Jump to content

சிலை கடத்தல் வழக்கு சி. பி .ஐக்கு மாற்றியதில் எந்த உள்நோக்கமும் இல்லை - ஜெயக்குமார்


Recommended Posts

சிலை கடத்தல் வழக்கு  சி. பி .ஐக்கு மாற்றியதில் எந்த உள்நோக்கமும் இல்லை - ஜெயக்குமார்

 

 

தமிழகத்தில் நடைபெற்ற சிலைக்கடத்தல் வழக்கை விசாரிக்கும் பொறுப்பை சி. பி. ஐக்கு மாற்றியதில் தமிழக அரசிற்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது, 

news_image_political_3_8_18.jpg

‘சிலை கடத்தல் பிரச்சினை சர்வதேச அளவிலான பிரச்சினை. தமிழக பொலிஸார் ஸ்கொட்லாந்து பொலிஸாருக்கு இணையான வல்லமை பெற்றது என்பதில் மாற்று கருத்து இல்லை. 

சர்வதேச பிரச்சினை என்பதால் சி. பி. ஐ அமைப்பை நாடவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சி பி ஐக்க மாற்றினாலும் அல்லது மாற்றாவிட்டாலும் கேள்வி எழுப்புகின்றனர். 

குறித்த விவகாரத்தில் குற்றம் இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் முன் நிற்கவேண்டும் என்பது தான் அரசின் ஒரே நோக்கம். அதனால் சிலை கடத்தல் வழக்குகள் விசாரிக்கும் பொறுப்பை சி .பி .ஐ.வசம் மாற்றியதில் தமிழக அரசிற்கு எந்த உள்நோக்கமும் இல்லை.’ என்றார்.

http://www.virakesari.lk/article/37808

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவையே சிறைக்கு அனுப்பியவர் கவிதா! புதிய தகவல்கள்

 
 

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உற்சவர் சிலை தங்க மோசடியில் இந்து அறநிலையத்துறை கூடுதல் இணை ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டுள்ளார். அதிர்ச்சி தருவதாக இருக்கிறது கவிதாவின் அரசியல் பின்னணி! 

ஜெயலலிதாவையே சிறைக்கு அனுப்பியவர் கவிதா! புதிய தகவல்கள்
 

சிலை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவின் பின்னணி, ஆச்சர்ய ரகம்! ஆம், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டு தரப்பிலுமே நேரடியாக மேலிடங்களுடன் பேசும் அளவுக்கு செல்வாக்கு மிக்கவராக வலம் வந்திருக்கிறார் கவிதா.

'சசிகலாவின் உறவினர் என்பதால்தான் கவிதாவை தமிழக அரசு அவரைப் பழிவாங்குகிறது என ஒரு தரப்பினரும், இல்லையில்லை தமிழக அரசு கவிதாவை காப்பாற்ற முயற்சிக்கிறது. அதனால்தான் வழக்கையே சி.பி.ஐ-க்கு மாற்றுகிறது என மற்றொரு தரப்பினரும் சொல்லிவருகிறார்கள். இந்நிலையில், கவிதாவின் உண்மையான பின்னணி என்பது குறித்து விசாரிக்கக் களத்தில் இறங்கினோம். தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தாமல் சிலர் நம்மிடையே பேசினார்கள்.

யார் இந்த கவிதா? 

 

 

கவிதா - ஜெயலலிதா பின்னணி

அவர்கள் சொல்வது இதுதான்-

திருநெல்வேலியைப் பகுதியை பூர்விகமாகக் கொண்டவர் கவிதா. பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த இவர், சட்டப்படிப்பு முடித்து சென்னையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். பாரம்பர்ய தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்த இவர், தமிழகத்தையே அதிரச் செய்த கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடியவர். 

 
 
 

 

கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே வழக்கு! 

ஜெயலலிதா முதன் முறையாக முதல்வரானபோது அவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன. அதில் கொடைக்கானலில் உள்ள பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு மிக முக்கியமானது. 1991 -96 ஆட்சிக்காலத்தில் இந்த ஹோட்டலுக்கு விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கியதாக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, உள்ளாட்சித்துறை அமைச்சர் செல்வகணபதி ஆகியோர் மீது புகார் எழுந்தது. தி.மு.க தரப்பில் தொடரப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு 2000ல் வழங்கப்பட்டது. அதில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஓராண்டு சிறைத் தண்டனையும் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 2001ம் ஆண்டு மேல்முறையீடு செய்து விடுதலையானார் ஜெயலலிதா. இந்த வழக்கில் சீனியர் வழக்கறிஞர் ஒருவரிடம் ஜூனியராக பணியாற்றியவர் கவிதா. சீனியருக்கு முக்கிய தரவுகளை எடுத்துக் கொடுப்பது, சீனியர் வராதபோது தானே வழக்காடுவது என முக்கிய பங்காற்றியிருக்கிறார். ஒரு வழக்கறிஞராக இந்த வழக்கில் கவிதா கட்டிய தீவிரமும் அவரது விடாமுயற்சியும் அளப்பறியது.

 

 

குடும்பப் பின்னணி! 

இரும்புத்திரை படபிடிப்பில் கவிதாவின் மகன் மித்ரன்

கவிதாவின் தந்தை, முன்னாள் முதல்வர் அண்ணாதுரைக்கு இந்தி மொழிபெயர்ப்பாளராகவும், உதவியாளராகவும் பணியாற்றியவர். அதனால் தி.மு.கவில் கவிதாவின் குடும்பம் செல்வாக்கோடு இருந்தது. வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில், சரவணன் என்ற வழக்கறிஞரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார் கவிதா. சரவணன், சசிகலாவுக்கு உறவினர். அதாவது, சசிகலாவின் அண்ணி இளவரசியின் சம்பந்தியான திருச்சியைச் சேர்ந்த பொறியாளர் கலியபெருமாள், சரவணனின் சித்தப்பா. இதனால் திருமணத்திற்கு பிறகு அ.தி.மு.கவிலும் கவிதாவுக்கு செல்வாக்கு ஏற்பட்டது. அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள நெருக்கத்தால் போயஸ் கார்டனில் சர்வசாதாரணமாகச் சென்றுவரக்கூடியவராக இருந்தார் சரவணன். கவிதாவின் மகன் மித்ரன், விஷால் நடித்த ‘இரும்புத்திரை’ படத்தின் இயக்குநர்.  

