Jump to content

முட்டுச்சந்தியில் சிக்கி சிதறும் பிரெக்சிற்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முட்டுச்சந்தியில் சிக்கி சிதறும் பிரெக்சிற்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2018 நவம்பர் 29 வியாழக்கிழமை, மு.ப. 01:41Comments - 0

அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு. அதன் விதிகளும் அவ்வாறே. அதைச் சரியாக ஆடத்தெரியாதவர்கள், ஆட்டத்தை மட்டுமன்றி, அதன் தேசத்தையும் நெருக்கடியில் தள்ளிவிடும் அவலத்தை நிகழ்த்தி விடுவார்கள்.   

குறிப்பாக, ஒரு தசாப்த காலத்துக்கு முன்தொடங்கிய, பொருளாதார நெருக்கடியின் பின்புலத்தில், நாடுகளும் நாடுகளின் கூட்டுகளும் தப்பிப்பிழைப்பதற்கான போராட்டத்தில் நண்பன், எதிரி என்ற வரையறைகள் எல்லாம், மீள்வரையறுத்துள்ள நிலையில், தேசங்களின் தப்பிப்பிழைத்தலே சவாலுக்குள்ளாகி உள்ளது.   

இதைக் கண்டு, சார்ள்ஸ் டாவின் மட்டும், தனக்குள் சிரித்துக் கொள்வார் என்பதை, நிச்சயம் நம்பலாம்.   
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து, பிரித்தானியா விலகுவதற்கான பிரெக்சிற் (Brexit) வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும், அது குறித்த முடிவெதுவும் எட்டப்படாமல், பிரித்தானியா சிக்கிச் சீரழிகிறது.   

அதைச் சாத்தியமாக்க, பிரித்தானியப் பிரதமரால் முன்மொழியப்பட்ட அவரது திட்டம், அவரது கட்சிக்குள்ளேயே பாரிய எதிர்ப்பைச் சந்தித்துள்ளது. இத்திட்டம், நாடாளுமன்றத்தால் தோற்கடிக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.  

இந்த பிரிக்ஸிட் தொடர்பில், ஒருபுறம் அமெரிக்காவும் மறுபுறம் பிரான்ஸும் ஜேர்மனியும் எதிர்வினையாற்றுகின்றன. இவை, இந்த பிரிக்சிற்றின் இன்னொரு முகத்தை வெளிப்படுத்தியுள்ளன.   

பிரெக்சிற் தொடர்பில், இவ்வாறான நெருக்கடி பிரித்தானியாவில் தொடர்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் அதிதீவிர வறுமை மற்றும் மனித உரிமைகளுக்கான சிறப்பு அலுவலர் (United Nations Special Rapporteur on extreme poverty and human rights) பிலிப் அஸ்ட்டன், ‘பிரித்தானியாவில் வறுமை அதிர்ச்சி அளிக்கத்தக்க வகையில் அதிகரித்திருக்கிறது. அடிப்படையான சமூகப் பாதுகாப்புகள், பிரித்தானியாவில் இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றன’ என்று, தனது 24 பக்க அறிக்கையில், கடந்த வாரம் குறிப்பிட்டுள்ளார்.   
இது, பிரித்தானியா எதிர்நோக்கும் சவாலின் நெருக்கடியை, வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அதேவேளை, பிரித்தானியா என்கிற பொருளாதாரச் சக்தியின் முடிவைக் கட்டியம் கூறுகிறது.   

