• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

மன்னர்கள் காலந்தொட்டே நீடிக்கும் பிரச்னை..! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை

Recommended Posts

மன்னர்கள் காலந்தொட்டே நீடிக்கும் பிரச்னை..! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை - அத்தியாயம் - 1

 
 
Chennai: 

ண்டுகள் எத்தனை... ஆட்சிகள் எத்தனை... வழக்குகள் எத்தனை... இழப்புகள் எத்தனை... பிரச்னைகள் எத்தனை... வன்முறைகள் எத்தனை என இந்தப் பிரச்னையின் பின்னணியில் உள்ள எத்தனையோ வலிகளை  அடுக்கிக்கொண்டே போகலாம். அந்தப் பிரச்னை வேறு எதுவுமல்ல, காவிரி விவகாரம்தான்..!

காவிரி

 

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், நடுவர் மன்றம் என எந்த மன்றத்தின் உத்தரவைக் கேட்டும் நியாயமில்லை காவிரிக்கு. காலங்கள் கடந்தபோதும் இதுவரை இந்தப் பிரச்னைக்கு எந்தவொரு நிரந்தரத் தீர்வும் ஏற்படவில்லை. இது, இன்று... நேற்றல்ல... மன்னர்கள் காலந்தொட்டே நீடிக்கிறது. 

‘காவிரிக்கரை விநியோகம்!’ 

கி.பி. 1146 - 1163 காலகட்டத்தில், சோழ நாட்டில் இரண்டாம் ராஜராஜன் எனும் பேரரசன் ஆட்சி செலுத்தினான். இவன், கி.பி. 1133 - 1150-ல் வாழ்ந்த இரண்டாம் குலோத்துங்கனின் மகன். இந்த ராஜராஜன் ஆட்சி செலுத்திய காலத்தின்போது... கர்நாடகத்தைப் போசளன் முதலாம் நரசிம்மன் என்பவன் ஆட்சி செய்துவந்தான். இவன், காவிரி வரும்வழியில் குறுக்கே செயற்கை மலைகளை ஏற்படுத்தித் தமிழகத்துக்கு வரும் நீரைத் தடுத்தான் என்கிறது காவிரி குறித்த வரலாறு. இதனால், காவிரியில் நீர்வரத்துக் குறைந்துபோனது. தமிழகத்தில் அடங்கிய சோழ நாட்டில் உள்ள பாசனக் கால்வாய்கள் எல்லாம் தூர்ந்துபோனதையடுத்து நாட்டில் வறுமையும், பஞ்சமும் ஏற்பட்டது. இதற்காக நாடுதோறும், ‘பஞ்சந்தாங்கி’ ஏரிகள் வெட்டப்பட்டன. ஆனாலும் எந்தப் பயனில்லை. அதற்காக, இரண்டாம் ராஜராஜன் சும்மா இருக்கவில்லை. கடும்கோபம் கொண்டான்; கர்நாடகத்தின்மீது படையெடுக்க நினைத்தான்.

''தமிழகத்துக்குக் காவிரி நீர் உரிமையானது; அதைத் தடுக்க மைசூரு அரசுக்கு உரிமையில்லை. போசள வீரநரசிம்ம அரசுக்கு இந்திரனே துணையிருப்பினும் கவலையில்லை” என்று போர்ப் பரணி பாடிப் போர் தொடுத்தான். இந்தப் போரில் வெற்றிவாகை சூடிய இரண்டாம் ராஜராஜன், போசளன் முதலாம் நரசிம்மன் அமைத்திருந்த அணைகளைத் தகர்த்தெறிந்தான். மீண்டும் தமிழகத்துக்குள் காவிரி பாய்ந்தோடி சோழ நாடு வளம் கொழித்தது. இதன்மூலம் இரண்டாம் ராஜராஜன், ‘காவிரி கண்ட சோழன்’, ‘பொன்னிக்கு வழிகண்ட கண்டன்’ என்றெல்லாம் புகழப்பட்டான். இந்தப் போருக்கான செலவை ஈடுகட்ட, ‘காவிரிக்கரை விநியோகம்’ என்ற வரி விதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த வெற்றி குறித்து தக்கயாகப்பரணி, ராஜராஜ சோழன் உலா, பெரிய புராணம், எரிபத்த நாயனார் புராணம், நச்சினார்க்கினியரின் தொல்காப்பிய உரை மேற்கோள் பாடல் உள்ளிட்டவற்றில் சான்றுகள் இடம்பெற்றுள்ளன.

காவிரி

ராணி மங்கம்மாள்!

ராணி மங்கம்மாள்அதேபோல், கி.பி. 17-ம் நூற்றாண்டின் இறுதியில் காவிரி நீருக்காகத் தமிழகமும், மைசூரும் மோதிக்கொண்டன. அந்தக் காலகட்டத்தில் மதுரையை ராணி மங்கம்மாளும், தஞ்சையை மராட்டிய மன்னன் சகசியும் ஆட்சி செய்தனர். அப்போது மைசூரைச் சித்ததேன் மகாராயன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவன், காவிரியின் போக்கை அணைகட்டித் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டான். ராணி மங்கம்மாளும், சகசியும் பல்வேறு பிரச்னைகளில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தபோதிலும், காவிரி நீரை அணைகட்டித் தடுக்கும் மைசூரு மன்னனுக்கு எதிராக ஒன்றுபட்டு எதிராகக் களம் இறங்கினர். இதையடுத்து, இருவருடைய படைகளும் மைசூருக்கு அனுப்பப்பட்டன. ஆனால், இந்தப் படைகள், மைசூரை அடைவதற்கு முன்னால் காவிரியின் குறுக்கே மைசூரு மன்னன் கட்டிய அணை திறமையற்றவர்களால் கட்டப்பட்டதால், தானாகவே உடைந்துவிட்டது. அதன் பின்னர், காவிரியில் தடையின்றி நீர்வரத் தொடங்கியது.

வரலாற்றுச் சான்றுகள்! 

இந்தச் சம்பவங்களை எல்லாம் அறியும்போது, மன்னர்கள் காலத்திலேயே காவிரி நீருக்கானப் போராட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது எனத் தெரிய வருகிறது. அந்தப் போராட்டம் இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. மூதறிஞர் ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்தபோது... அவருடைய சீடரான அனுமந்தையா, கர்நாடக முதல்வராகயிருந்தார். அந்தச் சமயத்தில், கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியிருந்தும் காவிரிக்கு நீரைவிட மறுத்தார் அனுமந்தையா. இதனால் சீற்றம்கொண்ட ராஜாஜி, ''நீரை நீங்களாக விடுகிறீர்களா அல்லது நான் ராணுவத்தை அனுப்பி கிருஷ்ணராஜ சாகர் அணையை என்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளட்டுமா” எனக் கேட்டார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான அனுமந்தையா, அதன் பின்னர் தமிழகத்துக்குக் காவிரியில் தண்ணீரைத் திறந்துவிட்டதாகவும் வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

‘நடந்தாய் வாழி காவிரி...’ என்ற சிலப்பதிகார வரிகளை நினைவூட்டும் வகையில்... ஒருகாலத்தில் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீரானது, தமிழக டெல்டா மாவட்டங்களைக் கடந்து, கடைமடை பகுதிவரை கரைபுரண்டு ஓடிய வரலாறும் இங்கு உண்டு. ‘சோழநாடு சோறுடைத்து...’ என்ற வழக்குக்கேற்ப, அப்போதெல்லாம் வயல்வெளிகள் ‘பச்சைப் பசேல்’ எனப் பசுமை போர்த்தியிருந்தன; முப்போக விளைச்சலால் விவசாயப் பெருங்குடி மக்கள் மட்டுமல்லாது, எல்லா மக்களும் குதூகலமாய் வாழ்ந்தனர். ஆனால், இன்று நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. 

''காவிரியில் ஏற்கெனவே கரைபுரண்டோடி வந்த நீர்... தற்போது வரும் குறைந்தளவு நீர்... எதிர்காலத்தில் அந்தளவு தண்ணீராவது வருமா...?” என்று கேட்குமளவுக்குப் போய்விட்டது இப்போதைய நிலைமை. இந்தளவு பிரச்னை முற்றியதற்கு என்ன காரணம், காவிரி கடந்துவந்த பாதை போன்றவை குறித்து அடுத்தடுத்து வரும் பகுதிகளில் காண்போம்...

நூல் ஆதாரங்கள்: காவிரி தமிழகத்தின் உயிரோட்டம், காவிரி அங்கும் இங்கும்!

காவிரி பாயும்...

https://www.vikatan.com/news/tamilnadu/123703-the-story-of-cauvery-series-1.html

Share this post


Link to post
Share on other sites

May 18 Banner

குடகு முதல் ஒகேனக்கல் வரை... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 2

 
 
Chennai: 

ங்ககாலப் புலவர்கள் முதல் இன்றைய கவிஞர்கள்வரை அனைவரும் காவிரியைப் பற்றிப் புகழ்வதற்குக் காரணம், ஒருகாலத்தில், அது வற்றாத ஜீவநதியாக ஓடியதுதான். அப்படிக் காவிரி பாய்ந்துசென்ற இடமெல்லாம் பசுஞ்சோலையாக விரித்துச் சென்றதால், ‘காவிரி’ என்ற பெயர் வழங்கலாயிற்று. மேலும் ‘பொன்னி’ என்று இன்னொரு பெயரும் உண்டு. நீரிலும், நீரடி மண்ணிலும் தங்கத் தாது உண்டென்பதாலும், மண்ணைக் கொழிக்கச் செய்வதாலும் அப்பெயர் உண்டாயிற்று. 

