Jump to content

‘பழைய குருடி கதவைத் திறவடி’


Recommended Posts

‘பழைய குருடி கதவைத் திறவடி’
 
 

நீண்டகாலமாக நாம் பயணித்த ஒரு வழி, இனிமேல் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்து, அைத விட்டுவிட்டு வந்து, மாற்று வழியைத் தேர்ந்தெடுத்த பின்னர், மாற்று வழியை விடப் பழைய வழியே பரவாயில்லை என அங்கலாய்த்து, மீண்டும் பழைய வழியை நோக்கித் திரும்புதலை, ‘பழைய குருடி கதவைத் திறவடி’ என்று சொல்லலாம்.   

இவ்வாறான மீளத் திரும்புகைகள், அரசியலிலும் எப்போதாவது நடக்கின்றன.   
அந்த அடிப்படையிலேயே, அரசாங்கம் மீண்டும் பழைய தேர்தல் முறைமையின் கீழ், மாகாணசபைத் தேர்தலை நடாத்த முனைகின்றது.   

புதிய தேர்தல் முறைமையின் கீழ், மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு ஏதுவாக, எல்லை மீள்நிர்ணய அறிக்கையை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அரசாங்கம், அதை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வந்திருந்தது.   

இப்போது, புதிய முறைமையைக் கைவிட்டு, பழைய முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடாத்தவுள்ளதாக அறிவித்துள்ளமை, நமது அனுமானங்களை எல்லாம் மெய்ப்பிப்பதாக அமைந்துள்ளது.   
நாட்டின் தேர்தல் முறைமையை மாற்றுவது தொடர்பில், பல வருடங்களாகக் கருத்தாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.   

இலங்கையில் நடைமுறையிலிருந்த விகிதாசாரத் தேர்தல் முறைமையே, சிறுபான்மையினருக்கு அரண் போன்றது என்று பரவலாகச் சொல்லப்படுவதுண்டு.   

ஆனால், அந்த அரணை உடைப்பதற்காக அல்லாவிட்டாலும், விருப்புவாக்கு முறைக் குழப்பங்கள் போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளை முன்னிறுத்தி, புதிய தேர்தல் முறைமை ஒன்றுக்குச் செல்வது குறித்து சந்திரிகா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கங்களும், இன்றைய அரசாங்கமும் கவனம் செலுத்தின.   

தனியே தொகுதிவாரி முறைமை, விகிதாசாரமும் தொகுதியும் கலந்த முறைமை, விகிதாசாரத்துக்குள் தொகுதி என்ற தற்போதைய கலப்பு முறைமை என, பல தெரிவுகள் இதற்காகப் பரிசீலிக்கப்பட்டன.   

அதன்பிரகாரம், விகித சமன் அடிப்படையிலான கலப்பு முறைமை ஒன்றில், தேர்தலை நடாத்த அரசாங்கம் இணக்கம் கண்டது. குறிப்பாக, உள்ளூராட்சித் தேர்தலுக்கும், மாகாண சபைத் தேர்தலுக்கும் இந்த முறையைப் பயன்படுத்துவது என்ற முடிவு, அனைத்துக்கட்சிகளுக்கிடையே ஏற்கெனவே எட்டப்பட்டு, சில சட்ட ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு விட்டன.   

‘விகிதாசாரத்துக்குள் தொகுதி’ என வியாக்கியானம் கொடுக்கப்படுகின்ற புதிய கலப்புத் தேர்தல் முறைமையில், கடந்த உள்ளூராட்சித் தேர்தல் வாக்கெடுப்பு முதன்முதலாக நடாத்தப்பட்டது.   

உள்ளூராட்சி எல்லைகள் மீள் வரையறை செய்யப்பட்ட பின்னர், நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டத்தின்படி, விகிதாசாரத்துக்கு 60உம் தொகுதிக்கு 40 என்ற விகிதசமன் அடிப்படையில் உறுப்பினர் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டன.   

புதிய தேர்தல் முறைமையின் கீழ், விருப்பு வாக்குச் சண்டையோ ஒரே வட்டாரத்தில் ஒரு கட்சிக்குப் பல வேட்பாளர்களைக் களமிறக்குதல், ஏதாவது ஒரு வட்டாரத்தில் ஆட்களையே நிறுத்தாமல் விடுதல் போன்ற சமமின்மைகளோ அல்லது புறக்கணிப்புகளோ இல்லாமல், இம்முறை உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற்றது.   

