Jump to content

ராஜபக்‌ஷர்களின் வெற்றிக் கருவியான சமூக ஊடகங்கள்


Recommended Posts

ராஜபக்‌ஷர்களின் வெற்றிக் கருவியான சமூக ஊடகங்கள்
புருஜோத்தமன் தங்கமயில் /

ராஜபக்‌ஷக்களின் 2015 காலத்து வீழ்ச்சியிலும் தற்போதைய மீள் எழுச்சியிலும், சமூக ஊடகங்களின் பங்கு கணிசமானது. ஒட்டுமொத்தமாக நோக்கும் போது, நாட்டுக்குள் சமூக ஊடகங்களை அதிகளவு கையாள்பவர்கள், அதன் வழி ஊடாடுபவர்கள் என்று பார்த்தால், ராஜபக்‌ஷக்களே முன்னிலையில் இருக்கிறார்கள். மஹிந்த ராஜபக்‌ஷ, நாமல் ராஜபக்‌ஷ, கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோரின் பேஸ்புக் கணக்கு உள்ளிட்ட சமூக ஊடக விடயங்களைக் கையாள்வதற்கென்று, நிபுணர்கள் அடங்கிய பெரிய அணிகளே பணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றன.

இலங்கையின் அரசியல் பிரச்சினைகளில், மொழிக்கொள்கை முக்கியமானது. ஆட்சியிலிருந்த காலத்தில் அது தொடர்பான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, ராஜபக்‌ஷக்கள் எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. பிரச்சினையின் அளவை அதிகரிப்பது சார்ந்தே, அவர்களது போக்கு எப்போதும் இருந்திருக்கின்றது. ஆனால், சமூக ஊடகப் பயன்பாட்டில், மும்மொழிக்கு அவர்கள் வழங்கும் முக்கியத்துவம் அபரிமிதமானது. விடயப்பரப்பு எதுவாக இருந்தாலும், அதனை மூன்று மொழிகளிலும் பதிவுகளாகவோ, தகவல்களாகவோ பகிர்வதில் பின்னிற்பதில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பிரிவுக்கு எந்த விதத்திலும் சளைக்காத வகையில், பிரசாரப் பணிகளை, சமூக ஊடகங்களிலும் ராஜபக்‌ஷக்கள் முன்னெடுக்கிறார்கள். பிரதமரின் ஊடகப் பிரிவே, சிங்கள - ஆங்கில மொழிகளுக்குள் மாத்திரம் முடங்கிக் கொண்டிருக்க, ராஜபக்‌ஷக்களின் பிரசாரத் தளங்களும் வியூகங்களும், பன்முகத்தன்மையோடு, நாளுக்கு நாள் விரிந்து வருகின்றன. அதனை, எதிர்கொள்வது சார்ந்து, மைத்திரியும் ரணிலும், பெரும் சவாலை எதிர்கொள்கிறார்கள். ஒவ்வொரு மேடையிலும், சமூக ஊடகங்களை நோக்கிய வசைகளைப் பொழியும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

ராஜபக்‌ஷக்களின் ஆட்சியில், ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல், நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஒரு கட்டத்தில், ராஜபக்‌ஷக்களின் புகழைப் பாடுவதைத் தவிர, வேறு எதனையும் செய்ய முடியாத சூழல் உருவானது. அதுவும், 2009க்குப் பின்னர், போர் வெற்றிவாதம் தலைவிரித்தாடிய சூழலில்,  தென்னிலங்கை ஊடகங்களுக்கு, வெற்றிவாதத்துக்குள் ஒளிந்து கொள்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.

ஆனால், போர் வெற்றிவாதத்துக்கு அப்பாலான, சாதாரண மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களை வெளிப்படுத்துவது சார்ந்து ஊடகங்கள் தவறவிட்ட விடயங்களை, சமூக ஊடகங்கள் மெல்ல மெல்ல எடுத்துக் கொள்ள ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில், தென்னிலங்கையின் பிரதான ஊடகங்களின் செய்திகளுக்கும் சமூக ஊடகங்கள் வெளிப்படுத்தும் செய்திகளுக்கும் இடையில், பாரிய இடைவெளி காணப்பட்டது. இது, மக்களுக்கும் பிரதான ஊடகங்களுக்கும் இடையிலான இடைவெளியாகவும் மாறியது. அதனால், சமூக ஊடகங்களை நோக்கிய இளம் சமூகத்தினரின் திரள்வு என்பது, அரசியல் - சமூக விடயங்களைப் பேசுவதற்கான அளவையும் அதிகரித்தது. அதுதான், ஆட்சி மாற்றம் பற்றிய கோரிக்கைகளுக்கு வலுச்சேர்ப்பதாகவும் இருந்தது.

