Sign in to follow this  
நவீனன்

கம்போடியா பரிசு

Recommended Posts

கம்போடியா பரிசு - சிறுகதை

 
 

தமிழ்மகன் - ஓவியங்கள்: ஸ்யாம்

 

தோளில் பாந்தமாக அழுத்திய அந்த விரல்கள் சரவணனு டையவை என நினைத்தேன். மிக மிருதுவாக அழுத்திய படி இருந்தன அந்த விரல்கள். எதிரில் அமர்ந்திருந்த ரமேஷ் சிரிக்கவேதான் சந்தேகம் வந்தது. கண்களைத் தாழ்த்தி, அழுத்திய அந்த விரல்களைக் கவனித்தேன். இரண்டு கைகளின் விரல்களிலும் செக்கச் சிவப்பாய் நகப்பூச்சு. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். இன்னும் சிவப்பாய் உதட்டுச் சாயம் பூசிய கறுப்பு ஸ்கர்ட் போட்ட ஒரு பெண் நின்றிருந்தாள். மேலும் திடுக்கிட்டு எழுந்து நின்றேன்.

அந்தப் பெண் சிரித்தாள். ``உட்கார்’’ என்றாள் ஆங்கிலத்தில். ராகம்போல இழுத்துப் பேசும் அவளின் உச்சரிப்பு பாணியும், கெஞ்சலான அல்லது கொஞ்சலான குரலும் பதிலுக்குச் சிரிக்கவைத்தன. `சின்னப் பெண். என்ன துணிச்சலில் என்மீது கை வைத்து அழுத்துகிறாள்?’

``நோ’’ என்றேன்.

46p1_1528266378.jpg

அவள் உரிமையோடு என் கையைப் பிடித்து அழுத்தி உட்காரவைத்தாள். நண்பர்கள் அனைவரும் சிரித்தனர். எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. நானும் சிரித்தேன். சிரிப்பதைத் தவிர்த்து வேறு என்ன செய்வது எனத் தெரியவில்லை. நண்பர்களின் ஏற்பாடு இது எனத் தெளிவாகப் புரிந்தது. கம்போடியா வந்து இன்று ஆறாவது நாள். ஆயிரம் வருஷத்து அங்கோர்வாட் தமிழ்க்கோயிலில் ஆரம்பித்து நாம்பென் நகரத்து நவீனயுகம் வரை பார்த்தாயிற்று. நாளை சென்னைக்குக் கிளம்ப வேண்டும். அதற்குள் என்னை வைத்து அவர்களுக்கு ஒரு விளையாட்டு தேவையாக இருக்கிறது.
சரவணன் நெருங்கி வந்து கண் சிமிட்டி, `என்ன சொல்றே?’ என்றான் பார்வையாலேயே நான் ``ஆளை விடுங்கப்பா’’ என எழுந்தேன்.

அந்தப் பெண் என்னைத் தோளில் அழுத்தி, தன்மேல் சாய்த்துக்கொண்டு, ``ஃபிப்தி தாலர்’’ என்றாள். அதிகம் பாலூற்றிய தேநீரின் நிறத்தில் இருந்தாள். மஞ்சளுக்கும் வெண்மைக்கும் இடையில் ஒரு நிறம். லிப்ஸ்டிக் தீட்டிய உதடு. இங்கு எல்லாப் பெண்களுமே தீட்டியிருக்கிறார்கள். உதடும் கண்களும் சேர்ந்து சிரித்தன. நான் அவளைப் பார்க்கிறேன் என்பது தெரிந்ததும் போலீஸுக்கு அளவெடுக்க நிற்பதுபோல சற்றே விறைப்பாக நின்று அவளைச் சரிபார்த்துக்கொண்டாள். மங்கிய வெளிச்சத்தில் கறுப்பு உடையில் அவளுடைய நிறம் மட்டுமே தெரிந்தது. ``ஃபிப்தி தாலர் ஓகே?’’
``என்னம்மா சொல்றே?’’ என்றேன்.

``தமிழ்ல கேட்கிறான் பாரு... ஃபிப்டி டாலர் கேக்கறாப்பா’’ என்ற ரகு, ``ஓகே... ஓகே’’ என்றான் அவளைப் பார்த்து.

``உனக்கு ஓகே-ன்னா நீ கூட்டிட்டுப் போ... என்னை வம்புல மாட்டிவிடாத.’’

``ஒண்ணும் பண்ணிட மாட்டா. பயப்படாமப் போடா.’’

மணி, நள்ளிரவைக் கடந்துவிட்டது. இரவு மையம் கொள்ளக் கொள்ள பெண்கள் அதிகமாக நடமாடுவது தெரிந்தது.

நாம்பென் நகர பார் ஒன்றில் இப்படி என்னை ஏடா கூடமாகச் சிக்கவைக்க, நண்பர்கள் திட்டமிட்ட சம்பவத்தின் பின்னணியில் என்னுடைய டீடோட்டலர் விரதம் முக்கிய காரணமாக இருந்தது. எனக்காக ஒருவர் ஐம்பது டாலரை எடுத்துக் கொடுக்க, ஒருவர் என் அறை எண்ணை அவளிடம் சொல்லி அரை மணி நேரம் கழித்து வரச் சொல்ல, என்னை உடனே மூட்டை கட்டி ரூமுக்குச் சென்று தயாராகச் சொல்ல... எல்லாமே சில விநாடிகளில் நடந்தன.

``உனக்குப் பிடிக்கலைன்னா... மசாஜ் பண்ணச் சொல்லிட்டுப் போகச் சொல்லிடு. புரொஃபஷனல் மசாஜ் டிரெய்னர்ஸ் இவங்கள்லாம்’’ என என் காதருகே கிசுகிசுத்தான் ரகு.

ஒரு மாதிரியாக மனதைத் தேற்றிக்கொண்டு, அறைக்குக் கிளம்பினேன். எங்கள் மூவருக்குமே தனித்தனி அறைகள். அறையில் போய் டிவி போட்டுவிட்டு `கியாமித்தாய்... கிச்சாய்... மியாய்’ என அவர்கள் கெமர் மொழியில் இழுத்து இழுத்துப் பேசும் விவாத நிகழ்ச்சி ஒன்றைச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். ஜில் ஏசி-யில் சின்னச்சின்ன வியர்வைத் துளிகள் அரும்பிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.

`டிங்... டிங்...’

இதயம் நின்று துடித்தது. மனைவிக்குத் துரோகம், பிறன்மனை நோக்கும் சிற்றாண்மை, பொதுவெளியில் சொல்லத் தயங்கும் செயல் என்ற குற்ற உணர்வு, குறுகுறு எதிர்பார்ப்பு... எல்லாமாக வயிற்றிலிருந்து புறப்பட, எச்சில் விழுங்கி... கதவைத் திறந்தேன்.

அவ்வளவு கிட்டத்தில் வந்து ``ஹாய்...’’ என்றாள். இன்னும் அழகாக மாறியிருந்தாள்.

``ஹாய்!’’

பெர்ஃப்யூம் வாசனை.  கட்டிலின் மேல் துள்ளி அமர்ந்து குஷன் அதிர்வில் அப்படியே மகிழ்ந்து ஆடினாள். வாட்சைக் கழற்றி போன் அருகே வைத்தாள்.

``இரவில் இந்த பாரில்தான் தங்குவியா?’’

``இல்லை... தினமும் என் வீட்டுக்குப் போயிடுவேன்.’’

46p2_1528266397.jpg

``வீடு எங்கே?’’ - இது தேவையற்ற கேள்வி. எனக்கு, நான் இருக்கும் ஹோட்டலின் பக்கத்துத் தெருவில் விட்டாலே திரும்பி வருவதற்கு வழி தெரியாது.

ஆனால், அவள் பதில் சொன்னாள். ``இங்கிருந்து 15 கிலோமீட்டர். ஒரு கிராமம். எங்கள் ஊரிலிருந்து நான்கு பேர், இங்கு உள்ள பார்களில் வேலைசெய்கிறோம்.’’

தேவையில்லாத... தேவைக்கு அதிகமான விளக்கம். பேச்சு போதும்போல இருந்தது. அவளுக்கும் அப்படி இருந்திருக்க வேண்டும்.

``குளித்துவிட்டு வந்துவிடட்டுமா?’’ என்றாள்.

``நிச்சயமாக.’’

சரக்கென ஜிப்பை இழுத்து அவளுடைய மேலாடையை அகற்றினாள். பதறிப்போய் ஓடி அறைக் கதவைச் சாத்தினேன். அதுவரை அது திறந்தே கிடந்தது. அவள் சிரித்தாள். ஸ்கர்ட்டைக் கழற்றினாள். இரட்டை ஆடையில் மேலும் வெள்ளை வெளேர் எனத் தெரிந்தாள். குளியல் அறைக் கதவைத் திறந்து வழிகாட்டினேன். கழற்றிய இரண்டு துணி வகையறாவையும் தோளில் போட்டுக்கொண்டு லேசாக உரசியபடி உள்ளே சென்றாள்.

``நீ குளிக்கவில்லையா?’’ என்றாள்.

``அப்பவே குளிச்சுட்டேன்.’’ தமிழில்தான் சொல்ல வந்தது. அவள் புரிந்துகொண்டு, கதவைச் சாத்திக்கொண்டாள். ஷவர் சத்தம் கேட்டது. இதுதான் தருணம் என வெளியில் ஓடி, பாரில் கிண்டலடித்து உட்கார்ந்திருக்கும் நண்பர்களுடன் ஐக்கியமாகிவிடலாமா என நினைத்தபோது, அவள் வெள்ளை டர்க்கி டவலை நடுவாகக் குறுக்கில் கட்டிக்கொண்டு வெளியே வந்தாள்.

``நான் தயார்.’’

அருகே வந்து அணைக்க நினைத்தவள், இன்னொரு கையால் பாத்ரூம் கதவை இழுத்து அறைந்து சாத்தினாள். `க்ளுக்’ என ஒரு சத்தம் கேட்டது. அது, சாத்திய கதவிலிருந்து வந்தது.

கண்களை அழகாக உருட்டி... `என்ன சத்தம்?’ என்பதாகப் பார்வையால் கேட்டாள். நான் முன்வந்து கதவை ஒருமுறை தள்ளித் திறக்கப் பார்த்தேன். திறக்கவில்லை. அவளும் நான் என்ன செய்கிறேன் என்பதைக் கவனிக்க ஆரம்பித்தாள். குளியல் அறையைத் திறப்பதற்கான குமிழைத் திருகித் திறக்க முயன்றேன். அது அசையவில்லை. அவளும் சேர்ந்து என் கையோடு சேர்த்து குமிழைத் திறக்க எத்தனித்தாள். உட்பக்கம் தாழிட்டுக்கொண்டது தெரிந்தது.

மூர்க்கமாக இரண்டு மூன்று முறை இழுத்தும் திருகியும் பார்த்தாள். நான் மெள்ள என் கைகளை எடுத்துக்கொண்டேன்.

``ஏன் திறக்கவில்லை?’’ என்றாள்.

``உள் பக்கம் பூட்டிக்கொண்டுவிட்டது’’ சைகையும் ஆங்கிலமுமாகச் சொன்னேன்.

``என் டிரெஸ் எல்லாம் உள்ளே இருக்கிறது’’ அவள் கண்கள் பதறுவதைப் பார்த்தேன்.

கடிகாரத்தைப் பார்த்தேன். இரவு 1:50.

46p3_1528266419.jpg

ஒரு திருப்புளி இருந்தால் தாழ்ப்பாள் இருக்கும் இடத்துக்குள் விட்டு நெம்பிப் பார்க்கலாம். பாக்கெட்டில் இருந்த பால்பாயின்ட் பேனாவால் ஏதாவது செய்ய முடியுமா என நம்பிக்கையில்லாமல் முயன்றேன்.

``திறக்கவில்லையா?...’’ என்றது அவளுடைய பெருமூச்சுடன் வந்த குரல்.

உள்ளே சென்று வேறு உபகரணங்கள் கிடைக்குமா எனப் பார்த்தேன். கப், டிஷ்யூ பேப்பரில் சுற்றிய கண்ணாடி டம்ளர், சர்க்கரை நிரப்பிய சாஷே, ஸ்பூன்.

ஸ்பூனை எடுத்துக்கொண்டு கதவு அருகே வந்தேன். அது உள்ளே செல்ல வழியில்லை. அதை வைத்து இப்படியும் அப்படியும் குத்திப்பார்த்தேன். அவள் ஏதோ அமானுஷ்யம் நிகழ்த்திக்காட்டுவேன் என, விழி பிரமித்துக் காத்திருந்தாள். அவள் பார்ப்பதை நானும் பார்த்தேன்.

``ப்ளீஸ்!’’ என்றாள்.

டெலிபோன் அருகே சென்று அதில் ஒட்டப்பட்டிருந்த அவசர சேவைக்கான எண்களைப் பார்த்தேன். ரூம் சர்வீஸ் - ஒன்று பூஜ்ஜியம் பூஜ்ஜியம்.

வெகுநேரம் அடித்தது. நம்பிக்கையிழந்த நேரத்தில் ஒருவன் எடுத்தான். `கிய்ய முய்ய’ என என்னவோ சொன்னான். அந்தப் பெண்ணிடமே கொடுத்து விளக்கச் சொன்னேன்.

அவள் வாங்கிப் பேசினாள். ஏமாற்றத்துடன் போனை வைத்தாள். ``காலை 10 மணிக்குதான் கார்ப்பென்டர் வருவாராம்.’’

``என் சட்டையையும் ஷார்ட்ஸையும் போட்டுக் கொண்டு போய்விடு... நாளைக்கு உன் ஆடைகளை எடுத்துவந்து அந்த பாரில் கொடுத்து விடுகிறேன்.’’

நல்ல யோசனைபோல முகத்தில் ஒரு மலர்ச்சி ஏற்பட்டு அடுத்த விநாடியே மறைந்து விட்டது. ``இல்லை... அம்மா திட்டுவார். நான் இப்படிச் செய்வது வீட்டில் தெரியாது.’’

``எப்படிச் செய்வது?’’

``பாரில் வேலை செய்வதற்கு மட்டும்தான் அனுமதி. 3 மணிக்கு பார் மூடிவிடுவார்கள். எங்களை எங்கள் கிராமத்துக்கு அழைத்துச் செல்ல டுக் டுக் வந்துவிடும்.’’

டுக் டுக் என்பது, நம் ஊர் ஆட்டோ போன்ற ஒரு வாகனம். கடிகாரத்தைப் பார்த்தாள். 2:20.

அவளுக்கு அழுகை வந்தது. எந்த உணர்ச்சியும் இல்லாமல் கண்ணில் மட்டும் நீர் கொட்டிக்கொண்டிருந்தது. ``அழாதே’’ என்றேன். துடைத்துவிட நினைத்து தைரியம் இல்லாமல் தவிர்த்துவிட்டேன்.

முதலில் அவள் பதற்றத்தைப் போக்க வேண்டும். வென்டிலேஷனுக்காக மேலே சிறிய திறப்பு இருந்தது. ஸ்டூலை இழுத்துப் போட்டு அதன் வழியாக எட்டிப்பார்த்தேன். அந்தவழி, கண்ணாடிப் பட்டைகளால் ஏணிபோல வரிசையாக அடுக்கி மூடப்பட்டிருந்தது. ஆனால், அதை உள்பக்கம் இருந்துதான் ஒவ்வொன்றாக எடுக்க முடியும். உடைத்து அகற்றலாம். ஆனால், அதன் வழியாக உள்ளே செல்ல முடியுமா எனத் தெரியவில்லை. கையில் கைக்குட்டையை நன்றாகச் சுற்றிக்கொண்டு ஒரு குத்து விட்டேன். கண்ணாடிச் சில்லுகளை அகற்றிவிட்டு, தலையை மெள்ள உள்ளே நுழைக்க முயன்றேன். காது வரை மட்டுமே உள்ளே போனது. தலையை பத்திரமாக வெளியே எடுத்தேன்.

46p4_1528266439.jpg

``உள்ளே தாழ்ப்பாள் எதுவும் இல்லை. இது எலெக்ட்ரானிக் தாழ்ப்பாள்போல் இருக்கிறது.’’

அவளுக்குப் புரியவில்லை. ``என்னால் போக முடிகிறதா பார்க்கிறேன்’’ என்ற அவள் என்னைக் கீழே இறங்கச் சொன்னாள். இறங்கி, அவள் ஸ்டூலில் ஏறுவதற்கு உதவினேன். அவளுக்கு அந்த வென்டிலேஷன் எட்டவில்லை. ``கொஞ்சம் தூக்கிவிடுங்கள்.’’

அவளுடைய கால்களைப் பிடித்துத் தூக்கினேன். எதிர்பாராத விதமாக அந்த டர்க்கி டவல் அவிழ்ந்து என் மேல் விழுந்தது. அவள் பதறி, கீழே குதித்து டவலை வாங்கிக் கட்டிக்கொண்டாள். ``சிறிய வழி. அதற்குள் போக முடியாது.’’

சம்பந்தமில்லாமல் அந்த வழியையும் தாழ்ப்பாளையும் பார்த்தேன். ``நேரமாகிவிட்டது. வண்டி வந்துவிடும்.’’

தோள்பட்டையால் மோதி கதவை உடைத்துத் திறக்கும் கதாநாயக உத்திகள் எடுபடவில்லை. கெட்டியான மரக்கதவு அது. இரண்டு அங்குல தடிமன் இருக்கலாம். கம்போடியாவில் மரத்துக்குப் பஞ்சமில்லை. கொத்தி, இடித்து, உடைத்து, நெம்பி என இருக்கும் வாய்ப்புகள் எதுவுமே சரியாக வராது என நன்றாகத் தெரிந்தது. 3 மணிக்கு இன்னும் 10 நிமிடங்களே இருந்தன.

எல்லாமே எலெக்ட்ரானிக்ஸ். கதவைத் திறக்க ஒரு காந்த அட்டை கொடுத்திருந்தார்கள். அதைக் காட்டினால்தான் வெளிக்கதவு திறக்கும். அதை உள்ளே சுவரோடு பிணைத்த காந்தப் படிப்பானில் செருகினால்தான் மின் இணைப்பு கிடைக்கும். சிறு யோசனை. அந்தக் காந்தத் தகட்டை எடுத்தேன். ஒரு நிமிடத்தில் விளக்குகள் அனைத்தும் அணைந்தன. அவள் அருகில் நிற்கிறாள். வாசனையும் மூச்சும். ``என்ன?’’ என்றாள் ராகமாக.

மீண்டும் அந்தத் தகட்டைச் செருகினேன். விளக்குகள் எரிந்தன. ஏசி மோட்டார் சத்தம். நான் மெள்ள பாத்ரூம் கதவைத் திறந்து பார்த்தேன். சரக்... திறந்துகொண்டது. அவளுக்கு ஆச்சர்யம் தாளவில்லை. வேகமாக உள்ளே நுழைந்து ஆடைகளை அணிந்தாள். சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி 3 ஆக 5 நிமிடம் இருந்தது.

``ஸோம் ஆர்குன்!’’

நன்றி சொல்கிறாள்.

வெளியே செல்ல நினைத்தவள், ``ஓ... நீ இன்னும் எதுவும் செய்யவில்லையே!’’ என நின்றாள்.

``பரவாயில்லை. உனக்கு நேரமாகிவிட்டது.’’

``வெரி ஸாரி... இந்தா உன் நண்பர் கொடுத்த பணம்.’’

50 டாலரில் 10 டாலர் மட்டும் எடுத்துக்கொண்டாள். ``இந்த `10 டாலரை என் பார் முதலாளிக்குக் கொடுக்க வேண்டும். அது முறை.’’

``பரவாயில்லை. 50 டாலரையும் வைத்துக்கொள்.’’

``எதற்கு?’’

``உன் செலவுக்கு.’’

``வேண்டாம்.’’

``பிரச்னையில்லை.’’

வாங்கிக்கொண்டாள். ``நாளைக்கும் இருப்பீர்களா?’’

``இல்லை. காலை 10 மணிக்குக் கிளம்பிவிடுவோம்.’’

சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள். இன்னும் ஒரு நிமிடத்தில் என்ன செய்துவிட முடியும்?

இறுகக் கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்தாள். அவள் கண்கள் நீர் துளிப்பதற்கு முன்பான சிவப்பில் மாறியிருந்தன. நன்றி, அன்பு, இயலாமை, மன்னிப்பு எல்லாம் கலந்திருந்த முகம்.

``என் பெயர் நவி. மீண்டும் எப்போது வருவீர்கள்?’’

``தெரியாது.’’

லிஃப்டுக்குள் பட்டனை அழுத்திவிட்டுக் காத்திருந்தாள். புன்னகைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தேன். லிஃப்ட் அவளைக் கவ்விய நேரத்தில், சிறிய இடைவெளியில் மலர்ச்சியுடன் ``ஐ லவ் யூ’’ என்றாள். நானும் சொல்லலாம் என நினைத்தபோது மூடிக்கொண்டது.

கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே வந்தேன். அவளுடைய வாட்ச் டெலிபோன் அருகே இருந்தது. அடடா... எங்கோ ஒரு டுக் டுக் கிளம்பும் சத்தம் கேட்டது. அவளும் அவள் தோழிகளும் அவர்களின் கிராமத்துக்குச் செல்லும் அந்த வாகனமாக இருக்கலாம். பால்கனி வழியாகப் பார்த்தேன். மீகாங் ஆறு, நாம் பென் நகரத்தின் வண்ண விளக்குகளில் ஜாலம் காட்டியது. சில்லென்ற காற்று. பெண்களால் ஆன நகரம். கடைகளில், ஹோட்டலில், படகில், பாரில்... எங்குமே பெண்கள். விவசாயம், டிரைவிங் என ஆண்களின் அடையாளங்கள் பெண்களுக்குப் பின்னால் பதுங்கியிருந்தன.

திடீரென்று போன் ஒலித்தது. மனைவி. `இந்தியாவில் இப்போது என்ன நேரம்?’

``என்னங்க... சாப்பிட்டீங்களா?’’

``பொழுது விடியப்போகுது...’’

``ஓ... அங்க என்ன டைம்?’’

``மூணு.’’

``இங்க ஒன்றரை. திடீர்னு ஒரு கெட்ட கனவு...’’

``ஒண்ணுமில்ல... தைரியமாத் தூங்கு. நாளைக்கு வந்துடுவேன்.’’

``எனக்கு என்ன வாங்கிட்டு வர்றீங்க?’’

குறிப்பாக அவளுக்கென்று எதுவும் வாங்கவில்லை. காலையில் வாங்குவதற்கும் நேரம் இருக்காது.

``வாட்ச்!’’ என்றேன் அவசரமாக.

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this  

 • Similar Content

  • By நவீனன்
   கடவுள் எழுதிய கவிதை!
      
   கடவுள் எழுதிய கவிதை!   ஜி.ஆர்.சுரேந்தர்நாத் அ வள் தன் செம்பொன் நிறப் பாதங்களை லேசாக உயர்த்தியபடி, நெற்றியில் விழுந்த தலைமுடியை இடக் கையால் ஒதுக்கிக்கொண்டு, உதடுகளைச்சுழித்து, கண்களைச் சுருக்கியபடி... தன் சிவந்த விரல்களால் வண்ணத்துப் பூச்சியை மெள்ள மெள்ளப்
   பிடிக்க முயன்றபோது, எனக்குத் தெரிந்துவிட்டது... அவள் கடவுள் எழுதிய கவிதை!
   ஈஸ்வரன் கோயில் வெளிப் பிராகார சுற்று மண்டபத்தில் அமர்ந்தபடி, அவளைப் பார்த்துக்கொண்டு இருந்தேன்.
   யாரிவள்? கோயில் சிற்பங்களில் உறைந்து கிடந்த தேவ கன்னிகை ஒருத்தி, வண்ணத்துப்பூச்சி பிடிக்க இறங்கி வந்துவிட்டாளா என்ன?
   எனது 24 வருட வாழ்க்கையில், இப்படி ஓர் அழகான பெண்ணைப் பார்த்ததில்லை. என்னை அறியாம லேயே எழுந்து, அவளை நோக்கிச் சென்றேன். தலைக்குக் குளித்து, காதோர முடிகளைப் பிரித்து, தண்ணி ஜடை போட்டிருந்தாள். கூந்தல் ஈரம், அவளுடைய முதுகுப்புற ஜாக்கெட்டை நனைத்திருந்தது
   ‘‘எனக்கு ஒரு வண்ணத்துப்பூச்சி பிடிச்சுத் தரீங்களா?’’ என்றேன்.
   ‘‘ஐயே...’’ என்று மலையாளப் பெண்கள் போல் சிணுங்கியபடி நிமிர்ந்தவளை அவ்வளவு நெருக் கத்தில் பார்த்ததும் எனக்கு மூச்சு முட்டியது.
   சற்று முன் மொட்டு வெடித்த பூவைப் போன்று பளிச்சென்ற முகம். அந்த முக அழகைவிட, என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது அவளுடைய கண்கள்தான். கண்கள் சிரிக்கும். அழும். ஒளிருமா என்ன? கண்ணுக்குள் கார்த்திகை தீபங் களை ஒளித்து வைத்தது போல ஒளிர்ந்துகொண்டு இருந்தன அந்தக் கண்கள்.
   வெள்ளை நிறத் தாவணியும், கறுப்பு நிறப் பாவாடையும் அணிந்துகொண்டு இருந்த அவளுக்கு அதிகபட்சம் 18 வயது இருக்கலாம். அவளுடைய அழகு ஏற்படுத்திய பிரமிப்பிலிருந்து விடுபடாமல், ‘‘பாவாடை, தாவணியோடு பட்டாம்பூச்சி பிடிக்கிற பெண்ணை இன்னிக்குதான் பார்க்கிறேன்’’ என்றேன்.
   ‘‘வண்ணத்துப்பூச்சின்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும்’’ என்றாள் அவள்.
   ‘‘பிடிச்சு என்ன செய்வீங்க?’’
   ‘‘சும்மா, கொஞ்ச நேரம் அதன் அழகை ரசிச்சிட்டு, அப்புறம் விட்டுடுவேன்.’’
   ‘‘நல்ல பழக்கம்!’’
   ‘‘நீங்க ஊருக்குப் புதுசா?’’
   ‘‘ஆமாம். போன வாரம்தான் வந்தோம். அப்பா போஸ்ட்மாஸ்டர். திடீர்னு இங்க டிரான்ஸ்ஃபராயிடுச்சு!’’
   என் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்துவிட்டு, ‘‘காலேஜ்ல படிக்கிறீங்களா?’’ என்றாள்.
   ‘‘இல்லை. படிச்சு முடிச்சுட்டேன். இங்கே சும்மா தனிமையில கதை புக் படிக்கலாம்னு வந்தேன்.’’
   ‘‘இது படிக்க அருமையான இடம். ஒரு ஈ, காக்கா கண்ணுல படாது.’’
   ‘‘இந்தக் கோயிலுக்கு ஜனங்களே வரமாட்டாங்களா?’’
   ‘‘பிரதோஷத்தன்னிக்கு சாயங்காலம் கொஞ்சம் கும்பல் இருக்கும். மத்த நாளெல்லாம் யாரும் வரமாட்டாங்க. கடவுளுக்கும், ஜனங்க வர்றதுக்கு அதிர்ஷ்டம் வேணும். திருநள்ளாறு, ஆலங்குடினு நவகிரக தலங்களுக்குதான் ஜனங்க கும்பல் கும்பலா போறாங்க.’’
   ‘‘ஆனா, அந்தக் கோயில்களைவிட, இது அழகான கோயில்!’’
   ‘‘ஆமாம்...’’ என்றபடி, நந்தி மண்டபத்தை நோக்கி நடந்தாள். நான் மௌனமாகப் பின் தொடர்ந்தேன்.
   நந்தி மண்டபப் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டே, ‘‘நான் வரேன்’’ என்று விடைபெற்றுக்கொண்டாள். மண்டபத்தின் மேலேறி, நந்திக்கு அருகில் சென்றவுடன், ‘‘உங்க பேரு என்ன?’’ என்றேன். ‘ஸ்வர்ண சித்ரா’’ என்று சத்தமாகக் கூறிக்கொண்டே, சட்டென்று கையை உயர்த்தி அந்த வண்ணத்துப்பூச்சியைப் பறக்கவிட்டாள். அப்போது அவளுடைய மேல்நோக்கிய கண்களில், ஒரு சிறிய வெளிச்சம் தெரிந்தது.
   முதன்முதலாக, என் மனதுக்குள் கவிதை போன்ற ஏதோ தோன்றியது.
   ‘பெண்ணே... நீ யார்? நிலாப்பெண், நீண்டநாள்
   கருத்தரித்துப் பிறந்தவளோ?’
   மறுவாரம் சனிக்கிழமை... ஈஸ்வரனை வணங்கிவிட்டுப் பிறகு படிக்கலாம் என்று சுற்று மண்டபத்துக்குச் செல்லாமல், கோயிலினுள் நுழைந்தேன்.
   இரண்டாவது வாசலைக் கடந்தவுடன், தட்சிணாமூர்த்தி சந்நிதி அருகில் ஸ்வர்ணசித்ராவைப் பார்த்தேன். மனதுக்குள் ஆயிரம் வண்ணத்துப்பூச்சிகள் சிறகடித்துப் பறந்தன.
   நீல நிறப் பட்டுப் பாவாடையும், பட்டுச் சட்டையும் அணிந்துகொண்டு இருந்தாள். அவள் கையில் வைத்திருந்த தாம்பாளத்தில், ஏராளமான நெய் விளக்குகள் எரிந்துகொண்டு இருந்தன. தாம்பாளத்திலிருந்து ஒரு விளக்கை எடுத்து தட்சிணாமூர்த்தி சந்நிதி முன்பு ஸ்வர்ணசித்ரா வைத்தபோது, எரிந்துகொண்டு இருந்த விளக்குகளின் வெளிச்சம் அவள் முகத்தில் பரவ... மேலும் அழகாகத் தோன்றினாள். மனசுக்குள் இன்னொரு கவிதை... ‘ஒளி ஒன்று, ஒளியை ஏற்றுகிறது!’.
   ‘‘ம்க்கும்...’’ என்று நான் தொண்டையைக் கனைக்க, ஸ்வர்ணசித்ரா நிமிர்ந்து பார்த்தாள். என்னை அடையாளம் கண்டு, புன்னகைத்தாள்.
   ‘‘கடுமையான வேண்டுதல் போல, தாம்பாளத்தில் ஏகப்பட்ட விளக்கு’’ என்றேன்.
   ‘‘ம்...’’
   ‘‘என்ன வேண்டுதல்? பாஸாகணும்னா?’’
   ‘‘இல்லை. படிப்பெல்லாம் முடிச்சு ரொம்ப நாளாச்சு. நான் ப்ளஸ் டூ ஃபெயில்.’’
   ‘‘வேறென்ன வேண்டுதல்?’’ என்று நான் கேட்டபோது, தூரத்தில் மூவர் சந்நிதியிலிருந்து, நாகஸ்வரம் ஒலிக்கும் ஓசை மெதுவாகக் கேட்க ஆரம்பித்தது.
   இன்னொரு விளக்கை எடுத்து விநாயகர் சந்நிதி முன் வைத்தபடி... ‘‘போன டிசம்பர் மாசம் வெள்ளம் வந்துச்சுல்ல?’’
   ‘‘ஆமாம்...’’
   ‘‘அப்ப, பக்கத்து ஊர்ல எல்லாம் கரை உடைஞ்சு, ஆத்து வெள்ளம் ஊருக்குள்ள பூந்துடுச்சு. இங்கேயும் வெள்ளம் ஜாஸ்தி ஆகிட்டே இருந்துச்சு. கரை உடைஞ்சுதுன்னா, அறுவடைக்கு இருக்கிற பயிரெல்லாம் பாழாப் போயிடும்னு ஊரே கலங்கிப் போயிடுச்சு. விறுவிறுன்னு கரைல மணல் மூட்டையை அடுக்கினாங்க. தண்ணி மட்டம் கூடிக்கிட்டே இருந்துது. மணல் மூட்டைங்களும் தீர்ந்து போச்சு. சரி... கடவுள் விட்ட வழினு ஓய்ஞ்சு உட்கார்ந்துட்டாங்க. அப்ப நான் வேண்டிகிட்டேன்.’’
   ‘‘என்னன்னு?’’
   ‘‘கடவுளே... கரை உடைஞ்சுடாம காப்பாத்து! ஒவ்வொரு சந்நிதியிலும், நெய் விளக்கேத்துறேன்னு வேண்டிக்கிட்டேன். மழை குறைஞ்சு, கரை உடையல! அதான், வேண்டுதலை நிறைவேத்தறேன்.’’
   ‘‘உங்கப்பாவுக்கு வயக்காடு இருக்கா?’’
   ‘‘இல்ல. அவர் ஸ்கூல் டீச்சர்!’’ என்ற ஸ்வர்ண சித்ராவை ஆச்சர்யத்துடன் பார்த்தேன்.
   ‘‘உங்க மாதிரி ஒண்ணு ரெண்டு பேர் இருக்கிறதாலதான், இந்தத் தேசத்துல இன்னும் மழை பெய்யுது’’ என்று நான் கூற, அவள் வெட்கத்துடன் தலையைக் குனிந்துகொண்டாள். சில விநாடிகள் கழித்து, தலையை நிமிர்த்தாமல் விழிகளை மட்டும் லேசாக உயர்த்தி, ‘‘தேங்க்ஸ்’’ என்றாள். அந்தக் கண்கள் என்னை மீண்டும் வீழ்த்தின.
   ‘‘சரி, நான் வரேன்’’ என்று நான் நகர, ‘‘ஒரு நிமிஷம்...’’ என்றாள் ஸ்வர்ணசித்ரா.
   ‘‘சொல்லுங்க’’ என்று நின்றேன்.
   ‘‘திடீர் திடீர்னு வந்து பேசிட்டுப் போறீங்க. உங்க பேரு?’’
   ‘‘பாபு.’’
   ‘‘தி.ஜானகிராமனோட ‘மோகமுள்’ கதாநாயகன் பேருகூட பாபுதான்!’’
   ‘‘என்னங்க... என்னை ஆச்சர்யப்படுத்திக்கிட்டே இருக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டீங் களா? அழகா, வண்ணத்துப்பூச்சி பிடிக்கிறீங்க, கரை உடைஞ்சுடக்கூடாதுன்னு வேண்டிக் கிறீங்க, தி.ஜானகிராமன் படிக்கிறீங்க...’’ என்று நான் சொல்ல, ஸ்வர்ணசித்ரா தன் உதடுகளை மெதுவாக விரித்து, அழகாகச் சிரித்தாள்.
   ‘‘ஒரு விஷயம் கவனிச்சீங்களா? ஒரே ஊர்ல இருக்கோம். ஊர்ல, வேற எங்கேயும் நாம சந்திக்கிறது இல்ல. மறுபடி மறுபடி கோயில்ல தான் சந்திக்கிறோம்’’ என்றாள்.
   ‘‘ஆமாம்’’ என்றேன். ‘கடவுள் எழுதிய கவிதையை, கடவுளின் சந்நிதானத்தில்தானே பார்க்க முடியும்!’ என்று மனதுக்குள் மீண்டும் ஒரு கவிதை!
   எங்களுடைய அடுத்தடுத்த சந்திப்புகளும் கோயிலிலேயே நிகழ்ந்தன. தெப்பக்குளத்தின் பாசி படர்ந்த படிக்கட்டுகளில் காலை நனைத்தபடி, ‘‘என்ன படிச்சிருக்கீங்க?’’ என்று கேட்டாள்.
   ‘‘எம்.டெக்.,’’
   ‘‘ஐயோ... பெரிய படிப்பா இருக்கே? வேலைக்கு எதுவும் போகலையா?’’
   ‘‘கேம்பஸ் இன்டர்வ்யூல ஒரு வேலை கிடைச்சிருக்கு. ஆர்டருக்காக வெய்ட் பண்ணிட்டிருக்கேன். வந்ததும் சென்னைல ஜாயின் பண்ணணும்!’’
   மூன்று மாத காலம் ஓடியதே தெரியவில்லை. ஒவ்வொரு சந்திப்புக்குப் பிறகும், ஸ்வர்ணசித்ராவின் மீதான எனது மதிப்பு அதிகரித்துக்கொண்டே வந்தது. மனதுக்குள் மெலிதாக ஒரு காதல் அரும்பி, விஸ்வரூபமெடுத்துக்கொண்டு இருந்தது. சொல்லிவிடவேண்டும் என்று மனசு துடித்தது.
   வேலைக்கான அப்பாயின்ட் மென்ட் ஆர்டர் கிடைத்து, ஒரு வாரத்துக்குள் சென்னையில் பணியில் சேர வேண்டும் என்கிற நிலையில், ஸ்வர்ணசித்ராவிடம் எனது காதலைச் சொல்லிவிடும் தவிப்போடு, சுற்று மண்டபத்தில் ஸ்வர்ணசித்ராவின் வருகைக்காக, ஆவலோடு காத்துக்கொண்டு இருந்தேன்.
   என் தேவதை வந்தாள். ‘‘உங்களுக்கு வேலைக்கான ஆர்டர் வந்துடுச்சுன்னு போஸ்ட்மேன் சொன்னாரே, அப்படியா?’’ என்றாள்.
   ‘‘ஆமாம்.’’
   ‘‘இனிமே பார்க்க முடியாதா?’’ என்றபடி தூணில் சாய்ந்துகொண்டாள்.
   ‘‘நீ நினைச்சா தினம் பார்த்துட்டிருக் கலாம்’’ என்றேன் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.
   ‘‘எப்படி?’’ என்றாள்.
   சட்டென்று வார்த்தைகள் வராமல் வெளியே பார்த்தேன். பிராகாரப் புல்வெளி, நந்தி மண்டபம், ராஜ கோபுரம் எல்லாம் அரையிருட்டில் அழகாகக் காட்சியளித்தன.
   ‘‘தன்னை மறந்தான்னு கதைகள்ல படிச்சிருக்கேன். அது எப்படின்னு முன்னாடியெல்லாம் தெரியாது. உன்கூடப் பழகிய பிறகுதான் அதை நான் உணர்ந்தேன். உன்கூட இருந்த ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு உலகமே மறந்துபோய், உன் கண்கள் மட்டும்தான் மனசுல இருக்கும். அந்தக் கண்களோட பார்வையிலேயே காலம் முழுசும் இருக்கணும்னு ஆசைப்படறேன். நேரடியாவே கேக்கறேன். என்னைக் கல்யாணம் பண்ணிக்க உனக்குச் சம்மதமா?’’ என்றேன்.
   சட்டென்று ஸ்வர்ணசித்ராவின் கண்களில் ஒரு வெளிச்சம் பரவ, வெட்கத்துடன் என் மார்பில் தன் தலையைச் சாய்த்தாள். அதே நேரம்...
   கோயில் வாசலிலிருந்து, ‘‘ஸ்வர்ணா’’ என்ற குரல் சத்தமாகக் கேட்டது. அடுத்த சில விநாடிகளில் தடதடவென்று எங்களை நெருங்கினார் ஸ்வர்ணாவின் அப்பா.
   ‘‘ஊர்ல தலை நிமிர்ந்து வாழ்ந்துட் டிருக்கேன். இப்படி என் மானத்தை வாங்கறியேடி!’’ என்றபடி அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட... நிலைகுலைந்து போனாள் ஸ்வர்ணா. என்னை முறைத்துப் பார்த்தபடி, வேகமாக தன் மகள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றார். அதன் பின், அவளைப் பார்க்க நான் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவிலை. ஒரு வார காலத்துக்குள் ஸ்வர்ணாவுக்கு வேறொரு இடத் தில் திருமணம் நிச்சயமானது. நான் காதல் தோல்வியில் துவண்டு... தாடி வைத்துக்கொண்டு...
   ஸாரி ஃப்ரெண்ட்ஸ்... இப்படியெல்லாம் எதுவுமே நடக்கவில்லை. எங்களைப் பார்த்த ஸ்வர்ணாவின் அப்பா, பதற்றப்படாமல் நான் யார் என்று விசாரித்து, என் குடும்பப் பின்னணி பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டு, ஒரு சுபயோக சுப முகூர்த்தத்தில் எங்கள் திருமணத்தை அவரே முன்னின்று நடத்தி வைத்தார். எல்லாக் காதல்களுமே தோற்றுப் போவதில்லை. ஒரு சில ஆசீர்வதிக் கப்படவும் செய்கின்றன!
   கடவுள் எழுதிய கவிதைகள் கஷ்டப்படுவதில்லை.
   https://www.vikatan.com
  • By நவீனன்
   கடை - சிறுகதை
     ம.காமுத்துரை, ஓவியங்கள்: ஸ்யாம்  
   நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு...
   பையன் கடையைத் திறந்து வைத்திருந்தான். வாசலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு சேரை எடுத்துப்போட்டு, அன்றைய தினசரியை விரித்துப் படிக்கத் தொடங்கினார் கடைக்காரர். செய்திகள், மனதில் பதியவில்லை; வட்டெழுத்துக்கள் போலவும் பிராமி எழுத்துக்கள் போலவும் கண்களில் பூச்சி காட்டின.
   பையன் சாமி படத்துக்குப் பத்தி பொருத்துவதற்காக வத்திப்பெட்டியுடன் தயாரானான். கடைக்காரர் எப்போது கடைக்கு வந்தாலும் பத்தி பொருத்தி, சாமி படத்துக்குக் காட்டிவிட்டுத்தான் உட்காருவார். இன்று ஏனோ மனநிலை கெட்டிருந்தது. நான்கு நாட்களில் தீபாவளி. கடைக்கு வரும் சமையல்காரர் களுக்கு போனஸ் தந்தாக வேண்டும். ஆளுக்குத் தக்கபடி தரவேண்டும். அதற் காக ஓர் உத்தியை, ஒவ்வொரு வருஷ மும் கையாண்டு வந்தார். அவர்கள் கடைக்கு வந்து கேட்ப தற்குள், போனஸ் பணத்தை வீட்டுப் பெண்களிடம் சேர்ப்பித்துவிடுவார். அது நல்ல பலன் தந்தது. யாராவது ஒன்றிரண்டு பேர் மட்டுமே கடைக்கு வந்து வாங்கிக்கொண்டு போவார்கள்.
   அன்று இரண்டு பேருக்கு போன் செய்து வரச் சொல்லியிருந்தார். பேப்பரைப் பார்த்துக்கொண்டிருந்தவருக்கு போன் வந்தது. தாளை மடித்து ஓரமாக வைத்துவிட்டு போனை கையில் எடுத்தார். '50 பேருக்கு அசைவம் சமைக்கணுமாம். நல்ல ஆளா பார்த்து அனுப்புச்சு வையி... சேர் டேபிளும் வேணும். நம்ம கடையிலையே எடுத்துக்கிடலாம்’ - பேசியவர் கொக்கி போட்டார். 'குடிக்காத ஆளா இருக்கணும். சபரி மஹால்ல ஒரு பொம்பள மாஸ்டரு வேலை பாத்துச்சே..?’
   'முனியம்மாவா..? வரச் சொல்றேன்’. தொடர்ந்து முனியம்மாவுக்கு போன் செய்தார். 10 நிமிடங்களில் முனியம்மா கடைக்கு வந்தார்.
   ''பெரிய வேலை ஒண்ணு வந்துருக்குமா...'' -  கடைக்காரர் சொன்னார். இடையில் கடைப் பையன் தந்த கவரைப் பிரித்து எண்ணிக்கூடப் பார்க்கவில்லை. அதைக் காட்டிலும் முக்கியமானது, வேலைக்கான தகவல். எனவே, கவரை வலது கையில் வாங்கியவுடன் அப்படியே கைகளுக்குள் மடக்கி, சுபாவமாக ஜாக்கெட்டுக்குள் செருகிக்கொண்டாள்.
   ''பேசிவிடுங்கண்ணே பாத்துரலாம்'' என்றாள்.
   சமையல் வேலை என்பது இப்போது எல்லாம் யாராவது ஒரு நபரை முன்வைத்தே வருகிறது. காரணம், சமையல்காரர்கள்தான்; அவர்களது பழக்கவழக்கங்கள்தான். வேலைக்குப் பேசி அட்வான்ஸ் வாங்கும்போது ஆரம்பித்து வேலைத்தளத்தில் நுழையும்போதும், வேலையின் போதும், வேலை முடித்து சம்பளத்தை வாங்கிய பிறகும் ஒரே ஊத்துதான். அன்றோடு சாராயக் கடையை மூடிவிடுவதுபோல நினைத்து, வீடு எது... ரோடு எதுவெனத் தெரியாமல் குடித்துக் கிடக்கும் வேலைக்காரர்களை எப்படி நம்புவார்கள்?
   'உன்னை நம்பித்தேன் பார்ட்டிகிட்ட சொல்லிருக்கேன்'- கல்லாவில் உட்கார்ந்திருந்தவர் அப்படியே நெட்டி முறித்துச் சோம்பல் கழித்தார். அவளது எண்ணம்போலவே பேசினார். உயர்த்திய கைகளுக்கு மேல் காற்றாடி தட்டியது.

