Jump to content

திருக்குறள் நால்வருண சாதிமுறையைப் பின்பற்றிய நூலா? - குறள் ஆய்வு-4(பகுதி1)


Recommended Posts

திருக்குறள் நால்வருண சாதிமுறையைப் பின்பற்றிய நூலா? - குறள் ஆய்வு-4(பகுதி1)

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
- பாவேந்தர் பாரதிதாசன்

என் கெழுதகை நண்பர் ஒருவர் இதுவரை நான் எழுதிய மூன்று குறள் ஆய்வுக் கட்டுரைகளையும் படித்துவிட்டு, திருக்குறள் நூலுக்கு புதிய உரைநூல் எழுதலாம்; ஆனால், தலைசிறந்த தொல்லியல் அறிஞர் திரு. நாகசாமி அவர்கள் எழுதிய நூலுக்கு மறுப்புக் கட்டுரை எழுதுவது அவசியமா என்றும் தவறுகள் இருந்தால், காலம் அந்நூலைப் புறந்தள்ளும் என்பதால் எனது ஆய்வுக்கட்டுரைத் தொடர் எழுதுவதை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நறுந்தொகை வழிகாட்டியது!

தெளிந்த நீரோடை போல் இருந்த என் மனதில் நண்பரின் பரிந்துரைகள் பெரும் அதிர்வலைகளை உருவாக்கின. "தீர ஆராய்ந்து முடிவெடுக்கிறேன்" என்று பதில் தந்தேன். ஓரிரு தினங்கள் சென்றன. தற்செயலாகப் பதினைந்தாம் நூற்றாண்டில் தோன்றிய அறநூல் வெற்றிவேற்கை என்னும் நறுந்தொகையைப் படிக்க நேர்ந்தது. கொற்கை வேந்தன் குலசேகர பாண்டியன் அல்லது அதிவீரராம பாண்டியன் எழுதிய இந்நூலின் பின்வரும் வரிகள் என் குழப்பத்துக்கு விடை தந்தன:

பொய்யுடை யொருவன் சொல் வன்மையினால்
மெய் போலும்மே! மெய் போலும்மே!  - நறுந்தொகை: 73

மெய்யுடை யொருவன் சொல மாட்டாமையாற்
பொய் போலும்மே பொய் போலும்மே. - நறுந்தொகை: 74

தலைசிறந்த தொல்லியல் அறிஞர் என்று தாம் பெற்ற மக்கள் நம்பிக்கையையும், நற்பெயரையும் முதலாக்கி, ஆரிய இன மேன்மைக்காக, உண்மைக்குப் புறம்பாகத் திருக்குறள் கருத்துக்களை மனம் போன போக்கில் திரித்து எழுதத்துணிந்த  பொய்யுடை நாகசாமியவர்கள் சொல் வன்மையினால் மெய்போல் எழுதிய பொய் நூலானா "TIRUKKURAL - An Abridgement of Sastras" நூலுக்கு மறுப்புநூல் எழுதாவிட்டால், மெய்யுடைத் திருக்குறள் நம் "சொல மாட்டாமையால்" ஆரியசாஸ்திர நூற்களின் வழிநூல் என்னும் பொய் நிலைத்து, மெய்போல் ஆகிவிடும். எனவே, என் கடமையைச் செய்வதே சரி என்று முடிவுசெய்து விட்டேன்.

இனி... திருக்குறள் நால்வருண சாதிமுறையைப் பின்பற்றிய நூலா? என்ற கேள்விக்கு விடை தேடுவோம்.

"TIRUKKURAL - An Abridgement of Sastras - Dr. R.Nagaswamy"

என்னும் தமது நூலின் ஆறாவது பக்கத்தில் திரு.நாகசாமி அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்:

"Valluvar has based his text on the four Varna System as Brahmana, Ksatriyas, Vaisya and Sudra (Antanan, Arasan, Vanikan and Velalan) whose life style and discipline he writes in many Kurals".

திரு நாகசாமி ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் பின்வருமாறு:

"வள்ளுவர் தமது நூலை பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் (அந்தணன், அரசன், வணிகன், வேளாளன்) என்னும் நால்வருண சாதி அமைப்பை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளார்; இந்நால்வகை சாதியினரின் வாழ்வியல் முறை, ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் பல குறட்பாக்களையும் எழுதுகின்றார்."

குறள் ஆய்வு -3ல் 'அந்தணன்' என்று வள்ளுவர் குறித்தது ஆரிய நால்வருண சாதி அமைப்பில் வரும் 'பிராமணன்' அல்லன் என்பது உள்ளங்கள் நெல்லிக்கனியென நிறுவப்பட்டது. 

