Sign in to follow this  
நவீனன்

புறாப்பித்து

Recommended Posts

புறாப்பித்து - சிறுகதை

 
 

சிறுகதை: எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ஸ்யாம்

 

p50aa_1523340127.jpg

ற்செயலாகத்தான் அலுவலக மாடி ஜன்னலில் சாய்ந்தபடியே அந்தப் புறாக்களை கோவர்தன் பார்த்தார். அவரது அலுவலகத்தின் எதிரில் மத்திய உணவு சேமிப்புக் கிடங்கு இருந்தது. அதன் சுற்றுச்சுவர் மிக உயரமானது. கறுத்த சுவரின்மீது புறாக்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தன. ஒரேயொரு சாம்பல் நிறப் புறா. மற்றவை வெள்ளை நிறப் புறாக்கள்.

மொத்தம் எத்தனை என எண்ணிப்பார்த்தார். பதினாறு புறாக்கள். அலுவலகம், கோவர்தன் இயல்பை மாற்றியிருந்தது.  இளைஞனாக இருந்த நாள்களில் இதுபோன்ற புறாக்களைப் பார்த்திருந்தால் இப்படி எண்ணியிருக்க மாட்டார். புறா என்றாலே காதலுக்குத் தூது விடுவது என்ற கற்பனையில் அமிழ்ந்து போயிருப்பார். ஆனால், இன்னும் ஓய்வுபெறுவதற்கு மூன்று வருடங்களே இருக்கும் அரசாங்க குமாஸ்தாவால் இதுபோன்ற கற்பனைகளில் ஈடுபட முடியாது அல்லவா? ஆகவே, வெறுமனே எண்ணிக்கொண்டிருந்தார்.

உண்மையில் 30 வருடங்களுக்குமேல் அரசுப் பணிபுரிந்தவர்களுக்கு, அரசாங்கத்தின் குணங்கள் வந்துவிடுகின்றன; அவர்களை அறியாமலேயே முகமும் உடலும் செய்கைகளும் மாறிவிடுகின்றன. அரசு அலுவலக நாற்காலி மேஜைகளைப்போல அவர்களும் உருமாறிவிடுகிறார்கள். அதுவும் காலையில் அலுவலகம் வந்தது முதல் இரவு வரை வெறும் கூட்டல் கழித்தல் டோட்டல் என எண்ணிக்கைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிற ஒருவருக்கு, எதைப் பார்த்தாலும் எண்ணத்தானே தோன்றும்!

கோவர்த்தனை, அவரின் பிள்ளைகள் கேலி செய்தார்கள். சாப்பிட ஹோட்டலுக்குப் போனால், சாப்பிட்டு முடிப்பதற்குள் டோட்டல் எவ்வளவு என மனக்கணக்காகச் சொல்லிவிடுவார். ``அதான் கம்ப்யூட்டர்ல பில் வருமேப்பா... நீ எதுக்குக் கணக்குச் சொல்றே?” என மகள் கேட்பாள். என்ன பதில் சொல்வது?

ஒவ்வொரு பைசாவையும் பார்த்துப் பார்த்துச் செலவழிக்க வேண்டும். சுத்தமாகக் கணக்குத் தர வேண்டும் என்று வளர்த்த தலைமுறை அல்லவா! இப்போது யார் அப்படிக் கணக்குப் பார்க்கிறார்கள்? ஐந்து பைசா பலசரக்குக் கடையில் விடுதல் என்பதற்காக அம்மா எவ்வளவு சண்டை போட்டிருக்கிறாள். இன்று பைசாக்களும் முக்கியமில்லை; ரூபாய்களுக்கும் அப்படித்தான்.

p50a_1523340115.jpg

ஆனால், அந்தப் பழக்கத்தில் ஊறியவர்களால் கணக்குப் போடாமல் இருக்க முடியாது. ஆகவே, சமீபமாக ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனால் மனதுக்குள் மட்டும் கணக்குப்போட்டுக் கொள்வார்.

`சென்னையில் வாழ்க்கையைத் தொடங்கப் போகிறோம்’ என, கல்லூரி முடித்த நாள்களில் நினைத்தபோது எவ்வளவு சந்தோஷமாக இருந்தது! ஆனால், இந்த 33 வருஷ மதராஸ் வாழ்க்கை அப்படியொன்றும் சோபிக்கவில்லை. வீடு வாங்கியதும் பிள்ளைகள் படித்து முடிக்கப் போவதும்தான் மிச்சம்.

சிதம்பரம், கடலூர், கரூர், ராசிபுரம் என வேலைக்காக மாறிய ஊர்கள் எதுவும் மனதில் ஒட்டவேயில்லை. உண்மையில் ஒரு கோடி பேருக்கும் அதிகமாக வசிக்கும் இந்த மாநகரில், அவரும் ஒரு துளி; அடையாளமில்லாத துளி. கொட்டும் மழையில் தனித்துளிக்கு ஏதாவது அடையாளம் இருக்கிறதா என்ன? எல்லாத் துளிகளும் ஒன்றுபோல்தானே இருக்கின்றன.

வேலை கிடைத்துச் சென்னை வந்த நாள்களில் அறை எடுத்துதான் தங்கினார். அலுவலகம் விட்டவுடன் உடனே அறைக்குப் போய்விட மாட்டார். ஊர் சுற்றிக்கொண்டே இருப்பார். கோயில், கடற்கரை.  திருவல்லிக்கேணி வீதிகள், அரசியல் பொதுக்கூட்டம், நூலகம், பிரசங்கம், இசைக் கச்சேரி, இரவுக் கடைகள் என நேரம் போவதே தெரியாது.

மேன்ஷன் அறையில் ஒரு வசதியும் கிடையாது. ஆனால், அது எதுவும் மனதில் ஒரு குறையாகத் தோன்றவேயில்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் சில வேளை மூன்று திரைப்படங்கள்கூடப் பார்த்திருக்கிறார். இரவு தேடிப் போய் பிலால் பிரியாணி சாப்பிட்டுவிட்டு வருவார். எல்லாமும் திடீரென அலுத்துப்போனது. உடனே திருமணம் செய்துகொண்டார். புதுமனைவியுடன் சென்னை வந்து தனி வீடு பிடித்துக் குடியேறிய பிறகு, மதராஸ் மிகவும் சுருங்கிப்போய் விட்டது.

கடற்கரைக்குப் போய் வருவதே கூடச் சலிப்பூட்டும் வேலையாகி விட்டது. ஒருமுறை கடற்கரையில் ஆயிரக்கணக்கான ஆள்கள் கூச்சலிட்டுக்கொண்டிருப்பதைக் கண்டதும் அவருக்கு மூச்சுத் திணறத் தொடங்கியது. ``கடல் அலைகள் காலில் படும் வரை போகலாம்’’ என மகள் அழைத்தபோது `அலைகள் தன்னை இழுத்துக்கொண்டு போய்விட்டால் என்ன ஆவது!’ என்ற பயம் மேலோங்கியது.

அவர் போகாதது மட்டுமின்றி, மகளையும் `அருகில் போகக் கூடாது’ எனத் தடுத்தார். ``உங்களுக்கு வயதாகிவிட்டது. அதான் தேவையில்லாமல் பயப்படுகிறீர்கள்’’ என மனைவி கோபித்துக் கொண்டாள்.

அது நிஜம்தான் என உணர்ந்தார். உண்மையில், இது தேவையில்லாத பயம்தானா, வயதானவுடன் ஏன் உலகின் சின்னஞ்சிறு விஷயங்கள்கூட இத்தனை பூதாகரமாகத் தெரிகின்றன? எதற்கெடுத்தாலும் பயம் வருகிறது. கவலையும் கோபமும் பீறிடுகின்றன. ஒருநாள் அதைப் பற்றி அவரது அலுவலகத்தில் பேச்சு வந்தபோது டைப்பிஸ்ட் சுந்தரி சொன்னாள்,

``உடம்பு நாம சொன்னபடி கேட்காமப் போக ஆரம்பிச்சுட்டா,   மனசு நிலையில்லாமப்போயிடும். அதுக்கப்புறம் நாள்பூரா  உடம்பைப் பற்றியேதான் நினைச்சுக்கிட்டு இருக்கணும்னு தோணும். இருபது வயசுல யாரு உடம்பைப் பற்றிக் கவலைப்பட்டா? இரும்பைக் குடுத்தாலும் கடிச்சுத் தின்னுட்டுப் போயிட்டே இருந்தோம். அது இப்போ முடியுமா? உளுந்துவடை சாப்பிட்டா ஜீரணமாக அரை நாள் ஆகுது.``

அதை கேட்டுப் பலரும் சிரித்தார்கள். ஆனால், கோவர்தனுக்குத் துக்கமாக இருந்தது. அவள் சொல்வது உண்மை. தனது பயத்தின் ஆணிவேர் உடம்பு. உண்மையில் நாமாகத்தான் அதைக் கெடுத்துக்கொண்டோம். அதில் அரசாங்க அலுவலகத்துக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. இனி கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது? மாநகரில் ஒவ்வொரு நாளையும் கடந்து போவதும் சலிப்பாக இருக்கிறது.

சினிமா, நியூஸ்பேப்பர், கோயில், பாட்டு எதையும் பற்றிக்கொண்டுவிட முடியவில்லை. எல்லாமும் சலிப்பாக இருக்கின்றன. அலுவலகத்தில் முன்பெல்லாம் கேரம் ஆடுவார்கள். டீ குடித்தபடியே மணிக்கணக்கில் அரட்டையடிப்பார்கள். அதெல்லாமே செல்போன் வந்தவுடன் முடிந்துபோனது. அலுவலகத்தில் கூடி விளையாடுவதும் பேசிச் சிரிப்பதும் அறுந்து போய்விட்டன.

கோவர்தனுக்கு, ஒவ்வொரு நாள் அலுவலகத்துக்கு வரும்போதும் விருப்பமே இல்லாத வேலையைச் செய்வதாகவே தோன்றும். டிபன்பாக்ஸை மேஜைக்குக் கீழே வைத்துவிட்டு மேஜை டிராயரை இழுக்கும்போது 30 வருடங்களை இழுப்பதுபோலவே தோன்றும். அலுவலகத்தில் மட்டுமல்ல, தன் மீதும் சிலந்திவலை படிந்து கொண்டேவருகிறது. அதைத் துடைத்துச் சுத்தம் செய்ய முடியாது. இனி, தான் ஒரு சிலந்திவலை படிந்த மனிதன் மட்டுமே என நினைத்துக்கொள்வார்.

இப்படிச் சொல்ல முடியாத மனவேதனையும் இறுக்கமும் சலிப்புமான ஒரு நாளில்தான் கோவர்தன் அந்தப் புறாக்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.

ஐந்து நிமிடம் பார்த்தபிறகு அந்தப் புறாக்களின் வெண்மை மீது ஈர்ப்பு உருவாக ஆரம்பித்தது. எவ்வளவு வெண்மை, தூய்மை! இந்த நகரின் எந்தத் தூசியாலும் புகையாலும் அந்த வண்ணத்தை மாற்ற முடியாது.
புறாக்கள்  வரிசையாக உட்கார்ந்திருந்தன. எதற்கோ காத்திருப்பது போன்ற அதன் பாவனை. இவற்றில் யார் பாஸ், யார் ஸ்டெனோ, யார் ஹெட்கிளார்க்? புறாக்களுக்குள் ஒரு பேதமும் இல்லை. ஒரு புறா, சிறகைக் கோதிவிட்டபடியே இருந்தது. இன்னொரு புறா, பறக்க எத்தனிப்பதுபோல் தயாராக இருந்தது. இரண்டு புறாக்கள், ஒன்றோடு ஒன்று அலகை உரசிக்கொண்டிருந்தன. இந்த வரிசையைவிட்டு ஒரு புறா தனியே விலகி உட்கார்ந்திருந்தது. தன்னைப்போல அதற்கும் இந்த நகரம் சலிப்பாகியிருக்கும்போல!

கோவர்தன் புறாக்களையே பார்த்துக்கொண்டிருந்தார். சட்டென எல்லாப் புறாக்களும் கோட்டைச் சுவரைவிட்டு வானில் பறந்தன. எங்கே போகின்றன? இந்தப் புறாக்கள் எங்கே தங்கியிருக்கின்றன? எதற்காக இந்த அவசரம்?

புறாக்கள் இல்லாத கோட்டைச் சுவரைக் காணும்போது, விடுமுறை நாளில் காணப்படும் அரசாங்க அலுவலகத்தின் சாயல் தெரிந்தது. அந்தச் சுவரையே நெடுநேரம் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.ஹெட்கிளார்க் அருணன் திரும்பிப் பார்த்து, ``என்ன சார்... குடோன்ல அப்படி என்ன பார்க்கிறீங்க?’’ எனக் கேட்டார்

``சும்மாதான். காற்று வரலை!’’ என்று சமாளித்தார்.

அன்று கோவர்தன் வீடு திரும்பும் வரை மனதில் புறாக்களே நிரம்பியிருந்தன.  வீட்டுக்கு வந்தவுடன் வழக்கத்துக்கு மாறாகப் பழைய டைரி ஒன்றில் பென்சிலால் புறா ஒன்றை வரைய முற்பட்டார். அதையும் ஏதோ அலுவலக வேலை என்றே மனைவி நினைத்துக் கொண்டாள். கோவர்த்தனால் நினைத்ததுபோலப் புறாவை வரைய முடியவில்லை. நான்கைந்து முறை வரைந்து பார்த்துத் தோற்றுப்போனார்.

மறுநாள் காலையில் அலுவலகம் போனவுடன் புறாக்கள் சுவருக்கு வந்துவிட்டனவா என ஆர்வமாகப் பார்த்தார். புறாக்களைக் காணவில்லை. மதியம் வரை அடிக்கடி எட்டிப்பார்த்துக் கொண்டே இருந்தார். 3 மணி அளவில் ஒவ்வொரு புறாவாக வந்து அமர ஆரம்பித்தது. சரியாக அதே 16 புறாக்கள். பிரிக்க முடியாத தோழர்களைப் போன்று ஒன்றாக அமர்ந்திருந்தன.

தானியத்தைக் கொத்திக்கொண்டு வந்து சாப்பிடத்தான் அமர்ந்திருக்கின்றன என முதலில் நினைத்தார். ஆனால், அந்தப் புறாக்களை உன்னிப்பாகக் கவனித்தபோது அவை எதையும் உண்ணவில்லை என்பதைத் தெரிந்துகொண்டார். பிறகு என்னதான் செய்கின்றன, எதற்காக இங்கே கூடுகின்றன?

புறாக்கள் திடீரென பறந்து ஒரு வட்டமடித்துவிட்டுத் திரும்பவும் அதே இடத்தில் வந்து அமர்ந்தன.  இந்தச் சுவர், அதன் விளையாட்டு மைதானமா... அல்லது தியான மண்டபமா?  அந்தப் புறாக்களுக்குள் எது வயதானது? இவை எந்த ஊர்ப் புறாக்கள்? எதையுமே அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், அவற்றைப் பார்க்கப் பார்க்கக் கிளர்ச்சியூட்டுவதாகயிருந்தது. ஜன்னலில் நீண்டநேரம் சாய்ந்தபடி புறாக்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரது பின்னால் நின்றபடி ஹெட்கிளார்க்  சுந்தரம் சொன்னார், ``முன்னாடியெல்லாம் நிறைய புறாக்கள் வரும் சார். இப்போ குறைஞ்சிருச்சு.’’

``நீங்க வாட்ச் பண்ணியிருக்கீங்களோ?’’ எனக் கேட்டார் கோவர்தன்.

``சும்மா பார்ப்பேன். இந்த ஆபீஸ்ல பொழுதுபோக வேற என்ன இருக்கு?’’ என்றபடியே தைலத்தை எடுத்து நெற்றியில் தேய்த்துக்கொண்டார்.

``இந்தச் சுவர்ல மட்டும்தான் புறா வருதா, இல்லை வேற இடங்களும் இருக்கிறதா?’’ எனக் கேட்டார் கோவர்தன்

``மசூதி முன்னாடி நிறைய புறாக்கள் இருக்கும். பழைய சஃபையர் தியேட்டர் எதிர்லகூட நிறைய நிக்கும். இப்போ அமெரிக்காக்காரன் எம்பசிக்குப் பயந்து அதுவும் ஓடிப்போயிருச்சோ என்னவோ!’’ எனச் சொல்லிச் சிரித்தார்

`ஒரே எண்ணிக்கையில் எதற்காக புறாக்கள் வருகின்றன,  எப்படி இந்த இணக்கம் உருவானது, இது வெறும் பழக்கம்தானா, புறாக்கள் ஏன் காட்டைத் தேடிப் போகாமல் இப்படி மாநகருக்குள் சுற்றிக் கொண்டிருக்கின்றன?’

அலுவலகத்தைவிட்டு இறங்கிப் போய்ப் புறாக்களை அருகில் பார்க்கவேண்டும்போலிருந்தது. செருப்பை மாட்டிக்கொண்டு கீழே இறங்கிப் போனார். கேட்டில் வாட்ச்மேனைக்கூடக் காணவில்லை. உலர்ந்துபோன புற்களும் பெயர் அறியாத செடிகளும் அடர்ந்திருந்தன. உள்ளே நடக்க நடக்க நெல் வேகவைக்கும்போது வரும் வாசனைபோல அடர்ந்த மணம். மழைத்தாரை வழிந்து கறுப்பேறிய சுவரில் சினிமா போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுக் கிழிந்துகிடந்தது.

கோவர்தன், புறாக்கள் நின்றிருந்த சுவரின் அருகில் போனார். ஆள் அரவம் கேட்டால் பறந்துவிடுமோ எனப் பதுங்கியபடியே ஓரமாக நின்றார். அந்தப் புறாக்களில் ஒன்று, அவரைக் கண்டபோதும் காணாதது போல கழுத்தைத் திருப்பிக்கொண்டது. புறாக்களின் விம்மல் சத்தம் தெளிவாகக் கேட்டு க்கொண்டிருந்தது. அது  காசநோயாளியின் இழுப்புச் சத்தம்போல இருந்தது.  புறாக்கள், தங்கள் நேரம் முடிந்துவிட்டது என்பதுபோல எழுந்து அவரைக் கடந்து பறந்தன.  விலகி நின்றிருந்த ஒற்றைப் புறா, தனியே கடந்து போனது.

அவர் அலுவலகத்துக்குப் போவதற்காகத் திரும்பி நடந்து வந்தபோது வாட்ச்மேன் ``என்ன சார், உள்ளே யாரைப் பார்க்கப் போனீங்க?’’ என்று கேட்டார்.

``பக்கத்து ஆபீஸ்’’ என்று சொல்லி, பொய்யாக ஒரு சிரிப்பை வெளிப்படுத்தினார்.

அதற்குமேல் வாட்ச்மேன் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை. `இது என்ன பைத்தியக்காரத்தனம்... எதற்காக இப்படிப் புறாக்களைக் காண்பதற்காக இறங்கி வந்திருக்கிறேன்?’ என, தனக்குத் தானே கேட்டுக்கொண்டார். பிறகு, ஆபீஸ் வந்தபோதும் அந்தப் புறாக்களைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார்.

அன்றைக்கு ஆபீஸிலிருந்து நேரடியாக வீட்டுக்குப் போகாமல் எங்கெங்கெல்லாம் புறாக்கள் தென்படுகின்றன எனப் பார்க்கத் தொடங்கினார். அது வேடிக்கையான செயலாக இருந்தது. ஆனால், அவர் நினைத்ததுக்கு மாறாக நகரின் பல்வேறு இடங்களில் புறாக்கள் தென்பட்டன. ஒவ்வொன்றாக எண்ணத் தொடங்கினார். மனது ஏனோ மிகுந்த சந்தோஷமாகயிருந்தது.

p50b_1523340147.jpg

அதன் பிறகு ஆயிரம்விளக்கு, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தி.நகர், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், குரோம்பேட்டை, தாம்பரம் என வீட்டுக்கு வரும் வழியெங்கும் புறாக்களைத் தேடிக் காண ஆரம்பித்தார்.  எங்கே, எந்த இடத்தில் எத்தனை புறாக்கள் ஒன்றுசேருகின்றன. அவை எப்படி இருக்கின்றன என ஆராய ஆராய, மகிழ்ச்சி பெருகியது.

புறாக்களின் எண்ணிக்கையைக் குறித்துக்கொள்வதற்காகச் சிறிய பாக்கெட் நோட் ஒன்றை வாங்கி வைத்துக்கொண்டார். திடீரென நகரம் புதிதாக உருமாறியதுபோல் இருந்தது. எத்தனையோ அறியாத ரகசியங்களுடன் நகரம் இயங்கிக்கொண்டிருக்கிறது எனத் தோன்றியது. இத்தனை ஆயிரம் புறாக்கள் இந்த நகரில் இருப்பது ஏன் மக்கள் கவனத்தை ஈர்க்கவேயில்லை?

இந்தப் புறாக்கள் ஏன் இடிபாடுகளுக்குள்ளேயே அதிகம் வாழுகின்றன? புறாக்கள் துறவிகளா, ஏன் அவை எதற்காகவும் உரத்துச் சண்டையிடுவதில்லை? மசூதிகளில், கோயில்களில், தேவாலயங்களில் ஏன் அதிகம் புறாக்கள் காணப்படுகின்றன? ஒருவேளை, புறாக்கள்தான் வானுலகின் தூதுவர்களா!  பார்க்கப் பார்க்க, புறா விசித்திரமான பறவையாகத் தோன்ற ஆரம்பித்தது.

வீட்டுக்கு வந்த பிறகு ஏதேனும் ஒரு சேனலில் புறாவைப் பற்றி ஏதாவது காட்ட மாட்டார்களா எனத் தேட ஆரம்பித்தார். இணையத்தில் தேடி விதவிதமான புறாக்களின் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டே இருந்தார். வீட்டில் அவரது திடீர் மாற்றத்தை மகளோ, மகனோ, மனைவியோ புரிந்துகொள்ளவேயில்லை

ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் புறாக்களைத் தேடிச் சுற்ற ஆரம்பித்தார். `புறாக்கள் ஒருமுறை ஜோடி சேர்ந்தால் அது பிரிந்திடாது’ என்றார்கள். அது உண்மைதான் என நினைத்துக்கொண்டார். வளர்ப்புப் புறாக்கள் எங்கே விட்டாலும் வீடு திரும்பிவிடக்கூடியவை என்பது அவருக்கு வியப்பாக இருந்தது.

தன்னைப்போல்தான் அந்தப் புறாக்களுமா? வீடுதான் அதன் உலகமா? கூண்டை ஏன் இவ்வளவு நேசிக்கின்றன? வானம் எவ்வளவு பெரியது... அதில் பறந்து மறைந்து போய்விடலாம்தானே!

தாங்கள் எப்போதும் அமரும் சுவரை இடித்துவிட்டால்கூட அதே இடத்துக்குப் புறாக்கள் திரும்பி வந்துகொண்டிருக்கும் என்றான் உணவு சேமிப்புக் கிடங்கு வாட்ச்மேன். இது மடமைதானா, அல்லது `அந்தச் சுவர்கள் வெறும் தங்கிச் சென்ற இடமில்லை’ என புறாக்கள் உணர்ந்துள்ளனவா!

புறா பித்து பிடித்துக்கொண்ட பிறகு, அவர் சில நாள்கள் மின்சார ரயிலில் பயணம் செய்தார். சில வேளைகளில் நகரப் பேருந்தில் இருந்தபடியே புறாக்கள் நிற்கும் இடத்தைக் கடந்து போனார். ஒருமுறை அப்படி ராயப்பேட்டையில்  ஷேர் ஆட்டோ ஒன்றில் போய்க்கொண்டிருந்தபோது அருகில் அமர்ந்திருந்த பர்தா அணிந்த இளம்பெண் ஒருத்தி, ஆள்களை இடித்துக்கொண்டு இறங்க முற்படுவள்போல உடலை வெளியே இழுத்துத் தகரக்கூரை ஒன்றின் மீதிருந்த புறாக்களை வேடிக்கை பார்த்தாள். அது அவருக்குச் சிரிப்பாக இருந்தது.

ஷேர் ஆட்டோவில் இருந்தவர்கள், அவளது செய்கையால் எரிச்சலடைந்து திட்டினார்கள். அதைப் பொருட்படுத்தாதவள்போலச் சிரித்துக்கொண்டாள். பிறகு அவர்  கேட்காமலே சொன்னாள்,

``எனக்குப் புறான்னா ரொம்பப் பிடிக்கும். எங்க வீட்ல புறா வளர்த்திருக்கோம். வாப்பா, புறா பந்தயமெல்லாம் விடுவாங்க!’’

`அப்படியா!’ என்பதுபோலத் தலையாட்டிக் கொண்டார்

ஷேர் ஆட்டோ போய்க்கொண்டேயிருந்தது. ஒரு வளைவை நோக்கிச் செல்லும்போது அவராகச் சொன்னார் ``உங்க லெஃப்ட்ல ஒரு மெக்கானிக் ஷாப் வரும். அதுமேல புறாக்கூட்டம் இருக்கும் பாருங்க.``

அவர் சொன்னதுபோலவே புறாக்கள் கூட்டமாக இருந்தன. அவள் அவசரமாகப் புறாக்களை எண்ணத் தொடங்கினாள். அவள் எண்ணி முடிப்பதற்குள் அவர் எண்ணிக்கையைச் சரியாகச் சொன்னார்.
``உங்களுக்கு எப்படிப் புறா இங்க நிக்கும்னு தெரியும்?`` என்றாள்.

`இருபது வயதுப் பெண் இப்படிச் சிறுமிபோல வியப்போடு கேட்கிறாளே!’ என நினைத்தபடியே ``எல்லாப் புறாக்களையும் எண்ணி, கணக்கு எடுத்து வெச்சிருக்கேன்`` என்று தனது சிறிய நோட்டை எடுத்துக் காட்டினார்.

அவளால் நம்ப முடியவில்லை.

சட்டைப்பையில் இருந்த பாக்கெட் நோட்டை அவளிடமே கொடுத்தார். அவள் அவசரமாக அதைப் புரட்டினாள். உள்ளே இடம்வாரியாகப் புறாக்களின் எண்ணிகை பதிவுசெய்யப்பட்டிருந்தது

``எதுக்குப் புறாவை கவுன்ட் பண்றீங்க?`` என்று கேட்டாள்.

``சும்மாதான்`` எனச் சொல்லிச் சிரித்தார்

``எனக்கும் இப்படிச் செய்யணும்னு ஆசையா இருக்கு. ஆனா, ஹஸ்பண்டுக்கு இதெல்லாம் பிடிக்காது`` என்றபடியே அந்த நோட்டைத் தடவிக்கொடுத்தாள்.

பாலத்தையொட்டி ஷேர் ஆட்டோ நின்றபோது, அதிலிருந்து இறங்கும் முன்னர் அவரிடம் அந்த நோட்டைக் கொடுத்தபடியே சொன்னாள், ``புறாவை ஃபாலோ பண்ணக் கூடாது. அப்படிப் பண்ணினா, அது கனவுல வந்துடும்.``

அப்படி அவள் சொன்னது, அவரை மிகவும் சந்தோஷப்படுத்தியது. அன்றைய கனவில் ஒரு புறாவாவது வந்துவிடாதா என ஏங்கினார். உண்மையில் அவருக்குக் கனவு வருவதேயில்லை. அலுவலகத்தில் சில வேளை பகற்கனவு வந்திருக்கிறது. ஆனால், இரவில் கனவே வருவதில்லை.

வீட்டுக்கு வரும்போது அந்தப் பெண்ணைப் பற்றியும் புறாக்களைப் பற்றியுமே நினைத்துக்கொண்டு வந்தார். இரவு 9 மணிக்கெல்லாம் உறங்கவும் சென்றுவிட்டார். அவர் கனவில் புறாக்கள் வரவேயில்லை. ஆனால், அவரது வாழ்க்கையில் முன்பு ஒருபோதுமில்லாத புதிய சந்தோஷம் பரவத் தொடங்கியிருந்தது.

காலையில் சவரம் செய்து கொள்ளும்போதே `அந்தப் பர்தா அணிந்த பெண்ணை மீண்டும் காண்போமா?’ என யோசித்தபடியே சவரம்  செய்தார்.  திடீரென அவரும் புறாவைப்போல வெள்ளை உடை அணிந்துகொள்ள ஆசைப்படத் தொடங்கினார்.  கோபத்தில் கத்துவதைவிட்டு, மெதுவாகப் பேச ஆரம்பித்தார். கண்ணுக்குத் தெரியாத ஒழுங்கு, புறாக்களுக்குள் இருக்கின்றன. அவை உத்தரவுக்காகக் காத்திருப்பதில்லை. ஆனால், சட்டென ஒரே நேரத்தில் ஒன்றாகப் பறக்கின்றன. காகங்களைப்போலக் கத்திச் சத்தம்போட்டுப் பசியை வெளிக்காட்டிக்கொள்வதில்லை எனப் புறாக்கள் அவருக்குப் புதிய வகை அனுபவத்தின் கதவைத் திறந்துவிட்டன.

நகரம் என்பது மனிதர்களுக்கானது மட்டுமல்ல, ஆயிரமாயிரம் புறாக்கள், பறவைகள், நாய்கள், பூனைகள், எலிகள், நுண்ணுயிர்கள் எல்லாமும் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கும்தான். அதனதன் பசிக்கு அதனதன் தேடல். யாருக்கும் எதுவும் எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை. நகரில் எதுவும் நிரந்தரமில்லை. கிடைக்கிற சுவரில் நிற்கவேண்டியதுதான். அவருக்கு, வாழ்க்கையைப் பற்றியிருந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போக ஆரம்பித்தது.

பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று  ராயப்பேட்டை மணிக்கூண்டுப் பகுதியில் புறாக்களைத் தேடி அலைந்துகொண்டிருந்தபோது ``நான்தான் முதல்ல  பார்த்தேன்” என்ற குரல் கேட்டது.
அதே பர்தா அணிந்த இளம்பெண். கையில் ஒரு கூடையுடன் இருந்தாள். அவளைப் பார்த்துச் சிரித்தார்.

``இங்கேயா சார் உங்க வீடு?`` என்று கேட்டாள்

``இல்லை, கிழக்குத் தாம்பரம்`` என்றார்.

``புறாவைத் தேடியா இங்க அலையுறீங்க?” எனக் கேலிசெய்தாள்.

``அதெல்லாமில்லை. இன்னிக்கு ஹாலிடே. அதான் இப்படி...” எனச் சமாளித்தார்.

அவள் சிரித்தபடியே ``எங்க வாப்பாகூட உங்களை மாதிரிதான். எந்நேரமும் புறா புறானுதான் கிடப்பாரு. அவரு புறாகூடப் பேசுவாரு. நீங்க பேசுவீங்களா?”

``அதெல்லாம் தெரியாது”

``நாம பேசினா புறாவும் பேசும்னு வாப்பா சொல்வாரு”

``நீங்க சொன்னா நிஜமாத்தான் இருக்கும்” என்றார் கோவர்தன்.

``என்மேல அவ்வளவு நம்பிக்கையா?” எனக் கேட்டாள் அந்த இளம்பெண்.

என்ன சொல்வது எனத் தெரியாமல் மௌனமாக நின்றார்.

``அந்த நோட்டை எனக்குக் குடுப்பீங்களா?”

``தந்தா, என்ன குடுப்பே?”

``ஒரு டீ வாங்கித் தர்றேன்”

``நிஜமாவா?”

``ஆமா. ஆனா, நோட்டை எனக்கே குடுத்தரணும்”

``நீ என்ன செய்வே?”

``வீட்ல அதை வெச்சுக்கிட்டு நானா கற்பனை பண்ணிக்கிட்டு இருப்பேன். அதான் எந்த இடத்துல எத்தனை புறா வருதுனு டீடெயிலா போட்டிருக்கீங்களே!”

``நேர்ல போய்ப் பார்க்க ஆசை வராதா?”

``நான் என்ன ஆம்பளையா... புறா பின்னாடி சுத்திக்கிட்டே இருக்கிறதுக்கு, பொழப்பைப் பார்க்க வேணாமா?”

அவள் சொன்னவிதம் அவரைக் குத்திக் காட்டியதுபோல அவளுக்குத் தோன்றியிருக்கக் கூடும்.

``நான் உங்களைச் சொல்லலை” என்று மறுபடியும் சிரித்தாள்.

``உண்மையைத்தானே சொன்னே?” என்றார்.

``உங்களுக்குக் கோபம் வரலையா?” எனக் கேட்டாள்

``இல்லை” எனத் தலையாட்டினார்.

``அப்போ வாங்க” என அருகில் உள்ள டீக்கடைக்கு அழைத்துப்போய் ஒரு டீ வாங்கித் தந்தாள்.

``நீ குடிக்கலையா?” என்றதற்கு ``ஐயயோ! ரோட்ல நின்னு டீ குடிச்சேன்னு தெரிஞ்சா கொன்னுபோட்ருவாங்க” என்றாள்.

கோவர்தன் டீயை மெதுவாக உறிஞ்சிக் குடித்தபடியே அவளையே பார்த்துக்கொண்டிருந்தார். அவள் கைகள் அந்த பாக்கெட் நோட்டுக்காக நீண்டபடியிருந்தன.

``நோட்டைத் தர மாட்டேன்” என்றார் கோவர்தன்.

``என்னை ஏமாத்திட்டீங்களா?” என வருத்தமான குரலில் கேட்டாள்.

``இல்லை, சும்மா சொன்னேன். இந்தா” என அந்த நோட்டை எடுத்து நீட்டினார்.

p50c_1523340165.jpg

அவள் வாங்கிப் பிரிக்கக்கூட இல்லை. கையில் இருந்த கூடையில் போட்டுக்கொண்டாள்.

``உன் பேரு என்ன?” என்றார் கோவர்தன்.

அவள் பெயரைச் சொல்லாமலேயே ரோட்டைக் கடந்து போனாள். டீக்கடை முன்பாகவே நெடுநேரம் நின்றுகொண்டிருந்தார் கோவர்தன். சந்தோஷமும் வருத்தமும்  ஒன்றுகலந்து  மனதில் பீறிட்டுக்கொண்டிருந்தன.
அன்று இரவு, கடைசிப் பேருந்தைப் பிடித்துதான் வீடு திரும்பினார். வீடு வந்த பிறகும் உறக்கம் கூடவில்லை. எழுந்து சாய்வு நாற்காலியில் படுத்தபடியே அந்தப் பெண்ணைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தார். `அந்தப் பெண் இந்நேரம் வீட்டில் தன் பாக்கெட் நோட்டை வைத்துக்கொண்டு புறாக்களைக் கற்பனையில் பார்த்துக் கொண்டிருப்பாள்’ எனத் தோன்றியது

திடீரென, தான் 25 வயதுக்குத் திரும்பிவிட்டதுபோல் இருந்தது. தனது பழைய கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்களை பீரோவிலிருந்து எடுத்துப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் பையன் நான் அல்ல. அந்தப் புகைப்படங்களிலிருந்து வெகுதூரம் விலகி வந்துவிட்டேன். இப்போதைய தன் முகம் தனக்கே பிடிக்க வில்லை. அன்று அவளது நினைவாகவே சாய்வு நாற்காலியில் உறங்கிப்போனார். கனவில் புறா வந்திருந்தது.
அதன் பிறகு அவர் ஒவ்வொரு முறை புறாவைக் காணும்போது அவருக்கு அந்த இளம்பெண் நினைவு வரத் தொடங்கியது. புறாக்களை எண்ணத் தொடங்கியபோது அவரை அறியாமல் ஒரு குற்றவுணர்ச்சி எழுந்தது. `இதைத் தன் மனைவி கண்டுபிடித்துவிடுவாளா!’ எனச் சந்தேகம்கொண்டார். பிறகு, தனக்குத்தானே `இது வெறும் சந்திப்புதான்.  அதற்குமேல் ஒன்றுமில்லை’ எனச் சொல்லிக் கொண்டார்.

பர்தா அணிந்த இளம்பெண்ணைப் பற்றி நினைக்க நினைக்க, தன் மீது ஒரு புறா வந்து அமர்ந்துவிட்டுப் பறந்து போய்விட்டதுபோல் இருந்தது.