   கடை முழுக்கப் பெரியப் பெரிய அலுமினிய தேக்சாக்கள் ஒன்றுக்குள் ஒன்றாக செட் போடப்பட்டு, ஒன்றின் மேல் ஒன்றாக ஆள் உயரத்துக்கு அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. தவிர, பிளாஸ்டிக் சேர்கள் ஒருபுறம், டைனிங் டேபிள்கள், ஏணி வைத்து ஏறும் உயரத்துக்கு மர செல்ஃப்கள் அமைக்கப்பட்டு அதனுள் எவர்சில்வர் வாளிகள், குண்டா, பேஷன்கள், கேத்தல்... என அத்தனை பொருட்களும் ஏற்றப்பட்டிருந்தன.
   மாராப்புத் துணியைச் சரிசெய்துவிட்டு, முந்தானை நுனியை இழுத்து இடுப்போடு நிறுத்திப் பிடித்தபடி கடைக்காரரின் மேசை விளிம்பை ஒட்டிவந்து நின்றுகொண்டாள். 'ணேய்... எந்தக் கவலையும் இல்லாம சொல்லிவிடுண்ணே. இதுவரைக்கும் நீங்க பேசிவிட்ட எந்த வேலையிலயாச்சும் கொற கண்டுருக்கீகளா? வேலண்டு பேசியாச்சுனா, எனக்குக் கண்ணுறக்கம் வராதுணே.'
   கடையில் ஏழெட்டு சமையல் மாஸ்டர்கள் இருக்கிறார்கள். முனியம்மாவின் புருஷனும் ஒரு மாஸ்டர்தான். அவனுக்கு கிட்டத்தட்ட 20 வருடங்கள் சர்வீஸ். முனியம்மாவைக் கல்யாணம் கட்டும்போதே அவன் மாஸ்டர்; நல்ல வேலைக்காரனும்கூட. ஆனால், எத்தனை சம்பாதித்தாலும் பிராந்தி பாட்டில்களாகத்தான் கொண்டுவந்து அடுக்குவான். 10, 15 நாட்களுக்கு ஒருதரம் பெரிய கட்டைப்பை நிரம்பக் காலி பாட்டில்கள் சேர்ந்துவிடும். ஒரு மாசமானால் உரச் சாக்கில் அடுக்கி, ஆட்டோ பிடித்துதான் பழைய இரும்புக் கடைக்குப் போகவேண்டிவரும்.
   ஒரு கட்டத்தில், இனியும் சுதாரிக்காவிட்டால் தானும் பிள்ளைகளும் நடுத்தெருவில் நிற்கவேண்டிவரும் என்பதைப் புரிந்துகொண்டு, புருஷனோடு தானும் வேலைக்குப் போகத் தொடங்கினாள் முனியம்மா. ஒரு வருஷத்தில் வேலையின் நுணுக்கங்கள் முனியம்மாவின் கைக்கு வந்தன. தனியாகக் 'குதுப்பி’ பிடித்துக் கிண்டத் தகுதியானாள். வேலை தருபவர்களுக்குக் குடிகாரனோடு பேரம் நடத்துவதைவிட முனியம்மாவோடு பேசுவது எளிதாக இருந்தது. முனியம்மாவும் ஆள் தெரிந்து பேசப் பழகிக் கொண்டாள்.
   'அதனாலதேன் உன் வீட்டுக்காரன்கிட்ட சொல்லாம... உன்கிட்ட சொல்றேன்.''
   'அதனால ஒண்ணும் பிரச்னை இல்லண்ணே.யார் பேசினாலும் ரெண்டு பேருந்தான வேலைக்குப் போவோம்.'
   'பார்ரா... புருஷனை விட்டுக்குடுக்க மாட்டேங்குற!'
   அந்த நேரம் கைலியை வரிந்து கட்டியபடி கடைக்கு சாரதி மாஸ்டர் வந்தார்.
   'என்னம்மா முனி... நீயும் உம் புருஷனுமாத்தேன், ஊர்ல இருக்க வேலையப் பூரா பங்கு போட்டுக்கப் பாக்குறீக போல' - எகத்தாளமாகப் பேசியபடி ஒரு சேரை எடுத்துப்போட்டு உட்கார்ந்தார்.
   'ஆமா... ஊர்ல பாதிய வாங்கிப் போட்ருக்கோம். நீ வந்து ஒரு பங்கு வாங்கிக்க.'
   'எங்குட்டோ நல்லாருந்தா சரிதாம்மா. ஒரு சமையல்காரன் நல்லாப் பொழக்கிறான்னா... நமக்குப் பெருமைதானே. என்னாண்ணே நான் சொல்றது?'
   'யே... புருஷனும் பொண்டாட்டி யும் சேந்து பாடுபடுறாக... சம்பாதிக்கிறாக. அது புடிக்கலையாப்பா உனக்கு?'
   'ம்... நல்லா கேளுங்கண்ணே. ஊருக்குள்ள இதே மாதிரிதான் கரிப்பாக் கரிச்சுக் கொட்றாய்ங்க.'
   'நா எதுக்குக் கரிச்சுக் கொட்றேன். நீ மட்டும் அடுத்தவக வாய்ல விழாம, அடுத்தவக வேலையைப் புடுங்காம இருந்தாச் சரி' - வில்லங்கமான வார்த் தையைவிட்டார் சாரதி. அவ்வளவு தான்... அதுவரை அமைதியாக இருந்த முனியம்மா, தீயை மிதித்த குரங்குபோல விர்ரென எழுந்தாள்.
   'ஆர் வேலையப்பா நாங்க புடுங்குனோம்? எங்கே ஒண்ணு சொல்லு. உனக்குத் தாலி கட்டி உள்ளங்கையில சோறாக்கிப் போடுறேன்.'
   'என்னா... அடிச்சுப்போடுற மாதிரி வர? நீ இல்லைனு சொல்லு..?' - கேட்டுவிட்டு விரல்களை விரித்து வைத்துக்கொண்டு பட்டியலிடுவதுபோல ஒவ்வொன்றாகச் சொன்னான். கடைக்காரருக்கு ரொம்பக் கஷ்டமாகப்போனது. வாடகைப் பாத்திரக் கடையில் இது ஒரு பெரும் துன்பம். மற்ற வியாபாரக் கடைகளைப் போல, சரக்கைக் கொடுத்தோமா விற்று காசாக்கினோமா என்ற நிம்மதி இருக்காது. ஒருசில நபர்களை நம்பிய பிழைப்பு.
   அதனால் அவர்களை எவ்வளவு தாங்கவேண்டுமோ அவ்வளவையும் செய்தாக வேண்டும். எத்தனை பேர் வந்தாலும் அத்தனை பேரிடமும் அக்கறை உள்ளவர் மாதிரி பேச வேண்டும். ஒருவரை வைத்து, ஒருவரைத் தூக்கிப் பேசவோ, தாக்கிப் பேசவோ செய்வது என்பது, தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வதுபோல.
   'என்னப்பா காலையில வந்து இப்பிடிப் போட்டு வாங்கிக்கிட்டிருக்க? சித்த பேச்சைக் கொற சாரதி!'
   'உன்னைய வேலைக்குக் கூப்பிட்ட எடத்துல நான் போய் நின்னு வேலையப் பாத்தேன்னா, செருப்பைக் கழட்டி அடி. அதை விட்டுட்டு மானாங்கன்னியாப் பேசுனா, நல்லா இருக்காது ஆமா.'
   'முனிம்மா... நா ஒராள் பேசறேன்ல. மெடிக்கல்காரர் வீட்ல வருஷம் பூரா வேலை பாக்குறது யாரு? நீயா... இல்ல உம் புருசன் பாத்தானா? அவுக வீட்ல நிச்சயதார்தத்தில் இருந்து, காதுகுத்து, சடங்கு அத்தனைக்கும் நான்தேன் போவேன். இன்னிக்கி நீ போய்ப் பேசிருக்க.'
   'அத அவககிட்ட போய் கேளுப்பா, 'என்னைய ஏன் கூப்புடலை?’னு... அதவிட்டு என்கிட்ட வந்து ஒரண்டை இழுக்குற... இது சரியில்ல சாரதி!'
   'அப்புறம்...' என்று அடுத்து ஒன்றைச் சொல்ல வந்தவரைக் கைப்பிடித்து நிறுத்திய கடைக்காரர். 'இப்ப என்னா... காலையில சண்டை போடணும்னே கடைக்கு வந்தியா?' என்று மறித்தார்.
   'நா எதுக்குண்ணே சண்டை போடுறேன்? உங்க கடைப் பையன்தான் கூப்பிட்டான்; வந்தேன். நமக்கு என்னண்ணே, வேலை
   செஞ்சாக் காசு... இல்லாட்டி நிம்மதியா வீட்ல கஞ்சியைக் குடிச்சுட்டு உங்க கடையில உக்காந்து பொழுதைப் போக்கிட்டுப் போகப்போறேன்.'
   கடைப் பையன் வந்து சாரதிக்கு ஒரு கவரைக் கொடுத்தான்.
   'போனசா...' எதிர்பார்த்தவன்போல இரு கைகளையும் ஆவலுடன் நீட்டி வாங்கினான். உள்ளே கைவிட்டு எவ்வளவு என எண்ணிப் பார்க்க மனசு துடித்தாலும், ஏதோ ஒரு கௌரவம் தடுத்தது. அமுக்கிப் பார்த்துக்கொண்டான்; அனுமானிக்க முடியவில்லை.
   'சரி கௌம்பு...' - கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக சாரதியை எழுப்பினார் கடைக்காரர்.
   'இப்பக்கூட கடைக்காரர் கூப்பிடப் போய்தேன் வந்தேன்... கேளு. இந்தா, ஒரு வேலை சொல்றாரு... செய்யப்போறோம். அதை விட்டுட்டு எங்கடா புது வீடு கட்றாங்க... எப்படா கல்யாணப் பந்தல் போட்றாங்கனு, ஊர் எல்லாம் உளவு பாத்துட்டு வேலை கேட்டுத் திரியல!'' - உணர்ச்சிப்பெருக்கில் முனியம்மா, கடைக்காரரை மாட்டிவிட்டாள். கடைக்காரருக்கு, முகம் பேய் அறைந்ததுபோல மாறிவிட்டது.
   சாரதி எரித்துவிடுபவன்போல அவரைப் பார்த்தான். 'தெரியும்ணே... நீங்கதானா அது? இப்பிடிச் செய்யாதீங்கண்ணே. ஒரு கண்ணுல வெண்ணெய் இன்னொரு கண்ணுல சுண்ணாம்பும் தடவாதீங்கண்ணே. கடைக்கு வர்ற எல்லாரையும் ஒண்ணுபோல பாருங்க. கடைக்கு வர்ற கஸ்டமரைப் பூரா மாத்திவிட்றாதீங்க.'
   அதன் பிறகுதான் முனியம்மா, 'சே... அவசரப்பட்டுட்டோமே!’ எனச் சட்டென இறுகிக்கொண்டாள்.
   'இங்க பாரு சாரதி, நா என்னத்துக்கு ஒருத்தர் வேலையை இன்னொருத்தருக்கு மாத்திவிடப் போறேன்? எல்லாருந்தாப்பா வேணும்.'
   'இல்லண்ணே... உங்களைப் பத்தி நிறையச் சொன்னாங்க. நா நம்பல. ஆனா, இப்படி ஒரு கடைக்காரரு மோசடி செய்யக் கூடாது'- கவரை அண்ட்ராயருக்குள் செருகிக்கொண்டான்.
   'நா எதுக்கு மோசடி செய்யப்போறேன்? வீணா வம்பை வளக்காத.'
   'நானா வம்பு கட்றேன்... இந்தா, கூப்பிட்டுவிட்டுருக்கீங்கள்ல? அந்தப் புள்ளையே சொல்லுதே.'
   'யே... பார்ட்டிதான்யா முனியம்மாவைப் பேசிவிடுங்கனு கேட்டாங்க, அதை வெச்சுத்தேன் கூப்பிட்டேன். யாரைக் கூப்பிடுறாங்களோ அவகளைத்தானப்பா பேசிவிட முடியும்.'
   'இல்லண்ணே... கொஞ்ச நாளாவே நானும் பாத்துட்டேன். முந்தி மாதிரி இல்ல நீங்க. ஆனா, அடுத்தவன் வயித்துல அடிக்காதீங்க. இனி அவங்கள வெச்சே கடையை நடத்துங்க. தீவாளிக்குப் பெறகு நா உங்க கடைக்கு வர மாட்டேன்.'
   இதுதான் அவர்களிடம் உள்ள பிரச்னை. சட்டென அத்தனை நல்லதுகளையும் விநாடியில் உதறிவிடுவார்கள். உதறுவதற்குச் சந்தர்ப்பம் எதுவெனத் தேடிக்கொண்டிருப்பது போலவும், அவர்களது நடத்தை, மனம் பதறச்செய்யும்.
   'சாரதி... லூஸு மாதிரி பேசக் கூடாது!' - இந்த நேரம் எத்தனை மோசமாகத் திட்டினாலும் கவலைப்பட மாட்டார்கள். 'சாரதியைக் கூப்பிட்டுப் பேசிவிடுங்கனு சொல்ற எடத்துல வேற யாரவாச்சும் கோத்துவிட முடியுமா?, இல்லை அப்பிடி என்னைக்காச்சும் நான் சொல்லிருக்கேனா?'
   'ணே... நீங்க கடைவெச்ச நாள்லேர்ந்து...' என ஆரம்பிக்கும்போதே சாரதிக்குக் கண்களில் நீர் பொங்கியது. ''எத்தனையோ கடையில அட்வான்ஸா 1,000 2,000 ரூவா தர்றதா ஆசைகாட்டிக் கூப்பிட்டாங்க. உங்களுக்கும் தெரியும். ஆனா, சொந்த அண்ணன் மாதிரிதானே நா உன்கிட்ட நடந்துக்கிட்டேன். இப்படி பொம்பளைப் பக்கம் சாஞ்சுட்டீங்களே?'
   கடைக்காரர்கள் எல்லோரும் சுயநலக்காரர்கள் என்ற எண்ணம் சாரதிக்கு அந்த நேரத்தில் உருவா கியது. வேலையாள்தான் பற்றோடும் பாசத்தோடும் இருக்கிறார்கள். இவர்கள் வேஷக்காரர்கள். கடைக்காரரைப் பார்க்கவே வெறுப் பாக இருந்தது. முகத்தைச் சுளித்துப் பேசினான். 'கடைசீல ஒரு பொம்பளகிட்ட என்னைத் தோக்கடிச்சிட்டீகளே...' - மறுபடி மறுபடி சொன்னான்.
   'இந்தா பாரு சாரதி... எதையும் உன்னளவுல பேசிக்க. சும்மா இருக்க மாட்டாம பொம்பள கிம்பளனு பேச்சு வந்துச்சு, கீசரி மேசரி ஆகிப்போகும்' என்று தனது ஆட்டத்தைத் தொடங்கினாள் முனியம்மா. இந்தச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தவன்போல ஒரு தயாரிப்பு இருந்தது அவனிடம். கடைக்காரர் பதறினார். 'என்னா முனியம்மா... நீயும் கூறுகெட்டத்தனமாப் பேசுற? நீயும் கௌம்பு. போ... போ.'
   'இல்லண்ணே... இன்னிக்கு இதுக்கு ஒரு புள்ளி வைக்கணும்ணே. ஊர்ல எல்லாப் பயலும் ஒரு மாதிரியாத்தான் ஊதிக்கிட்டுத் திரியுறாய்ங்க. பொம்பளைனா அம்புட்டு எளக்காரமா? வம்பாடுபட்டு, தீயில வெந்துதான்யா நாங்களும் காசை வாங்குறோம். எந்த ஒரு மகராசனும் சும்மா உக்காரவெச்சுக் குடுத்திர மாட்டாங்க. வேணும்னா நீயும் பேசி வேலையைப் பாரு!'
   'என்னம்மா... வரிஞ்சுகட்டிக்கிட்டு வர்ற.
   நீ என்ன அம்புட்டுப் பெரிய ரவுடியா?' உண்மையிலேயே முனியம்மா அடிக்கக்கூடப் பயப்படாத பொம்பளைதான் என்பது சாரதிக்குத் தெரியும். அதனாலேயே தள்ளி நின்றுதான் பேசினான். முனியம்மாவின் புருஷன் கைகால் வீங்கிவரும்போது எல்லாம், அவளது பலம் என்ன என்பதை எல்லோரும் கண்டிருக்கிறார்கள்.
   'சாரதீ...' - கடைக்காரர் சற்று உரத்துக் குரல் எழுப்ப வேண்டி வந்தது. தனது கடையில் அடிதடி, தள்ளுமுள்ளு நடந்தால், ரொம்பவும் அசிங்கப்பட வேண்டும். சாரதியின் புஜத்தைப் பிடித்து இழுத்தார். 'தயவுசெஞ்சு போயிட்டு அப்பறமா வா...'
   'கைய விடுங்கண்ணே...' - விசும்பினான். 'நான் போகத்தேன் போறேன். இம்புட்டு வெசமான ஆளா இருக்கீங்க. இனிமே இந்தப் பக்கம் எட்டிப் பாக்க மாட்டேன். பாக்கி காசு இருந்தா கணக்குச் சொல்லுங்க. கடைப் பையன்கிட்ட குடுத்துவிடுறேன்!'' - போனஸ் கவரை எடுத்துச் சட்டை சேப்பில் செருகியபடி நடந்தான்.
   ''கைல வெச்சிருக்க காசைக் குடுத்து கணக்கை வெட்டிட்டுப் போகவேண்டியதானே... இவருக்குக் கடைப்பையன்கிட்ட சொல்லி விடணுமாக்கும். பெரிய ஜில்லா தாசில்தாரு...' என்று சத்தமாகப் பேசிய முனியம்மா, 'விடுங்கண்ணே எங்க போயிருவாக? அலைஞ்சு, தணிஞ்சு, தானா அடுப்படிக்கித்தேன் வரும் பாருங்க...'
   'ஸ்சோ...'-தலையைப் பிடித்துக்கொண்டு கல்லாவில் உட்கார்ந்தார் கடைக்காரர்.
   'இன்னும் யாருக்குப்பா போனஸ் தரவேண்டியிருக்கு? போனைப் போட்டு வரச் சொல்லு...' என்றவர், 'வேணாம்... அவுகவக வீடு தெரியுமா? தெரிஞ்சா நேர்ல போய் குடுத்துட்டு வந்துரு... ச்ச...' என்று நொந்துகொண்டார்.
   'யேண்ணே... வலிய கொண்டுக்குப் போயி குடுக்குறீக? வந்து வாங்கிட்டுப் போகட்டும்ணே.'
   'ஆமாண்ணே. நேர்ல போனா இம்புட்டுத்தானானு எங்கூட சண்டைக்கு வருவாங்க' - கடைப் பையன் மருகினான்.
   'அதான...'
   'அய்யா...' - கடை வாசலில் காக்கி டவுசர் சட்டையும், தலையில் உருமாத் துண்டுமாக துப்புரவு ஆட்கள் நோட்டோடு நின்றிருந்தார்கள்.
   'போனஸு...'
   'சாக்கடை அள்றவகளுக்குத்தான? நேத்தே வாங்கிட்டுப் போய்ட்டாகளே!' - கடைப் பையன் தனது கைச் சிட்டையை எடுத்துச் சரிபார்த்தான்.
   'அது சாக்கடை அள்றவுக. நாங்க வண்டி தள்ளிட்டுப் போற செக்சன். நம்ம கடை முன்னால ஒரு குப்பை நிக்கவிட மாட்டம்ங்க.'
   'இனி தூக்கித் தட்டுறதுக்கு ஏதும் ஆள் இருக்காப்பா...' முனியம்மா கேட்டாள்.
   அதற்குள் கடைக்காரர் அவர்களுக்குப் பணம் கொடுத்து அனுப்பினார்.
   'நோட்ல எழுதீருங்கய்யா...' நோட்டை நீட்டினர்.
   'வேணா வேணா... பரவால்ல.'
   'இல்லங்கய்யா... எங்களுக்குக் கணக்கு வேணும்ல.'
   'நீங்களா எழுதிக்கங்கப்பா. எழுதத் தெரியாதா?' - முனியம்மா சவுண்டாகப் பேச, அவர்களுள் ஓர் ஆள் நோட்டை விரித்து எழுதிக்கொண்டார்.
   'வர்றோங்கையா...' வணக்கம் சொல்லி நகர்ந்தனர்.
   தீபாவளி வந்துவிட்டால், எதையும் யோசிக்காமல் ஒரு தொகையை ஒதுக்கி வைத்துவிட வேண்டும். அது பெட்டிக்கடையாக இருந்தாலும் சரி, பலசரக்குக் கடையாக இருந்தாலும் சரி. ரோட்டு மேலே கடை வைத்துச் செய்கிற தொழிலுக்கு ஏற்றாற்போல் ஆட்களைச் சந்திக்க முடியும். இந்த நேரத்தில்தான் நாம் யார் யாரை நம்பி இருக்கிறோம், நம்மைச் சார்ந்தவர்கள் யார் யார் என்பது துல்லியமாகத் தெரியும். அதிலும் இதுபோல குறிப்பிட்ட சிலரை நம்பிய வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை ஓர் அளவேணும் திருப்திப்படுத்தாவிட்டால், தீபாவளி கழிந்ததும் உடனடியாகக் கடை மாறுகிற சம்பவம் நடைபெறும். ஒன்றிரண்டு பேர்தான் நட்புக்கும் பாசத்துக்கும் அல்லது இயலாமையால் ஒரு கடையையே தொடர்பு வைத்துக்கொள்வது, சரக்கு எடுப்பது என்பதைச் செய்வார்கள்.
   'சரிங்கண்ணே... சங்கடப்படாதீக. சுத்தி முத்தி எங்க போனாலும் எல்லாப் பசங்களும் நம்ம கடைக்குத்தாண்ணே வருவாங்க' - தான் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாமோ என்ற எண்ணம் எழும்பிய நேரத்தில், கடைக்காரருக்கு ஆறுதலாகப் பேசினாள் முனியம்மா.
   ''பாப்பம்...'' - கடைக்காரரின் ஒற்றை வார்த்தைப் பதிவால் விசனப்பட்ட முனியம்மா, சில நிமிடப் பொழுதுகளின் மௌனக் கழியலில் 'நா கௌம்புறேண்ணே. போன் பண்ணுங்க...'
   'ரைட்டு... நான் சொன்ன வீடு தெரியும்ல? மதிய சாப்பாட்டுக்குப் பெறகு போய்ப் பேசு.முடிஞ்சா அட்வான்ஸைப் புடிச்சுரு' என்றபோது முனியம்மாவின் புருஷன் வந்தான்.
   'வணக்கம்ணே...' என்று சலாம் வைத்தான்.
   'வாய்யா... நீயும் வந்துட்டியா?' - இன்னோர் அத்தியாயம் தொடங்குவதுபோல உணர்ந்தார்.
   'நீ... என்னா?' - முனியம்மா புருஷனைப் புருவம் உயர்த்தி விசாரித்தாள்.
   'ம்... கார்த்தியலுக்கு ஒரு வேலை இருக்குனாக.பாத்துட்டுப் போலாம்னு கறிக்கடையில உக்காந்திருந்தேன்.'
   அவன் பொய் சொல்வது முனியம்மாவுக்குப் புரிந்தது. வெளியில் சுற்றிக்கொண்டிருந்தவன் கடையில் போனஸ் தருவதைக் கேள்விப்பட்டு வந்திருக்கிறான். ஜாக்கெட்டில் இருந்த பணத்தைப் பத்திரப்படுத்திக்கொண்டாள்.
   'வேலை பேசிட்டு வந்துட்டியா?'
   'ஆள் வரலை... சாயங்காலமாப் போவணும்.'
   'தண்ணியடிக்க ஆள் சேராமச் சுத்திப்புட்டு வர்ற. என்னாண்டு கேட்டா, வேலை பேசப் போனேன்ற. உம் மொகரக்கட்டைக்கிக்கூட வேலையைப் பேசிவிட்ருவாய்ங்க...'
   'யே முனிம்மா... சத்தியமாடி' என்று முனியம்மாள் தலையில் கைவைத்துச் சொன்னான்.
   'யே... கையை எடு. பொய்ச் சத்தியம் பண்ணி என்னையைப் பொலி குடுத்திராத.'
   'சரி... என்னா சாரதிப் பயலைத் திண்டுமுண்டாப் பேசிவிட்டுட்டியாம்ல..?'
   'உனக்குச் சாராயம் வாங்கிக் குடுத்தானாக்கும்?' - கேள்விக்குக் கேள்வி பதிலாக வந்தது.
   'சேச்சே... காலையில எந்திருச்சு டீகூட குடிக்கலை. பாரு...' வாயை ஊதிக் காண்பித்தான்.
   முகத்தைத் திருப்பியவள், 'சீ... ஊத்த வாய அங்குட்டுக் கொண்டுபோய் ஊது. காரணம் இல்லாம நீ சப்போர்ட் பண்ண மாட்டியே?' என்றாள்.
   'போனஸ் குடுங்கண்ணே...' - முனியம்மாவை விட்டுவிட்டு அவன் கடைக்காரரிடம் வந்து நின்றான். அவன் பின்னாலேயே வந்த முனியம்மா, அவன் தோளைப் பிடித்து இழுத்தாள். ''அங்க எங்க போற... குடுத்துட்டாரு.'
   'ரெண்டு பேருக்குமா?'
   'இல்ல... ங்கொய்யா, சின்னப்பச்சி, பெரியப்பச்சி... எல்லாருக்கும் தனித்தனியாத்தேன்.'
   'யே லூஸு... நீ, நானு ரெண்டு மாஸ்டருல... ரெண்டு கவர் தர வேணாமா?'
   'யே... தீவாளி அன்னிக்கு வந்து நீ செலவுக்கு வாங்கிக்கப்பா...' - கடைக்காரர் சடவாகப் பேசினார்.
   'வேணாண்ணே... அதெல்லாம் தராதீக. டெய்லி ஊத்துதுக. அன்னிக்கி ஊத்தாட்டி நட்டமாப்போகுதாக்கும்?'
   'எவ்வளவு குடுத்தாரு..?' - ஜாக்கெட்டுக்குள் இருக்கும் பணத்தைக் கைப்பற்ற ஆவல் கொண்டு அவளை மொய்த்தான்.
   அவள், மாராப்பை நன்கு இழுத்துவிட்டு இடுப்புச் செருகலை இறுக்கிக்கொண்டாள். 'போனஸுங்கிறது கடைக்காரர் பிரியப்பட்டுத் தர்றது. நாம என்னா அவர்கிட்ட சம்பளத்துக்கா வேலை பாக்குறோம்? எடுக்கிற பாத்திரத்துக்குத்தா கமிஷன் குடுத்தர்றார்ல? ஒருத்தரப்போல ரூவாயை சேப்புல வெச்சுக்கிட்டு கெஞ்ச விடுறாரா? கவர்ல போனஸு போட்டுக் கூப்பிட்டுக் குடுத்துர்றாரு.'
   'இருந்தாலும் நீங்க பொம்பளைகிட்ட குடுக்குறது தப்புண்ணே.'
   'அப்ப நீயும் கடை மாத்தப்போறியா?' - அவர்கள் பேச்சில் தலையிடாமல் இருந்த கடைக்காரர், தன் முறை வந்ததும் வாய் திறந்தார்.
   'ச்சே... அதெல்லாம் இல்லண்ணே.'
   'சும்மா சொல்லு. இப்பத்தேன் சாரதி வந்து காசையும் வாங்கிக்கிட்டு கடை மாத்தப் போறேன்ட்டுப் போயிருக்கான்.'
   'அவன் கெடக்காங்க டுபாக்கூரு... அதெல்லா சட்ட பண்ணாதீங்கண்ணே. குடிச்சா ஒரு பேச்சு, குடிக்காட்டி ஒரு பேச்சு' - முனியம்மா, சாரதியின் மீது இருந்த வன்மம் தீராது பேசினாள்.
   'இந்தா முனி... இதுதே உன் தப்பு. ஆம்பளகிட்ட அடக்கமாப் பேசவே மாட்டேன்ற.''
   'என்னா... ஆம்பளைனா அக்குள்ல ரெண்டு, தொப்புள்ல ரெண்டு கொம்பா மொளச்சிருக்கு? கடையாச்சேனு அவனைச் சும்மா விட்டேன்.'
   முனியம்மாவின் வீறாப்பு, அவனது புருஷனுக்குச் சலிப்பைத் தந்தது. எல்லா இடத்திலும் தன்னை மீறுகிறாள். 'இருந்தாலும் அவனை என்கிட்ட விட்ருக்கணும். நீயா பேசியிருக்கக் கூடாது. என்னாங்கண்ணே நான் சொல்றது?' - தன் கருத்துக்கு வலுசேர்க்க கடைக்காரருக்கு அழைப்பு விடுத்தான்.
   அவர் வழக்கம்போல மௌனித்தார். இவர்களுக்குள் ஏதோ ஒரு யுத்தம், இதே இடத்தில் நடக்கப்போகும் அறிகுறி அவருக்குத் தென்பட்டது. உறுதியாகும்பட்சத்தில் பேசாமல் கடையை அடைத்துவிட்டுப் போய்விட வேண்டியதுதான்.
   'சொல்லிட்டானாக்கும்? அதெல்லாம்... இந்த முனிம்மாகிட்ட செல்லாது. சாட்சிக்கு வந்தா, உனக்கும் ரெண்டு செருப்படி விழும்.'
   திடீர் என முனியம்மாவின் கன்னத்தில் அறைந்தான் அவள் புருஷன். 'நானும் பாக்குறேன் ஒரேடியாத்தே வாய் பேசுறவ. செருப்பைக்கொண்டு அடிப்பியோ..?'
   ஒரு கணம் கன்னத்தைப் பிடித்தபடி நின்ற முனியம்மா... வாசலில் கிடந்த செருப்பை எடுக்கக் குனிந்தாள்.
   நிலைமையின் தன்மை உணர்ந்த கடைக்காரர், கடைப்பையனின் துணையோடு இருவரையும் பிரித்து, ஆளுக்கு ஒரு திக்கில் அனுப்பினார்.
   ஒரு நிமிடத்தில் திரும்பிவந்த முனியம்மா கடைக்காரரைப் பார்த்துக் கும்பிட்டாள். 'மன்னிச்சுக்கங்கண்ணே... கடையில வெச்சு இப்படி நடந்துருச்சு' என்றாள்.
   ''சரி சரி'' எனத் தலையாட்டினார் கடைக்காரர்.
   'சாயங்காலம் பேசிட்டு வந்து சொல்றேண்ணே...' எனக் கிளம்பினாள்.
   'நம்ம கடையிலதான் பாத்திரம் எடுக்கணும். அதுக்கும் சேத்துப் பேசிரு!'
   சொல்லும்போதே கடைக்காரருக்குக் குரல் உடைந்தது. கடைப்பையன் தண்ணீர் மொண்டு அவருக்குத் தந்தான்!

   https://www.vikatan.com
  • By நவீனன்
   சிவப்பு மச்சம் - சிறுகதை
    
   “என்னைய இப்படி ஆறு மாசமா இழுத்தடிக்கிறீங்களே... உங்களுக்கே அநியாயமா தெரியலையா? நீங்க நல்லாயிருக்க மாட்டீங்க. உங்க புள்ளகுட்டி விளங்காமப்போயிரும். என் புருஷன் செத்த இடம் புல் முளைச்சுப்போயிருச்சு. இன்னும் என்னைய அலையவிடுறீங்களே... வயிறெரிஞ்சு சொல்றேன், என் சாபம் உங்களைச் சும்மா விடாது’’ என ராக்கி கத்திக்கொண்டிருந்தாள். 

   வருவாய்த் துறை அலுவலகத்துக்குள் யாரோ அதைக் கேட்டுச் சிரித்தார்கள்.

   ``சாபமெல்லாம் வெளியே போய்க் குடு. இங்க நின்னு கத்தக் கூடாது” என ஒருவர் அவளை வெளியேற்றினார்.

   ராக்கி, படிகளில் உரத்து சத்தமிட்டபடியேதான் இறங்கிப் போனாள்.

   விவசாயம் பொய்த்துப்போய் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட ஆறு விவசாயிகளில் அவளின் புருஷன் சுப்பையாவும் ஒருவன். வயலில் பூச்சிமருந்தைக் குடித்துத் தற்கொலை செய்துகொண்டான். வாயில் நுரை பொங்க அவன் செத்துக் கிடந்ததைக்கூட எவரும் கவனிக்க வேயில்லை. சூரியன் அவன் முதுகில் ஊர்ந்துகொண்டிருந்தது.

   ஆடு மேய்த்துவிட்டுத் திரும்பும் பாண்டியம்மாள், அதைப் பார்த்து சத்தமிட்டாள். வீட்டிலிருந்து ராக்கி கூப்பாடு போட்டபடியே வயற்காட்டை நோக்கி ஓடினாள்.

   என்னதான் கஷ்டம் வந்தாலும் விவசாயி தற்கொலை செய்துகொள்வானா என்ன... எத்தனையோ முறை மழை பெய்யாமல் அவனை வானம் ஏமாற்றியிருக்கிறது. விளைந்த காலத்தில் நெல்லுக்கு விலையில்லாமல் போயிருக்கிறது. கடனுக்காக, கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மாடு, வண்டி, வீட்டுப்பொருள்களை ஜப்தி செய்து கொண்டு போயிருக்கிறார்கள். ஒருமுறை விவசாயிகள் போராட்டத்தில் போலீஸிடம் லத்தி அடிகூட வாங்கியிருக்கிறான். அப்போதெல்லாம் சாக வேண்டும் என்ற நினைப்புகூட வந்ததில்லை. ஆனால், கடந்த ஐந்து வருடத்தில் நிலம் முற்றிலும் பொய்த்து விட்டது. விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைக்கவில்லை. வாங்கிய கடனும் கழுத்தை நெரிக்கச்செய்தது. `இனி மண்ணை நம்பிப் பயனில்லை’ என்று சுப்பையா புலம்பிக்கொண்டே யிருந்தான். சில நேரம் இருட்டில் உட்கார்ந்தபடியே மண்ணோடு பேசிக்கொண்டிருப்பான்.

   அவனைப்போன்ற பல விவசாயிகள் நிலத்தை விற்றுவிட்டு டவுனில் கூலி வேலைக்குப் போய்விட்டார்கள். அதில் ஒருவன் ஹோட்டலில் பாத்திரம் கழுவுவதாகக் கேள்விப்பட்டபோது சுப்பையாவுக்கு மனம் கனத்தது. அந்தச் சம்சாரி வயலில் விளைந்த நெல், எத்தனை பேர் பசியாற்றியிருக்கும்! ஆனால் இன்றைக்கு, அவன் பசிக்கு ஹோட்டலில் எச்சில் பாத்திரம் கழுவும் நிலை வந்திருக்கிறது.

   தான் ஒருபோதும் அப்படிப் போய் விடக் கூடாது என்பதில் சுப்பையா உறுதியாக இருந்தான்.

   ஊரில் இருந்த விளைநிலம் யாவும் கண்முன்னே பறிபோய்க் கொண்டேயிருந்தது. ஒவ்வொரு நாளும் சம்சாரிகள் நிலத்தை விட்டு வெளியேறிக் கொண்டேயிருந்தார்கள். விவசாயம் இல்லாமல்போனதால் பறவைகளும் நிலம் தேடி வருவதில்லை. பூச்சிகளின் சத்தமும் மறைந்துவிட்டது. மண்புழுவைப் பார்த்து மாதக்கணக்கில் ஆகிவிட்டது.

