Recommended Posts

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்!

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி

அன்பர்களே! இலக்கிய நயம் உணர்ந்து ரசிக்கவும், ருசிக்கவும், இலக்கியத் தமிழ் நயத்தில் நனைந்து தமிழுணர்வில் திளைக்கவும் யாழ் இனிய அற்புதக்களம் அமைத்துள்ளது என்றால் மிகையன்று. உலகெங்கும் வாழும் தமிழர்களின் இணைய-யுக தமிழ்ச்சங்கம் யாழ். 'தி இந்து' தமிழ் இதழில் வந்த எனது திருவாசகக் கட்டுரைகளின் தொகுப்பை யாழ் இணையத்தில் தற்செயலாகக் கண்டபின்னர் 'யாழ்' முத்தமிழ் கண்டேன். அறிவார்ந்த தமிழர்களின் யாழ் சங்கமத்தில் பதிவிடுவதும், அவர்தம்மோடு கூடிக் கலப்பதுவும் ஈடு இணையற்ற உயிர்ப்பு.

சில  நாட்களுக்கு முன்  எழுத்தாளர் ஷங்கர்பாபு அவர்களிடமிருந்து "ஒரு சந்தேகம். . . என்று குறிப்பிடப்பட்டு, ஒரு மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றேன். அன்னாரின் வினாவுக்கு விடையளிக்கும் முயற்சியில், பன்னிரு சைவத் திருமுறைகளும், ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிரம் பாசுரங்களும் வழங்கும் தமிழும் நயமும் புலப்பட்டுத் தோன்றின.  தமிழர்கள் அனைவரும் அறிய வேண்டிய அருமையான கருத்தை வெளிப்படுத்தும் அன்னாரின் அறிவார்ந்த வினாவையும், வினாவிற்கான செறிவான விடையையும் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

இனி . . .  எழுத்தாளர் ஷங்கர்பாபு அவர்களின் வினாவும் வினாவிற்கான விடையும்:

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்புள்ள பேராசிரியர் திரு கிருஷ்ணன் அவர்களுக்கு,
வணக்கம்..என் பெயர் ஷங்கர்பாபு.அவ்வப்போது எழுதுகிறவன்...விகடனில் ,குங்குமத்தில் எழுதி இருக்கிறேன்...
தி இந்து தமிழில் கடந்த வருடம் "இப்படியும் பார்க்கலாம்..." என்ற தலைப்பில் 45 வாரங்கள் எழுதினேன்.,,
தற்போது சக்தி விகடனில் "புதிய புராணம்" என்ற தலைப்பில் ஆன்மீகம் கலந்த கட்டுரைகள் எழுதி வருகிறேன்...
அவ்வப்போது தங்களின் "வான் கலந்த மணிவாசகம் " தொடரைப் படிப்பதுண்டு...ஆழமான கட்டுரைகள்...
நான் ஒரு எழுத்தாளன் என்ற முறையிலும்,நீங்கள் சைவ இலக்கியங்களில் பரிச்சயம் உள்ளவர் என்ற முறையிலும் உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்க ஆசைப்படுகிறேன்...
அதாவது---எங்கு இந்தக் கருத்தைக் கேட்டேன் என்பது மட்டும் தெரியவில்லை;ஆனால் திருவாசகத்தில் தான் என்பது நினைவில் இருக்கிறது...
அது பின்வருமாறு---"இறைவா,எனக்கும் முதுமை வரும்...அந்தப் பொழுதில் என்னால் உன்னை நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் போய் விடக்கூடும்..ஒருவேளை,அப்படி ஒரு முதுமையில் என்னால் உன்னை நினைக்காமல் போனால்,அந்தக் காரணத்தால் என்னை நிராகரித்து விடாதே..."
சரியாக நினைவில்லை...இது போன்ற கருத்துதான் அந்தப் பாடலில் வரும்...

திருவாசகம் அறிந்தவர் என்ற முறையில் தங்களால் இந்தப் பாடலை அடையாளம் காண முடிகிறதா?
அப்படியானால்,அதை நீங்கள் எனக்குத் தெரியப்படுத்தினீர்கள் என்றால் தங்களுக்கு நன்றி உரியவனாக இருப்பேன்...
அன்புடன்--ஷங்கர்பாபு.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தென்னாடுடைய சிவனே போற்றி!                 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

அன்புள்ள எழுத்தாளர் ஷங்கர்பாபு அவர்களுக்கு,

வணக்கம். கடந்த இரண்டு நாட்களாக அலுவல் சுமையினால் உடனே பதில் எழுத இயலாமல் போனது. தாங்கள் கேட்டிருந்த வினாவின் செறிவு அப்படி. அந்தக் வினாவுக்கான விடைகாணும் வாய்ப்பையும், அதன்வழி, எனக்கு ஒரு நற்சிந்தனை நினைவூட்டலையும் நல்கிய தங்களுக்கும், இறைவனுக்கும் கைம்மாறு என்ன செய்யப் போகிறேன்!

