Jump to content

கருணாநிதி எனும் சாமான்யன் சாணக்யன் ஆன வரலாறு!


Recommended Posts

கருணாநிதி எனும் சாமான்யன் சாணக்யன் ஆன வரலாறு!

 
 

"ஆளும் திறமை இடது மூளை... அவரின் காவியமும், கற்பனையும் வலது மூளை. பரவலாக மனிதனுக்கு இரண்டில் ஒன்றுதான் மேன்மையாக இருக்கும். இரண்டும் மேன்மையாகச் செயல்படுவது கலைஞருக்குத்தான்"

கருணாநிதி எனும் சாமான்யன் சாணக்யன் ஆன வரலாறு!
 

லகம் வியந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பற்றி ஒரு சுவாரசியமானத் தகவல் உண்டு. அவரது மூளையை ஆய்வு செய்த தாமஸ் ஹார்வி என்ற மருத்துவர் உலகில் வேறு எவருக்கும் இல்லாத அளவிலான தொடர்பு நரம்புகள் அவரது மூளையில் அடர்த்தியாக இருந்தன என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் கணிதம் மற்றும் இயற்பியலில் எவராலும் போட்டிபோட முடியாதவர் என்பதால் ஐன்ஸ்டீனின் இடது மூளையின் செயல்பாடுகள் அதிவேகமானதாகவும் வித்தியாசமானதாகவும் இருந்ததாகவும் மூளை மடிப்புகள் அவருக்கு அதிகமாக இருந்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் பெற்றிருந்த மாபெரும் சிந்தனையாளனின் மூளைப்பகுதி அப்படி இருந்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தலைசிறந்த சிந்தனையாளர்கள், ராஜதந்திரிகளின் மூளை இதுபோன்று ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படுவது உண்டு. ரஷ்யப் புரட்சியாளர் லெனின், மேற்கு வங்கத்தின் மார்க்சியவாதி ஜோதிபாசு உள்ளிட்டோர் இதுபோன்றவர்களின் அடங்குவர்.

கருணாநிதிஇவர்களின் வரிசையில் இப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி எனலாம். "ஆளும் திறமை இடது மூளை... அவரின் காவியமும், கற்பனையும் வலது மூளை. பரவலாக மனிதனுக்கு இரண்டில் ஒன்றுதான் மேன்மையாக இருக்கும். இரண்டும் மேன்மையாகச் செயல்படுவது கலைஞருக்குத்தான்" என்று குறிப்பிட்டிருப்பார் அவரின் நெருங்கிய நண்பரான நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி.

1969-ம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த சி.என். அண்ணாதுரை, புற்றுநோயால் மரணம் அடைந்ததை அடுத்து அக்கட்சியின் அடுத்த சட்டமன்றக் குழுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் உண்டானது. நாவலர் நெடுஞ்செழியனுக்கும், கருணாநிதிக்குமான பனிப்போர் காலம் அது. 'போட்டிவழியே தலைவரைத் தேர்ந்தெடுப்போம்' என்கிற நிலைப்பாட்டை எடுத்தார் நெடுஞ்செழியன். கட்சியினர் இருவேறு தரப்பாகப் பிரிந்து இருவருக்கும் ஆதரவு அளித்தனர். கருணாநிதியை ஒருதரப்பும், நெடுஞ்செழியனை மற்றொரு தரப்பும் முன்மொழிந்தார்கள். கருணாநிதிக்கு பெரும்பான்மை கிடைக்கும் சூழல் உருவான நிலையில் நெடுஞ்செழியன் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். இதனால் யாரைச் சட்டமன்றக் குழுத்தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்னும் சிக்கலான சூழல் உருவானது. அப்படிப்பட்ட சூழலில்தான் பெரியாரைச் சந்திக்கச் சென்றார் கருணாநிதி. ஆனால், அதற்கு முன்பே கருணாநிதியை சட்டமன்றக் குழுத்தலைவராகப் பரிந்துரைத்த அறிக்கை விடுதலை இதழில் பிரசுரிக்கப்பட்டது. 'சட்டமன்றக் குழுத்தலைவர் பதவி கருணாநிதிக்கு' என்று முடிவானதை அடுத்து நெடுஞ்செழியனுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டது. 'கட்சியில் மூத்த உறுப்பினர் என்கிற அடிப்படையில் நெடுஞ்செழியனுக்கு அமைச்சரவையில் இடமளிக்கவேண்டும்' என்று கருணாநிதிதான் முடிவெடுத்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் கருணாநிதியுடனான கருத்து முரண்பாட்டால் அதனை மறுத்தார் நெடுஞ்செழியன். அந்த வருடம் அண்ணாதுரையின் நினைவுநாள் கூட்டம், கருணாநிதி தலைமையில் சென்னை தியாகராய நகரிலும், நெடுஞ்செழியன் தலைமையில் திருவல்லிக்கேணி தொகுதியிலும் என இருவேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது. அண்ணாதுரை உருவாக்கிய கட்சியில் அதற்குள் பிளவு ஏற்பட்டுவிடக் கூடாது என்று சுதாரித்துக் கொண்டார் கருணாநிதி.  

 

 

இருவருக்குமிடையே தொடர்ந்த கருத்து வேறுபாடுகளைக் களைய நெடுஞ்செழியனை கட்சியின் பொதுச்செயலாளராக இருக்க அழைப்பு விடுத்தார். அதையடுத்து, சென்னையில் இருந்த ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் ஐம்பது வருடங்களுக்கு முன்பு 1969-ம் ஆண்டு ஜூலை 27 அன்று, தி.மு.க-வின் பொதுச்செயலாளர் ஆனார் நெடுஞ்செழியன். கருத்து முரண்பாடு ஏற்பட்ட கருணாநிதியைக் கட்சியின் தலைவராக முன்மொழிந்தார் நெடுஞ்செழியன். இருவரும் அதே மேடையில் கட்டியணைத்துக் கொண்டனர். கட்சியின் ஒற்றுமைக்காக, கருணாநிதி எடுத்த முதல் நடவடிக்கை அது.

 

 

கருணாநிதி

கழகத்துக்கான தந்திரங்கள்...!

ஒரு நல்ல தலைமையின் கட்டுக்கோப்பில் இயங்கும் கட்சி, தலைமை இல்லாத காலங்களிலோ அல்லது தலைமையின் செயல்பாடுகள் குறைந்த காலங்களிலோ பெரும் இக்கட்டுகளைச் சந்திக்கும். தமிழகத்தின் நடப்பு ஆட்சி மற்றும் தற்போதைய அரசியல் சூழல் அதற்கான சிறந்த உதாரணம். திராவிட முன்னேற்றக் கழகம், அப்படியான உட்கட்சிப் பூசல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் அண்ணாதுரை தலைமையில் திருச்சியில் கட்சியின் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், உடல்நிலை நலிவுற்றிருந்ததால் தனக்குப் பதிலாக கருணாநிதியைத் திருச்சிக்கு அனுப்பி வைத்தார் அண்ணா. கூட்டம் நடத்தப்பட்டு, திருச்சியில் 132 இடங்களில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது. கட்சியில் இருந்து ஒருவரும் வெளியேறிவிடக்கூடாது என்கிற அண்ணாவின் அதே எச்சரிக்கைப் போக்கு கருணாநிதியிடமும் இருந்தது. சிந்தனைகள் ஒரே அலைவரிசையில் இருந்தால் மட்டுமே இயக்கமாக வெற்றிகரமாகச் செயல்படுவது சாத்தியம் என்பதற்கு இந்தச் செயல்பாடு ஒரு சிறந்த உதாரணம். கட்சியின் முக்கியப் பொறுப்புகளை உரிய நபர்களிடம் ஒப்படைப்பதில்கூட ராஜதந்திரியாகவே இருந்தார் கருணாநிதி. எம்.ஜி.ஆரைக் கட்சியின் பொருளாளராக நியமித்ததும் அந்த அடிப்படையில்தான். மக்களிடையே அடையாளம் பெற்ற ஒருவரைக் கட்சியில் உயர் பதவியில் அமரவைப்பது கட்சிக்கு வலுசேர்க்கும் என்பது அவரது எண்ணம். 

 

 

மன்னை நாராயணசாமிக்கும், கோ.சி. மணிக்குமிடையே பிரச்னை ஏற்பட்டபோதும் கட்சியின் இணக்கத்திற்காக கருணாநிதி, அந்தப் பிரச்னையைச் சிறந்த முறையில் கையாண்டார். தன் பயணங்களில் இருவரையும் ஒன்றாகக் காரில் ஏற்றிக்கொள்வார். இருவருக்கிடையேயும் முரண்பாடு, கோஷ்டிப் பூசல்கள் எனப் பல பிரச்னைகள் இருந்தன. பிரச்னைகள் இருந்தது என்பது கருணாநிதிக்கும் தெரியும். ஆனால், இருவரையும் சரிசமமாகவே நடத்துவார். அவர்களை அப்படி நடத்தினால் மட்டும்தான் தொண்டர்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு உண்மையாக நடந்ததாக இருக்கும் என்பது கருணாநிதியின் நிலைப்பாடு. கட்சியில் எங்கே, யாரை, எப்படி அரவணைத்துச் செல்லவேண்டும் என்பது ஒரு நல்ல தலைமைக்குத் தெரிந்திருக்கவேண்டும்.

கருணாநிதி

கருணாநிதியின் ஆரோக்கிய அரசியல்...!

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் ஜானகி மற்றும் ஜெயலலிதாவுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டபோது கருணாநிதியின் ஆதரவைக் கோரினார் ஜானகி. ஆனால், கருணாநிதி மறுத்தார். குடும்பப் பிரச்னைகளைக் கட்சிப் பிரச்னை ஆக்குவதும், அதில் மூன்றாம் நபரின் ஆதரவைக் கோருவதும் தவறு என்பது அவருடைய நிலைப்பாடு. ஒருவேளை ஜானகிக்கு ஆதரவளித்திருந்தால் ஜெயலலிதா எனும் சக்தி உருவாகியிருக்க முடியாது. ஆனால், ஆரோக்கியமான அரசியலை விரும்பிய கருணாநிதி அதனைத் தவிர்த்தார். கொண்ட கொள்கையில் என்றும் தவறாது இருந்தது, அவரது ஆரோக்கிய அரசியல். மத்தியில்  மதச்சார்பின்மையைக் கோரியவர், மாநிலத்தில் கூட்டணிக் கட்சிகளிடையே சமூக நீதிக்காகக் குரல்கொடுத்தார். அதற்கு உதாரணம், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில்  கூட்டணியில் இருந்த மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு மட்டும் பத்து தொகுதிகளை ஒதுக்கிக் கொடுத்தார். 

கருணாநிதி

மத்திய ஆட்சிகளுடனான போக்கு...!

பொதுவாக ஒரு முக்கிய முடிவை எடுப்பதற்கு முன், மூத்தத் தலைவர்கள் பத்து பேரிடம் விவாதிப்பார் கருணாநிதி. அனைத்தையும் கேட்டுக் கொண்டு, பதினோன்றாவதாகப் புதிய யோசனை ஒன்றைச் சொல்வார். 'எவன் ஒருவன், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை யூகித்து, அதற்கு ஏற்றாற்போல கழகத்தை வழிநடத்துபவனோ அவனே நல்ல தலைவன்' என்பார். கருணாநிதியின் கூட்டணி நிலைப்பாடுகளும் மத்திய ஆட்சி தொடர்பான அவரது சிந்தனைகளும் அதையொட்டியே இருந்தன. டெல்லி மத்திய அரசிலும், அது தொடர்பான திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும்பாலான செய்திகளிலும் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் மட்டுமே தெரிவார். 'பி.ஜே.பி-யுடன் ஏன் கூட்டணி?' என்பது தொடர்பான விவாதத்தில் மட்டும் அவரே முன்வந்து விளக்கம் அளித்தார். 'பொதுநலனை மீறிச் செயல்பட்டால் உங்கள் கட்சியை விட்டு வெளியேறிவிடுவேன்' என்கிற பொது நோக்கம் கொண்ட அறிவிப்பை விடுத்த பிறகே, பி.ஜே.பி. கூட்டணியில் இணைந்தார் கருணாநிதி. மத்தியில் இருக்கும் கட்சியை எந்தவொரு மாநிலக் கட்சியும் தனது விரலசைவில் ஆட்டிவைத்ததாகச் சரித்திரம் இல்லை. 'தற்போதைய பி.ஜே.பி. ஆட்சியில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இல்லை' என்று சமீபகாலமாகப் பரவலாகப் பேசப்பட்டு வந்தாலும், அதே சிறுபான்மையினருக்கு மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி இருந்தபோது, எவ்வித பாதிப்பும் இல்லாமல் அவர்களுக்குரிய முக்கியத்துவத்தைக் கொடுத்ததற்கு கருணாநிதி பலவகைகளில் காரணமாக இருந்தார்.

கேள்வி: "நீங்கள் எழுதுவதையும், சிந்திப்பதையும் நிறுத்திக் கொண்டால் என்னவாகும்?”

கருணாநிதியின் பதில்: "உயிரே போய்விடும்". 

விகடனுக்கு ஒருமுறை அவர் அளித்த பேட்டியில் இப்படித்தான் குறிப்பிட்டிருந்தார். 

மத்திய அரசியலின் தவிர்க்கமுடியாத அங்கம்; மாநில அரசுகளுக்கான ஆட்சியியல் முன்னோடி; அறிவாலயத்தின் அறிவாயுதம் தற்போது சிந்திப்பதை நிறுத்திவிட்டது. அவர் சொன்னதுபோலவே நிரந்தர ஓய்வுக்குச் சென்றுவிட்டார். இந்த ஓய்வில் அமைதி நிலைக்கட்டும்!

https://www.vikatan.com/news/coverstory/133362-the-time-travel-of-karunanithi-as-a-leader-of-dmk.html

Link to comment
Share on other sites

தனது கல்லறையில் கருணாநிதி எழுதச் சொன்ன வாக்கியம்! #MissUKarunanidhi

 

எதிர்காலத்தைத் துல்லியமாகக் கணித்து, அதற்கேற்ற திட்டங்களை வகுத்த கருணாநிதி, தான் இறந்த பிறகு தன்னுடைய கல்லறையில் என்ன எழுத வேண்டும் என்பதையும் முன்பே அறிவித்திருக்கிறார்.

தனது கல்லறையில் கருணாநிதி எழுதச் சொன்ன வாக்கியம்! #MissUKarunanidhi
 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருவமான மு.கருணாநிதி மாலை சென்னைக் காவேரி மருத்துவமனையில் வயது மூப்பின் காரணமாகக் காலமானார். திமுக தொண்டர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் கருணாநிதி பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்த வண்ணமிருக்கின்றனர். 

மு.கருணாநிதியின் சிறப்புகளுள் அவரின் நினைவாற்றலையும் உடலைப் பேணியதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஏனெனில், பல்வேறு நேரங்களில் பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பழைய வரலாற்றுச் சம்பவங்களோடு கோத்து பதில் அளிப்பதில் அவருக்கு நிகர் அவரே! நெஞ்சுக்கு நீதி எனும் தன் வரலாற்று நூலில் அவர் எழுதியிருப்பவை, அவரின் வாழ்க்கையைத் தெரிவிப்பது மட்டுமன்றி தமிழ்நாட்டின் அரைநூற்றாண்டைப் புரிந்துகொள்ளவும் உதவும் ஆவணம். 

கருணாநிதி

 

 

தமிழகத்தின் கடைமடைப்பகுதியில் இருக்கும் திருக்குவளை எனும் சிறு கிராமத்தில் பிறந்து, 12 வயதில் மாணவ நேசன் எனும் பத்திரிகையை நடத்தினார். பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, அண்ணாவின் பேச்சால் கவரப்பட்டு அரசியல் நோக்கிப் பயணித்தவர். திரைப்பட வசனங்களால் மக்களின் மனத்தில் புதிய சிந்தனைகளை விதைத்தவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் படமான `பராசக்தி; கருணாநிதியின் எழுத்தோவியத்தில்தான் உருவானது. பெரியாரின் கருத்துகளைத் தமிழகம் முழுவதும் பரப்பியவர். பெரியாரோடு அண்ணா முரண்பட்டு வெளியேறினார். அப்போது அண்ணாவின் உற்ற துணையாக நின்று திராவிட முன்னேற்ற கழகம் உருவானதில் முதன்மையான பங்கு வகித்தார். அண்ணா ஆட்சி அமைக்கும்வரை தோளோடு தோளாகத் துணை நின்றவர். 1957 ம் ஆண்டு குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் வெற்றி வாகை சூடினார். அப்போது தொடங்கி 13 வது முறையாகத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தலில் வெற்றிகளைக் குவித்தார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, திமுகவைத் தலைமையேற்று சமூக நீதி தடத்தில் பயணிக்க வைத்தார். இந்திரா காந்தி எமர்ஜென்ஸியை அமல் படுத்தியபோது, இந்தியாவின் முதல் எதிர்ப்புக் குரல் தமிழகத்திலிருந்து வந்ததுதான் அது கருணாநிதியுடையது. 

 

 

இந்தியை எதிர்த்து, கல்லக்குடி ரயில் மறியல் போராட்டம் கருணாநிதியின் அரசியல் அடையாளங்களில் ஒன்று. மாநில சுயாட்சியை விட்டுக்கொடுக்காது மத்திய கூட்டாட்சியை வலியுறுத்தியதில் திறம்படச் செயல்பட்டவர் அவர். கடவுள் நம்பிக்கையற்ற பகுத்தறிவுவாதி என்றாலும் மக்களின் சமய உணர்வுகளுக்கு மதிப்பளித்தவர். ஐந்து முறை தமிழ்நாட்டு முதல்வராகப் பதவி வகித்ததில் எண்ணற்ற சாதனைகளைச் செய்தவர். குறிப்பாக, பெண்களுக்குச் சொத்தில் பங்கு, திருநங்கை வாரியம், செம்மொழி அந்தஸ்து எனப் பலரின் கவனத்திலும் வராத விஷயங்களை ஆராய்ந்து அதற்கு தீர்ப்பளித்தவர். அரவாணிகளை திருநங்கை என்றும், உடல் ஊனமுற்றவர்களை மாற்றுத்திறனாளி என்றும் அழைக்கப்படுவதற்கு இவரே காரணம். 

பரபரப்பான அரசியல் பயணம் நீடிக்க, தம் உடலைப் பாதுகாக்க வேண்டும் எனும் புரிதல் கொண்டவர். அதனால், விடியற்காலையில் எழுந்திருந்து யோகப் பயிற்சி, நடைப்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என ஓர் ஒழுங்கைக் கடைப்பிடித்தவர். வாழ்வின் இறுதி சில நாள் முன்வரை சுகர், ரத்த அழுத்தம் போன்றவை அவரை அண்டவே இல்லை. அவரின் வயதின் மூப்பின் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஓய்வில் இருக்க வேண்டியதாயிற்று. கடந்த இரு வாரங்களுக்கு முன் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நல்ல நிலையில் உடல்நிலைத் தேறிவந்த நிலையில், வயதின் மூப்பு காரணமாக நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார். 

எதிர்காலத்தைத் துல்லியமாகக் கணித்து, அதற்கேற்ற திட்டங்களை வகுத்த கருணாநிதி, தான் இறந்த பிறகு தன்னுடைய கல்லறையில் என்ன எழுத வேண்டும் என்பதையும் முன்பே அறிவித்திருக்கிறார். அது ''ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வுகொண்டிருக்கிறான்'.  

https://www.vikatan.com/news/tamilnadu/133382-words-that-should-be-written-on-karunanidhis-memorial.html

 

 

Link to comment
Share on other sites

‘இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா’- பெற்றதை திருப்பித்தர அண்ணாசதுக்கம் நோக்கி தம்பியின் இறுதிப்பயணம்

 

 
kd%207

அண்ணா மறைவில் கருணாநிதி அஞ்சலி- கோப்புப் படம்

 அண்ணா மறைந்தபோது பலரும் அஞ்சலி செலுத்தினாலும் கருணாநிதி எழுதிய கவிதை அனைவரையும் உருக வைத்தது. இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா என்று அப்போது கேட்டார்.  இரவல் பெற்றதை திருப்பித்தர அண்ணா சதுக்கம் நோக்கி அவரது இறுதி பயணம் தொடங்க உள்ளது.

அண்ணா தலைமையில் திமுக 1967-ல் ஆட்சியைப்பிடித்தது. இதுப்பற்றி நெஞ்சுக்கு நீதியில் கருணாநிதி பெரிதாக விவரித்து எழுதியிருப்பார். அதில் ‘‘பதவி ஏற்கும் முன் தலைவர்களை சந்தித்து வாழ்த்துப்பெற அண்ணாவுடன் ராஜாஜி, காமராஜர் உள்ளிட்ட எதிர்க்கட்சித்தலைவர்களை சந்திக்க சென்றோம்.

 

மாலை வாங்க காசில்லை, கையிலிருந்த பணத்தில் சில எழுமிச்சை பழங்களை வாங்கிக்கொண்டோம். அண்ணா தலைவர்களை சந்தித்தபின்னர் என்னைப்பார்ப்பார். நான் அவரிடம் யாரும் அறியாமல் என்னிடம் உள்ள எழுமிச்சை பழத்தை கொடுப்பேன். அவர் அதை தலைவர்கள் கையில் கொடுத்துவிடுவார்’’ என்று சுவைபட எழுதியிருப்பார்.

அடுத்த ஆண்டுகளில் அண்ணாவின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு தொண்டைப்புற்று நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அண்ணா 1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி மறைந்தார். நாடே சோகத்தில் மூழ்கியது. அண்ணாவிற்காக பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இரங்கல் செய்தி வாசித்தனர், ஆனால் கருணாநிதி அண்ணாவுக்காக எழுதிய கடைசி கவிதை மிகவும் உருக்கமானது. அது திமுக தொண்டர்களால் மிகவும் விரும்பி படிக்கப்பட்டது. கருணாநிதி தனது வாழ்க்கைப்பயணமாக நெஞ்சுக்கு நீதி எனும் நூலை பல பாகங்கள் எழுதினார். இதில் முதல் பாகம் முக்கியமானது.

அதில் அண்ணாவின் மறைவுச்செய்தியோடு முடித்திருப்பார். அந்த புத்தகத்தில் முடிவுரையாக இந்த கவிதையைத்தான் எழுதி முடித்திருப்பார். அவர் எழுதிய இதயத்தை இரவலாக தந்திடண்ணா கவிதை வரியில் இரவலாக தந்த இதயத்தை நான் வரும்போது திருப்பித்தருகிறேன் என முடித்திருப்பார்.

50 ஆண்டுகாலம் அண்ணாவின் இதயத்தை இரவல் பெற்ற தம்பி அதை திருப்பித்தரும் நேரம் நெருங்கியதால் தனது இறுதிப்பயணத்தை தொடங்க உள்ளார். இரவல் தர அண்ணனை நோக்கி செல்லும் அவரது பயணத்தில் அவரும் திரும்ப வரமாட்டார் என்பதுதான் திமுக தொண்டர்களின் வேதனை.

1969-ம் ஆண்டு அண்ணா மறைவின்போது கருணாநிதி எழுதிய அந்த கவிதாஞ்சலி:

‘‘பத்துச் சிலை வைத்ததினால் - அண்ணன் தமிழின்பால் வைத்துள்ள

பற்றுதலை உலகறிய அண்ணனுக்கோர் சிலை

சென்னையிலே வைத்தபோது..

ஆட்காட்டி விரல் மட்டும் காட்டி நின்றார்.

ஆணையிடுகிறார் எம் அண்ணா என்றிருந்தோம்

அய்யகோ; இன்னும்

ஓராண்டே வாழப்போகின்றேன் என்று அவர்

ஒர் விரல் காட்டியது இன்றன்றோ புரிகிறது!

எம் அண்ணா... இதயமன்னா...

படைக் கஞ்சாத் தம்பியுண்டென்று

பகர்ந்தாயே;

எமை விடுத்துப் பெரும் பயணத்தை ஏன் தொடர்ந்தாய்?

உன் கண்ணொளியின் கதகதப்பிலே வளர்ந்தோமே;

எம் கண்ணெல்லாம் குளமாக ஏன் மாற்றிவிட்டாய்?

நிழல் நீதான் என்றிருந்தோம்; நீ கடல்

நிலத்துக்குள் நிழல் தேடப் போய்விட்டாய்: நியாயந்தானா?

நான்தானடா நன்முத்து எனச் சொல்லி

கடற்கரையில் உறங்குதியோ?...

நாத இசை கொட்டுகின்ற

நாவை ஏன் சுருட்டிக் கொண்டாய்?

விரல் அசைத்து எழுத்துலகில்

விந்தைகளைச் செய்தாயே; அந்த

விரலை ஏன் மடக்கிக் கொண்டாய்?

கண்மூடிக் கொண்டு நீ சிந்திக்கும்

பேரழகைப் பார்த்துள்ளேன்.. இன்று

மண் மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல்

தடுப்பதென்ன கொடுமை!

கொடுமைக்கு முடிவுகண்டாய்; எமைக்

கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?

எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்:

இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?

கடற்கரையில் காற்று

வாங்கியது போதுமண்ணா

எழுந்து வா எம் அண்ணா

வரமாட்டாய்; வரமாட்டாய்,

இயற்கையின் சதி எமக்குத் தெரியும் - அண்ணா நீ

இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்

இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா..

நான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை

உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா?’’- கருணாநிதி( 03/02/1969)

https://tamil.thehindu.com/tamilnadu/article24632334.ece

Link to comment
Share on other sites

கருப்புக் கண்ணாடியும், மஞ்சள் சால்வையும் கருணாநிதியின் அடையாளமானது எப்படி?

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் மு.கருணாநிதி

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியின் அடையாளமாக கருதப்படுவைகளில் கருப்புக்கண்ணாடியும், மஞ்சள் சால்வையும் அடங்கும்.

இவற்றை அவர் எப்போதிலிருந்து அணிய ஆரம்பித்தார், ஏன் அணிகிறார் என்பது போன்ற கேள்விகளுக்கு இந்த தொகுப்பு விடை அளிக்கும்.

மஞ்சள் துண்டிற்கான காரணம்?

கருணாநிதி வழக்கமாக வெள்ளைத் துண்டு அணியும் வழக்கமுடையவர். 1994ஆம் ஆண்டுக்குப் பிறகே அவர் மஞ்சள் துண்டு அணிய ஆரம்பித்தார். 1994ஆம் ஆண்டில் அவருடைய கன்னத்தில் சிறிய வீக்கம் ஏற்பட்டது. அவருடைய உமிழ்நீர்ச் சுரப்பியில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாகவே இது ஏற்பட்டது. ஆகவே அந்தப் பகுதியை கததகப்பாக வைத்துக்கொள்ள சால்வை ஒன்றை அணிந்தால் நல்லது என மருத்துவர்கள் தெரிவித்தனர். அப்போது அவர் அணிந்த சால்வை மஞ்சள் நிறத்தில் இருந்தது.

அது அவருக்கு நன்றாக இருப்பதாகவும் தனி அடையாளத்தைப் போல இருப்பதாகவும் உறவினர்களும் நண்பர்களும் கூறவே அவர் அதனைத் தொடர்ந்து அணிய ஆரம்பித்தார்.

மூடநம்பிக்கையின் காரணமாக கருணாநிதி இந்த வண்ணத்தில் துண்டை அணிவதாக கூறப்படுவது குறித்து பல பேட்டிகளில் கேள்வியெழுப்பப்பட்டபோது, இதைப் பற்றி ஓஷோ எழுதியதை கருணாநிதி மேற்கொள் காட்டியிருக்கிறார். "தன்னியல்பை ஆள்பவர் எவரோ, ஒளியும் தெளிவும் உண்மையுமானவர் எவரோ - அவரே மஞ்சளாடை அணியலாம்". .

கருணாநிதி

அவர் கண்களில் என்ன பிரச்சனை? ஏன் கருப்புக்கண்ணாடி அணிகிறார்?