காவிரி

 

 

குடி தண்ணீர்... விவசாயம்! 

இப்படியான காவிரி, கர்நாடகத்தின் குடகு மாவட்டத்தில் உள்ள பிரம்மகிரி மலைப் பகுதியில் ‘தலைக்காவிரி’ என்னும் இடத்தில் உற்பத்தியாகிறது. அங்கிருந்து பாய்ந்தோடித் தமிழகத்தின் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் ஆர்ப்பரித்து, இறுதியில் பூம்புகாரில் வங்கக்கடலில் சென்று கலக்கிறது. தலைக்காவிரியானது, மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 4,186 அடி உயரத்தில் இருக்கிறது. கர்நாடகத்தில் 320 கி.மீ. தூரத்தையும், தமிழகத்தில் 416 கி.மீ. தூரத்தையும், இருமாநில எல்லையில் 64 கி.மீ. தூரத்தையும் கடப்பதால் காவிரியின் மொத்த நீளம் 800 கி.மீ. ஆகும். இது தெற்கு, கிழக்குத் திசைகளில் பாய்கிறது. முதலில் குடகு மலைப்பகுதியில் பாயும் காவிரியானது, பிறகு தக்காணப் பீடபூமியின் மேட்டு நிலத்திலும், அதன்பின்னர் தமிழகத்தின் சமவெளிப் பகுதியிலும் பாய்கிறது. கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூரு, மாண்டியா, பெங்களூரு, சாம்ராஜ் நகர் மாவட்டங்களில் பாயும் காவிரி ஆறானது,  தமிழகத்தில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை மாவட்டங்கள் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது. தமிழகத்தில் குடிதண்ணீர், விவசாயம் என நேரடியாகவும், மறைமுகமாகவும் 11 மாவட்டங்களைக் காவிரி ஆறு வாழ்வித்துக்கொண்டிருக்கிறது.  

காவிரி நீரில் செழித்த விவசாயம்

மழைப்பொழிவு... நீரின் அளவு!

காவிரி, 81,155 ச.கி.மீ. நிலப்பரப்பைத் தன்னுடைய மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதியாகப் பெற்றுள்ளது. இதில், 34,273 ச.கி.மீ. பரப்பு கர்நாடகாவிலும், 43,856 ச.கி.மீ. பரப்பு தமிழகத்திலும், 2,866 ச.கி.மீ. கேரளத்திலும், 160 ச.கி.மீ. பரப்பு புதுச்சேரியிலும் அமைந்துள்ளது. காவிரி வடிநிலத்தின் மேல் பகுதிகள், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென் மேற்குப் பருவமழையால் பயன்பெறுகின்றன. கீழ்ப்பகுதிகள் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வட கிழக்குப் பருவமழையால் பயன்பெறுகின்றன. ஆற்றின் மழை நீர்ப்பிடிப்புப் பரப்பு 50 சதவிகிதத்துக்கு மேல் தமிழகத்துக்குள் அமைந்திருந்தாலும் தென் மேற்குப் பருவக்காற்று மழையின்போது கர்நாடகத்திலும், கேரளாவிலும் உள்ள உயர்ந்த மலைத் தொடர்களில் பொழிகின்ற கனத்த, செறிவான மழைப்பொழிவே ஆற்றின் நிலையான நீரோட்டத்துக்குக் காரணமாகிறது. 

தமிழகத்தில் உள்ள பரப்பு பெரும்பாலும் சமவெளியாகவும், தாழ்நிலமாகவும் அமைந்திருப்பதால், நீர்ப்பெருக்கைத் தேக்கிவைக்க வழியில்லாமல் இருக்கிறது. தென் மேற்குப் பருவக்காற்று கனத்த மழையையும், வட கிழக்குப் பருவக்காற்று குறைந்த அளவு மழையையும் தருகிறது. வட கிழக்குப் பருவக்காற்றின்போது புயலும், காற்றும் அதிக அளவில் இருப்பதால் மழைப்பொழிவு குறைந்துபோகிறது. குறிப்பாக, கர்நாடக வடிநிலப் பகுதிகளில் சராசரியாக 76 நாள்கள் இருக்கும் மழைப்பொழிவு, தமிழகத்தில் 55 நாள்களாக இருக்கிறது. இதனால், தமிழகத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ச.கி.மீட்டருக்குக் கிடைக்கும் நீரின் அளவைவிட, கர்நாடக, கேரள மாநில நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ச.கி.மீட்டருக்குக் கிடைக்கும் நீரின் அளவு அதிகம்.

ஒகேனக்கல்

முதல் நீர்மின் உற்பத்தி நிலையம்! 

தலைக்காவிரியில் உருவாகும் காவிரி குடகு மாவட்டத்தில் ஹாரங்கி ஆற்றோடு இணைந்து மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்தை அடைகிறது. இங்கு ஹேமாவதி, லட்சுமண தீர்த்தம் ஆகிய இரண்டு ஆறுகளும் காவிரியோடு இணைகின்றன. கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்திலிருந்து வெளிவரும் காவிரி, ஸ்ரீரங்கப்பட்டணம் தீவை உண்டாக்குகிறது. பிறகு கபினி, சொர்ணவதி ஆகிய ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. அதன்பின்பு, சிவசமுத்திரம் தீவைத் தோற்றுவிக்கும் காவிரி, அந்த இடத்தில் இருந்து இரண்டு பிரிவுகளாகப் பிரிகிறது. அங்கு ஒருபுறம், ‘சுகனசுக்கி’ என்ற அருவியாகவும், மறுபுறம் ‘பாறசுக்கி’ அருவியாகவும் விழுகிறது. ‘சுகனசுக்கி’ அருவியில்தான் 1902-ம் ஆண்டு ஆசியாவிலேயே முதன்முதலில் நீர்மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு கோலார் தங்கவயலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. 

'ஆடு தாண்டும் பாறை!’ 

அதன்பிறகு, சிம்சா மற்றும் அர்க்கவதி ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. இந்த இரண்டு ஆறுகளும் இணைந்த பிறகுதான் காவிரி, ஆழமான அதிகமான நீரோடையாகப் பாறை இடுக்குகளில் புகுந்துவருகிறது. இந்த ஆழமான நீரோடைகளை ஆடுகூட தாண்டலாம் என்பதால், இந்தப் பகுதி, கன்னடத்தில் ‘மேக்கேதாட்டூ’ என்றும், தமிழில் ‘ஆடு தாண்டும் பாறை’ அல்லது ‘ஆடு தாண்டும் காவிரி’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியோடு கர்நாடகத்தின் எல்லை முடிவுற்று காவிரி, தமிழகத்தில் காலடி எடுத்துவைத்து பில்லிகுண்டு வழியாக ஒகேனக்கல் அருவியை அடைகிறது. அருவி நீர் பாறையில் மோதி புகைபோல் எழுவதால், ‘புகைக்கல்’ என்னும் பொருளில் 'ஒகேனக்கல்’ எனப் பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது. 

இந்தக் கட்டுரையின் முதல் அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

நூல் ஆதாரம்: காவிரி அங்கும் இங்கும், எழுத்தாளர் தியாகு எழுதிய காவிரி வரலாறு பற்றிய கட்டுரை.

காவிரி பாயும்...

https://www.vikatan.com/news/tamilnadu/123848-the-abandoned-story-of-cauvery-series-2.html

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

கல்லணையைக் கட்டமைத்த கரிகாலன்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 3

 
 
Chennai: 

கேனக்கலுக்குப் பின் பாலாறு, சென்னாறு, தொப்பாறு ஆகிய சிற்றாறுகள் காவிரியில் கலக்கின்றன. இதன்பிறகு காவிரி, மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில் நிறைந்து, அங்கிருந்துதான் தமிழகத்தின் காவிரி நீர்ப்பாசனம் தொடங்குகிறது. 

காவிரி

 

‘திரிவேணி சங்கமம்!’ 

மேட்டூரிலிருந்து வெளிவரும் காவிரியுடன், பவானி ஆறும் சேர்வதால் ‘பவானி கூடுதுறை’ என்ற பெயரும் உண்டு. இந்தப் பவானி, காவிரியுடன் ஆகாய கங்கையும் வந்து கலக்கிறது என்ற ஐதீகத்தின்பேரில், பவானி கூடுதுறைக்குத் ‘திரிவேணி சங்கமம்’ என்ற பெயரும் உண்டு. பவானியிலிருந்து ஈரோட்டுக்குப் படையெடுக்கும் காவிரி, கொடுமுடி அருகே நொய்யல் என்னுமிடத்தில் நொய்யல் ஆற்றையும் தன்னுடன் இணைத்துக்கொள்கிறது. (இந்த நொய்யல் ஆற்றில்தான் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அலை அலையாக நுரைபொங்கி ஓடிய சம்பவம் பொதுமக்களிடையே மிகப்பெரும் அச்சத்தை உண்டாக்கியது. இதுகுறித்துப் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன், “கடந்த சில ஆண்டுகளாக நொய்யலில்  நிலவிய வறட்சியின் காரணமாக, கோவை பகுதிகளில் தேங்கிய சாக்கடைக் கழிவுகள், தற்போதைய மழை வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு நொய்யலில் நுரை பொங்கியதே தவிர, சாயப்பட்டறை ஆலைகளில் இருந்து யாரும் கழிவுகளைக் கலக்க விட்டதாகத் தெரியவில்லை” என்று விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது). அதன்பின்பு, கரூர் அருகே கட்டளை என்னுமிடத்தில் அமராவதி ஆறும், காவிரியுடன் கலக்கிறது. 

