Sign in to follow this  
தம்பியன்

“இந்தியாவின் மகிந்த ராயபக்ச” என்ற மறக்கக் கூடாத உண்மையை சீனப் பூச்சாண்டிப் பரப்புரை மறக்கடிக்குமா? –மறவன்-

Recommended Posts

http://www.kaakam.com/?p=1381

 

தெற்காசியாவில் ஒரு தேசிய இனம் விடுதலையடைவதை தேசிய இனங்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா ஒரு போதும் ஏற்காது. அத்துடன் தமிழர்களின் மீதான ஆரியமாயையான இந்தியாவின் வரலாற்றுப் பகை என்பது எச்சான்றும் குறைத்து மதிப்பிட இயலாது. அண்டை நாடுகள் மீது தனது மேலாண்மையைச் செலுத்த நேரு காலத்திலிருந்து இந்தியா துடியாய்த் துடித்து வருகிறது. தேசிய இன விடுதலையை அடியொட்ட வெறுத்து இந்தியாவைக் காப்பது என்பதையும் தாண்டி அண்டை நாடுகளின் மீதான தனது மேலாதிக்கம் மூலம் அகன்ற பாரதக் கனவில் அன்றிலிருந்து இன்று வரை இந்தியா வெறித்தனமாக வேலை செய்து வருகிறது. இருதுருவ உலக ஒழுங்கிருந்த காலத்தில் JVP கலவரத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தி 1971 இலேயே படையுடன் இலங்கைத்தீவிற்குள் வரவிருந்த இந்தியாவிற்கு JR இன் தீவிர அமெரிக்கச்சார்புப் போக்கினை மிரட்டி மாற்றியமைக்க, 1987 இல் இலங்கை-இந்திய ஒப்பந்தம் பயன்பட்டது. இலங்கைத்தீவின் மீதான தனது மேலாண்மைக்கே தமிழர்களின் தேசிய இனச் சிக்கலை இந்தியா பயன்படுத்தும் என்பதோடு தமிழர்களின் தேசிய இன விடுதலைப்போரை அடியொட்ட அழித்துத் தன்னுடைய கூலிப்படைகளாகவும் இந்தியாவின் தயவுக்காகக் கையேந்தி நிற்கும் அபலைகளாகவும் தமிழர்கள் இருக்க வேண்டுமென்பதும் தான் இந்தியாவின் விருப்பு. இருதுருவ உலக ஒழுங்கிருந்த போது இலங்கைத்தீவிற்குப் படையுடன் வந்து இந்தியா மேலாண்மை செலுத்த சீனா காரணங்காட்டப்படவில்லை. ஆனால் 1991 இன் பின்பான ஒருதுருவ உலக ஒழுங்கில் சீனாவைக் காரணங்காட்டுவது என்பது அண்டை நாடுகளின் மீதான இந்திய மேலாண்மை விரிவாக்கத்திற்கு இலகுவாக இருக்கிறது. அமெரிக்காவும் மூன்றாமுலக நாடுகளின் மீதான தனது மேலாதிக்கத்தை சீனாவைக் காரணங்காட்டியே நியாயப்படுத்துகிறது.