1953ஆம் வருடத்தில் பரமக்குடியிலிருந்து திரும்பி வரும்போது கருணாநிதி வந்த கார் திருச்சிக்கு அருகில் ஒரு மைல் கல்லில் மோதி விபத்திற்குள்ளானது. அந்த விபத்தில் கருணாநிதியின் இடது கண்ணிற்குச் செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டது. 12 முறை அந்தக் கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. பிறகு 1967ஆம் ஆண்டு செப்டம்பரில் மீண்டும் ஒரு கார் விபத்தில் கருணாநிதி சிக்கியபோது, இடது கண் மேலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு கண்ணில் தொடர் வலி நீடித்தது. 1971ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்குப் பிறகே கருணாநிதி கண்ணாடி அணிய ஆரம்பித்தார். முழுவதுமாக கண்ணை மறைக்கும்படி கண்ணாடி அணிந்திருந்த கருணாநிதி 2000த்தின் முதல் பத்தாண்டுகளின் முற்பகுதியில் கண் வெளியில் தெரியும்படியான கண்ணாடியை அணிய ஆரம்பித்தார்.

எம்.ஜி.ஆருடன் கருணாநிதி Image captionஎம்.ஜி.ஆருடன் கருணாநிதி

எம்.ஜி.ஆரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டாரா கருணாநிதி?

ஈரோடு மாவட்டம் சென்றிருந்த கருணாநிதி, எம்ஜிஆர் இறந்த தினத்தன்று அதிகாலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினார். அவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் ரயில் நிலையத்திலிருந்து வரும் வழியில் மாலை வாங்கிக்கொண்டு எம்ஜிஆரின் உடல் வைக்கப்பட்டிருந்த ராமாவரம் தோட்டத்திற்குச் சென்றார். முன்னாள் அமைச்சர் மாதவன் அவரை உள்ளே அழைத்துச் சென்றார். பிறகு எம்.ஜி.ஆரின் உடலுக்கு கருணாநிதி அஞ்சலி செலுத்தினார்.

"நான் அவ்வாறு முடிவெடுத்து உடனடியாகச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தியிருக்காவிட்டால் பின்னர் நான் சென்றிருக்கவே முடியாது. அந்த அளவுக்கு இரு கட்சிகளிடையே காழ்ப்புணர்ச்சி பரவியிருந்தது" என இதனை நினைவுகூர்ந்தார் கருணாநிதி.

ஆனால், எம்.ஜி.ஆரின் மறைவை அடுத்து வெடித்த வன்முறையில் சென்னை மவுண்ட் ரோட்டில் இருந்த கருணாநிதியின் சிலை நொறுக்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/india-45121404

Link to comment
Share on other sites

கருணாநிதி விட்டுச்சென்றுள்ள பாரம்பரியம் என்ன?

 

ஒரு முறை சென்னையில் உலகின் மிகப்பெரும் பணக்காரராக இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அந்த சந்திப்புக்குப் பிறகு, உலகிலேயே மிகவும் பணக்கார மனிதர் அவரை வீடு தேடி வந்து சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

kalaignar karunanidhi dmk

"என்னிடம் கொஞ்சம் கடன் வாங்குவதற்காக அவர் வந்தார்," என்று கருணாநிதி உடனடியாக பதிலளித்தார்.

தனது பொது வாழ்க்கை முழுமைக்கும் கருணாநிதி கொண்டிருந்த தன்னம்பிக்கையின் அளவு இது.

பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்து, தமிழ்நாட்டை ஐந்து முறை ஆட்சி செய்த கருணாநிதி தாம் போட்டியிட்ட 13 சட்டமன்றத் தேர்தல்களில் ஒன்றில்கூட தோல்வியடைந்ததில்லை. ஏழு தசாப்தங்கள் பொது வாழ்வில் பங்களித்த மிகச் சில அரசியல் தலைவர்களில் கருணாநிதியும் ஒருவர்.

இரண்டு ஆயுதங்களைக் கொண்டுதான் அவர் அரசியலில் நுழைந்தார். ஒன்று அவரது பேச்சுத் திறமை, இன்னொன்று எழுத்துத் திறமை. அப்போது அவரிடம் பண பலமும் இல்லை, அதிக படிப்பும் இல்லை.

கருணாநிதிக்கு முன்பு திமுகவின் முன்னணி தலைவர்களாக இருந்த அண்ணாதுரை, மதியழகன் உள்ளிட்டோர் அப்போதே முதுகலை பட்டம் பெற்றவர்களாக இருந்தனர். ஆனால், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய கருணாநிதி அவர்களைவிட அதிக நூல்களை எழுதினார். எழுத்து மீதான அவரது தீராக் காதல் அவரை பல உயரங்களுக்கு அழைத்துச் சென்றது.

17 வயதிலேயே இந்தித் திணிப்புக்கு எதிராக மாணவர்களை ஒன்று திரட்டிய கருணாநிதி, தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற மாணவர் அமைப்பைத் தொடங்கினார்.

கருணாநிதி தனது அரசியல் ஆசானான அண்ணாவை 1940களில் சந்தித்தார். பெரியார் உடன் உண்டான கருத்து வேறுபாட்டால், திமுக எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியபோது, அண்ணாவுக்கு நெருக்கமான, நம்பிக்கைக்குரிய தளபதியானார். கட்சியின் பிரசாரக் குழுவின் உறுப்பினராக மட்டுமல்லாது, கட்சியின் முக்கிய சக்தியாகவும் திகழ்ந்தார்.

kalaignar karunanidhi dmk

சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முதல் தேர்தல் 1952இல் நடந்தபோது, அதில் திமுக பங்கேற்கவில்லை என்றாலும், தவிர்க்க முடியாத தலைவராகவே கருணாநிதி இருந்தார். 1967 தேர்தலில் வென்று திமுக ஆட்சியமைத்தபோது, கருணாநிதி ஏற்கனவே 10 ஆண்டு கால சட்டமன்ற அனுபவம் உள்ளவராகத் திகழ்ந்தார்.

1969இல் அண்ணாவின் மறைவுக்கு பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்ற கருணாநிதி, சந்தை மற்றும் சமூக நலன் ஆகியவற்றை ஒருங்கிணைத்த தொலைநோக்கைக் கொண்டிருந்தார்.

தமிழ்நாடு தொழில்துறையில் முன்னேற வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், அதற்கு சாமானியர்களின் நலனை விலையாகக் கொடுக்கவில்லை.

சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் மட்டுமே செயல்பட்டு வந்த பொது விநியோகத் திட்டத்தை அவர் மாநிலம் முழுமைக்கும் பரவலாக்கினார். மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தியதன்மூலம், தமிழகத்தில் பட்டினிச்சாவு இல்லாத ஒரு சூழலை உறுதிசெய்தார்.

அவரது அனைத்து செயல்பாடுகளுக்கும் சமூக நீதியே அடித்தளமாக இருந்தது என்கிறார் மூத்த ஊடகவியலாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம்.

kalaignar karunanidhi dmk

தேசிய அரசியலுக்கு கணிசமான பங்களிப்பை வழங்கியிருந்தாலும், தேசிய அரசியலில் தமக்கென ஓர் இடத்தைப் பிடிக்க அவர் எப்போதுமே முயன்றதில்லை. தமக்கு பிரதமர் ஆவதற்கான சூழல் வந்தபோதும், அப்பதவிக்கு அவர் பிறரையே தேர்வு செய்தார். பிரதமர் பதவி குறித்த கேள்வி எழுப்பப்பட்டபோதெல்லாம், 'என் உயரம் எனக்குத் தெரியும்,' என்று அவரே பல தருணங்களில் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

1969இல் காங்கிரஸ் கட்சி ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என பிளவு பட்டபோது, தன் வசம் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த அவர் இந்திரா காந்தியின் பக்கம் நின்றார். அதே ஆண்டு சில மாதங்களுக்கு முன்பு அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்ட கருணாநிதி குறித்து பேசிய இந்திரா, 'அவர் ஒரு மோதல் போக்குடையவர் என்று கேள்விப்பட்டன்,' என்று கூறி இருந்தார். அந்த மோதல் போக்குடையவர்தான் இந்திராவைக் காப்பாற்ற வந்தார்.

கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக தமது சொந்த வேட்பாளரை, 1969 குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்திரா களமிறக்கினார். அப்போதும் கருணாநிதி இந்திரா காந்திக்கு ஆதரவளித்தார்.

மத்தியில் அரசு நிலையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினாலும், ஒரே இடத்தில் அதிகாரம் குவிக்கப்படுவதை கடுமையாக எதிர்த்தார்.

kalaignar karunanidhi dmkபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமுன்னாள் பிரதமர் வி.பி.சிங் (இடது ஓரம்), ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் (இரண்டாவது இடது) ஆகியோருடன் கருணாநிதி.

ராஜிவ் காந்தியிடம் இருந்து விலகி வந்தபின், தேசிய முன்னணி அரசை வி.பி.சிங் அமைத்தபோது, ஆட்சியமைப்பதில் கருணாநிதி முக்கியப் பங்காற்றினார். தமிழக நலன்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்த காவிரி நடுவர் மன்றம், இலங்கையில் இருந்து இந்திய அமைதிப்படையை திரும்ப அழைத்தல் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கிய மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்ப்படுத்துதல் ஆகியவற்றை அப்போது கருணாநிதி உறுதி செய்தார்.

வி.பி.சிங் பதவி விலகிய பின்னும், தேவ கௌடா மற்றும் ஐ.கே.குஜ்ரால் ஆகியோரை பிரதமராகத் தேர்வு செய்வதில் முக்கியப் பங்காற்றினார்.

மதவாத சக்திகளுக்கு எதிராக போரிடுபவராக மட்டுமே அறியப்பட்ட கருணாநிதி, 1999இல் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். ஆனால், ராமர் கோயில் விவகாரத்தை கையில் எடுக்க மாட்டோம் எனும் உத்தரவாதத்தை பாரதிய ஜனதாவிடம் வாங்கிக்கொண்டார். தங்கள் அரசியலின் முக்கிய நோக்கமாக இருக்கும் ஒன்றைச் செய்ய மாட்டோம் என்று ஒரு தேசிய கட்சி மாநில கட்சி ஒன்றிடம் உத்தரவாதம் அளிப்பது வழக்கத்துக்கு மாறானது.

kalaignar karunanidhi dmkபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionதேவ கௌடாவை (வலது) பிரதமர் ஆக்கியத்தில் கருணாநிதி முக்கிய பங்காற்றினார்

ராமர் எனும் கடவுள் இருந்ததே இல்லை. அது ஒரு புராணக் கதை மட்டுமே என்றும் கூறி கருணாநிதி பாரதிய ஜனதா மற்றும் அதை ஆதரிக்கும் வலதுசாரி அமைப்பினரின் கோபத்துக்கு உள்ளானார்.

முதலமைச்சர் போன்ற ஓர் உயரிய அரசியல் சாசன பொறுப்பில் அமர்ந்துகொண்டு, ராமர் குறித்து அவர் அவ்வாறு கூறியிருக்கக்கூடாது என்று எல்.கே.அத்வானி கண்டித்தார். ஆனால், கருணாநிதி தன் கூற்றுக்கு ஆதரவாக நேரு கூறியதை சுட்டிக்காட்டினார்.

"திராவிடர்கள் மீது தங்கள் மேலாதிக்கத்தை செலுத்துவதற்காக இட்டுக்கட்டப்பட்ட கதையே ராமாயணம் என்று கூறிய ஜவாஹர்லால் நேருவைவிடவும், ராமரைக் காக்க வருபவர்கள் ஒன்றும் பெரியவர்கள் அல்ல," என்று கருணாநிதி அப்போது கூறினார்.

2001ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பேசியபோது, தாம் ஏன் அக்கூட்டணியில் சேர்ந்தேன் என்று கருணாநிதி கூறினார். "வாஜ்பாய் உடனான நட்பில் வெல்வதற்காக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகளில் இருக்கும் நண்பர்களை நான் இழக்க வேண்டியுள்ளது என்றால் அதற்கு காரணம் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்ட நாங்கள் 1975இல் ஒன்றாகப் போராடிய அவசர நிலை நாட்களில் இருந்தே நாங்கள் நட்பில் உள்ளோம்," என்றார் கருணாநிதி. "எனக்கு பாரதிய கட்சியைவிட அதன் தலைமை பொறுப்பில் யார் உள்ளார்கள் என்பதே முக்கியம்."

2003இல் திமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியது. வாஜ்பாயை போல அத்வானி தமிழர்களுக்கு அனுசரணையாக இல்லை என்று அப்போது கூறினார்.

பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவராக இருந்தாலும் தம் திறமைகள் குறித்து எப்போதுமே அவர் குறைவாக நினைத்ததில்லை. இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாக இல்லாதபோதும் தேசியத் தலைவர்களுடன் மிகவும் மிடுக்குடன் நடந்துகொண்டார். அவர்கள் அரசியலில் தாக்குப்பிடிக்க தாம் மிகவும் முக்கியம் என்பதை அவர்களுக்கு உணர்த்தினார்.

kalaignar karunanidhi dmkபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionதேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கருணாநிதி

பாஜகவிடம் இருந்து விலகியதும் காங்கிரஸ் கட்சியுடன் இணக்கத்துடன் நெருங்கி, காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைவதில் முக்கிய பங்காற்றினார்.

சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் அறிவுரை வேண்டி அடிக்கடி கருணாநிதியை நாடியுள்ளதாக பல முறை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

"அவர் அரை நூற்றாண்டு காலமாக பொது வாழ்வில் உள்ளார். அவரது அனுபவமும் அறிவும் நாட்டை நிர்வகிப்பதில் உதவுவது எங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டவசமானது," என்று மன்மோகன் சிங் கூறினார்.

2014இல் மோதி பதவியேற்றபோது உள்ளார்ந்த நுண்ணறிவு, கடுமையான உழைப்பு ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் உயர் பொறுப்பை அடைந்துள்ளீர்கள் என்று கூறினார் கருணாநிதி.

1996 முதல் 2014 வரை, அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த 13 மாதங்கள் நீங்களாக, திமுக மத்திய அரசில் அங்கம் வகிக்க கருணாநிதியின் அரசியல் நுட்பம் காரணமாக இருந்தது.

மாநில சுயாட்சி

மாநில அரசுகள் அதிக தன்னாட்சி அதிகாரம் பெறுவதிலும், மத்திய - மாநில அரசுகளின் உறவை வரையறுப்பதிலும் கருணாநிதி முக்கியப் பங்காற்றினார். 1969இல் ராஜமன்னார் கமிட்டி அமைத்தது அதில் முக்கியமான ஒன்று.

மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் ஒன்றை அமைக்கவும், மத்திய அரசு மாநில அரசைக் கலைக்க அதிகாரம் வழங்கும் இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 365ஐ ஒழிக்கவும் அந்த கமிட்டி பரிந்துரை செய்தது. மத்திய அரசு அந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், மாநில சுயாட்சியை விட்டுக்கொடுக்காதவராகவே கருணாநிதி விளங்கினார்.

குடும்ப அரசியல்

சமூகத்துக்கு கருணாநிதி ஆற்றிய பங்களிப்புக்கு போற்றப்பட்டாலும், குடும்ப அரசியல் ஈடுபட்டதாக மிகவும் விமர்சிக்கப்பட்டார். அதை முற்றிலும் ஒதுக்கிவிடவும் முடியாது.

kalaignar karunanidhi dmkபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

தனது இறுதிக்காலம் வரை ஸ்டாலினை கட்சித் தலைவராகவோ, முதலமைச்சராகவோ ஆக்காவிட்டாலும், ஸ்டாலினின் மூத்த சகோதரர் அழகிரி, இளைய சகோதரி கனிமொழி ஆகியோரை அரசியலுக்கு கொண்டுவந்தது, தனது அக்காள் மகன் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறனை மத்திய அமைச்சர் ஆக்கியது ஆகியவற்றுக்கு திமுகவால் எவ்வகையிலும் நியாயம் கற்பிக்க முடியவில்லை. அவர்களின் அரசியல் பங்களிப்பும் இன்று வரை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் சகோதரர்களுக்கும் நடக்கும் அதிகாரப் போட்டிக்கு இடையிலும் கருணாநிதி சிக்கிக்கொண்டார். கருணாநிதி தனது அரசியல் வாரிசாக அறிவித்த ஸ்டாலின் தலைமை ஏற்பதற்கு எதிராக பேசிய அழகிரியை கட்சியை விட்டே நீக்கும் அளவுக்கு இது கருணாநிதியை இட்டுச் சென்றது.

'அறிவியல்பூர்வமான ஊழல்'

கருணாநிதி அறிவியல்பூர்வமாக அல்லது மதிநுட்பத்துடன் ஊழல் செய்வார் என்று அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை திமுக வன்மையாக மறுக்கிறது. சென்னை மாநகரில் மேம்பாலங்கள் கட்டுவதில் ஊழல் நிகழ்ந்ததாக 2001இல் ஜெயலலிதா அரசால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்களாக பார்க்கப்பட்டது.

kalaignar karunanidhi dmkபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

எனினும், 2ஜி வழக்கில் அவரது கட்சியைச் சேர்ந்த, அமைச்சராக இருந்த ஆ.ராசா மற்றும் அவரது மகள் கனிமொழி ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விசாரணை நீதிமன்றம் விடுவித்தால், அது திமுகவுக்கு கடுமையான சேதாரத்தை உண்டாக்கியது.

அடுத்து வந்த பொதுத் தேர்தல், அதைத் தொடர்ந்து வந்த தேர்தல்களிலும் திமுக தோல்வியை சந்திக்க அது முக்கிய காரணமாக இருந்தது. அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் கருணாநிதி சிக்கல்களை எதிர்கொள்ள இது வழிவகுத்தது.

இலங்கை தமிழர் பிரச்சனை

உலகத் தமிழர்களின் தலைவராக போற்றப்பட்டாலும், இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்ததாக கருணாநிதி குற்றச்சாட்டுக்கு உள்ளானார். 2009இல் இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க கருணாநிதி எதையும் செய்யவில்லை என்று கருணாநிதி விமர்சிக்கப்பட்டார்.

உண்மையில் போர் நிற்காதபோதும், போர் நின்றதாக காங்கிரஸ் தலைவர்கள் தம்மை ஏமாற்றியதாக கருணாநிதி உணர்ந்ததாக திமுக செய்தித்தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார். எனினும், இதுவரை பலரும் இதை நம்பத் தயாரக இல்லை. அவர் இறப்புக்கு பிறகும் இது சமூக வலைத்தளங்களில் பிரதிபலிக்கிறது.

உச்ச நட்சத்திரம்

அரசியலில் பல மன்னர்களை உருவாக்கியவராக மட்டுமல்லாது திரைத் துறையிலும் கருணாநிதி ஒரு உச்ச நட்சத்திரமாகப் பார்க்கப்பட்டார்.

kalaignar karunanidhi dmk

1949-50இல் கருணாநிதி கதை - வசனம், எழுதிய மந்திரி குமாரி படம் எம்.ஜி.ஆரை வெள்ளித் திரையில் நட்சத்திரம் ஆக்கியது. பராசக்தி படத்துக்கு கதை - வசனம் எழுதி சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகிய இருவரை நட்சத்திரங்கள் ஆக்கினார்.

1954இல் இன்னொரு வெற்றிப் படமான மனோகரா படத்துக்கு கதை - வசனம் எழுதினார். அந்தப் படத்துக்கு எழுதிய திரைக்கதையை புத்தகமாக வெளியிட்டு கிடைத்த பணத்தில், தம் முதல் குழந்தை என்று அவர் கூறிய, கட்சி ஏடான முரசொலிக்கு அச்சகம் ஒன்றை வாங்கினார். அவரது இறப்புச் செய்தியை சுமந்து கொண்டு முரசொலி இதழும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்படும்போது அவருக்கு அருகிலேயே வைக்கப்பட்டிருந்தது.

மரணத்துக்குப் பிறகும், தான் இறுதியாக ஓய்வெடுக்கும் இடத்துக்காகத் தாம் போராட வேண்டும் என்று கருணாநிதி எதிர்பார்த்திருக்க மாட்டார்.

தனது தொண்டர்களுக்கு முரசொலியில் கருணாநிதி இவ்வாறு எழுதுவார், "வீரன் சாவதே இல்லை! கோழை வாழ்வதே இல்லை!"

https://www.bbc.com/tamil/india-45116563

Link to comment
Share on other sites

அரசியல் குடைக்குக் கீழே மழைத் தமிழ்: கருணாநிதி 25

 

 
102719670karunanidhi9jpg

பெரியார், எம்.ஜி.ஆர், அண்ணாவுடன் கருணாநிதி   -  BBC

திமுக தலைவர் கருணாநிதி வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களின் தொகுப்பு.

* கருணாநிதி தலைமையில் ஒரு கவியரங்கம். அதில் கவிக்கோ அப்துல் ரகுமான் உட்பட பிரபலமான ஏழெட்டு கவிஞர்கள் கவிதை வாசித்தார்கள். கவியரங்கின் நிறைவு கவிதையை வாசித்த கருணாநிதி இப்படி முடித்தார்:

       
 

‘‘வெற்றி பல பெற்று

விருது பெற நான் வரும்போது

வெகுமானம் எதுவேண்டும்

எனக் கேட்டால்...

அப்துல் ரகுமானைத் தருக என்பேன்’’

* கலைஞர் உடல் நலக்கோளாறால் ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரை பரிசோதித்த டாக்டர் “மூச்சை நல்லா இழுத்துப் புடிங்க” என்று சொல்லியுள்ளார். உடனே கலைஞர் மூச்சை இழுத்துப் பிடித்துள்ளார்.

அடுத்து டாக்டர் “இப்போ மூச்சை விடுங்க” என்று சொல்லியுள்ளார்.

உடனே கலைஞர் சொன்னாராம் இப்படி: “மூச்சை விடக்கூடதுன்னுதானே டாக்டர் நான் உங்கள்ட்ட வந்திருக்கேன்!”

* வெளிநாட்டில் இருந்து வந்த நிருபர் ஒருவர் கருணாநிதியிட, ‘‘நீங்கள் என்ன படித்தீர்கள்?’’ என்றார்.

‘‘எம்.ஏ., பி.எஃப்.’’ என்றார்.

‘‘அப்படி ஒரு படிப்பா?’’

‘‘மார்ச் அட்டம்ப்ட்... பட்.. ஃபெயில்’’ என்றார் கருணாநிதி.

* கவிஞர் கண்ணதாசன் தி.மு.க.வில் இருந்தபோது கலைஞர் அவரிடம் “தேர்தலில் இந்த தடவை எங்கே நிற்கப் போகிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அதற்கு கண்ணதாசன் ” எந்தத் தொகுதி கேட்டாலும் ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி மறுத்துவிடுகிறீர்கள். நான் இந்தத் தடவை தமிழ்நாட்டில் நிற்கப் போவதில்லை. பாண்டிச்சேரியில் நிற்கப் போகிறேன்” என்று சொன்ன அடுத்த நொடியே கலைஞர் சிரித்தபடியே ” பாண்டிச்சேரியில் உன்னால நிற்க முடியாதேய்யா!” சொல்ல, அதன் அர்த்தம் புரிந்த கவியரசர் வெடுத்து சிரித்தாராம்.

* ஒரு தடவை சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் முதல்வர் கருணாநிதியிடம் அப்துல் லத்தீப் ‘’ கூவம் ஆற்றில் முதலைகள் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அசுத்தத்தைப் போக்க கூவம் ஆற்றில் அரசு முதலைகள் விடுவது பற்றி ஆலோசிக்குமா?’’ என்று கேள்வி தொடுத்துள்ளார். அதற்கு முதல்வர் க ருணாநிதி சொன்ன பதில்: ’’ஏற்கெனவே அரசாங்கம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முதலை கூவம் ஆற்றில் போட்டு இருக்கிறது!’’

* கருணாநிதியின் மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த படம் ‘எங்கள் தங்கம்’. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் நடித்த இப்படத்துக்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன். இப்படத்தில் இடம்பெற்ற ‘நான் அளவோடு ரசிப்பவன்...’ என்ற பாடலை எழுதியவர் வாலி.பாடல் கம்போஸிங்கின்போது ‘நான் அளவோடு ரசிப்பவன்...’ என்கிற பல்லவியின் முதல் வரியை எழுதிய வாலிக்கு அடுத்த வரி அவ்வளவு எளிதாக பிடிபடவில்லை, மண்டையைப் போட்டு பிய்த்துக்கொண்டு இருந்த அந்த சமயத்தில் அங்கே கருணாநிதி வந்துள்ளார்.

அப்போது வாலியைப் பார்த்து கருணாநிதி ‘’என்ன வாலியாரே... என்ன கலக்கமாக இருக்கிறீர்?’’ என்று கேட்டுள்ளார்..

‘’நான் அளவோடு ரசிப்பவன்னு பல்லவியோட முதல் வரியை எழுதிட்டேன். அடுத்த வரி சிக்க மாட்டேங்குது’’ என்று சொல்லியுள்ளார் வாலி. அதைக் கேட்டவுடனேயே கருணாநிதி சொன்னாராம்: ‘’நான் அளவின்றி கொடுப்பவன்’ன்னு போடுய்யா!’’ என்றாராம்.

11jpg

கருணாநிதி | கோப்புப் படம் உதவி: முகநூல் பக்கம்.

 

* சட்டப்பேரவையில் சோனையா என்பவர் ’’தமிழ்நாட்டில் ஆபாசப் படங்களை, ஆபாசப் புத்தகங்களை வெளியிட்டதற்காக, எத்தனை பேர் மீது வழக்கு போடப்பட்டு இருக்கிறது? அதில் தண்டிக்கப்பட்டவர்கள் யார் யார் என்கிற விவரத்தை தெரிந்த்துகொள்ள விரும்புகிறேன்!’’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு கருணாநிதி பதில் சொன்னார்: ’’தமிழ்நாட்டில் ஆபாசப் படங்களை, ஆபாசப் புத்தகங்களை வெளியிட்டதற்காக, பல பேர்மீது வழக்கு போடப்பட்டு இருக்கிறது. ஆனால், அந்த விவரங்களை எல்லாம் விளக்கமாகக் கூறி, சட்டப்பேரவை உறுப்பினர்களிடையே... அந்த ஆபாசப் படங்களை வாங்கிப் பார்க்க வேண்டும், ஆபாசப் புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்ட விரும்பவில்லை!’’ என்றார்

* ஒரு ஹாக்கிப் போட்டி. போட்டியைக் கண்டுகளித்து, அப்போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு கருணாநிதி பரிசளிக்க வந்திருந்தார். அவ்விளையாட்டில் இரண்டு அணிகளுமே சமமான கோல் போட்டிருந்தன, எனவே, டாஸ் போட்டுப் பார்க்கப்பட்டது. அவ்வாறு டாஸ் போட்டுப் பார்த்தபோது தலை கேட்ட அணி தோற்றுப்போனது. பூ கேட்ட அணி வெற்றிபெற்றது.

பரிசளிக்க வந்த கருணாநிதி பேசினார் இப்படி:

“இது நாணயமான வெற்றி. நாணயத்தால் தீர்மானிக்கப்பட்ட வெற்றி. தலை கேட்டவர்கள் வெற்றிவாய்ப்பை இழந்துவிட்டார்கள். ஏனெனில் - ’தலை’ கேட்பது வன்முறை அல்லவா?’’

mgr
 

* ஒரு தடவை சட்டப்பேரவை உறுப்பினர் வி.பி. துரைசாமி: ’’ஆஞ்சநேயர் கோயிலில் அசையும் சொத்து எவ்வளவு? அசையா சொத்து எவ்வளவு?’’ என்கிற கேள்வியை முன் வைத்தார். அதற்கு கருணாநிதி சொன்ன பதில் இது: ‘’அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து ஆஞ்சநேயர்!

* எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் ஒரு உறுப்பினர், ‘‘இப்படியே போனால் தமிழகத்தை ஆண்டவந்தான் காப்பாற்ற முடியும்’’ என்றார்.

‘‘தமிழகத்தை ஏற்கெனவே ஆண்டவன் நான். உறுப்பினர் என்னைத்தான் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன்’’ என்றார் கருணாநிதி.