நொய்யலில் நுரை

கரூர், திருச்சி மாவட்டங்களில் காவிரி விரிந்துசெல்வதால் அகண்ட காவிரி என்று பெயர்பெற்றது. அடுத்து முசிறி, குளித்தலையைத் தாண்டிச் செல்லும் காவிரி, முக்கொம்பு என்னுமிடத்தில் மேலணையை அடைந்து இரண்டு கிளைகளாகப் பிரிகிறது. ஒருகிளைக்கு ‘கொள்ளிடம்’ என்றும், (வெள்ளப்பெருக்கின்போது மிகையாகப் பெருக்கெடுக்கும் நீரைத் திருப்பிவிட்டு அந்நீர் கொள்ளுமிடம் என்பதால் அது கொள்ளிடம்)  மற்றொன்றுக்கு ‘காவிரி’ என்றும் பெயர். கொள்ளிடம் செல்லும் பாதை காவிரியின் வெள்ள வடிகாலாக இருப்பதால் பெரும்பாலும் வறண்டே காணப்படும். கொள்ளிடம், காவிரிக்கு நடுவே ஸ்ரீரங்கம் தீவை உருவாக்கி, பின் பழைமையான கல்லணையை அடைகிறது. கல்லணையில் இருந்து செல்லும் காவிரி பல சிறுகிளைகளாகப் பிரிந்து அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, புதுஆறு, மன்னியாறு ஆகிய பெயர்களில் ஓடுகின்றன. பிறகு, தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி தஞ்சாவூர், புதுச்சேரி, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாகச் சென்று இறுதியாகப் பூம்புகார் என்னுமிடத்தில் வங்கக்கடலில் கலக்கிறது. 

வெள்ளச் சேதம் குறித்த கல்வெட்டு!

தலைக்காவிரியில் உருவாகும் காவிரி எந்தவொரு தங்குத்தடையும் இன்றி, மழைக்காலங்களில் அடிக்கடி வெள்ளப் பெருக்கெடுத்து ஓடி, சோழ நாட்டுக்குள் புகுந்து பேரழிவை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் மிகுந்த துயரத்துக்குள்ளாகினர். காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தமிழகம் பலமுறை அழிவைச் சந்தித்திருக்கிறது. குறிப்பாக, திருச்சி உறையூர் பகுதி கடுமையான பேரழிவைச் சந்தித்தது. கி.பி. 1118 -1135-ல் இந்தப் பகுதியில் விக்கிரமச்சோழன் ஆட்சி நடைபெற்றபோது, அப்போது ஏற்பட்ட இழப்புகள் குறித்து முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தின் திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கி.பி. 9 - 10-ம் நூற்றாண்டுகளில் முதலாம் பராந்தகச் சோழன் ஆட்சி நடைபெற்றபோது, உறையூரை வெள்ளம் சூழ்ந்து பேரிழப்புகளை ஏற்படுத்தியது. அதுதொடர்பான சேதம் குறித்து அல்லூர் கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது. ஒருகட்டத்தில், இப்படித் தொடர் பாதிப்புக்குள்ளான மக்கள், தஞ்சை ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். அந்த மக்களின் கோரிக்கையை ஏற்று 1923-இல் அவர், மைசூரு சமஸ்தானத்துக்குக் கடிதம் அனுப்பினார். ஆண்டுதோறும் ரூ.30 லட்சம் இழப்பீடு கோரப்பட்டது. மைசூரு அரசும் இதனை ஏற்றுக்கொண்டதாக வரலாற்றில் சொல்லப்படுகிறது. ஆனால், இன்றைய நிலைமையோ தலைகீழ்.

மேட்டூர் அணை

கரிகாலன் கட்டிய கல்லணை!

இப்படி வீணாகக் கடலில் கலக்கும் இந்த நீரைத் தடுக்கும் வகையிலும், கோடைக்காலத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டுபோய் மக்களுக்குக் குடிநீர்கூடக் கிடைக்கும் வகையிலும் ஓர் அணையைக் கட்டித் தமிழகத்துக்குச் சிறப்புச் சேர்த்தார், அன்றைய சோழப் பேரரசின் பெருவேந்தனாகத் திகழ்ந்த கரிகாற்சோழன். அவர் கட்டிய அந்த அணைதான் கல்லணை. மணல்படுகையில் 1,080 அடி நீளமும், 60 அடி அகலமும், 18 அடி உயரமும் கொண்ட இந்த அணை, பெரும் கற்களை ஒன்றின்மேல் ஒன்று அடுக்கிக் கட்டப்பட்டது. அதாவது, ஓடும் ஆற்று நீரில் கனமான கல் ஒன்றைப் போட்டால் அது, அங்கிருக்கும் மணலில் அப்படியே கிடக்கும். அப்படியான நிலையில், வேகமாய் ஓடும் ஆற்று நீரானது அந்தக் கல்லுக்குக் கீழுள்ள மணலையும் பறித்துக்கொண்டு ஓடும்போது, அந்த இடத்தில் மேலும் பள்ளம் ஏற்பட்டு அந்தக் கல் ஆழத்துக்குப் போகும். இப்படி அதன்மீது மேலும்மேலும் கற்களைப் போடும்போது முதலில் போட்ட கல்லானது இன்னும் ஆழத்துக்குப் போய்விடும். இப்படியாக அடுக்கப்பட்ட கற்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டதே கல்லணை என வரலாற்றுச் சான்றுகள் சொல்கின்றன. அதாவது, சிமென்ட்டும், சுண்ணாம்புக் கலவையும் இல்லாமல் கி.பி. முதலாம் நூற்றாண்டில் இந்த அணை கட்டப்பட்டுள்ளது. என்றாலும் இன்றளவும், அணையின் கட்டுக்கோப்பு குன்றாமல் நீடித்து நிற்கிறது. இதன் கட்டுமான வேலைப்பாட்டினைக் கண்டு உலகம் முழுவதும் உள்ள கட்டுமானத் துறை வல்லுநர்கள் இன்றும் வியக்கிறார்கள்.

கல்லணை

உலகிலேயே மிகவும் பழைமை வாய்ந்த அணைகளில், தற்போதும் பயன்பாட்டிலுள்ள நான்காவது அணையாக (1.ஜோர்டான் நாட்டில் உள்ள ஜாவா அணை, 2. எகிப்து கெய்ரோவில் உள்ள சாத்தல் கபாரா, 3. ஏமன் நாட்டில் உள்ள கிரேட் டாம் அணை) கல்லணை விளங்குகிறது. இந்த அணை, மலைக்குன்றுகள் ஏதுமற்ற சமநிலத்தில், இயந்திரங்களின் உதவியின்றி கருங்கல் மற்றும் மண்ணைக் கொண்டு மனிதன் கட்டிய மிகப் பழைமையான அணையாக விளங்குவதுடன், சோழர்கால கட்டடக்கலைக்குச் சான்றாகத் திகழ்கிறது. இதை நீர்த்தேக்கம் என்று சொல்வதைவிடவும், நீரைக் கிளை பிரித்துவிடும் கலுங்கு முறை கொண்ட மதகு அணை என்று சொல்லலாம். அதன்மீதுதான் 19-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் பொறியாளர்கள் தற்போதைய கல்லணைக் கட்டுமானத்தை எழுப்பியுள்ளனர். 

இலக்கியத்தில் சிறப்பு!

 “இந்தத் தொழில் நுட்பம் அறிந்த தமிழ்நாட்டு வல்லுநர்களின் உதவியைக் கொண்டுதான் அந்தக் காலத்தில் நைல் நதியில் முதல் ஆசுவான் அணை கட்டப்பட்டது” என வளர்தமிழ் அறிஞர் முஸ்தபா கூறியிருக்கிறார். இந்த அணையைக் கட்டியதோடு மட்டும் கரிகாற்சோழன் சும்மா இருக்கவில்லை. சிங்களப் போர்க்கைதிகள் 12 ஆயிரம் பேரை அழைத்துவந்து காவிரிக்குக் கரை கட்டியுள்ளார். இதனால் அவர், காவிரி நாடன், பொன்னிவளவன் என்றெல்லாம் இலக்கியங்களில் போற்றப்பட்டுள்ளார். இவரை, பொன்னிக்கரை கண்ட பூபதி என்று ‘விக்கிரமச் சோழன் உலா’  நூல் குறிப்பிடுகிறது. இவரைத் தவிர சோழ அரசர்கள் பொன்னியின் செல்வர் என்றும், காவிரிக் காவலர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். 

கரிகாலன் காவிரிக்குக் கரை கட்டிய செய்தியினை, கலிங்கத்துப் பரணி, குலோத்துங்கச் சோழன் உலா, பிள்ளைத் தமிழ் ஆகிய நூல்கள் குறிப்பிடுகின்றன. சிங்களரின் மகாவம்சம் நூலிலும் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

காவிரி

“முழுகுல நதிக்கு
அரசர் முடிகொடு வகுத்த கரை
முகில்தொட அமைத்தது அறிவோம்” 

- என்று குலோத்துங்கச் சோழன் பிள்ளைத் தமிழும், 

“உச்சங்கோ ரெண்கோ லுயரம் பதினறுகோல்
எச்சம் பிரிவா யிருபதுகோல் - (த)ச்சளவு
மண்கொள்ளக் கொண்டகோ லெண்கோல் வளவர்கோன்
கண்கொள்ளக் கண்ட கரை”

- எனப் பெருந்தொகையும் கல்லணையின் சிறப்புகள் குறித்தும், கரிகாலனின் புகழ் குறித்தும் குறிப்பிடுகின்றன. 

