விருப்பமான ஒருவரைத்தவிர, வேறு எவரையும் பிரதமராக நியமிக்க ஜனாதிபதி தயாரில்லை. அதனால்தான் பதினான்காவது லூயி மன்னன் ' நானே அரசு ' என்று பிரகடனம் செய்ததைப் போன்று சிறிசேனவும் ' நானே அரசாங்கம் ' என்று கர்வத்தனமாகக் கூறியிருக்கிறார். லூயி மன்னன் அந்தப் பிரகடனம் ஒரு புரட்சியைக் கொண்டுவந்தது. எமது ஜனாதிபதியின் பிரகடனம் எதைக் கொண்டுவரப்போகிறதோ யாருமறியார்.

அதேவேளை, இலங்கையின் திறந்த பொருளாதாரம் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நிராதரவாக விடப்பட்டிருக்கிறது.திறந்த பொருளாதாரத்தின் முக்கியமான ஒரு கூறான உல்லாசப்பயணத்துறையும் தொழில்வாய்ப்பு பெருக்கத்துக்கு பெரிதும் அவசியமானதாகிவிட்ட தனியார் முதலீடுகளும் ஜனாதிபதியின் எதிர்மறையான நடவடிக்கைகளின் புறத்தூண்டுதல்களினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சிக்காமல் கவனிக்காமல்விட்ட வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு கூரையைப்பிரித்துக்கொண்டு வானளாவ உயர்ந்துகொண்டு செல்கிறது.

தற்போது பிரான்ஸ் நாட்டில் நடைபெறுகின்றவற்றைப் பற்றி சிந்தித்துப்பார்ப்பதற்கு ஒரு சில மணித்தியாலங்களை ஜனாதிபதி சிறிசேன செலவிடவேண்டிய நேரம் இது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பே பிரெஞ்சு தொழிலாளர்களையும் மாணவர்களையும் சாதாரண மக்களையும் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ய வைத்திருக்கிறது. அவர்கள் இப்போது ஜனாதிபதி மக்ரோன் பதவிவிலக வேண்டுமென்று கோருகிறார்கள். அதே கதி தனக்கு ஏற்படுவதைத் தவிர்க்க ( தானே அரசாங்கம் என்று பிரகடனம் செய்கின்ற) ஜனாதிபதி சிறிசேன எதையாவது செய்வாரா? ஜனாதிபதி அவர்களே, மக்கள் அரசியலமைப்பை அல்ல உணவையே சாப்பிடுகிறார்கள். தாங்கள் பட்டினியில் வாடுவதாக அழுதுகொண்டு இலங்கைச் சிறுவர்கள் பொலிஸ் நிலையத்துக்குச் செல்வது பௌத்த நாடொன்றுக்கு அழகல்ல.

சிறிசேனவின் அரசியலமைப்பு அடாவடித்தனங்களுக்கு ஆதரவான முறையில் நீதிபதிகள் தீர்ப்பை வழங்கினாலும் கூட  தனது பதவிக்கு அவர் ஏற்படுத்திய சேதங்கள் வரலாற்றில் நிலைத்திருக்கவே போகின்றன. அவரை அவ்வாறு செய்ய அனுமதித்த அரசியலமைப்பு பெருமளவுக்கு மாற்றியமைக்கப்பட்டாலும் கூட அந்தச் சேதங்கள் அழியாது. இன்றைய அரசியலமைப்பின் தந்தையான ஜே.ஆர். ஜெயவர்தன தனது மரணத்துக்கு முன்னதாக ஒரு மன்னனாக வரவிரும்பினார். அதன் காரணத்தினால்தான் தனது விருப்பத்துக்கேற்ற முறையில் நாட்டின் அரசியல் கட்டமைப்பை மாற்றியமைக்க சகல வல்லமையும் கொண்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையைக் கொண்டுவர அவர் விரும்பினார்.