`தான் ஒரு கற்சுவர். சுவர்கள் விரும்பினால் புறாக்கள் வந்து விடுவ தில்லை. புறாக்கள் அமர்வ தாலேதான் சுவர் அழகுபெறுகிறது. சுவர்கள், புறாக்களை நினைத்து வருந்திக்கொண்டே இருக்க வேண்டியதுதான்போலும்’ என நினைத்துக்கொண்டார்

ஹெட்கிளார்க், அவர் காதில் விழும்படி யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார்...

``திங்கறதும் தூங்குறதும் மட்டுமா சார் மனுஷன்... அவனுக்குனு ஒரு சந்தோஷம் வேணாமா? என்ன சார் இருக்கு இந்த ஊர்ல? எல்லாத்துக்கும் காசு காசுனு புடுங்கிருறாங்க. வீடும் அப்படித்தான் இருக்கு... ஊரும் அப்படித்தான் இருக்கு.’’

``சரிதான்’’ என்று சத்தமாகச் சொன்னார் கோவர்தன்.

ஏன் இவ்வளவு சத்தமாகச் சொன்னார் என, குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் ஹெட்கிளார்க்.

அவர் பார்வையில் படாமல் தலையைக் குனிந்துகொண்டார் கோவர்தன். அந்த நிமிடம் இருக்கையையொட்டிய ஜன்னல் திறந்திருப்பது தொந்தரவாகத் தோன்றியது.

https://www.vikatan.com/

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இந்தக் கதை எனக்கானதல்ல, யாரும் வயசானவர்கள் வந்து படித்துப் பயன் பெறட்டும்.....!  tw_blush:

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
5 minutes ago, suvy said:

இந்தக் கதை எனக்கானதல்ல, யாரும் வயசானவர்கள் வந்து படித்துப் பயன் பெறட்டும்.....!  tw_blush:

நோ கமெண்ட்ஸ்..:grin:

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this  

 • Similar Content

  • By நவீனன்
   வெட்டுக்கத்தி - சிறுகதை
     குமாரநந்தன் - ஓவியங்கள்: ஸ்யாம்  
   அவர்கள் வெகுநேரம் அங்கே சுற்றிக்கொண்டிருந்தார்கள். வெயில் மிதமாக இருந்தது. காலை நேரத்தின் அடையாளமாய் சீருடை அணிந்த பள்ளி மாணவர்கள், மாணவிகள் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

   இவர்கள் கறிக்கடையைத் திரும்பவும் நோட்டமிட்டார்கள். இளைஞன் ஒருவன் கறி வெட்டிக்கொண்டிருந்தான். மெள்ள கடைப் பக்கம் நகர்ந்து சைகை காட்டினார்கள். அந்த இளைஞன் ஏறிட்டுப் பார்த்துவிட்டு  ‘காசு கொடு’ என்பது போலக் கையை நீட்டினான். வந்த இருவரில் வெள்ளைச் சட்டை அணிந்திருந்தவன் உள் பாக்கெட்டில் கைவிட்டு நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து நீட்டினான். இளைஞன் பணத்தை வாங்கி, கறி வெட்டும் கட்டைக்கு அப்பால் இருந்த பெட்டியில் வீசிவிட்டு உள்ளே போனான். வரும்போது அவன் கையில் குவாட்டர் பாட்டில்கள் இருந்தன.

   மஞ்சள் சட்டையில் இருந்தவன் அதை வாங்கி லாகவமாய் பேன்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். அவர்கள் முகம் திருப்தியாய் இருந்தது.

   அந்த இளைஞன் தொடர்ந்து கோழிக்கறியை வெட்ட ஆரம்பித்தான்.

   அதே நேரம் போலீஸ் ஜீப் ஒன்று கடை வாசலில் வந்து நின்றது. அவன் தன்னிடமிருந்து நழுவிய இயல்பு நிலையைத் தாவிப் பற்றிக் கொண்டான்.

   இரண்டு போலீஸார் இறங்கி வந்தனர். “டேய் இங்க சரக்கு விக்கறது நீதானே?” என்றார் ஒருவர். அவன் ஒன்றும் புரியாத பாவனையில் அவரைப் பார்த்தான். போலீஸார் உள்ளே போக ஆரம்பித்ததும், “சார் சார், ஸ்டேஷனுக்கு கரெக்டா காசு கொடுத்துகிட்டுதான் இருக்கோம்” என்றான் அவசரமாக.

   கார்த்திக் எனப் பெயர் தரித்திருந்த போலீஸ்காரர் அவனை நெட்டித் தள்ளினார். இன்னும் இரண்டு போலீஸார் உள்ளே போயினர்.கடை வாசல் அசாதாரணத் தன்மையடைந்தது. கொத்துக் கொத்தாய் கால்கள் அங்கே நிற்க ஆரம்பித்தன. உள்ளே இருந்து பெட்டிநிறைய மது பாட்டில்களை ஒரு போலீஸ்காரர் எடுத்து வந்தார். அடுத்து வந்தவர் இன்னொரு பெட்டி, அடுத்து, அடுத்து... கூட்டம் சலசலத்தபடி நின்றது. அந்த இளைஞன் அப்படியே நின்றான்.

   ஜீப் மதுப்பெட்டிகளால் நிறைந்தது.

   கார்த்திக் என்ற போலீஸ்காரர் அவனை ‘ஜீப்புல ஏறு’ என்றார். அவன் அப்படியே நின்றான். இன்னொருவர் அவன் பிடரியில் கை வைத்து ஜீப்பை நோக்கி நெட்டித் தள்ளினார்.

   ‘சார் சார்’ எனக் கத்திக்கொண்டே பைக்கில் வந்தார் ஏழுமலை. அவசரமாக ஸ்டாண்டு போட்டு வண்டியை நிறுத்தினார். அசட்டுச் சிரிப்பால் அசாதாரண சம்பவங்களைக் கட்டுப்படுத்திவிட முடியும் என நினைப்பவர் போல மெல்லிய சிரிப்போடு பேசினார். “சார் நீங்க இங்க ஸ்டேஷன்ல கேளுங்க, இனிமே விக்க வேணாம்னா விட்டுர்றோம்” என்றார். அந்த இளவயது போலீஸ் “யோவ் யாருய்யா நீ?” என்றான்.

   “சார் நான்தான் இந்தக் கடை முதலாளி. இவன் என் பையன். காலேஜ் படிக்கிறான். அவனை விட்டுருங்க. நான் வர்றேன். என்னைக் கூட்டிக்கிட்டுப் போங்க” என்றார். அவர்கள் ‘ஸ்டேஷனுக்கு வா’ என்றுவிட்டு அவர் மகனை வண்டியில் ஏறச் சொன்னார்கள். ஏழுமலை “சரவணா, நீ போ, நான் பின்னாடியே வர்றேன்” என்றார். சரவணனை ஏற்றிக்கொண்டு ஜீப் கிளம்பியது. கூட்டம் மெள்ளக் களைய ஆரம்பித்தது.

   ஏழுமலை வெட்டிய கறியை அள்ளி உள்ளே போட்டுவிட்டு, ஷட்டரை இழுத்துப் பூட்டினார். பைக்கை எடுத்துக்கொண்டு ஸ்டேஷனுக்குப் போனார்.

   போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்டு உள்ளே இருந்த பாதாம் மரத்தடியில் ஜீப் நின்றது. ஏழுமலை பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே போனார்.

   போலீஸ்காரர் பாலன், “வாங்க சார், என்ன இவ்வளவு தூரம்?” என்றார். ஏழுமலைக்கு ரத்தம் சூடேறியது. “சார் என்ன இது?” என்றார். பாலன் எதுவும் பேச வேண்டாம் என்பதுபோல அவர் கையைப் பிடித்து அழுத்தினார். 

   “ஒண்ணும் பயப்பட வேண்டாம். வேற யாரையாவது ஏற்பாடு பண்ணுங்க. கேஸ் எழுதித்தான் ஆவணும். பெட்டிசன் மேல பெட்டிசன் போய்க்கிட்டிருக்கு. வேற வழியில்ல’’ என்றார்.

   ஏழுமலை சலிப்பாய், “சரி என்னைக் கொண்டு போய் உள்ள வச்சுக்குங்க. நாலு ஜனங்க இருக்கிற கடைவீதியில் இப்படித்தான் காலேஜ் படிக்கிற பையனை ஜீப்ல ஏத்திக் கூட்டி வர்றதா?” என்றார்.

   “காலேஜ் பையனுக்குக் கறிக்கடையில என்ன வேலை? அதுவும் சரக்கு எடுத்துக் கொடுத்துகிட்டு இருந்தா போலீஸ் பிடிக்க மாட்டாங்களா, ஏம்பா?” என்றார் சரவணனைப் பார்த்து.

   அவன் எதுவும் பேசவில்லை. ஜன்னல் வழியே பஸ் போகும் சாலையையே பார்த்துக் கொண்டிருந்தான். ரெய்டுக்கு வந்த போலீஸார், இதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல உட்கார்ந்திருந்தார்கள்.

   “சரி இப்ப என்ன, கேஸ் போட்டுதான் ஆகணும். ஒருத்தரை உள்ள தள்ளிதான் ஆகணும், அவ்வளவுதானே. எம்பேர்ல கேஸ் எழுதிக்கங்க. சரவணா நீ கௌம்பு” என்றார்.

   பாலன் “அட நில்லுப்பா, சும்மா பொரியறியே. நீ உள்ள போயிட்டா பதினைஞ்சு நாளைக்குக் கடைய யார் நடத்துவா? நீ பேசாம இரு. ஆளு யாரையாவது ரெடி பண்ணிக்கலாம்” என்றார் பாலன்.

   “டீ சாப்பிடறீங்களா?” என்று கேட்டார். இருவரும் மௌனமாக இருந்தனர். “யாரைப் போய் நான் இதுக்குப் பிடிச்சுக்கிட்டு வருவேன்?” என்றார் ஏழுமலை.

   “நீ இந்த ஃபீல்டுக்குப் புதுசு அதான் ஒண்ணும் தெரியலை” எனச் சலித்துக்கொண்டார். “உங்க கடையில் கறி வெட்டிகிட்டு இருந்தானே செவப்பா ஒரு ஆளு. கொஞ்சம் லூசு மாதிரி இருப்பானே, அவன் எங்க?” என்றார்.

   “அவனை நிறுத்திட்டோம். திருட்டுப் பூனை மாதிரி எப்பப் பார்த்தாலும் சரக்க எடுத்து குடிச்சுக்கிட்டே இருந்தான்” என்றார் ஏழுமலை.

   அப்போது ஓர் இளைஞன் உள்ளே வேகமாக வந்தான். ஏழுமலை அவனைப் பார்த்து ‘இவன் எங்கே இங்க வந்தான்’ என யோசித்தார். அவன் நேராக அவரிடம் வந்து, “என்ன மாமா நீங்க. இதுக்குப் போய் கவலைப்படலாமா? நான் இருக்கேன் மாமா. உங்களை யாரும் ஒண்ணும் பண்ண முடியாது” என்றான்.

   ஏழுமலை அவனைப் பார்த்துக் கும்பிட்டு “தம்பி போயிடு” என்றார்.

   “மாமா, சரவணன் என் ஃப்ரெண்டு மாமா. அவன இப்படி விட்டுட்டு நான் போயிடுவேன்னு நினைச்சீங்களா? முடியாது மாமா” என்றான்.

   பாலன் “நீ அந்த ரியல் எஸ்டேட்காரர் மகேந்திரன் பையன்தானே, உம்பேர் என்ன?” என்றார்.

   “ஆமா சார். சரவணன் என் உயிர் நண்பன். அவனை விட்டுருங்க. என் உயிரை வேணா எடுத்துக்குங்க” என்றான்.

   “சின்ன வயசா இருக்கு. இப்ப இருந்தே இந்த லெவல்ல இருந்தா நீ எல்லாம் எதுக்குடா ஆகப் போற?” எனச் சிரித்தார்.

   அவன் “சார், என்னை ஜெயிலுக்கு அனுப்புங்க. நான் போறேன். என் நண்பன் அவனை விட்டுருங்க” என்றான்.

   பாலன் ஏழுமலையைப் பார்த்து, ‘தானா வந்து மாட்டுது பாத்தியா?’ என்பது போலச் சிரித்தார்.  ஏழுமலை, “தம்பி நீ வீட்டுக்குப் போ. அம்மா வந்தா என்னைத்தான் கண்டபடி பேசும்”  என்றார்.

   “அம்மா வந்துட்டுப் போறாங்க மாமா. அதுக்காக என் உயிர் நண்பனை விட்டுட்டு நான் போயிடுவேனா?” என்றான். ஏழுமலை ‘இதென்னடா ரோதனை’ என முணுமுணுத்துக் கொண்டார்.

   “நீங்க ஏன் பயப்படறீங்க? அறியாப் பையன். ஆறுமாசம் ஜெயில்ல இருந்தாலும் தெரியாது. பதினைஞ்சு நாள் விளையாட்டு மாதிரி இருந்துட்டு வந்துருவான். பேசாம இவனையே அனுப்புங்க” என்றார்.

   “சார், அவன் ஒரு பைத்தியக்காரன். அவங்கம்மா வந்து கேட்டா நான் என்ன பதில் சொல்றது? அதெல்லாம் வேணாம். ஏய் லோகு நீ போடா வீட்டுக்கு” எனக் கத்தினார்.

   அவன் அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்து கொண்டான். “சார், மாமா அப்படித்தான் பேசுவாரு. அவருக்கு எம்மேல பாசம் அதிகம். நீங்க கேஸ் ஃபைல் பண்ணுங்க. நான் கையெழுத்துப் போடறேன். மாமா நீங்க ஏன் கவலைப்படறீங்க? என் நண்பனுக்காக நான் ஜெயிலுக்குப் போக மாட்டேனா?” என்றான்.

   பாலன் ஏழுமலையிடம், “நீ போய் உட்காருப்பா” என்றுவிட்டு மளமளவென கேஸ் எழுத ஆரம்பித்தார்.  எழுதி முடித்துவிட்டு, “சரி தம்பி, வண்டியில ஏறு” என்றார். இவர்களைப் பார்த்து “நீங்க  போங்க” என்றார்.

   லோகு ஓடிப்போய் ஜீப்பில் ஏறி உட்கார்ந்து கொண்டான். ஏழுமலை பாலனிடம் “சார் அந்த சரக்கு..?” என இழுத்தார். “கஷ்டம்தான். அதப்பத்தி நினைச்சுக்கிட்டு இருக்காதீங்க. போய் ஆக வேண்டியதைப் பாருங்க” என்றார்.

   “சார், ஐம்பதாயிரம் முதல் போட்டு வாங்கி வச்சிருந்தேன். இன்னும் ஒரு பெட்டிகூட ஓடலை” எனறார். போலீஸ்காரர்கள் யாரும் அதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

   ரெய்டு வந்தவர்கள் வண்டியில் ஏறிக்கொள்ள ஜீப் ஸ்டேஷனை விட்டு வெளியே நகர்ந்தது.

   ஸ்டேஷன் வாசலில் குழுமியிருந்தவர்கள் ‘ஏமாந்தவன புடிச்சி ஜெயிலுக்கு அனுப்பிட்டாங்க பாத்தியா?’ என, இவர் காதில் விழட்டும் என்பது போலப் பேசினார்கள்.

   ஏழுமலைக்கு திக்கென்றிருந்தது. லோகுவின் அம்மா நீலாவிடம் என்ன சொல்வது?

   ஏழுமலை முதலில் கோழிக் கறிக்கடைதான் வைத்திருந்தார். ஊரெல்லாம் சில்லி சிக்கன் கடைகள் புற்றீசல்களைப் போல முளைக்க ஆரம்பித்தன. அவற்றின் சுவை சரியாய் இல்லை என அவர் யோசித்துக்கொண்டே இருந்தார். பிறகு கறிக்கடையிலேயே முன்னால் இருந்த ஹைவே இடத்தில் சில்லி சிக்கன் கடை போட முடிவு செய்தார். கடைக்கு அவரே எதிர்பார்க்காத அளவுக்கு வரவேற்பு இருந்தது.

   சரவணன் சில்லி சிக்கன் பொரிக்கும் முறையைக் கற்றுக்கொண்டான்.  சாயந்திரம் கல்லூரி விட்டு வந்ததும் கறிக்கடையில் நின்று சில்லி போடுவது குறித்து அவன் கர்வம் அடைந்தான். அவனைப் போல் பதமாய் சில்லி கலக்குபவர்கள் அந்த வட்டாரத்திலேயே இல்லை. ஏன், சேலம் வட்டாரத்திலேயே இல்லை என்று அவன் நினைத்தான்.

   உப்பு, காரம் எல்லாம் கோடு போட்டு நிறுத்தியதைப்போல அத்தனை கச்சிதமாய் இருக்கும். கறியை எடுத்தால், எண்ணெய் மின்னாமல், பஞ்சுபோல வெந்திருக்கும். அத்தனை கச்சிதமாய் அனல் வைத்து, கறியை எண்ணெயில் பொரிப்பான். அவனுடைய சில்லிக்கு அங்கே ஒரு ரசிகர் கூட்டமே இருந்தது. சின்ன ஊர் என்பதால்தான் தன்னை அவ்வளவாக உலகுக்குத் தெரியவில்லை என்பது அவனுடைய எண்ணம். அது உண்மையாகக் கூட இருக்கலாம்.

   முதலில் கோழிக்கறி மற்றும் சில்லிக் கடையாக இருந்தது, பின் சரக்கு கிடைக்கும் இடமாக மாறியது மிக வேடிக்கையானது. அவன் அப்பா ஏழுமலை அதற்கு முன், போதையில் தள்ளாடிக் கொண்டு வருபவர்களைக் கடைக்கு வெளியிலேயே நிறுத்தி அனுப்பிவிடுவார். அவர்தான் இப்போது, பைக்கில் போய் பெட்டி பெட்டியாய் சரக்கு வாங்கிக்கொண்டு வருகிறார்.

   கோழிக்கறி வெட்டுபவன், சரக்கு விற்பவன் மற்றும் கல்லூரி மாணவன் என்ற இந்தக் கூட்டுச் சித்திரம் சரவணனுக்கு மிக வசீகரமாய் இருந்தது.

   லோகு பார்க்க பணக்காரவீட்டுப் பையன் மாதிரி இருப்பான். ஒரு காலத்தில் அது உண்மைதான். ஆனால் இப்போது இல்லை. அவன் அப்பா மகேந்திரன் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர். அந்த வட்டாரத்தில் இருக்கும் பிரமாண்டமான பள்ளிக்கு அவர்தான் நிலம் வாங்கிக் கொடுத்தார். அந்த ஒரு வியாபாரமே அவரை எங்கோ கொண்டு போனது. தினம் தினம் பத்து கார்களாவது அவரைத் தேடி வந்தன.

    ஒரே மகன் லோகநாதனை அவர் இடம் வாங்கிக் கொடுத்த பள்ளியிலேயே படிக்க வைத்தார். பள்ளி நிர்வாகம் அவரிடம் பணம் எதுவும் வாங்கவில்லை.

   லோகுவுக்குப் படிக்க வேண்டும் என்ற எண்ணமே வரவில்லை. உள்ளூர் மாணவனாய் இருந்தாலும் பள்ளி ஹாஸ்டலில்தான் தங்க வேண்டும் என்பது அந்தப் பள்ளியின் சட்டம். எனவே, லோகு அங்கே தங்கினான். ஹாஸ்டலில் அரசுத் தேர்வு எழுதும் மாணவர்களை நான்கு மணிக்கே படிக்க எழுப்பி விடுவார்கள். பத்தாம் வகுப்பு படித்த இவனால் அந்த நேரத்துக்கு எழ முடியவில்லை. காவலாளியைப் பச்சை பச்சையாய்த் திட்டினான். அவர் கோபப்படாமல், கடமை தவறாமல் தினம் தினம் அதிகாலை நாலு மணிக்கு அவனை எழுப்பி விட்டுக்கொண்டே இருந்தார். கோபப்பட்டு, புறப்பட்டு வீட்டுக்கு வந்துவிட்டான்.

   மகேந்திரன் ஏழையாய் இருந்து பணக்காரர் ஆனவர். லோகுக்கு ஏழ்மையை அவ்வளவாய்த் தெரியாது. பணக்காரப் பள்ளிக்கூடத்தில் படித்ததால் பணக்காரச் செலவுகளைத் தெரிந்து வைத்திருந்தான்.

   பத்தாயிரம் இருபதாயிரம் என அப்பாவிடம் பணத்தை வாங்கிக்கொண்டு ஊர் சுற்றினான். பெங்களூரு, மும்பை, டெல்லி எனத் தனியாகப் போய்விட்டு வந்தான். நகரங்களில் உள்ள பிரபலமான மது விடுதிகளில் பணத்தைத் தண்ணீராய் செலவு செய்தான்.

   அவனுடைய பணத் தேவை பிரமாண்டமாய் எழுந்தது. மகேந்திரன் பயந்துபோனார். இந்த அளவுக்குப் போனால் சொத்து பெருங்காயம் மாதிரி கரைந்துபோகுமே என, மகனைக் கண்டிக்க முயன்றார். ஆனால் நிலைமை தலைக்கு மேலே வெள்ளம் போவதுபோலப் போய்விட்டது. அவருடைய கண்டிப்புகளை அவன் ஒரு பாமரத் தகப்பனின் பத்தாம் பசலித்தனமான புலம்பல்கள் என்பதுபோலப் பார்த்தான்.

   மகனின் எதிர்காலம் பற்றிய ஓயாத பயம் அவரைப் பக்கவாத நோயில் தள்ளியது. சென்னையில் பிரபலமான மருத்துவமனையில் வைத்து வைத்தியம் பார்த்தார்கள். இருந்த நிலங்கள் எல்லாவற்றையும் நீலா மின்னல் வேகத்தில் விற்றாள். எல்லாம் எதிர்காலக் கணிப்பில் ஊர் ஓரத்தில் வாங்கப்பட்டவை. பத்து லட்சம், ஐந்து லட்சம் என அடிமாட்டு விலைக்குத்தான் விற்றன.

   ஒரு மாதம் மருத்துவமனையில் வைத்திருந்ததில், பணமெல்லாம் மாயமாகிவிட்டது. எவ்வளவு செலவானது என அவள் கணக்குப் பார்க்க விரும்பவில்லை. இப்போதுகூட அவளுக்கு அந்தக் கணக்கு என்னவென்று தெரியாது. பக்கவாதம் கொஞ்சம்தான் குணமான மாதிரி தெரிந்தது. தூக்கவே முடியாமல் இருந்த வலதுகையைக் கொஞ்சம் தூக்கினார். மற்றபடி  எந்த முன்னேற்றமும் இல்லை. எல்லா வைத்தியமும் செய்தாகிவிட்டது. இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என டாக்டர்கள் கை விரித்தனர்.

   கணவரை வீட்டில் கொண்டு வந்து வைத்துக் கொண்டாள் நீலா.  லோகுவுக்கு முன்புபோல் கையில் பண நடமாட்டம் இல்லை என்பது சகிக்க முடியாததாய் இருந்தது. அப்பா இவனைப் பழிவாங்க வேண்டும் என வேண்டுமென்றே நோயில் விழுந்ததைப்போல நினைத்துக் கொண்டான். அம்மா இல்லாதபோது, படுக்கையருகில் நின்றுகொண்டு வாய்க்கு வந்தபடி திட்டினான். பீ மூத்திரம் எல்லாம் நீலாதான் அள்ளினாள்.

   ஊரிலேயே பெரிய வீடாய்க் கட்ட வேண்டும் என்ற கனவில் மகேந்திரன் சொந்த வீடு கட்டுவதைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தார். வீடு கட்ட நேரம் கூடி வரவில்லை. ஸ்கூல் நிலம் விற்ற கமிஷனில் பெரிய வீட்டுக்குக் குடி மாறினார். கையில் பணம் புரண்டபோது எதுவும் தெரியவில்லை. இப்போது அவ்வளவு பெரிய வீட்டுக்கு வாடகை கொடுக்க சிரமமாய் இருந்தது. நீலா சிறிதாக வீடு பார்த்தாள்.  வீட்டில் இருந்த பொருள்கள் எல்லாம் கடைக்குப் போக ஆரம்பித்தன. “தம்பி எங்கியாவது வேலைக்குப் போகலாமில்ல” என மெள்ள மகனிடம் கேட்டாள். அவன் அதெல்லாம் முடியாது என மறுத்துவிட்டான்.

   “அப்பாவைப்போல நீயும் நிலம் விக்கிற தொழில் செய்யலாமே? கொஞ்சம் நாலு இடம் அலைஞ்சு திரிஞ்சு தொழிலைக் கத்துக்கிட்டா பின்னாடி நல்லா இருக்கலாமே” எனப் பக்குவமாய் எடுத்துச் சொன்னாள்.

   “எனக்கு அந்த மாதிரியெல்லாம் பொய் பேசத் தெரியாது” என்றான் அவன்.

   நீலாவுக்குக் கோபம் வந்தது. “அப்போ என்னதான் செய்வே? படிக்கவும் இல்ல. அப்பாவோட வேலையையும் கையில எடுத்துக்க மாட்டே. வேலைக்கும் போக மாட்டே. வயித்துக்கு என்ன சாணியவா திங்க முடியும்?” என்றாள்.

   அவளுக்கு மனம் உடைந்துவிட்டது. கதறலான அழுகை வெடித்துக்கொண்டு கிளம்பியது. அவள் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தவள். அவள் அப்பா ஒரு ஜவுளி வியாபாரி. இன்றைக்கும் அவள் அண்ணன்கள் திருப்பத்தூரில் ஜவுளி வியாபாரம் செய்துகொண்டு செல்வாக்காய் இருக்கிறார்கள். தன் விதி இப்படி ஆகிவிட்டதே என்று அன்று முழுவதும் அழுது தீர்த்தாள்.

   லோகு ஒன்றும் பேசாமல் அங்கிருந்து வெளியேறினான். வீட்டை விட்டால் அவன் நேராக வருவது சரவணன் கோழிக் கடைக்குத்தான். பெரும்பாலும் அவன் கோழிக் கடையில்தான் இருந்தான். கலகலப்பாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு அனைவருக்கும் எரிச்சலூட்டுவதுதான் அவனுடைய பேச்சு முறை.

   சரவணனை மூச்சுக்கு முந்நூறு தடவை ‘நண்பா நண்பா’ எனக் கூப்பிட்டு அவன் பொறுமையை சோதித்தான். என்றாவது ஒருநாள் அவனைக் கறி வெட்டும் கத்தியாலேயே ஒரு காட்டு காட்டிவிட வேண்டும் என சரவணன் நினைத்தான். கோழிக் கடையையே சுற்றி சுற்றி வருவதும், சரக்கு வாங்க வருபவர்களிடம் வலியச் சென்று பெரிய இடத்துப் பையன் மாதிரி பேசி கட்டிங் தேற்றுவது அவனுடைய அன்றாட வேலை. அது நன்றாகவே போய்க் கொண்டிருந்தது.

   நீலா நூல் மில்லுக்கு வேலைக்குப் போனாள். பெற்ற கடனுக்கு, மகனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்துக் கல்யாணம் செய்து வைத்துவிட்டால் பரவாயில்லை என்று நினைத்தாள். ஏழை பாழை, வயிற்றுக்குச் சோறில்லாதது, உட்கார வீடில்லாததாய் இருந்தாலும் பரவாயில்லை, கொஞ்சம் லட்சணமாய் இருந்தால் போதும் எனப் பார்த்தாள். ஆனால், எந்த வீட்டிலும் இவனுக்குப் பெண் கொடுக்க மறுத்துவிட்டார்கள்.

   நீலாவுக்கு மகனை நினைத்தாலே ஆத்திரமாய் வந்தது. சாயந்திரம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் படுத்து விடுவாள். கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு எழுந்து மகனைப் பார்க்க கோழிக்கடைப் பக்கம் வருவாள். “இங்க என்னடா பண்ற? வா வீட்டுக்கு” என்பாள். அவன் “போம்மா வர்றேன். போம்மா வர்றேன்” என்று திரும்பத் திரும்பச் சொல்லி, அவளை அனுப்பிவிடுவான்.

   காலை, மதியம், மாலை வரை சரக்கு  கிடைக்கவில்லை என்றால், நீலா வருவதற்குள் வீட்டுக்குப் போய், பித்தளைப் பாத்திரம் எதையாவது தூக்கிக்கொண்டு வந்துவிடுவான். பழைய இரும்புக் கடையில் போட்டுவிட்டுக் குடிக்க ஆரம்பித்தால், இரண்டு நாள்கள் காலம் வெள்ளைக் குதிரையில் மேகங்களுக்கு இடையே போகும்.

   லோகு ஜெயிலுக்குப் போனதும் கோழிக்கடை வெறிச்சென இருந்தது. எந்நேரமும் நண்பா நண்பா எனச் சுற்றி வரும் அவன் இல்லாமல் கடை அடையாளத்தை இழந்திருந்தது. சரவணன் ஜெயிலுக்குப் போயிருந்தால் அவன் எதிர்காலம் என்ன ஆகியிருக்கும் என்று நினைக்கும்போதே ஏழுமலைக்கு என்னவோ செய்தது.

   நீலா கடை வாசலில் நின்றுகொண்டு அழுதாள். “தகப்பன் இல்லாத பையன்.கேக்கறதுக்கு யாரு இருக்கான்னுதானே எம்பையனை ஜெயிலுக்கு அனுப்பிட்டே. இனிமே யாரு அவனுக்குப் பொண்ணு தருவா? எங்க அவன் வேலைக்குப் போவான். உனக்கு உம்பையனைப் போலத்தானே எனக்கு எம்பையனும். அவனை இப்படி அழிச்சிட்டியே” என ஒப்பாரி வைத்தாள்.

   ஏழுமலைக்கு முகத்தை எங்கே வைத்துக் கொள்வது என்றே தெரியவில்லை. “நீலா உம்பையனை நான் வேறையா நினைக்கலை. அவனுக்கு இன்னொரு கோழிக்கடை வேணும் னாலும் வெச்சுத் தர்றேன். நான் உம்பையனுக்கு துரோகம் நினைக்கலை. அவனாவேதான் வந்தான். நானும் எவ்வளவோ சொன்னேன்” என வினயமாய் சொன்னார்.

   அவர் கூனிக்குறுகிச் சொன்ன விதத்தைப் பார்த்து நீலாவுக்கு என்னவோ போல் இருந்தது. “என்னவோ அவன் தலையெழுத்து, என் தலையெழுத்து. அவங்க அப்பா அவனை எப்படிப் படிக்க வெச்சார். எப்படித் தொழில் பண்ணினார். அப்பேர்ப்பட்ட குடும்பம் கந்தற சிந்தறையா போயிடுச்சி. இனி என்ன போனா என்ன, இருந்தா என்ன?” எனப் புலம்பிக் கொண்டே கூந்தலை அள்ளி முடிந்தபடி போய்விட்டாள்.

   சரவணனுக்கு அதே நினைவாய் இருந்தது. விளையாட்டுப்போல ஜெயிலுக்குப் போய் விட்டான். ஒருவேளை அவன் இல்லாவிட்டால், நான் அல்லது அப்பா யாராவது ஒருவர் போயிருக்க வேண்டும். அதை நினைக்கும் போதே நெகிழ்ச்சியாய் இருந்தது. லோகு மேல் இனம் புரியாத பாசம் ஏற்பட்டது.

   அப்பாவும் மகனும் லோகுவை ஜாமீனில் எடுக்க, தவிதாயப்பட்டார்கள். கை முதல் எல்லாம் போலீசார் கொண்டுபோய்விட்டனர். பலத்த அடிதான். ஆனாலும் லோகுவை வெளியே கொண்டு வர வேண்டியது அவர்கள் கடமை அல்லவா? அதைத் தட்டிக் கழிக்க முடியுமா? பணம் புரட்டிக்கொண்டு, முன்சீப்பிடமும் தாசில்தார் அலுவலகத்திலும் நடையாய் நடந்து கையெழுத்து வாங்கி, கோர்ட்டில் சமர்ப்பிக்க ஒருவாரம் ஆகிவிட்டது. அதன்பின் அப்படி இப்படி என மேலும் ஒரு வாரம் கழித்துதான் வெளியே விட்டார்கள்.

   லோகு வெளியே வரும் நாளில் கடையை மூடிவிட்டு வாடகை கார் எடுத்துக்கொண்டு சேலம் சென்ட்ரல் ஜெயிலுக்கு இருவரும் போனார்கள்.

   லோகு சிரித்துக்கொண்டே வெளியே வந்தான். அவனைப் பார்த்தபோது சரவணனே ஜெயிலில் இருந்து வருவதைப் போல ஏழுமலைக்கு வாஞ்சை ஏற்பட்டது. ‘வாப்பா’ எனக் கையைப் பிடித்துக் கூட்டிக்கொண்டு வந்தார். சரவணன் சிரித்தபடி அவன் கைகளைப் பற்றிக்கொண்டான். லோகு அவனைப் பார்த்து  ஆழ்ந்து சிரித்தான். அதில் தான் எவ்வளவு பிணைப்பு. அவன் முன்போல இல்லை. ஏதோ பெரிய யூனிவர்சிட்டியில் பட்டம் பெற்றவனைப்போல நிதானமாகவும் பக்குவமாகவும் காணப்பட்டான். வண்டி நேராக செல்வி மெஸ்ஸுக்குப் போனது. ‘சாப்பிடு சாப்பிடு’ என வரிசையாய்க் கறிவகைகளை வரவழைத்து அவனைச் சாப்பிட வைத்தார்கள்.

   ஊருக்கு வந்ததும் கடையைத் திறந்து உள்ளறைக்குக் கூட்டிக்கொண்டு போனார் ஏழுமலை. “உனக்கு எவ்வளவு வேணுமோ குடிச்சிக்க லோகு’’ என்றார்.

   ஜெயிலிலிருந்து வெளியே வந்து இரண்டு நாள்கள் ஆகியும் அவன் வீட்டுக்குப் போகவில்லை. நீலா வந்து வந்து பார்த்தாள். ‘வந்துருவாம் போம்மா’ என அனுப்பிவிட்டார்கள்.

   லோகு கடைக்கு எப்போது வேண்டுமானாலும் வருவான். எவ்வளவு வேண்டுமானாலும் குடிப்பான். அப்பாவும் மகனும் எதுவும் கேட்க மாட்டார்கள். நீலாவுக்கு பயமாய் இருந்தது.

   “அண்ணே, நீங்க எதாவது செய்யணும்னு நெனைச்சா வேற எதாவது செய்ங்க. இப்படி அவனைக் குடிக்க வெச்சு அழிச்சிறாதீங்க” என அழுதாள்.

   ஏழுமலை சிரித்துக்கொண்டே “நான் தராட்டாலும் அவன் இப்படித்தான் கண்டவங்க கிட்ட வாங்கிக் குடிக்கப் போறான். அந்தப் பிரச்னை இல்லாம நானே கொடுத்திடறேன். அவ்வளவுதான்” என்றார்.

   முதலில் இது ஒரு பிரச்னையே இல்லை என்றுதான் தோன்றியது. ஆனால் போகப் போக அது யானையைக் கட்டித் தீனி போடுவது போல முடியாத காரியம் எனப் பட்டது. என்ன செய்வது என ஏழுமலை தீவிரமாக யோசித்தார். லோகு கல்மிஷமில்லாமல் ஜீப் ஏறி ஜெயிலுக்குப் போன காட்சி அவர் மனதுக்குள் திரும்பத் திரும்ப ஓடிக் கொண்டே இருந்தது.

   கடைசியாக இப்படி முடிவு செய்தார். தினமும் ஒரு குவாட்டர் மட்டும் இலவசமாகக் கொடுத்துவிடுவது. லோகு எதுவும் பேசவில்லை. இரண்டு நாள் கம்மென்று வாங்கிக்கொண்டான். பிறகு “நான் உங்களுக்காக ஜெயிலுக்குப் போனேன்” என்றான். “அங்கே வெறும் தரையில் படுத்தேன். வாயில் வைக்க முடியாத மோட்டா அரிசிச்சோற்றைத் தின்னேன். நான் எப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்தவன் தெரியுமா? எங்க அப்பா இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா?” என விதவிதமாகப் பேசினான்.  அவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் ஏழுமலையின் நெஞ்சில் கத்தி போல் இறங்கியது. அவமானத்தில் கூனிக் குறுகிப்போனார். பிறகு இரண்டு நாள் அவனுக்கு வேண்டிய சரக்கைக் கொடுத்தார். அதற்குமேல் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மீண்டும், அவனுக்கு ஒரு குவாட்டர்தான் எனச் சொல்லிவிட்டார்.

