Jump to content

பெண்ணியம்: சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும்? - குறள் ஆய்வு-7, பகுதி-2


Recommended Posts

பெண்ணியம்: சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும்? - குறள் ஆய்வு-7, பகுதி-2

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
- பாவேந்தர் பாரதிதாசன்

ஆரியம் கூறும் பெண்ணியம் மற்றும் வள்ளுவம் கூறும் பெண்ணியம், குறித்த ஒப்பீட்டை இக்கட்டுரையில் சற்று விரிவாகக் காணலாம். திருக்குறள் ஆரிய சாத்திரங்களின் சுருக்க நூல் என்று தொல்லியல் ஆய்வாளர் முனைவர் நாகசாமியின் நூல் (Tirukkural - an Abridgement of Sastras by Dr.R.Nagaswamy) முறையான தரவுகள் எதுவும் இன்றி, பொத்தாம் பொதுவாக அறுதியிட்டுச் சொல்வதால், பெண்களைக் குறித்து ஆரிய தரும சாத்திர நூல்கள் கொண்டுள்ள கோட்பாடுகளைத் திருக்குறள் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டு, இரண்டு கோட்பாடுகளும் ஒன்றுதானா என்று  ஆய்வது அவசியமாகிறது.

சநாதன தருமம் விளக்கும் ஆரிய தரும சாத்திரங்களின் பிழிவான மனுநீதி நூல் பெண்களைப் பற்றிக் கொண்டுள்ள கோட்பாடுகளை முதலில் காணலாம்.

பெண்ணைச் சுதந்திரமாகச் செயல்படவிடக்கூடாது என்று கட்டளையிடும் மனுசாத்திரம்!

பெண் எச்சூழ்நிலையிலும், அவளது வீட்டில்கூடச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க கூடாது என்று அறையும் மனுசாத்திரத்தின் சமற்கிருத வடிவம், திரு.கங்காநாத் ஜா அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் எனது தமிழ் மொழி பெயர்ப்பு ஆகிய மூன்றும் இங்கு தரப்பட்டுள்ளன.

बाल्ये पिटोर वाशे  बालया वा युवत्या वा वृद्धया वाऽपि योषिता ।

न स्वातन्त्र्येण कर्तव्यं किं चिद् कार्यं गृहेष्वपि ॥ १४५ ॥

bālayā vā yuvatyā vā vṛddhayā vā'pi yoṣitā |

na svātantryeṇa kartavyaṃ kiṃ cid kāryaṃ gṛheṣvapi || 145 ||

Whether she be a child, or a young woman, or an aged woman, she should not do any act by herself, even in the house.—(145).

பெண்ணானவள், குழந்தை, இளம்பெண், அல்லது வயதான பெண்மணி என்ற எந்நிலையிலும், அவளாகவே எந்தச் செயலையும், தன் வீடாகவே இருந்தாலும், செய்யக்கூடாது - மனுசாத்திரம்-145.

வல்லமை அனைத்தும் கொண்டவளாகப் பெண்ணைக் கொண்டாடும் திருக்குறள்!

இவ்வாறு பெண்ணடிமைக் கொடுமை சொல்லும் மனுசாத்திரம்-145வது விதிக்கு நேர்மாறாக, திருக்குறள் காணும் பெண், தன்னைக்காத்துக்கொள்ளும் வல்லமையுள்ள சுதந்திரமானவளாகத் தன் கணவனுக்கும் குடும்பத்துக்கும் அரணாக விளங்குகிறாள்.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண் - குறள் 56.

Transliteration of English Couplet 56:

thaRkaaththuth thaRkoNtaaR paeNith thakaisaandra

soRkaaththuch soarvilaaL peN.

Meaning of English Couplet 56:

A woman is one Who unwearied-ly guards herself, takes care of her husband's comfort, preserves an unsullied fame and name of her household by upholding virtues through her untiring soul.

உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, தன் குடும்பத்திற்கு நலம் தரும் புகழையும் பெயரையும் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவள் பெண் என்கிறார் திருவள்ளுவர்.

ஆரிய மனுசாத்திரம் பெண்ணை அடிமைக்கொட்டிலில் அடைத்துத் துன்புறுத்துகின்றது.

திருக்குறளோ, தன்னைத் தானே காத்துக்கொள்ளும் திறம் பெற்றவளாக, தன் கணவனையும் குடும்பத்தையும் பேணிக் காக்கும் வல்லமை பெற்ற ஆளுமையாகப் பெண்ணைக் காண்கிறது.

