Sign in to follow this  
கிருபன்

இலங்கை அரசியல் நெருக்கடியின் பின்னால் ஒளிந்திருக்கும் பேராபத்து

Recommended Posts

இலங்கை அரசியல் நெருக்கடியின் பின்னால் ஒளிந்திருக்கும் பேராபத்து

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவிநீக்கிவிட்டு அவரின் இடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த நாள் தொடக்கம் இலங்கை அராஜகநிலையை நோக்கிவிரைந்துகொண்டிருக்கிறது. அபாயகரமான நிலைவரம் ஒன்று உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

புதிதாக நியமிக்கப்பட்ட தரப்பினர் பாராளுமன்றத்தில் தங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதென்பதை நிரூபிக்கும்வரை சபைக்குள் அக்டோபர் 26 க்கு முன்னர் இருந்த நிலைவரத்தையே அங்கீகரிப்பதற்கு தான் நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய கடந்த திங்கடகிழமை வெளியிட்ட அறிக்கை பதற்றத்தை தீவிரப்படுத்தியிருக்கிறது.

Mr1.jpg

புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் தனக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதை காண்பித்த மறுகணமே நிலைமை வழமைக்குத் திரும்பிவிடும் என்பதை சபாநாயகர் குறிப்பாகத் தெரிவித்திருக்கின்ற போதிலும், பெரும்பான்மையைக் காட்டுவதற்கான நடைமுறைகள் பற்றி தெளிவெதுவும் இல்லை.

1978 ஆம் ஆண்டில் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர், பாராளுமன்றத்தின் ஒவ்வொரு புதிய கூட்டத்தொடரின் ஆரம்பத்திலும்  மகாதேசாதிபதி அல்லது ஜனாதிபதி சிம்மாசனப் பிரசங்கத்தை நிகழ்த்தும் நடைமுறை இருந்துவந்தது. அந்தப் பிரசங்கம் வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. சிம்மாசனப் பிரசங்கம் வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டால் அது பதவியில் இருந்த பிரதமரின் அரசாங்கத்தின் தோல்வியாகவே கருதப்படும். அவ்வாறு 1964 ஆம் ஆண்டில் ஒரு தடவை நடைபெற்றது.         

தற்போதைய அரசியலமைப்பின் கீழ் பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரைத் தொடக்கிவைத்து ஜனாதிபதி கொள்கை விளக்கவுரை நிகழ்த்துகிறார். ஆனால், அது கட்டாயமானதல்ல. அவ்வாறு அவர் கொள்கை விளக்கவுரையை நிகழ்த்தினாலும்கூட அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்படுவது வழமையல்ல. அது கட்டாயமானதுமல்ல.

இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் அல்லது ஆளும் கட்சியில் இருந்து கணிசமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் எதிர்கட்சிக்கு மாறுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு  நடத்தப்படுகிறது. அவ்விரு நாடுகளிலும் மாநில சட்டசபைகளிலும் இதே நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.        

ஆனால், இலங்கையில் தற்போதைய அரசியலமைப்பில் எதிரணியினால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுகின்ற சந்தர்ப்பத்தைத் தவிர, பிரதமர் பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்கவேண்டிய தேவைக்கான ஏற்பாடு எதுவும் இல்லை.

ஆனால், இப்போது இலங்கை பாராளுமன்றத்தில்  பிரதமர் யார்? பாராளுமன்றத்தின் முன்னைய நிலைவரத்தையே தான் அங்கீகரிப்பதால் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமர் என்று சபாநாயகர் கூறுகிறார். அதேவேளை, பாராளுமன்றத்தை நவம்பர் 14 கூட்டவிருக்கும் ஜனாதிபதி தன்னால் இறுதியாக வெளியிடப்பட்ட வர்த்தமானி பிரகடனத்தின் பிரகாரம் பிரதமராக மகிந்த ராஜபக்சவையே பிரதமராக அங்கீகரிக்கிறார்.            

