Jump to content

சித்தார்த்தனும் செல்வமும் என்ன செய்யப் போகிறார்கள்?


Recommended Posts

சித்தார்த்தனும் செல்வமும் என்ன செய்யப் போகிறார்கள்?
புருஜோத்தமன் தங்கமயில் / 2018 செப்டெம்பர் 12
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான உறவு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது.  

பிரிவுக்குப் பின்னர், எவ்வாறான பாதையைத் தேர்தெடுக்க வேண்டும் என்பது தொடர்பிலும் கூட்டமைப்பினரும் விக்னேஸ்வரனும் ஓரளவுக்குத் தெளிவான நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டார்கள்.  

உறவை ஒட்டுமொத்தமாக முறித்துக் கொள்வதற்கு முன்னரான, சம்பிரதாயபூர்வ சந்திப்புக்கான காத்திருப்பு மட்டுமே இப்போதுள்ளது. டெல்லிப் பயணத்தை முடித்துக்கொண்டு, இரா.சம்பந்தன் நாடு திரும்பியதும், ‘கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், கூட்டமைப்பின் முதலமைச்சர் விக்னேஸ்வரன்’ என்கிற அடிப்படையிலான இறுதிச் சந்திப்பு நடைபெறும் என்று தெரிகிறது. 

தமிழரசுக் கட்சிக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முரண்பாடுகள், கடந்த மூன்று ஆண்டுகளாக உச்சத்தை எட்டியிருந்த போதிலும், கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளிடமும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடமும் விக்னேஸ்வரனுக்கு ஆதரவான மனநிலை ஓரளவு காணப்பட்டது.   

கூட்டமைப்பை நோக்கி, விக்னேஸ்வரன் விமர்சனங்களை முன்வைக்கும் போதெல்லாம், அந்த விமர்சனங்களை, ‘தமிழரசுக் கட்சி எதிர் விக்னேஸ்வரன்’, ‘எம்.ஏ. சுமந்திரன் எதிர் விக்னேஸ்வரன்’ என்கிற நிலைகளில் பேண வேண்டும் என்பதிலும், அவர்கள் குறியாக இருந்தார்கள். ஆனால், கடந்த சில மாதங்களாக அந்த நிலையில் குறிப்பிட்டளவு மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.   

புளொட்டின் தலைவர் த. சித்தார்த்தன் இன்று வரையிலும் விக்னேஸ்வரனை எதிர்த்தோ, ஆதரித்தோ கருத்துகள் எதையும் பெரியளவில் வெளியிட்டிருக்கவில்லை.   

கூட்டமைப்பிலிருந்து விக்னேஸ்வரன் விலகுவது அல்லது வெளியேற்றப்படுவது, தமிழ் மக்களைப் பாதிக்கும் என்கிற ரீதியிலான, யாருக்கும் வலிக்காத மாதிரியான கருத்துகளையே, அவர் வெளியிட்டு வந்திருக்கின்றார்.   

சித்தார்த்தனின் அரசியல் அணுகுமுறை என்பது, அவசரப்படுவதோ, அந்தரப்படுவதோ அல்ல. மிகமிக நிதானமாகப் பொறுத்திருந்து, சந்தர்ப்பங்களைக் கணித்து, தீர்மானங்களை மேற்கொள்ளும் போக்கிலானது.   

சம்பந்தனால் மதிக்கப்பட்ட பங்காளிக் கட்சித் தலைவர்களில், சித்தார்த்தனுக்கே முதலிடம். அது, மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் மகன் என்கிற அடிப்படையில் மாத்திரம் வந்ததல்ல. அரசியல் அணுகுமுறை சார்ந்தும் வந்தது. அதுபோலவே, விக்னேஸ்வரனும் அதிகளவு முக்கியத்துவத்தை சித்தார்த்தனுக்கு கொடுத்தே வந்திருக்கின்றார்.   

தமிழ் மக்கள் பேரவையிலுள்ள வைத்தியர்கள், சட்டத்தரணிகளுக்கு மேலான முக்கியத்துவத்தை சித்தார்த்தனுக்கு, விக்னேஸ்வரன் வழங்கி வந்திருக்கின்றார். பேரவைக்குள் இருக்கும் கட்சித் தலைவர்களில், நிதானமாக விடயங்களைக் கையாளக் கூடிய தலைவர் சித்தார்த்தன் என்கிற அடிப்படையில் வந்தது அது. 

