Jump to content

Recommended Posts

கள்வன் மகனும் உள்ளம்கவர் கள்வனும்

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி

 

தமிழ்த் திரைப்படங்களில் காதல் வயப்பட்ட ஆணின் செயல்களை நாம் நடைமுறையில் காணாத மிகைக் காட்சிகளாகக் காட்டுவர்; இப்படியும்கூட ஒருவனால் செய்யமுடியுமா என்று பலவேளைகளில் விவாதங்கள் வந்துபோவதுண்டு. காட்டாக, மணிரத்னத்தின் மௌனராகம்(1986) திரைப்படத்தில், கதாநாயகி ரேவதியை அருகில் வைத்துக்கொண்டே ரேவதியின் அப்பாவை, "மிஸ்டர் சந்திரமௌலி", என்று அட்டகாசமாக அழைப்பார் கதாநாயகன் கார்த்திக். அமர்க்களம்(1999) திரைப்படத்தில் "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு! என் உள்நெஞ்சு சொல்கின்றது!" பாடல் காட்சியில், பரபரப்பானதொரு காலைவேளையில், ஷாலினியின் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி உள்ளிட்டோர் அவரவர் வேலைகளில் மூழ்கிஇருக்கும்போது, அனாயாசமாக ஷாலினியுடன் கொஞ்சிக் கொண்டிருப்பார் நடிகர் அஜீத்.

கவிஞர் வைரமுத்துவின் பாடலுக்கான கரு, குறிஞ்சிக்கலியில் அமைந்த ஒரு சங்கப்பாடலில் உள்ளது  என்றால் நம்பமுடிகிறதா? இக்காட்சிகளுக்குச் சவால்விடும், கபிலர் பாடிய   சங்கபபாடலொன்றை இங்கு காண்போம்:  இப்பாடலில், வரக்கூடாத புகாக்காலை வேளையிலே தன் வீட்டுக்கு வந்துவிட்ட தலைவனைப் பற்றி, தலைவி தோழிக்கு கூறுவதாக அமைந்த சங்கக்கவி கபிலரின் குறிஞ்சிக்கலிப் பாடலின் பொருளைக் காண்போம்:  

புகாக்காலை என்றால் உணவு உண்ணும் நேரம் என்றோ, அல்லது, அன்னையுடன் இருக்கும்போது வரக்கூடாத வேளையிலே வந்ததாகப் பொருள். உணவு நேரத்தின்போது தலைவன் தலைவியை காணவருதல் இந்தத் துறையாகும்.

"சுடரும் வளையல் அணிந்த தோழியே! நான் கூறப்போவதை கவனமுடன் கேள்! சிறுவயதில் தெருவில் நாம் மணல்வீடு கட்டி விளையாடும் சமயம், நம் மணல் வீட்டை தன் காலால் சிதைத்துவிட்டு நம் கூந்தலை இழுத்து அதனுள் இருக்கும் வரிப்பந்தை பறித்துக் கொண்டு ஓடி நம்மை நோகடிப்பானே ஒரு சிறு நாய் (பட்டி). அவனை உனக்கு நினைவிருக்கிறதா? அவன் நேற்று நானும் அன்னையும் வீட்டில் இருக்கும் சமயம் என் வீட்டிற்கு வந்திருக்கிறான். வாசலில் நின்று, ‘அம்மா உண்ண நீர் வேண்டும்’ என்று யாசித்திருக்கிறான். விருந்தினரை உபசரிக்கும் என் அன்னையோ, "அடீ சுடரிழாய்! பொன் கிண்ணத்தில் நீர் எடுத்துப் போய் அவனுக்குக் கொடு!" என்று என்னை ஏவினாள். வந்தவன் அந்த நாய்தான் என்று தெரியாத நானும் நீரெடுத்துச் சென்று முகம்பாராமல் நீர்க்குவளையை அவனிடம் நீட்டினேன். நீர்க்குவளையை வாங்காமல் சட்டென என் முன்கையைப் பற்றி அவன் இழுக்கவே, பயந்தடித்து நான், "அம்மா! ஐயையோ! இவன் என்ன செய்துவிட்டான் பார்!" என்று அலறிவிட்டேன். அம்மாவும் பதறியடித்து ஓடி வந்தாள். கத்தியபின்னர்தான் அவன் முகத்தை நான் நோக்க, வந்தவன் நமது பழைய பட்டி என்றும், எம்மீது கொண்ட பெருங்காதலால் எம்மைக் காண ஆசையாக வந்தவன் என்பதையும் உணர்ந்தேன். அன்னை என்ன நடந்தது என்று கேட்பதற்குள்,  "உண்ணும் நீர் விக்கினான்; அதுதான் செய்வதறியாது உன்னை அழைத்தேன்", என்று பொய் சொல்லிச் சமாளித்தேன். அன்னையும் அதை உண்மை என்று நம்பி "என்ன அவசரம் உமக்கு?", என்று புறத்தே பழித்தாலும், அகத்தே பரிவுடன், விக்கிய அவன் அவனை முதுகை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தாள். அந்நேரம் பார்த்து கடைக்கண்ணால், கொல்வது போல் என்னை நோக்கி ஒரு நமுட்டுச்சிரிப்பினை உதிர்த்தான் அந்த கள்வன் மகன்", என்று தோழியிடம் தலைவி கூறுகிறாள்.

