Jump to content

தமிழ்நாட்டில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் ஊடக சுதந்திரம்


Recommended Posts

தமிழ்நாட்டில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் ஊடக சுதந்திரம்

 

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

என்.ராம்

தமிழ்நாட்டில் ஊடக சுதந்திரம் குறித்த அரசின் போக்கு ஒரு மிகப் பெரிய வீழ்ச்சியை தொட்டிருக்கிறது.

ஆனால், தமிழ்நாட்டில் இது புதிது அல்ல. ஜெயலலிதா காலத்தில் பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் மீது கிரிமினல் அவதூறு வழக்குகளை தொடுப்பார்கள். ஒரு கட்டத்தில் பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் மீதான வழக்குகள் 200ஐத் தொட்டுவிட்டன. இதன் நோக்கம் என்னவென்றால், ஓர் அச்சத்தில் உறைய வைப்பதுதான் (Chilling effect). அரசே ஊடகத் தணிக்கையில் ஈடுபடலாம். ஆனால், அதற்கு முன்பாக, ஊடகங்களே ஒரு சுய தணிக்கையில் ஈடுபடச் செய்வதுதான் இந்த அச்சமூட்டும் செயல். இம்மாதிரி அவதூறு வழக்குகள் ஒருபோதும் முடிவுக்கு வராது. ஆனால், இதற்காக நேரம் செலவழிக்க வேண்டும்; பணம் செலவழிக்க வேண்டும். அடுத்ததாக செய்தி வெளியிட ஊடகங்கள் தயங்கும். இதுதான் நோக்கம்.

முதலமைச்சர் தொடர்பான செய்திகள், ஊழல் புகார்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்ற அவர்களுக்குப் பிடிக்காத விஷயங்கள் வெளியானால், உடனடியாக வழக்கு போட்டுவிடுவார்கள். இது நீதிமன்றம் செல்லும்போது பெரும்பாலான நீதிபதிகள் கேள்வி கேட்காமல் இம்மாதிரி வழக்குகளை ஏற்றுக்கொள்வார்கள். இதில் விசாரணையே நடக்காது. இது ஒரு தடுப்பு நடவடிக்கை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை. ஜெயலலிதா பற்றி எழுதினால், இம்மாதிரி வழக்கு வந்துவிடும் என்று ஒரு கருத்தை உருவாக்கிவிடுவார்கள். வழக்குகள் ஒருபக்கமென்றால் இன்னொரு பக்கம், அவர்களுக்குப் பிடிக்காத தலையங்கம், செய்தி, கருத்து வந்ததென்றால் விளம்பரங்களை நிறுத்துவார்கள்.

தி.மு.க. ஆட்சியிலும் அவர்களுக்குப் பிடிக்காததை எழுதினால், விளம்பரங்கள் நிறுத்தப்படும் சூழல் இருந்தது. ஒரு வித்தியாசம் என்னவென்றால், கருணாநிதியை அணுக முடியும். கட்சி அலுவலகத்திற்குச் சென்றால் பார்த்துவிடலாம். அல்லது தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியும். ஜெயலலிதா காலகட்டத்தில் இம்மாதிரி அவரை அணுக முடியாது. அவர்தான் அந்த முடிவெடுத்தாரா என்பதுகூடத் தெரியாது. ஆனால், கடைசியில் பார்த்தால் அவர்தான் முடிவெடுத்திருப்பார்.

2003ல் `த ஹிந்து’ நாளிதழ் மீது பெரிய தாக்குதல் ஒன்று அரசால் நடத்தப்பட்டது. எங்களைக் கைது செய்ய முயன்றார்கள். அந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று வெற்றிபெற்றோம். ஜெயலலிதாவே அதை திரும்பப்பெற்றுக்கொண்டார். நீங்கள், எதிர்த்து நின்றால் அதற்கு பலன் இருக்கும் என்பதுதான் எங்களுக்குக் கிடைத்த படிப்பினை. இத்தனைக்கும் ஏதும் தவறாக எழுதவில்லை. அரசின் சகிப்பின்மையைப் பற்றித் தலையங்கம், சட்டமன்றம் குறித்த ஒரு செய்திக் குறிப்பு போன்றவற்றுக்காகத்தான் இந்த நடவடிக்கைகள்.

