Jump to content

தலைக்கடன் - இமையம்


Recommended Posts

தலைக்கடன் - இமையம்

ஓவியங்கள் : மணிவண்ணன்

 

களிர் காவல் நிலையத்தின் வாசலுக்குச் சற்றுத் தள்ளி, கிழக்கிலிருந்த இலுப்பை மரத்தின் நிழலில் உட்கார்ந்திருந்த தன்னுடைய அம்மா, அண்ணன், அண்ணியை நோக்கி, இடுப்பிலிருந்த குழந்தையுடன் சாலையைக் கடந்துவந்தாள் சீனியம்மா.

“புள்ளக்கி என்னா வாங்கிக் கொடுத்த?” என்று மேகவர்ணம் கேட்டாள். அதற்குச் சீனியம்மா பட்டும்படாமலும் “டீயும் பன்னும்தான்” என்று சொன்னாள்.

காவல் நிலையத்தின் பக்கம் பார்த்தாள். பிறகு, தலையைக் கவிழ்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த தன்னுடைய அண்ணன் சுந்தரத்தைப் பார்த்ததும் சீனியம்மாவுக்கு அழுகை வந்துவிட்டது. அழுகையை மறைப்பதற்காக அங்குமிங்கும் பார்த்தாள். அப்போதும் அவளுக்கு அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ‘‘ஒன்னெக் கொண்டாந்து இந்த எடத்தில ஒக்கார வச்சிட்டன்னு நெனைக்காத.  ஒரு வருஷமா நான் பட்ட கதெ ஒனக்குத் தெரியும்” என்று சொல்லிவிட்டு அழுதாள். அவள் அழுததைப் பார்த்ததும் சுந்தரம், தவமணி, மேகவர்ணம் என்று மூன்று பேருக்குமே அழுகை வந்துவிட்டது. அழுதுகொண்டே மேகவர்ணம் சொன்னாள், ‘‘எப்படி நான் புள்ள பெத்தன்? எப்பிடி நான் புள்ள வளத்தன்? கடைசியில எமங்கிட்ட கொண்டுபோயிக் கொடுத்திட்டனே.”

“எதுக்கு நீ கண்கலங்குற? ஒனக்கும் ஒம் புள்ளக்கும் தனி ஒலவச்சி, தனி அடுப்புவச்சா பொங்கப்போறன்? ஒங்கண்ணன் எப்பியும் தங்கச்சிண்ணா உசுராத்தான இருக்காரு” என்று சொன்ன தவமணியைப் பார்த்த சீனியம்மா, ‘தெரியும்’ என்பதுபோல தலையை மட்டும் ஆட்டினாள். பிறகு சாலையின் பக்கம் பார்த்தாள். பள்ளிக்கூடம்விட்டு சைக்கிளில் போய்க்கொண்டிருந்த ஏழெட்டுப் பிள்ளைகளைப் பார்த்தாள். நின்றுகொண்டிருந்த சீனியம்மாவிடம் சுந்தரம் சொன்னான்.

80p1_1524649868.jpg

“ஒக்காரு.”

சீனியம்மா உட்காரவில்லை. நின்றுகொண்டே வாக்குமூலம் கொடுப்பதுபோல, “நானோ எம் புள்ளயோ என்னிக்கும் ஒனக்கு தலச்சுமயா இருக்க மாட்டம். நான் சாவுறமுட்டும் நீ தலகுனிஞ்சி நடக்கிற மாதிரி வாழ மாட்டன். நான் ஒரு அப்பனுக்குப் பொறந்தவனு காட்டுறன்” என்று சொல்லிவிட்டு குலுங்கிக் குலுங்கி அழுத சீனியம்மாவைப் பார்த்த தவமணி, “எதுக்கு இப்பிடி பேசுற? அழுவுறத வுடு. ஒங்கண்ணன் இருக்கமுட்டும் ஒனக்கு என்னா கொற?” என்று கேட்டாள். பிறகு சீனியம்மாவின் இடுப்பிலிருந்த குழந்தையை வாங்கித் தன்னுடைய இடுப்பில் வைத்துக்கொண்டாள்.

சீனியம்மா நின்றுகொண்டிருந்த விதத்தையும் கோலத்தையும் பார்த்த மேகவர்ணம், “எம் புள்ளக்கி தல எழுத்து இப்பிடி அமஞ்சிபோச்சே” என்று சொல்லிக் கண்கலங்கினாள்.

“நீங்களும் எதுக்குப் பொட்டச்சி மாதிரி சொடிங்கிப்போயி குந்தியிருக்கிங்க? எழுந்திருங்க. போயி ஒரு டீத்தண்ணிய குடிச்சிட்டு வாங்க. மூணுபேரும் ஒரே எடத்தில இருந்தா பேசுனதயேதான் பேசச்சொல்லும். மனசப் போட்டுக் கொழப்பும். நானும் வரன், எழுந்திருங்க” என்று சொன்ன தவமணி, புருஷன் சுந்தரத்தைக் கட்டாயப்படுத்தி அழைத்துக்கொண்டு மகளிர் காவல் நிலையத்திற்கு நேர்தெற்கிலிருந்த டீக்கடையை நோக்கிப்போனாள்.

மேகவர்ணத்திற்குப் பக்கத்தில் உட்கார்ந்த சீனியம்மா, காவல் நிலையத்தின் வாசல் பக்கம் பார்த்தாள். பாண்டியும் அவனோடு வந்திருந்த இருபதுக்கும் அதிகமான ஆள்களும் நின்றுகொண்டிருப்பது தெரிந்ததும் கோபத்துடன் சொன்னாள்.

“இன்னியோட அவன் கதெய முடிக்கிறன்.”

“எங்கியோ பொறந்து, எங்கியோ வளந்து, எவன்கூடவோ படுத்துப் புள்ளபெத்தவ, புருசனத் தின்னது இல்லாம இன்னிக்கி எம் புள்ள தாலியயும் அறுத்திட்டாளே” என்று சொல்லிவிட்டு லேசாக அழுதாள் மேகவர்ணம். பிறகு பிரேமாவைத் திட்ட ஆரம்பித்தாள்.

பாண்டிக்கும் சீனியம்மாவுக்கும் கல்யாணமாகி ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இரண்டு பேரும் ஒரே ஊர்தான். ஒரே தெருதான். பீடி, சிகரட், சாராயம் குடிக்கமாட்டான். வேலையிலும் இருக்கிறான் என்றுதான் சீனியம்மாவைப் பாண்டிக்குக் கல்யாணம் கட்டிவைத்தார்கள். உள்ளுரிலிருந்த உயர்நிலைப் பள்ளியில் சத்துணவுப் பொறுப்பாளராக இருக்கிறான் பாண்டி. சமையல் வேலை செய்துகொண்டிருந்த ஒரு பெண் ஓய்வு பெற்றதால், அந்த இடத்திற்கு பிரேமா என்ற பெண்ணைப் புதிதாக நியமனம் செய்தார்கள். அவளுக்குச் சீனியம்மா வயதுதான் இருக்கும். இருபத்தி ஐந்து, இருபத்தி ஆறு வயதுக்குள் அவளுக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. கரும்பு லோடு ஏற்றப்போன இடத்தில் கரும்புக்கட்டு சரிந்து அவளுடைய புருஷன் இறந்துவிட்டான். விதவை என்பதால், பிரேமாவுக்குச் சமையலர் வேலை கிடைத்தது. அவள் வேலைக்கு வர ஆரம்பித்த இரண்டாவது மூன்றாவது மாதத்திலிருந்துதான் பாண்டியின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. விஷயத்தைக் கேட்டதற்கு, “நீயா எதயாச்சும் கற்பன பண்ணிக்கிட்டு திரியாத” என்று ஆரம்பத்தில் சொன்னான். அடுத்த ஒன்றிரண்டு மாதங்களிலேயே பாண்டிக்கும் பிரேமாவுக்கும் உறவென்று பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்குத் தெரிந்துவிட்டது. பிறகு ஆசிரியர்களுக்குத் தெரிந்து, ஊருக்குத் தெரிந்து, கடைசியாக சீனியம்மாவுக்கும் தெரிந்தது. சீனியம்மா கேட்கிற ஒவ்வொரு முறையும் “நீ நேர்ல கண்டியா?” என்று அவளுடைய வாயை மூடிவிடுவான். அவளும் சரி என்று விட்டுவிடுவாள்.

