Sign in to follow this  
நவீனன்

அப்போலோவை சிக்கவைக்கும் ஆறுமுகசாமி ஆணையம்!

Recommended Posts

அப்போலோவை சிக்கவைக்கும் ஆறுமுகசாமி ஆணையம்!

 
ஜெ-வுக்கு மாரடைப்பு ஏற்பட்டது எப்போது?

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் புதைந்திருக்கும் மர்மங்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டது நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம். ‘சசிகலா குடும்பத்தினரைக் குற்றவாளியாக்கும்விதமாக ஆணையம் செயல்படுகிறது’ என புகார்கள் எழுந்திருக்கும் நிலையில், ஆணையத்தின் விசாரணை அப்போலோ மருத்துவமனையை சிக்கவைக்கப் பார்க்கிறது. ‘தோண்டத் தோண்டப் புதையல்’ போல இந்த விசாரணையில் புதுப்புது பூதங்களாகப் புறப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இதில் லேட்டஸ்ட் பூதம்... ஜூலை 4-ம் தேதி ஆணையத்தில் ஆஜரான அப்போலோ மருத்துவமனை டாக்டர் சினேகாஸ்ரீ தந்த வாக்குமூலம். 2016 செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையிலிருந்து போயஸ் கார்டனுக்குச் சென்று, ஜெயலலிதாவை அழைத்துவந்த ஆம்புலன்ஸில் அவருடன் வந்தவர் சினேகாஸ்ரீ. ‘‘போயஸ் கார்டன் வீட்டுக்கு நாங்கள் சென்றபோது, ஜெயலலிதாவை சேரில் அமர்த்தியிருந்தனர். அப்போது அவர் மயக்க நிலையில் இருந்தார். முதலுதவி ஏதும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. உடனடியாக ஆம்புலன்ஸில் ஏற்றினோம். சசிகலாவும் டாக்டர் சிவக்குமாரும் உடன் வந்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு வரும்வரை ஜெயலலிதா மயக்க நிலையிலேயேதான் இருந்தார்’’ என்று சினேகாஸ்ரீ வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

p6_1530859522.jpg

‘மருத்துவமனைக்குக் கொண்டு வரும்வரை ஜெயலலிதா மயக்க நிலையிலேயேதான் இருந்தார்’ என்று சினேகாஸ்ரீ சொல்கிறார். ஆனால், சசிகலா தாக்கல் செய்த தனது பிரமாணப் பத்திரத்தில், ‘‘ஆம்புலன்ஸில் வரும்போது ஜெயலலிதா கண்விழித்துப் பார்த்து, ‘என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்’ என்று கேட்டார்’’ எனக் குறிப்பிட்டிருந்தார். டாக்டர் சிவக்குமாரோ, ‘‘மருத்துவமனைக்கு வந்ததும் ஜெயலலிதா என்னை அழைத்து, ‘நான் எங்கே இருக்கிறேன்’ என்று கேட்டார்’’ என சாட்சியம் அளித்திருந்தார். ஜெயலலிதாவோடு ஆம்புலன்ஸில் வந்த மூன்று பேரும் மூன்றுவிதமாகக் கூறியிருப்பது பலவிதமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், ஜூலை 4-ம் தேதி மூன்றாவது முறையாக ஆணையத்தில் ஆஜரானார். ‘‘ஜெயலலிதா மரணத்தால் ஏற்பட்ட மனவருத்தத்தில் போயஸ் கார்டன் செல்வதையே நிறுத்திவிட்டேன். அதன்பிறகு என் வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்றது. ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு இல்லத்தை நடராஜன் என்பவர் பார்த்துவருகிறார். கொடநாடு எஸ்டேட் தொடர்பாக சசிகலாவிடமே நடராஜன் பேசிக்கொள்வார்’’ என்று அவர் தெரிவித்துள்ளார். ‘‘உங்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதற்காகத்தான் சசிகலாவின் உதவியாளராக இருந்த கார்த்திகேயனை மீண்டும் பணியில் சேர்த்தார்களா?’’ என்ற கேள்விக்கு, ‘‘அதுபற்றி எனக்கு ஏதும் தெரியாது’’ என்று பூங்குன்றன் பதில் அளித்துள்ளார்.

