Jump to content

ஓய்வை அறிவித்தார் அலைஸ்டர் குக்


Recommended Posts

ஓய்வை அறிவித்தார் அலைஸ்டர் குக்

 

 
 

இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் அலைஸ்டர் குக் இந்தியாவுடனான டெஸ்ட் தொடரின் பின்னர் டெஸ்ட்போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவி;த்துள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 33 வயதான குக் சிறப்பாக விளையாடாதது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையிலேயே அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

தீவிரமாக சிந்தித்த பின்னர் நான் இந்தியாவுடனான தொடரின் பின்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளேன் என குக் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

இது துயரமான நாளாகயிருந்தாலும் நான் பெரும் முகத்துடன் அதனை அறிவிக்கலாம் ஏனெனில் நான் என்னால் முடிந்த அனைத்தையும் வழங்கிவிட்டேன் இனி எஞ்சியது எதுவுமில்லை என குக் தெரிவித்துள்ளார்.

நான் கற்பனைசெய்து பார்க்க முடியாத அளவிற்கு சாதித்துவிட்டேன் இவ்வளவு நீண்ட காலம் என்னால் இங்கிலாந்து சில தலைசிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாட முடிந்தமை குறித்து நான் பெருமிதம் கொள்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனது சகவீரர்களுடன் செலவிடும் நேரத்தை இழக்கப்போகின்றேன் என்பதே மிகவும் கடினமாக விடயமாக உள்ளது எனினும் ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான நேரம் என கருதுகின்றேன் எனவும் குக் குறிப்பிட்டுள்ளார்.

cook5.jpg

நான் எனது வாழ்நாள்முழுவதும், சிறுவயதில் எனது வீட்டில் விளையாட தொடங்கிய காலம் முதல் கிரிக்கெட்டை நேசித்துள்ளேன்,இங்கிலாந்து அணியின் சேர்ட்டை அணிந்து ஆட கிடைத்தது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்பதையும் நான் குறைத்து மதிப்பிடமாட்டேன் என குக் தெரிவித்துள்ளார்.

அலைஸ்டர் குக் டெஸ்ட் போட்டிகளில் 32 சதங்களுடன் 12,254 சதங்களை பெற்றுள்ளார்.

2006 ம் ஆண்டு 21 வயதில் இந்தியாவிற்கு எதிராக நாக்பூரில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய குக் தனது முதல் டெஸ்டிலேயே சதமடித்திருந்தார்.

அவரது தலைமையிலேயே இங்கிலாந்து அணி 20 வருடங்களிற்கு பின்னர் முதல் தடவையாக ஆசஸ் தொடரை கைப்பற்றியிருந்ததுடன் இந்தியாவிற்கு எதிரான தொடரையும் 2012 இல் கைப்பற்றியிருந்தது.

 

http://www.virakesari.lk/article/39656

Link to comment
Share on other sites

அலட்டல் இல்லாத அமைதியான சாதனையாளர் அலிஸ்டர் குக் ஓய்வு அறிவித்தார்

 

 
cook

அலிஸ்டர் குக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பு. | கோப்புப் படம். ராய்ட்டர்ஸ்.

இந்தியாவுக்கு எதிராக ஓவலில் நடைபெறும் 5வது டெஸ்ட் போட்டியே தன் இறுதி டெஸ்ட் போட்டி என்று இங்கிலாந்தின் மிகச்சிறந்த பேட்ஸ்மெனான உருவெடுத்த அலிஸ்டர் குக் அறிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த 6வது வீரர் அலிஸ்டர் குக். அவருக்கு வயது 33தான் ஆகிறது. ஆனால் பேட்டிங் பார்ம் சீரடையவில்லை, இந்த ஆண்ட் 9 டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 18.62 தான்.

   
 

ஆகவே இதுவே ஓய்வு பெற சரியான தருணம் என்று அவர் முடிவெடுத்து விட்டார்.

இங்கிலாந்திலேயே அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை குக் படைத்தவர். இதுவரை 160 போட்டிகளில் 12,254 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 44.88. சராசரி 45க்குக் கீழ் இப்போதுதான் இறங்கியுள்ளது. 32 சதங்கள் 52 அரைச்தங்கள், 11 டக்குகள். அதிகபட்ச ஸ்கோர் 294.

cook2jpg
 

2006-ல் நாக்பூர் டெஸ்ட்டில் அறிமுக டெஸ்ட்டிலேயே 21 வயது வீரராக சதம் அடித்தார். 2010-11-ல் ஆஷஸ் தொடரை இங்கிலாந்து ஆஸ்திரேலிய மண்ணில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வென்ற தொடரில் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார், அந்தத் தொடரில் தொடரின் ஆரம்பத்தில் சொதப்பிய குக் பிறகு பெரிய அளவில் மீண்டெழுந்து ஆஸ்திரேலிய பவுலர்களை வறுத்தெடுத்தார்.

