Jump to content

தமிழ் மின்னிலக்கியம் - அலைபேசி எழுத்தும் கிண்டில் வாசிப்பும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மின்னிலக்கியம் - அலைபேசி எழுத்தும் கிண்டில் வாசிப்பும்

சுரேஷ் பிரதீப்

எழுதுவதற்கான உந்துதல் எந்தச் சூழலிலும் வரலாம் என்ற நம்பிக்கை பதின்மத்திலேயே என்னுள் ஆழமாக பதிந்துவிட்டது. பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது ஒரு கதையை கணித குறிப்பேட்டின் கடைசி மூன்று பக்கங்களில் எழுதினேன். அதைப்படித்த நண்பனொருவன் என்னை அப்போது எழுத்தாளன் என்று ஒப்புக் கொண்டான். வகுப்பு பெண்களிடம் அந்தக் கதையை காட்டப்போவதாக அடிக்கடி பாவனையாக மிரட்டுவான். நானும் "காட்டிடாதடா" என்பது போல பதறுவேன். இருந்தாலும் உள்ளுக்குள் அந்தக்கதையை எங்கள் வகுப்பிலேயே அதிகமாக பெண் தோழிகளுடைய அவன் கொண்டுபோய் அவர்களிடம் காண்பிக்கமாட்டானா என்றிருக்கும். பள்ளி முடியும் வரை அவன் அந்தக் கதையை காண்பிக்கவில்லை. கல்லூரி சேர்ந்தபின் எல்லா நாட்குறிப்பின் கடைசி பக்கங்களிலும் காமமும் காதலும் பிண்ணி முடைந்த கவிதைகள் நிரம்பி வழியத் தொடங்கின. விடுதியின் உணவுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டிய வங்கிப்படிவத்தின் பின்புறம் பயணச்சீட்டு என கையிலிருக்கும் தாள்களில் ஏதேனும் தோன்றும்போது எழுதி விடுவேன். 

கல்லூரி விடுப்பு முடிந்து திரும்பும் போது மனதுக்கு சற்றும் உற்சாகம் தராத ரயில் பயணத்தை தேர்ந்தெடுப்பதும் அதன் குலுக்கலின்மைக்காக மட்டுமே. ரயிலில் அமர்ந்து எழுதிய இரண்டு முழுக்குறிப்பேடுகள் இப்போதும் என்னிடம் இருக்கின்றன. தொடக்க நாட்களில் நம்முடைய அந்தரங்க செயல்பாட்டை பிறர் பார்க்கச் செய்வதைப் போன்ற கூச்சம் ரயிலில் அமர்ந்து எழுதும்போது தோன்றும். கொஞ்ச நாட்களிலேயே அந்த கூச்ச நாச்சமெல்லாம் விட்டுப்போனது. 

கல்லூரி முடிந்த காலத்தில் அண்ணன் வழியாக பாமினி என்ற தமிழ் தட்டச்சு முறையை கற்றுக் கொண்டேன். ஆனால் கொஞ்ச நாட்களிலேயே அந்த கணினி தட்டச்சு முறை சலித்துவிட்டது. ஒவ்வொரு தமிழ் எழுத்துக்கும் அதற்கு தொடர்பே இல்லாத ஆங்கில எழுத்தொன்றை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். அந்த சொற்கோவையை நினைவில் வைத்திருப்பது சிரமமில்லை என்றாலும் அதன்பிறகு பிரபலமான யுனிகோட் எழுத்துருவுக்கு மாற்றிக் கொள்ளுமாறு பாமினி எழுத்துருக்கள் இல்லை என்பதால் பாமினி கொஞ்ச நாட்களிலேயே வழக்கொழிந்தது. கணினியில் பரவலாகிய யுனிகோட் எழுத்துருவுக்கு வரும் முன்பே தமிழ் எழுதும்படியான அலைபேசி வாங்கியிருந்தேன். அதன்பிறகு எழுதுவது அனைத்துமே அலைபேசியிலேயே நிகழ்ந்தது. 

எழுத்தாளனாக நாட்களை கழிக்கப் போகிறோம் என்ற உறுதி எழுந்த பிறகு சுரேஷ் எழுதுகிறான் என்ற வலைப்பூவை அலைபேசியிலேயே துவங்கினேன். அந்த வலைப்பூ தொடங்கி மூன்று வருடங்கள் நிறைவடையப்போகின்றன. வளைதளத்தில் எழுதிய பதிவுகள் ஒளிர்நிழல் நாவல் தொகுப்பாக வந்த பதினைந்து சிறுகதைகள் அதன்பிறகு எழுதிய இருபது சிறுகதைகள் ஒரு குறுநாவல் இதழ்களுக்கு அனுப்பிய கட்டுரைகள் என்று அலைபேசியில் தான் இன்றுவரை என் எழுத்து பயணித்துக் கொண்டிருக்கிறது. 

