Jump to content

Recommended Posts

பெண்ணியம்: பெய்யெனப் பெய்யும் மழை! - குறள் ஆய்வு-7, பகுதி-1
பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்கா"ரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
- பாவேந்தர் பாரதிதாசன்


திருக்குறள் 'உலக ஆண்களுக்கான பொதுமறை'யா?


"'உலகப் பொதுமறை' என்று நாம் பீற்றிக் கொள்ளும் திருக்குறளும் பெண்களுக்கு என்று வரும்போது 'கற்பு' என்ற பெயரால் ஆணுக்குப் பெண்ணை அடிமையாக வைக்கும் ஆணாதிக்கச் சமுதாயத்தின் குரலாகவே வெளிப்படுகிறது! திருக்குறளை 'உலக ஆண்களுக்கான பொதுமறை' என்பதே சரி!" என்று படபடத்தார் நண்பர். 

"என்னாச்சு! காலையிலேயே வள்ளுவரை வம்புக்கு இழுக்கிறாய்!", என்றேன் சிரித்துக்கொண்டே.

திருக்குறள் அறிவுக்குப் பொருந்தாத பெண்ணடிமை பேசும் நூலா?

"பின்னென்னப்பா! பெண்ணுக்கெதிரா அறிவுக்குப் பொருந்தாத கருத்தையெல்லாம் திருக்குறள் சொல்றதால மட்டும் எப்பிடி ஏத்துக்கிறது?" என்று கேள்விக்கணை தொடுத்தார் நண்பர்.

"என்னென்னு சொன்னாத்தானே அது அறிவுக்குப் பொருந்துறதா இல்லையான்னு சொல்ல முடியும்? மொதல்ல எதவைச்சு சொல்றேன்னு சொல்லு!", என்றேன் சலிப்புடன்.

"தெய்வம் தொழாள்! கொழுநன் தொழுதெழுவாள்! 
பெய்யெனப் பெய்யும் மழை!
-ன்னுட்டு வள்ளுவர் சொல்லலாமா?" என்றார் நண்பர்!

"ஏன்? இந்தக் குறள்-ல என்ன தப்புக் கண்டுபிடிச்சே?" என்றேன் நான்.

"நீயும் இந்த ஆணாதிக்க சமூகத்தோட கைத்தடிதானே! வேற எப்படிப் பேசுவ?", என்றார் கோபமாக!

"இப்பவும் சொல்றேன், தப்பு என்னன்னு மொதல்ல சொல்லுப்பா!" என்றேன் மீண்டும்.

"என்னக் கடுப்படிக்கிறதே ஒன்னோட வேல! வேறென்ன சொல்லுவ நீ? நாம்போறேன்!" என்று எழுந்தார் நண்பர்.

"இப்ப என்ன சொல்லிட்டேன்னு கோவிச்சுட்டுப் போற? குறள் சொன்னியே தவிர பொருள் சொல்லலியே! பொருள் சொன்னாத்தான எனக்குப் புரியும்!" என்றேன் நான்.

கணவனை மட்டுமே தொழும் பெண் 'பெய்' என்றால் மழை பெய்யுமா?

"பரிமேழகர் தொடங்கி பேராசிரியர் சாலமன் பாப்பையா வர எல்லோரும் சொன்ன பொருளை மறுபடியும் இப்பச் சொல்றேன்! கேளு!" என்ற நண்பர் மொபைல்ல கூகுளத் தட்டிக் காட்டினார்:
" மணக்குடவர்(சமணர்) உரை:
    தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதி, அவனை நாடோறுந் தொழுதெழுமவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்.

பரிமேலழகர்(வைணவர்) உரை:
    தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்என - பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள் 'பெய்' என்று சொல்ல; மழை பெய்யும்-மழை பெய்யும். (தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின், 'தொழுது எழுவாள்' என்றார். 'தொழாநின்று' என்பது, 'தொழுது' எனத் திரிந்து நின்றது. தெய்வம்ந்தான் ஏவல் செய்யும் என்பதாகும். இதனால் கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது.).