 

காவிரி பாயும்...

https://www.vikatan.com/news/tamilnadu/124054-the-abandoned-story-of-cauvery-series-3.html

Share this post


Link to post
Share on other sites

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளவரசன்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 4

 
Chennai: 

ரிகாற்சோழனால் கல்லணை கட்டப்பட்டு, காவிரியில் கரை அமைக்கப்பட்ட பிறகு வளம் கொழிக்கும் பூமியாய் மாறியது தமிழகம். இதனால், ‘சோழவள நாடு சோறுடைத்து’ என்று விவசாய சாகுபடி, பார் போற்றுமளவுக்குப் பஞ்சமின்றிச் சிறந்து விளங்கியது. 

காவிரி

 

இந்தக் கட்டுரையின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்....

கல்லணை கட்டப்பட்டபோதே அங்கு உழவுத் தொழில் நடைபெற்று வந்ததை வரலாற்றுச் சான்றுகள் எடுத்துரைக்கின்றன. தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ராவ் என்பவர், “காவிரியின் தொன்மையைப் பார்த்தால், காவிரிப் பாசனப் பகுதியின் வேளாண்மை வரலாற்றுக்கு முந்தையது” என்று குறிப்பிடுகிறார். மேலும், அவர் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் மனித வாழ்வும், வேளாண்மையும் இருந்துள்ளன என்பதற்குச் சான்றுகளையும் தருகிறார். 

காவிரியும்... பட்டினப்பாலையும்!

காவிரியைப் பொறுத்தவரை, கடந்த காலத்தில் எந்த ஆண்டிலும் அது பொய்க்கவில்லை என்பதைப் பல இலக்கியங்கள் மூலம் நாம் உணர முடிகிறது. உண்மையைச் சொல்லப்போனால், தமிழின் இலக்கிய வரலாற்றில் காவிரியைப்போல வேறெந்த நதியும் பேசப்பட்டதில்லை. திரைப்படப் பாடல்களிலும், நாட்டுப்புறப் பாடல்களிலும் காவிரி பற்றி வர்ணிக்கப்பட்டுள்ளது. காவிரியின் செல்வவளம் பற்றி, “வெள்ளியாகிய விண்மீன் வட திசையிலிருந்து தென் திசைக்குச் சென்றாலும், வானம்பாடிப் பறவை மழைநீரை அருந்தப் பெறாமல் வருந்தும்நிலை தோன்றினாலும் மலைத் தலைய கடற்காவிரி புனலாகப் பொன்னாகக் கொழிக்கச் செய்யும்” என்கிறது பட்டினப்பாலை நூல். மேலும், “முற்றத்தில் காய்ந்துகொண்டிருக்கும் நெல் மணிகளைத் தின்னவரும் கோழிகளை விரட்ட, அங்குள்ள பெண்கள் தங்கள் காதுகளில் இருக்கும் பொன் நகைகளைக் கழற்றி வீசுவார்கள்” என்கிறது பட்டினப்பாலை. கோழிகளை விரட்டுவதற்கு தங்க நகைகளைக் கழற்றி வீசும் அளவுக்கு மக்களிடம் காவிரிப் பாசனத்தின் மூலம் கிடைத்த செல்வவளம் கொழித்திருந்ததாக இதன்மூலம் தெரிய வருகிறது. 

கல்லணை

காவிரியும்... சிலப்பதிகாரமும்!

அதேபோல், “துன்பமான காலங்களிலும் நாட்டைக் காக்கும் காவிரி” என்று சிலப்பதிகாரமும், “தடையின்றி வரும் காவிரி” என்று மணிமேகலையும் காவிரியின் வளம் பற்றி எடுத்தியம்புகின்றன. கோவலனும், மாதவியும் யாழிசைத்துக் காவிரியையும் கடலையும் நோக்கிப் பாடும் பாடல்கள் இந்திய இலக்கியத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதே சிலப்பதிகாரத்தில், கோவலனும், கண்ணகியும் மதுரை நோக்கிச் செல்லும்போது அவர்களுக்கு நேரப்போகிற துன்பத்தை உற்றறிந்த வையை என்னும் பொய்யாக்குலக்கொடி, “அவர்களுடைய துன்பத்தைக் காணமாட்டேன்” என்று மலர்களால் தன் கண்களை மூடிக்கொண்டு ஓடியதாக இளங்கோவடிகள் வர்ணித்துள்ளார். 

மேலும், திருஞானசம்பந்தரும், தொண்டரடிப் பொடியாழ்வாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் காவிரியைப் பற்றிப் புகழ்ந்து பாடியுள்ளனர். மகாகவி பாரதியாரோ, “கங்கை நதிப் புறத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்” என்று பாடுகிறார். இப்படிச் செய்யுள்கள், கவிதைகள் மட்டுமின்றி கதைகளிலும், நாவல்களிலும்கூடக் காவிரி நதியைப் பற்றிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளவரசன்! 

ஒருகாலத்தில் பூம்புகாரை வந்தடையும் காவிரிக்கரையில், ஆண்டுதோறும் வெள்ளம் வருகிறபோது, அங்குள்ள ஆடவரும், பெண்டிரும் ஆடிப்பாடி மகிழ்வார்களாம். இதைக் காண்பதற்காகவே மக்கள் கூட்டம் அதிகமிருக்கும். இந்தப் புதுப்புனல் ஆட்டம் குறித்து பாரதி, “அவர் கன்னியராகி நிலவினில் ஆடிக் களித்ததும் இந்நாடே - தங்கள் பொன்னுடல் இன்புற நீர் விளையாடில் போந்ததும் இந்நாடே” என்று பாடுகிறார். 

காவிரிப் பாசனம்

இப்படி ஒருமுறை பூம்புகார் காவிரிக்கரையில் நடந்த புதுப்புனல் விளையாட்டில் பங்கேற்பதற்காக ஆட்டனத்தி என்ற சேர நாட்டு இளவரசன் வருகிறான். அவனுடைய ஆடற்கலையில் வசப்பட்ட சோழ நாட்டு இளவரசி ஆதிமந்தி, அவனுடன் போட்டிபோட்டுக்கொண்டு காவிரிக்கரையில் ஆடி மகிழ்கிறாள். காவிரித் தண்ணீரில் விளையாடியபோது, ஆற்றின் ஆழம் தெரியாமல் இறங்கிய ஆட்டனத்தியை, தண்ணீர் வந்த வேகத்தில் ஆழத்துக்கு இழுத்துச் சென்றுவிடுகிறது. ஆட்டனத்தி திடீரென்று மாயமானதால், அவரைக் காணாமல் இளவரசி ஆதிமந்தி அழுது புலம்பியதாக இலக்கியச் சான்றுகள் குறிப்பிடுகின்றன. அந்தளவுக்கு, காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடியதும், அதன்மூலம் காவிரிக் கரையோரப் பகுதிகள் அனைத்தும் செல்வச் செழிப்புடன் இருந்ததும் இலக்கியங்கள் சொல்லும் விஷயம் என்பது நமக்குப் புலனாகிறது.   

‘ஆட்டம்போட்டது போதும்!’  

இப்படி இலக்கியங்களில் புகழப்பட்டிருக்கும் காவிரி, அன்று எப்படியிருந்தது என்று மூத்த விவசாயி ஒருவரிடம் பேசினோம். “தண்ணீரின் முக்கியத்துவம் உணர்ந்துதான் எங்கள் மண்ணின் வளம் கொழிக்க அன்றே கரிகாற்சோழன் காவிரிக்காகக் கல்லணையைக் கட்டிச் சென்றான்... நீர்ப்பாசனத்துக்கான வழியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே காட்டிச் சென்றான். அதனால்தான் காவிரி பாய்ந்து சென்ற பகுதிகள் எல்லாம் பச்சைப் பசேலென்று காட்சியளித்தன. அந்தப் பசுமைக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் அந்தக் கால இலக்கியங்களும் காவிரி ஓடிய பகுதிகளைப் புகழ்ந்து தள்ளின. அதற்குக் காரணம், இயற்கை எழிலையும், பசுமையையும் கொண்டிருந்தது எங்கள் மண். சில்லென்று வீசும் காற்றுடன் ஆற்றங்கரையோர பள்ளிக்கூடம்... அழகான வீட்டைச் சுற்றி அமைந்த பசுமையான வயல்வெளி... ஆனந்தமாய்க் குதித்து மகிழும் ஆற்றுக் குளியல்... ‘ஆட்டம்போட்டது போதும்’  என்று சத்தமிடும் பெருசுகள்... அயிரை மீன் குழம்புடனும், அனைத்து வகையான காய்கறிகளுடனும்  தலைவாழை இலை சாப்பாடு என அனைத்தும் எங்கள் பகுதிகளில் விடுமுறை நாளின்போது களைகட்டும். 

காவிரி

“அஃது அனைத்தும் இன்றில்லை!”

