Jump to content

டெல்லிகணேஷ் வாழ்க!


Recommended Posts

டெல்லிகணேஷ் வாழ்க!


 

 

delhi-ganesh-b-day

டெல்லிகணேஷ்

 

 

 

குணச்சித்திரமோ, குணமே இல்லாத வில்லன் கதாபாத்திரமோ, சிரிக்க வைக்கும் நகைச்சுவையோ, கலங்கவைக்கிற தந்தை கதாபாத்திரமோ... எதுவாக இருந்தாலும் ஏற்று நடிக்கவேண்டும். அப்படி நடிப்பதை, ரசிகர்கள் ஏற்கவேண்டும். அவரே சிறந்த நடிகர். அதுவே நடிப்பிற்கான சித்தாந்தமும்! இப்படி எல்லா சைடிலும் புகுந்து புறப்பட்டு, பேரும்புகழும் சம்பாதித்தவர்களில்... டெல்லிகணேஷ் முக்கியமானவர்.

எழுபதுகளில் திரையுலகில் அடியெடுத்துவைத்தார். இவரின் பிரவேசத்தை நிகழ்த்தியவர் இயக்குநர் கே.பாலசந்தர். பிரவேசம் நிகழ்ந்தது... பட்டினப்பிரவேசம் திரைப்படத்தில்!

 

இப்போதைய தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடுதான் டெல்லிகணேஷின் பூர்வீகம். டெல்லி நாடகசபா, இந்திய உணவுக்கழக வேலை என்று பயணித்தவரின் வாழ்க்கையில், கேமிரா வெளிச்சம் பாய்ந்ததும், அடுத்தடுத்து நிகழ்ந்த மாற்றங்கள்... அவருக்கான ஏற்றங்கள்!

இவரின் நடிப்புத்திறமையைப் புரிந்து உணர்ந்த பாலசந்தர், தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கினார். அதேபோல், கமல் தன் ராஜபார்வையில் நல்லதொரு கேரக்டரை வழங்கினார். அதுமட்டுமா? புன்னகை மன்னனில் கமலுக்கு அப்பாவாக, சமையல்காரராக நடித்தவர், பல வருடங்கள் கழித்து மைக்கேல் மதன காமராஜனிலும் அதே கமல், அதே சமையல் கேரக்டர் என நடித்தார். ஆனாலும் மை.ம.கா.ரா.வில் வெளுத்துவாங்கியிருப்பார். அதேபோல் சுரேஷ்கிருஷ்ணாவின் ஆஹா படத்திலும் சமையல்காரர்தான். இந்த முறை இன்னும் ஒருபடி மேலே போய், அசத்தியிருப்பார்.

சிந்துபைரவியில் சிவகுமாரின் இசைக்குழுவில் ஒருவராகவும் அவர் மீதும் மதிப்பும் பிரியமும் கொண்டவராகவும் தப்பு செய்யும்போது தட்டிக்கேட்பவராகவும் பிரமாதம் பண்ணியிருப்பார்.

தடக்கென்று அபூர்வ சகோதரர்கள் படத்தில், நான்கு வில்லன்களில் ஒரு வில்லனாக நடித்து அசத்தியிருப்பார் டெல்லிகணேஷ். நாயகனில் வேலுநாயக்கர் பக்கத்தில் இருக்கிற ஐயர் கேரக்டரிலும் தனியே ஈர்க்கும் வகையில் செய்திருப்பார்.

அவ்வை சண்முகி படத்தில், ஜெமினிகணேசனின் உதவியாளராக வந்து, மணிவண்ணனிடம் உதை வாங்கி, சண்முகி மாமியிடம் ரகளை பண்ணி, கெளசியிடம் ரவுசு பண்ணி, நாசரை கவனித்து... என படம் முழுக்க, டெல்லிகணேஷின் ராஜாங்கம், நம்மை விலா நோகச் சிரிக்கவைக்கும்.

எந்தக் கேரக்டர் கிடைத்தாலும் அதில் தனக்கென உள்ள ஸ்பெஷலைக் கொடுத்து, முத்திரை பதிப்பதுதான் டெல்லிகணேஷ் ஸ்டைல். ரஜினிக்கு மாமனாராக எங்கேயோ கேட்ட குரல் படத்தில், அற்புதமான, பாந்தமான நடிப்பை வழங்கியிருப்பார்.

சினிமா மட்டுமின்றி சீரியல்களிலும் நடித்து வருகிறார். அப்போதே ஏகப்பட்ட பேருக்கு டப்பிங் கொடுத்திருக்கிறார். பூவேபூச்சூடவா படத்தில் ரவீந்தருக்கு இவர் குரல் கொடுத்திருப்பது, சின்ன உதாரணம்.

நானூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் டெல்லிகணேஷின் பிறந்தநாள் இன்று (1.8.18). இந்த நாளில், டெல்லிகணேஷை வாழ்த்துவோம். இன்னும் இன்னும் ஜெயிக்கவும் நிறைவான வாழ்க்கை வாழவும் வாழ்த்துகள் டெல்லிகணேஷ்!

https://www.kamadenu.in/news/cinema/4432-delhi-ganesh-b-day.html?utm_source=site&utm_medium=justin&utm_campaign=justin

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.