அந்த காலகட்டத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழ்நிலைகளும் அரசியலில் எவராலும் சவாலுக்குட்படுத்தமுடியாத மூத்த தலைவராக விளங்கிய ஜெயவர்தனவின் அனுபவ முதிர்ச்சியும் அந்த சிறப்புரிமைகளை அனுபவிக்க அவரை அனுமதித்தன. அவரைப் போன்று பாவனைசெய்ய தற்போதைய ஜனாதிபதி விரும்புகிறார். ஆனால் நேரமும் சூழ்நிலையும் மாறிவிட்டன. பொருளாதார மற்றும் நிருவாக விவகாரங்களில் ஊழலும் முறைகேடுகளும் தலைவிரித்தாடிய ஜே.ஆரின் திறந்த பொருளாதாரத்தின் அனர்த்தத்தனமான விளைவுகளும் தவறான கைகளுக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி போனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களும் முன்னைய மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் வெட்டவெளிச்சமாகத்  தெரிந்தன. தற்போதைய ஜனாதிபதியின் கீழும் அந்த நிலைவரங்களில் எந்த மாற்றமும் ஏற்பட்டதாக இல்லை. இரு விடயங்களிலும் கடுமையான மாற்றங்களைச் செய்யவேண்டிய நேரம் இதுவாகும்.

 

http://www.virakesari.lk/article/46112

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கட்டுரை.

அமீர் அலி எனது விருப்பமான ஆய்வளார்.

The Sirisena Syndrome, என்று Colombo Telegraph  இல் வந்த கட்டுரையின் தமிழாக்க‌மே  இது.

Link to comment
Share on other sites

 

 

 

அதிகாரத்தை கல்லெறிக்குட்படுத்திய ஜே. ஆரின் அரசியலமைப்பு

 

JR-jayawardene.

 

(அதிகாரத்தை உருவாக்குவதிலிருந்த பிரச்சினை – 4)

 

1977 ம் ஆண்டின் பாராளுமன்ற தேர்தல் முறையும், முறையான இனமொன்றாக அமையப் பெற்றிருக்காத இனமொன்றில் இடம்பெற்ற வெடிப்புக் கீறலின் முக்கிய வளர்ச்சிப் போக்கை காட்டும் தேர்தலொன்றாக கருதப்படுகின்றது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி இந்தத் தேர்தலை தமிழீழ இராச்சியமொன்றுக்காக தமிழ் மக்களாணையை கோருகின்ற தேர்தலொன்றாக ஆக்கியிருந்தார்கள். அப்போது தமிழர்களது அங்கீகாரம் பெற்ற தலைவராக இருந்தசெல்வநாயகம் மரணத்தை தழுவியிருந்த அதேவேளை, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் புதிய தலைவராக அமிர்தலிங்கம் நியமிக்கப்பட்டிருந்தார்.

 

77ன் தேர்தல் பெறுபேறு

இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு பாராளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மைப் பலம் கிடைத்த போது சம்பிரதாய இடதுசாரிக் கட்சிகள் இரண்டும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெறாத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டிருந்ததோடு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ எட்டுத் தொகுதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டு படுதோல்வியை தழுவிக் கொண்டது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 18 தொகுதிகளைக் கைப்பற்றி பாராளுமன்றத்தில்எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பை சுவீகரித்துக் கொண்டது. எனினும் அந்தத் தேர்தலில் தமிழீழ அரசொன்றுக்கான மக்களாணை கிடைக்கப் பெற்றிருந்தது வடக்கில் மாத்திரமாகும். இந்த முன்னணிக்கு வடக்கில் கிடைத்தவாக்குகளின் எண்ணிக்கை 278, 273 ஆகும். இது பயன்படுத்தப்பட்ட மொத்த வாக்குகளில் 27.47 சதவீதமாகும். தமிழ் தலைவர்கள் சத்தியவாளர்களாயின் குறைந்தது கிடைத்த தேர்தல் பெறுபேற்றின் பின்னராவது ஈழ அரசுசம்பந்தமான கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய ஒரு நிலைக்கு இட்டுச் சென்றிருக்க வேண்டும். எனினும் அவ்வாறான ஒரு நிலை இடம்பெறவில்லை.

