Jump to content

குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்க


Recommended Posts

குற்றங்களை இழைத்தவருக்கு செங்கம்பளம் விரித்த மைத்திரி – அச்சத்தில் தமிழர்கள்

 

mahinda-maithri-300x200.jpgகொழும்பு – பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கதிரேசன் ஆலய வீதிக்குள் உள்நுழையும் போது வாசனை நிரம்பிய நறுமணத்தை உணர முடிவதுடன் மெல்லிசையையும் கேட்க முடியும். இந்திய மாக்கடலை அண்டிய காலி வீதியில் அமைந்துள்ள முருகன் ஆலயமான கதிரேசன் ஆலயமானது கொழும்பில் வாழும் தமிழ் மக்களால் வழிபடப்படும் ஒரு வணக்கத் தலமாகக் காணப்படுகிறது.

இந்நிலையில் அண்மையில் சிறிலங்கா அரசியலில் ஏற்பட்ட சடுதியான மாற்றமானது இங்கு வாழும் மக்களை பெரிதும் அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது. சிறிலங்கா அதிபரால் பிரதமராக அறிவிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை நடத்தியிருந்தார் என்பதால் இவர் தொடர்பில் கொழும்பில் வாழும் தமிழ் மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர்.

சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தமானது 2009ல் இறுதிக்கட்டத்தை அடைந்த போது சிறிலங்காவின் அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சவிற்கு அவரது சகோதரரும் அப்போதைய பாதுகாப்பு அமைச்சருமான கோத்தபாய ராஜபக்ச உதவி புரிந்திருந்தார்.

உள்நாட்டு யுத்தம் இறுதிக்கட்டத்தை அடைந்த போது பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமை, காயமுற்றமை மற்றும் காணாமல் போனமையை ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியிருந்தது.

நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுற்ற பின்னர், மகிந்த ராஜபக்ச தலைமையிலான இராணுவத்தினர் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு கிழக்கை தம்வசப்படுத்தியிருந்தனர். இதன்மூலம் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் தமது சொந்த நலன்களை அடைந்து கொண்டதுடன் வடக்கு கிழக்கில் பல்வேறு விடுதிகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் தொழில் மையங்களை உருவாக்கினர்.

2015ல் சிறிலங்காவில் இடம்பெற்ற அதிபர் தேர்தல் மூலம் மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டு, மைத்திரிபால சிறிசேன நாட்டின் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டார். இதன் பின்னர் தற்போது பிரதமராக மகிந்த ராஜபக்சவைத் தெரிவு செய்வதாக சிறிசேன திடீரென அறிவித்தமையானது நாட்டில் அரசியல் சர்ச்சையை உருவாக்கியது. இந்நிலையில் நாட்டின் ஸ்திரமற்ற அரசியற் சூழலும் மகிந்த ராஜபக்ச பிரதமராக அறிவிக்கப்பட்டமையும் சிறிலங்கா வாழ் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

colombo-traders-1.jpg

கொழும்பு பம்பலப்பிட்டிய கதிரேசன் ஆலயத்தின் நுழைவாயிலில் பூமாலைகளை விற்கும் 62 வயதான நவரட்ணத்திடம் பிரதமராக மகிந்த ராஜபக்சவை அறிவித்தமை தொடர்பாக வினவியபோது, அவருக்கு அருகில் சிங்கள இனத்தைச் சேர்ந்த அவரது நண்பர் நின்றதால் ‘தற்போதைய சூழல் முன்னரை விட நன்றாக உள்ளதாக’ கூறினார்.

ஆனால் அவரது சிங்கள நண்பன் அப்பால் சென்றவுடன் ‘இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்கள் அடக்கப்படுவார்கள். நிலைப்பாடு எவ்வாறு மாற்றமடையும் என்பதை எதிர்வுகூற முடியாது’ என நவரட்ணம் தனது கருத்தைத் தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ச பிரமதமராக அறிவிக்கப்பட்ட பின்னர் கதிரேசன் ஆலயத்திற்கு வருகை தந்ததாகவும் அவர் உச்ச பாதுகாப்புடன் வருகை தந்ததுடன் அவர் அங்கு நின்றபோது கடை உரிமையாளர்களை அங்கிருந்து வெளியேறுமாறு பணிக்கப்பட்டதாகவும், ஆனால் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு நடந்து கொள்வதில்லை எனவும் நவரட்ணம் தெரிவித்தார்.