   வயலில் நெல் முற்றிய காலத்தில் எங்கிருந்தோ கொக்குகள் கூட்டமாக வந்திறங்கும். அவற்றை நிலத்துக்கு வரும் விருந்தாளிகளைப்போலத்தான் சுப்பையா நடத்துவான். ஒன்றுக்கொன்று சண்டையிட்டபடி கொக்குகள் வயல்வெளியில் பறந்து அலைவதைக் காணும்போது சந்தோஷமாக இருக்கும். இப்போது ஒரு கொக்கைக்கூடக் காண முடியவில்லை.

   வயல் நடுவே நிறுத்திவைத்திருந்த வைக்கோல் பொம்மைகூட வெளிறிப்போய், பானை உடைந்து தலை இல்லாமல் நிற்கிறது. அந்த வைக்கோல் பொம்மை நிலைமைதான் தற்போது அவனுக்கும். உலகம், விவசாயியை வைக்கோல் பொம்மை போலத்தான் நினைக்கிறது.

   ஒருகாலத்தில் நான்கு ஜோடி மாடுகள் வைத்திருந்தான். இன்றைக்கு தொழுவத்தில் ஒரு மாடுகூடக் கிடையாது. வீட்டுத் தேவைக்கே கடையில்தான் பசும்பால் வாங்கினார்கள். முந்தைய காலங்களில் உப்பும் மண்ணெண்ணெயும் தவிர, வேறு ஒரு பொருளும் அவன் கடையில் வாங்கியதில்லை. எல்லாம் அவன் நிலத்தில் விளைந்து வந்தவைதான். அவர்களோடு ஆடு, மாடு, கோழி, வான்கோழி, நாய், முயல், பூனை என எத்தனை ஜீவராசிகள் உடன் வாழ்ந்தன. செங்கொண்டையைச் சிலுப்பிக்கொண்டு அலையும் சேவலும்கூட இப்போது காணவில்லை. ஏன் காலம் இப்படி இரக்கமற்றுப்போய்விட்டது?  

   சுப்பையா வீட்டில் வேளாண் கருவிகள் நிறைய இருந்தன. சில வேளை நான்கு கலப்பைகளைப் பூட்டுவார்கள். சாலும் துருத்திப்பையும், மண்வெட்டியும் கடப்பாரையும், மண் அள்ளும் கூடைகளும், சாணம் மெழுகிய கடகப்பெட்டிகளும், வாளி கயிறுகளும், தானியக்குலுக்கைகளும் இருந்தன.

   மாடுகளுக்கு ஆட்டு உரலில் பருத்திக்கொட்டை ஆட்டிவைப்பார்கள். அதற்காக பெரிய கல் உரல் இருந்தது. அந்தக் குழவியைப் பிடித்து ஆட்டுவது எளிதல்ல. இன்றைக்குக் கல் உரலில் உதிர்ந்த வேப்பிலைகளும் காகிதக் குப்பைகளுமாகக் கை தொட முடியாதபடி இருக்கிறது. உழுகருவிகள் துருவேறிக் கிடக்கின்றன.

   சுப்பையாவுக்கு வயது ஐம்பதைக் கடந்திருந்தது. இத்தனை வருடத்தில் ஒருமுறைகூட அவன் தனக்கெனப் பத்து ரூபாய் செலவழித்துக்கொண்டது கிடையாது. பசித்த பொழுதுகளில் கையில் காசு இருந்தால்கூட பிரியாணி வாங்கிச் சாப்பிடத் தோணியதேயில்லை. அவனுக்கு நண்பர்களும் இல்லை. வெளி ஆள்களுடன் பேசிப் பழகியது மில்லை. தன் கஷ்டங்களைக்கூட வீட்டில் சொல்லிக்கொள்ள மாட்டான். அதனால்தான் சாக வேண்டும் என முடிவு எடுத்தபோது, அதைப் பற்றி அவன் யோசிக்கவேயில்லை.

   சுப்பையா செத்துப்போன மறுநாளில், அரசு அதிகாரிகள் பலரும் வீடு தேடி வந்திருந்தார்கள். டிவி-யில்கூட அவனது தற்கொலை பற்றிச் சொன்னதாக ராக்கி கேள்விப்பட்டாள். அரசு அதிகாரிகள் அவளுக்கு நிவாரணப் பணம் கிடைக்க இருப்பதாகச் சொல்லி, ஒரு விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கிப் போனார்கள். அதன் பிறகு பஞ்சாயத்து அதிகாரி அவளை அழைத்து நிறைய காகிதங்களில் கையெழுத்து வாங்கினார். பத்திரிகையாளர்கள், அவளையும் அவளது வீட்டையும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

   இரண்டு வாரத்துக்குப் பிறகு அவள் முதன் முறையாக கலெக்டர் ஆபீஸுக்குப் போனாள். அவர்கள் கேட்ட சான்றிதழ்கள், விவரங்கள் எதுவும் அவளிடம் இல்லை. அவளை அலுவலகம் அலுவலகமாக அலைய விட்டார்கள். ராக்கி, சில நேரம் அலுவலகப் படிகளில் ஏறி இறங்க முடியாமல் மூச்சு வாங்க உட்கார்ந்துகொள்வாள். அடிவயிறு கவ்விப் பிடிக்கும். மூத்திரம் பெய்ய வேண்டும் என்றால்கூட எங்கே போவது எனத் தெரியாமல் தடுமாறிப்போவாள்.

   எந்த அலுவலகத்திலும் ஓர் அலுவலர்கூட அவளுக்கு ஒரு வாய் தண்ணீர் கொடுக்கவில்லை. பசியோடும் ஏமாற்றத்தோடும் அவள் கையில் காகிதங்களை வைத்தபடி அலைந்துகொண்டே இருந்தாள். அவளைப்போலவே அரசு உதவிக்காகக் காத்திருக்கும் பெண்களின் முகத்தைக் காணும்போது அவளுக்கு வருத்தமாக இருக்கும். 

   எதற்காக இப்படி அலைய விடுகிறார்கள்? கைக்குழந்தையை வைத்துக்கொண்டு ஒரு பெண் ஏன் இப்படி வெயிலில் நிற்கிறாள்? உட்கார ஒரு பெஞ்சு போட்டால் குறைந்தாபோய் விடுவார்கள்!

   `நாளைக்கு பணம் கைக்கு வந்துவிடும். கைநாட்டு வைத்து வாங்கிக்கொள்ளலாம்!’ என அவளை நம்பவைத்து, ஆறு மாதங்களுக்கும் மேலாக அலைய விட்டுக்கொண்டிருந்தார்கள். அலுவலர் யாருக்கும் அவள் லஞ்சம் தரவில்லை என்பதே காரணம்.

   ஊரிலிருந்து கலெக்டர் ஆபீஸுக்கு அவள் வர வேண்டும் என்றால், முக்கு ரோடு வரை நடந்து வந்து பஸ் ஏற வேண்டும். டவுன்பஸ்ஸில் தாங்க முடியாத கூட்டம். பெண் என்றாலும் ஒருவரும் எழுந்து இடம் தர மாட்டார்கள்.

   பேருந்துநிலையத்தை வேறு மாற்றி, ஊருக்கு வெளியே புது பஸ் ஸ்டாண்டுக்குக் கொண்டு போய்விட்டார்கள். அங்கிருந்து கலெக்டர் ஆபீஸுக்கு ஆட்டோவில் போக வேண்டும் என்றால், நூறு ரூபாய் கேட்டார்கள். அதற்கு நடந்தே போய்விடலாம் என அவள் வெயிலோடு நடந்துதான் போய் வருவாள்.

   கலெக்டர் ஆபீஸையொட்டிய ஹோட்டல்களில் அவர்கள் வைத்ததுதான் விலை. மதியச் சாப்பாடு 50 ரூபாய். ஆகவே, அவள் சோறு சாப்பிடாமல் டீயைக் குடித்துவிட்டு காத்துக் கிடப்பாள். ஜீப்பில் அதிகாரி களுக்குப் பெரிய பெரிய கேரியரில் சாப்பாடு கொண்டுவருவதை வெறித்துப் பார்த்துக்கொண்டே யிருப்பாள்.

   `நாம எல்லாம் எதற்கு உயிர் வாழ்கிறோம்?!’ என ஆதங்கமாக இருக்கும்.

   கலெக்டர் ஆபீஸ் இருந்த இடம்கூட ஒருகாலத்தில் வயல் வெளிதான். அதைக் கையகப் படுத்தித்தான் அலுவலகம் கட்டியிருந்தார்கள். இன்றைக்கு அதற்குள் செடி கொடிகள் ஒன்றும் கிடையாது. பேருக்கு நான்கு வேப்பமரங்கள் நின்றன. அவையும் புழுதியேறி இருந்தன.

   கலெக்டர் ஆபீஸுக்குள்ளேயும் நல்ல தண்ணீர் கிடையாது. குடிதண்ணீர் விலைக்குத்தான் வாங்கியாக வேண்டும். இப்படி காலம் கெட்டுச் சீரழிந்து போனதால்தான் அவள் புருஷன் தற்கொலை செய்துகொண்டான். சம்சாரிகள் சாவதைப் பற்றி யார் கவலைப்படப்போகிறார்கள்?

   அரசாங்கம் கொடுக்கிற பணமே வேண்டாம் என, ஒருகட்டத்தில் ராக்கி அலைவதை நிறுத்திக்கொண்டுவிட்டாள். ஆனால், கடிதம்மேல் கடிதம் போட்டு அவளைத் திரும்ப வர வழைத்தார்கள். ஆறு மாதத்துக்குப் பிறகு, அவள் பொறுமை இழந்துபோய் இன்றைக்குத்தான் சண்டையிட்டாள். அவளது கோபத்தை எத்தனை நாள் அடக்கிவைத்திருக்க முடியும்!

   `கிறுக்கச்சிபோலக் கத்திக்கொண்டிருக்கிறாள்’ எனப் பலரும் நினைத்திருக்கக்கூடும்.

   மனம் சாந்தியடையும் வரை அவள் கலெக்டர் ஆபீஸின் வாசலில் நின்று சத்தமிட்டாள். காவலுக்கு நின்றிருந்த போலீஸ்காரர், அவளை சைகையால் துரத்திவிட்டார். ஆத்திரம் தணிந்த பிறகு, அவள் மெள்ள நடக்கத் தொடங்கினாள்.

   `இனி செத்தாலும் இந்த ஆபீஸ் பக்கம் வரக் கூடாது. இவர்கள் தரவிருக்கும் காசைக் கையால் தொடக் கூடாது’ என்ற பிடிவாதத்தோடு அவள் வெயிலில் நடந்து போய்க்கொண்டிருந்தாள்.

   அந்த வருவாய்த்துறை அலுவலகத்தில் 22 பேர் வேலை செய்தார்கள். அவர்களுக்கு இரு உயர் அதிகாரிகள்.

   வருவாய்த்துறை உயர் அதிகாரியான சுப்ரமணியம், பெரிய வாழை இலையில் கோழிக் கறியைச் சாப்பிட்டபடியே தனது பியூனிடம் கேட்டார், ``அந்தப் பொம்பள போயிட்டாளா... என்ன பேச்சுப் பேச்சுறா… இவளையெல்லாம் ஆபீஸ் உள்ளே ஏன் விடுறீங்க?’’
    
   ``கிராமத்துப் பொம்பள சார். அப்படித்தான் பேசுவாங்க’’ என்றார் பியூன் ரெங்கசாமி.

   ``கவர்ன்மென்ட் காசை கேட்டவுடனே தூக்கிக் குடுத்துர முடியுமா? நாளைக்கு ஏதாவது ஒண்ணுன்னா, நம்ம தாலியில்ல அறுப்பாங்க’’ என்றபடியே அவர் கோழிக்காலை ருசித்துச் சாப்பிடத் தொடங்கினார்.

   இதுபோலவே அலுவலகத்தின் பிற ஊழியர்களும் ராக்கியைப் பற்றிக் குறை சொல்லிப் பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர், அவளைக் கேலிசெய்து சிரித்தார்கள். அன்றிரவுக்குள் அவளை எல்லோரும் மறந்திருந்தார்கள்.

   தன் வீட்டில் காலையில் குளித்துவிட்டு வந்து திருநீறு பூசும்போது சுப்ரமணியம் கண்ணாடியில் பார்த்தார்.

   நெற்றியில் சிறியதாக ஒரு புள்ளி இருந்தது. `என்ன புள்ளி இது?’ எனக் கையால் அழுத்தித் துடைத்தார். அந்தப் புள்ளி சற்றே பெரியதானது போல இருந்தது.

   `ஏதாவது அலர்ஜியாகிவிட்டதோ!’ என்றபடியே மனைவியை அழைத்தார். அவள் நெற்றியில் இருந்த புள்ளியைப் பார்த்தபடி ``ஏதோ பூச்சி கடிச்ச மாதிரி இருக்கு. சந்தனம் வைங்க’’ என்றாள். சுப்ரமணியம் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ள வில்லை. அன்றைக்கு கலெக்டர் மீட் இருப்பதால் அவசரமாக ஜீப்பில் கிளம்பிச் சென்றார்.

   கலெக்டரின் உதவியாளர் அவரிடம் கேட்டார் ``சார், நெற்றியில் என்ன சிவப்பா இருக்கு. இடிச்சுக்கிட்டீங்களா?’’

   ``அப்படியா... தெரியலையே’’ என வேகமாகக் கழிவறைக்குப் போய் கண்ணாடியில் பார்த்தார். அந்தப் புள்ளி சிவப்பு மச்சம்போல நன்றாகத் தெரிந்தது. கையால் அழுத்தித் தேய்த்தார். வலிக்கவில்லை. அழியவும் இல்லை. ஆனால், அவருக்கு அந்த மச்சம் மனதை உறுத்தியது.

   `என்ன ஆயிற்று... என்ன புள்ளி இது?’

   கூட்டம் ஆரம்பித்து கலெக்டர் பேசிக் கொண்டிருந்தபோது அவரது கவனம் முழுவதும் சிவப்பு மச்சத்திலேயே இருந்தது. `ஒருவேளை ஏதாவது விஷப்பூச்சி கடித்திருக்குமோ. டாக்டரிடம் காட்டிவிடலாமா’ என யோசிக்க யோசிக்க, மனதில் பயம் பீறிடத் தொடங்கியது. பாதிக் கூட்டத்திலேயே வெளியேறி, தனது அலுவலகத்துக்கு வந்தார்.

   அங்கே அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அலுவலகத்தில் பணியாற்றிய 23 பேரின் நெற்றியிலும் அதே சிவப்பு மச்சம் தோன்றியிருந்தது.

   ஒருவருக்கும் அது எப்படி வந்தது எனத் தெரியவில்லை.

   செக்‌ஷன் க்ளார்க்காக உள்ள வசுமதி சொன்னாள், ``நெற்றியை உறுத்திக்கிட்டே இருக்கு சார். எப்படி வந்துச்சுன்னு தெரியலை. கொசுக்கடியா இருக்குமா?’’

   இன்னோர் ஊழியர் சொன்னார், ``வேப்பிலையை அரைச்சுப் போட்டா, போயிடும். இப்படி என் வொய்ஃபுக்கு வந்திருக்கு.’’

   அலுவலக ஊழியர்கள் ஒன்றுகூடி வேப்பிலையைப் பறித்து வந்து அரைத்து அதைப் பூசிப்பார்த்தார்கள். மாலை அலுவலகம் முடியும் வரை வேப்பிலை பூசியும் சிவப்பு மச்சம் மறையவில்லை.

   மாலை அலுவலகம் விட்டதும், ராஜகோபாலன் டாக்டரைக் காண்பதற்காகச் சென்றார் சுப்ரமணியம். டாக்டர் அந்த மச்சத்தைப் பரிசோதனை செய்துவிட்டு, ``வெறும் அலர்ஜி. ரெண்டு நாள்ல சரியாகிடும்’’ என்று மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார்

   டாக்டர் சொன்னதுபோல இரண்டு நாளில் சரியாகவில்லை. மாறாக, அந்த மச்சம் நாளுக்குநாள் பெரியதாகியது. ஊசி குத்துவது போல வலிப்பதாகவும் தோன்றியது. சுப்ரமணியம் பயந்துபோனார். வீட்டில் அவரின் மனைவியும் மகளும் வேண்டுதல் போட்டு, முருகன் கோயிலுக்குப் போய் வந்தார்கள்.

   அலுவலகத்தில் இருந்த 24 பேருக்கும் சிவப்பு மச்சம் நாலணா அளவில் தெளிவாகக் காட்சி யளித்தது. ஆளுக்கு ஒரு பரிகாரம் செய்தார்கள். சிலர் விடுப்பு எடுத்துக்கொண்டு பரிகார பூஜை செய்தார்கள். பத்து நாளில் அவர்கள் நெற்றியில் மச்சம் எட்டணா அளவுக்குப் பெரியதாகியது.

   இப்படி வளர்ந்துகொண்டே போனால் என்னவாகும்... ஏன் இப்படியானது... எப்படி இதை அகற்றுவது... எதுவும் புரியவில்லை.

   அப்போது தயங்கித் தயங்கி சுப்ரமணியத்திடம் பியூன் ரங்கசாமி சொன்னான், ``சார்... இது அந்தக் கிராமத்துப் பொம்பள குடுத்த சாபம்னு தோணுது. சம்சாரி சாபம் பலிச்சிடும்னு சொல்வாங்க.’’
    
   ``என்னய்யா சொல்றே...’’ எனப் பதைப்பதைப்பாகக் கேட்டார் சுப்ரமணியம்.

   ``நாம அந்தப் பொம்பளைய அலைக்கழிச்சோம்ல, அதான் இப்படி அனுபவிக்கிறோம். என் மனசுல அப்படித்தான் தோணுது.’’

   ``இப்போ என்ன பண்றது?’’

   ``அந்தப் பொம்பளைக்குச் சேரவேண்டியதைச் செஞ்சிகுடுத்துட்டா, சரியாப்போயிடும் சார்.’’

   ``நிஜமாவா சொல்றே!’’

   ``ஆமா சார். ஆபீஸ்ல இருக்கிற அத்தனை பேருக்கும் சிவப்பு மச்சம் வருதுன்னா... வேற காரணமேயில்லை!’’

   சுப்ரமணியம் உடனடியாக அவளுக்குச் சேரவேண்டிய பணத்துக்கான வேலையை முடிக்க உத்தரவிட்டார். பியூன் சொன்னது நிச்சயம் நிஜமாக இருக்கும் என அலுவலகமே நம்பியது. அன்று மாலைக்குள் டிராஃப்ட் ரெடி பண்ணிக்கொண்டு, `நேரா போய் அவளிடம் கொடுத்துவிடலாம்’ என ஜீப்பில் சுப்ரமணியம் இரண்டு அலுவலர்களுடன் புறப்பட்டார்.

   ராக்கியின் வீடு தேடிப் போனபோது அது பூட்டியிருந்தது. ``அன்றைக்கு கலெக்டர் ஆபீஸுக்குப் போனவள் திரும்பி வரவேயில்லை’’ என்றார்கள்.

   எங்கே போய் அவளைத் தேடுவது. எப்படி டிராஃப்ட்டை ஒப்படைப்பது எனப் புரியாமல், அவர்கள் பலரிடமும் விசாரித்தார்கள். ஒருவருக்கும், ராக்கி எங்கே போனாள் என்ற விவரம் தெரியவில்லை.

   `ஒரு கிராமத்துப் பெண்ணின் சாபம் இப்படி உடலில் மச்சத்தை உருவாக்கிவிடுமா... அவளைக் கண்டுபிடிக்க முடியாமல்போய்விட்டால் என்ன ஆவது...’ சுப்ரமணியம் மிகவும் பயந்துபோனார்.

   இரவு, சுப்ரமணியம் தன் மனைவியிடம், நடந்த விஷயத்தைச் சொன்னார். அவள் அந்தச் சாபத்தை நூறு சதவிகிதம் நம்பினாள். அத்துடன் அவரைக் கோபித்துக்கொண்டபடி ``பத்துப் பேருக்கு அன்னதானம் பண்ணுவோம். கிராமத்துக் கோயிலுக்கு மணி வாங்கிக் கொடுப்போம்’’ என ஆலோசனைகள் சொல்ல ஆரம்பித்தாள். கூடவே ``நல்லவேளை, உங்க பாவம் எங்களைப் பிடிக்கலை!’’ என மன சமாதானமும் சொல்லிக்கொண்டாள்.

   சுப்ரமணியம்போலவே அலுவலகத்தின் மற்ற ஊழியர்களும் ஆளுக்கு ஒருவிதமாகப் பரிகாரம் செய்ய முற்பட்டார்கள். இன்னொரு பக்கம் ராக்கியைத் தேடியபடியும் இருந்தார்கள்.

   சாபம் பற்றிக் கேள்விப்பட்ட பிற அலுவலக ஊழியர்கள், தங்களை அறியாமல் பயம்கொள்ள ஆரம்பித்தார்கள். எவரையும் தேவையின்றிக் காக்கவைக்கக் கூடாது என முடிவுசெய்து கொண்டார்கள். எவரிடமும் காசு வாங்க பயந்தார்கள்.

   ராக்கியின் சாபம் பற்றி, ஊரெல்லாம் பேசிக் கொண்டார்கள்.

   ``இது நிஜமா... இந்தக் காலத்துல சாபமெல்லாம் பலிக்குமா?’’ என ஆளுக்கு ஆள் விவாதங்களும் நடந்தன. கலெக்டரும் ``இதெல்லாம் மூடநம்பிக்கை’’ என மறுத்துப் பேசினார். ஆனால், வீட்டில் கலெக்டரின் மனைவி ``அந்தப் பெண்ணின் சாபம் உண்மையானது. நிச்சயம் இப்படி நடக்கக்கூடும். நீங்கள் கவனமாக இருங்கள்’’ என ஆலோசனை சொன்னாள்.

   சுப்ரமணியம் பகலிரவாகத் தன் நெற்றியில் இருந்த சிவப்பு மச்சத்தைப் பார்த்துப் புலம்பியபடியே இருந்தார். இரவில் அந்த மச்சம் நெற்றியின் வலதுபக்கம் நோக்கி ஊர்வதுபோல அவருக்குத் தோன்றியது. திடீரென அந்த மச்சம் ஒரு வண்டுபோல அவர் நடுநெற்றியைத் துளைத்து உள்ளே புகுந்து ரத்தம் குபுகுபுவெனக் கொட்டியது. தூக்கத்தில் அலறி எழுந்து கத்தினார் சுப்ரமணியம்.

   அந்த மச்சம், அவர்கள் செய்த தவற்றின் அடையாளம்போல மெள்ள உருமாறியது.

   அதன் பிந்தைய நாளில் அந்த 24 பேர்களும் ஒன்றுகூடி தங்கள் தவற்றை மன்னிக்கப் பிரார்த்தனை செய்தார்கள். ராக்கியின் கிராமத்துக்கே சென்று அன்னதானம் கொடுத்தார்கள். எதுவும் சிவப்பு மச்சத்தை மறையச் செய்யவில்லை.

   சுப்ரமணியம் தீவிர மனக்கவலை, பயம் காரணமாக விடுப்பில் போனார். அவர் தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை எடுத்துவருவதாகச் சொன்னார்கள். பிற ஊழியர்களும் கோயில் கோயிலாகப் பரிகாரம் தேடி அலைந்தார்கள்.

   ராக்கி என்ன ஆனாள் என அவர்களால் கண்டறியவே முடியவில்லை.

   பியூன் ரங்கசாமி மட்டும் நெற்றியில் உள்ள பெரிய சிவப்பு மச்சத்தைத் தடவியபடியே `ராக்கியின் எச்சில் பட்டால் அந்த மச்சம் மறைந்துபோய்விடும்’ என நம்பிக்கொண்டிருந்தான்.

   இந்த நிகழ்வுக்குப் பிறகு, கலெக்டர் ஆபீஸின் வெளியே சிறிய கொட்டகை போடப்பட்டுப் பார்வையாளர்கள் அமர இருக்கைகள் அமைக்கப் பட்டன. குடிநீர்ப் பானையும் வைக்கப்பட்டது.

   ராக்கியின் சாபம்தான் சிவப்பு மச்சத்தை உருவாக்கியதா என எவராலும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், அடிமனதிலிருந்து பீறிடும் சொல் நிச்சயம் பலிக்கும் என்றே பலரும் நம்பினார்கள். அந்தச் சிவப்பு மச்சம் என்பது, சொல் சுட்ட வடுதான் என உறுதியாகச் சொன்னார்கள்.

   அதன் பிறகான நாள்களில் ராக்கியைப் பற்றிப் பல நூறு விசித்திரக் கதைகள் பரவ ஆரம்பித்தன. கலெக்டர் ஆபீஸில் வேலைசெய்யும் ஒவ்வொருவரும், தங்கள் முகத்தில் இதுபோல சிவப்பு மச்சம் ஏதாவது வந்துவிட்டதா என பயத்தோடு பார்த்துக்கொள்ளத் தொடங்கினார்கள்.

   பிறகு, சிவப்பு மச்சம் முடிவற்ற ஒரு கதையாகப் பலரது நாவிலும் உலவத் தொடங்கியது.
   https://www.vikatan.com
  • By நவீனன்
   பாதை - சிறுகதை
       கவிதைக்காரன் இளங்கோ - ஓவியங்கள்: ஸ்யாம்  

   திங்கட்கிழமை காலை நேரப் பரபரப்பைத் தவிர்க்க திட்டமெல்லாம் போட்டு ஒவ்வொரு வாரமும் தோற்றுதான்போகிறாள் ரம்யா. ஞாயிற்றுக்கிழமைகளின் அசமந்தக் காலையிலேயே அதை முடிவுசெய்வாள். ஆனாலும் முடிவதில்லை. ரயில்வே டிக்கெட் கவுன்ட்டரில் டிரெயின் நீளத்துக்கு ஒரு க்யூ நிற்கிறது. சனிக்கிழமையே மாதாந்திர பாஸை ரெனியூவல் செய்திருக்க வேண்டும். விட்டாச்சு.

   தாம்பரம் போகும் டிரெயின், மூன்றாவது நடைமேடையிலிருந்து கிளம்பக் காத்திருக்கிறது. ஏற்கெனவே லேடீஸ் ஸ்பெஷலைத் தவற விட்டுவிட்டாள். இது சூப்பர் ஃபாஸ்ட். `சட்டென மாம்பலம் ஸ்டேஷன் போய்விடலாம்’ என, மனக்கணக்கு வேகமாக ஓடியது. ஆனால், வரிசை மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

   இவளுடைய ரெனியூவல் பாஸுக்கு எக்ஸ்ட்ரா ஒன்றரை நிமிடம் ஆயிற்று. விருட்டென கவுன்ட்ட ரிலிருந்து திரும்பினாள். பக்கத்து வரிசையை ஊடுரு வினாள். வேகவேகமாக டிரெயினை நோக்கி விரைந்தாள். அறிவிப்பு ஒலிக்கத் தொடங்கியது.
   தொலைவில் இருந்த மஞ்சள் சிக்னல் இன்னும் பச்சைக்கு மாறவில்லை. அதற்குள் லேடீஸ் கம்பார்ட்மென்ட்டைப் பிடித்துவிடலாமா என யோசிக்கும்போதே பச்சை விழுந்தது. இன்னும் இரண்டு பெட்டிகள்தான். `ஓடலாமா... வேண்டாமா? ஊஹும்.’ இன்னைக்குப் பார்த்து சேலை கட்டிக்கொண்டு வந்திருக்கிறாள். அப்போது, அவளுக்கு முன்னால் தத்தக்கா பித்தக்காவென ஓடிக்கொண்டிருந்த பள்ளிக்கூடச் சிறுமி ஒருத்தி, புத்தக மூட்டையின் கனச்சுமை தாளாமல் தடுமாறிக் கீழே விழுந்தாள்.

   பதறிய ரம்யா, முன்னே இரண்டடி வேகமாக எட்டுவைத்து சிறுமியை விலுக்கெனத் தூக்கினாள். வடிவான முகம். அழுகின்ற பாவனைக்கு எக்கணம் வேண்டுமானாலும் மாறிவிடலாம்போல் இருந்தபோது, நீண்ட விசில் சத்தம் கேட்டது. சட்டென சிறுமியின் புத்தகப் பையைக் கழற்றி வாங்கி ஒரு கையில் வைத்துக்கொண்டு மறு கையில் அவளைப் பிடித்துக்கொண்டு அவசரமாகவும் உடனடியாகவும் பக்கவாட்டு கம்பார்ட்மென்ட் வாசலுக்குள் நுழைந்தாள்.

   ஹாரன் அடித்து, டிரெயின் சிறு குலுங்கலுடன் நகரத் தொடங்கியது. ஏறிய பிறகுதான் உறைத்தது, அது `வெண்டார்’ எனச் சொல்லப்படும் சரக்குப் பொருள்களோடு பயணிப்பவர்களுக்கான கம்பார்ட்மென்ட். உள்ளே நடுவில் அகலமாக இடம் விடப்பட்டு பெஞ்ச்போல நீளவாக்கில் பக்கவாட்டு ஜன்னல்களையொட்டி இருக்கைகள் இருபுறமும் இருந்தன. அதற்கும் மேலே இரும்புப்பரண்கள்.

   பால் கேன்கள், காய்கறிக் கூடைகள், வாய் இறுக்கிக் கட்டப்பட்ட இடுப்பு உயர வெள்ளை நிற பிளாஸ்டிக் பைகள். உடைமைகளுக்கு உரியவர்களின் சொற்ப அடைசல். இப்போதைக்கு இங்கே பெரிய கூட்டம் இல்லை. கைப்பற்றி நிற்பதற்கான வளையங்கள் உயரத்தில் தொங்கின. ரம்யா தன்னுடைய உயரத்தை எண்ணி நொந்துகொண்டாள். ஓரமாக நெட்டுக்குத்தலாக நிறுத்தப்பட்டிருந்த கம்பிகளில் ஒன்றை எட்டிப்பிடித்துக்கொண்டாள். இன்னும் உடல் நடுக்கத்திலிருந்து விடுபடாத அந்தச் சிறுமியும் கூடவே நின்றது, ஒருவிதப் பொறுப்பையும் லேசான எரிச்சலையும் ஒருசேர உண்டுபண்ணியது.

   `என்ன மாதிரியான பெற்றோர்... ஒரு சிறு குழந்தையை இத்தனை அசட்டையோடு தனியாக அனுப்பிவைத்திருக்கிறார்களே?’ என்று எண்ணியபடி,

   ``உன் பேர் என்ன பாப்பா?’’ என்றாள்.

   ``ப்ரியம்வதா.’’

   ``பேரு நல்லாருக்கே. அப்படின்னா என்னன்னு அர்த்தம் தெரியுமா பாப்பா?’’

   அவள் முகத்தில் அதுவரை இருந்த கலவரம் காணாமல்போய் ஒரு வெட்கச் சிரிப்பு துளிர்த்தது. அவளுக்குத் தெரியவில்லை. இடவலதாகத் தலையசைத்தாள். சிவப்பு கலர் ரிப்பன் பட்டாம்பூச்சிகள் விடைத்த ஜடை இரண்டும் அப்படியும் இப்படியும் போய்வந்தது, வேடிக்கையாக இருந்தது.

   ``எங்க இறங்கணும் நீ?’’

   ``எக்மோர்.’’

   ``கூட யாரும் வரலியா, தனியா போறியே?’’

   ப்ரியம்வதா தன் முட்டைக்கண்களால் ரம்யாவை அண்ணாந்து பார்த்தாள்.

   ``சுகந்தி அக்கா லேடிஸ் கம்பார்ட்மென்ட்ல இருக்கா ஆன்ட்டி.’

   ``உன் அக்காவா?’’

   ``ஆமா. அவ நைன்த் பி செக்‌ஷன். நான் தேர்டு ஏ செக்‌ஷன்.’’

   ``ஓஹோ... அவ மட்டும் எப்படி முன்னாடி போயிட்டா?’’

   ``அவ ஸ்பீடா ஓடிட்டா ஆன்ட்டி. அவ ஸ்மால் பேக் வெச்சிருக்கா. நான்தான் விழுந்துட்டேனே!’’

   பாவமாக இருந்தது ரம்யாவுக்கு. அவளை, தன்னோடு நெருக்கமாக்கி நிறுத்திக்கொண்டாள். இது ஓர் அடைக்கலம். மிகவும் தற்காலிகமானது. ஆனால், மனம் ஏனோ நெகிழ்ந்தபடியே இருக்கத் தொடங்கியது. இதுமட்டும் திங்கட்கிழமை வழக்கத்தில் ஏற்பட்டதேயில்லை. ஒரு குழந்தையின் அண்மை அதை  உண்டுபண்ணுவதை அவள் உணரத் தொடங்கினாள்.

   ``இதுமட்டும் டிஃப்ரென்ட்டா இருக்குல்ல ஆன்ட்டி?’’

   வெண்டார் கம்பார்ட்மென்ட் அவளுக்குப் புதிய அனுபவமாக இருக்கிறது. எல்லாவற்றையும் கிரகிக்கவும் கவனிக்கவும் பழக்கப்பட்ட குழந்தையாக அவள் தெரிகிறாள். புன்சிரிப்புடன் ரம்யா, பதில் சொல்லும்விதத்தில் அவளைப் பார்த்து ஆமோதித்து மையமாகத் தலையசைத்தாள்.

   டிரெயின், மெதுவாக ஊர்ந்தபடி முதல் வளைவைத் தொட்டுத் திரும்பிக்கொண்டி ருக்கிறது. இடதுபக்கம், ரிசர்வ் வங்கி பார்வையில் பட்டது. அதற்கு எதிர்ப்பக்கக் கட்டடத்தின் உச்சியில் மிகப்பெரிய கால்பந்து வடிவில் வெள்ளை நிறத் தண்ணீர் டேங்க் ஒன்று உண்டு. வலதுபக்கம் உயர் நீதிமன்றத்தின் நெடிய காம்பவுண்ட், ஒரு சகபயணியைப்போல கூடவே வருகிறது.

   ரம்யாவிடமிருந்து பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது.

   ``எவ்ளோ பெரிய பால் பாருங்களேன்! இதை எட்டி உதைச்சா எங்க போய் விழும் ஆன்ட்டி?’’

   வெள்ளரிக்காய்ப் பிஞ்சுகள் நிறைந்த கூடை ஒன்றின் பக்கத்தில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்த மூதாட்டி, பொதுவாக ஒரு சிரிப்பை உதிர்த்தாள்.

   ``அது எனக்குத் தெரியாது. இப்போ நாம ஒரு செல்ஃபி எடுத்துப்போமா?’’

   அவள் உற்சாகமாக ரெடியானாள். அவளுக்காகக் கொஞ்சம் குனிந்தவாக்கில் மொபைலை உயர்த்திப் பிடித்துக்கொண்டபோது ப்ரியம்வதாவின் முட்டைக்கண்கள் மேலும் அழகுற விரிந்து, உதடு பிளக்காமல் சிரித்தபடி இரண்டு விரல்களைக் கத்தரிக்கோல்போலப் பிரித்துக் காட்டி போஸ் கொடுத்தாள்.

   டிரெயின், கோட்டை ரயில்நிலையத்துக்குள் மெள்ள நுழைந்து நின்றது.

   ``வா... வா... அடுத்த கம்பார்ட்மென்ட்டுக்கு ஓடியே போயிரலாம்.’’

   இருவரும் வேகவேகமாக இறங்கி, உடனே அடுத்ததில் ஏறிக்கொண்டார்கள்.

   ``நாம சுகந்தி அக்காகிட்டயே போயிருக்கலாமே ஆன்ட்டி.’’

   ``அதுக்குள்ள எடுத்துருவான் பாப்பா.’’

   சொல்லிக்கொண்டிருக்கும்போதே டிரெயின் கிளம்பியது. அரைமனதாக வெளியே பார்த்தபடி ஒப்புக்கொள்ளும் பாவனையோடு தலையை ஆட்டிக்கொண்டாள்.

   ``ஏய்... குட்டிச்சாத்தான், சீக்கிரம் ஓடியான்னு சொன்னேன்ல. லொடுக்குன்னு விழுந்துட்ட?’’

   பக்கவாட்டிலிருந்து திடீரென ஒலித்த குரலை நோக்கி இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். இதே யூனிஃபார்மில் உயரமாக இருந்த பெண், மூச்சிரைக்க கோபத்தில் நின்றுகொண்டிருந்தாள். ஓடிவந்து ஏறியிருக்கிறாள். இவள்தான் சுகந்தியாக இருக்கவேண்டும். அவளுடைய முகத்தில் பதற்றம் இருந்தது. விட்டால் அடித்துவிடுவாள்போல ஒரு கடுப்பும் இருந்தது. அதற்கும் முன்னே, அச்சத்தில் ப்ரியம்வதாவுக்கு உதடுகள் துடிக்கத் தொடங்கின.

   ``ஏம்மா... உன் தங்கைதான? அவ பேகை நீ வாங்கி வெச்சிருந்திருக்கலாம்ல? எல்லா நாளும் ஒண்ணுபோல இருக்குமா?’’

   ``கேட்டாலும் கொடுக்க மாட்டா ஆன்ட்டி. அவசரத்துக்கு ரப்பர்கூட ஷேர் பண்ண மாட்டா, தெரியுமா?’’

   புகார் கூர்மையாக இருக்கிறது. ஸோ, நம்மாளிடம்தான் கோளாறா? ரம்யாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. சட்டென மடங்கி அவள் உயரத்துக்கு இறங்கி உட்கார்ந்துகொண்டு ப்ரியம்வதாவின் கண்களை நேருக்குநேர் சந்தித்தாள். குண்டு குண்டுவென்ற பளிங்குக் கண்கள்.

   ``அப்போ நான் உன் பேகைக் கையில எடுத்துக்கிட்டப்ப மட்டும் ஒண்ணும் சொல்லாம கொடுத்துட்டியே, ஏனாம்?’’

   ``டிரெயினை மிஸ்பண்ணிட்டா, கேட்டுக்கு வெளியே தனியா நிக்கணும் ஆன்ட்டி.’’

   ``அடேங்கப்பா... செம கில்லாடியா நீ?’’

   ப்ரியம்வதா, அக்காவைத் திரும்பிப் பார்த்தாள்.

   ``நடிக்காதடி. இந்த ஆன்ட்டி ஹெல்ப் பண்ண லைன்னா உன்கூடவே நானும் கேட்லதான் நின்னிருப்பேன். இனிமேயாச்சும் பேகை என்கிட்டே கொடுக்கச் சொல்லுங்க ஆன்ட்டி.’’

   ``நான் சொல்லிட்டா கேட்டுப்பாளா பெரிய மனுஷி?’’

   ``யார்கூடவும் ஒட்ட மாட்டா ஆன்ட்டி இவ. என் ஃப்ரெண்ட்ஸ் யாரையும் பிடிக்காது இவளுக்கு. உர்ருன்னுதான் உட்கார்ந்தி ருப்பா. பயந்துபோயிருக்கா பாருங்க. நீங்க ஹெல்ப் பண்ணவும் உங்ககிட்ட க்ளோஸாயிட்டான்னு நினைக்கிறேன்.’’
   டிரெயின், பூங்காநகர் நிலையத்தில் நின்றது. மேலும் கூட்டத்தை ஏற்றிக்கொண்டு கிளம்பியது.

   ``அப்படியா பாப்பா?’’

   பதில் சொல்லாமல் சிரித்தாள்.

   ``ஓகே. இனிமே உன்னோட பேகை அக்காகிட்ட கொடுத்துடு. அவ அதை பத்திரமா வெச்சுக்குவா. நீ சூப்பரா எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துக்கிட்டே வருவியாம். என்னை மாதிரி.’’

   சரியென்று அழகாய்ச் சிரித்து, தன்னுடைய சம்மதத்தை வெளிப்படுத்தினாள். சுகந்தி, ரம்யாவிடம் இருந்த தங்கையின் பேகை வாங்கிக்கொண்டாள்.

   அடுத்த ஸ்டேஷன் எக்மோர். அவர்கள் இருவரும் இறங்குவதற்குத் தயாராகிக்கொண்டார்கள்.

   ``நீங்க எங்க இறங்குவீங்க ஆன்ட்டி?’’

   ``மாம்பலம்.’’