கணினியை எடுத்துப் பிரித்து எழுதுவதை விட அலைபேசியில் எழுதுவது எளிதானது என்றே தோன்றுகிறது. ஒரேயொரு சிக்கல் விழிகளுக்கு கணினித்திரையை விட அலைபேசித்திரை சற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்பதுதான். என் நலனில் அக்கறை கொண்ட நண்பர்கள் பலர் கணினிக்கு மாறச்சொல்லி வற்புறுத்துகின்றனர். நானும் அழகி செயலி Google tamil typing என்று முயன்று பார்த்து சோர்வடைந்து அம்முயற்சிகளை கைவிட்டேன். முதன்மை காரணம் ஒரே இடத்தில் ஒரே நிலையில் வெகுநேரம் அமர்ந்தபடி எழுதுவது ஏதோ பழைய உலகில் போய் மாட்டிக்கொண்டதை போன்ற ஆயாசத்தை தருகிறது என்பதுதே.எந்தச்சூழலில் வேண்டுமானாலும் எழுதக்கூடிய மனம் படைத்தவர்களுக்கு இந்த அலைபேசி எழுத்து சரியாக இருக்குமெனத் தோன்றுகிறது. கைகளால் எழுதுகோல் பிடித்து தமிழ் எழுதி பல நாட்கள் ஆகின்றன. நண்பர்கள் புத்தகத்தில் கையெழுத்திட்டு தரச்சொல்லும் போது மிகுந்த முயற்சி எடுக்க வேண்டியிருக்கிறது கையை வளைக்க.

கடந்த பத்தாண்டுகளில் எழுத்தில் மட்டுமல்லாமல் வாசிப்பிலும் நிறைய மாற்றங்கள் எனக்குள்ளும் சூழலிலும் நிகழ்ந்திருப்பதை ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் அவதானித்தபடியே இருக்கிறேன். என் வாசிப்பினை வெண்முரசு நாவல் வரிசைக்கு முன் பின் என இரண்டாக பகுத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன். 

வெண்முரசுக்கு முன்பாக இணையத்தை கேளிக்கை ஊடகமாக மட்டுமே பயன்படுத்தினேன். வாசிப்பு என்பது அச்சு புத்தகத்தை தாண்டி வேறெந்த ஊடகத்தின் வழியாகவும் நிகழவில்லை. 

2013ல் ஜெயமோகன் மகாபாரதத்தை தினமும் தன்னுடைய இணையப்பக்கத்தில் மறு ஆக்கம் செய்து நாவல்களாக எழுதப் போவதாக தமிழ் இந்து நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் சொல்லியிருந்தார். அந்தத் தகவலை ஏறக்குறைய மறந்திருந்தேன். 2014 டிசம்பரில் திருத்துறைப்பூண்டி கிருஷ்ணா புக்ஸ்டாலில் நற்றிணை பதிப்பாக வெளிவந்திருந்த முதற்கனல் நாவலை பார்த்த பிறகு வெண்முரசினை வாசிக்கும் ஆவல் பெருகியது. முதற்கனலினை அன்றே வாங்கி அடுத்த மாதத்திற்குள் வாசித்து முடித்தேன். அப்போதே வெண்முரசு நாவல் வரிசையின் முதல் நான்கு நூல்கள் வெளிவந்திருந்தன. அடுத்தடுத்த நூல்களை எங்கு வாங்குவது என்று தெரியாமல் இணையத்திலேயே வாசிக்கத் தொடங்கினேன். மழைப்பாடல் வாசித்து முடித்தபிறகே அது ஆயிரம் பக்க நாவல் என்பது எனக்குப் புரிந்தது. தன்னம்பிக்கை பல மடங்கு உயர்ந்துவிட்டது. மழைப்பாடல் மட்டுமே கணிணியில் வாசித்தேன். அதன்பிறகு இன்று வெண்முரசு நாவல் வரிசையில் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் திசைதேர் வெள்ளம் வரை அலைபேசிதான். பன்னிரு படைக்களம் வரை அச்சு நூலாக (நீலம் மற்றும் வெய்யோன் நீங்கலாக) அவற்றை இருமுறை இணையத்தில் வாசித்த பின்பே வாங்கினேன்.