   லோகு தினமும் கடைக்கு முன்னாலேயே எப்போதும் உட்கார்ந்திருந்துகொண்டு, வருகிறவர் போகிறவர்களிடம் எல்லாம் நியாயம் சொன்னான். “என் வாழ்க்கையவே தியாகம் செஞ்சேன். இப்ப எதுக்கும் வழியில்லாம அநாதையா நிக்கறேன்” என்றான். ஏழுமலைக்கு இப்போது அவனுடைய பேச்சு அவமானமாகத் தெரியவில்லை. ஏதோ நாய் ஒன்று வாசலில் சதா குரைத்துக்கொண்டு இருப்பதைப்போல நினைத்துக் கொண்டார்.

   அப்பாவுக்கும் மகனுக்கும் இவனை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று தெரியவில்லை. பேசாமல் நாமே யாராவது ஜெயிலுக்குப் போய்விட்டு வந்திருக்கலாம் என்று இருவருக்குமே தோன்றியது.

   அன்று ஞாயிற்றுக்கிழமை. விடியற் காலை நேரமாக வந்து சரவணன்தான் கடையைத் திறந்தான். எங்கோ சந்துக்குள் ஒளிந்தபடி பார்த்துக் கொண்டிருந்தவன் போல உடனே அங்கே வந்தான் லோகு. விடுவிடுவென உள்ளே போய் ஒரு குவாட்டர் பாட்டிலை எடுத்து பேன்ட் பாக்கெட்டில் விட்டுக்கொண்டு வந்தான். 

   சரவணனுக்குக் கண் மண் தெரியாத கோபம் வந்தது என்றாலும் கட்டுப்படுத்திக்கொண்டு, லோகு ஏதாவது சொல்லுவான் என எதிர்பார்த்தான். ஆனால், அவன் சிரித்துக்கொண்டே கடையை விட்டு வெளியே போகப் பார்த்தான். சரவணன் அவனை அழைத்து “பாட்டிலுக்குக் காசு கொடு” என்றான்.

   “பணம்தானே, வாங்கிக்கலாம்” என மீண்டும் சிரித்தான் லோகு. சரவணன் மீண்டும் பணம் கேட்டான். லோகு மீண்டும் சிரித்தான். “தம்பி ஞாபகம் இருக்கா? ஜெயிலுக்குப் போக போலீஸ் ஸ்டேஷன்ல காத்திருந்தியே, போயிருந்தா என்ன ஆகியிருக்கும் தெரியுமா? காலேஜ் போயிருப்ப?” என இளக்காரமாகச் சிரித்தான்.

   சரவணன் திட்டிக்கொண்டே கறி வெட்டும் கத்தியை எடுத்துக்கொண்டு அவன் தலையை வெட்டுவதைப் போலப் பாய்ந்தான். லோகுவின் கண்களில் ஒரு கணம் உயிர்பயம் எட்டிப் பார்த்து மறைந்தது.

   “வெட்றயா... வெட்டு” எனச் சிரித்தான். சரவணன் கத்தியை அறை மூலையை நோக்கி வீசினான். பெருஞ்சத்தத்தோடு போய் விழுந்தது கத்தி. வெட்டுக்குத் தயாராய் இருந்த கோழிகள் இறக்கைகளைப் படபடவென அடித்துக் கொண்டன. அவன் செயல் அவனுக்கே நடுக்கமாய் இருந்தது. ஒரு விநாடியில் என்ன செய்யத் துணிந்துவிட்டேன். லோகு தலை வெட்டப்பட்டு ரத்தக்கோலமாய்க் கிடக்கும் காட்சி அவன் மனதுக்குள் துல்லியமாய் விரிந்தது. அதைப் பார்த்து அவனுக்கு உடல் சூடானது. கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும் என நினைத்தான். மத்தியானமெல்லாம் ஜுரம் கொதித்தது. ஏழுமலை லோகுவைத் தேடிக் கொண்டு வீட்டுக்குப் போனார். நீலா “நீயெல்லாம் ஒரு மனுசனா? உம் மகன் கத்தியில வெட்ட வந்தானாமே? நீங்கல்லாம் உருப்பட மாட்டீங்க. நாசமாதான் போவீங்க” என சத்தம் போட்டாள். ஆவேசமாய் லோகு பக்கம் திரும்பி “டேய் நீ ஒரு ஆம்பளையா இருந்தா இவன் கடை வாசலை மிதிக்கக் கூடாது” எனக் கத்தினாள்.

   லோகு ஒருவாரமாய் கடைப்பக்கம் வரவில்லை. மேட்டுக் கடைக்கும் சரக்கு விற்கும் சின்னதுரை வீட்டுக்கும் போய் வந்துகொண்டிருந்தான். அங்கே உட்கார்ந்துகொண்டு சரவணனையும் ஏழுமலையையும் கெட்ட கெட்ட வார்த்தைகளால் நாள்பூரா திட்டிக்கொண்டிருப்பதாய்க் கேள்விப் பட்டார்கள்.

    அன்று ஞாயிற்றுக்கிழமை, ஏற்கெனவே நடந்தது மாதிரியே ஜீப் ஒன்று கடை வாசலில் நின்றது. கடந்த முறை ரெய்டு வந்து இரண்டு மாதம்தான் ஆகியிருந்தது. சரவணன் சோர்வாய் உணர்ந்தான். சத்தமாய்க் காறி, கடைக்கு வெளியே துப்பினான்.  சரியாக அந்தநேரத்தில் லோகு அங்கு வந்தான். போலீஸார் சரக்கை எடுத்துக்கொண்டு போவது, தான்  ஜெயிலுக்குப் போக வேண்டியிருப்பதுகூட சரவணனுக்குப் பெரிதாய்த் தெரியவில்லை. அந்தச் சமயத்தில் லோகு அங்கே நின்றுகொண்டு வஞ்சம் தீர்த்துவிட்ட தோரணையில் சிரித்துக் கொண்டிருந்ததைத்தான் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

   இந்த முறை போலீஸார் ஒரு சம்பிரதாயத்தை நிறைவேற்றுவதைப் போல இயல்பாய் இருந்தார்கள். சரவணனும்கூட இயல்புக்குத் திரும்பிவிட்டான்.

   ஏழுமலை லோகுவின் கையைப் பிடித்துக் கூட்டிக்கொண்டு தள்ளிப் போய், “லோகு, நடந்ததெல்லாம் இருக்கட்டும். போன தடவை மாதிரி இந்தத் தடவையும் நீயே போயிட்டு வந்துடு. இந்த தினம் தினம் சரக்கு தர்றதெல்லாம் வேண்டாம்; அது  சரிப்பட்டு வராது. நான் மொத்தமா ஒரு தொகை அம்மா கிட்ட கொடுத்தர்றேன்” என்றார்.

   லோகு என்னவென்று அர்த்தம் செய்து கொள்ள முடியாத வகையில் சிரித்தவாறே `முடியாது’ என்பதாகத் தலை அசைத்தான்.

   ஏழுமலை மெள்ள மெள்ள கெஞ்சும் தொனிக்கு மாறினார். அவன் ஒரே மாதிரி தலையாட்டிக் கொண்டே அங்கிருந்து நகர ஆரம்பித்தான். அவர் லோகு லோகு என்றார்.

   சரவணன், ஒருவேளை தான் கேட்டால் சம்மதிப்பானோ என நினைத்தவனாய், “லோகு, போன தடவை சொன்னியே, நான் உன்னோட உயிர் நண்பன்னு. இந்த ஒரு தடவை உதவி பண்ணு” என்றான். அவன் வார்த்தைகளில் பழைய சம்பவங்களின் சாயல்கள் உண்மையிலேயே சுத்தமாய் மறைந்துவிட்டது.

   லோகு அவன் இப்படிக் கேட்க வேண்டும் என்பதற்காகவே காத்திருந்தவன் போல உதட்டை மடித்துக் கடித்துக்கொண்டு நடு விரலை நீட்டி ஆபாசமாய் சைகை காட்டினான்.

   சரவணனுக்கு அசிங்கத்தை மிதித்த மாதிரி ஆகிவிட்டது. அவன் பேசாமல் போய் ஜீப்பில் ஏறிக்கொண்டான்.

   ஸ்டேஷனில் போய் இவர்கள் எதுவுமே பேசவில்லை. “போன தடவை வந்தானே அந்தப் பையன் எங்கே?” என்றார் போலீஸ்காரர் பாலன். இவர்கள் எதுவும் பேசவில்லை. “ஏன், சரிப்பட்டு வரலியா?” என்றார்.

   ஏழுமலை தான் ஜெயிலுக்குப் போவதாய் சொன்னார். சரவணன் பிடிவாதமாய் மறுத்துவிட்டு, அவனே ஜெயிலுக்குப் போனான். இன்னும் ஒரே மாதம் இருந்திருந்தால் கல்லூரிப் படிப்பு முடிந்திருக்கும், அதற்குள் இப்படி நடந்துவிட்டது. அதனால் என்ன, படிப்பை முடிச்சிடு என ஏழுமலை எவ்வளவோ தூரம் சொன்னார். ஆனால், சரவணன் காலேஜ் போக ஒரேயடியாய் மறுத்துவிட்டான். ஏழுமலைக்கு அப்போதுதான் இந்தச் சரக்கு வியாபாரத்தை எதற்கு ஆரம்பித்தோம் என இருந்தது. எல்லாம் முட்டாள்தனம் என நினைத்து அழுதார். அழுதுகொண்டே மகனிடம் கெஞ்சினார். “தம்பி, படிப்பை முடிச்சிடு. எதுவா இருந்தாலும் அப்புறம் பாத்துக்கலாம். இப்ப விட்டா ஒரேயடியா விட்டுப்போயிடும். சொன்னா கேளுப்பா” என்றார். சரவணன் அசையவில்லை.

   லோகு மீண்டும் கடைக்கு வரத்தான் செய்தான். மணிக்கணக்காய் கடை வாசலில் உட்கார்ந்து கொண்டு சரக்கு வாங்க வருபவர்களிடம் தொண தொணத்துக் கொண்டிருந்தான். எக்காளமிட்டுச் சிரித்தான். சரவணனோ ஏழுமலையோ எதையுமே கண்டு கொள்ளவில்லை. அனைத்தையும் கடந்த ஞானிகள்போல இருந்தார்கள்.

   அன்று புதன்கிழமை. சரவணன் கடையில் கறி வெட்டிக்கொண்டிருந்தான். லோகு அப்போதுதான் வீட்டிலிருந்து வந்தான். சாலையில் காலை நேரப் பரபரப்பு முடிந்து சோம்பல் படர்ந்திருந்தது.

   லோகு ``நண்பா, ஒரு குவாட்டர் குடேன். காசு அப்புறமா தர்றேன்’’ என்றான். சரவணன் எதுவும் பேசவில்லை. “நண்பா, சரக்கு குடு நண்பா, கையில காசு சுத்தமா இல்லை. யாராவது வந்தாகூட வாங்கித் தந்துடறேன்” என்றான். “நண்பா, அடுத்த தடவை ரெய்டு வந்தா நான் ஜெயிலுக்குப் போறேன் நண்பா. பிராமிஸ்” என்றான். சரவணனின் முகம் இறுகியது. கறி வெட்டுவதை நிறுத்திவிட்டு லோகுவை ஏறிட்டுப் பார்த்தான். லோகு பயந்துவிட்டதைப்போல ஐயோ என்றான். “நண்பா, இப்ப என்ன ஆகிப் போச்சு? நான்கூடத்தான் படிக்கலை. பீஸ் கட்டியிருந்தா அஞ்சு லட்சம் ஆகியிருக்கும் அதையே தூக்கி எறிஞ்சிட்டு வந்தேன். நீ என்னவோ இதுக்குப் போய் இப்படி ஃபீல் பண்றியே நண்பா. வாழ்க்கைல எது வேணா நடக்கும் நண்பா. சரி சரின்னு போயிட்டே இருக்கணும். சரி சரக்கு குடு” என்றான். சரவணன் வெட்டிய கறியை அள்ளித் தராசில் வைத்தான்.

   லோகு மெள்ள கடைக்குள் போனான். சரவணன் டேய் நில்றா என்றான்.  அப்போது சரக்கு வாங்க வந்த ஒரு கும்பல் சட்டென விக்கித்துப் போய் நின்றது. சரவணனிடம் “தம்பி, என்ன ஆச்சு?” என்றார்கள். லோகுவைப் பார்த்து, “இந்தாப்பா, இங்கே என்ன கலாட்டா பண்றியா, வெளிய போப்பா” என்றார்கள்.

   லோகு அவமானப்பட்டுப்போய் நின்றான். என்ன செய்வதென்று தெரியவில்லை. மெள்ள புன்னகைக்க முயன்றான்.

   சரவணன் தாவி வந்து அவன் சட்டையை வளைத்துப் பிடித்தான். பொத்தான்கள் பட் பட்டெனத் தெறித்து விழுந்தன.

   கடைக்கு வந்தவர்கள், இந்தாப்பா தம்பி, என வந்தார்கள். லோகுவின் கையருகே கறிவெட்டும் கத்தி இருந்தது. லோகுவின் கை அதைப் பற்றியது. பிறகு அங்கு ஆடு போலவும் மனிதக் குரல் போலவும் இரண்டும் கலந்த ஓலம் ஒன்று எழுந்தது. சரவணன் மரக்கட்டை மாதிரி நெட்டாக அப்படியே பின்னால் விழுந்தான். தடால் என்ற சத்தம் கொடூரமாய் எழுந்தது. அவன் கழுத்தில் ஆழமாய் வெட்டு விழுந்திருந்தது. அவனிடமிருந்து அலறல் சத்தம் எழுந்தபோதே கடைவீதியில் இருந்து மக்கள் படை படையாய் வர ஆரம்பித்தார்கள்.

   கூட்ட நெரிசலில் கடையே இருண்டு போய்விட்டது. லோகுவின் கண்கள், வெறுமையாகிவிட்ட சரவணனின் கண்களை வெறித்தபடி இருந்தன.

   இருபது ஆண்டுகளுக்குப் பின் அந்த ஊரில் ஒரு கொலை நடந்திருந்தது.
   https://www.vikatan.com
  • By நவீனன்
   அவளது வீடு - சிறுகதை
     நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு...எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ஸ்யாம்  
   'வீடு வாடகைக்கு விடப்படும்’ என்ற விளம்பரத்தைப் பேப்பரில் பார்த்ததும், அதன் தொலைபேசி எண்ணைக் குறித்துக்கொண்டாள் அகல்யா. அலுவலகம் முடிந்து போகும் வழியில், 'அந்த வீட்டைப் பார்த்துவிட வேண்டும்’ என்று நினைத்தபடியே, லன்ச் பாக்ஸையும் குடிநீர் பாட்டிலையும் எடுத்து ஹேண்ட்பேகில் வைத்துக்கொண்டு ஸ்கூட்டியில் கிளம்பினாள்.
   அவள் வேலை செய்யும் ஆடிட்டர் அலுவலகம், மந்தைவெளியில் இருக்கிறது. மறைமலைநகரில் இருந்து கிளம்பி அலுவலகம் போவதற்கு எப்படியும் 1.30 மணி நேரத்துக்கு மேல் ஆகும். 'நேரத்துக்குள் போகாவிட்டால், அரை நாள் சம்பளத்தைப் பிடித்துக்கொள்வார்கள்’ என நினைத்தபடியே சாலையில் செல்லத் தொடங்கினாள். பேப்பர்களில் வெளியாகும் வாடகை வீடு பற்றிய விளம்பரங்களை, அகல்யா தினமும் தவறாமல் படிப்பாள். பல நேரங்களில் விளம்பரத்தில் உள்ள வீட்டுக்கு, நேரிலேயே சென்று விசாரிப்பது அவளது வழக்கம்.
   மறைமலைநகரில், இரண்டு படுக்கைகள் கொண்ட ஃப்ளாட் ஒன்றை லோன் போட்டு வாங்கிக் குடியேறி நான்கு வருடங்கள் கடந்துவிட்டபோதும், அவளுக்குள் வீடு தேடும் ஆசை வடிந்தபாடு இல்லை. திருமணத்தைப் பற்றி கனவு காணத் தொடங்கிய நாட்களிலேயே, வீடு பற்றிய கனவும் அவளுக்குள் உருவாக ஆரம்பித்துவிட்டது. சொந்த வீட்டைப் பற்றி கனவுகொள்ளாத பெண் யார் இருக்கிறார் உலகில்?
   பெண்களுக்கு வீடு என்பது, வெறும் வசிப்பிடம் அல்ல; ஒரு மாயத்தோட்டம். வீட்டுக்குள் போனதும் பெண் உருமாறிவிடுகிறாள். ஆண்களால் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாத விநோதமும் ரகசியமும் சுகந்தமும் வீட்டினுள் இருக்கின்றன. ஆண்கள் வீட்டைப் பயன்படுத்துகிறார்கள்; பெண்கள் வளர்த்தெடுக்கிறார்கள்.

   அகல்யாவின் அப்பா மின்சாரத் துறையில் பணியாற்றியவர் என்பதால், அவள் சிறு வயதில் இருந்தே கவர்ன்மென்ட் குவார்ட்டர்ஸில் தான் வாழ்ந்திருக்கிறாள். பழுப்படைந்து காரை உதிரும் சுவர்களும், மூட முடியாத ஜன்னல்களும், தவளைகள் நுழைந்துவிடும் குளியல் அறையும், புகை போக வழியற்ற சமையல் அறையும் கொண்ட அரசுக் குடியிருப்புகளில் வாழ்வது சகிக்கவே முடியாதது.
   அரசுக் குடியிருப்பைக் கட்டியவன், அது மனிதர்கள் குடியிருப்பதற்கானது என்ற நினைப்பே இல்லாமல் கட்டியிருப்பான் போலும். வீடு என்ற பெயரில் சற்று உயரமான, பெரிய கல்லறையைப் போலத்தான் அவை உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவளுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து, விசாலமான வீட்டில் குடியிருந்ததே இல்லை. லோயர் கேம்ப்பில் குடியிருந்தபோது, அவர்கள் வீட்டுக்குள் அடிக்கடி பாம்பு நுழைந்துவிடும். அம்மா, பயந்து அலறுவாள். மழை பெய்யத் தொடங்கினால், வீட்டுக்குள் தண்ணீர் சொட்டும். உறங்கும் குழந்தைகளின் முகத்தில் தண்ணீர் சொட்டாமல் இருக்க, அவர்களைத் தள்ளிப் படுக்கவைத்துவிட்டு அலுமினியச் சட்டிகளைக் கொண்டுவந்து வைப்பாள்.
   அலுமினியச் சட்டியினுள் மழை பெய்யும் சத்தத்தைக் கேட்டபடியே, அகல்யா பல நாட்கள் படுத்துக்கிடந்திருக்கிறாள். சட்டியின் விளிம்பில் பட்டுத் தெறிக்கும் மழைத்துளி, அவள் கையில் பட்டு சிலிர்ப்பை உண்டாக்கும். அதுபோன்ற நாட்களில், ஒழுகாத அறைகள்கொண்ட பெரிய வீட்டையும், கதகதப்பான படுக்கையையும் பற்றி கனவு காணத் தொடங்குவாள். வீடு பற்றிய கனவு, அவள் கூடவே வளர்ந்துகொண்டிருந்தது.
   ஒழுகும் வீட்டைப் பற்றி அம்மா எவ்வளவு சலித்துக்கொண்டாலும், அப்பா அதைக் கேட்டுக்கொண்டதே இல்லை. அப்பா, தன் வாழ்நாளில் சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ளவே இல்லை. மதுரையில் வீடு வாங்குவதைப் பற்றி அம்மா எத்தனையோ முறை சொல்லியபோதெல்லாம், 'முதுமையில் பூர்வீக கிராமத்தில் உள்ள வீட்டில் போய்த் தங்கிவிடுவோம்’ என்று சொல்லி அப்பா அடக்கிவைத்துவிடுவார்.
   அதன் அவசியமே இல்லாமல், 53 வயதில் அப்பா இறந்துவிட்டார். அம்மா பாடுதான் திண்டாட்டம். அவளுக்கு இப்போது வயது 65. மகள் வீட்டில் வந்து தங்கியிருக்க மாட்டேன் என ஒவ்வொரு மகன் வீடாக அலைந்து அவமானப்பட்டுக் கொண்டிருக்கிறாள். 'வீடு அற்றவர்களுக்கு நிம்மதியான உறக்கம் கிடையாது’ என்பார்கள். அம்மா, இதுவரை ஆழ்ந்து உறங்கியவளே இல்லை. இருட்டில் ஓர் இலை உதிரும் சத்தம் கேட்டால்கூட, சட்டென்று எழுந்துவிடுவாள்.
   அந்தப் பழக்கம் அகல்யாவுக்கும் இப்போது வந்துவிட்டது. யோசித்துப் பார்த்தால், ஹாஸ்டலில் படிக்கும் நாட்களில் மட்டுமே அகல்யா ஆழ்ந்து உறங்கியிருக்கிறாள். அதுவும் அவளது ஹாஸ்டல், மலையின் அடிவாரத்தில் இருந்தது. ஆகவே, காலையில் ஜில்லெனக் காற்றடிக்கும். படுக்கையைவிட்டு அவளால் எழுந்துகொள்ளவே முடியாது.
   அப்போது எல்லாம், 'இதுபோன்ற மலை அடிவாரத்தில்தான் வீடு கட்டிக்கொள்ள வேண்டும்’ என்று நினைத்துக்கொள்வாள். அப்படி நினைக்கத் தொடங்கியதும் அந்த வீடு எப்படி இருக்க வேண்டும், அதன் சுவர்களின் நிறம் என்ன, எந்த மாதிரியான சோபா வாங்கிப் போட வேண்டும் என்றெல்லாம் யோசிப்பாள். மேலும், சமையலறையை, ஹால் சைஸில் விசாலமாகக் கட்ட வேண்டும். அடுப்பின் முன்னால் சுழல் நாற்காலி ஒன்றைப் போட வேண்டும். அப்போதுதான் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் திரும்ப வசதியாக இருக்கும். அந்த அறையில், பெரிய ஜன்னல் கட்டாயமாக இருக்க வேண்டும். பாட்டு கேட்பதற்கு வசதியாக, ரேடியோ ஒன்று வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டுக்குப் பின்னாடியே காய்கறி, கீரைத் தோட்டம் போட்டுக்கொள்ள வேண்டும். இப்படி, அவள் தனது கனவு வீட்டைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டியபடியே ஹாஸ்டல் அறையில் படுத்துக்கிடப்பாள்.
   சில சமயம், 'இது என்ன பைத்தியக்காரத்தனம்?’ என அவளுக்கே தோன்றும். ஆனால், அப்படியான ஒரு வீட்டை தன் வாழ்நாளில் நிச்சயம் உருவாக்க முடியும் என்று அவள் ஆழமாக நம்பினாள்.
   அவளது கனவு, இன்று வரை நிறைவேறவே இல்லை. இப்போது அவள் வீடு வாங்கிவிட்டாள். ஆனால், அது 620 சதுர அடி கொண்ட சிறிய ஃப்ளாட். அவ்வளவுதான் அவளால் பணம் புரட்ட முடிந்தது. அதையாவது வாங்கிவிட்டோமே எனச் சமாதானம் ஆனபோதும், கனவில் உருவாக்கிய வீடு, அவளை ஆறாத ரணம் போல வதைத்தது.
   அகல்யாவுக்குத் திருமணமாகி 21 வருடங்கள் கடந்துவிட்டன. அவளது மூத்த பையன் நந்து, இன்ஜினீரியங் படித்துக்கொண்டிருக்கிறான். இளையவள் சுபத்ரா, இப்போது ஒன்பதாம் வகுப்பில். அடுத்தவன், ஆறாம் வகுப்பு.
   திருமணத்துக்கு முன்பாகவே இரண்டு விஷயங்களில் அகல்யா உறுதியாக இருந்தாள். ஒன்று, அரசு ஊழியரைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. சொந்தத் தொழில் நடத்துபவரைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும். அவரால்தான், சம்பாதித்து பெரிய வீடு கட்ட முடியும்; ஒரே ஊரில் வாழ முடியும்.
   இரண்டாவது, தான் வேலைக்குப் போய்ச் சம்பாதித்து வாழ வேண்டும். ஐந்து ரூபாய்க்குகூட அப்பாவின் கையை எதிர்பார்த்து நின்ற அம்மாதான் அதிலும் அவளுக்கு முன்னுதாரணம். இரண்டுமே அவள் நினைத்தது போலத்தான் நடந்தேறின.
   அகல்யாவுக்கு, ஆடிட்டர் அலுவலகம் ஒன்றில் கணக்காளராக வேலை கிடைத்தது. அவளது கணவன், அம்பத்தூரில் தவணை முறையில் வீட்டுப் பொருட்கள் விற்கும் கடை ஒன்றை நடத்திக்கொண்டிருந்தார். பெண் பார்க்க அவர்கள் வந்திருந்தபோது, 'உங்களது வீடு சென்னையில் எங்கு உள்ளது?’ என்றுதான் அகல்யா கேட்டாள். பட்டாபிராமில் சொந்த வீட்டில் வசிப்பதாகச் சொன்னார்கள். அந்த ஒன்றுக்காகவே அவள் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.
   திருமணமாகி வந்தபோதுதான் தெரிந்தது, அது அவள் ஆசைப்பட்ட வீடு அல்ல; பழைய காலத்து ஓட்டு வீடு என்பது. தலைகுனிந்துதான் நுழைந்து வர வேண்டும். வீட்டில் உள்ளவர்கள், ஹாலில்தான் படுத்துக்கொள்வார்கள். பழைய மரக்கட்டில் போட்ட சிறிய படுக்கை அறை. கையைத் தூக்கினால், மின்விசிறி தட்டும். வீட்டுக்குள் கழிப்பறை கிடையாது. வெளியே தென்னை மரத்தை ஒட்டி டெலிபோன் பூத் போல ஒன்றைக் கட்டிவைத்திருந்தார்கள். கிணற்றில் தண்ணீர் இறைத்துதான் குளிக்க வேண்டும். சமைக்க ஆரம்பித்தால், வீடு முழுவதும் புகை நிரம்பிவிடும். திருமணமாகி வந்த மூன்று நாட்கள், இவற்றை நினைத்துக் கொண்டு அகல்யா அழுதாள். அதை யாரும் 'ஏன்?’ என்றுகூடக் கேட்டுக்கொள்ளவில்லை.
   வீடு சிறியது என்பதைவிடவும் அந்த வீட்டுக்குள் ஐந்து ஆண்களும், மூன்று பெண்களும், நான்கு குழந்தைகளும் ஒன்றாக வாழ வேண்டும் என்பது ஆத்திரமாக இருந்தது.
   திருமணமான முதல் வாரத்தில் சினிமா பார்க்கப் போகும்போது அகல்யா, தன் கணவனிடம், ''நாம் டவுனுக்குள் வீடு பார்த்துக் குடிபோகலாம்'' என்று சொன்னாள். அகல்யாவின் கணவன், வெறுமனே தலையை மட்டும் ஆட்டினான்.
   மறுநாள் காலையில், சமையல் அறையில் இருந்த அவளது மாமியார், ''என்னடி... வந்து 10 நாள்கூட ஆகலை. அதுக்குள்ளே 'தனி வீடு பார்த்துக்கிட்டுப் போகலாம்’னு சொன்னயாமே?! ஒழுக்கமா வீட்டுக்கு அடங்கியிருக்க மாட்டியா?'' எனச் சண்டையிட்டாள்.
   அகல்யாவுக்கு, அழுகை முட்டிக்கொண்டு வந்தது. தான் ரகசியமாகச் சொன்ன விஷயத்தை ஏன் இப்படி தன்னுடைய அம்மாவிடம் சொல்லி, தன்னை அவமானப்படுத்தினார் என கணவன் மீது ஆத்திரமாக வந்தது. அன்று முழுவதும் அவரோடு பேசவில்லை. தன் கணவன், ஒரு தலையாட்டும் பொம்மை என்பதை ஆறே மாதங்களில் அகல்யா புரிந்துகொண்டாள். அதன் பிறகே அகல்யா வேலைக்குப் போகத் தொடங்கினாள்.
   மந்தைவெளிக்கு வேலைக்குப் போகத் தொடங்கியபோது, அவளுக்குக் கைக்குழந்தை இருந்தது. அதைக் காரணம் காட்டி, முதன்முறையாக வீடு மாறினாள். மிகச் சிறிய வீடு, படுக்கை அறை எனத் தனியாகக் கிடையாது, குறுகலான சமையல் அறை, அதன் ஒரு பக்கம் கழிப்பறை.
   ஒவ்வொரு நாளின் இரவும், சுழலும் மின்விசிறியை வெறித்துப் பார்த்தபடியே, 'ஏன் இப்படியான ஒரு வீட்டில் வசிக்கிறோம்?’ என நினைத்து அழுவாள். அவள் கணவனோ, படுத்த உடனேயே உறங்கிவிடுவான். 'குழந்தைக்குத் தொட்டில் போட ஓர் இரும்பு வளையம்கூட இல்லாத வீடு எதற்கு?’ என ஆத்திரமாக இருக்கும். சேலையை மடித்துப் போட்டு, அதில்தான் குழந்தையை உறங்கவைப்பாள்.
   அப்போது வீட்டில் ஒரு நாற்காலிகூடக் கிடையாது. யாராவது விருந்தினர் வந்தால் பாயைப் போட்டுதான் உட்காரச் சொல்ல வேண்டும். அதுபோன்ற நேரங்களில் அவள் கூனிக் குறுகிவிடுவாள். விருந்தினர்கள் வெளியேறியதும் தனியே உட்கார்ந்துகொண்டு அழுவாள். அவளுக்கு, யாரைக் குற்றம் சொல்வது எனப் புரியாது.
   சுபத்ரா பிறந்தபோது, அந்த வீட்டில் இருந்து அடையாறுக்கு மாறினாள். அது மாடி வீடு. வீட்டின் முன்னால் பூந்தொட்டிகள் வைத்துக்கொள்ளும் அளவுக்குக் கொஞ்சம் இடம் இருந்தது. அதில் நாலைந்து பூச்செடிகள் வாங்கிவைத்ததோடு, வீட்டு ஓனர் பயன்படுத்தாமல் போட்டிருந்த மரநாற்காலியைச் சரிசெய்து போட்டுக்கொண்டாள். வேலைவிட்டு வந்தவுடன் அந்த நாற்காலியில் உட்கார்ந்தபடியே வீதியைப் பார்த்துக்கொண்டிருப்பாள்.
   உயர உயரமாக அடுக்குமாடி வீடுகள் உருவாவதையும், பெரிய பங்களாக்களையும் கடந்து போகும்போது, அவளது மனம் அடித்துக்கொள்ளும். சில சமயம், சாலையில் நடக்கும்போது மூடப்பட்ட பெரிய இரும்பு கதவுகொண்ட வீடுகளின் முன்பு போய் நின்றபடியே அது தன்னுடைய வீடு என்று கற்பனை செய்துகொள்வாள். 'எப்போது இதுபோன்ற வீட்டில் வாழப்போகிறோம்?’ என மனம் அடித்துக்கொள்ளும். இயலாமை, அது உன்னால் முடியாது என்ற உண்மையைச் சொல்லி, அவளைப் பரிகாசம் செய்யும். விசாலமான எந்த வீட்டைக் கண்டாலும் அவளிடம் இருந்து ஒரு பெருமூச்சு வருவதைத் தடுக்கவே முடியாது.
   சைதாப்பேட்டை, வடபழநி, கிண்டி, நந்தனம், குரோம்பேட்டை, ராமபுரம்... என அகல்யா 15 வீடுகளுக்கும் மேல் மாறியிருந்தாள்.
   மறைமலைநகரில் சொந்த வீடு வாங்கி பால் காய்ச்சிய நாளில் வீட்டைப் பார்த்த அம்மா, ''என்னடி... புறாக்கூடு போல இருக்கு?'' என்று கேட்டதற்கு, ''உன் புருஷன் அதைக்கூட வாங்க முடியாமல்தானே செத்துப்போனான்...'' என்று ஆத்திரத்துடன் அகல்யா சண்டையிட்டாள். அத்தனை பேர் முன்னிலையில் அம்மா அழுதபோது, அகல்யா அவளைச் சமாதானப்படுத்தவில்லை. அம்மா அழுவது மனதுக்குச் சந்தோஷம் தருவதாகவே உணர்ந்தாள்.
   அன்று இரவு, சொந்த வீட்டில் படுத்தபோதும் அவளுக்கு உறக்கம் வரவில்லை. இது இல்லை நாம் நினைத்த வீடு. நமக்கு வாய்த்து இருப்பது இவ்வளவுதான். இந்த வீட்டில் இருந்துகொண்டு நகருக்குள் பெரிய வீடு ஒன்றை வாங்கிவிட வேண்டும் என மனதுக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டாள். பிறகு, அது நடக்கவே நடக்காது என உணர்ந்தவள் போல அழுதாள்.
   ''ஏம்மா அழறே?'' என மகள் கேட்டபோதும், அவள் பதில் பேசவில்லை.
   மனதுக்குள் அவள் கட்டிய கற்பனை வீடு, அவளைச் சத்தமாகக் கேலி செய்யத் தொடங்கியது. அதை அடக்க வேண்டும் என்பதற்காகவே, பேப்பரில் வரும் விளம்பரங்களைப் பார்த்து வாடகைக்கு வீடு தேடுவதை தனது விருப்பமாக மாற்றிக்கொள்ள ஆரம்பித்தாள்.
   வீட்டை வாடகைக்குக் கேட்பது போல சும்மா விசாரித்துச் சுற்றிப் பார்ப்பது, அவளுக்குப் பிடித்தமானதாக இருந்தது. சில சமயம், வீட்டு உரிமையாளர் சாவியை அவளிடமே தந்து, 'நீங்களே பார்த்து வாருங்கள்’ எனும்போது, அவள் அந்த வீடு தன்னுடையது என்பது போலவே உணருவாள்.
   காலியாக உள்ள வீட்டின் தரையில் படுத்துக்கொள்வாள் அல்லது பாத்ரூம் குழாயைத் திறந்துவிட்டு போதும் போதுமென முகம் கழுவுவாள். சில வீடுகளில்,  ஹேர்பின்னால் தனது பெயரை எழுதிவைத்துவிட்டு வருவாள். விஸ்தாரமான வீடு, விஸ்தாரமான மனத்தை உருவாக்கிவிடும் என நம்பினாள் அகல்யா. இப்படியாக மாதம் 10, 20 வீடுகளை வெறுமனே பார்த்து வருவதை வழக்கமாக்கிக்கொண்ட பிறகு, அவளது இயல்பு மாறியது.
   ஒவ்வொரு வீட்டு உரிமையாளர் தன்னைப் பற்றி கேட்கும்போதும், அவள் புதிதாக ஒரு கதை சொல்ல ஆரம்பித்தாள். தனது கணவர் அமெரிக்காவில் வேலை செய்கிறார். தனக்கு ஒரே பெண் என்று சொல்வாள். சில சமயம், இப்போதுதான் முதன்முறையாக சென்னைக்கு வருகிறோம். இதுவரை திண்டுக்கல்லில் குடியிருந்தோம் எனப் பொய் சொல்வாள். ஒரு வீட்டில், 'நாங்கள் சிங்கப்பூரில் 15 வருடங்கள் வாழ்ந்துவிட்டு, இப்போது சென்னை திரும்பியிருக்கிறோம்’ என்று பொய் சொன்னாள். இந்தப் பொய்கள் அவளுக்குப் பிடித்திருந்தன. ரசித்துச் சொன்ன பொய்கள் எல்லாம், நிஜமாக இருக்கக் கூடாதா என ஆசைப்பட்டாள்.
   பிடித்தமான சில வீடுகளை, தனது செல்போன் கேமராவில் புகைப்படம் எடுத்தும் வைத்துக்கொண்டாள். அதை, தனியே இருக்கும்போது பார்த்துக்கொண்டே இருப்பாள். இந்த ரகசியத் தேடுதல், அவளுக்குள் இனம் புரியாத சந்தோஷத்தை உருவாக்கியது.
   அப்படித்தான் அன்று மாலையிலும், அசோக் நகரில் இருந்த ஒரு வீட்டை வாடகைக்குக் கேட்க, தேடிச் சென்று காலிங் பெல்லை அழுத்தினாள். நிறைய மாமரங்கள் உள்ள வீடு. ஒரு முதியவர், கதவைத் திறந்து விசாரித்தார். அவள் விளம்பரத்தைப் பற்றி சொன்னதும், வீட்டுக்குள் வரச்சொன்னார்.
   தூண்கள் கொண்ட பழைய காலத்து வீடு. உள்ளே ஓர் அறையில் ஆண்கள் சட்டை அணிந்த வயதான ஒரு பெண், படுக்கையில் சோர்வுடன் எழுந்து உட்கார்ந்திருப்பது தெரிந்தது.
   ''அந்தப் பெண் யாரு?'' என, பலவீனமான குரலில் கேட்டார்.
   ''வீடு பார்க்க வந்திருக்காங்க'' என்று குரல் கொடுத்தபடியே முதியவர் சாவியைத் தேடிக்கொண்டிருந்தார். படுக்கையில் இருந்த பெண் கிழே இறங்கப் பார்த்துத் தடுமாறுவதைக் கண்டாள் அகல்யா.
   கையில் சாவியோடு நின்றிருந்த முதியவர் சொன்னார், ''என் வொய்ஃப்க்குக் கிட்னி பிராப்ளம். 10 வருஷங்களா படுக்கையில் கிடக்குறா. பிள்ளைகள், அமெரிக்கா போயிட்டாங்க. நானும் இவளும்தான் இருக்கோம். அதனாலதான் மாடியை வாடகைக்கு விட்டிருக்கேன். பார்த்துட்டு வாங்க'' என்று சாவியை அவளிடம் தந்தார்.
   அகலமான படிக்கட்டுகள். மாடி ஏறிப் போனதும் மாமரத்தின் கிளை, வீட்டு ஜன்னலை உரசிக்கொண்டிருப்பது, சந்தோஷமாக இருந்தது. ஒரு மாவிலையைப் பறித்து முகர்ந்தபடியே அவள் கதவைத் திறந்தாள். ஹாலில் சிறிய மர ஊஞ்சல். அகலமான ஹால். சுவரில் பதிக்கப்பட்ட ஆளுயரக் கண்ணாடி. யார் இங்கே வசித்தார்கள் எனத் தெரியவில்லை. ரசனையாகக் கட்டப்பட்டிருந்தது.
   குளியல் அறையைத் திறந்து பார்த்தாள். சந்தன நிறத்தில் பெரிய குளியல் தொட்டி இருந்தது. திரைப்படங்களில்தான் இதுபோன்ற குளியல் தொட்டியில், நுரை வழிய கதாநாயகி குளிப்பதைக் கண்டிருக்கிறாள். குளியல் அறையே ஒரு ஹால் போல பெரிதாக இருந்தது. சமையல் அறைக்குள் போய்ப் பார்த்தாள்.
   ஒரு பக்கச் சுவரில் கிருஷ்ணன் வெண்ணெய்ப் பானையை உருட்டுவது போன்ற அழகிய ஓவியம் வரையப்பட்டு இருந்தது. பெரிய மர அலமாரி, உள்ளே இழுப்பறைகள். உட்கார்ந்து சமைக்க வசதியாக உயரமான முக்காலி. கிழக்கு பார்த்த பூஜை அறை. இளம்பச்சை நிற வண்ணம், வீடு முழுவதும் அடிக்கபட்டிருந்தது.
   அந்த வீட்டின் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடும்போது, வாசலில் கையில் ஒரு காபி டம்ளருடன் முதியவர் நிற்பது தெரிந்தது. அவள் ஊஞ்சல் ஆடுவதை நிறுத்திவிட்டு, கூச்சத்துடன் எழுந்துகொண்டபோது முதியவர் சொன்னார், ''நல்லா ஆடுங்க... என்ன கூச்சம்? காபி எடுத்துக்கோங்க'' என்றபடி சிரித்தார்.
   ''வீடு அழகா இருக்கு'' என்றாள் அகல்யா.
   ''டான்சர் ரேவதி சுப்ரமணியம் குடியிருந்தாங்க. இப்போ பெசன்ட் நகர்ல வீடு கட்டிக்கிட்டுப் போயிட்டாங்க. உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்... எங்க வேலை?'' என்று கேட்டார்.
   என்ன பொய் சொல்வது என அகல்யா யோசிக்கத் தொடங்கினாள். பிறகு சொன்னாள், ''கனரா வங்கில வேலை பார்க்கிறேன். ஹஸ்பண்ட் மதுரையில் இன்ஜினீயர். ஒரே பையன், மெடிக்கல் படிக்கிறான்.''
   ''மாச வாடகை 20,000. அட்வான்ஸ் ரெண்டு லட்சம்'' என்றார் முதியவர்.
   ''என்னாலே உடனே அட்வான்ஸ் தர முடியாது. ஹஸ்பண்ட் அடுத்த மாசம் அஞ்சாம் தேதிதான் வர்றார். டோக்கன் அட்வான்ஸ் வேணும்னா தர்றேன்'' என்றாள்.
   ''அதுக்கு என்ன பரவாயில்லை. உங்களை எனக்குப் பிடிச்சுப்போச்சு. வீடு பிடிச்சிருக்கா?'' என்றார்.
   சந்தோஷத்துடன் தலையாட்டினாள் அகல்யா.
   ''டோக்கன் அட்வான்ஸ் குடுத்துட்டு, சாவி வாங்கிக்கோங்க'' என்றார் முதியவர்.
   தலையாட்டியபடியே வெளியே வந்தாள்.
   இந்த வீட்டை எப்படியாவது வாடகைக்கு எடுத்துவிட வேண்டும் என மனம் அடித்துக்கொண்டது. 'எதற்காக அந்த வீடு, யார் குடியிருப்பது?’ என்று அவளுக்குக் குழப்பமாக இருந்தது. அன்று இரவு முழுவதும் அதைப் பற்றியே யோசித்தாள்.
   மறுநாள் வங்கியில் இருந்து 20,000 பணத்தை எடுத்துக்கொண்டு, அந்த வீட்டுக்குப் போய் டோக்கன் அட்வான்ஸ் கொடுத்தாள்.
   முதியவர், சாவியை அவளிடம் தந்து, ''வீட்டுச் சாமான்கள் எப்போ வருது?'' எனக் கேட்டார்.
   ''10 நாள் ஆகும்'' என்றாள் அகல்யா.
   ''மாடிக்குப் போறதுக்கு தனி கேட் இருக்கு. எங்களாலே உங்களுக்கு ஒரு தொல்லையும் வராது. ஏதாவது தேவைனா, கூச்சப்படாமல் கேளுங்க'' என்றார்.
   வீட்டுச் சாவியைக் கையில் வாங்கியபோது, 'இது என்ன பைத்தியக்காரத்தனம்!’ என்று தோன்றியது. சாவியோடு மாடிக்குப் போனபோது, இது தன்னுடைய வீடு என சந்தோஷமாக இருந்தது.
   அவள் ஆசை தீர ஊஞ்சல் ஆடினாள். பிறகு அருகில் உள்ள கடைக்குப் போய், ஒரேயொரு பாய் மட்டும் வாங்கி வந்தாள். ஹாலில் பாயைப் போட்டு படுத்துக்கொண்டாள். இது தனது வீடு. தனக்கு மட்டுமேயான வீடு. இப்படி ஒரு வீடு தனக்கு இருப்பது யாருக்கும் தெரியக் கூடாது. இந்த வீட்டில் தன்னோடு யாரும் குடியிருக்கப்போவது இல்லை. இங்கே தான் மட்டுமே வாழப்போகிறேன் என அவளுக்குச் சந்தோஷமாக இருந்தது.
   அன்று முதல், அவள் அலுவலகம் விட்டதும் நேராக இந்த வீட்டுக்கு வந்துவிடுவாள். ஒரு பையில் மாற்று உடைகள் சிலவற்றைக் கொண்டுவந்து வைத்துக்கொண்டாள். இரண்டு ஸ்பூன், ஒரு ஃப்ளாஸ்க், டம்ளர், பழம் வெட்டும் கத்தி ஒன்று... என அவசியமான சில பொருட்களை மட்டும் கொண்டுவந்து வைத்துக்கொண்டாள்.
   வீடு, பொருட்களால் நிரப்பப்படாமல் இருப்பது சந்தோஷம் தருவதாக இருந்தது. ஆப்பிள் வாங்கி வந்து, சிறிய துண்டுகளாக்கி வைத்துக்கொண்டு பாட்டு கேட்டபடியே சாப்பிடுவாள். தனி ஆளாகச் சோழிகளை உருட்டிப்போட்டு தாயம் ஆடுவாள். சிறிய மண்பானை வாங்கிவைத்து, அதில் தண்ணீர் குடித்தாள். பாக்கெட் ரேடியோ வாங்கிவந்து பாட்டு கேட்டாள்.
   ஒருநாள், குளியல் தொட்டியில் சோப்பு நுரைகளை நிறைத்து அதில் ஆசை தீரக் குளித்தாள். கண்ணாடியில் தன்னைப் பார்த்தபோது, வயது கரைந்துபோய்விட்டது போல அவளுக்குத் தோன்றியது. வீட்டுக்குத் தெரியாமல், தனியாக ஒரு வீடு எடுத்துக்கொண்டு ரகசியமாக வாழ்வது அவளுக்குச் சந்தோஷமாக இருந்தது. அதே நேரம், எங்கே கண்டுபிடித்துவிடுவார்களோ என பயமாகவும் இருந்தது.
   வீட்டில் யாருமே அவளது மாற்றத்தைக் கண்டுகொள்ளவில்லை. ஞாயிறு அன்றுகூட தனக்கு ஆபீஸ் வேலை இருக்கிறது என்று சொல்லி, தன் வீட்டுக்குப் போய்ப் புழங்கத் தொடங்கினாள்.
   ஒருநாள், அலுவலகம்விட்டு வரும்போது சந்தன மணமுடைய ஊதுவத்திக் கட்டு ஒன்றை வாங்கிக்கொண்டு போனாள். வீட்டில் ஊதுவத்திக் கொளுத்தி வைத்துவிட்டு, ஊஞ்சலில் சுருண்டு படுத்துக்கொண்டாள். அந்த வாசனை வீடு முழுவதும் பரவி நிரம்பியது. எவ்வளவு அற்புதமான சுகந்தம் என நுகர்ந்தபடியே அவள் படுத்துக்கிடந்தாள். தனக்கு, புதிதாகச் சிறகு முளைத்திருப்பது போல அவள் சந்தோஷம் கொண்டாள். அன்றைக்கு, சந்தோஷத்தில் அழ வேண்டும் போல் இருந்தது.
   20 நாட்கள், அவள் தன் இஷ்டம் போல அந்த வீட்டை ஆண்டாள். சிறுமியைப் போல வீட்டில் உருண்டு படுத்து உறங்கினாள். அதிக நேரம், தனக்கான வீட்டில் கழிக்க வேண்டும் என்பதற்காகவே பொய் காரணங்களைச் சொல்லத் தொடங்கினாள்.
   தனக்கென அவள் உருவாக்கிக்கொண்ட வீட்டுக்கு, ஒருநாள் தனது மகளை மட்டும் அழைத்துக்கொண்டு வந்தாள் அகல்யா.
   ''யார் வீடும்மா இது?'' எனப் புரியாமல் கேட்டாள் சுபத்ரா.
   ''என் வீடு'' என்றாள் அகல்யா.
   ''நாம இங்கே மாறப்போறோமா?'' எனக் கேட்டாள் சுபத்ரா.
   ''இல்லை. எனக்குனு ஒரு வீடு வேணும்னு தோணுச்சு. அதான் பிடிச்சிருக்கேன்'' என்றாள் அகல்யா.
   ''எதுக்கு?'' என்றாள் சுபத்ரா.
   ''அது உனக்கு இப்போ புரியாது. வீடு நல்லா இருக்கா?'' எனக் கேட்டாள் அகல்யா.
   அம்மா ஏதோ தப்பு செய்கிறாள் என உணர்ந்தவளைப் போல முறைத்தபடியே, ''உனக்கு எதுக்கு வீடு... இங்கே என்ன செய்யப்போறே?'' எனக் கோபத்துடன் கேட்டாள் சுபத்ரா.
   ''ஒண்ணும் பண்ண மாட்டேன். ஆனா, இது என் வீடு. நான் மட்டும் இருக்கிற வீடு. அந்த நினைப்பு தர்ற சந்தோஷத்தைச் சொல்லிப் புரியவைக்க முடியாது'' என்றாள் அகல்யா.
   ''நான் கிளம்பறேன்'' என, படி இறங்கினாள் சுபத்ரா.
   தனது ரத்தம் என்றபோதும் அப்பாவின் குணம்தான் அவளுக்கும் இருக்கிறது என்ற நினைப்போடு, ''உங்க அப்பாகிட்ட சொல்லாதே'' என்றாள் அகல்யா.
   சுபத்ரா, பதில் சொல்லவில்லை!
   அன்று இரவு அகல்யாவின் கணவன் ஆங்காரமான குரலில் கேட்டான், ''உனக்கு என்ன பைத்தியமாடி? எவ்வளவு திமிர் இருந்தா தனியா வாடகைக்கு வீடு பிடிச்சிருப்பே? தனியா இருக்கியா... இல்லை கூட எவனாவது இருக்கானா?''
   ''அது ஆம்பளைங்க பழக்கம். நான் தனியாத்தான் இருக்கேன்'' என்றாள் அகல்யா.
   ''என்னடி... சம்பாதிக்கிறோங்கிற திமிரா? இந்த வீட்ல உனக்கு என்னடி குறைச்சல்?'' எனக் கேட்டான்.
   ''எனக்குனு ஒரு வீடு வேணும். அதை என்னாலே கட்ட முடியலை. இது உங்க வீடு. இதுல நான் ஒரு வேலைக்காரி, சமையல்காரி அவ்வளவுதான்'' என்றாள்.
   பளார் என அவளுக்கு ஓர் அறை விழுந்தது. காதில் கேட்கக் கூசும் வசைகளுடன் கத்திக்கொண்டிருந்தான் அகல்யாவின் கணவன்.
   பதிலுக்குச் சண்டையிட முடியாமல் விம்மியபடியே சொன்னாள், ''ஒரு வீடுகூட நான் நினைச்சபடி அமைச்சுக்க முடியலே. இப்பவே எனக்கு வயசு 44. பாதி வாழ்க்கை முடிஞ்சுபோச்சு. எனக்குனு நான் எதையும் ஆசைப்படக் கூடாதா... அது தப்பா?''
   ''எப்போ நீ புக்கு படிக்க ஆரம்பிச்சியோ, அப்பவே இப்படிப் புத்தி கெட்டுப் போகத்தான்டி செய்யும். உனக்கு எதுக்குடி புருஷன், பிள்ளைகள்?'' எனக் கத்தினான். பிள்ளைகளும் சேர்ந்துகொண்டு அவளைத் திட்டினார்கள்.
   ''முதல்ல அந்த வீட்டைக் காலி பண்ணிட்டு வந்தாத்தான், இந்த வீட்ல இடம். இல்லே... வெளியே போ'' என அவளது துணிகளை அள்ளி வெளியே வீசினான் கணவன்.
   வீட்டில் அவளுக்காக யாரும் பரிந்து பேசவில்லை. அகல்யா, தான் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டுச் சாவியைத் தூக்கி எறிந்தாள்.
   அன்றிரவு அவள் கணவன், வாடகைக்கு வீடு கொடுத்த முதியவரிடம் தரக்குறைவாகப் பேசி சண்டையிட்டு, அகல்யா கொடுத்த அட்வான்ஸ் பணத்தைத் திரும்ப வாங்கிக்கொண்டு வந்திருந்தான்.
   ''அம்மாவுக்கு, மனநலம் கெட்டுவிட்டது. இனி வேலைக்குப் போக வேண்டாம்'' என்றாள் மகள்.
   மூத்த மகன், அம்மாவை ''லூஸு'' எனத் திட்டினான்.
   படுக்கையில் சுருண்டபடியே அகல்யா அழுதாள். எதை எதையோ நினைத்துக்கொண்டு அழுதாள்.
   10 நாட்களுக்குப் பிறகு, அவள் சமாதானம் அடைந்து அலுவலகம் கிளம்பியபோது, அவளது ஸ்கூட்டியை விற்றிருந்தான் கணவன்.
   ''பஸ்ல போயிட்டு வந்தாத்தான் குடும்பக் கஷ்டம்னா என்னன்னு தெரியும்'' என்றான்.
   பஸ் பிடித்துப் போய் வரத் தொடங்கிய அகல்யா, திடீரென ஒருநாள் மாலை, தான் வாடகைக்குப் பிடித்த வீட்டைப் பார்ப்பதற்காக ஆட்டோவில் போய் இறங்கினாள். யாரோ அந்த வீட்டுக்குக் குடிவந்திருந்தார்கள். குழந்தைகளின் ஆடைகள் கொடியில் உலர்ந்துகொண்டு இருந்தன. வெளியே நின்றபடியே அந்த வீட்டை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
   அந்த வீட்டில் இருந்து வாசனை கசிந்து வந்துகொண்டிருந்தது. அது அவள் வாங்கி வைத்த சந்தன மணம் கமழும் ஊதுவத்தி. அந்த வாசனை அவளுக்குள் ஆழமான பெருமூச்சையும் அழுகையையும் ஏற்படுத்தியது. கர்சீஃப்பால் கண்களைத் துடைத்தபடியே தெருவில் நடக்க ஆரம்பித்தாள்.
   சாவு வீட்டுக்குப் போய்விட்டுத் திரும்பி வருவதுபோல் இருந்தது அவளது நடை!
   https://www.vikatan.com
  • By நவீனன்
   வேட்டை - வா.மு.கோமு
    