“ஒம் புருசனயும், அந்த குட்டியயும் அங்க கண்டன், இங்க கண்டன்” என்று யாராவது சொல்லும்போதெல்லாம் சீனியம்மாவுக்கு கோபம் தலைக்கு ஏறும். பாண்டியிடம் கேட்பாள். “முட்ட எடுக்க பீ.டி.ஓ ஆபிசுக்கு சமையல்காரிதான போவணும்?” என்று சொல்லி அவளுடைய வாயை அடைத்துவிடுவான். எப்போதாவது யாராவது சொல்கிற விஷயத்தைக் கேட்டால், “எம் புள்ள மேல சத்தியம். நீ நினைக்கிற மாதிரி ஒண்ணுமில்ல” என்று சத்தியம் செய்வான். பாண்டி என்றெல்லாம் சத்தியம் செய்கிறானோ, அன்றெல்லாம் அவனை முழுமையாக நம்புவாள். அன்று மட்டும் கொஞ்சம் சந்தோஷமாகவும் இருப்பாள். ஆனால், அவளுடைய சந்தோஷம் ஒரு நாள்கூட நீடிக்காது. ஊரிலிருக்கிறவர்களில் யாராவது வந்து, “ஒம் புருஷனும் அவளும் சிரிச்சிப் பேசிக்கிட்டி ருந்தத இப்பத்தான் பள்ளிக்கூடத்தில பாத்திட்டு வரன்” என்று சொன்னால் போதும், சீனியம்மாவுக்கு விஷம்போலக் கோபம் தலைக்கு ஏறிவிடும். பாண்டி பள்ளியிலிருந்து வரும் வரை ஒரு வேலையும் செய்யாமல் உட்கார்ந்த இடத்திலேயே அசையாமல் உட்கார்ந்திருப்பாள். “ஏன் இம்மாம் நேரம்? பாப்பாகிட்ட கொஞ்சி முடிக்க இம்மாம் நேரமா?” என்று கேட்பாள். “ஒரு இடத்தில வேல பாக்குறப்ப எப்பிடிப் பேசாம இருக்க முடியும்?” என்று அவன் கேட்பான். அவன் சொல்லுவதும் சரிதான் என்று அவளுடைய மனம் அப்போது சமாதானமாகிவிடும். மளிகைக் கடைக்கு, தண்ணீர் எடுக்க, தோட்டத்திற்கு என்று போகும்போதெல்லாம் யாராவது எதையாவது சொன்னால்போதும்... வீட்டுக்கு வந்ததும், “நேத்து ரெண்டுபேரும் எங்க ஜோடிபோட்டுக்கிட்டுப் போனீங்க?” என்று கேட்பாள். “இல்லியே” என்று அவன் சாதாரணமாகச் சொன்னால், நம்ப மாட்டாள். சத்தியம் செய்தால்தான் நம்புவாள். பாண்டி என்றாவது பள்ளிக்கூடத்திலிருந்து தாமதமாக வந்தால் “பள்ளிக்கூடம் வுட மாட்டங்குதா? ஒடம்போட ஒட்டிக்கிச்சா?” என்று கேட்பாள். நேரத்திலியே பள்ளிக்கூடத்திற்குப் போனால், “பாப்பா நேரத்திலியே வரச்சொல்லி உத்தரவு போட்டுடுச்சா?” என்று கேட்பாள். “இப்ப வந்திருக்கிற ஹெட்மாஸ்ட்டரு அவ்வளவு சரியில்ல. எல்லாத்தயும் வந்துவந்து பாக்குறான்” என்று பாண்டி சொல்வான். அவன் சொல்வதெல்லாம் நம்புவதுபோல்தான் இருக்கும். சீனியம்மா நம்பவும் செய்தாள். ஆனாலும், “என்னா வார்த்த சொல்லி ஒன்ன மயக்குனா?” என்று விஷமமாகக் கேட்பாள். அப்படிக் கேட்கும்பொதெல்லாம், பாண்டி தலையில் அடித்துக்கொள்வான். தினம் தினம் யாராவது வந்து அவளுடைய மனதைக் குழப்பிவிட்டுக் கொண்டிருந்தார்கள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு, ஒருநாள் பாண்டி வெளியூர்போயிருந்தபோது நேராக பள்ளிக்கூடத்திற்குப் போய்ப் பிரேமாவிடம் பேசினாள்.

“யார்கிட்ட வந்து என்னா பேசுற? இந்த மாதிரி பேசுறதயெல்லாம் எங்கிட்ட வச்சிக்காத. இன்னொருவாட்டி வந்து எங்கிட்ட பேசினா அசிங்கமாயிடும்” என்று சொல்லி பெரிய சண்டையே போட்டுவிட்டாள். பள்ளிக்கூடமே சிரித்துவிட்டது.

சாயங்காலம் வந்த பாண்டி விஷயத்தைக் கேள்விப்பட்டதுமே, “நீ எதுக்குப் பள்ளிக்கூடத்துக்குப் போன?” என்று கேட்டு அடித்துவிட்டான். கல்யாணமானதிலிருந்து கைநீட்டியிறாத பாண்டி, அன்றுதான் சீனியம்மாவை அடித்தான். நேற்றிரவு சண்டையாகிவிட்டது; அடித்துவிட்டோம். இன்று பள்ளிக்கூடத்திற்குப் போக வேண்டாம் என்று மறுநாள் வீட்டிலேயே இருந்த பாண்டியை சீனியம்மாதான் சீண்டினாள்.

“எதுக்கு ஊட்டுலியே குந்தியிருக்கிற? பாப்பாவ யாரும் தூக்கிட்டுப்போயிடப் போறாங்க. போயி ஒரு எட்டுப் பாத்திட்டு வந்திடு” என்று சொன்னாள்.80p2_1524649949.jpg

“அவ பாப்பாவா இருக்கிறா, கிழவியா இருக்கிறா, ஒனக்கென்ன?”

“புடிச்சதியே புது மாடாப் புடிச்சியிருக்கலாம். எதுக்கு மூணு கன்னுபோட்ட மாட்டப் புடிச்சியிருக்க?”

“அவ கன்னுக்குட்டியா இருந்தா ஒனக்கென்னா? கன்னுபோட்ட மாடா இருந்தா ஒனக்கென்னா?”

“புதுசா இருந்தாலும், பழசாயிருந்தாலும் செருப்பு செருப்புத்தான். அது தெருவுலதான கெடக்கும்?”

“அவ செருப்பா இருந்திட்டுப்போறா. ஒனக்கென்ன? அவளப் பத்தி நீ  பேசக் கூடாது.”

“அவளப் பத்தி மட்டும்தான் நான் பேசுவன்.”

“அவளப் பத்திப் பேச ஒனக்கு ஓக்கித இல்லெ.”

“எப்ப எவன் கெடைப்பான்னு அலயுறவ தங்கம், அதப் பத்தி சொல்றவ ஓக்கித கெட்டவ. தங்கத்துக்கிட்டியே இருக்க வேண்டியதுதான? இங்க எதுக்கு வர? தங்கத்துக்கிட்டயும் மூத்திரம் வுடுற எடம்தான் இருக்கு. அவ ஊர்க்காலி மாடு.”

“அவ ஊர்க்காலி மாடாவே இருக்கட்டும். நீ ஊட்டு மாடாவே இரு. ஊராங்களோட துர்போதனய கேட்டுக்கிட்டு ஆடாத.”

“நான் ஆடுறது இருக்கட்டும். நீ கண்ட கழுதயோட ஆடுறத நிறுத்து.”

“வாய மூடுறியா? செருப்படி வாங்குறியா? ‘நீ’ ‘நீ’ னு சொல்லிக்கிட்டு கழுத.”

“தப்பு செய்றவங்கதான் செருப்படி வாங்கணும். நான் எதுக்கு செருப்படி வாங்கணும்?” என்று சீனியம்மா கேட்டதுதான் தாமதம், எடுத்த எடுப்பில் ஓங்கிக் கன்னத்தில் அறைந்தான். சினம் தீரும் மட்டும் அடித்து நொறுக்கினான். பிறகு ஒரு வாரம் கழித்து சீனியம்மாவைத் தொட்டபோது பாண்டியை நெருப்பைவைத்து எரித்துவிடுவதுபோல் பார்த்து, ‘‘சீ கைய எடு. என்னெ எதுக்குத் தொடுற? கண்ட கயிசர நாயிக்கிட்டயெல்லாம் போயிட்டு வந்து என்னெத் தொடுற? ஒன்னோட ஆம்பளத்தனத்தயெல்லாம் கொண்டுபோயி ஒன்னோட தங்கத்துக்கிட்ட காட்டு” என்று சொன்னாள். அன்றிரவும் சீனியம்மாவுக்கு நல்ல அடியும் உதையும் கிடைத்தது. அடுத்த மூன்று நான்கு நாள்கள் எழுந்து நடமாட முடியாமல் படுத்த படுக்கையிலேயே கிடந்தாள்.