தி.மு.க., அ.தி.மு.க உறவு! 

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை மற்றும் தன் தந்தைக்கும் உள்ள நெருக்கத்தின் காரணமாக, தி.மு.க ஆட்சியின்போது அதன் முக்கிய பிரமுகர்களிடம் சர்வசாதாரணமாக பேசக்கூடியவராக இருந்தார் கவிதா. அதேபோல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால், கணவர் சரவணன் மூலமாக, அந்தக் கட்சியினரிடமும் சர்வசாதாரணமாகப் பழகி வந்தார். தி.மு.கவைச் சேர்ந்த பெரியகருப்பன் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது கவிதாவுக்கு பணிமாறுதல் கொடுக்கப்பட்டது. அப்போது முதல்வர் கருணாநிதியே தலையிட்டு அந்த உத்தரவை ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது. கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் கவிதாவின் தந்தைக்கு தமிழ்நாடு குடியிருப்பு வாரியம் மூலமாக மயிலாப்பூரில் வீடும் வழங்கப்பட்டதாம். 

அரசுத்துறையில் அசுர வளர்ச்சி! 

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்

கவிதாவின் வளர்ச்சி பற்றி பேசும் அறநிலையத்துறை முன்னாள் ஊழியர்கள் சிலர், ''தனபால் இணை ஆணையராக இருந்தபோது, அவர் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே கவிதாவுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஆணையராக தனபால் பதவி உயர்வு பெற்றபோது, திருப்பணி இணை ஆணையராக கவிதாவை உயர்த்தினார். அதன் பிறகு திருப்பணி கூடுதல் ஆணையராக பதவி உயர்வு பெற்றார் கவிதா. சென்னையில் உள்ள எல்லா அதிகாரிகளுக்கும் பணிமாறுதல் கிடைக்கும். ஆனால், கவிதாவும், தனபாலும் அதிகார பலத்தால் சென்னையிலேயே கோலோச்சி வந்தனர். கவிதாவின் அசுர வளர்ச்சி அவருடன் பணியில் சேர்ந்தவர்களை பிரமிப்படைய செய்தது. அவரை எதிர்த்துக் கொண்டு யாரும் அங்கே பணியாற்ற முடியாத சூழல் உருவானது. அதனால், அவருக்கு இணையான அதிகாரிகள் பலரே... கப்சிப் ஆகிவிட்டனர்.

கைது செய்தால் காட்டிக் கொடுப்பேன்! 

பொன்.மாணிக்கவேல்

இந்த விவகாரம் பற்றி ஆரம்பம் முதல் கவனித்துவரும் ஆன்மிக அன்பர்கள் சிலர், ''பழநியில் இருக்கும் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் புதிதாக செய்யப்பட்ட முருகன் உற்சவர் சிலை முறைகேடு வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜரான இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபால் தற்போது வீட்டுச் சிறையில் இருக்கிறார். காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் உற்சவர் சிலை மோசடி மற்றும் பழனி தண்டாயுதபாணி சிலை மோசடி ஆகிய வழக்குகளில் முத்தையா ஸ்தபதி வீட்டுக் காவலில் இருக்கிறார். கவிதாவை கைது செய்யத் தகுந்த ஆதாரம் வேண்டும் என்பதற்காக, முத்தையா ஸ்தபதி உள்ளிட்டவர்களுக்குச் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினர் வலை விரித்தார்கள். முத்தையா ஸ்தபதி கொடுத்த வாக்குமூலத்தை வைத்தே கவிதாவிடம் விசாரணையைத் தொடங்க நினைத்தார்கள். ஆனால், பலம் பொருந்திய கவிதாவை, அத்தனை எளிதாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினரால் நெருங்க முடியவில்லை. ‘என்னைக் கைது செய்தால், அனைவரையும் காட்டிக் கொடுத்துவிடுவேன்’ என உயர் அதிகாரிகள் பலருக்கும் மிரட்டல் விடுத்ததாகக்கூறப்படுறது. இதனால் முக்கிய அமைச்சர் ஒருவர், பொன்.மாணிக்கவேலிடம் பேச்சுவார்த்தை நடத்திப்பார்த்தார். ஆனால், பொன்.மாணிக்கவேல் பின்வாங்குதாக இல்லை. 

சோமாஸ் கந்தர் உற்சவர் சிலை

கடந்த 7 மாதமாகச் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு ஒத்துழைப்பு தராமல் இருந்துவந்தார் கவிதா. ஏகாம்பரநாதர் கோயில் உற்சவர் சிலை விஷயத்தில் 50 லட்சம் வாங்கினார் கவிதா என்று அர்ச்சகர் ஒருவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில்தான் கடந்த 31ம் தேதி கவிதாவைக் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், ‘எல்லாமே கமிஷனர் சொன்னார்... நான் வெறும் கையெழுத்து மட்டுமே போட்டேன்’ எனக் கும்பகோணம் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறாராம் கவிதா.

கவிதாவை கைது செய்ததும் தமிழக அரசே நிலைகுலைந்துவிட்டது. அவர் வாயைத் திறந்தால் தி.மு.க மற்றும் அ.தி.மு.கவில் உள்ள பல முக்கிய புள்ளிகளும், முன்னாள் - இந்நாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் இதில் சிக்குவார்கள். அது, ஆட்சிக்கே கூட உலை வைக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுக்கும் என்பதால்தான், வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றும் முடிவைத் தமிழக அரசு எடுத்துள்ளது” என அதிர்ச்சி கிளப்புகிறார்கள். 