பாராளுமன்றத்தில் ஆறில் ஐந்து பலத்தை பெற்றிருந்த ஜே.ஆர். ஜயவர்தனவுக்கு அரசியலமைப்பை மாற்றி புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கிக் கொள்வதற்கு அவசியப்பட்டது. பொது நலன்களுக்காகவன்றி, அவரது தனிப்பட்ட நலன்களுக்காகவேயாகும். அரசாங்கத்தின் சகலவித அதிகாரங்களும் தனக்கு கிடைக்கத்தக்கதாகவும், இருக்கின்ற அரசாங்கத்தின் அதிகாரங்கள் மாற்றமடையாதவாறும் அரசியலமைப்பொன்றை உருவாக்கிக் கொள்வதே அவரது நோக்கமாக இருந்தது.

அவர் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் நோக்கில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவு பெறுவதற்கு முன் அவர் மேற்கொண்ட முதலாவது நடவடிக்கை, பிரதமர் பதவியிலிருந்த தனக்கு, தான் உருவாக்க எதிர்பார்த்திருக்கும் ஜனாதிபதி பதவியின் அனைத்து அதிகாரங்களோடும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அந்த ஜனாதிபதி பதவி தனது கரங்களுக்கு கிட்டக் கூடியவாறு பழைய அரசியலமைப்பில் திருத்தமொன்றை மேற்கொண்டதாகும். இதன்மூலம் அவர் புதிய அரசியலமைப்பை உருவாகுவதற்கு முன்னரே, உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பின் மூலம், நிர்வாகிக்கு கிடைக்கவுள்ள அனைத்து அதிகாரங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டார். இதனை அரசியலமைப்புக்குட்பட்ட செயலாகக் கருத முடியாது.

ஜே.ஆர். ஜயவர்தன, இருந்த பாராளுமன்ற ஆட்சி முறையின் கீழ் 1977 ஜுலை 23 ஆம் திகதி பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். பிரதமரை ஜனாதிபதியாகவும் நிறைவேற்றதிகாரியாகவும் நியமிப்பதற்கேதுவாக 1977 செப்டெம்பர் 20 ம் திகதி பழைய அரசியலமைப்புக்கு இரண்டாவது திருத்தமொன்றை முன் வைத்தார்.

 

மக்களுக்கு மாயை காட்டுவது

பொதுவாக சட்ட மூலமொன்றை பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்குட்படுத்துவதற்கு ஒரு வாரத்துக்கு முன் பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக அரசாங்க வர்த்தமானியில் அதனை பிரசுரிக்க வேண்டும். பாராளுமன்ற நிலையியற்கட்டளைக்கேற்ப சட்டமூலம் நிகழ்ச்சி நிரலுக்குட்படுத்தியதன் பின் ஏழு தினங்களாகும் வரை அச்சட்ட மூலத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாது. அவ்வாறு செய்வது, பொது மக்கள் அறிந்து கொள்ளாது, அவர்கள் தலையிடதேவைப்படின் அதற்கு சந்தர்ப்பம் வழங்காது சட்டமூலமொன்றை இரகசியமாக நிறைவேற்றிக் கொள்வதைத் தடுப்பதற்கேயாகும். எனினும் அதே முறையிலல்லாத அரசியலமைப்பின் 55 வது பந்தியின் விதிமுறைகளுக்கேற்பஉடனடியாக நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய சட்ட மூலங்களும் உள்ளன. அந்த விசேட பிரிவில் உள்ளடங்குவது, உடனடியாக நிறைவேற்றிக் கொள்ளப்படாதவிடத்து நாட்டுக்கு பாரிய நட்டத்தை ஏற்படுத்தக் கூடிய செலாவணி வருமானத்தின் விகிதாசாரத்தில் ஏற்படும் மாற்றம், வரி மாற்றம் போன்ற காரணிகளாகும்.