Newyork Times, London Times, Janes போன்ற ஏகாதிபத்திய ஊதுகுழல்களும் இந்தியாவின் வெளியக உளவுப் பிரிவான RAW வின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் முன்னைய தலைவருமான. பி.ராமன் போன்றோரின் பொறுக்கித்தனமான புலனாய்வுக் கருத்தேற்றங்களும் அவற்றை அடியொற்றிய கட்டுரைகளும், ஆய்வுகளும், கருத்துக்களங்களும் சீனாவைப் பற்றிய மிகைப்படுத்திய பரப்புரைகளைச் செய்து, சீனாவானது பிற நாடுகளின் மீது வன்வளைப்பிற்குச் சற்றொப்பான மேலாதிக்கத்தைச் செய்வதாகக் காட்டியவாறு அதனைத் தடுப்பதற்காகவே தாம் பாய்ந்தடித்து அண்டை நாடுகளிற்குள் இறங்குவதாக அமெரிக்காவும் இந்தியாவும் கதையளக்கின்றன. சீனா தற்போது சோசலிச நாடுமல்ல. அண்டைநாடுகளின் மீது மேலாண்மை செலுத்தி வரும் நாடுமல்ல. சீனாவிற்கு இந்தியா பகை நாடுமல்ல. 133.92 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவானது சீனாவினைப் பொறுத்தவரை உற்பத்திப் பொருண்மியம் சொல்லக் கூடியளவிலற்ற மிகப் பெரும் நுகர்வுச் சந்தையாகும். டெல்கி கையொப்பமிட்டாலே சீனப் பொருட்களைப் பெருமளவில் நுகரும் இந்தியா என்ற சந்தை சீன உற்பத்திகளுக்குக் கிடைக்கும். எனவே இந்தியா எனும் பெரும் சந்தை தேசிய இன விடுதலையின் பேரால் உடைந்து போவது சீனாவின் வணிகத்திற்குக் கேடானதே. அதே போல சீனா 690 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான பணத்தை அமெரிக்க வங்கிகளிலும் இன்னும் பல பில்லியன் டொலர்களை அமெரிக்க நிறுவனங்களிலும் முதலிட்டுள்ளது. இதேபோல சீனாவின் வினைத்திறனான தொழிலாளர்கொள் சந்தையை நம்பி பில்லியன் டொலர்கள் பணத்தை அமெரிக்கா முதலிட்டுள்ளது. சீனாவின் பொருட்களுக்கான சந்தைகளில் அமெரிக்காவும் ஒன்று. எனவே முதலாளித்துவ பொருண்மிய உலகில் தமக்குள் ஒருவரையொருவர் அழிப்பதல்ல அவர்களின் இலக்கு. ஒவ்வொருவரும் மற்றையவரின் உற்பத்தியிலோ சந்தையிலோ ஒருவரின் மேலே இன்னொருவர் தங்கியுள்ளனர். என்பது தான் இந்த நாடுகளின் நிலைப்பாடு.

Malacca-Straight.png

சீனாவின் அதிகரித்து வரும் பெருமளவிலான உற்பத்திக்காக வளைகுடா நாடுகளிலிருந்து கடல்வழியாக பெருமளவும் எண்ணெய் வளங்களை சீனாவிற்கு எடுத்துவர வேண்டியுள்ளது. மலாக்கா நீரிணையைக் கடக்காமல் சீனாவிற்கு வளைகுடாவிலிருந்து கடற்பாதை இல்லை. இந்தியாவின் அந்தமான், நிக்கோபார் தீவுக்கூட்டங்களிலிருந்தான கழுகுப்பார்வையையும் இந்தியாவின் மேலாண்மை இசைவையும் தாண்டி சீனாவால் மலாக்காவைக் கடக்க முடியாது. எனவே இந்துமாகடலில் (நாம் தமிழர் மாகடல் என்று தான் அழைக்க வேண்டும்) எங்கெப்படியான துறைமுகங்கள் சீனாவிற்கு இசைவாக இருப்பினும் இந்தியாவின் மேலாண்மை நிறைந்த பாதையூடாகப் பயணித்துத்தான் மலாக்கா நீரிணையூடாக வளைகுடாவிலிருந்து தனது உற்பத்திகளுக்குத் தேவையான எண்ணெய் வளத்தைச் சீனாவிற்குக் கொண்டு செல்ல முடியும். இதனை மலாக்காவைச் சுற்றிப் பலமாகவுள்ள இந்தியாவோ அல்லது வளைகுடாவைச் சுற்றிப் பலமாகவுள்ள அமெரிக்காவோ தடுக்காது. நெருக்கடிகளை சீனாவிற்கு ஏற்படுத்தித் தமது வணிக முதன்மையை நிலைநிறுத்துவதே அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நோக்கம். இந்த நெருக்கடிகளைக் குறைக்க வேலை செய்வதைத் தாண்டி அண்டை நாடுகளின் மேலான மேலாண்மையைச் சீனா செய்வதாகச் சொல்வது இந்தியாவிற்குத் தேவையான புரட்டுகளில் பெரும் புரட்டேயன்றி வேறெதுவுமல்ல.