நடைமுறையில் நோக்கும்போது பாராளுமன்றம் கூடும்போது மகிந்த ராஜபக்சவும் ரணில் விக்கிரமசிங்கவும் சபைக்குள் எங்கே அமரப்போகிறார்கள்? வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பாராளுமன்றத்திற்குள் பிரதமரின் ஆசனம் ராஜபக்சவுக்கே ஒதுக்கப்படும் என்று சபாநாயகரால் வெளியிடப்பட்ட முன்னைய அறிவிப்பு அவர் பின்னர் சபைக்குள் முன்னர் இருந்த நிலைவரத்தையே அங்கீகரிப்பதாக எடுத்த நிலைப்பாட்டினால் செல்லுபடியாகாததாகின்றது. அதன் பிரகாரம்  பிரதமர் ஆசனத்தில் விக்கிரமசிங்கவே அமருவார். அவர் அவ்வாறு செய்வதற்கு ராஜபக்ச விசுவாசிகள் அனுமதிப்பார்களா? இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்புக்கு அது வழிவகுக்குமா? அத்தகைய சூழ்நிலை ஏற்படுவதற்கு அனுமதிக்கலாமா?

ராஜபக்ச விசுவாசிகளும் விக்கிரமசிங்க விசுவாசிகளும் சபைக்குள் எந்தப் பக்கத்தில் அமரப்போகிறார்கள்? ஏட்டிக்குப்போட்டியாக இரு தரப்பிரரும் ஆளும் கட்சி பக்கத்தில் அமருவதற்கு மோதிக்கொள்வார்களா? பாராளுமன்ற அலுவல்களைப் பொறுத்தவரை ஏக அதிகாரம் கொண்டவர் என்றவகையில் சபாநாயகர் இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்த்துவைக்கப்போகிறார் என்பது தெளிவில்லை. ஏனென்றால் எமது நாட்டில் இத்தகைய சூழ்நிலை முதல் தடவையாக இப்போதுதான் ஏற்பட்டிரு்கிறது.

பாராளுமன்றம் கூடவிருக்கின்ற தினத்தில் இரு தரப்பினரும் தங்களது  ஆதரவாளர்களை ஆயிரக்கணக்கில் கொழும்புக்குள் கொண்டுவரவும் கூடும் அவ்வாறு நிகழுமானால் , பாராளுமன்றத்திற்குள் நிகழக்கூடிய எந்தவொரு துரதிர்ஷ்டவசமான சம்பவமும் வீதிக்கலகமாக மாறக்கூடிய ஆபத்தை நிராகரிப்பதற்கில்லை. இன்றைய அரசியல் நெருக்கடியில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை எதுவும் தோன்றாதிருப்பதை உறுதிசெய்யக்கூடியதாக  நிதானத்துடனும் விவேகத்துடனும் செயற்பட்டு  இணக்கபூர்வமான முறையில் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவார்களா? 

நவம்பர் 14 சபாநாயகர் ஒருவாறாக நிலைவரத்தை சுமுகமாகக் கையாண்டு,  பிரதமர் பதவிக்கு போட்டிபோட்டு உரிமைகோரிக்கொள்கின்ற இருவரில் எவராவது தனக்கு சபைக்குள்  பெரும்பான்மை ஆதரவு இருப்பதை நிரூபித்தாலும் கூட இந்த பாராளுமன்றம் அதன் எஞ்சிய காலத்துக்கு எந்தத் தரப்புக்குமே அறுதிப்பெரும்பான்மை இல்லாத ஒரு தொங்கு பாராளுமன்றமாகவே தொடரக்கூடிய சாத்தியமே இருக்கிறது.

அதனால், இரு தரப்பினரும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான பிரேரணையை மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்றி புதிய பொதுத் தேர்தலுக்கு வழிவகுக்கவேண்டும் என்பதே பெரும்பாலான அரசியல் அவதானிகளின் அபிப்பிராயமாக இருக்கிறது. 2020 பெப்ரவரி வரை பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைப்பதற்கு அரசியலமைப்பு அனுமதிக்காதென்பதால் இதுவே அரசியல் உறுதிப்பாடின்மை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான உருப்படியான வழி போலத் தெரிகிறது.

(வீரகேசரி இணையத்தள அரசியல் ஆய்வுக்களம் )

 

http://www.virakesari.lk/article/44066

 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this