எனினும் வியப்படையக் கூடியவாறு ஜே.ஆர். ஜயவர்தன புதிய அரசியலமைப்பு கூட இல்லாது, முற்று முழுதான அரசியலமைப்பையும் தலைகீழாக மாற்றுவதற்குக் காரணமான அரசியலமைப்புத் திருத்தத்தை ஏற்படுத்தியது, மக்கள் தெளிவூட்டப்படாது, எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாதவாறு 55 வது பந்தியின் கீழ் அவசர சட்ட மூலமொன்றை நடைமுறையிலாகும். சட்டமூலம் இயற்றும் துறையில் எம்மிடையே இருந்த பெரிய விற்பன்னராகக் கருதப்படக் கூடிய கலாநிதி என்.எம். பெரேரா அது பற்றிக் குறிப்பிட்ட போது, நாகரீக உலகில் அரசமைப்பு உருவாக்கும் வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவசர நடவடிக்கையாகக் கருதிஅரசியலமைப்பு திருத்தமொன்றினை மேற்கொண்ட சந்தர்ப்பத்தை தான் இதுவரை அறிந்ததே இல்லை எனக் குறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பான யோசனைகளை ஆராய்வதற்கு தெரிவுக்குழுவொன்றை நியமித்ததும் அந்த அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்டதன் பின்னராகும். தெரிவுக் குழுவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இருவர் உள்வாங்கப்பட்டிருந்த போதிலும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தனி நாடொன்றுக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக தெரிவுக் குழுவில் சம்பந்தப்படவில்லை. இவர்களை இணைத்துக்கொள்வதற்கான எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டதாகவும் புலப்படவில்லை. இறுதியாக, கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய இனக் குழுவொன்றின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்ளாத நிலையிலேஅரசியலமைப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. எனவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த பிரதிநிதிகள் உடனடியாக தெரிவுக் குழுவிலிருந்து வெளியேறினர். இதன் காரணமாக அரசியலமைப்பு ஒருதலைப் பட்சமான முறையிலே உருவாக்கப்பட்டது.

 

அரசியலமைப்புச் சுரண்டல்

கலாநிதி கே.எம்.த சில்வா அவரது ஜே.ஆர் ஜயவர்தனவின் சரிதையில் 78 வது அரசியலமைப்புப் பற்றிக் குறிப்பிடும் போது, அந்த அரசியலமைப்பு முறை இலங்கையில் இதுவரை இருந்த அரசியலமைப்பு மற்றும் அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானிய அரசியலமைப்புகளில் காணப்படும் பல்வேறுபட்ட விடயங்களை ஆக்கபூர்வமாக கணக்கிலெடுத்து இலங்கைக்கு விசேடமான, தேவைக்குப் பொருந்தக் கூடியவாறு உருவாக்கப்பட்ட அரசியலமைப்பாகுமென கூறியிருந்தார்.

உண்மை அதுவல்ல. கலாநிதி என்.எம். பெரேரா கூறியிருந்தவாறு இதனை நோக்குவோமாயின் இது எவ்வித பொருத்தமற்ற, சிக்கலான முடிவுகளையொத்த, கணிப்பிட முடியாத அரசியலமைப்புக்கள் பலவற்றை ஒன்றிணைத்து உருவாக்கிய அரசியலமைப்புக் கூழ் பானையாகும்.

உள்ளீர்க்கப்பட்ட விடயங்கள் மற்றும் அதன்மூலம் உருவாக்கப்பட்ட நிறுவன முறைமைகள் வரையறைக்குட்பட்டிருந்த போதிலும் அதுவரையிலிருந்த பாராளுமன்ற ஆட்சிமுறை மிகவும் பொருத்தமான, ஒன்றிணைந்த தன்மை கொண்ட, ஆட்சி முறையாக இருந்தது. ஆளுநரின் நிலையும் பிரித்தானிய அரசியலமைப்புக்குட்பட்ட மன்னரின் நிலைக்கு சமானமாக இருந்தது. மக்களது வாக்கின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளிடையே தெரிவு செய்யப்படுகின்ற பிரதமர் உட்பட்ட அமைச்சரவை, பாராளுமன்றத்திற்கு பதிலளிக்கக் கூடிய பொறுப்புக்கு கட்டுப்பட்டிருந்த, பொது மக்களது சுய உரிமை அதிகாரத்தை கொண்டிருந்த பாராளுமன்றம், அரச அதிகாரத்தை தன்னகத்தே கொண்ட அதிஉயர் இடமாக விளங்கியது.

