Jump to content

சீனாவைத் துரத்தும் கடன் பொறி குற்றச்சாட்டு


Recommended Posts

சீனாவைத் துரத்தும் கடன் பொறி குற்றச்சாட்டு

03-fcf44a66e8e752c1fcd51363e72bb4842bd2d5d0.jpg

 

-ஹரிகரன்

இப்போதெல்லாம் சீனா கடன் பொறி என்ற சொல்லைக் கேட்டாலே பதறிப் போகிறது. அந்தச் சொல்லைக் கூறியவரை நோக்கி வசைபாடவும் ஆரம்பித்து விடுகிறது.

இதற்கு, சீனா கூறுவது போன்று மேற்குலக ஊடகங்கள் மாத்திரம் காரணம் அல்ல. இலங்கையும் கூட இந்த நிலைக்கு காரணம் தான்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனா தன்வசப்படுத்தியதை அடுத்தே, சர்வதேச அளவில் சீனாவுக்கு எதிராக- இந்தக் கடன் பொறி குற்றச்சாட்டு அலை வீசத் தொடங்கியிருக்கிறது.

BRI எனப்படும், சீனாவின் கனவுத் திட்டமான- பட்டுப்பாதை திட்டத்தை செயற்படுத்த கடன்களை கொட்டிக் கொடுத்து நாடுகளை வளைத்துப் போடுகிறது சீனா.

சீனாவின் இந்தக் கடன் பொறிக்குள் அகப்பட்ட நாடுகளில் இலங்கை மிக முக்கியமானது. இலங்கைக்கு முன்னதாகவே பல ஆபிரிக்க நாடுகள் இந்த வலையில் வீழ்ந்திருக்கின்ற போதும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்குப் பெற்றுக் கொண்டதில் இருந்து தான் சீனாவுக்கு ‘சனி’ பிடித்தது.

இந்தியப் பெருங்கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகம் ஒன்றை வசப்படுத்திக் கொண்டதையிட்டு சீனா ஆறுதலடைய முடியாதபடி அதற்குப் பின்னரான கடன் பொறி அலை சீனாவைத் தாக்கத் தொடங்கியிருக்கிறது.

இப்போது எதற்கெடுத்தாலும், “சீனாவின் கடன்பொறியில் இலங்கை சிக்கிக் கொண்டது போல“ என உதாரணம் காட்டுவதை சர்வதேச ஊடகங்கள் வழக்கப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

சீனாவிடம் கடன்பெற முனையும், கடன் பெற்ற நாடுகளின் அரசியல் பிரமுகர்களும், ஊடகங்களும், இலங்கையை முன்னுதாரணம் காட்டி எச்சரிக்கை செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

இது சீனாவுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியிருக்கிறது. தனது BRI திட்டத்தை செயற்படுத்துவதற்கு இந்தக் கடன் பொறி குற்றச்சாட்டு தடையாக அமைந்து விடுமோ என்ற கவலை சீனாவுக்குத் தொற்றியிருக்கிறது.

அதனால் தான், சீனா தனது வளங்களை இந்தக் கடன்பொறி குற்றச்சாட்டை முறியடிப்பதற்கு ஒருங்கிணைக்கத் தொடங்கியிருக்கிறது.

கடன்பொறி குற்றச்சாட்டு, இலங்கையை உதாரணம் காட்டி முன்வைக்கத் தொடங்கியதன் விளைவாக, சீனாவிடம் கடன்களைப் பெறுவதற்கு பல நாடுகள் இப்போது தயக்கம் காட்டுகின்றன.

மலேஷியா, மியன்மார், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கனவே சீனாவிடம் கடன் பெற்று உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க எடுத்திருந்த தீர்மானங்களில் இருந்து பின்வாங்க ஆரம்பித்துள்ளன.

மலேஷியப் பிரதமர் மஹதீர் முகமட் சீனாவின் நிதி முதலீட்டில் மேற்கொள்ளப்படவிருந்த 20 பில்லியன் டொலர் ரயில்வே திட்டம் உள்ளிட்ட சுமார் 22 பில்லியன் டொலர் பெறுமதியான மூன்று பாரிய திட்டங்களை தற்போதைக்கு செயற்படுத்துவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.

இது சீனாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்ற முதல் சம்பவம்.

இந்த மூன்று திட்டங்களையும் சீன நிறுவனங்களே மேற்கொள்ளவிருந்தன. மலேஷிய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும் மறுக்கப்பட்டிருந்தது.

சீன- பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத் திட்டத்துக்காக சீனாவிடம் பெறப்படும் பல பில்லியன் டொலர் கடனைத் திருப்பிச் செலுத்தும் ஆற்றல் பாகிஸ்தானுக்கு இருக்கிறதா என்று அந் நாட்டின் புதிய பிரதமர் இம்ரான் கான் கேள்வி எழுப்பியிருப்பதும் சீனாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

அடுத்து, சீனாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்ற நாடு மியன்மார். மியன்மார் இராணுவ ஆட்சியாளர்களுக்கு சீனா பின்பலமாக இருந்து வந்தது.