*’’திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்படி வந்தது?’’ என்று கருணாநிதியிடம் ஒரு பத்திரிகையாளர் கேள்வி ஒன்றை முன் வைத்தார்.

அதற்கு அவர் சொன்ன பதில்:

24.03.1960 அன்று சட்டப் பேரவையில் ’அஞ்சல் தலைகளுக்கு என்று ஓவியர் வேணுகோபால் சர்மா வரைந்த திருவள்ளுவர் ஓவியத்தைச் சட்டமன்றத்தில் வைக்கும் உத்தேசம் அரசாங்கத்துக்கு உண்டா?’ என்று நான் கேட்டேன். என்னுடைய கேள்விக்கு - பெரியவர் பக்தவத்சலனார், ’சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்கள் அம்மாதிரி ஒரு படத்தை இங்கு சமர்ப்பிக்க முன்வந்தால், கனம் சபாநாயகர் அவர்கள் அதைப் பற்றி யோசிப்பார்கள்’ என்று பதில் கூறினார். அந்த பதிலின் காரணமாகத்தான் சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் 22.3.1964 அன்று அன்றைய குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் அவர்களால் திருவள்ளுவர் படம் திறந்து வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் தி.மு.கழக ஆட்சியில் பேருந்துகள், அரசு விருந்தினர் மாளிகைகளில் திருவள்ளுவர் படங்களை வைக்கத் தொடங்கி, வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் அய்யன் வள்ளுவர் சிலை வைக்கும் அளவு வளர்ந்தது!’’ என்றார்

karunanidhijpg

கருணாநிதி | கோப்புப் படம்.

* திருவாரூரில் கருணாநிதி படித்த பள்ளிக்கூடத்தில் அவரோடு படித்தவர்கள் மற்றும் அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் எல்லாம் இணைந்து ஒரு விழா நடத்தினார்கள். அந்த விழாவில் கலந்துகொண்ட கருணாநிதிக்கு விழா குழுவினர் ஒரு சின்னஞ் சிறு தஞ்சாவூர் தட்டை பரிசாக அளித்தார்கள்.

அப்போது தஞ்சாவூரில் இடைத்தேர்தல் நடந்து முடிந்திருந்தது. அதில் திமுக வெற்றிவாய்ப்பை இழந்திருந்தது. ஏற்புரையில் பேசும்போது கருணாநிதி சொன்னார்: இவ்வளவு சிறிய அளவு தஞ்சாவூர் தட்டை எங்கிருந்து வாங்கினார்கள் என்று தெரியவில்லை. தஞ்சாவூர் இடைத் தேர்தலில் நமது கழக வெற்றிவாய்ப்பை ஒரு தட்டு தட்டிப் போனதற்காக இந்தத் தட்டை பரிசளித்திருப்பார்கள் என நினைக்கிறேன். இருந்தாலும் இது சின்னத் தட்டுதான்!’’ என்றபோது அரங்கம் அதிர்ந்தது.

* கருணாநிதி, கவிஞர் வைரமுத்து, டி.ஆர்.பாலு மூன்று பேரும் காரில் சென்றுகொண்டிருந்தனர். காரில் ஏறி உட்கார்ந்தபோது வைரமுத்துவின் ஜிப்பா மேல் டி.ஆர்.பாலு உட்கார்ந்துவிட்டார். இது இருவருக்குமே தெரியாது. இறங்கும்போது வைரமுத்துவின் ஜிப்பா சிறிது கிழிந்துவிட்டதாம். அதை பார்த்த கருணாநிதி அடித்த கமெண்ட் இது: ‘’மத்திய மந்திரி டி.ஆர்.பாலு என்னத்த கிழிச்சார்னு இனிமே யாரும் கேள்வி கேட்க முடியாது!’’

* ஒரு தமிழ் விழாவில் கவியரங்கம் நடைபெற்றது. கருணாநிதி தலைமை கவிஞராக இருந்து அந்தக் கவியரங்கத்தை வழிநடத்தினார். அந்தக் கவியரங்கத்தில் இலங்கை பிரச்சினையை மையமாக வைத்து கவிதை பாடிய கவிஞர் ஒருவர், கருணாநிதியைப் பார்த்து கலைஞர் அவர்களே எனக்கொரு துப்பாக்கித் தாருங்கள்’’ என்று ஆவேசத்துடன் முடித்தார். அப்போது கருணாநிதிவசம்தான் காவல்துறை இருந்தது. உடனே அவர் சொன்னார்: ’’கவிஞரே வேறு ஏதாவது பாக்கி இருந்தால் கேளுங்கள். துப்பாக்கி மட்டும் என்னால் தர இயலாது!’’

karuna1
 

* சட்ட சபையில் மீன் வளத்துறையை பற்றிய ஒரு விவாதத்தில் அந்தத் துறையைச் சேர்ந்த அமைச்சர் எழுந்து பேச ஆரம்பித்தார். மீன் வளத் துறை அமைச்ச எங்கே நீண்ட கருணாநிதியிடம் இருந்து ஒரு துண்டு சீட்டு அந்த அமைச்சருக்கு வந்தது. அதில் கருணாநிதி எழுதியிருந்தார் இப்படி: ’அயிரை மீன் அளவுக்குப் பேசவும்!’

* ஒருமுறை கலைஞருக்கு ஆளுயர மாலை அணிவிக்கிறார்கள். அதை ஏற்றுக்கொண்ட கலைஞர் “ஆளூயர மாலை நீங்கள் அணிவித்திருக்கிறீர்கள் ” என்று இரண்டுமுறை சொன்னார்.

“ஆள் உயர சைஸில் நீங்கள் மாலை அணிவித்திருக்கிறீர்கள் என்றும், ஆள் உயர்வதற்காக (வாழ்க்கையில்) நீங்கள் மாலை அணிவித்திருக்கிறீர்கள் என்றும் இருபொருள்படும்படி அவர் பேசியதை சுற்றிலும் இருந்தவர்கள் கேட்டு மகிழ்ந்தனர்.

* சட்டமன்றத்தில் ஒரு முறை டி.என். அனந்தநாயகி “என்னை சிஐடி. வைத்து அரசு வேவு பார்க்கிறது. சிஐடி போலீஸார் என்னைத் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள்” என்று குற்றம் சாட்டினார்.

அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி “உங்களுக்குத் தெரியும்படி உங்களைக் கண்காணிப்பவர்கள் எப்படி சிஐடி போலீஸாக இருக்க முடியும்?” என்று எதிர்கேள்வி கேட்டு அவரது வாயை அடைத்தார்.

mgr
 

* கருணாநிதி எழுதிய வசனத் தெறிப்புகளில் இதோ சில:

“எகிப்தியப் பேரழகி கிளியோபாட்ரா தமிழ்நாட்டு முத்துக்களைச் சாராயத்தில் போட்டுக் குடித்தாளாம்” - இது ‘பராசக்தி’.

“மிருக ஜாதியில் புலி மானைக் கொல்லுகிறது. மனித ஜாதியில் மான் புலியைக் கொல்லுகிறது” - இது ‘மருதநாட்டு இளவரசி’.

“வேலின் கூர்மையைச் சோதித்த விரல்கள் வஞ்சகியின் விரலை அல்லவா ரசித்துக்கொண்டிருக்கின்றன!” - இது ‘மனோகரா’.

“மனச்சாட்சி உறங்கும்போது மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பிவிடுகிறது” - இது ‘பூம்புகார்’.

“அவள் அழகை வர்ணிக்க ஆயிரம் நாவு படைத்த ஆதிசேசன்கூட கம்பனிடம் ஒன்றிரண்டு நாவை கடன் வாங்க வேண்டும்” - இது ‘ புதுமைப்பித்தன்’

* நடிகர் ராதா ரவி, தன் தந்தை எம்.ஆர்.ராதா நடித்த ரத்தக் கண்ணீர் நாடகத்தை நடத்த முன் வந்து , கருணாநிதியை அதற்கு தலைமைதாங்க அழைத்திருந்தார். கருணாநிதி ராதாரவி நடித்த அந்த நாடகத்தை முழுமையாக இருந்து பார்த்துவிட்டு, தனது பாராட்டுரையில் இப்படி பேசினார்:

‘‘நாடகத்தில் ஒப்பனையைப் பார்த்தேன். அதில் உங்கப்பனையே பார்த்தேன்’’ என்றார்>

* ‘சேரன் செங்குட்டுவன்’ ஓரங்க நாடகத்தின் ஒரு வசனம் எழுதியிருந்தார் கருணாநிதி. அந்த வசனம் திராவிட இயக்கத் தலைவர்களுக்கெல்லாம் கிரீடம் சூட்டும் வகையில் அமைந்தது.. அண்ணா, நெடுஞ்செழியன், ஆசைத்தம்பி, பி.எஸ். இளங்கோ, கண்ணதாசன், என்.எஸ். கிருஷ்ணன், இராம.அரங்கண்ணல் போன்ற அத்தனை தலைவர்களையும் ஒரே வசனத்தில் உள்ளடக்கியிருந்தார் கலைஞர்.

அந்த வசனம்: “சிங்கத் திருவிடமே உன்னை இகழ்ந்தார்கள். ஈடற்ற புலவனே இளங்கோ! ஆசைத்தம்பி! உன்னை இகழ்ந்தார்கள், நீதிக்கு உயிர்தந்த பாண்டியனே ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனே! உன்னை இகழ்ந்தார்கள், அரங்கின் அண்ணலே! உன்னை இகழ்ந்தார்கள், செந்தமிழ் வளங்குறையாச் சிங்க ஏறுகளே! அறிஞரே! கவிஞரே! கலைவாணரே! உம்மையெல்லாம் இகழ்ந்தார்கள். புறப்படுங்கள்! களத்திலே உங்கள் தலைகள் பறிபோகலாம். ஆனால் கனல் கக்கும் கண்களோடு அவை கொய்யப்படட்டும்!”

* முதன்முதலாக சட்டமன்றத்தில் கருணாநிதி பேசிவிட்டு உட்கார்ந்ததும், அவர் கையில் தரப்பட்ட காகிதத்தில் எழுதப்பட்டிருந்ததுஇப்படி: வெரி குட் ஸ்பீச் .

கருணாநிதி முதன்முறையாக அவர் சட்டமன்றத்துக்குள் சென்று, ‘நாடு பாதி; நங்கவரம் பாதி’ என்கிற தலைப்பில் நங்கவரம் விவசாயிகள் பிரச்னையை பற்றிப் பேசிவிட்டு உட்கார்ந்ததும், முதன்முறையாகக் கிடைத்த பாராட்டு வாசகம்தான் அது. இப்படி எழுதி அனுப்பியவர் அன்றைய சட்டப் பேரவைத் தலைவர் யு.கிருஷ்ணாராவ்.

* “தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே” என்று பேசிக் கொண்டிருந்த கருணாநிதியைப் பார்த்து, “கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை?” என்றார் டி.என்.அனந்தநாயகி. “கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்?” என்றார் கருணாநிதி.

mgr%203

* சட்டமன்றத்தில் “அடைந்தால் திராவிட நாடு; இல்லையென்றால் சுடுகாடு... என்றீர்களே. இப்போது சுடுகாட்டிலா உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார் கருத்திருமன். அப்படிக் கேட்டுவிட்டு அவர் உட்காருவதற்குள் கருணாநிதி பதில் சொன்னார்: ‘`இல்லை. உங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறோம்!”

* தமிழ் எனும் தங்கச் சீப்பு உங்கள் கையில் இருந்தும் என்ன பயன்? நீங்கள்தான் ஏற்கெனவே தமிழர்களை மொட்டையடித்து விட்டீர்களே!” - என்று சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் சொன்னார். அதற்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி உடனே எழுந்து ‘`தம்பி! என் கையில் இருப்பது உன்னைப் போன்ற சுருள் முடிக்காரர்களுக்கு சீவி விட” என்றார்.

* எம்.ஜி.ஆர் இறந்தபோது அண்ணா சாலையில் இருந்த கருணாநிதியின் சிலையை எம்.ஜி.ஆரின் தொண்டர் ஒருவர் இடித்தார். அந்தப் புகைப் படத்தை தன்னுடைய முரசொலியில் வெளியிட்டு, அதன் கீழே

‘‘பரவாயில்லை தம்பி...

என் முதுகிலே குத்தவில்லை..

நெஞ்சிலேதான் குத்துகிறாய்’’ எனப் பிரசுரித்திருந்தார்.

தொகுப்பு: மானா பாஸ்கரன்

https://tamil.thehindu.com/opinion/blogs/article24632710.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kalaignar karunanidhi dmk

இந்தப்படம் தமிழர்களிடம் பிரசித்தி பெற்றது.  

ஒரு காலத்தில் தமிழ், தமிழின அழிவுகள் என வரும்போது   இந்தப்படமும் கண்முன்னே நிறுத்தப்படும். மறக்க மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நேரம் நெடுமாறன் எழுதிய கருணா நிதியின் .........................புத்தகம் தேடிக்கொண்டு இருக்கிறன் 

Link to comment
Share on other sites

``எங்கள் வீட்டில் கலைஞர் ஆட்சி!’’ - கருணாநிதியின் `வாவ்’ கேள்வி - பதில்கள்

 

கலைஞரின் டைமிங் சென்ஸும் ஹியூமர் சென்ஸும் வேற லெவல். பத்திரிகையாளர்கள் சந்திப்போ தனித்த உரையோடலோ அவரின் சொல்லாடல்கள் வேற லெவல்!

``எங்கள் வீட்டில் கலைஞர் ஆட்சி!’’ - கருணாநிதியின் `வாவ்’ கேள்வி - பதில்கள்
 

சமயோசிதமும் நகைச்சுவை உணர்வும்தான் கலைஞர் கருணாநிதியின் அடையாளம்.

அதிநுட்பமான திறமையைத் தன்னகத்தே கொண்ட தலைவர் கலைஞர்தான். பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது அவர் அளித்த நகைச்சுவையான பதில்கள் இவை. கலைஞரின் பதில்கள் ஒவ்வொன்றும் துப்பாக்கியிலிருந்து வெளிவரும் தோட்டாவாக வந்தது சிறப்பு! 

கலைஞர் கருணாநிதி

 

 

கேள்வி: ``அம்மையார் ஜெயலலிதா சென்னையில் அமர்ந்துகொண்டே காணொலிக் காட்சி மூலம் தமிழகமெங்கும் கட்டடங்களைத் திறந்து வைக்கிறாரே?''

பதில் : ``ஸ்ரீரங்கத்தில் இருந்துகொண்டு சொர்க்கவாசலைத் திறந்துவிட்டோம் என்கிறார்களே... அதுபோல நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்!''

 

கேள்வி: ``சட்டமன்றப் பேச்சுக்கும் பொதுக்கூட்டப் பேச்சுக்கும் என்ன வித்தியாசம்?’’

பதில் : ``மனக்கணக்குக்கும் வீட்டுக்கணக்குக்கும் உள்ள வித்தியாசம்.’’

 

கேள்வி: ``செவ்வாயில் தண்ணீர் இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்களே?''

பதில்: ``செவ்வாயில் இருந்தால் அது உமிழ்நீர். தண்ணீர் அல்ல.''

 

கேள்வி : ``விவாதம்-வாக்குவாதம்-விதண்டாவாதம் மூன்றும் எப்படி இருக்க வேண்டும்?''

பதில் : ``விவாதம்-உண்மையாக இருக்க வேண்டும். வாக்குவாதம்-சூடு இருந்தாலும், சுவையாக இருக்க வேண்டும். விதண்டாவாதம்-தவிர்க்கப்பட்டாக வேண்டும்.''

 

கேள்வி: ``கோழி முதலா, முட்டை முதலா?''

பதில் :``முட்டை வியாபாரிகளுக்கு முட்டையும், கோழி வியாபாரிகளுக்கு கோழியும்தான் முதல்.''

 

கேள்வி: ``இளம் மாணவர்கள் அரசியலில் ஈடுபடலாமா?''

பதில் : ``இளம் வயதில் அரசியல் என்பது அத்தைப்பெண் போல. பேசலாம், பழகலாம். சுற்றிச் சுற்றி வரலாம். ஆனால், தொட்டு மட்டும் விடக்கூடாது!''

 

கேள்வி: ``தலையில் முடி கொட்டியது குறித்து எப்போதாவது வருந்தியிருக்கிறீர்களா?''

பதில்: ``இல்லை. அடிக்கடி முடிவெட்டிக்கொள்ளுவதற்கு ஆகும் செலவு மிச்சமென்று மகிழ்ந்துதான் இருக்கிறேன்.''

 

கேள்வி:``கூவம் ஆற்றில் முதலைகள் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அதனால், அங்கே அசுத்தம் குறைக்கப்பட்டு இருக்கிறது. அசுத்தத்தைப் போக்க கூவம் ஆற்றில் முதலைகள் விடுவது பற்றி அரசு ஆலோசிக்குமா?''

 

பதில்: ``ஏற்கெனவே அரசாங்கம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் `முதலை' கூவம் ஆற்றில் போட்டிருக்கிறது.''

 

கேள்வி:  ``உங்கள் வீட்டில் மதுரை ஆட்சியா... சிதம்பரம் ஆட்சியா?
பதில்: ``கலைஞர் ஆட்சி!''

கலைஞர் கருணாநிதி

கேள்வி: ``தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் அரசு ஆணையைத் தள்ளிப்போடவேண்டுமென்று சிலர் கோரிவருகிறார்களே..?'' 

பதில்: ``தலையில் ஒன்றும் இல்லையென்றால் தள்ளி வைக்கலாம்.''
 

கேள்வி: ``உங்களுக்குப் பிடித்த சட்டமன்றப் பேச்சாளர்?''

பதில் : ''எந்த மன்றமானாலும் சரி, அங்கே கொடிமரம் போல் உயர்ந்துநிற்கும் ஆற்றல்மிகு பேச்சாளர் அறிஞர் அண்ணாதான்''

 

 கேள்வி: ``சட்டமன்றத்துக்கு உள்ளே போகும்போது என்ன நினைப்பீர்கள்?''

பதில் : ``கற்றுக்கொள்ளும் மாணவனாகவும் கற்பிக்கும் ஆசிரியராகவும் இருக்க வேண்டுமென்று.''

 

கேள்வி: ``நினைவாற்றல், சொல்லாற்றல், வாதத்திறன்-ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு எது முக்கியம்?''

பதில் : ``நினைவாற்றலுடன்கூடிய வாதத்திறன்மிக்க சொல்லாற்றல் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் முக்கியம்.''

 

கேள்வி : ``கேள்வி கேட்பது எளிதா, பதில் சொல்வது எளிதா?''

பதில் : ``பதில் சொல்ல முடியாத கேள்வி கேட்பது எளிதல்ல.''

 

கேள்வி : ``தி.மு.க. ஆட்சி இரண்டு முறை (1976 மற்றும் 1991) டிஸ்மிஸ் ஆனபோது என்ன நினைத்தீர்கள்?''

பதில் : ``பதவியைத் தோளில் போட்டுக்கொள்ளும் துண்டு என்றும், மக்களுக்காக ஓடியாடி உழைப்பதே சிறந்த தொண்டு என்றும் எண்ணியிருப்பவனுக்கு ஆட்சிக் கலைப்பு என்பது ஒன்றும் பெரிதல்ல.''

 

கேள்வி : ``உங்கள் அமைச்சரவையிலே உள்ளவர்களில் மனதிலே இடம் பெற்ற சிலரை வரிசைப்படுத்துங்களேன்?''

பதில் : ``மனதிலே இடம் பெற்ற பிறகுதானே, அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள். மந்திரிசபையில் இடம் பெறாதவர்கள் என் மனதில் இடம் பெறாதவர்கள் அல்ல.''

https://www.vikatan.com/news/miscellaneous/133402-dmk-chief-karunanidhis-spontaneous-answers-while-press-meet.html

Link to comment
Share on other sites

’நண்பனுக்கு’ முதல் ‘என் உயிரினும் மேலான’ வரை... கருணாநிதியின் கடிதங்களில் ஒரு பயணம்!

 

கருணாநிதி கடிதங்கள்

’நண்பனுக்கு’ முதல் ‘என் உயிரினும் மேலான’ வரை... கருணாநிதியின் கடிதங்களில் ஒரு பயணம்!
 

தன் கட்சித் தொண்டர்களுடன் கருணாநிதி அளவுக்கு அணுக்கமாக இருந்த தலைவர்கள் என்று எடுத்துக்கொண்டால் வேறு யாரும் இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே. அப்படியே இருந்தாலும் மிகவும் சொற்பமானவர்களே இருக்க முடியும். ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைவரை தொண்டர்கள் யாரும் அவ்வளவு எளிதில் அணுகிவிட முடியாத சூழல்தான் வாடிக்கையானதாகும். ஆனால், கருணாநிதி அதற்கு விதிவிலக்காக இருந்தவர். முதலமைச்சராக கருணாநிதி பதவி வகித்தபோதும்கூட, எளிதில் தொண்டர்கள் தன்னைச் சந்திக்கக்கூடிய சூழ்நிலையைச் சாத்தியமாக்கினார். தொண்டர்களை நேரில் சந்திப்பதோடு மட்டுமல்லாமல், கட்சியின் நாளேடான முரசொலியில் தாம் எழுதும் மடல்கள் மூலம் அவர்களுடன் நெருக்கமான உறவை எப்போதும் ஏற்படுத்திக்கொண்டவர் அவர். கருணாநிதியின் முரசொலி கடிதங்கள், ஒவ்வொரு தொண்டனிடமும் தனித்தனியே உரையாடுவதுபோன்ற எளிய நடையில் அழகு தமிழில் இடம்பெற்றிருக்கும். சர்ச்சைக்குரிய மற்றும் குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் கருணாநிதி என்ன நினைக்கிறார், தொண்டர்கள் அந்தப் பிரச்னையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை தன் கடிதங்கள் மூலமாக அறிவுறுத்துவார். இதுபோன்ற நெருக்கத்தால், கட்சித் தொண்டர்களுக்கு அவர் மிகப்பெரிய வழிகாட்டியாக விளங்கினார் என்றே கூற வேண்டும். இதுவரை ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை முரசொலி நாளேட்டில் கருணாநிதி எழுதியிருக்கிறார்.

ஆரம்ப காலத்தில் `நண்பனுக்கு...' என்று முரசொலி கடிதத்தைத் தொடங்கியவர் பின்னர், `உடன்பிறப்பே...' என்று தொடங்கி எழுதுவதை வழக்கமாக்கிக் கொண்டார். கருணாநிதியின் கோபம், விமர்சனம், பாராட்டு, எதிர்ப்பு என எதுவானாலும் ஓசைநயத்துடன், அதே சமயம் எளிய மக்களுக்கும் புரியும் வண்ணம் வார்த்தைகள் அந்தக் கடிதங்களில் இடம்பெறும். அவரின் கடிதத்தை வாசிப்பதற்காகவே முரசொலியை வாங்கிப் படிப்பவர்கள் அதிகம் உண்டு. 

கருணாநிதி

 

 

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அமல்படுத்தப்பட்ட `எமர்ஜென்சி' காலத்தில், பத்திரிகைகளில் வெளியாகும் கருத்துகள் பெரும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும். `குறிப்பிட்ட வரிகளுக்குமேல் எழுதக் கூடாது' என்னும் அளவுக்குக் கட்டுப்பாடுகள் அப்போது விதிக்கப்பட்டன. கருணாநிதி அதையும் சவாலாக ஏற்று, குறிப்பிட்ட வார்த்தைகளுக்குள் தன்னுடைய கருத்தை சொல்லவந்த விஷயத்தின் வீச்சு குறையாமல் முரசொலியில் கடிதங்களை எழுதி, கட்சியினரை உயிர்ப்புடன் வைத்திருந்தார் கருணாநிதி.

 

 

பத்திரிகைகளுக்கு எமர்ஜென்ஸியின்போது தணிக்கை அமலில் இருந்ததால், கைதுசெய்யப்பட்ட தி.மு.க-வினரின் பட்டியலை வெளியிட யுக்தி ஒன்றைக் கடைப்பிடித்தார் கருணாநிதி. `1976 பிப்ரவரி 3-ம் தேதி அண்ணா நினைவு நாளன்று, அண்ணா சதுக்கத்துக்கு அஞ்சலி செலுத்த வர இயலாதோர் பட்டியல்' என்று ஒரு பட்டியலை வெளியிட்டார். அதில் மாவட்ட வாரியாக கைதுசெய்யப்பட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது. ஒருகட்டத்தில், தணிக்கை அதிகாரிகளின் அத்துமீறலைக் கண்டு அண்ணா சிலையின் முன்பு அன்றைய மத்திய அரசைக் கண்டித்து துண்டறிக்கைகள் கொடுத்தார்.  

எம்.ஜி.ஆர். மரணமடைந்தபோது, தமிழ்நாடு முழுவதும் தி.மு.க-வினருக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைக் கலவரத்தில், சென்னை அண்ணா சாலையில் உள்ள கருணாநிதியின் சிலையை இளைஞர் ஒருவர் கடப்பாறையால் குத்தி, உடைத்தார். இந்தச் செயலுக்கு கருணாநிதி என்ன எதிர்வினை ஆற்றுவார் என தி.மு.க-வினர் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில், மறுநாள் முரசொலியில் அந்தச் சம்பவம் பற்றி இவ்வாறு எழுதியிருந்தார்.

``உடன்பிறப்பே, 

செயல்பட விட்டோர் 

சிரித்து மகிழ்ந்து நின்றாலும்

அந்தச் சின்னத்தம்பி

என் முதுகிலே குத்தவில்லை

நெஞ்சிலேதான் குத்துகிறான்

அதனால் நிம்மதி எனக்கு..

வாழ்க, வாழ்க"

அன்புடன்

மு.க. - என்று குறிப்பிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

பெரியாரின் துணைவியார் மணியம்மை தலைமையில், தவத்திரு குன்றக்குடி அடிகளார் அண்ணாசாலையில் திறந்து வைத்த சிலை அது. எம்.ஜி.ஆர். இறந்த அன்று சேதப்படுத்தப்பட்ட அந்தச் சிலை சிதிலமடைந்து வெறும் பீடம் மட்டுமே அந்த இடத்தில் நீண்டகாலம் எஞ்சி இருந்தது. மீண்டும் அங்கே கருணாநிதியின் சிலையை நிறுவ திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி வலியுறுத்தியபோது, கருணாநிதி தனக்குச் சிலை வேண்டாமென்று அதை மறுத்துவிட்டார். 

தான் எழுதிய கடிதங்களிலேயே தன்னால் மறக்க முடியாத கடிதமாக கருணாநிதி குறிப்பிட்டது இதுதான். 

``வள்ளுவர் கோட்டத் திறப்பு விழா நடந்தபோது, நான் எழுதி, `முரசொலி’யில் வெளியான மூன்று பக்கக் கடிதம்! அப்போது, என் ஆட்சி கலைக்கப்பட்டு பத்து நாள்களே ஆகியிருந்தன. என் முயற்சியைப் பறைசாற்றும் கல்வெட்டு நீக்கப்பட்டு, புதிதாக அடிக்கல் நாட்டி கோலாகல விழா நடத்திக் கோட்டத்தைத் திறந்துவைத்தார்கள். `நான் கலந்துகொள்ளக் கூடாது' என்று எனக்கு அழைப்பைக்கூடத் தாமதமாகத்தான் அனுப்பினார்கள். அந்தச் சமயத்தில், நான் உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதம் கண்டு உருகாத நெஞ்சமே இல்லை. எனக்கு இப்போதும் அதைப் படித்தால் கண் கலங்கும்!'' என்றார். 

 

 

கருணாநிதி கடிதங்கள்

கருணாநிதி பதவியில் இல்லாதபோதும் அவருடைய அறிக்கை பேசுபொருள் ஆகும். `கருணாநிதி என்ன சொல்கிறார்' என ஆளுங்கட்சியினரே காத்துக்கொண்டிருப்பதைப் பார்த்துள்ளோம். எதிர்க்கருத்து கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களைக் காயப்படுத்தாத அளவுக்கு, அதே சமயம் அவர்கள் மீது வைக்கப்படுகிற விமர்சனத்தை அவர்களே ரசிக்கும்விதமாக தன் கடிதங்களில் பதில் சொல்லக்கூடியவர் கருணாநிதி.