பிரெக்சிற் வரைபு அறிக்கை: யாருடைய தேவதை  

2016ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து, பிரித்தானியா விலகுவதற்கு ஆதரவாக, பிரித்தானிய மக்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து, இந்த வெளியேற்றத்தைச் சாத்தியமாக்குவது தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தைகள், இழுபறிகள், மிரட்டல்கள், எதிர்ப்புகள், கண்டனங்கள் என எல்லாவற்றையும் கடந்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா எவ்வாறு வெளியேறுவது என்கிற நடைமுறைகளை உள்ளடக்கிய வரைபு இறுதிசெய்யப்பட்டுள்ளது.   

image_4867024022.jpgஇதன் பின்னணியில், இந்த வரைபுக்கு பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயின் அமைச்சரவை உறுப்பினர்களிடையே உடன்பாடு எட்டப்படவில்லை. கிட்டத்தட்ட ஆறு மணிநேர அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில், இந்த வரைபுக்கான அமைச்சரவையின் ஒப்புதலை தெரேசா மே பெற்றார்.  

அவ்வொப்புதலை அவர் பெற்றதாக அறிவிக்கப்பட்ட சில மணித்துளிகளில், “எட்டப்பட்டுள்ள வரைவு ஒப்பந்தத்துக்கு, மனசாட்சியோடு ஆதரிக்க முடியாது” என்று கூறி, பிரெக்சிற் செயலாளர் டொமினிக் ராப் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து பிரெக்சிற் அலுவல்களுக்கான இளநிலை அமைச்சர் சூயெல்லா பிரேவர்மேனும் பதவி விலகினார். 

அதேபோல, எட்டப்பட்ட வரைபுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வேலை மற்றும் ஓய்வூதியச் செயலாளர் எஸ்தர் மெக்வேவும் பதவி விலகினார். இவை பிரதமர் மேயால், தனது அமைச்சரவைச் சகாக்களிடமிருந்தே ஒப்புதலைப் பெறவியலாத நிலையைத் தோற்றுவித்துள்ளது.   

இந்தப் பின்புலத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை எட்டப்பட்ட இறுதி ஒப்பந்த வரைபுக்கு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்தனர். 

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் அமைந்துள்ள பிரஸல்ஸ் நகரில், 27 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் கூடி, ஒரு மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் நடத்திய ஆலோசனைகளுக்குப் பிறகு, இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் முக்கியம் யாதெனில், வாக்கெடுப்பு எதுவும் நடத்தப்படாமலே, ஏகமனதாக இவ்வொப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகும்.   

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள், இரண்டு ஆவணங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்கள். முதலாவது ஆவணம், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும்போது, செய்யக் கடமைப்பட்டுள்ள செயல்கள் குறித்து விளக்கும், 585 பக்கங்கள் கொண்ட வெளியேற்ற ஒப்பந்தம்.   

இரண்டாவது, பிரித்தானியா வெளியேறிய பிறகு, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் மற்றும் பிரித்தானியா ஆகியவற்றுக்கு இடையேயான உறவு, எத்தகையதாக இருக்கும் என்று வரையறுக்கப்பட்டுள்ள அரசியல் பிரகடனம்.   

முதலாவது, நீண்ட ஆவணத்தில், பிரித்தானியா, 39 பில்லியன் ஸ்டேலிங் பவுண்ஸ் தொகையை ஐரோப்பிய ஒன்றியத்துக்குக் கொடுக்க வேண்டும். பிரித்தானியா குடிமக்களுக்கு, ஐரோப்பிய நாடுகளில் உள்ள உரிமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.   

அடுத்தாண்டு, மார்ச் 29ஆம் திகதி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான நாளாகக் குறிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தினத்துக்குள் அதற்கான பணிகள் முடிவடைவதற்கான வாய்ப்புகள் அரிதாகவே தென்படுகின்றன.   

இப்போது வரைபுக்கான ஒப்புதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கிடைத்துள்ள நிலையில், பிரித்தானிய நாடாளுமன்றம் அதற்கான ஒப்புதலை அடுத்த மாதம் வழங்க வேண்டும்.   

ஆனால், இப்போதுள்ள நிலையில் அதைப் பெறுவது மிகக் கடினமாக இருக்கும் என்பதை, பிரதமர் மே நன்கறிவார். அதேவேளை, அவருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை, அவரது கட்சியான பழைமைவாதக் கட்சியே முன்னெடுக்கத் தயாராகின்றது.   