தமிழ் மண்ணில் வட ஆரியப் பிராமணர் வந்து கலந்தபின் ஏற்பட்ட சாதி அமைப்புக் குறித்து குறள் ஆய்வு-4 நுட்பமான ஆய்வுகளைத் தரவுகளின் அடிப்படையில் முன்வைக்கும்.

பரிதிமாற்கலைஞரின் பார்வையில் வடமொழியாளர்

அதன் முன்பு, தமிழ் நாட்டில் வந்து குடியேறிய ஆரியப் பிராமண அறிஞருள் நேர்மையானவர்கள் சிலர் எக்காலத்திலும் இருந்து வந்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் பரிதிமாற்கலைஞர்; தம் பெற்றோர் இட்ட வடமொழிப் பெயரான சூரியநாராயண சாஸ்திரி என்பதைத் தூய தமிழில் 'பரிதிமாற்கலைஞர்' என்று செம்மையாக்கம் கொண்ட இத்தமிழறிஞர் எழுதிய "தமிழ் மொழியின் வரலாறு" என்னும் நூலின் 202ம் பக்கத்தில் ஆரியர்களைக் குறித்துத் பின்வருமாறு குறிக்கிறார்:

"II வடமொழிக் கலப்பு.

"வடமொழி தமிழ்நாட்டில் வெகுநாள் காறும் இயக்கியும் அதற்குத் தமிழ் மொழியைத் தன் வழியிலே திருப்பிக் கொள்ளுதற்கு உற்ற ஆற்றல் இல்லாது போயிற்று.

(1) வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங்களை உணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். அவர்களெல்லாம் ஆன்ம நூற் பயிற்சி மிக்குடையாராயும், கலையுணர்ச்சி சான்றவராயும் இருந்தமைபற்றித் தமிழரது திவ்விய ஸ்தலங்களுக்குப் புராணங்கள் வகுத்தனர்;  

(2) தமிழர்களிடத்தில்லாதிருந்த அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்' என்ற நால்வகைச்சாதி முறையை மெல்லமெல்ல நாட்டிவிட்டனர். -

'முற்சடைப் பலனில் வேறாகிய முறைமை சொல்

நால்வகைச் சாதி இந்நாட்டில் நீர் நாட்டினீர்' 

என்று ஆரியரை நோக்கி முழங்கும் கபிலர் அகவலையும் காண்க.

இன்னும் அவர் தம் புத்திநலங்காட்டித் தமிழரசர்களிடம், அமைச்சர்க ளெனவும் மேலதிகாரப் பிரபுக்களெனவும் அமைந்து கொண்டனர்;

(3) தமிழரிடத்திருந்த பல அரியவிஷயங்களையும் மொழி பெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்."

ஆரியப் பிராமணராகப் பிறந்திருந்தும், நேர்மையானவராக வாழ்ந்து, அஞ்சாமல் ஆரியப்புரட்டுக்களை உரக்கச் சொன்ன முதுபெருந் தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர் தெரிவித்த மூன்று கருத்துக்கள் (தடித்த எழுத்துக்களில் உள்ளவை) இங்கு உற்றுக் கவனிக்க வேண்டியவை.

தமிழர்களிடம் கற்றவை ஒழுக்கநூல்களே வடமொழியில் எழுதப்பட்டன

(1) வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங்களை உணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்னும் உயிர்ச் சமத்துவ ஒழுக்கம், கொல்லாமை, புலால் மறுத்தல், போன்ற தமிழர்க்கே உரிய சிறப்பு ஒழுக்கங்களைத் தமிழரிடமிருந்து ஆரியர்கள் கற்றுக்கொண்டார்கள்.

அவற்றுள், நால்வருணத்தை எதிர்க்கும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பதைத் தவிர்த்து, ஆரியர்களால் பின்பற்றக்கூடிய குறட்பாக்களுக்கும், ஏனைய தமிழ் அறநூல்களுக்கும், வடமொழியில் 'தர்மசாஸ்திர நூல்கள்' என்று மொழிபெயர்த்தனர் என்பதுவே உண்மை என்பதைப் பரிதிமாற்கலைஞர் உடைத்துக் கூறுகின்றார்.