   கூட்டத்தினிடையே உட்புகுந்த சொற்பக் காற்று, சுகந்தியின் தலைமுடியை லேசாகக் கலைத்தது.

   ``இவ, அம்மா செல்லமா... அப்பா செல்லமா சுகந்தி?’’

   ``எங்களுக்கு அம்மா கிடையாது ஆன்ட்டி. அத்தைதான் எங்களைப் பார்த்துக்கிறாங்க. ஆனா, இவ அப்பா செல்லம் இல்லை.’’

   உள்ளுக்குள் ஏதோ பட்டென உடைந்தது. ப்ரியம்வதாவை ஒருமுறை அணைத்துக்கொண்டாள். நெஞ்சு பொங்கியது. சிக்குண்ட கைகளுக்குள்ளிருந்து பதிலுக்கு அவளும் ரம்யாவை இறுக அணைத்து, அவளுடைய கன்னத்தில் பச்சென்று எதிர்பாராமல் முத்தமிட்டாள்.

   பிஞ்சு மனத்தின் ஈரம் கன்னத்திலிருந்து காயும் முன் டிரெயின் நின்றது.

   ``தேங்ஸ் ஆன்ட்டி.’’

   இறங்கிய பிறகும் பிளாட்பாரத்தில் நின்றபடி இருவரும் கையசைத்த காட்சி, ரம்யாவின் மனதுக்குள் உருண்டுகொண்டே இருந்தது. இரக்கமில்லாத டிரெயின் நகர்ந்து வேகமெடுத்தது. அடுத்து நேரே மாம்பலத்தில்தான் நிற்கும்.

   அத்தனை கூட்டத்துக்கும் நடுவே சட்டெனத் தனித்துவிடப்பட்டவளாகத் தன்னை உணர்ந்தாள்.

   ஹேண்ட் பேகுக்குள் கிடந்த செல்போன் ஒலித்தது. அவசரமாக அதன் ஜிப்பைப் பிரித்து வெளியில் எடுத்தாள்.

   செல்வராஜ், அட்வகேட்.

   ``ஹலோ... சொல்லுங்க சார். ஆமா, ஆபீஸ் போயிட்டிருக்கேன். ஹலோ... ஆமா சார்... டிரெயின்ல... ஹலோ... ஹலோ... வாய்ஸ் பிரேக் ஆகுது சார்... ஹலோ...’’

   காதிலிருந்து செல்போனை விலக்கி, ஸ்க்ரீனை உற்றுப்பார்த்தாள். இன்னும் கால் கட்டாகவில்லை. ஆனால், சிக்னல் டவர் ஒற்றைப்புள்ளியைக் காட்டி அணைந்து அணைந்து மீண்டுகொண்டிருந்தது.

   ``ச்சை!’’ என்றபடி துண்டித்துவிட்டாள். காற்றில் புரளும் புத்தகப் பக்கங்கள்போல மனத்தின் நுனி பட படத்துக்கொண்டிருந்தது.

   பொருந்தா இடத்தில் மனக்கசப்பை வெளிப்படுத்தும் ஒரு சொல் பதம் தப்பினால், அது விவாகரத்து வரை இழுத்துப்போய் கோர்ட்டில் நிறுத்திவிடும் என்பதை அவள் நினைத்துப்பார்த்திருக்கவில்லை.

   பொருந்தாத உறவைப் பற்றிய அபிப்பிராயங்களை உட்கார்ந்து பேசி பரஸ்பரம் அதிலாவது இணங்கி, சச்சரவுகள் இல்லாமல் பிரிந்து வாழ்தல் சாத்தியமில்லாத சூழல்தான், படித்த மனிதர்கள் நிறைந்த நகரங்களிலும் பரவலாய் இருக்கிறது. ரம்யாமீதான வழக்கை வலுப்படுத்த கருணாகரனால் ஜோடிக்கப்பட்ட அவதூறின் கொச்சைத்தனம், இனி மீதமுள்ள வாழ்க்கை முழுவதும் ஏதாவது ஒரு ரூபத்தில் தன்னைத் தொடரப்போகிறது என்பதை நன்கு உணர்ந்த நிமிடத்திலிருந்து அழுவதை முதலில் நிறுத்தினாள். வழக்கை எதிர்கொள்ளத் துணிந்தாள். ஃபிளாட்டில் அவள் மட்டுமே தனித்து வாழ நேர்ந்த தலையெழுத்தை மாற்றி எழுத, அவளுடைய வக்கீல் கடந்த மூன்று ஆண்டுகளாகப் போராடுகிறார்.

   அவளுடைய அனுபவத்தில், குடும்பநல நீதிமன்றங்களில் முண்டியடிக்கும் கூட்டத்துக்குள் வியர்வை கசகசக்க நின்றபடி நிமிடத்துக்கு ஒருமுறை கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொள்வதில் எந்தவோர் அர்த்தமும் மிஞ்சுவதில்லை.

   தன் தரப்புக்கென வக்காலத்தாக நீதிமன்றத்தில் கவுன்ட்டர் ஃபைல் பண்ணியிருப்பதோடு, அதில் ஒரு கோரிக்கையும் இருந்தது. அது, மகள் சம்யுக்தா தன்னிடம்தான் வளரவேண்டும் என்கிற உரிமைகோரலான சைல்டு கஸ்டடி.

   சம்யுக்தாவுக்கு ஐந்து வயது பூர்த்தியாகப்போகிறது. அடுத்து அவளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப வேண்டும்.

   மீண்டும் போன் கால் வந்தது.

   ``சார்... சொல்லுங்க சார். சம்யுவோட போட்டோவா? வாட்ஸ்அப் பண்றேன் சார். அடுத்த ஹியரிங்கா? ஓகே சார்... ஓகே சார். நான் ரிமைண்ட் பண்றேன் சார். பாப்பாவ எப்படியாவது என்கிட்ட சேர்த்துவெச்சிருங்க சார். ம்ம்... சார்? இல்லல்ல சார்... சரி சார்... சரி சார். சிக்னல் வீக்கா இருக்கு சார்... இறங்கினதும் அனுப்பிடுறேன் சார்... ஓகே... ஓகே... தேங்ஸ் சார்.’’

   போன்கால் கட் ஆன மொபைலில் ஸ்க்ரீன் சேவராகச் சிரிக்கும் சம்யுக்தாவைப் பார்க்கும்போது கலங்கும் கண்களைக் கட்டுப்படுத்தச் சிரமப்பட்டாள். தன்னுடைய கீழ் உதட்டை அழுந்தக் கடித்துக்கொண்டாள்.

   காதில் ஹியர்போனுடன் அதுவரையில் தன் மொபைலையே பார்த்துக்கொண்டிருந்த ஓர் இளம்பெண், ரம்யாவை ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் குனிந்துகொண்டாள்.

   ரம்யா மீண்டும் முகத்தைப் பக்கவாட்டில் வாசல் பக்கமாகத் திருப்பிக்கொண்டாள். புலனுக்கு அர்த்தமாகாத காட்சிகள் பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தன.

   மாம்பலம் ஸ்டேஷனில் இறங்கியதும், பரபரவென விரையும் கூட்டத்திலிருந்து ஒதுங்கி மெதுவாக நடந்தபடியே மொபைலின் லாக்கை விடுவித்தாள். வெயில் உஷ்ணம் பரவிய இந்த பிளாட்பாரம், தொலைவில் மேலேறி இரண்டாகப் பிரியும் பாதைகளை நோக்கிய படிக்கட்டுகளைக் குறிவைத்து நீண்டுகிடக்கிறது.

   ஸ்டேஷனுக்கு வெளியே கெளரி டூவீலருடன் காத்திருப்பாள். மனம் திறந்து அனைத்தையும் இறக்கிவைக்க வாழ்க்கையில் அமைந்த உற்றதோழி அவள் மட்டுமே.

   வக்கீலுக்கு அனுப்புவதற்காக சம்யுக்தாவின் சமீபத்திய புகைப்படத்தைத் தேடுவதற்கு மொபைல் கேலரியைத் திறந்தபோது, சற்றுமுன் எடுத்த செல்ஃபி முதலில் இருந்தது. அதில், தன்னோடு சேர்ந்து முட்டைக்கண் விரிய போஸ்கொடுத்த ப்ரியம்வதாவின் கண்களை உற்றுப்பார்த்தாள் ரம்யா. அந்தப் பார்வையில் இருக்கும் அர்த்தத்தைத் தேட முயன்று தோற்றுப்போனாள்.
   https://www.vikatan.com
  • By நவீனன்
   காணும் முகம் தோறும் - சிறுகதை
     நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... எஸ்.செந்தில்குமார், ஓவியங்கள்: செந்தில்  
   ஜெனிஃபர் டீச்சரிடம் அவளது தோழி செல்லம்மாள் 1,48,000 ரூபாய் கடனாகக் கேட்ட மறுதினம், அவரின் 10 பவுன் செயின் காணாமல்போய்விட்டது. அந்தச் செயினில் சிலுவை டாலர் கோத்திருந்தார்கள். அது, பார்ப்பதற்கு அழகாக இருக்கும். டீச்சர் தினமும் காலையில் விழித்ததும், அந்தச் சிலுவையைக் கண்களில் ஒற்றிக்கொள்வாள்.
   ஜெனிஃபர் வேலை செய்யும் பள்ளியின் மைதானத்தில் அந்தத் தங்கச் சங்கிலி காணாமல் போய்விட்டதாக, தனது தலைமை ஆசிரியரிடம் அவள் புகார் செய்தாள். சில மாணவர்களும், கூடவே பள்ளிக் காவலாளிகளும் தேடினார்கள். நாள் முழுக்கத் தேடியும் சங்கிலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
   ஜெனிஃபரின் தங்கச் சங்கிலி காணாமல்போவது, இது இரண்டாவது முறை. இரண்டு மாதங்களுக்கு முன்பு, முதல் தடவை காணாமல்போய், அவள் கைக்கு சங்கிலி கிடைத்தது இப்படித்தான்...
   ஜெனிஃபர் டீச்சர் ஒரு ஞாயிறு மாலையில் தன் மகளுக்குக் கரடி பொம்மை வாங்கிக்கொண்டு வீடு திரும்ப ஆட்டோ ஏறியபோது, தனது கழுத்தில் இருந்த செயினை ஒருவன் அறுத்துக்கொண்டு ஓடிவிட்டதாகக் கத்தினாள். ஆட்டோ டிரைவர் செல்வம் செல்போனில் யாருடனோ பேசியபடி, ஆட்டோவுக்குள் அமர்ந்திருந்தான். 'அய்யோ ஏசப்பா... அய்யோ ஏசப்பா...’ என்று ஜெனிஃபர் டீச்சர் கத்தத் தொடங்கியதும், செல்வம் வண்டியைவிட்டு கீழே இறங்கி, 'என்னாச்சு டீச்சர்?' என்று பதற்றமானான்.
   ஜெனிஃபர் டீச்சர் தனது கழுத்தைத் தடவியபடி, 'யாரோ செயினை அறுத்துட்டுப் போயிட்டாங்க' என்று தொண்டை கமறியபடி கத்தினாள். செல்வம், பதறி எதிர் திசையில் ஓடினான். ஓடியவன் திரும்பி வந்து மூச்சுவாங்கியபடி, 'யாரும் இல்லியே டீச்சர். நீங்க வண்டியிலே ஏறி உட்காருங்க' என்றான் படபடப்பாக. 'டீச்சர்... செயினை அத்துட்டுப் போனவனை உங்களுக்கு அடையாளம் தெரியுமா?' என்று கேட்டான் செல்வம்.
   'நான், கரடி பொம்மையை ஆட்டோவிலே வெச்சிட்டு நிமிர்ந்து நின்னேன். அப்போதான்...' என்று டீச்சர் சொன்னாள்.

   செல்வம், சற்றுத்தொலைவில் திறந்திருந்த டீக்கடையின் முன் ஆட்டோவை நிறுத்தினான். 'அண்ணே... யாராவது இந்தப் பக்கம் ஓடினாங்களா?' என்று கேட்டான்.
   டீக்கடையில் இருந்தவர் ஆட்டோவில் இருந்த டீச்சரைப் பார்த்துவிட்டு, ''இல்லையே'' என்றார்.
   செல்வம் வண்டியை நேராக ஓட்டினான். அந்தச் சாலையில், வேறு கடைகள் எதுவும் திறந்திருக்கவில்லை. மருத்துவமனையில், சிறிய விளக்கின் வெளிச் சத்தைப் பார்க்க முடிந்தது. அந்தப் பக்கமாக இருந்த டீக்கடைகள், ஜெராக்ஸ் கடைகள், ரெடிமேட் கடைகள்... யாவும் ஷட்டரை இழுத்து மூடி ஞாயிறு விடுமுறையில் இருந்தன.
   செல்வம், ''ஞாயித்துக்கிழமையும் அதுவுமா இந்தப் பக்கம் யாரும் இல்லை... எந்தப் போலீஸ்காரங்களும் இல்லை'' என்றவன், 'நீங்க தாஸ் சாருக்கு போன் போட்டுச் சொல்லிடுங்க'' என்று ஆட்டோவைக் கிளப்பினான்.
   வழி நெடுக சாலை விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. எதிர்ப்புறத்தில் இருந்து வந்த ஆட்டோ ஒன்று, வேகத்துடன் அவர்களைக் கடந்து போனது. காற்று, சீற்றத்துடன் டீச்சர் முகத்தில் விசிறியடித்தது. ஜெனிஃபர் டீச்சர் செல்போனை எடுத்து தன் கணவனுக்கு அழைத்துப் பேசும்போது அழுதேவிட்டாள். அவளது முகத்தில் பயம் படர்ந்து இருந்தது. வியர்வைத் துளியும், கண்களில் தெரியும் அச்சமும் அவளை வேறு ஆளாகக் காட்டின. அவள் அழுவதைப் பக்கவாட்டுக் கண்ணாடி வழியாக சங்கடமாகப் பார்த்தான் செல்வம்.
   ஜெனிஃபர் டீச்சர் வீடு, பாரதியார் நகர் மூன்றாவது தெருவில் இருந்தது. தினமும் காலையில் ஆட்டோவில்தான் டீச்சரும், அவளது மகள் நிர்மலாதேவியும் பள்ளிக்குச் செல்வார்கள்; மாலையில் பள்ளி முடிந்ததும் ஆட்டோவில் வீடு திரும்புவார்கள்.
   பாரதியார் முதல் தெரு முக்கில், டீச்சரின் கணவர் ஆரோக்கியதாஸும் குழந்தை நிர்மலாதேவியும் நின்றிருந்தனர். நிர்மலாவின் மூக்கும் டீச்சரின் மூக்கும், ஒரு குடைமிளகாயை ரோஸ் கலரில் செய்து வைத்ததுபோல இருந்தன. டீச்சர், கரடி பொம்மையைத் தூக்கிக்கொண்டு ஆட்டோவைவிட்டு கீழே இறங்கியதும், நிர்மலா, தனது குடைமிளகாய் மூக்கை முன்னால் நீட்டிக்கொண்டு, 'ஹய்யா பொம்மை... கரடி பொம்மை...' என்று தன் இரு கைகளையும் விரித்தபடி, ஆட்டோவையே கட்டிக்கொள்வது போல ஓடி வந்தாள்.
   ஆரோக்கியதாஸ், ''எப்படி அத்துட்டுப் போனான்... யாருடி அத்துட்டுப் போனது? பக்கத்திலே வந்து செயினை இழுக்கிற வரைக்கும் என்னடி செஞ்சிட்டு இருந்தே?'' என்று சத்தமாகக் கேட்டார்.
   ஜெனிஃபர் டீச்சர், தனது கைப்பையில் இருந்து பணத்தை எடுத்து செல்வத்துக்குக் கொடுத்தாள். ஆரோக்கியதாஸ், செல்வத்தின் அருகே சென்று, ''செயினை அத்துட்டுப் போனது யாருனு பார்த்தீங்களா?' என்று கேட்டார்.
   ''இல்லை சார். நான் போன் பேசிட்டு இருந்தேன். ரோட்ல யாரும் இல்லை. ஒரே இருட்டு. டீச்சர்தான் ஓடுறதைப் பார்த்திருக்காங்க' என்றவன், 'போலீஸ்ல ஒரு புகார் குடுத்துடுங்க. இப்போ வந்திருக்கிற எஸ்.பி உடனே கவனிக்கிறாராம்' என்று சொன்னான்.
   ஜெனிஃபர் பயந்துபோய் நின்றிருந்தாள். அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஏதோ ஞாபகம் வந்தவள்போல, அவள் ஆட்டோவுக்குள் சென்று தேடிப் பார்த்தாள்.
   ஆட்டோவுக்குள் ஒரு மூலையில், மஞ்சள் நிறப் பூச்சியைப்போல கழுத்துச் சங்கிலி சிலுவை டாலருடன் சுருண்டுகிடந்தது. அவளையும் அறியாமல், 'ஏசப்பா... ஏசப்பா...' என்று இரு முறை கூவினாள். அவளது சத்தம் கேட்டு ஆரோக்கியதாஸ் திரும்பிப் பார்த்தார்.
   ஆரோக்கியதாஸுக்கு செயினைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. தெரு என்றும் பாராமல் ஜெனிஃபரைக் கட்டிக்கொண்டு முத்தம் கொடுத்தார். நிர்மலாதேவி, பொம்மையை வாங்கிக்கொண்டு தெருவில் இருந்து வீட்டுக்கு ஓடினாள். கரடி பொம்மையைத் தூக்கிக்கொண்டு அவள் ஓடுவதைப் பார்த்த டிரைவர் செல்வம் சிரித்துக்கொண்டான். அவனுக்கும் சந்தோஷமாக இருந்தது. ஆட்டோவைத் திருப்பிக்கொண்டு சென்றான். டீச்சர், தனது கழுத்தில் சங்கிலியைப் போட்டுக்கொண்டு நடந்தாள். வீட்டுக்குள் சென்றதும் 'ஓ..’வென அழத் தொடங்கினாள். அவள் எதற்கு அழுகிறாள் என்று ஆரோக்கியதாஸால் புரிந்துகொள்ள முடியவில்லை.
   ஜெனிஃபரும் ஆரோக்கியதாஸும் காதலித்து திருமணம் செய்துகொண்ட வர்கள். அவர்களது திருமணத்துக்கு வீட்டார் சம்மதிக்கவில்லை. செல்லம் மாளும் நாகராஜனும்தான் அவர்களது திருமணத்தை நடத்திவைத்தார்கள். செல்லம்மாளும் நாகராஜனும் காதலித்துத் திருமணம் செய்து, எட்டு வருடங்களுக்கு மேல் ஆகியிருந்தது.
   ஜெனிஃபரும் செல்லம்மாளும் முதல் வகுப்பில் இருந்து கல்லூரி வரை ஒன்றாகப் படித்தவர்கள். ஜெனிஃபருக்கு ஏதாவது என்றால், செல்லம்மாவால் தாங்க முடியாது. திருமணம் முடிந்து ஒரு வருடத்திலேயே ஜெனிஃபருக்குப் பெண் குழந்தை பிறந்தது. செல்லம்மாள், தனது தோழியின் பிரசவக் காலத்தில் ஒரு தாயைப் போல அருகில் இருந்து கவனித்துக்கொண்டாள். குழந்தைக்கு 'நிர்மலா’ என்று பெயர் வைத்தவளே செல்லம்மாள்தான்.
   செல்லம்மாளுக்கு, குழந்தை எதுவும் உண்டாகவில்லை. நாகராஜனுக்கு, திருமணம் செய்த புதிதில் அடிக்கடி காய்ச்சல் வந்துகொண்டே இருந்தது. புதிய ஊர், புதுத் தண்ணீர் என்று செல்லம்மாள் விட்டுவிட்டாள். இத்தனைக்கும் நாகராஜன், மருந்து கம்பெனி ஒன்றில் விற்பனைப் பிரதிநிதி. ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டிருந்தான். அவனுக்குத் தெரிந்த மருந்து மாத்தி ரைகளை வாங்கிச் சாப்பிட்டான். ஒரு வருடத்துக்குப் பிறகுதான் நாகராஜனுக்கு இரண்டு சிறுநீரகங்களும் பலவீனமடைந்துவிட்டன என்பது தெரியவந்தது. 'இப்போதைக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தவோ, அறுவைசிகிச்சை செய்துகொள்ளவோ தேவை இல்லை. தினமும் மாத்திரைகள் எடுத்துக்கொண்டு, வாரம்தோறும் பரிசோதனை செய்துகொண்டால், ஒருவேளை குணமாகலாம்’ என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.
   நாகராஜனுடன் மருத்து, மாத்திரை, மருத்துவமனை என அலைந்துகொண்டிருந்ததால்... செல்லம்மாளுக்குக் குழந்தை பெற்றுக்கொள்வதில் காலதாமதம் ஆகிவிட்டது. அவள்,  குழந்தைக்காக ஏங்கினாள். ஒவ்வொரு முறையும் நிர்மலாவைப் பார்க்கும்போதெல்லாம் கண்ணீர் வடிப்பாள்.
   ஜெனிஃபரின் கழுத்துச் சங்கிலி, இரண்டாவது முறையாகக் காணாமல்போனதும் செல்லம்மாள் துக்கம்கொண்டாள். பள்ளியில் இருந்து செல்லம்மாள் வருத்தத்துடன் வீட்டுக்குச் சென்றாள். அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவளது கணவன் நாகராஜனுக்கு, அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என 1,48,000 ரூபாயை, டாக்டர் இரண்டு தினங்களுக்குள்ளாகச் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பாக அறுவைசிகிச்சைக்குத் தேதி குறித்துத் தந்தார்கள். அவளால் பணத்தைத் தயார் செய்து தர முடியவில்லை. செல்லம்மாள், தன் கணவனின் சகோதரனிடம் கேட்டுப் பார்த்தாள். அவர், அவளுடன் பேசவே இல்லை. 'வீட்டைவிட்டு வெளியே போ’ என்று விரட்டிவிட்டார். செல்லம்மாளுக்கு உதவி செய்வதற்கு அவளது தோழி ஜெனிஃபரைத் தவிர, வேறு யாரும் இல்லை. ஜெனிஃபர் ஒரு வாரத்துக்குள் அவளுக்குப் பணத்தை ஏற்பாடுசெய்து தருவதாகச் சத்தியம் செய்திருந்தாள். அந்தச் சமயத்தில்தான், ஆட்டோவில் அவளது கழுத்துச் சங்கிலி காணாமல்போய் திரும்பவும் கிடைத்தது. ஜெனிஃபர், இந்நேரம் வீட்டில் என்ன செய்துகொண்டிருப்பாளோ... ஆரோக்கியதாஸ், அவளைத் திட்டிக்கொண்டிருப்பானோ... அவளது குழந்தை அழுதுகொண்டிருக்குமோ என்று செல்லம்மாள் தன் தோழியின் நினைவாகவே இருந்தாள்.
   ஜெனிஃபர் டீச்சர், பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்தபோது இரவாகியிருந்தது. எப்போதும் மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுகிறவள், இன்று ஏன் தாமதமாக வந்திருக்கிறாள் என்று ஆரோக்கியதாஸ் அவளிடம் விசாரித்தார்.
   'ஆரோக்கியம்... என்னோட கழுத்துச் சங்கிலி காணாமப்போச்சு. ஸ்கூல் கிரவுண்டுல காணாமப்போயிருக்கும்னு நினைச்சுத் தேடினோம்... கிடைக்கலை'' என்றாள் ஜெனிஃபர்.
   'உனக்கு இதே வேலையாப்போச்சு. ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் ஒருத்தன் அத்துட்டுப் போகப் பார்த்தான். உன்னோட அதிர்ஷ்டம்... கர்த்தரோட ஆசீர்வாதம்... அந்தச் செயின் ஆட்டோவுலயே கிடந்தது. இப்போ ஸ்கூல் கிரவுண்டுல தொலைச்சிட்டு வந்திருக்கே' என்று திட்டினான்.
   ஜெனிஃபர் ஓவென அழத் தொடங்கினாள். அவளால் அழுகையை அடக்கிக்கொள்ள முடியவில்லை. ஆரோக்கியதாஸ் அவளை சமாதானப்படுத்த முயன்றான். ஜெனிஃபர் தனது கண்களைத் துடைத்துக்கொண்டு தற்செயலாக தலை நிமிர்ந்து பார்த்தபோது, அவளுக்கு எதிரே ஆரோக்கியதாஸின் அப்பா-அம்மா அமர்ந்திருந்திருந்தார்கள். வாசலில் கரடி பொம்மையைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்த நிர்மலாவையும், அவளிடம் இருக்கும் பொம்மையையும் அவர்கள் பார்த்தார்கள். நிர்மலா அவர்களிடம் ஓடிப்போய் பொம்மையைக் காட்டினாள்.
   ஆரோக்கியதாஸின் அப்பா-அம்மா, ஜெனிஃபருடன் பேசுவது இல்லை. ஆரோக்கியதாஸை மாதத்துக்கு ஒரு முறை வந்து பார்த்துவிட்டு, அவனிடம் செலவுக்குப் பணம் வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள். ஜெனிஃபர் வேலைக்குப் போன பிறகுதான், அவர்கள் ஊரில் இருந்து வீட்டுக்கு வருவார்கள். இன்று தான் வீட்டில் இருக்கும்போது ஏன் வந்திருக்கிறார்கள் என்று, அவள்          சஞ்சலத்துடன் தனது அறைக்குள் சென்றுவிட்டாள்.
   ஆரோக்கியதாஸ் அவள் படுத்திருந்த கட்டிலின் அருகே வந்து, 'ஊரில் இருந்து அப்பா-அம்மா வந்திருக்காங்களே... ஒரு வார்த்தை 'வாங்க’னு கூப்பிடக் கூடாதா?' என்று மெதுவாகக் கேட்டான். அவள், முறைத்தாள். 'சரிசரி... உன் இஷ்டம்' என்று அறையைவிட்டு வெளியே வந்தான்.
   ஆரோக்கியதாஸ், 'அப்பா... இப்பவே ஊருக்குக் கிளம்புறீங்களா?' என்று கேட்டான். அவர்கள் இருவரும் எதுவும் பேசவில்லை. தங்களது மடியில் அமர்ந்திருந்த நிர்மலாவுக்கு முத்தம் வைப்பதும், மிட்டாய் கொடுத்துத் தின்னச் சொல்வது மாக இருந்தார்கள். ஆரோக்கியதாஸ் அறைக்குள் சென்று பீரோவைத் திறந்து பணத்தை எடுத்துக்கொண்டு வந்தான்.
   'இந்தாங்க...' என்று பணத்தை தன் அப்பாவிடம் கொடுத்தான். அவர் அதை வாங்கி எண்ணிப்பார்த்து, உள்பாக்கெட்டில் வைத்துக்கொண்டார். அவர்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆரோக்கியதாஸின் அம்மா, நிர்மலாவுக்கு டாட்டா காட்டிவிட்டுப் புறப்பட்டாள். அவர்கள் இருவரும் வீட்டைவிட்டுச் சென்றதும், ஜெனிஃபரின் அறைக்குள் சென்றான் ஆரோக்கியதாஸ்.
   நிர்மலா தனது கரடி பொம்மையைத் தூக்கிக்கொண்டு அறைக்குள் வந்தாள். பொம்மையைக் காட்டி அவளோடு ஜெனிஃபரை விளையாட அழைத்தாள். அவளோ செயினைப் பறிகொடுத்த கவலையிலும் பதற்றத்திலும் நிர்மலாவை ஏறிட்டுகூடப் பார்க்கவில்லை. நிர்மலா தன் அப்பாவிடம் சென்று ஒட்டி நின்றுகொண்டு, அவரது முகத்தைப் பார்த்தபடி நின்றிருந்தாள். அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கரடி பொம்மையைக் கொஞ்சுவதும் அதற்கு முத்தம் கொடுப்பதுமாக இருந்தாள். பிறகு, அறையின் மூலைக்குச் சென்று அமர்ந்துகொண்டாள்.
   ஆரோக்கியதாஸின் முகத்தைப் பார்த்த ஜெனிஃபர், 'உங்க அப்பா- அம்மா கிளம்பிப் போயிட்டாங்களா?' என்று கேட்டாள்.
   'ம்...'
   'இப்போ ராத்திரி சாப்பாடு எதுவும் செய்யலை. கடையிலே போய் வாங்கிட்டு வந்துடுங்க' என்று ஆரோக்கியதாஸிடம் சொன்னாள்.
   ''சரி'' என்றவன், ''நிர்மலாவுக்குச் சாப்பிட என்ன வேண்டும்?'' என்று கேட்டான். அவள் சொன்னாள். உடை மாற்றிக்கொண்டு புறப்பட்டுச் செல்லும்போது, 'பாப்பாவையும் தூக்கிட்டுப் போங்க. நான் டாய்லெட் போகணும்' என்றாள். நிர்மலாவைத் தூக்கிக்கொண்டுப் புறப்பட்டான் தாஸ்.
   அவர்கள் வீட்டைவிட்டுச் சென்றதும் ஜெனிஃபர் வாசல் கதவைச் சாத்திக்கொண்டாள். பிறகு செல்லம்மாளுக்கு போன் செய்தாள்.
   'நாளைக்குக் காலையிலே பணம் ரெடியாகிடுமா செல்லம்மா?'
   'நகைக் கடைக்காரங்க தர்றேன்னு சொல்லியிருக்காங்க ஜெனி. உனக்கு எதுவும் பிரச்னை இல்லையே?'
   'அதெல்லாம் ஒண்ணும் இல்லை.'
   'ஆரோக்கியம் என்ன சொன்னார்?'
   'இப்போதான் அவங்க அப்பா- அம்மா ஊருக்குப் போறாங்க. அவர் கடையிலே டிபன் வாங்கப் போயிருக்கார். சரி... நாகராஜனுக்கு இப்போ எப்படியிருக்கு?'
   'மூச்சு விடுறதுல சிரமம் இருக்கு ஜெனி. காலையிலே டாக்டர் வந்து பார்க்கிறேன்னு சொல்லியிருக்காரு. காய்ச்சல்தான் விட்டுவிட்டு வருது.'
   'நீ ஸ்கூலுக்கு லீவு போடேன்...'
   'பார்ப்போம். ஏற்கெனவே சி.எல் எல்லாம் போட்டு முடிச்சிட்டேன். நாளைக்கு ஸ்கூலுக்கு வந்துடுறேன்.'
   'ஓ.கே நாளைக்குப் பார்க்கலாம்.'
   'ம்...'
   ஜெனிஃபர் உடை மாற்றி, முகம் கழுவிக்கொண்டாள். மெத்தையில் படுத்தவள், சிறிது நேரம் கண்களை மூடி யோசனையில் இருந்தாள். பிறகு, தனது மேஜையில் இருந்த ஏசுவின் படத்தின் முன்பு நின்று கண்ணீர் வடியப் பிரார்த்தித்தாள். வெளியே வாசலில் ஆரோக்கியதாஸும் நிர்மலாவும் படியேறி வரும் சத்தம் கேட்டதும், கண்களைத் துடைத்துக்கொண்டாள்.
   மேஜையின் முன்பாக அமர்ந்து பார்சலைப் பிரித்தாள் ஜெனிஃபர். கரடி பொம்மை தனியாக அறையின் மூலையில் கிடந்தது. நிர்மலா தன் பொம்மைக்கு பரோட்டாவை ஊட்டிவிடச் சென்றாள்.
   'பக்கத்து வீட்டு தனசேகரன் சார்கிட்டே சொன்னேன். அவர் 'காலையிலே ஸ்டேஷனுக்கு வாங்க. செயினை எப்படியும் கண்டுபிடிச்சிடலாம்’னு சொல்லியிருக்கார்.'
   'நீங்க ஏன் அவர்கிட்டே எல்லாம் சொன்னீங்க? போய்த்தொலையுது, விடுங்க' என்றாள் சாப்பிட்டபடியே.
   'சும்மா இல்லை. 80 கிராம், 10 பவுன் தங்கம். இன்னிக்கு என்ன விலை தெரியுமா? ரொம்ப ஈஸியாச் சொல்லிட்டே. உனக்குக் கவலை இல்லையா ஜெனி?' என்றான்.
   'ரொம்பக் கவலையாத்தான் இருக்கு. என்ன செய்றது?' என்றவள், சாப்பிடுவதில் மும்முரமாக இருந்தாள்.
   'அந்தச் செயினை செல்லம்மாளும் நாகராஜனும் எவ்வளவு கஷ்டத்திலே நமக்குச் செஞ்சு கொடுத்தாங்கனு நினைச்சுப்பார்த்தியா? நமக்கும் பயன்படாம, அவங்களுக்கும் பயன்படாமப்போயிருச்சு. செயினை அவங்களுக்குக் கொடுத்திருந்தாக்கூட, ஹாஸ்பிட்டல் செலவுக்கு ஆகியிருக்கும்' - ஆரோக்கியதாஸ் சொன்னதும், அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்துவிட்டது.
   'சரி... சாப்பிடும்போது அழாதே. சாப்பிடு' என்றான் ஆறுதலாக.
   ஜெனிஃபர் சாப்பிட்டு முடித்தவுடன் நாற்காலியில் இருந்து எழுந்துகொண்டாள். நிர்மலா இன்னும் பரோட்டாவைத் தின்னாமல் கரடி பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். அவளுக்கு பரோட்டாவைப் பிய்த்து ஊட்டிவிட்டாள். அவள் தின்றதும், காகிதங்களை மடித்துக் குப்பை டப்பாவில் போட்டாள். ஆரோக்கியதாஸ் விளக்குகளை அணைத்துவிட்டு படுக்கையறைக்கு வந்தான்.
   ஜெனிஃபருக்கு உறக்கம் வரவில்லை. அவள் இரவு முழுக்க உறங்காமல் புரண்டு புரண்டு படுத்தாள். அவளுக்குக் குழப்பமாக இருந்தது. இருட்டும் வெளிச்சமும் மாறி மாறி அவளது கண்களுக்குத் தெரிந்துகொண்டிருந்தன. மைதானத்தில் தென்னை மரங்களுக்குப் பின்புறம் தன்னுடன் செல்லம்மாள் பேசிக்கொண்டிருந்தது அவளது ஞாபகத்துக்கு வந்தது. கண் சிமிட்டும் நேரத்தில், செல்லம்மாளின் உள்ளங்கையில் சத்தியம் செய்துகொடுத்ததும், தனது சங்கிலியைக் கழற்றி அவளுக்குக் கொடுத்ததும் ஞாபத்துக்கு வந்தன. கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள். தான் செய்தது தவறா... சரியா... எதுவும் புரியவில்லை. தவறாக இருந்தால், கர்த்தரே... என்னைத் தண்டியும். சரியாக இருந்தால், என் தோழியின் கணவனை உயிர்ப்பித்துத் தாரும் என்று பிரார்த்தித்தாள்.
   ஜெனிஃபர், ஆரோக்கியதாஸைப் பார்த்தாள். அவன் வழக்கம்போல கால்களைப் பின்னலிட்டு, இரு கைகளையும் மார்பு மேல் வைத்துக்கொண்டு படுத்திருந்தான். அவளுக்கு இன்னமும் உறக்கம் வரவில்லை. காலையில் என்னென்ன செய்ய வேண்டும். மதிய உணவுக்கு டிபன் பாக்ஸில் என்ன வைத்துக் கொடுத்துவிட வேண்டும் என அவள் யோசித்தாள். எதுவும் அவளுக்குச் சரியாகத் தெரியவில்லை. குழப்பமாக இருந்தது.
   ஜெனிஃபர் அதிகாலையில் எழுந்து குளித்தாள். கர்த்தரின் சிலைக்கு முன்பாகப் பிரார்த்தித்தாள். பிறகு, காலை உணவைத் தயாரிப்பதற்காகச் சமையலறைக்குச் சென்றாள். தனது வழக்கமான வேலைகளை அவள் ஓர் இயந்திரத்தைப்போல செய்யத் தொடங்கினாள்.
   அவர்களது பக்கத்து வீட்டுக்காரர் தனசேகர், வீட்டுக்குள் வந்து ஆரோக்கியதாஸை அழைப்பது கேட்டது. ஜெனிஃபர்,  சமையலறையைவிட்டு வெளியே வந்தாள்.
   'ஜெனிஃபர், ஸ்டேஷனுக்கு என்னோட நீங்களும் ஆரோக்கியமும் வாங்க... ஒருத்தனைப் பிடிச்சுவெச்சுருக்காங்க. ராத்திரியிலே அவன் எங்கேயோ போய் நகைகளை எடுத்துட்டு வந்திருக்கான். நான் இன்ஸ்பெக்டர்கிட்டே சொல்லி ஏதாவது ஏற்பாடு செய்து தர்றேன்' என்றார்.
   குளித்துவிட்டு உள்அறையில் உடை மாற்றிக்கொண்டிருந்த ஆரோக்கியதாஸ், குரல் கேட்டு வாசலுக்கு வந்தான். தனசேகர் அவனிடம், 'ஸ்டேஷனுக்கு வந்து ஒரு பெட்டிஷன் கொடுங்க. சார், இன்னைக்கு நல்ல மூடுலே இருக்கிறார். ஏதாவது ஏற்பாடு செய்யலாம்' என்று சொன்னார்.
   'ஸ்டேஷனுக்கு ஜெனியும் வரணுமா?'
   'கண்டிப்பா வரணும் ஆரோக்கியம்' என்றார் தனசேகர். ஆரோக்கியதாஸும் ஜெஃனிபரும் தயங்குவதைப் பார்த்துவிட்டு, 'பயப்படாதீங்க. பெரிசா ஒண்ணும் இல்லை. நானும் உங்ககூடத்தானே இருப்பேன். ஸ்டேஷனில் நகையைக் காட்டுவாங்க. உங்க அதிர்ஷ்டம், அந்த நகை உங்களோடதா இருந்தா... அடையாளம் காட்டி எடுத்துங்க. இல்லைன்னாலும் ஒண்ணும் குத்தம் இல்லை. உங்களுக்குப் பிடிச்ச நகையைக் கை காட்டுங்க. நான் மத்த ஏற்பாடுகளைப் பார்த்துக்கிறேன். ஸ்டேஷன்ல 9 மணிக்கு இருக்கிற மாதிரி வாங்க' என்று சொன்னார்.
   'ஜெனி, நாம போகலாம். நம்ம நகை கிடைக்கலைனாலும், வேற ஏதாவது நகையை வாங்கித் தர்றதா சொல்றார். நமக்கு ஒரு சான்ஸ்தானே?' என்றான் ஆரோக்கியதாஸ். ஜெனிஃபருக்கு என்ன பதில் சொல்வது என்றும் தெரியவில்லை; ஸ்டேஷனுக்குச் செல்வதற்கும் மனம் இல்லை.
   அவர்களது வீட்டிக்கு முன் ஆட்டோ வந்து நின்றது. செல்லம்மாள் கீழே இறங்கி வருவதை ஜெனிஃபர் பார்த்தாள். அவளுக்குப் பயமாக இருந்தது. அவளால் தனது பயத்தை வெளிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. ஜெனிஃபர் கண்ணீர் வடிய நின்றிருந்தாள். செல்லம்மாள் அவளருகே வந்து, 'நேத்து நீ போனதுக்குப் பின்னாடி செயினைக் கண்டுப்பிடிச்சு எடுத்துட்டோம் ஜெனி. தென்னை மரத்துக்குப் பின்னாடி இருந்த தண்ணித்தொட்டி பக்கத்துல கிடந்தது. இந்தா...' என்று அவளிடம் செயினைத் தந்தாள்.
   ஜெனிஃபருக்கு கண்ணீர் வடியத் தொடங்கியது. 'இது ரெண்டாவது முறை செல்லம்மா. இப்படியே இன்னும் எத்தனை தடவைதான் செயின் காணாமப்போகும்னு தெரியலை' என்று சலிப்புடன் சொன்ன ஆரோக்கியதாஸ், 'நாகராஜனுக்கு இப்போ எப்படி இருக்கு?' என்று கேட்டான். ஜெனிஃபர், ஆர்வத்துடன் செல்லம்மாள் முகத்தைப் பார்த்தாள்.
   செல்லம்மாள் கண்களில் திரண்ட நீர்த்துளி, அவளது கீழ் இமைகளைத் தொட்டு நின்றது. செல்லம்மாள் சொல்லப்போகும் சொற்களை அறிந்தவள் போல ஜெனிஃபர் ஓவென அழத் தொடங்கினாள். செல்லம்மாளின் கீழ் இமைகளில் இருந்த நீர், இப்போது கன்னத்தில் வழிந்தது. கழுத்துச் சங்கிலியில் தொங்கிக்கொண்டிருந்த சிலுவை ஆடிக்கொண்டிருந்தது.
   'தாஸ், இந்தச் சிலுவை எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா? செல்லம்மாள்தான் வரைஞ்சு இதே மாதிரி செய்யச் சொன்னா’ என்று தன்னிடம் நாகராஜன் முன்பு ஒருமுறை சொல்லியது, இப்போது ஆரோக்கியதாஸுக்கு ஞாபகம் வந்தது. தனது கண்களில் நீர் திரண்டு வருவதை உணர்ந்தவன், முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக்கொண்டான்!
   https://www.vikatan.com
  • By நவீனன்
   நகல்
       சிமாமண்டா என்கோஜி அடிச்சீ - தமிழில்: வடகரை ரவிச்சந்திரன்ஓவியங்கள்: கோ.ராமமூர்த்தி  
   என்கெம் அவளது கணவனின் காதலி பற்றி அறியும்போது, வரவேற்பறையின் தட்டுமாடத்தில் வைக்கப்பட்டிருந்த பெனின் முகமூடியின் துருத்திக்கொண்டு தெரிந்த கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

   ‘அவளுக்கு இளவயதுதான். இருபத்தி யொன்றுதான் இருக்கும்’ என்று தொலைபேசியில் இஜமமகா சொல்லிக் கொண்டிருந்தாள். “அவளது கேசம் குட்டையாகச் சுருண்டிருக்கும். கேசத்தைப் பதப்படுத்தும் தைலத்தைப் பயன்படுத்துவாள்போல. இளம்பெண்கள் இப்போது பதப்படுத்தும் தைலத்தையே அதிகம் விரும்புகிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். இதை உன்னிடம் சொல்லக்கூடாதுதான். நான் ஆண்களையும், அவர்கள் போகும் வழிகளையும் அறிவேன். ஆனால், அவள் உன் வீட்டில் வசிக்கிறாள் என்று கேள்விப்பட்டேன். பணக்கார ஆண்களைத் திருமணம் செய்து கொள்கிறபோது இப்படித்தான் நடக்கிறது”. இஜமமகா வேண்டுமென்றே மிகையான ஒலியில் பெருமூச்சு விடுவதைக் கேட்கிறாள் என்கெம். “ஒபியோரா நல்ல மனிதன்தான். ஆனால், அவனது காதலியை உனது வீட்டுக்குள் கொண்டுவந்து வைப்பதென்பது மரியாதை இல்லாத காரியம். அவள் அவனது வாகனங்களை லாகோஸ் முழுக்க ஓட்டிக்கொண்டு திரிகிறாள். அவலோவா சாலையில் அவள் மாஜ்தா வாகனத்தை ஓட்டிச் செல்கையில் நானே என் கண்களால் பார்த்தேன்.”