பாடலை இப்போது காண்போம்.
 
சுடர்த்தொடீஇ கேளாய்! தெருவில்நாம் ஆடும்
மணல்சிற்றில் காலில் சிதையா அடைச்சிய
கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி
நோதக்க செய்யும் சிறுபட்டி,
மேலோர்நாள்
அன்னையும் யானும் இருந்தேமா இல்லிரே.
‘உண்ணுநீர் வேட்டேன்’ என வந்தார்க்கு அன்னை,
‘அடர்பொற் சிகரத்தால் ஆக்கிச் சுடரிழாய்!
உண்ணுநீர் ஊட்டிவா’ என்றாள் என யானும்
தன்னை அறியாது சென்றேன்,
மற்று என்னை
வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு
,
 'அன்னாய்! இவனொருவன் செய்ததுகாண்!' என்றேனா,
அன்னையும் அலறிப் படர்த்தரத் தன்னையான்,
‘உண்ணுநீர் விக்கினான்’ என்றேனா,
அன்னையும்
தன்னைப் புறம்பழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கணால் கொல்வான் போல்நோக்கி நகைக்கூட்டம்
செய்தானக் கள்வன் மகன்.
     (குறிஞ்சிக்கலி - கபிலர்)

இப்போது சொல்லுங்கள்! நம் திரைப்படப் பாடலாசிரியர்கள், இயக்குனர்கள் படைப்புத்திறங்களின் மூலக்கரு எங்கிருந்து பெறப்பட்டது என்று! காதலும், வீரமும், கருணையும் கொடையும் நம் மூதாதையர் நமக்களித்த பண்புக்கொடை; சங்கம் மருவிய காலம்தொட்டு, பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையிலான நம் முன்னோர்கள் நமக்களித்த கொடை நூற்கள்  அறம், தொண்டு ஆகியன உள்ளிட்ட அறநூற்கள், ஐம்பெரும் காப்பியங்கள், ஐங்குறுங்காப்பியங்கள், இறையியற் தமிழாம் பன்னிரு திருமுறைகள், நாலாயிரம் பாசுரங்கள் ஆகியன என்றால் மிகையன்று. பேரின்ப வீடுபேற்றைப் பேசும் தேவாரம் உள்ளிட்ட படைப்புகளிலும், சங்க இலக்கியகள் பேசும் அக இலக்கியச் சாயலைக் காண இயலும். அப்படி ஒரு பாடலை இப்போது உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறேன்.

குறிஞ்சிக்கலி கபிலரின் அகப்பாடலை நினைவூட்டும் படைப்பாக விளங்குகின்றது ஓதாது உணர்ந்த திருஞானசம்பந்தரின் தேவார முதற்பாடல். தாம்பெற்ற பால்மணம்மாறாக் குழந்தை சம்பந்தனைக் குளக்கரையில் அமர்த்திவிட்டு, குளிக்கச் செல்கின்றார் சிவபாதஇருதயர்; தந்தையைக் காணாது, பசியால் பால்வேண்டி, "அம்மே! அப்பா!" என்று அழத்தொடங்கிய குழந்தைக்கு இறைவனே அம்மையப்பனாகத் தோன்றி, பாலூட்டினான்.

குளித்துவிட்டுக் கரையேறிய சிவபாதஇருதயர் குழந்தையின் வாயோரம் ஒழுகியிருந்த பாலைக்கண்டு, சினந்து, "யாரிடம் பால்வாங்கிக் குடித்தாய்" எனக் கையோங்க, தந்தையிடம், அம்மையப்பனாக வந்து, பாலூட்டி, தம் உள்ளம் கவர்ந்த கள்வன் சிவபெருமானின் திருவடையாளங்களைக் கூறிவிளக்கும் தேவார முதல் ஞானப் பாடல் உங்கள் சிந்தனைக்கு விருந்தாக:

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப்பொடி பூசி யென்னுள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனை நாட் பணிந்தேத்த வருள் செய்த
பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மான் இவனன்றே.  - திருஞானசம்பந்தர் தேவாரம் 1.1.1

"தோடணிந்த திருச்செவியுடன் காளை(விடை) மீதுஏறி, ஒப்பற்றதோர் தூய வெண்நிலவை(மதி) முடியில்சூடி, சுடுகாட்டுச் சாம்பற்பொடியை உடல் முழுதும் பூசி வந்தான் என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன்; முன்பொரு சமயம், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி வழிபட, அவனுக்கு அருள்புரிந்தவனும்,  பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாக விளங்குபவனும் இக்கள்வனேயாவான்!" என்று தம் மழலைமொழியில் ஞானத்தமிழ் அருளினார் பெற்றதந்தையான சிவபாத இருதயருக்கு!

