Jump to content

முன்னோர் மொழி பொன்னே போல் - சுப.சோமசுந்தரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                                                                                  முன்னோர் மொழி பொன்னே போல் - சுப.சோமசுந்தரம்

 

  அறநெறிகளும் உவமைகளும் மீண்டும் மீண்டும் இலக்கியங்களில் மாறுதலின்றி கையாளப்படுவதும் எடுத்தாளப்படுவதும் தொன்று தொட்ட நிகழ்வே. இவற்றில் ஒருவரைப் பார்த்துதான் இன்னொருவர் எழுத வேண்டும் என்றில்லை. இடமும் காலமும் மாறுபடாத போது அறநெறிகள் மாறுபட வாய்ப்பில்லை. மங்கை நல்லாளின் ஒளிரும் முகம் மதிமுகமாய் பாமரனுக்கும் தோன்றும். அதனை முழுநிலவெனச் சொல்வதற்கு ஒரு புலவனிடம் இன்னொரு புலவன் கேட்க வேண்டியதில்லை. ஆனால் ஒரு புலவனின் ஒரு குறிப்பிட்ட வருணனையோ கூற்றோ அவனுக்கு முந்தையோரை நினைவு படுத்துதல் உண்டு. அவ்வாறான சில இடங்களில் அம்முந்தைய கூற்று கல்வி கேள்விகளிற் சிறந்த இப்புலவனுக்குத் தெரியாதிருக்க வாய்ப்பில்லை என்று அறுதியிட்டுச் சொல்லலாம். உதாரணமாய் திரைப்பாடலையே எடுத்துக் கொள்வோம். ‘வாழ்க்கை படகு’ திரைப்படத்தில் ‘நேற்று வரை நீ யாரோ, நான் யாரோ’ எனத் தொடங்கும் கண்ணதாசன் பாடலில் ‘உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே ! விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே !’ எனக் கேட்கும் பொழுது அதிகாரம் குறிப்பறிதலில்

  யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

  தான்நோக்கி மெல்ல நகும்

என நம் நினைவிற்கு வரும் குறள் கண்ணதாசன் அறியாததா ? இவ்வாறு எடுத்தாள்வது கண்ணதாசனின் சான்றாண்மைக்குச் சான்று பகர்வது. முன்னோரான வள்ளுவனின் மொழியைப் பொன்னே போல் போற்றுதல் கல்வி கேள்வியிற் சிறந்த, புலமையிற் சிறந்த கண்ணதாசனுக்கு மேலும் பெருமை சேர்ப்பது. அறிவுலகம் அறிந்த சான்றோரை வழிமொழிவது எடுத்தாள்வதாய் அமையும். அங்கு ‘சுடுதல்’ இல்லை. ஆங்கிலத்தில் “Reference out of reverence is acknowledgement, not plagiarism” என்பர். இவ்வகையில் நற்றிணையின் கூற்று வள்ளுவத்தில் எடுத்தாளப்படும் இரண்டு இடங்கள் நினைவுகூர்ந்து இன்புறத்தக்கவை. சங்க இலக்கியமான நற்றிணை சங்கம் மருவிய காலத்துப் பொய்யாமொழிக்கு முந்திய காலத்தது எனும் பெரும்பான்மை அறிவுலகக் கருத்தியலின் வழிநின்று எழுதுகிறேன். மேலும் இங்கு எது முந்தியது என்பதல்ல, எடுத்தாளும் ஆளுமையே பேசுபொருள்.

          நான் பேச வந்த முதற்குறள் ‘கண்ணோட்டம்’ எனும் அதிகாரத்தில் அமைந்த

  பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

  நாகரிகம் வேண்டு பவர்.

எல்லோரும் விரும்பத்தக்க நாகரிகம்(courtesy) விழைபவர் தம் சார்ந்தோர் தமக்கு வழங்குவது நஞ்சாகவே இருப்பினும் அதனை ஏற்று அமைவர் என்பதே பொருள். இங்கு ‘நஞ்சினை உண்டு’ என்பதை நேர் பொருளாய்(literal meaning) எடுப்பது இல்லை என்பதை இலக்கியம் அறிந்தோர் அறிவர். ‘உணவானாலும் கருத்தானாலும் தாம் விரும்பாதவற்றை தம்மைச் சார்ந்தோர் அளிக்கையில் சூழலைக் கருத்தில் லொண்டு ஏற்றமைதல்’ எனப் பொருள்கொள்வதே இங்கு சாலப் பொருத்தம். இக்குறளினால் பரிமேலழகர் முதல் பாக்களின் திறம் ஓரளவு அறிந்தோர் வரை நினைவு கூர்வது நற்றிணையில் 355வது பாடல் பகுதியான

 முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்

 நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்

எனும் குறிஞ்சித் திணைப் பாடலாம்.