இதனாலேயே, “என்னைப் பதவியிலிருந்து விலக்குவதால், பிரெக்சிற் என்ற உண்மையை இல்லாமல் ஆக்க முடியாது. எதிர்க்கட்சியான தொழிற்கட்சி, ஆட்சிபீடம் ஏறுவதற்கு அனுமதிக்க வேண்டாம்” என்று, மே தொடர்ச்சியாகக் கூறிவருகிறார்.   

இந்த வரைபு, பிரித்தானிய நாடாளுமன்றில் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அரிதாகவே உள்ள நிலையில், இப்போது இரண்டு சாத்தியப்பாடுகள் உள்ளன. ஒன்று, பிரெக்சிற் தொடர்பான மீள்வாக்கெடுப்பு அல்லது இன்னொரு பொதுத்தேர்தல்.   

பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி, பிரெக்சிற் மீதான மீள்வாக்கெடுப்பையே கோரி நிற்கிறது. பொதுத்தேர்தல் வருமிடத்து, அதை வெற்றிகொள்வதற்கான உபாயம், பிளவுண்டு போயுள்ள தொழிற்கட்சியிடம் இல்லை என்பதை, அதன் தலைவர் ஜெரமி கோர்பன் அறிவார். இதனாலேயே, பிரெக்சிற் மீள்வாக்கெடுப்பை, தன்னைப் பலப்படுத்துவதற்கான களமாகக் காண்கிறார்.   

இதேவேளை, பிரித்தானியப் பிரதமர் மேயால், உடன்பாடு எட்டப்பட்டுள்ள வரைபானது, பிரித்தானிய - அமெரிக்க வர்த்தகத்துக்குப் பாரிய தடையாக இருக்கும் என்று, செவ்வாய்கிழமை குறிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “இவ்வரைபானது ஐரோப்பிய ஒன்றியத்துக்கு மிகவும் வாய்ப்பான வரைபு; மிகுந்த பக்கச்சார்பானது” என்று குற்றம் சாட்டினார்.  

“இதற்கு பிரித்தானியா உடன்படுமிடத்து, அது அமெரிக்க - பிரித்தானிய வர்த்தக உறவில், பாரிய நெருக்கடிக்கும் பின்னடைவுக்கும் வழிகோலும்” என ட்ரம்ப் எச்சரித்தார்.   

இது ஆழமடையும், ஐரோப்பிய ஒன்றிய - அமெரிக்க வர்த்தகப் போரின் இன்னொரு களத்தை எடுத்துக்காட்டுகிறது. இதை விளங்க பிரெக்சிற் உருவான கதையை நோக்குதல் தகும்.   

2008ஆம் ஆண்டு, உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சந்தித்துக் கொண்டு வந்த நிலையில், ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாகவும் ஐரோப்பாவில் ஜேர்மனிக்கு அடுத்த பெரிய பொருளாதாரமாகவும் உள்ள பிரித்தானியாவுக்கு வாய்ப்பானது என்ற எண்ணத்தின் விளைவாகவே, பிரெக்சிற் தோற்றம் பெற்றது.   

அதை நடைமுறைப்படுத்திய, முன்னாள் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமெரன், 2016 சர்வஜன வாக்கெடுப்பை, நடத்துவதன் அவசியத்துக்கான மூன்று தேவைகளை முன்மொழிந்தார்.   

முதலாவது, ஐரோப்பிய நாணயமாக யூரோ வீழ்ச்சியடைவதானது, மொத்த ஒன்றிய உறுப்பு நாடுகளின் பொருளாதாரத்தைப் பாதிக்கிறது. எனவே, விலகுவது இப்பாதிப்பில் இருந்து தப்பிக்கொள்ள வாய்ப்பானது.  