இவ்வாறான கட்டத்தில், விக்னேஸ்வரன் புதிய அணிக்குத் தலைமையேற்கப்போகிறார்; புதிய அணியின் பலம் - பலவீனத்தை ஆராய்வதிலும், புளொட்டின் எதிர்கால நிலைப்புக்கு அது உதவுமா என்பது சார்ந்துமே, சித்தார்த்தன் தற்போது சிந்தித்து வருகிறார்.   

தன்னுடைய நிலை, இருப்புக்கு சிக்கல் என்று கருதிய எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர், சம்பந்தப்பட்ட தரப்புகளைப் பகைத்துக் கொண்டதில்லை. அடிப்படையில் அவர் எதிரிகளையே பகைத்துக்கொள்ளாதவர்.   

புளொட்டுக்கு, மட்டக்களப்பில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும், வன்னியில் சில மாகாண சபை உறுப்பினர்களும் இருந்தாலும், புளொட்டின் தற்போதைய அரசியல் இருப்பு, யாழ்ப்பாணம் சார்ந்தே கட்டமைக்கப்படுகின்றது. இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் எந்தத்தரப்பு பலமானது என்பதுதான், சித்தார்த்தனின் எதிர்காலப் போக்கைத் தீர்மானிக்கும். ஆனாலும், இது வரையிலும் கூட்டமைப்பிலிருந்து அவர் வெளியேறும் கட்டத்துக்கு வரவில்லை.   

இன்னொரு வகையில், கட்சியின் ஆதரவாளர்கள், இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்களை வைத்து, விக்னேஸ்வரனுக்கு எதிரான, விமர்சனப் போக்கைப் பேணவும் முயல்கிறார். அது, கூட்டமைப்புக்குள் தொடர்ந்தும் இருப்பதற்கான சூழல் நீடிக்கும் பட்சத்தில் உதவும் என்றும் நம்புகிறார்.   
அதாவது, மைத்திரிக்கு எதிரான தன்னுடைய விமர்சனங்களை, கோபங்களை ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு, ரணில் கையாளுவதற்கு இணையான உத்தி.  ஆனால், டெலோ இயக்கம் விக்னேஸ்வரனை ஒட்டுமொத்தமாகப் புறந்தள்ளி, சம்பந்தனின் கீழ் தொடர்வது என்கிற முடிவுக்கு வந்துவிட்டது.   

“தமிழ்த் தேசிய அரசியலுக்கு புதியவர், குழந்தை” என்கிற தோரணையிலான உரையாடல்களை, விக்னேஸ்வரன் குறித்து முன்வைக்கும் அளவுக்கான கட்டத்தை, டெலோ அடைந்துவிட்டது. விக்னேஸ்வரன் தொடர்பில், தொடர்ந்தும் நழுவல் போக்கில் இருப்பது, மேலதிக சிக்கல்களை எதிர்காலத்தில் கொண்டு வரும் என்பதால், எடுக்கப்பட்ட முடிவாக இருக்கலாம்.   

ஏனெனில், டெலோவின் வாக்கு வங்கி ஒப்பீட்டளவில், யாழ்ப்பாணத்தைவிட வன்னியில் அதிகம். அவ்வாறான நிலையில், வன்னியைப் பிரதானப்படுத்தி, முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் செல்வம் அடைக்கலநாதனுக்கு உண்டு. அதுதான், தன்னைத் தொடர்ந்தும் கட்சித் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் வைத்துக் கொள்ள உதவும் என்றும் அவர் நம்புகிறார்.   

கூட்டமைப்புக்குள் டெலோ முடிவுகளை எடுக்கும் கட்சியாக என்றைக்கும் இருந்ததில்லை. கிட்டத்தட்ட தமிழரசுக் கட்சியின் முடிவுகளின்படி ஒழுகும் கட்சியாகவே இருந்திருக்கின்றது.   

ஆனால், மன்னாரிலிருந்து சார்ள்ஸ் நிர்மலநாதனை தமிழரசுக் கட்சி கொண்டு வந்ததும், டெனீஸ்வரன் விடயத்தில் தமிழரசுக் கட்சியின் தலையீடுகளும் செல்வத்தை குறிப்பிட்டளவு எரிச்சல்படுத்தியது. அதனை அவர், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஆசனப்பங்கீட்டில் காட்டிக் கொண்டார்.   

என்றைக்குமே சொல்வதைக் கேட்கும் கிளிப்பிள்ளையாக இருக்கும் செல்வம், குரல் உயர்த்தியமை குறித்து, சம்பந்தனுக்கு கோபம் உண்டு. அதனை, தேர்தலின் பின்னரான சந்திப்புகளில் அவர் வெளிப்படுத்தியும் வந்திருக்கின்றார். ஆனாலும், விக்னேஸ்வரனின் அரசியல் என்பது, யாழ்ப்பாணத்துக்கு அப்பால், விரிவடையாத நிலையில், ‘அரசனை நம்பிப் புருசனைக் கைவிடும் நிலை’க்கு செல்வம் செல்லத் தயாராக இல்லை.   

