Sign in to follow this  
கிருபன்

சுருக்குப் பை

Recommended Posts

சுருக்குப் பை

By சிந்துஜன் நமஷி 
 

ஒரு கார்காலத்தின் இரவில் இடி, மழை, மின்னலொடு என் வாழ்க்கைக்குள் வந்தவன் காந்தன் அண்ணா. காட்டாறு தாண்டிப் போன நிலம் போல என் தளத்தின் நியாயங்களை எல்லாம் கலைத்துவிட்டு போனவன் .

ஒரு கள ஆய்விற்காக அப்போது நான் பியகமவில் இருந்தேன். அழகான மலையடி வார கிராமம் அது. ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயம் என்ற பெயரில் பல தொழில்சாலைகள் அந்தக் கிராமத்தைச் சுற்றி இருந்ததால் தூர இடங்களில் இருந்து வேலைக்கு வருபவர்களுக்கு உணவும், தங்குமிடமும் வழங்குவது பெரும் வியாபாரமாக மாறிப்போய் இருந்தது.

ஆட்டோக்காரன் தான் என்னை ‘மெனிக்கே’ வீட்டிற்குக் கூட்டிச் சென்றான். சிங்களத்தில் ‘மெனிக்’ என்றால் மாணிக்கம் தவிர அவளுக்கும் பெயருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மேட்டுத்தரையில் இருந்தது அவள் வீடு. அறையைக் காட்டுவதற்காக அவளின் வீட்டிற்கு பின்னால் அழைத்துச் சென்றாள். அங்கிருந்த ரப்பர் தோட்டத்தின் முடிவில் சீமெந்துக் கற்களால் வரிவரியாகக் கட்டப்பட்ட அறைகள் இருந்தன.

"டபிள் ரூம்தான் இருக்கு"

"நாளைக்கே வேற யாரும் வந்தா உங்க அறைலதான் தங்க வைப்பன்", அரைகுறை தமிழில் கறாராக சொன்னாள். வெளியில் போகின்ற நாட்களில் கடைகளிலும், அறையில் இருந்தால் மெனிக்கேயிடமும் சாப்பிட்டேன். அறை வாடகை தவிர சாப்பாட்டு காசு ஒவ்வொரு வாரமும் வேறாக கொடுக்க வேண்டும்.

ரப்பர் மரங்களின் விதைகள் உலர்ந்து விழத் தொடங்கிய காலம் அது. உலர்ந்த தடித்த தோல்களுக்குள் மணி போல உருளும் விதைகள் தொடர்ந்து வீழ்வது, குழந்தைகள் விளையாடும் கிலுகிலுப்பை சத்தம் போல கேட்டுக் கொண்டேயிருக்கும். அந்த கிலுகிலுப்பை இசையோடு விடியும் காலையும் , எழுந்து கதவை திறந்தால் முகத்திலடித்து கடந்து போகும் முகில் கூட்டமும் , மெனிக்கே தரும் அவித்த ஈரப்பலாக் காயும், கருவாட்டு சம்பலும் என்று வாழ்ந்த மகோன்னதமான நாட்கள் அவை .

ஒரு நவம்பர் மாத இரவு, மழை பெய்து கொண்டிருந்தது. வழக்கம் போல சாப்பாடு தருவதற்காக கதவை தட்டினாள் மெனிக்கே. வந்து பார்த்தால் ஒரு கையில் குடையோடும் மறுகையில் சாப்பாட்டுத் தட்டோடும் நின்றிருந்தாள். தட்டு ஒரு செய்தித்தாளால் மூடப்பட்டு இருந்தது. பையை மார்போடு அணைத்தபடி அவளின் முதுகுக்குப் பின் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். மெனிக்கே பிடித்திருந்த குடை அவளுக்கு மட்டுமே போதுமானதாய் இருந்ததுகூட வந்தவன் தாழ் வாரத்திலிருந்து சொட்டிய மழையில் நனைந்து கொண்டிருந்தான்.