இரண்டாவது, இவ்வாக்கெடுப்பானது ஏனைய ஐரோப்பிய சக்திகளுடன், அனைத்துக்கும் மேலாக ஜேர்மனியுடன், இங்கிலாந்தின் பேரம்பேசும் இடத்தைப் பலப்படுத்திக் கொள்வதற்கான வழிவகையாகும்.   
மூன்றாவது, அமெரிக்காவுடனான கட்டற்ற வர்த்தகத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை தடையாக உள்ளது.   

image_f4da8b35bf.jpg

பிரெக்சிற், கட்டற்ற சுதந்திர வர்த்தகத்துக்கான அமெரிக்காவின் கோரிக்கைக்கு வழிசேர்த்துள்ளது என, அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதும் அதன் வர்த்தகக் கட்டுப்பாடுகள் குறித்தும் நேரடியான தாக்குதல்களைத் தொடுத்தனர்.   

ஆனால், பிரெக்சிற்டைத் தொடர்ந்து, அமெரிக்க அழுத்தத்துக்கு அடிபணிவதற்குப் பதிலாக, ஜேர்மனியும் பிரான்ஸும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐக்கியத்தைப் பேணுவதற்காக, பிரித்தானியாவுக்கு எதிரியாக ஒரு கடுமையான போக்கை எடுத்தன.   

அதன் நிலைப்பாடுகள், இறுதிசெய்யப்பட்டுள்ள பிரித்தானிய வெளியேற்ற வரைபில் பிரதிபலித்தன. ஜேர்மனியும் பிரான்ஸும் இதன் வழி அமெரிக்காவுக்கு எதிரான, தமது கரத்தைப் பலப்படுத்த முனைந்துள்ளன.   

வெளியேற்றத்தை ஆதரிக்கும், பிரித்தானிய அரசியல் அடுக்குகள் ஐரோப்பிய சந்தைகளைத் தடையின்றி அணுகுவதற்கான, அமெரிக்காவின் கோரிக்கைகள் மற்றும் சர்வதேச அளவில் சுதந்திரமான வர்த்தக உடன்படிக்கைகளைப் பேரம்பேசுவதற்கான உரிமை என்கிற திறந்த சந்தையின் அடிப்படை விதிகளின் மீது, அழுத்தி நின்று பிரித்தானியாவுக்கு வாய்ப்பான வெளியேற்றத்தைச் சாத்தியமாக்கலாம் என நம்பினார்கள்.   
அது அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதீத நம்பிக்கை உடையதாக இருந்தது. கடந்த 18 மாதங்களாக, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயும் கூட, அவ்வாறான ஒன்றுக்குத்தான் முயன்றார்.   

ஆனால், பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றியப் பேச்சுவார்த்தைகள், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே, அதிகரித்து வரும் முரண்பாடுகளையும் வர்த்தகப் போட்டியையும் களமாக்கியது.  

 இதன் துர்விளைவுகளை, பிரித்தானியாவே அனுபவிக்க வேண்டி வரும் என்பதை, எட்டப்பட்ட வரைபு குறிகாட்டுகிறது. இதன் பின்னணியிலே, அமெரிக்க ஜனாதிபதியின் நேற்று முந்தைய கருத்துகளை நோக்க வேண்டும்.   

பிரித்தானியர்களின் பரிதாபம்  

ஒரு காலத்தில் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யமாக இருந்தவொரு தேசம், பசியிலும் பட்டினியிலும் வறுமையிலும் இருக்கிறது என்ற உண்மையை ஏற்கவே, கடினமாக இருக்கக் கூடும்.   

ஆனால், இந்தச் சுடும் உண்மையைச் சொல்லியிருப்பது ஐக்கிய நாடுகள் சபை. பிரித்தானியாவின் பிரபல பகுதிகளான இலண்டன், ஒக்ஸ்போர்ட் உள்ளிட்ட ஒன்பது பெருநகரங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு, தனது அறிக்கையை ஐ.நாவின் பிலிப் ஆஸ்டன், கடந்த 16ஆம் திகதி வெளியிட்டுள்ளார்.  