   உச்சி வெய்யில் ஏறியிருந்தது. தலைக்குச் சூடு தெரியாமலிருக்க, தோளில் கிடந்த துண்டை உதறி உருமாலைக் கட்டுக் கட்டியிருந்தார் ஆரப்பன். தரையைத் தொட்டுவிடுமோ என்கிற மாதிரி, அடிக்கடி தொங்கி வரும் நாக்கை வாய்க்குள் இழுத்துக்கொண்டு டைகர் அவருக்கும் முன்னால் வேலியோரமாக அவரைப் பத்திரமாகக் கூட்டிப் போவதுபோல் நடந்தது. இருவருமே சங்கித்தான் போயிருந்தார்கள். போக, இருவருக்கும் வயதும்வேறு ஆகிவிட்டது.

   ‘‘ஏப்ரல்லயே வெய்யொ இந்தப் போடு போட்டா, இன்னமும் மே மாசமுன்னு ஒண்ணு முழுசாக் கிடக்கே டைவரே! ஒடம்புல இருக்குற எல்லா மசுருகளும் கருகிப்போயிரும். கருகல் வாசம் நம்ம மூக்குக்கே அடிக்கும் பாரு, வடைச் சட்டி தீயுற வாசமாட்டொ” டைகரிடம் சொல்லிக்கொண்டே பின்னால் சென்றார்.

   ஊர் இன்னமும் ஐந்து மைல் தூரத்தில் இருக்கிறது. கொரங்காட்டுக்குள் நுழைந்தால் சிகாமணி தோட்டத்துக்குப் போய்விடலாம். சிகாமணி மோட்டார் போட்டிருந்தானென்றால், தொட்டியில் தண்ணீர் கிடக்கும். இருக்கும் தாகத்திற்குத் தொட்டித் தண்ணீர் முழுவதையும் குடித்துக் காலி செய்துவிடலாம். தண்ணீரால் நிரம்பிய வயிறு சொளப் சொளப்பென ஆடும். அப்படியே தென்னை மர நிழலில் சாய்ந்தால், பொழுது விழுவதுகூடத் தெரியாமல் கிடக்கலாம். தென்னை மட்டை, காற்றுக்குக் கழன்று தலையில் விழாமல் இருந்தால் சரி.

   இப்போதெல்லாம் வேட்டைக்கு என்று கிளம்பி ஒரு மணி நேரத்துக்குள் சோம்பலாகிவிடுகிறது. டைகருக்கும் வயசு ஆகிவிட்டது. ஏறக்குறைய பனிரெண்டு வயசு இருக்கலாம். முன்பாக அதனிடமிருந்த துள்ளல் எதுவுமில்லை இப்போது. இந்த வாழ்க்கை கிழவனோடே போகப்போகிறது என்று அதற்குத் தெரியுமோ என்னவோ! ஆனால், இன்று வரை டைகர் ஒரு நாளில்கூட ஆரப்பனிடம் கோபித்துக் கொண்டதில்லை.

   ஆரப்பனுக்கும் ஆயிற்று வயது அறுபது. தலையில் வெள்ளை முடிகள்தான் அதிகம். கோவிலுக்கு மொட்டை போடுவதற்கு நேர்ந்துவிட்டதுபோல சடையாய் வளர்த்தி, பொறவுக்குக் குடுமை போட்டிருந்தார். ஊருக்குள்ளிருக்கும் பெண்களில் பலர் சவுரி முடிதான் வைத்திருக்கிறார்கள். அந்த சவுரி முடி அழகாய் கருமை நிறத்தில் வீட்டினுள் ஆணியில் தொங்கிக்கொண்டிருக்கும். வெளியில் கிளம்புவது என்றால், அது அவர்களின் தலையில் ஏறிக்கொள்ளும். அவர்களுக்கெல்லாம் ஆரப்ப கிழவரின் தலைமுடிமீது பொறாமை. ‘கெழவனுக்குப் பாரு தலையில!’ என்றே சொல்லிச் சலிப்பார்கள்.

   ஆரப்பனின் வீடு ஊருக்குள் கிழக்குப் புறமாகக் கடைசியில் இருந்தது. அதை வீடு என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. அது குடிசைக்கும் சேராமல் வீட்டுக்கும் சேராமல் காட்சியளிக்கும். களிமண் சுவர் ஆரப்பனின் நெஞ்சு உயரம் மேலெழும்பி இருக்க... அப்படியே மேலே பனையோலை வேய்ந்திருந்தார். வாசலில் ஒரு மண் மேடை இருந்தது. பொழுது போகாத இவர் வயதையொத்தவர்கள் வந்து சேர்ந்தால், அமர்ந்துகொண்டு கதையடிக்க வாசலில் அந்த மேடை. வீட்டினுள் நாற்காலி வைப்பதெற்கெல்லாம் ஏது இடம்?

   வீட்டினுள் சமையல் சாமான்கள் சிலவும் அடுப்பும் மட்டும்தான். வெங்காயம், மிளகாய், தக்காளி என்று போட்டுவைக்க ஒரு பெரிய தட்டுக்கூடை. ஒரு பெரிய அரிக்கேன் விளக்கு. அதுவும் சீமெண்ணெய் இல்லாமல் இந்த ஆறு மாதமாக வீட்டின் மூலையில் கிடந்தது. போக ரேசன் கார்டை இவரிடமிருந்து வாங்கிக்கொண்டு ஸ்மார்ட் கார்டு கொடுத்திருந்தார்கள். அதை மடியில் முடிந்து வைத்திருந்தவர், வேட்டையில் எந்தக் காட்டில் போட்டுவிட்டாரோ! கார்டு இல்லாமல் ரேசன்கடைப் பக்கமாய் ஆறு மாதமாக அரிசிக்கும் இவர் போவதில்லை. அரிசி வாங்கி வந்து கோழிகளுக்கும், ஆடுகளுக்கும் தீனிக்குப் போடும் உள்ளூர் குடும்பத்தார்களிடம் போய், கையிலிருக்கும் காசைக் கொடுத்து பையில் வாங்கிக்கொண்டு வருவார். அதுவும்கூட டைகருக்காகத்தான்.

   டைகருக்கு ரேசன் அரிசி என்றால், அப்படி ஒரு பிரியம். அப்படித்தான் ஒருமுறை ரேசனில் பச்சரிசி போட்டார்கள். ஆக்கி வட்டலில் போட்டு ‘வாடா வாடா வாடா!’ என்று இவர் என்ன கத்திக் கூப்பிட்டும் வட்டல் பக்கமே அது வரவில்லை. கிடைக்கும்போது வயிற்றை நப்பிக்கொள்ளும் வழக்கம் டைகருக்கு சிறுவயதிலிருந்தே இருந்துவந்தது. ஒரு வட்டல் சோறு, சாப்பிட்டு முடிக்க அரைமணி நேரம். அதுதான் கணக்கு. கறித் துண்டுகளும் எலும்புத்துண்டுகளும் சாப்பாட்டோடு இருந்தால், முதலாக மூக்கை வட்டலில் நுழைத்துத் துண்டுகளைக் கவ்வி நிதானமாக மென்றுவிட்டு எல்லாத் துண்டுகளும் முடிந்தால்தான் சோற்றிலேயே வாய் வைக்கும்.

   “ஆனாலும் உனக்குத் தெனாவட்டு சாஸ்திடோய்... கறியோட போட்டா ஒரு மணி நேரம் பண்டாமெ வட்டலை உட்டு அக்கட்டால வருவியா நீயி!” திண்டிலிருந்தபடி ஆரப்பன் பேச்சுக்கொடுத்தால், வாலை மட்டும் ஆட்டுவதோடு சரி. ‘நீ என்ன வேணாலும் சொல்லிக்கோ! சோத்துக்குத்தான் இத்தனை பறப்பு. அதையும் போயி உன்னியாட்டம் அவுதி அவுதியா அள்ளிப் போட்டுட்டுப் படுத்துக்க என்னால முடியாது!’ வாய் மட்டும் இருந்திருந்தால், அப்படித்தான் அது சொல்லியிருக்கும் என அவராக நினைத்துக்கொண்டு ஒரு பத்தாம் நெம்பர் பீடி பற்றவைத்து புகை ஊதுவார் படுத்தபடி. லொக்கு லொக்கென அவ்வப்போது சின்ன இறுமல் வேறு. இந்த பீடிக்குடியை விட்டுத் தொலைத்து விடலாமென இவரது சின்ன வயதிலிருந்தே நினைத்துக்கொள்வார், ஒவ்வொரு பீடி பற்ற வைக்கையிலும். ஆனால், அது முடிவேனா என்கிறது அவருக்கு. இப்போதெல்லாம் பீடி குடிக்காமலேயே ரெண்டு காடு நடந்து செல்லும்போதே புஸ் புஸ்சென மூச்சு அடைக்கிறது. இந்த லட்சணத்தில் வேட்டையை வெற்றிகரமாக இப்போதெல்லாம் அவரால் முடிக்க முடிவதில்லை.

   போக, வேட்டையில் சிக்கும் உடும்புகள் வளையிலிருந்து தப்பி ஓடுகையில் பார்த்தால், மூணு கிலோ தேறும் போலவும், மூணு நாளைக்கு வேட்டைக்கே வர வேண்டியதில்லை போலவும்தான் தெரிகிறது. டைகர் போய் அழுத்திக் கிடக்கையில் தூக்கிப் பார்த்தால்,  ‘வற்றிய வயிற்றுடன் ஒரு கிலோ தேறுமா? இந்தப் பாவத்தையா பிடித்தோம்’ என இருக்கும் இவருக்கு. வீட்டின் அருகில் நிழலுக்கு இருக்கும் கிளுவை மரத்தில் தூக்கிக் கட்டி, தோலை உரித்துக் குடலைக் கிழிக்கையில் உள்ளே கட்டெறும்புக் கூட்டமும், கருவண்டுகளும் உணவுப் பையில் சேகரமாய் இருக்கும். ‘தீனிக்கி எனத்தையெல்லாம் முழுங்குதுங்கனு பாருடா டைவரே! அட நல்லதா நாலு பொருளு திங்கப்புடாது?’ என்பார் ஆரப்பன்.

   இந்தப் பத்து வருடங்களாகவே வேட்டை ஒன்றுதான் அவரது வேலையாகிப் போய்விட்டது. ஊருக்குள் ‘சரவாங்கிக்கி சாரைப் பாம்பு கிடைச்சா கொண்டாந்து தாருங்கொ அப்பாரு!’ ‘உடும்பு கெடச்சா கொணாந்து தாருங்கொ அப்பாரு’ என்பார்கள். எல்லாமே இவருக்கும் டைகருக்கும் போகத்தான். பணமே அவர்கள் தருவதாக இருந்தாலும் இவர்கள் வயிற்றுப் பாட்டுக்குத்தான் வேட்டையே என்பதுபோல நடந்துகொள்வார். இன்னது தேவை என்று ஒரு வாரம் முன்பாகவே சொல்லிவிட வேண்டும் இவரிடம். அப்போதுதான் வாரத்துக்குள் அவர்களுக்குக் கிடைக்கும்.

   இருந்த ஒரு பையன் பழனானும் சீட்டாட்டமே பெருசு என்று ஊர் ஊராக ஆடப்போவான். இவரது சைக்கிளோடு பத்து வருடம் முன்பாக ஒரு வியாழக்கிழமை ஊரை விட்டுப் போனவன்தான். இன்னமும் ஆள் உயிரோடு இருக்கிறானா, இல்லையா என்பது ஊராருக்கே தெரியவில்லை. ஆரப்பனிடம் கேட்டால், ரெண்டு சொட்டுக் கண்ணீர் மட்டுமே விடுவார். அந்த வருடத்தில்தான் அம்மிணியம்மாளும் காய்ச்சல் என்று விழுந்து செத்துப்போனது. இருவருமே இல்லை என்கிறபோது குட்டியாய் இருந்த டைகர் மட்டுமே இவருக்குத் துணை என்றாகிப்போனது.

   முதல் முதலாக வேட்டைக்குப் பழக்க டைகரை இவர் காட்டுச்சேரிக்குக் கூட்டிச் சென்றபோது, உலகம் இவ்வளவு பறந்து விரிந்து கிடக்கிறதாவென காடு மேடெங்கிலும் ஓட்டமாய் ஓடியது டைகர். இவர் என்னதான் பெயர் சொல்லிக் கூப்பிட்டாலும் அது நிற்கவில்லை. ஒரு கட்டத்தில் ஓட்டம் சலித்து சங்கிப்போய் இவரைத் தேடி அலைந்து இரண்டு மணிநேரம் கழித்து வந்து சேர்கையில், சுண்டெலி வங்கை இவர் மம்பட்டியால் நடுக்காட்டில் வெட்டிக்கொண்டிருந்தார். முந்தைய நாள் இரவில்தான் இடியுடன் மழை தட்டி லேப்பியிருந்தது. இடிச் சத்தத்திற்கு எலிகள் பயந்துபோய் ஏதாவது ஒரு வங்கில் கூட்டமாய்க் கூடியிருக்கும். அவரது கணக்கு தப்பாது எப்போதும்.

   தன் முதலாளி காட்டினுள் என்னவோ துளை போடுகிறான் என்றே உணர்ந்த டைகர், அவரிடம் வாலை ஆட்டிக்கொண்டு வந்து கெஸ் கெஸ்சென மூச்சு வாங்கிக்கொண்டு நின்றது. “அட இன்னஞ்சித்த நேரம்தான் ஓடீட்டு மெதுவா வர்றது! ஆளும் மொகரையும்... இப்பிடி பைத்தியாரப் பயலாட்டம் ஓடிட்டு இருந்தீன்னா புவ்வாவுக்கு என்ன சாமி பண்டுவே?” பேசிக்கொண்டே ஒடித்து வைத்திருந்த நீண்ட விளாரை வளைத் துவாரத்தில் விட்டு “புர் புர்ர்ர் த்தாய்ய்ய் பூஊஊர்ர்ர்ர்!” என்று சப்தமிட்டபடி இழுத்து இழுத்து உள்ளே விட்டார். டைகர் காதுகளை விடைத்துக்கொண்டு வாலை வேகமாக ஆட்டிக்கொண்டு சுற்றிலும் வளைந்து வளைந்து ஓடித் தவித்தது! எதற்காக முதலாளி இப்படிச் சத்தமிடுகிறார்? இவருக்கு என்னவாயிற்று?

   திடுதிப்பெனப் பொடத்தியைப் பொத்துக் கொண்டு உருண்டை உருண்டையாகத் தலைதெறிக்க ஓடும் எலிகளைக் கண்ட டைகர், அவற்றில் ஒன்றன் பின்னால் வேலி வரை ஓடிக் கவ்வியது. ஆரப்பன் வளைந்த கம்பி சுற்றிய தடியை இரண்டு எலிகளைத் துரத்தியோடி வாகாய் விசிறினார். வீசிய தடி இரண்டு எலிகளின் மீதும் பட்டுச் சுருண்டு விழுந்தன. இரண்டையும் தூக்கி இடுப்பில் செருகிக்கொண்டார்.

   “பிடிச்சுட்டியா நீயும் ஒன்னை... கொண்டா கொண்டா என்கிட்ட! கொண்டாடா சாமி... கொண்டாடா சாமி” என்றவரிடம் வாயில் கவ்விக்கொண்டு வாலை ஆட்டியபடி டைகர் வந்து சேர்ந்தது. “கையில எலியக் குடு” என்று வலது கையை நீட்டினார். டைகரோ இதில் என்னவோ ஏமாற்று வேலை இருக்கிறதெனத் திரும்ப வேலிக்குச் செல்ல ஓட்டமாய் ஓடியது. பின்பாக முன்னங்கால்களை நீட்டி மரத்தடி நிழலில் அமர்ந்து கவ்வியிருந்த எலியை வாயினுள் தள்ளி நறுக் மொறுக்கென மெல்லவும்தான் இவருக்குக் கோபம் தலைக்கு ஏறிற்று. கம்பி சுற்றிய வளைந்த தடியை நாயை நோக்கி வீசினார். சரியாக அதன் உடம்பில் சென்று தொப்பென விழுந்தது தடி!  வயிற்றில் அடிபட்டிருந்தாலும் தன் காலில்தான் பயங்கர அடி விழுந்ததுபோல ‘கைக்கைக் கைக்கைக்’ எனக் கத்திக்கொண்டே காலை நொண்டிக் கொண்டு ஊரை நோக்கி ஓடிப்போனது.

   அன்று இரவு எலிக்கறிக் குழம்புடன் தன் வட்டலில் விழுந்த சாப்பாட்டைச் சுத்தமாக நாவால் துடைத்துக் காலிசெய்த பின், டைகர் வாசல் திண்டில் கிடந்த முதலாளியின் அருகில் வந்து நீட்டி காவல் காக்கும் பாவனையில் படுத்துக்கொண்டது. இடுப்பிலிருந்து செத்த எலி ஒன்றை வாலைப் பிடித்து உயர்த்தி டைகரின் முன்னால் ஆட்டினார் ஆரப்பன். தாவிக் குதித்து அது கவ்வ முயல்கையில் கையால் அதன் வாயில் சட்டென ஒன்று வைத்தார். இப்படி நான்கு முறை தாவாங்கட்டையில் அடி விழுகவும் எலியே வேண்டாமென்ற முடிவுக்கு டைகர் வந்து சேர்ந்து படுத்துக்கொண்டது. எலியை அதன் முன்பாகப் போட்டார். விடிந்து இவர் எழுந்து பார்க்கையில் எலி போட்ட இடத்திலேயே விறைத்துக் கிடந்தது.

   டைகரை அவர் வேட்டைக்குத் தயார் செய்வதற்கு ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டது. முதலாகப் பைத்தியம் பிடித்ததுபோலக் காட்டினுள் சும்மாவுக்கேனும் ஓடுவதை அதுவாகவே நிறுத்திக் கொள்வதற்கே ஐந்து நாள்களாகிவிட்டன. பின்பாக வேட்டையின்போது பக்கத்து வேலியிலிருந்து குழிக்குள் கிடந்த முயல் ஒன்று திடுதிப்பென அரவம் கேட்டு பயந்து தாவிக் குதித்து ஓட, அதனைத் துரத்திக்கொண்டு ஓடிய டைகர் போன திசை தெரியாமல், வெகு நேரம் கூப்பாடு போட்டுப் பார்த்தபடி அங்கேயே நின்று சலித்தார். பின்பாகத் தனி வேட்டையாடும் விருப்பமில்லாமல் வீட்டுக்கு இவர் வந்து நீட்டிக் கிடந்தபோது, வாயில் முயலைக் கவ்விக்கொண்டு நிதானமாக வீடு வந்து சேர்ந்தது டைகர். ‘சபாஷ் சபாஷ்’ என டைகரைப் பாராட்டிக்கொண்டே இருந்தார் ஆரப்பன், வடைச்சட்டியில் கறி வேகும் வரை.