32 சதங்களை இவர் எடுத்த வேகம் சச்சின் டெண்டுல்கர் சாதனையும் முறியடிப்பார் என்று இங்கிலாந்து ஊடகங்களை ஹேஷ்யம் கூற வைத்தன.

ஆனால் இவரது கிரிக்கெட் வாழ்வில் இருண்ட தருணங்களும் உண்டு 2014-ல் ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து எந்த ஒரு அறிவிப்புமின்றி திடீரென நீக்கப்பட்டார். குக்கின் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடரில் 2013-14-ல் ஒயிட் வாஷ் வாங்கிய போது கெவின் பீட்டர்சன் வெளியேற்றப்பட்டதில் முக்கிய பங்காற்றியதாக இவர் மீது விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால் இங்கிலாந்து கேப்டன்களிலேயே உண்மையில் ஒரு ஜெண்டில் மேன் இவர், அனாவசியமான கள சர்ச்சைகளில் சிக்கியதில்லை. சாதுவான சாதனையாளர். களத்தில் இந்த ஸ்லெட்ஜிங் போன்றவற்றை ஊக்குவிப்பவர் அல்ல என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

cook3jpg
 

உத்தி ரீதியாக எப்போதும் கொஞ்சம் அதீத கவனம் மேற்கொள்பவர் என்பதால் இவரது ஆட்டத்தை அது வெகுவாகப் பாதித்தது, சேவாக், கில்கிறிஸ்ட், ஜெயசூரியா, லாரா போன்றவர்களுக்கு எதிர்நிலையான மனநிலை, அவர்கள் பொதுவாக உத்திபற்றியெல்லாம் கவலைப் பட மாட்டார்கள். இவர் கொஞ்சம் கவாஸ்கர் ரகம். லெக் திசைதான் இவரது வலுவான பிரதேசம்.

இங்கிலாந்து அணி நம்பர் 1 இடத்துக்கு முன்னேறியதில் இவரும் ஆண்ட்ரூ ஸ்ட்ராசும் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய நாட்கள் மிக முக்கியமானது. 2012 தொடரில் இந்தியாவில் வந்து இந்திய அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய போது அலிஸ்டர் குக் இந்திய ஸ்பின்னர்களை இந்தப் பிட்சில் ஆடியது பலருக்கும் கண் திறப்பாக அமைந்ததையும் மறுக்க முடியாது. மேத்யூ ஹெய்டனுக்குப் பிறகு இந்திய ஸ்பின்னர்களை இந்தியாவில் சிறப்பாக ஆடியவர் என்றால் அது அலிஸ்டர் குக் தான்.

ஆனால் ஸ்ட்ராஸ் ஓய்வு பெற்ற பிறகு குக்குடன் களமிறங்க ஏகப்பட்ட வீரர்களை இங்கிலாந்து சோதித்தது ஆனால் இன்னமும் கூட அவருக்கு துணையானவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

ஓவலில் குக் களமிறங்கும் போது 159 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாகக் களமிறங்கிய வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தக்காரர் ஆவார்.

இந்நிலையில் இவரது ஓய்வு இங்கிலாந்து அணியில் பெரிய ஓட்டையை ஏற்படுத்துவது உறுதி.

https://tamil.thehindu.com/sports/article24856223.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

 

 

7 வயது சிறுவனாக கிரகாம் கூச்சின் கையெழுத்துக்காக வரிசையில் காத்திருந்தேன்: ஓய்வு அறிவித்த அலிஸ்டர் குக் நெகிழ்ச்சி

 

 
gooch

கிரகாம் கூச், அலிஸ்டர் குக். | கோப்புப் படம்.

வரும் ஓவல் டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார், இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரரும் முன்னாள் கேப்டனுமான அலிஸ்டர் குக்.

இந்நிலையில் தன் ஓய்வு முடிவு குறித்து அவர் கூறியதாவது:

 

நிறைய யோசித்து கடந்த சில மாதங்களாக மனதில் வைத்திருந்த ஓய்வு முடிவை இன்று அறிவித்துள்ளேன். இது துயரமான நாள் என்றாலும் என் முகத்தில் பெரிய புன்னகையுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளேன். நான் அனைத்தையும் அளித்து விட்டேன், இனி என்னிடம் எதுவும் இல்லை.

நான் கற்பனை செய்ததற்கு மேலாகவே பங்களிப்புச் செய்து விட்டேன். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சிலபல கிரேட்களுடன் ஆடியதுதான் என் இனிய அனுபவம், நான் செய்த அதிர்ஷ்டம். இனி ஓய்வறையை எனக்குப் பிடித்த இங்கிலாந்து அணியுடன் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை என்ற முடிவு மிகவும் கடினமாக உள்ளது. ஆனால் சரியான நேரத்தில்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.

