Jump to content

முகநூல் மட்டுமே உலகம் இல்லை


Recommended Posts

இந்தியாவில் கூர்மையடைந்து வரும் இந்து முஸ்லிம் முரண்பாடுகளிலிருந்து இதை பார்க்கவும் 

 

சில வருடங்களுக்கு முன் அவரை முதன் முதலில் சந்தித்தேன். 

அவர் பெயர் அப்பாஸ் அஹமத்

சுமார் அறுபது வயதிருக்கும்.  பழைய  நடிகர் பாலாஜி போல் நல்ல பருமனான உடல்.  நல்ல நிறம். சிரித்த முகம், மணக்க மணக்க   ஏதோ செண்ட் போட்டிருந்தார்.  வெள்ளை கோடு போட்ட கைலியும் ஜிப்பா போல ஒரே ஒரு பட்டன் வைத்த ஷர்ட்டும் அணிந்திருந்தார். 

சென்னையின் புறநகரில் நிலம் ஒன்று வாங்கப் போகதாகவும் அதுக்கு லீகல் ஒப்பினியன் வேண்டும் என்றும் சொன்னார். சில டாக்குமெண்டுகளை உடன் எடுத்து வந்திருந்தார்

அதுக்கென்ன சார். பார்த்து சொல்கிறேன் என்றேன். 

என்னை எப்படி தெரியும் என்று கேட்டேன். அவர் மகளின் வீடு எனது அலுவலகத்தின் அருகில் இருப்பதாகவும் அவர் மகளின் தோழி என்னை பற்றி சொன்னதாகவும் சொன்னார். சரி என்று கூறி டாக்குமெண்டுகளை வாங்கி கொண்டேன். 

எனக்கு சொந்த ஊர் ஆம்பூர் சார். இங்கு சென்னை வந்து  முப்பது வருஷம் ஆச்சு.  வந்த புதுசில் சென்னையில் சில வியாபாரமெல்லாம் செய்தேன். ஒண்ணும் சரியா வரலை சார். அப்புறம் ஒரு ரெடிமேட் கார்மெண்ட் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். கிட்டதட்ட 20 வருஷம் அங்கேயே போயிடுச்சு. எங்க முதலாளி ரொம்ப நல்லவர். என்னை மிகவும் அன்பாக நடத்துவார்.  முதலாளிக்கு அடுத்து கிட்டதட்ட நான் தான் எல்லாம் என்றிருந்தேன். அப்புறம் திடிரென முதலாளி தவறிட்டார். அவரது மகன் கம்பெனியை நடத்த தொடங்கினார். சரியா வரலை சார் என்றார். 

எனக்கு என்ன சொல்வதென்றே எனக்கு தோணவில்லை. 

நாலரை   வருஷம் முன்னாடி  காசி தியேட்டர் பின்புறம் ஒரிடத்தில் ஒரு யூனிட் போட்டேன். சொந்தமாக பீஸ் ரேட்டுக்கு சுடிதார், குழந்தைங்க டிரஸ் தைக்க ஆரம்பித்தேன். நல்லா போயிட்டு இருக்கு , ஆறு பேர் ஒர்க் பண்றாங்க சார் என்றர்.

நல்லது தானே. செய்யுங்களேன் என்றேன். 

அது ஒரு வாடகை கட்டிடம் சார். சென்னை பெரு வெள்ளத்தில் கொஞ்சம் துணி மிஷின் எல்லாம் பாழாயிடுச்சு. அதிகம் ஸ்டாக் இல்லாததால் 
ரொம்ப சேதமில்லை. அதிலிருந்தே சொந்த இடம் பார்க்கலாம்னு இருந்தேன். நிறைய இடம் பார்த்தேன்.  எதுவும் சரியா அமையல. இப்போ இந்த இடம் பிடிச்சிருக்கு. கீழ யூனிட்டும் மேலே வீடும் கட்டி அங்கேயே போயிட்டா எனக்கும் வசதியா இருக்கும். வயசாகிட்டே போகுது என்றார். 

ஒரு மகள் மட்டுமா சார். ? உதவிக்கு வேறு யாரும் இல்லையா என்றேன். 

இல்லை சார்.  ஒரு மகன் இருக்கான், பிடெக் படிச்சிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறான். சில வருடம் முன் திருமணம் ஆயிடுச்சு. அவனுக்கு தொழில் எல்லாம் பிடிக்கலை. நல்ல படிப்பு, நல்ல உத்தியோகம் என்று  ஏதோ ஒரு MNC பெயரை சொன்னார். மருமகளும் நல்ல படிச்சிருக்கு. இருவரும் வேலைக்கு போகிறார்கள். ஒரு பேரன் இருக்கான். அவங்களை டிஸ்டர்ப் பண்ண விரும்பலை. 

ஊரிலிருந்து  போன வருடம்  ஒரு உறவினர் பையனை அழைத்து வந்திருக்கேன். அவன் நல்லா பாத்துகுறான். அதனால் தான் சொந்தமா பில்டிங் கட்டி அங்க போயிடலாம்னு இருக்கேன். சென்னையில் யூனிட், வீடு இரண்டுக்கும் வாடகை அதிகமாயிட்டே போகுது என்றார். 

அதுவும் சரிதான். சொந்த இடம் நல்லது தான். இரண்டு நாட்கள் டைம் கொடுங்கள், கம்ளீட்டா பார்த்து விட்டு சொல்கிறேன் என்றேன். சரி என்று கூறி சென்று விட்டார். 