கலைஞர் மு.கருணாநிதி(கடவுள் மறுப்பாளர்) உரை:
    கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.

மு.வரதராசனார்(தமிழறிஞர்) உரை:
    வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!.

சாலமன் பாப்பையா(தமிழறிஞர்) உரை:
    பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
    தெய்வத்தினைத் தொழுதாதவளாகிக் கணவனைத் தொழுது துயில்விட்டு எழுபவள் 'பெய்' என்று சொல்ல மழை பெய்யும்."

"இப்ப என்ன சொல்ல வர்ற?" என்றேன் நான்.

பெண்ணடிமைத்தனமான உரை எழுதிய உரையாசிரியர்கள்! 

"இக்குறளுக்கு, சமணரான மணக்குடவர், வைணவரான பரிமேலழகர், கடவுள் மறுப்புக் கொள்கையாளரான கலைஞர், தமிழறிஞர்கள் மு.வ., சாலமன் பாப்பையா உள்ளிட்ட பல அறிவாளிகளும் சொல்லும் பொருள் பெண்ணடிமைத்தனமான கருத்தில்லாமல் வேறென்ன?", என்று கொதித்தார் நண்பர்.

"திருவள்ளுவர் அப்படிச் சொல்றாரா என்பதுதான் என்னோட கேள்வி" என்றேன் நான் சலனமில்லாமல்.

"விதண்டாவாதம் பண்ணனும்னா எப்பிடி வேணா பேசலாம். திருவள்ளுவர் திருக்குறள் எழுதுனாரே தவிர திருக்குறளுக்கு உரை எழுதலன்னு உனக்குத் தெரியாதா? உரையாசிரியர்கள் எழுதுனத வைச்சித்தான் நாம பொருள் சொல்ல முடியுமே தவிர நாமளா எத வேணாச் சொல்றதுன்னு ஆரம்பிச்சா அதுக்கு முடிவே இல்ல!" என்றார் நண்பர் கோபமாக.

மெய்ப்பொருள் காண்பது அறிவு!

"இந்த மாதிரி சூழ்நிலைகள் வரும்னு வள்ளுவருக்கே தெரியும்பா! அதான் உரையாசிரியர்கள் உதவி தேவைப்படாத இரண்டு குறட்பாக்களை நமக்காக எழுதிவைச்சிட்டுப் போயிருக்காரு வள்ளுவர்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. - குறள் 355 

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. - குறள் 423 

இந்த இரண்டு குறட்பாக்களும் நேரடியா சொல்ற பொருள் ஒண்ணுதான். ஒன்றைக் குறித்து அறிவுக்குச் சரி என்று படவில்லை என்று தோன்றினால், சொல்பவர் மிகப்பெரிய ஆளாச்சே என்றோ, சொல்லப்படும் பொருளின் தன்மை எப்படியிருக்கின்றது என்றோ மயங்க வேண்டாம்! உன் அறிவைச் செலுத்தி, அதன் மெய்ப்பொருளைக் கண்டுகொள்! அப்படிக் காண்பதுதான் அறிவு என்று வள்ளுவர் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் அல்லவா? அதன்படி சிந்திப்போமே!" என்றேன் நான்.

வேர்களைத் தேடி...

"என்னமோ நாம பெரிய தமிழறிஞர்கள்-னு நெனப்பா? நடக்குறதப் பேசப்பா" என்றார் நண்பர் வெறுப்புடன்.

"நாம தமிழறிஞர்கள் இல்லதான்! அதுக்காக ஏற்கனவே மழையைப் பற்றி உவமை சொன்ன சங்கப்பாடல்கள் ஏதாச்சும் இருக்கான்னு தேடிப் பாக்கலாம்ல", என்றேன் நாம் நம்பிக்கையுடன்.

"ஆயிரம் ஆண்டுகளா அறிஞர்கள் தேடாததா!. இதெல்லாம் சரிப்பட்டு வராது!" என்றார் நண்பர்.