தந்தைவழி ஆரிய சமூகத்தின் கோரமுகமே மனுசாத்திரம்!

பெண்ணடிமை கொள்ளும் ஆணாதிக்கத் தந்தைவழி ஆரிய சமூகத்தின் கோரமுகமே சநாதன தர்மம் என்றழைக்கப்படும் மனுசாத்திரம். பெண் தலைமையேற்ற தொன்மைச் தமிழ்ச் சமூகத்தின் பதிவே திருக்குறள். இவ்வேறுபாட்டை இன்னும் நுட்பமாகக் காண மனுசாத்திரம் - 146-ஐயும், திருக்குறள்-57ஐயும் ஒப்பிடலாம்.

பெண்ணை பிறப்பிலிருந்து இறப்புவரை ஆண் கட்டுப்படுத்திவைக்க வேண்டும்! - மனுசாத்திரம்

பெண் எப்போதுமே, பிறப்பிலிருந்து இறப்புவரை அடிமையாய் ஆணுக்கு கட்டுப்பட்டே வாழவேண்டும் என்று அறையும் மனுசாத்திரத்தின் சமற்கிருத வடிவம், திரு.கங்காநாத் ஜா அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் எனது தமிழ் மொழி பெயர்ப்பு ஆகிய மூன்றும் இங்கு தரப்பட்டுள்ளன.

बाल्ये पितुर्वशे तिष्ठेत् पाणिग्राहस्य यौवने ।

पुत्राणां भर्तरि प्रेते न भजेत् स्त्री स्वतन्त्रताम् ॥ १४६ ॥

 bālye piturvaśe tiṣṭhet pāṇigrāhasya yauvane |

 putrāṇāṃ bhartari prete na bhajet strī svatantratām || 146 ||

    In childhood she should remain under the control of her father, in youth under that of her husband, and on the husband’s death under that of her sons; the woman should never have recourse to independence.

(In no circumstances, at any stage of her life,  is she allowed to assert herself independently.—(146).

பெண், குழந்தைப்பருவத்தில் தந்தையின் கட்டுப்பாட்டிலும், திருமணமானபின் கணவனின் கட்டுப்பாட்டிலும், கணவன் இறந்தபிறகு, மகன்களின் கட்டுப்பாட்டிலும் இருக்கவேண்டும். எந்த வயதிலும், எச்சூழ்நிலையிலும், பெண் சுதந்திரமாகச் செயல்பட அநுமதிக்கக் கூடாது - மனுசாத்திரம்-146.

பெண்ணை எவனாலும் சிறைவைக்க முடியாது - திருக்குறள்

இதற்கு நேர் மாறான கருத்தை ஆரியத்தின் முகத்தில் அறைந்து முன் வைக்கும் திருக்குறள் இதோ!

சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை - குறள் 57.

Transliteration(Tamil to English):

siRaikaakkum kaappevan seyyum makaLir

niRaikaakkum kaappae thalai

English Couplet :

Of what avail is watch and ward?

Honour's woman's safest guard

ஆரிய மூர்க்க மனுதர்மத்தின் தலையில் ஓங்கி அடிக்கும் திருக்குறள்!

மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? பெண்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாமே தம் மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது என்று ஆரிய மூர்க்க மனுதர்மத்திற்குத் தலையில் ஓங்கி ஒரே போடாகப் போடுகின்றார் திருவள்ளுவர்.

தாம் சொன்ன பொய்யால் ஆடையிழந்து நிற்கும் பொய்யர்கள்!

புரட்சிகரமான சம நீதி அறத்தைக் கைக்கொள்ளும் திருக்குறளை பெண்ணுக்குச் சிறைவைத்து அநீதி சொல்லும் மனுதர்ம நூலின் மொழிபெயர்ப்பு என்று கூசாமல் பொய் சொல்லும் பரிமேல்அழகரும், முனைவர் நாகசாமியும் இப்போது ஆடையின்றி நாணமின்றி நிற்கின்றனர்.

உலகப் பெண்ணியத்திற்கு முழுவடிவம் தந்தது திருக்குறளே!