அட, ஆண்டவா!

https://www.vikatan.com/news/coverstory/133062-kavitha-appeared-as-an-advocate-in-jayalalitha-case-and-more-info-on-her.html

Link to comment
Share on other sites

`உண்மையைச் சொன்னால் கவிதா மட்டுமல்ல...' -  ஆதாரங்களுடன் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் 

 

மாணிக்கவேல்

சிலை தடுப்புப் பிரிவு போலீஸ் ஐ.ஜியான பொன்.மாணிக்கவேலின் கையிலிருக்கும் ஆதாரங்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்த இரண்டு பேருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சிலை தடுப்புப் பிரிவு போலீஸ் ஐ.ஜியான பொன்.மாணிக்கவேலின் அதிரடி நடவடிக்கை, தமிழக இந்து சமய அறநிலையத்துறையினருக்கு மட்டுமல்லாமல், ஆளுங்கட்சியினருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இதனால்தான் இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் ஆர்வம்காட்டியதோடு ஆணையையும் பிறப்பித்தனர். தமிழகக் கோயில்களில் திருட்டுப்போன சிலைகளைக் கண்டுபிடித்தபோது ஆளுங்கட்சியினர் பொன்.மாணிக்கவேலின் செயலைப் பாராட்டிப் பேசினர். நீதிமன்றம்கூட, ரயில்வே ஐ.ஜி-யாக பொன்.மாணிக்கவேல் மாற்றப்பட்டபோது சிலை வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க நீதிமன்றம் தனி உத்தரவை பிறப்பித்தது.

 

 

ராஜராஜ சோழன் சிலையைக் கண்டுபிடித்து தஞ்சாவூருக்கு கொண்டுவந்த பொன்.மாணிக்கவேலுக்கு பாராட்டுகள் குவிந்தன. சிலைகளைக் கண்டுபிடித்த அவர், தங்கச் சிலைகள், தங்கக் கோபுரங்கள் செய்ததில் நடந்த முறைகேடுகளைக் கண்டுபிடித்தது ஏனோ ஆளுங்கட்சியினருக்குப் பிடிக்கவில்லை. பழனியில் ஸ்பதி முத்தையா, முன்னாள் ஆணையர் தனபால் ஆகியோர் மீது பொன்.மாணிக்கவேல் நடவடிக்கை எடுத்ததை ஆளுங்கட்சியினர் ரசிக்கவில்லை. இன்னும் சில மாதங்களில் பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற்றுவிடுவார் என்று ஆளுங்கட்சியினர் அமைதியாக இருந்தனர். ஆனால், ஓய்வு பெறுவதற்குள் சிலை முறைகேடுகளில் தொடர்புடையவர்களை சும்மா விடமாட்டேன் என்று பொன்.மாணிக்கவேல் டீம் கூடுதல் ஆணையர் கவிதாவை கைதுசெய்தது. கவிதாவுக்கு எதிராக காஞ்சிபுரம் கோயில் சிலை முறைகேடு மட்டுமல்லாமல் திருவேற்காடு கோயில், திருத்தணி கோயில் எனப் பட்டியல் உள்ளது. 

 

 

இந்து அறநிலையத்துறையின் திருப்பணிகளின் கூடுதல் ஆணையரான கவிதா, அந்தப்பதவியில் நீண்டகாலமாக இருந்துவருகிறார். தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் நடக்கும் திருப்பணிகளை கவனித்துவந்த கவிதா மீது மூன்று ஆண்டுக்கு முன்பிலிருந்தே குற்றச்சாட்டுக்கள் குவியத் தொடங்கின. ஆனால், சில காரணங்களால் கவிதா இடமாற்றம் செய்யப்படுவது தடுக்கப்பட்டது. கவிதாவுக்கு பக்கப்பலமாக இருந்தவர்கள் ஓய்வு பெற்றதும் அவர் மீது நடவடிக்கைகள் பாயத் தொடங்கின. கவிதாவின் சொந்த ஊர் தஞ்சாவூர். மயிலாப்பூரில் குடியிருந்தார். 

கவிதா கைதானதும் அவருக்கு ஆதரவாக சிலர் அறிக்கை விட்டனர். அவரை ஜாமீனில் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் கவிதாவின் கைது படலத்தோடு சிலை வழக்குகள் சி.பி.ஐ-யிடம் மாறப்போகிறது. பொதுவாக காவல்துறையில் சிலை தடுப்புப் பிரிவுப் பணி என்பது தண்டனைக்குரிய பணியாக கருதப்படும். லத்திகா சரண், டி.ஜி.பி-யாக இருந்தபோதுதான் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூருக்கு கடிவாளம் போடப்பட்டது. அப்போதும் பொன்.மாணிக்கவேல் அப்பிரிவில்தான் இருந்தார். சர்வதேச நெட்வொர்க் கும்பலுடன் சுபாஷ் கபூருக்கு உள்ள தொடர்புகள், உள்ளூர் பிரமுகர்கள் என எல்லாவற்றையும் விசாரணை மூலம் வெளியில் கொண்டுவந்தார் பொன்.மாணிக்கவேல். 

கவிதாவையடுத்து, ஆளுங்கட்சிக்கு நெருக்கமான இரண்டு பேருக்கு சிலை தடுப்புப் பிரிவு போலீஸார் குறி வைத்திருந்தனர். இந்தத் தகவல் ஆளுங்கட்சியினருக்குத் தெரியவந்ததும் உஷரான அவர்கள் பொன்.மாணிக்கவேலுக்கு செக் வைத்துள்ளனர். நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல், சமர்ப்பிக்கவுள்ள ஆதாரங்களில் ஆளுங்கட்சியினரின் பெயர்கள் இடம்பிடிக்கும் என்று சொல்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். முன்னதாக பொன்.மாணிக்கவேலுக்கு எந்தவித ஆதாரங்களும் கிடைத்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர் இந்து சமய அறநிலையத்துறையினர். திருவேற்காடு கோயிலில் கவிதா தொடர்பான ஆதாரங்கள் எல்லாம் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளதாம்.

 

 

ஆளுங்கட்சியினரின் தலையீடு காரணமாகச் சிலை தடுப்புப் பிரிவில் உள்ள போலீஸாரில் சிலர், பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக சில செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தனக்கு நம்பிக்கைக்குரியவர்கள் மூலம் ஆதாரங்களைத் திரட்டி சேகரித்துவைத்துள்ளார் பொன்.மாணிக்கவேல். இதற்காக அவரின் டீம் இரவு பகல் எனப் பாராமல் ஆதாரங்களைத் திரட்டியுள்ளது. அந்த ஆதாரங்கள் நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும்போது நிச்சயம் ஆளுங்கட்சியைச் சேர்ந்த இரண்டு முக்கிய நபர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்கின்றனர்' உள்விவரம் தெரிந்தவர்கள்.

https://www.vikatan.com/news/tamilnadu/133030-ig-ponmanickavel-intervention-may-create-political-storm.html

Link to comment
Share on other sites

சிலை வழக்கு - சி.பி.ஐ சிக்கல் - ஆர்ப்பரிக்கும் ஐ.ஜி... ஆடிப்போன ஆட்சி!