மியன்மாரின் ரக்கைன் மாகாணத்தில் உள்ள, Kyaukpyu துறைமுகத்தை 7.3 பில்லியன் டொலர் முதலீட்டில் அபிவிருத்தி செய்வதற்கு சீனா திட்டமிட்டிருந்தது,

ஆனால் இலங்கை உள்ளிட்ட நாடுகள் சீனாவின் கடன் பொறியில் சிக்கியுள்ள தகவல்கள் வெளியானதை அடுத்து, மியன்மார் அரசாங்கம் பின்வாங்கத் தொடங்கியுள்ளது.

நான்கு கட்டங்களாக Kyaukpyu துறைமுக அபிவிருத்தியை மேற்கொள்ளலாம் என்றும், முதற்கட்டமாக, 1.3 பில்லியன் டொலருக்கு மாத்திரம் பணிகளை முன்னெடுக்கவும் மியன்மார் முடிவு செய்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் கையில் சென்ற பின்னர், பிலிப்பைன்ஸ், டொங்கோ உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் சீனாவின் கடன் பொறி பற்றிய அச்சத்தை வெளியிட்டிருக்கிறார்கள். 

சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின் கீழ், கடனைப் பெற்ற- பாகிஸ்தான், டிஜிபோட்டி, மாலைதீவு, மொங்கோலியா, லாவோஸ், மொன்ரனிக்ரோ, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய எட்டு நாடுகள் இப்போது மிகவும் கவலைக்குரிய நிலையில் இருப்பதாக,அமெரிக்க கொள்கை ஆய்வு அமைப்பான, Center for Global Development தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் சீன- ஆபிரிக்க ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு பீஜிங்கில் நடத்தப்பட்டது. 50 ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களை அழைத்து சீனா இந்த மாநாட்டை நடத்தியது. 2015 ஆம் ஆண்டு ஜொகஹஸ்பேர்க்கில் நடத்தப்பட்ட மாநாட்டுக்குப் பின்னர் நடத்தப்படும் மாநாடு இது.

அதுவும், ஆசிய, ஆபிரிக்க நாடுகளை சீனா கடன்பொறிக்குள் தள்ளுகிறது என்ற குற்றச்சாட்டு வலுவாக உள்ள நிலையில் இந்த மாநாடு நடத்தப்பட்டது.

குறிப்பாக ஆபிரிக்க நாடுகளை சீனா தனது புதிய கொலனியாக மாற்றுகிறது என்ற பலமான குற்றச்சாட்டுகளின் மத்தியில், நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பின், ஆபிரிக்காவில் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு 60 பில்லியன் டொலரை முதலீடு செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

யார் எதைக் கூறினாலும், சீனா தனது பட்டுப்பாதை திட்டத்தை முன்னெடுப்பதில் மிக உறுதியாக இருக்கிறது என்பதை, சீன ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு உணர்த்தி நிற்கிறது.

அதேவேளை, கடன் பொறிக் குற்றச்சாட்டை மறுப்பதிலும், சீனா தனது நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் வளங்களை ஒருங்கிணைக்க ஆரம்பித்திருக்கிறது.

சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங், கடந்த 31ஆம் திகதி நாளாந்த செய்தியாளர் மாநாட்டில் வழக்கத்துக்கு மாறாக, இலங்கை மற்றும் பாகிஸ்தானின் வெளிநாட்டுக் கடன் சுமை பற்றிய புள்ளிவிபரங்களை வெளியிட்டதே அதற்கு சான்று.

இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரங்களின் படி, இலங்கையின் மொத்த கடன் சுமையில் 10 வீதம் மட்டுமே சீனாவுக்கு செலுத்த வேண்டியது என்று அவர் வாதிட்டிருந்தார்.

அதுபோலவே, பாகிஸ்தானின் கடன் சுமைக்கும் சீனா தான் பிரதான காரணம் அல்ல என்றும் சில புள்ளிவிபரங்களை அவர் முன்வைத்திருந்தார்.

அதுபோதாதென்று, சீனாவின் முன்னாள் இராஜதந்திரிகள் சிலரும் கூட, இந்தக் குற்றச்சாட்டை முறியடிக்கும் நடவடிக்கைகளில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

சீனா மீதான கடன்பொறி குற்றச்சாட்டு தீவிரமடைந்து வரும் நிலையில், அதனை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்பதில் சீனா உறுதியாக இருக்கிறது.

அதேவேளை, மேற்குலக ஊடகங்கள் இந்த விவகாரத்தை இன்னும் இன்னும் தீவிரமான பிரச்சினையாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும், உள்ள நாடுகள் சீனாவின் கடன்பொறிக்குள் சிக்கிக் கொள்ளும் போது, சீனாவின் ஆதிக்கம் அந்த நாடுகளில் அதிகரித்து விடும் என்பது தான் மேற்குலகத்தின் கவலை.