தாங்கள் தெரிவித்த கருத்தை வெளிப்படுத்தும் தேவாரப்பாடல் இரண்டும், ஆழ்வார் பாசுரம் ஒன்றும் என் நினைவுக்கு வருகின்றன. திருவாசகத்தில் இக்கருத்தை ஒட்டிய பாடல் இல்லை. திருநாவுக்கரசர் அருளிய ஆறாம் திருமுறை, திருப்புகலூர் திருத்தாண்டகம் 99ம் பதிகம், பாடல்.1 'எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ' என்று தொடங்கும் தேவாரமும், "ஊற்றுத் துறை ஒன்பதுள் நின்று ஓரீர் ஒக்க அடைக்கும் போது உணரமாட்டீர்" என்று தொடங்கும் தேவாரமும், பெரியாழ்வார் அருளிய  பத்தாந்திருமொழியில் "துப்புடையாரை அடைவ தெல்லாம்" என்று தொடங்கும் 423ம் பாசுரமும் தாங்கள் தெரிவித்த கருத்துடன் ஒட்டியவை.

முதலில் திருநாவுக்கரசர் பெருமான் அருளிய 'எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ' என்னும் தேவாரம் அருளப்பட்ட தலமும், தேவாரப் பாடலின் பொருளும் அறிந்து கொள்வோம்.

பாடல் பிறந்த தலம்: திருப்புகலூர்(சோழநாடு);  தலச் சிறப்பு : சித்திரைச் சதயத்தில் அப்பர் பெருமான் இறைவன் திருவடியை அடைந்த புண்ணியத் திருத்தலம். உயிர்கள் இறைவன் திருவடியைப் புகலாக அடையும் தலம் ஆதலால் திருப்புகலூர் என்னும் திருநாமம் பெற்று விளங்குகின்றது. முருகநாயனார் அவதாரத் திருத்தலமும் இதுவே. சுந்தரருக்கு செங்கற்களைப் பொன்னாக இறைவன் மாற்றித் தந்து அருளிய திருத்தலமும் இதுவே. இபுண்ணியத் திருத்தலத்தில் உள்ள மடத்தில் முருக நாயனார், சம்பந்தர், அப்பர், சிறுத்தொண்டர் ஆகிய நான்கு நாயன்மார்கள் கூடியிருந்து இறைவனின் திருவடிகளைச் சிந்தித்து மகிழ்ந்துள்ளனர் என்ற செய்தி பெரியபுராணத்தில் காணக் கிடைக்கின்றது.

புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்
உலகியல் நடைமுறையில் ஒருவருக்குக் கிடைக்கும் சாதாரண நன்மைகளையே புண்ணியம் என்ற சொல்லால் நாம் குறிப்பிடுகின்றோம். ஆனால், புண்ணியம் என்பதற்கு, நன்மைகள் அனைத்திலும் சிறந்தது என்பதே பொருள். இறைவனின் திருவடிகளை அடைவதற்கு மேல் சிறந்த ஒரு நன்மை இல்லை என்ற பொருள் விளங்க, 'புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்' என்று பாடுகின்றார் நாவுக்கரசர் பெருமான்.

சமணநூலாகிய சீவகசிந்தாமணிகூட, சிவபெருமானைப் "போகம் ஈன்ற புண்ணியன்" சீவகசிந்தாமணி (362) என்று குறிப்பிடும். அப்பர் பெருமான் நிறைவாகப் பூம்புகலூர் என்னும் இத்தலத்தில்தான் திருத்தொண்டு செய்து வாழ்ந்தார் என்கிறது சைவவரலாறு. "எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ" எனத்தொடங்கும் இத்திருத்தாண்டகப்பதிகம் பாடி, "புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன், பூம்புகலூர் மேவியபுண்ணியனே" என்று போற்றி வாழ்ந்து, ஒரு சித்திரைச் சதயத்தில் புண்ணியன் இறைவன் திருவருளால், அவன் திருவடி நீழலில், இரண்டறக் கலந்தருளினார் அப்பர் பிரான்.

இத்திருமுறைப் பாடல்களைப் பொருளுணர்ந்து ஓதுவோரும், கேட்போரும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வர்; தொண்டர்தம் பெருமையை சொல்லும் வாய்ப்பைத் தந்த தங்களுக்கு ,அருள்வழங்கும் செந்தமிழ்ச் சொக்கன் சோமசுந்தரனின் திருவருள் முழுமையாகக் கிடைக்க அவன் திருவடிகளைச் சிந்திக்கின்றோம்.

எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனோ  எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்
கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன் கழலடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்! ஒக்க அடைக்கும் போது உணர மாட்டேன்!
புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்! பூம்புகலூர் மேவிய புண்ணியனே! - தமிழ்மறை: 6.99.1 (நாவுக்கரசர் திருப்புகலூர் திருத்தாண்டகம்)

இப்பாடலில் அப்பர் பெருமான் சிவபெருமானிடம், "இறைவா! உடலைவிட்டு உயிர்நீங்கும்போது,  உடலின் ஒன்பது வாயில்களும் ஒருசேர அடைத்து, நினது திருவடிகளை உணராமல் செய்துவிடும் என்பதால், எனக்கு அந்நிலை வருமுன், இப்போதே உன் திருவடிகளுக்கு என்னை ஒப்புக்கொடுக்கின்றேன்; என்னை ஏற்றுக்கொண்டருள்க." என்றார். இப்போது, முழுப்பாடலில் பொருளையும் காண்போம்.

"அழகிய புகலூர் மேவிய புண்ணியனே!  நினைக்கும் தன்மை உடையவனாகிய நான், எம்பெருமானாகிய நினது திருவடியை விரும்பி நினைப்பது ஒன்றை மட்டுமே நினைப்பவன்; இச்செயல் அல்லாது, வேறு எதனை விரும்பி நினைப்பேன்?  நினது கழல் இணையடிகளையே கைதொழுது காண்பதைத் தவிர என் கண்களில் வேறு காட்சியில்லாதவன்; இதுவன்றி வேறெதிலும் பற்று இல்லாதவனாகவும் உள்ளேன். யான் வாழ்வதற்குப் பொருந்திய உறையுளாக நீ அருளிய இவ்வுடம்பிலே ஒன்பது வாசல் வைத்துள்ளாய். அவையாவும் ஒரு சேர அடைக்கப்படும் காலத்து (இறப்பு நேரும் காலம்) மேற்குறித்தவாறு உன்னையே நினைதலையும் காணுதலையும் செய்யமாட்டேன். ஆதலின் அக்காலம் வாராதபடி, இப்பொழுதே உன் திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏற்றுக் கொண்டருள்வாயாக!" என்று வேண்டுகின்றார் பெருமான்.

புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் என்று இந்த நிறைவுத் திருத்தாண்டகத்தைப் பாடியவாறே, சிவானந்தத்தில் திளைத்து, ஞானவடிவாக அமர்ந்திருந்து, சிவபெருமானின் கழலடியைச் சேர்ந்தார் என்று சேக்கிழார் பெருமான் கூறுகின்றார். இந்தப் பதிகத்தின் அனைத்துப் பாடல்களும் "போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே" என்று முடிவது சிறப்பு.

ஒன்பது வாசல் என்பவை இரண்டு கண்கள், இரண்டு நாசித் துவாரங்கள், இரண்டு காதுகள், வாய், எருவாய், கருவாய்: நமது உடலில் இருக்கும் ஒன்பது வாயில்களும் செயல்படும் காலத்து, கண்கள் அவன் திருவடிகளையே காணும்; கைகள் அவன் திருவடிகளையே வணங்கும்; உயிர் பிரிந்த பின்னர், அனைத்து துவாரங்களும், ஒரே சமயத்தில் அடைக்கப்பட்டுச் செயலிழக்கும்போது கண்களும், கைகளும் தம் கடமைகளைச் செய்ய இயலாமல் போகும்.  இந்த செய்தியைத் தான் 'ஒக்க அடைக்கும்போது' என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

இறக்கும் தருவாயில், அதாவது ஒன்பது துளைகளும் ஒக்க அடைக்கும்போது உணர முடியாது என்பதால், நாம் இறக்கும் தருவாயில் இறைவனை நினைத்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடவேண்டாம் என்று அறிவுரை கூறும் அப்பர் பிரானின்  இத்தேவாரப் பாடல் நாம் மிகவும் உணர்ந்து பின்பற்றத் தக்கது.