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் பிறக்கும்போதெல்லாம்... ‘மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப் போகிறார்கள்’  எனும் செய்தி கேட்டதுமே... அக்கம்பக்கத்து உறவினர்களும், நண்பர்களும் ஒரு கூட்டமாகத் தண்ணீர் வரும் திசையைப் பார்த்து ஆற்றங்கரையில் கூடி நிற்கும் அழகே ஒரு தனி அழகு. அந்த நீரைக் கண்ட கணப்பொழுதில், அங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் எத்தனையோ கனவுகள், எத்தனையோ எதிர்பார்ப்புகள் அரங்கேறும். தண்ணீர் வந்த சில நாள்களில் எல்லோரும் அக்கரையில் உள்ள வயல்களுக்கு ஆற்றைக் கடந்து மாட்டை ஓட்டிச் சென்று வயலில் உழ ஆரம்பித்து விடுவார்கள். பெரியவர்கள் விவசாய வேலையில் தீவிரமாய் இறங்கிவிட, இளம்பருவத்தினரோ தூண்டில் போட்டு மீன் பிடிப்பார்கள்; துறுதுறுவென தண்ணீரில் துள்ளிக்குதித்து விளையாடுவார்கள். வேலையாள்களுக்கு டீயும், பன்னும் வாங்கிக்கொண்டு செல்லும் தாத்தாக்களுடன் வயல்வெளிக்குப் பயணிக்கும் பேரக்குழந்தைகளும், ‘எனக்கும் அதையும் இதையும் வாங்கித் தா’ என்று அடம்பிடிப்பார்கள். இப்படியான சூழ்நிலையில் விளையும் நெற்பயிர்களும் அவர்களுடைய எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யும் வகையில், பருவப் பெண்ணைப்போல் வெட்கமிட்டுத் தலைகவிழ்ந்து நிற்கும். அறுவடைக்குப் பிறகு அனைத்து வீடுகளும் சந்தோஷத்தில் திளைக்கும். ஆனால், அஃது அனைத்தும் இன்றில்லை. இதுபோல் வாழ்ந்த அனுபவங்கள்கூட இனி மூன்றாம் தலைமுறையினருக்குத் தெரியும்படி இருக்காது” என்றார் சற்றே வேதனையுடன்.

காவிரி பாயும்...

https://www.vikatan.com/news/tamilnadu/124330-the-abandoned-story-of-cauvery-series-4.html

Share this post


Link to post
Share on other sites

புஷ்கர விழாவில் புனித நீராடிய எடப்பாடி! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 5

 
 
Chennai: 

காவிரி பற்றிப் பாடிய நூல்களும் ஏராளம்; அதன் கரையில் வாழ்ந்த புலவர்களும் ஏராளம். இப்படி இலக்கியங்களிலும், புராணங்களிலும் போற்றிப் புகழப்பட்ட காவிரி, கவேரர் என்ற மகரிஷிக்கு மகளாக இருந்ததாகவும், அதன் பின்னர் அகத்தியருக்கு மனைவியாக வாழ்ந்ததாகவும் புராணக்கதைகள் உண்டு.

காவிரி

 

இந்தக் கட்டுரையின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

கவேரரின் மகள்!

கவேரர் என்ற மகரிஷி, தனக்கொரு மகள் வேண்டும் என்று பிரம்மனை நோக்கித் தவம் புரிந்தார். அவர் முன் ஒரு பெண் குழந்தையோடு பிரம்மா தோன்றி, “முனிவர்களில் சிறந்தவனே! முன்பு நான் தவம் செய்தபோது விஷ்ணுமாயாவின் அருளால் எனக்கு மானச புத்திரியாக இவள் தோன்றினாள். இவளுக்குப் பெண்ணுருவம், நதியுருவம் என இரண்டு உருவங்கள் உண்டு. இவளை இப்போது உனக்கு அளிக்கிறேன்” எனக் கூறி, அந்தக் குழந்தையைக் கவேரர் மகரிஷியிடம் ஒப்படைத்துவிட்டு மறைந்தார். மகள் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்த கவேரர், அவளுக்கு லோபாமுத்திரை எனப் பெயர் சூட்டினார். அவள் வளர்ந்து, மங்கைப் பருவம் அடைந்தாள். பெற்றோரின் அனுமதியுடன் சிவபெருமானை எண்ணிக் கடுந்தவம் செய்தாள். அவளின் தவத்தினால் காட்சி தந்த சிவபெருமானிடம், “நான் நதிவடிவம் எடுத்து பூமியை வளப்படுத்த வேண்டும்” என்று வரம் கேட்டாள்.

காவிரி

அகத்தியருடன் திருமணம்!

அதற்கு சிவபெருமானும், “பெண்ணே, நீ கங்கையினும் புனிதமாவாய், ‘காவிரி’ என்று அழைக்கப் பெறுவாய். நீ நதிரூபம் அடைந்து பூமியை வளப்படுத்தினாலும், உனது அம்சம் லோபாமுத்திரை என்ற பெயரிலேயே இருக்கும். முனிவர்களில் சிறந்தவராகிய அகத்தியரை மணம் செய்வாய்” என்று வரம் தந்தருளினார். அதன்படி, அகத்தியருக்கும் லோபாமுத்திரைக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் காசி க்ஷேத்திரத்துக்குச் சென்று, சிவபூஜை செய்தபடி, இனிதே இல்லறம் நடத்திவந்தனர். அவளின் நதிரூபத்தைத் தன்னுடைய கமண்டலத்தில் வசிக்கும்படி செய்தார் அகத்தியர். பிறகு, பரமேஸ்வரரின் ஆணைப்படி, அவர்கள் தென்னகம் வந்தனர். இந்நாளில் குடகுமலை என்று சொல்லப்படும் இடம், அந்தக் காலத்தில் சையமலை எனப்பட்டது; இதனைப் பிரம்மகிரி என்றும் கூறுவர். அங்கு, சில காலம் தங்கியிருந்து சிவபூஜை செய்து மகிழ்ந்தனர் அகத்தியர் தம்பதி. சிவபெருமான் வரத்தின்படி, காவிரியாள் பூமியில் பெருக்கெடுத்து ஓடி, உலகை வளப்படுத்தும் காலம் கனிந்தது.

சோழநாட்டின் குலக்கொடி! 

ஒருநாள், நெல்லி மரத்தடியில் தன்னுடைய கமண்டலத்தை வைத்துவிட்டுத் தவத்தில் ஆழ்ந்திருந்தார் அகத்தியர். இந்த நிலையில், விநாயகரிடம் சென்ற இந்திரன் முதலான தேவர்கள், காவிரியைப் பூமியில் பெருகியோடச் செய்யும்படி வேண்டினர். அவரும் காக்கை வடிவம் கொண்டு, அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்த்து, காவிரியைப் பெருக்கெடுத்து ஓடச் செய்தார். ஆனால், காவிரியான லோபாமுத்திரையோ நெல்லி மரத்தடியைச் சுற்றிச்சுற்றி வந்து, தான் பாய வேண்டிய திசை புரியாது நின்றாள். கண்விழித்த அகத்தியர், காக்கை வடிவில் விநாயகர் வந்து கமண்டலத்தைக் கவிழ்த்ததை உணர்ந்து வருந்தினார். ஆனாலும், இறைவன் திருவுளப்படியே அனைத்தும் நடைபெறுகிறது என மனதைத் தேற்றிக்கொண்டவர், காவிரிக்கு வழிகாட்டியபடி நடக்கத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து ஓடிய காவிரி, பல இடங்களை வளப்படுத்திய பின்பு கடலில் கலந்தாள். அன்றுமுதல், சோழநாட்டின் குலக்கொடியானாள் காவிரி.

காவிரி

காந்தமன் என்ற சோழ மன்னன் அகத்திய முனிவரிடம் கேட்டதற்கிணங்க காவிரி ஓடியதாகப் புராணங்கள் கூறுகின்றன. இதுகுறித்து மணிமேகலை காப்பியத்தில், 

“செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும்
கஞ்சவேட்கையிற் ‘காந்தமன்’ வேண்ட
அமரமுனிவன் அகத்தியன் தனது
கரகம் கவிழ்த்த காவிரிப்பாவை
பொங்கு நீர்பரப்பப் பொருந்தித்தோன்ற...”
என்று பாடப்பெற்றுள்ளது. 

புஷ்கர விழா!

இப்படி வற்றாத ஜீவநதியாய் ஓடிய காவிரி, ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ம் தேதியன்று ஒவ்வொரு வீட்டுக்கும் வருகிறாள் என்பது நம்பிக்கை. அன்று காவிரியை, டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் சிறப்புற வணங்கி மகிழ்வர். அதேபோல், காவிரியில் புஷ்கர விழாவும் கொண்டாடப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது புஷ்கர விழாவாகும். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது மகா புஷ்கர விழாவாகும். புஷ்கரம் என்பது நதிகளுக்கே உரித்தான விழாவாகும். கங்கை, நர்மதை, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, பிரம்மபுத்ரா, துங்கபத்ரா, சிந்து, பிராணஹிதா உள்ளிட்ட 12 நதிகளிலும் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.

புஷ்கர விழாவில் புனித நீராடிய எடப்பாடி!

பஞ்சாங்கங்களில் புஷ்கர காலம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒவ்வோர் ஆண்டுக்கும் தொடர்புடைய நதி என்பதை குரு (வியாழன், பிரகஸ்பதி) அந்தக் காலகட்டத்தில், எந்த ராசியில் உள்ளார் என்பதைப் பொறுத்து, குறிப்பிட்ட கால அளவுவரை புஷ்கரம் நடைபெறும். புஷ்கர காலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் ஆகியோர் ஒருசேர இருந்து அருள்பாலிக்கின்றனர் என்பது ஐதீகம். 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் (12 முதல் 24-ம் தேதி வரை) குரு பகவான் துலாம் ராசியைக் கடந்தபோது காவிரி மகா புஷ்கர விழா கொண்டாடப்பட்டது.