3223_thumb.jpg

 

ந்த விஷயத்திலும், ‘சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடலாம்’ என கோர்ட் சொன்னால், அதைத் தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும். ஆனால், ‘சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்போகிறோம்’ என்று தமிழக அரசே கோர்ட்டில் தெரிவித்த விநோதம் நிகழ்ந்திருக்கிறது. ஆகஸ்ட் 1-ம் தேதி இப்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் சொல்லிவிட்டு, மறுநாளே இதற்காக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை, தமிழகம் முழுக்க பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியாகக் கிசுகிசுக்கப்படும் தகவல், இந்த அதிர்ச்சியைக் கூட்டுகிறது. ‘ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், சிலைக்கடத்தல் தொடர்பான விசாரணையை மிகக்கறாராக நடத்திக்கொண்டிருக்கிறார். ஆர்ப்பரிக்கும் இவரின் விசாரணை, கடைசியில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியையே ஆட்டம்காணச் செய்யும் அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது என்று உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில்தான், சி.பி.ஐ விசாரணை என்கிற பெயரில் விசாரணையையே மொத்தமாகக் குழிதோண்டிப் புதைக்கத் தீர்மானித்துவிட்டனர்’ என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

p42a_1533298554.jpg

தமிழகக் கோயில்களில் நடந்த சிலைக்கடத்தல்கள் மற்றும் புதிய சிலைகள் உருவாக்கப்பட்டதில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் வேகமெடுத்து வருகின்றன. அறநிலையத்துறை முன்னாள் கமிஷனர் தனபால், தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையா, கூடுதல் கமிஷனர் கவிதா... என்று அடுத்தடுத்து பலர் கைதாகிவருகிறார்கள். இந்த லிஸ்ட்டில், மேலும் சில முக்கிய அதிகாரிகளின் பெயர்களும் உள்ளன. ‘சிலைகள் திருடுபோனதற்கு உடந்தை; கோயில் திருப்பணிகளில் ஊழல்; சிலைசெய்யும் பணிகளுக்காக நன்கொடை என்கிற பெயரில் தங்கம் வாங்கியதில் முறைகேடு...’ என்று விதம்விதமான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்தான் ஒவ்வொருவரும் கைதாகிவருகின்றனர்.
அடுத்தகட்டமாக முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என்று 67 பேரின் லிஸ்ட் தயாராக இருக்கிறது. இவர்கள் அனைவரையும் அடுத்தடுத்து கைது செய்யவும் பொன்.மாணிக்கவேல் ரெடி. வரும் நவம்பர் மாதத்தில்தான் ஓய்வுபெறுவதற்கு முன்பாகவே இந்த லிஸ்டில் உள்ள அத்தனை பேரையும் கைது செய்து, சிலைக்கடத்தல் மற்றும் முறைகேடுகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார் பொன்.மாணிக்கவேல். அதை மோப்பம்பிடித்த உளவுத்துறை, ‘சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்தவரான பொன்.மாணிக்கவேல், அந்தக் குடும்பத்துக்கும் நெருக்கம். சிலைக்கடத்தல் வழக்கைக் கையில் வைத்துக்கொண்டு ஆட்சியையே கவிழ்க்க அவர் ரகசியத் திட்டம் தீட்டுகிறார்’ என்று தகவல் தர, அனைவரும் மிரண்டுவிட்டனர். இதையடுத்து, சீனியர் அமைச்சர்கள் சிலர் ஆட்சி மேலிடத்துக்கு நெருக்கடியைக் கொடுக்கவே, சி.பி.ஐ வசம் வழக்கை ஒப்படைக்கும் கொள்கை முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

முதலில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமாஸ்கந்தர் சிலை வழக்கைத்தான் கையில் எடுத்தார் பொன்.மாணிக்கவேல். 2015-ல் இந்த சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை பழுதடைந்ததால், புதிய சிலை செய்ய உத்தரவு பெறப்பட்டது. 50 கிலோ எடையில், ரூ.2.12 கோடி செலவில் புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டு, 2016-ம் ஆண்டு டிசம்பரில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ‘இதில், 5 சதவிகிதத் தங்கம்கூட கலக்கப்படவில்லை. மொத்தத்தையும் சுருட்டிவிட்டனர்’ என்று அண்ணாமலை என்பவர், காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றப் படியேறியதுதான் இதற்கு அடிப்படை. தமிழக அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி முத்தையா உள்ளிட்ட ஒன்பது பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், சிலர் முன்ஜாமீன் பெற்றனர்.

இதையடுத்து, பழனியில் முருகனுக்கு ஐம்பொன் சிலை செய்யப்பட்டதிலும் தங்க மோசடி நடந்திருக்கும் விஷயத்தைக் கையில் எடுத்த பொன்.மாணிக்கவேல், ஓய்வுபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால், ஸ்தபதி முத்தையா, கோயில் முன்னாள் இணை ஆணையர் கே.கே.ராஜா, முன்னாள் உதவி ஆணையர் புகழேந்தி, தங்க நகை மதிப்பீட்டாளர் தேவேந்திரன் உள்ளிட்டோரைக் கைது செய்தார். இதில் முத்தையா, முன்னாள் கமிஷனர் தனபால் உள்ளிட்ட சிலர் ஜாமீனில் வெளியே இருக்கிறார்கள். ஆனால், கிட்டத்தட்ட போலீஸ் காவலுடன் ஹவுஸ் அரஸ்ட் என்கிற நிலையில்தான் உள்ளனர்.

