Jump to content

சண்டக் கோழி 2 - சினிமா விமர்சனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
சண்டக் கோழி 2 - சினிமா விமர்சனம்
   
திரைப்படம் சண்டக் கோழி 2
   
நடிகர்கள் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண், சண்முகராஜா, கு.ஞானசம்பந்தன், முனீஸ்காந்த், கஞ்சா கருப்பு
   
வசனம் எஸ் ராமகிருஷ்ணன்
   
இசை யுவன் ஷங்கர் ராஜா
   
இயக்கம் லிங்குசாமி
   
   

2005ஆம் ஆண்டில் விஷால் - ராஜ்கிரண் - லிங்குசாமி கூட்டணியில் வெளிவந்த சண்டக் கோழி படத்தின் இரண்டாம் பாகம் அல்லது தொடர்ச்சி என்று இந்தப் படத்தைச் சொல்லலாம்.

சண்டக் கோழி படத்தில் வரும் அதே ஊர். அந்த ஊரில் உள்ள பேச்சியின் (வரலட்சுமி) கணவனை தகராறில் ஒருவர் கொன்றுவிட அந்தக் குடும்பத்தை முழுவதுமாக அழித்து பழிவாங்கத் துடிக்கிறாள் அவள்.

சண்டக் கோழி 2 - சினிமா விமர்சனம்

இதனால் கோவில் திருவிழா 7 ஆண்டுகளாக நடக்காமல் போகிறது. இந்த ஆண்டு அதை நடத்த நினைக்கும் துரை அய்யா (ராஜ்கிரண்), இரு தரப்பிடமும் சமாதானம் பேசி திருவிழாவை நடத்தத் துவங்குகிறார்.

வெளிநாட்டிலிருந்து பாலுவும் (விஷால்) அந்தத் திருவிழாவுக்கு வருகிறான். பேச்சி பழிவாங்கத் துடிக்கும் அன்பு என்ற இளைஞனை காப்பாற்றுவதாக துரை அய்யாவும் பாலுவும் உறுதி ஏற்கிறார்கள்.

ஊர்த் திருவிழா முழுமையாக நடந்ததா, அன்பு காப்பாற்றப்பட்டானா என்பது மீதிக் கதை.

படம் முழுக்க கதாநாயகனின் வீடு, திருவிழா நடக்கும் மந்தை ஆகிய இரண்டு இடங்களில்தான் நடக்கிறது. படத்தின் டைட்டில் கார்டு போடும்போதே கதையும் துவங்கிவிடுகிறது.

ஆனால், திருவிழா முடியும்வரை அன்புவைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒற்றை வரிக் கதையை சுவாரஸ்யமாக எவ்வளவு நேரம்தான் கொண்டு சொல்ல முடியும்?

சண்டக் கோழி 2 - சினிமா விமர்சனம்

அன்புவுக்குப் பிரச்சனை வரும்போது ஒன்று பாலு வந்து காப்பாற்றுகிறார். அல்லது அவரது தந்தை வந்து காப்பாற்றுகிறார். இதுவே படம் நெடுக மாற்றி மாற்றி நடந்துகொண்டே இருக்கிறது.

இதற்கு நடுவில் தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான கிராமத்துப் பெண்ணாக கீர்த்தி சுரேஷ். சாவித்ரி படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றவருக்கு, இந்தப் படத்தில் கதாநாயகனைப் பார்த்தவுடன் காதலிக்க வேண்டிய பாத்திரம். முதல் பாதியில் அவர் பேசும் வசனங்களுக்கும் அவரது நடிப்பிற்கும் சுத்தமாகப் பொருந்தவில்லை.

எத்தனையோ படங்களில் பார்த்துப் பார்த்து சலித்த காட்சிகள் படம் நெடுக வந்துகொண்டேயிருக்கின்றன.

அதனால், படத்தில் யாராவது சீரியஸாக ஏதாவது சொன்னால், திரையரங்கில் விழுந்துவிழுந்து சிரிக்கிறார்கள்.

 

அதனால், காமெடிக்கென்று தனியாக யாரும் இல்லை. "ஐயா, உங்களை எங்கையெல்லாம் தேடுறது. இங்க என்னைய்யா பண்ணிக்கிட்டிருக்கீங்க?" என்ற வசனத்தை எத்தனை படங்களில் கேட்பது?

கதாநாயகியின் திருமணம் நின்று போக, அருகில் இருக்கும் கரும்பலகையில் 'வாரணம் ஆயிரம்' பாடல் எழுதப்பட்டிருப்பது, கணவனை இழந்த வில்லியின் பொட்டு மழை பெய்து அழிவது என குறியீட்டுக் காட்சிகள் வேறு.

சண்டக் கோழி 2 - சினிமா விமர்சனம்

பரியேறும் பெருமாள் படத்தில் ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் வெகுவாகக் கவர்ந்த சண்முக ராஜா இந்தப் படத்தில் சீரியஸாக படம் நெடுக வருகிறார். ஒரு காட்சிகூட நடிக்க வாய்ப்பில்லை.