கோடை விடுமுறை ஆரம்பித்ததும் பிரச்னை இருக்காது என்று நினைத்தாள் சீனியம்மா. ஆனால், பாண்டி எப்போதும்போல காலை ஒன்பது மணிக்கெல்லாம் கிளம்பிப்போய் மதியம் மூன்று மணிவாக்கில்தான் வருவான். ஒரு நாள், இரண்டு நாள் என்று பார்த்தாள். ஒரு வாரம், பத்து நாள் என்று பார்த்தாள். வாய் பொறுக்காமல் கேட்டதற்கு, “இதயெல்லாம் கேக்கிறதுக்கு நீ யாரு? ஆம்பள வெளிய போவாம ஊட்டுலியே குந்தியிருப்பானா?” என்று கேட்டான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு, ஐந்து நாள்களுக்கு முன் பாண்டி வீட்டை விட்டுக் கிளம்பிய அரை மணி நேரம் கழித்து, நேராக பிரேமாவின் ஊருக்குப் போனாள். சீனியம்மா ஊருக்கும், பிரேமா ஊருக்கும் நடக்கிற தூரம்தான். பிரேமா வீட்டின் முன் பாண்டியின் வண்டி நின்றுகொண்டிருந்தது. இந்த சாட்சி போதும் என்று நினைத்துக்கொண்டு கிளம்பி வீட்டிற்குச் சிறிது தூரம் வந்தாள். எப்போது கேட்டாலும் “நீ கண்டியா?” என்றுதான் பாண்டி கேட்பான். பிரேமா வீட்டின் முன்பு வண்டி நிறுத்தியிருந்ததைப் பார்த்தேன் என்று சொன்னால் நம்பமாட்டான். அதனால் நேரிலேயே முகத்தைக் காட்டிவிடுவோம் என்று நினைத்துக்கொண்டு திரும்பிப்போய் வீட்டுக் கதவைத் தட்டினாள். கதவை பிரேமாதான் திறந்தாள். “ஒன்னோட புது மாப்ளயக் கூப்பிடு” என்று ஆங்காரத்தோடு சீனியம்மா சொன்னாள். வீட்டிற்குள்ளிருந்து வந்த பாண்டி சீனியம்மாவைப் பார்த்ததும் திகைத்துப்போய் அப்படியே நின்றுவிட்டான். அவனும் ஒரு வார்த்தை பேசவில்லை. சீனியம்மாவும் ஒரு வார்த்தை பேசவில்லை.

வீட்டிற்கு வந்து துணிகளை எடுத்துக்கொண்டு தன்னுடைய அம்மா வீட்டிற்குக் கிளம்பிக்கொண்டிருந்த போதுதான் பாண்டி வீட்டுக்கு வந்தான். வந்த வேகத்திலேயே “எதுக்கு அங்க வந்த?” என்று கேட்டான். பிறகு, “எம் பேச்ச நம்பாமத்தான வந்த? எதுக்கு போனேன்னு தெரியுமா?” என்று கேட்டு அடிக்க ஆரம்பித்தான். சீனிம்மாவின் அழுகைச் சத்தம் கேட்டுத் தெருசனமே கூடிவிட்டது. யார் யாரோ வந்து மறித்தார்கள். தவமணியும் மேகவர்ணமும் வந்து மறித்துப் பார்த்தார்கள். “அங்க எப்பிடி வந்த?” என்பதையே கேட்டுக் கேட்டு அடித்தான். அடி தாங்க முடியாமல் தெருவுக்கு ஓடிவந்தபோதும் விடவில்லை. மாட்டை அடிக்கிற சாட்டைக் குச்சியால் அடித்தபோதுதான் சீனியம்மாவுக்கு மலமும் சிறுநீரும் வந்துவிட்டது. அதன்பிறகும் பாண்டி அடிப்பதை நிறுத்தாததால், தெருவில் ஓட ஆரம்பித்தாள். கோவிலுக்கருகில் ஓடி வந்தபோதுதான், கோவிலில் சீட்டு ஆடிக்கொண்டிருந்த ஏழெட்டு ஆண்கள் ஒன்றாகக் கூடிப் பாண்டியைத் தடுத்தார்கள். தெற்குத் தெருவில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்தபோது நடுத்தெருவில் சிறுநீரும், மலமும் வெளியேறுமளவுக்கு அடித்ததை நினைத்து அழுதாள். ஊரே அந்தக் காட்சியைப் பார்த்ததே என்று நினைக்கும்போதெல்லாம் அவளுக்குச் செத்துவிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. தன்னுடைய அண்ணி, அம்மா மறித்ததையெல்லாம் மீறிக்கொண்டு போய் மகளிர் காவல் நிலையத்தில் மனு கொடுத்தாள்.

சீனியம்மா மனு கொடுத்து மூன்று நாள்களாகியும் காவல் நிலையத்திலிருந்து எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால், நேற்று காலையில் போய் ஐந்தாயிரம் பணம் கொடுத்தாள். அதன் பிறகுதான் நேற்று சாயங்காலம் இரண்டு பெண் காவலர்கள் பாண்டியைத் தேடிக்கொண்டு வந்தார்கள். இன்று காலையில் ஒரு பெண் காவலர் வந்து, “சாயங்காலம் விசாரணைக்கு வா” என்று சொன்னாள். விசாரணைக்காகத்தான் சீனியம்மாவும் மேகவர்ணமும் வந்து காத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தனர்.

டீக்கடைக்குப் போயிருந்த சுந்தரமும், தவமணியும் வந்தனர். சீனியம்மாவைக் கண்டதும், தவமணியின் இடுப்பிலிருந்த குழந்தை அவளை நோக்கித் தாவியது. பிள்ளையை வாங்கி மடியில் வைத்துக்கொண்டாள். “எப்பத்தான் கூப்புடுவாங்களோ” என்று தவமணி சொன்னாள். அப்போது பத்திருபது பேர் கொண்ட ஒரு கூட்டம் மண்டையில் அடிப்பட்டு ரத்தக்கறையுடன் இருந்த ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு வந்தது. வந்த வேகத்திலேயே காவல் நிலையத்துக்குள் சென்றது. “தெனம் ஒண்ணு ரெண்டு கேசுக்கு கொறயாம வருமாட்டம் இருக்கு” என்று தவமணி சொன்னதும், “நான் வந்த அன்னிக்கி அஞ்சி கேசு. எல்லாம் புருஷன் பொண்டாட்டி சண்டதான். ஆம்பள போலீஸ் ஸ்டேசனிலகூட இம்மாம் கூட்டமில்ல. அங்க காத்தோடிப் போயிக் கெடக்குது. தெரியாத்தனமா முதல்ல நான் அங்கதான் போனன்” என்று சீனியம்மா பட்டும்படாமலும் சொன்னாள்.

காவல் நிலையத்திற்குள் போன கூட்டம் வெளியேவந்து சத்தம் போட்டுப் பேச ஆரம்பித்தது. அப்போது வெளியே வந்த ஒரு பெண் காவலர், “தூரமாப் போயிக் கத்துங்க. ஸ்டேசன் முன்னாடி சத்தம் போடக் கூடாது”என்று சொல்லிவிட்டு “சீனியம்மா கேசுக்காரங்க வாங்க. அம்மா கூப்புடுறாங்க” என்று சொல்லிவிட்டு உள்ளே போனாள். காவல் நிலைய வாசலை ஒட்டியே நின்றுகொண்டிருந்த பாண்டியும் அவனோடு வந்திருந்த ஆள்களும் முதலில் உள்ளே போனார்கள். அதன் பிறகு சீனியம்மா, மேகவர்ணம், சுந்தரம், தவமணி என்று உள்ளே போனார்கள்.

80p3_1524649896.jpg

கிழக்குப் பக்கமாகப் பார்த்த நிலையில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள் துணை ஆய்வாளர் ஆர்த்தி. அவளுக்கு முப்பது வயதிற்குள்தான் இருக்கும். தன்முன் இருபிரிவுகளாக நின்றுகொண்டிருந்த ஆள்களை நிதானமாகவும், ஆராய்வதுபோலவும் பார்த்தாள். பிறகு, “யே...” என்று உள்அறையைப் பார்த்து கூப்பிட்டாள். “அம்மா” என்று சொல்லிக்கொண்டே வந்து புஷ்பா நின்றாள்.

“இந்த கேச விசாரிச்சியா?”

“இல்லீங்கம்மா” என்று புஷ்பா சொன்னாள்.

“கேசு விஷயம் தெரியுமா?”

“புருஷன் பொண்டாட்டி சண்ட. பிரிச்சுவுடச் சொல்லி பெட்டிசன் கொடுத்த கேசும்மா.”

“சரி. போ” என்று ஆர்த்தி சொன்னதும் புஷ்பா உள்ளே போய்விட்டாள்.

புஷ்பாவுக்கு ஆர்த்தியைவிடப் பத்துப் பதினைந்து வயது கூடுதலாக இருக்கும். ஆர்த்தி புஷ்பாவை ‘யே’ என்று கூப்பிட்டதும், புஷ்பா ஆர்த்தியை ‘அம்மா’ என்று கூப்பிட்டதும் பாண்டிக்கும் அவனோடு வந்திருந்தவர்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது.