சிறுவயதில் தோட்டத்தில் கிரிக்கெட்டை ஆடத் தொடங்கியது முதல் இந்த ஆட்டத்தை பெரிதும் நேசித்து வருகிறேன். இங்கிலாந்து சீருடையை அணிந்ததை ஒருக்காலும் நான் குறைவாக எண்ண முடியாது. எனவே இளம் வீரர்களுக்கு வழிவிட இதுவே சிறந்த தருணம்.

தனிப்பட்ட முறையில் நிறைய பேருக்கு நன்றி நவில வேண்டும். ஆனால் பார்மி ஆர்மிக்கு சிறப்பு நன்றிகள். இங்கிலாந்து அணி எங்கு சென்றாலும் பார்மி ஆர்மி எங்களுக்கு அளித்த உத்வேகம் மறக்க முடியாதது. அதே போல் சிறப்பாக நன்றி தெரிவிக்க வேண்டுமெனில் அது கிரகாம் கூச்சிற்குத்தான். 7 வயது சிறுவனாக எசெக்ஸ் கவுண்டி கிரிக்கெட் கிளப் வாசலில் அவரிடம் ஆட்டோகிராப் வாங்க வரிசையில் காத்திருந்திருக்கிறேன். ஆனால் அவரே எனக்கு பின்னாளில் பயிற்சியாளரானதை எப்படி மறக்க முடியும். என் ஆரம்ப காலக்கட்டத்தில் கிரகாம் கூச்தான் எனக்கு எல்லாமும். மணிக்கணக்காக என் மட்டைக்கு அவர் பந்துகளை த்ரோ செய்ததைத்தான் மறக்க முடியுமா? நாம் என்னத்தை அடைய வேண்டும் என்று முயற்சிக்கிறோமோ அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை எனக்கு உணர்த்தியவர் கிரகாம் கூச்.

கிரிக்கெட் வீரராக குடும்பத்தை விட்டுப் பிரியும் பயணங்களை இந்த 12 ஆண்டுகளாக மேற்கொண்டேன் என்னைப் பொறுத்தருளி எனக்கு ஆதரவு காட்டிய என் குடும்பத்தினருக்கும் மிக்க நன்றிகள்.

என் 12 வயது முதல் என்னை ஆதரித்த எசெக்ஸ் கிரிக்கெட் கிளப்புக்கும் என் ஆழ்ந்த நன்றிகள்.

இங்கிலாந்து அணி எதிர்காலத்தில் சிறப்பாகச் செயல்படுவதற்கு வாழ்த்துக்கள், அதனை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

இவ்வாறு கூறினார் அலிஸ்டர் குக்.

https://tamil.thehindu.com/sports/article24856578.ece

Link to comment
Share on other sites

விடைபெறும் அலிஸ்டர் குக்: புகழ் மழையிலும் கவனம் சிதறாத வீரர்

 
 

அலெஸ்டர் குக் புகழ் வெளிச்சத்தில் பிரகாசமாக மின்னினார். ஆனால், அப்புகழ் மழை அவரை மயக்கவில்லை. அவரது கிரிக்கெட் வாழ்க்கையானது தனித்துவமிக்கதாகவும், அட்டகாசமானதாகவும் இருந்தது.

அலிஸ்டர் குக்படத்தின் காப்புரிமைGARETH COPLEY

குக்கின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை விவரிக்க வேண்டுமானால் 2006 முதல் 2018 வரையிலான 12 வருடங்களை உற்றுநோக்க வேண்டும். கிரிக்கெட் உலகில் இக்காலகட்டத்தில் புதிய தலைமுறையின் பிரதிநிதியாக விளங்கினார் குக். அவர் பயணித்த பாதையில் பயணம் செய்தவர்கள் மிகக்குறைவு.

அவர் பேஸ்புக்கில் இல்லை; ட்விட்டர் கணக்கும் கிடையாது; இன்ஸ்டாகிராமிலும் அவருக்கு கணக்கு இல்லை. ஆகவே, எத்தனை ஃபாலோயர்களை வைத்திருக்கிறார் என பேசுவதற்கே இடமில்லை. சமூக ஊடகத்தில் ஒரு பதிவு போடுவதற்காக அவர் எவ்வளவு கோடிகள் சம்பாதிக்கிறார் என்றும் கேட்க முடியாது.

அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து புகைப்படங்கள், காணொளிகள் ஏதேனும் பகிர்ந்திருக்கிறாரா என நீங்கள் தேடினால், உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

குக் தனது தலைமுடிக்கு ஜெல் போடுவதில்லை; விசித்திரமான ஹேர்ஸ்டெயில் செய்துகொள்வதில்லை; உடலில் டாட்டூக்களை குத்திக்கொள்வதில்லை; டிஜெ பாடல்கள் கேட்பவரும் அல்ல; பிரபலமான தோழிகளும் அவருக்கு இல்லை; யாருடனாவது டேட்டிங் சென்றார்; எந்த பெண்ணுடனாவது உறவை முறித்துக் கொண்டார் என்ற கிசுகிசுக்களும் எழவில்லை. குடித்துவிட்டு இரவில் ஏதாவதொரு மதுபான விடுதியில் தகராறு செய்ததாக அவர் மீது புகார்களும் கிடையாது; வேகமாக வண்டி ஒட்டி சென்றார் எனக்கூறி அவருக்கு காவல்துறை இதுவரை அபராதம் விதித்ததுமில்லை.

கிரிக்கெட் களத்தில் மற்ற வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை. பந்தைச் சேதப்படுத்துதல் முதலான எந்தவொரு இழிவான செயல்களிலும் அவரது பெயர் அடிப்பட்டது கிடையாது. போட்டியிலோ அல்லது போட்டி முடிந்தபிறகோ யாரையாவது குத்தலாக பேசுவதோ அல்லது தன்னை முன்னிலைப்படுத்தி உயர்த்தி பேசியதுமில்லை.

குக் நிச்சயம் வித்தியாசமான மனிதர். அவர் 24 கேரட் தங்கம்.

இங்கிலாந்து அணியுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை மிக இளம் வயதிலேயே துவங்கினார். தற்போது தனது 33-வது வயதில் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். அவர் தன்னை ஜாம்பவானாக்கிக் காண்பித்திருக்கிறார்.

அலிஸ்டர் குக்படத்தின் காப்புரிமைSTEVE BARDENS

12 வருடங்களுக்கு முன்னதாக இந்த கதை துவங்கியது. அப்போது 2006-ம் வருடம். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்திருக்கிறது இங்கிலாந்து அணி. மார்கஸ் டிரஸ்கோதிக் இங்கிலாந்தின் நம்பகமான தொடக்க வீரராக விளங்கினார். ஆனால் மன ரீதியான பிரச்சனை காரணமாக இத்தொடரில் இருந்து விலகினார். இங்கிலாந்துக்கு டிரஸ்கோதிக்கின் இழப்பு பேரிடியாக இறங்கியது.

அது மார்ச் மாதம். வெயிலின் தாக்கம் எகிறிக்கொண்டிருந்த நிலையில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஆகவே இங்கிலாந்து கடும் நெருக்கடியில் சிக்கியிருந்தது.

தொடக்க வீரராக யாரை களமிறக்கலாம் என தேர்வுக்குழு ஆலோசனை நடத்தியதில் இறுதியாக அந்த பட்டியலில் முதலிடத்துக்கு வந்தவர் அலெஸ்டர் குக். ஆனால் ஒரு பிரச்னை என்னவெனில் அப்போது 21 வயது குக் இங்கிலாந்து அகாடமி அணிக்காக வெஸ்ட் இண்டீஸில் விளையாடிக்கொண்டிருந்தார். ஆனால் தேர்வுக்குழு குக் தான் வேண்டும் என முடிவில் உறுதியாக இருந்தது. இதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் குக்கை அழைத்து.

இந்தியாவுடனான தொடர் துவங்குவதற்கு வெகு சில நாட்களே இருந்தநிலையில் விசா உள்பட அனைத்து தொழில்நுட்ப ரீதியான சம்பிரதாய முறைகளையும் முடித்தபிறகு வெவ்வேறு நேர மண்டலங்களையும் கடந்து மும்பை வழியாக நாக்பூரை சென்றடைந்தார். விமான பயண களைப்பு காரணமாக அவர் ஓய்வெடுக்கவில்லை மாறாக பயிற்சியில் ஈடுபட்டார். அடுத்த சில மணிநேரங்களில் அவர் இங்கிலாந்தின் தேசிய கிரிக்கெட் அணியின் வீரரானார்.

அலிஸ்டர் குக்படத்தின் காப்புரிமைMICHAEL DODGE

நன்றாக சவரம் செய்யப்பட்ட முகம், நல்ல உயரம், பெரிய ஹெல்மெட்டோடு கைகளின் பாதுகாப்பாக அணியப்படும் பட்டையை அணியாதநிலையில் களத்தில் காலடி எடுத்துவைத்தார் குக். அவர் நின்றதை பார்க்கும்போது பேஸ்பால் வீரர் போல இருந்தது.

