Sign in to follow this  
கிருபன்

ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வேதனை!

Recommended Posts

ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வேதனை!

சிறப்புக் கட்டுரை: ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வேதனை!

 

விஜய் பாஸ்கர்விஜய்

 

பள்ளிக் காலங்களில் ஒரு பெண் டீச்சரைப் பார்த்து ‘பால் பண்ணை’ என்று சக மாணவர்கள் கூப்பிடுவார்கள்.

அவருடைய மார்பு பெரிதாக இருப்பதுதான் அதற்குக் காரணம். பெரிய மார்பில் நிறைய பாலிருக்கும். ‘நிறைய பால்’ பண்ணையில்தான் இருக்கும். அத்தகைய பெரிய மார்பகங்களைக் கொண்டுள்ளதால் அவரைப் ‘பால் பண்ணை’ என்று அழைப்பார்கள்.

அப்பெயரை நான் உச்சரிக்கவில்லையே தவிர பையன்கள் அப்படிச் சொல்லும்போது கலகலவெனச் சிரித்திருக்கிறேன்.

அதற்கும் முன் சிறுவயதில் ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படத்தில் லட்சுமி நடித்திருக்கும் கேரக்டருக்குப் பால்கட்டிக்கொண்டது என்று துன்பப்படுவதாக ஒரு காட்சி வரும்.

ஒரு விநாடி இப்படின்னா என்ன என்று தோன்றிப் பின் மறந்த காட்சி அது.

மார்புக்குப் பின்னே உறையும் துயரம்

பொதுவாகப் பெண்ணின் மார்பு என்பது ஆணுக்கு இன்பத்தைக் கொடுக்கும் விஷயம். பார்க்கும் பெண்களின் மார்புகளில் எல்லாம் தன் விழிகளைப் பதிக்காமல் இருக்க அவனால் முடியவில்லை.

ஆனால், அதன் பின்னால் பெண்கள் அடையும் துன்பத்தைப் பற்றி எந்த அளவுக்கு ஆண்கள் தெரிந்துவைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

மாதவிலக்கு, மென்ஸஸ் போன்ற விஷயங்கள் பற்றிக்கூடக் கொஞ்சம் விழிப்புணர்ச்சி வந்தாற்போல இருக்கிறது. ஆனால், இந்த மார்பினால் வரும் துன்பத்தைப் பற்றி மிகக் குறைந்த விழிப்பே இருக்கிறது.

சமீபத்தில் அமரந்த்தா எழுதிய ‘பால்கட்டு’ என்றொரு கதையைப் படித்த பிறகுதான் எனக்கு இதன் வலி புரிந்தது.

கதைச் சுருக்கம் வருமாறு:

மத்திய தர வர்க்கத்துப் பெண்ணுக்கு, வேலைக்கு போயே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் பெண்ணுக்குப் ‘பால்கட்டுதல்’ என்ற பிரச்சினை இருக்கிறது.

மார்பகங்களில் பால் அதிகமாகக் கட்டிக்கொண்டு வலியைக் கொடுப்பதுதான் இதன் அம்சம்.

மிக அதிகமாகக் கட்டிக்கொள்ள, டாக்டரிடம் போகிறாள். நர்ஸ் பம்ப் வைத்து பாலை எடுக்க முயற்சி செய்கிறார். வலியால் துடிக்கிறாள் இவள்.

இவள் வலியால் துடிப்பதைப் பார்த்த நர்ஸ் ‘யார்கிட்டயும் சொல்லாதம்மா” என்று தன் வாயால் மார்பில் வாயை வைத்துப் பாலை உறிஞ்சித் துப்புகிறார்.

பின் அந்தப் பெண்ணின் முலைகளை ஆராய்ந்து, அதில் புண் இருப்பதாகவும், அதனால் பால் சரிவர வெளிவராமல் கட்டிக்கொள்வதாகவும் சொல்லி, அதற்கு ஒரு க்ரீம் கொடுக்கிறார்.

அந்த க்ரீமைத் தடவ வேண்டும். பின் குழந்தைக்குப் பாலைக் கொடுக்கும் முன் அதைச் சுத்தம் செய்ய வேண்டும். பின் மறுபடியும் தடவ வேண்டும் என்று நரக வாழ்க்கையை வாழ வேண்டியதாயிருக்கிறது.

காலை அலுவலகத்துக்கு வந்துவிட்டு மதியம் குழந்தைக்குப் பால் கொடுக்கச் செல்வதற்குள் அது மார்பில் கட்டிக்கொண்டு கெட்டுப்போய் விடுகிறது.