எனவே, ஆரிய தரும சாஸ்திரங்களின் தொகுப்பே திருக்குறள் என்று நூல் எழுதியுள்ள ஆரியப் பிராமணரான திரு.நாகசாமி தமது ஆரிய குலப்புரட்டுத் தொழிலைக் கைக்கொண்டு எழுதுவது அவரது பிறவி இயல்பே என்றாலும், அவர் நூலில் குறிப்பிட்ட ஒவ்வொரு கருத்தையும் தக்க சான்றுகள் கொண்டு மறுத்து எழுதுவதும், மறக்காமல் ஆங்கில மொழியிலும் இம்மறுப்பு நூலை வெளியிடுவதும் தமிழ் மொழியின் நலனுக்கும், தமிழ் மக்களின் நலனுக்கும் இன்றியமையாதது.

ஆரியர் தமிழரிடம் திணிக்க முயலும் மனிதகுலத்துக்கே எதிரான நால்வருண மனுதரும சநாதன தருமச் சாதிப் படிநிலை அமைப்பை ஒட்டுமொத்தமாக செல்லாக் காசாக்கும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்னும் உயிர்ச் சமத்துவ ஒழுக்கம், தமிழரை அடிமையாக்க விரும்பிய ஆரியரின் நோக்கத்துக்கு ஒத்துவராதது என்பதால் அது குறித்து ஆரியர் நூலேதும் எழுதவில்லை.

தமிழ் ஆகம மூலநூற்களை அழித்த ஆரியர்கள்

ஆகம விதிப்படியான கோயில்கள் தொண்ணூற்று ஒன்பது விழுக்காடு தமிழ்நாட்டில் மட்டுமே காணப்படுவது ஆகமங்கள் தமிழர்களின் அறிவுச்சொத்து என்பதை நிறுவும் சான்றாகும். தமிழர்களின் சிறப்பு வழிபாட்டு நெறிகளையும், மெய்யியல் கூறுகளையும், கோயில் நிருமானக் கட்டட விதிகளையும் சிறப்பாகக் கூறும் ஆகமநூற்கள் இன்று தமிழில் இல்லை; சமற்கிருதத்தில் மட்டுமே உள்ளன.

தமிழில் இருந்த ஆகம மூலநூற்கள் ஆரியர்களால் அழிக்கப்பட்டுவிட்டன என்பது தெளிவு.

ஆதிசங்கரர் ஆகமங்களை எதிர்த்தவர்

'ஆகமம்' சொல்லும் தத்துவ நிலைப்பாட்டை சநாதன ஸ்மார்த்த மதத்தை நிறுவிய ஆதிசங்கரர் தமது "அத்துவிதம்" எனும் ஸ்மார்த்தத் தத்துவத்துக்கு எதிரானது என்று வெளிப்படையாகவே எதிர்த்தார் என்னும் வரலாறு, ஆகமங்களுக்கும், சநாதனிகளான ஆரியப் பிராமணர்களுக்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை விளக்கும்.

திருக்குறளைத் 'தீயகுறள்' என்ற மகாப்பெரியவா!

உயிர் சமத்துவம் உரைக்கும் திருக்குறளை அடியோடு வெறுப்பவர் சங்கரமட அத்துவித சநாதனியான மகாப்பெரியவா காஞ்சி சங்கராச்சாரியார். திருக்குறளைத் 'தீக்குறள்' என்று கூறியுள்ளார் காஞ்சி சங்கரமடத்தின் மகாப்பெரியவா(????)என அழைக்கப்படும்  காலஞ்சென்ற சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் என்பது தற்காலத்தில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஸ்ரீஆண்டாள் அருளிய திருப்பாவை இரண்டாம் பாசுரமான “வையத்து வாழ்வீர்காள்!” பாடலின் ஆறாம் அடியில் “தீக்குறளை சென்றோதோம்“ என்று வருகிறது. காஞ்சி "மகாப்பெரியவா" அவர்கள் 1963ல் ஜூன் மாதம் மதுரையில் திருக்குறள் பற்றி பேசுகையில் ஆண்டாள் திருப்பாவையின் "செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்" என்னும் அடியிலுள்ள "தீக்குறளை சென்றோதோம்" என்னும் தொடருக்குத், தீய திருவள்ளுவரின் குறளை யாங்கள் ஓத மாட்டோம் என்று ஆண்டாள் சொன்னதாகப் பொது மேடையில் பொருள் கூறி, தம் தமிழிலக்கண அறியாமையையும் தமிழ் வெறுப்பையும் வடமொழி வெறியையும் ஒருங்கே காட்டினார்.னார்; இச்செய்தி குமுதம் வார இதழில் வெளியானது.

தமிழில் 'குறளை' என்ற சொல்லின் பொருள் 'கோள் சொல்லுதல்' என்பதாகும். "தீக்குறளை சென்றோதோம்" என்றால், "தீமை தரும் செயலான,  பிறரைப் பற்றிக் கோள்  சொல்லமாட்டோம்" என்பதே பொருள்.