எம்.ஜி.ஆர்.படத்தின் காப்புரிமைULLSTEIN BILD

அதற்கு முன்பாக, விகடன் பாலசுப்பிரமணியன் விவகாரத்திலும் அவர் எதிர்த்து நின்றார். விகடனில் ஒரு கார்ட்டூன் வெளியிட்டதற்காக உரிமை மீறல் பிரச்சனையைச் சந்தித்து சிறை சென்றார். அது ஒரு சர்வதேச விவகாரமாக உருவெடுத்தது. எம்.ஜி.ஆர். தலையீட்டால், பிறகு பாலசுப்பிரமணியன் வெளியில் வந்தார். அதற்குப் பிறகு நீதிமன்றத்திற்குச் சென்று அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து வெற்றிபெற்றார். அதற்கு அடையாள இழப்பீடாக ஆயிரம் ரூபாய் பெற்றவர், அதை அலுவலகத்தில் மாட்டி வைத்தார். இது ஒரு மிகச் சிறப்பான முறை. இப்படித்தான் அரசை எதிர்கொள்ள வேண்டும்.

ஆனால், இப்போதைய ஆட்சியில் ஒரு புதிய முறையைக் கையாளுகிறார்கள். ஜெயலலிதா காலகட்டத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தைப் பயன்படுத்த மாட்டார்கள். அவதூறு வழக்கு மட்டுமே தொடுப்பார்கள். ஆனால், இந்திய தண்டனைச் சட்டத்தின் 153ஏ, 505 போன்ற பிரிவுகளில், அதாவது மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி பிரச்சனை உருவாக்க முயன்றார் என்றெல்லாம் வழக்கு தொடுக்க மாட்டார்கள். இந்தப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டால் கைதுகூட செய்யப்படலாம். இப்போது புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது இம்மாதிரி வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

ஒரு பலவீனமான அரசு என்று காட்டிக்கொள்ளாமல் இருக்க இதையெல்லாம் செய்கிறார்கள். ஒரு பலவீனமான அரசு, தன் பலவீனத்தை இம்மாதிரியான அதீதமான செயல்பாடுகளின் மூலம் மறைத்துக்கொள்கிறது. முதலமைச்சர் பழனிசாமி கட்சியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயல்கிறார். ஊழல் முன்போலவே நடக்கிறது. தவிர, 18 எம்.எல்.ஏ. தகுதி நீக்க வழக்கு இருக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ பன்னீர்செல்வத்திற்கும் இடையிலான உறவு எப்படியென நமக்குத் தெரியாது. இதையெல்லாம் ஊடகங்கள் சாதாரணமாக எழுதவும் பேசவும் செய்வார்கள்தானே?

இப்போது தமிழகத்தில் அதிக அளவில் போராட்டங்கள் நடக்கின்றன. இது பலவீனமான அரசு என்று கருதப்படுவது மட்டும் இந்தப் போராட்டங்களுக்குக் காரணமல்ல. தமிழ்நாடு ஒரு முற்போக்கான மாநிலம். ஆர்ப்பாட்டங்களை ஜனநாயக ரீதியில் நடத்துவது ஜனநாயக உரிமை. ஆனால், அம்மாதிரி நடக்கும்போது அவை செய்தியாகக்கூடாது என நினைக்கிறார்கள்.