   இன்னைக்கென்னவோ கைக்குச் சிக்கினது வாயிக்கிச் சிக்கலங்கற மாதிரி, கண்ணுக்குச் சிக்குனதும் கைக்குச் சிக்குவனான்னு போக்குக் காட்டிட்டே ஓடுதுங்களே! டைவரச் சொல்லியுங் குத்தமில்லெ! முன்னெல்லாம் ஒரு வட்டச் சோறு தின்னுட்டு வகுத்தை டிம்முனு வச்சுட்டு ஒரே கெடையில் விழுந்து நெளிச்சுட்டுக் கிடப்பான்! பத்துப் பாஞ்சு தாவுல மொசலா இருந்தாலுஞ் செரி, கீரியா இருந்தாலுஞ் செரி எட்டிப் பிடிச்சுடுவான்! கெளுத்தியா இருக்குற ஒரு எலியக்கூட ஓடிப் பிடிக்க முடியல இப்ப இவனால! அவட்டைச் செத்த எலிங்களையும் அணில்களையும்தான் எதோ பிடிக்க முடியுது! இதுல முயலுக்கு எங்க போக? முயல் கறினு வடைச்சட்டியில வேக வச்சு வருசமாச்சி! உடும்பை வங்குலயே தோண்டீட்டுப் போயி பிடிச்சா பிடிச்சதுதான். தப்புறு குப்புறுனு கிளம்பிடுச்சுன்னா போச்சு! டைவரால என்ன உசுப்பேத்துனாலும் ஓடிப் பிடிக்க முடியறதில்லே! கறிதின்னே பழகிப்போச்சு இந்த வாயி! கெடச்சிரும் கெடச்சிரும்னு ரொம்ப நம்பிக்கையா காடு காடா வெய்யில்ல சுத்துறது மட்டும் மிச்சம். டைவருக்கும்தான் தெரியுது... வேட்டை கிடைச்சாத்தான் நாலு எலும்பைக் கடிச்சுட்டாவது கிடக்கலாம்னு! ‘இந்தா என்னெப் பிடிச்சுக்கோ!’ என்று எந்த உயிரினமும் டைகரின் முன்னால் வந்து இந்த நாள் வரை நின்றதில்லை. அது சாத்தியமுமில்லை.

   “டைவரே, அந்த வேலியில சந்து இருக்குதானு பாரு... நாம கொரங்காட்டுக்குள்ளார போவோம்!” ஆரப்பன் தொய்ந்துபோன குரலில் சொன்னார். அப்படித்தான் அவர் சொல்ல வேண்டுமென டைகரும் எதிர்பார்த்திருந்ததைப்போல வேலிச் சந்தில் நுழைந்தது. அதற்கும் சலப்புத் தண்ணீர் தேவையென்றே இருந்தது. வேலியில் குனிந்து காய்ந்து கிடந்த கிளுவை மரத்தைத் தாண்டி இந்தப் பக்கமாக ஆரப்பன் காட்டுக்குள் காலை வைக்கையில் லப்பர் செருப்பு காது அந்து திருகிச் சென்றது! கையால் அதை எடுத்துத் துளைக்குள் பட்டனை மமட்டைக் கடித்துக்கொண்டு திணித்து காலுக்குப் போட்டுத் தொட்டுக்கொண்டு நடந்தார்.

   தூரத்தே சிகாமணி தோட்டத்தில் பத்துப் பாஞ்சு தென்னை மரங்கள் கூட்டமாய் நின்றிருந்தன. தண்ணீர் கிடைக்குமெனத் தெரிந்ததும் ஆரப்பனுக்குத் தெம்பு கூடிக்கொண்டது. இப்போது ஒரு கீரிப்பிள்ளை ஓடினால்கூட இவரே துரத்தியோடிப் போய் அதை அமுக்கிவிடுவார்போல. ஆனால், வேலியில் ஓணான் ஒன்று, “நெனப்பெல்லாம் நல்லாத்தான் இருக்குதுடியோ!” என்பது போல இவரைப் பார்த்துத் தலையை மேலும் கீழும் ஆட்டிக் காண்பித்தது. அது டைகருக்கு பயந்து வேலியின் மீது அப்போதுதான் மேலேறியிருந்தது.

   டைகர் முன்னால் போக ஆரப்பன் நிதானமாய்த் தோட்டத்தினுள் நுழைந்தார். தண்ணீர் போகும் வரப்பில் நேராகத் தண்ணீர்த்தொட்டி நோக்கித்தான் டைகர் சென்றது. இவர் கொய்யா மரத்தில் பழமிருக்கிறதா என்று பார்த்தார். இரண்டு கிளிகள் கீச்பூச்செனக் கத்திக்கொண்டு பறந்து சென்றன. மரத்தில் எல்லாமும் பச்சைக் காய்களாகவே தொங்கின. அவற்றை இவரால் மெல்ல முடியாது. மனுசன் திங்கறதுக்கு மரம் வளர்த்துனா, இதுங்க எப்பிடித்தாம் கண்டுபிடிச்சு பறந்து வந்துடுதுங்களோ! பழம் ஆகுறதுக்கும் முன்னாடியே கொத்துற பதத்துலயே சொரண்டித் தின்னுபோடுதுங்க!

   டைகர் குரைக்கும் சப்தமும் எதிர்க் குரலாக இன்னுமொரு நாய் குரைக்கும் சப்தமும் கேட்டது இவருக்கு. சிகாமணியின் நாய்தான் அந்த இன்னொரு குரல். அதை சிகாமணி சங்கிலியில் கட்டிவைத்திருப்பான். எப்போதுமே அப்படித்தான். ‘அவுத்து வுட்டா நேரா ஊட்டுக்கு வந்துடுது பெருசு... அங்க ஏற்கெனவே ஒன்னு இருக்குது’ என்பான். மறுபடியும் சப்தமெதுவும் வரவில்லை. ‘உனக்கு வாழ்வு... உம் முதலாளியோட காடு காடா சுத்துறே! இங்க பாரு என்னைய... சங்கிலி போட்டு ஒரே கெடையில கெடன்னு போட்டுட்டான் என் முதலாளி’ என்று சிகாமணி நாயும், ‘இங்க எனக்கென்ன வாழ்வு? காடு காடா சுத்திப் பாரு அப்போ தெரியும் என்னோட நெலமை’ என்று டைவரும் பேசி முடித்திருக்கலாமென நினைத்துக்கொண்டே தண்ணீர்த்தொட்டிக்கு வந்துசேர்ந்தார் ஆரப்பன்.

   டைகர் தொட்டிக்கு அருகில் ஈர மண்ணில் நீட்டிப் படுத்துவிட்டது. ஆரப்பன் கிடைக்கல்லின் மீதேறி நின்று தொட்டியினுள் இரு கைகளையும் சேர்த்துவிட்டு அள்ளி அள்ளிக் குடித்தார். குடிக்கக் குடிக்க தாகம் அடங்கினதுபோலவே இல்லை. கடைசியாகத் துண்டைத் தலையிலிருந்து உருவி கிடைக்கல்லில் போட்டார். மீண்டும் தண்ணீரை அள்ளித் தலையிலும் முகத்திலும் அடித்துக்கொண்டார். ஒடுக்கு விழுந்த ஈயப்போசி கிளுவை மரத்தின் கிளையில் இருந்தது. அதை எடுத்து வந்து தண்ணீர் மோந்து டைகருக்கு வைத்தார். டைகர் ‘தண்ணியா?’ என்று சங்கடப்பட்டு எழுந்து வந்து நாக்கை நீட்டி நீட்டிக் குடித்தது.

   சிகாமணியின் நாய் வேப்ப மரத்தடியில் கட்டப்பட்டுப் படுத்தபடி இவரையே பார்த்தது. ‘உனக்குத் தண்ணி வேணுமா?’ என்றார் சப்தமாக. அந்த நாயின் அருகில் சோத்து வட்டில் குப்புறக் கிடந்தது. இவர் போசியில் தண்ணீர் கொண்டுபோய் குப்புறக் கிடந்த வட்டிலைத் திருப்பினார். நேற்று இரவு வைத்த சோறோ என்னவோ... ஒரு துளி வாய் வைக்காமல் குப்புறத் தள்ளிவிட்டு ரோசமாகப் படுத்திருப்பதாய் நினைத்தார். வட்டிலில் தண்ணீர் ஊற்றிக் கழுவிவிட்டு வட்டில் ரொம்பத் தண்ணீர் ஊற்றினார். அந்த நாய் எழுந்து வாலை ஆட்டிக்கொண்டே தண்ணீரைக் குடித்தது. ‘நாயி வளத்துறானுங்க பாரு கேனப்பயலுவ’ என்று முனகிக்கொண்டே போசியைக் கிளுவை மரத்தில் பழையபடி வைத்துவிட்டு மீண்டும் தொட்டிக்கே வந்தார். கீழே நனைந்து கிடந்த துண்டை எடுத்து மீண்டும் உருமாலை கட்டிக்கொண்டார். டைகர், இன்னிக்கி வேட்டை அவ்ளோதான் என்பதுபோலக் கால் நீட்டிக் கிடந்ததைப் பார்க்க சங்கடமாகவும் இருந்தது இவருக்கு.

   இவருக்கும் களைப்பில் நீட்டிவிடலாம் என்றுதான் இருந்தது. மூட்டு மூட்டாய் வலித்தது. அப்படிச் செய்ய முடியாது. இருந்தும் நாயின் அருகே போய்க் கால்நீட்டி அமர்ந்தார். நாயின் தலையைக் கைகளால் தூக்கி மடியில் வைத்துக்கொண்டார். அதன் நெற்றியை நீவிக் கொடுத்தபடி, “நம்ம ரெண்டு பேருக்கும் இப்பெல்லாம் ரெம்ப முடியலடா டைவரே! நாம கறியா நெறையத் தின்னம்னா மட்டும்தான் இனிமேல் வேட்டைக்கினு காட்டுக்குள்ள சங்காமச் சுத்த முடியும். ஆமா பாத்துக்க! என்ன திங்கோணும்?” கண்களைச் சொகுசாய் மூடி முதலாளி மடியில் கிடந்த டைகர், கண்களைத் துளி விரித்துப் பார்த்தது. “கறி திங்கோணும்! வெதுப்பு வெதுப்புனு இடிஞ்ச செவுத்துல மண்ணைப் பூசுறாப்புல வட்டல்ல இருந்து எடுத்து வாயிக்குள்ளார பூசணும்... ஆமா... சரி போவமா?” ஆத்தா மாவாளியாத்தா நமக்குன்னு வேட்டையைப் போற வழியில கண்டிப்பா வச்சிருப்பா! அந்த வேட்டை நம்ம ரெண்டு பேருக்கு மட்லும்தான். ஆமா யாருக்கும் பங்கு கிடையாது!’ மடியிலிருந்து டைகரின் தலையைத் தூக்கிக் கீழே வைத்துவிட்டு எழுந்தார்.

   சிகாமணி தோட்டத்தில் தக்காளிப் பாத்தி மூன்றும், மிளகாய்ப் பாத்தி மூன்றும் போட்டிருந்தான். முதலாகத் தக்காளிப் பாத்திக்குள் நுழைந்தவர், வேட்டியில் சிவந்த பழங்களாகப் பறித்துப் போட்டுக்கொண்டார். அடுத்து மிளகாய்ப் பாத்திக்குள் நுழைந்தார். சிவந்த பழங்களாகப் பறித்து, வேட்டிக்குள் போட்டுக்கொண்டு, டைகர் கிளம்பினானா என்று பார்த்தார். டைகர் இன்னும் அதே இடத்தில் நீட்டிக் கிடப்பது தெரியவே, தெற்கே காட்டினுள் கையில் பிடித்திருந்த வளைந்த தடியை ஆட்டிக்கொண்டே மெதுவாக நடந்தார். அவருக்கு வீடு செல்வதற்குள் ஒரு வேட்டையாச்சும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த வேட்டை எது என்றுதான் தெரியவில்லை. கொரங்காட்டு வேலியைத் தாண்டி தெற்கேயே நடந்தார். பத்து வருடங்களில் அவர் வேட்டையாடாத இடமே இல்லை இந்தச் சுற்று வட்டாரத்தில். இதோ இந்த இட்டேறியில் கூடசேர நான்கு அணில்களை ஒண்டி வில்லில் சட்டுச் சட்டெனக் கல்விட்டு அடித்தெடுத்து அரணாக் கயிற்றில் கோத்து நடையிட்டிருக்கிறார். ஒண்டிவில்லை இப்போது அவரால் பயன்படுத்த முடிவதில்லை. இவர் ஒரு பக்கம் குறி பார்க்க, கல் ஒரு பக்கம் செல்கிறது விர்ர்ர்ரென.

   பெரிய புளியாமரத்தடிக்கு வந்து சேர்ந்தார் ஆரப்பன். கருத்த நிழல் ‘படுத்துக்கோ ஆரப்பா! படுத்துக்கோ ஆரப்பா!’ என்று சொன்னது. இந்த இடத்தில்தான் நான்கு வருடத்துக்கு முன்பு முத்துச்சாமி பையன் சின்னு பாப்பாவுடன் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்தான். பாப்பாவை சின்னு கட்டிக் கொள்வதாய்க்கூட அன்று இவரிடம் சொன்னான். பாப்பா ஒரு வருடத்தில் அரளிக்கொட்டை சாப்பிட்டு நாய்க்கழிசலை ஊற்றியும் தப்பிக்காமல் செத்துப்போனாள். அப்போது அவள் வயிற்றில் மூன்று மாதம் என்றார்கள். யார் காரணம் இதற்கு என்று ஊருக்கே தெரியவில்லை. சின்னு இப்போதுதான் கல்யாணம் கட்டி வந்திருக்கிறான் ஊருக்குள். ஆரப்பன் வழக்கமாக வருகையிலெல்லாம் பெரிய புளியாமரத்தடிக்கு வருவதே இல்லை. சுற்றாக வேறு திசையில் சென்றுவிடுவார். இன்று அவரையறியாமல் வந்துசேர்ந்துவிட்டார் இந்த இடத்திற்கு. இப்போதும் கையைப் பிசைந்துகொண்டு பாப்பா நிற்பதாக அவருக்குத் தோன்றி மறைந்தது ஒரு கணம். ‘பாவம் பாப்பா’ என்று முனகிக்கொண்டே மரத்தடியைத் தாண்டினார் ஆரப்பன்.

   பின்னால் டைகர் வருகிறானா என்று அடிக்கடி திரும்பிப் பார்த்துக்கொண்டார். டைகர் ராசி பார்ப்பதாக எண்ணிக் கொண்டார். ரெண்டு பேரும் சேர்ந்து வேட்டையாடினால் இன்று ஒரு சுண்டெலிகூடக் கிடைக்காது என்பதை உணர்ந்து தனியே வேட்டைக்குச் சென்றுவிட்டானோ என்னவோ. தூரத்தே ஆடுகளின் சப்தம் ‘மே... மே’ என்று இவர் காதுகளுக்குக் கேட்டது. முருங்கம் பாளையத்துக்காரர்கள் யாரேனும் ஆடுகளை ஓட்டிவந்து மேய விட்டிருக்கலாம் என நினைத்துக்கொண்டே வரக்கிணறு தாண்டினார். இன்னமும் இரண்டு காடுகள் தாண்டினால் போதும், ஊருக்கான தார் ரோட்டைப் பிடித்துவிடலாம். மயில்களின் சப்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது.

   மர நிழல்களுக்கு இடையே நடந்து கொண்டிருந்தவருக்கு ஏனோ தலை தனியே சுழலுவது போன்று திடீர் திடீரெனத் தோன்றியது. காலையில் பழைய சோற்றுத் தண்ணீரை ஒரு குண்டான் குடித்துவிட்டு கிளம்பியதுதான். வீடு போய்க் கஞ்சி ஆக்கிக் குடிக்க வேண்டும். அதுதான் வழி இப்போதைக்கி. டைகர் ஏன் படுத்த கிடையை விட்டு எழுந்து வரவில்லை என இப்போதுதான் இவருக்கே பட்டது. ஒரு மணி நேரமாச்சும் இங்கே நிழலில் கிடக்க வேண்டியதுதான். வாகான இடம் தேடி நகர்ந்தார். வேப்ப மரங்கள் பூத்துக் குலுங்கி நின்றன. ‘மழையே இல்லன்னாலும் இதுக கெளுத்திக்கிக் கொறச்சலே இல்ல’ என்று நினைத்தபடி கால் நீட்டி அக்கடாவென சாய்ந்தார். பீடி ஒன்று பற்றவைக்கலாம்தான். ஆனால், புகை ஊதி முடித்ததும் தண்ணீர் கேட்கும் வாய். அதற்கு இங்கே வழியில்லை. பீடி நினைப்பை உதறித் தள்ளிவிட்டுக் கண்களை மூடினார். விசு விசுவென மெலிதாகக் காற்று வீசியது. சீக்கிரத்திலேயே அசந்து குறட்டைபோட ஆரம்பித்துவிட்டார் ஆரப்பன்.

   எவ்வளவு நேரமிருக்குமென அவர் அறியவில்லை. தன் காதை யாரோ நக்கிவிடுவதைப்போல் உணர்ந்தவர் தூக்கக் கலக்கத்திலேயே... ‘த்தேய் கம்முனு போ!’ என்று வாய்விட்டே சொன்னார். ‘ங்கூ ங்கூ ங்க்கூஊஊவ்’ என்று காதுக்கருகில் குரல் கேட்கவே, சிரமப்பட்டு எழுந்து அமர்ந்தார் ஆரப்பன். அவர் முன் குந்தவைத்து டைகர் அமர்ந்திருந்தது. சற்றுத் தள்ளி நான்கு மாதமேயான ஆட்டுக்குட்டி ஒன்று கழுத்தில் கடிபட்டு செத்துக்கிடந்தது. திடீரென இவரின் இதயம் வேகமாய்த் துடிக்க ஆரம்பித்துவிட்டது. என்ன கொடுமை இது?

   “டேய் டேய் டேய்! என்னடா காரியம் பண்ணிட்டு வந்து நிக்குறே? இந்தப் பாவத்தையும் பண்ணிட்டியாடா! பச்செ மண்ணுடா இது...” கோபத்தில் கைக்கு அருகில் கிடந்த வேட்டைத் தடியை எடுத்து ஓங்கி டைகரின் மீது எறிந்தார். ‘கைக் கைக் கைக்’கென மண்டையில் அடி விழுந்திருந்தாலும் முன்னங்காலை நொண்டிக்கொண்டே அங்கிருந்து ஓட்டமெடுத்தது டைகர்.

   ஆரப்பன் எழுந்து ஆட்டுக் குட்டியின் அருகில் வந்தார். அதைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. கண்களில் கண்ணீர் தளும்பிக்கொண்டு வந்துவிட்டது. ஆட்டுக்காரருக்கு ‘இப்படி ஆயிப் போச்சுங்கோ’னு சொல்லிப் பணம் கொடுத்து விடலாமென்றால், கையில் நயாப் பைசா கிடையாது. குட்டியைத் தூக்கிச் சுள்ளிமுள் புதர் ஒன்றுக்குள் வீசியெறிந்தார். சீக்கிரமாக இடத்தைக் காலிசெய்துவிட வேண்டும் என நினைத்து வெக்குடு வெக்குடென ஊர் நோக்கி நடையிட்டார் ஆரப்பன். அவருக்கு இன்னமும் படபடப்பு தீரவேயில்லை நெஞ்சில். என்ன ஒரு அக்குரமம்! பசி என்ன வேணாலும் பண்ணச் சொல்லிடுமா? டைகரைக் கையோடு கொரங்காட்டிலிருந்து கூட்டி வந்திருந்தால், இந்தச் சம்பவம் நடந்தேயிருக்காது. சரி சித்த நேரம் கிடந்து வரட்டுமென வந்தது தப்பாப் போயிடுச்சே!

   ஆரப்பன் வீடு வந்துசேருகையில் மாலையாகிவிட்டிருந்தது. சூரியன் இதோ மேற்கில் சாயப்போகிறேன் என்றிருந்தான். கஞ்சி ஆக்கிக் குடித்துவிட்டு, சாப்பாட்டை டைகரின் தட்டில் போட்டு முடித்து வாசல் மண்மேடையில் கால் நீட்டி விழுந்தவருக்கு, அப்போதுதான் டைகர் இன்னும் வீடு வந்து சேரவில்லையே என்ற ஞாபகமே வந்தது. அடித்துவிட்டதற்காகக் கோபித்துக்கொண்டு வீட்டின் பொறக்கடையில் போய்ப் படுத்துவிட்டதா? இல்லை, கிழக்கு வேலியோரம் போய்ப் படுத்துக்கொண்டதா? எழுந்து தடுமாறியபடி வீட்டின் பின் புறத்துக்கு வந்தார். “டைவரே! டைவரே!” காணவில்லை என்றதும் மீண்டும் மண்மேடைக்கே வந்தவர் கிழக்கே பார்த்து “டைவரே! உனக்கு அந்தளவுக்கு ஆயிப்போச்சா?” என்று சப்தமாகவே குரல் கொடுத்தார். இவரின் ஒரு சப்தத்திற்கு எங்கிருந்தாலும் ஓடி வந்துவிடும் டைகரைக் காணாதது அவருக்குள் மீண்டும் பதைபதைப்பை உருவாக்கிவிட்டது.

   அப்படியே மேடையில் சாய்ந்தவர் வானத்து நட்சத்திரங்களைப் பார்த்தபடி, “உன்னிய நான் கோபத்துல ஒரு சாத்து சாத்திட்டண்டா... மனசுல அதப் போயி வச்சுட்டு ஊட்டுக்கு வராமெ போயிருவியா? எங்க சாமி போனே? உனக்குக் காட்டைத் தவுத்து எந்த ஊடு தெரியும்? வெளியூருக்கு ஓடுனீன்னா மச நாயின்னு கல்லெறிஞ்சு கொன்னுபோடுவாங்க சாமி! எங்கதாம் போனே?” புலம்பியவருக்கு, நாயில்லீன்னா நாம எனத்துக்கு ஆவோம்? என்று நினைத்ததும் அழுகை முட்டிக்கொண்டு வந்துவிட்டது. அழுது ஓய்ந்ததும் நாயின் ஞாபகமாவே இருந்தவர், காடு காடாய்ச் சுற்றிய அசதியில் சீக்கிரமே தூங்கியும் போனார். “ங்கூ ங்கூ’ என்று தன்னைச் சுற்றிலும் சப்தம் வந்துகொண்டே யிருப்பதாகவும் அவருக்கு ஒரு ஞாபகம் இருந்துகொண்டே இருந்தது தூக்கத்திலும்.

   நடுச்சாமம் இருக்கையில் புரண்டு படுத்தவரின் கைகளில் மொரமொரப்பாய் ஒரு பொருள் படவே திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவர், கண்களைக் கசக்கிக்கொண்டு சுற்றிலும் பார்த்தார். நிலா வெளிச்சம் கண்ணுக்குப் பழக்கப்பட நிமிடங்களாயிற்று. தன் அருகே நீட்ட வாக்கில் மூன்று கிலோ தேறும் என்கிற மாதிரி உடும்பு ஒன்று கிடந்தது. எப்போதும் இவர் அருகிலேயே படுத்திருக்கும் டைகர், சற்றுத் தள்ளி மேடையின் தெற்குக் கடைசியில் வீட்டைப் பார்த்துப் படுத்திருந்தது.
   https://www.vikatan.com
  • By நவீனன்
   டெரரிஸ்ட் - சிறுகதை
       ஷான் கருப்பசாமி - ஓவியங்கள்: கோ.ராமமூர்த்தி  
   20 வருடத்துக்கு முன்பான கல்லூரி வாழ்க்கை, வேறொரு பிறவியைப்போல இருக்கிறது. முற்பிறவியிலிருந்து யாரையாவது மீண்டும் சந்திக்கும்போது, நெற்றியைச் சுருக்கி யோசிக்க வேண்டியிருக்கிறது அல்லது விழிகளை விரித்து ஆச்சர்யப்பட வேண்டியிருக்கிறது. சதையைக் கூட்டியோ, சிகையை உதிர்த்தோ அல்லது வெளுத்தோ அவர்கள்மீது விளையாடியிருக்கும் காலம். வெங்கடேஷும் அப்படித்தான் இரண்டு மடங்கு குறுக்கில் வளர்ந்திருந்தான். பாதி முடியை இழந்திருந்தான். கல்லூரியில் எங்களுக்கு ஜூனியர். வெவ்வேறு துறை. ஆனால், ஹைதராபாத்தில் மூன்று நட்சத்திர விடுதியின் வரவேற்புப் பகுதியில் தூரத்தில் பார்த்தபோதே வெங்கடேஷை எனக்கு அடையாளம் தெரிந்துவிட்டது.

   இந்த அற்புத நினைவாற்றலுக்குக் காரணமானவன் ரமேஷ். அவனுடைய ஒன்றுவிட்ட சகோதரன்; ஹாஸ்டலில் எனது அறைத் தோழன். ஆனால், `ரமேஷ்’ என்றால் கல்லூரியில் யாருக்கும் தெரியாது. அவனுக்கு இடப்பட்டிருந்த பட்டப்பெயர் `டெரரிஸ்ட்’. சுருக்கமாக `டெரர்’. நான் குமரேசன்.

   டெரர் நிலக்கரிக்கறுப்பு. நெடுநெடுவென்று உயரம். உயரத்துக்குத் தகுந்த உடல். ஒரே வகுப்புதான் என்றாலும் அவன் அருகில் நாங்கள் கொஞ்சம் பொடிசாகத்தான் தெரிவோம். சிவந்த கண்கள். வாயில் எப்போதும் பான்பராக் இருக்கும். அந்த வாசம் அவனுடைய வாசமாகவே மாறிவிட்டிருந்தது. முகத்தில் அலட்சியமான சிரிப்பு. கல்லூரியிலும் ஹாஸ்டலிலும் இருக்கும் எந்த விதியையும் மதிக்காத அவனது நடவடிக்கைகளால் அவனுக்கு `டெரரிஸ்ட்’ என்ற பெயர் நிலைத்துவிட்டது. அவன் பூர்வீகம் தமிழ்தான். தெலுங்கு வாடையுடன் பேசுவான்.

   அது 90-களின் முற்பகுதி. எங்கள் அறையில் அவனையும் சேர்த்து ஆறு பேர். நாங்கள், இன்ஜினீயர் ஆவதை வாழ்வின் குறிக்கோளாக வைத்திருந்தவர்கள். சரியான நேரத்தில் எழுந்தோம், குளித்தோம், மணி அடிப்பதற்குள் வகுப்பில் இருந்தோம். பயந்துகொண்டே சைட் அடித்தோம். இரவு உணவுக்கு நாள் தவறாமல் ஹாஸ்டல் வந்தோம். பேராசிரியர்களைக் கிண்டல்செய்து, மறைத்துவைத்து செக்ஸ் புத்தகம் படித்து, அளவாக அரட்டை யடித்துவிட்டு உறங்கினோம். பணம் கேட்டு அப்பா அம்மாவுக்குக் கடிதம் எழுதினோம். ஆனால் டெரர் அப்படியல்ல.

   நாங்கள் கல்லூரிக்குக் கிளம்பும்போதும் அசையாமல் தூங்கிக்கொண்டிருப்பான். வகுப்புக்கெல்லாம் வரவே மாட்டான். எப்போதாவது தோன்றினால், கலைந்த தலையுடன் கசங்கிய உடையுடன் தாமதமாக வந்து வாசலில் நிற்பான். அன்றும் பாதியிலேயே எழுந்து போய்விடுவான். இரவு நாங்கள் அறைக்குத் திரும்பிய பிறகும் பெரும்பாலும் டெரர் வந்திருக்க மாட்டான். அவன் கட்டில் காலியாகவே இருக்கும். ஊருக்குள் அறை எடுத்து வசிக்கும் சீனியர் மாணவர்களுடன் நெருக்கமாகி யிருந்தான். லாரிப் பட்டறை வைத்திருக்கும் உள்ளூர் ஆள்களுடனான பழக்கம்வேறு. தினமும் யாராவது அவனுக்கென்று கிடைப்பார்கள். அவர்களோடு சேர்ந்து நன்றாகக் குடித்துவிட்டு அறைக்கு வருவான்.

   போதை மீறியிருந்தால் ``டேய்... குமரேசா...” எனக் கட்டிப்பிடித்து, கன்னத்தில் முத்தமிடுவான். எனக்கோ பற்றிக்கொண்டுவரும். கோபமாக அவனை உதறிவிட்டு என்னுடைய கட்டிலுக்குத் திரும்பிவிடுவேன். `அந்த அறையை விட்டு வேறு அறைக்கு மாறிவிடலாம்’ எனப் பல நேரம் தோன்றும். ஆனால் சந்திரன், கோபி, செல்வம் என எந்த வம்புதும்புக்கும் போகாத எனக்குப் பிடித்த நண்பர்களும் இங்குதான் இருந்தார்கள்.

   எங்கள் வீடுகளில் `வாழ்க்கையில் முன்னேற, படிப்பு மட்டும்தான் ஒரே வழி!’ என்று மண்டைக்குள் ஆணி அடித்து அனுப்பியிருந்தார்கள். டெரர் போன்ற ஒருவனுடன் பழகுகிறோம் எனத் தெரிந்தாலே, வண்டி கட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள். எனவே, டெரரை எங்கள் அறையிலிருந்து மொத்தமாக வெளியேற்றுவது எனத் திட்டமிட்டோம்.

   நேரில் சென்று புகார் செய்ய தைரியமில்லாமல் ரகசியமாக வார்டனுக்கு மொட்டைக்கடிதம் ஒன்றை எழுதினோம். சந்திரனும் செல்வமும் டெரர் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனாலும் அவர்கள் மறுப்பு சொல்லவில்லை. கையெழுத்து தெரியக் கூடாதென்று ஆளுக்கு ஒரு வார்த்தையாக நானும் கோபியும் எழுதி, அந்தக் கடிதத்தைத் தயார்செய்தோம். அதில் டெரர் தனது அறையிலேயே குடிப்பதாகவும் சிகரெட் புகைப்பதாகவும், அவன் அங்கே இருப்பது மற்ற மாணவர்களுக்குத் தொந்தரவாக இருப்பதாகவும் எழுதினோம். கல்லூரியிலிருந்து பத்துக் கிலோமீட்டர் தொலைவில் இருந்த நகரத்துக்கு பஸ் பிடித்துச் சென்று தபால்பெட்டியில் போட்டுவிட்டு வந்து காத்திருந்தோம்.

   ஒரு வாரம் எதுவும் நடக்கவில்லை. அதற்குப் பிறகும் எதுவும் நடக்காது என நாங்கள் நம்பிக்கை இழந்திருந்தபோது, ஒரு மாலை வேளையில் வார்டனிடமிருந்து டெரருக்கு அழைப்பு வந்தது. அபூர்வமாக அப்போது அவன் அறையில்வேறு இருந்தான். டெரர் வெளியேறிப் போனதும் நானும் கோபியும் மானசீகமாகக் கைகுலுக்கிக்கொண்டோம். தேர்வு முடிவுக்குக் காத்திருப்பவர்களைப்போல் காத்திருந்தோம். நீண்ட நேரமாகியும் டெரர் திரும்பி வரவேயில்லை. பிறகு, களைத்துப்போய்த் தூங்கிவிட்டோம்.

   நள்ளிரவில் கதவு தட்டப்பட்டது. கதவுக்கு அருகில் இருந்த நான்தான் எழுந்து வழக்கம்போல் கதவைத் திறந்தேன். அவன் வழக்கம்போல் குடித்திருந்தான். அமைதியாக உள்ளே வந்து பேன்ட்டைக் கழற்றி லுங்கிக்கு மாறினான். கட்டிலில் ஏறிப் படுத்துக்கொண்டான்.

   சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு, தைரியத்தை வரவழைத்துக் கேட்டேன்... ``வார்டன் என்ன சொன்னாரு?”

   டெரரிடமிருந்து களுக்கென்ற சிரிப்பு மட்டும் வந்தது. வேறு பதில் இல்லை. சிறிது நேரம் சென்று நான் தலையைத் தூக்கிப் பார்த்தபோது குப்புறப்படுத்து ஒரு கையைக் கட்டிலுக்கு வெளியே தொங்கவிட்டு உறங்கிப்போயிருந்தான்.

   மறுநாள் காலை, அறையில் ஒரே அமளி. எப்போதும் விடியற்காலை யிலேயே எழுந்து மெஸ்ஸின் முதல் பந்தியிலேயே சாப்பிட்டு வந்துவிடும் செல்வம்தான் நிறைய செய்திகளோடு வந்திருந்தான்.

   ``வார்டனை ஹாஸ்டலை விட்டு அனுப்பிட்டாங்களாம்டா!”

   அவனைச் சுற்றி, சிறு கூட்டம் கூடியிருந்தது.

   ``ஹாஸ்டலுக்குப் பின்னால பாறை பாறையா சின்ன மலை இருக்கில்ல... அது மேல குடிச்சுட்டு மட்டையாகிக் கிடந்தாராம். ராத்திரி யாரோ ஸ்டூடன்ட்டைக் கூட்டிக்கிட்டு அங்கே குடிக்கப் போயிருக்காருன்னு சொல்றாங்க. கரஸ்பாண்டென்ட் வரைக்கும் விஷயம் போய், அவரை வார்டன் போஸ்ட்ல இருந்து தூக்கிட்டாங்களாம். விடியற்காலையி லேயே பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துட்டுப் போகச் சொல்லிட்டாங்க ளாம். அநேகமா லெக்சரர் வேலையும் போயிரும்னு சொல்றாங்க.”

   டெரர் இன்னும் தூங்கிக்கொண்டுதான் இருந்தான். அதன்பிறகு, நக்ஸை வெளியேற்ற நாங்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

   திடீரென ஒருநாள் டெரர் சுத்தமாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டையிட்டுக்கொண்டு வகுப்பின் வாசலில் வந்து நின்றான். வாயில் பான்பராக் இல்லை. டெரர் அன்று முழுவதும் வகுப்பில் இருந்தான். பாடங்களைக் கவனித்தான். மாலை எங்களோடு ஒன்றாக ஹாஸ்டலுக்குத் திரும்பினான். ஹாஸ்டலை அடைந்தபோதுதான் எங்களுக்குக் காரணமே விளங்கியது. அவன் அப்பா ஹாஸ்டல் அறையில் கடுகடுவென அமர்ந்திருந்தார். டெரர், அவர் எதிரில் பேசவே பயந்தான். அவர் ஒரு டாக்டர். அறுவைசிகிச்சை நிபுணர்வேறு. தமிழர்தான் என்றாலும் ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். அவர் மனைவியும் ஒரு டாக்டர்.

   ``இவனோட அக்கா, அண்ணா ரெண்டு பேருமே மெடிசின்தான். எங்க வீட்டுல இவன் ஒருத்தன்தான் சரியா மார்க் எடுக்காம இப்படி அழிஞ்சுகிட்டிருக்கான். வேற வழியில்லாம இந்த யூஸ்லெஸ் இன்ஜினீயரிங் படிக்கவேண்டிய தாகிடுச்சு. அதுவும் பேமென்ட் கோட்டாவுல. சொந்தத்துக்குள்ள மானம் போச்சு!”

   பரோட்டாவைப் பிய்த்துப் போட்டபடி `பொறியியல் படிப்பு’ தனது குடும்பத்துக்கு எவ்வளவு அவமானம் என்று அவர் சொன்னபோது, அதை ஏதோ வாழ்வின் சாதனையாக நினைத்துக்கொண்டிருந்த நாங்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

   டெரர் இதற்கெல்லாம் தொடர்பில்லா தவன்போல அமைதியாகச் சாப்பிட்டுக்கொண்டி ருந்தான்.

   அவரை பஸ் ஏற்றிவிடும் முன், அவருடைய கிளினிக் தொலைபேசி எண்ணை எழுதி என்னிடம் கொடுத்தார். நான் அந்த எண்ணைப் புன்னகையுடன் பத்திரப்படுத்துவதை டெரர் ஓரக்கண்களால் கவனித்தான்.

   ``நல்ல பசங்களா இருக்கீங்க... ஒழுக்கமாப் படிங்க. இந்த ராஸ்கல் ஏதாவது ஏடாகூடம் பண்ணினா எனக்கு போன் பண்ணுங்க” - சொல்லிவிட்டு டெரர் இருந்த பக்கம்கூடத் திரும்பாமல் கிளம்பிவிட்டார். டெரர் அறைக்கு வந்ததும் செய்த முதல் வேலை, என் கையில் இருந்த அந்தத் துண்டுச்சீட்டைக் கிழித்துப்போட்டதுதான்.

