Jump to content

தமிழ்த் துரோகி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் துரோகி

— பூ அரசு

கையை பிளேட்டால் வெட்டி, கூட்டணிக்காரரிற்கு பொட்டு வைத்து விட்டு தமிழீழம் கிடைக்கும் வரை கலியாணம் கட்ட மாட்டேன் என்று அறுவைதாசன் சபதம் எதுவும் செய்யவில்லை. ஆனாலும் அவனுக்கு வயது வட்டுக்குள்ளே போன பிறகும் கலியாணம் நடக்கவில்லை. எந்தப் பெட்டையும் அவனை ஏறெடுத்து பார்த்ததில்லை. "தும்பிக்கையான் துணை" திருமண சேவை நடத்தும் சுந்தரம் சித்தப்பா காட்டும் பெட்டைகளின் படங்களை இவனுக்கு பிடிக்கவில்லை. அவனின்ரை தாய் தான் எங்கடை பரம்பரையின்ரை பேர் உன்னோடை முடியிறதோ எண்டு அழுது குழறி விடாமல் தொடர்ந்து பொம்பிளை பார்த்துக்கொண்டு இருந்தாள். சலரோகம், ரத்தக்கொதிப்பு தான் உங்கடை பரம்பரைச் சொத்து. இதுவெல்லாம் ஒரு பரம்பரை என்று அறுவை தாயிடம் எரிந்து விழுந்தாலும் யாழினியின் படத்தைக் கண்டதும் அப்பிடியே கவிண்டு போய் விட்டான்.

விமான நிலையத்தில் யாழினி வந்து இறங்கிய போது நடந்தது தான் அறுவையின் வாழ்க்கையையே மாற்றி விட்டது. யாழினியை கண்டதும் அறுவை வாய் காது வரை விரிய சிரிச்சுக் கொண்டே பக்கத்திலே போனான். ஆனால் யாழினி இவனை ஏறெடுத்தும் பாராமல் யாரையோ தேடினாள். என்ன தேடுறீர் நான் தான் சிவா என்றான் அறுவை. உம்மடை அம்மா மகன் வெள்ளை எண்டு சொன்னா, அது தான் அந்த வெள்ளை ஆளைத் தேடினேன் என்று ஒரு நக்கல் சிரிப்பு முகத்தில் மலர்ந்தபடி யாழினி சொன்னாள். இந்த மனிசி எப்பவும் இப்பிடித்தான் கழுத்தறுக்கும் என்று தாயை நினைத்து பல்லைக் கடிச்ச அறுவையின் நல்லெண்ணெய் கறுப்பு முகம் இன்னும் கறுப்பானது. அன்றைக்கு யாழினியின் முகத்தில் பூத்த  நக்கல் புன்னகை பிறகு எந்தக்காலத்திலும் வாடவேயில்லை.

அறுவையின் பேச்சுகளும், போக்குகளும் யாழினியின் சிரிப்பை இன்னும் கூட்டிகொண்டே போனது. அறுவைக்கு ஒவ்வொரு நாளும் அவனது கூட்டாளிகள் போன் எடுத்து உலகத்து பிரச்சனை முழுக்க அலசுவார்கள், இடைக்கிடையே வீட்டை வந்தும் விவாதங்கள் நடக்கும். அவையளிற்கு ஒரு கட்சி வேறு இருந்தது. இவங்கள் முப்பது வருசங்களிற்கு மேலே கரடியாக கத்தி வந்தாலும் கட்சியிலே ஏழரை பேர்தான் இருக்கினம். ஒருவர் கட்சியிலே இருக்கிறாரா இல்லையா என்று கட்சிக்கும் தெரியாது, அவருக்கும் தெரியாது. அப்பப்ப வந்து போய்க்கொண்டு இருப்பார் அதாலே அவரை அரைக்கணக்கில் அறுவை சேர்த்திருந்தான். இந்த லட்சணத்திலே ஏன் பொதுமக்கள் மனித விரோதிகளையே ஆதரிக்கிறார்கள் என்று ஒரு ஆராய்ச்சி வேறு நடக்கும். பொறுத்து, பொறுத்து பார்த்த யாழினி ஒருநாள் பொங்கி எழுந்தாள். நீங்கள் கதைக்கிறது மற்றவைக்கு விளங்கினால் தானே ஆட்கள் உங்களோடு சேருவினம். முதலிலே என்னை மாதிரி பொதுமக்களுக்கு விளங்கக் கூடிய மாதிரி கதைக்கப் பழகிக் கொள்ளுங்கோ என்றாள்.