(குவாடர் துறைமுகத்திலிருந்து தரைவழியாக சீனாவிற்கு பாதைபோடும் திட்டம் வணிகளவில் பெரும் எண்ணெய்க் கொள்கலன்களை கடல்வழியாக மிகக்குறைந்த செலவில் சீனாவிற்கு எடுத்துச் செல்வதுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாததென சீனாவுக்கும் தெரியும், அமெரிக்காவுக்கும் தெரியும். ஆனால் தன்மீதான வணிக நெருக்கடியைக் குறைக்கவே சீனா இப்படியான மாற்றுக்களைச் செய்கின்றதே தவிர அதைத் தாண்டி வேறெதுவும் திண்ணமாக இல்லை)

India.jpg

இலங்கைத்தீவில் இந்தியா செய்து வரும் சித்து விளையாட்டுகளிற்கு சீனக்காரணங்காட்டும் பொறுக்கித்தனத்தைக் கட்டுடைத்து, இலங்கைத்தீவில் நடந்தேறும் அத்தனை குழப்பங்களுக்கும் முதன்மைக் காரணம் இந்தியாவே என்பதை வெளிப்படுத்தி அந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு விடயங்களை அணுகினாலேயன்றி நாம் மெய்நிலையை உணர்ந்துகொள்ள இயலாது என்பதற்காக இந்த நெடுங்கதையை மேற்போந்த பத்திகளில் சொல்ல நேர்ந்தது.

அமைதிப் பேச்சுகளில் மூன்றாந்தரப்பாக அமர்ந்த மேற்குலகின் முகவர் நாடான நோர்வேயின் எரிக்சொல்கெய்ம் தான் இலங்கைத்தீவிற்கு வந்து நாடு திரும்புகையில் டெல்கி சென்று அவர்களிடம் நிலைமைகளையெல்லாம் ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டு அவர்களின் வழிகாட்டல்களையும் பெற்றுத்தான் நாடு திரும்புவதாக வெளிப்படையாகவே பலமுறை தெரிவித்திருந்தார். மேற்கின் இடையீட்டின் படி ஒரு அரைகுறைத் தீர்வைப் பெற்றுக்கொள்ளக் கூடாதென்பதில் விடுதலைப் புலிகளின் தலைமை எவ்வாறு உறுதியாக இருந்ததோ, அந்தளவிற்கு தமிழர்களுக்கு மேற்குலகின் வழியாக ஒரு பொரி கூடத் தீர்வாகக் கிடைக்கக் கூடாதென்பதில் இந்தியாவும் உறுதியாக இருந்தது. எனினும் ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்தை உலகளவில் நசுக்க  வேண்டுமென்றும் அதன் பின்பான மீள்கட்டுமானத்தில் வணிகமாற்ற வேண்டுமென்பதிலும் அக்கறை கொண்டு அமெரிக்கா தலைமையிலான மேற்குலகும், ஒரு வீறுகொண்ட தேசிய இன விடுதலைப் போராட்ட அமைப்பை அழித்தொழித்துத் தமிழர்களைத் தனது தயவில் தங்கியிருக்க வைத்து இலங்கைத்தீவின் மீதான தனது மேலாண்மைக்காக மட்டும் தமிழர்களைப் பயன்படுத்துவதோடு ஒரு காற்குறைத் தீர்வில் ஒரு நொடிப்பொழுதேனும் இயல்பாய் வாழ்வது தமிழர்களுக்கு வாய்க்கக்கூடாதென்ற உறுதியான முடிவில் இந்தியாவும், போர்த்தளபாட வணிகத்திற்காக சீனா, பாகித்தான் என எல்லோரினது தேவையும் தமிழர்களின் விடுதலைப் போராட்ட அமைப்பான விடுதலைப் புலிகளை ஒழிப்பது என்ற புள்ளியில் ஒன்றாகி தமிழினவழிப்பு நிகழ்ந்தேறியது.