"அதென்னெப்பா! 'இவன் அதுக்குச் சரிப்பட மாட்டான்-ங்கற வடிவேல் ஜோக்-மாதிரி பேசற! கொஞ்சந்தா யோசியேன்!", என்றேன் நான்.

பாரியும் மாரியும்!

"சரிப்பா! பத்தாங்கிளாஸ்-ல எங்க தமிழ் சார் சொன்ன பாரி பாரி என்று-ன்னு ஒரு கபிலர் பாட்டு நெனவுல இருக்கு! அதுல பாரிய மழைக்கு உவமிச்சு சொல்லியிருக்குன்னு நினைக்கிறேன்! அதச் சொல்றேன் கேளு!" என்ற நண்பர்,

"பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டுஈண்டு உலகு புரப்பதுவே - புறநானூறு:13 134 கபிலர்.

இதன் பொருள்,  “பாரி பாரி என்று கூறி அவனுடைய பலவகைப்பட்ட புகழையும் வாழ்த்திச் சிறந்த புலமை மிக்க புலவர் அவன் ஒருவனையே போற்றுவர். பாரி ஒருவனே பெரிய வள்ளல் தன்மை உடையவன் அல்லன்; இவ்வுலகைப் பாதுகாப்பதற்கு மாரியும்(மழையும்) இருக்கின்றது.”

பாரியின் கொடைமடம்!

மேகத்தைப் போன்றவன் பாரின்னுட்டு நேராகக் கூறாமல், மறைமுகமாகக் கூறிய சங்கப்புலவர் கபிலரின் உத்தி நினைதற்குரியது. எந்தப் பயனும் கருதாமல் பொழியும் மழையின்(மாரியின்) இயல்பு போலப் பாரியும் பயன்கருதாக் கொடை சுரந்து உலகு உயிர் பேணும் இயல்பு உடையவன் என்பதால் பாரியை, மடத்தனமாகக் கொடையளிப்பவன் என்ற பொருளில் "பாரியின் கொடைமடம்" என்று சொல்லுவார்கள் என்றும் எங்கள் தமிழாசான் சொல்லியது இப்ப நினைவுக்கு வருகிறது", என்றார் நண்பர்.

இறைவனின் கருணையைப்போன்ற பாரியின் கருணை!

ஆகா! என்ன அருமையான பாடல். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், வறியவரின் துன்பம் நீக்கவேண்டும் என்னும் கருணை ஒன்றினால் மட்டுமே கொடை பொழிந்த பாரியை மாரிக்கு (மழைக்கு) ஒப்பாகப் புகழ்ந்து பாடிய கபிலரின் பாடலுக்கு முற்றிலும் தகுதியுடையவன்தான் பாரி. நாடு ஆண்ட பாரியின் கருணையும், இறைவனின் கருணையைப்போல சிறப்பானதுதான். 

பக்தி நிலையில் நின்ற அருளாளர்கள் இறைவன்பால் கொண்ட அன்பு, இறைவன் உயிர்களிடம் காட்டும் வரம்பிலாத கருணையை விஞ்சும் வகையில் இருந்ததைத் பின்வரும் திருவாசகம் உணர்த்துகின்றது.

உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்;
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரை கழற்கே,
கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுவனே! - திருவாசகம்: திருப்புலம்பல்:3

இறைவா! கன்றை ஈன்ற பசுவின் மனம் எவ்வாறு தான் ஈன்ற கன்றினை நினைந்து பால் சுரக்குமோ, அதுபோல, சிலம்பொலி ஒலிக்கின்ற நினது திருவடிகளின்பால் எனக்கு அன்பு சுரக்குமாறு அருள் தருக! என்னும் பொருளில் "கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே!" என்கிறார். 

ஏன் கற்றாவின் மனம் போல, கசிந்து, உருக வேண்டுகின்றார்?

இங்கு ஏன் குழந்தையைப் பெற்ற தாயின் மனத்தை உவமையாகக் காட்டாமல், கன்றை ஈன்ற பசுவின் மனத்தை உவமிக்கிறார் என்பது சிந்தனைக்குரியது. 