வள்ளுவர் பெண்களுக்குக் கொடுத்த உயர்வும் மதிப்பும் எந்நாட்டு இலக்கியமும் எக்காலத்தும் தாராதது. அறிவின் வடிவமாகவே பெண்களைக் கண்டார் திருவள்ளுவர். 'சிறுவயதில் தந்தைக்கும், திருமணத்துக்குப்பின் கணவனுக்கும், பின்னர் மகன்களுக்கும் கட்டுப்பட்டவள் பெண்' என்ற ஆரியக்கருத்துக்கு நேர் எதிராக,  'பெண்ணே தன்னைத் தான் காத்து, கணவனையும் காத்து, உலகின் பண்பையும் காப்பவள்' என்கிறார் திருவள்ளுவர். பெண்ணுக்கு வள்ளுவர் கொடுத்த இத்தகுதிப்பாடு கடவுளுக்கு நாம் கொடுக்கும் சிறப்புக்கு இணையானது என்ற காரணம் பற்றியே 'தெய்வந் தொழாஅள்' என்று பெண்ணைக் குறித்து வள்ளுவர் சிறப்பித்துக் கூறியதின் குறிப்பாகும்.

பெண் குறித்த இக்கருத்தியல் ஆரியக்கருத்துக்கு எதிரானது. அடாத செயல்களைச் செய்யும் ஆண்களைக் கண்டிப்பதற்குப் பதிலாக, 'சம உரிமை' என்ற பெயரால் அதே அடாத செயல்களைச் செய்யப்  பெண்களுக்கும் உரிமை உண்டு என்னும் மேலை ஆரியரின் சமூகச் சீரழிவுக் கருத்தும் வள்ளுவருக்கு உடன்பாடானதன்று.

திருமணத்துக்கு வெளியே உறவு வைத்துக்கொள்ளும் ஆண்மகனுக்குத் தண்டனை தரும் சட்டத் திருத்தத்தை பரிந்துரைக்காமல், 'திருமணத்துக்கு வெளியே உறவு வைத்துக்கொள்ள ஆணைப்போல் பெண்ணுக்கும் உரிமை உண்டு' என்று அண்மையில் வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு மேலை ஆரியத்தின் 'சமூகச் சீரழிவுக்கான சமஉரிமை'க் கொள்கையின் பாதிப்பினால் ஏற்பட்ட விளைவாகும்.

பெண்ணின் தன்னாளுமைக்கு மதிப்பளிக்கும் சமூகத்தளமே வள்ளுவரின் பெண்ணியம்!

பெண்ணுக்குக் காதல் தரும் இயற்கைப் பாதுகாப்பையும், கற்பு தரும் சமூகப் பாதுகாப்பையும் பெண்ணின் உரிமையாக்கினார் திருவள்ளுவர். இது பெண்ணின் தன்னாளுமையை ஏற்றுக் கொண்டு மதிப்பளிக்கும் சமூகத்தை உருவாக்கும் தளமாக அமைகின்றது.

திருமணம் என்னும் சமூக அமைப்புக்குள் வாராது, பொருளுக்காக ஆண்கள் பலரிடம் தன் உடலைப் புணரத்தந்து வாழும் பெண்களை,  ஏனைய தமிழ் இலக்கியங்கள் 'பரத்தையர்கள்' என்றே அழைத்தன. அதாவது, கட்டுப்பாடுகள் இன்றிப் பல ஆண்களுடன் பரந்துபட்டு ஒழுகும் பெண்ணைக் குறிக்க 'பரத்தை' என்ற சொல் வழங்கப்பட்டது.

'பரத்தை' என்ற சொல்லைத் தவிர்த்த திருவள்ளுவர்!

'பரத்தமை' கொண்டொழும் பெண்களில் பலரும் 'பரத்தைகள்' ஆனது ஆண்களால் என்பதை வள்ளுவர் உணர்ந்தே இருந்தார்.

எனவே, 'பரத்தமை' சமூகத்தீங்காகக் கட்டமைக்கப்பட்ட காலத்தில்கூட,  பெண்ணின் மீது அவர்கால ஆண் வர்க்கம் கட்டமைத்த 'பரத்தையர்', 'விலைமகளிர்', 'பொதுமகளிர்' போன்ற இழிசொற்களைத் திருக்குறளில் கவனமாகத் தவிர்க்கின்றார் திருவள்ளுவர்.

'பரத்தை' என்ற சொல்லைத் திருக்குறளில் முற்றுமாகத் தவிர்த்தது பெண்குலத்தின்பால் திருவள்ளுவர் கொண்டிருந்த பெருமதிப்புக்குச் சான்றாக அமைகின்றது.