முதல் இன்னிங்சில் 60 ரன்கள் குவித்தார். இவருக்குள் ஏதோ நல்ல திறமை இருக்கும் போல என நாக்பூர் மைதான பத்திரிகையாளர்கள் அறையில் முணுமுணுப்பு கேட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்த இளம் வீரர் சதமடித்ததும் கிரிக்கெட் ரசிகர்கள் மெய்மறைந்தனர். தொடக்க போட்டியிலேயே சதமடிப்பது, அதுவும் இந்திய மண்ணில் இந்திய அணிக்கு எதிராகவும் குறிப்பாக கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் போன்ற சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளாசியது சாதாரண காரியமல்ல. ஆனால் குக் தன்னால் களத்தில் நிற்க முடியும் என்பதை வெளிக்காட்டிய நாள் அது.

அன்றைய தினம் முதல் குக் தனது பாதையில் ஒரு துறவியை போல நேர்மையுடனும் பயணிக்கத் துவங்கினார். கடந்த 12 வருடங்களாக அவரது மட்டையில் இருந்து ரன் மழை பொழிகிறது.

குக் ஏன் தனித்துவமிக்க சிறப்பான வீரர் தெரியுமா? அவர் கடுமையான நெருக்கடி மிக்க சூழ்நிலைகளில் சக வீரர்களுடன் இணைந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருக்கிறார்.

குக்குடன் அந்த டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக வெள்ளை ஜெர்சியில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நுழைந்தவர் இந்திய வீரரான ஸ்ரீசாந்த். அவரும் தனது கிரிக்கெட் வாழ்க்கையை நன்றாகத் தான் துவக்கினார் ஆனால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினார். மேலும் மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டில் சிக்கி வாழ்நாள் தடை பெற்றார். இதே போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வை துவங்கிய இன்னொரு வீரரின் பெயர் மான்டி பனீசர்.

இங்கிலாந்துக்காக ஆடிய பனீசர் ஆரம்பகட்டத்தில் அச்சுறுத்தல்தரும் பந்துவீச்சாளராக தனது கிரிக்கெட் வாழ்வை துவங்கினார். ஆனால் ஒரு கட்டத்தில் அவரது நடத்தை சரியில்லாமல்போக, நல்லதொரு பாதையை தொலைத்தார்.

இதே டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மற்றொரு வீரர் இயான் பிளாக்வெல். அவருக்கு இதுதான் அறிமுக டெஸ்ட் போட்டியாகவும் கடைசி டெஸ்ட் போட்டியாகவும் அமைந்தது.

மூன்று வீரர்கள் ஒரு புறமிருக்க, குக் இன்னொரு பக்கத்தில் ஜொலித்தார். 12 வருட கிரிக்கெட் வாழ்வில் 33 வயது குக் 32 சதங்களை விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 12,254 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் குமார் சங்ககாரா, ராகுல் திராவிட், ஜேக்ஸ் காலிஸ், ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர்தான் குக்கை விட முன்னிலையில் இருப்பவர்கள். குக் எப்படிப்பட்ட விளையாட்டை விளையாடியிருக்கிறார் என்பதை மேற்கண்ட இந்த ஐந்து பெயர்கள் கூறும்.

கடந்த சில வருடங்களாக குக், டெண்டுல்கரின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் எனும் சாதனையை முடியடிக்கக்கூடும் என்ற செய்தி அடிக்கடி வலம் வந்தது. ஆனால் குக்கின் ஒரு சாதனை குறிப்பிடத்தக்கது. கடந்த 12 வருடங்களில் தொடர்ந்து 158 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அதாவது இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானத்தில் இருந்து அவர் ஒரு டெஸ்ட் போட்டியையும் தவறவிட்டதில்லை.

அவரது ஆட்டத்திறன் அல்லது உடல்திறன் நிலையாக இருந்ததால் அணியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லாமல்போனது. முன்னதாக இந்த உலக சாதனையை செய்திருந்தவர் ஆலன் பார்டர். ஒரு ஜாம்பவானின் சாதனையை குக் என்ற இன்னொரு ஜாம்பவான் முறியடித்திருக்கிறார். எண்களில் இந்த சாதனையை குறிப்பிடுவது படிக்கும்போது கவர்ச்சிகரமானதாக இருக்கலாம் ஆனால் உண்மையில் மிகவும் கடினமான மகத்தான சாதனை இது.

அலிஸ்டர் குக்படத்தின் காப்புரிமைTOM SHAW

ஒரு பேட்ஸ்மேனின் பணி ரன்கள் குவிப்பது. உலகில் அனைத்து பேட்ஸ்மேன்களும் இதைச் செய்கிறார்கள். பிறகு, குக் ஏன் சிறப்பானவர் என சிலர் கேட்கலாம். கேள்வி கேட்பதற்கு முன்னதாக அணியில் குக்கின் பணி குறித்து புரிந்துகொள்ள வேண்டும். குக் தொடக்க வீரராக களமிறங்கினார். டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் புத்தம்புதிய சிகப்பு பந்தை எதிர்கொள்ள ஒரு வீரருக்கு தனி திறமை தேவை.