தன்முன் நின்றுகொண்டிருந்த இரு பிரிவு ஆள்களையும் பார்த்தாள் ஆர்த்தி. இடுப்பில் குழந்தையை வைத்துக்கொண்டு, முகமெல்லாம் வீங்கிப்போய்த் தலையில் கட்டுப்போட்டுக்கொண்டு நின்றிருந்த சீனியம்மாதான் மனு கொடுத்திருக்க வேண்டும் என்று யூகித்தாள். அதனால்”நீதான் பெட்டிசன் கொடுத்தியா?” என்று சீனியம்மாவிடம் கேட்டாள். “ஆமாங்க” என்று அவள் சொன்னாள்.

“என்னா பிரச்சன?”

ஐந்து வருஷங்களுக்கு முன் தனக்கும் பாண்டிக்கும் கல்யாணம் நடந்தது, இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை இருப்பது, சத்துணவுப் பொறுப்பாளராக பாண்டி வேலை செய்வது, சமையல்காரியாக இருந்த பெண் ஓய்வு பெற்றது, புதிதாக வேலைக்குச் சேர்ந்த பிரேமாவுக்கும் பாண்டிக்கும் உறவானது, அதனால் வீட்டில் சண்டை நடந்தது, ஐந்து நாள்களுக்கு முன் பிரேமா வீட்டுக்கு தான் போனது, இருவரையும் ஒருசேரப் பார்த்தது, அதன் பிறகு வீட்டிற்கு வந்தது, பாண்டி அடித்தது, அடியிலிருந்து தப்பித்து ஓடிவந்து  மகளிர் காவல் நிலையத்தில் மனு கொடுத்தது வரை நடந்த எல்லாக் கதைகளையும் சீனியம்மா சொல்லி முடித்தாள். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த ஆர்த்தி, “இவ புருஷன் யாரு?” என்று கேட்டதும் கூட்டத்தோடு கூட்டமாக நின்றுகொண்டிருந்த பாண்டி, சற்று முன்னால் வந்து நின்றுகொண்டு “நாந்தாம்மா” என்று சொன்னான்.

“நீதானா?” என்பதுபோல் அலட்சியமாகப் பார்த்தாள் ஆர்த்தி, பிறகு சற்று குரலை உயர்த்தி “இவ சொல்றதெல்லாம் நிஜமா?” என்று கேட்டாள்.

“சும்மா. வாய்த் தகராறுதாங்க” என்று பணிவாகச் சொன்னான்.

“வாய்த்தகராறுக்காக ஒருத்தி வந்து புருஷன் வேணாமின்னு எழுதிக் கொடுப்பாளா?” என்று கேட்டாள்.

“இல்லீங்கம்மா” என்று பாண்டி முன்னிலும் பணிவாகச் சொன்னதைக் கேட்ட சீனியம்மா, “இங்க பாருங்கம்மா” என்று சொல்லி குழந்தையை மேகவர்ணத்திடம் கொடுத்துவிட்டு முழங்கால்வரை சீலையைத் தூக்கிக் கால்களிலிருந்த காயத்தையும், வீங்கி வாடாமல் இருந்த இடங்களையும் காட்டினாள். பிறகு பிய்ந்துபோயிருந்த வலது பக்கக் காதைக் காட்டினாள். திரும்பி நின்று முதுகிலிருந்த காயங்களைக் காட்டினாள். நெற்றியிலிருந்த, பின்மண்டையிலிருந்த காயங்களையும் காட்டினாள். ஒவ்வொன்றாகப் பார்த்த ஆர்த்தியின் முகம் மாறிவிட்டது. எரிச்சலுடன் பாண்டியைப் பார்த்து, “ஒரு பொம்பளய இப்பிடித்தான் அடிப்பியா? இதான் வாய்த்தகராறா?” என்று மிரட்டுவதுபோல் கேட்டாள். அதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் தலையைக் குனிந்துகொண்டு நின்றான் பாண்டி.
80p2_1524649949.jpg
“பிரிச்சிவுடுன்னு ஏன் கேக்குற? வரதட்சணக் கொடும செஞ்சான்னு எழுதிக்கொடு. இப்பிடியே ஜெயிலுக்கு அனுப்பிடுறன்” என்று சொல்லி பாண்டியைத் திட்டினாள் ஆர்த்தி. பிறகு என்ன நினைத்தாளோ முன்பைவிட இப்போதுதான் கூடுதலாகக் கோபம் வந்ததுபோல், “கையக் கட்டுறா ராஸ்கல். பெரிய புடுங்கி மாதிரி விறச்சிக்கிட்டு நிக்குற” என்று கத்தினாள். அடுத்த நிமிஷமே இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு முகம் செத்துப்போய் நின்றுகொண்டிருந்தான் பாண்டி. ‘‘என்ன சின்னப் புள்ளயா இருந்துகிட்டு இந்தப் பேச்சு பேசுது?” என்று பாண்டி மட்டுமல்ல, அவனோடு வந்திருந்த ஊர்க்காரர்களும் நினைத்தார்கள். அதே நேரத்தில் பாண்டியைக் கையைக்கட்டி நிற்கச் சொன்னதில் சீனியம்மாவுக்கும் சுந்தரத்திற்கும் சந்தோஷம் உண்டாயிற்று. அவன் கையைக் கட்டிக்கொண்டு நிற்கட்டும் என்று நினைத்தார்கள்.

“என்னெ அடிச்சிக் கொன்னதும் இல்லாம, நாந்தான் தப்பு செஞ்சிட்ட மாதிரி ஊரயே திரட்டிக்கிட்டு வந்திருக்கிறத பாருங்கம்மா” என்று சீனியம்மா சொன்னதும் ஊராட்சி மன்றத் தலைவர் சடையாண்டி, “ஊர எதுக்கு இழுக்கிற? ஊர மதிக்காமத்தான ஸ்டேசனுக்கு வந்திருக்கிற?” என்று சொன்னான்.

“ஊரா எனக்கு சோறு போடுது?”

“கிழவியானாதான் ஊரோட அரும ஒனக்குத் தெரியும்.”

“குமரியா இருக்கும்போதே சோறு போடாத ஊரு, கிழவியானப்பறந்தான் போடப்போவுதா?”

“ஒனக்கு வாய் அதிகம்னு ஊருக்கே தெரியும்.”

“ஆமாம். எனக்கு வாய் பெருசா இருக்கிறதாலதான், ஒரு வாய்ப் பிராந்திக்காக மாறிமாறிப் பேசிக்கிட்டிருக்கு” என்று அழுத்தம் திருத்தமாகச் சீனியம்மா சொன்னதும் சடையாண்டிக்குக் கோபம் வந்துவிட்டது. “மரியாதியா பேசு. நீ பேசுனதுக்கு ஊரா இருந்தா நடக்குறதே வேற” என்று சத்தமாகச் சொன்னதும் ஆர்த்திக்குக் கோபம் வந்துவிட்டது. “இதென்ன ஒங்க வீடா? கத்துறது, சத்தம்போடுறது, திட்டுறதெல்லாம் ரோட்டுல வச்சிக்கணும். புரியுதா?” என்று சத்தம் போட்டதும், சடையாண்டி, கவுன்சிலர் முருகன், வார்டு உறுப்பினர் லிங்கம், நாட்டாமை பெரியசாமி என்று எல்லாரும் ஒரே நேரத்தில் “ஊரப் பத்தி அந்தப் பொண்ணு எப்பிடி மட்டரகமாப் பேசலாம்?” என்று கேட்டனர். அதற்கு “ரெண்டாயிரத்துப் பதினெட்டுலயும் ஒரு பொட்டச்சிய இப்படித்தான் அடிப்பாங்களா? இதுதான் ஒங்க ஊர்பழக்கமா?” என்று ஆர்த்தி கேட்டதற்கு ஊர்க்காரர்கள் வாயைத் திறக்கவில்லை. ஆனால், குடும்பச் சண்டைக்குக் காவல் நிலையத்திற்கு போவது சரியில்லை என்று பேச ஆரம்பித்தனர். இருபதுக்கும் மேற்பட்ட ஆண்கள் ஒன்றுகூடி நின்றுகொண்டு பேசுவதால், அவர்கள் சொல்வதைத் தட்டமுடியாமல் கேட்டுக்கொண்டிருந்தாள் ஆர்த்தி.

ஊர்க்காரர்கள் எல்லாரும் ஒன்றுகூடிக்கொண்டு ஏன் தன்மேல் குற்றம் சொல்கிறார்கள் என்பது சீனியம்மாவுக்குத் தெளிவாகவே தெரியும். “என் புருஷன் என்ன அடிச்சிட்டான். அத என்னான்னு கேளுங்க” என்று தலைவர், கவுன்சிலர், நாட்டாமை வீட்டுக்கு அவள் போகவில்லை. ஊர்ப்பஞ்சாயத்தைக் கூட்டுங்கள் என்று யாருடைய வீட்டுக்கும் அவள் நடையாக நடக்கவில்லை. அதேமாதிரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவரும்போது பெரிய மனிதர்கள் என்று யாரையும் அழைத்துக்கொண்டு வரவில்லை. இன்று சாயங்காலம் காவல் நிலையத்துக்கு வரும்போதுகூட, “யாராச்சும் எங்கூட வாங்க” என்று அவள் யாரையும் கூப்பிடவில்லை. அந்தக் கோபம்தான் ஊர்க்காரர்களுக்கு.