கருணாநிதி கடந்த 11 நாள்களுக்கு முன் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, மருத்துவமனைக்கு முன் கூடியிருந்த தொண்டர்கள், ``எழுந்து வா... தலைவா, உடன்பிறப்புகள் அழைக்கிறோம்; தலைவா எழுந்து வா" என்று தொண்டைநீர் வற்றும் அளவுக்கு முழக்கமிட்டவாறே இருந்தார்கள். தொண்டர்களின் அந்தக் குரல் கருணாநிதியின் காதில் விழுமென்று நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால், கருணாநிதி கடைசிவரை காவேரி மருத்துவமனையிலிருந்து எழுந்து வரவேயில்லை. அவர் மரணமடைந்த செய்திதான் வந்தது.

``என் அன்பு உடன்பிறப்பே, நீ என் அருகிலே இருந்தாலும் நம் இதயங்கள் இந்த லட்சியப் பயணத்திற்காக எப்போதோ பிணைக்கப்பட்டு விட்டது என்பதை உணர்ந்துகொண்டே இருப்போமாக" என்று ஒருமுறை தொண்டர்களுக்குக் கருணாநிதி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பார். 

அவரின் கடித வரிகள் போன்றே தொண்டர்கள் அதனை உணர்ந்து, கருணாநிதி வகுத்த பாதையில்... அவர் காட்டிய வழியில்... கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதே கருணாநிதிக்குத் தொண்டர்கள் செய்கிற உண்மையான அஞ்சலியாக இருக்கும்....

https://www.vikatan.com/news/tamilnadu/133448-dmk-chief-karunanidhi-letter-to-party-cadres.html

Link to comment
Share on other sites

எண்ணற்ற வசவுகள், ஏராளமான எதிரிகள் - கருணாநிதியின் ஒரே பதில் இதுதான்

 

நீங்கள் அவரை நேசிக்கலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால், அவரின் ஆளுமையை, சாதனையை நீங்கள் முற்றிலும் மறுக்கவோ, புறக்கணிக்கவோ முடியாது என சிலர் குறித்து எடுத்துரைக்கும்போது குறிப்பிடுவர்.

எண்ணற்ற வசவுகள், ஏராளமான எதிரிகள் - கருணாநிதியின் ஒரே பதில் இதுதான்

அப்படி ஒரு மறுக்கமுடியாத ஆளுமை காவேரி மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று தனது இறுதிமூச்சை நிறுத்தியபோது, இறுதிவரை போராடிய அவரது போராட்ட குணம் கடைக்கோடி தமிழக இளைஞனை வியப்பில் ஆழ்த்தியது.

கருணாநிதிக்கு ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோதான் கடந்த 50 ஆண்டுகளாக தமிழக அரசியல் களம் இயங்கி வந்துள்ளது.

தமிழக அரசியலில் மறுக்கமுடியாத ஒருவராக கருணாநிதி இருந்துள்ளார்.

ஆரம்ப காலத்தில் இவரை வசைபாடினால் அரசியலில் கவனிக்கப்படுவோம் என்று மாற்று கட்சியினர் ஆரம்பித்தனர். தற்காலத்தில் சமூகவலைத்தளங்கள் பிரபலமான பிறகு, இவர் குறித்து எழுதப்பட்ட பதிவுகளும், மீம்களும் ஏராளம்.

எண்ணற்ற வசவுகள், ஏராளமான எதிரிகள் - எல்லாவற்றுக்கும் கருணாநிதியின் ஒரே பதில்

எண்ணற்ற வசவுகள், ஏராளமான எதிரிகள் - அவரை வசைபாடினால் அரசியலில் கவனிக்கப்படுவோம் என பலர் கருணாநிதியை எதிர்க்க, எல்லாவற்றுக்கும் அவர் பதில் அளிப்பதில்லை. அவரின் செயல்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகளே எதிர்ப்பாளர்களுக்கு பதிலாக அமைந்தது.

இலங்கையில் உள்நாட்டு போர் இறுதிக்கட்டத்தை எட்டியபோது, தமிழக முதல்வராக இருந்த அவர், மத்திய அரசில் பங்குவகித்தபோதும் இலங்கை தமிழர்களை காக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.

துரோகம் செய்து விட்டார் என்ற ரீதியில் அரசியல் மேடைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் அவர் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்காக 13 ஆண்டுகளுக்கு பிறகு வராத மாமணியாய் கிடைத்த ஆட்சியை இழந்தவர் ஆயிற்றே? அவரையா சொல்கிறீர்கள் என்றார்கள் அவரை அறிந்தவர்களும், அவர் ஆதரவாளர்களும்.

ஆனாலும், எதிர்ப்பாளர்களின் எதிர்வினைகள் இன்னமும் தொடர்ந்தது. மீண்டும் டெசோ அமைப்பை உயிரூட்டி இலங்கை தமிழர்களின் நலனுக்காகவும், போருக்கு பிந்தைய நிலையில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் அவர் பேசியவை எள்ளி நகையாடப்பட்டது.

எண்ணற்ற வசவுகள், ஏராளமான எதிரிகள் - எல்லாவற்றுக்கும் கருணாநிதியின் ஒரே பதில்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆனாலும், அவர் விமர்சனங்களை பொருட்படத்தாமல் தனது இலக்கை மட்டுமே எண்ணமாக கொண்டிருந்தார்.

ஒரு காலகட்டத்தில் தமிழினத் தலைவர் என்றழைக்கப்பட்டவர் தமிழினத் துரோகி என சமூகவலைதளங்களில் பதிவிடும் ஒருசிலரால் அழைக்கப்பட்டது காலசுழற்சி தந்த மிக மோசமான பரிசு எனலாம்.

1970களில் தனது பிறந்தநாள் கூட்டம் ஒன்றில் பேசிய கருணாநிதி, 'தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னை கடலில் தூக்கி எறிந்தாலும் கட்டுமரமாகதான் மிதப்பேன் அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம் கவிழ்ந்து விடமாட்டேன்' என்று குறிப்பிட்டார்.

அக்காலகட்டத்தில் சிலாகிக்கப்பட்ட இந்த வரிகள், தற்காலத்தில் சமூகவலைத்தளங்களில் சிலரால் எள்ளி நகையாடப்படுகிறது. பரிகாசம் செய்பவர்கள் இந்த வரிகளின் வலிமையை அறிந்தவர்களா அல்லது கிண்டல் செய்ய வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே கொண்டவர்களா?

கருணாநிதி: அஸ்தமிக்காத சூரியன்

கருணாநிதியை இயக்கியது எது?

எல்லா விமர்சனங்களையும் தாண்டி கருணாநிதி தொடர்ந்து இயங்கியது எதனால் என்பது பற்றி அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''கலைஞர் கருணாநிதி ஒரு கடும் உழைப்பாளி. நல்ல படிப்பாளியும்கூட. அயராத போராட்டக்குணம் கொண்டவர். இது எனக்கு அவரிடம் மிகவும் பிடித்த அம்சம் என்று தெரிவித்தார்.

அதிமுகவுக்கு நேர் எதிரான கட்சி திமுக என்ற போதிலும் தற்போதைய சூழலில் அவரின் பெருமைகள் மற்றும் சிறப்புகள் பற்றி பேசுவதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன் என்று வைகைச்செல்வன் மேலும் தெரிவித்தார்.

தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை கருணாநிதி எவ்வாறு கையாண்டார் என்று கேட்டதற்கு ''அதை பற்றி கவலைப்படாமல் தான் தோற்றாலும், வென்றாலும் தொடர்ந்து இயங்க வேண்டும் என்று உழைக்கும் அவரது பாங்கு யாரையும் வியக்க வைக்கும். ஒய்வு என்பது இல்லாமலே செயல்பட்டு வந்தார்'' என்று வைகைச்செல்வன் தெரிவித்தார்.

எண்ணற்ற வசவுகள், ஏராளமான எதிரிகள் - எல்லாவற்றுக்கும் கருணாநிதியின் ஒரே பதில்படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89

''தமிழக அரசியலில் மட்டுமல்ல, தேசிய அரசியலிலும் அவர் ஆர்வமாக செயல்பட்டு வந்தார். மேலும், இலக்கியம், சினிமா, புத்தகம் எழுதுவது என அனைத்து தளங்களிலும் அவர் தீவிரமாக செயல்பட்டு வந்தார். இது எப்படி முடிந்தது? எப்போதும் போதும் என்று எண்ணாமல் போதாது என்று அவர் தொடர்ந்து இயக்கி கொண்டு வந்ததால் அவரால் இந்த அளவு சாதிக்க முடிந்தது'' என்று கூறினார்.

கருணாநிதியை இயக்கியது சமூகநீதிக்கான போராட்டம்

தன் மீது சுமத்தப்படும் தொடர் விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகளை தாண்டி கருணாநிதியை இயக்கியது எது என்பது குறித்து வழக்கறிஞரும், பெண்ணியவாதியுமான அருள்மொழி பிபிசி தமிழிடம் உரையாடினார்.

''சமூகத்தில் நிலவும் சாதிய பாகுபாடுகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள்தான் கருணாநிதியை ஆரம்பத்தில் அரசியல் களம் நோக்கி ஈர்த்தது.நீண்ட காலமாக அவர் இந்த ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து கடுமையாக போராடியுள்ளார்'' என்று நினைவுகூர்ந்தார்.

''தொடர்ந்து நிலவிவரும் இந்த சாதிய பாகுபாட்டை அகற்றுவதை நோக்கமாக அவர் கொண்டுள்ளதால், இந்த காரணம்தான் அவரை தன் மீதான விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகளை மீறி போராட வைத்தது'' என்று அருள்மொழி தெரிவித்தார்.

எண்ணற்ற வசவுகள், ஏராளமான எதிரிகள் - எல்லாவற்றுக்கும் கருணாநிதியின் ஒரே பதில்

மேலும், அவரது இயல்பான போராட்ட குணமும் அவரை இயக்கிய முக்கிய காரணி என்று அருள்மொழி குறிப்பிட்டார்.

பள்ளிப்படிப்பைகூட நிறைவு செய்யாத கருணாநிதி, அவரது பேச்சாற்றல் மற்றும் எழுத்தாற்றலுக்கு புகழப்பட்டது, எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டப்படுவது, கற்றுக் கொள்ள வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற அவரின் தீராத வேட்கையை பறைசாற்றுகிறது.

ஆனால், அவரின் சிறப்புகள், சாதனைகள், அவர் விட்டுச்செல்லும் பாரம்பரியத்தை, உண்மையை ஆராய முற்படாமல், தங்களுக்கு வரும் பதிவுகளை பகிரும் சமூகவலைதளவாசிகள் அனைவரும் அறிவார்களா என்பது சந்தேகமே.

கருணாநிதி தனது தொண்டர்களுக்கு ஒரு முறை எழுதிய மடலில் என் கடன் எப்போதும் பணி செய்து கிடப்பதே என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆம், அப்படிதான் அவர் வாழ்ந்தார். தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை, விமர்சனங்களை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனது இலக்கை நோக்கி பயணம் செய்தார். அவர் மறைந்த இச்சூழலில், அவர் விட்டுச் சென்ற கொள்கைகள் அவரின் தொண்டர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் அதையே வலியுறுத்துகிறது.

https://www.bbc.com/tamil/india-45004352

Link to comment
Share on other sites

காரில் வந்து விழுந்த உடன்பிறப்பின் கடிதத்தை, முரசொலியில் வெளியிட்ட கருணாநிதி!

 

நான் சட்டைப்பையில் வைத்துக்கொள்ளும் சிறிய அளவிலான பாக்கெட் சைஸ் நோட்டில் எழுதியிருந்த `உடன்பிறப்பின் ஓர் கடிதம்' கவிதையை அவரது மடியில் போட்டுவிட்டு கூட்டத்துடன் கூட்டமாகக் கரைந்துபோனேன்.

காரில் வந்து விழுந்த உடன்பிறப்பின் கடிதத்தை, முரசொலியில் வெளியிட்ட கருணாநிதி!
 

22 ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதியைக் கூட்டத்தோடு கூட்டமாகப் பார்த்த கதிரேசன் என்ற இளைஞர், தான் கையோடு எழுதி எடுத்துவந்த கடிதத்தை காருக்குள் இருந்த கருணாநிதியின் மடியில் போட்டார். முகம் தெரியாத அந்தக் கதிரேசனின் கவிதையை, அடுத்த சில நாள்களிலேயே முரசொலியில் போட்டார் கருணாநிதி. ஆனால், அன்று தொடங்கி, ஆகஸ்ட் 8 வங்கக்கடலோரம் புதைக்கப்பட்ட நாள் வரையிலும்கூட கருணாநிதியைச் சந்திக்கவே இல்லை கதிரேசன். அன்றைய நிமிடங்களைக் கண்ணீருடன் நம்மிடம் விவரித்தார் கதிரேசன்...

கருணாநிதி

``80 களின் தொடக்க காலம் அது. திருச்சி, பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் பி.ஏ வரலாறு முடித்துவிட்டு, வேலைவாய்ப்புக்காக ரயில்வே சர்வீஸ் கமிஷன், வங்கித் தேர்வுகள் மற்றும் மத்திய மாநில அரசுப் பணிகளுக்கு மனுசெய்துகொண்டிருந்தேன். கூடவே பத்திரிகைகளின் ஆழ்ந்த வாசிப்புடன், `தினம் ஒரு கவிதை நூல்' என வாசித்துக்கொண்டிருப்பேன். கதை, கட்டுரைகள் எழுதுவதிலும் பேரார்வம்.

 

 

வாழ்வாதாரப் பிரச்னைக்காக எனது சொந்த ஊரான திருச்சி மாவட்டம், துறையூர் மிளகாய் மண்டியில் கணக்குப்பிள்ளையாகப் பணியாற்றி வந்தேன். மிளகாய் மண்டியில் வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாள்களில் பெரிய அளவில் வேலைகள் இருக்காது. ஆனால், ஐந்நூறு, ஆயிரம் எனச் சாக்கு மூட்டைகளில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் மிளகாய் மூட்டைகளுக்கு மத்தியில் இருப்பதே மிகவும் சிரமமான காரியம். அப்படி நான் மிளகாய் மூட்டைகளின் மேல்உட்கார்ந்துகொண்டு 1985-ம் ஆண்டு கலைஞரின் மணிவிழாவுக்காக எழுதிய கவிதைதான் இது. அப்போது நான் பல பத்திரிகைகளுக்கும் இந்தக் கவிதையை அனுப்பியிருந்தேன்... பிரசுரமாகவில்லை.

அந்தக் கவிதை

1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க, த.மா.கா கூட்டணி 195 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்ற செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது.

தி.மு.க தலைவர் கருணாநிதியைப் பார்ப்பதற்காகத் தொண்டர்களின் கூட்டம் அலைகடலென சென்னை, ஆழ்வார்பேட்டை வீட்டில் திரண்டிருந்தது. ஆயிரக்கணக்கானோரின் வாழ்த்துகள், மாலைகள் மற்றும் சால்வைகளைப் பெற்றுக்கொண்டு கலைஞரின் கார் வேகவேகமாகப் புறப்பட்டது.

ஒரு முன்னேற்பாடாக ஏற்கெனவே, நான் சட்டைப்பையில் வைத்துக்கொள்ளும் சிறிய அளவிலான பாக்கெட் சைஸ் நோட்டில் எழுதியிருந்த `உடன்பிறப்பின் ஓர் கடிதம்' கவிதையை அவரது மடியில் போட்டுவிட்டு கூட்டத்துடன் கூட்டமாகக் கரைந்துபோனேன். அதை அவர் குழந்தையைப்போல் பாவித்து எடுத்துச்சென்று முரசொலியில் பிரசுரிக்கச்செய்தார். என் கவிதையை கலைஞர் வெளியிட்டார். ஆனால், நான்தான் அதை எழுதியவன் என்பது அவருக்குத் தெரியாது. நானும் இன்றுவரை அவரைச் சென்று பார்த்ததில்லை. என் அன்பை நன்றியை அவருக்குத் தெரிவிக்க எண்ணினேன். தெரிவித்தேன். அவ்வளவுதான். அவருடைய உடன்பிறப்பு என்பதைத் தவிர வேறு என்னவேண்டும்?’’ என்று கலங்குகிறார் கதிரேசன்.

 

 

அந்தக் கவிதை….

உடன்பிறப்பின் ஓர் கடிதம்!

அன்புள்ளம் கொண்ட தலைவா!

நீ தித்திக்கும் தீந்தமிழின் புகழை

எத்திக்கும் பாடும் தமிழனின் மானம்!

***

தமிழனின் புகழை

தரணிக்குப் பாடும் உதய தாரகை!

அஞ்சுகத்தின் தங்கமே!

தென்பாண்டிச் சிங்கமே!

***

ஏச்சுக்கும் இழிபேச்சுக்கும்

ஆளான தமிழன்

மாட்சிக்கு வந்ததும்

உன்னால்தான்

வரப்போவதும் உன்னால்தான்!

***

சோதனைகள் பல தாண்டி

நீ படைத்த சாதனைகள் பல

அவற்றுள் சில...

அண்ணாவின் மறைவால் கழகம்

ஆதரவு இழந்தபோது - நீ

நிழல் தந்து காத்த ஆயுள் காப்பீடு!

***

பெரியாரின் மடியில் அண்ணாவின்

தோளில் வளர்ந்த கழகக் குழந்தையை

நீதான்

எங்களுக்கு அடையாளம் காட்டினாய்!

***

வள்ளுவர் கோட்டம் அமைத்த

நீதான் மூழ்கிப் போன பூம்புகாரை

மேலே கொணர்ந்தாய்!

தலைநகரத்தில் உன் கரத்தால் மலர்ந்த

கட்டடப் பூக்களெல்லாம்

உன்கதையைச் சொல்லிக்கொண்டே இருக்கும்!

ஏன்?

திரைப்படத் துறையின்

திருப்புமுனைகூட ஆரம்பிப்பது

உன்னிடம்தான்...

***

சிறைகளைப் பார்த்துச்

சிரித்தே வந்த நீ

வீண் பழிகளைப் பார்த்து பயந்ததில்லை!

***

யாகங்களில் உனக்கு

நம்பிக்கை இல்லா காரணத்தால் - உன்

தியாகங்களால் கழகத்தை வளர்த்தாய்!

***

'உடன்பிறப்பே' என்று

நீ அழைக்கின்ற நாதம்

எங்கள் உயிரிலே கலந்திட்ட வேதம்!

***

எத்தனையோ தூண்கள்

கழகத்தை விட்டு

பிறருக்குக் கால்களாகிப் போனபோதும்

இந்தக் கழகம் இருப்பதன் காரணம்

நீ அங்கே அஸ்திவாரமாய்

இருப்பதுதானென்பது

உன் உடன்பிறப்புகளுக்கே தெரிந்த தேவ ரகசியம்!

***

துன்பப் புயல்களெல்லாம்

கழகத்தைத் தூக்கியெறிய வந்தபோது

நீ நங்கூரமாய் இருந்து காப்பாற்றியதெல்லாம் இந்த ஏழைத்தொண்டனின்

மனதில் பசுங்கனவுகளாய் என்றும் இருக்கும்!

***

பெண்ணுரிமைப் புத்தகத்தின் அட்டையிலே

பெயரெழுதிப் போனவர்களுண்டு...

ஆனால், நீ வழங்கியுள்ள

பெண்ணுரிமைக்கு ஒரு புத்தகமே போடலாம்!

***

உன்னுடைய வாழ்வையும்

கழகத்தின் வரலாற்றையும்

இரண்டு புத்தகங்களாக

எழுதவேண்டிய வேலை

எந்தக் கவிஞனுக்கும் இருக்காது!

***

திருவாரூரில் உதித்த சூரியன் நீ

திமுகவுக்கு மட்டுமல்ல

இந்த தேசத்துக்கே திசைகாட்டி

என்பதில் சத்தியத்தை தவிர மிச்சமில்லை!

https://www.vikatan.com/news/politics/133561-dmk-chief-karunanidhi-published-a-poem-that-was-written-by-one-of-his-cadres.html

Link to comment
Share on other sites

உதயம் முதல் அஸ்தமனம் வரை... கலக நாயகன் கருணாநிதியின் கதை!

1097_thumb.jpg
 
உதயம் முதல் அஸ்தமனம் வரை... கலக நாயகன் கருணாநிதியின் கதை!
 

சூரிய உதயம்!

1924 ஜூன் 3-ம் தேதி திருக்குவளை என்னும் ஊரில் பிறந்தார் கருணாநிதி. முத்துவேலர் - அஞ்சுகம் தம்பதிக்கு மூன்றாவதாகப் பிறந்தவர்தான் மு.க. இவருக்கு மூத்த அக்காக்கள் பெரியநாயகம், சண்முக சுந்தரத்தம்மாள். இவர்களில் சண்முக சுந்தரத்தம்மாள் வாரிசுகள்தாம் முரசொலி மாறன், முரசொலி செல்வம். பெரிய நாயகத்தின் மகன் அமிர்தம்.

முதல் போராட்டம்! 

 

 

`பள்ளியில் இடமில்லை என்றால், கமலாலயம் தெப்பக்குளத்தில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்வேன்’ என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் கஸ்தூரி ஐயங்காரிடம் சிறுவன் கருணாநிதி வாதிட்டதில் தொடங்கியது அவர் போராட்டம்! 

 

 

நீதிக்கட்சி டு திராவிடர் கழகம்! 

சாதிக் கொடுமைகள், வைதீக ஆதிக்கம் நிறைந்த தஞ்சை மண்ணில் பிறந்த கருணாநிதிக்கு, அவற்றுக்கு எதிரான மனநிலை வாய்க்கப் பெற்றிருந்தது. அந்த நேரத்தில், சாதிய ஆதிக்கத்துக்கு எதிராகச் செயல்பட்ட  நீதிக்கட்சியின் பணிகள் கருணாநிதியை இயல்பாக ஈர்த்தன. நீதிக்கட்சியின் பேச்சாளர் பட்டுக்கோட்டை அழகிரி சாமியின் இடிமுழக்கப் பேச்சு சிறுவன் கருணாநிதியைக் கவர்ந்தது. அந்த அழகிரிசாமியின் நினைவாகத்தான், தன் மகன்களில் ஒருவருக்கு அழகிரி என்று பெயரிட்டார். 

சூரிய உதயம் - கருணாநிதி14 வயதில் இந்தி எதிர்ப்பு! 

`பள்ளியில் சேர்க்காவிட்டால் உயிரைவிட்டுவிடுவேன்’ என்று மிரட்டிய கருணாநிதி என்ற சிறுவனுக்குப் பள்ளிப் பாடங்களைவிட பெரியாரின் பேச்சும் அண்ணாவின் எழுத்துகளும்தாம் பாடங்களாகத் திகழ்ந்தன. பாடப்புத்தகங்களைப் படிப்பதைவிட பெரியாரின் குடிஅரசையே அந்தச் சிறுவன் அதிகம் படித்தான். மாலை நேரத்தில் மாணவர்களை ஊர்வலமாக அழைத்துக்கொண்டு, ``வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்! வந்திருக்கும் இந்திப்பேயை விரட்டுவோம் என்று 14 வயதில் கோஷம் போடும் தமிழ் உணர்வுச் சிறுவனாக வளர்ந்தார் கருணாநிதி.  

 

 

மாணவ நேசன்! 

கருணாநிதி தன் 15 வது வயதில் `மாணவ நேசன்’ என்ற கையெழுத்துப் பிரதியை நடத்தினார். மாதத்துக்கு இரண்டு இதழ்கள். ஒவ்வோர் இதழிலும் 8 பக்கங்கள். இரண்டு படிகள் வெளிவரும். இரண்டு படிகளையும், அதில் உள்ள 16 பக்கங்களையும் கருணாநிதியே தன் கைப்பட எழுதுவார். அதோடு சிறுவர் சீர்திருத்தச் சங்கம், தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்புகளையும் 15 வயதில் தொடங்கி நடத்தி தலைவர் என்ற தகுதியை அப்போதே வளர்த்துக்கொண்டார் கருணாநிதி! 

இளமைப் பலி! 

அண்ணாவின் திராவிட நாடு இதழில் 1942-ல் கருணாநிதி எழுதிய இளமைப் பலி கட்டுரை வெளியானது. அப்போது அவருக்கு வயது 18. அதை அந்த ஊர் முழுவதும் கையில் வைத்துச் சுற்றினார் கருணாநிதி. கடைகளில் அவரே அந்தக் கட்டுரை இடம் பெற்றிருந்த செய்தித்தாளை எல்லோர் பார்வையிலும் படும்படி வைத்தார். அதில் கருணாநிதியின் கட்டுரையைப் படிப்பவர்கள் என்ன விமர்சனம் செய்கிறார்கள் என்பதை அருகிலிருந்து கவனிப்பார் கருணாநிதி. அப்போதுமுதல், தன் மீதான விமர்சனம் என்ன என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமும் பக்குவமும் வளர்ந்தது அவருக்கு. 

பெரியாரின் துணை ஆசிரியர்

பாண்டிச்சேரியில் திராவிடர் கழக மாநாடு கலவரத்தில் முடிந்தது. அதில் கடுமையாகத் தாக்கப்பட்டார் கருணாநிதி. சுயநினைவு இழந்து சாக்கடையில் வீசப்பட்ட கருணாநிதியை ஒரு மூதாட்டி காப்பற்றினார். அதன் பிறகு மாறுவேடத்தில் மீண்டும் மாநாட்டுக்குச் சென்றார். கருணாநிதியின் உடம்பில் இருந்த காயங்களுக்குத் தன் கைகளால் மருந்து தடவியதில் நெகிழ்ந்துபோனார். அதன்பிறகு, பெரியாரிடம் குடி அரசு நாளிதழில் துணை ஆசிரியராக ஒன்றரை வருடம் பணியாற்றினார். 

வாழ்நாள் தோழன்! 

1942-ல் தமிழ்நாடு மாணவர் மன்றத்தின் ஆண்டுவிழா - திருவாரூரில் நடந்தது. இந்த விழாவுக்குப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்த்துப் பா எழுதி அனுப்பினார். அந்த விழாவில் கலந்துகொண்ட வி.ஐ.பி பேராசிரியர் அன்பழகன். அப்போது தொடங்கிய அந்தத் தோழமை கருணாநிதியின் இறுதிநாள் வரை தொடர்ந்தது. 

பெரியாருடன் கருணாநிதி - சூரிய உதயம்

மண வாழ்க்கை! 

1944-ல் கருணாநிதிக்கு பத்மாவதியோடு திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்த அடுத்த வாரத்தில் 10 நாள்கள் சொற்பொழிவாற்றச் சுற்றுப் பயணம் கிளம்பிவிட்டார் கருணாநிதி. கருணாநிதி-பத்மாவதி தம்பதிக்குப் பிறந்தவர்தான் மு.க.முத்து. 1948-ல் குழந்தையைப் பெற்றுவிட்டு பத்மாவதி மறைந்துவிட்டார். 

1948 செப்டம்பர் 15-ல் தயாளு அம்மாளைத் திருமணம் செய்துகொண்டார் கருணாநிதி. அண்ணாவின் பிறந்த நாளில் இந்தத் திருமணம் நடைபெற்றது. அழைப்பிதழில் அண்ணாவின் பெயர் தலைமைச் சொற்பொழிவாளர் என்று இருந்தது. கருணாநிதி-தயாளுக்குத் தம்பதிக்குப் பிறந்த பிள்ளைகள்தாம் அழகிரி, ஸ்டாலின், செல்வி, தமிழரசு. அதன் பிறகு ராஜாத்தி அம்மாளையும் கருணாநிதி திருமணம் செய்து கொண்டார். 

எம்.ஜி.ஆரும் சிவாஜியும்! 

