Jump to content

ஸ்டெர்லைட் படுகொலை! - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி! | அகச் சிவப்புத் தமிழ்


Recommended Posts

sterlile-massacre.jpg

ந்நாட்டிலேயே மிகவும் மலிவானவை மனித உயிர்கள்தாம் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது! இம்முறை குருதி தோய இந்த உண்மையை உறுதிப்படுத்திக் காட்டியிருப்பது மனித உரிமைக்குப் பெயர் பெற்ற தமிழ்நாடு! 99 நாட்களாக அறவழியில் நடந்த போராட்டத்துக்கு நூறாவது நாளில் துப்பாக்கிக் குண்டுகளால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

“வன்முறையில் ஈடுபட்டார்கள் அதனால்தான் சுட்டோம்” என்கிறது காவல்துறை. இதற்கு எதிராகக் குரல் எழுப்பும் சமூக அக்கறையாளர்களோ, “மக்கள் அமைதிப் பேரணிதான் நடத்தினார்கள். காவல்துறைதான் எடுத்த எடுப்பிலேயே சுடத் தொடங்கி விட்டது” என்கிறார்கள். காவல்துறை சொல்லும் சாக்கை விட அக்கறையாளர்களின் இந்த வாதம்தான் அதிக ஆபத்தானது!

நண்பர்களே, இது என்ன நிலைப்பாடு? அப்படியானால், மக்கள் வன்முறையில் இறங்கினால் சுட்டுத் தள்ளலாம் என்கிறீர்களா? எனில், மக்கள் வன்முறையில் ஈடுபட்டது உண்மைதான் எனக் காவல்துறையினர் சான்றுகள் காட்டி விட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தியது சரிதான் என ஏற்றுக் கொள்ளப் போகிறோமா நாம்?

உண்மையில், இந்த நேரத்தில் நாம் எழுப்ப வேண்டிய கேள்வி, “கலவரங்களை அடக்குவது குறித்த இந்தியச் சட்டங்கள் சரியானவையா?” என்பதுதான்.

மேலை நாடுகளில் கலவரங்கள் கைமீறிப் போனால் இரப்பர் குண்டுகளைக் கையாளும் வழக்கம் இருக்கிறது. ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினரோடு தங்களை ஒப்பிட்டுக் கழுத்துப்பட்டை நுனியைத் தூக்கி விட்டுக் கொள்ளும் தமிழ்நாடு காவல்துறையினருக்கு இரப்பர் குண்டு என ஒன்று இருப்பதாவது தெரியுமா?

கேட்டால், நம் நாடு இன்னும் அந்தளவு முன்னேறவில்லை என்பார்கள் நம் ‘தினமலர்’ படிப்பாளிகள். அட நாதாறிகளே! செவ்வாய்க் கோளுக்குச் செயற்கைக்கோள் விடுமளவுக்குத் தொழில்நுட்பத்தில் தொக்குத் தாளிக்கும் நாடு மனித உரிமை சார்ந்த விதயங்களில் மட்டும் முடியாட்சிக் காலத்தை விட்டு முடியளவும் முன்னேறவில்லை எனச் சொல்ல உங்களுக்கு நாக் கூசவில்லை?

ஆக, இந்த நாடு பொருளாதாரமும் வெட்டி வீராப்பும் சார்ந்த துறைகளில் மட்டும்தான் முன்னேறத் துடிக்கிறது; தனி மனித நலனும் குடிமக்கள் உரிமையும் சார்ந்த விதயங்களில் வளர எந்தவிதமான ஆர்வமும் இந்நாட்டுக்கு இல்லை என்பதுதானே இதன் பொருள்? இந்தப் போக்கை எதிர்த்துக் கேள்வி எழுப்புவதுதானே இந்த நேரத்தில் நம் கடமை? மாறாக நாமோ, முதலில் வானத்தை நோக்கிச் சுடுவது, பின்னர் இடுப்புக்குக் கீழே சுடுவது முதலான துப்பாக்கிச் சூடு நெறிமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறோமே, இதை விட ஏமாளித்தனம் உண்டா?

மனித உரிமைக்காகக் குரல் கொடுக்கும் தோழர்களே, சிந்தித்துப் பாருங்கள்! அதிகார அமைப்பு நம் உயிரைக் காவு வாங்குகிறது; ஏன் என்னைக் கொல்கிறாய் எனக் கேட்க வேண்டிய நாம் தகுந்த காரணத்தோடுதான் என்னைக் கொல்கிறாயா எனக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்! இதுதான் இந்தக் கட்டமைப்பின் (structuralism) வெற்றி! கட்டமைப்பியலாளர்களின் (structuralists) வெற்றி!