மகளிர் காவல் நிலையத்தில் புகார்மனு கொடுத்துவிட்டாள் என்று தெரிந்ததுமே தெருவிலுள்ளவர்கள், ஊரிலுள்ளவர்களெல்லாம் வந்து “ஆம்பள அப்பிடி இப்பிடித்தான் இருப்பான், புருஷன் பொண்டாட்டி சண்டைக்காக ஸ்டேசனுக்குப் போவியா? நாளக்கி அவன்கூட சேந்திருக்க வேணாமா?” என்றுதான் ஒரு ஆள்போல் எல்லாரும் கேட்டார்கள். ஒன்றிரண்டு ஆண்கள் மட்டும் “இத இப்பிடியே வுடக் கூடாது. இந்தப் பழக்கம் ஊர்ல இருக்கிற பொட்டச்சிக்கெல்லாம் வந்திடும்” என்று சொன்னார்கள். ஒரு ஆள்கூடப் பாண்டி செய்தது தவறு என்று சொல்லவில்லை. தெருவில் போட்டு ஏன் அடித்தாய் என்று கேட்கவில்லை. பிரேமாவை ஏன் சேர்த்துக்கொண்டாய் என்று கேட்கவில்லை. அந்தக் கோபத்தில்தான் சீனியம்மா ஊர்க்காரர்கள் ஒருவரிடமும் பேசவில்லை. காவல் நிலையத்திற்கு வாருங்கள் என்று கூப்பிடவில்லை. அவள் சொல்லாதது, கூப்பிடாதது மட்டுமல்ல, மேகவர்ணத்திடமும் சுந்தரத்திடமும் யாரிடமும் சொல்லக் கூடாது; யாரையும் கூப்பிடக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டாள். அதனால் அவர்களும் ஊர்க்காரர்களிடம் சொல்லவில்லை; காவல் நிலையத்திற்கு ‘சப்போட்டுக்கு வாங்க’ என்று யாரையும் கூப்பிடவில்லை.
“ஊர்க்காரங்க யார்கிட்டயும் ஒரு வார்த்த கலக்காம நீ பாட்டுக்கும் ஸ்டேசனுக்கு வந்துடுவியா” என்று ஒன்றியக் கவுன்சிலர் சேகர் கேட்டதற்குப் பதில் சொல்லாதது மட்டுமல்ல, அவன் பக்கம் சீனியம்மா திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

“நீங்க ஒங்க இஷ்டத்துக்கு கேள்வி கேக்கிறதுக்கு நான் எதுக்கு இங்க இருக்கணும்?” என்று ஆர்த்தி கேட்டதும், “நீங்களே கேளுங்கம்மா” என்று சேகர் சொன்னான்.

ஆர்த்திக்கு என்ன தோன்றியதோ இடுப்பில் குழந்தையை வைத்துக்கொண்டிருந்த மேகவர்ணத்தைப் பார்த்துக்கேட்டாள், “நீங்க யாரு?”

“பொண்ணோட அம்மா.”

“ஒங்க பொண்ணு பெட்டிஷன் கொடுத்திருக்கு. என்னா செய்யுறது?”

“அவ தெனம்தெனம் அடிப்பட்டு சாவுறத கண்ணாலப் பாக்க முடியலம்மா” என்று சொல்லும்போதே மேகவர்ணத்திற்கு அழுகை வந்துவிட்டது. அவள் அழுததும், அவளுடைய இடுப்பிலிருந்த குழந்தையும் அழ ஆரம்பித்தது.

“நீங்க யாரு?” என்று சுந்தரத்திடம் ஆர்த்தி கேட்டாள்.

“அண்ணம்மா.”

“கூடப்பொறந்த அண்ணனா?”

“ஆமாம்மா.”

“நீங்க என்னா சொல்றிங்க?”

“வாழவேண்டிய பொண்ணே வேணாமின்னு சொல்லும்போது, நான் என்னம்மா சொல்ல முடியும்? தப்பு அதுமேல இருந்தா கேக்கலாம். “

“ஊர்க்காரங்க என்னா சொல்றிங்க?” என்று பாண்டிக்குப் பக்கத்தில் கூட்டமாக நின்றுகொண்டிருந்த ஆள்களிடம் கேட்டாள் ஆர்த்தி.

ஒரே நேரத்தில் மூன்று நான்கு பேர் பேச ஆரம்பித்ததால் எரிச்சலடைந்த ஆர்த்தி, ‘‘ஒவ்வொரு ஆளாப் பேசணும்” என்று உத்தரவு போட்டாள். அந்த உத்தரவை ஒரு ஆள்கூட மீறவில்லை. எல்லாருமே பேசாமல் நின்றுகொண்டிருந்ததால், கூட்டத்தில் வயதான ஆளாகப் பார்த்து, ‘‘நீங்க சொல்லுங்க” என்று ஆர்த்தி கேட்டதும் நாட்டாமை சொன்னார், ‘‘ரெண்டு மூணு வாட்டி அந்தப் புள்ள தூக்குல தொங்கப் போயிடிச்சிங்க.”

“அதுக்கு?”

“கோவக்காரப் புள்ளயா இருக்குங்க. இவன் கோவத்தில ரெண்டு தட்டுதட்டப் போயி, அந்தப் புள்ள பாட்டுக்கும் ஒரு மருந்து மாயத்த குடிச்சிட்டா உசுருக்கு ஆபத்தாயிடுங்க.”

“அதனால?”

“தனித்தனியா இருந்தாலும் உசுரோட இருந்தாப்போவுதின்னு பிரிச்சி வுட்டுடலாங்க. தேவப்பட்டா பின்னால சேந்துக்கிறாங்க” என்று சொன்னதோடு, கட்டாயம் இந்த உபகாரத்தைச் செய்து தர வேண்டும் என்பதுபோல நாட்டாமை ஆர்த்தியைக் கையெடுத்துக் கும்பிட்டார். அப்போது ஆர்த்தியினுடைய செல்போன் மணி அடித்தது. போனை எடுத்துப் பார்த்துவிட்டு புஷ்பாவைக் கூப்பிட்டு “நம்ப தமிழரசி கூப்புடுறா. அத என்னான்னு கேளு” என்று அதிகாரத்தோடு சொல்லிவிட்டு சீனியம்மா பக்கம் பார்த்த ஆர்த்தி, “நீ என்னா சொல்ற?” என்று கேட்டாள்.

“அவுரு அடிச்சியிருக்கிறத நீங்களே பாக்குறீங்க. புறமண்டயில ஏழு தையல் போட்டிருக்கு. அஞ்சி நாளக்கி முன்னாடி நீங்க பாத்திருந்தீங்கன்னா, ஒடம்பெல்லாம் எம்மாம் காயம்னு ஒங்களுக்கே தெரிஞ்சிருக்கும்” என்று சொல்லும்போதே சீனியம்மாவுக்கு அழுகை வந்துவிட்டது. அவள் அழுததைப் பார்த்துவிட்டு மேகவர்ணத்தின் இடுப்பிலிருந்த குழந்தையும் அழுதது, அழுதுகொண்டே தாவியது. சீனியம்மா குழந்தையை வாங்கிக்கொண்டாள்.

“விஷயம் அதில்ல. புரியுதா?” என்று ஆர்த்தி கேட்டாள். அதற்குப் பதில் சொல்லாமல் சீனியம்மா அழ மட்டுமே செய்தாள்.

“ஏதோ கோபத்தில் ஸ்டேசனுக்கு வந்திட்டன். இனிமே அப்பிடிச் செய்ய மாட்டன். என்னெச் சேத்து வையிங்கன்னு கேப்பியா, எதிர்க்கட்சி கட்டிக்கிட்டு நிப்பியா? பேருக்காவது புருஷன்னு ஒருத்தன் வாணாமா?” என்று வார்டு உறுப்பினர் செல்லமுத்து கேட்டதும், சீனியம்மாவுக்கு அடக்க முடியாத அளவுக்கு ஆத்திரம் உண்டாயிற்று. ஆனாலும் ஆத்திரத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் ரொம்பவும் நிதானமாகச் சொன்னாள், “பொறக்கும்போதே புருஷனோட பொறக்கல.”

“ஒனக்கு வாய் பெருசுதான்” என்று செல்லமுத்து சொன்னதும், “அது எங்கிட்டதான இருக்கு? ஒங்கிட்ட இல்லியே” என்று சீனியம்மா கேட்டதும், “ஒங்கிட்ட பேச முடியாது. நல்ல குடும்பத்துக்காரி ஸ்டேசனுக்கு வருவாளா?” என்று கோபத்துடன் செல்லமுத்து கேட்டான்.

