Jump to content

கோதபாஜவை இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக்க அமெரிக்கா இரகசிய நகர்வா?


Recommended Posts

கோதபாஜவை இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக்க அமெரிக்கா இரகசிய நகர்வா?

மேற்குலக நாடுகளை சமாளிப்பதற்குரிய தகுதி ராஜபக்ச குடும்பத்துக்கு உண்டு என்கிறார் திஸாநாயக்க
 
 
புதுப்பிப்பு: ஜூன் 24 18:22
main photomain photo
  •  
இலங்கையில் இராணுவ ஆட்சியை மகாநாயக்க தேரர்கள், பௌத்த அமைப்புகள் விரும்புகின்றனவா என்ற கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்துள்ளன. இலங்கை இராணுவத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவத் தளபதி, தற்போதைய அமைச்சர் பீலட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கியதேசியக் கட்சி எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறக்கியது ஒரு சக்தி. ஆனாலும் மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார். சரத்பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முடிந்தது என்றால், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாஜ ராஜபக்சவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஏன் நிறுத்த முடியாது என மகாநாயக்கத் தேரர்கள் மற்றும் பௌத்த அமைப்புகள் தீவிரமாக யோசிப்பது வெளிப்படையாகிறது. 
 
கோதபாஜவுக்கு பௌத்த பேரினவாதிகள் மகுடம் சூட்ட விரும்புவது எவ்வளவுக்கு ஆச்சரியமற்ற ஒரு விவகாரமோ, அதே போலத்தான், கோதபாஜ அடுத்த கதாநாயகன் என்றால் அந்தக் கதைக்குத் தானே எழுத்தாளனாக இருக்கவேண்டும் என்ற ஒரு திட்டத்தை அமெரிக்கா வைத்திருக்கும் என்பதும் தர்க்கரீதியாக ஆச்சரியமற்ற ஒரு விடயமே.

 

2010ஆம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தலில் இராணுவத்தளபதியாக இருந்து ஓய்வு பெற்று மூன்று மாதங்களேயான நிலையில், சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த அன்று ஐக்கியதேசியக் கட்சியால் முடிந்தது.

 

கோத்தாபாஜ ஆட்சிக்கு வருவது அமெரிக்காவுக்கு ஏதோ பிடிக்கவில்லை என்பதான தோரணையில் தலைப்புகள் இட்டு தமிழ் ஊடகப் பரப்பில் வெளியிடப்படும் செயதிகளின் பரப்புரைத் தன்மையைப் பகுத்தறிவுப் பார்வையோடு ஈழத்தமிழர்கள் தமது அகக் கண்களால் பார்த்து விளங்கிக்கொள்வது அவசியமாகிறது.
இலங்கை இராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்று பின்னர் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளாராக ஒன்பது ஆண்டுகள் பதவி வகித்து இன அழிப்புப் போர் என்று ஈழத்தமிழர்களால் குறிப்பிடப்படும் போரைத் தான் விரும்பியவாறு நடாத்தி முடித்த ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக ஏன் நிறுத்தக் கூடாது என்ற சிந்தனை மாகாநாயக்கத் தேரர்கள் மட்டத்தில் இன்று வலுப்பெற்றுள்ளது.

 

இலங்கையை முன்னேற்றுவதற்கும் பௌத்த தேசியத்தைப் பாதுகாப்பதற்கும் ஏற்ற முறையில், இன்னொரு ஹிட்லராக மாற வேண்டும் என கோதபாஜவுக்கு அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க ஆசீர்வாதம் வழங்கியுள்ளார்.

கோதபாஜவின் 69 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மீரிஹானவில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற சிறப்பு வழிபாடுகளின் பின்னரே தேரர் இவ்வாறு ஆசீர்வதித்திருக்கிறார்.

இடது சாரியாகத் தன்னை அடையாளப்படுத்தி இலங்கையின் இன அழிப்பு மற்றும் போர்க்குற்றங்களுக்கு ஐ. நா. வில் நியாயம் கற்பித்த டயான் ஜெயதிலகே தி ஐஸ்லன்ட் என்ற கொழும்பில் இருந்து வெளியாகும் பத்திரிகையில் 21ம் திகதி வரைந்த கட்டுரை ஒன்றில் இந்த அஸ்கிரிய பீடத்தின் கிட்லர் ஆசீர்வாதத்தைக் குறிப்பிட்டு விசனம் வெளியிடும் அளவுக்கு நிலைமை போயிருக்கிறது.