இருந்தபோதிலும், தேர்தல் முடிவுகளின்படி, வெற்றிபெற்ற கட்சிகளைத் தீர்மானிப்பதிலும் உள்ளூராட்சி சபைகளில் பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியை நிறுவுவதிலும் பெரும் சிக்கல்கள் எழுந்தன. ‘போனஸ்’ ஆசன முறைமையும் விருப்பத்தெரிவும் இல்லாமலாக்கப்பட்டமை மறுபுறத்தில், அறுதியாக வெற்றிபெற்ற கட்சியைத் தீர்மானிப்பதிலும் யாருடைய துணையுமின்றி ஆட்சியை நிறுவுவதிலும் இருந்த சாத்தியக்கூறுகளைக் குறைவடையச் செய்திருந்தன.   

மிக முக்கியமாக, ஆட்சியதிகாரத்தில் இருக்கின்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாலும் ஐக்கிய தேசியக் கட்சியாலும் கொண்டுவரப்பட்ட, இந்தப் புதிய தேர்தல் முறைமையின் மூலம் நடைபெற்ற கடந்த உள்ளூராட்சித் தேர்தலில், அக்கட்சிகளாலேயே பெரிதாகச் சோபிக்க முடியவில்லை என்பது கண்கூடு.  

 ‘அப்பச்சி’யின் பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னம், கணிசமான உள்ளூராட்சி சபைகளில் வெற்றி பெற்றிருந்தது. இந்தப் புதிய தேர்தல் முறைமை குறித்த அச்சம், அரசாங்கத்துக்குக் குறிப்பாக, ஐ.தே.கட்சிக்கு ஏற்படுவதற்கு இதுவே முதலாவது காரணம் என்று கூறினால் மிகையில்லை.   

இதேவேளை, புதிய முறைமையில் மாகாணசபைத் தேர்தலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலோ நடைபெற்றால், அதில் தமது பிரதிநிதித்துவங்கள் குறைவடையும் என்பதையும் உள்ளூராட்சித் தேர்தல் அனுபவத்திலிருந்து சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகள் கற்றுக் கொண்டன.   

இதற்கெல்லாம் சமாந்தரமாக, மாகாணசபைத் தேர்தலையும் புதிய முறையில் நடாத்துவதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது அல்லது அவ்வாறு ஒரு ‘படத்தை’ ஓட்டியது.   

புதிய முறைமையில் மாகாணசபைத் தேர்தலையும் அதன்பின் (ஒருவேளை) நாடாளுமன்றத் தேர்தலையும் நடாத்துவதாயின், வட்டார எல்லைகள் மீள்நிர்ணயம் செய்யப்பட்டது போல், மாகாணங்களின் எல்லைகளும் மீள்வரையறை செய்யப்பட வேண்டும். இந்த அடிப்படையில், அதற்காக உயர்மட்டக் குழுவொன்று நியமிக்கப்பட்டு, அக்குழு தனது பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கையை, மார்ச் மாதம், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளித்திருந்தது.   

இந்த அறிக்கையின் இறுதிவடிவத்தை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் அதை நிறைவேற்றினால், உடனடியாகத் தேர்தலை நடாத்த தயார் என்று அமைச்சர் பைசர் முஸ்தபா கூறியிருந்தார்.   

பழைய தேர்தல் முறையைப் பலர் விரும்புகின்ற போதிலும், பழைய முறைக்குப் பின்னோக்கிச் செல்வது, உகந்ததல்ல என்பது, அவருடைய நிலைப்பாடாக இருந்தது.   

ஆனால், இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, மாகாணசபைகள் தேர்தலைப் புதிய முறையில் நடத்துவதற்கான முன்னெடுப்புகளில் மெத்தனப் போக்கையே, ஏப்ரல் மாதத்துக்குப் பின்னர், பெரும்பாலும் அவதானிக்க முடிந்தது.  

உண்மையிலேயே, புதிய தேர்தல் முறைமை குறித்து, முஸ்லிம் மக்களிடையே இரு வேறுபட்ட அபிப்பிராயங்கள் உள்ளன. “இதுவே, சிறுபான்மையினருக்குப் பொருத்தமானது” என்று ஒருதரப்பினர் கூறுகின்றனர்.  “இல்லை, இது பாதகமானது; கலப்பு முறைமையை நடைமுறைப்படுத்துவதாயின் அது இன்னும் சீர்படுத்தப்பட வேண்டும்” என்று மற்றைய தரப்பினர் கூறுகின்றனர்.   

மாகாண சபைத் தேர்தலை 50:50 (விகிதாசாரம்:தொகுதிவாரி) என்ற அடிப்படையில் நடாத்துதற்கு, ஏற்கெனவே உத்தேசிக்கப்பட்டிருக்கின்றது.   