“நான் அவுசாரி. அதனால ஸ்டேசனில நிக்குறன். ஒம் பொண்டாட்டி பத்தினி. ஊட்டுல இருக்கா” என்று சீனியம்மா சொல்லும்போது குறுக்கிட்ட பாண்டி, “ஒங்க முன்னாடியே எப்பிடி யாரயும் மதிக்காமப் பேசுறாப் பாத்தீங்களா?” என்று கேட்டதும் ஆர்த்திக்குக் கோபம் வந்துவிட்டது.

“சீ. வாய மூடு. அவள எப்பிடி அடிச்சியிருக்க? அதுக்கே ஒன்னெ உள்ளாரப் புடிச்சிப் போடணும். வேலயில இருக்கிறனுதான் பாக்குறன். இல்லன்னா, இப்பவே வரதட்சண கேட்டு அடிச்சன்னு கேசப்போட்டு உள்ளாரத் தள்ளிடுவன் ராஸ்கல். ஒருத்திய கட்டிப் புள்ளையும் பெத்துக்குவ, அப்பறம் இன்னொருத்திய சேத்துக்கிட்டுப் பொண்டாட்டிய அடிச்சிக் கொல்லுவியா?” என்று சத்தம்போட்டுக் கேட்ட ஆர்த்தி, “எங்க ஒன் கூத்தியா வல்லியா?” என்று ஏளனமாகக் கேட்டாள். அப்போது பாண்டி மட்டுமல்ல, பாண்டியோடு வந்திருந்த அத்தனைபேரும் தலையைக் கவிழ்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.

80p4_1524649923.jpg

“முதல்ல அவமேலதான் கேசப் போடணும்” என்று சொல்லிப் பல்லைக்கடித்த ஆர்த்தி கோபத்துடன் சீனியம்மாவிடம் கேட்டாள் “சேந்திருக்கிறியா? பிரிஞ்சிக்கிறியா?”

“அவரக் கேளுங்க.”

“இம்மாம் அடிவாங்கியும் அவன் ஒனக்கு இன்னும் அவருதானா?” என்று கேட்டு ஆர்த்தி சிரித்ததும், பாண்டியோடு வந்திருந்த ஒன்றிரண்டு ஆட்களும் சிரித்தார்கள்.

“இதுக்கு முன்னாடி ஸ்டேசனுக்கு வந்திருக்கியா? ஊர்ப்பஞ்சாயத்துக் கூட்டியிருக்கியா?” என்று அதிகாரத் தோரணையில் கேட்டாள் ஆர்த்தி.

“அந்த மாதிரி பழக்கமெல்லாம் இல்லீங்க. இதான் மொத பஸ்ட்டு” என்று சீனியம்மா சொன்னதும் ஆர்த்தி, சீனியம்மாவையே பார்த்தாள். அவளுக்கு மனதில் என்ன தோன்றியதோ “முடிவச் சொல்லு” என்று கேட்டாள்.

“அவரக் கேளுங்க.”

“ஒருமுற போயிப்பாரு. இல்லன்னா எங்கிட்ட நேரா வா. ஜெயிலுக்கு அனுப்பிடுறன்.”
80p2_1524649949.jpg
“முதல்ல அவள வுடச்சொல்லுங்க.”

“யே. நீ என்ன சொல்ற?” பாண்டியைப் பார்த்து ஆர்த்தி கேட்டாள். அவன் வாயே இல்லாதவன்போல் நின்றுகொண்டிருந்தான்.

“அவள வுட்டுடுறியா?”

“எனக்கும் அவளுக்கும் ஒண்ணுமில்லீங்கம்மா. வாய்ப்பழக்கம்தான். ஒரே எடத்தில வேல செய்யுறம். அவ்வளவுதான். வேலைய மாத்திக்கிட்டும் போவ முடியாது. அப்படிப்பட்ட வேலை இது” என்று பாண்டி சொன்னதும் இடுப்பிலிருந்த பிள்ளையை பாண்டியின் காலின்முன் போட்டு “ஒம் புள்ளதான இது? அவளுக்கும் எனக்கும் ஒண்ணுமில்லன்னு தாண்டி சத்தியம் செய் பாக்கலாம்” என்று ஆக்ரோஷமாகக் கேட்டாள். சீனியம்மாவை எரித்துவிடுவதுபோல் பார்த்தான் பாண்டி. சத்தியம் செய்யவில்லை. தரையில் போட்டதால், வீறீட்டு அலறிய குழந்தையைத் தூக்கப்போன பாண்டியின் கையைத் தட்டிவிட்டு, “சீ... எம் புள்ளையத் தொடாத” என்று சொல்லிவிட்டுப் பிள்ளையைத் தூக்கி அழுகையை நிறுத்த முயன்றாள்.

“சத்தியம் பண்ண வேண்டியதுதான?” என்று ஆர்த்தி பாண்டியிடம் கேட்டாள். அவன் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு நின்றான். அப்போது பல்லைக் கடித்துக்கொண்டு சீனியம்மா சொன்னாள். “இது திருந்தற மாடில்ல.”

“விஷயத்துக்கு வாங்க. நேரமில்ல” என்று சொன்ன ஆர்த்தி கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். நேரத்தைப் பார்த்ததும் அவளுடைய முகம் சுருங்கிப்போயிற்று.

“நான்தான் வேணும். அவ வேணாமின்னு சொல்லச் சொல்லுங்க பாக்கலாம்” பாண்டிக்கு சவால் விடுவது மாதிரி சீனியம்மா சொன்னாள். அவன் வாயைத் திறக்காதது மட்டுமல்ல. அவள் பக்கம் பார்க்கவே இல்லை.

“அவுரு ஒருத்திகிட்டப் போயிட்டு வர மாதிரி நான் ஒருத்தன்கிட்டப் போயிட்டு வந்தா, என்னெ நெருப்பவச்சி கொளுத்தியிருக்க மாட்டாரா?” என்று சத்தமாகக் கேட்டாள்.

“கேக்கிறாள்ள, பதில் சொல்லு” என்று பாண்டியிடம் ஆர்த்தி சொன்னாள். தலையைக் கவிழ்த்துக்கொண்டு நின்றவன்தான் பாண்டி. வாயையும் திறக்கவில்லை. ஆர்த்தியையும் பார்க்கவில்லை.

“இம்மாம் கேக்குறீங்களே வாயத் தொறக்குறாங்களா பாத்தீங்களா? அப்பிடி மயக்கி வச்சிருக்கா. மருந்துக்காரி” என்று சொல்லிவிட்டுப் பல்லைக் கடித்தாள் சீனியம்மா. பிறகு அழுதுகொண்டே, “என்னெ அத்துவுட்டுடுங்கம்மா. செத்திட்டார்னு சொல்லி நாளக்கே கருமக் காரியச் சோத்த ஆக்கி, காக்காயிக்கி பலிசோறு படச்சிட்டு, தலக்கடன் தீந்துபோச்சின்னு போயி ஆத்தில தலய மூழ்கிடுறன்” என்று சொன்னதும் கோபம் வந்த மாதிரி, “ஒங்க முன்னாடியே எப்பிடிப் பேசுறா பாருங்கம்மா. இவளோட நான் சேந்திருக்கவா?” என்று பாண்டி கேட்டதற்கு ஆர்த்தி பதில் சொல்லவில்லை. சீனியம்மாதான் பதில் சொன்னாள்.

“எங்கூட எதுக்குச் சேந்திருக்க? புதுசாப் புடிச்சியிருக்கியே தங்கம், அதுக்கூடப்போய் சேந்திரு.”

பாண்டி வாயைத் திறக்கவில்லை. பல்லை மட்டுமே கடித்தான். பார்வையாலேயே எரித்துவிடுவதுபோல் பார்த்தான்.

“ஒம் பொண்டாட்டி கெட்ட நடத்த உள்ளவளா?”என்று ஆர்த்தி பாண்டியிடம் கேட்டாள்.

“இல்ல.”

“கல்யாணத்துக்கு முன்னாடியோ, கல்யாணத்துக்கு பின்னாடியோ தப்பு ஏதாச்சும் செஞ்சிருக்காளா?”

“அப்பிடியெல்லாம் இல்ல.”

“இனிமே செய்யுற கேசா?”

“செய்ய மாட்டா.”

“அப்பறம் ஏன் அவளப் பிரிச்சிவுடுற.”

“என்னெ ஊர்லயும் அசிங்கப்படுத்திட்டா. ஸ்டேஷனிலவச்சும் அசிங்கப்படுத்திட்டா. ஆங்காரம் புடிச்சவ.”

“நீ அந்த சமையல்காரி பின்னால சுத்துறது அசிங்கம் இல்லியா?”

பாண்டி வாயைத் திறக்கவில்லை.

“கெட்ட புத்திக்காரியா? ஊதாரியா?”

“அப்பிடிலாம் சொல்ல முடியாது.”

