Sign in to follow this  
அபராஜிதன்

ரிலாக்ஸ்

Recommended Posts

வாசலில் பெரிதாக A.M.Agrawal என்று போர்டு இருந்த  வீட்டுக் கதவைத் தட்ட நினைத்து, எதிர்வீட்டு பெல்லை அழுத்திவிட்டேன். கடுப்புடன் கதவைத் திறந்த பெண்மணியின் தீப்பொறி பறக்க நோக்கி, படார் எனக் கதவை அறைந்து சார்த்திவிட்டார் . 

”நல்லநாளிலேயே அந்தம்மா அதிகம் பேசாது. அதுவும் அகர்வால் வீடுன்னு கேட்டீன்னா” என்றார் முகேஷ் அகர்வால் சிரித்துக்கொண்டே. “ எங்களுக்குள்ள கொஞ்சம் ஆகாது.அத விடு. எப்படி இருக்கே? பாத்து பன்னெண்டு வருஷம் இருக்குமா? 2004ல இடார்ஸில பாத்தது இல்லையா?”

முகேஷ் அகர்வால் ரிடையர்டு ஆகி பல வருடங்கள் இருக்கும். அரசு நிறுவனம் என்றால் சோம்பேறிகளாக , லஞ்சம் வாங்குபவர்களாகவே இருப்பார்கள் என்ற முத்திரைகளை உடைத்தவர். 

“மூத்தவன் வீடு இது. ரெண்டாவது பையன் போப்பால்ல இருக்கான். சொந்தக் கம்பெனி. 10 கிளைகள். ஆட்டோ ஸ்பேர்ஸ், அக்ஸெஸரிஸ்” 

அவனா? வியப்பாக இருந்தது. 

2004ல் அகர்வால் வீட்டிற்குப் போயிருந்தேன். குவாட்டர்ஸ். பெரிய வீடு. 
“  இவன் மூத்தவன் . அஜய் . பி.ஈ படிக்கறான்.”  ஒல்லியான அந்தப்பையன் ’ஹலோ அங்கிள்’ என்றான் தீனமான குரலில். “ கொஞ்சம் ஷை டைப். படிப்புல கெட்டிக்காரன். ப்ளஸ்டூவுல கோல்டு மெடல். கம்ப்யூட்டர் படிக்கறான்.” அகர்வாலின் வார்த்தைகளில் பெருமை வழிந்தது.

“என்ன பண்ணப்போற?” என்றேன். 

“ஐ.ஐ.எம். சேரணும் அங்கிள். CATக்கு படிச்சிட்டிருக்கேன்” அவன் சொல்லிக்கொண்டிரூக்கையில் உள்ளே நுழைந்தவனைப் பார்த்த முகேஷின் முகம் இறுகியது. “எங்க போய்ட்டு வர்றே?” என்றார் 

ஆறடி உயரமும் பருமனுமாக இருந்த அந்த இளைஞன் “ ஜிம்” என்றபடி உள்ளே  சென்றான்.  கைகள் , பளு தூக்கி நன்கு புடைத்திருந்தன.

“இவன் ரெண்டாவது. ராகேஷ். உருப்படியில்ல. உடம்பை வளர்த்துவைச்சிருக்கான். எப்பக் கேளுங்க. மராத்தான் ஓடணும், ஜிம்ல் எக்ஸர்ஸைஸ் பண்ணனும்னே சொல்லிட்டிருக்கான். போன மாசம் மும்பை ஸ்டாண்டர்ட் சார்ட்டட் ஓட்டத்துல.. ஆறாயிரம் ரூபாய் செலவு.  தின்னு உடம்பை வளத்தா போதுமா? ஒரு வேலை செய்யணும்னு தோணல . என்ன செய்யப்போகுதோ?” 

என்ன சொல்வதென்று தெரியாமல் அசட்டுப் புன்னகையுடன் டீயைப் பருகினேன். 

“  இந்த கல்லூரிகளெல்லாம் படிப்பை மட்டும் சொல்லிக்கொடுத்தாப் போறும்னு நினைக்கறேன், சுதாகர்.. வேண்டாத விளையாட்டு, பிஸிகல் எஜுகேஷன், ஸ்போர்ட்ஸ், மராத்தான்... என்ன ப்ர்யோஜனம்? அஜய் பாருங்க. ஒரு நிமிசம் வீணாகக் மாட்டான். படீப்பு படிப்பு...அது முன்னேறும்.” 

“சார்” என்றேன் சமாதானமாக்க முயன்று “ உடற் பயிற்சி , வலுவைக் கூட்டும். மராத்தன் என்பது சும்மா ஓடற் விசயமில்ல, அது மன உறுதி சம்பப்பட்டது என்று சொல்லிக்கேட்டிருக்கேன். பாருங்க, இவனும் நல்லா வருவான்”

“என்னமோ சொல்றீங்க. விடுங்க” என்றார் விரக்தியாக. 