இவளுக்குக் குழந்தை பால் குடித்தால் பாரம் குறையும் என்றிருக்கும்போது, குழந்தையோ கெட்டுப் போன பாலைக் குடிக்காமல் அழுகிறது.

மறுநாளிலிருந்து அலுவலகத்தின் பாத்ரூம் சென்று அவ்வப்போது மார்பைப் பிதுக்கிப் பாலை எடுக்கிறாள்.

இப்படியாகப் பால் கட்டுதலால் அவள் படும் கஷ்டத்தை ஆசிரியர் கதை நெடுகச் சொல்கிறார்.

ஒருநாள் மாலை வீடு செல்லும் போது கதவு திறந்திருக்கிறது. வழக்கமாக இரவு லேட்டாக வரும் கணவன் அன்று சீக்கிரமே வந்திருக்கிறான். அதைப் பார்த்து மகிழ்ச்சி. அவனிடம் காப்பி குடிக்க வேண்டும் என்று கேட்க நினைக்கிறாள்.

ஆனால் மார்பு பாரம் தாங்க முடியாமல் குழந்தையை எடுத்து வராண்டாவிலேயே பால் கொடுக்கிறாள். குழந்தை குடிக்க ஆசுவாசப்படுகிறாள்.

ஆனால், கணவனோ உள்ளே போ உள்ளே போ என்று விரட்டுகிறான். இவள் வேறு வழியில்லாமல் உள்ளே வருகிறாள்.

“வாசல்ல இருந்துதான் இதெல்லாம் செய்வியோ’ என்று கணவன் அவள் முகத்துக்கு நேரே கையை நீட்டி வருகிறான்.

அவள் தலை கிறுகிறுத்துப் போகிறது.

இப்படியாகக் கதை முடிகிறது.

ஆணுக்கு எப்படித் தெரியும்?

இதைப் படித்த பிறகுதான் பால்கட்டுதல் என்பதில் இவ்வளவு பிரச்சினையா என்று எனக்குத் தெரிந்தது. மனைவியிடம் கேட்டேன்.

“ஆமா அது எவ்வளவு பெரிய கொடுமை” என்று நிறையச் சொன்னார். நான் அவளிடம், “இது எனக்குத் தெரியாதே” என்றேன்.

“இதெல்லாம் சொல்லிட்டா இருப்பாங்க” என்ற பதில் கிடைத்தது.

அம்மாவுக்கு போன் போட்டுக் கேட்டேன்.

அம்மா இந்தக் கதையை ஆமோதித்து, பால் கட்டுதல் என்பது சில பெண்களுக்குக் கொடுமையான விஷயம் என்று விளக்கினார்.

நான் அம்மாவிடம் கேட்டேன், “ஏம்மா இத்தன வருஷம் உங்க கிட்ட ஃப்ரெண்டா பேசியிருக்கேன். இந்த விஷயத்தை எனக்குச் சொல்லவே இல்லை” என்றேன்.

யாருமே எங்கேயுமே இதுமாதிரியெல்லாம் பிரச்சினை இருக்கிறது என்று சொல்லாமல் இருந்தால் ஆணுக்கு எப்படித் தெரியும்?

ஆணுக்குப் பெண்ணின் வலி தெரிவது இப்போதைய வன்புணர்வு கலாச்சாரத்தில் முக்கிய தேவையாகும்.

என்னைக் கேட்டால் ப்ளஸ் டூவுக்கான தமிழ்ச் சிறுகதைகளில் ஒன்றாக அமரந்த்தாவின் ‘பால் கட்டு’ சிறுகதையை வைக்க வேண்டும் என்பேன்.

ஒருவேளை இக்கதையைப் படித்தால்...

“பால் பண்ணை, இளநீ, காய், முலை, முயல் குட்டி” என்றெல்லாம் மார்பகங்களைப் பேசுவதை கொஞ்சம் ஆண்களாவது தவிர்ப்பார்கள்.

அந்தக் கொஞ்ச ஆண்கள் பிற்காலத்தில் நிறைய ஆண்களாக ஆகலாம்.

பண்பட்ட சமூகத்தை அடைவதுதான் நம் நோக்கம் என்றால் இது போன்ற சிறுகதைகள் நிறைய வர வேண்டும்.

நன்றி: ஃபேஸ்புக் பதிவு: Vijay Bhaskarvijay

 

https://minnambalam.com/k/2018/10/16/17

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this