“அவளும் ஊர்ப்பேச்ச கேட்டுக்கிட்டு ஆடுறா. நீயும் ஊரக் கூட்டிக்கிட்டு வந்து நிக்குற.”

“அவ அத்துக்கிட்டுப் போனா போவட்டும். புள்ளய மட்டும் எங்கிட்ட கொடுத்திரணும்” என்று பாண்டி சொல்லி முடிப்பதற்குள்ளாகவே குறுக்கிட்ட சீனியம்மா அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள். “அது மட்டும் முடியாது.”

“கல்யாணத்துக்குப் போட்ட நாலு பவுனயும், சீர்வரிசயாக் கொடுத்த சாமான்வுளயும் கொடுத்திடுறன்.”

“நான் வேணாமில்ல?அப்படின்னா எந்தப் பொருளும் எனக்கு வாணாம்” ஒரே வார்த்தையாக வெட்டிச் சொன்னாள் சீனியம்மா.

“அவனே வேணாமின்னு போவயில நம்ப பொருள எதுக்கு அவன் திங்கணும்?” என்று கேட்டு மேகவர்ணம், சீனியம்மாவிடம் சண்டைக்குப் போனாள். “பேசாம இரும்மா” என்று சொல்லி மேகவர்ணத்தின் வாயை மூடினாள் சீனியம்மா. பாண்டியும் சீனியம்மாவும் பேசிக்கொள்வதைப் பார்த்து எரிச்சல்பட்ட ஆர்த்தி, “விஷயத்த மட்டும் சொல்லு. சேந்திருக்கியா? பிரிஞ்சிபோறியா?” என்று கேட்டாள்.

“ஸ்டேசனில கொண்டாந்து என்னெக் கையகட்டி நிக்கவச்சவகூட நான் எப்பிடிச் சேந்திருக்க முடியும்? இனிமே ஊர்ல ஒரு பய என்னெ மதிப்பானா?” என்று கேட்டான் பாண்டி. அவனுடைய குரலில் வேகம் கூடியிருந்தது.

“முடியாதில்லியா?” என்று ஆத்திரம் பொங்கக்கேட்டாள் சீனியம்மா.

“ஆமாம்” என்று திட்டவட்டமாக பாண்டி சொன்னதைக் கேட்ட சீனியம்மாவுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு ஆத்திரம் வந்ததோ. ‘‘நானே இல்லாதப்ப புள்ள மட்டும் ஒனக்கு எப்பிடி வரும்?” என்று கேட்டாள்.

“புள்ள என்னோடதுதான?”

“புள்ளய நீயா பெத்த? நீயா பாலுகொடுத்த? அதோட பீ, மூத்திரத் துணிய நீயா அலசிப்போட்ட?” என்று காவல் நிலையம் என்பதைக்கூட மறந்துவிட்டுச் சத்தம்போட்டுக் கேட்டாள். உடனே ஆர்த்தி, சீனியம்மாவிடம் “அவனில்லாம நீ மட்டும் தனியாவாப் பெத்த?” என்று கேட்டாள்.

“இல்லெ” அழுத்தம் திருத்தமாக சொன்னாள் சீனியம்மா,
80p2_1524649949.jpg
“புள்ள எங்கிட்ட வந்தாவணும்” என்று பாண்டி சொன்னான்.

“அது மட்டும் நடக்காது” கொஞ்சம்கூட பயமின்றி திமிர்த்தனமாகச் சொன்னாள் சீனியம்மா.

“ஏன்?”

“நடக்காதின்னா நடக்காதுதான். ஒன்னால ஆனதப்பாரு” ஒரே வெட்டாக வெட்டிவிட்டாள் சீனியம்மா.

“சேந்திரு. பிரிஞ்சியிரு. அது வேற விஷயம். புள்ளமேல அவனுக்கும் உரிம இருக்குதான?” என்று ஆர்த்தி கேட்டாள்.

“என்னயே வேணாமின்னு சொன்ன பின்னால புள்ள மட்டும் எதுக்கு வேணுமாம்?” வீம்பாகக் கேட்டாள் சீனியம்மாள்.

“அவள வேணாமின்னு சொல்ற நீ, புள்ளய மட்டும் எதுக்குக் கேக்குற?”திரும்பிப் பாண்டியைப் பார்த்து ஆர்த்தி கேட்டாள்.

“ஸ்டேஷனில பெட்டிஷன் கொடுத்து ஊர்ல என்ன அசிங்கப்படுத்திட்டா. இனி உயிர்போனாலும் அவகூட சேந்திருக்க மாட்டன். எம் புள்ள மட்டும் எனக்கு வந்தாவணும்” என்று உறுதியாகச் சொன்னான் பாண்டி.

“என்னயே வேணாமின்ன பிறகு புள்ள மட்டும் எப்படி வரும்?”

“புள்ளயக் கொடுக்கமாட்ட? அப்படித்தான?”

“கொடுக்க மாட்டன்.”

“ஏன்?” என்று திரும்பத் திரும்பக் கேட்டதால், ‘‘புள்ள ஒனக்குப் பொறக்கல போ” என்று சீனியம்மா ஒரே முடிவாகச் சொன்னதும் பாண்டி மட்டுமல்ல, அவனோடு வந்திருந்த ஆள்கள் மட்டுமல்ல, சுந்தரம், தவமணி என்று எல்லாருமே அதிர்ச்சியோடும் கோபத்தோடும் சீனியம்மாவைப் பார்த்தனர்.

“என்னடி காரியம் செஞ்சிட்ட?” என்று கேட்டு மேகவர்ணம், சீனியம்மாவின் கன்னத்தில் அடித்தாள். அடிக்கட்டும் என்பதுபோல சீனியம்மா முகத்தை நன்றாகக் காட்டியபடியே நின்றுகொண்டிருந்தாள். அவளுடைய முகம் சுருங்கவில்லை. அவளுடைய கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீரும் வரவில்லை. மொத்த உடலுமே மரத்துப்போனதுபோல் நின்றுகொண்டிருந்தாள். சீனியம்மாவை அடித்த மேகவர்ணம், கடைசியில் தன்னுடைய முகத்திலேயே அடித்துக் கொண்டு, “அவன அசிங்கப்படுத்துறன்னு எங்குடும்பத்தயே அசிங்கப்படுத்திட்டாளே” என்று சொல்லி அழுதாள். மேகவர்ணம் அழுததும் அவளுடைய இடுப்பிலிருந்த குழந்தையும் வீறிட்டு அழுதது. கோபம் வந்த மாதிரி, அந்த இடத்தில் நிற்கப் பிடிக்காத மாதிரி முகத்தைக் கோணிக்கொண்டு சட்டென்று சுந்தரம் வெளியே போனான்.

“என்ன பாப்பா செஞ்சிட்ட?” என்று கண்கலங்கக் கேட்டாள் தவமணி.

“தெரிஞ்சிதான் பேசுறியா?” என்று ஆர்த்தி கேட்டாள்.

சீனியம்மா பதற்றப்படாமல், கோபப்படாமல், நிதானமாக சொன்னாள்.

“இதுல யாராச்சும் பொய் சொல்வாங்களாம்மா.”

பாண்டிக்கு மட்டுமல்ல அந்த இடத்திலிருந்த எல்லாருக்குமே முகம் சுண்டிப்போயிற்று. சீனியம்மாவை அடித்துக்கொல்ல வேண்டும் என்ற வெறி பாண்டிக்கு மட்டுமல்ல, அவனோடு வந்திருந்த அத்தனை பேருக்குமே இருந்தது. காவல் நிலையம் என்பதால் பேசாமல் இருந்தனர். பாண்டி நெருப்பில் நிற்பதுபோல் நின்றுகொண்டிருந்தான். “எங் கொலத்துக்கே அசிங்கத்தக் கொண்டாந்திட்டியேடி” என்று சொல்லி சீனியம்மாவின் கன்னத்தில் ஓங்கி அடித்தாள் மேகவர்ணம்.

உடல் நடுங்க, வியர்த்து ஒழுக, வாய் குழற மனதிலிருந்த கோபத்தை எல்லாம் அடக்கிக்கொண்டு பாண்டி சீனியம்மாவிடம் நேருக்கு நேராகப் பார்த்துக் கேட்டான். “எங்கூட படுத்து நீ இந்தப் புள்ளயப் பெக்கல?”

சீனியம்மா முகத்தைச் சுளிக்காமல், கொஞ்சம்கூடத் தயக்கமில்லாமல், பயமில்லாமல் மிகவும் தெளிவாகச் சொன்னாள். “இல்லெ.”

“என்னெ பொட்டப் பயன்னு சொல்ற?”

“அது எனக்குத் தெரியாது.”80p2_1524649949.jpg

“எனக்குப் பெக்கலன்னா, இந்தப் புள்ளய யாருக்குப் பெத்த?”

“அத ஒனக்கு சொல்லவேண்டிய அவசியமில்ல.”