பொது மக்கள் தமது உச்சபட்ச அதிகாரத்தை பயிற்சிக்குட்படுத்தியது பாராளுமன்றத்துக்கு பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில் தமது வாக்குரிமையை பயன்படுத்தியன் மூலமாகும். தேர்தல்களின் மூலம் தாம் விரும்பிய அரசாங்கமொன்றை அமைத்துக் கொள்வதற்கான அதிகாரம் பொது மக்களுக்கு இருந்ததை போன்றே, ஆட்சியிலிருக்கும் அரசாங்கமொன்றை தோல்வியடையச் செய்வதற்கான அதிகாரம் பாராளுமன்றத்துக்கு இருந்தது.

இடையிடையே நடத்தப்படுகின்ற இடைக்கால தேர்தல்கள், அதிகாரத்திலுள்ள அரசாங்கம் பற்றி மக்களிடையேயுள்ள பிரபல்யத்தை உரசிப்பார்க்கும் அளவுகோளாக பயன்படுத்தப்பட்டன. பெரும்பாலான தேர்தல்களில் ஆட்சியிலிருந்த அரசாங்கம் தோல்வியை தழுவியதோடு எதிர்க்கட்சி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டது. அந்த அரசியலமைப்பானது எதிரணியினருக்கு அதிகாரத்தை கைப்பற்றும் சிறந்த வாய்ப்பொன்றை வழங்கும் ஒரு முறையாக நன்றாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. தேர்தல்கள் சம்பந்தமாக முறையான சட்டதிட்டங்கள் காணப்பட்டதோடு, அவற்றை மீறுவோர் பெரும்பாலும் தேர்தல் முறைப்பாடுகள் காரணமாக தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பினால் பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்டிருந்த அதியுயர் அந்தஸ்தை நீக்கி, தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியை, ஆட்சி அதிகாரத்தின் அதியுயர் பீடநிறுவனமாக மாற்றி, பாராளுமன்றத்தை ஜனாதிபதியின் இறப்பர் முத்திரையெனும் நிலைக்கு உட்படுத்தினார். ஜனாதிபதி அரசாங்கத்தின் பிரதான நிறைவேற்றதிகாரியாவதோடு, முப்படைகளினதும் கட்டளையிடும் அதிகாரியாகவும் செயற்பட்டார். இவர் அரசாங்கத்தின் பிரதானியாகவும், ஜனாதிபதியென்ற ரீதியில் அவரால் தோற்றுவிக்கப்படும் அமைச்சரவையின் பிரதானியுமாவார். இவர் பாராளுமன்றத்துக்கு சமுகமளிக்க மாட்டார்.

பாராளுமன்றத்துக்கு பொறுப்புக் கூற வேண்டியவருமல்ல. ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்குவதற்கு முன்வைக்கப்படும் குற்றவியல் பிரேரணையொன்றின் போதல்லாது, பாராளுமன்றத்தில் ஜனாதிபதியை விமர்ச்சிக்க முடியாது. ஜனாதிபதி சட்டத்துக்கு அடிபணிய முடியாது. அவரால் மேற்கொள்ளப்படுகின்ற, மேற்கொள்ளாமல் தவிர்க்கப்படுகின்ற ஏதும் குற்றங்கள் சம்பந்தமாக எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர முடியாது. அமைச்சரவைக்கெதிராக முன்வைக்கப்படுகின்ற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் அமைச்சரவையை நீக்க முடியுமான போதிலும், அமைச்சரவை முக்கியஸ்தராக ஜனாதிபதி செயல்படுகின்ற போதிலும் அவருக்கு இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் செல்லுபடியாகாது. ஜனாதிபதி வரையறுத்த காலத்துக்கு தான் விரும்பும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றத்தை ஒத்திப்போட முடிவதோடு, பாராளுமன்றத்துக்கு ஒரு வருட காலம் பூர்த்தியானதன் பின் தான் விரும்பும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றத்தை கலைத்துவிட முடியும்.