தவறு செய்தால் சொந்தக் குடிமக்களையே சுட்டுக் கொல்லலாம் என ஒரு சட்டம் இருப்பதே வெட்கக்கேடு! ஆனால் அதுதான் சரி என இந்தக் கட்டமைப்பும் கட்டமைப்பியலாளர்களும் நம்மை நம்ப வைத்திருக்கிறார்கள். அதனால்தான் இப்படி ஒரு கொடூரம் நம் கண் முன்னே நடந்து முடிந்த பின்னும் இதற்கு ஆதரவாக இருக்கும் அந்தச் சட்டத்தைக் குறித்த கேள்வியை நாம் எழுப்பாமல், நடந்த கொடூரம் அந்தச் சட்டப்படி ஏற்கத்தக்கதுதானா என்கிற கேள்வியைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்! தவறான சட்டத்தைத் தூக்கி எறிவதற்கு மாறாக அதற்குள்ளேயே நமக்கான நீதியைத் தேடிக் கொண்டிருக்கிறோம்! இது நடந்தேறிய அந்தப் படுகொலையை விடவும் கொடூரமானது!

எனவே தொலைக்காட்சி விவாதங்களில் அமரும் மனித உரிமை ஆர்வலர்களே, ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கும் இடத்தில் இருக்கும் ஊடக நண்பர்களே, சமூக அக்கறையாளர்களே, கட்சித் தோழர்களே, தலைவர்களே, பொதுமக்களே இந்தத் தமிழ்நாட்டு ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிரான உங்கள் வாதங்களை அருள் கூர்ந்து மாற்றுங்கள்!

எப்படிப்பட்ட சூழலில் துப்பாக்கிச் சூடு நடத்தலாம் எனச் சட்டம் சொல்லும் முறைப்படிதான் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறதா எனக் கேட்காதீர்கள்! எப்பேர்ப்பட்ட சூழலாயிருந்தாலும் சொந்த நாட்டு மக்களையே சுட்டுக் கொல்வது மன்னிக்க முடியாத குற்றம் எனக் கூறுங்கள்!

மக்கள் கட்டிய வரிப் பணத்தில் வாங்கிய துப்பாக்கியை வைத்து அவர்களையே சுடுவது மானங்கெட்ட செயல் எனச் சுட்டிக் காட்டுங்கள்!

அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், மண்ணாங்கட்டி என அத்தனையையும் மேலை நாடுகளைப் பார்த்துப் படியெடுக்கும் (copy) நம் அரசுகள் மக்களை நடத்தும் விதத்தை மட்டும் அங்கிருந்து ஏன் கற்றுக் கொள்ள மறுக்கின்றன என்பதைக் கேளுங்கள்!

மற்ற துறைகளில் ஏற்பட வேண்டிய முன்னேற்றம் பற்றி மட்டும் வக்கணையாகப் பேசும் நம் ஆட்சியாளர்கள் மனித உரிமைத்துறையில் மட்டும் இன்னும் தமது கற்காலக் காட்டாட்சி முறைகளை விட்டு வெளியில் எட்டிக் கூடப் பார்க்க மறுப்பது ஏன் என வினவுங்கள்!

தீர ஆராய்ந்து, முறையாக விசாரித்த பின்னும் அரிதினும் அரிதான வழக்கில் மட்டுமே அளிக்கச் சொல்லியிருக்கும் தூக்குத் தண்டனையையே ஒழிக்கும்படி கேட்குமளவு முன்னேறிவிட்ட சமூகத்தில், கலவரக்காரர் எனக் குற்றம் சுமத்திவிட்டால் எத்தனை பேரை வேண்டுமானாலும் கேள்விமுறையே இல்லாமல் கொல்லலாம் என ஒரு சட்டம் அமலில் இருப்பதே சமூகப் பேரிழிவு என்பதை எடுத்துரையுங்கள்!

இந்தியா போன்ற ஒரு நாட்டில் இவற்றையெல்லாம் புரிய வைப்பது எளிதில்லைதான். நாட்டின் கணிசமான பகுதியைத் துப்பாக்கி முனையிலேயே ஆளும் இந்த அதிகார அமைப்புக்குக் கலவரத்தை அடக்கக் கூடத் துப்பாக்கி எடுப்பது தவறு என உணர்த்துவது மிகக் கடினம்தான்.

ஆனால் நண்பர்களே, பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு மறுநாள் வருமென எதிர்பார்த்திருந்த பள்ளிச் சிறுமி, திருமணமாகி மூன்று மாதங்களே ஆன கருச்சுமந்த மனைவியை விட்டு வாழ வேண்டிய வயதில் மறைந்த கணவன் எனப் பதின்மூன்று பேர் துடிதுடிக்கப் படுகொலை செய்யப்பட்ட பிறகு கூடக் கேட்காவிட்டால் இதை நாம் இனி எப்பொழுதுதான் கேட்பது?!

பி.கு: “முழுக்க முழுக்கச் சட்டத்திருத்தம் பற்றி மட்டுமே எழுதியிருக்கிறாயே? அது மட்டும் போதுமா? நடந்த படுகொலைக்குக் காரணம் யார், இதற்கு உத்தரவிட்டது யார் என்பவையெல்லாம் தெரிய வேண்டாவா?” எனக் கேட்பவர்களுக்கு என் மறுமொழி, அவையெல்லாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை; கட்டுரையின் முதல் எழுத்துடைய நிறத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.