விக்னேஸ்வரன் விடயத்தில், செல்வம் இன்னொரு நுட்பமான அணுகுமுறையையும் கையாள்வது தெரிகின்றது. வடக்கில், விக்னேஸ்வரன் உண்மையிலேயே ஓர் ஆளுமையுள்ள தலைமையாக மாறும் பட்சத்தில், அவரோடு ஒட்டிக்கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படலாம். அப்போது, அவர் குறித்து, தான் வெளியிட்ட விமர்சனங்கள் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்றும் நம்புகிறார். அதன்போக்கில்தான், விக்னேஸ்வரன் மீதான விமர்சனங்களையும் கோபத்தையும் சம்பந்தன் மீதான விசுவாசத்தையும் என். ஸ்ரீ காந்தவைக் கொண்டு முன்வைக்கிறார்.   

ஊடகங்களிடம் பேசும் போது, யார் குறித்த விமர்சனங்களையும் செல்வம் பெரிதாக முன்வைப்பதில்லை. அதற்கான பொறுப்பு ஸ்ரீ காந்தாவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. ஸ்ரீ காந்தாவும் ‘நவரத்தினம் காலத்து மேடைகள்’ என்று நினைத்து, ஒலிவாங்கிகளுக்கு முன்னால் முழங்குகிறார்.   

ஆனால், பேரவைக்காரர்களைப் பொறுத்தளவில் சித்தார்த்தனைக் காட்டிலும், செல்வத்தை அணைத்துக் கொள்வது, யாழ்ப்பாணத்துக்கு அப்பாலும் விக்னேஸ்வரனைக் கொண்டு சென்று, வடக்கின் தலைவராக உயர்த்துவதற்கு உதவும் என்று நம்புகிறார்கள். அது, கடந்தகால வரலாறுகள் சார்ந்து, ஒப்பீட்டளவில் புளொட் அடையாளத்தைக் காட்டிலும், டெலோ அடையாளம் சிறந்தது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலானது.  

பேரவையின் ஆதரவாளர்கள், தொண்டர் படையணி என்பது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்ந்தே பெரும்பாலும் இருக்கின்றது. அந்த அணி, புளொட் சார்ந்து வைத்த குற்றச்சாட்டுகள் என்பது, சமூக ஊடக அரங்கில் அதிகம். அப்படியான கட்டத்தில், புளொட்டை உள்வாங்கும் போது, கடந்த கால விமர்சனங்களுக்கு எதிரான கருத்துகளை, முன்வைக்க வேண்டி வரும்; அது, தர்மசங்கடமானது. அவ்வாறான சூழல் உருவாவதைத் தடுக்க வேண்டிய கட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இருக்கிறார்.   

விக்னேஸ்வரனுக்கு, சித்தார்த்தனே மிக அவசியமானவர் என்கிற போதிலும், சித்தார்த்தனைக் காட்டிலும், செல்வத்தை உள்வாங்குவதையே கஜேந்திரகுமாரும், முன்னணியும் பேரவையின் வைத்தியர்களும், சட்டத்தரணிகளும் விரும்புகிறார்கள். அத்தோடு, தேர்தல் காலத்தில் வன்னியில், வாக்கு வங்கியையும் அதிகரித்துக் கொள்ள முடியும்.   

விக்னேஸ்வரனின் தனிப்பயணம், அடுத்து வரும் நாள்களில் ஆரம்பித்தாலும், அதன் பக்கம் இப்போதைக்கு சித்தார்த்தனோ, செல்வமோ செல்ல மாட்டார்கள். அதுதான், மாவையை முன்னிறுத்தி, வடக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ளும் திடத்தையும் சில காலத்துக்குப் பின்னர், ப.சத்தியலிங்கத்தை முதலமைச்சராக முன்னிறுத்தும் திட்டத்தையும் தமிழரசுக் கட்சியால் முன்னெடுக்க வைத்திருக்கின்றது. அதை, எதிர்வரும் நாள்கள் பதிவு செய்யும்.  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சித்தார்த்தனும்-செல்வமும்-என்ன-செய்யப்-போகிறார்கள்/91-221605

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சித்தார்த்தனும்-செல்வமும்-என்ன-செய்யப்-போகிறார்கள்/91-221605

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.