தான் ஈன்ற குழந்தைக்குப் பாலூட்டும் தாய்க்குக் கூட, தன் முதுமைக்காலத்தில் அக்குழந்தை தன்னைப் போற்றிப் பாதுகாக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒருவேளை இருக்க வாய்ப்புண்டு. ஆனால், கன்றை ஈன்ற பசுவுக்கு அத்தகைய எதிர்பார்ப்பு எதுவும் இருக்க வாய்ப்பே இல்லை. ஆதலால்தான் "கற்றாவின் மனம்போல" என்று வேண்டுகிறார் மணிவாசகப் பெருமான்.

கூடும் அன்பினிற் கும்பிடல்!

சேக்கிழார் பெருமானோ, 
 
"கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்" - பெரியபுராணம்: 1.4.8:(3-4)
என்கின்றார்.

"திருக்கூட்டத்து அடியார்கள், இறைவன்பால் கொண்ட அன்பு ஒன்றினால் மட்டுமே இறைவனைக் கும்பிடும் பிறப்பே போதும் என்று விரும்புவார்களே அன்றி,  இறைவனை வழிபட்டால் கிடைக்கும் மிக உயர்ந்த பயனான பிறவித்துன்பத்திலிருந்து விடுபடும் 'வீடுபேறு' என்னும் உயர்ந்த நிலைத்த இடம் கூட தமக்கு வேண்டும் என்று விரும்பாத இயல்புடையவர்கள்" என்கிறார் சேக்கிழார் பெருமான். 

கூடும் அன்பினிற் கும்பிடல் என்பது - 

"குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்,
 பனித்த சடையும், பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும், 
இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும், காணப் பெற்றால்,
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே" 

என்று அப்பர் சுவாமிகள் அருளியதும். 

“நின் திருவடிக்காம் பவமே அருளு கண்டாய்“ 

என்று மாணிக்கவாசக சுவாமிகள் விண்ணப்பித்ததும்,

“கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம்“ 

என்று இறைவனின் தோழர் சுந்தரமூர்த்தி நாயனார் வேண்டியதும் 

"ஆடும் பரிவேல் அணிசேவல் எனப் பாடும் பணியே பணியாய் அருள்வாய்" 

என்று அருணகிரிநாதர் கந்தர் அநுபூதியில் வேண்டியதும் 

“பச்சை மாமலை போல் மேனி! பவளவாய் கமலச் செங்கண்!
 அச்சுதா! அமரர் ஏறே! ஆயர்தம் கொழுந்தே! என்னும்
 இச்சுவை தவிர, யான் போய் இந்திரலோகம் ஆளும்
 அச்சுவை பெறினும் வேண்டேன்! அரங்கமா நகருளானே.”
 

என்று தொண்டரடிப்பொடியாழ்வார் திருவரங்கன்பால் அன்பு மேலீட்டால்  கதறியதும் 
"கூடும் அன்பினில் கும்பிடல்" என்பதே.  

கணவன்பால்  மனைவி கொள்ளும் தூய அன்பு!

கணவன்பால்  மனைவி கொண்ட அன்பும், திருக்கூட்டத்து அடியார்கள் அடியார்கள் இறைவன்பால் கொண்ட அன்புபோல, எத்தகைய எதிர்பார்ப்பும் இல்லாத தூய அன்பாகும் என்பதையே "தெய்வம் தொழாள்! கொழுநன் தொழுதெழுவாள்" என்ற சொற்றொடர் விளக்குகிறது!  

பெய்யெனப் பெய்யும் மழை"யாய்ப் பொழியும் மனைவியின் பயன் கருதா அன்பு மழை!