அடுத்தகட்டமாக திருத்தணி கோயிலிலும் தங்க மோசடி என்று பகீர் கிளம்பவே, அதையும் துருவ ஆரம்பித்தார் பொன்.மாணிக்கவேல். உடனே, பழனி சிலை முறைகேடு தொடர்பான விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார் தமிழக டி.ஜி.பி-யான ராஜேந்திரன். ‘சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார் சரியான கோணத்தில் விசாரித்து வருகிறார்கள். ஆனால், யார் யாரையோ தப்பிக்க வைப்பதற்காக சில சக்திகள் வெளிப்படையாகவே வேலை செய்கின்றன’ என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக டி.ஜி.பி-க்கும் பொன்.மாணிக்கவேலுக்கும் இடையே கடித வாயிலாகக்கூட மோதல் நடந்ததாகக் கேள்வி. நீதிமன்றத் தலையீட்டின் பேரில், பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து பழனி கோயில் வழக்கையும் விசாரித்துவருகிறார்.

p42b_1533298626.jpg

இந்நிலையில், அறநிலையத் துறை திருப்பணிகள் பிரிவு கூடுதல் ஆணையர் கவிதா, ஜூலை 31-ம் தேதியன்று கைது செய்யப்பட்ட நிலையில், அதிரடியாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவிடமிருந்து ஒட்டுமொத்த வழக்குகளையும் சி.பி.ஐ வசம் மாற்றி அரசாணையை வெளியிட்டு விட்டது தமிழக அரசு.

இதுதொடர்பாக பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், “சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் ஒரு வழக்கு பதிவாகிறது. அதை விசாரிக்கும் பொறுப்பு ஓர் அதிகாரியிடம் ஒப்படைக்கப் படுகிறது. அப்படியிருக்க, குற்றம் சாட்டப்பட்டவர்களை, வழக்குக்கு சம்பந்தமில்லாதவர்கள் எல்லாம் வந்து, ஐ.ஜி முன்னிலையில் விசாரிக்கிறார்கள். இதையெல்லாம் ஒரு விசாரணை அதிகாரி எப்படி அனுமதிக்க முடியும்? ஏதாவது ஏடாகூடமாக நடந்துவிட்டால் யார் பதில் சொல்வது? இப்படி விசாரிக்க அனுமதிக்க மறுத்த காரணத்தால், ஒரு டி.எஸ்.பி மிரட்டப்பட்டுள்ளார். பின்னர் அவர், கோவை மின்திருட்டுப் பிரிவுக்கு உயர் அதிகாரிகளால் மாற்றப்பட்டார். இது ஓர் உதாரணம்தான். இப்படி பல அதிகாரிகளை வளைந்துகொடுக்கச்சொல்லி, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் பொன்.மாணிக்கவேல். இப்படிப் பல பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால், நீதிமன்ற உத்தரவின்பேரில் பொன்.மாணிக்கவேல் செயல்படுவதால், உயர் அதிகாரிகளே மிரண்டு கிடக்கிறார்கள்” என்றார்.

இதுதொடர்பாகப் பேசிய மற்றொரு போலீஸ் அதிகாரி, “ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, உளவுத்துறை உயர் அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் சில நாள்கள் இருந்தார். ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் மோதல் வந்து போயஸ் கார்டனை விட்டு சசிகலா வெளியேற்றப்பட்ட சமயத்தில், இருவருக்கும் இடையே பாலமாகச் செயல்பட்டவர்களில் பொன்.மாணிக்கவேலும் ஒருவர் என்ற பேச்சு உண்டு. ஜெயலலிதா இறந்தபிறகு சமூகரீதியாக இணைந்து செயல்பட்ட பலருடன், பொன்.மாணிக்கவேலுக்கு நட்பு உண்டு. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, எடப்பாடி அரசுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் எண்ணத்தில், திரைமறைவில் அவர் காய் நகர்த்துவதாகச் சந்தேகம் எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஒருவர், தற்போதைய அமைச்சர், சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என்று பலரையும் ‘விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை’ என்று சொல்லி, கைதுசெய்ய அவர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. ஒட்டுமொத்தமாக 60, 70 பேரைக் கைது செய்தால், அரசுமீதான நம்பிக்கை சுத்தமாகக் குலைந்துவிடும். நாடு முழுக்கப் பரபரப்பாகிவிடும். இது, ஆட்சிக்கே சிக்கலை ஏற்படுத்தவும் கூடும். இதையெல்லாம் கணக்குப்போட்டுத்தான், அவர் காய் நகர்த்துகிறார்.

ஈரோடு மாவட்டத்தில், ரூ.1,600 மதிப்புள்ள ஒரு சிலையை பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலை என்று ஜோடனை செய்து ஏமாற்றுக்கும்பல் ஒன்று விலை பேசியது. அவர்களை வளைத்த சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார், அந்தச் சிலையின் மதிப்பை கோடி ரூபாய் என்று மிகைப்படுத்திச் சொல்லியிருக்கிறார்கள். இதுமாதிரி பல விவரங்களை நாங்கள் சேகரித்துள்ளோம். இனி பொன்.மணிக்கவேலின் பாச்சா பலிக்காது. பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.

ஆரம்பத்திலிருந்தே துறை அதிகாரிகளுக்கு எந்தவிதத் தகவல்களையும் தராமல், நீதிமன்றத்துக்கு மட்டுமே தந்துகொண்டிருந்தார். உயர் அதிகாரிகள் கேட்டபோதும் தரமறுத்துவிட்டார். இந்தக் கடுப்பில்தான், அவருக்கு அரசுத் தரப்பிலிருந்து முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. வழக்கு விசாரணையை அவரிடமிருந்தும் பறிக்கும் வேலையும் நடந்தது. ஆனால், தொடர்ந்து நீதிமன்ற நிழலில் இருந்துகொண்டு, ஓயாமல் குடைச்சல் கொடுக்கவே, பொன்.மாணிக்கவேல் என்னென்ன தவறுகள் செய்கிறார் என்பதைக் கண்டறிய உயர் அதிகாரிகள் சிலர் களத்தில் இறங்கினர்.