சிவபுராணத்தில் மாணிக்கவாசகரும்

"மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள்ளுருகும்
நலன்தான் இலாத சிறியேற்கு"

என்று குறிப்பிடுகின்றார். உடலில் உயிர் இருக்கும் வரையில், ஒன்பது வாயில் புலன்களிலும் அழுக்கு ஊறி, நாம் மாய உலக வாழ்க்கையில் மகிழ்ந்து இறைவனை முற்றிலும் மறந்து விடுகின்றோம். ஒன்பது வாயில்கள் ஒக்க அடைபடும் போது, பிறவிப் பயனாகிய இறைவனை அடையாமல், இப்பிறவி வீணானதை உணர முடியாமல், உயிர், வேறு வழியைத் தேடி, மீண்டும் ஓடிக்கொண்டே இருக்கும்;  இவ்வாறு, பெற்ற பிறவியை வீணாக்கும் முன்னர், நாம், சோற்றுத்துறை இறைவனை நினைத்துப் போற்றி, நமது துன்பங்களை நீக்கிக் கொண்டு நல்வழியைச் சென்று அடையலாம் என்று நமக்கு அறிவுரை கூறும் இன்னுமொரு அப்பர் தேவாரம் இங்கு காண்போம்:

ஊற்றுத் துறை ஒன்பதுள் நின்று ஓரீர் ஒக்க அடைக்கும் போது உணரமாட்டீர்
மாற்றுத் துறை வழி கொண்டு ஓடாமுன்னம் மாய மனை வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்
வேற்றுத் தொழில் பூண்டார் புரங்கள் மூன்றும் வெவ்வழல் வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய
சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீராகில் துயர் நீங்கித் தூநெறிக் கண் சேரலாமே. தமிழ்மறை:6.93.5


அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்

உடலை விட்டு உயிர் பிரியும்போது உன்னை என்னால் நினைக்க முடியாது, எனவே உன்னை நினைக்கும் சமயத்திலேயே உன்னிடம் நான் வந்து அடைகின்றேன் என்று அப்பர் பிரான் கூறுவதுபோல், பெரியாழ்வாரின் அழகான பாசுரம் ஒன்று உள்ளது.

தமிழர் மெய்யியல் தொன்மங்களில் முக்கியமானது "உடலை விட்டுப் பிரியுந்தருவாயில் இறைவனின் திருவடிகளையே எண்ணினால் திருவடிப்பேறாகிய வீடுபேறு கிட்டும்'' என்பது.

வயதான காலத்தில் இவ்வுலகில் வாழும் வாழ்வின் தேவைக்காக, வங்கியில் பணம் சேமித்து வைப்பதைப் போன்று, இறைவனின் அருள் வங்கியில் அவன் திருவடிகளையே எண்ணும் தம் வேண்டுதல் புண்ணியத்தை முன்கூட்டியே செலுத்தி வைத்து, தம் உயிர் உடலைவிட்டு நீங்கும் தருவாயில் வந்து, கூற்றுவனிடமிருந்து காத்து, தமக்குத் திருவடிப்பேறு நல்கவேண்டும் என்று வேண்டுகின்றார் பெரியாழ்வார்.

 துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்துத் துணை ஆவர் என்றே!
ஒப்பு இலேன் ஆகிலும் நின்னடைந்தேன்! ஆனைக்கு நீ அருள் செய்தமையால்!
எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்!
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே! -பெரியாழ்வார்: 422 - பத்தாந் திருமொழி

"பாம்பணையில் பள்ளிகொண்ட திருவரங்கத்துப் பெருமாளே! இவ்வுலகத்தோர், உயர்ந்த நிலையில் இருப்பவர்களைத் தேடிச் சேர்ந்து நட்புக் கொள்வது, துன்பம் நேரும் காலத்தில் அவ்வுயர்ந்த நிலையில் இருப்பவர்கள் துன்பம் நீக்கத் துணையாக இருப்பார்கள் என்றுதான். உன்னிடம் சரணடையும் தகுதி எனக்கு இல்லாவிட்டாலும், துணிவுடன் நின்னை வந்து அடைந்துவிட்டேன்! ஏன் தெரியுமா? உன்னைச் சரணடைந்த கஜேந்திரன் எனும் யானைக்கு நீ அருள்செய்தாய் என்பதை அறிந்ததால்! உடல் நைந்து, களைப்புற்று, உயிர் பிரியும் காலத்தில், நான் உன்னை நினைக்க மாட்டேன்; எனவே அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்; நீ என்னை அப்போது வந்து மறவாமல் காக்கவேண்டும்" என்று பொருள் அமைந்த பத்துப் பாசுரங்களில் முதல் பாசுரமாக அமைந்துள்ளது. இப்பாசுரமே தங்கள் கருத்துக்கு முழுவதும் ஒட்டிவரும் பாடலாகும்.

--------------------------------------------------

என்னை எழுதச் செய்த, தங்களுக்கு என் நன்றிகளும் வணக்கமும்.

அன்புடன்

ந. கிருஷ்ணன்.
----------------------------------------------------
அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு நிலைகளிலும் படைக்கப்பட்ட தமிழும் நயமும் நமக்கெல்லாம் பேரின்பம் நல்குவதேன்னவோ பேருண்மையாகும்.

 

 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this