காவிரி மகா புஷ்கர விழாவில் எடப்பாடி பழனிசாமி நீராடியபோது

அந்தக் காலகட்டத்தில் மக்கள் நதிகளில் நீராடி, தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுப்பர். கடந்த ஆண்டு நடைபெற்ற காவிரி மகா புஷ்கர விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று நீராடினார். 2017 செப்டம்பர் 20-ம் தேதி காலை 10 மணிக்கு மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் அவர் புனித நீராடினார். முதல்வரின் வருகைக்காக, மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாள்களும் மயிலாடுதுறை காவிரிக் கரையில் துலாக்கட்டத்தில் நீராடல் நடைபெறும். அந்தச் சமயத்தில் கங்கை நதி, காவிரியில் கலப்பதாகவும், கங்கையில் குளிப்பவர்கள் கரைத்த பாவத்தைக் காவிரியில் கலந்து போக்கிக்கொள்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கங்கையைவிடவும் புனிதமானது! 

ஒருமுறை கண்வ மகரிஷியிடம் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் பெண் வடிவம் எடுத்துவந்து, “இந்திய மக்கள் அனைவரும் தங்களுடைய பாவமூட்டைகளைச் சுமந்துவந்து எங்களிடம் மூழ்கிக் கரைத்துப் போகின்றனர். அதனால், நாங்கள் கருமை அடைந்துவிட்டோம். எங்கள் பாவங்கள் போக வழி செய்ய வேண்டும் என்று முறையிட்டனவாம். அதற்குக் கண்வ முனிவர், “ஐப்பசி மாதம் மயிலாடுதுறை காவிரியில் துலாக்கட்டத்தில் நீராடினால், பரிகாரம் கிடைக்கும்” என்றாராம். இதன்மூலம் கங்கையை விடவும் காவிரி ஆறு மிகவும் புனிதமானது என்பது புலப்படுகிறது. 

மேலும் காவிரி, கங்கையை விடவும் புனிதமானது என்பதை விளக்கும் வகையிலான கருத்து தொண்டரடிப் பொடியாழ்வாருக்கும் உண்டு. அதனால், “கங்கையிற் புனிதமாய காவிரி நடுவுப் பாட்டுப் பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம்” என்கிறார் அவர். காவிரியில் அம்பிகை மயிலாய் வந்து பூஜை செய்த நிகழ்வை பரஞ்ஜோதி முனிவர், 

“மதிநுதல் இமயச்செல்வி மஞ்சையாய் வழிபட்டு ஏத்தும்
துலாப் பொன்னித் தானம்”
 என்று குறிப்பிடுகிறார்.

“கங்கையில் பல தினங்கள் நீராடிய புண்ணியம், மயிலாடுதுறையில் துலாக்கட்ட காவிரியில் நீராடுவதால் கிடைக்கும்” என்கிறது காவிரி மஹாத்மியம் என்னும் நூல். 

காவிரி பாயும்...

https://www.vikatan.com/news/tamilnadu/124532-the-abandoned-story-of-cauvery-series-5.html

Share this post


Link to post
Share on other sites

மைசூரு அரசின் முதல் துரோகம்! காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 6

 
 
Chennai: 

சோழவள நாட்டைச் சொர்க்கபூமியாக மாற்றிய காவிரி, அந்தக் காலத்திலேயே நீரால் சுருங்கிப்போன நிகழ்வும் உண்டு; அதன் காரணமாகத் தமிழகம் பஞ்சத்தில் பரிதவித்த கதையும் உண்டு. காவிரியில், ஒருகாலத்தில் நீர் சுருங்கியதால் பஞ்சம் ஏற்பட்டதாகவும், அதற்காகக் கோயில் சொத்தைச் சூறையாடியதாகவும் ராஜராஜ சோழனின் 24-ம் ஆட்சியாண்டின் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

காவிரி

 

இந்தக் கட்டுரையின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்...

சீரமைப்புப் பணிகள் தொடக்கம்!

காவிரியில் அன்று ஏற்பட்ட பஞ்சம் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது; பல்வேறு துயரங்களுக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கிறது. இது, மன்னர்கள் காலந்தொட்டே நீடிக்கிறது என்று முதல் அத்தியாயத்திலேயே படித்தோம். அதேபோல காவிரி நீரை மையமாக வைத்து மைசூரு - மதுரை மன்னர்களிடையே பல யுத்தங்கள் நடந்ததற்கும், ஏராளமான குளங்கள் மற்றும் நீர்நிலைகள் சேதப்படுத்தப்பட்டதற்கும் ஆதாரங்கள் உள்ளன. அவ்வாறு சிதிலமடைந்த குளங்களையும், நீர்நிலைகளையும் சீரமைக்கத் தொடங்கினார் அப்போதைய மைசூரு திவான் பூர்ணையா. 

முதல்கட்டமாக மைசூருவில் 1807-ம் ஆண்டு தொடங்கிய இந்தச் சீரமைப்புப் பணிகள், அதன்பிறகு காவிரிக் கரையோரப் பகுதிகளில் நடைபெற்றன. இதனால், தமிழகத்துக்கு வரும் காவிரி நீர் குறைந்து போய்விடும் என்று கருதிய சோழநாட்டு விவசாயிகள், தங்கள் ஆதங்கத்தை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். அவர்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொண்ட ஆட்சியர், மைசூருக்குச் சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளைப் பார்த்து வருவதற்காக ஓர் அதிகாரியை நியமித்தார். அங்கு சென்று அப்பணிகளைப் பார்வையிட்ட அந்த அதிகாரி, “யுத்தத்தால் சிதைந்த குளங்களும், குட்டைகளும்தான் மறுசீரமைக்கப்படுகின்றனவே தவிர, வெறெந்த ஆக்கிரமிப்போ, தடையோ ஏற்படுத்தவில்லை” என்று விளக்கம் கொடுத்தார்.

காவிரி

‘மைசூரு பெருந்திட்டம்’! 

கால மாற்றத்தினால் 1831-ம் ஆண்டு மன்னர் ஆட்சியின்கீழ் இருந்த மைசூரு சாம்ராஜ்யம், பிரிட்டிஷாரின் கைக்குச் சென்றது. மைசூரின் வளர்ச்சிக்காக, ‘மைசூரு பெருந்திட்டம்’ என்ற பெயரில் சில சிறப்புத் திட்டங்களைக் கர்னல் ஆர்.ஜே.சான்கி என்பவர் உருவாக்கினார். குறிப்பாக, மைசூரில் வருடந்தோறும் கிடைக்கும் மழைநீரை முழுமையாகப் பயன்படுத்த ஏதுவாக நீர்ப்பாசனத் திட்டங்களை உருவாக்கினார். அப்படி, அவர் வகுத்துக் கொடுத்த திட்டங்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டது. “அந்தத் திட்டங்கள் செயல்வடிவம் பெறும்பட்சத்தில் தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுடைய நெல் சாகுபடியும் பாதிக்கப்படும்” என்றும் சென்னை அரசுப் பொறியாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், எதையும் கவனத்தில்கொள்ளாத மைசூரு அரசாங்கம், அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் முழுக் கவனம் செலுத்தத் தொடங்கியது. 1877-ம் ஆண்டு, பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மைசூரைப் பஞ்சம் தாக்கியது. ஆம், அது காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் கண்ணீராகக்கூட இருக்கலாம்.

முதல் பேச்சுவார்த்தை!

பஞ்சத்தால் நிதிப் பற்றாக்குறை ஏற்பட, அந்தத் திட்டம் பாதியிலேயே நின்றுபோனது. பஞ்சத்துக்குப் பிறகு மைசூரு ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டது. மைசூரு சமஸ்தானத்தில் ஆங்கிலேயர்கள் தங்களின் பிரதிநிதி ஒருவரை நியமித்து, மைசூரை ஆங்கிலேய மன்னரிடம் ஒப்படைத்தனர். எனினும், காவிரிப் பிரச்னை நீறுபூத்த நெருப்பாகப் புகைந்துகொண்டே இருந்தது. இந்த நிலையில், 1890-ம் ஆண்டு சென்னை ராஜதானி அரசு சார்பிலும், மைசூரு சமஸ்தான அரசு சார்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

காவிரி

ஹெச்.ஈ.ஸ்டோக்ஸ், ஜி.டி.வால்க் ஆகியோர் சென்னை ராஜதானி சார்பிலும், ஆலிவர் செயின்ட் ஜான், திவான் சேஷாத்ரி அய்யர், கர்னல் போவன் ஆகியோர் மைசூரு சமஸ்தானம் சார்பிலும் அந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். “காவிரி நீரில் எங்களுக்கு இருக்கிற உரிமையின் அடிப்படையில்தான் எங்களுக்கான நீர்ப்பாசனத் திட்டங்களை உருவாக்குகிறோம்” என்ற வாதத்தை மைசூரு சமஸ்தானம் முன்வைத்தது. இதை நிராகரித்த சென்னை ராஜதானி அரசு, “தஞ்சாவூர் கழிமுகத்தில் கிறிஸ்து சகாப்தத்துக்கு முன்னதாகவே பண்டைய சோழ மன்னர்கள் காவிரியில் அமைத்திருந்த உன்னதமான நீர்ப்பாசனம் தொடங்கியே இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் உரிமை பெற்று அனுபவித்து வந்தனர்” என்று பதிலளித்தது. இதனால் இருதரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. பின்பு, அதே பிரச்னைக்காக மீண்டும் இரு அரசுகளும் 1891-ல் பேச்சுவார்த்தை நடத்தின. அதிலும் தோல்வி ஏற்பட, இறுதியாக 1892-இல் இரண்டு அரசுகளுக்கிடையேயும் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.

1892-ம் ஆண்டு ஒப்பந்தம்!