கனநாளாக அறுவைக்கு ஒரு சந்தேகம். எஸ்.பொன்னுத்துரை சொன்ன மாதிரி யாழினி தானும் புருசனும் தட்டாருமாக வாழ வேண்டும் என்ற யாழ்ப்பாணப் பாரம்பரியத்திலே வந்த பெட்டை. அதன்படி புருசன் மற்றவர்களுடன் சேர்ந்தால் கெட்டுப்போய் விடுவான், வீண்செலவுகள் செய்வான் என்ற ஒப்பற்ற கொள்கைகளை சொல்லிச் சொல்லி வளர்த்த சமுதாயத்தில் வளர்ந்தவள். அவள் எப்படி அவனது தோழர்கள் போன் எடுத்தாலோ, வீட்டை வந்தாலோ முகம் சுளிக்காமல் இருப்பது மட்டுமல்லாமல் அவர்களை வரவேற்று உபசரிக்கவும் செய்கிறாளே என்று பாண்டியன் ஒருவனிற்கு பெண்டாட்டியின் கூந்தலிற்கு வாசம் இயற்கையா, செயற்கையா என்று வந்ததை போல ஒரு சந்தேகம் வந்தது. ஒருநாள் அவள் சந்தோசமாக இருந்த நேரத்திலே தன்ரை சந்தேகத்தைக் கேட்டும் விட்டான். அவளின்ரை முகத்திலே அந்த புன்சிரிப்பு தன்ரை பாட்டிலே பூத்தது. நான் வந்த புதிதிலே உமக்கு மண்டை கழண்டு போனதை பார்த்து கவலைப்பட்டேன். பிறகு இவையளை பார்த்த பிறகு உம்மை மாதிரி இன்னும் நாலு பேர் இருக்கினம் எண்டு ஆறுதல் வந்தது. அதாலே தான் உம்மடை கூட்டாளிகளை சந்தோசமாக வரவேற்கிறேன் என்றாள்.

அவனிற்கு மண்டை கிறுகிறுத்துப்போனது. தாங்கள் உலகத்தையே மாற்ற பாடுபட்டுக் கொண்டிருக்க இவள் இப்படி இருக்கிறாளே என்று கவலைப்பட்டான். இவளை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று யோசித்து தங்களுடைய இணையங்களை வாசிக்கச் சொன்னான். அதிலேயிருந்து அவளுடைய மொழி நடையே மாறிவிட்டது. மயிர், கோவணம், தூமை, எல்லாம் சர்வ சாதாரணமாக அவளின்ரை வாயிலே இருந்து வந்தது. ஒருநாள் அவள் வைத்த சொதி நல்லாயில்லை என்று அறுவை ஒரு விமர்சனம் வைத்தான். நீர் நான் வைச்ச சொதியின் மேலே ஒண்ணுக்கடிக்கிறீர் என்று அவங்கடை  இணையத் தமிழ் நடையிலேயே அவள் மறுமொழி சொன்னாள். சொதியை குடிக்கும் போதே அதைக் குடிக்கிற மாதிரித் தான் இருந்திச்சுது என்று முனகினான் அவன்.

மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்திலே ஏறியது என்று நீண்டு கொண்டே போகும் விக்கிரமாதித்தன் கதைகளை போலே நீளமான தமிழ் சீரியல்களை பார்த்துக் கொண்டிருந்த யாழினி இப்ப அதுகளை விட்டு விட்டு இணையத்தளச் சண்டைகளையும், தொலைக்காட்சிகளில்  வரும் அரசியல் விவாதங்களையும் ஆர்வமாக பார்க்கத் தொடங்கினாள். சீரியல்களில் வரும் மாமியார் - மருமகள் சண்டைகளை விட இவையளின்ரை சண்டை பார்க்க நல்லாயிருக்கு என்று ஒரு காரணம் வேறு சொன்னாள்.

அவர்களின் பிள்ளைகள் சங்கீதம் பழகுகிறார்கள். வெளிநாட்டில் வளரும் பிள்ளைகளிற்கு தமிழ் படிப்பதே கஸ்டம் இதிலே கீர்த்தனைகளை எதுக்கு சொல்லிக் கொடுத்து சிரமப்படுத்த வேண்டும் என்று அவன் அடிக்கடி சண்டை போடுவான். அன்றைக்கு ஒரு கீர்த்தனையை அவள் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க பிள்ளைகள் விளங்கி கொள்ள முடியாமல் சிரமப் பட்டார்கள். "எனக்கே கஸ்டமாக இருக்கு. இதிலே சின்னப் பிள்ளையள் எப்பிடி பாடுறது" என்ற அறுவை சும்மா இருக்க முடியாமல் யாழினி பாடுவதை நக்கலாக பாடிக் காட்டினான். ஆத்திரத்தின் உச்சிக்கு போன யாழினி சட்டென்று "தமிழ்ப் பாட்டு வேண்டாம் என்று சொல்லும் நீர் ஒரு தமிழ்த் துரோகி. தெலுங்கருக்கோ, சிங்களருக்கோ செம்பு தூக்கிறீர்" என்றாள். 