   “இதையெல்லாம் என்னிடம் சொல்வதற்கு நன்றி” என்கிறாள் என்கெம். அவள் பேசி ஓய்ந்துபோன இஜமமகாவின் வாயைக் கற்பனை செய்துகொள்கிறாள்.

   “அதைப் பற்றிச் சொல்ல வேண்டியது எனது கடமை. தோழி என்று பிறகு எதற்காக இருக்கிறோம்? வேறு என்ன செய்ய முடியும் நான்?” எனக் கேட்கிறாள் இஜமமகா. ‘செய்ய’ என்கிற வார்த்தைக்கு அவள் கொடுத்த அழுத்தமும் அவளது குரலின் தொனியும் அவள் நடந்தவை பற்றி சந்தோஷப்படுகிறாளோ என்று என்கெமை யோசிக்கவைத்தன.

   அடுத்த பதினைந்து நிமிடங்களுக்கு இஜமமகா, அவள் நைஜீரியாவிற்குப் போய் வந்ததைப் பற்றியே பேசுகிறாள். விலைவாசி அதிகரித்துவிட்டது பற்றி, போக்குவரத்து நெரிசலின்போது வியாபாரத்தில் ஈடுபடும் சிறுபிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது பற்றி, மண் அரிப்பு அவளது சொந்த ஊருக்குச் செல்லும் சாலையின் பெரும் பகுதிகளை அரித்துத் தின்றுவிட்டதைப் பற்றி என ஓயாத பேச்சு. என்கெம் பொருத்தமான நேரங்களில் பெருமூச்செறிகிறாள். அவளும் ஆறு மாதங்களுக்கு முன்பு கிருஸ்துமஸின்போது, நைஜீரியாவிற்குச் சென்று வந்ததைப் பற்றி இஜமமகாவிற்கு நினைவுபடுத்தவில்லை. அவளது விரல்கள் மரத்துப்போனது பற்றியோ அவள் தொலைபேசியில் அழைத்திருக்க வேண்டாமென எண்ணியதைப் பற்றியோ என்கெம் இஜமமகாவிடம் சொல்லவில்லை. பேச்சை முடிக்கும் முன்பாக வாரயிறுதி நாள்களில் நியூஜெர்சியில் வசிக்கும் இஜமமகாவின் வீட்டிற்குக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வருவதாக வாக்களிக்கிறாள் என்கெம். அந்த வாக்கை அவள் எப்போதும் காப்பாற்றமாட்டாள் என்பதை அவள் அறிவாள்.

   என்கெம் சமையலறைக்குள் சென்று ஒரு கோப்பையில் தண்ணீர் நிரப்பி, பின்பு அதைத் தொடாமல் அப்படியே மேஜையில் வைத்துவிடுகிறாள். பின்னர் வரவேற்பறைக்குச் சென்று பெனின் முகமூடியை உற்றுப்பார்க்கிறாள். செம்பு நிறத்திலிருந்த அதன் அம்சங்கள் பெரிதாகத் தோன்றின. அவளது அண்டை வீட்டுக்காரர்கள் அதை ‘மேன்மையானது’ என்றார்கள். அதன் காரணமாகவே இரண்டு வீடுகள் தள்ளி வசித்த ஒரு தம்பதியினர் ஆப்பிரிக்கக் கலைப்பொருள்களின் சேகரிப்பில் இறங்கிவிட்டனர்.

   என்கெம், 400 ஆண்டுகளுக்கு முன்பாக பெனின்இன மக்கள் அசலான முகமூடிகளைச் செதுக்குவதைக் கற்பனை செய்கிறாள். அவர்கள் தீமையைத் தவிர்க்கவும், தீயசக்திகளிடமிருந்து அரசனைப் பாதுகாக்கவும் ராஜாங்க சடங்குகளில் முகமூடிகளைப் பயன்படுத்தியதாக ஒபியோரா அவளிடம் சொல்லியிருந்தான். அதற்கென குறிப்பிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே முகமூடிக்குப் பாதுகாவலர்களாக இருந்தார்கள். மேலும், இறந்துவிட்ட அரசனைப் புதைக்கும்போது, சேர்த்துப் புதைக்க புதிய மனிதத் தலைகளை வெட்டிக்கொண்டுவரும் பொறுப்பும் அவர்களுக்கு இருந்தது. எண்ணெய் பூசிய திரண்ட தோள்கள் பளிச்சிட, இடுப்பில் கச்சைகள் அசைந்தாட, பெருமிதம்கொண்ட இளைஞர்கள் கம்பீரத்துடன் நடப்பதை என்கெம் கற்பனைசெய்கிறாள்.

   ஒபியோராவுடன் முதல்முறை அமெரிக்கா வந்தபோது அவள் கர்ப்பமாக இருந்தாள். ஒபியோரா வாடகைக்கு எடுத்த வீடு, பச்சைத் தேயிலை மணத்துடன் புதியதாக இருந்தது. வாகனம் செல்லும் பாதை நெருக்கமாகச் சரளைக்கற்கள் பாவியிருந்தது. ‘பிலடெல்பியாவிற்கு அருகே அழகான புறநகர் பகுதியில் வசிக்கிறோம்’ என்று தொலைபேசியில் லாகோசில் உள்ள தோழிகளிடம் பெருமை பொங்கச் சொல்லிக் கொண்டாள் என்கெம்.

   அவர்கள் வசித்த தெருவிலிருந்த அவளது அண்டைவீட்டுக்காரர்கள்- வெளுத்த கேசத்துடன் வெள்ளைநிறத் தோற்றம் கொண்டவர்கள் - அவர்களாகவே வந்து அறிமுகப்படுத்திக்கொண்டு ஓட்டுநர் உரிமம் பெறுவது, தொலைபேசி இணைப்புப் பெறுவது என ஏதாவது உதவி வேண்டுமா எனக் கேட்டுச் சென்றார்கள். அவளது பேச்சுச் சாயலும், அன்னியத்தன்மையும் அவளை நிராதரவானவளாகத் தோன்றச் செய்தன என்பதைப் பற்றி அவளுக்குக் கவலையில்லை. அவள் அந்த மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் விரும்பினாள். ஒபியோரா அவர்களது வாழ்க்கை நெஞிழித்தன்மைகொண்டது என்று அடிக்கடி சொல்வான். ஆனாலும், அவனும்கூட, தன் குழந்தைகள் அவர்களது அண்டைவீட்டுக்காரர்களின் குழந்தைகள்போல் வளரவேண்டும் என்று விரும்பினான் என்பதை அவள் அறிவாள். அந்தக் குழந்தைகள் கீழே விழுந்த உணவைப் பாழாகிவிட்டது என்று ஒதுக்கிவிடுவார்கள். ஆனால், அவளது பால்யம் என்பது எந்த உணவுப்பண்டம் கீழே விழுந்தாலும் அதை உடனே எடுத்து உண்பதாகவே இருந்தது.

   ஒபியோரா முதல் நாலைந்து மாதங்கள் உடனிருந்தான். அதன் பின்னர், அவன் நைஜீரியா சென்றுவிட்ட பிறகு, அண்டை வீட்டுக்காரர்கள் அவனைப் பற்றிக் கேட்கத் தொடங்கி விட்டனர். “உன் கணவன் எங்கே?” “ஏதும் பிரச்சினையா?” என்கெம், “எல்லாம் நல்லபடியாக இருக்கிறது” என்று அவர்களுக்குப் பதில் சொன்னாள்.

   அண்டைவீட்டுக்காரர்கள் அவர்களைப் பற்றி அறிய ஆவல் கொண்டிருப்பதைச் சொன்னபோது ஒபியோரா சிரித்தான். அவன் வெள்ளை மனிதர்கள் அப்படித்தான் இருப்பார்கள். ஏதாவதொரு விஷயத்தை மாறுபட்டுச் செய்தாயெனில் அவர்கள் உனக்கு ஏதோ கோளாறாகிவிட்டது என்றுதான் நினைப்பார்கள் என்றான்.

   என்கெம் ஒரு கையால் பெனின் முகமூடியின் செதுக்கப்பட்ட உலோகத்தின் மூக்குப் பகுதியைத் தடவுகிறாள். சில வருடங்களுக்கு முன்பாக அதை வாங்கி வந்தபோது, அதைச் சிறந்த நகல் என்று ஒபியோரா குறிப்பிட்டான். 1800களின் பிற்பகுதியில் ஆங்கிலேயர்கள் தாம் மேற்கொண்ட பயணங்களை, ‘தண்டிக்கும் பயணங்கள்’ என்று சொல்லிக்கொண்டார்கள் என்றும் அத்தகைய பயணங்களின்போது அவர்கள் அசல் முகமூடிகளைக் கவர்ந்துசென்றதைப் பற்றியும் கூறினான். அப்படிக் கவர்ந்து செல்லப்பட்ட ஆயிரக்கணக்கிலான முகமூடிகள், போரில் கைப்பற்றிய பொருள்களாகக் கருதப்பட்டு உலகெங்கிலுமுள்ள அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினான்.

   என்கெம் அந்த முகமூடியைக் கையில் எடுத்து, அதை முகத்தோடு முகம் சேர்க்கிறாள். அது குளிர்ச்சியாகவும் கனமாகவும் உயிரற்றும் இருக்கிறது. இருந்தாலும் ஒபியோரா அதைப் பற்றியும் மற்றவை குறித்தும் பேசுகையில் அவன் அவற்றுக்கு உயிரூட்டுகிறான். கூடத்தில் வைக்கப்பட்டுள்ள நோக் சுடுமண் சிற்பங்களை அவன் கடந்த வருடம் வாங்கிக் கொண்டுவந்தபோது, நோக் இனத்தவர்கள் அவற்றை மூதாதையர் வழிபாட்டிற்குப் பயன்படுத்தியது, புனிதத் தலங்களில் வைத்து அவற்றுக்குப் படையலிட்டது, ஆங்கிலேயர்கள் சிலைஉருவங்கள் கடவுளுக்கு எதிரானவை எனக் கூறி அவற்றைக் கவர்ந்துசென்றது பற்றியெல்லாம் கூறினான். நம்மிடம் இருப்பவற்றின் மதிப்பை நாம் அறிவதில்லை என்று எப்போதும் சொல்வான். அரச பதவி வகித்த முட்டாள் மனிதனொருவன் லாகோஸில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்குச் சென்று அதன் காப்பாளரிடம் 400 ஆண்டுகள் பழமையான மார்பளவு சிலையொன்றை வற்புறுத்திப் பெற்றுச் சென்று, அதை ஆங்கிலேய அரசிக்கு அன்பளிப்பாக அளித்த கதையைச் சொல்லி முடிப்பான். சில வேளைகளில் ஒபியோரா சொல்லும் கூற்றுகளின் நிஜத்தன்மை பற்றி அவளுக்குச் சந்தேகம் எழும். ஆனாலும், அவன் பேசும்போது கவனித்துக் கேட்பாள். அவன் அழப்போகிறவன்போல கண்கள் பளிச்சிட, கனிவுடன் பேசுவான்.

   அடுத்த வாரம் அவன் வரும்போது, அவன் என்ன கொண்டுவருவான் என்பதைப் பற்றி யோசிக்கிறாள். அவன் கொண்டுவரும் கலைப் பொருள்களை எதிர்நோக்கியிருக்கிறாள். அவற்றைத் தொட்டுப்பார்ப்பதும், அவற்றின் அசல் வடிவங்கள் பற்றி அவற்றின் பின்னுள்ள வாழ்க்கை பற்றி கற்பனை செய்வதும் அவளுக்கு வாடிக்கையாகிவிட்டது. அடுத்த வாரம் அவளது குழந்தைகள் தொலைபேசியில் அல்லாது நிஜமான மனிதனொருவனை ‘டாடி’ என அழைப்பார்கள். அவள் இரவில் கண்விழித்து பக்கத்தில் படுத்திருக்கும் அவனது குறட்டை ஒலியைக் கேட்பாள். குளியலறையில் அவன் பயன்படுத்திய துண்டு ஒன்று கிடக்கக் காண்பாள்.

   என்கெம் கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்கிறாள். பள்ளி சென்ற குழந்தைகளை அழைத்து வரச் செல்வதற்கு இன்னும் ஒரு மணி நேரமிருந்தது. ஜன்னல் திரைத்துணியில் வீட்டு வேலைக்காரப் பெண் அமேச்சி கவனத்துடன் அமைத்திருந்த விரிசலினூடாக மாலை நேரச் சூரியன், மையத்தில் கண்ணாடி பதித்த மேஜையில் செவ்வக வடிவிலான ஒளிக்கற்றையைப் பாய்ச்சியது. என்கெம் தோல்சோஃபாவின் ஓரத்தில் அமர்ந்து வரவேற்பறையை நோட்டமிடுகிறாள். கடந்த நாள்களில் ஒருநாள், வீட்டு அலங்காரப்பொருள்கள் விற்கும் கடையின் பிரதிநிதி ஒருவன் வந்து, மேஜை விளக்கை மாற்றிச் சென்றான். அவன், “மேடம்! உங்களுடையது மிகச் சிறந்த வீடு” எனச் சொல்லியிருந்தான். அவனது முகத்தில் ஆர்வம் மேலிடச் சிரிக்கும் அமெரிக்கச் சிரிப்பின் சாயலிருந்தது. தானும் அதைப் போன்றதொரு வீட்டை உடைமையாகக்கொள்ளும் காலம் வரும் என்று நம்பிக்கை அந்தச் சிரிப்பில் மறைந்திருந்தது. அமெரிக்காவைப் பொறுத்த மட்டில் அவள் மிகவும் விரும்பும் ஒன்று இப்படி அபரிமிதமான நம்பிக்கைகொள்ள வைப்பதுதான்.

   குழந்தை பெற்றுக்கொள்ள அமெரிக்கா வந்திருந்தபோது, அவள் பெருமையும், பூரிப்பும்கொண்டிருந்தாள். ஏனெனில், தங்கள் மனைவிகளைக் குழந்தை பெற்றுக்கொள்ள அமெரிக்காவிற்கு அனுப்பிய பணக்கார நைஜீரியர்கள் என்ற வரிசையில் சேர்ந்திருந்த ஒருவனைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறாள் என்பதுதான் அதற்குக் காரணமாக இருந்தது. பின்னர், அவர்கள் வாடகைக்கு எடுத்திருந்த வீடு விற்பனைக்கு வந்தது. அதை நாம் வாங்குவோம் என்றான் ஒபியோரா. அவன் அவளையும் சேர்த்து ‘நாம்’ என்று சொன்னது அவளுக்குப் பிடித்திருந்தது. அத்துடன், அமெரிக்காவில் வீடு வைத்திருந்த பணக்கார நைஜீரியர்களின் வரிசையிலும் அவளது கணவன் இடம்பிடித்திருப்பது அவளுக்கு மேலும் பெருமையைத் தந்தது.

   குழந்தைகளுடன் அமெரிக்காவில் தங்குவது என அவர்கள் முடிவெடுத் திருக்கவில்லை. அது இயல்பாக நிகழ்ந்தது. அடான்னாவிற்குப் பிறகு, மூன்று வருடம் கழித்து ஒகே பிறந்தான். அவள் கணினிப்பாட வகுப்புகளுக்குச் சென்றதால் அடான்னாவுடன் தங்கினாள். அவள் கணினிப்பாட வகுப்புகளுக்குச் செல்வது நல்ல விஷயம் என்று ஒபியோரா சொல்லியிருந்தான். பின்னர் என்கெம் ஒகேவைக் கர்ப்பம் தரித்திருந்தபோது, அடான்னாவை ஒரு முற்பருவப் பள்ளியில் சேர்த்தார்கள். பின்னர் அவன் குழந்தைகளைச் சேர்க்க நல்ல தனியார் தொடக்கப்பள்ளி ஒன்றைக் கண்டுபிடித்தான். அந்தப் பள்ளி வீட்டிற்கு அருகிலேயே இருந்தது அவர்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்றான் ஒபியோரா. அவளது குழந்தைகள் வெள்ளைக்காரக் குழந்தைகளுடன் அருகருகே அமர்ந்து கல்வி கற்க பள்ளிக்குச் செல்லும். அது போன்றதொரு வாழ்க்கையை அவள் கற்பனைசெய்து பார்த்ததில்லை. எனவே, அவள் ஒன்றும் சொல்லவில்லை.

   முதல் இரண்டு வருடங்கள் ஒபியோரா ஒவ்வொரு மாதமும் வந்துபோனான். அவளும் குழந்தைகளும் கிருஸ்துமஸ்ஸிற்கு லாகோஸிற்குச் சென்றுவந்தார்கள். பின்னர் அவனுக்குப் பெரியஅளவில் அரசாங்க ஒப்பந்தம் கிடைத்தபோது, அவன் கோடை காலத்தில் இரண்டு மாதங்கள் மட்டும் அமெரிக்காவிற்கு வந்துபோவது என்று முடிவெடுத்தான். அவனுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ள முடியாமலிருந்தது. அரசாங்க ஒப்பந்தங்களை இழக்க அவனுக்கு மனமில்லை. அடுத்தடுத்து அரசாங்க ஒப்பந்தங்கள் குவிந்தன. 50 முக்கியமான நைஜீரியத் தொழிலதிபர்கள் பட்டியலில் அவனும் ஒருவனாக இடம்பிடித்திருந்தான். அந்தப் பட்டியல் வெளியான நியூஸ்வாட்ச் பத்திரிகையின் பக்கங்களை ஒளிநகலெடுத்து அவளுக்கு அனுப்பிவைத்திருந்தான். அவள், அதை ஒரு கோப்பில் இட்டு, பத்திரப்படுத்தினாள்.

   பெருமூச்செறிந்த என்கெம், தலைமுடியைக் கையால் கோதுகிறாள். தலைமுடி கெட்டியாக பழையதாகத் தோன்றுகிறது. அவள் நாளைய தினம் ஒபியோரா விரும்பும் விதத்தில் கழுத்தில் விழும்படியாக தலைமுடியைத் திருத்திக்கொள்ளத் திட்டமிட்டிருந்தாள். கூடத்திற்கு நடக்கும் அவள், பின்னர் அகன்ற படிகளில் ஏறி இறங்கிய பின், சமையலறைக்குள் நடக்கிறாள். அவளும் குழந்தைகளும் கிருஸ்துமஸ் பண்டிகையின்போது, லாகோஸிலிருக்கும் நாள்களில் இப்படித்தான் வீடு முழுக்க நடந்து திரிவாள். ஒபியோராவின் அந்தரங்க அலமாரியை முகர்ந்துபார்ப்பாள். அவனது வாசனைத்தைலப் பாட்டில்களைக் கைகளால் தடவிப்பார்ப்பாள். மனதில் முளைக்கும் சந்தேகங்களை ஒதுக்குவாள். ஒருமுறை கிருஸ்துமஸ்ஸிற்கு முந்தைய நாள், தொலைபேசி ஒலிக்கக் கேட்டு எடுத்துப் பேசியபோது, எவரும் பதில் பேசவில்லை. ஒபியோராவிடம் சொன்னபோது, அவன் சிரித்தவாறு, ‘யாராவது குறும்புக்காரர்களாக இருக்கலாம்’ என்றான். அவளும் அது உண்மையில் யாராவது குறும்புக்காரர்களாக இருக்கலாமென்றும் அல்லது தவறான எண்ணிலிருந்து வந்த அழைப்பாக இருக்கலாமென்றும் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

   என்கெம் மாடிப் படிகளில் ஏறிச்சென்று குளியலறைக்குள் நடக்கிறாள், அமேச்சி தரையைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தியிருந்த லைசாலின் கார நெடியை முகர்கிறாள். கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தை உற்றுப்பார்க்கிறாள். அவளது வலது கண், இடது கண்ணைக் காட்டிலும் சிறியதாகத் தோன்றுகிறது. அவற்றை ‘கடற்கன்னியின் கண்கள்’ என்று ஒபியோரா குறிப்பிடுவான். அவன் தேவதைகளைவிடவும் கடற்கன்னிகளே மிக அழகான படைப்புகள் என்று எண்ணினான். கச்சிதமான நீள்வட்ட முகம். மாசுமருவற்ற கறுத்தநிற சருமம் என அவளது முக வடிவம் எப்போதும் மற்றவர்களை அது குறித்துப் பேச வைத்திருக்கிறது. ஆனாலும், ஒபியோரா அவளது கண்களைக் கடற்கன்னியின் கண்கள் எனக் குறிப்பிடுவது அவளை மேலும் அழகானவளாக உணரவைத்தது. அந்தப் பாராட்டு அவளுக்கு இன்னொரு ஜோடிக் கண்களைக் கொடுப்பதைப்போலத் தோன்றியது.

   அவள், அடான்னாவின் நாடாக்களை சின்னத் துண்டுகளாக வெட்டுவதற்குப் பயன்படுத்தும் கத்தரிக்கோலை எடுத்து அதைத் தலைக்கு உயர்த்துகிறாள். முடிக் கற்றைகளை இழுத்துப் பிடித்து தலையின் தோலிற்கு நெருக்கமாகவும் சுருளாகச் சுருட்டுவதற்குப் போதுமான அளவிலும் அவளது கட்டைவிரல் அளவிற்கே விட்டு மயிரை வெட்டுகிறாள். தலைமுடி பஞ்சுத் துண்டுகள்போல மிதந்துசென்று வெண்மைநிறத் தொட்டியில் விழுகின்றன. அவள் மேலும் வெட்டுகிறாள். விட்டில் பூச்சிகளின் கருகிய இறகுகள்போல முடிக்கற்றைகள் மிதந்து விழுகின்றன. அவள் மேலும் முடியைக் கோதி வெட்டுகிறாள். மேலும் முடிக்கற்றைகள் விழுகின்றன. சில கண்களில் விழுந்து, அரிக்கிறது. அவள் தும்முகிறாள். அவள் அன்று காலையில் தலையில் தேய்த்த இளஞ்சிவப்பு நிற பதனத்தைலத்தை முகர்கிறாள். ஒருமுறை டெலவேரில் நடந்த திருமண வைபவத்தில், தான் சந்தித்த நைஜீரியப் பெண்ணை நினைவுகூர்கிறாள். பெயர் நினைவில் இல்லை. அவளும் சுருண்ட தலைமுடியைக்கொண்டிருந்தாள்.

   அந்தப் பெண் மிகவும் சகஜமாக என்கெமின் கணவனும் அவளது கணவனும் ஏதோ ஒருவிதத்தில் உறவுக்காரர்கள்போல் பாவித்து ‘நமது கணவன்மார்’ என்று விளித்து ஏதோ புகார் சொன்னாள். அவள் என்கெம்மிடம், “நமது கணவன்மார் நம்மை இங்கே அமெரிக்காவில் வைத்திருக்க விரும்புகிறார்கள். தொழில் நிமித்தமாகவும் விடுமுறைக்கும் அவர்கள் இங்கே வருகிறார்கள். பெரிய வீடுகளுடனும் வாகனங்களுடனும் நம்மையும் குழந்தைகளையும் விட்டுச்செல்கிறார்கள். நைஜீரியாவிலிருந்து பணிப் பெண்களைக் கூட்டிவருகிறார்கள். அவர்களுக்கு அளவிற்கதிகமான அமெரிக்கச் சம்பளம் கொடுக்க வேண்டியதில்லை. நைஜீரியாவில் தொழில் நன்றாகப்போகிறது என்றும் இன்னும் பலவற்றையும் சொல்வார்கள். இங்கே தொழில் நல்ல முறையில் நடந்தாலும் அவர்கள் இங்கே தங்க விரும்புவதில்லை. ஏன் தெரியுமா? இங்கே பெரிய மனிதர்கள் என்றால் எவரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அவர்களை ‘சார்... சார்’ என்று எவரும் விளிக்கமாட்டார்கள். அவர்கள் அமரும் முன்பு இருக்கைகளைத் துடைப்பவர் எவரும் இருக்கமாட்டார்கள்.”

   என்கெம், அந்தப் பெண்ணிடம் மீண்டும் நைஜீரியாவிற்குத் திரும்பும் திட்டமிருக்கிறதா எனக் கேட்டபோது, என்கெம் ஏதோ துரோகம் செய்துவிட்டதுபோல் அந்தப் பெண் கண்கள் விரியத் திரும்பிப் பார்த்தாள்.  “திரும்ப நைஜீரியாவில் என்னால் எப்படி வசிக்க இயலும்? இவ்வளவு காலம் இங்கே அமெரிக்காவில் இருந்துவிட்டபின் நான் பழைய ஆளாக எப்படி மாற முடியும்? எனது குழந்தைகள் எப்படிக் கலப்பார்கள்?” என்கெம் அந்தப் பெண்ணின் சிரைக்கப்பட்ட புருவங்களை விரும்பவில்லை என்றாலும்கூட அவளைப் புரிந்துகொண்டாள்.

   என்கெம் கத்தரிக்கோலைக் கீழே வைத்துவிட்டு மயிரை அகற்றிச் சுத்தம்செய்ய அமேச்சியை அழைக்கிறாள். அவளைக் கண்டு ‘மேடம்!’ என வீரிடுகிறாள் அமேச்சி.  “உங்கள் கூந்தலை ஏன் வெட்டினீர்கள்? என்ன நடந்தது?”

   “நான் என் கூந்தலை வெட்டுவதற்கு ஏதாவது நடக்க வேண்டுமா என்ன? மயிரை அகற்றிச் சுத்தம் செய்!”

   என்கெம் அவளது அறைக்குள் நடக்கிறாள். பெரிய அளவிலான மெத்தையின் உறை, சுருக்கங்கள் ஏதுமின்றி இழுத்துவிடப்பட்டிருப்பதை உற்றுப்பார்க்கிறாள். அமேச்சியின் திறமையான கைகளும்கூட மெத்தையின் ஒருபுறம் தட்டையாக இருப்பதையும், அது வருடத்தில் இரண்டு மாதங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்ற உண்மையையும் மறைக்க முடியவில்லை.

   அவள் வெளியே வந்து குளியலறையின் பக்கம் நிற்கிறாள். அமேச்சி அடக்கத்துடன் பழுப்பு நிற முடிக்கற்றைகளைக் குப்பைக்கூடையில் சேகரித்து அகற்றுகிறாள். என்கெம் தலைமுடியை வெட்டியிருக்க வேண்டாமோ என நினைக்கிறாள். அமேச்சி இங்கு வந்த பின்னர் இவ்வளவு காலத்தில் மேடம்/பணிப்பெண் என அவர்களைப் பிரிக்கிற கோடு மங்கிவிட்டிருந்தது. அமெரிக்கா உங்களுக்கு அதைத்தான் செய்கிறது என நினைக்கிறாள். சமத்துவத்தை உங்கள் மீது திணிக்கிறது. உங்களது சிறு குழந்தைகள் தவிர, உங்களுடன் பேசுவதற்கு ஆளில்லை. ஆகையால் நீங்கள் இயல்பாகப் பணிப்பெண்ணின் பக்கம் சாய்கிறீர்கள். நீங்கள் அறியும் முன்பாக அவள் உங்களுக்குச் சமதையாக உங்களுடைய தோழியாகிவிடுகிறாள்.

   என்கெம் அமேச்சியிடம், “இன்றைய நாள் நன்றாக இல்லை. அதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன்” என்றாள்.

   “நான் அறிவேன் மேடம். உங்கள் முகத்திலேயே அது தெரிகிறது! என்று சொல்லி புன்னகை செய்கிறாள் அமேச்சி.

   தொலைபேசி ஒலிக்கிறது. அழைப்பது ஒபியோராதான் என்பதை என்கெம் அறிந்திருந்தாள். இரவில் இவ்வளவு நேரத்திற்குப் பிறகு வேறு எவரும் அழைக்க மாட்டார்கள்.

   “டார்லிங் எப்படியிருக்கிறாய்?” எனக் கேட்கிறான் ஒபியோரா. “இதற்கும் முன்னதாக என்னால் அழைக்க முடியவில்லை. நான் அபுஜாவிலிருந்து இப்போதுதான் திரும்பினேன். அமைச்சருடன் ஒரு சந்திப்பு இருந்தது. எனக்கான விமானம் நள்ளிரவு வரை தாமதமாகிவிட்டது. இப்போது அதிகாலை இரண்டு மணி ஆகிவிட்டது. உன்னால் இதை நம்ப முடிகிறதா?”

   என்கெம், இரக்கத் தொனியில் உச்சுக்கொட்டினாள்.

   “அடான்னாவும், ஒகேயும் எப்படியிருக்கிறார்கள்?” எனக் கேட்கிறான்,

   “அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள். தூங்கிவிட்டார்கள்.”

   “உனக்கு உடல்நலம் சரியில்லையா? உன் பேச்சு விநோதமாகப்படுகிறது” என்றான்.

   “நான் நலமுடன்தான் இருக்கிறேன்.” குழந்தைகள் பற்றி அவனிடம் பேச வேண்டும் என்பதை அவள் அறிவாள். ஆனால், அவள் நாக்கு தடித்து, வார்த்தைகள் புரளாதவிதத்தில் கனத்துப் போய்விட்டதாக உணர்கிறாள்.

   “வானிலை இன்று எப்படி இருந்தது?”

   “கதகதப்பு கூடத் தொடங்கியிருக்கிறது.”

   “நான் வருவதற்கு முன் அது முடிந்துவிட்டால் நன்றாக இருக்கும்” என்று சொல்லிச் சிரிக்கிறான். “நான் என் விமானப் பயணத்திற்கு முன்பதிவு செய்துவிட்டேன். உங்கள் எல்லோரையும் விரைவில் பார்ப்பேன்.”

   அவள், ‘நீங்கள்... எனத் தொடங்குவதற்கு முன், அவன் முந்திக்கொண்டுவிடுகிறான்.  “டார்லிங், நான் போக வேண்டும். எனக்கு ஒரு அழைப்பு வருகிறது. அமைச்சரின் உதவியாளன்தான் இந்நேரத்தில் அழைக்கிறான். ‘ஐ லவ் யு’ என்கிறான்.
   அவளும் ‘ஐ லவ் யு’ என்கிறாள். ஆனால் அதற்கு முன்பாகவே இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடுகிறது.

   அவனைக் காட்சிரூபத்தில் காண முயல்கிறாள். ஆனால், அவளால் முடியவில்லை. ஏனெனில், அவன் வீட்டில் இருக்கிறானா, பயணத்தில் இருக்கிறானா அல்லது வேறு எங்காவது இருக்கிறானா என்பது பற்றி அவளுக்கு உறுதியில்லை. பின்னர் அவன் தனியாக இருப்பானா அல்லது சுருண்ட கேசத்தையுடைய அந்தப் பெண்ணுடன் இருப்பானா என்று யோசிக்கிறாள். அவளது மனம் நைஜீரியாவில் உள்ள படுக்கையறை நோக்கி அலைகிறது. ஒவ்வொரு கிருஸ்துமஸின்போதும் அந்த அறை, ஒரு விடுதிஅறைபோலவே தோன்றுகிறது. அந்தப் பெண் உறக்கத்தில் தலையணையை இறுகப் பற்றுவாளா? அந்தப் பெண்ணின் முனகல் சத்தம் கண்ணாடியில் பட்டுத் திரும்புமா? அந்தப் பெண் குளியலறைக்கு விரல் நுனியில் நடந்து செல்வாளா? (அவளே தனியாளாய் இருந்தபோது திருமணமான காதலன் வீட்டில், மனைவி இல்லாத வாரக் கடைசியில் அவனது வீட்டிற்குக் கூட்டிச் சென்றிருந்தபோது அவ்வாறு விரல் நுனியில் நடந்திருக்கிறாள்.)

   அவள் ஒபியோராவை மணப்பதற்கு முன், திருமணமான ஆண்கள் பலருடன் உறவில் இருந்திருக்கிறாள். லாகோஸில் தனியாளாய் இருந்த எந்தப் பெண்தான் அதைச் செய்யாமல் இல்லை? ஒரு தொழிலதிபரான இகென்னா அவளது தந்தைக்கு நடந்த ஹெர்னியா அறுவைச் சிகிச்சைக்கு உண்டான செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டான். ஓய்வுபெற்ற படைத் தளபதியான டுஞ்சி, அவளது பெற்றோரின் வீட்டு மராமத்துச் செலவை ஏற்றுக் கொண்டதோடு அல்லாமல் ஒரு புதிய சோஃபாவையும் வாங்கித் தந்தான். அவன் அவளது இளைய சகோதர, சகோதரிகளின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்வான் என்ற எதிர்பார்ப்பில் அவனுக்கு நான்காம் தாரமாக வாழ்க்கைப்படவும் அவள் தயாராக இருந்தாள். ஆனால், டுஞ்சிக்கு அவளைத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணமில்லை. குடும்பத்தின் மூத்த மகள் என்ற ஸ்தானத்திலிருந்த அவளிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட எதையும் அவளால் செய்ய முடியாதிருந்ததால் அவளுக்கு அவமானமாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. அவளது பெற்றோர் இன்னும் வறண்டுபோன வயலில் உழன்றுகொண்டிருந்தார்கள். அவளுடன் பிறந்த சகோதர, சகோதரிகள் வாகனக் காப்பகங்களில் ரொட்டிப் பாக்கெட்டுகளை விற்றுக்கொண்டு திரிந்தார்கள். அவனுக்குப் பின்னும் பலர் அவளது வாழ்க்கையில் வந்துபோனார்கள்.  அவளது மேனியழகைப் பாராட்டியவர்கள், அவள் பள்ளியிறுதி வகுப்புதான் படித்திருக்கிறாள் என அவளை மணந்துகொள்ளச் சம்மதியாதவர்கள் எனப் பலர். அவள் வடிவான முகஅழகைக் கொண்டிருந்தபோதும் அவள் இன்னும் நாட்டுப்புறப் பெண்தான் என்ற காரணத்திற்காக அவர்கள் அவளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

   பிறகு, ஒரு மழைநாளில் அவள் ஒபியோராவைச் சந்தித்தாள். அவன் அந்த விளம்பர நிறுவனத்தின் வரவேற்பறைக்குள் நுழைந்தபோது அவள் புன்னகைத்து,  “காலை வணக்கம் சார்! நான் உங்களுக்கு உதவலாமா எனக் கேட்டாள். அவன்,  “ஆமாம். இந்த மழையை நிற்கச் செய்யுங்கள்” என்றான். சந்தித்த முதல் நாளிலேயே ‘கடற்கன்னியின் கண்கள்’ என வர்ணித்தான். மற்ற ஆண்களைப்போல் அவன் அவளைத் தனியார் விருந்தினர் மாளிகையில் சந்திக்குமாறு சொல்லவில்லை. மாறாக பலரும் வந்துபோகும் இடமான லகூன் உணவு விடுதிக்கு அவளை இரவுணவிற்கு அழைத்துச் சென்றான். அங்கு எல்லோரும் அவர்களைப் பார்த்திருக்கக்கூடும். அவன் அவளது குடும்பத்தைப் பற்றி விசாரித்தான். அவன் கொண்டுவரச்செய்த ஒயின் அவள் நாவில் புளித்தது. “நாளடைவில் நீயாக அதை விரும்புவாய்!” என்றான். எல்லோரையும்போல் அவனும் ஒருநாள் அவளைவிட்டு விலகிச் சென்றுவிடுவான் என்ற எதிர்பார்ப்பில் அவள் காத்திருந்தாள். ஆனால், மாதங்கள் உருண்டோடின. அவன் அவளது சகோதர சகோதரிகளைப் பள்ளியில் சேர்த்தான். படகுக்குழாமில் இருந்த அவனது நண்பர்களுக்கு அவளை அறிமுகப்படுத்தினான். இகெஜாவில் மேல்மாடத்துடன் கூடிய வீட்டில் அவளைக் குடிவைத்தான். பின்னர் அவன் அவளிடம் தன்னை மணந்து கொள்வாளா எனக் கேட்டபோது, அவன் சொன்னாலே போதும் என்றிருந்தது அவளுக்கு.

   அந்தப் பெண்ணை அவர்களது படுக்கையில் ஒபியோராவின் கரங்களில் தவழும் கோலத்தில் கற்பனை செய்துபார்க்கிற இந்தப் பொழுதில் அவள் மனதில் ஆழமான உடைமையுணர்ச்சி பெருகுகிறது. தொலைபேசியை வைத்துவிட்டு அமேச்சியிடம் கொஞ்சநேரத்தில் திரும்பி வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டு காரில் கடைவீதிக்குச் செல்கிறாள். தலைமுடியைப் பதப்படுத்தும் தைலமடங்கிய ஒரு பெட்டியை வாங்குகிறாள். காரில் அமர்ந்தவள் விளக்கை ஒளிரச் செய்து, அந்த அட்டைப்பெட்டியி
   லிருந்த சுருண்ட தலைமுடியைக்கொண்ட பெண்ணின் படத்தை உற்றுநோக்குகிறாள்.

   அமேச்சி உருளைக் கிழங்கு சீவுவதை என்கெம் பார்த்துக்கொண்டிருக்கிறாள். மெல்லிய உருளைக்கிழங்குத் தோல், பழுப்புநிற வட்டங்களாகக் கீழே விழுவதைப் பார்க்கிறாள்.

   “கவனமாக இரு. நீ கைக்கு வெகு நெருக்கமாகச் சீவுகிறாய்” என்கிறாள்.