மறுநாள் போன் செய்து இன்னும் சில டாக்குமெண்ட்ஸ் இருந்தால் நல்லது என்றேன். இடத்தை  விற்பவரின் போன் நெம்பரை கொடுத்து நீங்களே பேசுங்கள் சார். நான் கேட்பதை விட நீங்கள் கேட்டால் விபரமாக இருக்கும். அவரும் கொடுப்பார். எங்க ஊர் பக்கம் தான். நல்ல மனுஷன். இங்கு சென்னையில் புரசைவாக்கத்தில் இருக்கிறார் என்றார். 

அவரிடம் பேசி, எல்லா டாக்குமெண்டையும் வாங்கி கொண்டு சரிபார்த்து தாரளமாக வாங்குங்கள், வில்லங்கம் ஏதுமில்லை என்றேன். 

மறு நாள் நேரே வந்தார். மிக மிக மகிழ்ச்சியாக உணர்ந்தார். பத்திர பதிவு பண்ணிட்டு வேலைய ஆரமிச்சிடலாம்னு இருக்கேன். ஆறு மாதத்தில் அங்கே ஷிப்ட் பண்ணிடலாம்ன்னு இருக்கேன் என்றார். 
தாரளமாக செய்யுங்கள் என்றேன்.  

அப்புறம் அங்கே யூனிட்டும் வீடும் நன்றாக அமைந்து விட்டதாக ஒரு தடவை போன் செய்தார். கட்டாயம் இந்த பக்கம் வந்தால் அவசியம் வர வேண்டும் என்று அன்பாக சொன்னார். 

கட்டாயம் வருகிறேன் என்றேன். 

சென்ற மே மாதம் கோர்ட் விடுமுறையில் வேறு ஒரு வேலையாக அந்த பக்கம் சென்ற போது போன் செய்து விட்டு அவரை காண சென்றேன். என்னை கண்டதுடம் அவ்வளவு ஆனந்தமாக பேசினார். Fanta வாங்கி கொடுத்தார். அவரின் பேச்சும்  அத்தனை  குளிர்ச்சியாக இருந்தது. அவர் மனைவி, வேலை செய்பவர்கள் என்று ஒவ்வொருவராக அறிமுகம் செய்தார். எனக்கு சற்று  கூச்சமாக இருந்தது. 

பின்பு அவ்வப்போது போன் செய்வார். 

இன்று காலை மறுபடியும் போன் செய்து ஆபிஸ்ல இருக்கீங்களா என்றார். ஒரு திருமணத்திற்கு போய் விட்டு கொஞ்சம் லேட்டா வருவேன் என்றேன். 
மகள் வீட்டுக்கு வந்திருக்கேன். உங்களை பார்க்கணும் என்றார். 

சரி, வாருங்கள் என்றேன்.  

நமக்கு ஆர்டர் கொடுங்கறவங்க   போன வாரம் புதுசா கடை ஒப்பன் பண்ணியிருக்காங்க. கடை திறப்புக்கு போனேன். எனக்கு ஒண்ணும் வாங்க தோணலை. உங்களுக்கு ஒரு வெள்ளை ஷர்ட் வாங்கினேன். பிறகு இந்த மாத கடைசியில் பெங்களூர் போகிறேன். பையன் புது வீடு வாங்க போறான். கண்டிப்பா வந்து சில நாட்கள் தங்கி இருக்கணும்னு சொல்றான். அங்க போயிட்டா நவம்பர்ல தான் வருவேன். மனைவிக்கு ரொம்ப குளிர் ஆகாது. அதான் இப்பவே போயிட்டு வந்திடலாம்னு யோசனை என்று சொல்லி 
கோவை கிருஷ்ணா மைசூர்பா  ஸ்வீட் பாக்ஸீடன் அந்த வெள்ளை சட்டையை கொடுத்தார். 

எதுக்குங்க இதெல்லாம் என்றேன்.

உங்களுக்கு  தீபாவளி வாழ்த்துகள் சொல்லிட்டு இந்த ஸ்வீட்டும் புது சட்டையும் கொடுக்கணும்னு தோணுச்சு என்று சொல்லி விட்டு விடை பெற்றார். 

எனக்கு என்ன சொல்வதன்றே தெரியவில்லை. ரொம்ப ரொம்ப சந்தோஷம் என்று மட்டும் சொன்னேன்.

***************************************************************

பேஸ்புக்குக்கு  வெளியே உலகம் வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது. பரஸ்பர அன்பும் கொண்ட மக்கள் நிறைய இருக்கிறார்கள்.  அவர் எனக்கு நண்பரில்லை. பல வருடம் பழக்கமில்லை. ஆனாலும் அலாதியான அன்பும் அப்பழுக்கற்ற மரியாதையும் கொண்டவராக திகழ்வதை சிலாகிக்க வார்த்தைகளில்லை. அவர் எந்த பேச்சிலும் எப்போதும் 
யாரையும் குறை சொல்வதையோ புலம்புவதையோ  கேட்டதில்லை.  

மற்றவர்களை அவர்களாகவே ஏற்று கொள்பவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றே நினைக்க தோணுகிறது. ❤️ ❤️

 

எழுதியிவர்-சூர்யா சுரேஸ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.