மகிந்த ராயபக்ச 2005 ஆம் ஆண்டு நவம்பர் 19 இல் இலங்கையின் சனாதிபதியாகப் பதவியேற்றவுடன் பேச்சுகளில் ஈடுபட்டுத் தமிழரின் தேசிய இனச் சிக்கலைத் தீர்க்கத் தான் கிளிநொச்சி வர அணியமாக இருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து மகிந்த நடைமுறை அரசியலில் யதார்த்தவாதியெனக் கருதப்படுவதால் அவரது அமைதி முயற்சிகளுக்கு ஒரு குறுகிய காலத்தினை வழங்கிப் பார்க்க இருப்பதாகத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மாவீரர்நாளுரையில் சொல்ல நேர்ந்தது. தொடர்ந்து தடைப்பட்டிருந்த அமைதிப் பேச்சுகளைத் தொடர நோர்வேயினை டிசம்பர் மாத முதற் கிழமையில் மகிந்த ராயபக்ச அழைத்தார். போரினைத் தொடங்கி, புலிகளை அழிக்க முடிவெடுத்த இந்தியாவுக்கு மகிந்தவின் இந்த அழைப்பு எரிச்சலையூட்ட, மகிந்த டிசம்பர் இறுதிக் கிழமையில் உடனடியாக இந்தியாவுக்கு அழைக்கப்பட்டார். அங்கு விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க தான் வைத்திருந்த முழு வரைபையும் மகிந்தவுக்குக் காட்டி அமைதிப் பேச்சுகளிலிருந்து விலகி முற்று முழுதான போரை முன்னெடுக்குமாறு இந்தியா மகிந்தவை நெரித்தது. இதனாலேதான் “இந்தியாவின் போரையே நாம் செய்தோம்” என மகிந்த பல தடவைகள் இந்திய ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

அதுவரை தொழிற்சங்க, மாந்த உரிமைத் தளத்தில் தான் இருந்த இளமைக் காலத்தில் தமிழர்களுடன் நெருங்கிப் பழகிய மகிந்தவிற்கு இந்தியா செல்லும் வரை புலிகளை அழிக்க வேண்டும் என்ற எண்ணமும் அழிக்க முடியும் என்ற நம்பிக்கையும் கனவிலும் இருந்திருக்கவில்லை. இந்தப் போரினை முன்னெடுக்க முழு உலகத்தையும் பயன்படுத்தப் போகும் வரைபு வரை இந்தியாவின் தலைமை ஒருங்கிணைப்பிலேயே நடந்தது. தமிழர்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை செய்ததால் துட்டகாமினி என்ற மகாவம்சப் புரட்டின் தலைமகனின் தரநிலை மகிந்த ராயபக்சவுக்குக் கிடைத்து விட, அவன் ஒரு பாசிச வெறி பிடித்த தமிழினக்கொல்லியாகத் தனது முழுநேரப் பணியைத் தொடர்ந்தான்.

ஆனால், போரின் பின்பான மீள்கட்டுமானப் பணி ஒப்பந்தங்கள் போரிற்காகக் கடுமையாகப் பங்களித்த அமெரிக்கா தலைமையிலான மேற்குலகிற்கு அதிகம் கிடைக்கவில்லை. மாறாக, அத்தனை ஒப்பந்தங்களும் இந்தியாவுக்கே சென்றன. வணிகக் கணக்கில் நன்மையில்லை என இந்திய நிறுவனங்கள் கழித்து விட்ட ஒப்பந்தங்களே உண்மையில் சீனாவிற்கு வழங்கப்பட்டன. “துறைமுகம், விமானநிலையம், நெடுஞ்சாலை என அத்தனை ஒப்பந்தங்களையும் நான் முதலில் இந்தியாவிற்கே வழங்கினேன். அவற்றுள் இந்தியா ஏற்காதவற்றை மட்டும் தான் சீனாவிற்குக் கொடுத்தோம். ஏனெனில் அப்படியான ஒப்பந்தங்களை சீனாவே ஏற்கக்கூடியது” என்று மகிந்த மிகத் தெளிவாகப் பலமுறை இந்திய ஊடகங்களிற்கான செவ்வியில் கூறியுள்ளார். போரின் பின்பான மீள்கட்டுமான ஒப்பந்தங்களில் இந்திய, சீன நிறுவனங்களே அதிக நன்மையடைந்தன. எனவே மேற்குலகு தனக்குவப்பான ஆட்சியான UNP இன் ஆட்சியைக் கொண்டு வரும் நோக்கில் உலகரங்கில் மகிந்தவின் ஆட்சியை நெருக்கடிக்கு உட்படுத்த தமிழர்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்தியது. அதற்கு பொன்சேகாவையும் பயன்படுத்திப் பார்த்தது. இன்னும் என்னென்னவோ எல்லாம் செய்து பார்த்தது. ஆனால், மேற்கின் இந்த முயற்சிக்கு 2014 இன் நடுப்பகுதி வரை ஒப்புதலளிக்காமல்  மகிந்த ராயபக்சவுடன் ஒட்டியுறவாடியே வந்தது இந்தியா. ஆனால், மேற்குலகின் தூதரகங்கள் மகிந்தவின் ஆட்சியை மாற்றத் தீயாய் வேலை செய்த போது, தனது கையை மீறி மேற்குலகினால் ஒரு ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் தனது மூக்குடைந்து விடும் என்று பெரிதும் அஞ்சிய இந்தியாவானது, சீன நீர்மூழ்கிக் கப்பல் ஆபிரிக்காவுக்கான தனது வழமையான ஆண்டுப் பயணத்தின் போது வழமைக்கு மாறாக கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுச் சென்றதுடன் மேற்கு இழுத்த ஆட்சிமாற்றம் என்ற தேரின் வடக் கயிற்றில் ஓடிப்போய்த் தொட்டுத் தானும் தேர் இழுத்ததாகப் பாசாங்கு காட்டியதையும் தாண்டி தான் தான் தேரை இழுத்ததாகத் தனது பகுதியில் தனது மேலாண்மையைக் காட்ட, மேற்குப் பெற்ற குழந்தைக்குத் தான் அப்பனாக நின்றது இந்தியா.