   நாங்கள், இரண்டாம் ஆண்டுக்கு உயர்ந்து சீனியர்களானோம். எங்கள் கல்லூரி மாநில எல்லையில் இருந்ததால் ஆந்திராவிலிருந்து மாணவர்கள் வருவார்கள். தமிழ் சீனியர்கள் தெலுங்கு மாணவர்களை ராகிங் செய்யக் கூடாது. அதேபோல அவர்கள் யாரும் தமிழ் மாணவர்களைத் தொட்டுவிட முடியாது. இது எழுதப்படாத ஒப்பந்தம். ஆனால், அந்த ஒப்பந்தத்தை மீறி ராகிங் செய்வதும் அதைத் தொடர்ந்து அடிதடிகளும் ஆண்டுதோறும் நடக்கும்.

   இந்தச் சூழலில் மொழிப் பாகுபாடு இல்லாமல் இரண்டு பக்கங்களிலும் டெரருக்குப் பயந்தார்கள். ஆனால், டெரர் யாரையும் ராகிங் செய்தோ மிரட்டியோ நாங்கள் பார்த்ததில்லை.

   கோபி போன்ற எங்கள் வகுப்பில் யாராலும் மதிக்கப்படாத மொக்கை ஆசாமிகள்தான் படுபயங்கரமாக ராகிங் செய்பவர்களாக இருந்தார்கள். அவர்களின் தாழ்வு மனப்பான்மையே வாய்ப்பு கிடைத்ததும் இப்படி வேறு ஓர் ஆவேச முகமாக வெளிப்படுகிறது என்று பின்னால் புரிந்தது.
   அன்று கோபியை வகுப்பில் எதற்கோ அனைவரும் சேர்ந்து பயங்கரமாக ஓட்டிவிட்டார்கள். அந்தக் கடுப்பில் ஹாஸ்டலுக்கு வந்தவன் கண்ணில் தனியாக ஆந்திர மாணவன் ஒருவன் சிக்கிக்கொண்டான். ஊதினால் உடைந்துவிடுவதுபோல் இருந்த அவனை, கொத்தாகப் பிடித்து அறைக்கு அழைத்து வந்துவிட்டான் கோபி. டெரர், அப்போது அறையில் இல்லை.

   ``வாட் இஸ் யுவர் நேம்?”

   ``வெங்கடேஷ் சார்.”

   ``வென் யூ ஜாயின்?”

   ``யெஸ்டர்டே சார்.”

   ஆரம்பக்கட்ட விசாரணையில், வெங்கடேஷுக்கு சுத்தமாகத் தமிழ் வராது என்பது அவனுக்குப் புரிந்தது. பார்ப்பதற்கு நோஞ்சான்போல் இருந்தாலும், கோபியின் துரதிர்ஷ்டம், அவன் மிகுந்த துணிச்சல்காரனாக இருந்தான். அப்படியானவர்களை ராகிங் செய்தால் அவமானம்தான் மிஞ்சும். புலி வாலைப் பிடித்த கதை. நாங்கள் யாரும் அதில் கலந்துகொள்ளவில்லை.

   ``சரி... பேன்டைக் கழட்டுடா.”

   அவனுக்குப் புரியவில்லை. அமைதியாக நின்றான்.

   ``ரிமூவ் யுவர் பேன்ட் மேன்...” கோபி கர்ஜித்தான்.

   ``ஸாரி சார்... நோ!” என்று உறுதியாகச் சொல்லிவிட்டு வெங்கடேஷ் அமைதியாக நின்றான். அதன்பிறகு கோபி சொன்ன எதையுமே அவன் செய்யவில்லை. எங்கோ பார்த்தபடி அலட்சியமாக நின்றான். தெலுங்கு சீனியர்கள் சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும். பத்து நிமிடம் இப்படியே கடந்தது. கோபி பொறுமையிழந்தான்.

   பொளீரென விழுந்த திடீர் அறையில் வெங்கடேஷ் கதிகலங்கிப்போனான். கண்களில் நீர் கட்டி நின்றது. சிவந்த கன்னத்தில் விரல்கள் பதிந்த தடம்.

   அவன் கண்ணீருடன் தெலுங்கில் ஏதோ சொன்னான். கேட்டுக்கொண்டி ருந்த எங்களுக்கு அவன் ஏதோ திட்டுகிறான் எனப் புரிந்தது. செல்வம் சும்மா இருக்காமல் சிரித்துவிட்டான்.

   ``இங்கிலீஷ்ல சொல்றா கொல்டி!”

   அவன் மறுபடி ஏதோ சொல்ல, கோபிக்கு என்ன புரிந்ததென்று தெரியவில்லை, அவன் மீது பாய்ந்து முகத்திலும் வயிற்றிலும் தாறுமாறாகத் தாக்கத் தொடங்கினான். விவகாரம் கையை மீறிப் போவதை உணர்ந்து கோபியைப் பிடித்து நாங்கள் இழுப்பதற்குள் வெங்கடேஷ் வயிற்றைப் பிடித்தபடி தரையில் சுருண்டிருந்தான்.

   ``டேய் கோபி... பைத்தியமாடா உனக்கு?” என்றபடி அந்தப் பையனைப் பார்த்தேன். பேச்சு மூச்சு இல்லை. பாட்டிலில் இருந்து தண்ணீரை முகத்தில் அடித்தபோது முகத்தை லேசாகச் சுருக்கினான். ஆனால் விழிக்கவில்லை. வாய் ஒரு பக்கம் கோணி, கண்கள் செருகியிருந்தன. எழுப்பி நிறுத்தினால் மறுபடி தொய்ந்து விழுந்தான். முகம் வீங்கியிருந்தது.

   எங்கள் அனைவருக்கும் கால்கள் நடுங்கத் தொடங்கின. கோபிக்கு இப்போது மொத்தமும் தெளிந்திருந்தது. `அந்நியன்’ அம்பியாக மாறி மயக்கத்தில் இருந்த அந்தப் பையனிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான்.

   ``டேய்... ஸாரிடா! எந்திரிடா. வெங்கடேஷ்... நீ நடிக்கிறேதானே? இங்க பாரு... நாம ரெண்டு பேரும் இனிமே ஃப்ரெண்ட்ஸ், ஓகே... உன்னை யாரும் ராகிங் பண்ணாம நான் பார்த்துக்கிறேன். ப்ளீஸ்டா. டேய்... ஏதாவது பண்ணுங்கடா!”

   ``உடனே டாக்டர்கிட்ட காட்டிடு வோம்டா. ஏதாவது ஆகிடுச்சுன்னா ஜெயில்தான்” என்றான் சந்திரன்.

   செல்வம் ஓடிச்சென்று ஒரு ஆட்டோ பிடித்து வந்தான். எங்கள் அறை ஹாஸ்டலின் பின்வாசலுக்கு அருகிலேயே இருந்ததால் இருளைப் பயன்படுத்தி யாரும் கவனிக்கும் முன் அவனைக் கைத்தாங்கலாக உள்ளே ஏற்றிவிட்டோம். இடம் இல்லாததால் சந்திரனை ஹாஸ்டலிலேயே விட்டுவிட்டுக் கிளம்பினோம்.

   ``என்னாச்சு தம்பி?” என்றார் டிரை வர் ஆட்டோவைக் கிளப்பியபடியே.

   ``நாலு நாளா ஃபீவர்ணே... அதான்” அந்த நடுக்கத்திலும் பொய் சரளமாக வந்தது.

   கல்லூரியிலிருந்து ஐந்து கிலோமீட்டரில் ஊருக்குள் ஒரு நர்ஸிங் ஹோமில் `விபத்து’ என்று சொல்லி, அவனை அட்மிட் செய்தோம். அந்த டாக்டர் உள்ளூர் இளைஞர். ஆரம்பக்கட்ட சிகிச்சை செய்து அவனுக்கு சலைன் ஏற்ற ஆரம்பித்து விட்டு, எங்களை அறைக்கு வெளியே சந்தித்தார். மிகவும் கோபமாக இருந்தார்.

   ``என்ன ஆச்சு இவனுக்கு?”

   ``படியில உருண்டு விழுந்துட்டான் டாக்டர்” என்றான் கோபி தரையைப் பார்த்தபடி. டாக்டரின் சிவந்த முகம் மேலும் சிவந்தது.

   ``ராஸ்கல்ஸ். என்னைப் பார்த்தா லூஸு மாதிரி இருக்கா உங்களுக்கு? அவன் மூஞ்சி முழுக்க வீக்கம். கன்னத்துல விரல் பதிஞ்சிருக்கு. அடிச்சுக் கொண்டுவந்து ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கீங்க. அவனுக்கு எபிலெப்சியா வேற இருக்கு. வலிப்பு வந்திருக்கு... விட்டிருந்தா செத்திருப்பான். ஐ யம் கோயிங் டு த போலீஸ்.”

   கோபிக்கு சப்த நாடிகளும் ஒடுங்கிவிட்டன.

   ``டாக்டர்... ப்ளீஸ் டாக்டர்... வீட்டுக்குத் தெரிஞ்சா, என் அப்பா என்னைக் கொன்னே போட்டுடுவாரு.”

   ``அதெல்லாம் ஒரு சின்னப்  பையனை மாட்டை அடிக்கிற மாதிரி அடிக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும். சொல்லு, உன் பேரு, விவரம் எல்லாம் சொல்லு.”

   எனக்கும் செல்வத்துக்கும் எங்கள் வீடு நினைவுக்குவந்தது. ஏதாவது நடந்து கல்லூரியிலிருந்து தூக்கிவிட்டால், யோசிக்காமல் எங்களைக் கொன்றுவிடுவார்கள். என்ன செய்வதெனத் தெரியாமல் கையைப் பிசைந்து நின்று கொண்டிருந்த வேளையில், ஒரு புயலைப்போல டெரர் உள்ளே நுழைந்தான். அப்படியோர் அசாதாரணமான சூழலில் அவனைப் பார்த்ததும் புதிரான ஒரு நிம்மதி வந்தது. நேராக அறைக்குள் சென்று வெங்கடேஷைப் பார்த்துவிட்டு வந்தான்.

   அவனிடம் ஏதோ பேச நான் வாயெடுப்பதற்குள் நேராக கோபியை நெருங்கியவன், அவன் கன்னத்தில் விட்டான் ஓர் அறை. அந்த அறையின் வேகத்தில் கோபி தரையில் விழுந்துவிட்டான். மேலும் அவனை மிதிக்கப் போனவனை டாக்டர் இழுத்துப் பிடித்தார்.

   ``ஏய், யாருப்பா நீ... எதுக்கு இவனை அடிக்கிறே? ஸ்டாப் இட்!”

   எங்களுக்கு வெலவெலத்துப்போனது. தெலுங்கில் ஏதேதோ கத்திக்கொண்டிருந்தான் டெரர்.

   ``கேன் யூ ஸ்பீக் இன் டமில்?”

   ``டாக்டர், வெங்கடேஷ் என் கசின். ராகிங் பண்றேன்னு இப்படிப் பண்ணி வெச்சிருக்கானுங்க. இப்போ அவன் பேரன்ட்ஸுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்?”

   டெரர் சொல்லச் சொல்ல எனக்கு மயக்கமே வரும்போல இருந்தது, `போயும் போயும் இவன் சொந்தக்காரனையா அடித்துவைத்திருக்கிறான் இந்தப் படுபாவி கோபி!’

   ``சும்மா விடக் கூடாது சார் இவங்களை. கேஸ் போட்டு உள்ளே தள்ளணும். காலேஜை விட்டே துரத்தணும்.”

   டெரர் ஆத்திரத்தில் துள்ளிக்கொண்டிருக்க, டாக்டர் அவனை சமாதானம் செய்யத் தொடங்கியிருந்தார். வழக்கு என்றால் அவருக்கும் தலைவலிதான் எனத் தோன்றியிருக்க வேண்டும்.

   ``இங்க பாருங்க மிஸ்டர்...”

   ``எம் பேர் ரமேஷ் டாக்டர்... நானும் ஸ்டூடன்ட்தான்.”

   ``சரி ரமேஷ், கொஞ்சம் பொறுமையா இரு. உன் தம்பி வெங்கடேஷுக்கு சீரியஸா ஒண்ணுமில்லை. எபிலெப்சி இருந்ததால லேசா மயங்கிட்டான். ரெண்டு நாள்ல வீக்கமெல்லாம் போயிடும். இந்தப் பசங்களும் ஏதோ தெரியாமப் பண்ணிட்டாங்க. நீயும் ஸ்டூடன்ட்தானே, வயசு அப்படி!”

   ``அப்படியெல்லாம் சும்மா விட முடியாது சார். எப்படிப் போட்டு அடிச்சிருக்கானுங்க. சரி, போலீஸ் வேணாம். அவங்க பேரன்ட்ஸையாவது வரச்சொல்லி இவனுங்களை உதைக்கச் சொல்லணும்.”

   அதற்கு போலீஸே தேவலாம். எனக்கு அழுகையாக வந்தது.

   ``ரமேஷ் கம் வித் மீ...” டாக்டர் அவர் அறைக்குள் டெரரை அழைத்துச் சென்றார். உள்ளே இருவரும் பேசிக்கொள்வது எதுவும் கேட்கவில்லை. சில நிமிடத்துக்குப் பிறகு எங்களை உள்ளே அழைத்தார் டாக்டர்.

   ``இதோ பாருங்கப்பா... நான் ஏதோ பேசிகீசி ரமேஷைச் சமாதானப்படுத்தியிருக்கேன். இனிமே இந்த மாதிரி ஏதாவது செஞ்சீங்கன்னு தெரிஞ்சா, நான் வெங்கடேஷுக்கு டிரீட்மென்ட் கொடுத்த ரெக்கார்டைவெச்சு நேரா போலீஸுக்குப் போயிடுவேன்.”

   ``சத்தியமா இனிமேல் இப்படிச் செய்ய மாட்டோம் டாக்டர்” என்றான் கோபி. டெரர் மறுபடி உறுமினான்.

   ``டாக்டர், அவங்களை மொதல்ல இங்கிருந்து போகச் சொல்லுங்க. அவனுங்க மூஞ்சியைப் பார்த்தாலே வெறி ஏறுது. என் பிரதரை எனக்குப் பார்த்துக்கத் தெரியும்.”

   டாக்டர் எங்களைச் செல்லும்படி சைகை செய்தார். அவருக்கு உடல்மொழியில் நன்றி சொல்லிவிட்டு நாங்கள் எந்த வேகத்தில் வெளியேறி வந்தோம், எந்த வேகத்தில் ஹாஸ்டல் வந்து சேர்ந்தோம் என்றே தெரியவில்லை. பஸ்ஸில் வரும்போதுகூட கால்கள் தடதடத்து ஆடிக்கொண்டிருந்தன. கோபி பயத்தில் அழுதுகொண்டே வந்தான்.    

   டெரர், இரண்டு நாள் அறைக்கு வரவே இல்லை. மூன்றாவது நாள் காலையில் அந்தப் பையனோடு அறைக்கு வந்தான். வெங்கடேஷ் இப்போது முழுதாகத் தேறித் தெளிவாக இருந்தான்.

   ``யாருடா உன்னை அடிச்சது?”

   அவன் கை, கோபியை நோக்கி நீண்டது.

   ``டேய்... கோபி உன்னோட புது லோட்டோ ஷூ சைஸ் என்ன?”

   “எட்டு.”

   “சரியாத்தான் இருக்கும். அதை வெங்கடேஷூக்குக் கொடு.”

   கோபி அதிர்ச்சியடைந்தான்.

   “முடியாது... புதுசு... எங்க அப்பாவோட கிஃப்டு. ”

   “அப்ப நான் அவர்கிட்டயே கேட்டுக்கிறேன். `உங்க பையன் இந்த மாதிரி ரௌடித்தனம் பண்ணி ஒரு பையனை சாவடி அடிச்சிட்டான். அதுக்கு என்ன பண்ணப்போறீங்க?’னு கேட்டுக்கிறேன்.”

   கோபியின் லோட்டோ உடனுக்குடன் கை மாறியது.

   ``நீ ரூமுக்குப் போ. இனிமே உனக்கு என்ன வேணும்னாலும் என்கிட்ட சொல்லு, தெரியுதா” என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டு எங்களைப் பார்த்தான் டெரர்.

   ``டேய் குமரேசா... ஒரு பேப்பர்ல உங்க எல்லாருடைய வீட்டு போன் நம்பரும் எழுதி என்கிட்ட கொடு. எதுக்கும் இருக்கட்டும்.”

   தயக்கத்துடன் எழுதிக் கொடுத்ததை வாங்கி பத்திரமாகப் பெட்டியில் வைத்துக்கொண்டான்.

   அதன் பிறகு ஒவ்வொரு நாளும் எங்களுக்கு பயத்திலேயே கழிந்தது. அந்த ஆண்டு முழுவதும் வெங்கடேஷுக்குப் பணிவிடை செய்வது எங்களின் அன்றாடக் கடமையானது. எது வாங்கினாலும் வெங்கடேஷுக்கும் ஒன்று சேர்த்து வாங்கும் நிலைக்கு ஆளானோம். எங்கள் உள்ளாடைகளை மட்டும்தான் அவன் பயன்படுத்தாமல் விட்டுவைத்திருந்தான். சினிமாவுக்குச் சென்றால் அவனையும் அழைத்துச் செல்லவேண்டியிருந்தது. டெரர் எதற்கும் வர மாட்டான். ஒருகட்டத்துக்குமேல் பரிதாபப்பட்டு `இதெல்லாம் வேண்டாம் சார்’ என்று வெங்கடேஷ் சொல்லிவிட்டான். ஆனால், அதற்குள் அவன் நெருக்கமாகியிருந்தான்.

   கல்லூரி இறுதியாண்டில் டெரர் ஹாஸ்டலை விட்டு வெளியேறி சீனியர்களோடு தங்கிக்கொண்டான். எல்லா வருடத்திலும் எல்லாப் பாடத்திலும் அரியர் இருந்தது அவனுக்கு. இறுதி ஆண்டில் எங்களுக்கு வேலை குறித்த பயம்வேறு சேர்ந்துகொண்டதால், அவனை நாங்கள் மெள்ள மறக்கத் தொடங்கியிருந்தோம். இறுதி நாள் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தபோதுகூட நாங்கள் டெரரை அழைத்திருக்கவில்லை. கல்லூரி முடித்தபோது மூட்டை அவிழ்த்த சோள மணிகள் மாதிரி சிதறிப்போனோம்.

   இரண்டு வருடத்துக்கு முன்பு எங்கள் வகுப்புக்காக வாட்ஸ்அப் குரூப் ஒன்றை அமைத்தபோது, எங்கள் வருடத்தில் படித்த அனைவரும் ஏதோ ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல வேலையில்தான் இருந்தார்கள். யாரும் சோடைபோயிருக்கவில்லை, டெரர் தவிர. அவனைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. வைத்திருந்த அரியர்களில் ஒன்றைக்கூட அவன் எழுத முயலவே இல்லை எனத் தெரியவந்தது.

   கல்லூரி முடித்து வெளியுலகத்தை தரிசித்த இந்த இருபது ஆண்டில், டெரர் மீதான எங்கள் வெறுப்பின் காரணம் எனக்குப் புரிந்திருந்தது. நாங்கள் நம்பிக்கொண்டிருந்த வாழ்க்கையின் கட்டுமானத்தை அவன் எங்கள் கண் முன்னாலேயே உடைத்துக்கொண்டிருந்தான். அந்தக் கட்டுமானங்களில்தான் எங்கள் பிடிப்பை வைத்திருந்தோம். அதைச் சிதைக்கும் அவனைப் பார்த்து நாங்கள் அச்சம்கொண்டிருந்தோம். அவன் அப்போது வாழ்க்கை குறித்த அச்சமின்றி இருந்தான். இப்போதும் இருப்பானா என்ற கேள்வி எழுந்தபடியிருந்தது.
   சம்பிரதாய விசாரிப்புகளுக்குப் பிறகு வெங்கடேஷ் வெளியேறிக்கொண்டிருந்தான். எனக்குள் பொறி தட்டியது. அவனுக்கு டெரர் பற்றி நிச்சயமாகத் தெரிந்திருக்கும்.

   வரவேற்புப் பகுதிக்கு வெளியே தனது காருக்காகக் காத்துக்கொண்டிருந்தவனை மூச்சிரைக்க ஓடிச்சென்று தோளைத் தொட்டுத் திருப்பினேன்.

   ``வெங்கடேஷ்... ரமேஷ் எங்கே வேலைசெய்றான்னு தெரியுமா?”

   ``ரமேஷ்...” என்று இழுத்தபடி யோசித்தான்.

   ``உன்னோட கசின் பிரதர்... டெரர்னு கூப்பிடுவோமே!”

   அவன் நினைவு வந்தவனாகச் சிரித்தான்.

   ``ஓ டெரர் சாரா... அவரைப் பத்தி எதுவும் தெரியாது. கடைசியா காலேஜ்ல பார்த்ததுதான்” என்றான். அவன் கார் வந்துவிட்டது.

   எனக்கு ஏமாற்றமாகிவிட்டது. கார் கதவைத் திறந்து ஒரு விநாடி தயங்கிவிட்டுப் பிறகு சொன்னான் வெங்கடேஷ், ``அப்புறம்... அவர் என் பிரதரெல்லாம் இல்லை. ஹாஸ்பிட்டல்லதான் அவரை மொதமொதல்ல பார்த்தேன். சும்மா அப்படியே மெயின்டெயின் பண்ணச் சொன்னார்... ஸாரி!”
   காரில் ஏறி, கதவைச் சாத்திக்கொண்டு அவன் சென்றுவிட்டான்.

   எனக்கு இப்போது டெரரைப் பார்க்கவேண்டும்போலிருந்தது.
   https://www.vikatan.com
  • By நவீனன்
   முகம் - போகன் சங்கர்
    
   நான் அவளை உணர்வதற்குள் மிக நெருங்கியிருந்தேன். சப்பாத்துப் பாலத்தின் மீது அமர்ந்துகொண்டு, மெதுவாய் ஓடும் தாமிரபரணியில் கால்களை அளைந்து கொண்டு நேராகப் பார்க்கையில், ஓரங்கள் கசிந்து தெரிந்தவள் பக்கப் பார்வையில் மிகப் பிரகாசமாகத் துலங்கினாள். தெருவில் அவ்வப்போது யாராவது எச்சரிப்பது உண்டுதான்.

   “சார் ராத்திரியில அந்தியில சூச்சிச்சிப் போணும். அந்தப் பாலத்துலே ஒரு சூலி வாதை உண்டாக்கும்.’’

   “சூலி வாதைன்னா?”

   “நிறைகர்ப்பத்துல செத்துப்போன பொண்ணு.”

   “செத்தா போனா? கொன்னு தாழ்த்தியது” என்பார் ஒருவர்.

   “யார் கொன்னது?”

   “யாரு கொல்வா?அவளோட தந்தையோ உடம்பிறந்தானோ பர்த்தாவோ காமுகனோ அரசனோ...”

   “எப்போ நடந்தது இது?”

   “அது இருக்கும் ஒரு நூறு வருஷம்.”

   “யாரும் பார்த்ததுண்டா?”

   “பார்த்திருப்பாங்க. பத்திரமா எழுதித் தர முடியும்? காலம் காலமா நடக்கறதுதானே?”

   2

   வழக்கம்போல நைட் ஷிப்டில் இருந்த அமலியிடம் பேசிப் பேசி இரவு வளர்ந்து போனது. ஆனால், வழக்கம்போல நாங்கள் கவிதை பற்றியோ இசை பற்றியோ பேசவில்லை. புகோவ்ஸ்கி பற்றியோ ரால்ப் எல்லிசன் பற்றியோ பேசவில்லை. நைட் வாட்ச் மேன் அதை நெரித்த புருவங்களுடன் பார்க்கவும் இல்லை.  “அவளுக்கு இப்போ சந்தேகம் போயிடிச்சு...” என்றாள் அமலி. “இனி நாம அக்கா தம்பியாத்தான் இருக்கமுடியும்னு ஒரு உரப்பு வந்திடுச்சு” என்றாள். தலையை இறுக்கக் கட்டியிருந்த துணிவாரைத் தடவியபடியே. “ஏன்... அப்படி இல்லைன்னா அவளுக்கு என்ன?” என்றேன். அவள் பதில் சொல்லவில்லை. “ராத்திரி முழுக்க ஒரே கனவு. குழந்தைங்க கனவு. வரிசை வரிசையா வந்து என் மாரை இழுத்துச் சப்பறாங்க” என்றாள். “காலைல எழுந்தா, ஒரே வலி மார்ல. இல்லாத மார்ல.”

   நான் “phantom breast pain” என்றேன்.

   “நடக்கக்கூடியதுதான்.”

   “ஒருவகையில் நிம்மதிதான் இல்லே.இனிமே எங்க டாஸ்க் என்னன்னு தெளிவா வரையறுக்கப்பட்டிடுச்சு. இதில இருந்து தப்பிக்கறதுதான் எங்க வாழ்நாள் வேலை.”

   “ரொம்ப நாடகத்தனமா இருக்கு அமலி.”

   அமலி சட்டென்று உடைந்தாள். “உனக்கு எப்படியாவது இதை நான் விளக்க முடியுமா... எப்போதாவது?’’

   நான் அமைதியாக இருந்தேன்.

   “எனக்குத் தோணுது இந்தியாவில தாய்மையை மிகையா மதிக்கறாங்க”

   அமலி  இதற்கும் பதில் சொல்லவில்லை.

   “மதுரைல இருக்கப்போ பேச்சியம்மன் படித்துறைன்னு ஒரு கோயில். கண்ணகிக் கோயில். மதுரையை எரிச்ச பிறகு, மார்பிலே வழிகிற ரத்தத்தோட அவ அங்கே வந்து உக்கார்ந்திருந்தாளாம். அங்கே எனது தோழிகளோட போறதுண்டு. ஒரு தடவை அங்கே வெள்ளம்கூட வந்திருக்கு. யோசிச்சுப் பாரு. மதுரைல வெள்ளம்! அப்பாவுக்குப் பிடிக்காது. சத்தம் போடுவார். இன்னிக்குக் காலைல இருந்து அங்கே போகணும்னு ஒரே துடியா இருக்கு. கண்ணகிக்கு ஏன் மாரைப் பிடுங்கி வீசனும்னு தோணுச்சு? அவளைப் பொறுத்தவரை அது மத்த பொண்ணுங்க வாழற இயல்பான அமைதியான வாழ்க்கையின் அடையாளம். இல்லையா?’’

   நான் அவளை மேசைக்கு மேலே இழுத்து முத்தமிட்டேன். அவள் கண்கள் விம்மி, ஒரு துளி அவள் நெஞ்சின் மீது சொட்டியது.
    
   “ஏன்?” என்றாள்.

   “அதுவும் இப்போ? இவ்வளவு காலத்துக்குப் பிறகு? எல்லாம் போன பிறகு? நேத்து கனவுல வந்த குழந்தைங்க மாதிரி? கல்லறைல வந்து நிக்கற காதலன் மாதிரி?’’

   நான், “எதுவும் போகவில்லை” என்றேன்.

    “எல்லாம் திரும்ப வரும். மெதுவா உன்னோட சுவையுணர்வு, நிறங்கள், இன்னொரு உடலுக்கான இச்சை எல்லாம் திரும்பவரும்.’’

   3

   நான் வேகமாக அவளைக் கடந்தேன்.இரவுதான் எனினும், ஒரு மிகப் பெரிய குளிர்ந்த பொந்துக்குள் புகுந்து வெளியேறுவதுபோல அப்போது இருந்தது.ஆற்று நீரில், அவள் மெள்ள எழுந்து என் பின்னால் வருவதைப் பார்த்தேன். முகம் நிறைய மஞ்சளும் பெரிய குங்குமமும். ரத்தம்போல சிவந்த அவள் இதழ்களும் மேடிட்ட அவள் வயிறும். சிறிய பாலம்தான் எனினும் அது நீண்டுகொண்டே இருந்தது. என் பிடரியில் ஒரு குளிர்ந்த தொடுகை, “சேட்டா...” நான் திரும்பிப் பார்க்கவில்லை.

   “சேட்டா நான்தான்...” ஒரு விம்மல்.

   “சேட்டா இது கோமதி. உனக்க காமுகி.”

   நான் திரும்பவில்லை.

   குரல் உடைந்தது. “ஏய்...’’

   குரலில் சீற்றம். நான், அவள் உருவம் கலைந்து வேறோர் உருவமாகத் தன்னை அடுக்கிக்கொள்வதைப் பார்த்தேன்.இப்போது அவள் முகம் சிறுத்து ஒரு புள்ளி  போலாகிவிட்டது. மார்புகள் வீங்கி இரண்டு உருளைகள் போலாகின. அவள் இடுப்பு விரிந்துவிரிந்து புடைத்தன. அவள் ஒரு பெண்ணின் கேலிசித்திரம் போலானாள்.வினோதமாக அந்த கார்ட்டூன் போன்ற உருவத்தைக் கண்டதும் நான் மிகுந்த கிளர்ச்சி அடைந்தேன். நானல்ல என் உடல். என் உடல், அது என்னை மீறிக்கொண்டு அவளை நோக்கித் திரும்பியது. ஒரு கணம்தான். நான் முற்றிலும் அவளுக்குள் கரைந்திருப்பேன். 

   அப்போது, சரியாக மீனவர் தெரு  மாதாகோயில் மணி ஒலித்து, ஒரு வசனமும் சொன்னது. “நேரம் சரியாக ஒரு மணி. நீ தண்ணீரைக்  கடக்கும்போது, நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவை உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினி ஜுவாலை உன் பேரில் பற்றாது.’’

   ஒரு நீண்ட மௌனம். நான் திரும்பி “அம்மா...’’ என்றேன்.

   ஒரு கிறீச்சிடும் ஒலியுடன் அவள் பிம்பம் கலைந்துபோனது.

   4

   “ஆ வந்துடு பிள்ளை” என்று ஒரு குரல் கேட்டது. பாலத்தின் மறுகரையில் பெட்டிக்கடை வைத்திருக்கும் கிழவி. அவள், இரவுகளில் சில நேரம் அங்கேயே படுத்துக்கொள்வதுண்டு. நான் அந்தியில் சிகரெட் பிடிக்க ஒதுங்கும் இடம் அது.

   “உனக்க கோளு  இன்னிக்குக்  காப்பாத்திடுச்சு” என்றாள் அவள்.

   நான், “நீங்க பார்த்தீங்களா” என்றேன்.

   அவள், “பின்ன?” என்றாள்.

   “ரொம்ப நாள் கழிச்சி  இன்னிக்கு எந்திரிச்சி வந்திருக்கா பாவம்” என்றாள். “அவ உன் பின்னால அழுதுகிட்டே வரும்போது, ஒரு கணம் ஒரு குடிகாரனோட ஓடிப்போன என் மக நினைப்பு வந்து வயித்தைக் கலக்கிப்போட்டது! வீட்டுல இருந்த குடிகாரத் தாயோளிக்கிட்டே இருந்து தப்பிச்சி போறேன்னு அவன் கையிலக் கிடந்து சீரழியறா. ஒரு நிமிஷம் பகவதியே! இன்னும் என் மக்களுக்கு என்னென்ன துயரத்தை நீ வச்சிருக்கேனு தோணிப்போட்டது. உலகத்து அநீதியை நீ அழிக்க நினைச்சா மதுரையை மட்டுமா நீ அழிக்கணும்? சொந்த தந்தையும் சோதரனையும் பர்த்தாவையும் முதல்ல கொன்னுபோடணுமே” என்றாள்.

   “அது சரி நீ திரும்பி அவகிட்டே என்ன சொன்னே?” என்றாள்.

   நான் பதில் சொல்லவில்லை. “சரி பிள்ளே நீ போ... இனிமே இங்கே ரொம்ப நிக்காத. போகும்போது, இடைத்தெரு வழியா போ என்னா...’’

   நான் “ஏன்?” என்றேன்.

   “இன்னிக்கு இவ இங்கே நின்னான்னா அங்கே அநேகமா பெருந்தெருவில இருக்கற அக்கா தங்கச்சி இரண்டு முத்தாரம்மனும்  எந்திரிச்சி நிக்கத்தான் செய்வாங்க. அவங்க மத்தில அது ஒரு கணக்கு. யட்சிக்குத்  தப்பி இசக்கி வாயில வுழுந்துடப் படாது” என்றவள், “அதுக்காக ரொம்ப பயப்பட வேணாம். யட்சியும் இசக்கியும் நாம உருவாக்குறதுதான் என்னா? நம்மளோட தள்ளையும் பிள்ளையும்தான் என்னா?’’
   5
   நான், அவள் சொன்னதுபோலவே பெருந்தெரு சந்திப்பிலிருந்து விலகி, இடைத்தெரு  திருப்பில் நடந்தேன். அங்கே மூத்த முத்தாரம்மன் கோயில் சந்திப்பில்   யாருமில்லை. ஏன் சுற்றிப்போக வேண்டும் என்று தோன்றிய அந்த கணத்தில் அதனைப் பார்த்தேன். ஏழு எட்டு அடி உயரத்தில் உயர்ந்தெரியும் ஒரு நெருப்புக்கோளம். அது அங்குமிங்கும் உலவுவதுபோல நடந்துகொண்டிருந்தது. யாரோ உடலில் தீப்பற்ற வைத்துக்கொண்டு ஓடிவருவது போல ஓடிக்கொண்டிருந்தது.

   நான் திடுக்கிட்டு “அது வீனஸ்” என்றேன். “அவள் வீனஸ்!” ஆப்பிரிக்கக் குகைகளில்  மில்லியன் ஆன்டுகளுக்கு முன்பு தொடர்ந்து வரையப்பட்ட பெண் சித்திரம். இன்னமும் ஆப்பிரிக்கப் பழங்குடிப் பெண்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்.

   என்ன நடக்கிறது! கோமதி ஏன் அந்த வடிவத்தை அடைந்தாள்!

   நான் அவளை, அம்மா என்று ஏன் அழைத்தேன்!

   என் உடல் நடுங்குவதுபோலத் தோன்றியது. நான் தலையைக் கையில் பிடித்துக்கொண்டு ஒரு வீட்டின் வாசலில் அமர்ந்தேன்.

   அப்போது, “இரவாடி!” என்றொரு குரல் கேட்டது. விண்மீன்களின்  கண்காணிப்பின் கீழ் உறங்குகிற இமைகளை உடையவன்.

   அந்த வீட்டின் நிழலிருந்து அவள் வந்தாள். “சிகரெட் வேணுமா தோழர்? அதுக்காகத்தான் இந்த ராத்திரில இங்குமங்கும் அலையறீங்களா?”

   “தமிழ்! நீ எங்கே இங்கே?”

   தமிழ்ச்செல்வி புன்னகைத்து வழக்கம்போல ஒளிச்சோட்டம். இம்முறை  ராஜஸ்தான் போலீஸிடமிருந்து. அங்கே ஓர் ஏமானைச் சுட்டுட்டேன் தோழர்.’’
    
   நான் வியப்புடன் அந்த வீட்டைத் திருப்பிப் பார்த்தேன். “இவர் ஒரு இயக்க உறுப்பினர் என்று எனக்குத் தெரியவே தெரியாது.”

   அவள் சிரித்து, “அவருக்கும் தெரியாது” என்றாள். மூணு நாளா இங்கேதான் இருக்கேன். பகல் முழுக்க அவர் வீட்டில இருந்த மலையாள பகவத் கீதையைப் படிச்சி மண்டை வறண்டுபோச்சி. அது செரி. நீங்க எங்கிருந்து சாடி வாரீக?’’

   நான் பதில் சொல்லவில்லை.

   அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. “ரொம்பப் புழுக்கமா இருக்கு பிரதர். உங்க ஊருக்கு வந்துட்டு ஆத்தில குளிக்காம போனா எப்படி?”

   நான் “இப்போவா?’’ என்றேன்.

   அவள் “இப்போ” என்றாள். நான் தயங்கினேன்.

   பிறகு, அவளை மகாதேவர் கோயில் அருகே இருக்கும் படித்துறைக்கு அழைத்துப் போனேன். “ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க தோழர்... பிசாசைப் பார்த்தாப்ல?’’