1983ல் சிறிலங்காவில் யுத்தம் ஆரம்பித்த பின்னர் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர். தற்போது சிறிலங்காவில் 2.2 மில்லியன் தமிழ் மக்கள் வாழ்வதாகவும் இவர்கள் மொத்த சனத்தொகையில் 13 சதவீதமாக உள்ளனர் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

நாட்டில் வாழும் பெரும்பாலான தமிழ் மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்த விரும்புவதில்லை. 25 ஆண்டு கால உள்நாட்டு யுத்தமும், ராஜபக்சவின் தீவிரவாத ஆட்சியும் தற்போதும் தமிழ் மக்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகிந்த ராஜபக்ச பிரதமராக அறிவிக்கப்பட்ட போது  தமிழ் சமூகம் கவலையடைந்ததுடன் எச்சரிக்கையுடன் வாழ்வதாகவும் பம்பலப்பிட்டியவில் உள்ள வர்த்தக உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார். ராஜபக்ச 2015 அதிபர் தேர்தலில் சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகளை பெறத் தவறியதால் தேர்தலில் தோல்வியடைந்தார் என்பதால் இவர் அதிகாரத்துவத்தைப் பெற வேண்டும் என்கின்ற வெறியில் இருப்பதாலும் பழிக்குப் பழி தீர்ப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

colombo-traders-2.jpgவடக்கில் வாழும் தமிழ் மக்கள் தாம் கண்காணிக்கப்படுவோம் என்கின்ற அச்சத்தால் தொடர்பாடல்களைத் துண்டித்திருப்பதாகவும், இவர்கள் ‘வட்ஸ்அப்பை’ விட பாதுகாப்புக் கூடிய ‘ரெலிகிராம் மற்றும் சிக்னல்’ போன்ற தொடர்பாடல் சேவைகளைப் பயன்படுத்துவதாகவும் லண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் செய்தி இணையத்தளமான ‘தமிழ் காடியன்’ ஆசிரியர் சுதர்சன் சுகுமாரன் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பிரதமராக பதவி வகித்த போது தமிழ் மக்களின் வாழ்க்கை முன்னேற்றமடைந்திருந்தது. இவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கும் யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளை இராணுவக் கண்காணிப்புக்களின் மத்தியிலும் நினைவுகூருவதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் மகிந்த ராஜபக்ச மீண்டும் பதவியில் நிலைத்தால் தாம் குறிவைக்கப்படுவோம் என தமிழ் மக்கள் அச்சமுறுகின்றனர்.

தமிழ் சமூகத்தைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டமை, சித்திரவதைகளுக்கு உள்ளானமை மற்றும் அச்சுறுத்தப்பட்டமை போன்றன தமிழ் மக்களை தொடர்ந்தும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் இவ்வாறான வன்முறைகள் மீண்டும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மோசமானவை எனவும் வொசிங்டனைத் தளமாகக் கொண்டியங்கும் ‘இலங்கையர்களுக்கு சமத்துவம் மற்றும் நிவாரணம்’ என்கின்ற அமைப்பின் இயக்குநர் மேரியோ அருள்தாஸ் தெரிவித்தார்.

விக்கிரமசிங்கவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவரும் வடக்கு கிழக்கு பிராந்தியங்களுக்கு வெளியே வாழும் 1.5 மில்லியன் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்  மனோ கணேசன், மகிந்த ராஜபக்ச நாட்டின் அதிபராக பதவி வகித்த 2006ல் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொலை மற்றும் காணாமற் போனமை தொடர்பான குற்றச்சாட்டுக்களை மையப்படுத்தி ஆணைக்குழு ஒன்றை உருவாக்கினார்.

இந்த ஆணைக்குழு உருவாக்கப்பட்ட அதே ஆண்டு- அதாவது 2006ல் இதன் இணை தாபகரான நடராஜா ரவிராஜ் தனது பணிக்காகச் சென்று கொண்டிருக்கும் போது படுகொலை செய்யப்பட்டார். இதற்கு அடுத்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரப் பாதுகாவலன் என்கின்ற விருதை மனோ கணேசன் பெற்றுக்கொண்டார்.

‘நீதியை நிலைநாட்டுதல், காணாமற்போனவர்களைக் கண்டறிதல், ஆட்கடத்தல்களில் ஈடுபட்டவர்களைக் கண்டறிதல் போன்ற செயற்பாடுகள் தற்போதைய ஆட்சியில் சிறிதளவு முன்னேற்றத்தை எட்டியது. ஆனால் ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்றால் இவை அனைத்தும் பயனற்றதாகிவிடும்’ என மனோ கணேசன் தெரிவித்தார்.

mahinda-maithri.jpgசிறிலங்காவில் ஆட்சி முறுகல்நிலையை எட்டிய அதேவேளையில், இறுதி யுத்தத்தின் போது 11 பேர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் உயர் அதிகாரியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்னவை கைதுசெய்யுமாறு கடந்த வெள்ளி சிறிலங்கா நீதிமன்றம் கட்டளையிட்டது.