சமூக ஊடகங்களை நம்பிக்கொண்டு மாத்திரம், ஆட்சி மாற்றங்களையோ தலைமைத்துவ மாற்றங்களையோ செய்துவிட முடியாது. ஆனால், அரசியல் - இராஜதந்திர நகர்வுகளில், இன்றைக்குத் தவிர்க்க முடியாத ஒரு கருவியாக, சமூக ஊடகங்கள் மாறிவிட்டன. அதனையே, 2013க்குப் பின்னராக தென்னிலங்கை, பாரியளவில் பிரதிபலிக்க ஆரம்பித்தது. பிரதான ஊடகங்கள், ராஜபக்‌ஷக்களின் பெருமைகளைப் பேசிக்கொண்டிருக்க, சமூக ஊடகங்களில் அவர்கள் மீதான விமர்சனங்கள், அதிகளவில் மேலெழுந்து வந்தன. குறிப்பாக, ஊவா மாகாண சபைத் தேர்தல் காலத்தில் ராஜபக்‌ஷக்கள் எதிர்கொண்ட சிக்கலுக்கு, சமூக ஊடகங்களின் பங்கு முக்கியமானது. ராஜபக்‌ஷக்கள் மீதான மக்களின் அதிருப்தியை ஒளிவு மறைவின்றி, சமூக ஊடகங்கள் பிரதிபலித்தன. ஒரு கட்டத்தில், தமது பயணம் தவறானது என்று உணர்ந்த நிலையில், பிரதான ஊடகங்களும் சமூக ஊடகங்கள் வெளிப்படுத்திய உணர்வை, மெல்ல மெல்ல வெளிப்படுத்த ஆரம்பித்தன. அதுதான், ராஜபக்‌ஷக்களின் தோல்விக்கான கட்டங்களை, ஊடகப் பரப்புப் பதிவுசெய்த இடமாகும்.

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கான விதை, சிங்கப்பூரில் போடப்பட்டதா, வொஷிங்டனில் போடப்பட்டதா என்கிற விவாதங்கள், இன்றளவும் நீடிக்கின்றன. ஆனால், ஆட்சி மாற்றத்துக்கான விதை எங்கு போடப்பட்டாலும், அதனை இலங்கையில் நாட்டி விருட்சமாக்கும் பொருட்டு, சமூக ஊடகங்களைக் கையாள வேண்டும் என்கிற நிலைப்பாட்டையும், சம்பந்தப்பட்ட தரப்புகள் வெற்றிகரமாகக் கையாண்டன. ராஜபக்‌ஷக்கள் மீதான அதிருப்தியை, சமூக ஊடகங்கள், நாட்டு மக்களின் கூட்டுணர்வு என்கிற கட்டத்தில் வைத்து வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. 

தென்னிலங்கை மாத்திரமல்ல, ராஜபக்‌ஷக்களுக்கு எதிரான மனநிலையை வடக்கு - கிழக்கு மக்களும், சமூக ஊடகங்களில் பெருமெடுப்பில், அச்சுறுத்தல்களையும் தாண்டி நின்று வெளிப்படுத்த ஆரம்பித்தனர். தேர்தல் அரசியலில் ராஜபக்‌ஷக்களுக்கு எதிரான மனநிலையை தமிழ் மக்கள் வெளிப்படுத்துவது வழக்கமானது. ஆனால், பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள், பேருவளை வன்முறைகளுக்குப் பின்னர், முஸ்லிம் மக்களும் ஓரணியில், ராஜபக்‌ஷக்களுக்கு எதிராகத் திரண்டனர். அதனை அவர்கள், சமூக ஊடக வழியில் பேரியக்கமாகவே செய்ய ஆரம்பித்தார்கள். இந்தப் புள்ளிகளைத்தான், ஆட்சி மாற்றத்தை வழிநடத்திய தரப்புகள் அறுவடை செய்ய ஆரம்பித்தன.

அடிப்படையில், ஊடகம் என்பது பலமுனைகளைக் கொண்ட கத்தி. அனைத்துப் பக்கங்களையும் நோக்கிப் பாயக்கூடியது. அதிலும், சமூக ஊடகத்துக்குப் பொறுமையே கிடையாது. தயவு தாட்சண்யங்கள் இன்றி வேகமாகப் பாயக்கூடியது. இப்போது, அந்தப் பாய்ச்சலையே, மைத்திரியும் ரணிலும் எதிர்கொண்டிருக்கின்றார்கள். ஆட்சி மாற்றத்துக்கும், தேசிய அரசாங்கம் அமைப்பதற்கும், சமூக ஊடகங்கள் எப்படி ஒரு கருவியாக வெற்றிகரமாகப் பயன்பட்டனவோ, கொண்டாடித் தீர்த்தனவோ, இன்றைக்கு அதேயளவுக்கு விமர்சித்து, பழித்துத் தீர்க்கின்றன. அதன் வெம்மையை, ஆட்சியாளர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