தட்டை என் கையில் தந்து அவனை அறைக்குள் போகச் சொன்னாள் .

"தமிழ் பெடியன்!"

"அதான் உங்க அறைக்குக் கூட்டி வந்தன்" சொல்லிக் கண்ணடித்து சிரித்தாள்.

மரியாதைக்காய் நானும் சிரித்து வைத்தேன் .

சாப்பாட்டை மேசை மீது வைத்து பேப்பரை தூக்கிப் பார்த்தேன். சிவப்பரிசி சோறும், கீரிமீன் குழம்பும், கீரையும், மிளகாய் பொரியலும் சுடச்சுட இருந்தது. சாப்பிடுவதற்கு ஜன்னலை திறந்து கையைக் கழுவிக் கொண்டேன் .

"நீங்க சாப்பிடீங்களா?" என்றேன்.

"வாற நேரமே கடைல சாப்பிட்டுதான் வந்தன்" சொல்லி விட்டு, தன் ஈர உடைகளை மாற்றிக் கொண்டிருந்தார். மழைக் காலங்களில் உடுப்புகளைக் காய வைப்பதற்காக அறைக்குள் கயிறு கட்டியிருந்தேன். அந்தக் கயிற்றில் அவரின் உடுப்புகளைப் போட்டுவிட்டு கட்டிலின் மேல் அட்டணக்கால் போட்டு கொண்டு கூரையை விறைத்து பார்த்தபடி படுத்திருந்தார்.

நான் சாப்பிட்டு முடித்துவிட்டு சிகரெட் ஒன்றை பற்ற வைத்து இன்னொன்றை அவருக்கு முன் நீட்டினேன். எந்த மறுப்பும் சொல்லாமல் வாங்கிக் கொண்டு என் சிகரெட் நெருப்பிலே தானும் மூட்டிக் கொண்டார். அவர் முகத்தை பார்த்து நான் எடை போட்டது சரிதான் என்பதில் சந்தோசம் எனக்கு .

பெயர் என்ன ? ஊர் எங்க ?

காந்தன். வவுனியா

நீங்க ???

நான் மட்டக்களப்பு

ரவுனா?

இல்ல வாழைச் சேனை .

நீங்க வவுனியா எங்க ?

தாண்டிக்குளம்

இங்க வேலையா ??

ஓம் ! ரயர் கொம்பனில வேல.

பகல் சிப்ட்டுக்கு எழுநூறு ரூவா, நைட் சிப்ட்க்கு தொள்ளாயிரமும் நாள் சம்பளம் தருவினம். கொம்பனியாலதான் இஞ்ச கொண்டு விட்டுவினம். அவர் பேசினார். நான் கேட்டுக் கொண்டே இருந்தேன். நான் பேசினேன். அவர் கேட்டுக் கொண்டே இருந்தார். சிகரெட் தீர்ந்து போகும் வரையும் , கையிருப்பில் இருந்த மீதியும் தீர்ந்துபோன வரையிலும் பேசிக்கொண்டே இருந்தோம் . தான் கொண்டு வந்த பைக்குள் துழாவி ஒரு பீடிகட்டை வெளியில் எடுத்தார்.

பீடி குடிப்பீங்களா? என்றார்.

பீடியை வாங்கி பற்ற வைத்தேன். புகையை உள்ளெ இழுக்கும் போது காரமாக இருந்தது. இரண்டாவது , மூன்றாவது பிடியில் அது பழகிப் போய்விட்டது. அந்தப் பீடிக்கட்டும் தீர்ந்து போகும் வரையிலும் பேசினோம். பேசுவதற்கும், கேட்பதற்கும் எங்களுக்கு அவ்வளவு இருந்தது . முதலிரவு அறைக்குள் புகுந்த காதலர்கள் போல இந்த இரவு இப்படியே நீண்டு விடாதா ? என்று ஏங்கிக் கொண்டு இருந்தேன். தேனீக்களின் கொடுக்கில் சுரக்கும் ராயல் ஜில்லி தொடங்கி ரோல்ஸ்ராய்ஸின் லேட்டஸ்ட் மாடல் வரைக்கும் அவனுக்கு தெரிந்து இருந்தது. வானத்துக் கீழே எதைப் பற்றி கேட்டாலும் அதற்கு மிகத் தெளிவான விளக்கமிருந்தது அவனிடம். வாழ்க்கை மீதான அவன் பார்வையில் வியந்து போனேன் ஒரு ஜென் துறவிபோல பக்குவத்தில் இருந்தான்.

எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம்; நிலத்தில் இருந்தவாறு சட்டைக்கு பொத்தான் தைத்தவாறோ, காய்கறி நறுக்கியவாறோ காந்தன் அண்ணா உலக அரசியல் பேசுவதெல்லாம் கொள்ளை அழகு. வீடு குடும்பம் பற்றி பேசும் போது மட்டும் அவன் முகத்தில் இறுக்கம் தெரியும் .

எந்தளவு மன முதிர்ச்சி இருந்ததோ அதேயளவு கிறுக்கு தனமும் இருந்தது அவனுக்கு. "தம்பி போன் கொஞ்சம் தரியா" என்று வாங்கி நம்பரை டயல் செய்து என் காதுகளுக்கு எட்டாத தூரத்தில் நின்று பேசிவிட்டு அழைத்த நம்பரை டிலீட் செய்துவிட்டு தருவான்.

வேலைக்கு போவது, அறையில் உறங்குவது தவிர ரப்பர் தோட்டங்களுக்கு இடையில் உலவுவது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. கூறிய உலோகங்களால் ரப்பர் மரங்களைக் கிழித்து அதன் பாலை சேகரிப்பான். ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு பெயர் வைத்திருந்ததும் அவர்களுக்கிடையில் உரையாடல் நடப்பதெல்லாம் எனக்கு பின்புதான் தெரியும்.

"இண்டைக்கு நாம வேலைக்கு போன பிறகு ஒரு பெரிய பாம்பு வந்திச்சாம்" சொல்லும்போது ஒரு குழந்தைக்கான குதூகலம் தெரியும் அவன் முகத்தில்.

"பாம்பா? உங்களுக்கு எப்படித் தெரியும்" என்றால் "கிருஷ்ணமூர்த்தி சொன்னான்" என்று கிணத்தடியில் நிற்கும் ரப்பர் மரத்தைக் கை காட்டுவான். “நான்தான் சொன்னேன்” என்பது போல அதுவும் காற்றில் அசைந்தபடி நிற்கும். அவனாகவே வேண்டி விரும்பி இப்படி நடந்து கொள்கிறானா? இந்த இயல்பு யாருக்கும் சொல்லாமல் அவனுக்குள் இருக்கும் பெரும் சோகத்தின் தப்பிதமாக இருக்குமோ? என்று தோன்றும்.

அன்று நள்ளிரவு தாண்டியிருந்தது. முகம் தெரியாத இருளில் அழுகையும், விசும்பலும் கேட்டது. அவன் அருகில் சென்று ஆற்றுப்படுத்தக் கூட தோன்றவில்லை. அது காந்தன் அண்ணனின் வெளி அதில் அவனே எதையேனும் இட்டு நிரப்புவதுதான் நியாயம் என்று விலகியே இருந்தேன். நான் அயர்ந்து தூங்கும் வரை அந்த விசும்பல் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தது.