மேற்குலகானது UNP தலைமையிலான ஆட்சியையே தனக்கு உவப்பானதாகக் கருதுகிறது.  “Vision 2025” என்ற பொருண்மியத் திட்டத்தை சிறிலங்காவில் நிறைவேற்றுவதற்காகவே இந்த நல்லிணக்க அரசாங்கம் எனப்படும் அரசாங்கம் மேற்கினால் கொண்டுவரப்பட்டது . தமது “Vision 2025” என்ற திட்டத்திற்காக  உப்புச் சப்பற்ற ஒரு தீர்வையென்றாலும் கையறு நிலையிலிருக்கும் தமிழர்களுக்கு வழங்கி அதனை தமிழர் பிரதிநிதிகள் மூலமாக தமிழர்களை ஏற்க வைத்துத் தமிழர்களின் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தைக் காயடித்துத் தமது சந்தைக்கான நிலையான அமைதியை ஏற்படுத்தும் திட்டமே அமெரிக்க தலைமையிலான மேற்குலகிடம் இருக்கிறது. தமிழர்களிற்கு இலங்கைத்தீவில் சிக்கல்கள் இருந்துகொண்டேயிருக்க வேண்டும் என்பதுடன் அவர்கள் தம்மிடம் வந்து முறைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு . ஏனெனில் சிறிலங்கா மீதான தனது மேலாதிக்கத்தைப் பேண தமிழர்களின் சிக்கல்கள் முதன்மையான ஒரு சாட்டாக இந்தியாவுக்குத் தேவைப்படுகிறது.

“கடந்த ஓராண்டாக த.தே,கூட்டமைப்பு டெல்கி செல்லவில்லை” என்றும் “மீனவர் சிக்கல் பற்றிப் பேசும் சிறிலங்காவின்  குழுவொன்றில் நான் இடம்பெற்றதால் நான் மட்டும் 2016 இறுதியில் இந்தியா சென்றேன். ஆனாலும் த.தே.கூட்டமைப்பாகச் செல்லவில்லை. இப்படி த.தே.கூட்டமைப்பு இந்தியா செல்லாமல் இருப்பது விபத்தோ அல்லது தற்செயலானதோ அல்ல” என்றும் 2017 ஆம் ஆண்டு வெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டமொன்றில் சுமந்திரன் வெளிப்படையாகவே பேசினார். தமது சொற்கேட்டு ஆடிவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஏதோவொரு அரசியல் தீர்வொன்றை அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் ஏதோவொரு வகையில் கொண்டு வரலாம் என்ற நகைப்பிற்கிடமான சிந்தனையில் முற்று முழுதாக மேற்கின் நிகழ்ச்சி நிரலில் பயணிக்கத் தொடங்கிய பின்னர், இந்தியாவிற்கு கூட்டமைப்பின் மீது வெறுப்புணர்வு ஏற்பட்டது. எனவே மேற்கின் விருப்பினை நிறைவேற்றும் தரகர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செயற்படுவதனால் சினமடைந்த இந்தியா, விக்கினேஸ்வரனை முன்னிலைப்படுத்திக் கூட்டமைப்பை ஓரங்கட்டித் தான் எதிர்பார்க்கும் வேலையைச் செய்யத் திடமாக வேலை செய்கிறது.