எடப்பாடி பழனிச்சாமிபடத்தின் காப்புரிமைARUN SANKAR

தற்போதைய காலகட்டத்தையும் ஜெயலலிதாவின் காலகட்டத்தையும் ஒப்பிட்டால், அரசுக் கேபிள் டிவி நிறுவனத்தைப் பயன்படுத்தி ஒடுக்குவது இப்போது மிக மோசமாக இருக்கிறது. ஒரு பக்கம் அரசுக் கேபிளை பயன்படுத்தி சேனல்களைப் பின்னுக்குத் தள்ளுகிறார்கள் அல்லது இருட்டடிப்புச் செய்கிறார்கள்.

மற்றொரு பக்கம் வழக்குத் தொடுக்கிறார்கள். இந்த இரண்டையும் சேர்த்து செய்தால், பலனிருக்கும் என்று நினைக்கிறது அரசு. தொலைக்காட்சிகள் பயந்துபோயிருக்கின்றன. ரகசியமாக தகவல்களைச் சொல்கிறார்கள். ஆனால், தங்கள் பெயர் தெரிய வேண்டாமென நினைக்கிறார்கள். கூட்டங்களுக்கு வர விரும்புதில்லை. அதனால், அவர்களுக்காக நாம் ஏன் போராட வேண்டும் என்ற கேள்வி வருகிறது. ஆனால், அது அப்படியல்ல. அவர்களுக்குப் பல பிரச்சனைகள் இருக்கலாம். ஏன், சும்மாவே பயப்படலாம்.

புதிய தலைமுறை நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் செய்தது என்ன? அவர்கள் விவாதம் ஒன்றை கோயம்புத்தூரில் நடத்தினார்கள். அங்கு சிலர் பேசுவதை ஹிந்து அடிப்படைவாதிகள் எதிர்த்தார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், விவாதத்தை நடத்திய தொலைக்காட்சி சேனல் மீது வழக்குத்தொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி வழக்குத் தொடுப்பதன் நோக்கம் என்னவென்றால், நாங்கள் சேனலை அரசு கேபிளில் நிறுத்துவதோடு முடித்துக்கொள்ள மாட்டோம். வழக்குத் தொடுப்போம், தொடர்ந்து நடத்துவோம் என்று அறிவுறுத்துவதுதான்.

தமிழ்நாட்டில் அரசு கேபிள் சேவையைத் துவங்கியபோது பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இன்று அரசின் கையில் அதுவும் ஒரு ஆயுதமாகிவிட்டது. அரசுக்கு எதிரான போராட்டங்கள் குறித்து செய்தி வெளியிடுவது, மக்கள் இயக்கங்கள் குறித்து செய்தி வெளியிடுவது, அரசு விரும்பாத செய்திகளை வெளியிடுவது, அரசு விரும்பாத கருத்துக்களை வெளியிடுவது தடுக்கப்படுகிறது. இதுதான் அச்சத்தில் உறைய வைப்பது (Chilling effect). அது தெளிவாகத் தெரிகிறது. தொலைக்காட்சி சேனல்களில் இருப்பவர்களில் பலர் பேசவே அஞ்சுகிறார்கள்.

அரசு கேபிள்தான் தமிழகத்தில் கிட்டத்தட்ட 60 சதவீத கேபிள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், அரசு கேபிளும் தமிழக கேபிள் டிவி கம்யூனிகேஷன் லிமிட்டெடும்தான் கேபிள் சேவையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. முதலில் அரசு கேபிள் நிறுவனம் நியாயமாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், அப்படி இல்லை.

ஜெயலலிதாபடத்தின் காப்புரிமைHINDUSTAN TIMES

சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் எழில் என்ற ஒரு நபர், கேபிள் எம்எஸ்ஓக்களுக்கு கட்டளைகளைப் பிறப்பிக்கிறார். சில சமயங்களில் அமைச்சர்களும் செய்கிறார்கள். ஒவ்வொரு எம்எஸ்ஓவிலும் ஸ்விட்ச் அறையில் இரண்டு தொழில் நுட்பப் பணியாளர்கள் இருப்பார்கள். அவர்களுக்குக் கட்டளை வரும்போது, குறிப்பிட்ட சானலை Over gain மோடில் மாற்றிவிடுவார்கள். அதனால், திரையில் படம் சரியாகத் தெரியாது. அல்லது சேனல் மிகவும் கீழே தள்ளப்படும். அல்லது வேறு மொழிகளின் குழுக்களோடு சேர்த்துவிடுவார்கள்.