அதில் பிரித்தானியர்களில் ஐந்தில் ஒருவர், தொகையின் அடிப்படையில் 14 மில்லியன் பேர், வறுமையில் வாழ்கின்றனர். நான்கு மில்லியன் பேர் வறுமைக் கோட்டின் 50 சதவீதத்துக்கும் கீழ் உள்ளனர். ஒன்றரை மில்லியன் பேர், ஆதரவின்றிக் கைவிடப்பட்டுள்ளனர் என்ற தரவுகளை வெளியிட்டு, பிரித்தானியர்களை மட்டுமல்ல உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார்.   

குறிப்பாக, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தின் இலட்சணம், சந்தி சிரித்தது. அதேவேளை, வளங்களும் நிதிமூலதனமும் எவ்வாறு ஒரு சிலரின் கைகளிலேயே கிடக்கிறது என்பதற்கு, பிரித்தானியவை விட, நல்லதோர் உதாரணம் இருக்கமுடியாது என்பதும் புலனானது.   

ஆஸ்டனின் அறிக்கை சொல்கிற விடயங்கள், ஒரு பொருளாதார வல்லரசு எப்படி இருக்கிறது என்பதை மட்டுமல்ல, பொருளாதார வல்லரசுக் கனவுகள், எவ்வளவு ஆபத்தானவை என்பதற்கும் நல்ல உதாரணமாகும்.   

ஒரு சமூக நல அரசாங்கத்தின் தேய்வும் நவதாராளவாதத்தின் முழுமையான நடைமுறைப்படுத்தலும் எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என, அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.   

‘சமூக செலவின வெட்டுகள் என்பன, வெறுமனே பொருளாதார சூழல்களால் தீர்மானிக்கப்படவில்லை. மாறாக, தீவிர சமூக மீள்வடிவமைப்புக்கான ஓர் அரசியல் திட்ட நிரலால் உந்தப்படுகிறது’ என்று அஸ்டன் சொல்கிறார்.   

அடுத்தடுத்து வந்த பிரித்தானிய அரசாங்கங்கள், பிரித்தானிய மக்களுக்குக் குறைந்தபட்ச அளவில் நியாயம், சமூக நீதி இரண்டையும் வழங்கும் முறைகளில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன. இது சமூக நல அரசாங்கம் என்ற நிலையை, பிரித்தானியா இழக்க வழி வகுத்துள்ளது.   

இங்கிலாந்தின் உள்ளூராட்சிகளுக்கு, கடந்த ஏழு ஆண்டுகளாக அரசாங்கத்தின் நிதியுதவிகள் பாதியாகக் குறைக்கப்பட்டிருக்கின்றன. இதன் விளைவாக, 2010 - 2018க்கு இடையே 500க்கும் அதிகமான குழந்தைகளுக்கான பராமரிப்பு மய்யங்களும் 2010 - 2016க்கு இடையே 340 க்கும் அதிகமான நூலகங்களும் மூடப்பட்டுள்ளன.   

வீடற்றநிலை 2010க்குப் பின்னர், 60சதவீதமாக அதிகரித்துள்ளது, வீடுகள் அற்ற நிலையில், வீதிகளிலும் கிடைக்கும் இடங்களிலும் படுத்துறங்குவோர் எண்ணிக்கை, 134 சதவீதம் அதிகரித்துள்ளது. சமூக வீட்டுவசதித் திட்டத்தின் காத்திருப்புப் பட்டியலில் 1.2 மில்லியன் பேர் காத்திருக்கின்ற நிலையில், கடந்த ஆண்டு 6,000க்கும் குறைவான வீடுகளே கட்டப்பட்டன.  

இவை வெறுமனே 2008ஆம் ஆண்டு, பொருளாதார நெருக்கடியின் விளைவுகளல்ல. அதையும் தாண்டி உள்ளார்ந்த நிதிமூலதனக் குவிப்பு, நவதாராளவாதம் ஆகியவற்றின் விளைவுகள் என்பதை, அறிக்கை தெளிவுபடுத்துகிறது.   

பொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருந்த போது, 29 ஆக இருந்த இலவச உணவு விநியோக கூடங்கள், இப்போது 2,000மாக அதிகரித்துள்ளன. குறிப்பாக, கடந்த ஆறு ஆண்டுகளில், இவை நான்கு மடங்காக அதிகரித்துள்ளன.  

பிரித்தானியா பற்றிய இவ்வறிக்கை பிரெக்சிற்றின் சமூக முக்கியத்துவத்தை முன்தள்ளியுள்ளது. பிரித்தானியா வெளியேறினாலும், இல்லாவிட்டாலும் பிரித்தானியா தனது சிக்கன நடவடிக்கைகளையும் வேலை இழப்புகளையும் தொடரத் தான் போகிறது. சாதாரண மக்களும் தொழிலாளர்களுமே இதன் துர்விளைவுகளை அனுபவிக்கப் போகிறார்கள்.   

ஆனால், இவை பொது வெளியில் பேசப்படுவதில்லை. மாறாக, அமெரிக்கா எதிர் ஐரோப்பிய ஒன்றியப் போட்டியின் சர்வதேச களமாகும், பழைமைவாதக் கட்சி எதிர் தொழிற்கட்சி என்ற உள்நாட்டு அரசியல் களமாகவும் பிரெக்சிற் சுருக்கப்பட்டுள்ளது.   

அடுத்து என்ன நடக்கும் என்ற நிச்சயமின்மை, நிச்சயம் என்பதே பிரெக்சிற்றின் இப்போதைய நிலை. பிரெக்ஸிற், இன்று உலக அளவில் பொருளாதார ரீதியில் அதிகரித்து வரும் நெருக்கடிகளைக் கோடிட்டுக்காட்டுகின்றது.   

சிறிய பொருளாதாரங்கள் மட்டுமல்ல, பெரிய பொருளாதாரங்களும் சிக்கிச் சீரழிகின்றன என்பதற்கு, பிரித்தானியா நல்லதோர் உதாரணம். 

இன்னொரு சர்வசன வாக்கெடுப்போ அல்லது பொதுத்தேர்தலோ இந்த நெருக்கடியைத் தீர்க்கப் போதுமானதல்ல.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முட்டுச்சந்தியில்-சிக்கி-சிதறும்-பிரெக்சிற்/91-225868

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீசும் தென்றல் காற்றுக்கு எதிராக....அல்லது சிறிய புயலுக்கு எதிராக நாம் நடந்து எமது வலிமையைப் பறை சாற்ற முடியும்!

எனினும் ஒரு பாரிய புயலுக்கு எதிராக...நாம் நடக்க முயற்சிப்பது எமது முட்டாள் தனத்தையே காட்டும்!

சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியம் என்ற வெறும் கௌரவத்துக்காக...ஒரு தனிப்பெரும் பொருளாதார வலயத்திலிருந்து விலகுவது வெறும் முட்டாள் தனமான முடிவேயன்றி வேறல்ல என்பது எனது கருத்து!

அம்பும் ...வில்லும் வைத்திருந்தவர்களுடன்.....துப்பாக்கி கொண்டு போராடி வெல்வது என்பது....பலம் அல்லவே!

அதனாலேயே....பிரித்தானிய சாம்ராச்சியம் சரிந்து போக நேர்ந்தது!

காலத்தின் நீரோட்டத்துடன் கலந்து செல்வதே உசிதமானது!

இல்லாவிடின்....அது நிச்சயம் கரையுடைத்துச் செல்லும் காலம் வெகு தொலைவில்...இல்லை!

மாக்கிரட் தச்சருக்கு... வட கடலின் எண்ணெய் வளம் அப்போது கை கொடுத்தது!

இப்போது கை கொடுக்க எதுவுமே.....பெரிய பிரித்தானியாவிடம் இல்லை!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.