இந்த இராணுவ அதிகாரியைக் கைது செய்யுமாறு வழங்கப்பட்ட கட்டளையை உயர் மட்ட காவற்துறை புலனாய்வு அதிகாரிகள் செய்யத் தவறியதாகவும் நீதிபதி குற்றம் சுமத்தியிருந்தார். குற்றம் சுமத்தப்பட்ட இராணுவ அதிகாரி தடுத்து வைக்கப்படுவாரா என்பதும் ஐயப்பாடானதாகும்.

போர் தவிர்ப்பு வலயங்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டு பல்லாயிரக்கணக்கான பொது மக்களைப் படுகொலை செய்தமை, சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் பலரை இராணுவத்தினர் படுகொலை செய்தமை உட்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் செயற்பட்ட இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான யுத்த மீறல் குற்றச்சாட்டுக்களை ராஜபக்ச மறுத்ததுடன் 2014 ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவும் மறுத்திருந்தார்.

வடக்கு கிழக்கில் செயற்படும் தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை மகிந்த ராஜபக்ச 2015ல் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் கூட சிறிலங்கா இராணுவமும் சிறிலங்கா காவற்துறையும் தொடர்ந்தும் துன்புறுத்தி வருகின்றனர். ஆனால் மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த நிலை மிகவும் மோசமாகும் என தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.

தமிழ் செயற்பாட்டாளர்களைக் கண்காணிப்பதும் கைதுசெய்யும் அரச வலைப்பின்னலானது மகிந்த பதவியிலிருந்து விலகிய பின்னரும் தொடர்வதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இவர் மீண்டும் பதவியில் தொடர்ந்தால் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

தமிழர் பிரதேசங்களில் மீண்டும் இராணுவமயமாக்கல் தீவிரமடையும் எனவும் தமிழ் மக்கள் அச்சமுறுகின்றனர். போர்க்காலங்களில் சிறிலங்கா இராணுவத்தால் கையப்படுத்தப்பட்டு உயர்பாதுகாப்பு வலயங்கள் என்கின்ற பெயரில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்ட காணிகள் தொடர்ந்தும் மக்களிடம் கையளிக்கப்படாத நிலை உருவாகும்.

மகிந்த ஆட்சிக்கு வந்தால் நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்படும் எனவும்  மியான்மார் இராணுவம் றோகின்கிய இனத்தவர்களை பல ஆயிரக்கணக்கில் படுகொலை செய்து அவர்களை இடம்பெயரச் செய்வது போன்ற நிலை சிறிலங்காவிலும் ஏற்படும் என ஆசிரியர் சுகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா அரசியலமைப்பில் இராணுவ வீரர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவில்லை எனவும் இவர் சுட்டிக்காட்டினார். ‘மியான்மாரில் சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற தலைவரால் கூட அந்த நாட்டில் இடம்பெறும் இனப்படுகொலையை நிறுத்தி நாட்டில் ஜனநாயகத்தை மீளநிலைநிறுத்த முடியாத நிலை காணப்படும் நிலையில் சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் தொடரும் இராணுவமயமாக்கலை முடிவிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் மியான்மார் போன்ற மிகவும் மோசமான நிலை சிறிலங்காவிலும் ஏற்படும்’ என தமிழ் கார்டியன் ஆசிரியர் சுகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்கு எதிராக மகிந்த அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுவேன் என வாக்குறுதி அளித்தே சிறிசேன தேர்தலில் வெற்றிபெற்றார். இந்நிலையில் சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பிலும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் மகிந்த ராஜபக்ச பொறுப்புக்கூற வேண்டும் என அனைத்துலக சமூகம் வலியுறுத்தி வந்த நிலையில் இவ்வாறான குற்றங்களை இழைத்த மகிந்த ராஜபக்சவிற்கு சிறிசேன சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்கியுள்ளார்.

‘யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சிறிசேன எவ்வித பதிலையும் வழங்கவில்லை. மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சிறிசேன எவ்வகையிலும் நீதியைப் பெற்றுக் கொடுக்கவில்லை. இந்நிலையில் சிறிசேன மீண்டும் மகிந்தவுடன் இணையும் போது இவர்களின் ஆட்சியால் தமக்கு நீதி கிடைக்கும் என தமிழ் மக்கள் எதிர்பார்க்க மாட்டார்கள்’ என அனைத்துலக மன்னிப்புச் சபையின் தென்னாசியாவிற்கான ஆய்வாளர் தியாகி றுவான்பத்திரன தெரிவித்தார்.

ஆங்கிலத்தில் –  Jack Moore
வழிமூலம்       – The National
மொழியாக்கம் – நித்தியபாரதி

http://www.puthinappalakai.net/2018/11/11/news/34263

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.