"நாம் தமிழர்" கட்சிக்காரற்றை பேச்சுக்களையும் இப்ப கேக்கிறாள் போலே என்று யோசிச்சு தலையைக் கவிட்டுக் கொண்டான் அறுவை.

 

http://poovaraasu.blogspot.com/2018/08/blog-post_18.html?m=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

அவையளிற்கு ஒரு கட்சி வேறு இருந்தது. இவங்கள் முப்பது வருசங்களிற்கு மேலே கரடியாக கத்தி வந்தாலும் கட்சியிலே ஏழரை பேர்தான் இருக்கினம். ஒருவர் கட்சியிலே இருக்கிறாரா இல்லையா என்று கட்சிக்கும் தெரியாது, அவருக்கும் தெரியாது. அப்பப்ப வந்து போய்க்கொண்டு இருப்பார் அதாலே அவரை அரைக்கணக்கில் அறுவை சேர்த்திருந்தான்.இந்த லட்சணத்திலே ஏன் பொதுமக்கள் மனித விரோதிகளையே ஆதரிக்கிறார்கள் என்று ஒரு ஆராய்ச்சி வேறு நடக்கும்.

 

இப்படியானவர்களுடனான கூட்டு எனக்கும் பல வருடங்களாக இருந்தது.  வடையும் சம்பலும் தேத்தண்ணியும் தந்து ஆக்ரோஷமாக பாஸிஸவாதிகளைத் தாக்கி நடக்கும் அரசியல் கலந்துரையாடலில் தோழர்களின் பேச்சைக்கேட்டு இதயம் அறுந்து இரத்தம் ஒழுகும். எப்பவும் 90 இல் முஸ்லிம்களை வெளியேற்றியது வடை சம்பல் மாதிரி ஒரு “ஐயிட்டமாக” தவறாமல் இருக்கும். 

2009க்குப் பின்னர் தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்க பத்து வருடங்களுக்கு மேல் பாடுபட்டு காயப்பட்டு கஷ்டப்பட்டு துன்பட்டு இலண்டன் வந்த பின்னரும் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று எப்பவும் கதைச்சுக் கொண்டிருக்கும் எனது நெருங்கிய நண்பர்  ஒருவரை இப்படியான “கலந்துரையாடல்களுக்கு” கூட்டிச் சென்று போராட்டத்தின் இன்னொரு பக்கத்தையும் காட்டிவிட்டேன். அவரும் இவங்கள் ஒண்டையும் செய்யாமல் எப்பவும் கதைச்சுக்கொண்டிருக்கிறாங்கள் என்றார். அதுக்கு நாங்கள் இப்படிக் கதைச்சுத்தான் எமது மக்களின் விடுதலைக்கான தேவையை அடுத்த தலைமுறையினருக்கும் கடத்தி ஒரு “ கொதிநிலையில” வைச்சிருக்கவேண்டும். ஆயுதம் இல்லாமல் அறிவாலும் போராடவேண்டும் என்று கதையை விட்டு நண்பரை இவர்களுடன் கொழுவிவிட்டேன். அவரும் கொடிமாதிரி ஒவ்வொரு “கலந்துரையாடலுக்கும்” தவறாமல் போய் வந்து கேட்ட விடயங்களை என்னுடன் தனிய இருந்து அலசுவார்!? எனக்கும் யாழ் களம் இருப்பதால் அரசியல் பரிமாணங்களை “அளந்து” விடுவது இலகுவாக இருக்கும்.??

ஆனால் கீறல் விழுந்த ரெக்கோர்ட் மாதிரி ஒரே கதைகளைக் கேட்டு கேட்டு வெறுத்தும் வருபவர்களுக்கு வேறு பொழுதுபோக்கோ போக்கிடமோ கிடையாது என்பது புரிந்ததும் கடந்த மூன்று வருடங்களாக இப்படியான கூட்டங்களுக்குப் போவதில்லை. நண்பர் இப்பவும் போகின்றார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கதைக்கு கிருபன் குசும்பு என்றும் தலைப்பு வைத்திருக்கலாம்...

இந்த இணைப்பு காலத்தின் தேவை கருதியல்ல, களத்தின் தேவை கருதி இணைச்சதுபோல் ஒரு பீலிங்,,,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, valavan said:

இந்த கதைக்கு கிருபன் குசும்பு என்றும் தலைப்பு வைத்திருக்கலாம்...