1948-ல் `அபிமன்யு’ திரைப்படத்துக்குக் கருணாநிதி வசனம் எழுதினார். ஆனால், டைட்டில் கார்டில் அவர் பெயர் இடம்பெறவில்லை. அதனால், கோபித்துக்கொண்டு திருவாரூர் சென்றுவிட்டார். அப்போதுதான் முரசொலி வார இதழாக உருவெடுத்தது. அதன் பிறகு, `ராஜகுமாரி’ என்ற படத்துக்கு வசனம் எழுத அழைப்பு வந்தது. அந்தப் படத்தின் கதாநாயகன்தான் எம்.ஜி.ஆர். கருணாநிதி வசனத்தில் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களான `ராஜகுமாரி’, `மந்திரிகுமாரி’, `மருதநாட்டு இளவரசி’ படங்கள் பெரும் வெற்றி பெற்றன. 

`பராசக்தி’ என்ற சமூகக் கருத்துள்ள படத்துக்கும் கருணாநிதி வசனம் எழுதினார். அந்தப் படத்தில் கருணாநிதியின் வசனத்தைப் பேசிய சிவாஜி கணேசன் என்ற மெல்லிய உடல்வாகு கொண்ட இளைஞனுக்கு அதுதான் முதல்படம். கருணாநிதியின் வசனத்தால் அந்த இளைஞன் புகழ் அடைந்தாரா... அந்த இளைஞன் பேசியதால், கருணாநிதியின் பராசக்தி வசனம் பிரபலம் அடைந்ததா... என்பது விடை தெரியாத விநோதம்! எப்படியோ பராசக்தியின் வசனங்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி நெளிந்தது; கருணாநிதியையும் பராசக்தியையும் எதிர்த்து காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்ற வேண்டியதாகப்போனது. 

சிவாஜியும் கருணாநிதியும் - சூரிய உதயம்

பெரியாரிடமிருந்து பிரிந்த அண்ணா, 1949-ல் பெரியார் பிறந்த நாளில் செப்டம்பர் 17-ல் தி.மு.க-வை அண்ணா உருவாக்கினார். கருணாநிதியும் அண்ணாவுடனேயே வந்துவிட்டார். 25 வயது இளைஞரான கருணாநிதியை தி.மு.க பிரசாரக் குழு உறுப்பினராக்கினார் அண்ணா. 

1953-ல் இந்திக்கு எதிராக மும்முனைப் போராட்டத்தை அறிவித்தார் அண்ணா. அதில் ஒரு முனைக்குத் தளபதியானார் கருணாநிதி. டால்மியா புரம் ரயில் நிலையப் பெயர்ப் பலகையில் தமிழில் கல்லக்குடி என்று பெயர் எழுதிய சுவரொட்டியை ஒட்ட வேண்டும். அந்தப் போராட்டத்தில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தார் கருணாநிதி. அது கட்சிக்குள்ளும் வெளியிலும் கருணாநிதியின் பெயரை பிரபலப்படுத்தியது. 1954-ல் கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் இணைந்து உருவாக்கிய `மலைக்கள்ளன்’ திரைப்படம் இருவருக்கும் ஒரு மைல் கல்லானது. 

தேர்தல் நாயகன்! 

1957 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க முதல்முறையாகப் போட்டியிட்டது. அதில் குளித்தலை தொகுதியைக் கருணாநிதிக்கு ஒதுக்கினார் அண்ணா. அப்போது தொடங்கியது கருணாநிதியின் தேர்தல் வெற்றி 2016 சட்டமன்றத் தேர்தல் வரையிலும் தொய்வின்றித் தொடர்கிறது. 13 வது முறையாகத் திருவாரூரில் வெற்றி பெற்றுள்ளார். 

1959-ல் சென்னை மாநகராட்சித் தேர்தல். அண்ணா சில இடங்களில் மட்டும் கழக வேட்பாளர்களை நிறுத்தலாம் என நினைக்கிறார்; அதற்குப் பிடிவாதமாக மறுத்த கருணாநிதி அண்ணாவிடம் அடம்பிடித்து 100 இடங்கள் உள்ள சென்னை மாநகராட்சிக்கு 90 இடங்களில் தி.மு.க வேட்பாளர்களை நிறுத்தினார். அதில் 45 இடங்களில் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். சென்னை மாநகராட்சி தி.மு.க வசமானது.  

1960-ல் கருணாநிதி கட்சியின் பொருளாளர் ஆனார். உட்கட்சிப் பூசல்களுக்கு இடையில் நடைபெற்ற அந்தப் பொதுக்குழுவில், அண்ணா பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஈ.வெ.கி சம்பத் அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பத்தே ஆண்டுகளில் கட்சியின் மூன்றாவது இடத்துக்கு வந்திருந்தார் கருணாநிதி. இத்தனைக்கும் அண்ணாவுக்கு இருக்கும் கல்வியும், ஈ.வெ.கி சம்பத்துக்கு இருந்த குடும்பப் பின்னணியும் கருணாநிதிக்குக் கிடையாது.

ஆட்சியே நோக்கம்! 

1962 தேர்தலில் 50 சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க வென்றது. அதிலும் சுற்றிச் சுழன்று செயல்பட்டார் கருணாநிதி. கருணாநிதியும் வெற்றி பெற்றார். ஆனால், அடுத்த தேர்தலில் இதுபோன்ற உதிரி வெற்றிகள் கூடாது; ஆட்சியைக் கைப்பற்றியே தீர வேண்டும் என்ற வேகமும் வெறியும் கருணாநிதிக்கு அண்ணாவைக் காட்டிலும் அதிகம் இருந்தது. 

அண்ணாவுடன் கருணாநிதி - சூரிய உதயம்

1967 தேர்தலை மிகப்பெரிய அளவில் சந்திக்க 1963-லேயே தி.மு.க-வைத் தயார்படுத்தினார் கருணாநிதி. 4 ஆண்டுகளுக்குப் பிறகு, வரப்போகிற தேர்தலுக்கான வியூகத்தை 1963-ல் கடற்கரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலேயே வகுத்துக் கொடுத்தார் கருணாநிதி. அதன்படி 200 தொகுதிகளில் கட்சி போட்டியிட வேண்டும்; ஒரு தொகுதிக்கு 5,000 ரூபாய் செலவு செய்ய வேண்டும்; அந்த நிதியைத் திரட்ட இப்போதே வசூலைத் தொடங்க வேண்டும் என்ற கருணாநிதி, அந்தப் பொறுப்பையும் தன் தோளில் தானே ஏற்றி வைத்துக்கொண்டார். ஒரு தொகுதிக்கு 5,000 என்றால், 200 தொகுதிக்கு 10 லட்சம் ரூபாய். அவரே அந்தத் தொகையைத் திரட்டும் பணியையும் ஏற்றுக்கொண்டார். 

அண்ணாவின் புண்ணிய பூமி! 

1963-ல் இந்தி எதிர்ப்புப் போர் மீண்டும் தொடங்கியது. தி.மு.க சூறாவளியாகக் களமிறங்கியது. அதையடுத்து, 1965-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி கருணாநிதி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பாளையங்கோட்டைத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு கருணாநிதியை வந்து பார்த்த அண்ணா, ‘என் தம்பி கருணாநிதி தனிமைச் சிறையில் இருக்கும் இந்த இடம்தான் யாத்திரை செய்ய வேண்டிய புண்ணிய பூமி’ என்றார். 

1966-ல் விருகம்பாக்கத்தில் தி.மு.க தேர்தல் சிறப்பு மாநாடு நடைபெற்றது. 1963-ல் கடற்கரை கூட்டத்தில் சொன்னதுபோல், 10 லட்சத்தோடு கூடுதலாக ஒரு லட்சம் சேர்த்து 11 லட்ச ரூபாயை அண்ணாவிடம் வழங்கினார் கருணாநிதி. அங்கு தி.மு.க வேட்பாளர்களை அறிவித்த அண்ணா, சைதாப்பேட்டை என்று சொல்லிவிட்டு நிறுத்தியவர், வேட்பாளர் பெயர் கருணாநிதி என்று சொல்லாமல், ‘11 லட்சம்’ என்றார். கூட்டம் ஆர்ப்பரித்தது. 

கருணாநிதி கனவு கண்டதுபோல், தி.மு.க 1967 தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. அண்ணா முதல் அமைச்சர் ஆனார். அண்ணாவின் அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் நாவலரும் மூன்றாவது இடத்தில் கருணாநிதியும் இடம்பிடித்தனர். 

அண்ணா அறிந்தவர்... அண்ணாவை அறிந்தவர்!

அண்ணாவும் கருணாநிதியும் - சூரிய உதயம்

தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றியதும், அண்ணா ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கருணாநிதி அண்ணாவைப் பார்க்க அவசரமாக வருவதாக அண்ணாவுக்குத் தகவல் சொல்லப்பட்டது. அதைக் கேட்டு அருகில் இருந்தவர்களிடம், ``கருணாநிதி இப்போது வந்து போலீஸ் இலாக்காவைக் கேட்பார் பாருங்கள்” என்று சொன்னார். அவர் சொன்னதுபோலவே, அண்ணாவைச் சந்தித்த கருணாநிதி போலீஸ் இலாக்காவைக் கேட்டார். யோசித்துச் சொல்கிறேன் என்று கருணாநிதியிடம் பதில் சொன்னார். பக்கத்தில் இருந்தவர்கள் ஆச்சர்யப்பட்டு, `எப்படிச் சரியாகக் கருணாநிதி இதைத்தான் கேட்பார்’ என்று கணித்தீர்கள் என்று கேட்டபோது, அண்ணா லேசாகப் புன்னகைத்தார். பொதுப்பணித்துறை கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் பேருந்துகளை அரசுடைமையாக்கினார். வீராணம் திட்டத்துக்கு அடித்தளம் இட்டார். அதுபோல், அண்ணாவே ஒருமுறை, ``என்னை நன்றாக அறிந்தவர் கருணாநிதி. மற்றவர்கள் நான் என்ன மனநிலையில் இருக்கிறேன் என்று தெரியாமல் எதையாவது உளறிக்கொட்டி என்னிடம் திட்டு வாங்குவார்கள்; ஆனால், கருணாநிதி நான் என்ன மனநிலையில் இருக்கிறேன் என்பதைச் சரியாகத் தெரிந்துகொண்டு, நான் யார் மீது, எந்த விஷயத்தில் கோபமாக இருக்கிறேனோ... அதில் தனக்கும் உடன்பாடு இல்லை என்பதுபோலவே கருணாநிதி பேசுவார். அதன்பிறகு, என் கோபம் தணிந்ததும், அவருடைய கருத்தை ஆணித்தரமாக எடுத்துச் சொல்வார்” அந்த அளவுக்கு என்னை இந்தக் கழகத்தில் நன்றாக அறிந்தவர் கருணாநிதி என்றார். 

யார் முதல்வர்?

1969-ல் அண்ணா மறைந்தார். யார் முதல்வர் என்ற போட்டி நாவலருக்கும் கருணாநிதிக்கும் இடையில் பலமாக இருந்தது. அதில் கருணாநிதியே வெற்றி பெற்றார். அப்போதுதான் அண்ணாவைப்போல் தம்பிகளுக்குக் கடிதம் எழுதவும் தொடங்கினார். தம்பிகளுக்கு எழுதிய கடிதத்தில் ஆரம்பத்தில் தோழா என்றுதான் தொடங்கினார். ஆனால், 1971 ஏப்ரல் மாதத்தில் உடன்பிறப்பே என்று பேசவும் எழுதவும் தொடங்கினார். அவர் பேச்சைத் தொடங்கும்போது, `என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே’ என்று சொல்லும்போது, அந்த வாக்கியத்துக்குக் கூடுதல் நிறுத்தமும் அழுத்தமும் கொடுப்பார்; அதில் கொஞ்சம் உருக்கமும் இருக்கும்! தி.மு.க தொண்டன் மட்டுமல்ல... கேட்பவர் யாராக இருந்தாலும் அதில் கொஞ்சம் மயங்கித்தான்போவார்கள். 

முதல்வர் கருணாநிதி! 

முதல்வராக இருந்த கருணாநிதி ஆட்சியில் நில உச்ச வரம்பு 15 ஏக்கராக ஆனது. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு சதவிகிதம் 25 முதல் 31 ஆக உயர்த்தப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 16 சதவிகிதம் முதல் 18 சதவிகிதமாக உயர்ந்தது. 1970 டிசம்பர் 2-ல் அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டது. 

வரலாற்றுப் பிரிவு! 

1970 காலகட்டத்தில் எம்.ஜி.ஆர்-கருணாநிதிக்கு இடையில் முரண்பாடுகள் முளைவிடத் தொடங்கியிருந்தன. ஆனாலும், 1971 தேர்தலில் கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார். 184 இடங்களில் வெற்றி பெற்று தி.மு.க வரலாறு படைத்தது. அப்போது சினிமா ஷூட்டிங்கில் இருந்த எம்.ஜி.ஆர் ``எனக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வேண்டும். அதனால், நான் ஷூட்டிங்கிலிருந்து வரும்வரை அமைச்சரவையை அறிவிக்க வேண்டாம்” என்று கருணாநிதிக்குத் தகவல் அனுப்பினார். உடனடியாக ப.உ.சண்முகம் வீட்டில் அனைவரையும் அழைத்து கருணாநிதி ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ``அது முக்கியமான துறை, அதில் சின்ன தவறு நடந்தாலும் எதிர்க்கட்சிகளின் தாக்குதல் கடுமையாக இருக்கும். அதனால், கட்சிக்கும் பெயர் கெடும்” அதனால், அந்தத் துறையை அவருக்குக் கொடுக்க வேண்டாம் என்றனர். அதன்பிறகு, துறையைக் கொடுக்கலாம், ஆனால், அதற்கு எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிக்கக் கூடாது” என்று கண்டிஷன் போட்டனர். அப்படியே முடிவெடுக்கப்பட்டது. அதை எம்.ஜி.ஆரிடம் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன்தான் கொண்டு போய் வாசித்துக் காட்டினார். அப்போது ``அப்போ முடியாதுன்றாங்க.... ” எனக் கோபமாகக் கேட்டார் எம்.ஜி.ஆர்! 

கருணாநிதி, எம்.ஜி.ஆர் - சூரிய உதயம்

1972-ல் கருணாநிதி-எம்.ஜி.ஆருக்கு இடையில் இருந்த முரண்பாடுகள் பனிப்போராக மாறியது. 1972 ஜனவரி 17-ல் தஞ்சையில் கூடிய தி.மு.க பொதுக்குழுவில் எம்.ஜி.ஆர் கலந்துகொள்ளவில்லை. அதே ஆண்டு அக்டோபர் மாதம் 8-ம் தேதி, திருக்கழுக்குன்றத்தில் பேசிய எம்.ஜி.ஆர், ``கட்சியிலும் ஆட்சியிலும் பொறுப்பில் இருப்பவர்கள் கணக்குக் காட்ட வேண்டும்” என்றார். அந்தப் பேச்சு கருணாநிதி-எம்.ஜி.ஆர் பனிப்போரை வெளிப்படையாக்கியது. 

எம்.ஜி.ஆருக்குப் பதில் சொன்ன கருணாநிதி, யாரோ ஒரு சலவைத் தொழிலாளி, சீதையைச் சந்தேகிக்கிறான்... அதனால், சீதையை ராமன் அனுப்பினான் காட்டுக்கு! ராமன் அனுப்பலாம். ராமச்சந்திரன் இப்படிக் கழகத்தை காட்டுக்கு அனுப்பத் துணியலாமா என்று கேட்டார். 

அ.தி.மு.க அழியக் கூடாது! 

1972 அக்டோபரில் எம்.ஜி.ஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அக்டோபர் 17-ல் அ.தி.மு.க-வைத் தொடங்கினார் எம்.ஜி.ஆர். `எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க முற்றிலும் அழிந்துவிட வேண்டும்’ என்று எப்போதும் கருணாநிதி நினைத்ததில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  ``எம்.ஜி.ஆரின் பிரிவில் டெல்லியின் சூழ்ச்சி இருந்தது” என்று உறுதியாக நம்பினார் கருணாநிதி. அதற்குக் காரணங்களும் இருந்தன. எம்.ஜி.ஆர் டெல்லிவரை சென்று கருணாநிதிக்கு எதிராக ஊழல் புகார்களைக் கொடுத்தார். திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றார். அது கருணாநிதிக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. 

தமிழகத்தின் மேக்ன கர்ட்டா! 

1975 ஜூன் 25-ல் நெருக்கடி நிலையை அறிவித்தார் பிரதமர் இந்திரா காந்தி. அதையடுத்து 24 மணி நேரத்தில் தி.மு.க பொதுக்குழுவைக் கூட்டிய கருணாநிதி, தன் கைப்பட ஒரு கண்டன அறிக்கையை எழுதினார். அதுதான் அதிகாலை 4 மணிக்கு அந்தப் பொதுக்குழுவின் தீர்மானமாக நிறைவேறியது. அதில், இந்திரா காந்தி சர்வாதிகாரத்துக்கான தொடக்கவிழாவை நடத்தியிருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார் கருணாநிதி. அந்த அறிக்கையை `தமிழகத்தின் மேக்னா கர்ட்டா’ என்று இப்போதும் குறிப்பிடுவார் வைகோ! 

நெருக்கடி தந்த நெருக்கடி நிலை

1976 ஜனவரி 31-ல் தி.மு.க ஆட்சி முதல்முறையாகக் கலைக்கப்பட்டது. தி.மு.க-வின் மீது அராஜகம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. மாறனையும், மு.க.ஸ்டாலினையும் கைது செய்ய வீட்டுக்கு போலீஸ் வந்தது. அந்த நேரத்தில் வீட்டில் இருந்த கருணாநிதி, ``மாறன் டெல்லியில் இருக்கிறார்; ஸ்டாலின் ஒரு கூட்டத்துக்குப் போயிருக்கிறார்; அவர்கள் வந்ததும் நானே அனுப்பி வைக்கிறேன்” என்று சொன்ன கருணாநிதி, மறுநாள் காலை இருவரையும் போலீஸ் நிலையத்துக்குச் சொன்னபடி அனுப்பி வைத்தார். அப்போது ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டார். தி.மு.க-வினரை சிறைக்குள் வைத்துச் செய்த சித்ரவதையில் ஸ்டாலினைக் கொலை செய்யும் அளவுக்குப்போனது. அதைத் தடுக்க முயன்ற சிட்டி பாபு அடிபட்டே செத்துப் போனார். 

ஈழம்தான் பெருமை! 

தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு 1976 பிப்ரவரி 15-ம் தேதி சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் பேசிய அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, ``விடுதலைப் புலிகளை ஆதரித்து இலங்கை-இந்தியாவின் நட்பு கெடுவதற்கு கருணாநிதி காரணமாக இருக்கிறார் என்றார். ``தி.மு.க-வின் ஆட்சி கலைக்கப்பட அதுதான் காரணம் என்றால், தி.மு.க-வுக்கு அதைவிடப் பெருமை இருக்க முடியாது” என்று பதிலடி கொடுத்தார் கருணாநிதி. அந்தக் காலகட்டத்தில் கடுமையான பத்திரிகைத் தணிக்கை இருந்தது. எல்லாவற்றையும் சாதுர்யமாகச் சமாளித்தார் கருணாநிதி. 1976 பிப்ரவரி 3 அன்று அண்ணா சதுக்கத்துக்கு மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல் வெளியிட்டார். மிசா சட்டத்தில் யார் யாரெல்லாம் கைது செய்யப்பட்டவர்கள் என்ற பட்டியல் அது. அதைச் சாதுர்யமாக அவர் வெளியிட்டார். 

நண்பர் தலைவரானார்! 

க.அன்பழகன், கருணாநிதி

தி.மு.க-வை கலாசாரக் கழகமாக மாற்றலாம் என்றனர் சிலர். கருணாநிதி அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. ``கப்பல் கேப்டன் மூழ்கும் கப்பலை விட்டுச் செல்வதில்லை என்றார். எமர்ஜென்சி காலத்தில் அதை எதிர்த்த கருணாநிதியின் போர்க்குணம்தான், தி.மு.க-வில் கருணாநிதியின் தலைமையை அதுவரை ஏற்றுக்கொள்ளாதவர்களையும் ஏற்க வைத்தது. அதன்பிறகுதான் பேராசிரியர் அன்பழகன், ``தன் நண்பர் கருணாநிதியை தலைவர் கருணாநிதியாக ஏற்றுக்கொண்டேன்” என்று இப்போதும் சொல்வார். 

தி.மு.க-தான் உயிர்! 

எமர்ஜென்சி நேரத்தில் தி.மு.க-வுக்குத் தடை விதிக்கப்படலாம் என்ற நிலை இருந்தது. அப்போது கருணாநிதி, நாவலர், நாகநாதன் மூவரும் பீச்சில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது இதைப் பற்றிய விவாதம் வந்தபோது, நாவலர், ``கட்சியைத் தடை செய்தால் என்ன? வேற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்குவோம்! அதற்கு ஏன் கவலைப்படறீங்க? என்றார். அப்போது குறுக்கிட்ட கருணாநிதி, ``அப்படியில்ல நாவலர், தி.மு.க அண்ணா தொடங்கியது. அதில் அவரின் உயிர் இருக்கிறது. இதைத் தடை செய்தால், கட்சியைக் கொஞ்சம் தள்ளிவைத்து நடத்துவோம். எம்.ஜி.ஆர் நடத்தும் கட்சியில் அண்ணாவும் இருக்கிறது. தி.மு.க-வும் இருக்கிறது. நாம் அதைப் பார்த்துக் கூட ஆறுதல் அடைந்து கொள்வோம். ஆனால், வேறு பெயரில் கட்சியைத் தொடங்க வேண்டாம். தி.மு.க திரும்ப முளைக்கும் நாவலரே! என்றார். 

ஆட்சியில் இருந்து வனவாசம்!

1977-ல் எமர்ஜென்சி முடிவுக்கு வந்தது. ஆனால், அதே ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தலில் எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தார். அப்போது இருந்து 1989 வரை கருணாநிதியால் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் எம்.ஜி.ஆருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் கருணாநிதி. உள்ளாட்சித் தேர்தல்களில் ஒருநாளும் எம்.ஜி.ஆரால் ஜொலிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு ஆட்சி கையில் இல்லாதபோதும், தி.மு.க என்ற கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார் கருணாநிதி. சட்டமன்றத்திலும், அரசியல் அரங்கிலும் கருணாநிதி எதிரில் இருந்து எழுப்பும் பிரச்னைகளை மையமாக வைத்தே எம்.ஜி.ஆர் ஆட்சி நடந்தது. 

1977 ஆகஸ்ட் 8-ம் தேதி இலங்கைத் தமிழர்களுக்காகப் பல லட்சம் பேரைத் திரட்டி பிரமாண்ட பேரணியை நடத்தினார் கருணாநிதி. 1981 செப்டம்பர் 15-ம் தேதி இலங்கைத் தமிழர் விவகாரத்துக்காக எம்.ஜி.ஆர் அரசு கருணாநிதியைக் கைது செய்தது. 1983-ல் மத்திய மாநில அரசுகள் இலங்கைத் தமிழர் பிரச்னையில் அக்கறை காட்ட வேண்டும் என்று வலியுறுத்தி தன் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கருணாநிதியும், பேராசிரியர் அன்பழகனும் அறிவித்தனர். 

மீண்டும் முதல்வர்!

1989-ல் மீண்டும் கருணாநிதி முதல் அமைச்சரானார். அந்தக் காலகட்டத்தில்தான் பெண்களுக்குச் சொத்துரிமை, அரசுப் பணிகளில் 30 சதவிகிதம் இட ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவிகிதம் தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் இந்தியா இலங்கைக்கு அமைதிப்படை என்ற பெயரில் ராணுவத்தை அனுப்பி வைத்தது. தமிழர்களின் நலனைக் காப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட அமைதிப்படை, இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தது. ஒரு கட்டத்தில் இந்திய அமைதிப்படை இலங்கையைவிட்டு வெளியேறியது. அது டெல்லி போவதற்கு முன் தமிழகம் வந்தது. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அமைதிப்படையை வரவேற்கப் போகவில்லை. ஏன் போகவில்லை என்ற கேள்வி எழுந்தபோது, ``இந்திய ராணுவம் தமிழர்களை தாக்கி நசுக்கிட முயற்சி செய்ததால்தான் அவர்களை வரவேற்கச் செல்லவில்லை” என்றார் கருணாநிதி. அந்தப் பதில் டெல்லியிலும், இலங்கையிலும் அதிர்ச்சியாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு விடுதலைப் புலிகள் நடமாட்டம் தமிழகத்தில் இருப்பதாகச் சொல்லி தி.மு.க அரசு 1991-ல் மீண்டும் கவிழ்க்கப்பட்டது. 

கருணாநிதி

1991 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் நடைபெற்ற ராஜிவ் படுகொலை தி.மு.க-வின் வெற்றியைப் பறித்தது. அப்போது நடந்த பொதுத் தேர்தலில் தி.மு.க சார்பில் கருணாநிதி மட்டும்தான் வெற்றி பெற்றார். ஒத்திவைக்கப்பட்ட தொகுதியில் தேர்தல் நடந்தபோது பரிதி இளம்வழுதி வெற்றி பெற்றார். அதில் கருணாநிதி தன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அந்தக் காலகட்டத்தில் தி.மு.க-வின் அஸ்தமனம் ஆரம்பித்துவிட்டதாக பலர் ஆருடம் சொன்னார்கள். 

1993-ல் தி.மு.க-வின் போர்வாள் என்றழைக்கப்பட்ட வைகோவுக்கும் கருணாநிதிக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்தன. தி.மு.க-விலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டார். அப்போது அவருடன் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் 9 பேர் போனார்கள். அதை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய தமிழ் மாநிலச் செயலாளர் சங்கரய்யா, தி.மு.க-வில் நிகழ்ந்த செங்குத்துப் பிளவு என்று வர்ணித்தார். ஏனென்றால், எம்.ஜி.ஆர் பிரிந்தபோதுகூட இத்தனை மாவட்டச் செயலாளர்கள் அவரோடு போகவில்லை. அதனால், தி.மு.க-வின் அஸ்தமனம் ஆரம்பித்துவிட்டது என்று அப்போது பலரும் ஆருடம் சொன்னார்கள்.  

நல்லாட்சி நாயகன்!

எல்லா ஆருடங்களையும் பொய்யாக்கி 1996-2001ல் ஆட்சிக்கு வந்தார் கருணாநிதி. மிகப்பெரிய வெற்றி பெற்றார். அந்த ஆட்சியில்தான், பெண்களுக்கு உள்ளாட்சியில் 33 சதவிகித இட ஒதுக்கீடு, தொழில் முனைவோருக்கு ஒற்றைச் சாளர முறை, டைடல் பூங்கா, அருந்ததியினருக்கு 3 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு, நெம்மேலி கடல்நீர் திட்டம், மெட்ரோ ரயில், ஒகேனக்கல்- பரமக்குடி கூட்டுக்குடி நீர்த் திட்டம்,  உழவர் சந்தை, சமத்துவ புரம் எல்லாம் கொண்டு வந்தார். சிறப்பான ஆட்சியாக இருந்தாலும், அதன்பிறகும் தி.மு.க தேர்தலில் தோற்றது. சிவீல் சர்வீஸ் நேர்முகத் தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளில், `கருணாநிதியின் அந்த ஆட்சிக்காலம் தமிழகத்தின் மிகச்சிறந்த ஆட்சிக் காலம் என்றும், ஆனாலும் கருணாநிதி ஏன் தோற்றார்’ என்றும் கேட்கப்பட்டது.  

நள்ளிரவு கைது! 