இதுகுறித்து  ஸ்ரீவைஷ்ணவ ஸூதர்சனம் என்ற மாத இதழ் (சோதி 16 ஒளி-12)ல் தலையங்கம் தீட்டி, மகாப்பெரியவா சொன்ன கருத்துக்கு எதிராகக் கண்டனத்தினை பதிவு செய்திருந்தது. குமுதம் இதழ் 21-11-1963 தலையங்கத்தில் மகாப்பெரியவாளின் கருத்துக்கு மறுப்பையும்,  தன் வருத்தத்தினையும் தெரிவித்திருந்தது.

வேடிக்கை என்னவெனில் பிரபல பத்திரிகை "குமுதம்" கூட இலக்கணப்பிழையாக  "ச்"  சேர்த்ததை உணராமல், "தீக்குறளைச் சென்றோதோம்" என பீடாதிபதி சொல்லி திருக்குறளுக்கு எதிராக திருப்பாவையைப் பற்றி பேசும்படி வைத்தது தவறு" என மட்டும் பதிவு செய்திருந்தது.

'மகாப் பெரியவா' என்றும், 'காஞ்சி மாமுனிவர்' என்றும் அழைக்கப்பட்ட ஒரு மாமனிதர், உலகப்பொதுமறை என்றும், பொய்யாமொழி என்றும் போற்றப்படும் திருக்குறளைத் தீயகுறள் என்று கூசாமல் திரித்துத் துணிந்து பொய் சொல்லும் அளவுக்குத் திருக்குறளை வெறுத்தவர் என்பதை இன்றைய தமிழர்கள் அறிதல் நலம்.

'மகாப் பெரியவா' 'தீயகுறள்' என்று பொய் சொல்லும் அளவுக்குப் படுபாதகம் செய்ய வேண்டிய ஆத்திரம் திருக்குறளின் மேல் வர இன்னுமொரு காரணம், 'அந்தணன்' என்னும் நிலை ஒருவருக்குப் பிறப்பினால் வருவதல்ல; 'மற்றெல்லா உயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் அறவோன்' என்னும் தகுதியால் மட்டுமே வருவது' என்று நெத்தியடியாக அல்லவா சொல்கின்றது திருக்குறள்? 

"பிரமனின் நெத்தியிலேயே பிறந்த பிராமணர்கள் எந்தத் தவறு செய்தாலும், ஏனைய வருணத்தார் வணங்கும் தெய்வங்கள் பிராமணர்களே!" என்று முழங்கும் ஆரிய மனுதர்மப் பிராமணத் தத்துவத்தை அடியோடு மறுக்க அல்லவா செய்கிறது திருக்குறள்?

உலகப் பொதுமறையானாலும் மனு தருமத்துக்கு முரணாகக் கருதுகோள்கள் கொள்வதால் திருக்குறளைத் தீக்குறள் என்று ஆண்டாள் நாச்சியாரின் பெயரால் 'மகாப் பெரியவா' பொய்யுரை சொன்னார் போலும்!

ஆங்கிலத்தில் "Blood is Thicker than Water" என்ற பழமொழிக்கு இணையான ஆரியப் பழமொழியாக "Thread is Thicker than Thandam" என்று வைத்துக் கொள்ளலாம்; அதாவது, 'சன்யாசம் பூண்டு ஏந்திய தண்டத்தைவிடத் தடிமனானது பூர்வாசிரமப் பூணூல்" என்னும் கொள்கையுடையவராக இருந்ததால், கூசாமல் 'தீய குறள்' என்று மகாப் பெரியவா பொய்யுரை சொன்னார் போலும்!

தப்பை பூசிமெழுகிய மகாப்பெரியவா!

பெரும் எதிர்ப்புக் கிளம்பியதும் குமுதத்தின் தலையங்கத்தினை சுட்டிக்காட்டி பேசிய பீடாதியின் விளக்கம் 5/12/63 குமுதத்தில்,  "பாவையர் நோன்பு காலத்தில் இனிமையான (திருக்)குறளைக்கூட ஓதமாட்டோம் இறைவன் நினைவில் ஆழ்ந்துவிடுவோம் என பாவையர் கூறுவதாக பொருள் கொள்ளலாம் என்று சொன்னேன், அப்படி நான் புதிதாக விளக்கப்புகுந்தது (திருக்)குறளின் பெருமையை வலியுறுத்துவதற்காகத்தானே தவிர, அதை குறைவு படுத்துவதற்காக அல்ல!.... உரை சொன்னது பொருந்தியதா பொருந்தவில்லையா என்பது வேறு; உரை சொன்னதன் உள்நோக்கம் குறட்பெருமையை உணர்த்துவதற்குத்தான்.” என்று மகாப்பெரியவா செய்த தப்பைப் பூசிமெழுகி விளக்கியிருந்தார்.