'களர்நிலம், பாலைநிலம், நன்செய் விளைநிலம், புன்செய் விளைநிலம் என்ற வேறுபாடெல்லாம் பார்க்காமல் "பெய்யெனப் பெய்யும் மழை" போல், கணவனிடம் மனைவி செலுத்தும் அன்பு, களர்நிலத்தில், பாலைவனத்தில் பெய்தால் வீணாகிவிடுமோ என்றெல்லாம் கவலைப்படாமல் "பெய்யெனப் பெய்யும் மழை"போல், பயன் கருதாமல் பொழியும் அன்பு மழையாகும் என்பதே பொருளாக இருக்க வேண்டும் என்பதே அறிவுக்குப் பொருத்தமாகப்படுகின்றது. 

இறைவன் கொடுத்த அருட்கொடையே மனைவி!

"ஏ ஆண் வர்க்கமே!! உங்கள் வாழ்க்கைத் துணைநலமாக இறைவன் கொடுத்த அருட்கொடையே உங்கள் மனைவியர்! அவர்கள் உங்களிடம் செலுத்தும் அன்பு எவ்வித பயனும் கருதாத, "பெய்யெனப் பெய்யும் மழை" போன்று தூய்மையானது! திருக்கூட்டத்தார் இறைவனிடம் செலுத்தும் தூய அன்பைப்போல்,  மனைவியர் அவரவர் கணவன்மார்களிடம் தூய அன்பைப் பொழிகிறார்கள்! வாழ்க்கைத் துணைநலமாகிய நும் மனைவியர், இறைவனால் நுமக்கு அருளப்பட்ட "பெய்யெனப் பெய்யும் அன்பு மழை" ஆவர்." என்னும் பொருளே  

"தெய்வம் தொழாள்! கொழுநன் தொழுதெழுவாள்!
பெய்யெனப் பெய்யும் மழை" 

என்னும் திருக்குறளின் மெய்ப்பொருளாக என் சிற்றறிவுக்குப் படுகின்றது! 

மேற்கண்ட சிந்தனைகள் புறநானூற்றுப் பாடல் தந்த சங்ககாலக் கவிஞர் கபிலரின் சிந்தனை மரபிலிருந்தும், பக்தி இலக்கியங்கள் அருளிய சைவ நாயன்மார்கள், வைணவ ஆழ்வார்கள் மரபிலிருந்தும் யாம் பெற்றவை. காலத்தால், இச்சிந்தனை மரபுகள் மணக்குடவர் உள்ளிட்ட உரையாசிரியர்களின் காலங்களுக்கு முந்தியவை. 

மேலும், நாமறிந்த திருக்குறள் உரையாசிரியர்கள் சமணம், வைணவம், கடவுள் மறுப்பு, கிறித்துவம் போன்ற தத்துவப் பின்புலம் கொண்டவராயினும், பெண்களையும், சூத்திரர்களையும் கீழ்மக்களாகக் கருதும் வேதகால ஆரியத்தத்துவ மரபுகளின் பாதிப்புகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் தம்மையறியாமல் ஆட்பட்டவர்கள்.

செக்குமாடுபோல, இவர்களையே நாம் சுற்றிச்சுற்றி வந்தால், ஆரிய முடைநாற்றமடிக்கும் மனிதகுலத்துக்கே எதிரான மனுநீதி உள்ளிட்ட சாத்திரக்குப்பைகளிலேயே நாம் நாறிக்கிடக்க வேண்டியதுதான்!

திருக்குறளின் மெய்ப்பொருள் காண, தமிழர் மரபுகளின் வேர்களைத் தேடி, தொல்காப்பியத்துக்கும், அடுத்தபடியாக, சங்க இலக்கியங்களுக்கும், அதற்கு அடுத்தபடியாக, பன்னிரு திருமுறைகள், திருநாலாயிரம் உள்ளிட்ட பனுவல்களுக்கும் நாம் செல்ல வேண்டியது அவசியமாகின்றது. 

திருக்குறள் கூறும் பெண்ணியம், ஆரிய தரும சாத்திரங்கள் கூறும் பெண்ணியம் குறித்த ஒப்பீட்டை இக்கட்டுரையின் இரண்டாம் பகுதியில் விரிவாகக் காண்போம். 

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்!  அன்னார்
உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலினால் பலராய்க் காண்பார்!
கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு
துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!


