Jump to content

எந்திரன்: முதியவர்களின் வாழ்க்கையை சுலபமாக்கும் சூப்பர் ஆடை


Recommended Posts

எந்திரன்: முதியவர்களின் வாழ்க்கையை சுலபமாக்கும் சூப்பர் ஆடை

 
 
எந்திரன்: முதியவர்களின் வாழ்க்கையை சுலபமாக்கும் சூப்பர் ஆடை

தினமும் பத்தாயிரம் அடி தூரம் நடப்பதை உறுதிப்படுத்த ஸ்மார்ட் வாட்ச் அணிவதிலிருந்து வங்கிக்கணக்கு தகவல்களை தெரிந்துகொள்வது வரை, வேரபிள் (wearable) டெக்னாலஜி எனப்படும் அணிசாதன தொழில்நுட்பம் நமக்கு வெகுவாக பயன்பட்டு வருகிறது. நமது உடலில் அணியக்கூடிய மின் சாதனங்கள் நமக்கு தனிப்பட்ட பலன்களை மட்டும் தருவதில்லை, பெரிய அளவிலான சமூக பிரச்சனைகளுக்கும் தீர்வு காண உதவுகிறது.

உதாரணமாக முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை எடுத்துக்கொள்ளலாம். 21ம் நூற்றாண்டின் மாபெரும் சமூக மாற்றங்களில் ஒன்றாக  முதியோர் எண்ணிக்கை உயர்வை குறிப்பிடுகிறது ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அறிக்கை.

60 அல்லது அதற்கு அதிக வயதுள்ளவர்கள் எண்ணிக்கை 2050ம் ஆண்டு வாக்கில் தற்போதுள்ளதைவிட இரண்டு மடங்குக்கு மேல் அதிகமாகிவிடும் என்கிறது அவ்வறிக்கை.

இதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் இடம் விட்டு இடம் நகர்தலும் ஒன்று. அதாவது ஒருவருக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க இடப்பெயர்வும் கடினமான ஒன்றாகிவிடும். வீடு, பொது இடங்கள், அலுவலகம் என எல்லா இடங்களிலும் சவால்களை சந்திக்க நேரிடும்.

புது தொழில்நுட்பம்

இதற்கு புது வகையான அணி சாதன தொழில்நுட்பம் உதவிக்கு வர உள்ளது.  முதியோர்களுக்கு என்றே எடை குறைவான எளிதில் அணியக்கூடிய ஒரு சூப்பர் சூட் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.  

எஸ்.ஆர்.ஐ இன்டெர்நேஷனல் என்ற லாபநோக்கமற்ற  நிறுவனத்தின் உதவியுடன் இயங்கும் சீஸ்மிக் என்ற நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது. அணிபவர்களின் உடலுடன் ஒட்டியவாறு உள்ள இந்த ஆடை அவர்களின் சக்தியையும் அதிகரிக்கிறது.

எந்திரன்: முதியவர்களின் வாழ்க்கையை சுலபமாக்கும் சூப்பர் ஆடைபடத்தின் காப்புரிமைSEISMIC

இந்த ஆடையில் உள்ள 'மின்சார தசைகள்' சின்னஞ்சிறு மோட்டார்களால் இயக்கப்படுகின்றன. மனித உடல் தசை எப்படி வேலைசெய்கிறதோ அதே போல் இந்த 'மின்சார தசையும்' இயங்குகிறது.

 

 

உடலின் மூட்டுப்பகுதிகளில் உள்ள துணியுடன் 'மின்சார தசைகள்' ஒருங்கிணைந்துள்ளன. துணியிலுள்ள பிடிமான தளத்தால் இது சாத்தியமாகிறது. நமது உடலுக்குள் உள்ள எலும்பும் தசையும் எப்படி ஒட்டி  செயல்படுகின்றனவோ அதே போல இது செயல்படுகிறது.

உடலின் அசைவுகளை கண்காணிக்கும் கணினியும் அதற்கான சென்சாரும் ஆடையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

'மின்சார தசைகள்' எப்போது இயங்க வேண்டுமென அதனுடன் உள்ள மென்பொருள் உத்தரவிடும். இந்த செயல்பாட்டுக்கு தேவையான மோட்டார், மின்கலன், மின் சுற்று பலகைகள் போன்றவை அறுகோண வடிவில் உடலில் பொருத்த தோதான ஒரு சிறிய ஒரு பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும்.

இயங்குவதற்கான சுதந்திரம்

நடக்க முடியாத நிலையில் இருக்கும் முதியவர்களுக்கு கம்பும் வாக்கர்களும்தான் தற்போது உதவி வருவதாக கூறுகிறார் சீஸ்மிக்கின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான ரிச் மஹோனி.