'வரைவின் மகளிர்' - பெண்களின் தனிமனித உரிமை பேண வள்ளுவர் கட்டமைத்த சொல்!

பெண்ணின் உடல் மீதான உரிமை அப்பெண்ணுக்கே உரியது என்று வள்ளுவர் கருதியதால், 'திருமணம் என்னும் வரைவு'க் கோட்டுக்குள் வாராத இப்பெண்களின் தனிமனித உரிமைக்குப் பெருமதிப்புக் கொடுத்து, இவர்களைக் குறிக்க 'வரைவின் மகளிர்' (திருமணம் என்னும் வரைவு இல்(லாத) மகளிர்) என்ற நாகரிகமான புதிய சொல்லையே உருவாக்கினார்.

ஆண்களை நெறிப்படுத்தவே பொருட்பால் நட்பியலில் 'வரைவின் மகளிர்' வைக்கப்பட்டது!

பொருள் ஈட்டும் பொருட்டு வாழ்க்கைத் துணைவியான மனைவியைப் பிரிந்து புலம் பெயர்ந்த இல்லறம் கைக்கொண்ட ஆண்கள், இல்லறத்துக்கு வரையறுக்கப்பட்ட அறம் பிறழ்ந்து, தம் மனக் கட்டுப்பாட்டை இழந்து, தறிகெட்டுப் போகாமல் நெறிப்படுத்துவதற்காகவே, 'வரைவின் மகளிர்' என்னும் இவ்வதிகாரத்தைக் கூட,  பொருட்பால் நட்பியலில் வைத்தாரேயன்றி பெண்ணினத்தை பழிப்பதற்காக அன்று என்று எண்ணும்போது வள்ளுவரின் மாட்சிமையை வியக்காமல் இருக்க முடியவில்லை.

என் சிற்றறிவுக்கு எட்டியவரை,  'வரைவின் மகளிர்'  என்னும் சொல் திருக்குறளுக்கு முந்தைய சங்க இலக்கியங்கள் எதிலும் காணப்படவில்லை.

அண்மையில் இந்திய உச்சநீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பில் 'ADULTERY'  என்னும் செயல் மணமுறிவுக்கான காரணமாக இருக்கலாமே தவிர, அதைக் குற்றமாகக் கருதவியலாது என்று அளித்த தீர்ப்பில், "பெண் உடலின் மீதான உரிமை அப்பெண்ணுக்கே உரியது என்றும்,  மனைவியின் உடல் மீதான உரிமையை கணவனின் உடைமையாக ஏற்க இயலாது", என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது இங்கு நினைவுக்கு வருகின்றது.

திருமணத்துக்கு வெளியே பெண்-தொடர்புள்ள ஆணைப் 'பரத்தன்' என்ற வள்ளுவர்!

தாம் இழிவாகக் கருதிய 'பரத்தை' என்னும் சொல்லை திருக்குறளில் எங்குமே பெண்ணைச் சுட்டப் பயன்படுத்தாத திருவள்ளுவர், திருமணத்துக்கு வெளியே, வேறு பெண்களுடன் தொடர்பு கொண்ட ஆண்மகனைப் 'பரத்த(ன்)' என்று காமத்துப்பால்-கற்பியல்-புலவி நுணுக்கம் அதிகாரம், குறள் 1311ல் துணிந்து கண்டிக்கிறார் என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது..

    பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்

    நண்ணேன் பரத்த நின் மார்பு. - குறள் 1311.

"பரத்தமை உடையாய்! 'வரைவின் மகளிர்' அனைவரும் தம்தம் கண்களால் நின்னைப் ‌பொதுப்பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.", என்று தலைவி(மனைவி)யின் கூற்றாகக் கொண்டு, தலைவ(கணவ)னைக் கண்டிக்கிறார். புலவி நுணுக்கம் என்னும் அதிகாரத்தில் கூறப்பட்டதாக இருந்தாலும், மனம் போல் பல பெண்களுடன் வாழும் போக்குடைய ஆண்மகனின் செயலுக்கு அவனே பொறுப்பாவான் என்பதால் 'பரத்தன்' என்ற சொல்லால் கண்டிக்கத் துணிகிறார் வள்ளுவர். இச் சொல்லாட்சி திருக்குறளுக்கு முந்தைய கழக(சங்க) இலக்கியங்களில் ஆளப்பட்டுள்ளதா என்ற ஆர்வம் தொற்றிக்கொண்டது.