இப்படியிருக்க, மேற்குலகிற்கு உவப்பான கடந்த ஆட்சியில் நடந்த அனைத்திற்கும் ரணிலே பொறுப்பு என்பதும் மைத்திரி நிறைவேற்று அதிகாரம் கொண்ட உலகின் வியத்தகு கைப்பொம்மையாகவே இருந்து வந்தார் என்பதும் இங்கு சுட்டத்தக்கது. கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட சட்டத் திருத்தங்களை உற்று நோக்கினாலே அவை பிரதமர் ரணில் பதவிக்கு வலுச் சேர்ப்பதாகவும் சனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதாகவும் மகிந்த தரப்பில் எவரும் மீள ஆட்சிக்கு வர முடியாது செய்வதாகவும் இருக்கும். அத்துடன் பொருண்மிய அபிவிருத்தி தொடர்பான அனைத்து விடயங்களையும் ரணிலே கடந்த ஆட்சியில் கையாண்டிருந்தார். இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் பலதும் கடந்த ஆட்சியில் இழுத்தடிக்கப்பட்டே வந்தன. இதைத் தொடர்ந்து ரணிலை இந்தியாவுக்கு அழைத்த மோடி இந்தியாவின் திட்டங்கள் இழுத்தடிக்கப்படுவது தொடர்பில் தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

இதனால் தன்னால் சிங்கள மக்களிடத்தில் துட்டகாமினி ஆக்கப்பட்ட மகிந்தவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர இந்தியாவின் ஆளும்வர்க்கங்கள் முடிவு செய்தன. இதன் தொடர்ச்சியாக மோடி அரசில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் சுப்பிரமணிய சுவாமி என்ற பெயர் பெற்ற அரசியல் மற்றும் பல முறைகேடான வேலைகளுக்கான முகவர் நேரில் சிறிலங்கா சென்று மகிந்த ராயபக்சவைச் சந்தித்து தனது “Virat Hindustan Sangam” என்ற அமைப்பின் வாயிலாக மகிந்தவை இந்தியாவுக்கு அழைத்து மோடி உட்பட்ட மிக முதன்மையானோருடனான சந்திப்புகள் மகிந்தவிற்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. அத்துடன் மகிந்தவுடனான இந்தியாவின் ஒட்டான உறவு பல வடிவங்களில் வெளிப்படலாயின. “இந்தியா எமது நெருங்கிய உறவினன். சீனா எமது நீண்ட கால நண்பன்” என்று இந்தியாவில் வைத்துத் தனது கொள்கையை வெளிப்படையாக மகிந்த ராயபக்ச அறிவித்தார்.

இந்த ஆட்சிமாற்றத்திற்கு முன்பாக இந்திய உளவுத்துறை RAW தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகவும் அதனை ரணில் கண்டுகொள்ளவில்லையெனவும் இந்தியா விரும்பும் புரளியைக் கிளப்பிவிட்டார் மைத்திரிபால சிறிசேனா. இந்தப் புரளியால் சிங்கள மக்களிடத்தில் மைத்திரி மீதான பரிவுணர்வும் மைத்திரிக்கான ஆதரவும் கிடைக்கும் என்பதோடு இந்தியாவின் உளவமைப்பின் ஆளுமைக்கு நேரில் விளம்பரம் தேடுவதாயும் அமைந்தது. கடந்த சனாதிபதித் தேர்தலில் மகிந்த தோற்ற பின்னர் அம்பாந்தோட்டையில் வைத்து தனது தோல்விக்கு இந்தியாவின் வெளியக உளவுத்துறை RAW தான் காரணம் எனச் சொல்லியிருந்தார். மகாவம்ச மனநிலையில் இந்தியா தனது நெருங்கிய உறவினன் என்று புரியாத சிங்கள மக்களிடத்தில் இருக்கும் இந்திய எதிர்ப்புணர்வு இத்தகைய இந்திய எதிர்ப்புக் கருத்துகளால் தமக்கு ஆதரவைப் பெருக்கும் என அவர்கள் நன்கறிவர் என்பதோடு இப்படியான கருத்தை வெளியிட இந்தியச் சூழ்ச்சியாளாரும் அனுமதிப்பர் என்பது நுண்மையான புலனாய்வறிவுள்ளோருக்குப் புரியும்.