   படித்துறையில் வழக்கமாக எரியும் மஞ்சள் பல்பு எரியவில்லை. யாரோ குடிவிரும்பிகள் அதைக் கொன்றிருந்தார்கள்.மகாதேவரின் கோபுரம் நீண்டு, மௌனமாக நதியின் மீது தலைகீழாய்க் கிடந்தது. ஒட்டி நின்ற ஆலமரம் நீரோட்டத்தில் விரல்களை அளைந்துகொண்டிருந்தது. அதன் முனைகளிலிருந்து பனித்துளிகள் ஒரு தேம்பும் சப்தத்துடன் நதிக்குள் சொட்டின.தமிழ்ச்செல்வி தனது சட்டையைக் கழற்றிவிட்டு ஜீன்ஸ் பேண்டுடன் ஆற்றுக்குள் இறங்கினாள். நீரோட்டத்தில் அவள் மார்புகள், நதி பறித்துச் சென்றுவிட முயலும் இரண்டு நெய்தல் மலர்கள்போல அசைவதைப் பார்த்தேன். ‘மணிக்குலை கள் நெய்தல்’ என்று சொல்லிக்கொண்டேன்.ஆனால், நெய்தல் காலையில்தான் மலரும்.நீலமே இரவில் மலரும்.

   தமிழ்ச்செல்வி திரும்பி “கவியே இறங்கி வா” என்றாள். “இறங்கி வாடோ”

   நான் இறங்கவில்லை. அவள் பெருமூச்சுடன் மேலே கவிழ்த்துக் கொட்டியதுபோல கிடக்கும் நட்சத்திரங்களைப் பார்த்தபடி நீந்த ஆரம்பித்தாள். அவற்றின் மெலிந்த ஒளியில் அவள் உடல் ஒரு படகுபோல் அசைந்தது.

   “நீ எப்போதும் பிசாசுகளை அருவங்களைக் கண்டதில்லையா தமிழ்” என்றேன் நான். பிறகு சற்று தயங்கி, “நீங்கள் கொன்றவர்கள் உங்களைத் தேடி வருவதில்லையா?”

   அவள் நீருக்குள் நின்றுகொண்டே என்னைக் கூர்ந்து பார்த்தாள்.

   “எனக்கு அதற்கு நேரமில்லை தோழர். உயிரோடு இருப்பவர்களையே என்னால் சில சமயங்களில் பார்க்க முடிவதில்லை.உதாரணமாக நான் உதய்ப்பூரில் சுட்டுக் கொன்ற நபரை, கொல்லும் முன்பு அவன் கண்களைப் பார்த்தேன். உண்மையில் அவன் எப்போதோ இறந்து போயிருந்தான்.எனக்கு ஒரு கணம் இரக்கம்கூட தோன்றிவிட்டது. அவனை யாரோ எதுவோ எப்போதோ கொன்றிருந்தது. அது அவன் மதமாக வர்க்கமாக சாதியாக இருக்கலாம். ஆனால், அப்போது அவன் உயிரோடு இல்லை. ஆனாலும், நான் அவனைக் கொன்றாக வேண்டும். அவன் இரண்டு சிறுவயது சகோதரிகளைக் கற்பழித்துக் குடிசையோடு எரித்துக் கொன்றிருக்கிறான். நியாயம் கேட்கப்போன அவர்களின் தந்தையையும். அவனை யாரும் எதுவும் செய்ய முடியவில்லை. போலீஸ், பத்திரிகைகள், நீதிமன்றம்... நான் அவனைக் கொன்றேன். ஆனாலும், நான் ஒரு சவத்தை மீண்டும் கொல்லும் அருவருப்பையே  அன்று அடைந்தேன். ஹா! உங்கள் கீதையும் அதைத்தானே சொல்கிறது. உங்கள் கீதைக்கு ஒருநாள் நக்சல் உரை ஒன்றை நான் எழுதக் கூடும் தோழர்” என்று சிரித்தாள்.

   “காலனிய நீக்கம் எப்போதும் வன்முறையாகத்தான் இருக்கும் தோழர். உன் கையிலிருக்கும் என் துப்பாக்கி, அது ஒரு போலீஸ்காரன் கையில் இருந்தது. அவன் அதை உத்திரப்பிரதேசத்தில் ஆசம்காரில் கள்ளத்தனமாகப் பெற்றான்.ஆசம்காரில் உலகின் எல்லா ஆயுதங்களும் கிடைக்கும். அவன் ஒரு புகழ்பெற்ற என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். அவனைப் பத்தாண்டுகளுக்கு முன்பு அடிக்கடி செய்தியில் காட்டிக்கொண்டிருந்தார்கள்.பிறகு, ஒருநாள் அவன் மறைந்துபோனான்.நான் அவனைச் சில வருடங்களுக்கு முன்பு காசியில் பார்த்தேன். காசியில் தேவ் தீபாவாளிப் பண்டிகை அன்று. தேவ் தீபாவளி, காசியின் உச்சகட்ட பண்டிகை. நீ ஒருநாள் அதைக் காண வேண்டும்” என்றாள் அவள்.

   “நீ ஒரு கொண்டாட்டங்களின் மனிதன் அல்லவா? தேவ் தீபாவளி, கொண்டாட்டத்தின் உச்சம். நமது தீபாவளிக்கு 15 நாள்கள் கழித்து வரும். அன்றைக்கு தேவர்கள், பூமிக்கு இறங்கி கங்கையில் நீராடுகிறார்கள். இந்தியக் காவல்துறை, அதை தியாகிகளின் தினமாகவும் கொண்டாடுகிறது. உண்மையில் நான் அங்கு அன்றிருந்தது மடத்தனம். காசி முழுக்க போலீஸும் பட்டாளமும் நிறைந்திருக்கும். ஆனால், எனக்குள் இருக்கும் ஒரு தஸ்தாயெவ்ஸ்கி அரிப்பின் காரணமாக நான் அங்கு போனேன்.அங்குதான் நான் அவனைப் பார்த்தேன்.தனியாக கங்கைக்கரையில் விலகி நின்றுகொண்டிருந்தான். காசியின் வானில் வெடித்துச் சிதறும் வாணவேடிக்கைகளைப் பார்த்துக்கொண்டு. ஒவ்வொரு படித்துறையின் மடியிலும் ஒளிரும் லட்சக்கணக்கான விளக்குகளைப் பார்த்துக்கொண்டு. நான் அவன் பின்னால் போய் நின்றேன். பெயர் சொல்லி அழைத்தேன். அவன் திரும்பினான்.காதோரம் மட்டும் லேசாக நரைத்திருந்தது.அவனது கூரிய விழிகள் நான் அவனைக் கண்டுகொண்டதுபோலவே என்னையும் கண்டுகொண்டன. நாங்கள் இருவரும் ஒரு படகை நிறுத்தி ஏறி, கங்கையின் ஒவ்வொரு காட்டாகப் பார்த்தோம். அவன்தான் சொன்னான், “இன்று தியாகிகள் நாள்கூட.இன்று காலையில் நான் கொன்ற ஒவ்வொருவருக்கும் திதி அளித்தேன்.”

    நாங்கள் இறங்கும்போது, விடிகாலை மூன்றுமணி. கங்கையின் குளிர், தாங்க முடியாதபடி ஏறிவிட்டிருந்தது. அவன் இறங்குகையில் ஒருமுறை என்னைக் கட்டியணைத்து, “நாம் எல்லோருமே செய்ய வேண்டியதைச் செய்யவேண்டி இருக்கிறது அவ்வளவுதான்.” என்றான்.

   தமிழ்ச்செல்வி இதைச் சொல்லிவிட்டு, சற்றுநேரம் மெளனமாக இருந்தாள். “அவன் அதைச் சொல்லியிருக்கக் கூடாது. எனக்குள் ஏதோ கிளர்ந்தது. நான் சட்டென்று எனது துப்பாக்கியை உருவி அவனைத் தலையில் சுட்டுக் கொன்றேன்.”

   நான் அதிர்ந்துபோய் எழுந்துவிட்டேன். “ஹா’’

   அவள் “ஆமாம் தோழர். காலனி நீக்கம் ரத்தமும் சகதியுமாகத்தான் இருக்கும். அது உங்கள் அழகியல் உணர்வுகளை அதிகம் சீண்டாது, நறுவிசாக இருக்கும் என்று நினைக்காதீர்கள்.”

   நான் “பிராண்ட்ஸ் பனான்” என்றேன்.

   அவள், “ஹா! நீங்கள் கவிஞர் அல்லவா? பனான் பிடிக்காது. வன்முறையாளன்.உங்கள் மென்உணர்வுகளைச் சமன்படுத்த உங்களுக்காக ஒரு கவிதை சொல்கிறேன்.  “கூண்டில் அடைக்கப்பட்ட ஒரு சிட்டுக்குருவி முழுப் பிரபஞ்சத்தையும் பதற்றத்தில் ஆழ்த்துகிறது.”

   நான் “வில்லியம் பிளேக்” என்றேன்.

   அவள் சட்டென்று கோபமடைந்து, “உன்னை... உங்களை... ஏன் அதன் அவலக்குரல் ஒன்றுமே செய்யவில்லை தோழர்?’’ என்று கத்தினாள்.

   “நீ ஏன் செத்தவர்களைப் பற்றியே கவிதை எழுதிக்கொண்டிருக்கிறாய்?’’

   நான் மவுனமாக இருந்தேன். அவள் ஆங்காரத்துடன் நீந்தி, கரையின் மறுபுறத்துக்குப் போனாள். நான், ‘அங்கே பெரிய கயங்கள் உண்டு’ என்று எச்சரிக்க நினைத்து தடுத்துக்கொண்டேன். சற்று நேரம் பதற்றத்துடன் அவள் வருகைக்காகக் காத்திருந்தேன். லேசாக மழை பொழிய ஆரம்பித்தது. உறக்கத்தில் ஒரு குழந்தை எழுப்பும் ஓசைகளைப்போன்ற ஒலிகளை மட்டும் நதி எழுப்பிக்கொண்டிருந்தது.

   அவள், ஏறக்குறைய ஒரு யுகம் போன்ற இடைவெளிக்குப் பிறகு திரும்ப வந்தாள்.அப்போது அவள், நடன அரங்கின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு மிக நளினமாக, ஒரு செளந்தர்யப்பிழையும்  இல்லாது நகரும் தேர்ந்த நடனமாது போலத் தோன்றினாள். வர்க்க எதிரியைக் கொல்லும்போதும் அவள் முகத்தில் உடலில் இதே சாவதானம் இருக்கும் என்று தோன்றியது.

   அவள் ஒருமுறை, ‘புளிச்’ என்று நீரைத் துப்பினாள்.

   “அப்பா அடிக்கடி சொல்லும் ஒரு விவிலிய வசனம் இருந்தது, ‘செத்தவர்கள்  செத்தவர்களைப் புதைக்கட்டும்.’ அவள் கண்கள் தூரத்தில் நிலைத்தன. பாலத்தில் ஒரு வாகனம் சென்றது. “மதுரை வீதியில் ஆற்று மணல் கொள்ளைக்காரர்களால்  அவர் கொல்லப்பட்டுக் கிடந்தபோது, நான் அதையே நினைத்துக்கொண்டேன். நான் உயிரோடிருப்பேன். உயிரோடு இருக்கிற இறுதிநொடி வரைக்கும் நான் உயிரோடிருப்பேன். இறந்தவர்கள் இறந்தவர்களுக்காக அழட்டும்.’’

   “மற்றவர்கள் போகட்டும். நீ ஒருமுறைகூட அப்பாவின் நெருக்கத்தை உணர்ந்ததே இல்லையா?”

   “அவர் தனது இயக்கத் தோழர்களுக்கு எழுதிய ஒவ்வொரு கடிதத்திலும்  அப்பாவை  நான் உணர்ந்திருக்கிறேன். அவரது நாட்குறிப்புகளில் தென்படும் அதே இடதுபக்க சாய்வெழுத்து எனது கையெழுத்திலும் வருகையில்...” என்றாள் அவள்.

   நான் அதைக் கேட்கவில்லை.

   “ஆ! எப்போதும் விண்ணிலிருந்தே  அதிசயங்களை நாடும் விரியன் பாம்புக்குட்டிகள்!’’

   அவள் கரையேறி தனது சட்டையை உதறி அணிந்துகொண்டாள். “ஒருமுறை கோட்டயம் சிறையில் பிளாச்சிமடா சமரத்தின்போது , சன்னல் வழியாக வானில் பெரும் குவியலாகத் திரியும் குருவிக் கூட்டத்தைப் பார்த்தேன். அவை உருமாறி உருமாறி ஏதோ ஒரு கணத்தில் அப்பாவின் முகத்தை அடைந்தன. அப்பாவின் இதழ்க்கோடி அதே அலட்சியப் புன்னகையுடன். இதுவாணோ நீ வேண்டி நிக்குன்ன வானத்து அதிசயம் கவியே?’’

   நான் பேசாதிருக்க, அவள் நெருங்கி என்னை முத்தமிட்டாள். “உனக்குக் கோபம் வந்துவிட்டது! ஹவ் ஸ்வீட்!’’

   “போலாம் தோழர்” என்றாள்.

   “ஒண்ணு சொல்லணும். கோட்டயம் ஜெயிலில் கிடைப்பதுபோல சுவையான கஞ்சியை நான் எனது அம்மை கையில்கூட குடித்ததில்லை. என் வாழ்வில் நான் கண்ட மிகப்பெரிய அற்புதம் அது. அன்று நான் அடைந்த நல்ல சோறும் உறக்கமும் இதுவரை எனக்கு மீண்டும் கிட்டியதில்லை. ஆம்.மனிதனின் அடிப்படைத் தேவை அதுதானே.சோறும் உறக்கமும். இதில்கூட விஷத்தைக் கலப்பவர்களைத்தான் நான் கொல்கிறேன்.ஆனால், கவலைப்படாதே... காந்திஜி இரவுகளில் தன்னை அறியாமல் விந்து வெளியேறியதற்காக வருந்தியதைவிட நான் என்னால் கொல்லப்பட்டவர்களுக்காக அதிகம் வருந்துகிறேன்.’’

   அவள் தனது துப்பாக்கியைக் கேட்டு வாங்கிக்கொண்டாள். “எனது வாழ்வில் நான் அடைந்த இன்னொரு அற்புதம் இது.நீ என்றாவது ஒருநாள், நீதியே பெரிய அற்புதம் என்றும் அழகு என்றும் உணர்வாய்.அன்று இதைத் தேடி நீயும் வருவாய்.”

   6

   தெருவில் வழக்கத்துக்கு எதிராக நாய்களையே காணவில்லை. காம்பவுண்டு போட்ட வீட்டுக்குளிருந்த ஒரு வெளிநாட்டு நாய் மட்டும் போர்டிகோவில் முனகிக் கொண்டிருந்தது. என்னைக் கண்டதும் ஈனஸ்வரத்தில் பரிதாபமாக ஊளையிட்டது. பிள்ளையார் கோயில் அருகே ஒரு வாகனம் நின்றிருந்தது. அதனுள் யாரோ உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

   பலமுறை கதவு தட்டிய பிறகே, சித்தி கதவைத் திறந்தாள். “எய்யா வா என்ன இத்தினி நேரமாயிடுச்சி?”

   உள் அறையில் மனைவி உறங்கிக் கொண்டிருந்தாள். அறை  முழுவதும் பால் வீச்சம் அடித்தது. “நீ சாப்பிட்டியா?” என்றாள் சித்தி. அடுக்களையில் புகுந்தவளைத் தடுத்தேன். ஹாலின் மத்தியில் தொங்கிய தொட்டில் அசைந்தது. சிறிய சதங்கைகளின் ஒலி. சித்தி  உள்ளே எட்டிப் பார்த்து, “அடடே அப்பா வந்துட்டாங்கன்னு பொண்ணுக்குத் தெரிஞ்சிடுச்சோவ்?” என்றாள். மெள்ள ஒரு மலர்போல எடுத்து, “ஈரமாக்கிட்டாபோல. கொஞ்சம் பிடி” என்று என் கையில் அவளைத் தந்துவிட்டுப் போனாள்.

   குழந்தை கண்ணை மலர்த்தி என்னைப் பார்த்தாள்.

   நான் ஒருகணம் திடுக்கிட்டேன். ரொம்பப் பரிச்சயமான கண்கள் இவை. பிறந்து முப்பது நாள்களே ஆன ஒரு குழந்தையின் புதிய கண்களே அல்ல இவை. இந்தக் கண்களை இந்த வாழ்க்கை முழுவதும் இந்த நாள் முழுவதும் இந்த இரவு முழுவதும் நான் பார்த்திருக்கிறேன்.

   மிகச் சமீபத்தில் சப்பாத்துப் பாலத்துக்கு மேல் அவற்றைப் பார்த்தேன். அமலியின், கிழவியின், தமிழ்ச்செல்வியின் கண்களும் அவைதான்.

   குழந்தையைத் தொட்டிலில் கிடத்திவிட்டு அறைக்குள் வந்து சன்னலைத் திறந்தேன்.வானில் நிலவில்லை. ஆனால், நட்சத்திரங்கள் இறைந்து கிடந்தன. அதில் ஒரு நட்சத்திரம் மட்டும் இங்குமங்கும் அலைவதுபோலத் தோன்றியது. அது நட்சத்திரம்தானா?

   அது ஒரு போலீஸ் வாகனம்! என் வீட்டுக்கு வெளியே நின்றுகொண்டிருந்தது ஒரு போலீஸ் வாகனம்.

   அதை உணர்ந்த அந்த நிமிடத்திலேயே  நான் அந்த ஒலிகளைக் கேட்டேன். ஒரு வேட்டுச் சத்தம். வேகமாகச் சிலர் ஓடும் சப்தம். மீண்டும்  ஒரு வேட்டுச் சத்தம். பிறகு  அமைதி.

   7

   காலையில் அந்த வாகனத்தைக் காணவில்லை. இரவு காலடிகள் பாவிச் சென்ற பாதையிலேயே கொஞ்ச தூரம் நான்  நடந்தேன். சிறிய மழை ஒன்று எவ்வித அறிவிப்புமில்லாமல் பொழிய ஆரம்பித்தது. வடக்கு முத்தாரம்மன் கோயிலுக்கு வெளியே சாலையில் கொஞ்சம் குருதி பரவிக் கிடந்தது. அதை மழை கலைத்துக்கொண்டிருந்தது.

   நான் அங்கே நின்று அதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

   “கூண்டில் அடைக்கப்பட்ட ஒரு சிட்டுக்குருவியின் துன்பம், பிரபஞ்சத்தைப் பதற்றத்தில் ஆழ்த்துகிறது.”

   8

   வானில் பெரிய குருவிக் கூட்டம்  ஜப்பானிய விசிறியைப்போல மடிந்து மடிந்து வெவ்வேறு உருவங்களைக் காட்டிக்கொண்டிருந்தது.

   அவற்றில்  ஓர் உருவமாக தமிழ்ச்செல்வியின் முகமும் இருந்தது.
   https://www.vikatan.com
  • By நவீனன்
   சயனைடு - சிறுகதை
     ப.தெய்வீகன் - ஓவியங்கள்: ஸ்யாம்  
   சயனைடு உட்கொள்வதன் மூலம் எவ்வாறு உயிரிழப்பது என்பது, அப்போது எங்கள் கூட்டத்தில் மிக முக்கிய விவாதமாக இருந்தது. சயனைடை அதிகம் பயன்படுத்தும் போராளிகள் எப்போதும் அதைக் குப்பியில் அடைத்து, கழுத்தில் கட்டியிருப்பர். ஆபத்து நெருங்கும் தருணத்தில் அந்தக் குப்பியின் மூடியைக் கழற்றி சயனைடு தூளை வாயில் போட்டு விழுங்கி இறந்துவிடுவர் என்பது சுதா, தான் படித்த ஏதோ ஒரு புத்தகத்தை மேற்கோள் காட்டிச் சொன்ன கதை.

   மணிவண்ணன், தனது பக்கத்தில் வேறொரு தகவலை வைத்திருந்தான். ``எதிரிகள் தங்களைச் சூழ்ந்துகொள்ளும் தருணங்களில், சயனைடு மூடியைக் கழற்றி வாயில் போட்டு விழுங்குதற்கெல்லாம் போராளிகளுக்கு நேரம் கிடைக்காது. சாவகாசமாக வாயில் போட்டுச் சப்பிக்கொண்டிருக்க அது என்ன கலியாண வீட்டு பீடாவா? அவர்கள் செப்புக் குப்பியில்தான் சயனைடை வைத்திருப்பார்கள். அதை வாயில் போட்டுக் கடிக்கும்போது செப்பும் சயனைடும் நொறுங்கி உமிழ்நீரில் கலந்துவிடும், எண்ணி மூன்று விநாடியில் ஆள் அவுட்’’  என்று மூன்று விரல்களையும் மடக்கி தனது விஞ்ஞானபூர்வமான விளக்கத்தைக் கூறியிருந்தான்.

   அவனது விளக்கம் சுதாவின் விளக்கத்தைவிடக் கொஞ்சம் நம்பும்படியாக இருந்ததற்கு அப்பால் அவனது உடல்மொழி அவனது கதைத் தொடர்பில் த்ரில்லான திருப்தியையும் எங்களுக்குக் கொடுத்திருந்தது.

   ஆர்மியோடு நடைபெற்ற சண்டையில் யார் யார் சயனைடு உட்கொண்டு இறந்தார்கள் என்ற போராளிகளின் பெயர்ப் பட்டியலைக் கொண்டுவந்து காண்பிப்பது முதல், உயிரிழந்த போராளிகளின் படங்களை `ஈழநாதம்’ பத்திரிகையில் காண்பிப்பது வரையிலான தீவிரமான தேடுதல் பணியிலும் அவன் இறங்கியிருந்தான்.

   சயனைடு தொடர்பான எப்படிப்பட்ட  புரட்டுகளைக் கதைத்தாலும், இருட்டிய பிறகு பேசும்போது அவற்றுக்கு  இயல்பாகவே ஓர் உண்மைத்தன்மை இருப்பதுபோன்ற உணர்வு எமக்கும் தோன்றியது. ஆனால், ஒரு குறுகிய வட்டத்துக்குள் மாத்திரம்தான் இந்த விஷயத்தை நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம் என்ற மிகப்பெரிய உண்மையை, ரூபசுந்தரின் வருகைதான் உள்ளூர உணரச்செய்தது.

   இடம்பெயர்ந்து எங்கள் கிராமத்துக்கு மிகவும் அண்மித்து (அல்லது எங்களது கேணியடி கிரிக்கெட் அணியில் அங்கம் வகிப்பதற்குரிய தூரத் தகுதியைக்கொண்ட எல்லைக்குள்) ரூபசுந்தர் வந்த பிறகு, நாங்கள் ஏற்கெனவே பேசியும் நம்பியும் வந்த பல விஷயங்களில் எங்களுக்குள் பெரிய மாற்றங்கள் நிகழத் தொடங்கின. இவ்வாறான மாற்றம் நிறைந்த கதைகளில் ஒன்றாகத்தான் எங்களது சயனைடு தொடர்பான பேச்சை அவனுடன் தொடங்கியிருந்தோம். அதற்கு அவன் சொன்ன கதை முற்றிலும் வேறொன்றாக இருந்தது.

   அவன் அண்ணாதான் அப்போது எங்களுக்குத் தெரியத் தொடங்கியிருந்த ஒரே ஓர் இயக்க ஆள். இரண்டு வருடத்துக்கு முன்பு இயக்கத்துக்குப் போனவர். ஆளை யார் என்றே எங்களுக்குத் தெரியாது. ஆனால், ரூபசுந்தர் வீட்டில் இருந்த பெரிய படம் ஒன்றைக் கொண்டுவந்து காட்டினான். பயங்கர உயரம். நல்ல சிவலை. ரூபசுந்தருடைய அக்காவின் பூப்புனித நீராட்டு விழாவின்போது எக்ஸோரா பூக்கன்றுக்கு முன்னுக்கு நின்று தனியாக எடுக்கப்பட்ட படத்தில் `முறால்’ சிரிப்போடு நின்றுகொண்டிருந்தார். யாழ்ப்பாணம் `சிற்றி போய்ஸி’லதான் உடுப்பு எடுத்திருக்க வேண்டும். ஆளுக்கு நன்றாகப் பொருந்தியிருந்தது. அந்த உடையில் இன்னும் அழகாகத் தெரிந்தார்.

   ஒருநாள் தகப்பனோடு ஏதோ பிரச்னை என்று பள்ளிக்கூடம் வரும்போது சைக்கிளைக் கொண்டுபோய் கோயிலடியில் விட்டுவிட்டுக் கடற்புலிகளின் முகாம் பக்கமாகப் போனவர் என்று ரூபசுந்தரின் அம்மாவுக்கு யாரோ போய் தகவல் சொல்ல, அவர் குழறியடித்துக்கொண்டு முகாமுக்கு ஓடினார். ஆனால், தங்களது வாகனத்தில் இன்னொரு முகாமுக்குப் போயிருக்கிறார். இரண்டொரு நாளில் திரும்பி வந்துவிடுவார் என்று முகாமில் சொல்லப்பட்டது. அன்றுமுதல், மகன் வந்துவிடுவான் என்று ரூபசுந்தரின் அம்மா கேணிப்புளியடி தொடக்கம் நல்லூர் கந்தசுவாமி கோயில் வரைக்கும் செய்யாத அர்ச்சனை இல்லை. ``எப்படியும் மகன் வந்திருவான்!’’ என்று அழுதழுது ஊருக்குள் சொல்லித் திரிந்தார்.

   ஒரு வருடத்துக்குப் பிறகுதான் ரூபசுந்தரின் அண்ணா வீட்டுக்கு வந்தார். சீருடையில் வீட்டுக்கு வந்தபோது அவரைப் பார்த்தவர்கள் சொன்னபடி, ஆள் நன்றாகக் கறுத்துப்போயிருந்தார். ஆளுக்கு முன்பிலும் பார்க்க இன்னும் மிடுக்கான தோற்றம் வந்திருந்தது.

   எல்லாவற்றையும் ரூபசுந்தரே எமக்கு ஒப்புவித்தான். இவ்வாறான கதைகளின் மூலம், தான் கூறுகின்ற இயக்கக் கதைகளுக்கான முழுமையான தகுதியை மேலும் அதிகரித்திருந்தான். அண்ணா இரண்டு மணி நேரம் வீட்டுக்கு வந்துபோன கதையை எமக்கு இரண்டு மணி நேரக் கதையாகவே வர்ணித்து உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியிருந்தான். இடுப்பில் போராளிகளுக்கான பிரத்யேக பெல்ட் கட்டியிருந்த அண்ணாவிடம் `பிஸ்டலும் கிடந்தது’ என்று சொல்லியிருந்தான்.

   அண்ணாவுக்கு இப்போது இயக்கப் பெயர் `செழியன்’ என்று கூறிய ரூபசுந்தர், அவர் வீட்டுக்கு வந்து போனபோது தனக்குத் தந்துவிட்டுப் போன கைமணிக்கூடு ஒன்றை எங்களிடம் காண்பித்திருந்தான். நாங்கள் எல்லோரும் சைக்கிளைவிட்டு இறங்கிச் சென்று அவனது வலதுபக்க மணிக்கட்டில் உட்புறமாகக் கட்டியிருந்த மணிக்கூட்டைக் கண்கள் விரியப் பார்த்தோம். அந்த மணிக்கூட்டை அவன் யாரையும் தொட விடவில்லை. இயக்கத்தில் எல்லோரும் மணிக்கூட்டை மணிக்கட்டில் உள்பக்கமாகத்தான் கட்டுவார்கள் என்றும் வேவு நடவடிக்கைக்குப் போகும்போது வெளிப்பக்கமாக மணிக்கூட்டைக் கட்டியிருந்தால், இருட்டில் ஆர்மிக்காரன் டோர்ச் அடித்துப்பார்க்கும்போது வெளிச்சம் அதில் பட்டுத்தெறித்து காட்டிக்கொடுத்துவிடும் என்றும் அதற்காகத்தான் போராளிகள் உட்புறமாக மணிக்கூட்டை அணிந்துகொள்வதாகவும் சொன்னான். அவன் அந்தக் கதையைக் கூறி முடிக்கும்போது நாங்கள் அனைவரும் அவன் கூறியதையே கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, அவனது கையில் உட்புறமாகக் கட்டப்பட்டிருந்த மணிக்கூட்டைப் பார்த்தோம். அந்த மணிக்கூடும் அதில் தெரிந்த மணியும் அதற்குப் பிறகு கூடுதல் பெருமதியுடன் தெரிந்தது.

   ``வீட்டுக்கு வந்து போன அண்ணா சாப்பிடும்போதுகூட இரண்டு சாமான்களைக் கழற்றவே இல்லை’’ என்றான்.

   ``ஒன்று, அவரது இடுப்பில் இருந்த பிஸ்டல்.”

   ``மற்றது...” என்று சொல்லிவிட்டு, கொஞ்சம் குரலைத் தாழ்த்தி...

   ``சயனைடு” என்றான்.

   கிரிக்கெட் விளையாடிவிட்டு கேணியடியில் கூடுகின்ற எங்களின் வழக்கமான அரட்டையில் ஒருநாள் மணிக்கூட்டுக் கதை போலவே த்ரில்லான விளக்கம் ஒன்றை சயனைடுக்கும் தர ஆரம்பித்திருந்தான் ரூபசுந்தர்.

   ``சயனைடை போராளிகள் கண்ணாடிச்சிமிழ் ஒன்றில் போட்டு அடைத்து, கழுத்தில் பட்டி ஒன்றில் கட்டியிருப்பர். எதிரிகளிடம் அகப்பட்டுத் தப்பிக்க முடியாது என முடிவெடுக்கும் தருணத்தில் போராளிகள் அந்தச் சிமிழை எடுத்துக் கடைவாயில் வைத்துக் கடித்து நொறுக்குவர். நொறுங்கிய அந்தச் சிமிழ்ச் சிதிலங்கள் வாயின் உள்ளே காயத்தை ஏற்படுத்தி அதில் சயனைடு கலக்கும்போது எண்ணி மூன்று விநாடியில் ஆள் அவுட்’’ என்று சொன்னான்.

   அந்த விளக்கத்தின் பிற்பகுதி தனது விளக்கத்துக்கு மிக நெருக்கமாகக் காணப்பட்ட பெருமையோடு மணிவண்ணன் எங்கள் எல்லோரையும் ஒருமுறை திரும்பிப் பார்த்தான்.

   இருந்தாலும் சயனைடு தொடர்பாக ஒவ்வொருவரும் தந்த விளக்கங்கள் குழப்பமாகவே இருந்தன.

   பிறகு ஒருதடவை, மகாதேவா மாஸ்டரின் ரசாயனவியல் வகுப்பின்போது இந்தச் சந்தேகத்தை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்துவதற்காகப் பின்வாங்கிலிருந்து அவரிடம் துண்டு எழுதிக் கேட்டபோது, அவர் அதற்குப் பதில் தர மறுத்துவிட்டார்.

   ``ரூபசுந்தரின் அண்ணா, அடுத்த தடவை எப்போது விடுமுறையில் வீடு வருவார்?’’ என்று நாங்கள் அடிக்கடி ரூபசுந்தரிடம் கேட்டபோதெல்லாம், அவன் மேலும் மேலும் பல திகில் கதைகளையெல்லாம் அவிழ்க்கத் தொடங்கினான்.

   அண்ணா தற்போது முக்கியப் பொறுப்புகளை வகிப்பதாகவும் அவர் பகலில் வீட்டுக்கு வந்து போவது பாதுகாப்புக்குப் பிரச்னையாகிவிடலாம் என்பதால், இரவில் வருவதுதான் வசதி என்று போனதடவை வரும்போது கூறியதாகவும் அவன் சொன்னான். ``அப்படியே வந்தாலும் அவருடைய பாதுகாப்புக்காகப் பலர் அவரோடு வருவார்கள். அவர்கள் அண்ணாவை நெருங்கவிட மாட்டார்கள்’’ என்றான்.

   அண்ணாவுடன் வரும் பாதுகாவலர்கள் கண்டிப்பானவர்கள். அளவாகத்தான் தங்களுடன் அண்ணா இருந்து பேசுவதற்கே அனுமதிப்பதாக வேறு கூறியிருந்தான்.

   அந்தக் காலப் பகுதியில் மண் மீட்பு நிதிக்காக ஒவ்வொரு குடும்பத்திடமும் இரண்டு பவுன் தங்கம் வாங்கப்போவதாக இயக்கம் அறிவித்திருந்தது. போராட்டம் என்பதை பொழுதுபோக்காகப் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு, இந்தப் பவுன் வாங்கும் அறிவிப்பு பற்றிக்கொண்டுவந்தது. அப்போது அம்மா தாலிக்கொடியைக்கூடப் போடுவதற்கு  பயந்து, போலித்தங்கத்தில் செய்த சங்கிலி ஒன்றைத்தான் எப்போதும் அணிந்திருந்தார். ஆனால், இந்தக் கதையை ஒருமுறை கிரிக்கெட் விளையாடிய பிறகு பேசும்போது, தங்களது குடும்பம் பவுன் கொடுக்கத் தேவையில்லை என்று ரூபசுந்தர் கூறியபோது, எங்களுக்கு வழக்கம்போல மறுபடியும் அதிர்ச்சி. வழக்கம்போல அவனது விளக்கத்தை எதிர்பார்த்து அவனது முகத்தைப் பார்த்தபோது...

   ``போராட்டத்துக்குப் பிள்ளைகளைக் கொடுத்த ஆள்களிடம் இயக்கம் பவுன் கேட்கயில்லை” என்று நாசூக்காக தங்களது குடும்ப கௌரவத்தை இடித்துக்காட்டினான்.

   இன்னொரு தடவை தனது தூரத்து முறையான மாமா ஒருவர் முன்பு இயக்கத்தில் இருந்ததாக மணிவண்ணன் கதை ஒன்று தொடங்கியபோது, உடனே குறுக்காகத் தனது கதையைப் போட்ட ரூபசுந்தர்,

   ``அவருக்கு அடிபாட்டில எத்தனை காயம்?” என்றான்.

   கதை தொடங்கியவிதத்திலேயே எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. ``மணிவண்ணனுக்கு மாமன்காரனையே யாரென்று தெரியாது. அதற்குள், அவருக்கு எத்தனை காயம் என்று இவனுக்கு எப்படித் தெரியப்போகிறது! அதுசரி, எத்தனை காயமென்றாலும் இப்போது அதற்கென்ன? காயத்தைக் கணக்கெடுப்பதற்கு அதில் என்ன இருக்கிறது?’’ என்று கேட்க, ரூபசுந்தர் தனது அடுத்த விளக்கத்தை ஆரம்பித்தான்.

   ``மணி! இயக்கத்துக்குப் போய் சும்மா படம் காட்டிக்கொண்டிருக்கிற ஆளெல்லாம் `வீரர்’ எண்டு நினைக்காதை. அண்ணா சொன்னவன், 17 சண்டையாம். அதில ஏழில தனக்குக் காயமெண்டு. அம்மா கத்துவா எண்டு அவரும் சொல்லயில்லை. அவர் எனக்குச் சொன்னவர் எண்டு நானும் யாருக்கும் சொல்லயில்லை. இரண்டு சண்டையில உள்ளுக்கப் பாய்ஞ்ச சனங்களை இன்னும் வெளியிலயே எடுக்கயில்லை, தெரியுமே!”

   சொல்லி முடிக்கும்போது மணிவண்ணன்மீது மட்டுமல்ல, அவனது ஒட்டுமொத்தப் பரம்பரையின் மீதே ஏளனப் பார்வையை அவிழ்த்துவிட்டான் ரூபசுந்தர்.

   நான் கொழும்புக்கு வந்த பின்னர், ரூபசுந்தரின் குடும்பத்தினர் எங்கே சென்றார்கள் என்று அடிக்கடி அம்மாவிடம் கேட்கும்போதெல்லாம் ``அவர்கள் வன்னிப்பக்கம்தான் எங்கேயோ இடம்பெயர்ந்து சென்றார்கள்’’ என்றும் ``தொடர்புகள் முற்றாக இல்லை’’ என்றும் சொன்னார். ஆனால், போன கிழமை அம்மா சொன்ன தகவல் எனக்கு அதிர்ச்சியை மாத்திரமல்லாமல், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியி ருந்தது.