அதே நாளில் ஆஜரான கார்த்திகேயனிடம் குறுக்கு விசாரணை நடத்தியது சசிகலா தரப்பு. அப்போது அவரிடம், ‘‘2011-ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட பிறகு எதற்காக மீண்டும் போயஸ் கார்டனில் சேர்க்கப்பட்டீர்கள்?’’ என அவரிடம் கேட்கப்பட்டது. ‘‘நான் வேலை வேண்டும் என்று கேட்டிருந்தேன். அதனால் வேலை கொடுத்தார்கள்’’ என்றார் அவர். மேலும், ‘‘ஒரு தடவை முடிவு எடுத்து, அது தவறாக முடிந்தால், அதை மாற்றிக்கொள்ளும் குணம் ஜெயலலிதாவுக்கு இருந்தது. அதேநேரம் தான் எடுத்த முடிவு சரிதான் என்றால், தவறு செய்தவர்களைக் கடைசிவரை தவறு இழைத்தவர்களாகவே கருதுவார்’’ என்று சொன்னார் கார்த்திகேயன். சசிகலாவை வெளியேற்றிய ஜெயலலிதா, பின்னர் அந்த முடிவு தவறு என்பதை உணர்ந்து மீண்டும் வீட்டுக்குள் சேர்த்துக்கொண்டதை ஆணையத்துக்கு அழுத்தமாகத் தெரியப்படுத்தவே, கார்த்திகேயனை இப்படி சசிகலா தரப்பு சொல்ல வைத்திருக்கிறது.

p6a_1530859543.jpg

ஆணையத்தின் வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி மற்றும் நிரஞ்சன், ‘‘நீங்கள் சசிகலாவுக்கு ஆதரவாக வாக்குமூலம் அளிக்கிறீர்களா? உண்மையை மறைக்கிறீர்களா?’’ என்று கார்த்திகேயனிடம் கேட்க, சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். ‘‘சசிகலாவைக் குற்றவாளியாக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்று கேள்விகளை எழுப்பக்கூடாது’’ என்று நீதிபதி ஆறுமுகசாமி முன்பாகவே கடும் வாதம் செய்துள்ளார்கள்.

ஜூலை 5-ம் தேதி ஆணையத்தில் திவாகரனின் மகன் ஜெயானந்த் ஆஜரானார். ‘‘என் தந்தை திவாகரன் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து கீழ்தளத்தில்தான் இருந்தார். ஜெயலலிதா மற்றும் சசிகலாவை அவர் பார்க்கவில்லை. ஆனால், டி.டி.வி.தினகரன் சசிகலாவை பலமுறை சந்தித்துள்ளார். 2011-ம் ஆண்டு கொடநாட்டில் ஜெயலலிதாவைப் பார்த்தேன். அதன்பிறகு, 2016-ம் ஆண்டு மருத்துவமனையில் இருந்தபோது கண்ணாடி வழியாகப் பார்த்தேன்’’ என்ற அவர் சொல்லியிருக்கிறார்.

அதே நாளில் அப்போலோ மருத்துவமனையின் எக்கோ டெக்னீஷியன் நளினி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். ‘‘2016, டிசம்பர் 4-ம் தேதி ஜெயலலிதாவுக்கு எக்கோ பார்த்த டெக்னீசியன் நான். அன்றைய தினம் மாலை 3.50 மணியளவில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்றும், இதயம் செயலிழப்புக்குப்பின் சோதிக்கும் போஸ்ட் கார்டியாக் எக்கோ பார்க்க வேண்டும் என்றும் சொல்லி என்னை அழைத்தார்கள். நான் சென்று பார்த்தபோது, மசாஜ் மூலம் மீண்டும் ஜெயலலிதாவின் இதயத்தைச் செயல்பட வைக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது நான் எக்கோ எடுத்தேன். அதில் இதயம் செயலிழந்துவிட்டது தெரியவந்தது’’ என்றார் நளினி. அப்போது ஆணைய வழக்கறிஞர்கள், ‘டிசம்பர் 4-ம் தேதி மாலை 4.20 மணிக்கு ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக’ அப்போலோ அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததை சுட்டிக் காட்டி நளினியிடம் கேள்வி எழுப்பினர். ‘‘இது தொடர்பாக பெரிய டாக்டர்கள் சொல்லி அப்படி யாராவது எழுதியிருக்கலாம்’’ என நளினி சொல்லியிருக்கிறார்.

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நேரத்தில்கூட முரண்பட்ட வாக்குமூலங்கள் தரப்படுவதால், அப்போலோ மருத்துவமனை சிக்கவைக்கப்படுகிறது.

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this