 

சட்டத்துக்கு கீழ்படியாத ஆட்சியொன்றை ஏற்படுத்தல்

அமைச்சரவையை நியமிப்பதற்குள்ள அதிகாரத்தைப் போன்றே தனக்கு விருப்பமான எத்தனை அமைச்சுப் பொறுப்புக்களையும் தனது அதிகாரத்தின் கீழ் வைத்துக் கொள்வதற்குரிய அதிகாரம் இவருக்குள்ளது. உயர் நீதிபதிகள், தூதுவர்கள் போன்ற அரச உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதற்கான அதிகாரத்தையும் இவர் கொண்டிருப்பார். அவருக்குரிய சொத்துக்களை விற்பனை செய்தல், குத்தகைக்கு விடல், உரிமையாக்குதல், வழங்குதல்போன்றவற்றுக்கான அதிகாரமும் இவருக்குண்டு. இவர் சட்டத்துக்கு அப்பாற்பட்டு இருப்பதன் காரணமாக பொதுச் சொத்துக்களுக்குப் பொறுப்பாளர் என்ற வகையில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடிய அதிகாரமும் இவருக்குள்ளது. இவர் பெற்றிருக்கும் இக்காப்பகம் இவர் மட்டுமன்றி, அவர் விரும்பும் எவராக இருப்பினும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அவ்வாறு அரசாங்கத்தின் அனைத்து அதிகாரங்களும் இவருக்குள்ளது. இது எந்தவொரு நிர்வாகத்துக்கும் கட்டுப்படாத ஒரு பாரிய சக்தியாக விளங்குகிறது.

இவ்வாறான முறையில் ஜே.ஆர். ஜயவர்தனவினால் உருவாக்கப்பட்டுள்ள நிறைவேற்றதிகார ஜனாதிபதிமுறை ஒரு சில நாடுகளில் அமுல்படுத்தப்படுகின்ற நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை மாதிரியாகக் கொண்டவாறல்லாது இலங்கைக்கே உரித்தானதாக அமைந்த, கட்டாக்காலி மாதிரியைக் கொண்டதாகும். உலகிலுள்ள பலம் வாய்ந்த ஜனாதிபதியாகக் கருதப்படுபவர் அமெரிக்க ஜனாதிபதியாவார். ஆனால், அமெரிக்க ஜனாதிபதி கூட சட்டத்துக்கு கட்டுப்படுபவராவார். அரசியலமைப்புக்கு முரணான அவரது எந்தவொரு கட்டளையையும் அல்லது செயற்பாட்டையும் வலுவற்றதாக்கக் கூடிய அதிகாரம் அமெரிக்க உயர் நீதிமன்றத்துக்கு உள்ளது. அமெரிக்க ஜனாதிபதிக்கு தான் விரும்பியவாறு காங்கிரஸை கலைத்து விட முடியாது. பதவிக் காலம் முற்றுப் பெறுவதற்குமுன் தான் விரும்பும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது. அமெரிக்காவின் உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பது ஜனாதிபதியாக இருக்கின்ற போதிலும், அவ்வாறு நியமனம் பெறுகின்ற நபர்கள் கண்டிப்பான பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு, பொருத்தமற்றவர்கள் இருப்பின் அந்நியமனத்தை அனுமதிக்காதிருக்கும் அதிகாரம் காங்கிரசுக்குஉள்ளது.