அம்மையிருக்கும் பக்கமுள்ள செவியில் தோடு அணிந்து இருந்ததைக் கண்டதாலும், அம்மையே மறுபக்கம் ஆண்வடிவில் அப்பனாக இருந்ததாலும், "தோடுடைய செவியன்" என்று ஞானக்குழந்தை தாம் கண்ட காட்சியைத் தந்தைக்கு விளக்கி அருளியது. ஞானசம்பந்தக் குழந்தைக்கு இறைவன் அம்மையப்பன் வடிவில் தோன்றி, ஞானப்பால் ஊட்டியதற்கு இச்சொல்லே அகச்சான்றாக விளங்குகின்றது,

"தோடுடையசெவியன்" என்பது தொடங்கி, ஞானசம்பந்தப்பெருமானுடைய உள்ளங்கவர்ந்த கள்வனாகிய இறைவனுடைய சிறப்பியல்புகள் இப்பாடலில் தெரிவிக்கப் பெறுகின்றன. சம்பந்தருடைய அழுகைக் குரல் கேட்டு, அன்னையின் ஞானப்பால் அருளச் செய்தது 'திருச்செவி'யே என்பதால் அதனை முதலில் தெரிவிக்கிறார்.

உலகுயிர்கள் அனைத்தும் துன்பம் நீங்கி இன்பம் அடைதலே பொருளாக, பாடல் பரமனார் திருச்செவியில் சென்று சேர, திருச்செவியை முதற்கண் சிறப்பித்தார் என்பது, `பல்லுயிரும் களிகூரத் தம் பாடல் பரமர்பால் செல்லுமுறை பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து` என்ற சேக்கிழார் வாக்கால் அறிகின்றோம். தோடுடையசெவி என்றதால் இடப்பாகத்துச் செவி என்பதாலும், கருணையைப் பொழிவது, அன்னையுறையும் இடப்பக்கமாவதாலும்  அதனை முதலில் கூறினார்.

ஆரா அன்புகொண்டு சன்மார்க்கநெறியாகிய நாயகநாயகித் தன்மையான அகப்பாடலை முதற்பாடலாகவே அருளினார் ஞானசம்பந்தன் என்னும் மூன்றுவயதுக் குழந்தை. உமையொருபாகனாக ஒரு பெண்ணோடு இருந்தவன் என்னுள்ளம் கவர்கின்றான் என நயம் தோன்றக் கூறினார்.

"விடையேறி" என்னும் சொல்லால் இறைவன் இடபவாகனத்தில் தோன்றி தமக்குக் காட்சியளித்ததைக் குறித்தார்;  "தூவெண்மதி" என்றால் "தூய்மையான வெண்ணிறம் கொண்ட மதி" என்பது பொருள். மதிக்குத் தூய்மை களங்கமின்றி விளங்குதல் ஆகும்; இருள் எவ்வாறு ஒளியைச் சாராதோ, அவ்வாறே,  களங்கம் இறைவனையும், அவனருள் பெற்ற அன்பர்களையும் சாராது. மேலும், தூய்மை மனத்தின் உள்ளும், வெண்மை புறத்திலும் நிகழ்வது என்பதால்,  இங்கே சம்பந்தர் குறிப்பிடும் மதி,  நாம் காணும் களங்முற்ற சந்திரன் அன்று என்று தெளிவோம். "இறைவன் சுடலைப் பொடி பூசுதல்" என்பது, அனைத்தும் ஒடுங்கும் காலத்தில், எல்லாவுலகமும் தத்தம் காரணத்துள் முறையே ஒடுங்க, காரணங்கள் யாவும் இறுதியாக இறைவனிடம் ஒடுக்கப்பெறும்போது நிகழ்வது ஆகும்.

"உள்ளங்கவர்தல்" என்பது "உள்ளங்கள் அறியாதவாறு, இறைவனே உள்ளங்கள் எங்குமாய் நிறைந்து ஆட்கொள்ளுதல்" ஆகும். ஏடு-இதழ். மலரான்-பிரமன். பிரமன் வழிபாடு செய்த தலம் 'சீர்காழி' என்பதால், இங்கு  இறைவற்குப் "பிரமபுரீசர்" என்பதும் தலத்திற்குப் "பிரமபுரம்" என்பதும் பெயராயிற்று.  பீடு-பெருமை. "மேவிய" என்றால் "தாமே விரும்பி எழுந்தருளியுள்ள" என்பது பொருள். இறைவன் பூரணமாக சுதந்திரன் என்பதால், இங்ஙனம் கூறப் பெற்றது. பெம்மான்-பெருமான் என்பதன் திரிபு. "உள்ளங்கவர் கள்வன் பெருமானாகிய இவன் அன்றே" எனக் கூட்டிப் பொருள் காண வேண்டும்.

தமிழர் வாழ்வில் இல்லறம் என்னும் நல்லறமாம் 'சிற்றின்பத்தின்' வழி பேரின்பமாம் 'இறைவனை' அடைதல் 'அறமாகவே' திருக்குறள் கூறுவதை இங்கு குறிப்பிடத்தக்கது.

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. - குறள் 49.

"அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்", என்பது குறள்நெறி காட்டும் வாழ்வியல்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.