அது அமெரிக்காவினதும், மேற்குலகினதும் ஏகபோகத்துக்குச் சவாலான விடயமும் கூட.

“அமெரிக்கர்கள் இதனை தமது பிரச்சினையில்லை என்று நினைக்கிறார்கள். சீனா மிக கவனமாக, ஆபிரிக்க நாடுகளை கடன் பொறியில் தள்ளுகிறது.

இதனால் அமெரிக்கா, தீவிரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு , வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்றவற்றில் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு குறையும்” என்று அமெரிக்க நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆபிரிக்க கண்டத்தில் இப்போது சீனாவே இருதரப்பு கடன்களை வழங்கும் பிரதான நாடாக மாறியிருக்கிறது. இங்குள்ள 40 வீதமான நாடுகள் சீனாவின் கடன் பொறிக்குள் சிக்கியுள்ளன என்று அவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலை தொடருமானால், ஆபிரிக்காவில் அமெரிக்காவின் செல்வாக்கு குறைந்து விடும். அத்துடன், டிஜிபோட்டியில் அமைத்தது போன்றே, ஆபிரிக்காவில் பல இடங்களில் சீனா தனது தளங்களை அமைத்துக் கொள்ளும் வாய்ப்புகளும் உருவாகும்.

இவ்வாறு சீனாவின் கடன் பொறிக்குள் வீழ்ந்துள்ள நாடுகளில் கென்யாவும் ஒன்று. அண்மையில் கென்ய ஜனாதிபதி கென்யாட்டாவிடம், சீனாவிடம் கடன் பெற்றால் இலங்கைக்கு ஏற்பட்ட கதி தான் ஏற்படும், என்று அங்குள்ள நகர போதகர் கொட்பிறி மிக்வி எச்சரித்திருக்கிறார்.

கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத சிறிய நாடுகளை தமது கடன் பொறிக்குள் விழுத்தி, அதனை திருப்பிச் செலுத்த முடியாத போது, அங்கு தமது தளங்களை அமைக்கிறது சீனா என்றும் இந்த நிலை கென்யாவுக்கும் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

 நைஜீரியாவுக்கும் அதே போன்ற எச்சரிக்கைகள் உள்ளூர் பிரமுகர்களால் விடுக்கப்படுகின்றன.

சிவில் சமூகம், திருச்சபைகள், மதக் குழுக்கள், அரசியல் கட்சிகளைப் பயன்படுத்தி, சீனாவுக்கு எதிரான பிரசாரங்களை மேற்குலகம் தீவிரப்படுத்தினாலும், சீனா தனது பட்டுப் பாதைத் திட்டத்துக்கு முதலீடுகளைக் கொட்டுவதிலும், அதனை விரிவுபடுத்துவதிலும் புதிய உத்திகளை கையாள ஆரம்பித்திருக்கிறது.

நிதியையும், தமது தொழில்படையையும், உலகெங்கும் நிலைப்படுத்துவதன் மூலம், சீனா தனது பொருளாதாரத்தையும், வலுவையும் நிலை நிறுத்த முனைகிறது.

இந்த கடன் பொறி அச்சுறுத்தல் பல நாடுகளை விழிப்படைய வைத்திருந்தாலும், அதிலிருந்து தப்பிக்க முடியாத நிலையில் பல நாடுகள் இருக்கின்றன.

இலங்கையின் கடன் பொறியைக் காரணம் காட்டி பல நாடுகள் சீனாவின் முதலீட்டை தவிர்க்கவோ குறைக்கவோ முடிவு செய்திருந்தாலும், சீனாவை இன்னமும் நியாயப்படுத்துவதிலும், அதனிடம் நிதியைப் பெறுவதிலும் இலங்கை ஈடுபாடு காட்டிக் கொண்டு தான் இருக்கிறது.

தம்மிடம் கடன் பெறுமாறு சீனா அழுத்தம் கொடுக்கவில்லை கொழும்பு கேட்டதன் அடிப்படையில் தான் சீனா கடன் கொடுத்தது, இலங்கையின் கடன் சுமைக்கு சீனா காரணமில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட அண்மையில் கூறியிருந்தார்.

இதுபோன்ற நிலையில் தான் ஆபிரிக்க நாடுகள் பலவும் இருக்கின்றன.

சீனாவின் கடன் பொறியையும் அதன் ஆபத்தையும் உணர்ந்திருந்தாலும், வேறு வழியின்றி அதன் பின்னால் செல்லுகின்றன.

அது ஒரு வகையில் சீனாவுக்கு வெற்றி தான். ஆனாலும் தொடர்ந்து துரத்தும் கடன்பொறிக் குற்றச்சாட்டு சீனாவின் தூக்கத்தைக் கலைத்துக் கொண்டு தான் இருக்கிறது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-09-09#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.