மதுரையைச் சேர்ந்த ஆன்மிகப் பிரமுகர் இதுபற்றிக் கூறும்போது, “தமிழக உயர் போலீஸ் அதிகாரிகளின் மீடியேட்டர் என்று அழைக்கப்படும் ஒரு பிரமுகர், இந்த விஷயத்தில் உளவு வேலை பார்த்திருக்கிறார். அதாவது, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளைச் சந்தித்து, அவர்களின் ரகசியத் திட்டங்கள் மற்றம் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என அனைத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறார். சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் முன்பு பணிபுரிந்துவிட்டு மாறுதலாகிச்சென்றிருக்கும் போலீஸ் அதிகாரிகளையும் தனியாகச் சந்தித்திருக்கிறார். விசாரணை என்கிற பெயரில் கெடுபிடிகள் காட்டுவது, சட்டத்துக்குப் புறம்பாக நடந்து கொள்வது என்று பொன்.மாணிக்கவேல் செய்த விதிமீறல்களைக் கண்டறிவதுதான் நோக்கம். பொன்.மாணிக்கவேல் மீது அதிருப்தியிலிருந்த அதிகாரிகள் சிலர் கொடுத்த தகவல்களையெல்லாம் மேலிடத்துக்குக் கொண்டுபோயிருக்கிறார் அந்த புரோக்கர். இதையெல்லாம் வைத்து தான், சிபி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடும் முடிவு எடுக்கப்பட்டிருக் கிறது” என்று சொன்னார்.

பொன்.மாணிக்கவேலுக்கு எதிராகத் திரட்டப்பட்டிருக்கும் ஆதாரங்கள் அத்தனை வலிமையானதாக இல்லையென்றாலும், அதிரடியாக இப்படியொரு முடிவை அரசு எடுப்பதற்குப் போதுமானதாக இருந்திருக்கிறது. அதனால்தான், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஆகஸ்ட் 1 அன்று சிலைக் கடத்தல் வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, ‘‘இந்த வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாரின் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. விசாரணையில் வெளிப்படைத் தன்மையும் இல்லை. அரசுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவதில்லை’’ என்று தெரிவித்தார், தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன். உண்மையில், கடந்த ஓராண்டில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட சிலைகளை மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை, ராஜராஜன் மற்றும் உலகமாதேவி சிலைகள். இருபதுக்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளார்கள்.

p42_1533298607.jpg

இந்த விவகாரம் தொடர்பாக பொன்.மாணிக்கவேல் பேச மறுத்துவிட்டார். சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகளிடம் பேசியபோது, ‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பொன்.மாணிக்கவேல் பற்றி நன்றாகத் தெரியும். ஆனால், இந்த ஊழலில் கைதாகப்போகும் அதிகாரிகள், சென்னையைச் சேர்ந்த பிரபல மருத்துவமனையின் உரிமையாளர்களில் ஒருவர், இந்த வழக்கில் சிக்கியிருக்கும் முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களின் உதவியுடன் முதல்வருக்குத் தவறான தகவல்களைத் தந்துள்ளனர். சசிகலாவுக்கு ஆதரவாக, ஆட்சி கவிழும் அளவுக்கான நிலையை பொன்.மாணிக்கவேல் உருவாக்கிக்கொண்டிருக்கிறார் என்கிற தோற்றத் தையும் ஏற்படுத்திவிட்டனர். இதைப்பற்றியெல்லாம் முதல்வரே நேரடியாக பொன்.மாணிக்கவேலிடம் விசாரித்திருந்தால், உண்மை தெரிந்திருக்கும். ஆனால், அதைச் செய்யாமல் அவசரப்பட்டு விட்டனர்’’ என்கிறார்கள்.

இந்த வழக்கில் ஆரம்பம்தொட்டே கறார் காட்டிவரும் நீதிபதி மகாதேவன், சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி-யான பொன்.மாணிக்கவேலின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார். தமிழக அரசு இப்படிச் செய்வதை அவர் ஏற்றுக்கொள்வாரா, அல்லது ஏற்கெனவே இடியாப்பச் சிக்கலில் இருக்கும் இந்த வழக்கு சி.பி.ஐ கைக்குப் போவதை நிராகரிப்பாரா? விரைவில் விடை தெரியும்.

- கனிஷ்கா, இ.லோகேஸ்வரி
அட்டை ஓவியம்: ஹாசிப்கான்
படங்கள்: கே.ஜெரோம்


ஆதாரம் இல்லை!

கா
ஞ்சிபுரம் சிலை மோசடி வழக்கு ஆரம்பகட்டத்தில் பரபரக்கப்பட்டபோதே, கவிதாவிடம் இதுகுறித்துக் கேட்டிருந்தோம். ‘‘இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. இந்த வழக்கைத் தொடுத்திருக்கும் அண்ணாமலை, அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் மாத வாடகைக்குக் கடை வைத்து நடத்திவந்தார். முறையாக வாடகைப் பணம் தராததால், கடையைக் காலி செய்ய உத்தரவிட்டது அறநிலையத் துறை. அதற்குப் பழிவாங்கவே ஆதாரமே இல்லாமல் இதுபோன்ற வழக்கைத் தொடர்ந்திருக்கிறார்’’ என்று சொன்னார்.


எப்போது ரெய்டு?

தி
ருடப்பட்ட சிலைகளின் பின்னணி தொடர்பான தகவல்களைக் கேட்டு, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத் துறை கமிஷனர் ஆபீஸுக்கு சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் பலமுறை அலைந்துள்ளனர். அதற்கு முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ஆனால், முன்னாள் ஆணையர் தனபாலுக்காக முக்கிய ஆவணங்களின் நகல்களை எல்லாம் விடுமுறை தினத்தன்றுகூட ஒருசில அதிகாரிகள் எடுத்துச் சென்றனராம். பொன்.மாணிக்கவேலுக்கு இது தெரிந்ததும் கடுப்பாகிவிட்டார். இதையெல்லாம் நீதிமன்றத்தில் விரிவாக எடுத்துச்சொல்லி, அறநிலையத்துறை கமிஷனர் ஆபீஸில் உள்ள ஆவணங்களைக் கைப்பற்றும் நோக்கில் ரெய்டு நடத்த அனுமதிபெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

கவிதா கைதுசெய்யப்பட்ட அன்றே இந்த ரெய்டும் அரங்கேறுமே என்கிற பதற்றமும், மேற்கொண்டு அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்கிற பயமும் கமிஷனர் ஆபீஸில் பரவியது. அறநிலையத் துறை அதிகாரிகள் சுமார் நாற்பது பேர் வரை 59 நாள் வரை விடுப்பு எடுக்க விண்ணப்பங்களுடன் ஆணையர் ஜெயாவைச் சந்தித்தனர். வாங்க மறுத்துத் திருப்பி அனுப்பிவிட்டார் ஜெயா. அதேசமயம், ‘‘இனி எந்தப் பிரச்னையும் இருக்காது. முதல்வர் அலுவலகம் வரை பேசியாகிவிட்டது. யாரும் பயப்படவேண்டாம்’’ என்று கமிஷனர் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.