இப்படிச் செய்யப்பட்ட சில சம்பவங்களை நான் பட்டியலிடுகிறேன்.

1. ஜனவரி 23, 2017 - ஜல்லிக்கட்டு கலவரத்தில் காவல்துறை நடவடிக்கையை ஒளிபரப்பு செய்ததற்காக நியூஸ் 7, சன் நியூஸ் ஆகியவை சிறிது காலத்திற்கு அரசு கேபிளில் தெரியாமல் செய்யப்பட்டது.

2. ஜூன் 12, 2017 - டைம்ஸ் நவ் MLA's for Sale என்ற செய்தியை ஒளிபரப்புச் செய்ததற்காக சிறிது காலத்திற்கு அரசு கேபிளில் தெரியாமல் செய்யப்பட்டது.

3. செப்டம்பர் 2017 - ஜெயா நெட்வொர்க் அரசுக்கு எதிரான சில போராட்டங்களை செய்தியாக வெளியிட்டதால் இருட்டடிப்புக்குள்ளானது.

4. டிசம்பர் 8, 2016- சேகர் ரெட்டி டைரி குறித்த செய்தி வெளியிட்டதற்காக Times Now தொலைக்காட்சி இருட்டடிப்பு செய்யப்பட்டது.

5. டிசம்பர் 2017 - காவேரி நியூஸ் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தருணத்தில் டி.டி.வி. தினகரன் வெற்றிபெறுவார் என ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டது. அதற்காக நிரந்தரமாக இருட்டடிப்பு செய்யப்பட்டது. ஆனால், டிடிவி தினகரன் வெற்றிபெற்றார். இப்போது இந்தத் தொலைக்காட்சி நீதிமன்றம் சென்றிருக்கிறது.

6. மார்ச் 2, 2018 - ஊழல் குறித்த செய்திகளை ஒளிபரப்பு செய்யக்கூடாது என்பதற்காக தந்தி டிவி 48 மணி நேரத்திற்கு அரசு கேபிளிலிருந்து நீக்கப்பட்டது. இப்போது அந்த நிர்வாகம் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கும் ட்ராய்க்கும் புகார் செய்திருப்பதாகத் தெரிகிறது.

7. மார்ச் 2018 - ஜெயா பிளஸ் அரசு கேபிளில் தமிழகம் முழுவதும் இருட்டடிப்பு செய்யப்பட்டது. காவிரி விவகாரம் குறித்து டிடிவி தினகரனின் போராட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்ததற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பிறகு, மிக மோசமான தரத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

8 மே 22, 2018 - தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விவாத நிகழ்ச்சியை நடத்தியதற்காக நியூஸ் 18 தமிழ்நாடு, அரசு கேபிளில் இருந்து தூக்கப்பட்டது. 12 மணி நேரம் சேனல் ஒளிபரப்பாகவில்லை.

9, ஜூன் 2018 - புதிய தலைமுறை 124வது இடத்திலிருந்து 499வது இடத்திற்குத் தள்ளப்பட்டது. கோயம்புத்தூரில் ஒரு விவாத நிகழ்ச்சியை நடத்தியதற்காக இவ்வாறு செய்யப்பட்டது.

10. ம.தி.மு.க. ஆதரவு தொலைக்காட்சியான மதிமுகம் டிவி அரசுக்கு எதிரான செய்திகளை ஒளிபரப்பியதற்காக 450வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

11. அரசை தொடர்ந்து விமர்சித்துவருவதால் சத்தியம் டிவி சேனல் வரிசையில் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

12. டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டங்களை ஒளிபரப்பியதற்காக சன் டிவி முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டது.

