Jump to content

வடக்கு முதலமைச்சர் மீதான எதிர்பார்ப்பு…!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு முதலமைச்சர் மீதான எதிர்பார்ப்பு…!

நரேன்-

தமிழ் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டம் 2009 மே 18 இற்கு பின்னர் மீண்டும் ஒரு ஜனநாயகப் போராட்டமாக மாற்றமடைந்திருந்தது. முள்ளிவாய்கால் இழப்பினை மூலதனமாகக் கொண்டு தமிழ் தேசிய இனத்தின் உரிமைக் கோரிக்கையை வலுவாக முன்னுறுத்தி அவர்களது அபிலாசைகளை பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோள்களில் தானாகவே விழுந்திருந்தது. இன்று 9 ஆண்டுகள் கடந்த நிலையில் அதில் உள்ள முன்னேற்றம் குறித்து சிந்தித்து பார்ப்பதன் மூலம் கூட்டமைப்பின் பலம், பலவீனம் குறித்து அறிந்து கொள்ள முடியும். தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க அரசியல் தீர்வு என்பதற்கு அப்பால் குறைந்த பட்சம் அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், காணி விடுவிப்பு என்பவற்றைக் கூட முழுமையாக செய்ய முடியாத நிலையே காணப்படுகின்றது. யுத்த காலத்தில் ஆக்கிரமிப்பு படையாக இருந்த இராணுவத்தின் மூலம் நிலப்பறிப்பு இடம்பெற்றது. ஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர் அரச திணைக்களங்களாலும், நல்லிணக்கம் எனக் கூறி இராணுவத்தாலும் நிலப்பறிப்புக்களும், திட்டமிட்ட குடியேற்றங்களும் இடம்பெறுகின்றது. இந்த நிலையைக் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடுக்க முடியாமல் போயிருப்பது தமிழ் மக்கள் மத்தியில் விரக்தியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் தேசிய இனம் தனது அபிலாசைகளை அடைவதற்கு மாற்று வழி குறித்து சிந்திக்க வேண்டியவர்களாகவும் உள்ளனர். கூட்டமைப்பு தலைமையினது செயற்பாடே அந்த நிலைக்கு தூண்டியது. இந்த நிலையிலேயே வடக்கு மாகாண முதலமைச்சரும், முன்னாள் நீதியசருமான சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் பலத்த எதிர்பார்ப்புடன் வடமாகாண சபைத் தேர்தலை எதிர்கொண்டனர். மலர்ந்தது தமிழர் அரசு என வடக்கு மாகாணசபை தமது பிரச்சனைகளுக்கான தீர்வைப் பெற்றுத் தரும் என நம்பியிருந்தனர். ஆனாலும் மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகளாலும், மாகாண சபை அதிகாரங்களின் வரையறையாலும் மக்களது எதிர்பார்ப்புக்களை அது முழுமையாக பூர்த்தி செய்ய முடியாது தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற ஒரு சபையாக வெளித்தெரிந்தது. குறைந்தபட்சம் அதன் அதிகாரத்திற்கு உட்பட்டு செய்யக் கூடிய வேலைகளைக் கூட செய்வதற்கு கூட்டமைப்பு தலைமை சரியான அரசியல் வழிகாட்டுதலைக் கொடுக்கவில்லை. அத்துடன், சர்வதேசத்திற்கும், அரசாங்கத்திற்கும் அழுத்தங்களை கொடுத்து ஒரு நியாயமான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு காரணமாக அமைந்த ஜெனீவா பிரேரணைகளை காலம் தாழ்த்தி நீர்த்துப் போகச் செய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) முயற்சிகளை மேற்கொண்டது. இந்தநிலையில் தமிழ் தேசிய இனத்தின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய பொறுப்பு மாகாண சபைக்கு வந்தது. அதனை முதல்வர் கையில் எடுத்த போது தமிழரசுக் கட்சியின் ஒரு அணி மாகாணசபைக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியும் வந்தது. இந்த நிலையில் 23 ஆம் திகதியுடன் 5 ஆண்டு பதவிக்காலத்தை மாகாண சபை உறுப்பினர்கள் நிறைவு செய்து முன்னாள் முதலமைச்சர், முன்னாள் அமைச்சர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களாக இனி மக்களை சந்திக்க உள்ளனர்.