   “சேனைக்கிழங்கைச் சரியாகச் சீவவில்லை என்றால் என் அம்மா சேனைக்கிழங்குத் துண்டால் என் தோலில் தேய்த்துவிடுவாள். பல நாள்களுக்குத் தோல் அரித்துக்கொண்டிருக்கும்” என்கிறாள் அமேச்சி சிரிப்புடன். அவள் உருளைக்கிழங்கைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டிருக்கிறாள். அவள் ஊரில் குழம்பு வைப்பதற்குச் சேனைக் கிழங்கைப் பயன்படுத்தியிருக்கக்கூடும். ஆனால், இங்கு ஆப்பிரிக்கப் பொருள்களுக்கான கடைகளில் நல்ல சேனைக்கிழங்கு கிடைப்பதில்லை. அமெரிக்கக் கடைகளில் உருளைக்கிழங்கைத்தான் சேனைக்கிழங்கு என்று சொல்லி விற்கிறார்கள். போலிக்கிழங்கு என்றெண்ணி என்கெம் சிரித்துக்கொள்கிறாள். இருவரது பால்யமும் எப்படி ஒரே மாதிரியானது என்று அவள் அமேச்சியிடம் ஒருபோதும் சொன்னதில்லை. அவளது அம்மா சேனைக்கிழங்கைத் தோலில் தேய்த்ததில்லை. ஆனால், அவளது வாழ்வில் கிழங்கு என்பதே கிடையாது. மாறாகக் கிடைப்பதைக்கொண்டு அவளது அம்மா சமைக்கும் உணவுதான் கிடைத்தது. அவளது அம்மா எவருமே உண்ணாத செடியின் இழைதலைகளைக்கொண்டு கீரைச்சாறு தயாரித்துவிடுவாள். அவை எப்போதும் மூத்திரச் சுவையுடன்தான் இருக்கும். அண்டையில் வசிக்கும் பையன்கள் அந்தச் செடிகளின் மீது மூத்திரம் பெய்வதை அவள் பார்த்திருக்கிறாள்.

   “குழம்பு வைக்க கீரையைப் பயன்படுத்தவா அல்லது காய்ந்த ஒனுக்பு இலைகளைப் பயன்படுத்தவா மேடம்” எனக் கேட்கிறாள் அமேச்சி. அவள் சமைப்பதை என்கெம் கவனித்துக்கொண்டிருக்கும்போது அவளைக் கேட்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறாள் அமேச்சி. “சிவப்பு வெங்காயமா அல்லது வெள்ளை வெங்காயமா மேடம்?”

   “உனக்குப் பிடித்தமானதைப் பயன்படுத்து” என்கிறாள் என்கெம்.

   அமேச்சி கழுவும் தொட்டியில் கீரையைக் கழுவுவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்கெம். அமேச்சி பலம் மிக்க தோள்களையும் அகன்ற இடுப்பையும் கொண்டிருக்கிறாள். ஒபியோரா என்கெமை அமெரிக்காவிற்கு அழைத்து வந்தபோது அவளுக்குப் 16 வயதுதான். வந்த புதிதில் அதிகமாக வெட்கப்படுகிறவளாக இருந்தாள். பல மாதங்களுக்குப் பாத்திரம் கழுவும் இயந்திரத்தைப் பார்த்து அதிசயித்துக்கொண்டிருந்தாள். ஒபியோரா அமேச்சியின் அப்பாவிற்கு ஓட்டுனர் வேலை கொடுத்து, இரு சக்கர வாகனமொன்றையும் வாங்கிக்கொடுத்தான். அமேச்சியின் பெற்றோர் ஒபியோராவின் காலில் விழுந்து நன்றி சொன்னபோது, அவர்கள் தன்னைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.

   அமேச்சி கீரை இலைகளிருந்த வடிதட்டைக் குலுக்கிக்கொண்டிருக்கிறாள். என்கெம், ‘உன் முதலாளி ஒபியோரா ஒரு பெண்ணைக் காதலியாக வைத்திருக்கிறாராம். அந்தப் பெண் இப்போது லாகோஸில் உள்ள வீட்டில் இருக்கிறாளாம்.”

   அமேச்சி, வடிதட்டைக் கழுவும் தொட்டிக்குள் போட்டுவிடுகிறாள். “மேடம்?”

   “நான் சொன்னது உனக்குக் கேட்டதா?” எனக் கேட்கிறாள் என்கெம். அவளும் அமேச்சியும் ருக்ராட்ஸ் தொலைக்காட்சி தொடரில் எந்தக் கதாபாத்திரம் குழந்தைகளுக்கு அதிகம் பிடித்திருக்கிறது, பிரியாணி செய்ய பாஸ்மதி அரிசியைவிட அங்கிள் பென் அரிசிதான் சிறந்தது, அமெரிக்கக் குழந்தைகள் தங்கள் மூத்தோருக்குச் சமதையாகப் பேசுவது ஆகியவை பற்றிப் பேசியிருக்கிறார்கள். அவன் என்ன சாப்பிடுவான் அல்லது அவனது துணிகளை எப்படித் துவைப்பது என்பதைத் தவிர்த்து ஒபியோராவைப் பற்றி வேறு எதுவும் பேசியதில்லை.

   அமேச்சி, என்கெம் பக்கம் திரும்பிப் பார்த்து, “உங்களுக்கு எப்படித் தெரியும் மேடம்?” எனக் கேட்கிறாள்.

   “என் தோழி இஜமமகா தொலைபேசியில் அழைத்து அதை என்னிடம் சொன்னாள். அவள் நைஜீரியாவிற்குச் சென்று திரும்பியிருக்கிறாள்.”

   அமேச்சி, அவள் பேசிய வார்த்தைகளை மறுபரிசீலனை செய்யக் கேட்பதுபோல் என்கெமை உற்றுப்பார்க்கிறாள். “மேடம், அது உண்மையாக இருக்குமா?”

   “இப்படியொரு விஷயத்தில் அவள் பொய்சொல்ல மாட்டாள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்கிறாள் என்கெம். அவளது கணவனின் காதலி அவர்களது வீட்டில் வசிக்கிறாள் என்பதை அவளே உறுதிப்படுத்தும் நிலையிலிருப்பதன் துயரத்தை உணர்கிறாள். ஒருவேளை இஜமமகா பொறாமையில்கூட அதைச் சொல்லியிருக்கலாம். ஆனால், அவை பற்றியெல்லாம் யோசித்துப்பார்க்கும் நிலையில் அவள் இல்லை. ஏனெனில், அது உண்மைதான் என்பதை அவள் அறிந்திருக்கிறாள். அவளது வீட்டில் எவளோ ஒருத்தி வசிக்கிறாள்.

   “அடுத்த வாரம் முதலாளி ஒபியோரா இங்கு வரும்போது அதைப் பற்றி அவரிடம் விவாதியுங்கள் மேடம்!” எனச் சொல்லியவாறு அடுப்பிலிருந்த பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றுகிறாள் அமேச்சி. “அவர் அந்தப் பெண்ணை வெளியேறச் சொல்லிவிடுவார். உங்களது வீட்டில் இன்னொரு பெண் வந்து வசிப்பது தவறானது மேடம்!”

   “அவர் அந்தப் பெண்ணை வெளியேறச் சொல்லிவிடுவார். பிறகு என்ன?”

   “நீங்கள் அவரை மன்னித்துவிடுங்கள் மேடம். ஆண்கள் என்றாலே அப்படித்தான்.”

   என்கெம், அமேச்சி பேசுவதைக் கவனித்துக்கொண்டிருக்கிறாள். அமேச்சியின் பாதங்கள் நீலநிறப் பாதணிகளுக்குள் உறுதியாகத் தரையில் பாவியிருக்கின்றன. “நான், அவர் காதலி வைத்துக்கொண்டிருக்கிறார் என்று மட்டும் சொல்லியிருந்தால் நீ என்ன சொல்லியிருப்பாய்?” எனக் கேட்கிறாள்.

   “எனக்குத் தெரியவில்லை மேடம்” என்கிற அமேச்சி, அவளது பார்வையைத் தவிர்க்கிறாள். கொதிக்கும் எண்ணெயில் வெங்காயத்துண்டுகளைப் போடுகிறாள்.

   “உன் முதலாளி ஒபியோரா எப்போதும் காதலிகளை வைத்துக்கொண்டிருக்கிறார் என்று நீ எண்ணுகிறாய். அப்படித்தானே?”

   “அது எனக்குத் தேவையில்லாதது மேடம்!” என்கிறாள் அமேச்சி.

   ‘அதைப் பற்றி உன்னிடம் பேச விரும்பவில்லையெனில் அதைப் பற்றி உன்னிடம் பேசியிருக்கமாட்டேன் அமேச்சி.”

   “ஆனால், உங்களுக்கும் அது தெரியும்தானே மேடம்?”

   “எனக்கு என்ன தெரியும்?”

   “முதலாளி ஒபியோரா காதலிகளை வைத்திருக்கிறார் என்று நீங்கள் அறிவீர்கள் மேடம். நீங்கள் கேள்விகள் கேட்டதில்லை. ஆனால், மனதில் நீங்கள் அறிவீர்கள்.”

   என்கெம் இடது காதில் அசௌகரியமான வலியை உணர்கிறாள். மனதில் அறிந்திருப்பது என்றால் என்ன? அவளது வாழ்க்கையில் மற்ற பெண்கள் குறுக்கிடுவதன் சாத்தியத்தை எண்ணிப்பார்க்க மறுக்கிறாளா?

   “முதலாளி ஒபியோரா நல்ல மனிதர் மேடம். அவர் உங்கள் மீது அன்பு கொண்டிருக்கிறார். அவர் உங்களைக் கால்பந்தாட்டமாடப் பயன்படுத்தவில்லை.” அமேச்சி அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்குகிறாள். அவளது பார்வை என்கெமின் மீது நிலைத்திருக்கிறது.

   அவளது குரல் மென்மையாகவும், நயந்து பேசுவதாகவும் ஒலிக்கிறது. “பெண்கள் பலரும் உங்கள் மீது பொறாமை கொண்டிருப்பார்கள். ஒருவேளை உங்கள் தோழி இஜமமகா உங்கள் மீது பொறாமை கொண்டிருக்கலாம். அவள் உங்களுக்கு உண்மையான தோழியாக இல்லாமலிருக்கலாம். அவள் உங்களிடம் சொல்லக்கூடாத விஷயங்கள் இருக்கின்றன. நீங்கள் அறியக்கூடாத நல்ல விஷயங்கள் இருக்கின்றன.”

   என்கெம், தலைமுடிக்குள் கையைவிட்டு அளைகிறாள். பதப்படுத்தும் தைலம் தடவியதால் பிசுபிசுவெனக் கையில் ஒட்டுகிறது. கையைக் கழுவ எண்ணி எழுகிறாள். அவள் அமேச்சியுடன் சில விஷயங்களில் ஒத்துப்போக நினைக்கிறாள். அறியாமலிருக்க வேண்டிய விஷயங்களும் இருக்கின்றன. இஜமமகா தன்னிடம் சொன்னதில் மோசம் ஒன்றுமில்லை என நினைக்கிறாள். “உருளைக்கிழங்கைப் பார்’ என்கிறாள் என்கெம்.

   அன்று இரவு குழந்தைகளைப் படுக்கைக்கு அனுப்பிய பிறகு, சமையலறையில் உள்ள தொலைபேசியை எடுத்து பதினான்கு இலக்க எண்ணைப் பதிவிடுகிறாள். அவள் நைஜீரியாவிற்குத் தொலைபேசியில் பேசியதில்லை. எப்போதும் ஒபியோராதான் அழைப்பான். அவனது வோர்ல்ட்நெட் அலைபேசி சேவை சர்வதேச அழைப்புகளுக்குப் பல சலுகைகளை வழங்குகிறது.

   “ஹலோ! மாலை வணக்கம்.” ஆண் குரல் ஒலிக்கிறது. படிப்பறிவற்ற நாட்டுப்புற இபோ உச்சரிப்பு.

   “அமெரிக்காவிலிருந்து மேடம் பேசுகிறேன்.”

   “மேடம்!” குரல் மாறுகிறது. இதம் கூடுகிறது. “மாலை வணக்கம் மேடம்!”

   “பேசுவது யார்?”

   “உசென்னா மேடம். நான் புதிதாக வந்திருக்கிற வேலைக்காரப் பையன்.”

   “நீ எப்போது வந்தாய்?”

   “நான் வந்து இரண்டு வாரங்கள் ஆயிற்று மேடம்.”

   “முதலாளி ஒபியோரா இருக்கிறாரா?”

   “இல்லை மேடம். இன்னும் அபுஜாவிலிருந்து திரும்பவில்லை.”

   “வேறு யாரும் இருக்கிறார்களா?”

   “எப்படி மேடம்?”

   “வேறு யாரும் இருக்கிறார்களா?”

   “சில்வெஸ்டரும், மரியாவும் இருக்கிறார்கள் மேடம்.”

   என்கெம் பெருமூச்சு விடுகிறாள். வீட்டு மேற்பார்வையாளனும் சமையல்காரியும் இருப்பார்கள் என்பதை அவள் அறிவாள். நைஜீரியாவில் இப்போது நள்ளிரவாக இருக்கும். புதிதாக வந்த வேலைக்காரப் பையனைப் பற்றி ஒபியோரா தன்னிடம் சொல்லவில்லையே. அந்தச் சுருண்ட கேசத்தையுடைய பெண் இருப்பாளா? அல்லது தொழில் நிமித்தமான பயணத்தில் அவளும் ஒபியோராவுடன் சென்றிருப்பாளா?

   “வேறு யாரும் இருக்கிறார்களா?”

   என்கெம் மறுபடியும் கேட்கிறாள்.

   “மேடம்?”

   “சில்வெஸ்டர், மரியாவையும் தவிர வேறு யாரும் இருக்கிறார்களா?”

   “இல்லை மேடம். இல்லை.”

   “நிச்சயமாக இல்லையா?”

   சற்று நீண்ட இடைவெளி விட்டு, “ஆமாம் மேடம்.”

   “ஓகே. முதலாளி ஒபியோராவிடம் நான் அழைத்ததாகச் சொல்.”

   என்கெம் இணைப்பை உடனே துண்டித்து விடுகிறாள். நான் இப்படித்தான் மாறியிருக்கிறேன் என நினைக்கிறாள். நான் முன்பின் அறியாத வேலைக்காரப் பையனிடம் என் கணவனைப் பற்றி உளவு பார்க்கிறேன்.

   அமேச்சி, “கொஞ்சம் குடிக்கிறீர்களா மேடம்?” எனக் கேட்கிறாள். என்கெம் அமேச்சியின் சற்றே சாய்ந்த கண்களில் தெரிவது இரக்கமா என யோசிக்கிறாள். என்கெம் பச்சை அட்டையைப் பெற்ற நாளிலிருந்து சில வருடங்களாக கொஞ்சமான அளவில் குடிப்பது அவர்களது மரபாகிவிட்டிருந்தது. அன்று குழந்தைகள் படுக்கைக்குச் சென்ற பிறகு, அவள் ஒரு சாம்பெய்ன் பாட்டிலைத் திறந்து அமேச்சிக்கும் தனக்குமாக ஊற்றினாள். அமேச்சியின் உரத்த சிரிப்பிற்கு நடுவே அவள் ‘அமெரிக்காவிற்கு’ என்று சொல்லி கோப்பையை உயர்த்தினாள். இனிமேல் அமெரிக்காவிற்குத் திரும்பி வர விசாவிற்காக விண்ணப்பிக்க வேண்டியதில்லை. அமெரிக்கத் தூதரகத்தில் கேட்கப்படும் தரக்குறைவான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியதில்லை. இப்போது அவள் இந்த நாட்டைச் சொந்தமாகக்கொண்டவள். ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்களும் குரூரத் தனங்களும் ஒருசேரக் காணப்படுவது இந்த நாடு. இந்த நாட்டில் இரவில் ஆயுதமேந்திய கொள்ளைக்காரர்களைப் பற்றிய அச்சமின்றி காரோட்டிச் செல்லலாம். மூன்று பேர் சாப்பிடப் போதுமான உணவை ஓராளுக்குப் பரிமாறும் உணவு விடுதிகளைக்கொண்டது இந்த நாடு.

   சொந்த மண்ணையும் நண்பர்களையும் பிரிந்திருக்கிற ஏக்கம் அவளுக்கு இருக்கிறது. அமெரிக்க நகரங்களின் தெருக்களில் பனி படர்வதைப் பார்க்கையில் மழை பெய்யும்போதும் வெயிலடிக்கிற லாகோஸின் மாலை நேரங்களைப் பற்றி அவளுக்கு நினைவு வரும். சில வேளைகளில் ஊருக்குத் திரும்பிவிடுவதைப் பற்றி யோசித்திருக்கிறாள். ஆனால், இப்போது அமெரிக்கா அவளுக்குள் ஊறிவிட்டது.

   “சரி! கொஞ்சமாகக் குடிக்கலாம்.” என்கிறாள் அமேச்சியிடம். ‘ஃப்ரிட்ஜில் இருக்கிற ஒயின் பாட்டிலையும் இரண்டு கோப்பைகளையும் எடுத்து வா”

   என்கெம் ஒபியோராவை விமான நிலையத்திலிருந்து அழைத்துவரச் செல்கிறாள். ஒகேயும், அடான்னாவும் பின்னிருக்கைகளில் கச்சைகளை மாட்டி அமர்ந்திருக்கிறார்கள். ஒபியோராவை அழைக்கச் செல்கையில் அவள் சிரித்த முகமாகத்தான் இருப்பாள். இன்று அவள் சிரிக்கவேயில்லை. அதை உணர்ந்ததாலோ என்னவோ அவர்களும் அமைதியாக இருக்கிறார்கள். முதல் நாளன்று அவர்கள் எல்லோரும் இரவுணவிற்கு உணவு விடுதிக்குச் செல்வார்கள். வீட்டிற்குத் திரும்பிய பிறகு, ஒபியோரா குழந்தைகளுக்கு அன்பளிப்புகளை அளிப்பான். அவர்கள் அவன் கொண்டுவரும் விளையாட்டுப் பொருள்களுடன் இரவில் நெடுநேரம் கண் விழித்து விளையாடிக்கொண்டிருப்பார்கள். அவள், அவன் வாங்கிவந்த வாசனைத் தைலத்தையும், வருடத்தில் இரண்டு மாதங்கள் மட்டுமே அணிய வாய்க்கும் இரவுநேர உடையையும் அணிவாள்.

   அவன் எப்போதுமே அவனது குழந்தைகளின் நடத்தைகளைக் கண்டு அதிசயித்திருக்கிறான். அவர்கள் என்ன செய்வார்கள், அவர்களுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என அவன் அவர்களைப் பற்றி அறிந்து கொண்டதெல்லாமே அவள் தொலைபேசி வழியாகச் சொல்லக் கேட்டதுதான். அவனது நண்பர்களின் வருகையின்போது, அவன் குழந்தைகளிடம் மாமாவிற்கு வணக்கம் சொல்லுங்கள் என்பான். அதற்கு முன்னதாக “இவர்கள் பேசும் ஆங்கிலத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன் இவர்கள் அமெரிக்கர்களாக மாறிவிட்டார்கள்” என்று சொல்லி நண்பர்களைச் சீண்டுவான்.

   விமானநிலையத்தில் எப்போதும் போலவே அவர்கள் குதூகலத்துடன்  “டாடி...” என்று சொல்லி ஒபியோராவைக் கட்டித் தழுவிக்கொள்கிறார்கள். என்கெம் அவர்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறாள். அவன் கொண்டுவரும் விளையாட்டுப் பொருள்களால் கவரப்படும் நிலை விரைவில் மாறி, அவர்கள் வருடத்தில் சிலமுறை மட்டுமே பார்க்கக் கிடைக்கும் அவனைக் கேள்வி கேட்கத் தொடங்கிவிடுவார்கள் என நினைக்கிறாள்.

   ஒபியோரா அவளை முத்தமிட்ட பிறகு, சற்றுப் பின்னால் சென்று அவளைப் பார்க்கிறான். அவன் எந்தவித மாற்றமுமின்றி இருக்கிறான். சாதாரணமாக, வெளுத்த தோற்றத்தைக் கொண்டிருக்கும் அவன், விலையுயர்ந்த மேற்சட்டையை அணிந்திருக்கிறான். “டார்லிங்! நீ எப்படியிருக்கிறாய்? நீ உன் கூந்தலை வெட்டிவிட்டாயா?” எனக் கேட்கிறான்.

   என்கெம் தோள்களைக் குலுக்கிக்கொண்டு முதலில் குழந்தைகளைக் கவனியுங்கள் என்று சொல்லும் விதத்தில் மெல்லச் சிரிக்கிறாள்.

   “டாடி, எங்களுக்கு என்ன கொண்டுவந்தீர்கள்?” எனக் கேட்டு அடான்னா அவனது கையைப் பிடித்து இழுக்கிறாள்.

   இரவுணவிற்குப் பின்னர், என்கெம் படுக்கையில் அமர்ந்து வெண்கலத்தினாலான இஃபே தலையைப் பார்க்கிறாள். அது உண்மையில் பித்தளையால் செய்யப்பட்டது என ஒபியோரா சொல்லியிருந்தான். அது வர்ணம் பூசப்பட்டு, தலைப்பாகையுடன் காணப்படுகிறது. ஒபியோரா கொண்டுவந்துள்ள முதல் அசலான பொருள் அதுதான்.

   “நாம் இதைக் கையாளுகையில் கவனமாக இருக்க வேண்டும்” என்கிறான் அவன்.

   அதைக் கையால் தடவியவாறு ஆச்சரியப்பட்டவளாய், “அசலான பொருள்” என்கிறாள் அவள்.

   “சில பொருள்கள் பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. ஆனால், இது பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அதற்குக் கொடுத்த விலைக்குத் தகுந்த பொருள்தான்” என்று சொல்லியவாறு அவன், அவளருகே அமர்ந்து காலணிகளைக் கழற்றுகிறான். அவனது குரல் கிளர்ச்சியுடன் ஒலிக்கிறது.

   “இது எதற்குப் பயன்படுத்தப்பட்டது?” எனக் கேட்கிறாள் என்கெம்.

   “அரசனின் மாளிகையை அலங்கரிக்கத்தான். அவற்றில் பெரும்பாலானவை அரசனை நினைவுகூரவோ கௌரவிக்கவோ செய்யப்பட்டவைதான். அருமையாக இருக்கிறதல்லவா?”

   “ஆம். இதைக்கொண்டும் அவர்கள் பயங்கரமான செயல்களைச் செய்தார்கள் என நம்புகிறேன்.”

   “என்ன?”

   “பெனின் முகமூடிகளைக்கொண்டு செய்ததைப்போல. அரசனின் சவத்துடன் புதைக்க என மனிதத் தலைகளுக்காக அவர்கள் மனிதர்களைக் கொன்றார்கள் என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள்.”

   ஒபியோராவின் பார்வை அவள் மீது நிலைத்திருக்கிறது.

   அவள் அந்த வெண்கலத்தலையை விரல் நகத்தால் தட்டுகிறாள்.

   “நீ ஏன் உன் கூந்தலை வெட்டினாய்?” எனக் கேட்கிறான் ஒபியோரா.

   “உங்களுக்குப் பிடிக்கவில்லையா?”

   “எனக்கு உன் நீண்ட கூந்தலைப் பிடித்திருந்தது.”

   “குட்டையான தலைமுடி உங்களுக்குப் பிடிக்கவில்லையா?”

   “நீ ஏன் அதை வெட்டினாய்? அமெரிக்காவில் இதுதான் புதுப் பாணியா?” அவன் சிரித்தவாறு குளிக்கத் தயாரானவனாய் சட்டையைக் கழற்றுகிறான்.

   அவனது வயிறு வேறுபட்டுத் தெரிகிறது. முதிர்ந்து உப்பிய வயிறு. இருபதுகளில் இருக்கும் இளம்பெண்கள், மத்திய வயதின் அடையாளங்களைக்கொண்ட ஆண்களை எப்படிச் சகித்துக்கொள்கிறார்கள் என்று அவள் யோசிக்கிறாள். அவள் உறவிலிருந்த திருமணமான ஆண்களை நினைவுகூர முயல்கிறாள். அவர்கள் ஒபியோராவைப்போல் முதிர்ந்து, உப்பிய வயிற்றைக்கொண்டிருந்தார்களா? அவளால் ஞாபகப்படுத்திக்கொள்ள முடியவில்லை. எதையுமே அவளால் நினைவுகூர முடியவில்லை. அவளது வாழ்க்கை எங்கே போயிருக்கிறது என்பதைக்கூட.

   “உங்களுக்குப் பிடிக்கும் என நான் நினைத்தேன்” என்கிறாள் அவள்.

   “உனது அழகான முகத்திற்கு எதுவென்றாலும் பொருத்தமாகத்தான் இருக்கும் டார்லிங். ஆனால், நான் உன் நீண்ட கூந்தலை அதிகமாக விரும்பினேன். நீ அதை மீண்டும் வளர்க்க வேண்டும். பெரிய மனிதனது மனைவிக்கு நீண்ட கூந்தல்தான் அழகாக இருக்கும்.” அவன் ‘பெரிய மனிதன்’ என்பதை அழுத்திச் சொல்லிச் சிரிக்கிறான்.

   அவன் இப்போது நிர்வாணமாக இருக்கிறான். உடம்பை வளைத்து நெளித்து குளியலுக்குத் தயாராகிறான்.

   அவனது வயிறு மேலும் கீழும் குலுங்குவதைக் கவனிக்கிறாள். மணமான புதிதில் அவளும் கிளர்ச்சியுற்று அவனுடன் சேர்ந்து குளித்திருக்கிறாள். ஆனால், இப்போது எல்லாம் மாறிவிட்டன.

   அவள் அவனது வயிற்றைப்போல கனிந்து எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்பவளாகிவிட்டாள். அவன் குளியலறைக்குள் நடப்பதைப் பார்க்கிறாள்.

   “ஓராண்டு காலத் தாம்பத்ய வாழ்க்கையை கோடைகாலத்தில் இரண்டு மாதங்கள், டிசம்பர் மாதத்தில் மூன்று வாரங்கள் என சுருக்க முடியுமா?” எனக் கேட்கிறாள்.

   ஒபியோரா மலப்பிறையைக் கழுவிவிட்டு “என்ன?” எனக் கேட்கிறான்.

   “ஒன்றுமில்லை.”

   “என்னோடு குளிக்க வா!”

   அவள் தொலைக்காட்சியை இயக்கிவிட்டு அதன் சத்தத்தில் ஒன்றும் கேட்காதவள்போல் பாசாங்கு செய்கிறாள். சுருண்ட தலைமுடியைக்கொண்ட அந்தப் பெண் ஒபியோராவுடன் சேர்ந்து குளிப்பாளா என யோசிக்கிறாள்.

   குளியலறையிலிருந்து எட்டிப்பார்த்து ஒபியோரா, “டார்லிங், என்னுடன் குளிக்க வா!” என்கிறான். அண்மையில் இரண்டு வருடங்களாக அவன் தன்னோடு குளிக்கச் சொல்லிக் கேட்டதில்லை. அவள் தன் ஆடைகளைக் களைகிறாள்.

   குளியலறையில் அவனது முதுகில் சோப்பைத் தேய்த்தவாறு, “அடான்னாவிற்கும், ஒகேவிற்கும் லாகோஸில் பள்ளியொன்றைப் பார்க்க வேண்டும்” என்கிறாள். அதைச் சொல்ல வேண்டுமென்று அவளுக்குத் திட்டமேதும் இருக்கவில்லை. ஆனால், அதுதான் சரியானது. அவள் எப்போதும் அதைத்தான் சொல்ல வேண்டுமென்று விரும்பினாள்.

   ஒபியோரா திரும்பி, அவளை உற்றுப் பார்த்தவாறு “என்ன?” என வினவுகிறான்.

   “குழந்தைகளுக்குப் பள்ளி இறுதித்தேர்வு முடிந்த பிறகு, நாம் ஊருக்குத் திரும்புகிறோம். நாம் லாகோஸில் வாழ திரும்பிப் போகிறோம்.” அவள் அவனது மனதை மாற்றும் முயற்சியில் மெள்ளப் பேசுகிறாள். ஒபியோரா அவளைத் தொடர்ந்து உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவள் அவனது முகத்திற்கு எதிராக நின்று எதையும் இதுவரை பேசியதில்லை. அவளாக ஒரு முடிவெடுத்து பேசிக் கேட்டதில்லை. அந்தக் குணம்தான் முதலில் அவளிடம் அவனை ஈர்த்திருக்குமோ என யோசிக்கிறாள்.

   “நாம் விடுமுறைக்காலத்தை இங்கே ஒன்றாகக் கழிக்கலாம்.” என்கிறாள் என்கெம் ‘நாம்’ என்பதை அழுத்திச் சொல்கிறாள்.

   “என்ன... ஏன்?” எனக் கேட்கிறான் ஒபியோரா.

   “நான் எனது வீட்டில் புது வேலைக்காரப்பையன் வேலைக்குச் சேர்ந்ததை அறிந்துகொள்ள விரும்புகிறேன். மேலும், குழந்தைகளுக்கு நீங்கள் தேவை.”

   “அதுதான் உன் விருப்பம் என்றால், அதைப் பற்றிப் பேசி முடிவெடுக்கலாம்” என்கிறான் ஒபியோரா முடிவாக.

   அவள் அவனை மெள்ளத் திருப்பி, அவனது முதுகில் சோப்பைத் தேய்க்கிறாள். பேசுவதற்கு இனி ஒன்றுமில்லை. அது நடந்துவிடும் என்பதை என்கெம் அறிவாள்.
   நைஜீரியாவின் இபோ இனத்தவரான சிமாமண்டா என்கோஜி அடிச்சீ 15.9.1977 அன்று நைஜீரியாவின் அநம்ப்ரா மாநிலத்தில் உள்ள எநுகு எனும் ஊரில் பிறந்தார். அவரது முதல் நாவல் பர்ப்பிள் ஹைபிஸ்கஸ் (Purple Hibiscus) அக்டோபர் 2003-ல் வெளியிடப்பட்டு 2005-ம் ஆண்டு காமன்வெல்த் நாட்டு எழுத்தாளர்களுக்கான விருதினைப் பெற்றது. 2004ம் ஆண்டு ஆரஞ்சு (Orange), புக்கர் (Booker) ஆகிய விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நூல்களின் பட்டியலில் இடம்பெற்றது. 2003ம் ஆண்டு ஓ ஹென்றி (O Henry) விருதினைப் பெற்றார். 2006-ல் வெளியான அவரது இரண்டாவது நாவல் ‘மஞ்சள் நிறச் சூரியனின் பாதி’ (Half of a yellow sun), 2007-ம் ஆண்டிற்கான ஆரஞ்சு விருதினைப் பெற்றது.

   தனது படைப்புகள் யாவும் உண்மையை அடிப்படையாகக்கொண்டே எழுதப்பட்டவை என்றும் அவற்றில் தனது கற்பனை சிறிதளவே கலந்துள்ளது என்றும் அடிச்சீ கூறுகிறார். அடிச்சீ, தற்போது நைஜீரியாவிலும் அமெரிக்காவிலுமாக வாழ்ந்து வருகிறார். தான் அமெரிக்காவில் இருந்தாலும் எப்போதுமே ஒரு நைஜீரியப் பெண்ணாகவே தன்னை உணர்வது தனக்கு இணக்கமாக உள்ளதாகக் கூறும் அவர், ‘உலகை நான் நைஜீரியக் கண்கள்கொண்டே பார்க்கிறேன்’ என்கிறார். இந்த ‘நகல்’ சிறுகதை உள்ளிட்ட அடிச்சீயின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு ‘உன் கழுத்தைச் சுற்றி இருப்பது’ என்ற தலைப்பில் ‘பாரதி புத்தகாலய’த்தில் விரைவில் வெளிவரவிருக்கிறது. 
   https://www.vikatan.com
  • By நவீனன்
   அப்பாவின் காதலிக்கு ஒரு கடிதம் - சிறுகதை
     கணேசகுமாரன், ஓவியங்கள்: ஹாசிப்கான்  
   என் தந்தை மேல் பிரியமானவருக்கு... என் தாய்க்கு மகனாக நான் எழுதிக்கொள்வது...
   இப்போது உனக்கு, மன்னிக்கவும் உங்களுக்கு 55 வயது இருக்கலாம். என்னைப் பெற்றவளைவிட ஐந்து வயது குறைவானவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இத்தனை வயதில், இவ்வளவு நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு எழுதும் இந்தக் கடிதம், ஆச்சர்யமானது மட்டும் அல்ல; அவசியமாகிப்போன துர்பாக்கியம் நிகழ்ந்திருக்கக் கூடாதுதான்.
   'கந்தசாமிக்கு, வாரத்துக்கு எட்டு நாள் இருந்தா ரொம்பச் சௌரியமா இருந்திருக்கும். நைனார்குளத்துல நாலு நாளும், தாமரைக்குளத்துல நாலு நாளுமாப் பிரிச்சு வாழ்ந்திருவான். அவனும் என்ன செய்வான் பாவம். ஏழு நாளாப் போச்சுல்ல. ஒருநாள் குறைவாப்போனதுல பாவம் அவனுக்குத்தான் எவ்ளோ சிரமம்’ என்று தெருவாசிகள் என் அப்பாவைப் பேசும் கேலிப்பேச்சு, என் சிறு வயது மூளைக்கு அப்போது புரியவில்லை.
   அப்பாவும் பெரிதாக மறைத்தும் வாழவில்லை. நண்பர்கள் அவரிடம் கிண்டலாக, 'அங்கே எப்பிடி மாப்ளே சௌவுரிய மெல்லாம்?’ என்று கேட்டால், தளும்பும் சிரிப்புடன் திமிராகவும் கம்பீரமாகவும், 'அவளுக்கு என்ன... எப்பவும்போல நல்லாத்தான் இருக்கா...’ என்பதில் அப்பாவுக்கு இருந்த அதீத சந்தோஷம் எனக்குப் புரியவில்லை.
   நாங்கள் வளரும் காலத்தில், உங்களுக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அதையெல்லாம், என் அம்மாவின் கண்ணீரை முன்னிறுத்தியே வெறுத்தோம். கண்மை, சாந்துப்பொட்டு, முல்லைப் பூ, சிவப்பு நிறம், பி.சுசீலா. மூன்று பெண்பிள்ளைகள் வளரும் வீட்டில், கண்மையும் சாந்துப்பொட்டும் வெறுக்கக்கூடிய ஒன்றாக ஆனது உங்களால்தான் என்பது, கொஞ்சம் கொடூரம்தான். இவற்றுள் என் அப்பாவும் அடங்கிப்போனது எங்கள் துரதிர்ஷ்டம்.
   சுசீலா - என்னவோர் அருமையான பாடகி. இன்று வரை அந்தத் தேன்குரலை நான் மனதார ரசித்ததே இல்லை. பாடல் கேட்கும்போது பாடியவர் பெயர் மனதுக்குள் சுற்றிச் சுழல்வதால், என்னால் அவர் பாடிய எல்லாப் பாடல்களையும் வெறுக்கத்தான் தோன்றியது.
   திடீர் திடீரென்று அப்பா காணாமல்போகும்போது எல்லாம் என்னைப் பெற்ற வளுக்குத் தெரிந்த ரகசியம், எங்களுக்குத் தெரியாது. காணாமல்போன அப்பா, திரும்ப வீட்டுக்கு வரும்போது எல்லாம் அவரிடம் தாளாத சந்தோஷமும், மூச்சுக்காற்றில் புதிதாக ஒரு வாசனையும், எங்களுக்கு என வாங்கிவரும் இனிப்பில் அன்பு அதிகமாகவும் இருக்கும். குடும்பத்தில் மூத்த ஆண்பிள்ளையாக என்னையும், எனக்குப் பிறகு மூன்று பெண் குழந்தைகளையும் வைத்துக்கொண்டு, என்னைப் பெற்றவள் தனியாகப் பட்டப் பாட்டுக்கும், அழுத கண்ணீருக்கும் நீங்கள்தான் காரணம் என்பது வளரவளர எனக்குப் புரிந்ததில், உங்கள் மீது வெறுப்பு தோன்றியது. ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த வேதனையையும் சம்பாதித்து வாழும் நீங்களும் ஒரு பெண்தானா என்று ஆத்திரம் ஆத்திரமாக வரும். நைனார்குளத்துக்கும் தாமரைக்குளத்துக்கும் இடையில் ஒரு மணி நேர பஸ் பயணம்தான். செட்டிக்குளம், கழுநீர்க்குளம் கடந்தால், நைனார்குளம். வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை, என் அப்பா இறங்கிப்போகும் அந்தப் பேருந்து நிலையம்தான், நான் இந்த உலகிலேயே வெறுக்கும் முதல் இடமாக இருந்தது.
   தாய்க்கோழியின் சிறகுகளுக்குள் குஞ்சுகளாக எங்களைப் பொத்திக்கொண்டு, வரும் உறவுகளிடம் எல்லாம், 'தோப்பு ஏதோ வெலைக்கு வந்துருக்காம். அதைப் பத்தி பேச அசலூருக்குப் போயிருக்காங்க’ என்று அம்மா சொல்லும் பொய்யின் இயலாமை, சாணம் மெழுகப்பட்ட விறகு அடுப்பின் முன் அன்று இரவு அமர்ந்து, எங்களுக்குத் தோசை வார்த்துத் தரும்போது கண்ணீராக வழியும். அப்பா, கோபம் வந்து கத்தும்போது எல்லாம் சொல்லும் ஒரே வாக்கியம், 'உங்களுக்கு சோத்துல குறை ஏதும் வெச்சிருக்கேனா?’ என்பதுதான். ஆனால் அம்மா, தன் வயிற்றையும் மீறி என் அப்பாவை நேசித்தாள். அப்பாவுக்கு அது புரியவில்லையா, இல்லை புரிந்தும் அம்மாவை வெறுத்தாரா என்பது, அப்போது எனக்குப் புரியவில்லை.
   அப்பா, என் அம்மாவை எங்கே வெறுத்தார் என்பது, கொஞ்சம் வளர்ந்த பிறகுதான் புரிந்தது. அவரின் சுதந்திரத்தில் என்னைப் பெற்றவள் தலையிட்ட குறுக்கீடு. குடிப்பது என்பதை, அப்பா கொண்டாட்டமாகத்தான் விரும்பினார். அதை என் அம்மாதான் துக்கத்துக்கான வடிகாலாக மாற்றினாள். நைனார்குளத்தில், என் அப்பாவின் சுதந்திரம் இருந்தது; சந்தோஷம் இருந்தது; கொண்டாட்டம் இருந்தது. உங்களோடு என் அப்பாவையும், அவர் தேடிச்சென்ற குடியையும் அடியோடு வெறுக்கத் தொடங்கியது அன்றில் இருந்துதான். 'கந்தசாமிக்கு ரெட்டைக் குதிரை சவாரி கைவந்த கலைதான் போ...’ என்று ஊர் பேசும் பேச்சுக்கு முன், நான் தலை குனிந்துதான் நடந்தேன்.
   நான் தலை நிமிர்ந்தும், ஏதும் மாறிவிடவில்லை. எனக்கு வேலை கிடைத்து மூத்த ஆண்பிள்ளையாக என் குடும்பத்தை வழிநடத்தும் தைரியம் வந்தும், என் அம்மா, அப்பாவுக்குப் பயந்தவளாகத்தான் வாழ்ந்தாள். முதலில் தங்கைகளுக்குத் திருமணம்... பிறகுதான் எனக்கு என்று பிடிவாதமாக இருந்ததால், என் வயதும் ஏறிக்கொண்டேபோனது, என்னைப் பெற்றவளுக்கு இன்னும் கவலையைத்தான் தந்தது. உறவினர்களுக்கு மத்தியில் அப்பாவின் இன்னோர் உறவு தெரிந்திருந்ததே, தங்கைகளின் திருமணத்தைக் கேள்விக்குறியில் தள்ளியது.