ராஜபக்‌ஷக்கள், சமூக ஊடகங்களை இரு கட்டங்களில் கையாள்கிறார்கள். முதலாவது, தென்னிலங்கையின் கடும்போக்குத் தளத்தைத் தகிப்போடு பேணுவதற்காக. இரண்டாவது, தமிழ் - முஸ்லிம் மற்றும் கொழும்பு மேல்தட்டு வர்க்கத்தைத் தம்மோடு இணக்கமாகக் கையாள்வதற்காக. இலங்கையில், சிங்கள - பௌத்த பேரினவாதமே, தேர்தல் வெற்றிகளை அதிகளவு தீர்மானித்து வந்தாலும், வெற்றியின் இறுதிக் கட்டங்களை, தமிழ் - முஸ்லிம் வாக்குகளே தீர்மானிக்கின்றன. அப்படியான நிலையில், இரு கட்டங்களையும் பேண வேண்டிய தேவையொன்று ஏற்படுகின்றது. அதன்போக்கிலேயே, ராஜபக்‌ஷக்கள் அதனைக் கையாள்கிறார்கள்.

தென்னிலங்கையில் ராஜபக்‌ஷக்களை நோக்கிய திரள்வு என்பது, கடும்போக்கு மற்றும் தற்போதையை அரசாங்கத்தின் கையாலாகத்தனம் ஆகியவற்றின் போக்கில் ஏற்படுகின்றது. அதனை ஒவ்வொரு கட்டத்திலும் வைத்துக் கொள்வதற்காக, ஊடகங்களையும் தாண்டி, சமூக ஊடகங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுவும், அதுவே திரட்சிக்கான கட்டங்களை அதிகரிக்கும் என்றும் நம்புகிறார்கள். அதாவது, தங்களைத் தோற்கடித்த புள்ளியிலிருந்து பாடங்களைப் படித்துக் கொண்டு முன்செல்ல நினைக்கிறார்கள்.

அத்தோடு, ராஜபக்‌ஷக்கள், சமூக ஊடகங்களில் கேள்வி - பதில் வடிவில் உரையாடல்களைச் செய்வதிலும் ஆர்வமாக இருக்கிறார்கள். அது, மக்களைத் தொடர்ச்சியாகத் தங்களோடு தக்கவைக்க உதவும் என்றும் நினைக்கிறார்கள். கடந்த திங்கட்கிழமையும், நாமல் ராஜபக்‌ஷ, மும்மொழியிலும் பேஸ்புக்கினூடு கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தார். அவர் அளித்த பதில்களில், எவ்வளவு தூரம் சமூக, பொருளாதார, அரசியல் ஞானம் இருந்தது என்பது கேள்விக்குரியது. ஆனால், அந்தக் கேள்வி - பதில் கட்டம் என்பது, குறிப்பிட்டளவானவர்களை நாமலை நோக்கிக் கொண்டு வந்தது. அவரை நோக்கிய புகழுரைகள் மாத்திரமல்ல, வழிநடத்துவதற்குரிய நபருக்குரிய தகுதியாகவும், ஒரு வகையிலான கருத்துருவாக்கத்தையும் அங்கு காண முடிந்தது. இது, வாக்கு அரசியலில் அதிக பலன்களைத் தரக்கூடியது.

ராஜபக்‌ஷக்கள், தமது வெற்றியைத் தீர்மானிப்பதற்கான கருவியாக மாத்திரமல்ல, எந்த ராஜபக்‌ஷவை நோக்கி, மக்கள் அதிகமாகத் திரள்கிறார்கள் என்பதைத் தீர்மானிப்பதற்கும், குறிப்பிட்டளவுக்கு சமூக ஊடகங்களையே நம்பியிருக்கிறார்கள். அங்கேயே, அதற்கான உரையாடல் வெளிகளையும் திறக்கிறார்கள். அரசியல் ரீதியாக மாத்திரமல்ல, பொழுதுபோக்கு, விருப்பு - வெறுப்புகள் சார்ந்தும், தம்மை இயல்பாக வெளிப்படுத்திக் கொள்வதற்கான கட்டத்தை, சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதும், அது தொடர்பில் வெளிப்படுத்துவதும் கூட, அவர்களின் பெரும் உத்தியே. தம்மைத் தோற்கடிக்கப் பயன்படுத்தப்பட்ட கருவியை, வெற்றிபெறுவதற்கான கருவியாக மாற்றுவதில், ராஜபக்‌ஷக்கள் இப்போது குறிப்பிட்டளவான கட்டத்தைத் தாண்டியிருக்கிறார்கள்.

அதன்போக்கில், சமூக ஊடகங்களை ராஜபக்‌ஷக்கள் யாரும் நினைத்துப் பார்க்க முடியாதளவுக்கு வெற்றிகரமாகக் கையாள்கிறார்கள் என்று கொள்ளலாம்.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ராஜபக்-ஷர்களின்-வெற்றிக்-கருவியான-சமூக-ஊடகங்கள்/91-220618

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.