‘மைசூர் அரசின் பாசனப் பணிகள் - சென்னை - மைசூர் ஒப்பந்தம்-1892’ என்ற பெயரில் உருவான அந்த ஒப்பந்தத்தில், மைசூரு சமஸ்தானத்தின் முதன்மையான ஆறுகள் துங்கபத்ரா, துங்கா, பத்ரா, ஹகரி அல்லது வேதவதி, பெண்ணாறு அல்லது வட பினாகினி, சித்திராவதி, பாபக்னி, பாலாறு, பெண்ணாறு அல்லது தெற்குப் பினாகினி, காவிரி, ஏமாவதி, லட்சுமண தீர்த்தம், கபினி, சுவர்ணவதி, யகாதி (பேலூர்ப் பாலம் வரை) A பிரிவிலும், துணையாறுகள் B பிரிவிலும், சிறு ஓடைகளும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளும் C பிரிவிலும் இடம்பெற்றன. 

காவிரி

மேலும், ‘சென்னை அரசின் ஒப்புதல் இல்லாமல் மைசூரு அரசு A பிரிவில் உள்ள ஆறுகளில் அணைகள் கட்டக்கூடாது என்றும், B மற்றும் C பிரிவுகளில் உள்ள ஆறுகளிலும், ஓடைகளிலும் அந்த அரசு தனது விருப்பம்போல் செயல்படலாம் என்றும், A பிரிவில் உள்ள ஆறுகளில் புதிய நீர்த்தேக்கமோ, அணைகளோ கட்ட விரும்பினால் மைசூரு அரசு சென்னை அரசுக்கு அதுகுறித்த திட்ட விவரங்களைத் தெரிவித்து ஒப்புதல் பெற வேண்டும்’ என்றும் அதில் சொல்லப்பட்டது. உலக நாடுகளில் பொருந்தி வரக்கூடியபடியே இந்த ஒப்பந்தம் போடப்பட்டிருந்தாலும் மைசூரு அரசுக்கு அது சாதகமானதாக இல்லை என்றே சொல்லப்பட்டது.

மைசூரு அரசின் முதல் துரோகம்! 

1892-ம் ஆண்டு ஒப்பந்தத்துக்குப் பின் இரு அரசுகளுக்கும் இடையே முதல் சிக்கல் எழுந்தது. அந்த ஒப்பந்தப்படி, சிவசமுத்திரம் நீர்மின் நிலையத்துக்காக 11 டி.எம்.சி. கொள்ளளவு நீர்த்தேக்கத்தைக் கட்ட மைசூரு அரசு, சென்னை அரசிடம் அனுமதி பெற்றது. ஆனால், 41 டி.எம்.சி. கொள்ளளவு நீர்த்தேக்கத்துக்கான அடித்தளத்தை அமைக்க அது திட்டமிட்டது. இந்தத் திட்டமே, தமிழகத்துக்கு மைசூரு அரசு செய்யும் முதல் துரோகமாகப் பார்க்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை அரசாங்கம் முறையீடு செய்தது. 

காவிரி பாயும்....

https://www.vikatan.com/news/tamilnadu/124731-the-abandoned-story-of-cauvery-series-6.html

Share this post


Link to post
Share on other sites

மைசூருக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி... காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 7

 
 
Chennai: 

மைசூரு சமஸ்தானம் 1892-ம் ஒப்பந்தத்தை மீறிச் செயல்பட ஆரம்பித்ததால், அதை எதிர்த்து அப்போதைய சென்னை மாகாண அரசு முறையீடு செய்தது. இரு அரசுக்குமிடையே ஏற்பட்ட காவிரிப் பிரச்னையைத் தீர்த்துவைப்பதற்காக அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஹென்றி க்ரிஃபின் என்பவர், கடந்த 1913-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இவருக்குத் துணையாகப் பிரிட்டிஷ் இந்திய அரசின் நீர்ப்பாசனத் துறை தலைமை ஆய்வாளர் நெதர்சோல் நியமிக்கப்பட்டார். காவிரி நதி நீர்ச் சிக்கலைத் தீர்ப்பதற்காக ஹென்றி க்ரிஃபின் தலைமையில்தான் முதல் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. அதன்பின்னர், இரண்டாவது தீர்ப்பாயம் 1991-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. 

காவிரி

 

 

‘க்ரிஃபின் அவார்டு’! 

இருதரப்பு வாதங்களையும் விசாரித்த ஹென்றி க்ரிஃபின், 1914-ம் ஆண்டு மைசூரு அரசுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கினார். அது, ‘க்ரிஃபின் தீர்ப்பு’ (Griffin Award) என்று அழைக்கப்பட்டது. ``கண்ணம்பாடி அணையைக் கட்டுவதன் மூலம் 1892-ம் ஆண்டு ஒப்பந்தத்தின் வழியாகச் சென்னை மாகாண அரசுக்குக் கிடைத்த எவ்வித பிரத்யேகச் சட்ட உரிமைக்கும் குந்தகம் ஏற்படாது” என்று க்ரிஃபின் அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். சென்னை ராஜதானி பாசனத்துக்கான நீரின் தேவை 22,750 கன அடி என்கிற உச்சவரம்பையும் அவர் அதில் நிர்ணயித்தார். அதன்படி, 1892-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, சென்னை மாகாணத்துக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நீர் உச்சவரம்பில் 4,000 கன அடியைக் குறைத்தது க்ரிஃபின் தீர்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது. 

மைசூருக்கு ஆதரவான தீர்ப்பு!

“மேலணையில் 7 அடி உயரமும், ஒரு நொடிக்கு 26,750 கன அடியும் தண்ணீர் வந்தால்தான் பழைய பாசனப் பகுதிகளைப் பாதுகாக்க முடியும்; அனுபவ பாத்தியதை உரிமைப்படி உள்ள அளவு தண்ணீரும் கிடைக்கும்” என்று சென்னை அரசு கூறியதுடன், அந்தத் தீர்ப்பையும் ஏற்க மறுத்தது. இந்தத் தீர்ப்புத் தேதியின்போது மைசூரு சமஸ்தானத்தின் விளைநிலப்பரப்பு 1,15,000 ஏக்கராகவும், சென்னை ராஜதானியின் விளைநிலப்பரப்பு 2,25,500 ஏக்கராகவும் இருந்தது. தீர்ப்பை எதிர்த்து சென்னை மாகாண அரசு மீண்டும் மத்திய அரசிடம் முறையீடு செய்தது. க்ரிஃபினின் தீர்ப்பை எவ்வித மாற்றமுமின்றி ஏற்றுக்கொள்வதாக 1916-இல் மத்திய அரசு அறிவித்ததுடன், “தீர்ப்பை மாற்றினால் மைசூருக்கு மிகப்பெரிய அநீதி இழைப்பது போலாகும்” என்று கருத்துச் சொன்னது. 

காவிரி

மீண்டும் பேச்சுவார்த்தை!

மீண்டும் மைசூருக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டதைக் கண்டித்து, சென்னை அரசாங்கம் இங்கிலாந்தில் உள்ள அரசுத் துறைச் செயலாளரிடம் முறையீடு செய்தது. அதன்படி, சென்னை அரசின் மேல்முறையீட்டில் முதல் நோக்கு நியாயம் இருப்பதாக அறிவிக்கப்பட்டதுடன், 1919-ம் ஆண்டு மத்திய அரசின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. மேலும், “இந்திய அமைச்சரின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்; புதிய தீர்ப்பாயத்தை அணுகலாம்; இரு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்திப் புதிய உடன்பாட்டுக்கு வரலாம்” என்ற நிபந்தனைகளையும் விதித்தது. ஆனால், மைசூரு அரசோ, மூன்றாவது நிபந்தனையான பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டது. இதையடுத்து, நீர்ப் பங்கீடு தொடர்பாக இரு அரசுகளுக்கும் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது. முதல்கட்டமாக 1920-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய பேச்சுவார்த்தையில், மைசூரு அரசு சார்பில் எஸ்.கடாம்பியும், சென்னை அரசு சார்பில் டபிள்யூ.ஜே.ஜே.ஹவ்லியும் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையின்போது பிரிட்டிஷ் இந்திய அரசின் நீர்ப்பாசனத் துறை தலைமை ஆய்வாளர் ஜே.ஆர்.ஜே.வார்டும் பங்கேற்றார். 

பாண்டிச்சேரி ஆளுநர்!

ஒருவழியாக, 1921-ம் ஆண்டு ஜூலை மாதம் இரு அரசுகளும் கண்ணம்பாடி அணை கட்டுவதற்குரிய வரைவு விதிகளையும், ஒழுங்குமுறைகளையும் இறுதி செய்தபோதிலும் அதிருப்தியே நிலவியது. இதனால் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது. இப்படித் தொடங்கிய பேச்சுவார்த்தை 1924-ம் ஆண்டுவரை நீடித்தது. இதில் கடிதப் பரிமாற்றங்களும் அடக்கம். குறிப்பாக, இந்தப் பேச்சுவார்த்தையின்போது, பாண்டிச்சேரி ஆளுநரும் களமிறங்கி, “சென்னை - மைசூரு இடையே கையெழுத்தாகும் ஒப்பந்தம் எந்த வகையிலும் காரைக்கால் விவசாயத்தைப் பாதித்துவிடக் கூடாது. ஆகவே, பாண்டிச்சேரியை சென்னை ராஜதானி கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். 

காவிரி

இறுதியில் 1924-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் சென்னை அரசு சார்பில் ஹாக்கின்ஸும், மைசூரு அரசின் சார்பில் திவான் ஏ.ஆர்.பானர்ஜியும் கையெழுத்திட்டனர்.
 
மைசூரு திவான் பாராட்டு!