கோதபாஜ எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தகுதியானவர் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவும் கடந்த 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுடன் உறவைப் பேணி இலங்கைத் தேசியத்தை பாதுகாக்கக்கூடி ஆற்றல் ராஜபக்ச குடும்பத்துக்கு உண்டு என்றும் திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

இங்குதான், கோதபாஜ அமெரிக்க இராணுவ வட்டாரங்களுடன், குறிப்பாக முன்னாள் பென்ரகன் இராணுவ மையத்தின் தெற்கு தென்கிழக்கு விவகாரங்களுக்குப் பொறுப்பாயிருந்த அதிகாரிகளுடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தவர் என்பது கவனிக்கப்படவேண்டியது.

அமெரிக்காவுடனான இந்து சமுத்திரப்பிராந்தியம் தொடர்பான இராணுவ உறவுகளில் இலங்கைக் கடற்படைக்கு ஒரு முக்கிய வகிபாகம் இருப்பதாகக் கருதுபவர் கோதபாஜ.

இந்தக் கருத்தை மையமாகக் கொண்டு கோதபாஜ வகுத்த பல இராணுவத் திட்டங்கள் இன்றுவரை, அரசாங்கங்கள் மாறினாலும், நடைமுறையில் தொடர்ந்தும் நீடித்துவருகின்றன.

2009 இன அழிப்புப் போரின் முடிவுக்குப் பின்னர், குறிப்பாகக் காலி உரையாடல் (Galle Dialouge) என்ற சர்வதேசக் கடற்படைப் பரிவர்த்தனை ஒன்றை கோதபாஜ 2011ம் ஆண்டுமுதல் செயற்படுத்திவந்தார்.

இந்தத் திட்டத்தின் அடிப்படையிலேயே இன்று அமெரிக்க பசிபிக் கட்டளை மையம் இலங்கைக் கடற்படையுடன் திருகோணமலையைத் தளமாகக் கொண்ட பயிற்சித்திட்டங்களில் ஈடுபட்டுவருகிறது.

கோதபாஜ அமெரிக்க இராணுவ வட்டங்களுடன் நெருங்கிய உறவில் இருப்பதால் அவரே தொடர்ந்தும் இராணுவ விவகாரங்களில் பொறுப்புவாய்ந்தவராக விளங்கவேண்டும் என்று அந்த வட்டங்கள் விரும்புவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.

இலங்கையின் ஒற்றையாட்சி அரசில் அதன் ஜனாதிபதியே முப்படைகளின் தளபதியும் ஆவார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தென்னிலங்கையின் வாக்காளர் பலத்தைப் பெற்றிருப்பவருமான மகிந்த ராஜபக்சவுக்கு அமெரிக்க வட்டாரங்கள் ஆணித்தரமாக இந்தக் கருத்தை வலியுறுத்தும் என இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் குறித்த புவிசார் அரசியலை உன்னிப்பாக நோக்கிவரும் அவதானிகள் கருதுகின்றார்கள்.

கோதபாஜவுக்கான முக்கிய பொறுப்பொன்றை மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணி வழங்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்த விரும்பும் அமெரிக்கத் தரப்புகள், இந்த முயற்சிக்கு வரக்கூடிய எதிர்ப்புகளைத் தணிக்கும் முகமாக, குறிப்பாகத் தமிழ் ஊடகங்களை இலக்கு வைத்து மாயமான பரப்புரைகளை அண்மையில் கட்டவிழ்த்துவிட்டிருக்கின்றன என்றும் அந்த அவதானிகள் கூர்மை செய்தித்தளத்திற்கு எடுத்தியம்பினார்கள்.

அதாவது கோதபாஜ ஜனாதிபதி வேட்பாளராகக் கூடிய வாய்ப்பை அமெரிக்கா எதிர்க்கிறது என்ற தோரணையிலான இந்த மாயமான் பரப்புரை, தமிழ் மக்களின் எதிர்ப்பு சர்வதேச ரீதியிலான கருத்துத் தாக்கம் ஒன்றை ஏற்படுத்தாத வகையில் திட்டமிட்டுக் கசியவிடப்பட்ட பரப்புரை என்றும் அந்த அவதானிகள் தெரிவித்தனர்.