பிறகு நடைபெற்ற அறநிலையத்துறை அலுவலர்கள் கூட்டமைப்புச் சங்கத்தின் கலந்தாலோசனைக் கூட்டத்தில், இணை ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்கள் கலந்துகொண்டார்கள். ‘தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் சி.பி.ஐ விசாரணைக்கு நன்றி. அதிகாரிகள்மீது பொய் வழக்கு போடுவது இனி தவிர்க்கப்படும். சி.பி.ஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்கப்படும்’ என்றெல்லாம் கூட்டத்தில் பேசியுள்ளனர்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

’கவிதாவும் உடந்தை!’ vs ’கையெழுத்திட்டது மட்டுமே கவிதா!’ - சிலை கடத்தல் சிக்கல்

 

நிலவரம் எதுவாக இருந்தாலும், உயர்ந்த பொறுப்பில் இருப்பவரைச் சுற்றி இவ்வளவு சர்ச்சைகள்... அவருக்குத் தெரியாமலே இவ்வளவு விவகாரம் நடந்திருந்தாலும் அது குற்றத்தின் ஒரு பகுதிதான். அதே சமயம் அவரை பலிகடாவாக்கும் முயற்சிகள் நடப்பின், அதுவும் கண்டனத்துக்குரியது.

’கவிதாவும் உடந்தை!’ vs ’கையெழுத்திட்டது மட்டுமே கவிதா!’ - சிலை கடத்தல் சிக்கல்
 

ந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதா குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகின்றன. `முதல் தகவல் அறிக்கையில் கவிதா பெயர் இல்லை. இந்தக் கைதின் மூலம் பொன்.மாணிக்கவேலுக்குத்தான் பாதிப்பு வரப் போகிறது' என ஒரு பிரிவினரும், `ஆதாரங்கள் இல்லாமல் ஓர் உயர் அதிகாரியை அவர் கைது செய்ய மாட்டார்' எனவும் மற்றொரு சாராரும் பேசி வருகின்றனர்.

கவிதா, இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்
 

கவிதா விவகாரத்தில் என்ன நடக்கிறது? 

திருநெல்வேலியைப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர் கவிதா. சட்டப்படிப்பு முடித்து சென்னையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். பாரம்பர்யமான தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜெயலலிதா முதன் முறையாக முதல்வரானபோது அவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன. அதில் கொடைக்கானலில் உள்ள பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு மிக முக்கியமானது. 1991 -96 ஆட்சிக்காலத்தில் இந்த ஹோட்டலுக்கு விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கியதாக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, உள்ளாட்சித்துறை அமைச்சர் செல்வகணபதி ஆகியோர் மீது புகார் எழுந்தது. தி.மு.க தரப்பில் தொடரப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு 2000-ல் வழங்கப்பட்டது. அதில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஓராண்டு சிறைத்தண்டனையும் அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்ட வழக்கில் சீனியர் வழக்கறிஞரிடம் ஜூனியராகப் பணியாற்றியவர் கவிதா. முக்கியத் தரவுகளை எடுத்துக்கொடுப்பது என இந்த வழக்கில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார் என்கின்றனர் அவரது ஆதரவு அதிகாரிகள். 

 

 

தி.மு.க, அ.தி.மு.க பின்னணி! 

இதுகுறித்து நம்மிடம் பேசிய அதிகாரி ஒருவர், ``கவிதாவின் தந்தை, முன்னாள் முதல்வர் அண்ணாதுரைக்கு இந்தி மொழிபெயர்ப்பாளராகவும் உதவியாளராகவும் பணியாற்றியவர். அதனால் தி.மு.கவில் கவிதாவின் குடும்பம் செல்வாக்கோடு இருந்து வந்தது. வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில், சரவணன் என்ற வழக்கறிஞரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் கவிதா. சசிகலாவின் உறவினர்தான் சரவணன். அதாவது, சசிகலாவின் அண்ணி இளவரசியின் சம்பந்தியான திருச்சி கலியப்பெருமாள், சரவணனுக்கு சித்தப்பா முறை ஆவார். அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள நெருக்கத்தால் போயஸ் கார்டனில் சர்வசாதாரணமாகச் சென்றுவரக்கூடியவராக இருந்தார் சரவணன். இந்த நெருக்கம்தான், `சசிகலாவின் பினாமி’ எனக் கவிதா குறித்து பரவும் தகவல்களுக்கு இதுவே அடிப்படை. கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அறநிலையத்துறை அமைச்சராகப் பெரிய கருப்பன் இருந்தபோது, திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பணியாற்றினார் கவிதா. அறநிலையத்துறை சொத்துகள் தொடர்பான விஷயத்தில் உள்ளூர் தி.மு.க-வினருடன் மோதவேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, கவிதாவுக்குப் பணிமாறுதல் கொடுக்கப்பட்டது. முதல்வர் கருணாநிதியே தலையிட்டு அந்த உத்தரவை ரத்து செய்ததாகவும் தகவல் வெளியானது. 

 

 

அறநிலையத்துறை ஆணையராக தனபால் இருந்தபோது, திருப்பணிகள் ஆணையராக நியமிக்கப்பட்டார் கவிதா. தனபால் மீது பொன்.மாணிக்கவேலின் கரம் இறுகியிருக்கிறது. அவரது பணிக்காலத்தில்தான் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. திருப்பணிகள் துறையில் இருந்ததால், கவிதா மீதும் சந்தேக வளையம் திரும்பியுள்ளது. தனபால் இணை ஆணையராக இருந்தபோது, அவர் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே கவிதாவுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது என்கிறார்கள். ஆணையராக தனபால் பதவி உயர்வு பெற்றபோது, திருப்பணி இணை ஆணையராகப் பதவிக்கு வந்தார் கவிதா. அதன் பிறகு திருப்பணி கூடுதல் ஆணையராகப் பதவி உயர்வு பெற்றார். சென்னையில் உள்ள எல்லா அதிகாரிகளுக்கும் பணிமாறுதல் கிடைக்கும். ஆனால், கவிதாவும் தனபாலும் சென்னையிலேயே பதவியில் நீடித்து வந்தனர். தனபால் விவகாரத்தில் ஆதாரங்களைச் சேகரித்தபோதுதான், கவிதாவின் தொடர்புகளும் தெரிய வந்ததாகச் சொல்கின்றனர். இதனால் பொன்.மாணிக்கவேல் கவிதாவுக்குச் சிலைக்கடத்தல் விவகாரங்களில் வலுவான தொடர்பு இருக்கும் என நம்பினார்!’’ என்றார்.   