2015 ஆம் ஆண்டு இந்த நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நகர்வில் மாற்றம் ஏற்பட்டது. இதுவரை எதிர்ப்பு அரசியல் செய்து வந்த கூட்டமைப்பினர் தற்போது இணக்க அரசியல் செய்து வருவதுடன் தமது வீட்டு வைபங்களிலும் தென்னிலங்கை அரசியல்வாதிகளுடன் இணைந்து கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அன்னியோன்னியத்தை வைத்து மக்களுக்கு அவர்களால் என்ன செய்ய முடிந்தது என்ற கேள்வி பரவலாக எழுந்திருக்கின்றது. அத்துடன் சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கத்திற்கு இருந்து வந்த அழுத்தங்கள் குறைவடைந்துள்ளது. தமிழ் மக்கள் நீதிக்காக வீதியில் போராடும் நிலையும் ஏக்கும் நிலையும் இன்றும் தொடர்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் கையாளாகத தன்மை காரணமாக மாற்று தலைமை குறித்து பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் அந்த தலைமையை வடக்கு முதலமைச்சர் வழங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்கின்றனர்.

வடக்கு முதலமைச்சர் 5 வருடங்களுக்கு முன்னரே அரசியலுக்கு வந்திருந்தாலும் அவர் தமிழ் தேசிய அரசியலில் இன்று தவிர்க்கப்பட முடியாதவராக மாறியிருக்கிறார். 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்கால் அவலத்தின் பின்னர் விடுதலைப் புலிகளிடம் இருந்து தமிழ் தேசிய அரசியலை தீர்மானிக்கும் பொறுப்பு எவ்வாறு இரா.சம்மந்தன் அவர்களின் தோளில் தானாக விழுந்ததோ, அதேபோல் தற்போது தமிழ் தேசிய அரசியலை முன்னகர்த்தும் பொறுப்பு வடக்கு முதலமைச்சரின் தோளில் விழுந்துள்ளது. அந்த சுமையை இலக்கு நோக்கு தடம்மாறாது நகர்த்தி தமிழ் மக்களின் இழப்புகளுக்கான நீதியாக அவர்களது அபிலாசைகளை பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது. ஒரு அரசியல் தலைவராகவும், ஓய்வு பெற்ற நீதியரசராகவும் இருந்து அதனை நிறைவேற்ற வேண்டியுள்ளது. இந்த விடயத்தை முதலமைச்சர் உணர்ந்து தமிழ் மக்களுக்கான ஒரு தலைமைத்துவத்தை கொடுக்க முன்வரவேண்டும். தமிழ் தேசிய அரசியலை விட்டுக்கொடுப்பின்றி முன்னெடுக்கக் கூடிய கட்சிகளையும், நபர்களையும் இணைத்து ஒரு கட்டமைக்கப்பட்ட அரசியல் நிறுவனமாக அவர் செயற்பட முன்வரவேண்டும் என்பது மக்களது எதிர்பார்ப்பாகவுள்ளது.

முதலமைச்சரின் இணைத்தலைமையில் தமிழ் மக்கள் பேரவை ஒரு அரசியல் வழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய அமைப்பாக தோற்றம் பெற்றாலும் இன்றைய சூழலில் தமிழ் மக்களின் நலன்கருதி தனது முடிவை மாற்றி அரசியலில் பங்கெடுக்க வேண்டியதன் நிர்பந்ததையும் காலம் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பொறுப்பை பேரவை சரியாக உணர்ந்து கொள்ள வேண்டும். அது தவறின், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டு மீண்டும் கூட்டமைப்பின் பின்னால் வாக்கு அரசியலுக்காக செல்ல விடுவதாக இருந்தால் அத்தகையதொரு மக்கள் இயக்கத்தினுடைய தேவை என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மக்கள் இயக்கமாக அதாவது தமிழ் மக்கள் பேரவையால் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்களை கூட்டமைப்பு எவ்வளவு தூரம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது என்ற கேள்வியும் உள்ளது. ஆக தமிழ் மக்கள் பேரவையை ஒரு ஆழுத்தக் குழுவாக காட்டி கூட அரசாங்கத்துடன் கூட்டமைப்பு பேரம் பேசவில்லை. இந்நிலையில் மக்கள் இயக்கம் ஒன்றின் தேவைப்பாடு உள்ள போதும், அந்த இயக்கத்தின் கொள்கைகளை முன்னகர்த்தக் கூடிய கட்சி கட்டமைப்பு ஒன்று அவசியம். அதனை உருவாக்காது மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவதால் என்ன பயன்…?