அந்த மாயத் தகவல் கசியவிடப்பட்ட மூலங்களையும், அந்தத் தகவலை மேற்கோள் காட்டும் வட்டாரங்களையும் உன்னிப்பாக நோக்கினாலே இதன் உண்மைத்தன்மை புரிந்துவிடும் என்றும் புவிசார் அரசியலை ஆழமாக அவதானிக்கும் அவர்கள் மேலும் குறிப்பிட்டார்கள்.

கோதபாஜ அமெரிக்காவுக்கு நண்பன். பசில் இந்தியாவைக் கையாள்வதில் அனுபவம் கொண்டவர். மகிந்த ராஜபக்சவோ சீனாவுடன் இலகுவாக உறவை ஏற்படுத்திக்கொள்ளும் சுபாவம் உள்ளவர்.

இந்த மூன்று விதமான வேலைப் பகிர்வோடு இயங்கியதாலேயே 2009 இன அழிப்புப் போரைத் தாங்கள் விரும்பியவாறு முடிப்பதென்பது (இறுதி நிமிடப் படுகொலைகள் உட்பட) ராஜபக்ச சகோதரர்களுக்குச் சாத்தியமாகியது.

தமிழர்களின் இராணுவச் சமநிலையை அக்குவேறு ஆணிவேறாகத் துடைத்தழிக்கும் இராணுவ உத்தியை வகுத்தவர் என்று கோத்தாபாஜவை பாராட்டக்கூடிய பென்ரகன் இராணுவத்தலைமையிடம் மட்டுமல்ல, இன்றைய டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கை வகுப்பாளர்களிடையேயும் தமது நலன்களுக்கு உகந்தவராக கோத்தாபாஜவை நோக்கும் போக்கு எழுவது ஒன்றும் வியப்புக்குரியதல்லவே.

இதையே நவீன அரசியலில் ரியால் பொலிதிக் (Real Politik) என்று குறிப்பிடுவார்கள். சந்தர்ப்பவாத ராஜதந்திர அரசியல் என்று இது பொருள்படும்.

ஓடு மீன் ஓடி உறுமீன் வரும் வரையும் வாடியிருக்குமாம் கொக்கு என்பதாக இதுவரை காலமும் மங்கள சமரவீர போன்றவர்களையும் விக்கிரமசிங்காக்களையும் பார்த்து உள்நகையோடு கோதபாஜ இருந்திருப்பார். இப்போது அவருக்கான "உறு மீன்" தென்பட ஆரம்பித்திருக்கிறது.

இதுவரைகால அத்திவாரமிடல் வேலைக்கான அறுவடைக்காலம் தற்போது உருவாகியிருக்கிறது என்று பௌத்த சிங்களப் பேரினவாத வட்டாரங்கள் சிந்திக்கின்றன என்பதை ஈழத்தமிழர்கள் இந்தத் தருணத்திலாவது புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே, முண்டியடித்துக்கொண்டு, கோதபாஜ ஆட்சிக்கு வருவது அமெரிக்காவுக்கு ஏதோ பிடிக்கவில்லை என்பதான தோரணையில் தலைப்புகள் இட்டு தமிழ் ஊடகப் பரப்பில் வெளியிடப்படும் செய்திகளின் பரப்புரைத் தன்மையைப் பகுத்தறிவுப் பார்வையோடு ஈழத்தமிழர்கள் தமது அகக் கண்களால் பார்த்து விளங்கிக்கொள்ளவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கனடா வரை இந்தப் பரப்புரை திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதைத் தமிழ் ஊடகத்துறை சார்ந்தோரும் விளங்கிக்கொள்ளவேண்டியது காலத்தின் தேவையாகிறது.

ஆக, திட்டமிட்டுச் சில செய்திகளை முற்கூட்டியே ஊடகங்களில் கசிய விடுவதன் மூலம் தமிழ் மக்களிடம் இருந்து திடுதிப்பான எதிர்ப்பு அலை ஒன்று உருவாகாமல் பாதுகாக்கும் ஒரு தந்திரோபாய நகர்வு இந்தச் செய்திகளுக்குப் பின்னால் ஏன் இருக்கக் கூடாது என்ற கேள்வியை புவிசார் அரசியல் நோக்கர்கள் எழுப்புவது நியாயமானதே.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.