இந்த இணைப்பு காலத்தின் தேவை கருதியல்ல, களத்தின் தேவை கருதி இணைச்சதுபோல் ஒரு பீலிங்,,,

அது உங்கள் ஃபீலிங் வளவன்?

நான் அடிக்கடி விசிட் பண்ணும் தளங்களில் இந்தக்கதை இருக்கும் தளமும் உள்ளது. அதில் வரும் கட்டுரைகளைப் பார்த்தால் புரியும்?

Link to comment
Share on other sites

முதலில் இருந்து இறுதி வரைக்கும் அங்கதம். மயிர் கோவணம் தூமை ... சிரிச்சு சிரிச்சு நானும் வாசித்தன்

ஆனாலும் அந்த கடைசி வரி ..............டொப்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஆரம்பகால தமிழ் அரசியல்வாதிகள் தொடக்கம் இன்றைய தமிழ் அரசியல்வாதிகள் வரைக்கும் கடமையுணர்ச்சியுடன் இருந்திருந்தால் ......ஒரு ஈழத்தமிழன் இப்படியான கதைகளை சிரிச்சு சிரிச்சு வாசிக்க மாட்டான். :cool:
 

Link to comment
Share on other sites

22 hours ago, கிருபன் said:

ஆத்திரத்தின் உச்சிக்கு போன யாழினி சட்டென்று "தமிழ்ப் பாட்டு வேண்டாம் என்று சொல்லும் நீர் ஒரு தமிழ்த் துரோகி. தெலுங்கருக்கோ, சிங்களருக்கோ செம்பு தூக்கிறீர்" என்றாள்

இணைப்பிற்கு நன்றிகள்

எழுத்துநடையில் ஒரு இதம் இருக்கின்றது ஆனால் எழுதியவரின் கற்பனைக்கும் யதார்த்தத்துக்கும் தொடர்பில்லை. நாம் அன்றாடம் பார்க்கும் எங்கள் ஊர் பெண்களின் இயல்பு எமக்கு பரிட்சியமானவை அதனால் யாழினி போன்ற பெண்களுக்கு கனவில் கூட இவ் வசனங்கள் வராது. அவ்வாறான சிந்தனைக்கு கிட்டவும் வரமாட்டார்கள். 

புலிகளின் போராட்ட காலத்தில் புலிகளை நையாண்டி செய்த பதிவுகளில் பலதும் ரசிக்கும் படியாகவும் இருக்கும். குறிப்பாக பங்கர் திருமகன் என்று தலைவரை நக்கலடிக்கும் நாடகங்கள். தலைவர் ஒரு வயதான மூதாட்டியை தழுவி ஆறுதல் சொல்லும் படத்தில் ' கிழவிக்கு சக்கை கட்டி கொழும்புக்கு இறக்கலாமோ " எனறு தலைவர் யோசிப்பது போல் எழுதியிருப்பார்கள். அந்த காலங்களை நினைவுபடுத்துகின்றது இந்த பதிவு. 

19 hours ago, கிருபன் said:

ஆனால் கீறல் விழுந்த ரெக்கோர்ட் மாதிரி ஒரே கதைகளைக் கேட்டு கேட்டு வெறுத்தும் வருபவர்களுக்கு வேறு பொழுதுபோக்கோ போக்கிடமோ கிடையாது என்பது புரிந்ததும் கடந்த மூன்று வருடங்களாக இப்படியான கூட்டங்களுக்குப் போவதில்லை. நண்பர் இப்பவும் போகின்றார்?

 

இனவிடுதலைக்காகவும் சிங்கள பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக கருத்தியல் ரீதியாக புறப்பட்ட பலர் புலிகளுடனான கசப்பின் பின் இறுதிவரை புலிகளை எதிர்ப்பதையே தமது முதன்மை அரசியலாக கொண்டிருந்தார்கள். அதன் பின்னர் சிங்களம் எத்துணை கொடுமையான இனப்படுகொலைகள் செய்தாலும் புலியெதிர்ப்புக் கோஸ்டிகள் தமது நிலைப்பாட்டை மாற்றியதும் கிடையாது பேரினவாத ஒடுக்குமுறையை உணர்ந்ததும் கிடையாது. எதிர்ப்பதரற்கு ஏதோஒரு இடம் காரணம் இருந்தால் அதுவே அவர்களது அரசியலாகவும் கருத்தியலாகவும் மாறிவிடுகின்றது. சாதிய விழைவால் ஏற்பட்ட உழவியல் பிரச்சனையாகவே இந்த பிடிவாதம் சார்ந்த தன்மையை அணுக முடியும். 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.