எதிர்வரும் 24 ஆம் திகதி அதாவது வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் வடக்கு முதல்வர் பேரவை ஊடாக மக்களை சந்திக்கின்றார். யாழில் பெரிய கூட்டம் ஒன்றுக்கான ஏற்பாட்டை பேரவை செய்துள்ளது. அந்தக் கூட்டத்தில் வடக்கு முதலமைச்சர் தனது எதிர்கால அரசியல் நகர்வு குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என பரவலாக எதிர்பார்ப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றதிற்கு பின்னரும் காணி விடுவிப்புக்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கையில் மறுபக்கம் காணி அபகரிப்புக்களும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆட்சி பொறுப்பேற்றவுடனேயே அரசியல் கைதிகள் விடயத்தில் தீர்க்கமான முடிவு எடுப்பதாக கூறிய ஜனாதிபதி 3 வருடம் கடந்த நிலையிலும் முடிவெடுக்காத நிலையே காணப்படுகின்றது. காணாமல் போகச் செய்யப்பட்டோரின் உறவுகள் சுமார் ஒன்றரை வருட கலாங்களாக வீதியில் நிற்கின்ற போதும் அவர்களுக்கான நியாயம் வழங்கப்படவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் 100 நாட்கள் வேலைத்திடடத்தில் அரசியல் தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் 3 வருடங்கள் கழிந்தும் அது இழுபறி நிலையிலேயே உள்ளது. இவைக்களுக்கு ஒரு தலைமைத்துவத்தின் ஊடாக அரைசிற்கும், சர்வதேச சமூகத்திற்கும் அழுத்தம் கொடுத்து தீர்வைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டிய கூட்டமைப்பு அதனை மேற்கொள்ளவில்லை. ஆட்சி மாற்றத்தின் பின்னரான கூட்டமைப்பு தலைமையின் செயற்பாடுகளால் அதிருப்தியுற்ற நிலையிலேயே வடமாகாண முதலமைச்சர், கூட்டமைப்பு மேற்கொள்ள வேண்டிய அரசியல் இயக்கத்தை தனது கைளில் எடுத்துக் கொண்டார். அதற்கு அணுசரணை வழங்குவதற்காகவே தமிழ் மக்கள் பேரவையும் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் முதலமைச்சர் தான் வழிந்து ஏற்றுக் கொண்ட அரசியல் பொறுப்பை தமிழ் மக்களின் விடியலுக்காக தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்பதே அனைத்து தமிழ மக்களின் எதிர்ப்பார்ப்பு. இன்றைய சூழலில் தனித்தனியாக இருக்கும் தமிழ தரப்புக்களை ஒரு அணியில் திரண்டுகின்ற ஒற்றுமையின் குறியீடாக வடக்கு முதலமைச்சரே திகழ்வதனால் தமிழ் மக்களின் ஒளிமயமான எதிர்காலம் கருத்தி அவர் தனது பொறுப்பையும், கடமையுயும் நிறைவேற்றுவதற்கு முன்வரவேண்டும். இதுவே கடந்த முறை அவரை முதலமைச்சராக தெரிவு செய்த தமிழ் மக்களுக்கு அவர் செலுத்தும் நன்றியாகவும் இருக்கும்.

 

http://www.samakalam.com/செய்திகள்/வடக்கு-முதலமைச்சர்-மீதான/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.