மு. ராமசாமி, தென்னவன் ஆகியோருக்கு படம் நெடுக, "ஐயா, விடுங்கைய்யா நாங்க பார்த்துக்கிறோம்" என்று சொல்வதும் ராஜ்கிரணையும் விஷாலையும் புகழ்வதும்தான் வேலை.

இந்த வழக்கமான கமர்ஷியல் படத்தில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.

சண்டக் கோழியில் இருந்த புத்துணர்ச்சியும் உற்சாகமும் கச்சிதமான திரைக்கதையையும் எதிர்பார்த்துப் போகிறவர்களுக்குக் கிடைப்பதென்னவோ மிகச் சுமாரான ஒரு அடிதடி திரைப்படம்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-45900043

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சண்டக்கோழி 2 - சினிமா விமர்சனம்

`சண்டை வேண்டாம்’ என்று சிலபல சண்டைகளுக்கு மத்தியில் குரல் எழுப்பும் சமரசக்கோழி.

p18a_1540286970.jpg

ஏழாண்டுப் பகையுடன் அரிவாள் தீட்டிக் காத்திருக்கிறது ஒரு கும்பல். பல ஆண்டுகளாக நடக்காத திருவிழா அமைதியாக நடக்கவேண்டும் என்று ராஜ்கிரணும் விஷாலும் மேற்கொள்ளும் முயற்சிகளே கதை.

தனக்கென  அளவெடுத்துத் தைத்த ‘பாலு’ கதாபாத்திரத்தில், அன்றும் இன்றும் அளவு  மாறாமல் கச்சிதமாய்ப் பொருந்திப்போகிறார் விஷால். ராஜ்கிரண் நல்லியெலும்பு கடிப்பதைப் பார்த்தால் நமக்குப் பசிக்கிறது. யாரையாவது அவர் தூக்கி எறிந்தால் நமக்கு வலிக்கிறது. குறும்பு காட்டி அசத்துகிறார்; அசால்ட் ஆட்டம் போட்டு மிரட்டுகிறார் கீர்த்தி சுரேஷ். வரலெட்சுமி... கண்களில்  மட்டுமே அவ்வளவு வில்லத்தனம். முனீஸ்காந்த் சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். `ஜானி’  ஹரி, படம் முழுக்கப் பயத்துடன் பயணிக்கிறார். p18c_1540286996.jpg
யுவன் ஷங்கர் ராஜா, பரபரப்புக் காட்சி களுக்கு இசையால் உயிர் கொடுத்திருக்கிறார். திருவிழாவின் வண்ணங்களோடு குழைத்து காட்சிகளாக்கித் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சக்திவேல். படத்தொகுப்பாளர் பிரவீன் சண்டைக்காட்சி களில் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

 ஒரு திருவிழா, அதற்குள் காதல், காமெடி, ஆக்ஷன், எமோஷன் என சகல மசாலாக்களையும் கலந்திருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. 

p18b_1540287019.jpg

p18d_1540287135.jpg‘வன்முறை கூடாது, சமத்துவம் வேண்டும்’ என்று மெசேஜ் சொல்ல நினைத்தது நல்ல விஷயம்தான். ஆனால் கழுத்தறுப்பவரும் ஒருதரப்பு, கருணைகாட்டிக் காப்பாற்றுபவரும் அதே தரப்பு, எப்போதும் அச்சத்துடனும் விசுவாசத்துடனும் இருக்க வேண்டியவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள்தான் என்றல்லவா புரிந்துகொள்ளப்படும்? ‘`எதுக்குய்யா புலி, சிங்கம்னு பேசுறீங்க? மனுஷங்களா இருங்க” என்று சொல்லும் நல்லவரான ‘ஐயா’ அவர் செருப்பைக்கூட அவரே போடாமல், யாராவது எடுத்துப்போட்டால் காலை நுழைத்துக்கொள்வது, மனிதர்களை இழிவுபடுத்துவது என்று அவருக்குத் தெரியவில்லையா? 
பந்தோபஸ்துக்கு வரும் போலீஸ் எந்த அசம்பாவிதத்தையும் தடுத்து நிறுத்தாமல் குச்சி ஐஸ் சாப்பிடுவது, தேவையேயில்லாத ‘பெண் பார்க்கும் படலம்’ சென்டிமென்ட் டிராமா, ஒரு டஜன் குடும்ப உறுப்பினர்களையே மீண்டும் மீண்டும் ‘தெக்கூர்காரர்கள்’ என்று பில்டப் கொடுப்பது என்று... சண்டைக் கோழியில் லாஜிக்கும் மிஸ்ஸிங்;  பழைய பாய்ச்சலும் நிறைய மிஸ்ஸிங்.

- விகடன் விமர்சனக் குழு

 

https://www.vikatan.com/anandavikatan/2018-oct-31/cinema-news/145403-sandakozhi-movie-review.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.