“அப்பிடின்னா ஊர் மேஞ்சிதான் இந்தப் புள்ளயப் பெத்த. இல்லியா?”

“ஆமாம்.”

“அப்படின்னா புள்ளய நீயே வச்சிக்க.”

“ஒனக்குப் பொறக்காத புள்ளய ஒனக்கு ஏன் நான் தரணும்?”என்று சீனியம்மா கேட்டதும் மறுநொடி தவமணி ஓங்கி சீனியம்மாவின் வாயில் அடித்து, “வாய் இருக்குன்னு எதுனா பேசுவியா?” என்று கேட்டாள். அப்போது, “இன்னும் ரெண்டு போடுடி” என்று மேகவர்ணம் தவமணியிடம் சொன்னாள். பிறகு, “ஒம் புள்ளதான் இது. நீயே வச்சிக்க. எம் மவள வச்சி வாழ வேணாம்” என்று சொல்லி இடுப்பிலிருந்த குழந்தையை பாண்டியிடம் கொடுத்தாள். அவன் வாங்கிக்கொள்ளாததால் அவனுடைய கையைப் பிடித்துக் குழந்தையைக் கொடுக்க முயன்றாள். அப்போதும் அவன் குழந்தையை வாங்கிக்கொள்ளவில்லை. ஆனால், அழுதுகொண்டே பாண்டியை நோக்கிக் குழந்தை தாவிக்கொண்டேயிருந்தது. குழந்தையைப் பார்ப்பதற்குக்கூடத் தெம்பற்றவனாக கரகரத்த குரலில் சீனியம்மாவிடம் கேட்டான். “நான் கட்டுன தாலியக் கொடுத்திடு.”

“முடியாது” தீர்மானமாக சீனியம்மா சொன்னாள்.

“எங்கூட படுத்து புள்ள பெக்கலன்னு சொன்ன பிறகு நான் கட்டுன தாலி ஒங் கழுத்தில இருக்கக் கூடாது.”

“..........................”

“என்னெ பொட்டப்பயன்னு சொல்லிட்ட. அதுக்குப் பின்னால நான் கட்டுன தாலிய நீ போட்டிருக்கக் கூடாது.”

“சாணித் துணியோடதான சகவாசம் வச்சிக்கிட்டு இருக்கிற? அவகூடவே இருந்துக்க. இனி எம் புள்ளயயோ என்னயோ நீ பாக்கக் கூடாது. இது ஒம் மேல சத்தியம்.சாமி மேல சத்தியம்.”

“நான் கட்டுன தாலியக் கொடுத்துதான் ஆவணும்” என்று திரும்பத் திரும்பக் கட்டாயப்படுத்தி ஆக்ரோஷமாகப் பாண்டி கேட்டதால், அழுத்தம்திருத்தமாகச் சீனியம்மா சொன்னாள், “கோவில்ல வச்சி கட்டுனது. கோவில்ல வச்சி அவுத்துத் தந்திடுறன். நான் உத்தமியா அவுசாரியானு என் பொணம் சுடுகாட்டுக்குப் போவயில ஊர் சொல்லும். அஞ்சி வருஷமா நான் என் நெஞ்சில சொமந்த சாமியா இருந்த. எப்ப இன்னொருத்தி வேணுமின்னு போனியோ அப்பவே நீ கல்லாயிட்ட. பீ தொடச்ச கல்லு. எங்க கெடந்தா என்ன?”   

சீனியம்மாவுக்கு எந்தக் குழப்பமும் இல்லை. தெளிவாகவும் நிதானமாகவும் இருந்தாள். அவளுடைய பேச்சு ஒரு முடிவுக்கு வந்துவிட்டதுபோல் இருந்தது. அவளுக்கு வியர்க்கவில்லை. கைகால்கள் நடுங்கவில்லை. கண்கள் கலங்கவில்லை. மனம் தெளிவாகிவிட்டதுபோல், தலையில் சுமந்துகொண்டிருந்த பாரத்தை இறக்கி வைத்துவிட்டதுபோல் ஆசுவாசமாக இருந்தாள். பாண்டிக்குத்தான் நிற்க முடியவில்லை. பேச முடியவில்லை. யாரையும் பார்க்க முடியவில்லை. பந்தயத்தில் தோற்றுப்போனவனுடைய முகம்போல இருந்தது அவனுடைய முகம். பாண்டியைப் பார்த்த சேகருக்கு என்ன தோன்றியதோ, “பொட்டச்சிக்கிட்ட என்னடா பேச்சு வேண்டியிருக்கு? பொட்டப்பயன்னு சொன்ன பிறகு அப்பறம் எதுக்குத் தாலி? பிச்சிக்கிட்டுக் கிளம்பு” என்று வேகமாகச் சொன்னான். சேகரை அடுத்து ஒன்றிரண்டு பேர் தாலியைக் கழற்றித் தந்துவிட வேண்டும் என்று சொல்லிச் சீனியம்மாவிடம் கட்டாயப்படுத்திக் கொலைவெறியோடு கேட்டனர். சீனியம்மா யாரையும் பார்க்கவில்லை. யாருக்கும் பதில் சொல்லவில்லை. மொத்த உடம்பும் மரத்துவிட்டதுபோல் ஆடாமல் அசையாமல் நின்றுகொண்டிருந்தாள்.

“நம்பளயெல்லாம் பொட்டப் பயலா ஆக்கிட்டாடா ஒம் பொண்டாட்டி” என்று வேகமாகச் சொல்லிவிட்டுப் பாண்டியின் பங்காளி ஜெயபால் விருட்டென்று வெளியே போனான்.

தன் முன் சீனியம்மாவும், பாண்டியும் பேசிக்கொண்டதைப் பார்த்தபடி உட்கார்ந்துகொண்டிருந்த ஆர்த்தி ஒரு முடிவுக்கு வந்ததுபோல் பாண்டியிடம் கேட்டாள். “இங்கியே முடிச்சிக்கிறீங்களா? கோர்ட்டுக்குப் போறீங்களா?”

ஆர்த்தியின் கேள்விக்கு பாண்டி பதில் சொல்லவில்லை. அவனோடு வந்திருந்தவர்கள் எல்லாருமே ஒரே குரலாகச் சொன்னார்கள், “இங்கியே முடிச்சிக்கிறோம். இப்பியே முடிச்சிக்கிறோம்.”

“ஒரு வாரம் பார்க்கலாமா?”

“வேண்டாம்மா” என்று பாண்டியோடு வந்திருந்தவர்கள் ஒரே குரலாக, ஒரே நேரத்தில் சொன்னார்கள்.

“அப்பிடின்னா ரெண்டு பேரு சம்மதத்தோட பிரிஞ்சிக்கிறம்னு எழுதிக் கொண்டாங்க” என்று சொல்லிப் பாண்டியையும் பாண்டியோடு வந்திருந்தவர்களையும் வெளியே அனுப்பினாள் ஆர்த்தி. பிறகு, சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டு சீனியம்மாவைப் பார்த்து, ‘‘நீயும் போயி எழுதிக்கொண்டா” என்று சொன்னாள். சட்டென்று அவளுக்கு மனதில் என்ன தோன்றியதோ, “எதுக்காக அப்பிடிச் சொன்ன?” என்று கேட்டாள்.

“நானே அவுசாரி பட்டத்த வாங்கிட்டன்.அது நான் சாவுறமுட்டும் மறையாது.

எம் புள்ளக்கும் அவுசாரி பெத்த புள்ளனு பட்டம் வந்துடுச்சி. இன்னொருத்திகிட்ட போனதுமில்லாம ஊரே கூடி வேடிக்கப் பாக்க பீ, மூத்திரம் வர அளவுக்கு என்ன அடிச்சாருல்ல... அன்னிக்கி என் மானம் போச்சில்ல... இனி அவரு மானம் போவட்டும். இனி எத்தினி பொண்டாட்டி கட்டுனாலும், எத்தன புள்ள பெத்தாலும் அவருக்குத்தான் பொறந்ததின்னு ஊரு நம்புமா? சாவுறமுட்டும் தலகுனிஞ்சே நடக்கட்டும். இனி எப்பிடி வேட்டி கட்டிக்கிட்டு தெருவுல நடப்பாருன்னு பாக்குறன். சாவட்டும்னுதான் சொன்னன்” என்று சொல்லிவிட்டு விர்ரென்று வெளியே போனாள்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வண்டி இழுக்கிற மாட்டில ஒன்று தாறுமாறா ஓடினாலும் வண்டியே குடை சாய்ஞ்சிடும் .ஏதோ பொண்டில் பேசாமல் பொங்கிக் கொண்டு இருக்கிறாள் என்டிட்டு உன் திமிரை காட்டினால், அவள் பொங்கி காளி போல ருத்ர தாண்டவம் ஆடிடுவாள் ஜாக்கிரதை. ஒரு கிராமத்து விவாகரத்தை விலாவாரியாக சொல்கிறது கதை.....!  ?‍?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.