சக்கர நாற்காலிகள் கூட இது போன்றவர்களுக்கு உதவுகின்றன. ஆனால் நகரும் தன்மை சற்றே குறைவாக உள்ள  முதியவர்களுக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது  இந்த மின்சார ஆடை.

இந்த ஆடை அணிய கச்சிதமாக இருப்பதுடன் சிக்கலில்லாமல்  செயல்பட வேண்டுமென்பதற்காக  வடிவமைப்பாளர் யிவிஸ் பெஹர்- ன் உதவியை பெற்றது சீஸ்மிக்.

ஒரு ஆடை என்றால் அணிவதற்கு விருப்பமாக இருக்கவேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்கிறார் பெஹர். அணிய வசதியாக இருப்பதுடன் அழகான தோற்றமும் உள்ளதாக இருக்க வேண்டும் என்கிறார் பெஹர்.

எந்திரன்: முதியவர்களின் வாழ்க்கையை சுலபமாக்கும் சூப்பர் ஆடைபடத்தின் காப்புரிமைSEISMIC

மின்சாரத்தால் இயங்கக்கூடிய இந்த ஆடையை இந்தாண்டு இறுதியில் ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டனில் சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது சீஸ்மிக். 'எதிர்காலம் இங்கே ஆரம்பம்' என்ற பெயரிலான ஒரு கண்காட்சி லண்டனின் விக்டோரியாவிலும் ஆல்பர்ட் மியூஸியத்திலும் நடைபெற்றது. இதில் இடம்பெற்றிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களில் இந்த மின்சார ஆடையும் ஒன்று.

வயதாக வயதாக தசைகளின் வலிமை குறைவது நம் அனைவரையும் பாதிக்கிறது. 60 வயதை எட்டினாலே வயது தொடர்பான தசைகளின் உந்துசக்தி இல்லாமல் போய்விடுகிறது. உதாரணமாக ஆண்டுக்கு 0.5% என்ற அளவில் குறையும் இத்திறன் 70 வயதில் 2% என்ற அளவை எட்டுகிறது என்றால் 80 வயதில் 4 சதவிகிதத்தை எட்டுகிறது.

தொழில்நுட்ப அணி சாதனங்களுக்கான   சந்தை முதியவர்களுக்குமட்டுமானது என்பதை தாண்டி பரவலானதாக உள்ளது.

எந்திரன்: முதியவர்களின் வாழ்க்கையை சுலபமாக்கும் சூப்பர் ஆடைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், மஸ்குலர் டிஸ்ட்ரபி என்ற தசைநார் தேய்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மின்சார ஆடைகள் உருவாக்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன. பணியிட பாதுகாப்பு, தொழிற்சாலை பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் உதாரணமாக கட்டுமான தொழிலாளர்கள், கிடங்குகளில் பணி புரிபவர்கள் தேவைக்கேற்பவும் அணி சாதனங்கள் உருவாக்கவும் முயற்சி நடந்து வருகிறது.

ஒரு வடிவமைப்பாளர் என்ற முறையில் இந்த தொழில்நுட்பங்கள் மனிதனுக்கு மேம்பட்ட வாழ்க்கையை தர வேண்டும் என்பதுதான் இலக்கு என்கிறார் பெஹர்.

அணி சாதன தொழில் நுட்பங்கள் தற்போது கைக்குழந்தை பருவத்தில் இருப்பதாக நம்புகிறார் பெஹர். பத்தாண்டுகளுக்கு முன் கைக்கட்டை விரலில் அணியக்கூடிய மின்கலன் அற்ற அணி சாதனங்கள் இருந்தன என்னும் பெஹர், இப்போது யு.வி. தொழில்நட்பங்கள் வந்துவிட்டதாக கூறுகிறார். அடுத்த பத்தாண்டுகளில் தொழில்நுட்பங்கள் கண்ணுக்கு தெரியாமல் செயல்படும் வகையில் மாறிவிடும் என்கிறார் பெஹர்.

அணி சாதன தொழில்நுட்பங்களின் வளர்ச்சி எந்த திசையில் பயணிக்கும் என்பதை இப்போதே கணிப்பது கடினம்.

ஆனால் அந்த வளர்ச்சிகள் தொழிற்சாலைகளின் பிரச்சனைகளில் இருந்து உலகின் மற்ற பிரச்சனைகள் பலவற்றுக்கும் தீர்வு வழங்கும் என நம்பலாம். மனிதனுக்கும் தொழில்நுட்பத்துக்கும் இடையிலான  உறவு நமக்கு பல வகைகளில் நன்மை தருவது மட்டும் உறுதி்.

https://www.bbc.com/tamil/science-44791223

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.