   'நாளப்பின்னே நெலம் நீச்சு சொத்துப்பத்துல எனக்கும் உரிமை உண்டுனு அவ வந்து நின்னா, நீ என்ன பண்ணுவே மரகதம்? அவளுக்கு இருக்கிற துணிச்சல் உனக்குக் கிடையாதே... உன் வீட்டுக்காரன் குடிச்சிட்டு வந்து உன்னை அடிச்சா, வாங்கிட்டு நிக்கிறவ நீ. எங்க புள்ளையை உன் பொண்ணுக்குக் கட்டிக்குடுத்துட்டு, நாளைக்கி இந்தப் பஞ்சாயத் துக்கு எல்லாம் எங்க மானத்தை விட்டுட்டு வர மாட்டோம்’ என்ற கூடப்பிறந்த அண்ணன் மனைவியின் காதில், 'இவரு... அங்க போக வரத்தான் இருக்காரு மதினி. தாலி கட்டிக் குடும்பம் நடத்தலை...’ என்ற என் அம்மாவின் குரல் கம்மிய போது, 'அப்பன்னு ஒருத்தன் இந்தக் குடும்பத்துக்கு எதற்கு?’ என்று எல்லாம் யோசித்தது உண்டு.
   'சொந்தத்துல கட்டித்தான் நான் இப்பிடிக் கேள்வி கேக்க ஆள் இல்லாம இருக்கேன். நீ பிறத்தியில் பாருப்பா...’ என்ற என் அம்மாவின் வேண்டுகோளும் அத்தனை சீக்கிரம் சரியாகிவிடவில்லை. உங்களுடனான என் அப்பாவின் உறவை மறைத்து, என் மற்றும் தங்கைகளின் கல்யாணம் முடிக்க நாங்கள் பட்ட பாட்டை, நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். இன்னமும் நாங்கள் சம்பந்தம் செய்த குடும்பத்தின் பல உறவுகளுக்கு, என் அப்பாவின் இன்னொரு வாழ்க்கை தெரியாது. எல்லா விசேஷங்களிலும் அப்பா என்ற ஸ்தானத்தில் இருந்து மரியாதை தந்ததைத் தவிர, வேறு எதிலும் அவர் ஈடுபட்டது இல்லை. எனக்கும் குழந்தைகள் பிறந்தன. எல்லோருக்கும் அவரவர் அப்பாதான் ரோல்மாடல் என்பார்கள்; எனக்கும்தான். ஆனால், ஓர் அப்பா எப்படி இருக்கக் கூடாது என்பதில்தான், அவர் ரோல்மாடல்.
   ஆனால், எல்லாம் மாறியது 10 நாட்களுக்கு முன்னால்தான். நடுராத்திரி எழுந்து எங்கோ போனவர், அதன் பிறகு வரவே இல்லை. வழக்கம்போலத்தான் என்று அலட்சியமாக இருந்த எங்களுக்கு, நான்கு நாட்கள், ஒரு வாரமாகி, பின் 10 நாட்கள் ஆனதும் பயம் வந்தது. 'இனிமேல் வரவே மாட்டாரோ?’ என்று சந்தேகம் வந்த ஒரு நாளில் அப்பா வந்தார். நிறையக் குடித்திருந்தார். எப்போதும் முகம் மழிக்கப்பட்டு, தன்னை மைனராகவே காட்டிக்கொள்ளும் அப்பாவின் முகத்தில், தாடி மண்டியிருந்தது; கவலை அப்பியிருந்தது. யாரிடமும் எதுவும் பேசவில்லை. சாப்பாடு வைத்தால், சாப்பிட்டார். பழைய கந்தசாமியாக அவர் இல்லாதது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
   அன்று ஈஸிசேரில் சாய்ந்தபடி, அவர் கையில் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தது ஒரு பெண்ணின் புகைப்படம். பாஸ்போர்ட் சைஸைவிட சற்றே பெரிதான படம். அதன் பின்னே ஏதோ எழுதினார். பின் தன் சட்டைப்பையில் வைத்தார். ஒருநாள் அவர் வீட்டில் இல்லாத சமயத்தில், அவரின் சட்டைப்பையை ஆராய்ந்ததில் அந்த போட்டோ கிடைத்தது. போட்டோவின் பின்னால் நுணுக்கி நுணுக்கி எழுதப்பட்டிருந்த எழுத்து, என் அப்பாவுடையது. நான் பிறந்ததில் இருந்து அன்றுதான் என் அப்பாவின் கையெழுத்தைப் பார்த்தேன். அதில் எழுதியிருந்த வார்த்தைகள்தான், இந்த ஜென்மத்தில் நான் பார்க்கவே கூடாது என்று நினைத்திருந்த, நீங்கள் வாழ்ந்த ஊரினை நோக்கி என்னை பஸ் ஏற வைத்தது. அந்த போட்டோவில் நீங்கள்தான் இருந்தீர்கள். அவ்வளவு அழகு. என் அப்பாவின் தவறான உறவின் அழகு. 'பொத்துப்போன மாரோட என் சுசீம்மா, என் விரலை இறுகப் பிடிச்சிருந்தா. அழுதுக்கிட்டு இருந்த என்கிட்ட ஒரு வார்த்தை பேசலை. என்னையே பாத்துக்கிட்டு இருந்தவ, கை இறுக்கம் கொஞ்சம் கொஞ்சமாக் கொறஞ்சி என்னைவிட்டுப் போயிட்டா. அப்புறம் வரவேயில்லை...’ - இதுதான் அந்த போட்டோ பின்னால் எழுதப்பட்டிருந்த வரிகள். கீழே... அன்று நடுராத்திரி, அவர் எழுந்துபோன நாளின் மறுநாள் எழுதப்பட்டிருந்தது. எனக்கோ ஆச்சர்யமாக இருந்தது. 'என் அப்பா அழுதாரா?’ என்னால் நம்பவே முடியவில்லை. நான் மறுநாளே உங்களைப் பார்க்க தாமரைக்குளத்துக்கு பஸ் ஏறினேன்.

   பெரிதாக விசாரணை எதுவும் தேவைப்படவில்லை. உங்கள் பெயரைச் சொன்னதுமே, வீட்டை அடையாளம் காட்டிவிட்டார்கள். எங்கள் ஊரில் பெரிய பணக்காரர்களின் அடையாளமான மிகப் பெரிய ஓட்டு வீடு. இந்த வீட்டுக்கா அப்பா வந்து போனார்? ஆச்சர்யமாக இருந்தது. ஒரு கணம், என் வீட்டின் சாணம் பூசப்பட்ட தரையும், விறகு அடுப்பில் கழிந்த சிறு வயது வாழ்க்கையும் கண் முன் வந்து போயின. இத்தனை பெரிய, பழங்காலப் பணக்காரத்தனமான வீட்டில், என் அப்பாவின் சந்தோஷம் கூடுதலாகத்தான் இருந்திருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.
   பூட்டப்பட்டிருந்த வீட்டின் பக்கத்து வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தவர் என்னைப் பார்த்ததும் எழுந்து வந்தார். அப்பாவின் வயது இருக்கும். 'நீ கந்தசாமி மவனா?’ என்றதற்கு 'ஆமாம்’ எனத் தலையாட்டினேன். 'சாடை தெரிஞ்சுது’ என்றார் லேசாகப் புன்னகைத்தபடி. 'இங்க சுசீலானு ஒருத்தங்க...’ என்று நான் இழுத்ததுமே, 'அதான்... போய்ச் சேந்துட்டாங்களே... மகராசி. கந்தனை விட்டுப் பிரிஞ்சுபோயி 15 நாள் ஆகுது!’ என்றார்.
   'பிரிஞ்சுன்னா?’
   'சுசீலா செத்துப்போனதைக்கூட ஒன் அப்பன் ஒனக்குச் சொல்லலியா..? அவன் சொல்லித்தான் நீ வந்துருக்கேனு நெனச்சேன்’ என்றார் தொண்டையைச் செருமிக்கொண்டே.
   'கொஞ்சம் வெளக்கமாச் சொல்லுங்க... என்னாச்சு அவங்களுக்கு?’ - எனக்கு குழப்பம் கூடியது.
   'மார்ல புத்துநோயி வந்து போயிட்டாங்க’ என்றதும் சுரீர் என்றது.
   'இல்லீங்கய்யா... எங்க அப்பாவுக்கு இந்த மாதிரி தப்பான தொடர்பு இருக்குனு தெரிஞ்சதுமே, அவரை எங்க வீட்டுல எல்லாருமே வெறுத்துட்டோம். எனக்கு ஒண்ணும் தெரியாது. அவங்களுக்கு வேற சொந்தபந்தம் பசங்க யாரும் இல்லையா?’ என்றதும் என்னை ஏளனமாகப் பார்த்தவர், தன் வீட்டுத் திண்ணைக்கு அழைத்தார்.
   'தம்பி... இந்த உலகத்துல நடக்கிற எல்லாத்துக்கும் தப்பு, சரி சொல்ல நாம யார்? சுசீலா, தப்பு இல்லப்பா. கந்தனுக்கு, சுசீலா குலசாமி மாதிரி. இந்த ஊர்ல உள்ள பணக்காரக் குடும்பத்துல ஒருத்தங்கத்தான் சுசீலா. அப்பா, அம்மா, அண்ணன்கள் நாலு பேருனு பெரிய குடும்பம். ஆனா அவங்க விதி, உன் அப்பனை இந்த ஊர் திருவிழாவுல பாத்தப்போ, கந்தனுக்குக் கல்யாணம் ஆகியிருந்துச்சு. நாங்க எல்லாம், அவங்களை ரொம்ப மரியாதையான தூரத்துலதான் பாத்துருக்கோம். சுசீலா, ரொம்பத் துணிச்சல்காரங்க. 'கந்தனோடத்தான் வாழ்வேன்’னு பிடிவாதமா நின்னு, உறவை எதுத்து, இந்த ஓட்டு வீடு போதும்னு, தான் வாழ்ந்த வீட்டைவிட்டு வெளிய வந்தாங்க. எங்களுக்கு, உன் அப்பன் மேல அப்போ அவ்வளவு பொறாமை. 'தாலி கட்டி வாழ்வோம்’னு உன் அப்பன் சொன்னப்போ, அது உன் அம்மாவுக்குச் செய்யுற துரோகம்னு, சுசீலா கடைசி வரைக்கும் தாலியே கட்டிக்கலை. அப்புறம் எங்கேர்ந்து புள்ளைங்க? ஒரு புள்ளை பெத்து, பால் குடுத்து வளத்திருந்தா, அந்த மார்ல புத்துநோய் வந்திருக்காதோ என்னவோ?! உன் அப்பனுக்காக, உன் குடும்பத்துக்காகத் தாலியும் கட்டிக்காம, புள்ளையும் பெத்துக்காம, ஊர் பேசுன கேவலப் பேச்சு எல்லாம் காதுல வாங்கிக்காம வாழ்ந்தாங்க’ என்றார். கொஞ்சம் பெருமூச்சுவிட்டுப் பின் தொடர்ந்து... 'கந்தன் கொழந்தை மாதிரி. என்ன... சாராயம் குடிக்கிற கொழந்தை. குடிச்சாலும் அவன் கொழந்தைதான்.’ என்றார்.
   'அப்பா, அடிக்கடி இங்க வருவாரே...’ என்றேன்.
   'வருவான்... உன் அம்மாவுக்கும் அப்பனுக்கும் என்ன பிரச்னையோ எனக்குத் தெரியாது. ஆனா, இங்க கந்தன் வரும்போது ஏதாவது மனக்கஷ்டத்தோட வந்தாலும், சுசீலாம்மாவைப் பாத்ததும் அவனுக்குக் கவலை எல்லாம் மறந்திடும். பக்கத்து வீடுங்கிறதால என்கூட மட்டும் பேசுவான். சொந்த உறவுமுறையில கட்டுனதால, உன் அம்மாவோட பிடிப்பு இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்றதாச் சொல்வான். அவன் கல்யாணமே, உன் அம்மா பிடிவாதத்துல நடந்ததாச் சொல்வான். கட்டாயத்துக்குத் தாலி கட்டி சம்பிரதாயத்துக்குப் புள்ள பெத்து... அது வாழ்க்கை இல்லை தம்பி. கந்தசாமிக்கு, சுசீலா பொண்டாட்டி இல்லை... கொழந்தை. ஏதோ சின்னப்புள்ளைங்க மாதிரி வெளையாடிக்கிட்டு இருப்பாங்க. கந்தன் குடிப்பான்; நெறையக் குடிப்பான். மீன்ல இருந்து கறி வரைக்கும் வாங்கி, அவனுக்குச் சமைச்சுப்போடுவாங்க சுசீலாம்மா. எல்லாம் உன் அப்பன் குடுக்கிற காசுலதானே தவிர, அஞ்சு பைசா அவங்க வீட்டு காசு கிடையாது. பேருக்கு ஏத்தாப்புல அற்புதமாப் பாடுவாங்க. ராத்திரி நேரத்துல உன் அப்பனுக்கு மட்டும் கேட்கிற மாதிரி அவங்க பாடுற 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே...’ பாட்டை, நான் ரெண்டொருவாட்டி ஒட்டுக்கேட்டுருக்கேன் தம்பி’ என்றார் கசந்த சிரிப்புடன்.
   'கேன்சருக்கு வைத்தியம் பாக்கலையா?’ என்றேன் தாள முடியாமல்.
   'கந்தனுக்குத் தெரியாம, மறைச்சே வாழ்ந்திருக்காங்க சுசீலாம்மா. இந்த விஷயம் அவனுக்குத் தெரிஞ்சா அவன் தன்னோட சந்தோஷத்தை இழந்துருவான்னு, அவன்கிட்ட எதுவும் சொல்லலை. முத்திப்போச்சு... 'ஒண்ணும் பண்ண முடியாது’னு டாக்டருங்க கையை விரிச்சுட்டாங்க. உன் அப்பன்தான் மெனக்கெட்டான். அவ்ளோ வலியிலேயும் உன் அப்பனை, உன் வீட்டுக்குப் போகச் சொல்வாங்க... கந்தன், போக மாட்டான். பிடிவாதமா அனுப்பிவைப்பாங்க. போறப்போ உன் அப்பன் என்கிட்ட சொல்லிட்டுப் போவான். கண்ணு ரெண்டும் கலங்கிக் கிடக்கும். ஆனா, 'செத்தா... உன் அப்பன் கொள்ளி வெச்சாத்தான் வேகும்... என் கட்டை’னு சொல்லிட்டுத்தான் போனாங்க மகராசி. அதுபோல உன் அப்பன்தான் கொள்ளி வெச்சான். 10 நாள் இந்த வீட்டுல இருந்து, எல்லா காரியமும் முடிச்சிட்டுப்போன உன் அப்பன் இன்னும் வரல. நீ வந்து நிக்கிறே’ என்றார்.
   எல்லாவற்றையும் ஜீரணிக்க, எனக்கு மிகக் கஷ்டமாக இருந்தது. உங்களைப் பார்க்க வேண்டும்போல இருந்தது. இது என்ன வாழ்வு? இப்பிடி ஒரு வாழ்க்கையை, என் அப்பாவுடன் வாழ்ந்து சாக ஏன் ஆசைப்பட்டீர்கள்? இரண்டு ஊர் தள்ளி நின்று, இத்தனை நாட்களாகப் பல மனிதர்கள் உங்களைக் காரி உமிழ்ந்தது உங்களுக்குத் தெரியுமா? என் அப்பா மீது நீங்கள் வைத்த காதலில், கடைசியில் உங்களுக்கு மிஞ்சியது என்ன? எங்களின் சித்தி என்ற உறவுமுறையைக்கூட வெறுத்து, அப்பாவின் வைப்பாட்டி என்ற சொல்லில் உங்களுக்கு அப்படி என்ன நிறைவு? எல்லாவற்றையும் உங்களிடம் கேட்டு, பதில் பெற விருப்பமாக இருக்கிறது. முகவரி தெரியாத, தெரிந்துகொள்ள விரும்பாத இந்தக் கடிதம் மட்டுமே, கடைசியில் மிச்சமாக ஆனது. அஞ்சல் செய்ய முடியாத இந்தக் கடிதம், என் அப்பா, நீங்கள், நாங்கள் வாழ்ந்த வாழ்வின் சாட்சியாக, கடைசி வரை என் டைரியிலே இருந்துவிட்டுப் போகட்டும்.
   இப்படிக்கு,
   கந்தசாமியின் மகன்
   ராமன்.
   https://www.vikatan.com
  • By நவீனன்
   அன்பின் நிழல் - சிறுகதை
     செந்தில் ஜெகன்நாதன் - ஓவியங்கள்: ஸ்யாம்  
   மனம் மிகவும் சோர்ந்துபோய் உட்கார்ந்திருக்கிறேன். வாழ்க்கையில் முதன்முறையாக மது குடிக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. இதோ இந்த ஐந்தாவது மாடியிலிருந்து அப்படியே குதித்துவிடலாமா என்றிருக்கிறது. சற்று முன்னர் சுவரில் மோதிக்கொண்டதால் தாங்க முடியாத தலைவலி இருந்துகொண்டேயிருக்கிறது. இதயத்துடிப்பு இப்போது என்ன வேகத்தில் இருக்கிறது என்றெல்லாம் தெரியவில்லை. அது துடிக்கவில்லை என்றாலும் பிரச்னையில்லை.

   ஏன் இப்படி மனக்கிலேசத்துடன் அல்லாடுகிறேன்? ஏன் இப்படிப் புலம்புகிறேன்? காரணம், என் அப்பாவை இப்போதுதான் கட்டிப்போட்டுவிட்டு வந்திருக்கிறேன். ஆம், என்னைப் பெற்ற தந்தையைத்தான்! அவரின் தொண்டைச் செருமலையோ, தும்மல் சத்தத்தையோ கேட்டாலே கால்சட்டையிலேயே சிறுநீர் போகிறவன்,  `டேய்...’ என்ற அந்தக் குரலுக்கு உடல் ஒடுங்கி மிரள்பவன், இன்று அவரின் கைகளை முறுக்கி இழுத்துக் கட்டிப்போட்டுவிட்டு வந்திருக்கிறேன்.

   அப்பா ஒரு சுயம்பு; தானே வளர்ந்த வன விருட்சம். தாத்தா, வெறும் நாற்பது குழி நாற்றங்காலைத் தவிர வேறெதுவும் வைத்துவிட்டுப் போகவில்லை. அப்பா தலை கிளம்பி உண்டானதுதான், நஞ்சை புஞ்சையென இரண்டு வேலி நிலமும், வாழைத்தோப்பும். கூடவே வீடு வாசல் என வந்த அனைத்துமே அப்பாவின் வியர்வையால் வந்தவைதான்.

   தனது ஒன்பது வயதில் ஏர் பூட்டி உழத் தொடங்கிய அப்பாவின் உழைப்பைத்தான், ஊருக்குள் உருப்படாமல் சுற்றித் திரியும் பையன்களுக்குப் பாடமாகச் சொல்வார்கள் ஊர்க்காரர்கள்.

   `ஒற்றை ஆளாக உழவடித்து, நடவு நட்டு, களை பறித்து, அறுவடை செய்து, பெரிய களத்தில் முதல் ஆளாகக் கதிரடித்து, ஊரிலேயே அதிக கொள்முதல் என்ற பெருமையோடு வீட்டுக்கு நெல்மூட்டை சுமந்து வருவார்’ என ஊருக்குள் பல பேர் வெவ்வேறு தருணங்களில் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

   வீட்டில் எல்லோரிடமும் கண்டிப்போடுதான் இருப்பார் அப்பா. குறிப்பாக, என்னிடம் மேலதிக கடுமையாக இருந்தார்.

   பள்ளி நாளில், ஓவியம் வரைவதில் எனக்குப் பெரும் ஆர்வம் இருந்தது. ஒருநாள் பத்திரிகையில் வெளியான ஒரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு சார்ட் அட்டையில் வரைந்துகொண்டிருந்தேன். திடீரென முதுகில் யாரோ உதைக்க,  நிலைகுலைந்து குப்புற விழுந்தேன். நிதானிப்பதற்குள் சரமாரியாக அடித்தார். வலி தாங்கவியலாமல் தடுமாறி விழுந்தேன். வரைந்து வைத்திருந்த சார்ட் அட்டைகள், ஏற்கெனவே வரைந்து வைத்திருந்தவை என எல்லாவற்றையும் என் கண்ணெதிரிலேயே தீயிட்டுக் கொளுத்தினார். அன்றிரவு முகம் முழுக்க அழுத பிசுபிசுப்போடு படுத்திருந்தேன்.

   ``அந்தப் பய இன்னொரு தடவை படம் வரையிறேன்னு ஏதாவது தாளுல கிறுக்கிக்கிட்டு இருந்தான்னா அந்தத் தாளோட அவனையும் கொளுத்திப்புடுவேன்னு சொல்லு” என்று அம்மாவிடம் கடுங்கோபமாகச் சொல்லியதைக் கேட்டு, போர்வையை இழுத்து மூடிக்கொண்டு அழுத அந்த இரவின் கண்ணீர், இன்னும் எனக்குள் காயவே இல்லை. `அவர் என்னைப் பற்றி எதையும் புரிந்துகொள்ளாமலேயே ஓர் அப்பாவாக எப்படி இத்தனை காலமாக இருந்தார்?’ என்ற கேள்வி அடிக்கடி எனக்குள் எழும்.

   அவர் என்னை நினைத்துப் பெருமைப்பட்டுப் புன்முறுவல் செய்கிறார் எனப் பலமுறை கற்பனையாக நினைத்துப்பார்த்தும், அந்தச் சித்திரத்தை மனதுக்குள் என்னால் கொண்டுவர முடிந்ததே இல்லை. அப்போதெல்லாம் எனக்கு விரக்திச் சிரிப்புதான் மிஞ்சும்.

   அப்பா இறந்திருந்தால், இன்று மூன்றாவது நாள் ஆகியிருக்கும். புதைத்த இடத்தில் நவதானியம் விதைத்துப் பால் தெளித்திருப்போம். `ச்சே, ஏன் இப்படியெல்லாம் தோன்றுகிறது எனக்கு? ஏன் அவர் இறக்கவில்லை என்று என் மனம் நினைக்கிறதா? ஐயோ அப்படியில்லை, அவர் என் அப்பா.’ ஆனால், அவர் செய்த காரியம் அப்படியானதுதான்.

   அப்பாவுக்கு மதுப்பழக்கம் ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் அறிமுகமானது. ஒருநாள் டீக்கடை கலியபெருமாள் மாமா சொன்னது, திரும்பத் திரும்ப நினைவில் வந்துகொண்டேயிருக்கிறது.  ``நாப்பது அம்பது வருஷம் குடிக்கிறவன் குடிய, ஒப்பன் நாலஞ்சி வருஷத்திலேயே குடிச்சிட்டான்டா சீனி” என்றார். அந்த நேரத்தில் சிரிப்பதுபோல பாவனை செய்தாலும், அன்று  அப்பாவை நினைக்க நினைக்க உடம்பில் நெருப்பைக் கொட்டியதுபோல அழுகையும் கோபமும் பொங்கிக்கொண்டு வந்தன.

   என் இரண்டு அக்காக்களின்  திருமணத்துக்கு வாங்கிய கடன், எனக்கும் தம்பிக்கும் படிப்புச் செலவுகள், வீடு கட்டியது, அம்மாவின் ஆஞ்சியோ எனச் செலவுமேல் செலவாக, பம்புசெட்டோடு அய்யனார் கோயில் வடக்கே இருந்த வயலை விற்றதிலிருந்துதான் விரக்தி அவரைத் தொற்றிக்கொண்டது. அதுவே அவரை மதுக் குவளைக்குள் தள்ளி தினம் தினம் வீட்டைக் கலவரத்துக்கு உள்ளாக்கியது.

   பிறகு, நானும் தம்பியும் வேலை கிடைத்து நன்றாகச் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டோம். பணக்கஷ்டம் என்பது இப்போதில்லை. அலுவலகத்தின் ஒரு புதிய புராஜெக்ட் ஒப்பந்தத்துக்காக அடுத்த மாதம் சான்ஃபிரான்சிஸ்கோ செல்லும் வாய்ப்பை மேலாளர் எனக்கு வழங்க இருப்பதாக, சென்ற வாரம்தான் அதிகாரபூர்வ மின்னஞ்சல் செய்திருந்தார். அதனால் இப்போதைய ஊதியத்தைவிட மேலும் முப்பது சதவிகித ஊதிய உயர்வு கிடைக்கும்.

   தம்பியும் சொல்லிக்கொள்ளும்படியான சம்பளம் வாங்குகிறான். அம்மாவிடம்  ``அவரை குடிக்காம இருக்கச் சொல்லு. ஆபீஸ்ல லோன் கீன் போட்டாவது அந்த நிலத்தை மீட்டுடலாம்” எனச் சொல்லியிருக்கிறோம். அம்மாவும் அவரிடம் தயங்கியபடி சொல்வார். நாங்களே ஜாடையாக அவருக்குக் கேட்கும்படி அம்மாவிடம் சொல்வதுபோலவும் சொல்வதுண்டு. ஆனால், இவை எதுவும் அப்பாவின் தோள் துண்டைக்கூடத் தொட்டுப் பார்க்கவில்லை என்பதும் எனக்குத் தெரியும்.

   அப்பா குடிப்பதைத் தாண்டி, அவரிடம் ஒரு பெரும் பிரச்னை இருந்தது. குடித்தவுடன் ``நான் சாவப்போறன்” என்று களைக்கொல்லி மருந்தையோ, பால்டாயிலையோ கையில் வைத்துக்கொண்டு மிரட்டுவார். சாப்பிட உட்கார்ந்த அம்மா, அப்படியே சாப்பாட்டில் ஈ மொய்க்க... விழியில் நீர் வழிய... படபடப்போடு தூங்காமல் விடிய விடிய உட்கார்ந்திருப்பாள். நானோ, தம்பியோ ஊருக்குப் போவதாக இருந்தால் சரியாக எங்கள் காதில் கேட்கும்படி ``காலையில நான் இருக்க மாட்டேன். அய்யனார் கோயில் மேலண்ட வரப்பு ஓரமா பொதைக்கணும்” எனச் சொல்லிவிட்டு, அவர்பாட்டுக்குச் சென்றுவிடுவார். நாங்கள் அன்று அவர் சிறுநீர் கழிக்கப் போனாலும் கூடவே பின்தொடர்ந்து கண்காணிக்கவேண்டியிருக்கும்.

   ஒருநாள் மதிய நேரம் 3 மணி இருக்கும். அம்மா ரேஷன் கடையிலிருந்து மண்ணெண்ணெய் வாங்கிக்கொண்டுவந்து வைத்துவிட்டு, மதியச் சாப்பாட்டுக்குத் தயார்செய்யத் தொடங்க, ஏற்கெனவே பசியால் கடுங்கோபத்தில் இருந்தவர், மண்ணெண்ணெயை கேனோடு தூக்கி, தலை உடலெங்கும் ஊற்றிக் கொண்டு தீப்பெட்டிக்காகச் சமையலறைக்கு வந்த விஷயமறிந்து அம்மா கத்த, அப்போது ஒருமுறை காப்பாற்றப்பட்டார். இப்படியான நேரத்தில் அவரை எதையாவது எடுத்து அடித்துவிடலாமா என்றிருக்கும்.

   அவர் இப்படிச் செய்வதும், அம்மா எங்களுக்கு போன் பண்ணிச் சொல்வதும் நாங்கள் ஒருவர் மாற்றி ஒருவர் லீவ் போட்டு ஊருக்குப் போய் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர யாரையாவது கூப்பிட்டு சமரசம் பேசுவதும் நீண்டுகொண்டே சென்றது. அதுபோன்ற தொலைபேசி அழைப்புகள் வரும்போதெல்லாம், `அவர் இப்படி இருந்து எல்லோரையும் கஷ்டப்படுத்துவதற்கு, செத்தேபோகலாம்’ என்றுகூடத் தோன்றும்.

   கடைசியாக ராமசாமி தாத்தாவைக் கூப்பிட்டுப் பஞ்சாயத்துவைத்து `இனிமேல் எதுவும் செஞ்சுக்க மாட்டேன்’ எனப் பாலை வைத்து சத்தியம் பண்ணவைத்தோம். சத்தியம் செய்த இரண்டு மூன்று நாள் அமைதியாக இருந்தார். அந்த அமைதி, அடுத்து என்ன செய்ய நினைத்திருக்கிறாரோ என இன்னும் கிலியை உண்டுபண்ணியது.

   பல வருடம் மனதை மிரட்டி அச்சமூட்டியவர், சென்ற வாரம் நடத்தியே காட்டிவிட்டார். செவ்வாய்க்கிழமை பின்னிரவில் வீட்டுக் கொல்லையில் மருதணைமரம் ஓரமாக மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு, வாயில் நுரை தள்ளிக் கிடந்திருக்கிறார். அம்மா பார்த்துக் கூச்சலிட்டுக் கத்தவும், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள்.

   என் போன் அடிக்கிறது. சலிப்போடு எடுத்துப் பார்த்தேன். வார்டில் இருந்துதான். அந்தக் கேரள நர்ஸ்தான் கூப்பிடுகிறாள். ``வருகிறேன்” என்று சலிப்போடு சொல்லிவிட்டு, போனை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு கீழே இறங்கினேன். மாடியின் ஒவ்வொரு படியிலிருந்தும் கீழே அடி எடுத்து வைக்க வைக்க, வயிற்றில் இருக்கும் மொத்தக் குடலையும் ஏதோ ஒரு கரம் சுருட்டிப் பிடித்து இழுப்பதைப் போல இருந்தது, பசி.

   வார்டுக்குள் ஒருவித தயக்கத்தோடு நுழைந்தேன். நர்ஸ் என் உடையைப் பார்த்துவிட்டு முகத்தை நோக்கினார். அப்போதுதான் நான்  கவனித்தேன், சட்டையும் பேன்ட்டும் அழுக்கோடு இருந்ததை. பார்க்கவே சகிக்காமல் இருக்கிறேன் எனத் தோன்றச் செய்தது நர்ஸின் முகபாவனை.
   ``இந்த இன்ஜெக்‌ஷனை உடனே வாங்கிட்டு வாங்க. டேப்லெட்ஸ் அஸ்யூஷுவல். அண்ட் உங்க பேலன்ஸ் த்ரீ தௌசன் கொஞ்சம் ரிசப்ஷன்ல கட்டிருங்கப்பா” - கையில் ஒரு சீட்டைக் கொடுத்து விட்டு, படபடவெனச் சொன்னார்.

   ``சிஸ்டர்... ப்ளீஸ்!”

   என்ன என்பதைப்போல என்னை நோக்கினார்.

   ``ஸாரி சிஸ்டர்... ரொம்ப ஸாரி!”

   ``அச்சோ... அது ஒண்ணும் கொழப்பும் இல்லா. அவர் பேஷன்ட்தானே!” - மொத்த முகமும் சலனமில்லாமல் இருக்க, கண்களால் மட்டும் சிரித்துவிட்டு அகன்றார். வலதுகண்ணில் கொஞ்சமாக மை கரைந்திருந்தது.

   நான் `நர்ஸிடம் நியாயமாகக் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்’ என, ஒரு மணி நேரத்துக்கு முன் நினைத்திருந்தேன்.

   இன்று அப்பா நடந்துகொண்ட விதத்தை நினைக்கவே உடல் நடுங்குகிறது. இந்த மருத்துவ மனைக்கு வந்ததிலிருந்தே இரண்டாவது முறை. எப்போதும்போல அப்பாவுக்கு டிரிப்ஸ் போடுவதற்காக நர்ஸ் வந்திருக்கிறார். டிரிப்ஸ் பாட்டிலைப் பிடுங்கி தூர எறிந்து, மருந்துகள் இருந்த பிளேட்டை எடுத்து நர்ஸின் வலது தோள் பட்டையில் அடித்திருக்கிறார். அடியைப் பொருட்படுத்தாமல் சமாதானம் செய்ய முயன்றபோது கேவலமான சொற்களால் திட்டியிருக்கிறார். சத்தம் கேட்டு வந்த வார்டுபாய் பையன் முகத்தில் அறைந்து குளூக்கோஸ் ஸ்டாண்டைக் கையில் வைத்துக்கொண்டு காற்றில் வீசியிருக்கிறார். தடுக்க வந்த பக்கத்து பெட் நோயாளிகளின் உறவினர்கள் எல்லோரிடமும் திமிறிக்கொண்டு வெளியே ஓட முயன்றிருக்கிறார்.

   அப்பாவுக்கும் எனக்கும் சாப்பாடு வாங்கிக்கொண்டு வராண்டாவில் வந்து கொண்டிருக்கும்போதே கூச்சல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. வராண்டா நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஒருவர் விஷயத்தைச் சொல்லவும், நான் வார்டுக்குள் ஓடிவரும்போது அப்பாவை ஒருவர் பின்னேயிருந்து கழுத்தைப் பிணைத்து வளைத்திருக்க, இரண்டு பேர் அவரின் இரண்டு கைகளையும் பிடித்திருந்தார்கள். எதிரே நின்றிருந்த நர்ஸை மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்தார் அப்பா. தன்னைப் பிடித்திருப்பவர்கள் அனைவரையும் தூக்கி வீசும் முனைப்பில் மூர்க்கமாகக் கத்திக்கொண்டிருந்தார். முன் சென்று அவரைப் பிடித்துப் படுக்கவைக்க முயன்றபோது, கெட்டவார்த்தை சொல்லித் திட்டிவிட்டு என் முகத்தில் காறி உமிழ்ந்தார். சத்தம் அதிகமாக, பக்கத்துக்கு வார்டுகளில் இருந்த டாக்டர்கள், நோயாளிகள், அவர்கள் உடன் இருப்பவர்கள் என எல்லோரும் வந்துவிட்டார்கள்; என்னைப் பரிதாபமாகப் பார்த்தார்கள்.

   இப்படித்தான் நேற்று அம்மாவிடமும் தம்பியிடமும் சத்தம்போட்டிருக்கிறார் என்பதாலேயே, நான் இருந்து பார்த்துக்கொள்வதாக அவர்களை வீட்டுக்கு அனுப்பிவைத்தேன். இன்று இன்னும் கடுமையாகவே நடந்துகொண்டுவிட்டார்.

   பதற்றத்தில் என்ன செய்வதென அறியாமல் என் கரங்கள் நடுங்கின. பின்பக்கமாகப் பிடித்திருந்தவரிடம் சைகை செய்து அப்பாவின் மேல் பாய்ந்து பலம்கொண்ட மட்டும் அவரை இறுக்கிப்பிடித்து அவரை பெட்டில் தள்ளி அவருடைய கரங்களை முறுக்கி மின்னல் வேகத்தில் நர்ஸ் கொடுத்த கட்டிப்போடும் வார்களைக் கட்டிலோடு இணைத்துக் கட்டிவிட்டேன். என்மீது எச்சிலை உமிழ்ந்தபடியும் கெட்ட வார்த்தைகள் சொல்லித் திட்டிய படியும் இருந்தார். கட்டிலில் கட்டிப்போட்ட பிறகு டாக்டர் அவருக்கு மயக்க ஊசி போட்டார். இரண்டு கால்களையும் கைகளையும் கட்டியிருப்பதைப் பார்த்த பிறகே சுற்றி இருந்த எல்லோருக்கும் ஓர் ஆசுவாசம் பிறந்தது. எனக்கும் லேசான திருப்தியுணர்வு மனதில் தோன்றி மறைந்தது. அதை நான் வெளிப்படுத்திக்கொள்ளவில்லை.

   ஊசி போட்டதற்குப் பிறகு டாக்டர் என்னைத் தனியே கூப்பிட்டுப் பேசினார். நன்றாக மயங்கித் தூங்கிய பிறகு கட்டுகளை அவிழ்த்துவிட வார்டுபாயிடம் சொல்லியிருப்பதாகச் சொன்னார். நான் ஒன்றும் சொல்ல இயலாமல் மருத்துவமனையின் மொட்டைமாடிக்குச் சென்றுவிட்டேன்.
   உள்ளூர் அரசு மருத்துவமனையில் அப்பா உடம்பில் கலந்த விஷத்தை எடுத்துவிட்டாலும், நினைவு திரும்பாததால் உடனடியாக இந்தத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துவந்தோம். இங்கே கடந்த நான்கு நாள்களாக, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவம் பார்க்கப்பட்டது. நேற்றுதான் சாதாரண வார்டுக்கு மாற்றினார்கள்.

   நேற்று நினைவு திரும்பியதிலிருந்தே அப்பாவின் நடவடிக்கையும் பேச்சும் சரியில்லை. பதறிப்போய் டாக்டரிடம் கேட்டேன். ``மூளைக்குச் செல்லும் நரம்பில் விஷம் ஏறியிருப்பதால், அவரது சிந்தனை மாறியிருக்கிறது; செயல்பாடுகளில் கொஞ்சம் மாற்றம் தெரியும்’’ என்றார் டாக்டர்.
   ``அப்பாவுக்குப் பைத்தியமா டாக்டர்?” எனக் கேட்கும்போதே யாரோ என் தொண்டையை நெரிப்பதுபோல, பேச்சு சன்னமாகவும் நடுக்கத்தோடும் வந்தது.

   டாக்டர் ``பயப்படவேண்டாம் குணப்படுத்திடலாம்” என்று சமாதானம் சொல்லி அனுப்பினார். அதற்குப் பிறகு என்னால் அப்பாவைக் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அவர் மனநிலை சரியில்லாமல் இருக்கிறார் என்பதை ஏற்க மறுத்த என் மனது, சமீப நாள்களில் கிட்டத்தட்ட பைத்திய நிலையைத் தொட்டுவிட்டுத் தொட்டுவிட்டு வந்தது.  ஏதோ ஒரு தருணத்தில் என் நாக்கும் குழன்று, நானும் மூர்க்கமாக நடந்துகொள்வேனோ என்ற அச்சம். யாரிடமும் பேசவே தயக்கமாக இருந்தது.

   வராண்டாவில் யோசனையோடு நடந்து கொண்டிருந்தேன். மருந்தகத்துக்குப் போவதற்கு முன், வார்டுக்குள் நுழைந்து அப்பாவைப் பார்த்தேன். கட்டுகள் அவிழ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் உடை அணிவிக்கப்பட்டு, ஒருக்களித்துப் படுத்திருந்தார். மிகுந்த பதற்றத்தோடு அருகில் சென்று பார்த்தேன். அவரைத் தொடவேண்டும்போலத் தோன்றியது. மெள்ள என் கையை எடுத்து அவரது நெற்றியைத் தொடப்போனேன். விரல்கள் நடுங்க கையைப் பின்னிழுத்துக்கொண்டேன். வலது புறங்கையைத் தாடையில் வைத்துக்கொண்டு, முழங்கால்களை மடக்கி நன்றாக மூச்சுவிட்டு, கைப் பிள்ளையைப்போல் உறங்கிக்கொண்டிருந்தார்.

   அப்பாவைப் பற்றிய கசப்பெல்லாம் மறந்து, அவரிடம் வெறுக்கவே முடியாத ஒரு தோற்றம் வந்திருப்பதை உணர்ந்தேன்.

   பயமாக இருந்தாலும் தயங்கியபடியே அப்பாவின் நெற்றியில் முத்தமிட்டேன். இந்த இருபத்தெட்டு வயதில் நினைவுக்குத் தெரிந்து அப்பாவுக்கு நான் கொடுத்த ஒரே முத்தம் இதுதான்.
   https://www.vikatan.com
  • By நவீனன்
   ஆத்மராகம் - சிறுகதை
     சுபஸ்ரீ முரளிதரன், ஓவியம் : ஸ்யாம்  
   மஹா அக்காவை நான் அங்கு பார்ப்பேன் என்று எதிர்பார்க்கவேயில்லை. முதலில் அது அவள்தான் என்றே தெரியவில்லை என்றாலும், அவள் உதடும் என் உள்ளுணர்வும் அவளைப் பற்றிய விவரங்களைத் தேடத் தூண்டின. கிடைத்த விவரங்கள், எனக்குள் அதிர்ச்சியையும் மனபாரத்தையும் ஏற்றின.

   அங்கிருந்த செவிலியிடம், ``இவங்களை யாரு, எப்போ இங்கே சேர்த்துவிட்டாங்க?’’ என்றேன்.

   ``ஒரு வாரம் ஆச்சும்மா. ஒரு பொண்ணு கூட்டிவந்துச்சு. இப்போ வேலைக்குப் போயிருக்கு’’ என்றாள்.

   ``வேலைக்கா?’’ என்றேன்.