இந்தப் பட்டியலைப் பார்த்தால், யாரும் விட்டுவைக்கப்படவில்லையென்பது புரியும். எல்லா டிவி சேனல்களும் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றன. அரசுக்கு எதிராக செயல்பட்டால் இதுதான் தண்டனை என்று காட்டியிருக்கிறார்கள். ஆனால், அச்சுப் பத்திரிகைகளை இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அதிகபட்சம் விளம்பரங்களை நிறுத்தலாம்.

தமிழகத்தில் ஒரு பிரச்சனை என்னவென்றால் எல்லோரும் ஒன்று சேரமாட்டார்கள். என்டிடிவிக்கு பிரச்சனை வந்தபோது, ஆந்திராவில் அதற்கு ஆதரவாக பிரஸ் கிளப்பில் மிகப்பெரிய கூட்டம் நடத்தப்பட்டது. அருண் ஷோரி போன்றவர்கள் கலந்துகொண்டார்கள். இங்கு எப்போது பார்த்தாலும் சிலர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டியிருக்கிறது. களத்தில் பணியாற்றும் செய்தியாளர்கள் போராடுவார்கள். ஆனால், நிர்வாகங்கள் கலந்துகொள்ளத் தயங்கும். இதனால், அரசுக்கு ஒரு தைரியம் வந்துவிடுகிறது. பலவீனமான அரசு என்றாலும் ஊடகங்கள் அதைவிட பலவீனமாக குரல் எழுப்பினால், அப்படித்தான் நடக்கும்.

கலைஞர் கருணாநிதிபடத்தின் காப்புரிமைTHE INDIA TODAY GROUP

டிவி சேனல்களுக்கு இருக்கும் அச்சத்தைப் நாம் புரிந்துகொள்கிறோம். ஆனால், அந்த அச்சம் ஏன் என்பதுதான் தெரியவில்லை.

இப்போது நாங்கள் 'ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி' (Alliance for Media Freedom) என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறோம். அதில் சில தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம். முதலில் முதலமைச்சரை சந்தித்து, ஊடக சுதந்தரம் மாநிலத்தில் பறிக்கப்படுவதைப் பற்றிப் பேசலாம் என்று இருக்கிறோம். அப்போது அரசு தொடுக்கும் வழக்குகள், அரசு கேபிளில் சேனல்கள் பின்னுக்குத் தள்ளப்படுவது, நீக்கப்படுவது ஆகியவை பற்றியெல்லாம் பேசவிருக்கிறோம். இதைத் தவிர, தேசிய ஒளிபரப்பு சங்கத்துக்கு (National Broadcasting Association) இந்த விவகாரத்தை எடுத்துச் செல்லலாம் என நினைக்கிறோம். பிறகு, எடிட்டர்ஸ் கில்டிற்கு எடுத்துச் சென்று பேசவிருக்கிறோம். தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தையும் (டிராய்) அணுகவேண்டும்.

இதற்குப் பிறகு, மாநிலத்தில் ஊடக சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஆவணப்படுத்த வேண்டும். அதன் பிறகு ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீதிமன்றத்திற்கும் செல்ல வேண்டும். இவையெல்லாவற்றையும் சட்டபூர்வமாகவும் ஜனநாயக வழியிலும் செய்ய வேண்டும்.