"திருக்குறளைத் தாழ்வுபடுத்தவில்லை என்பதை விவரித்த மகாப்பெரியவா, திருப்பாவைக்கு தான் உணர்த்திய  பொருள் தவறு எனத் தன் விளக்கத்தில் ஒப்புக் கொள்ளவுமில்லை;  வருத்தமும்  தெரிவிக்கவில்லை!

மேலும், 5/12/63 குமுதம் இதழில் “தீக்குறள்” என்னும் பதத்திற்கு "இனிமையான குறள்" என்று பொருள் கூறுகிறார் மகாப்பெரியவா! அதுவும் இலக்கணப் பெரும்பிழை. அப்படி பொருள் இருந்தால், "தீந்தமிழ்",  "தீஞ்சுவை" என்பது போல "தீங்குறள்"  என்றல்லவா ஆண்டாள் நாச்சியார் எழுதியிருக்கவேண்டும்? ஆனால், "தீக்குறளை சென்றோதோம்"  என்றே திருப்பாவையில் அருளியுள்ளார் ஆண்டாள் நாச்சியார். 

நடமாடும் தெய்வமாகவும், ஜகத்குருவாகவும் மதிக்கப்பட்டவரின் தெய்வத்தின் குரலில், ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை குறித்து அபஸ்வரம் வந்தால், அது எப்படித் தெய்வத்தின் குரலாக இருக்க முடியும்?  கபடவேடங்களும், பொய்மைகளும் நெடுநாட்கள் நிலைப்பதில்லை.

பிராமணர் தலையில் தோன்றியவர் என்றும், காலில் பிறந்தவர் சூத்திரன் என்று ராஜநாகத்தினும் கொடிய சாதி நஞ்சை, சநாதன மதம் என்னும் போர்வையில் உமிழும்  மகாப்பெரியவா சங்கராச்சாரியார், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று உயிர்ச் சமத்துவம் முழங்கும் திருக்குறளைத் 'தீக்குறள்' என்று தூற்றிப் பேசியது ஆரியரின் மநுதர்மத்தின்படி சரியே.

தெய்வத்தின் குரலாக மகாப்பெரியவா நமக்கெல்லாம் தெரிவிக்கும் செய்தி இதுதான்: துறவு மேற்கொண்டாலும், ஆரியனின் பிறவிக்குணம் சாதியைத் துறக்கவிடாது. எனவே, 'துறவு' அதிகாரத்தில்  திருக்குறள் சொல்லும் "நீத்தார் பெருமை" ஆரியப் பிராமணர்களுக்குப் பொருந்தாது என்பதாகும். இது குறித்துப் பின்னர் விரிவாகக் காண்போம்.

திருக்குறளை விழுங்கிச் செரிக்க முயலும் மலை(நாகப்)பாம்பு!

திருக்குறளின் புகழும், பெருமையும் விண்ணைத் தாண்டியும் வளர்ந்து விட்டதால், 'மகாப்பெரியவா'-வின் அடிப்பொடியான திரு.நாகசாமி, திருக்குறளை ஆரிய தர்ம சாஸ்திரங்களின் சுருக்கம் என்று சிறுமைப்படுத்தி, விழுங்கத் துடிக்கிறார். கைக்கிண்ணத்தில் உள்ள பாலில் தோன்றும் நிலவின் பிம்பத்தைக் கண்டு, நிலவையே சிறைபிடித்துவிட்டதாக இறுமாப்பு கொள்ளும் அறிவீனம் இது.

(பரிதிமாற்கலைஞரின் (2), (3) ஆம் கருத்துக்களுக்கான விளக்கங்களும் ஆய்வுத் தொடர்ச்சியும்  குறள் ஆய்வு-4ன் இரண்டாம் பகுதியில் அடுத்து வெளியாகும்.)

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்!
வீரங்கொள் கூட்டம்!  அன்னார்
உள்ளத்தால் ஒருவரே! மற்
றுடலினால் பலராய்க் காண்பார்!
கள்ளத்தால் நெருங்கொணாதே
எனவையம் கலங்கக் கண்டு
துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

குறளறம் தொடர்ந்து பேசுவோம்!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.