முதல்வர் பதவியை கருணாநிதி இழந்ததும், 2001 ஜூன் 30 அன்று நள்ளிரவில் கருணாநிதியின் வீடு புகுந்தது ஜெயலலிதாவின் காவல்துறை. அவ்வளவு ஆற்றல் மிகுந்த அரசியலின் மூத்த தலைவரை போலீஸ் கையை முறுக்கியது... கொல்றாங்களே... கொல்றாங்களே... என்று அலறினார் கருணாநிதி. அந்தக் கதறல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதும் இந்தியாவே கொந்தளித்தது. தமிழகத்தின் கவர்னர் திரும்ப அழைக்கப்பட்டார். தமிழக அரசு கலைக்கப்படக்கூடிய சூழல் உருவானது. நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்திய கருணாநிதி சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட நேரத்தில் கருணாநிதியிடம் ஒரு காகிதம் கொடுக்கப்பட்டது. எதையாவது எழுதிக் கொடுங்கள் என்று கேட்டார் அந்தப் பத்திரிகையாளர் அந்த நெருக்கடியான நேரத்தில் சிரித்துக்கொண்டே கருணாநிதி, `அநீதி வீழும்! அறம் வெல்லும்’ என்று எழுதிக் கொடுத்தார். 

கூட்டணி ஆட்சி! 

கருணாநிதி

2006-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றாலும், தி.மு.க-வுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், சாமர்த்தியமாக காங்கிரஸ், பா.ம.க உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சியை 5 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தினார் கருணாநிதி. அந்தக் காலகட்டத்தில் தி.மு.க அமைச்சர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரமுகர்கள் மற்றும் கருணாநிதியின் குடும்பத்தினர் மீது பல சர்ச்சைகள் எழுந்தன. 2007-க்குப் பிறகு இலங்கையில் இறுதிப்போர் வலுவடைந்துகொண்டே போனது. அதன் அபாயத்தை உணர்ந்த கருணாநிதி, 23 ஏப்ரல் 2008-ல் இலங்கையில் அமைதி ஏற்படுத்த இந்தியா உதவி வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். அதன் தொடர்ச்சியாக பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கையையும் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையையும் நிறுத்த கருணாநிதி கேட்டுக்கொண்டார். 

முதல்வர் என்ற எல்லைக்குள் முயன்றார்! 

ஈழத்தில் நடந்த இறுதிப்போரை நிறுத்த முதல்வர் என்ற எல்லைக்குள் கருணாநிதி முயற்சி செய்தார். 2008 டிசம்பர் 4-ல் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக்கொண்டு டெல்லி போனார் கருணாநிதி. பிரதமரைச் சந்தித்து, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பச் சொல்லி கேட்டுக் கொண்டார். அதன்பிறகு 28 மார்ச் 2009-ல் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதியில் கருணாநிதி உண்ணாவிரதம் மேற்கொண்டார். தமிழர்கள் அழிவில் இருந்தனர். அப்போது ராஜினாமா செய்யலாம் என்ற முடிவுக்குக் கருணாநிதி வந்தார். ஆனால், ராஜினாமா செய்தால், இப்போது கொடுக்கும் அழுத்தத்தைக்கூட மத்திய அரசுக்குக் கொடுக்க முடியாது என்று கட்சிக்குள் சொன்னார்கள். அதையடுத்து மெரினாவில் உண்ணாவிரதம் இருந்தார் கருணாநிதி. சிதம்பரம், பிரணாப் முகர்ஜி கொடுத்த வாக்குறுதிகளை நம்பி உண்ணாவிரத்தைக் கைவிட்டார். ஆனால், அவை இலங்கையில் எந்த நம்பிக்கையும் ஏற்படவில்லை. அது கருணாநிதியின் தமிழர் தலைவர் என்ற இமேஜை கொஞ்சம் டேமேஜ் ஆக்கியது. 

மீண்டும் வனவாசம்! 

2011-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க படுதோல்வியடைந்தது. சட்டமன்றத்தில் மூன்றாவது இடத்துக்குப் போனது. எம்.ஜி.ஆர் காலத்தில் கூட கருணாநிதிக்கு இப்படிப்பட்ட இக்கட்டான நிலை உருவானதில்லை. 2016 சட்டமன்றத் தேர்தலில் அவர் தேர்தல் பிரசாரத்துக்குப் போகவில்லை. திருவாரூரில் மட்டும் பேசினார். ஆனால், வெற்றி பெற்றார். தி.மு.க-வும் அதுவரை எந்த எதிர்க்கட்சியும் பெறாத அளவுக்கு 89 இடங்களைப் பெற்றது. ஆனால், அதன்பிறகு கருணாநிதியின் பேச்சும், எழுத்தும், நினைவாற்றலும் குறையத் தொடங்கின. அதனால், அவர் பெரும்பாலும் கோபாலபுரம், அறிவாலயம் மட்டும் வந்துபோவதை வழக்கமாக்கிக் கொண்டார். 

அறிவாலயம் சொன்ன அபாயச் செய்தி! 

2016 செப்டம்பர் 25-ம் தேதி காவேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் கருணாநிதி. 2016 அக்டோபர் 25-ம் தேதி அறிவாலயத்திலிருந்து விசித்திரமாக ஓர் அறிக்கை வந்தது. அதில், ``தலைவருக்கு உடல்நலம் சரியில்லை; அதனால், தொண்டர்கள் நிர்வாகிகள் யாரும் தலைவரைப் பார்க்க வர வேண்டாம்” என்று இருந்தது. அதன் பிறகுதான் கருணாநிதியின் வேலைகள் முற்றிலும் பிசகின. அப்போது அவருக்கு ட்ரக்கியோஸ்டோமி பொருத்தப்பட்டது. அப்போது முதல், முழுமையான ஓய்வில் இருந்து வந்தார். 2018 ஜூலை 18-ம் தேதி மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் கருணாநிதி. அன்று மாலை வீடு திரும்பியவருக்குக் காய்ச்சலும் உடல்நலக்குறைவும் அதிகமானது. அதன்பிறகு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 27-ம் தேதி மீண்டும் காவேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். முதல்முறையாகக் கருணாநிதி ஆம்புலன்ஸில்  காவேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சரியாக 7 நாள்கள் கழித்து மீண்டும் அவர் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதயத் துடிப்பு சில நொடிகள் நின்றன. அதனால், தி.மு.க தலைவர்களிடமும் தொண்டர்களிடமும் பதற்றம் அதிகரித்தது. ஆனால், சில நொடிகளில் நின்ற இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. 95 வயதில் நின்ற இதயம் துடிக்க ஆரம்பித்தது மருத்துவ உலகின் அதிசயம் என்று சொல்கின்றனர். 

அஸ்தமனம்

அஸ்தமனம்! 

2018 ஆகஸ்ட் 7 அன்று மாலை 6.10 மணியளவில் கருணாநிதியின் உயிர் பிரிந்தது. அவர் உடல் அவர் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்திலும், சி.ஐ.டி நகர் காலனி வீட்டிலும் வைக்கப்பட்டு, 8-ம் தேதி (இன்று) அதிகாலை ராஜாஜி ஹாலுக்குக் கொண்டுவரப்பட்டது. 

மரணத்துக்குப் பின்னும் போராட்டம்! 

தன் வாழ்நாள் முழுவதும் பொதுவாழ்க்கையில் போராடியர், முதுமையின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளால் மருத்துவத்துடன் போராடினார். கருணாநிதி, தன் உயிர் மூச்சாக நேசித்த அரசியல், அவர்  இறந்தபிறகும் அவரை நிம்மதியாக இருக்கவிடவில்லை! கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரீனாவில் இடம் இல்லை அரசாங்கம் மறுத்ததால், தி.மு.க நீதிமன்றத்தை நாடியது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மெரீனாவில் இடம் ஒதுக்கித் தரலாம் என்று உத்தரவிட்டது. 

இறுதிப் பயணம்! 

ராஜாஜி ஹாலிலிருந்து இறுதிப் பயணம் தொடங்கியது. ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ள கருணாநிதியின் கல்லறை வாசகம், ``ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்! 

https://www.vikatan.com/news/politics/133408-rise-and-fall-the-story-of-dmk-supremo-karunanidhi.html

Link to comment
Share on other sites

திராவிட இயக்க வரலாற்றில் முக்கிய அத்தியாயம் 'கலைஞர்' கருணாநிதி

திராவிடப் போராளி கலைஞர் கருணாநிதிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

காலம் சென்ற முன்னாள் தமிழக முதலமைச்சர்மற்றும் திமுக தலைவர் மு. கருணாநிதியின் அரசியல் வாழ்க்கை, போராட்ட குணம் மற்றும் சிறப்பு அம்சங்கள் ஆகியவை குறித்து பிபிசி தமிழுடன் எழுத்தாளரும், பத்திரிகையாளருமான வாஸந்தி பகிர்ந்து கொண்டார்.

"உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு" என்ற கோஷத்தில் பிறந்தது கலைஞரின் அரசியல் வாழ்வு. இந்தி ஒழிக என்று தனது தமிழ் பற்றை, உதிரத்தால் திருக்குவளை/ திருவாவூர் சுவர்களில் பகிரங்கப்படுத்திய பதின்ம வயதுச் சிறுவனின் அரசியல் பயணம், ஒரு மாநிலத்தின் வரலாற்றுடன் பின்னிப்பிணையும் என அன்று யாரும் நினைத்திருக்கமாட்டார்கள்.

பெரியாரின் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்கத்துடன் ஒன்றினான் அந்தச் சிறுவன். எத்தகைய வரலாற்றுத் திருப்பம் அது என அப்போது யாரும் அறியவில்லை. வரலாறு படைத்த சிறுவன், கலைஞராய் , அரசியல்வாதியாய் , முதல்வராய், திமுக தொண்டர்களின் பிதாமகராய், தமிழினத்தலைவராய் வாழ்ந்த எம்மான் - முத்துவேல் கருணாநிதி.

கருணாநிதி: அஸ்தமிக்காத சூரியன்

திராவிட இயக்கத்தின் சூத்திரதாரிகளுள் முக்கியமானவர் அவர். அவருடைய வளர்ச்சி திராவிட இயக்க வரலாற்றுடன் சம்பந்தப்பட்டது. இயக்கத்தின் சித்தாந்தங்களை செயல்படுத்த வேண்டுமானால் அரசியல் அதிகாரம் தேவை என்றுணர்ந்த அண்ணாத்துரையின் வழி சென்று தோள்கொடுத்தவர்.

மாநில மொழியின் முக்கியத்துவத்தை மத்திய அரசுக்கு தெளிவு படுத்திய பெருமை திராவிட இயக்கத்தைச் சார்ந்து வந்த திராவிடமுன்னேற்றக்கழகத்தைச் சேர்ந்தது. டால்மியாபுரத்தைக் கள்ளக்குடியாக மாற்ற அவர் ரயில் தண்டவாளத்தில் படுத்தது தமிழக வரலாற்று ஏடுகளில் இடம் பெற்றது.

திராவிட முன்னேற்றக் கழகம் வளர அதன் பொருளாளராக அரும்பாடுபட்டது இப்போது மங்கிய நினைவாக நிற்கிறது. பேச்சாற்றல் மூலம் தொண்டர்களைக் கவர்ந்தவர். உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்ற சொற்கள் திரையரங்குகளில் ஒலித்து ஃபிலிம் சுருளுக்குள் ஒளிந்திருக்கின்றன. கேட்பவருக்கு இப்பவும் சிலிர்க்கிறது.

''என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே''

அண்ணாவின் மறைவுக்குப் பின் அதனாலேயே அவர்தான் "அடுத்த முதல்வர்" என்ற எண்ணம் திமுகவினருக்கு ஏற்பட்டது. பல்லாண்டுகளாக ஒரு மாபெரும் திராவிட கட்சியின் தலைவராக இருப்பது அதிசயம். அதைவிட அதிசயம், 60 ஆண்டு காலமாக அவரது சட்டமன்றப்பணி தொடர்ந்தது. அத்தகைய ஆளுமையைப் பார்ப்பது அபூர்வமானது.

திராவிடப் போராளி கலைஞர் கருணாநிதிபடத்தின் காப்புரிமைIMRAN QUERESHI

சூரிய உதயத்துக்கு முன்பே எழுந்து, அனைத்து பத்திரிகைகளையும் படிப்பவர். முரசொலியில் தினமும் உடன்பிறப்புகளுடன் நேரடியாகப் பேசுவதுபோல், அவர் சமீப காலம்வரை கடிதம் எழுதி தொண்டர்களுடன் தொடர்பை வைத்திருந்தார். 'என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே' என்று அவர் பேச்சை தொடங்கும்போதே, கூட்டத்தில் தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு கரகோஷம் எழுப்பியதை நான் கேட்டிருக்கிறேன்.

அவர் நள்ளிரவில் கைதாகி பிறகு வெளியே வந்திருந்த நேரம் அது. அறிவாலயத்தில் ஒரு புத்தக வெளியீட்டுக்கு வந்திருந்தார். பேருந்து வேலை நிறுத்தத்தை பொருட்படுத்தாமல் அரங்கம் வழிய வந்திருந்த கூட்டம் அவரைப்பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டது. அவர் புத்தகத்தை வெளியிட்டார். புத்தகத்தைப் பற்றி என்னைத்தவிர மேடையில் இருந்தவர் யாரும் பேசவில்லை. கலைஞரைப் பற்றியே பேசினார்கள். 'உன் கை பட்டால் தமிழ் துலங்கும், உன் மேல் கை பட்டால், தமிழ் குலுங்கும்' என்றார் கவிஞர் வாலி. கருணாநிதியின் கண்களில் நீர் நிரம்பிற்று.

அவருக்கு வேண்டியிருந்தது ஆதரவாளர்களின், தொண்டர்களின் அன்பு. அவர் வளர்த்துக்கொண்ட பிம்பம் அது. கட்சியைக் கட்டுக்குள் வைக்கத் தேவைப்பட்ட பிதாமகர் பிம்பம். அது, அர்த்தம் பொதிந்தது. கட்சிக் குடும்பத்தின் அங்கத்தினர்களுக்கெல்லாம் குடும்பத்தின் கண்ணியத்தையும் பெருமையையும் காப்பாற்ற வேண்டிய கடமை இருந்தது. அவரே தலைவர். அவர்களது ரட்சகர்.

திராவிடப் போராளி கலைஞர் கருணாநிதிபடத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89

"வேறு எங்கேயும் ஒரு தலைவருக்கு ம் அடிமட்ட தொண்டருக்கும் இருக்கும் அத்தகைய நெருக்கத்தைப் பார்க்க முடியாது. தொண்டர்களின் பெயரெல்லாம் அவருக்குத் தெரியும். அவர்களது பிரச்சrனைகள் புரியும். அதனால்தான் அவருக்காக தங்களின் உயிரை விடவும் அவர்கள் தயாராய் இருக்கிறார்கள்" என்றார் ஒரு திமுக தலைவர் பல ஆண்டுகளுக்கு முன்பு.

திமுக ஒரு ஜனநாயக அமைப்பு என்று கருணாநிதி சொல்வதுண்டு. ஆனால், அவருடைய அனுமதியும் சம்மதமும் இல்லாமல் கட்சியில் எதுவும் நடக்காது. அவருடைய ஆளுமையும் திறமையும் அரசியல் சாணக்கியமும் எவருக்கும் இல்லை என்பதால் யாருக்கும் அவரைக் கேள்வி கேட்கத் துணிச்சல் இல்லை. திமுகவின் சித்தாந்தங்களுக்கு விரோதமாக பாரதிய ஜனதா கட்சியுடன் தோழமை வைத்தபோதும். அது காலத்தின் கட்டாயம் என்ற வாதத்தை, முழுமனமின்றி ஏற்றுக் கொண்டார்கள்.

"தலைவரின் வியூகம். சரியாகவே இருக்கும். எமர்ஜென்சியை எதிர்க்கத் துணிந்தவர், ஒத்து வராவிட்டால் விலகவும் செய்வார்" என்று அவர்கள் கூறினார்கள்.

அவரைப் பதின்ம வயதிலேயே ஆட்கொண்டிருந்த திராவிட சித்தந்தம் நீர்த்துப் போய்விட்டது. சித்தாந்தங்கள் காலப்போக்கில் சமூகவியலின் தேவைக்கேற்ப நீர்த்துப்போகும். பிராமண எதிர்ப்பில் ஆரம்பித்த திராவிட இயக்கத்தின் குறிக்கோள், இன்று அர்த்தமற்றது. 3% உயர் ஜாதியினரின் ஆதிக்கம் ஏற்படுத்திய விரோதமும் தமிழுணர்வும் தமிழ் அடையாளமும் அவரை இயக்கத்தின்பால் இழுத்தன.

திராவிடப் போராளி

நகைமுரணாக கர்நாடகத்தில் பிறந்த, கன்னடத்தை அதிக சரளத்துடன் பேசிய பார்ப்பன குலத்துப்பெண் அவரது அரசியல் எதிரி ஆனார்.

அவரைப்பொருத்தவரை அது வரலாற்றுப்பிழை. அவர் நேசித்த திமுகவின் "தமிழ் தேசியம்" தமிழ் அடையாளத்தில் மையம் கொண்டது. திராவிட இயக்கம் ஒரு சமுத்திரக் கடைசல். அதில் அவர் பங்கு கொண்டிருந்தார். ஜாதி அடுக்கில் தன்னைப்போல கீழ் நிலையில் இருப்பவர்கள், மேலே எழ ஊன்றுகோல் கிடைத்ததாகப் பரவசப்பட்டார்.

திராவிடப் போராளி கலைஞர் கருணாநிதிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

உறங்கிக்கொண்டிருந்த சமூகத்தை உசுப்பிவிடும் சக்தி ஓர் இயக்கத்துக்கு இருக்குமானால், அதன் விளைவு நெடுங்காலத்துக்கு மகத்தானதாக இருக்கும்.

'தலித்துகள் ஏமாற்றப்பட்டதாக நினைக்கலாம். ஆனால் அந்த மாபெரும் கடைசலினால் இன்று அவர்கள் வாய் திறந்து பேசுகிறார்கள்." என்றார் ஒரு முறை. தமிழ்நாடு இன்னும் ஒரு காலப் பெயர்ச்சியில் இருக்கிறது.

'ஜாதி உணர்வு அதிக வலுவாக இருக்கிறது இப்போது. ஜாதிச் சண்டைகளும் அதிகரித்துவிட்டன. உண்மைதான். ஆனால் பலமும் அதிகாரமும் கிடைத்துவிட்டதன் பரிணாம நிகழ்வு அது. போகப்போக சமநிலை பெற்றுவிடும். இந்த முரண்பாடுகள் அதிகாரப் பங்கீட்டிற்கான உரையாடலைத் துவக்கலாம்.' என்கிறார்கள் அறிஞர்கள்.

துரதிருஷ்டவசமாக போட்டி அரசியலில், வாக்கு வங்கி முக்கியமாகிப் போனதன் விளைவாக திராவிடக்கட்சிகள் இரண்டும் தேர்தலில் ஜாதிகளின் பலத்தை அங்கீகரித்து, 'பிரதிநித்துவம்' கொடுத்து வளர்க்கிறார்கள். திராவிட இயக்கம் வெற்றியா தோல்வியா என்ற கேள்வி அர்த்தமற்றது.

அன்றைய காலகட்டத்தில் தேவைப்பட்டதால் அது நடந்தது. வேறு எந்த மாநிலத்திலும் ஏற்படாத சமூக எழுச்சி அது. எங்கும் இல்லாத வகையில் பின்தங்கிய வகுப்பினருக்கு 69% இடஒதுக்கீடு, தமிழ் நாட்டில் சாத்தியமானதும் அதனால்தான். அதை சாத்தியப்படுத்தியவர் தங்கள் தலைவர் கருணாநிதி என்பதால் திமுக தொண்டர்கள் 'சமூக நீதிக்காவலர்' என்று அவரை அழைத்தார்கள். அவருக்கு எத்தனை அடைமொழிகள் இருந்தாலும், திராவிட இயக்க வரலாற்றில் முக்கிய அத்தியாயம் அவருடையது.

கருணாநிதி - ஜெயலலிதா இடையிலானது சமமான போட்டியா?

பத்து ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியை நான் மிக நெருக்கத்தில் பார்த்து பிரமித்திருக்கிறேன். வெளியில் இருந்து வந்த எனக்கு, ஒரு நாடகத்தின் காட்சிகள் மாறி மாறி நடப்பதாகத் தோன்றும்.

ஒரு முன்னாள் நடிகைக்கும், ஒரு வசனகர்த்தாவுக்கும் இடையே நடந்த இதிகாசப் போர் போல, அது ஒரு சமனற்ற போட்டி என்று தோன்றும்.

அத்தகைய போரில் தலைவர்கள் அதீதமாகப் போற்றப்படவேண்டியது அவசியம். தொண்டர்களுக்கு அது உத்வேகத்தைக் கொடுக்கும். மக்களைத் தொண்டர்களாக மாற்றவும் உதவும். அதுவே திராவிட கட்சிகளின் நடைமுறை ஆயிற்று.

தலைவர் அசாதாரண வல்லமையும் ஆற்றலும் படைத்தவராக, தொண்டர்களை ரட்சிக்கும் ஆன்மீக பலம் உள்ளவர்களாகக் காண்பிக்கப்பட வேண்டும்.

தலைவருக்கும் தொண்டனுக்கும் இடையே ஓர் அகழி ஏற்படும். ஆனால் கருணாநிதி அந்தப் பிளவுபடுத்தும் ஐதீகத்திலும், தொண்டர்களுக்கு நெருக்கமாக இருப்பதைக் காண்பிக்கத் தவறவில்லை.

கட்சியுடன் அவருக்கு இருக்கும் 75 ஆண்டுகளுக்கு மேலான தொடர்பும், பெரியார், அண்ணா ஆகியோருடனான நெருங்கிய உறவும் தொண்டனுக்கு மதிப்பையும் மரியாதையையும் ஏற்படுத்துவதில் வியப்பில்லை.

திராவிடப் போராளி கலைஞர் கருணாநிதிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionதிராவிடப் போராளி கலைஞர் கருணாநிதி

ஒரு நெடிய எழுச்சி மிக்க வரலாற்றுடன் சம்மந்தப்பட்டவர் அவர். அதுவே அவரது ஆளுமையின் பலம். அவரது கட்சி, தேர்தலில் தோற்றபோது " நான் இதுக்கெல்லாம் இப்ப கலங்கறதே இல்லே. உணர்ச்சிவசப்பட்ட காலமெல்லாம் போச்சு. நான் இதையும் பார்த்திருக்கிறேன். இதற்கு மேலேயும் பார்த்திருக்கிறேன் " என்று அவரை பேட்டி காணும்போது என்னிடம் கூறினார். அதற்குப் பிறகும் உணர்ச்சி வசப்படுத்தக்கூடிய பல நிகழ்வுகளை அவர் பார்த்துவிட்டார்.

உடல் தளர்ந்துவிட்ட வயதில் மனம் மோன நிலையை எட்டுமோ என்னவோ. காலம் மாறிவிட்டதை கலைஞர், அறிந்திருந்தார். காந்தம்போல் இழுக்கக்கூடிய பேச்சு நின்றுபோனது. அதற்கு முன்பு அவரது எழுத்துப் பணிஓயாமல் நடந்தது. தத்துவம் பேசியது. அதனால் ராமானுஜரைப் பற்றி நீண்ட நாடகம் எழுத முடிந்தது. 2016-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது பிரச்சார மேடையில் அவர் அமர்ந்தது, பார்த்தவரையெல்லாம் நெகிழ்வித்தது.

அவரது பரம வைரியாக இருந்த, அவரை வீழ்த்தவே அரசியல் செய்த ஜெயலலிதா இறந்தபோது, உண்மையான துக்கம் அவரை ஆட்கொண்டது. மனசு விசாலமாக விரிந்திருந்தது. எதையும் தாங்கியிருந்த இதயம் அது. அதில் இப்போது விருப்பு வெறுப்பு இல்லை. அன்பே சிவம் என்ற நிலையில் மோனம் ஆட்கொண்டிருந்தது. அப்படித்தான் அவர் இருந்திருக்க வேண்டும், இயற்கை அவரது தளர்ந்த உடலை எடுத்துச் சென்றபோது.

https://www.bbc.com/tamil/india-44991676

Link to comment
Share on other sites

கருணாநிதி: தன் வாழ்க்கையால் வரலாற்றை மாற்றிய தலைவர்!

 

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

கலைஞர். சமகாலத்தில் இந்தியா என்கிற ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு சொல்.

கருணாநிதி: தன் வாழ்க்கையால் வரலாற்றை மாற்றிய தலைவர்!

ஐம்பதாண்டு கால தமிழக அரசியலைத் கலைஞரைச் சுற்றியே அமைந்திருக்கிறது என்று சொல்வார்கள். அது வெறும் பகட்டு வார்த்தை அல்ல. வரலாற்று உண்மை.

அந்த அளவிற்கு அர்த்தமுள்ளதொரு வாழ்வை வாழ்ந்து காட்டியவர் என்று வரலாற்றில் என்றென்றும் அவர் பெயர் நிலைக்கும்.

அவர் தான் நம்பிய, தான் ஏற்றுக்கொண்ட சமூக நீதி எனும் தத்துவத்திற்காக, அதனைச் செயலாக்கிக் காட்டுவதற்காகத்தனது வாழ்நாளின் எண்பது வருடங்களைச் செலவிட்டவர் என்பதனை அதற்கான சில நூறு சான்றுகளோடு அவரது எதிரிகளால்கூடச் சொல்ல முடியும்.

தான் ஏற்ற பதவியின் வழியே அவர் மகளிருக்கான ஏராளமான திட்டங்களைத் துவக்கி வைத்தார்.அதன் மூலம் அவர்களது விடுதலையை உறுதி செய்தார். மற்ற பல மாநிலங்களில் பெண்கள் நிலை தாழ்ந்துகொண்டிருந்தபோது தமிழகத்தில் பெண்கள் சிறகுகளை விரித்துப் பறந்துகொண்டிப்பதற்கான காரணகர்த்தாவாக அவர் இருக்கிறார்.

நாட்டின் சரிபாதியான பெண் இனம், இந்தச் சமூகம் உண்டாக்கியிருந்த தளைகளால் கட்டுண்டு கிடந்தபோது அவர்களது உரிமைகளை மீட்டுக்கொடுக்கும் திராவிட இனத்தின் நாயகனாக அவரே இருந்தார். தந்தை பெரியாரின் எண்ணங்களில், கொள்கைகளில் ஒலித்துக்கொண்டிருந்த பெண் விடுதலைக்கான வேட்கையை நிறைவேற்றும் தலைவராக அவர் உருவெடுத்தார் .

குரலற்றவர்களின் குரலாகத் திகழ்பவர் அவர். அதனால்தான் இடஒதுக்கீட்டின் வழியே விளிம்பு நிலையில் வாழக்கூடிய எண்ணற்ற பிரிவினருக்கான சட்டங்களை தனது ஆட்சி காலத்தில் தீட்டி நடைமுறைக்கு கொண்டுவந்தார்.

பெண்களின் வாழ்க்கையை மாற்றி அமைப்பதென்பது அத்தனை எளிதான காரணமல்ல வரலாற்றில் பெண்ணின் இடம் எதுவென இந்தத் தந்தைவழிச் சமூகம் பலநூற்றாண்டுகளாக வரையறுத்து வைத்திருக்கிறது. அந்தஇடத்திலிருந்து பெண்ணை வெளியே கொண்டுவருவதுஎன்பது அத்தனை எளிதானதல்ல. அதனைஉடைத்தெறிவதற்கான முதல் முயற்சியாக பெண்ணுக்குச்சொத்துரிமை உண்டென்பதைச் சட்டமாக்கினார்.

கருணாநிதி: தன் வாழ்க்கையால் வரலாற்றை மாற்றிய தலைவர்!

நாடாளுமன்றத்தில் அண்ணல் அம்பேத்காரைத்தோற்க வைத்த இந்தச் சட்டத்தை மாநிலத்தில் இயற்றி வெற்றி கண்டார் . அதன் பின்னணியில் எளிய கிராமப் பின்னணி கொண்ட அந்த மனிதனுக்குள் நிரம்பியிருந்த பகுத்தறிவுச் சிந்தனையும் அவரை இயக்கிய திராவிட இயக்கச் சித்தாந்தமும் இருந்தன. அந்தச் சித்தாந்தம் பெண்களது விடுதலைக்கான சட்டங்களை இயற்ற அவரைத் தூண்டியபடியே இருந்தது.1929இல் நடந்த செங்கல்பட்டு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு உயிர் கொடுக்கும் மனிதராக அவர் மாறினார். அதற்கான கடும் உழைப்பைச் செலுத்தினார்.