குறளறம் தொடர்ந்து பேசுவோம்!
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"தெய்வம் தொழாள்! கொழுநன் தொழுதெழுவாள்!
பெய்யெனப் பெய்யும் மழை" 

அடேயப்பா எவ்வளவு அழகான விளக்கங்கள்.எவ்வளவு பெரியோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். எதோ நானும் சொல்லுவம் என்று பார்க்கிறேன்.....!

பெய்யெனப் பெய்யும் மழை"   

வள்ளுவரின் காலத்தில் விவசாயிகள் இருந்தார்களேயன்றி விஞ்ஞானிகள் அவ்வளவு இல்லை.(சிலசமயம் அவர்கள் இயல்பாய் கண்டுபிடித்ததை இன்று நாம் விஞ்ஞானத்தில் நிறுவிக்கொண்டு வருகிறோம். அது வேறு விடயம்). ஒரு விவசாயி விதைக்கிறான். துளிர்த்த பயிர் செழித்து வளர மழை இல்லை.அண்ணாந்து வானத்தைப் பார்த்து நினைக்கிறான் இப்ப மட்டும் நான் "மழையே வா" என்று சொல்ல "சோ" என்று மழை பெய்தால் எப்படி இருக்கும். (70 mm ல் மனத்திரையில் பார்க்கவும்). வறண்டு கிடக்கும்  வயலில் துமியாய்  தூறளாய் பலமாய் பெய்கிறது. சாய்ந்த கதிர் நிமிர பொந்தில்  இருந்த எலிகளும் முயல்களும் அங்குமிங்கு ஓடித்திரிய பாம்புகளும் தன் பசியையும் மறந்து படமெடுத்து நிக்க எங்கிருந்தோ மயில்களும் பறவைகளும் பறந்து வந்து பரதம் ஆட ....அட ....அட....அட..... விவசாயியின் கண்கள் பெய்கின்றன......!

அன்றைய பெண்கள் எப்போதும் பிரம்ம முகூர்த்தத்தில்(4ல் இருந்து 6க்குள்) எழுந்து விடுவார்கள். அப்படிப் பலரும் அதிகாலையில் எழுந்தாலும் சிலர் மட்டும் எழும்போது தன் அருகே  உறங்கும் கணவனின் பாதத்தைத் தொட்டு பின் தாலியையும் கண்ணில் ஒற்றிக் கொண்டு அன்றைய கடமைகளை செய்ய செல்வார்கள். இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும்.வீட்டில் பூஜை அறையில் தெய்வம் இருந்தாலும் எழுந்தவுடன் விடியாமூஞ்சியுடன் போய் வணங்க முடியாது. குளித்து முடித்து சீவி சிங்காரித்து மலர்களுடன் சென்றுதான் வணங்க முடியும். ஆனால் கணவனை எழுந்தவுடனேயே அவன் பாதம் பற்றி வணங்கலாம் தப்பில்லை. காரணம் அன்றைய முன்னிரவில் நடந்த கலவியின் போது அவன் அவளது காலடியிலேதான் கிடந்தான். அவள் சிரசின் முடி அவன் தோளில் புரள, இடையின் முடி இதழில் இனிக்க ஊடலில் அவள் உதைத்த போதும் அவள் பாதத்தை தன் மார்பிலே தாங்கி கொண்டவன் அவன். 

அப்படித் தொழுகின்ற பெண்ணிடம் இன்னோரன்ன பல நற்பண்புகளும் கூடவே குடி கொண்டிருக்கும். பெரியவர்களிடம் மரியாதை, பெற்றவர்களிடம் பணிவு,அயலவர்களுடன் உறவு, அந்நியரிடத்திலும் அன்பு எல்லாம் இருக்கு. அப்படியான ஒரு பெண்ணை மனைவியாக பெற்றவன் இந்த "பெய்யெனப் பெய்யும் மழை"  போன்று எல்லோருக்கும் பயனுடையவளாக இருப்பாள்......!  

கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமாக எழுதிப் போட்டனோ......!  tw_blush:

அன்றைய அரசர்களாக இருந்த இந்தப் பாரி, ஓரி, கர்ணன், இவர்கள்தான் கொடை என்னும் பெயரில்  இலவசங்களைக் குடுத்து மக்களைக் கெடுத்து குட்டிச்சுவராக்கி விட்டவர்கள். அதன் தொடர்ச்சி இன்று லஞ்சம், ஊழல், என்று பல்கிப் பெருகி சமுதாயம் நாற்றமடித்துக் கொண்டிருப்பதற்கு முன்னோடிகள் அன்னவர்களே.....!  ?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

 

 

7 hours ago, suvy said:

கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமாக எழுதிப் போட்டனோ......!  tw_blush:

அதிகப்பிரசங்கித்தனமாக எனக்குத் தோன்றவில்லை . சித்திரமும் கைப்பழக்கம் ; செந்தமிழும் நாப்பழக்கம் என்ற அடிப்படையில்தான் நாம் எல்லோரும் முயற்சிக்கிறோம். உங்களது நல்ல முயற்சி . அதிலும் நீங்கள் எழுதிய ஒரு பத்தி பத்தியே விட்டது (பக்தியே என்பதைத் தமிழ்ப் படுத்திய சிலேடையல்ல). காமத்துப்பாலில் உள்ள குறளோ எனும் ஐயத்தை ஏற்படுத்தும் அளவு அருமையான வருணனை.  ( 'அன்றைய  பெண்கள் ' என ஆரம்பிக்கும் பத்தி ) .

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

திருவாளர்கள் சுவி மற்றும் சோமசுந்தரனார் இருவருக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்.

எதற்காக என்று கேட்க மாட்டீர்களா? "கற்றதனால் ஆய பயன் என்கொல்? வாலறிவன் நற்றாள் தொழார் எனின்!" என்று இறைவணக்கத்தின் சிறப்பை இரண்டாம் குறளிலேயே உரக்கச் சொன்ன வள்ளுவர் "தெய்வம் தொழாள்; கொழுநன் தொழுதெழுவாள்!" என்று கூறவேண்டிய அவசியம் என் வந்தது என்று  என்னைத் துளைத்தெடுத்த பெண்ணியவாதிகளின் நியாயமான கேள்வியை வசதியாக ஓரம் கட்டிவிட்டே "பெய்யெனப் பெய்யும் மழை!" என்ற ஒற்றைக் கருத்தில் இக்கட்டுரையைக் கட்டினேன்.

சுவி அவர்களின் கவித்துவமான பதிலைப் போகிற போக்கில் படித்துவிட்டுப் போயிருப்பேன். நல்ல வேளை,  சோமசுந்தரனார் அவர்கள், திருவாளர் சுவியின் "அகத்துறை  உரைநடைக் கவிதை"க்கு, அருமையான "சீவக சிந்தாமணி" பார்வையில் உரையெழுதினாரோ இல்லையோ, நான் ஓரம் கட்டி வைத்திருந்த "தெய்வம் தொழாள்; கொழுநன் தொழுதெழுவாள்!" கேள்விக்கான விடையின் கரு உதயமாகி,  நன்கு வளர்ந்து இப்போது முழுக்கட்டுரையாகிவிட்டது. 

 இத் திருக்குறளுக்கான மறைதிறவை (ரகசியத்தை) உணராமல்,  பல்லாண்டுகளாகப் பெண்ணியவாதிகளால் 'கொலைவெறி வெறுப்புடன் ' இக்குறள் பார்க்கப்பட்ட வரலாற்றுப் பிழையை நேர் செய்யும் விடை கிடைத்துவிட்டது. நன்றி.

இத்தொடரின் அடுத்த கட்டுரை "பெண்ணியம் - தெய்வம் தொழாள்! கொழுநன் தொழுதெழுவாள்! - குறள் ஆய்வு-7, பகுதி-3"  திருவாளர்கள் சுவி மற்றும் சோமசுந்தரனார் இருவருக்கும் அர்ப்பணம்!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.