வழமையாக எனக்கு முன்பே எழுந்துவிடும் காந்தன் அண்ணா அன்று நீண்ட நேரமாகியும் போர்வைக்குள்ளிருந்து வெளியில் வரவே இல்லை. தட்டி எழுப்பினேன். போர்வையை விலக்கியவனின் முகம் நன்றாக வீங்கியும், கண்கள் சிவந்தும் இருந்தது."உடம்பு கொஞ்சம் நல்லா இல்லடா, நீ போ நான் இண்டைக்கு வேலைக்கு போகல" சொல்லி என்னை அனுப்பி வைத்தன்,

வேலை முடிந்து அறைக்கு வந்தன். என் அறைவாசலில் நின்ற போலீஸ் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. நிலம் முழுதும் மண்ணெண்னை கொட்டிக் கிடந்தது. அறைக்குளிருந்து தன் மேல் எண்ணையை ஊற்றி தீ வைத்து வெளியில் ஓடி ஒரு சுவரில் மோதி கீழே விழுந்திருக்கிறான். பகல் நேரம் என்பதால் யாரும் இருக்கவில்லை. அவன் அலறல் சத்தம் கேட்டு மெனிக்கே வருவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது .

போலீஸ் என்னையும், மெனிக்கேயையும் மூன்று மணித்தியாலம் வரை விசாரித்தது. எல்லோரும் சொல்லியும் ஆஸ்பத்திரியில் கரியாகி கிடந்தவனை நான் பார்க்க போகவே இல்லை. அன்று அவனை அந்த நிலையில் பார்க்க மோனோதிடம் இருந்ததா என்றும் தெரியாது .

அவன் இறந்தது பௌத்தர் மரபின் படி ஒரு துர்திதி என்று மெனிக்கே பின்பு சொன்னாள்

" இரவில் ஆவி நடமாட்டம் இருக்கும். நீ வேற அறைக்குபோ" என்று எல்லோரும் சொல்லியும் கண்டிப்பாக மறுத்து விட்டேன். ஆவியாகவேனும் காந்தன் அண்ணா திரும்ப வரமாட்டானா? என்று இருந்தது.

ஆறு மாதம் கழித்து ஆய்வுப்பணிகள் எல்லாம் முடிந்து மீண்டும் கொழும்புக்கு போக அறையை காலி செய்யும் போது காந்தன் அண்ணா படுத்த கட்டிலுக்குக் கீழே இருந்து சுருக்கு பை ஒன்றை கண்டெடுத்தேன். சிவப்பு நிறத்தில் மிகவும் மிருதுவான வெல்வெட் துணியில் தைத்த பை. அதற்குள் ஒரு மயிலிறகும், ஒரு ஹேர் கிளிப்பும், மூன்று கோலிக் குண்டுகளும், ஒரு பத்து ரூபா தாளும் அதில் ‘காந்தன் வனிதா’ என்றும் எழுதி இருந்தது. கொழும்பிற்கு வரும் போதுகூடவே அந்தக் சுருக்கு பையையும் கொண்டு வந்தேன்.

அந்தக் கனவும் வரத் தொடங்கியது. ஒரு கடற்கரையில் பாறையொன்றில் நின்று கொண்டு கடலைக் காட்டி எனக்கு ஏதோ சொல்கிறான் காந்தன் அண்ணா. இரண்டு மூன்று மாதமளவில் தொடர்ந்து அதே கனவு திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருந்தது .

காந்தன் அண்ணா அந்தச் சுருக்குப் பைக்குள் ஒரு வாழ்க்கையை ஒளித்து வைத்திருந்தான். என்னமோ தோன்ற அதிகாலையொன்றில் கடற்கரை வரை போய் ஒரு பாறை நின்று சுருக்குப் பையை கடலுக்குள் வீசி ஏறிந்து வந்தேன்.

 

http://neerkoodu.net/Site/news1/68

Share this post


Link to post
Share on other sites

காந்தனிடம்தான் எவ்வளவு சோகம். அவன் விசும்பின அன்று இவர் ஆறுதலாய் கதைத்திருந்தால் ஒரு மரணம் தவிர்க்கப்பட்டிருக்கும்.  tw_blush:

  என்ன  இக்கதைகள் எல்லாம் சில நிஜங்களுடன் சேர்ந்து செல்வதால் நிஜம் ,கற்பனை புரியாமல் உள்ளது.....!  😯

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this