பொன்.மாணிக்கவேல், சிலை

எல்லாம் கமிஷனர்தான்! 

இந்த விவகாரத்தைத் தொடக்கம் முதலே கவனித்து வரும் கோயில் நிர்வாகிகள் சிலர், ``பழநியில் இருக்கும் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் புதிதாகச் செய்யப்பட்ட முருகன் உற்சவர் சிலை முறைகேடு வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜரான இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபால் தற்போது வீட்டுச் சிறையில் இருக்கிறார். காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் உற்சவர் சிலை மோசடி மற்றும் பழனி தண்டாயுதபாணி சிலை மோசடி ஆகிய வழக்குகளில் முத்தையா ஸ்தபதி வீட்டுக் காவலில் இருக்கிறார். கவிதாவை கைது செய்யத் தகுந்த ஆதாரம் வேண்டும் என்பதற்காக, முத்தையா ஸ்தபதி உள்ளிட்டவர்களுக்குச் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினர் வலை விரித்தார்கள். முத்தையா ஸ்தபதி கொடுத்த வாக்குமூலத்தை வைத்தே கவிதாவிடம் விசாரணையைத் தொடங்க நினைத்தார்கள். `என்னைக் கைது செய்தால், விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் சுட்டிக் காட்டுவேன்’ எனக் கவிதா தரப்பினர் மிரட்டியதாக அதிகாரிகள் சொல்கின்றனர். இதையடுத்து, பொன்.மாணிக்கவேலிடமும் பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், அவர் பின்வாங்கவில்லை. இதற்கிடையே கடந்த 7 மாதங்களாக நடந்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் விசாரணைகளுக்குக் கவிதா ஒத்துழைக்கவில்லை. ஏகாம்பர நாதர் கோயில் உற்சவர் சிலை விவகாரம் தொடர்பாக, அர்ச்சகர் ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் கடந்த 31-ம் தேதி கவிதாவைக் கைது செய்துள்ளனர். ஓர் அர்ச்சகர் கூறும் வாக்குமூலத்தை வைத்து ஆதாரமில்லாமல் கூடுதல் ஆணையர் ஒருவரைக் கைது செய்ய முடியுமா என்றெல்லாம் கேள்வி எழுப்புகின்றனர். ‘எல்லாமே கமிஷனர் சொன்னார்... நான் வெறும் கையெழுத்து மட்டுமே போட்டேன்’ எனக் கும்பகோணம் நீதிமன்றத்தில் கவிதா தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில்தான், சி.பி.ஐ விசாரணை என்ற ஆயுதத்தைத் தமிழக அரசு எடுத்தது!" என்கின்றனர் விரிவாக. 

 

 

`அந்த' 9 பேர்! 

அதே சமயம் இதுகுறித்து இன்னொரு கோணமும் விவரிக்கிறார் அறநிலையத்துறையின் உயர் அதிகாரி ஒருவர். ``கவிதா மீது பொய்யான குற்றச்சாட்டைச் சொல்லி வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். எங்கள் துறையில் இருப்பவர்கள் யாருமே இந்தக் குற்றச்சாட்டை நம்ப மாட்டார்கள். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமாஸ்கந்தர் சிலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், தாங்கள் தப்பிப்பதற்காக கவிதாவின் பெயரைக் கூறியுள்ளனர். இதை அடிப்படையாக வைத்து அவரைக் கைது செய்துவிட்டனர். முதல் தகவல் அறிக்கையில் கவிதாவின் பெயரே கிடையாது. முதல் தகவல் அறிக்கையில் உள்ள 9 பேர்களில் ஒருவரைக்கூட கைது செய்யாமல், அதில் உள்ள ஒருசிலர் சொன்னதாக, வெறுமனே சொல்லப்பட்ட தகவலின் அடிப்படையில் கவிதாவைக் கைது செய்திருக்கிறார்கள். ஆணையர் எழுதி எழுதி வைத்துள்ள உத்தரவில், கையொப்பம் மட்டும்தான் கவிதா போடுவார். அதற்காகச் செய்யாத தவறுக்கு எப்படிப் பொறுப்பாவார். இதுவரை காணாமல் போன சிலைகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை மறைப்பதற்காக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் போடும் நாடகம் இது. பழனி, காஞ்சிபுரம் என முறைகேடு நடந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ள கோயில் பக்தர்கள் தரப்பிலிருந்து, ‘நான் தங்கம் கொடுத்திருக்கிறேன். ரசீது கொடுக்கவில்லை. முறைகேடு நடந்துள்ளது.’ என யாருமே இதுவரை காவல்நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. தங்கம் வசூல் செய்வதில் முறைகேடு நடந்திருந்தால் விஜிலென்ஸில்தானே விசாரிப்பார்கள். சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் எப்படி விசாரணை செய்ய முடியும். அவர் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் கிடையாது” என்றார் நிதானமாக.

நிலவரம் எதுவாக இருந்தாலும், உயர்ந்த பொறுப்பில் இருப்பவரைச் சுற்றி இவ்வளவு சர்ச்சைகள்... அவருக்குத் தெரியாமலே இவ்வளவு விவகாரம் நடந்திருந்தாலும் அது குற்றத்தின் ஒரு பகுதிதான். அதே சமயம் அவரை பலிகடாவாக்கும் முயற்சிகள் நடப்பின், அதுவும் கண்டனத்துக்குரியது. நேர்மையான விசாரணை மூலம் நியாயம் எது என்பதை சர்ச்சைகளுக்கு இடமில்லாமல் வெளிக்கொணர வேண்டும். 

நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்யப் போகும் ஆவணங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கலாம்!  

https://www.vikatan.com/news/coverstory/133210-follow-up-report-on-kavithas-arrest.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.