இந்தச் சூழலில், “சமர்ப்பிக்கப்பட்டுள்ள எல்லை மீள்நிர்ணய அறிக்கையில், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்கள் நியாயமான முறையில் உறுதிப்படுத்தப்படவில்லை” என்று எல்லை மீள்நிர்ணயக் குழுவில் அங்கம்வகித்த, முஸ்லிம் உறுப்பினரான பேராசிரியர் எஸ்.எச். ஹிஸ்புல்லா, கவலை வெளியிட்டிருக்கின்றார்.   

பெரும்பான்மையாக வாழ்வோர் என்ற அடிப்படையில், எந்தத் தேர்தல் முறைமை வந்தாலும், சிங்கள மக்களின் பிரதிநிதித்துவங்களைப் பேணும் விதத்தில், தொகுதிகள் அமையப் பெறும்.  

அதுபோல, தமிழ்த் தேசியம், மிகவும் புத்திசாலித்தனமான காய்நகர்த்தல்களின் மூலம், தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைத் தக்கவைப்பதற்கு, ஏதுவான எல்லை மீள்நிர்ணயங்களைச் செய்ய முனைந்திருக்கிறது.   

ஆனால், கட்சிசார் அரசியல் போட்டிகளுக்குள் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றும் வகையில், மாகாண சபைகளின் எல்லைகளும் அதற்குள் வரும் தொகுதிகளின் எல்லைகளும் மீள் நிர்ணயம் செய்யப்படவில்லை என்பது சாதாரண விடயமல்ல.   

எனவே, இப்போது வகுக்கப்பட்டிருக்கின்ற எல்லைகளின் அடிப்படையில், மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறுமாயின், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம், குறிப்பாக வடக்கு, கிழக்குக்கு வெளியே வெகுவாகக் குறைவடையும்.  

இந்த அடிப்படையில், முஸ்லிம்களால் இந்தத் தேர்தல் முறையை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. எனவேதான், பழைய முறைக்குச் செல்ல வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆகிய பிரதான முஸ்லிம் கட்சிகள், இரண்டு மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தன.   

எங்கு வேட்பாளரை நிறுத்தினாலும், அங்குள்ள மக்களின் வாக்குகள் சிதறாமல், தங்களது கூடையிலேயே விழும் என்ற நிலையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணி, பொதுஜன பெரமுன மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி (த.தே.கூ.) ஆகியனவுக்கு, இந்தத் தேர்தல் முறைமை பெரிய பாதகமாக அமையாது.   

ஆனால், தற்போது வகுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் 50:50 அடிப்படையில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமாயின், முஸ்லிம் மற்றும் மலையகக் கட்சிகள், சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவங்கள் குறைவடையவே வாய்ப்புகள் உள்ளன. ஆகவேதான், அக்கட்சிகள் பழைய குருடியின் கதவுகளைத் தட்ட விரும்புகின்றன.  “சிறுபான்மையினக் கட்சிகள் மற்றும் சிறியகட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. எனவே இதைக் கைவிடுவோம்” என்ற தோரணையில் அரசாங்கம் செயற்பட்டாலும், உண்மையில், இந்த எல்லை நிர்ணய அறிக்கையை நிறைவேற்றுவதிலும், புதிய முறைமைக்கு அமையச் சட்டத்திருத்தத்தை மேற்கொள்வதிலும் அரசாங்கத்துக்கு முன்னால் பாரிய சவால்கள் உள்ளன.   

அத்துடன், புதிய தேர்தல் முறைமையின் படி தேர்தல் நடந்தால், மஹிந்த ராஜபக்‌ஷவின் பொதுஜன பெரமுன, தனது பலத்தை இன்னும் நிரூபித்து விடுமோ என்ற உள்ளச்சமும், பழைய முறைமையில் அரசாங்கம் நாட்டம் கொள்வதற்கான மறைமுகக் காரணம் எனலாம்.   

நாட்டில் தேர்தல் முறைமையை, மாற்றியமைப்பதற்கான முன்மொழிவுகளும் கலந்தாலோசனைகளும் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக நடைபெற்றிருப்பதாகச் சொல்ல முடியும்.   

தினேஷ் குணவர்தன தலைமையிலான குழுவின் அறிக்கையை, ஒருபுறம் வைத்துவிட்டு, நல்லாட்சி அரசாங்கமானது, புதிய தேர்தல் முறைமையைக் கொண்டு வருவதற்காக, மேலும் பல வழிகளில் நடவடிக்கை எடுத்திருந்தது.   

சிவில் அமைப்புகள், அரசியல் கட்சிகளுடன் அரசாங்கம் கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன், ஒவ்வொரு கட்சியும் தனக்குள் உள்ளகக் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டிருந்தது. சர்வகட்சி மட்டத்திலும் நாடாளுமன்றத்திலும் பல நாள்கள், வாதப் பிரதிவாதங்கள் நடாத்தப்பட்டே, இந்தப் புதிய தேர்தல் முறைமை கொண்டு வரப்பட்டது.   