தற்போதைய காலகட்டத்தை ஜெயலலிதா காலகட்டத்தோடு ஒப்பிட முடியாது. இப்போது ஒடுக்குமுறைகள் இன்னமும் ஆரம்ப நிலையில்தான் இருக்கின்றன. இந்த கட்டத்தில் இதைத் தடுத்து நிறுத்திவிட்டால் நிலைமை அவ்வளவு மோசமாகாது. இந்தியா முழுவதும் ஊடக சுதந்திரம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், தேசிய அளவோடு ஒப்பிட்டால் தமிழ்நாடு மோசமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பல மாநிலங்களில் கொலைகள் நடக்கின்றன. இங்கு அப்படி நடப்பதில்லை. ஜெயலலிதா காலகட்டத்தில் ஊடகத்தினர் கொல்லப்பட்டிருக்கின்றனர். நக்கீரன் அலுவலகத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். பிறகு, தினகரன் அலுவலகம் கொளுத்தப்பட்டதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

என்.ராம்

இந்தியாவில் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் வழக்குகளில் 1992லிருந்து ஒரு வழக்கில்கூட முடிவு எட்டப்படவில்லை. ஷுஜாத் புகாரி உட்பட 48 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். சிலர், மோதல்கள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்று உயிரிழந்தவர்கள். ஆனால், 37க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சிலர் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். முன்பெல்லாம் தன்னிச்சையான பத்திரிகையாளர்கள், மாவட்டங்களில் பணியாற்றும் பாதுகாப்பில்லாத பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுவந்தனர்.

ஆனால், இப்போது அது மாறியிருக்கிறது. கௌரி லங்கேஷ், ஷுஜாத் புகாரி போன்ற குறிப்பிடத்தக்க பத்திரிகையாளர்கள், பெரிய இந்தி இதழ்களின் செய்தியாளர்கள் கொல்லப்படுகின்றனர். குறிப்பாக, அரசியல், ஊழல், மனித உரிமை மீறல்கள் குறித்த செய்தியை சேகரிப்பவர்கள்தான் கொல்லப்படுகிறார்கள். அப்படியெல்லாம் தமிழகத்தில் நடக்கவில்லை. ஏன் உலக அளவில் இந்தியாவின் தரவரிசை குறைந்தது என்பதை எல்லை கடந்த பத்திரிகையாளர்கள் அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆனாலும் நாமும் இதற்கான ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும்.

தவிர, அரசுக்கு எதிராகப் பேசும் ஊடகவியலாளர்களை நகர்ப்புற நக்ஸல்கள் என்பதுபோல சொல்வது ஒரு வாடிக்கையாகியிருக்கிறது. 'பிரஸ்டிடியூட்' (ஊடக விபசாரிகள் என்ற பொருள் தரும் ஆங்கிலச் சொல் இது) என்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், இதுபோல குற்றம்சாட்டிவருகிறார். மலைப் பகுதிகளில் நக்ஸல்கள் பயிற்சி பெறுகிறார்கள் என்றெல்லாம் பேசுகிறார். எல்லாம் கதை. எச். ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் தங்கள் கட்சி இங்கு பலவீனமாக இருப்பதை மறைக்க, இவ்வாறு உரத்துக் குரல் கொடுக்கிறார்கள்.

ஆனால், பத்திரிகைகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. எந்தச் செய்தியையும் அதன் ஆதாரங்களின்றி, யார் அளித்தது என்ற தகவலின்றி வெளியிடக்கூடாது. குறைந்தது அந்த ஊடகத்தின் ஆசிரியருக்காவது அந்தத் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். தி ஹிந்துவில் உடலுறுப்பு மாற்று சிகிச்சை குறித்த செய்தியில் ஒரு புள்ளிவிவரம் தவறாக முன்வைக்கப்பட்டிருந்தது. உடனடியாக சுகாதாரத் துறை செயலரும், சுகாதாரத்துறை அமைச்சரும் என்னை அழைத்து மிக மரியாதையாகவே இதைச் சுட்டிக்காட்டினார்கள். நாங்கள் உடனடியாக அது குறித்து மறுப்பு வெளியிட்டோம். ஏனென்றால் நமக்கும் செய்திகளை வெளியிடும்போது சில பொறுப்புகள் இருக்கின்றன.

https://www.bbc.com/tamil/india-44740060

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.