ஒன்றரை நாள்கள் ஃபீல்டிங் செய்தபின்னர் உடல் தளர்ந்தாலும் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் அல்லது ஆட்டத்தின் முதல் நாளில் முழு தெம்புடன் பந்துவீசவரும் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள வேண்டும். இதற்கு ஒரு வீரருக்கு பிரத்யேக திறமைஇருந்தால்தான் சாதிக்க முடியும்.

தன்னிடம் இருக்கும் தவறுகளை எதிரணி கண்டுபிடித்து தன்னை ஆட்டமிழக்கச் செய்துவிட்டால் கிரகாம் கூச்சிடம் சென்று தனது தவறுகள் குறித்து விவாதித்து, அதன் பின்னர் கடும் பயிற்சி வாயிலாக அடுத்தடுத்த இன்னிங்ஸ்களில் சிறப்பாக ரன்கள் குவிப்பது அவரது வழக்கம்.

அனைவருமே உள்ளூர் ஆடுகளங்களில் ரன் குவிப்பவர்கள்தான். ஒரு பேட்ஸ்மேனுக்கு உண்மையான சோதனை என்னவெனில் அயல்நாட்டில் தனது திறனை வெளிப்படுத்துவது. குக் இச்சங்கதியில் சிறந்தவர் என்பதை ஆதாரங்கள் காட்டுகின்றன.

இந்தியா, இலங்கை, வங்கதேசம் போன்ற இடங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆசிய துணை கண்டத்தில் பொதுவாக பிட்சில் பந்துகள் நன்றாக திரும்பும். ஆகவே காலை முன்னோக்கி நகர்த்தி விளையாடுவதா அல்லது பின்னோக்கி நகர்த்தி விளையாடுவதா என முடிவு செய்ய பேட்ஸ்மேனுக்கு நேரம் பிடிக்கும். சுழல்பந்து வீச்சாளர்களை ஐந்து நாளும் எதிர்கொள்வதென்பது ஒரு புதிர் போன்றதாகவே இருக்கும்.

இதில் வெயில் காலம் என்றால், குளிர்பிரதேசத்தில் இருந்து வந்திருக்கும் இங்கிலாந்து வீரர்களுக்கு மொத்த சக்தியும் விரைவாக தீர்ந்துவிடும். ஆனால் குக் இது போன்ற சூழ்நிலைகளில் எளிதாக ரன்கள் குவித்துள்ளார்.

அலிஸ்டர் குக்படத்தின் காப்புரிமைPHILIP BROWN

இங்கிலாந்து அணிக்கு கிரிக்கெட்டில் எதிரி ஆஸ்திரேலியா. பொதுவாக ஆஸ்திரேலிய மைதானங்களில் பிட்ச் குளிர்ந்திருக்கும். இதுபோதாதன்று ஆஸ்திரேலியர்கள் வீரர்களை வம்புக்கிழுப்பதில் நன்றாக அறியப்பட்டவர்கள் என்பதால் அதையும் சமாளிக்க வேண்டும். இவ்விடங்களில் குக் சிறப்பாக விளையாடியிருக்கிறார்.

அவரை சீண்டும் வார்த்தைகளை பொருட்படுத்தாமல் ஆட்டத்தில் கவனம் குவித்து ரன்கள் குவித்திருக்கிறார்.

நியூசிலாந்தில் பந்து நன்றாக எழும்பும். அங்கே அதிகபட்ச குளிரும் கடுமையான குளிர் காற்றும் வேறு இருக்கும். இந்த சூழ்நிலைகளும் குக் எனும் ரன் மெஷினை தடுத்து நிறுத்தமுடியவில்லை.

தென் ஆப்ரிக்காவில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசுவார்கள். அனால் குக் தனது வேலையை செவ்வனே செய்வார்.

கரீபியன் தீவுகள் உலகின் இன்னொரு மற்றொரு பகுதியில் இருக்கிறது. இங்கே பெரிய பேட்ஸ்மேன்களே குழப்பமடைவார்கள். அங்கே வெற்றிகரமாக விளையாடியிருக்கிறார்.