இதற்குப் பெரும்பான்மையினக் கட்சிகள் மட்டுமன்றி, இப்போது இதனை எதிர்க்கின்ற முஸ்லிம் கட்சிகள் உள்ளிட்ட சிறு கட்சிகளும் சம்மதம் தெரிவித்திருந்தன.   

புதிய தேர்தல் முறைமை பற்றிப் பேசப்பட்டபோது, உள்ளூராட்சித் தேர்தல், மாகாணசபைத் தேர்தல்களின் விகிதாசார-தொகுதிவாரி விகிதசமன்கள் பற்றிய முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்ட போது, இது விடயத்தில் கூடிய கவனம் செலுத்துமாறு, பொதுவாக எல்லா மக்களும் பொறுப்புவாய்ந்தவர்களைக் கேட்டுக் கொண்டார்கள்.   

முக்கியமாக, பிரதான முஸ்லிம் கட்சிகளையும் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் விழிப்பாக இருந்து, பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் விதத்திலான தேர்தல் முறைமையைக் கொண்டு வருமாறு, முஸ்லிம்கள் மன்றாட்டமாகக் கோரினர்.   

அந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸோ, மக்கள் காங்கிரஸோ ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களோ, இதற்கு ஆதரவளித்தார்கள் என்றால், அதன் ஆழ அகலங்கள், சாதக பாதகங்களை விளங்கிக் கொண்டு, அறிவார்ந்த அடிப்படையில் தமது முடிவுகளை எடுத்தார்கள் என்பதுதானே அதன் அர்த்தம்?   

இப்போது, இத்தனை நேர, கால, நிதியை விரயம் செய்து, ஒரு பரீட்சார்த்த தேர்தலையும் நடத்திவிட்ட பிறகு, பழைய தேர்தல் முறைக்கே திரும்புவோம் என்று, அரசாங்கமும் முஸ்லிம் கட்சிகளும் சொல்கின்றன என்றால், இதன் அர்த்தம்தான் என்னவென்று தெரியவில்லை.   

சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் மலையகத்தவர்களுக்கும் சிறு கட்சிகளுக்கும் இது சாதகமான தேர்தல் முறைமை அல்ல என்பதற்காக, இப்போது கூறப்படுகின்ற காரணங்கள் அப்போதும் வெட்ட வெளிச்சத்தில் இருந்தனவன்றோ?  

அப்போது, கலப்பு முறையைச் சரி என்று சொல்லிவிட்டு, இப்போது கைவிட நினைப்பது, அரசியலில் தூரசிந்தனையற்ற, புத்திசாலித்தனமற்ற போக்கின் வெளிப்பாடாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.   எது எப்படியோ, மீண்டும் பழைய முறைப்படியே மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படும் எனத் தெரிகின்றது.   

இவ்வாரம் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சர் ராஜித சேனாரத்ன, பழைய விகிதாசார முறைப்படியே, மாகாணசபைத் தேர்தல்கள் இவ்வருடம் டிசெம்பர் மாதம் நடைபெறும் என்றும், அதற்கு முன்னதாகச் செப்டெம்பரில் தேவையான சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளார்.   

மாகாணசபைகளுக்கான தேர்தலைக் காலதாமதமின்றி நடத்துவதாயின், நான்கு தெரிவுகள் இருக்கின்றன என்றும், அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் முன்னர் ஒரு தடவை தெரிவித்திருந்தார்.   

அதன்படி, அதில் ஒன்றை அரசாங்கம் இப்போது தேர்ந்தெடுத்திருக்கின்றது எனலாம். அதாவது, கடந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சுற்றிவளைத்து, தான் நினைத்த இடத்துக்கு மற்றெல்லோரையும் அரசாங்கம் அழைத்து வந்திருக்கின்றது.   

ஆனால், பழைய முறையில் தேர்தல் நடைபெறுவதால் நாட்டில் எந்தக் கட்சிக்கும் வெற்றி உறுதியாகி விட்டது என்று சொல்வதற்கில்லை. பெரும்பான்மைச் சமூகத்தின் வாக்குகள் மூன்று அல்லது நான்காகப் பிரிந்துள்ளன.   

தமிழர்களின் வாக்குகள் குறைந்தபட்சம் இரண்டாகப் பிரிந்திருக்க, முஸ்லிம்களின் வாக்குகள் இரு முஸ்லிம் கட்சிகள் உள்ளடங்கலாக மூன்று, நான்கு கூடைகளுக்குள் விழப் போகின்றன.   

எனவே, பழைய குருடியும் இவர்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது நிச்சயமில்லை போலத்தான் தெரிகின்றது.    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பழைய-குருடி-கதவைத்-திறவடி/91-217987

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.