அந்த ராகேஷ் இப்போது கோடிகளின் அதிபதி.. 

முகேஷ் தொடர்ந்தார் “ அஜய்க்கு ஐ.ஐ.எம் கிடைக்கல. மனமுடைஞ்சு போய், டிப்ரெஷன்ல போயிட்டான். அப்புறம் குணமாக்கி, நல்ல காலேஜ்லதான் எம்.பி.ஏ பண்ணான். ஐ.ஐ.எம் கைவிட்டுப் போனதுல, நம்பிக்கை போயிருச்சு. சென்னை கம்பெனி ஒண்ணுல விற்பனைத்துறையில வேலை கிடைச்சது. சென்னை பழக கஷ்டமாயிருச்சுன்னு வேலைய விட்டுட்டு வந்துட்டான். அப்புறம் வேலைகிடைக்க கஷ்டமாயிருச்சு. ஏதோ இங்க ஒரு கம்பெனியில மார்க்கெட்டிங்ல மேனேஜரா இருக்கான். பெருசா ஒண்ணுமில்ல. 
ராகேஷ் “ என் ப்ரெண்டோட சேந்து கடை வக்கறேன். கடனா ரெண்டு லட்சம் கொடுங்க”ன்னான். கொடுத்தேன். ஒடிஞ்சு போச்சு. அவன் வீட்டுக்கு வரலை. ஸாகர்ல ஒரு ரூம்ல  தங்கிட்டிருந்தான். கஷ்டப்பட்டு இன்னொரு கடை போட்டு, டெல்லி போயி, எதோ டீலர்ஷிப் வாங்கி, நாலு வருசத்துல கடையை ஒழுங்கா வச்சி, இப்ப ஒரு எட்டு வருஷமா நல்லா வளந்துட்டான். அவந்தான் இங்க வீட்டுக்கு பணம் கொடுத்து உதவறான். இவன் சம்பாத்தியம் அவ்வளவா இல்ல” 

முகேஷ் சற்று நிறுத்தினார் “ எதுக்குச் சொல்றேன்.. நாம ஒண்ணு நினைக்கறோம். தெய்வம் ஒண்ணு நினைக்குது”

ராகேஷின் உடற்பயிற்சியும், மன உறுதியும் தன்னம்பிக்கையுமே அவன் வளர்ச்சிக்குக் காரணம் என்பது ஏனோ தெரியாமற் போய்விட்டது, அவருக்கு. கால் வலிக்க ஓடுவதில் “இன்னும் கொஞ்ச தூரம், இன்னும் கொஞ்ச தூரம்” என்று தன்னை வலுப்படுத்து, உற்சாகமூட்டி ஓடும் மராத்தான், கடை ஒடிந்த நிலையில், அவனை ரெண்டுங்கெட்டான் ஊரான சாகரில் தங்கி , கடினமாக உழைக்க வைத்தது என்பதும்,
அஜயின் ஏட்டுச் சுரைக்காய் அறிவு, பூஞ்சையான மனது வாழ்வின் யதார்த்தங்களைச் சந்திக்கத் தைரியத்தை அளிக்கவில்லை என்பதும் அவருக்குப் புரியவில்லை.

பெரிய கம்பெனிகளில் தலைமை அதிகாரிகள் வினோதமாக வாழ்வில் ரிஸ்க்கான, அட்ரினலின் ஊறவைக்கும் விளையாட்டுகளில் ஈடுபடுவதையும், வலிக்க வலிக்க ‘இன்னும் ஒரு பத்து” என்று புஷ் அப் எடுப்பதையும், உடல் வலியைத் தாண்டி வெற்றி இலக்கை எட்ட வெறியுடன் இருப்பதையும் அவர், பாவம், புரிந்துகொள்ளவில்லை. 

உடல் நோகாமல் சிறு வெற்றிகள் கிடைக்காது, பெரும் வெற்றிகளுக்குச் சிறு வெற்றிகளே ஆதாரம் என்பதைக் குழந்தைகள் தானாகப் புரிந்துகொள்வது துர்லபம். போட்டிகள் மிக முக்கியமானவை என்பதும் போட்டியில் தோல்விகளே வெற்றிகளை அதன்பின் காட்டித்தருமென்பதும் வீடுகளிலும்,பள்ளிகளிலும் சொல்லிக் கொடுக்கப் படுவதில்லை. பெற்றோர்களுக்கே தெரிவதில்லை.  

சொல்ல நினைத்தேன்...
“ தெய்வம் , தான் நினைச்சதை நம்ம மூளைக்குச் சொல்லுது. நாமதான் கேக்க மாட்டேங்கறோம்”

 

சுதாகர் கஸ்தூரி முகநூல் 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this