   ``ஆமாம்மா. எங்கேயோ திருச்சி பக்கமாம். இந்த அம்மாவோட மகதான் கூட்டிட்டுவந்துச்சு. நம்ம சென்டரைப் பற்றி யாரோ சொன்னாங்களாம். இங்கே வந்துட்டாங்க. அந்தப் பொண்ணை இங்கே தங்கவைக்க முடியாதுல்ல. அதுதான் `ஏதாவது வேலைக்கும் ஹாஸ்டலுக்கும் ஏற்பாடு செய்ய முடியுமா?’னு கேட்டுச்சு. நம்ம டாக்டரம்மாதான் அவங்க ஃப்ரெண்டு ஆபீஸ்ல வேலைக்கும், பக்கத்துலேயே தங்கவும் ஏற்பாடு செஞ்சாங்க. பாவம்மா... சின்ன வயசு, இருபது இருபத்தொண்ணுதான் இருக்கும். யாருக்கும் இந்த மாதிரி ஒரு நிலைமை வந்துடக் கூடாதுல்ல. வேலைய முடிச்சுட்டு இப்ப வர்ற நேரம்தான். வந்து அம்மா பக்கத்துலேயே உட்கார்ந்து இருந்துட்டு எட்டு மணிக்கு ஹாஸ்டலுக்குப் போயிடும்’’ என்றாள்.

   நான் என் வேலையை முடிக்கவேண்டி, ``எல்லாரும் ரெடியா... பயிற்சி ஆரம்பிக்கலாமா?’’ என்றேன்.

   மூச்சுப் பயிற்சியும் யோகாவும் முடிந்த வுடன் அந்த அறையைக் கடக்கும்போது, அக்காவின் கட்டில் அருகே அந்தப் பெண்ணைப் பார்த்தேன். நேரமானதாலும் மன உளைச்சலாக இருந்ததாலும் நாளை பேசிக்கொள்ளலாம் என வெளியேறிவிட்டேன்.

   முப்பது வருடங்களுக்கு முன்னால், நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். புதிய வீட்டுக்குக் குடிபுகுந்திருந்தோம். அப்போதுதான் அந்த அக்காவை முதன்முதலில் பார்த்தேன். கறுத்த ஒல்லியான தேகம். வயதென்னவோ இருபது இருக்கும். சிரித்த முகம். பெரிய வாய், துறுதுறுவென்ற கண்கள். உதடு மிக அழகாக இருக்கும். அன்றைய காலகட்டத்தில், பின்னால் ஊக்குவைத்த ஜாக்கெட் போடுபவளாக அவளை மட்டுமே பார்த்திருக்கிறேன். தெருவில் யாரோடும் அவ்வளவாகப் பேச மாட்டாள். இரண்டு வீடு தள்ளி இருக்கும் பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்க வருவாள். மின்சாரம் இல்லாத வீடு என்பதால், மாலை நேரங்களில் சிறிது நேரம் வெளியே உட்கார்ந்து கூடை பின்னுவாள். சில நாள் ஏதாவது நாவல் படித்துக்கொண்டிருப்பாள். எனக்கு அவளிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாகிக்கொண்டிருந்தது. மெள்ள பேச்சுக் கொடுத்தேன்.

   ``அக்கா, எனக்கும் கூடை பின்ன சொல்லித் தர்றீங்களா?’’ என்றேன்.

   என்னைப் பார்த்து சிநேகமாகப் புன்னகைத்தாள். என் முயற்சியில் வெற்றி. அவளிடம் பேசியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

   அக்காவுக்கு அம்மாவும் அண்ணனும் உண்டு. அம்மா வீட்டு வேலை செய்பவர். அங்கேயே சாப்பிட்டுவிடுவார்போல.  அந்த வீடுகளிலிருந்து ஏதாவது எடுத்துவந்து அக்காவுக்குக் கொடுத்தாலும் அதையெல்லாம் தொட மாட்டாள். தானாகவே ஏதாவது சமைப்பாள். அவளும் அவள் அம்மாவும் அவ்வளவாகப் பேசிப்பார்த்ததேயில்லை.

   அண்ணன் எப்போதாவது வீட்டுக்கு வருவான். அவனைப் பார்த்தால் எனக்கு பயம். அரசியல் கட்சி ஒன்றின் தீவிரத்தொண்டன். அவனும் தாயிடமோ, தங்கையிடமோ பேசிப்பார்த்ததில்லை. யாரும் இல்லாத நேரத்தில், அக்கா பாத்திரம் கழுவும்போதும் சமைக்கும்போதும் அவர்கள் வீட்டுக்குள் சென்று பேசிக்கொண்டிருப்பேன். அதை வீடு என்பதைவிட, ஓர் அறை என்றே சொல்லலாம். நுழைந்தவுடன் வலதுபக்க ஓரத்தில் அடுப்பும் அருகிலேயே பாத்திரம் கழுவ முற்றமும் இருக்கும். அக்கா அங்கேதான் குளிப்பாள்.

   கூரை வேயப்பட்ட அதன் முட்டுக்குச்சியில் கண்ணாடி மாட்டப்பட்டிருக்கும். அறையின் கோடியில் ஒரு டிரங்க் பெட்டியும் இரண்டு பானைகளும் இருக்கும். அந்தப் பானைக்குள்தான் காசை பத்திரப்படுத்தியிருப்பாள் அக்கா. டிரங்க் பெட்டியில் பத்து நைலக்ஸ் புடவைகள், ஸ்னோ டப்பா, பவுடர் மற்றும் ஜாக்கெட்டுகளும் இருக்கும். அவளின் ஜாக்கெட்டுகள் சிக்கென்றும் பின்கழுத்து இறங்கியும் ஊக்குகள் வைக்கப்பட்டதாகவும் இருக்கும். அவள் உடை உடுத்தும் நேர்த்தி, பிறரைக் கவரச்செய்யும்.

   அவளின் புடவைகளா, அதை உடுத்தும் நேர்த்தியா, தனக்கானவற்றைத் தானே செய்துகொள்ளும் குணமா, அவளின் சிரிப்பா... ஏதோ ஒன்று என்னை அவள்பால் ஈர்த்தது. அவள் வீட்டில் விவித்பாரதியும் இலங்கை வானொலியும் ஒலித்துக்கொண்டிருக்கும். மொத்தத்தில் மஹாக்கா, என் ஆதர்ச பெண். ஆனால், அவள் என்னை ஒருமுறையேனும் `சாப்பிடுகிறாயா?’ எனக் கேட்டதுமில்லை; நான் அதை எதிர்ப்பார்த்ததுமில்லை.
   மாதம் ஓரிரு முறை அழகாக உடுத்திக்கொண்டு மதியம் கிளம்பிச் செல்வாள். மறுநாள் மதியவாக்கில் வீடு வருவாள். `தோழியுடன் சினிமாவுக்குச் சென்றேன்’ என்பாள். மிகவும் மகிழ்வாகக் காணப்படுவாள். என் அம்மாவும் பாட்டியும் சன்னமாக ஏதோ பேசிக்கொண்டார்கள். அவள் அண்ணன், அவளை ஒருமுறை அடித்திருக்கிறான். எனக்கு அப்போது எதுவும் புரியவில்லை. அந்த வீட்டில் நாங்கள் ஆறேழு மாதங்கள் மட்டுமே குடியிருந்தோம். என் நினைவுகள் அவளைச் சுற்றியவண்ணமே இருந்தன.

   பின்னர் ஒருநாள் அந்தத் தெருவுக்குச் சென்றபோது அவள் அங்கு இல்லை. யாரோ லாரி டிரைவருடன் ஓடிப்போனதாகப் பேசிக்கொண்டார்கள். `அந்திமழை பொழிகிறது... ஆத்துமேட்டுல... ஓரம் போ... ஓரம் போ ருக்குமணி வண்டி வருது...’ போன்ற பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் அவளின் ஞாபகம் வந்து கொண்டேயிருக்கும்.

   அப்படியான என் அன்பிற்குரியவளான, என் ஆதர்சமான பெண்ணாக மனம் நிறைந்தவளை இப்படி யான நிலையில் பார்த்தது என் மனதை வாட்டியெடுத்தது.

   நினைவுகளில் பயணிக்கத் தொடங்கி ஒரு மணி நேரம் ஆனதை உணரும்போது வீட்டுக்கு வந்திருந்தேன்.

   வாட்டமான என் முகத்தைப் பார்த்த என் கணவர் ``என்னாச்சு?’’ என்றார்.

   ``மஹா அக்காவைப் பார்த்தேன்’’ என்றேன். நான் அவளைப் பற்றி பலமுறை பேசியிருந்தபடியால் அவருக்கும் அவளைத் தெரியும். ``நான் யோகா பயிற்சியளிக்கும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான ஹோமில் அதுவும் அடையாளம் கண்டுகொள்ள முடியாத நிலையில்...’’ என்று சொல்லும்போதே அழுகை வந்துவிட்டது.

   அன்றைய இரவு, கனத்த கணங் களுடனேயே  நீடித்தது. தூக்கம் தொலைத்த வளாக விடிந்தவுடன் அந்த ஹோமுக்குச் சென்றேன்.

   காலை நேரம் என்னை எதிர்பார்த்திராத அந்தச் செவிலி ஆச்சர்யமாக என்னைப் பார்த்து , ``நேத்து ஒரு கேஸைப் பற்றிச் சொன்னேன்ல, அது செத்துடுச்சும்மா” என்றாள். கண்ணீர் முட்டியது.

   ``அவங்க பொண்ணு?’’ என்றேன்.

   ``இப்பதாம்மா ஹாஸ்டலுக்கு போன் செஞ்சிருக்கோம்’’ என்றாள்.

   அந்தப் பெண் வந்தாள். இது எந்த நொடியிலும் நேர்ந்துவிடும் என எதிர் பார்த்திருந்தவளாகப் பெரிய சலனம் ஏதுமின்றி கண்ணீர் வடிய நின்றிருந்தாள். பேச்சுக் கொடுத்தேன்.

   ``எங்கம்மா கூடை பின்னித்தான் என்னை வளர்த்தாங்க. நான் குழந்தையா இருக்கும்போதே அப்பாவுக்கு ஏதோ சீக்கு வந்து இறந்துட்டார். பத்தாம் வகுப்பு வரை படிச்சேன். `மேல படிக்க மாட்டேன்’னுட்டேன். எங்க அம்மா அடிக்கடி சோர்ந்துபோயிடுவாங்க. அவங்களே ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு வருவாங்க. எனக்கு ரொம்ப கவலையானதால `நான் வேலைக்குப் போறேன்’னு சொல்லி, படிப்பை நிறுத்திட்டேன்.

   போன வருஷம்தான் தெரிஞ்சது அவங்களுக்கு எய்ட்ஸ் இருக்குன்னு. எங்களுக்குன்னு யாரும் இல்லை. இந்த நிலைமையில, என்னால  அம்மாவை விட்டுட்டு வேலைக்கும் போக முடியலை; குடிசை வாடகையும் கட்ட முடியலை. அப்பதான், இந்த ஹோம் பற்றிக் கேள்விப்பட்டுக் கூட்டிட்டு வந்தேன்’’ என்றாள்.

   என் கணவருக்கு போன் செய்து வரச் சொன்னேன். மாலை வாங்கிப் போட்டேன். ஹோமிலேயே அடக்கத்துக்கான ஏற்பாடுகள் நடந்தன. எல்லாம் முடியும் வரை அந்தப் பெண்ணோடு இருந்தேன்.

   ``நீ ஹாஸ்டலை காலி பண்ணிட்டு என்னோடயே இரு’’ என்றேன். என் கணவர் புரிந்துகொண்டார். முதுகைத் தட்டி எனக்கான சம்மதத்தைக் கொடுத்தார். அந்தப் பெண், என்னை சற்று விநோதமாகப் பார்த்தாள்.
   ``நானும் உங்க ஊர்தான். உன் அம்மாவை சிறு வயதிலிருந்தே தெரியும்’’ என்றேன்.

   ஆச்சர்யத்தோடு என்னுடன் கிளம்பத் தயாரானவளிடம், ``உன் பேரென்னம்மா?’’ என்றேன்.

   அவள் சொன்னது என் பெயர்.
   https://www.vikatan.com
  • By நவீனன்
   குள்ளன் பினு - சிறுகதை
     சாம்ராஜ் - ஓவியங்கள்: ரமணன்  
   11 மணிக்கு அப்பன் உட்காரும் இடத்தில் வழக்கம்போல் பீடியையும் தீப்பெட்டியையும் வைத்த பினு, சோற்றை வடிக்க உள்ளே போனான்.

   பினுவை நீங்கள் கோட்டயம் வீதியில் பார்த்திருக்கலாம். பார்த்த மாத்திரத்தில் அவனுடைய உடைகள் உங்களை ஈர்த்திருக்கும். கண்களை உறுத்தும் நிறத்தில் ஒரு பனியனைப் போட்டுக்கொண்டு காதில் ஹெட்போனுடன் சைக்கிளிலோ, ஆக்டிவாவிலோ செல்வதை; மீன் மார்க்கெட்டிலோ, கோழிச்சந்தை இறக்கத்திலோ திருனக்காரா அம்பலத்துக்கு அருகிலோ, மேமன் மாப்பிள்ளை சதுக்கத்திலோ பார்த்திருப்பீர்கள். அதையும் தாண்டி அவனை உங்களுக்கு மறக்காதிருப்பதற்கான காரணம் அவனது உயரம். வண்டியை நிறுத்தி, காலை ஊன்றுவதற்குத் தோதாக இடம் தேடுவான். மூன்று ரவுண்டு அடித்து அங்கும் இங்கும் தேடி ஓர் இடத்தைக் கண்டுபிடிப்பான். அவன் இடத்தைத் தேடுவது, நீரோட்டம் பார்க்கிறவர்கள் தண்ணீர் தேடுவதுபோலிருக்கும். அந்தத் தேடுதல் கோட்டயம் மார்க்கெட்டில் பிரசித்தம்.

   பினு என்பது, அவனை வீட்டில் கூப்பிடும் செல்லப்பெயர். பதிவேட்டில் `வர்கீஸ் டொமினிக்.’ நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் `பினுவேட்டன்.’ கோட்டயத்தில் பல்வேறு பினுக்கள் உண்டு. கஞ்சிக்குழி பினு, துபாய் பினு, மோரீஸ் பினு, வெல்டர் பினு, தடியன் பினு. மற்றவர்களிலிருந்து இவனை வேறுபடுத்திக்காட்ட, கோட்டயத்துக்காரர்களுக்கு இவன் `குள்ளன் பினு.’ நேரில் யாரும் சொல்வது கிடையாது. ஆனால், அதுதான் தன் முதுகுக்குப் பின் சொல்லப்படுகிறது என்பது  பினுவுக்குத் தெரியும்.

   பினுவின் அப்பா டொமினிக் வகையறாவிலும், அம்மா குன்னங்குளம் தெரசா வகையறாவிலும் உயரம் குறைந்தவர்கள் என்று யாரும் கிடையாது. டொமினிக் மத்தாயி குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாக எல்லோரும் உயரம்தான். மாம்பழமோ, முருங்கையோ பறிக்க அந்தக் குடும்பத்துக்குத் தொரட்டியே வேண்டியதில்லை என்பது கோட்டயத்தின் சொல்வழக்கு.

   பினுவின் தாத்தன் மத்தாயி, இடுக்கியில் கஞ்சா விவசாயத்தில் சம்பாதித்த காசோடு கோட்டயம் திரும்பியவர், தன் உறவுக்குள் இருப்பதிலேயே உயரமான பேபி கொச்சம்மாளைத் திருமணம் செய்துகொண்டு உயரமான குழந்தைகளை உற்பத்திசெய்யத் தொடங்கினார். அதேசமயம் மர வியாபாரத்தையும் தொடங்க, பிள்ளைகளும் கடையில் நிற்கும் மரத்துக்குப் போட்டியாக உயரமாய் வளர்ந்தார்கள். ஐந்து ஆண் பிள்ளைகள், மூன்று பெண் பிள்ளைகள். பஞ்சபாண்டவருடன் மூன்று அம்பைகளும் அங்கு சேர்ந்து பிறந்திருப்பதாக ஸ்ரீகண்ட நாயர் சொல்லிச் சிரிப்பார்.

   உயரம், அந்தக் குடும்பத்துக்குக் கோட்டயத்தின் சட்டாம்பிள்ளை அந்தஸ்தை வழங்கியிருந்தது. திருவிழாவில் சப்பரத்துக்கு முன்னால் புனித சிலுவையைத் தூக்கிக்கொண்டு போகிறவர்களாகவும், சவ ஊர்வலத்தில் பாதிரியார்களுக்குப் பக்கத்தில் குடை பிடித்துக்கொண்டு போகிறவர்களாகவும், அடிதடியில் முதலில் கை நீட்டுகிறவர்களாகவும் அவர்கள் குடும்பம் இருந்தது. பெண்களும் ஆண்களுக்கு நிகராகவே உயரமாய் வளர்ந்திருந்தார்கள். அவர்கள் உயரத்துக்குத் தோதாக மாப்பிள்ளை தேடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார்கள்.

   தாத்தன் மத்தாயின் மரக்கடை, குமரகம் போகும் சாலையில் இருந்தது. அந்தக் காலத்தில் கோட்டயத்தில் மர வியாபாரத்துக்கு நல்ல மவுசு. ரப்பர் வியாபாரத்தில் கிடைத்த பெரும் வருமானத்தில் கோட்டயத்தின் பணக்காரர்கள், வீடுகளைப் புதுப்பிக்கத் தொடங்கியிருந்தார்கள்.

   தரகன் பவுல் குடும்பம், மரக்கடை ஒன்றைக் கஞ்சிக்குழி ஜங்ஷனில் தொடங்கியது. மதியவேளை ஒன்றில் மத்தாயியும் அவரின் ஐந்து மகன்களும் வெறும் கைகளாலேயே அந்தக் கடையை அடித்து நொறுக்கித் தீயிட்ட கதை, இப்போதும் கள்ளுக்கடையில் பேசப்படுவதுண்டு.

   விஷயம் ஃபாதர் பிரான்சிஸ் சைமனுக்கு முன் பஞ்சாயத்துக்குப் போக, திருச்சபைக்குக் கோட்டயம் - குமுளி சாலையில் களத்தம்படியில் உள்ள மூன்று ஏக்கர் நிலம் மத்தாயி குடும்பத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. ஒரே நேரத்தில் ஃபாதர் சைமனும் கர்த்தனும் சமாதானப்பட்டார்கள். ``தங்கள் விரோதிகளிடமும் அன்பாய் இருக்க வேண்டும்’’ என, தரகன் பவுல் குடும்பத்துக்கு ஃபாதர் சைமன் அருளாசி வழங்கினார். தரகன் பவுல் குடும்பம், தொழிலை மாற்றி ஜவுளிக்கடையைத் தொடங்கியது. அது பின்பு பெரும் ஜவுளி சாம்ராஜ்ஜியமாய் விரிவடைந்தது வேறு கதை.

   பினு பிறந்த ஒரு வருடம் கழித்தே, தாத்தன் மத்தாயி அவனைப் பார்க்க வந்தார். அவருக்கு இடுக்கியில் வேறொரு குடும்பம் இருப்பது ஊரறிந்த ரகசியம். ``இவன், நம் குடும்பத்தின் சாபம்!’’ எனச் சொல்லி, பினுவைத் தொட்டிலில் இட்டார். பினு, தன் இரண்டு அக்காக்களுடன் வளர்ந்தான். உயரத்தில் அல்ல, வயதில். மத்தாயி தாத்தன், கடைசிவரை அவனைக் கொஞ்சவேயில்லை; அப்பன் டொமினிக்கும்.

   குடும்ப விசேஷங்களில் பெரியப்பன், சிற்றப்பன் குடும்பத்தின் பிள்ளைகள் உயர உயரமாய் வீட்டுக்குள் குறுக்கும் நெடுக்கும் ஓட, அவர்களுக்குப் பின்னால் ஒரு சித்திரக்குள்ளனைப்போலத் தொடர்வான் பினு. அம்மா தெரசா மட்டுமே அவனுடன் அன்பாய் இருந்தாள். பள்ளிக்கூடத்துக்குப் போய்த் திரும்பும் பினு, வீட்டுக்குள் நுழைந்தவுடன் பையைக் கடாசிவிட்டு ``அம்மா பால்..!’’ என, ஸ்டூலை எடுத்துப் போட்டு அம்மா ஜாக்கெட்டை விலக்கி சாவதானமாய் பால் குடிப்பான். `டொமினிக்குக்குப் பொறந்த ஒரு ஆம்பளப்புள்ளையும் கீரிப்புள்ளையா போச்சே!’ என, ஞாயிற்றுக்கிழமையில் சர்ச்சில் அவர் காதுபடவே பேசினார்கள்.

   பினுவுக்கு, கூட்டாளிகளே இல்லை. அக்காக்களுக்குத் திருமணம் ஆகும்வரையில் அவர்களுடனேயே விளையாடினான். அவர்கள் திருமணம் செய்துகொண்டு போன பிறகு, சுவர்களில் அடர்பாசி படிந்திருக்கும் தோட்டத்துக்குள் அவனாக ஓடி ஓடி ஒரு விளையாட்டை உருவாக்கிக்கொண்டான். வீட்டின் மேல்புறத்துக் குன்றில் குடியிருக்கும் பாருக்குட்டி, மாலைவேளைகளில் தலை சீவும்போது பினுவைப் பார்த்து ``பால் வேணுமாடா?’’ எனக் கேட்பாள். பினு வெட்கப்பட்டு வீட்டுக்குள் ஓடிவிடுவான்.

   அவர்கள் வீடு, திருனக்காரா அம்பலத்திலிருந்து பழைய போட் ஜெட்டி போகும் பாதையில் இருந்தது. பழைய காலத்தில் அந்த போட் ஜெட்டி வழியேதான் ஆலப்புழையிலிருந்து எல்லாச் சரக்குகளும் படகில் கோட்டயம் வந்து இறங்கும்.

   தாத்தன் மத்தாயி இறந்தபோது மற்ற அண்ணன்கள், ``ஒரே ஆம்பளப் புள்ளைய வெச்சிருக்க. அதுவும் குள்ளன். அவன வெச்செல்லாம் மர வியாபாரம் பண்ண முடியாது. வேற ஏதாவது செஞ்சிக்க’’ என மரக்கடையிலிருந்து டொமினிக்கைப் பிரித்துவிட்டார்கள். டொமினிக், போட் ஜெட்டி பாதையில் இருக்கும் வீட்டைத் தனது பங்காக வாங்கி, ஒரு மெஸ்ஸைத் தொடங்கினார். பெயர்ப்பலகை எதுவும் இல்லாவிட்டாலும், அது `தெரசா மெஸ்’ என்று அழைக்கப்பட்டது. கோட்டயத்தில் புகழ்பெற்ற மெஸ்ஸாக மாறியது. வேலைக்கு வெளியாள்கள் என யாரும் கிடையாது. தெரசா, மகள்கள், பினு, உறவுகளில் பாவப்பட்ட இருவர் என வேலைசெய்தனர். டொமினிக், மெஸ்ஸுக்குத் தேவையான பொருள்களை வாங்கிப்போடுவது மட்டுமே அவரது வேலையாக வைத்துக்கொண்டார்.

   12 மணிக்குக் கடை தொடங்கி 3 மணிக்கு முடியும். ஞாயிற்றுக்கிழமையில் கர்த்தனுக்கு அச்சப்பட்டு, கடை திறப்பது கிடையாது. கடை தொடங்கும்போது, வராந்தாவின் திண்டில் அமர்ந்து பீடி குடிக்கத் தொடங்குவார் டொமினிக். வீட்டின் முன்னறையையே சாப்பாட்டுக் கூடமாக மாற்றியிருந்தார்கள். போட் ஜெட்டி பக்கத்தில் இருப்பதால், நிறைய லோடுமேன்களும் டிரைவர்களும் வருவார்கள். வம்புச்சண்டையை சாப்பாட்டோடு தொடுகறியாகத் தொட்டுச் சாப்பிட மிகவும் விரும்புவர். தெரசா மெஸ்ஸில் அது எதுவும் சாத்தியமில்லை. சாப்பாட்டுக்கூடத்தில் சத்தம் மிகுந்தால் டொமினிக் லேசாகச் செருமுவார். பிறகு, தண்ணீர் குடிப்பதைத் தவிர வேறு சத்தம் வராது.

   மூன்று மணி நேரம் அசையாது, உறைந்த ஒரு சித்திரம்போல் கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஸ்டூலில் உட்கார்ந்திருப்பார். சாப்பாட்டுக்கூடத்தைக் கழுவத் தொடங்கும்போது சட்டை போட்டுக்கொண்டு வெளியே போகிறவர், இரவு 7 மணிக்குத் திரும்புகையில் கையில் கள் போத்தல் இருக்கும்; வயிற்றிலும்.

   இயேசு படத்தின் முன் சிறிய மின்விளக்கு பதற்றமாய் மினுங்கிக்கொண்டிருக்க, மறுபடியும் ஸ்டூலில் அமர்வார். பக்கத்தில் சாப்பாடு எடுத்து வைக்கப்பட்டிருக்கும். எப்போது சாப்பிடுவார் என யாருக்கும் தெரியாது. அப்பா நடுராத்திரியிலும் ஸ்டூலில் உட்கார்ந்திருப்பதாக பினுவுக்குத் தோன்றும். அவர் வந்த பிறகு சாப்பாட்டுக்கூடம் பக்கம் யாரும் வரவே மாட்டார்கள். வீட்டுக்கு இன்னொரு வாசல் இருந்தது.

   கோட்டயத்தில் வெள்ளம் வரும் என எல்லோரும் பயந்துகொண்டிருந்த ஒரு பெரும் மழைநாளில் டொமினிக் மரித்துப்போனார். போட் ஜெட்டியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் ஊருக்குள் தண்ணீர் வரும் எனக் காத்திருக்கையில், டொமினிக்கின் சவ ஊர்வலம் மார்த்தோமா ஆலயத்தை நோக்கிப் போகத் தொடங்கியது.

   பினு 25 வயதைக் கடந்திருந்தாலும், ஒரு சிறுவனுக்கான தோற்றத்தோடு மழையில் அங்கும் இங்கும் ஓடியாடி வேலை செய்துகொண்டிருந்தான். டொமினிக்கின் சவப்பெட்டியைத் தூக்கும்போது பினுவும் தூக்குவதற்கு முன்னால் போக, அவன் பெரியப்பன் பிரான்சிஸ் அவனைப் பிடித்துத் தள்ளினார். ``போடா அந்தப் பக்கம்... வந்துட்டான் குள்ளன், சவப்பெட்டியைத் தூக்க!’’ - டொமினிக்கைக் குழியில் இறக்கும்போது பினு மிகவும் பிரயத்தனப்பட்டு அப்பன் சவப்பெட்டியைப் பார்க்க முயன்றான். பாதிரியாரின் அங்கியைத்தான் அவனால் பார்க்க முடிந்தது. பினுவின் அழுகையை மழை மறைத்தது.

   அப்பன் போன பிறகு, அப்பன் செய்த காரியங்களை பினு செய்யத்தொடங்கினான். திருமணமாகிப் போன அக்கா மார்த்தா தன் மகள் பிளஸியுடன் திரும்பி வர, தெரசா மெஸ் உள்கூடத்தில் நிறைய பெண்கள் இங்கும் அங்கும் பரபரப்பாய் அலைய, எப்போதும்போல் இயங்கியது.
   நடிகர் கொச்சி ஹனீபாவைக் குட்டி பாட்டிலுக்குள் அமுக்கி வைத்ததைப்போல, கட்டம் போட்ட கைலியும் கைவைத்த பனியனுமாய் இடுப்பில் தடித்த பெல்ட்டுமாய் பரபரப்பாய் வேலைசெய்வான் பினு. உயரம் இல்லை என்பதால், பெண் கிடைக்கவில்லை.

   வியாபாரம் தொடங்கும் முன், அப்பன் உட்காரும் இடத்தில் இரண்டு பீடிக்கட்டுகளையும் தீப்பெட்டியையும் வைப்பான்.

   3 மணிக்கு சாப்பாட்டுக்கூடம் கழுவப்பட்டதும், பினு வேறு ஆள். ஒருநாள் டென்னிஸ் பேட் எடுத்துக்கொண்டு கோட்டயம் க்ளப்புக்கு விளையாடப் போவான். இன்னொரு நாள், அக்காடியா ஹோட்டல் பார் அல்லது சஜியின் ரப்பர் தோட்டம் அல்லது பிரத்யேகமானவர்கள் மட்டும் கூடும் சக்காரியாவின் முன்னிரவுச் சபை. எல்லா இடங்களிலும் பினு மௌனன்தான். யாருடனும் பேச மாட்டான். குடிப்பான், கூடிப்போனால் ஒரு புன்னகை. அவன் எங்கு இருந்தாலும் உமரின் ஆட்டோ 9:15 மணிக்கு அவனைச் சந்திக்கும். அவன் அம்மா ஸ்தோத்திரம் சொல்லத் தொடங்குகையில், வீட்டுப்படிக்கட்டில் ஏறுவான். இந்த நிகழ்ச்சிநிரலில் மாற்றமே கிடையாது. உறவினர் வீட்டுத் துக்கங்களுக்கோ, விசேஷங்களுக்கோ அவன் போவதே இல்லை. எல்லாவற்றுக்கும் அம்மாதான்.

   கொஞ்ச நாளாக அவனிடம் புகார் சொல்லத் தொடங்கியிருந்தாள் அக்கா. அவர்கள் வீட்டுக்கு எதிரே கோட்டயம் முனிசிபாலிட்டியின் குடோன் இருந்தது. முன்பெல்லாம் அங்கே மலையாளப்பட ஷூட்டிங் நடக்கும். பிரேம் நசீர்கள், ஜெயன்கள், மம்மூட்டிகள், மோகன்லால்கள் வில்லன்களை அங்கேவைத்து நையப்புடைப்பர். பழைய காலத்தில் அது பரபரப்பான வியாபார ஸ்தலம். போட் ஜெட்டி அங்கிருந்து செறியங்காடிக்கு மாறிய பிறகு, அது கைவிடப்பட்ட கட்டடமாய்... வழி இல்லாதவர்களுக்கு முனிசிபாலிட்டி குறைந்த வாடகைக்குவிடும் கட்டடமாய் மாறியிருந்தது.

   அங்கு தங்கியிருக்கும் நான்கைந்து திருவனந்தபுரத்துப் பையன்கள், மாலையானால் பினுவின் அக்கா மகளை விசில் அடித்துக் கூப்பிடுவதும், `கூகூகூ...’ எனக் கத்துவதுமாய் இருந்தனர். ``ரோட்டில் போனால் பின்னாலேயே வருகிறார்கள். அவர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. எவ்வளவோ  சொல்லியும் அவர்கள் கேட்பதுபோல் தெரியவில்லை’’ என்றாள் அக்கா.

   பினு, மாறாத தனது நிகழ்ச்சிநிரலை மாற்றி அன்றைக்கு வீட்டில் காத்திருந்தான். 5 மணியானதும் அவர்கள் அறையிலிருந்து விசிலும் கூச்சலும் தொடங்கியது. பால்கனியில் ஏறி நின்று இவர்கள் வீட்டைப் பார்த்துக் கை காட்டினார்கள். பினு விறுவிறுவென குடோனை நோக்கி நடந்தான். குடோன் பாழடைந்து கிடந்தது. நாய்களும் பெருச்சாளிகளும் குறுக்கும்நெடுக்கு மாய் ஓட, பினு தூசி நிறைந்த மரப்படிக்கட்டு வழியாக மேலேறி அவர்கள் அறை முன்னால் நின்றவன், மெதுவாக மரக்கதவைத் தட்டினான். அது கூடுதலாய் அதிர்ந்தது.

   உள்ளேயிருந்து கதவைப் படக்கெனத் திறந்து வெளியே வந்தவன், ``டேய், குள்ளன்டா!’’ என உள்பக்கம் திரும்பிக் கத்தினான். பினு பார்க்க முடிந்த கதவின் இடுக்கின் வழியே மதுக்குப்பிகள் தெரிந்தன. உள்ளேயிருந்து மற்றொருவன் கொச்சையாகக் கிண்டலடிக்க, அறை சிரிப்பில் அதிர்ந்தது. பினு மூச்சை இழுத்து விட்டுக்கொண்டான். மிக நிதானமாக தன்முன்னால் இருப்பவனை விலக்கி அறைக்குள் நுழைந்து ``இதை நிறுத்திக்கிட்டீங்கன்னா உங்களுக்கு நல்லது. இல்லைன்னா கஷ்டம்’’ என்று சொல்லிவிட்டு, படக்கென அறையை விட்டு வெளியே வந்தான். ``போடா குஞ்சக்கூனா!’’ என யாரோ கத்தினார்கள்.

   அதன் பிறகு கொஞ்ச காலம் அவர்கள் அடங்கியிருந்தார்கள். பழைய போட் ஜெட்டியை பார்க் ஆக்கும் வேலையில் முனிசிபாலிட்டி இறங்க, போட் ஜெட்டியில் இருக்கும் வெங்காயத்தாமரைகள் நீள் இரும்புக்கைகள்கொண்ட வாகனங்களால் அள்ளப்பட்டுக்கொண்டிருக்க, வேலைவெட்டியில்லாதவர்கள் மதியவேளையில் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். திருனக்காரா அம்பலத்திலிருந்து போட் ஜெட்டிக்குப் புதிய தார் ரோடு போடும் வேலையும் நடந்துகொண்டிருந்தது. வடகிழக்கு வேலையாள்கள் மும்முரமாய் இந்தியும் பான்பராக்குமாய்க் கலந்து வேலை செய்துகொண்டிருக்க, பினு தன் பேட்டை எடுத்துக்கொண்டு க்ளப்புக்குப் போக ரோட்டில் இறங்கினான். சாலையின் மறுமுனையில் அக்கா மகள் பிளஸி, கல்லூரியிலிருந்து வந்துகொண்டிருந்தாள்.

   பினு பார்த்துக் கொண்டிருக்கையி லேயே குடோனில் தங்கியிருப்ப வர்கள் அவளைக் கடந்து முன்னால் வந்து பயமுறுத்துவதற்காக சடக்கெனத் திரும்பி, தன் கையில் இருக்கும் பந்தை வீசுவதுபோல ஒருவன் பாவனை செய்தான். மற்றவன், அந்தப் பந்தைப் பிடுங்கி நிஜமாகவே அவள் மார்பை நோக்கி எறிந்தான். பிளஸி பயந்து, பின்னால் ஓடினாள். பினு பேட்டோடு அவர்களை நோக்கி ஓடினான். பினுவைப் பார்த்த அந்த நால்வரில் ஒருவன் ``டேய் குள்ளன்டா!’’ எனக் கத்த, பினு வடக்கத்தியத் தொழிலாளிகளைத் தள்ளிக்கொண்டு அவர்கள் ரோட்டில் கொட்டுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் இரும்புத்தட்டுகளைத் தட்டிவிட்டு நால்வரில் முன்னால் இருந்தவன் மீது பாய்ந்தான்.

   வடக்கத்தியத் தொழிலாளர்கள் பீகாரியில் கத்த, பினு குவித்துவைக்கப்பட்டிருக்கும் ஜல்லியின் மீது நின்று முதலாமவன் முகத்தில் குத்தினான். ``மாரோ... மாரோ..!’’ என்று யாரோ இந்தியில் கத்த, வெங்காயத்தாமரை அள்ளுவதை வேடிக்கை பார்த்துச் சலிப்படைந்திருந்த கூட்டம், சண்டையை நோக்கி ஓடிவந்தது. பினு சன்னதம் வந்தவனாய் நால்வர்மீதும் பாய்ந்து பாய்ந்து அடித்தான். அவன் குள்ளமாய் இருப்பது சண்டைக்கு மிக ஏதுவாய் இருந்தது. அவர்களால் அவன் முகத்தில் குத்த முடியவில்லை. அவன் சடக்கெனக் குனிந்து அவர்கள் கவட்டைக்குள் புகுந்து நிலைகுப்புற அவர்களைக் கீழே தள்ள முடிந்தது. வீட்டிலிருந்து தெரசாவும் மார்த்தாவும் மற்றவர்களும் ஓடிவர, பிளஸி ஓரமாய் நின்று அழுதுகொண்டிருந்தாள்.

   பினுவைக் கூட்டம் ஆதரித்து, ஆரவாரமாய்க் கூச்சல் எழுப்பியது. பினுவை விலக்க வந்த இரண்டொருவரை பினு அப்படியே தள்ளிவிட்டான். நால்வரும் பினுவின் தாக்குதலால் அயர்ந்துபோயிருந்தார்கள். பினு, கைக்குக் கிடைத்ததையெல்லாம் எடுத்து அவர்களை அடித்தான். அப்போதுதான் போடப்பட்டிருக்கும் தார் ரோட்டில் பைத்தியமாய் குறுக்கும்நெடுக்குமாய் பினு ஓடினான். போலீஸ் ஸ்டேஷனுக்கு ஜீப்பில் வந்து இறங்கும் வரை, பினுவை எவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

   சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், டொமினிக் குடும்பத்துக்குப் பரிச்சயமானவர். பினுவை ஆச்சர்யத்துடன் பார்த்தார். சிறு வயதிலிருந்து பினு அவர் பார்த்து வளர்ந்த பையன்தான். பினுவிடம் ஒன்றும் கேட்கவில்லை. அந்த நால்வரையும் உள்ளே அழைத்துச் சரமாரியாக அடித்தார். உடனடியாக அவர்கள் குடோன் அறையைக் காலிசெய்யவேண்டும் என்று சொல்லி, `இனி வம்பு ஏதும் செய்ய மாட்டோம்!’ என எழுதி வாங்கிக்கொண்டு, பினுவிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னார். நால்வரும் பினுவிடம் மன்னிப்பு கேட்க, பினு சலனமில்லாமல் அவர்களைப் பார்த்தான். நால்வரும் வெளியேற சுகுமாரன் பினுவைப் பார்த்து ``என்னடா, ஆள்களை அடிச்சவுடனே உயரமாயிட்டியா நீ?’’ எனக் கேட்க, பினு அப்போதுதான் கவனித்தான், அவனுடைய இரண்டு கேன்வாஸ் ஷூக்களிலும் அரையடிக்குத் தார் அப்பியிருப்பதை.

   அடுத்த மூன்று நாள், கோட்டயம் வீதியெங்கும் பினு நடந்தே திரிந்தான். உமரின் ஆட்டோவை வேண்டாம் எனச் சொல்லிவிட்டான். எல்லோரும் அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாய் அவனைப் பார்க்க, ஷூவும் தாருமாய்த் திரிந்தான். உறவினர் வீடுகளின் வாசல் வரை போய் உள்ளே போகாமல் வாசலோடு நின்று பேசிவிட்டு வந்தான். வழியில் ஃபாதரைப் பார்த்தவன் மரியாதையாக ஸ்தோத்திரம் சொன்னான். பினுவின் வாழ்வில் முதல்முறையாக ஃபாதர் குனியாமல் அவனுக்குப் பதில் ஸ்தோத்திரம் சொன்னார். ஃபாதர், திரும்பித் திரும்பி அவனைப் பார்த்தபடி நடந்தார். பினு வீட்டுக்கே போகவில்லை. அக்காடியா ஹோட்டலில் ரூம் எடுத்தான். வீட்டில் இருக்கும் ஒரே வெஸ்டர்ன் டாய்லெட்டை அம்மா மட்டுமே பயன்படுத்துவாள். இண்டியன் டாய்லெட் போனால் காலில் தண்ணீர் படும். இந்த மூன்று நாளில் மூத்திரம் இருக்கும்போது அவன்மீது தெறிக்கவேயில்லை. பாரில் உயரமான ஸ்டூலில் ஏறி அமர்ந்து குடித்தான். அம்மாவும் அக்காவும் ஹோட்டல் ரூமில் வந்து அவனைப் பார்த்தபோது, பினு ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.

   மீனச்சல் ஆற்றோரமாக, தனியே அமர்ந்திருந்தான் பினு. ஆற்றுக்கு அவனை ஒற்றையாய்ப் பார்த்துதான் பழக்கம். ஆள்கள் வராத பொழுதில்தான் பினு குளிக்க வருவான். பினு எழுந்து தண்ணீர் அருகே போனான். தூரத்தே சூரியன் மறைந்துகொண்டிருக்க, அவனது நிழல் நீளமாய் ஆற்றின் நடுப்பகுதி வரை நீண்டு தெரிய, அதிர்ந்து சட்டெனப் பின்வாங்கினான் பினு.
   https://www.vikatan.com/