ஜே.ஆர். ஜயவர்தன 78 வது சட்ட மூலத்தை அரசியலைமைப்பினுள் சுற்றோட்டமுள்ள சமநிலை பேணத்தக்கதாக இருக்க வேண்டிய அமைப்பு முறையை கவனத்திற் கொள்ளாது, ஜனாதிபதியை சட்டத்துக்கு கீழ் படியாத நிலைக்குநியமித்தமைக்கப்பால், அவருக்கு சர்வ வல்லமை பொருந்திய அதிகாரத்தை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பாக கருத வேண்டியுள்ளது. அமெரிக்காவின் அரசியலமைப்பு கருதப்படுவது மொன் டெங்கியூவின்அதிகாரத்தை பரவலாக்கும் சித்தாந்தம் சொல்லுக்குரிய கருத்தோடு உருவாக்கப்பட்ட அரசியலமைப்பாகும். மொன்டெங் கியூபவின் அதிகாரப் பரவல் சித்தாந்தத்துக்கேற்ப சட்டமியற்றல், அவற்றை அமுல்படுத்தல் போன்றஒவ்வொன்றும் சுயாதீன அமைப்புக்களிடம் இருக்க வேண்டும். இவ்வதிகார அமைப்புகள் ஒன்றை மற்றையது தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாதவாறு இருக்க வேண்டும். ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசியலமைப்பு மொன்டேங்கியூவின் அதிகாரப் பரவலாக்கல் சித்தாந்தத்தை தலைகீழாக மாற்றும் ஒரு அரசியலமைப்பாகவே கருத வேண்டியுள்ளது. இது தயாரிக்கப்பட்டிருப்பது ஜனாதிபதி, பாராளுமன்றம் மற்றும் நீதிமன்றத்துக்கு மேலாக இருந்து இவ்வதிகார சபைகளிரண்டையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடியனவாகும்.

அரசமைப்புக் கண்ணோட்டத்திலிருந்து இதனை நோக்கும் போது, 78 வது அரசியலமைப்பானது மிகவும் பிற்போக்கான, முன்னேற்றகரமற்ற அரசியலமைப்பாக கருதப்பட்டாலும், மனித உரிமைகள், சிறுபான்மையினரின் உரிமைகள் என்ற ரீதியில் நோக்கும் போது அது கொல்வினின் குடியரசு அரசியலமைப்பைவிட முற்போக்கான அரசியலமைப்பாகுமென கூற முடியும்.

அரசியலமைப்பை உருவாக்குவதில் தமிழ் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்ளல் இடம் பெறாதிருந்த போதிலும் அவ்வரசியலமைப்பு தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதற்காக ஆகக் கூடிய முயற்சிகளை மேற்கொண்டிருப்பது குறிப்பிட வேண்டியதொன்றாகும்.

அவர் சிங்கள மொழிக்கும் பௌத்த மதத்துக்கும் வழங்கியிருந்த முக்கியத்துவத்தை நீக்காதிருந்த போதிலும் சிங்களமல்லாத, பௌத்தரல்லாத சிறுபான்மை சமூகங்களை உயர் மட்டத்துக்கு கொண்டு செல்வதில் சிறந்த முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததென்பதை தெளிவாகக் காணக்கூடியதாகவிருந்தது. அதற்கேற்ப சிங்கள மொழியை அரச மொழியாக செயல்படுத்திவந்ததோடு, (18வது பிரிவு) தமிழ் மொழியை தேசிய மொழியாக ஏற்றுக் கொண்டார். (19ம் பிரிவு (14(1)டீ) பிரிவில் தமது மொழியை பயன்படுத்தவதற்கான சுதந்திரத்தை உறுதி செய்தார். 27 (6) பிரிவின்படி ‘ எந்தவொரு பிரஜையும் மொழி காரணமாக எவ்வித சிரமங்களுக்கும் ஆளாக முடியாது’ என்ற கொள்கையை அரசாங்க கொள்கையாக்கியது.

தனியான தமிழ் இராச்சியமொன்றை அடைந்து கொள்வதற்காக போராடுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டு வந்த போராளித் தமிழ் இளைஞர்களை மீண்டும் யதார்த்த பூர்வமான நிலைக்கு இட்டுச் செல்லக் கூடியளவுக்கு ஜயவர்தனவின் அந்த புனரமைப்பானது கவர்ச்சி கொண்டதாக இருக்கவில்லை என்பதை குறிப்பிட வேண்டும்.

விக்டர் ஐவன்

 

நன்றி – ராவய

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.