கண்டேன் 'பரத்தனை' அகநானூறு 146ல்!

கழக(சங்க) இலக்கியங்களில் தேடியதில், அகநானூறு  146ல் மட்டுமே 'மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி'க் கெட்டதாகத் தலைவி, தலைவனை வசவுமாரி பொழியும் பாடல் ஒன்று அகப்பட்டது.  'வரைவின் மகளிர்'களின் வீடுகளுக்குச் சென்றுவிட்டு, தலைவியிடம் மன்னிப்பு வேண்டிப் பாணனைத் தூது அனுப்பிய தலைவனை வெறுத்து,  'பரத்தன்' என்று வசவுச் சொல்லை வீசித் தலைவனுக்குத் தலைவி வாயில் மறுத்ததாகப் பதிவு செய்கின்றார்  உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார் என்னும் அகநானூற்றுப் புலவர்.

பூசிய சேற்றுடன் பெண்-எருமையை இணைக்கு அழைக்கும் எருமைக்கிடா ஊரன்!

பொதுவாகவே ஒரு நபரின் இழிகுணத்தைச் சாட, அவரின் ஊரையே பழிக்கும் போக்கு மனித இயல்பு. இப்பாடலில், தலைவனின் 'பரத்தமை' இழிகுணத்தை அவன் வாழும் ஊரிலுள்ள ஒரு எருமைக்கிடாவுக்கு ஏற்றி ஏசுகிறாள் தலைவி.

"என் தலைவன் எப்பேர்ப்பட்ட ஊரைச் சார்ந்தவன் தெரியுமா? அவன் ஊர் எருமைக் கிடா சிறந்த வலிமை வலிமை மிகுந்த உடலுரம் பெற்றது; பகல் முழுவதும்,  பூத்திருக்கும் பொய்கையில் புகுந்து, சேற்றில் கிடந்து புரண்டு, உடலெல்லாம் சேற்றைப் பூசிக்கொண்டு திரும்பிய பின்னர் தன் பெண்-எருமையைத் தழுவி அழைத்துக்கொண்டு தோட்டத்தில் உள்ள சோலையில் தங்கி மகிழ்ச்சிகொள்ளும் ஊர் அவன் ஊர்.

வரைவின் மகளிர் என்னும் பூத்திருக்கும் சேற்றுப் பொய்கையில் மேய்ந்து, புரண்டு, சேற்றைப் பூசிக்கொண்ட எருமைக்கடாவான என் தலைவன் உன்னைத் தூது அனுப்பி என் வீடு புகப் பார்க்கிறான். அதெல்லாம் என்னிடம் நடக்காது" என்ற தொனியில் வன்மம் கொண்ட நயமான சாடை பேசும் வர்ணனை.

பிறகு, நேரடியாகவே தலைவனைத் தாக்குகிறாள் சமாதானத்தூது வந்த பாணனிடம்.

மாயப் பரத்தனை நம்பி ஏமார்ந்தது போதும்!

"ஒலிக்கும் மணியுடன் கூடிய இவனின் தேரானது, ஆடை-அணியழகால் மேனிமினுக்கும் மகளிர் சேரியின் பக்கம் பல நாள் சென்றது என்றால், என்னைப் போல் இரக்கம் கொள்ளத் தக்க ஏமாளி வேறு இருப்பார்கள்?  இந்த மாயம் செய்யும் பரத்தனின் வாயில் வந்த சொற்களை நம்பி ஏமார்ந்து போய், எனது தாய் போற்றிக் காத்த என் உடல் நலத்தைப் பேணாமல், தோழிமாரும் அயலாரும் அஞ்சுமாறு,  காற்றுமழையில் ஆடும் மலரில் நீர் சொட்டுவது போலக் கண்ணீரும் கம்பலையுமாக  வாழும் பேதை என்னைப் போல் வேறு யார்?" என்கிறாள் தலைவி.  

வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு

பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி,                 

மடக் கண் எருமை மாண் நாகு தழீஇ,     

படப்பை நண்ணி, பழனத்து அல்கும்  5

       

கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடுந் தேர்,

ஒள் இழை மகளிர் சேரி, பல் நாள்

இயங்கல் ஆனாதுஆயின்; வயங்கிழை

யார்கொல் அளியள்தானே எம் போல்  

மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி,   10

வளி பொரத் துயல்வரும் தளி பொழி மலரின் 

கண்பனி ஆகத்து உறைப்ப, கண் பசந்து,  

ஆயமும் அயலும் மருள,                   

தாய் ஓம்பு ஆய்நலம் வேண்டாதோளே? - புறநானூறு: 146 (உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்)

ஆணைப் 'பரத்தன்' என்ற வள்ளுவர் பெண்ணைப் 'பரத்தி' என்று ஏன் சொல்லவில்லை?

பெரும்பாலும் ஆணாதிக்க சமூகத்தின் அறமற்ற கொடூரத்தின் விளைவாகவே 'பரத்தமை' நிலைக்குத் தள்ளப்பட்ட பெண்களைப் 'பரத்தையர்' என்றழைக்கத் திருவள்ளுவரின் அறச்சிந்தனை ஒப்பவில்லை. எனவேதான் 'வரைவின் மகளிர்' என்ற மென்மையான சொல்லைக் கட்டமைக்கின்றார். இந்நுட்பத்தை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

'வாழ்க்கைத் துணை' - பெண்ணுக்கு வள்ளுவர் கட்டமைத்த மற்றுமொரு மாண்பமைந்த சொல்!

'வரைவின் மகளிர்'  என்ற சொல்லைப்போலவே, வள்ளுவர் உருவாக்கிய, பெண்ணுக்கு மிகுந்த மதிப்புதரும் மற்றொரு சொல் 'வாழ்க்கைத் துணை' என்பதாகும்.

இச்சொல் சமுதாயம் ஏற்றுக்கொண்ட திருமணம் என்னும் வரைவுக்கு உட்பட்ட ஆண்-பெண் (கணவன்-மனைவி) உறவுக்கும்,  தற்காலச் சமுதாயம் இன்னமும்கூட ஏற்றுக்கொள்ளாத 'Living Together' என்று ஆங்கிலத்தில் நாம் அழைக்கும், ஒரு தகுதியான ஆணும் பெண்ணும், திருமணம் புரியாமல் 'சேர்ந்து வாழும்' வாழ்க்கைக்கும் பொதுவான சொல்லாக 'வாழ்க்கைத் துணைவி' அமைந்துவிட்டது.

காலம் கடந்து நிற்கும் பொதுமறை 'திருக்குறள்'  ஒன்றே என்பதற்கும் 'வாழ்க்கைத்துணை' என்னும் இப்பொதுமைச்சொல் சான்றாக அமைகின்றது.  பெண்ணுக்குச் சிறுமைதரும்  கருத்தியல் கொண்ட மனுசாத்திரத்தை நேரடியாக எதிர்க்காமல், பெண்ணுக்குப் பெருமையும் மதிப்பும் தரும் இமயம்போல் ஓங்கி உயர்ந்த சீரிய கருத்தியலை நேர்த்தியாகக்  கட்டமைத்துள்ளார் திருவள்ளுவர்.

ஆரிய மனுசாத்திரத்தின் சுருங்கிய வடிவே திருக்குறள் என்று பொய்யுரைப்பதன் மூலம், திருக்குறளின் உயரத்திற்கு முன் புள்ளியாய்த் தேய்ந்துபோன மனுசாத்திரத்தைக் கொண்டே, திருக்குறளை விழுங்கிச் செரிக்க முயல்கின்றது ஆரியம்.

புள்ளி இமயத்தை ஒருக்காலும் விழுங்க இயலாதென்றாலும், 'சிவப்பாக இருப்பவன் பொய்சொல்ல மாட்டான்' என்னும் தமிழனின் முட்டாள்தனத்தின்மீது அசைக்க முடியாத நம்பிக்கைகொண்ட ஆரியர்கள் தங்கள் தாக்குதலைத் தொடர்ந்துகொண்டேதான் இருப்பார்கள். எம்போன்றோர் தடுத்துக்கொண்டேதான் இருப்பார்கள்.

'மனுசாத்திரம் மற்றும் திருக்குறள் பார்வையில்  பெண்ணியம்' அடுத்த கட்டுரையில் இன்னும் தொடர்வோம்! 

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்!  அன்னார்

உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலினால் பலராய்க் காண்பார்!

கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு

துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

 

குறளறம் தொடர்ந்து பேசுவோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை. தொடரட்டும் நாம் வாசித்து இன்புறவே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.