``இந்த ஒப்பந்தம் இருதரப்பும் விட்டுக்கொடுத்து உருவானது” என்றார், மைசூரு திவான் ஏ.ஆர்.பானர்ஜி. இந்த ஒப்பந்தம் குறித்து மேலும் அவர், ``தொழில்நுட்ப அதிகாரிகளைப் பொறுத்தவரை அவர்கள் பணி எளிதானதல்ல. வேறுபாடு கொண்ட அம்சங்கள் எண்ணிலடங்காதவை. பலகட்டங்களில் இருதரப்பினருக்கும் இடையே சமாதானம் வர முடியாது என்ற நிலை ஏற்பட்டதை ஒப்புக்கொள்ள வேண்டும். சென்னைத் தரப்பைச் சேர்ந்த ஹவ்லி, மோரின், ராமலிங்க ஐயர் மற்றும் மைசூரு தரப்பைச் சேர்ந்த கடாம்பி, கர்ப்பூர் சீனிவாச ராவ் ஆகியோர் வரலாற்றில் நிற்பார்கள். இவர்கள் விவரங்களை எடுத்துவைப்பதில் முதல் தரமான திறனும் பரந்துவிரிந்த அறிவும் பெற்றிருந்தனர். அதேசமயம், பேச்சுவார்த்தையில் கொடுத்து வாங்கும் உணர்ச்சி இவர்களிடம் மேலோங்கி இருந்தது. தங்கள் பகுதி மக்களின் நலனையும் செழிப்பையும் கைவிடும் வகையில் இவர்கள் யாரும் தங்கள் தரப்பின் அடிப்படை அம்சங்களை விட்டுவிடாமல் பேசினர்” என்று குறிப்பிட்டுள்ளார். 

- காவிரி பாயும்...

https://www.vikatan.com/news/tamilnadu/124958-the-abandoned-story-of-cauvery-series-7.html

Share this post


Link to post
Share on other sites

`1924 - காவிரி நதிநீர் ஒப்பந்தம்' சொல்வது என்ன? காவிரி கைவிரிக்கப்பட்ட கதை! அத்தியாயம் - 8

 
 
Chennai: 

ண்ணம்பாடி அணையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் சென்னை அரசு தனது விளைநிலப் பரப்பை அதிகரித்துக் கொள்வதற்கான உரிமை பாதுகாக்கப்பட்டிருந்தது. 1892- ம் ஆண்டு ஒப்பந்தம் இந்த இரண்டு பகுதிகளுக்கிடையே ஓடும் பல்வேறு ஆறுகள் சம்பந்தப்பட்டது என்றால், 1924- ம் ஆண்டு ஒப்பந்தம் காவிரி ஆற்றுப்படுகையின் பாசன அபிவிருத்தியைப் பொறுத்து மட்டுமே தொடர்புடையதாகும். 1892, 1924 ஆகிய இரண்டு ஒப்பந்தங்களுமே காவிரியின் கடைமடை பகுதிக்குத் தண்ணீர் பாய்வதை உத்தரவாதப்படுத்துகின்றன.

காவிரி

 

இந்தக் கட்டுரையின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்...

1924- ம் ஆண்டு ஒப்பந்தத்தில், கீழ்க்கண்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

1. மைசூரு அரசு, 1.25 லட்சம் ஏக்கர் விளைநிலத்துக்கு நீர்ப்பாசனம் செய்துகொள்ள ஏதுவாக 124 அடி உயரமும், 44.827 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்ட கண்ணம்பாடி அணையைக் கட்டிக்கொள்ளலாம்.

2. சென்னை ராஜதானி அரசு, 93.5 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையைக் கட்டிக்கொள்ளலாம்.

3. அணை, விளைநிலம் தொடர்பான விவரங்களை இரு அரசுகளும் ஒவ்வோர் ஆண்டும் பரிமாறிக்கொள்ள வேண்டும்.

4. சுமார் 45 டி.எம்.சி. நீரைப் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக மைசூரு நிலப்பரப்பில் 1,10,000 ஏக்கர் அளவுக்கு விளைநிலங்களை விரிவுப்படுத்திக் கொள்ளலாம்.

5. மைசூரு சமஸ்தானத்தில் கட்டப்படவிருக்கும் அணைகள் குறித்த அனைத்துத் தகவல்களையும் சென்னை அரசுக்குத் தெரிவிக்க வேண்டியது மைசூரு அரசின் கட்டாயக் கடமை.

6. சென்னை அரசு புதிய அணைகளை (பவானி, அமராவதி, நொய்யல் ஆறுகளில்) கட்டிக்கொள்ளும் பட்சத்தில், அவற்றை ஈடுசெய்யும் வகையில் மைசூரு அரசும் புதிய அணைகளைக் கட்டிக்கொள்ளலாம். அதேசமயம், புதிய அணைகளைக் கட்டிக்கொள்வதன் மூலம் உபரிநீரைப் பகிர்ந்துகொள்வதில் எவ்வித உரிமை மீறலும் இருக்கக் கூடாது.

மேட்டூர் அணை

7. இந்த ஒப்பந்தத்தின் அம்சங்கள் குறித்து 50 ஆண்டுகள் கழித்து (1974) மறு ஆய்வு செய்ய வேண்டும்.

8. ஒருவேளை, ஒப்பந்தத்தை நிறைவேற்றிக்கொள்வதில் இருதரப்புக்கும் பிரச்னை ஏற்படும் பட்சத்தில், தீர்ப்பாயம் மூலமாகவோ, இந்திய அரசின் மூலமாகவோ தீர்த்துக்கொள்ளலாம்.

1924- ம் ஆண்டு ஒப்பந்தம் குறித்து பொறியியல் வல்லுநர் விஸ்வேஸ்ரய்யாவின் எதிர்வினை கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ``இரு சமமற்ற தரப்புகளுக்கு இடையிலான ஒப்பந்தம் இது. ஒருபக்கம், ஏகாதிபத்திய சக்தி (சென்னை). மறுபக்கம், நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர் (மைசூரு). இந்த இடத்தில் பலவீனமானவர் வீழ்வதைத் தவிர, வேறு வழியில்லை”.

குறிப்பாக, இந்த ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை முக்கியமான அம்சம் அதன் கால எல்லை தொடர்பானது. 1924 ஒப்பந்தம் 50 ஆண்டுகள் முடிந்ததும், மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்ததே தவிர, 50 ஆண்டுகளோடு காலாவதியாகிவிடும் என்று சொல்லப்படவில்லை. அதாவது, ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கிற அனுபவத்தைக் கொண்டு உபரிநீரை (ஒப்பந்தம் எதிர்பார்த்ததைவிடக் கூடுதலாக வரும் நீரை) எவ்வாறு பகிர்ந்துகொள்வது என்று மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உட்பிரிவு XI கூறுகிறது.  இதைத்தான் இன்றைய கர்நாடக அரசு, `ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு காலாவதியாகிவிடும், செல்லாததாகிவிடும்’ என்ற வாதத்தை முன்வைத்துப் பேசுகிறது.

உட்பிரிவு XI-இல் உள்ளது என்ன?

The Mysore Government and the Madras Government further agree that the limitations and arrangments embodied in clauses (IV) to (VIII) supra shall, at the expiry of fifty years from the date of the excution of these presents, be open to reconsiderations in the light of the experience gained and of an examination of the possibilities of the further extension of irrigation within the terrotories of the respective Governments and to such modifications and additions as may be mutually agreed upon as the result of such reconsiderations.

காவிரி

1924- ம் ஆண்டு ஒப்பந்தம் விதி 10(13)-இன்படி 1924 ஒப்பந்தத்தில் கூறப்படும் விஷயங்கள் தவிர, வேற எந்த ஷரத்திலும் 1892- ம் ஆண்டு ஒப்பந்தச் செயல்பாட்டை மாற்றக் கூடாது என்றே கூறுகிறது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள காவிரி டெல்டாவினுடைய விவசாயப் பாதுகாப்பை 1892 விதி 3-ம், 1924- ம் ஆண்டு ஒப்பந்தம் விதி 10(2)-ம் உறுதிபடுத்துகின்றன. இந்த இரண்டு ஒப்பந்தங்களும் காவிரியை, மைசூரு எப்படியும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறவில்லை. 

1924- ம் ஆண்டு ஒப்பந்தத்துக்குப் பிறகு, மைசூரில் சிறிய மற்றும் பெரியதுமான பல நீர்ப்பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. சென்னை - மைசூரு இடையே நடந்த பேச்சுவார்த்தை காரணமாக 1911- ல் அடிக்கல் நாட்டப்பட்ட கண்ணம்பாடி அணை (கிருஷ்ணராஜ சாகர்), 1924- ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகே செயல்வடிவம் பெறத் தொடங்கியது. ஏழாண்டு கால கட்டுமானப் பணிகளுக்குப் பிறகு 1931- ல் கிருஷ்ணராஜ சாகர் அணை திறக்கப்பட்டது. அதேபோல், ஒப்பந்தம் கையெழுத்தாகி இரண்டாண்டுகள் கழித்து தமிழகத்தில், தொடங்கப்பட்ட மேட்டூர் அணையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து 1934- ம் ஆண்டு அந்த அணை திறக்கப்பட்டது. பல நீர்ப்பாசனத் திட்டங்களால், மைசூரு அரசு தன்னுடைய விளைநிலப் பரப்பை அதிகரித்துக் கொண்டது. 1900-ல் 1.1 லட்சம் ஏக்கராக இருந்த விளைநிலம், 1930-களில் மூன்று லட்சம் ஏக்கராகவும், 1970-களில் 4.4 லட்சம் ஏக்கராகவும் விரிவுகண்டது.

 

- காவிரி பாயும்...

https://www.vikatan.com/news/tamilnadu/125164-the-abandoned-story-of-cauvery-series-8.html

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this  

May 18 Banner