நற்றிணையின் நனிநாகரிகம் வள்ளுவத்தில் நயத்தக்க நாகரிகமானது. நற்றிணையின் வலியுறுத்தல் தேர்ந்து தெளிந்த நட்பில் அமைந்தது. குறளின் வலியுறுத்தல் நாகரிகத்தில் அமைந்தது.

           பேச வந்த இரண்டாவது குறள் பிரிவாற்றாமையில் தலைவனிடம் தலைவியின் கூற்று,

 செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்

 வல்வரவு வாழ்வார்க் குரை

என்பது.  

          சிறிது காலம் போர்க்களத்திற்கோ தொழில் மேற்கொண்டோ பிரியப் போகும் தலைவன் உற்றாரிடம் விடைபெற்று தலைவியிடம் விடைபெற வருகிறான். “சில மாதங்களில் வந்து விடுவேனே. ஏன் கவலை கொள்கிறாய்?” என ஏற்கெனவே அவளைத் தேற்ற முயன்று தோற்றுப் போனவன் அவன். தலைவி அவனிடம் சொல்கிறாள், “ ஏதாவது மாற்றம் ஏற்பட்டு நீ செல்லவில்லை என்றால் மட்டும் என்னிடம் சொல். ‘அதுதான் சீக்கிரம் வந்து விடுவேனே ! ’ எனும் உன் (வல்)வரவு பற்றிய செய்தியை நீ வரும்போது யார் உயிருடன் இருக்கப் போகிறார்களோ அவர்களிடம் சொல்!” பொதுவாக எவரது வரவையும் நல்வரவாகக் கொள்வதே தமிழர் மாண்பு,மரபு. ஆனால் இங்கு வல்வரவு என்று வள்ளுவன் சொல்லாக்கம் தருவது, தலைவன் வரப்போவது தலைவியை இழந்த இழவு வீட்டிற்கு என்பதால். சொற்சிக்கனத்திற்கும் வள்ளுவனே ஆசிரியன். பிரிவாற்றாமையினால் தலைவியின் மேனியில் பசலை தோன்றுவதும், மேனி இளைத்து கை வளையல்கள் பிறர் அறிய நிலத்தில் கழன்று விழுவதும் அகப்பாடல்களில் எங்கும் விரவி நிற்கக் காணலாம். ஆனால் தலைவி உயிர் துறப்பது (மிகைப்படுத்தலாகவே இருப்பினும்) என்பது இலக்கியங்களில் அருகி நிற்பது. எனவே மேற்கண்ட குறளோவியம் நம் நினைவிற்குக் கொணரும் நற்றிணைக் காட்சி நெய்தல் நிலத்துத் தோழி தலைவியின் பிரிவாற்றா நிலை பற்றி தலைவனிடம் எடுத்துரைப்பது (பாடல் – 19; நக்கண்ணையார் எனும் பெண்பாற் புலவர் பாடியது – அவர்தாம் தோழியோ ! )

 வருவை யாகிய சின்னாள்

 வாழா ளாதல்நற் கறிந்தனை சென்மே   

[ வருவை ஆகிய சின்னாள்(சில நாள்)

 வாழாள் ஆதல் நன்கு அறிந்தனை சென்மே (செல்வாயே) ]

அஃதாவது ‘சில நாட்களில் வருவாய் எனினும் அவள் வாழாள் என்பது நன்கு அறிந்து செல்வாயே’ என்பதாம்.

              “ யாமறிந்த மொழிகளிலே……….” எனும் பாரதியின் கூற்று உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை என்பது நம்மவர்க்காவது புரிந்தால் சரி.

                                                      

                                                                                                                                                                                                                      -சுப.சோமசுந்தரம்     

           

Link to comment
Share on other sites

"தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை!", சொல் நயமும், உரை நயமும், மொழி நடையும் இனிதாயின்!

அவ்வண்ணமே உளதாயிருப்பதால், நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும் நும் தமிழ்க் காதல் இனி!

கவியரசுவின் பாடல் நயம் கருதி,

 படகு’ திரைப்படத்தில் ‘நேற்று வரை நீ யாரோ, நான் யாரோ’ எனத் தொடங்கும் கண்ணதாசன் பாடலில்

‘உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே !

விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே !’ என!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் said:

"தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை!", சொல் நயமும், உரை நயமும், மொழி நடையும் இனிதாயின்!

அவ்வண்ணமே உளதாயிருப்பதால், நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழும் நும் தமிழ்க் காதல் இனி!

கவியரசுவின் பாடல் நயம் கருதி,

 படகு’ திரைப்படத்தில் ‘நேற்று வரை நீ யாரோ, நான் யாரோ’ எனத் தொடங்கும் கண்ணதாசன் பாடலில்

‘உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே !

விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே !’ என!

 

நன்றி தோழர் கிருஷ்ணன். 'விண்ணை' சரி (Edit) செய்து விட்டேன். மண்ணை என் ஒருவனால் சரி செய்ய இயலாது என்பது 'வேறு'.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.