இங்கிலாந்தில் குக் ஒரு ரன் மெஷின். அவர் லாரா அல்லது ஜெயவர்தனே போல அழகான பாணியில் விளையாடுபவரல்ல; பாண்டிங் அல்லது சங்கக்காரா போன்ற ஆதிக்கம் செலுத்தும் பேட்ஸ்மேன் அல்ல. அவருடைய ஆட்டம் கிரிக்கெட்டின் அழகியலில் புதிதாக எதையும் சேர்க்காமல் இருந்திருக்கலாம் ஆனால் அவர் நம்பகமான பேட்ஸ்மேனாகவும் அதிக ரன்கள் குவித்தவராகவும் விளங்கியிருக்கிறார். தனது பொறுப்பை கடந்த 12 வருடங்களாக சிறப்பாக செய்திருக்கிறார்.

https://www.bbc.com/tamil/sport-45427079

Link to comment
Share on other sites

கெவின் பீட்டர்சனை அணியிலிருந்து நீக்கிய தீராப்பழிக்கு காலம்தான் மருந்து: அலிஸ்டர் குக் வேதனை

 

 
cook-pietersenjpg

இந்தியாவில் தொடரை வென்ற பிறகு குதூகலத்தில் குக், பீட்டர்சன். | படம்: கே.ஆர்.தீபக்.

ஓவல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறும் இங்கிலாந்தின் மிகச்சிறந்த சாதனை பேட்ஸ்மென் அலிஸ்டர் குக், தான் கேப்டனாக இருந்த காலத்தில் ஏற்பட்ட கெவின் பீட்டர்சன் சர்ச்சை குறித்து பிபிசி டெஸ்ட் மேட்ச் ஸ்பெஷல் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

2014 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸியில் நடந்த ஆஷஸ் தொடரில் குக் தலைமையில் இங்கிலாந்து 5-0 என்று உதை வாங்கியது, அதில் இங்கிலாந்தில் ஓரளவுக்கு அதிக ரன்களை எடுத்தவர் கெவின் பீட்டர்சன் தான். ஆனால் இங்கிலாந்து அணியிலுள்ள மேட்டுக்குடி லாபி கெவின் பீட்டர்சனை வெளியேற்ற தோல்விகளை ஒரு காரணமாகப் பயன்படுத்தியது, ஜேம்ஸ் ஆண்டர்சன் உட்பட ஈடுபட்ட ஸ்டூவர்ட் பிராடின் சூழ்ச்சியில் கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து ஓய்வறைக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று ஒருமனதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்தது.

 
 

இங்கிலாந்துக்காக தென் ஆப்பிரிக்காவை விட்டு வந்து ஆடி அந்த அணிக்கு பல வெற்றிகளை ஈட்டித்தந்து தன் சொந்த நாட்டையே தியாகம் செய்த ஒரு வீரரை இங்கிலாந்து இழிவு படுத்தி அனுப்பியது. இதற்கெல்லாம் ஒட்டுமொத்தமாக கேப்டன் குக்தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து அப்போது கேப்டனாக இருந்த குக் கூறியதாவது:

என் கிரிக்கெட் வாழ்வில் அது மிகவும் கடினமான காலக்கட்டம். அந்தச் சர்ச்சை என் பேட்டிங்கையே பாதித்தது.

ஒருநாள் ஸ்ட்ராஸ் வந்து கெவின் பீட்டர்சன் இனி இங்கிலாந்துக்கு ஆடப்போவதில்லை என்று கூறியவுடன் என் தோள்களிலிருந்த பாரத்தை இறக்கி வைத்தது போல் இருந்தது.

முதலில் கெவின் பீட்டர்சனை அனுப்பிவிடுவது என்ற முடிவில் நானும் பங்கு பெற்றேன், ஆனால் இப்போதைக்கு வேண்டாம், ஓராண்டு கழித்து மீண்டும் அவரை அழைக்கலாம் என்றுதான் நான் கூறினேன்.

ஆனால் பல் டவுண்டன் தெளிவு வேண்டும் என்று வலியுறுத்தினார். பீட்டர்சன் விவகாரம் படுமோசம், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதனை மோசமாகக் கையாண்டதாகவே கருதுகிறேன். அதே போல் சமூக வலைத்தளங்கள் அப்போது சமூக வலைத்தளங்கள் எப்படிச் செயல்பட்டன என்பதையும் இங்கிலாந்து வாரியம் அறிந்திருக்கவில்லை.

ஆம், சமூகவலைத்தளங்களில் பீட்டர்சன் விவகாரத்தில் என்னைப் போட்டு வறுத்து எடுத்தார்கள். அதுதான் கேப்டனாக இருப்பது என்றால் ஏற்படுவது போலும் என்று நினைத்துக் கொண்டேன்.

டேவிட் கோவரை அணியிலிருந்து நீக்கியதற்கு கிரகாம் கூச்தான் காரணம் என்று அவர் மீது ஒரு தீராப்பழி இருந்தது. அதே போல் பீட்டர்சன் அனுப்பப் பட்டதற்கு நான் காரணம் என்று என் மீது தீராப்பழி உள்ளது. காலம்தான் மருந்து எங்கள் விரிசலுற்ற நட்பிற்கும் காலம்தான் மருந்து.