அலைபேசியில் வாசிக்கலாம் என்ற வசதி எழுதலாம் என்பதை விட கூடுதல் களிப்பைத் தரக்கூடியது. என் நண்பர் பாலமுருகன் 2015ல் நியூஸ்ஹண்ட் செயலியில் புத்தகங்கள் வாங்கிப் படிக்க கற்றுக் கொடுத்தார். 2015,2016 இரண்டு வருடங்களில் அச்சு நூல்கள் இணையம் மின்னூல்கள் என வாசிப்புக்கான அத்தனை வாய்ப்புகளிலும் தொடர்ந்து வாசித்துத் தள்ளிக் கொண்டிருந்தேன். முன்பே கேள்விப்பட்டிருந்தாலும் சென்ற வருடமே எனக்கு கிண்டில் அறிமுகமானது. கிண்டில் ரீடர் வாங்குவது ஆடம்பரமோ என்று எண்ணிக் கொண்டே அந்த எண்ணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டிருந்தேன். எனினும் அலைபேசியில் கிண்டில் செயலியைத் தரவிறக்கி என் கணக்கில் நூல்களை வாங்கி வாசித்துக் கொண்டிருந்தேன். நூல் இரவல் முறையான kindle unlimited குறைந்த செலவில் நிறைய வாசிக்க வைத்தது. 

சில மாதங்களுக்கு முன்பு நண்பர் கணேஷ் பெரியசாமி எனக்கொரு கிண்டில் ரீடர் பரிசளித்தார். கிண்டில் ரீடரில் படித்த ஒரு நூலினை அச்சு நூலாக பார்க்கும் போது சற்று அதிர்ச்சியாக இருக்கிறது. கிண்டிலில் வாசிக்கும் போது நம் மனம் கற்பனை செய்திருக்கும் அளவைவிட அச்சுநூல் இரண்டு மடங்கு இருக்கிறது. ஏதோவொரு வகையில் வாசிப்பு வேகத்தை கிண்டில் அதிகப்படுத்துகிறது என்று நினைக்கிறேன். மேலும் இரவில் வெகுநேரம் வாசித்தாலும் அலைபேசி அளவுக்கு கண்ணெரிச்சலை கிண்டில் உண்டுபண்ணுவதில்லை. 

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது கடந்த சில வருடங்களில் கிண்டிலில் வாசிப்பவர்களும் அலைபேசியில் எழுதுகிறவர்களும் பெருகியிருப்பதாகவே தோன்றுகிறது. இவ்வருடம் கிண்டில் அறிவித்திருக்கும் எழுத்தாளர்களுக்கான போட்டியில் இந்திய மொழிகளில் தமிழும் இந்தியும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. நேரடி தரவுகள் இல்லையெனினும் கிண்டிலில் தமிழில் வாசிக்கிறவர்கள் பெருகியிருப்பதையே இந்த முன்னெடுப்பு சுட்டுகிறது. 

நண்பர் சீனிவாச கோபாலன் அழிசி என்ற மின்புத்தக பக்கத்தின் வழியாக நாட்டுடைமையாக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை கிண்டிலில் வெளியிட்டிருக்கிறார். குறிப்பிட்ட நாட்களில் வெளியிட்ட நூல்களை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளவும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகிறார். அப்படி இலவசமாக தரப்படும்போது நூற்றுக்கும் மேற்பட்ட கணக்குகளில் இருந்து நூல்கள் தரவிறக்கப்படுகின்றன. நான்காயிரத்துக்கும் அதிகமான முறை நூல்கள் தரவிறக்கப்பட்டிருப்பதாக சீனிவாசன் தெரிவித்திருந்தார். 

எழுதுவதற்கான உபகரணம் என்ற இடத்தை கணினியில் இருந்து அலைபேசி மாற்றீடு செய்திருப்பதை போல வாசிப்பதற்கான ஒரு மாற்றீடாக கிண்டில் ரீடர் இருக்கிறது. அச்சு நூல்களின் இடத்தை கிண்டில் முழுமையாக மாற்றீடு செய்துவிடும் என்றும் தோன்றவில்லை. அதேநேரம் அச்சு நூல்களில் மட்டும் வாசிக்கும் நண்பர்களுக்கு நிச்சயமாக கிண்டிலை பரிந்துரை செய்கிறேன். ஒரு குறிப்பிட்ட தொகைக்கு அச்சு நூல்களை விட அதிகமான நூல்களை வாங்க முடிவதும் கிண்டிலில் வாங்க இயலும். கூடுதல் பயனாக pdf,word,mobi போன்ற வடிவங்களில் இருக்கும் கோப்புகளை நேரடியாக கிண்டிலில் பதிவேற்றி வாசிக்க முடியும். 

வாசிப்பு மற்றும் எழுத்தினை இணையத்தின் பரலலாக்கம் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. கணினி சற்று முந்தைய தலைமுறையினருக்கானது என்று எண்ணும் ஒரு தலைமுறை உருவாகி வருகிறது. அவர்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றதாக அலைபேசி எழுத்தும் கிண்டில் வாசிப்பும் இருக்கும் என நினைக்கிறேன்.

 

http://sureshezhuthu.blogspot.com/2018/11/blog-post.html?m=1

Link to comment
Share on other sites

கைபேசியிலுள்ள கிண்டில் அப் மூலமாக தான் நான் வாசிப்பது... எழுதியவர் ஜெயமோகனின் அதி தீவிர விசிறி போல இருக்கு ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.