பெண்களைச் சமயலறையில் பூட்டி வைத்த ஒரு சமூகத்திடம் பெண்களைக் காவல் துறைக்கும் ஆசிரியப்பணிக்கும் அனுப்பச் சொல்லிச் சட்டமியற்றினார். அரசுப்பணியில் 30 சதவீதவீதத்தை ஒதுக்கீடு செய்தார்என்பது இன்றைக்குச் சாதாரணமான செய்தியாக இருக்கலாம். ஆனால், அன்றைய காலகட்டத்தில் அது எளிய செய்தியல்ல.

பெண்களுக்குக் கல்வி கிடைக்காத அவலத்தைப்போக்குவதற்காக, எட்டாம் வகுப்பு முடிக்கும் பெண்களுக்கு அரசிடமிருந்து திருமண உதவித் தொகை கிடைக்கும் என்கிற சட்டத்தை உருவாக்கிச் செயல்பாட்டுக்குக்கொண்டுவந்தார்.

திருமண உதவித் தொகை என்பதைப் பெண்களின் கல்விவளர்ச்சிக்கான விஷயமாக மாற்றினார். பல்லாயிரம் பெண்குழந்தைகளது கல்விக்கு அதுவே அடிகோலிற்று. வட மாநிலங்களில் பலவும் இப்போதுதான் பெண்களின் கல்வி உரிமை பற்றி பேசிக்கொண்டிக்கின்றன.

அதே போல சுயஉதவிக் குழுக்கள் , உள்ளாட்சி அமைப்பில் 33 சதவீத இடஒதுக்கீடு ஆகிய இரு சட்டங்களும் இந்தியாவில் முதல் முறையாக நடைமுறைக்கு வந்து பெண்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் பெண்களது சமூக மதிப்பை உயர்த்தவும் அடிப்படையாக மாறின.

இப்படியாக அவர் கொண்டு வந்த சட்டங்களின் வழியே பெண்களது முன்னேற்றம் மாபெரும் பாய்ச்சலைக் கண்டது. பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக இந்தச் சட்டங்கள் அமைந்தன. இந்தச் சட்டங்களால் இன்று பெண்களது வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை நாம் கண்கூடாகப்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். கூடவே பிற மாநிலங்களுக்கும் நிர்பந்தத்தைஉண்டாக்கி இதுபோன்ற சமூக மாற்றத்தைப் பரவலாக்குவதற்கான முன்னுதாரணமாகவும் திகழ்கிறோம்.

ஐந்தாவது முறையாக அவர் முதல்வராக பொறுப்பேற்ற போது தன்னைப் போலவே பெண்களது நலன் சார்ந்து இயங்கக்கூடியவராக ஸ்டாலினை உருவாக்கி இந்த இயக்கம் ஆற்ற வேண்டிய பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்காக உள்ளாட்சித் துறையை அவரது பொறுப்பில் ஒப்படைத்தார் . அதன் வழியே மகளிர் மேம்பாடு சுயஉதவி குழுக்களின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிற சமூக கடமையில் அவரையும் பங்கு கொள்ளச்செய்தார்.

எப்போதுமே கட்சிக்குள் மகளிரின் பங்களிப்பை அவர் மிக முக்கியமானதாகக் கருதினார். கட்சிப் பொறுப்புகளில் அவர்களுக்குப் பரவலாக இடம் தந்தார். பொதுக்குழு நிகழ்வுகளிலும் ஏனைய கட்சிக்கூட்டங்களிலும் இந்த இயக்கத்திற்குப் பெண்கள் ஆற்றிய பணிகளையும் அவர்களது பெயர்களையும் சொல்லி நினைவுகூர்வார்.அதன் வழியே போராட்டத்திற்க்கான மனநிலையை எங்களிடம் உருவாக்குவார். முத்துலெட்சுமி ரெட்டி , சற்குணபாண்டியன், சத்யவாணி முத்து, நூர்ஜஹான் பேகம் என்று தனித்தனியே பெயர்களைச் சொல்லி அவர்களது பங்களிப்பை மெச்சுவார். பெண்களால் மட்டும்தான் சமூக மாற்றத்தை உருவாக்க முடியும் எனும் தன்னம்பிக்கையை அவர் கொண்டிருந்தார் என்பதை அவர் எங்களுக்கு தருகிற முக்கியத்துவத்தை வைத்தே எங்களால் புரிந்து கொள்ள முடியும் .

கருணாநிதி: தன் வாழ்க்கையால் வரலாற்றை மாற்றிய தலைவர்!

இந்த நாட்டின் ஜனாதிபதியாக ஒரு பெண்ணை முன்மொழியும் அளவுக்கு கலைஞரிடம் பெண்விடுதைலைக்கான தாகம் இருந்தது.

அவர் என்றைக்குமே ''நான் '' என்ற வார்த்தையைப்பயன்படுத்தியதில்லை நாம் இணைந்து பணியாற்றுவோம் என்பதையே வலியுறுத்துவார். எல்லாச் சாதனைகளையும் கழகத்தின், தொண்டர்களின் ,சாதனையாகவே முன்னிறுத்துவார். ஆனால்,அவர்தான் எல்லாமும் என்பதை நாங்கள் அறிந்தேதான் இருக்கிறோம்.

கட்சியின் மகளிர் அணியினர் மகளிர் தினத்திற்காகவோ அல்லது அவரது பிறந்த நாளிலோ அவரை சந்திக்க நேரும்போதெல்லாம் மிகுந்த உற்சாகம் கொள்வார். என்ன,''படை '' திரண்டு வருகிறீர்களே என்ன விசேஷம் என்று கிண்டலாகக் கேட்பார். அந்த கிண்டலுக்கு பின்னணியில் ஒரு வாஞ்சை நிரம்பியிருக்கும்.

எனது வெளிநாட்டுப் பயணங்களை அவரிடம் சொல்லாமல் நான் துவக்கியதில்லை என்பதனால் நான் அவரைக் காணச்செல்லும் போதெல்லாம் அடுத்த வெளிநாட்டுப் பயணம் எப்போது என்று கிண்டல் செய்வார். அந்த கிண்டலுக்குப்பின் எனக்கான வாழ்த்து இருக்கும் .

அவர் தொடர்ச்சியாய் உரையாடக்கூடியவராக இருந்தார். தலைவரின் குரலாக அல்லாமல் தந்தையின் குரலாக உரையாடி நம்மை இயல்பாக உணரவைப்பார்.

அவர் பெண்களுக்காகவும் சமூக நலனுக்காகவும் தொடர்ச்சியாக இயற்றிய சட்டங்களும் , திட்டங்களும் பெரும் மாற்றத்தைத் தமிழ் நாட்டில் கொண்டுவந்தன என்பதை உணர்ந்ததனால்தான் ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அவர் உருவாக்கிய சட்டமன்றத்தையும்நூலகத்தையும் பாலங்களையும் முடக்க முயன்றாரேதவிர இந்தத் திட்டங்களை முடக்க முயலவில்லை. அப்படிமுடக்கினால் அது தனக்கு மாபெரும் அவப்பெயரையும்சமூகப் பின்னடைவையும் உருவாக்கும் என்று உணர்ந்ததால்அமைதிகாத்தார் .அவற்றின் தரத்தை உயர்த்த முடியுமாவென முயன்றார். .

எளிதில் கைக்கொள்ள இயலாதென எதனை நினைத்தோமோ அதனை எல்லாம் சட்டத்தின் துணையோடு கைக்கொள்ள வைத்த ராஜதந்திரி .அண்ணாவின் மறைவிற்கு பிறகு திராவிட இயக்கத்திற்கென தனித்த அடையாளத்தையும் போக்கையும் அவரே அமைக்க வேண்டிய பொறுப்பையும் கட்சியையும் தனது தோள்களில் சுமந்து காட்டினார் ஒரு தலைவராக ஒரு முதல்வராக அவரது செயல்பாடுகள், நிர்வாகத்தில் வெளிப்படுத்திய ஆற்றல், சுறுசுறுப்பு நினைவாற்றல் , இலக்கியங்களிப்பு ,அரசியல் நாகரீகம் , தேர்தல் கூட்டணிகளின் கணக்கீடு , சமூகநலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அவரது சிந்தனை இதெல்லாமும் அவர்குறித்து இந்த நேரத்தில் நாம் ஒப்பீடு செய்வதற்கான ஆளுமை யாரும் இல்லை .

எழுத்தாளர்கள் புதிய விஷயம் குறித்து நமக்கு சிந்திக்க கற்றுத்தருகிறார்கள் என்பது அறியப்பட்ட உண்மை .இவரது எழுத்தாளர் எனும் தனித்துவம் இந்த சமூக மேம்பாட்டிற்கான சிந்தனைகளை கொண்டதாக இருந்தது..

பல அரசியல் தலைவர்களையும் போல அவர் மீதான எதிர்மறை அரசியல் விமர்சனனங்கள் இருக்கலாம் .ஆனால் அவற்றையெல்லாம் நீர்த்துபோவதற்கான அனேக விஷயங்களை அவர் செய்திருக்கிறார் .அதில் அருந்ததியருக்கான இட ஒதுக்கீடும் ,திருநங்கைகள் நலவாரியமும் குறிப்பிட்டு செல்லக்கூடியவை .அவர்களுக்கான ராஜபாட்டையை அவர் போட்டுத்தந்தார்.

எளிய பின்னணியிலிருந்து வந்து, அளப்பரிய சமூக மாற்றத்திற்கு வித்திட்டு, அதனைத் தனது காலத்திலேயே பார்த்து மகிழும் வரலாற்றுத் தலைவர் கலைஞர். சிறிய கிராமத்திலிருந்து வந்து தனக்கென ஒரு வரலாற்றைப் போராடி எழுதி, அதன் வழியாக எண்ணற்ற மக்களின் தலையெழுத்தை மாற்றி எழுதியதில் அவர்போல ஒருவரை இன்னும் சில நூற்றாண்டுகளில் இந்த உலகம் காணுமா என்பது சந்தேகமே.

அவரை நீங்கள் புறம் தள்ள விரும்பினீர்கள் என்றால் நீங்கள் சமூக நீதியை புறம் தள்ளியவர்களாக காலத்தால் அறியப்படுவீர்கள் .

https://www.bbc.com/tamil/india-45016682

Link to comment
Share on other sites

``பாண்டிச்சேரி போனா உங்களால் நிற்க முடியாதே..!”- கவியரசைக் கலாய்த்த கலைஞர்

 

கலைஞரின் புத்திசாலித்தனத்துக்கும் குறும்புக்கும் சான்றாக இருக்கும் சில உரையாடல்கள் காலங்கள் கடந்தும் நினைத்து நினைத்து சிரிக்க வைப்பவை.

``பாண்டிச்சேரி போனா உங்களால் நிற்க முடியாதே..!”- கவியரசைக் கலாய்த்த கலைஞர்
 

கலைஞர் கருணாநிதியின் புத்திசாலித்தனத்துக்கும் நுண்ணிய நகைச்சுவை உணர்வுக்கும் சான்றாகப் பல சம்பவங்கள் அவர் வாழ்வில் நடந்தேறியுள்ளன. அத்தனையும் ஆங்கிலத்தில் `Thug Life' என்று சொல்வது போல இருக்கும். அவற்றுள் சில ஒருபானை சோற்றுப் பதமாக... 

கலைஞர் கருணாநிதி

 ♦எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர்.எச்.வி.ஹண்டே,  தி.மு.க அரசைப் பற்றி கடுமையாக சட்டமன்றத்தில் ஒருமுறை விமர்சித்தார். அதன் வெளிப்பாடாக,``இது மூன்றாம் தர சர்க்கார்'' என்றும் சொன்னார். உடனே ஆளுங்கட்சியினர் வெகுண்டெழுந்தனர். கலைஞர் அனைவரையும் கையமர்த்திவிட்டு, ``டாக்டர் ஹண்டே அவர்கள் இந்த அரசை மூன்றாந்தர அரசு என்றார். திருத்திக்கொள்ளவேண்டும். இது நாலாந்தர அரசு... பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர என்று கூறப்படும் வர்ணங்களில் நான்காவதாகக் கூறப்படும் சூத்திரர்களின் அரசு!” என்று சொல்லி சட்டமன்றத்தைக் கைதட்டலில் உலுக்கினார். 

 

 

ஒருமுறை கலைஞர் உடல் நலக்கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது டாக்டர் அவரை பரிசோதிக்கிறார். 
``மூச்சை நல்லா இழுத்துப் புடிங்க” 
“இப்போ மூச்சை விடுங்க”
“மூச்சை விடக்கூடதுன்னுதான் டாக்டர் நான் மருத்துவமனைக்கே வந்திருக்கேன்!”

 

 

செல்வி ஜெயலலிதா, ``நான் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நன்மை செய்வேன்” என்று ஓர் அறிக்கை வெளியிட்டார். அதற்கு கலைஞரின் பதில் தான் `Thug Life' எனச் சொல்வது போல இருந்தது. ``இந்த அம்மையார் ஆட்சியில் இல்லாமல் இருப்பதே மக்களுக்குச் செய்யும் பெரிய நன்மைதான்!” என்றார் கலைஞர்.

கவியரசர் கண்ணதாசன் தி.மு.க.வில் இருந்த போது தேர்தலில் நிற்பதற்காக அவரிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார் கவியரசர். கலைஞருக்கும் அவருக்குமான உரையாடல்...
கண்ணதாசன், ``எந்தத் தொகுதி கேட்டாலும் ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி மறுத்து விடுகிறீர்கள். நான் இம்முறை தமிழ்நாட்டில் நிற்கப்போவதில்லை. பாண்டிச்சேரியில் நிற்கப் போகிறேன்..!” என்று சொல்ல, 
சிரித்தபடி கவிஞரின் மதுப்பழக்கத்தை மனதில் வைத்துக்கொண்டு, ``பாண்டிச்சேரி போனா உங்களால் நிற்க முடியாதே..!” என்றாராம் கலைஞர்!

♦ தன் மீது வீசப்படும் பந்தை சிக்ஸர் விளாசுவது அவர் ஸ்டைல். பத்திரிகை ஒன்றின் கேள்வி பதில் பகுதியில் அவர் சொன்ன பதில் இது...
கேள்வி:  `காங்கிரஸைப் பிடித்த தீயசக்தி நீங்கிவிட்டது' என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிருக்கிறாரே?' 
பதில்: `அந்தக் கட்சியிலிருந்து அவர் விலகிவிட்டாரா என்ன?' 

♦ இதுவும் பத்திரிகையில் வந்த கேள்வி பதில்தான்...
 கேள்வி :- அ.தி.மு.க. வில், நாடாளுமன்ற வேட்பாளராக ஜெயலலிதாவுக்காக 255 பேர் தலா 25 ஆயிரம் ரூபாய் கட்டி வேட்பு மனுத்தாக்கல் செய்திருப்பது எதைக் காட்டுகின்றது?
பதில் :- அந்தக் கட்சியில் உள்ளவர்கள் எல்லாம் நன்றாக வளம் பெற்றிருக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகின்றது. அந்தக் கட்சியிலே உள்ள அமைச்சர்கள் முதலமைச்சரைப் பாராட்டி சாலையோரங்களில், நடைப்பாதைகளில் வைக்கின்ற கட்-அவுட்கள், ஃப்ளக்ஸ் போர்டுகள், நாளேடுகளில் முதலமைச்சரைப் புகழ்ந்து கொடுக்கின்ற விளம்பரங்கள் போன்றவற்றை வருமான வரித் துறை கணக்கெடுத்தால் எந்த அளவுக்கு அவர்கள் எல்லாம் வளம் பெற்றிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

கலைஞர் கருணாநிதி

சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு கலைஞரின் சமயோசிதமான பதில்களில் சில... 

♦ பி.ஹெச்.பாண்டியன்: ``புலி பசித் தாலும் புல்லைத் தின்னாது!’’
கலைஞர்: ‘‘புல் என்பது புல்லா, bullலா?’’

கோவை செழியன்: ‘‘ஆண்டவன் எல்லோருக்கும் சொந்தம். ஆகவே, கோயில்களை எல்லாம் தேசிய மயமாக்கிவிட்டால் பிரச்னை இருக்காது அல்லவா?’’
கலைஞர்: ‘‘ஆண்டவர்களை தேசிய உடைமையாக்கும் உத்தேசம் இல்லை. ஆண்டவன்தான் அனைவரையும் தேசிய மயமாக்கி ரட்சிக்க வேண்டும்!’’

குமரி அனந்தன்: ‘‘நான் தொலைபேசியில் பேசியபோது, டிராக் நம்பர் செவன் என்று குரல் வருகிறது. இப்படி ஒரு குரல் வந்ததுமே எனக்கு ஐயப்பாடு...’’
கலைஞர்: ‘‘குமரி அனந்தனுக்கு அப்படியரு கர்ண கடூரமான வார்த்தை காதிலே விழுந்திருக்கிறது. சில நேரங்களில் காதல் வசனங்கள்கூட கிராஸ் டாக்கிலே கேட்கலாம். அதையும் முயற்சி செய்து பாருங்கள்.’’
 

 நூர் முகம்மது: ``முதல்வருடைய கருணை கொண்ட கடைக்கண் பார்வை குமரியின் மீது திருப்பப்பட்டு, அம்மக்களின் குறை தீர்க்கும் வகையில் தொழிற்சாலையை அமைக்க, முதல்வர் முன் வருவாரா?’

கலைஞர்: ``குமரியின் மீது கடைக்கண் பார்வை வைக்கின்ற அளவுக்கு எனக்கு வயது இல்லை இப்போது!''

♦ கே.விநாயகம்: ``மெரினா கடற்கரையின் ஒரு பகுதியில் லவ்வர்ஸ் பார்க் இருக்கிறது. அங்கு மற்றவர்கள் நுழையாமல், காதலர்கள் சுதந்திரமாக இருக்கும் நிலையை அரசு ஏற்படுத்தித் தருமா?''

கலைஞர்: ``இந்த விஷயத்தில் விநாயகத்துக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும்!'' 

https://www.vikatan.com/news/tamilnadu/133414-thuglife-moments-of-kalaignar-karunanidhi.html

 

Link to comment
Share on other sites

கருணாநிதி சகாப்தம்

 

 
6505a4ffP1448541mrjpg

உலகின் நீண்ட கடற்கரைகளில் ஒன்றான மெரினாவில் தனக்கென ஆறடி நிலத்தை வாங்கிக்கொண்டு கருணாநிதி மண்ணுக்குள் உள்ளடங்கியபோது, சிறு நண்டுக் கூட்டம் ஒன்று ராணுவ மரியாதை செலுத்த நின்றிருந்த சிப்பாய்களின் பூட்ஸ் கால்கள் இடையே சுற்றுவதும் மணல் வலைக்குள் போய்ப் பதுங்கி வெளியே ஓடி வருவதுமாக இருந்தது. மக்கள் வெள்ளம் சூழ, ராணுவ வாகனத்தில் கருணாநிதியின் உடலை ஏற்றி இறக்கி, டாப்ஸ் ஊதி, அஞ்சலிக்காக 21 துப்பாக்கிக் குண்டுகளை வெடிக்கச் செய்து, அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தியபோது, முப்படை வீரர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? இலங்கை சென்ற இந்தியப் படையினரால் அங்குள்ள தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது, அவர்கள் நாடு திரும்ப இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததோடு, நாடு திரும்பிய படையினரை வரவேற்கவும் மறுத்த முதல்வராக இருந்தவர் அவர்.

ஒரு பிரிட்டன், ஒரு பிரான்ஸைக் காட்டிலும் அதிகமான, ஜெர்மனிக்கு இணையான மக்களைக் கொண்ட தமிழ்நாட்டின் நீண்ட கால முதலமைச்சர் கருணாநிதி; நீண்ட கால எதிர்க்கட்சித் தலைவரும் அவர். ஐம்பதாண்டு காலம் திமுக எனும் பெரும் கட்சியின் அசைக்க முடியாத தலைவராக அவர் இருந்தார். அவர் கட்சி வென்றாலும் தோற்றாலும் அவருக்குத் தோல்வி தராமல் அறுபதாண்டு காலம் சட்ட மன்ற உறுப்பினராக மக்கள் திரும்பத் திரும்ப அவரைத் தேர்ந்தெடுத்தனர். எண்பதாண்டு காலப் பொது வாழ்க்கை. என்றாலும் ஆறடி நிலத்துக்கு, ஆளுங்கட்சியுடன் மரணத்துக்குப் பிறகும் அவர் போராட வேண்டியிருந்தது. காவிரி நதிப் படுகையில் பிறந்த கருணாநிதி, கூவம் நதிக்கரையின் கழிமுகத்தை வந்தடைந்த 95 ஆண்டு பயணத்தில் தூக்கிச் சுமந்த பாரம் மிக்க கனவு தமிழ்ச் சமூகத்தோடு பின்னிப் பிணைந்திருந்தது.

 

குளங்களும் மரங்களும் வறுமையும் நிறைந்த, வேறு வசதிகள் ஏதுமற்ற குக்கிராமம் திருக்குவளை. அங்கிருந்துதான் அவ்வளவு பெரிய கனவையும் தன்னுடைய தனிமையில் சுமந்தபடி தூக்கிக்கொண்டு ஓடிவந்தான் அந்தச் சிறுவன். திருக்குவளையிலிருந்து நாகப்பட்டினத்துக்கு, திருவாரூருக்கு, தஞ்சாவூருக்கு, சேலத்துக்கு, ஈரோட்டுக்கு, காஞ்சிபுரத்துக்கு, சென்னைக்கு. ஒரே துணையாக இழிவு இருந்தது. சாதி இழிவு, செல்வ இழிவு, ஞான இழிவு. பள்ளிக்கூடத்தில் இடம் மறுக்கப்பட்டபோது குளத்தில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று தலைமையாசிரியரை அந்தச் சிறுவன் மிரட்ட வேண்டியிருந்தது. ஐந்து முறை முதல்வரான பின்னரும், சாதி இழிவு என்னைத் துரத்துகிறது என்று அந்த முதியவன் ஒரு பேட்டியில் கண்ணீர் விட்டு அழ வேண்டியிருந்தது.

கருணாநிதியின் வாழ்க்கை மஹாத்மாவினுடையது இல்லை; அதனாலேயே அது முக்கியமானதாகிறது. ஒரு சாமானியன் சறுக்கக் கூடிய எல்லா பலவீனங்களிலும் பலமான கருணாநிதி சறுக்கி விழுந்திருந்தார். எல்லா மேன்மைகளுக்கும் இடையே கீழ்மைகளும் அவர் வாழ்வில் இருந்தன. சுயநலம், சூது, ஊழல், குற்றம், குடும்ப வாரிசு அரசியல் என எல்லாச் சேறுகளும் அவர் மீது அப்பியிருந்தன. புனிதம் என்று எதுவும் அங்கில்லை. சடாரென்று நம்மை நோக்கித் திரும்பி, ‘ஏன் இவ்வளவு வேட்டையாடிகள் நிறைந்த, இவ்வளவு வலிகள் மிகுந்த, இவ்வளவு இழிவுகள் சுமத்தப்பட்ட வாழ்க்கை எனக்குத் தரப்பட வேண்டும்?’ என்று அவர் கேட்டால், பதில் சொல்ல நமக்கும் ஒரு வார்த்தையும் கிடைக்கப்போவதில்லை.

பேராளுமை ஒருவரைக் கண்டடைய இந்திய மனத்துக்கு மூன்று கண்ணாடிகள் வேண்டும். உயர் சாதி அல்லது உயர் வர்க்கத்தில் அந்த ஆளுமை பிறக்க வேண்டும். வெள்ளை நிறத் தோல் அல்லது நுனி நாக்கு ஆங்கிலம் வேண்டும். உயர்கல்வி நிறுவனங்கள் அல்லது வெளிநாட்டு மேதைகளின் அங்கீகாரம் வேண்டும். மூன்றும் இல்லாவிடில் துறவிக்கோலம் பூண வேண்டும். அப்போதுதான் இந்திய மனதின் கண் திறக்கும். முன்னோடிகள் பெரியார், அண்ணாவுக்குக் குறைந்தபட்சம் மூன்றில் ஒன்று இருந்தது. உயர் வர்க்கத்தில் பிறந்தவர் பெரியார். ஆங்கிலத்தில் கரை கண்டவர் அண்ணா. மூன்றுமே இல்லாத கருணாநிதியை ஒரு சராசரி இந்திய மனதால் அடையாளம் காணவோ, அங்கீகரிக்கவோ முடியவில்லை. கருணாநிதி தன் பேராளுமையை நிரூபிக்கக் கடைசி வரை போராடினார் - இந்திய மனமோ கடைசி வரை அவருடைய இழிவுகளின் வழி அவரை அடையாளம் காண முற்பட்டுக்கொண்டிருந்தது.

இழிவு துரத்தியது. திரையுலகில் ஒரு காலகட்டத்தையே கட்டியாண்ட கருணாநிதி, அரசியல் பதவிகளுக்கெல்லாம் வருவதற்கு முன்பே சென்னை கோபாலபுரத்தில் சொந்த வீடும் காரும் வாங்கி செல்வந்தர் ஆகியிருந்தார் என்றாலும், திருட்டு ரயில் ஏறி சென்னைக்கு வந்து அரசியல் வழியாகவே கருணாநிதி சம்பாதித்தார் என்றே கதை பேசினார்கள். முதியவர் நேருவின் காதல்களை ப்ளே பாய் சாகசங்களாகப் பேசி மகிழ்ந்தவர்கள் கருணாநிதியின் திருமண உறவுகளைக் கொச்சைப்படுத்தினார்கள். வரலாற்றில் கருணாநிதி தன் எல்லாப் பங்களிப்புகளையும் வரிசைப்படுத்தினாலும், ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளியின் வாழ்க்கையை வரையறுப்பதுபோல ‘கடினமான உழைப்பாளி என்று கருணாநிதியைச் சொல்லலாம்’ என்று முடித்துக்கொள்ள முற்பட்டார்கள்.

வரலாற்றில் கருணாநிதிக்கு உரிய இடத்தை அளிப்பது என்கிற தார்மிகத்தை ஒரு விமர்சகன் அடைவதும் இந்தியாவில் சுலபம் இல்லை. அதற்கு ஒரு விமர்சகன் எங்கோ தன்னை அறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. சுயஅறுப்பு. சாதிய, மேட்டிமைய, தூய்மைய அகங்காரத்திலிருந்து வெளியேறாத ஒரு மனதால் கருணாநிதியை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது. ஒரு தீண்டாமை மனம் நிராகரிப்புக்கான காரணங்களை உற்பத்திசெய்துகொண்டே இருக்கும். என்னைப் பொறுத்தளவில் அரசியலில் கருணாநிதி ஒரு தலித். அதனால்தான் தன்னளவில் அழுத்தத்தை உணர்ந்தவர்கள் - அவர்கள் எந்தக் கருத்தியல் நிலைப்பாட்டைக் கொண்டவர்களாக இருந்தாலும் - கருணாநிதியை ஓர் உந்துசக்தியாகக் கண்டார்கள். அதிகாலையில் எழுந்தால், அடுக்குமொழியில் பேசினால், கவித்துவமாக எழுதினால் தங்களாலும் தடைகளை உடைத்துக்கொண்டு அரசியல் களத்தில் மேலே வர முடியும் என்று நம்பினார்கள்.

கருணாநிதி மறைந்த அன்று இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தள்ளிவைக்கப்பட்டு, தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினராக அல்லாத ஒரு தலைவரின் மறைவுக்கு இந்திய அரசு இப்படியான மரியாதையை அளித்தது கருணாநிதிக்கே முதல் முறை. வாய்ப்பிருந்தும் ஏனைய பல மாநிலத் தலைவர்களைப் போல தன்னை டெல்லி அரசியலில் கரைத்துக்கொண்டவரில்லை கருணாநிதி. சென்னையில் அமர்ந்தபடியே டெல்லி தர்பாரைத் தீர்மானிப்பதில் மாநிலத் தலைவர்களுக்கான பங்குச் சூழலை உருவாக்கினார். ஏழு பிரதமர்களின் ஆட்சியோடு நேரடியாகவும் மறைமுகமாகவும் அவருக்குப் பங்கிருந்தது.