இதனால் நானும் பீட்டர்சனும் அதற்குப் பிறகு 4 ஆண்டுகளாக பேசிக்கொள்ளக்கூட இல்லை. ஆனால் எங்களிடையே நிறைய நினைவுகள் உள்ளன. நல்ல நினைவுகள் உள்ளன. கிரிக்கெட் என்ற ஒன்றை எடுத்துவிட்டால் எங்கள் உறவுகளில் பாதிப்பில்லை என்றுதான் கூறுவேன், ஆனால் பீட்டர்சன் வேறு கருத்தை நிச்சயம் வைத்திருப்பார்.

இவ்வாறு கூறினார் அலிஸ்டர் குக்.

https://tamil.thehindu.com/sports/article24890445.ece

Link to comment
Share on other sites

குக் போல ஓய்வு அறிவித்துவிட்டு பிறகு சதமடித்த ‘கில்லி’ பேட்ஸ்மேன்கள்!

 

 
cook444xx

 

சாகுற நாள் தெரிஞ்சா வாழ்ற நாள் நரகமாயிடும் - சிவாஜி படத்தில் சுஜாதா எழுதிய வசனம். ஆனால் இதுவே என் கடைசி டெஸ்ட் என்று முன்பே அறிவித்துவிட்டு அந்தக் கடைசி டெஸ்டில் சதமடித்த கில்லிகளும் உண்டு. நேற்று சதமடித்த குக் போல. 

5 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-1 என இங்கிலாந்து ஏற்கெனவே கைப்பற்றி விட்டது. இறுதி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 332 ரன்களுக்கும், இந்தியா 292 ரன்களுக்கும் ஆல் அவுட்டாகின. இரண்டாம் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 364 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் வீரர்கள் அலிஸ்டர் குக் 147, கேப்டன் ஜோ ரூட் 125 ஆகியோர் அபாரமாக ஆடி சதமடித்தனர். இதன் மூலம் இந்தியாவைக் காட்டிலும் 464 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன்களை எடுத்திருந்தது. இறுதி நாளான செவ்வாய்க்கிழமை வெற்றி பெற இந்தியாவுக்கு 406 ரன்கள் தேவைப்படுகின்றன.

இங்கிலாந்து அணியில் அதிக டெஸ்ட் ரன்களை எடுத்த சாதனைக்கு சொந்தக்காரரான முன்னாள் கேப்டன் அலிஸ்டர் குக், இந்தியாவுடன் நடைபெறும் இறுதி டெஸ்ட் ஆட்டத்தோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஓவல் மைதானத்தில் நடைபெறும் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 71 ரன்களை எடுத்த குக், இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக ஆடி 147 ரன்களுடன் தனது கடைசி டெஸ்டில் இருந்து விடை பெற்றார். கடந்த 2006-இல் நாக்பூரில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இரண்டாம் இன்னிங்ஸில் குக் சதமடித்தார். தற்போது இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற கடைசி டெஸ்டிலும் சதமடித்து சாதனை படைத்துள்ளார். ஆஸி வீரர்கள் ரெஜினால்ட் டப், பில் போன்ஸ்போர்ட், கிரேக் சாப்பல், இந்திய வீரர் அஸாருதீன் ஆகியோர் இச்சாதனையை நிகழ்த்தி உள்ளனர். 

161 டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்ற குக் 33 சதங்கள், 57 அரை சதங்களுடன் 12472 ரன்களை அடித்துள்ளார். மேலும் தொடர்ந்து 158 டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்ற வீரர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். குக்கை இந்திய வீரர்கள் கேப்டன் கோலி தலைமையில் பாராட்டி வழியனுப்பினர்.

ஓய்வு அறிவித்துவிட்டு, பிறகு கடைசி டெஸ்டில் சதமடித்த வீரர்கள்

ராமன் சுப்பா ரோவ் (1961, இங்கிலாந்து), ரன்கள்: 12, 137. 
சோமொர் நர்ஸ் (1969, மே.இ.), ரன்கள்: 258.
கிரேக் சேப்பல் (1984, ஆஸ்திரேலியா),  ரன்கள்: 182.
ஜாக் காலிஸ் (2013, தென் ஆப்பிரிக்கா) ரன்கள்: 115.
பிரண்டன் மெக்கல்லம் (2016, நியூஸிலாந்து) ரன்கள்: 145, 25.
அலாஸ்டர் குக் (2018, இங்கிலாந்து), ரன்கள்: 71, 147.

http://www.dinamani.com/sports/sports-news/2018/sep/11/the-elite-club-alastair-cook-joins-after-signing-off-with-a-hundred-2998292.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.