இது தொடர்பில் இந்தியாவின் NDTV ஊடகத்திற்கு செவ்வி வழங்கும் போது தன்னை ஆட்சியிலிருந்து வெளியேற்ற சீனா மகிந்த ராயபக்சவுக்கு உதவுகின்றது என்ற கருத்தை உறுதியாக மறுத்தத்தோடு மகிந்தவின் இந்த மீள்வருகையில் சீனாவிற்கு எந்தப் பங்குமில்லை என செவ்வி கண்ட இந்தியரைப் பார்த்து இறுகிய மனதோடு உறுதியாகத் தெரிவித்ததோடு மகிந்தவுக்கு சீனத்தூதுவர் வாழ்த்துச் செய்தி நேரில் வந்து தெரிவித்தது தொடர்பாகக் கருத்துரைக்கும் போது சீனத்தூதுவர் அலரி மாளிகையில் தன்னை வந்து பார்த்துப் பேசி நிலைமைகளைக் கேட்டறிந்த பின்பு தான் மகிந்தவிடம் சென்றதாக ரணில் தெரிவித்தார். இதிலிருந்து சீனாவிற்கு இதில் பங்கிருப்பதாகச் சொல்பவர்கள் யார் என்பது ஊகிக்க இலகுவானதே.

எனவே, இந்தியாவால் கொண்டு வரப்பட்ட மகிந்தவிற்கு ஆதரவளிக்குமாறு கூட்டமைப்பிற்குப் பல அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்குக் குறுக்க நிற்பதாகக் கருதும் மேற்கின் பதிலி சுமந்திரனைக் கட்சியை விட்டு நீக்குமாறு வெளிப்படையான இந்தித்துவ பாசிச அடிவருடியான மறவன்புலவு சச்சி தமிழரசுக் கட்சித் தலைமைக்குக் கடிதம் எழுதியுள்ளார். ரணிலைக் காப்பாற்ற நிற்பது மேற்குலகு. மகிந்தவைக் கொண்டுவர நிற்பது இந்தியா. சீனாவைப் பொறுத்தவரை தனது முதலீட்டுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே வேலை செய்யும். இதை விட மேலாதிக்க நிகழ்ச்சி நிரல் இருப்பதாகச் சொல்வது மிகைப்படுத்தப்பட்ட புரளிச் செய்தி. மகிந்தவைக் கொண்டு வந்த சூழ்ச்சியில் சீனாவை ஒரு தரப்பாகக் காட்ட நினைப்பவர்கள் இந்தியாவின் அடிவருடிகளாக இருப்பர். இல்லை அடி முட்டாள்களாக இருப்பர். இந்த இரண்டும் இல்லையெனில் அவர் கயேந்திரகுமாராகத் தான் இருப்பார். ஏனெனில், கூட்டமைப்பு என்ற தனது காங்கிரசுப் போன்ற வாக்குப் பொறுக்கும் கட்சியை எதிர்ப்பதைத் தவிர தமிழர்க்கென எந்த அரசியலையும் முன்னெடுக்க முடியாதவாறு அவர் சித்தம் கலங்கி இருக்கிறார். இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகத் தமிழர் நாம் செயலாற்ற வேண்டியது தேவையானது. கூட்டமைப்பு அதை இந்த விடயத்தில் தற்காலிகமாக இப்போது செய்கிறது. ஆனால் அதை எப்போதும் செய்யுமெனச் சொல்ல இயலாது. மேற்கின் நிகழ்ச்சி நிரலில் பட்டுண்டு கிடப்பதும் தமிழர்களின் விடுதலை அரசியலுக்கு எப்போதும் . எனவே இப்போது நடப்பன எதுவும் தமிழகளின் விடுதலை அரசியலை நகர்த்த உதவாது.

இந்தியாவின் நிகழ்ச்சிநிரலை அறிந்து அதற்கு நேரெதிரே செயற்படுவதே தமிழர்க்கு நன்மை பயக்கும். அப்படி இயங்கும் ஆற்றல்களை ஊக்கப்படுத்துவதோடு தமிழின விடுதலையின் முதன்மை எதிரி இந்தியாவே என்ற தெளிவுடன் விடுதலை நோக்கி இயங்குமாறு ஒவ்வொரு தரப்பிற்கும் அழுத்தங்கொடுக்க வல்ல புரட்சிகர விடுதலையாற்றல்களே தமிழர்களுக்கு இன்று உடனடித் தேவை.

–மறவன்-

2018-11-07

http://www.kaakam.com/?p=1381

 

 

 

 

 

 

 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this