பிரிட்டிஷ் காலனியாதிக்க இந்தியாவில் திராவிட நாடு வேட்கையோடு அரசியல் களம் புகுந்த பெரியார், அண்ணா வழிவந்தவர் கருணாநிதி. இந்திய சுதந்திரத்தோடு தனி நாடு கனவு இற்றுப்போனபோது தமிழ் மக்களை ரத்தக்களறியில் திருப்பிவிடாமல் இந்திய ஒன்றியம் எனும் அமைப்புக்குள் சாத்வீக வழியில் தேசிய இனங்கள் தம் உரிமைகள், அதிகாரங்களை வென்றெடுக்கும் வழிமுறையைக் கண்டதும், தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தை விரிவாகப் பயிற்றுவித்ததும் திராவிட இயக்கத்தின் முக்கியமான சாதனை. அவர்கள் உருவாக்கிய ‘மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி’ முழக்கமானது இந்தியா என்கிற சிந்தனையையும் விஸ்தரிப்பதானது. நாட்டின் பாதுகாப்பு நீங்கலாக எல்லா அதிகாரங்களையும் மாநிலங்கள் சிந்திப்போம் என்ற அண்ணாவின் கனவு பல விஷயங்களில் பிற்பாடு உருவான ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பிடத்தக்கது.

அண்ணா வழியில், மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற கருணாநிதி, நாட்டிலேயே முதல் முறையாக மாநில சுயாட்சியை வலியுறுத்தி சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். மாநிலங்களுக்கு என்று கொடி கேட்டவர், தமிழ்நாட்டுக்கு என்று ஒரு தனிக் கொடியையும் முன்மொழிந்தார். கூட்டாட்சிக்கான பாதைபோல கூட்டணிகளைக் கையாண்டவர் இந்தியாவின் கூட்டணி யுகத்துக்கு வித்திட்டவர்களில் ஒருவரானார்.

நவீன தமிழ்நாட்டின் சாலைகள், பாலங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள், தொழிற்பேட்டைகள், அணைகள், சமத்துவபுரங்கள், நூலகங்கள் என்று கட்டுமானங்கள் நெடுகிலும் தன்னையும் நிறைத்துக்கொண்டார் கருணாநிதி. அவர் முன்னெடுத்த சமூகநீதி ஆட்சிக் கொள்கை அதுவரை அரசுப் பணியைப் பார்த்திராத ஒரு பெரும் கூட்டத்தை அரசு அலுவலகங்களுக்குள் நிறைத்தது. வேளாண் துறையை ஊக்குவித்தபடி அவர் உருவாக்கிய நவீன தொழில் கொள்கையானது, மாநிலத்தின் வளர்ச்சியில் எல்லா சமூகங்களுக்கும் இடம்கொடுத்தது. அரசிடமிருந்து அடித்தட்டு மக்கள் அந்நியமாகிவிடாமல் இருக்க அவர் அறிமுகப்படுத்திய சமூகநலத் திட்டங்கள் உதவின. சாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்ட தமிழ்க் கனவுக்கான குறியீடாக கவி வள்ளுவரை அவர் கட்டமைத்தார்.

சட்ட மன்றத்தில் பேசியதைத் தொகுத்தால் மட்டுமே ஒன்றரை லட்சம் பக்கங்கள் வரக்கூடிய அளவுக்கு உரையாற்றியவர், பல்லாயிரக்கணக்கான பக்கங்களை எழுதிக் குவித்தவர் கருணாநிதி. கவிஞர், கதாசிரியர், பத்திரிகையாளர், திரைக்கலைஞர் என்று ஏராளமான அறிவடையாளங்களால் தன்னை நிறைத்துக்கொண்ட கருணாநிதி, தன்னுடைய கட்சியின் தளபதிகளாக வைத்திருந்தவர்கள் பெரும்பாலும் அடித்தளத்திலிருந்து வந்தவர்கள் - அவர்களில் பலர் அடாவடிகளுக்குப் பெயர் போனவர்கள். தலைநகர் சென்னையில் ஒரு கபாலி இருந்தார். பின்னாளில் கபாலியின் மகன் மருத்துவர் ஆனார். வேறு பல கபாலிகளின் பிள்ளைகள் அரசின் ஒப்பந்ததாரர்கள் ஆனார்கள். குற்றச் சாயல் கொண்ட செல்வந்தர்கள் ஆனார்கள். அவர்களின் பிள்ளைகளும் படித்தார்கள். எப்படியும் குடும்பங்களின் தோற்றம் அடுத்தடுத்த தலைமுறைகளில் மாறியது. சமூகத்தின் ஒப்பனை மதிப்பீடுகளுக்காக கபாலிகளை கபாலிகளாகவே ஒதுக்கிவைத்து, அவர்கள் பிள்ளைகளையும் கபாலிகளாகத் தொடரவிடுவதா அல்லது கபாலிகளை அரசியலதிகாரத்துக்குள் அணைத்து, கபாலிகளின் சந்ததி அடையாளம் உருமாற வழிவகுப்பதா என்ற கேள்வியை உன்னத அரசியல் பேசியோர் முன் தூக்கி வீசினார் கருணாநிதி. கருணாநிதியின் முக்கியமான அரசியல் இது.

அராஜகரான கருணாநிதிக்கு ஜனநாயகத்தின் மீது அபாரமான பிடிமானம் இருந்தது. சட்ட மன்றக் கூட்டங்களில் பங்கேற்பதிலும் விவாதிப்பதிலும் பெரிய ஆர்வத்தை வெளிப்படுத்தியவர் மாற்றுக் கருத்துகளுக்கு இடமளித்தார். சுதந்திர இந்தியாவின் கருப்புக் காலகட்டமான நெருக்கடிநிலை நாட்களில் தன் ஆட்சியைப் பறிகொடுத்து, அடக்குமுறைக்கு எதிராக நின்றார். கட்சியையே கலைக்கும் நிர்ப்பந்தமும் அந்நாட்களில் அவருக்கு வந்தது. உயிரே போனாலும் கப்பல் தலைவன் கப்பலைச் செலுத்தியபடியே மடிவான் என்றார்.

திமுகவுக்குள் கருணாநிதியின் ஜனநாயகம் முரண்பாடுகளில் நிறைந்திருந்தது. உட்கட்சித் தேர்தல்களைத் தொடர்ந்து நடத்தினார். விளிம்புநிலைச் சமூகத்தினருக்கு கட்சிப் பதவிகளில் இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்தார். எந்த ஒரு சமூகமும் பெரிதாகத் தலை தூக்கிவிடாதபடியும் அதேசமயம் எல்லாச் சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும்படியும் செய்தார். எனினும், அண்ணா காலத்தில் கட்சிக்குள் விரிந்து பரவியிருந்த ஜனநாயகத்தின் எல்லை கருணாநிதிக்கு உட்பட்டதாகச் சுருங்கியது. சித்தாந்த தளத்தில் கட்சியால் முன்னகர முடியவில்லை. அறிவார்த்த தளத்தில் கட்சி மேலும் சரிந்தது. இரண்டாம், மூன்றாம், நான்காம் வரிசைத் தலைவர்கள் அணிவரிசையில் பெரிய பள்ளம் விழுந்தது.

எந்தக் குடும்பம் கருணாநிதி எல்லா உயரங்களையும் அடைய கட்சிக்குத் துணை நின்றதோ அதே குடும்பம் அவருடைய எல்லா புகழும் கீழே சரியவும் கட்சி சீரழியவும் காரணமாக இருந்தது. அவருடைய கடைசி ஆட்சிக் காலகட்டத்தில் நடந்த அவர் புகழ் பாடும் விழாக்களும் தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாண்டு விழாவில் அவர் உட்கார்ந்திருந்த தோரணையும் தன்னை அவர் ஒரு ராஜராஜ சோழனாகப் உருமாற்றிக்கொள்ளத் தொடங்கிவிட்டாரோ என்ற கேள்வியை உண்டாக்கியது. கட்சியைத் தோல்விகள் முற்றுகையிட்டன. புதிதாக வந்திருந்த வரலாறு தெரியாத ஒரு தலைமுறைக்கு அவர் வெறும் காட்சிப்பொருளாகவும் கேலிப்பொருளாகவும்கூட மாறியிருந்தார்.

இவை எல்லாவற்றையும் கடந்து ஒரு தந்தைமை ஸ்தானத்தை மானசீகமாக தமிழ்ச் சமூகம் கருணாநிதிக்குக் கொடுத்திருந்தது. திமுக தலைவர் ஆகி அரை நூற்றாண்டை அவர் தொட்ட நள்ளிரவு. பேச்சுமூச்சிழந்த நிலையில் அவரை வீட்டிலிருந்து தூக்கிப்போட்டுக்கொண்டு ஓடிவருகிறார்கள். அவருடைய வீடிருக்கிற கோபாலபுரம் பகுதியே பதற்றத்தில் நிற்கிறது. பெரும் கூட்டம். வாயைச் சேலைத் தலைப்பால் பொத்தியபடி நிற்கும் பெண்கள், குழந்தைகளைத் தோளின் மீது தூக்கி உட்காரவைத்துக்கொண்டபடி எக்கி நிற்கும் ஆண்கள், கண்கள் இடுங்கிய வயசாளிகள், பெரிய இளைஞர் கூட்டம், பர்தா அணிந்த இளம் பெண்கள் - எல்லோர் முகங்களிலும் பதைபதைப்பு. பேச்சுமூச்சின்றி வெளியே கொண்டுவரப்படும் அவரைப் பார்க்கிறார்கள். அந்தக் கணம் வரை உச்ச அழுத்தத்திலிருந்த அன்பு நெஞ்சுக்கூட்டை உடைத்துக்கொண்டுவரும் அழுகையாகப் பீறிடுகிறது: ‘‘ஐயோ என் தலைவா...’’

கருணாநிதி மறைந்த அன்று தமிழ்நாடு உறைந்தது. ஒவ்வொருவருக்கும் அவரைப் பற்றிப் பேச ஒரு கதை இருந்தது. நல்லதோ, கெட்டதோ அவருடைய வாழ்க்கை, அவருடைய அரசியல் நுழையாத வீடு என்று ஒன்று தமிழ்நாட்டில் அவர் காலத்தில் இல்லை.

காவிய வாழ்க்கை. நண்பர்களிடம் காசு வசூலித்து கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார். தெருக்களில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தார். ஊர் ஊராக அலைந்து நாடகம் போட்டார். ‘அம்பாள் என்றைக்கடா பேசினாள்?’ என்று அதிரவைக்கும்படி கேள்வி கேட்டார். காதலித்தார். சுயமரியாதைக்காரனுக்குப் பெண் கிடையாது என்றார்கள் பெண் வீட்டார். பெற்றோர் தேர்ந்தெடுத்த வேறொரு பெண்ணை மணந்தார். திருமணம் முடித்த அடுத்த வாரமே கூட்டங்கள் பேச வெளியூர் போனார். நான்கே வருடங்களில் மனைவியைப் பறிகொடுத்தார். அடுத்தது இன்னொரு கல்யாணம். போராட்டங்கள். சிறை. அப்புறம் இன்னொரு காதல். கல்யாணம். நடுநடுவே சினிமா. ஆட்சியதிகாரம். இடையில் தலைவனைப் பறிகொடுத்து நண்பனின் உதவியோடு தலைவரானார். அடுத்து அதே நண்பனை முரண்பாட்டில் கட்சியிலிருந்து நீக்கினார். நண்பன் அரசியல் போட்டியாளரானார்; மரணம் வரை கருணாநிதியால் வெல்ல முடியாதவரானார். நண்பனின் மரணத்துக்குப் பின்னும் யுத்தம் தொடர்கிறது, நண்பனின் அரசியல் வாரிசுடன். இம்முறை மாறி மாறி வெல்கிறார்கள், தோற்கிறார்கள். சண்டமாருதம் செய்துகொண்டிருந்த அந்தப் பெண் யாரும் எதிர்பாராத ஒரு நாளில் காலமாகிறார். கருணாநிதி அதே காலகட்டத்தில் மௌனமாகிறார். காலமெல்லாம் பேசிக்கொண்டிருந்தவரால் அதற்குப் பிறகு சாகும் வரை பேச முடியவே இல்லை.

காவிய வாழ்க்கை. கருணாநிதிக்கு மட்டும் இல்லை; அவரோடு சேர்த்து மெரினாவில் உடல் அடங்கியிருக்கும் அந்த நால்வரின் வாழ்க்கையுமே அப்படித்தான் இருந்தது. ஒரு நாடகாசிரியன், ஒரு வசனகர்த்தா, ஒரு நடிகன், ஒரு நடிகை. நான்கு பேரும் மாபெரும் நாடகங்களை நடத்தியவர்கள். அந்த நாடகங்களுக்குள்ளேயே அவர்களுடைய வாழ்க்கையையும் அமைத்துக்கொண்டவர்கள். பல சமயங்களில் அவர்களுடைய வாழ்க்கையே நாடகமாக விரிந்தது. பார்வையாளர்களாக இருந்த மக்களால் இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை. பார்வையாளர்களும் நாடகத்தின் பாத்திரங்களாக மாறினார்கள். தமிழ் எல்லோரையும் இணைத்திருந்தது. கருணாநிதியோடு சேர்த்து ஒரு காலகட்டம் மெரினாவில் உறைந்துகொண்டது. ஒரு சகாப்தம் மண்ணுக்குள் தன்னை மூடிக்கொண்டது!

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

https://tamil.thehindu.com/opinion/columns/article24675004.ece

Link to comment
Share on other sites

கருணாநிதியின் இளம் வயது வறுமை கற்றுத்தந்த பாடங்களால் உருவான திட்டங்கள்!

 
கருணாநிதிபடத்தின் காப்புரிமைHINDUSTAN TIMES Image captionகருணாநிதி

அன்றைய முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் மறைவுக்குப் பிறகு, 1969-ல் முதல் முறையாக கருணாநிதி முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். ஆனால், அதையடுத்து நடந்த 1971 தேர்தலில் வெற்றி பெற்று 1976 வரைஅவர் நடத்திய ஆட்சியே முதல் முறையாக அவர் கிட்டத்தட்ட முழு ஐந்தாண்டு காலமும் பதவி வகித்த முதல் காலம். அவர் முதல்வராக இறுதியாக ஆண்ட காலம், 2006 முதல் 2011 வரை.

முதல் முழு ஆட்சிக் காலத்துக்கும் இறுதி ஆட்சிக் காலத்துக்கும் இடையில் ஏராளமான பரிணாமங்களைக் கண்டவர் கருணாநிதி. அவரது அனுபவங்கள் ஒவ்வொன்றும் அவர் செயல்படுத்திய திட்டங்களிலும் எதிரொலித்தன என்பது ஆய்வாளர்களின் பார்வை.

அந்த வகையில், முதல் மற்றும் கடைசி ஆட்சிக்காலத்தில் அவர் கொண்டுவந்த திட்டங்கள் என்ன, அவரின் முடிவுகள் மக்களுக்கு பயனளித்தனவா, வளர்ச்சித்திட்டங்களை கொண்டுவந்தபோதும் அடுத்த தேர்தல்களில் அதிமுகவால் ஏன் தோற்கடிக்கப்பட்டார், திமுகவின் வெற்றியை எவ்வாறு சாத்தியமாக்கினார்?

கருணாநிதிபடத்தின் காப்புரிமைHINDUSTAN TIMES Image captionகருணாநிதி

மனிதனை மனிதன் சுமந்து செல்லும் இழிநிலை இருக்கக்கூடாது என்று கூறி கை ரிக்சாக்களை ஒழித்து, சைக்கிள் ரிக்சா முறையை ஊக்குவித்தது, சேலம் மாவட்டத்தில் உருக்காலையை திறக்க எடுத்த முயற்சிகள் பெரும் கவனம் பெற்றன. அரசு நிர்வாகத்தைப் பொறுத்தவரை திங்களன்று மாவட்ட ஆட்சியர்கள் பொதுமக்களிடம் மனு பெற்று, பிரச்சனைகளை தீர்ப்பதற்கு 'மனு நாள்' நடத்தவேண்டும் என்ற உத்தரவும், காவல்துறையின் சீரமைப்பிற்காக ஆணையம் கொண்டுவந்ததும் குறிப்பிடத்தக்கவை.

2006-11வரை முதல்வராக இருந்த காலத்தில் நியாயவிலைக் கடைகளில் ரூ.2க்கு அரிசி வழங்கும் திட்டம், எட்டு ஏக்கர் பரப்பளவில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைத்தது, கோவை, மதுரை,திருச்சி மற்றும் நெல்லையில் தகவல் தொழில்நுட்ப பூங்காங்களை அமைத்தது போன்ற முக்கிய திட்டங்களை செயல்படுத்தினார்.

முதலும் முடிவும் எப்படி அமைந்தது?

முறைசாரா தொழிலாளர்களுக்கான வாரியங்களை அமைத்தது, மதுரையில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி உள்ளிட்ட நான்கு பஞ்சாயத்துக்களில் முதன்முதலாக தேர்தல் நடத்தப்பட்டு ஜனநாயக முறைப்படி பஞ்சாயத்து தலைவர்கள் தேர்வுசெய்யப்பட்டது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

2006 தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டதுபோலவே ஒவ்வொரு இல்லத்திற்கும் இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டம் நாடுமுழுவதும் பேசப்பட்டது. திமுகவின் தேர்தல் அறிக்கைதான் 2006ம்ஆண்டின் ஹீரோ என அன்றைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளிப்படையாகவே பேசினார்.

ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் முழுவதுமாக ரூ.6,866 கோடி தள்ளுபடி செய்தது திமுக. அதுவரை இருந்த அரசுகள், வட்டியை மட்டுமே தள்ளுபடி செய்துவந்த நிலையில், கடன்தொகை முழுவதையும் ரத்து செய்தது பெரிதும் பேசப்பட்டது.

கருணாநிதிபடத்தின் காப்புரிமைAFP

கருணாநிதி முதல்வராக செயல்பட்ட முதல் மற்றும் இறுதி ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்த திட்டங்களால் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் எஸ்.ஆனந்தியிடம் கேட்டோம்.

முதலில் கருணாநிதியின் பின்புலத்துடன் அவர் கொண்டுவந்த திட்டங்களை அலசுவது முக்கியம் என்றார் அவர். ''இளவயதில் வறுமை, உணவு, படிப்பு என அடிப்படை தேவைகளுக்காக அவர் சந்தித்த சவால்கள் பிற்காலத்தில் அதிகாரத்திற்கு வந்தபோது, சமூகநீதிக்காக திட்டங்களை கொண்டுவரவேண்டும் என்று அவரை தூண்டியது. கருணாநிதி கொண்டுவந்த முக்கிய திட்டங்களை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் விரிவுபடுத்துவது அல்லது நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது என்ற அளவில் செயல்படுத்தினார்கள். தொடக்கப்புள்ளியாக கருணாநிதி இருந்தார் என்பது வெளிப்படை,''என்கிறார் ஆனந்தி.

முன்மாதிரி முதல்வர்

''முதல் ஆட்சிக்காலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக சட்டநாதன் கமிஷன் கொண்டுவந்ததால், நீண்ட காலத்தில் பின்தங்கிய குடும்பங்களில் இருந்துவந்த பல்லாயிரம் பேர் இடஒதுக்கீட்டில் படிக்கவும், வேலைவாய்ப்பு பெறவும் முடிந்தது. இந்தியாவில் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்கள் பலரும் ஏற்றம் கண்டுள்ள மாநிலமாகவும் தமிழகம் இருப்பதற்கு காரணம் இடஒதுக்கீடு,'' என்றார் அவர்.

இறுதி ஆட்சிக்காலத்தை பொறுத்தவரை இலவசமாக தொலைக்காட்சி பெட்டி கொடுத்தது உள்ளிட்ட இலவசபொருட்களை வழங்கும் கவர்ச்சித் திட்டங்கள் மக்களை கவர்ந்திழுக்க பயனளித்திருந்தாலும், சமூக மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்கிறார் ஆனந்தி.

''கடந்த ஐம்பது ஆண்டு காலத்தில், திமுகவின் அமைச்சரவை மற்றும் திமுகவில் முக்கிய பொறுப்புகளில், முடிவு எடுக்கும் பொறுப்புகளில் பெண்களின் பங்கு மிகவும் குறைவு. குடும்ப பொறுப்பை தாண்டி அரசியல் மற்றும் பொதுவாழ்வில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்கவேண்டும் என்ற இலக்கை அடைவதில் பெரும் பின்னடைவை அவர் சந்தித்தார். சத்தியவாணிமுத்து, சற்குணம் என வெகுசிலரே திமுகவின் பெண் முகங்களாக தெரிந்தார்கள். இன்றும் பெண் முகங்களை தேடவேண்டிய நிலையில்தான் உள்ளது,'' என்று கூறிய ஆனந்தி, பெண்கள் வாக்குவங்கியாக, பயனாளியாக மட்டுமே தக்கவைக்கப்பட்டதாகவும் தோன்றுகிறது என்கிறார்.

கருணாநிதிபடத்தின் காப்புரிமைTHE INDIA TODAY GROUP

தமிழகத்தில் சமூக நீதிக்காக தொடங்கப்பட்ட அமைப்பில் உருவான தலைவர் ஒருவாரல் சாதிக்கமுடிந்தவை என பட்டியலிட்டால் அதில் கருணாநிதியின் சாதனைகளை மற்ற முதல்வர்கள் எட்டமுடியவில்லை. ஆனால் சமூகமாற்றத்தை மையமாக கொண்டு கட்சியை நடத்திவந்த கருணாநிதியிடம் பெண்களும்,தாழ்த்தப்பட்ட மக்களும் இன்னும் பல தளங்களில் ஒடுக்கப்பட்டவர்களும் கொண்டிருந்த எதிர்பார்ப்பை அவர் முழுமையாக பூர்த்திசெய்தாரா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது என்றார்.

முன்னோடி திட்டங்களை கொண்டுவந்தவர்

கருணாநிதி முதல்வராக செயல்பட்ட ஐந்து முறையும் பல வெற்றிதிட்டங்களை கொண்டுவந்தபோதும் ஏன் தொடர்ந்து ஆட்சி அமைக்க முடியவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் மற்றும் எழுத்தாளர் அருணனிடம் கேட்டோம்.

''திராவிடர் கழகத்தில், பெரியார் பள்ளியில் இருந்து வந்த கருணாநிதி சமூகமாற்றத்தை தனது திட்டங்களில் காணவேண்டும் என்பதை உறுதியாக நம்பியவர். முதல் முறையாக முதல்வராக இருக்கும்போதும், அவரது இறுதி ஆட்சிக்காலத்தின் போதும் கொண்டுவந்த திட்டங்கள் பலவும் முன்னோடியான திட்டங்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவை எவ்வாறு செயலுக்கு வந்தன என்பதையும் பார்க்கவேண்டும்,'' என்றார்.

''முதல் ஆட்சிக்காலத்தில் தனியார் வசம் இருந்த பேருந்து போக்குவரத்தை அரசுடமையாக்கி, அரசு போக்குவரத்து கழகங்கள் அமைத்ததால், பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெற்றனர். சிறு கிராமங்களில் இருந்தவர்கள் தங்களது வேலைக்காக அண்டை நகரங்களுக்கு செல்ல பேருந்துகள் உதவின. எளிய மக்களின் நகர்தலுக்கு பெரும் உதவியாக இருந்த பேருந்துகள் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தியது. இதுவே பின்னாளில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அளிக்கும் திட்டத்திற்கு முன்னோடியாக அமைந்தது,''என்றார்.

''இந்தியாவில் மின்சார வசதி இல்லாத கிராமங்கள் இன்றும் உள்ளன. ஆனால், 1970ல் தமிழகத்தின் மொத்த கிராமங்களான 57,000 கிராமங்களில் 42,000 கிராமங்களில் மின்சார இணைப்புகள் கொடுக்கப்பட்டது என்பது பெரும் சாதனை. அதேபோல இறுதியாக 2006ல் தொடங்கி 2011வரை செய்த ஆட்சியிலும் மானிய விலையில் அரசி கொடுத்து நியாயவிலைக் கடைகளை வலுப்படுத்தி, சாதாரண மக்களின் உணவு பிரச்சினையை தீர்த்தது. உணவுக்காக அல்லாடத் தேவையில்லை என்ற நிலையை ஏற்படுத்தி, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள் பலவும் நம்பிக்கையோடு வாழ்வதற்கு இந்த திட்டம் உதவியது. கூட்டுறவு வங்கியில் விவசாயிகளின் கடனை உடனடியாக தள்ளுபடி செய்ததால், பலரும் பயன்பெற்றனர்,'' என்றார்.

இடஒதுக்கீட்டிற்கு வித்திட்ட சட்டநாதன்கமிஷன்

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தற்போது நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவர கருணாநிதியின் முதல் ஆட்சிக்காலத்தில் அமைத்த சட்டநாதன் கமிஷன்தான் காரணம் என்ற அருணன், ''பிராமண ஆதிக்கத்தை ஒடுக்கி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்பு அளிப்பது என்பதை திராவிடர் கழக காலத்தில் இருந்து பேசிவந்த கருணாநிதி, இடஒதுக்கீடு முறைக்கு வித்திட்டார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டுமே 69 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. கடைசி முறை முதல்வராக இருந்தபோது கூட அருந்ததியர் இன மக்களுக்கான உள் ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தி அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தார்,'' என்றார் அருணன்.

திமுக-வின் பின்னடைவு குறித்து பேசிய அவர்,''நலத்திட்டங்களை அடுக்கிக்கொண்டே போனாலும், ஊழல் புகார்கள் கருணாநிதியின் ஆட்சியில் அவர் மேற்கொண்ட பயன்தரும் திட்டங்களால் அவர் சேர்த்த புகழை நிலைகுலைய வைத்துவிட்டது. அதுவும் அவரது முதல்ஆட்சிக்காலம் மற்றும் இறுதி ஆட்சிக்காலத்திலும் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக அதிமுகவுக்கு ஆட்சியை பறிகொடுத்ததால், அதில் இருந்து மீண்டுவருவதில் சிரமம் இருந்தது,'' என்கிறார் அருணன்.

கருணாநிதிபடத்தின் காப்புரிமைTHE INDIA TODAY GROUP

2006-2011ல், மத்தியில் திமுகவின் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஊழல் வழக்குகளை சந்திக்க நேர்ந்ததால், கருணாநிதிக்கு கிடைக்கவேண்டிய தேர்தல் வெற்றியில் தொய்வு ஏற்பட்டது என்றார்.

2011ல் அடைந்த தோல்விக்கு மற்றொரு காரணமாக மின்சாரத் தட்டுப்பாடு அமைந்துவிட்டது. அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியில், தமிழத்தை மின்வெட்டு மாநிலம் என்ற நிலையில் இருந்து மின்மிகை மாநிலமாக மாற்றப்போவதாகச் சொல்லி ஓட்டு சேகரிக்கும் அளவுக்கு மின்வெட்டு பிரச்சனை விஸ்வரூபமாகி இருந்தது.

ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்திருந்தாலும், ஆட்சி அமைத்த ஒவ்வொரு முறையும் சமூகநீதியை நிலைநாட்டும் விதத்தில் அவர் அறிமுகப்படுத்திய பல திட்டங்கள் தற்போதும் கூட வேறு மாநிலங்களில் சாத்தியமா என்று தெரியவில்லை என்று கூறிய அருணன், கடைசி முறை முதல்வராக இருந்தபோது எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது என்றார்.

https://www.bbc.com/tamil/india-45119753

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருட்டு ரயிலில் சாமானியன் ஏறினால் தண்டனை இவர் ஏறினால் புகழ்  மற்றவன் நாலு பெண்களை மணந்தால் காமாந்தகன் இவர் ?????????????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.