   ``நீ ஒண்டும் போய்ப் பார்க்கவேண்டாம் ராசா. தேவையில்லாத பிரச்னைகளை விலைக்கு வாங்காத... அவனோட கதைக்கப் போய், நீ பிரச்னையல மாட்டிப்போடாத.”

   சம்பிரதாயமான அக்கறையுடன் அம்மாவின் அந்தத் தொலைபேசி உரையாடல் அன்று நிறைவ டைந்திருந்தது.

   அந்தத் தகவலைக் கேட்டதிலிருந்து எனக்குள் பழைய நினைவுகள் அனைத்தும் பெருங்கலவரங்களை மூட்டத் தொடங்கின. மனதுக்குள் கல்லொன்று தானாகவே காற்றில் மோதுண்டு மோதுண்டு சிலையாவது போன்ற உக்கிரமான உணர்வை ஏற்படுத்தியது. கேணியடிக் கதைகளும் அந்தக் கதைகளின் நாயகனும் புகார்கொண்ட கனவுலகக் காட்சிகளின் வழியாக எழுந்து நடந்துவருவதுபோலக் கிடந்தன.

   நீண்ட பெருவீதியை வேகமாக விழுங்கியபடி ஒன்றரை மணி நேரமாகப் பயணித்த எனது கார், சிட்னியின் புறநகர்ப் பகுதியை வந்தடைந்தபோது நேரம் மதியத்தைத் தாண்டியிருந்தது. நகரிலிருந்து ஓரளவுக்கு ஒதுக்குப்புறமாக அமைக்க ப்பட்டிருந்த அந்த விசாலமான முகாம், உயரமாக
   அமைக் பட்டிருந்த   மின்வேலிகளுக்கு நடுவே உறங்கிக்கொண்டிருந்தது. உள்ளே இருப்பவர்களுக்கும் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், முகாமைச் சுற்றி குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒன்றாகப் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள், எல்லா திசைகளிலும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தன. என்ன குற்றம் செய்ததோ தெரியவில்லை, வாசலில் பெரியதொரு மரம் மொட்டையடிக்கப்பட்ட நிலையில் குற்றுயிராகக் கிடந்தது. அந்த மரத்தின் அருகிலேயே முகாமின் பெயரைப் பெரிய எழுத்தில் எழுதிய பதாகை ஒன்று இரும்புச் சட்டகத்தில் பொருத்திக் கிடந்தது.

   வாகனத்தில் வருபவர்கள் முகாமுக்கு அண்மையில் வந்தவுடன் வேகத்தைக் குறைத்துவிடவேண்டும் என்பதற்குரிய கட்டளையாக முகாமை அண்மித்துள்ள பாதையில் 10 - 15 மீட்டர்களுக்கு ஒரு தடவை வேகத்தடைகள் போடப்பட்டிருந்தன.

   ஏற்கெனவே தொலைபேசியில் அழைத்து பெயர் விவரங்களைக் கொடுத்து சந்திப்புக்கு அனுமதி வாங்கிய காரணத்தால், எந்தவிதமான பதற்றமும் இல்லை. இருந்தாலும் கார் தரிப்பிடத்திலிருந்து ஓங்கி உயர்ந்து வியாபித்துக் கிடந்த அந்தக் கட்டடங்களை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தபோது ஒருவிதப் பதற்றம் உள்ளுக்குள் உருண்டோடியபடியே இருந்தது.

   முகாமின் வாசலுக்குச் சென்றபோது கண்ணாடி அறைக்குள் சீருடையில் நின்ற அந்தப் பெண்மணி அலுவலகத்தில் இருந்த பிரதி இயந்திரத்திலிருந்து வழிந்து விழுந்துகொண்டிருந்த ஆவணங்களை அவசர அவசரமாக எடுத்து மேலும் கீழுமாய் மேய்ந்துவிட்டு மேசையில் அடுக்கிக்கொண்டிருந்தார்.

   அவள் நின்றுகொண்டிருந்த பணியறை குளிரூட்டப்பட்டிருந்த காரணத்தால்தானோ என்னவோ அவள் அதிகாலை அணிந்திருந்த அல்லது அதற்குப் பிறகு தொடர்ச்சியாக அவள் மீண்டும் மீண்டும் அணிந்துகொண்ட அவளது முகப்பூச்சுகள் எதுவும் அழிந்துவிடாமல் அவளை அழகாகக் காண்பிக்க முயன்றுகொண்டிருந்தன. நடுத்தர வயதிருக்கும். அழகு எனச் சொல்லிட முடியாது என்றாலும், அழகில்லை என்று ஒதுக்கிவிடவும் முடியாத முகவெட்டு. சராசரி உயரம். பாதுகாப்பு அதிகாரிக்குரிய சீருடையை அணிந்திருப்பதால் அந்த உருவத்தில் பலோத்காரமான ஒரு மிடுக்கு வேண்டுமென்று ஒட்டப்பட்டிருந்தது. அந்தக் கண்ணாடியின் வழியாக முகத்தில் சிரிப்பே இல்லாமல் என்னை நிமிர்ந்து பார்க்கும்போதும்கூட அந்தப் பார்வை அப்படியொன்றும் என்னை மிரட்டுவதாகவோ, முகாம் அதிகாரிக்கு உரியதாகவோ தெரியவில்லை.

   ``யாரைப் பார்க்கவேண்டும்?’’ என்ற கேள்வியோடு கண்ணாடியின் வழியாக அடையாள அட்டையைக் கேட்டவளிடம் அவள் கேட்கும் முதலே தயாராக எடுத்து வைத்திருந்த சாரதி அனுமதி அட்டையைக் கொடுத்தேன். உள்ளே செல்வதற்கான அனுமதிப் பத்திரத்தை வாங்கி, அதில் பார்வையிடச் செல்லும் நபர் `செழியன்’ என எழுதினேன். பிறகு அதை வெட்டினேன். `பாஸ்கரன் தணிகாசலம்’ என்று இயற்பெயரை எழுதினேன். வாங்கிய வழியாக மீண்டும் கொடுத்த பத்திரங்களின் விவரங்களைச் சரிபார்த்துவிட்டு, தனது மேசைக்குக் கீழிருந்த ஆழியை அழுத்திக்கொண்டு என்னை உள்ளே போகுமாறு ஒரு திசையைக் காண்பிக்க, அதன் வழியாக நடந்து சென்றேன்.

   எனது தொடுகை    எதுவுமின்றி இரண்டு கண்ணாடிக்கதவுகள் தானே திறந்துகொண்டன. அந்தக் கதவுகள் காண்பித்த வழியாக நடந்து செல்ல, மூன்றாவது கதவின் பக்கமாக நின்றுகொண்டிருந்த உயர்ந்த ஆசாமி, தனது கையில் வைத்திருந்த தட்டை வடிவிலான பொருள் ஒன்றை நோக்கி என்னை அழைத்தார். என்னை சோதனை செய்யப்போவதாக சைகையால் பேசியவர், கைகளை உயர்த்திக் காண்பித்துக்கொண்டு நிற்கக் கோரினார். நானும் காற்றில் அறையப்பட்ட இயேசுவைப்போல கைகளை நீட்டி விரித்தபடி நின்றேன். எனது உடல் விளிம்பை,  தனது கையில் இருந்த கருவியால் மேய்ந்தார். நான் உள்ளே செல்வதற்குத் தகுதியானவன் என்றதொரு சிறிய புன்னகையைத் தந்துவிட்டு, கதவைத் திறந்துவிட்டார்.

   பாவிகளைப் பார்க்க வருபவர்களுக்கென்று அமைக்கப்பட்டிருந்த அந்தப் பரந்த மண்டபத்தில் இரண்டு நிரைகளில் ஆறு பெரிய மேசைகள் போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு மேசையையும் சுற்றி ஆறேழு கதிரைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. ஆனால், அந்த மண்டபத்தில் என்னைத் தவிர யாரையும் காணவில்லை. அங்கு உள்ள எந்தக் கதிரையில் அமர்ந்தாலும் பரவாயில்லைதான். ஆனாலும் எனக்கென்று தரப்பட்ட எண்ணின் பிரகாரம் வலதுபக்கம் இருந்த இரண்டாவது மேசையின் ஓரமாக இருந்த கதிரையை இழுத்து அதில் அமர்ந்துகொண்டேன். உள்ளே வருவதற்கு முன்னர் கைப்பேசி முதல் அனைத்தையும் வாசலிலேயே உருவி வைத்துவிட்டு அனுப்பியதால், இப்போது அந்த மண்டபத்தின் அழகை ரசிப்பதைவிட வேறு வழியில்லை.

   சுவர்கள் முழுவதும் பல வண்ண ஓவியங்கள், ஆஸ்திரேலியாவின் பெருமையைக் கூறும் வரலாற்றுச் சம்பவங்கள், அகதிகளாக வருகிறவர்களை வாழவைப்பதுதான் தங்களது வரலாற்றுக் கடமை என்ற பொருள்பட எழுதப்பட்ட மூத்த அரசியல்வாதிகளின் பொன்மொழிகள் என்று அனைத்தினாலும் விருந்தினர்களை வியக்கவைக்கும் அளவுக்குப் பல வேலைப்பாடுகள் அங்கு செய்யப்பட்டிருந்தன. ஆஸ்திரேலியாவின் ஆதிக்குடிகள் தொடர்பான செய்திகள் அடங்கிய நூல் எனக்கு முன்னால் இருந்தது. அதை எடுப்பதற்கு எழும்பியபோது, மண்டபத்தின் இன்னொரு மூலையில் இருந்த கண்ணாடிக் கதவுகள் திறந்தன.

   நல்ல உயரம், பொது நிறம். சீருடை இல்லாத செழியன் அண்ணா என்று ஓரளவுக்கு ஊகிக்கக்கூடிய அந்த நபர் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் சகிதமாக என்னை நோக்கி நடந்து வர, நான் என்னையறியாமல் எழுந்துகொண்டேன். நடையில் ரூபசுந்தர் கூறிய அதே மிடுக்கு இன்னமும் தெரிந்தது. என்னை நோக்கி வர வர, அவரது நடையில் வேகம் கூடியது. அருகில் வந்தபோது ஒரேயடியாகக் கட்டியணைத்துக்கொண்டார்.

   அந்த அணைப்பு, ஒரு தேசமே என்னைக் கட்டியணைத்ததுபோல் இருந்தது.

   அந்தத் தேசத்தின் விடுதலைக்காகக் கனவுகண்ட அந்தக் கண்கள் என்னைக் கூர்ந்து பார்த்த அந்தக் கணம், வாழ்நாளில் நான் அதுவரையில் அனுபவித்திராத ஒரு பேரதிர்வை நிகழ்த்திவிட்டு ஓய்ந்தது.

   “தங்கச்சி சொன்னவள், நீங்கள் இஞ்சதான் இருக்கிறீங்கள் எண்டு. அநேகமாக வந்து பார்க்கக்கூடும் எண்டு… வாங்கோ, இருங்கோ இருங்கோ.”

   எனது ஒரு கையை தன் இரு கைகளாலும் வாஞ்சையோடு பிடித்து அழைத்துச்சென்று கதிரையில் இருத்திவிட்டு முன்னால் இருந்த கதிரையில் அமர்ந்துகொண்டார்.

   என்னுடல் என்னை விட்டுத் தனியாகக் கழன்றுபோய் நின்று பேசுவதுபோன்ற குற்ற உணர்ச்சியை எனக்கும் அவருக்குமான அந்த இடைவெளியில் நான் உணர்ந்தேன்.

   எங்கள் கேணியடிக் கதைகளின் நாயகன், நாங்கள் பார்ப்பதற்கென்று தவம் கிடந்து தவம் கிடந்து தவறிய வீரத்தளபதி, எங்களால் தொட முடியாதுபோன பிஸ்டலினதும் சயனைடினதும் உரிமையாளன். இப்படி எல்லாத் தகுதிகளோடும் எங்களுக்குள் கோலோச்சிய வீரன் என் கண் முன்னால் இருக்கிறார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அவரின் கண்கள் முதற்கொண்டு முகத்தில் அனைத்துமே என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தன. பாலுக்கு அழுத குழந்தையின் பசி ஆறிய நிறைவும் விகல்பமற்ற உள்மனதின் அப்பட்டமான ஒளிவடிவமுமாக செழியன் அண்ணாவின் பார்வை என்மீது மோதி வழிந்துகொண்டிருந்தது.

   ஒரு குழந்தைபோலக் கதைக்கத் தொடங்கினார். ஆனால், என்னால் அவரது முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. என் கண்களுக்குக் கடிவாளம் போட்டுக்கொண்டிருந்த கேணியடி நினைவுகள், பெருஞ்சலனத்தோடு செழியன் அண்ணாவின் மீது பரபரத்துக்கொண்டிருந்தன. சுதாவும் மணிவண்ணனும் பேசியவை முதற்கொண்டு பிற்காலத்திலும் என் மனதில் புயலடித்துத் திரிந்த செழியனின் அண்ணாவின் நினைவுகள் - கதைகள் எல்லாவற்றிலும் இப்போது எனக்கு முன்னால் இருக்கும் உருவத்தை நிறைத்துக்கொண்டேன்.

   வெளியில் மெலிதான வெயில் என்றாலும் உள்ளே குளிரூட்டியைப் போட்டிருந்தார்கள்.

   அப்போதுதான் எனது நெஞ்சில் ஓங்கி அறைந்ததுபோல அதைக் கண்டேன். செழியன் அண்ணா போட்டிருந்த மெல்லிய நீல நிற டி-ஷேர்ட்டின் ஒரு பக்கமாக அவர் கழுத்தில் அணிந்திருந்த சிவப்புக் கயிறு தெரிந்தது. வெடி வைத்துக் கிளப்பிய மலை நுனியிலிருந்து பாறைகள் உருண்டோடி பள்ளத்தை நோக்கி வருவதுபோல எனக்கு உள்ளுக்குள் ஏதேதோ  செய்யத் தொடங்கியது.

   சண்டை முடியும் முதலே தான் ஓரளவுக்கு முடிவை ஊகித்துக்கொண்டு கொழும்புக்கு வந்து வத்தளையில்தான் தங்கியிருந்ததாகச் சொன்னார்.

   அந்தக் கயிறு கனகாலமாக அவர் போட்டிருக்கவேண்டும். சில இடங்களில் நூல்கள் கிளம்பிக்கிடந்தது தெரிந்தன.

   அங்கு தங்கியிருந்த மூன்று மாதங்களுக்குள் ரூபசுந்தரோடு வீட்டுக்கு வந்துபோன யாரோ ஒரு பெடியன் போலீஸில் காட்டிக்கொடுக்க, தன்னை ஓர் இரவு வெள்ளை வானில் வந்து கடத்திக்கொண்டு போனதாகக் கூறினார்.

   சயனைடு பற்றி நாங்கள் கருத்தரங்கு நடத்தி அதன்மீதான காதல் பெருகி உச்ச உணர்வைப் பெற்றுக்கொண்ட நாளொன்றில் மணிவண்ணன் உருத்திராட்சைக்கொட்டையில் கோத்த சிவப்புக் கயிறு ஒன்றை எல்லோருக்கும் கொண்டுவந்து நாங்கள் வீரர்களாகக் கயிறு அணிந்த போலி நாள் ஒன்றின் பொழுதுகளை எண்ணிப்பார்த்தேன். அன்றிரவே அதைக் கண்ட அம்மா, கழற்றி எறியுமாறு தனது எட்டாவது ஸ்வரத்தில் குழறித் தீர்த்ததும் நினைவில் வந்தது.

   தனக்கு ஏற்கெனவே தெரிந்த ஓ.ஐ.சி ஒருவன் தகவலை அறிந்து தன்னை விடுதலை செய்வதற்கு உதவிசெய்து அடுத்த கிழமையே மலேசியாவுக்கு ஃப்ளைட் எடுத்துத்தந்து தரைவழியாக இந்தோனேஷியாவுக்குள் நுழைந்த கதையைக் கூறினார்.

   நம்பிக்கை என்ற பெயரில் நாங்கள் கட்டியெழுப்பிக்கொண்டிருக்கும் மானிடப்  பெருந்தத்துவம் எனப்படுவதெல்லாம் வாழ்வதற்குரிய வட்டத்துக்குள் நாங்களே போலியாக அலங்காரமிட்டு வைக்கும் போலி உருவங்களே தவிர, சாவுக்கும் துணிந்த ஓர் இலக்கின் மீது வைத்திருக்கும் ஓர்மம்தான் உண்மையான நம்பிக்கை என்ற துணிவோடு தனக்குள் நிரப்பிவைத்திருந்த அந்த நிறைந்த ஒளியைச் செழியன் அண்ணாவின் விழிகளுக்குள் தேடினேன்.

   நிறைவலிமையும் சர்வவல்லமையும் பொருந்திய அந்தத் துணிவு இப்போதெல்லாம் முடிந்துவிட்ட கணங்களில் - இன்னொரு தேசத்தில் - `அடிமை’ என்ற நிலையிலிருந்து `அகதி’ என்று மாறிவிட்ட அடையாள மாற்றத்தில் எவ்வாறு வாழ்கிறது என்று அவரது முகமெங்கும் தேடினேன்.
   உண்மையைச் சொன்னால், அவரது நெஞ்சின் மீதுதான் கண்களால் துளாவிக்கொண்டே யிருந்தேன்.

   `நீங்கள் கழுத்தில் போட்டிருக்கிறது என்ன கயிறு?’ என்று கேட்க ஆயத்தமானபோது...

   “ஆஸ்திரேலியா 15 நாள் பயணம்” என்று அவர், முதன்முதலாக முகத்தில் ஒரு வாட்டத்தைக் காண்பித்தபோது, கஷ்டப்பட்டு எனது கேள்வியை நிறுத்திக்கொண்டேன்.

   ரூபசுந்தரைத் தன் தங்கச்சி ஜேர்மனுக்கு எடுத்துக்கொண்ட நாளில், தான் இயக்கத்தை விட்டுப் பிரிந்து வீட்டோடு இருக்கும்போது தன் அப்பா, அம்மாவை நினைத்து வன்னியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையும் சொன்னார்.

   சாவுக்குத் துணிந்த வாழ்வுக்கு அப்பால், இப்போது வாழ்வதற்கு அதைவிடத்  துணிச்சலாகக் காண்பித்த அந்த அசலான வீரம், எனக்குள் இன்னும் இன்னும் பல கேள்விகளைத் திறந்துகொண்டேயிருந்தது.

   ``இன்னும் 15 நிமிடத்தில் விருந்தினர்கள் நேரம் முடிவடையப்போகிறது’’ என்று எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இரண்டு மணி நேரம் நிறைவடையப்போவதை முகாமின் பாதுகாப்பு அதிகாரி அருகில் வந்து ஞாபகப்படுத்திவிட்டுச் சென்றார்.

   இருவரும் எழுந்தோம், நான் விடைபெறு வதற்குத் தயாராக நின்றதாக உணர்ந்தவாறு அருகில் வந்த செழியன் அண்ணா -

   “என்ன பாக்கிறாயடா, இது இந்தோனேஷியாவில நேந்து கட்டினது” என்று குனிந்து தனது நெஞ்சில் தொங்கியவாறு இருந்த அந்தக் கரடுமுரடான காய் வடிவப் பொருளைக் கையில் ஏந்திக் காண்பித்தார்.

   எனக்குள் பறந்துகொண்டிருந்த கேள்விகளில் ஒன்று குறைந்ததா அல்லது கூடியதா என்றுகூட உணர முடியாமல் உறைந்துபோனேன்.

   ரூபசுந்தரின் நம்பரை மணிவண்ணன், சுதாவுக்கும் கொடுத்துவிடச் சொல்லிக்கொண்டு விருந்தினர் அறையின் வாசல் வரை தோளில் கைபோட்டவாறு நடந்து வந்த செழியன் அண்ணா, வாயிலைத் தாண்டும் முன்பு மீண்டும் ஒருமுறை கட்டியணைத்துக்கொண்டார்.
   “கேட்க மறந்திட்டன் அண்ணா, அப்பா ஏன் இப்பிடி...” என்று இழுக்க.

   “அம்மாவிண்ட நினைப்பில பயங்கரமா உடைஞ்சுபோனாரடா, கனகாலமாக நடைப் பிணமாத்தான் அலைஞ்சு கொண்டிருந்தவர். எங்களுக்கு கஷ்டம் குடுக்காமல் தான் போய்ச் சேரவேணும் எண்டு ஒருநாள் முடிவெடுத்துப் போய்ச் சேர்ந்திட்டார். நான் ஆளப்பிடிச்சிருப்பன், ஆனா, எடுத்துவெச்ச மருந்தை நடுத் தொண்டையிலேயே போட்டு விழுங்கியிருக்கிறார், மூன்று விநாடிதான் ஆள் அவுட்.”
   https://www.vikatan.com
  • By நவீனன்
   கற்படிகள் - சிறுகதை
     ஜி.கார்ல் மார்க்ஸ் - ஓவியங்கள்: ஸ்யாம்  
   ராமமூர்த்தி அந்த வீட்டை நெருங்கி அதன் வெளிப்புற இரும்புக் கதவின் மீது கைவைத்து உள்ளே பார்த்தார். தாழ்வாரமும் கார் நிறுத்துமிடமும் ஆளரவமற்று இருந்தன. அது ஒரு தனித்த, அலுவலர்கள் குடியிருப்பாக இருந்தது. கதைவைப் பற்றியபடி சிறிது நேரம் யோசித்துக்கொண்டே நின்றவர், பிறகு வலது கையை உள்ளே விட்டு கதவின் கொண்டியைச் சுழற்றினார். மெல்லிய உராய்வுடன் அது விலகியது.

   நடந்து உள்ளே போய், நிலைக்கதவை ஒட்டியிருந்த அழைப்புப் பொத்தானைத் தயக்கத்துடன் அழுத்தினார். அது அந்தச் சூழலுக்குச் சற்றும் பொருத்தமற்ற வகையில் ட்ரிங்... எனும் பழைய தொலைபேசி ஒலியைப் போன்ற, நீண்ட நாராசமான சப்தத்தை உள்ளே எழுப்பியது. அவ்வொலி அவரது மண்டைக்குள் ஊடுருவியது. அதன் கூசச்செய்யும் அதிர்வு, ஒலிப்பான் நின்ற பிறகும் தொடர்ந்தது. 

   வீட்டின் உள்ளிருந்து மெல்லிய சரசரப்புடன் ஆள் நடந்து வரும் சப்தம் கேட்டது. வசந்தாவாகத்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டார். அவர் நின்ற இடத்திலிருந்து நிலைப்படி ஓர் அடிக்கு மேல் உயரம் இருந்தது. கதவைத் திறந்தவள், கெச்சலான உடம்புடன், புடவையை உயர்த்திக் கட்டியபடி, கைகளில் மினுங்கும்  ஈரத்துடன் இருந்தாள்.

   “யாருங்க....?”

   ‘வசந்தாவா இது... அவளா இப்படி மாறிப்போய் விட்டாள்...’ என்று மனதிற்குள் தோன்றியதை அவசரமாக நிராகரித்தார்.

   “ம்ம்... சுப்ரமணியன் வீடுதான இது...?”

   “ஆமாங்க, அவரு ஆபீஸ் போய்ட்டாருங்களே....”

   அவளது பதில் ஏன் இப்படி நறுக்கென்று முடிகிறது என்று அவருக்குப் புரியவில்லை. அது அவ்வாறே பேசிப் பழகும் நகரத்தின் தொனியாக இருக்கலாம் என்று நினைத்தார். அவள் சொல்லிவிட்டு அவரது முகத்தைப் பார்த்தாள். “வீட்டில் வேறு யாரும் இல்லையா...” என்று கேட்கலாமா என அவர் பரிசீலித்துக்கொண்டிருக்கும்போது அவரது வாய் “வசந்தா வீட்லதான இருக்கு...?” என்று கேட்டது. அந்தக் கேள்வி அவரைவிட உயரமாக நின்றுகொண்டிருந்த வளைக் கொஞ்சம் இறக்கியது.

   “அவங்க வீட்லதான் இருக்காங்க.... அந்த பெஞ்சில உக்காருங்க..” என்று சொல்லிவிட்டு உள்ளே போனாள். அவள் அந்தக் கூடத்தைக் கடந்து உள்ளே போனதும் மீண்டும் அந்த வீடு ஆழ்ந்த அமைதிக்குள் உறைந்தது. அவள் கைகாட்டிய இடத்தில் மரப்பலகையொன்று இருந்தது. தோளில் கிடந்த துண்டை எடுத்து அந்த வழவழப்பான பெஞ்சில் போட்டுவிட்டு அப்படியே அதில் உட்கார்ந்தார். நிலைப்படியில் அழகுக்காகக் கட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் பட்டி அவரது கவனத்தை ஈர்த்தது. அதில் வெண்மணிகளும், பிளாஸ்டிக் ரோசாக்களும் ஒரு வெல்வெட் துணியின் மீது  கோக்கப்பட்டு, அது அந்தப் பட்டியில் சேர்த்துக் கட்டப்பட்டு, அதுவொரு மாலையைப்போல நிலையின் மீது தொங்கவிடப்பட்டிருந்தது.

   காற்றில் அந்த மணிகள் அசையும் ஒலி, பரத்தி வைக்கப்பட்டிருக்கும் காய்ந்த நெல்மணிகளின் மீது கொலுசுக்காலுடன் குழந்தைகள்  அலைந்து விளையாடும் சப்தத்தை நினைவூட்டியது. சுவரில் பூசப்பட்டிருந்த அடர் வண்ணத்தையும் அது வெளியிலிருந்து வரும் வெளிச்சத்தை வடிகட்டி சூழலைக் குளுமையாக்கி விடுவதையும்  சிறிது நேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

   மீண்டும் வீட்டின் உள்ளே பார்த்தார். யாரும் வருவதற்கான சுவடில்லை. இருப்பு கொள்ளவில்லை. எழுந்து நடைபாதையைக் கடந்து மீண்டும் வெளிப்புறக் கதவுக்கு வந்தார். அதைப் பற்றிக்கொண்டு வீட்டின் இரண்டு பக்கமும் பார்த்தார். வீட்டின் வலது பக்கத்தில் ஒரு புங்கை உயர்ந்திருந்தது.  அடர்த்தியாக இருந்தாலும் இளம் மரம். அதைச் சுற்றி எந்தத் தாவரங்களும் இல்லாமல் தரை, திட்டுத்திட்டான புற்களுடன் இருந்தது. ஆனால் வீட்டின் இடது பக்கத்தில் முழு வீச்சிலான தோட்டம் வளர்க்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டிருந்தது.

   தோட்டத்தின் நடுவே இரண்டு துளசிச் செடிகள் அடர்த்தியான இலைகளின் சுனையோடு இருந்தன. அதற்கு அடுத்து காம்பவுண்டின் ஓரத்தில் கறிவேப்பிலை மரம் ஒன்று நெடுநெடுவென உயர்ந்து அடுத்த வீட்டிலும் கிளைகளை நீட்டியிருந்தது. குத்துக் குத்தாக டிசம்பர் மற்றும் கனகாம்பரச் செடிகள் இருந்தன. பிசிர்களற்ற புது எருக்கம் கயிற்றைப்போல நீர் பீய்ச்சும் ரப்பர்க்குழாய் தோட்டத்தினூடே நெளிந்துகிடந்தது. அதன் ஒரு முனை சுவரில் பதிக்கப்பட்டிருந்த திருகுக் குழாயில் பிணைக்கப்பட்டிருந்தது. சீரான இடைவெளியில் அதிலிருந்து தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது. அந்தத் திருகைச் சுற்றிலும் அதன் கீழே உள்ள சுவரிலும் கரும்பச்சையில் பாசி, ஒரு சீரற்ற கோட்டைப்போல வழிந்து தரையைத் தொட்டிருந்தது. அது முடியும் இடத்தில் அறுகம்புல் வளர்ந்து தழைத்திருந்தது. எப்போதும் சொட்டிக்கொண்டே இருக்கும் நீர் அறுகம்புல்லிதழின் நீளத்தையும் அகலத்தையும் கூட்டி, குத்திட்டு நிற்கும் அதன் இயல்புக்கு மாறாக அதைக் காற்றில் அசையச் செய்திருந்தது.

   அந்த அறுகம்புல் திட்டை ஒட்டி, ஏழெட்டு வாழைக்கன்றுகள் வாழை ஆக்கையால் கட்டி சுவரின் ஓரமாக வைக்கப்பட்டிருந்தன. பதிப்பதற்காக, வேரை ஒட்டித் தண்டு சீவப்பட்ட வாழைக்கன்றுகள். அப்போதுதான் அகழ்ந்து எடுக்கப்பட்ட உருண்டைக் காவள்ளிக் கிழங்கைப் போல இருந்த அதன் வேர்ப்பகுதியின் கறுப்பு, தொடங்கிய இடத்தில் சீவப்பட்டிருந்த தண்டில் ஒளிரும் பச்சையால் மட்டுப்பட்டிருந்தது.

   “கட்டுல இருக்கிறதுல ரெண்டு மூணு மொந்தங்கன்னா இருக்கும்போலயே...” என்று நினைத்தார். “அறுவம்புல்லுக்குத் தண்ணி வுடுற மாதிரி அதுக்கும் வுட்டா, தாரு போடுறதுக்கு முன்னாடியே தென்ன மரம் மாதிரில்ல வளந்து நிக்கும்...” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டார். “புங்க மரத்துக்கு இந்தப் பக்கம், நடைபாதைக்குக் கொஞ்சம் தள்ளி மர நிழல் தொடாத எடத்துல ஊனுனா நல்லா வளரும்...” என்று தோன்றியது. “ஆனா வளந்துச்சுன்னா தோகை நடபாதைக்கு வரும்தான்...” என்றும் தோன்றியது.

   மீண்டுமொருமுறை நிலைக்கதவின் பக்கம் பார்த்தார். சுப்ரமணி வேலைக்குப் போயிருப்பாருதான்... வசந்தாவைத் தவிர வீட்டில் வேறு யாரும் இல்லையோ... என்று நினைத்தார். அவளுக்குக் கல்யாணம் கட்டிக்கொடுத்த வருஷத்தை நினைத்துப் பார்த்தால், அவளின் குழந்தைகள் இந்நேரம் வேலைக்குப் போய்க்கொண்டிருக்கவேண்டும் என்று மனது தோராயமாகக் கணக்கு போட்டது. அவளுக்குப் பிறகு பத்து வருஷம் கழித்துக் கல்யாணம் ஆன நமக்கே இன்னும் ரெண்டு வருடத்தில் கல்லூரிக்குத் தயாராகும் மகன் இருக்கிறானே என்று அதை ஒப்பிட்டுப் பார்த்தார். மகள்கள் குறித்து வந்த சிந்தனையை அவசர அவசரமாகத் தவிர்த்தார். வேண்டாம், இப்போது அதைப் பற்றி யோசிக்க வேண்டாம் என்று அகம் இறைஞ்சியது. அது இப்படியே வளர்ந்தால், அவர்களின் அம்மாவிடம் கொண்டு போய் நினைவை நிறுத்தும். வேண்டாம்... என்று நினைத்தார்.

   “கொண்டுபோய் நிறுத்தட்டுமே...” என்கிற அகம்பாவமும் கூடவே வந்தது. எப்போதெல்லாம் அத்தகைய ஆத்திரம் வருகிறதோ, அப்போதெல்லாம் அது கழிவிரக்கமாக நிறைந்து மேலும் குமைச்சலுக்குத்தான் தம்மை ஆளாக்குகிறது என்று நினைத்தாலும், அந்தக் குறைந்தபட்ச ரௌத்திரம்தான் சிந்தனையைக் கட்டுக்குள் வைத்து மனதின் சமநிலைக்கு உதவுகிறது என்றும் நினைத்தார்.

   அப்படி நினைக்கும்போது தான், ‘இப்போது எதற்காக வசந்தாவைப் பார்க்க வந்திருக்கிறோம்?’ என்ற கேள்வி அவர் முன் வந்து நின்றது. திரும்பி வீட்டின் நிலைப்படியை மீண்டும் பார்த்தார். இன்னும் அவள் வரவில்லை. இப்படியே கதவைத் திறந்துகொண்டு மீண்டும் வந்த வழியே திரும்பிப் போய்விடலாமா என்று நினைத்தார்.

   அப்படி யோசித்த அந்த கணத்தில், அவர் இப்போது நிற்கும் இந்தக் கதவுக்கும் அவர் கொஞ்ச நேரம் முன்பு உட்கார்ந்திருந்த அந்த மரப்பலகைக்குமான இடைவெளி அவரது பால்யத்துக்கும் இப்போது வந்து நிற்கும் முதுமையின் வாசலுக்குமான தூரத்தைப்போல நீண்டிருந்தது. மட்டுமல்ல, நேற்றிலிருந்து தோன்றிக்கொண்டே இருக்கும் ‘அடுத்து என்ன செய்யப்போகிறோம்’ என்கிற வாழ்வின் நிலையாமைக்கும், வங்கிப் பரீட்சைக்குத் தயாராகிக்கொண்டிருந்த சுப்ரமணிக்கும், அதே காலத்தில் வசந்தாவுக்குக் காதல் கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்த தனக்குமான இடைவெளியைப் போல மிக நீளமானதாகவும் பெரும் அபத்தம் நிறைந்ததாகவும் இருந்தது. தாம் உட்கார்ந்திருந்த பெஞ்சை உற்றுப் பார்த்தார். அந்த பெஞ்சின் வழவழப்பிற்கு சற்றும் பொருத்தமில்லாத சருகு போன்ற தன்மையுடன் அவரது துண்டு அங்கே இருந்தது. தன்னையே தூரத்தில் இருந்து பார்ப்பது போல அப்போது அது அவருக்குத் தோன்றியது.

   திடீரெனப் புங்கை தன் கிளைகளை அசைத்தது. எட்டி, தெருவில் பார்த்தார். காற்று கொஞ்சம் கூடுதலாக வீசியது. அதன் வீச்சில் குளுமை கூடியிருந்தது. இல்லை... இப்படி ஒரு குளிர்ந்த காற்று நமது வீட்டிலோ வயலிலோ வீசவில்லை என்று நினைத்தார். இந்த வருடமும் ஆற்றில் தண்ணீர் வராது என்று தெரிந்துவிட்டது. இருக்கும் ஒரு ஆயில் இன்ஜினை வைத்துக்கொண்டு, தண்ணீர் வராத போது இடையில் சமாளித்துக்கொள்ள முடியுமே தவிர, முழு விவசாயத்தையும் அதை நம்பிச் செய்ய முடியாது. கட்டுப்படியாகாது. தொடர்ந்து மூன்றாவது வருடமாக விவசாயம் பொய்க்கிறது. இப்போதுகூட வயலில் விளையும் நெல், சாப்பாட்டுக்கு மட்டும்தான் ஆகிறது. மீதி நாள்களில் வேலைக்குத்தான் போக வேண்டியிருக்கிறது. முழு விவசாயமும் பொய்த்துப் போனால், வெறும் கூலியாளாகச் சுருங்க வேண்டியிருக்கும். சொற்ப வயலாக இருந்தாலும், தன் வயலில் பயிரிட்டுவிட்டு ஓய்வு நேரத்தில் வேலைக்குப் போவது போன்ற கற்பிதத்தில் இருக்கும் ஆசுவாசம், முழுக்கூலியாளாக வேலைக்குப் போவதில் இல்லை. வேறு எந்த வேலைக்குப் போவது என்று அவருக்குத் தெரியவில்லை. விவசாயம் குறைந்துகொண்டே போகும் வேகமும், வீட்டின் செலவினங்கள் கூடிக்கொண்டே போகும் வேகமும் சம அளவில் இருந்தன. சொந்த ஊரில் இனி வாய்ப்பே இல்லை. வேறு எங்காவதுதான் போகவேண்டும். வயதுக்கு வந்த குழந்தைகளை விட்டு விட்டுத் தூரமாகவும் போய்விட முடியாது. மனைவியால் தனியாகச் சமாளிக்க முடியாது. அவளுக்குத் தெரியாது.

   வெறும் கடுங்காப்பியைக் குடித்துவிட்டு எந்த அதிருப்தியையும் முகத்தில் காட்டாமல், இருக்கும் சொற்ப சோற்றை அவருக்கு அவளால் பரிமாற முடியும். கல்யாணம் கட்டிக்கொண்டு வந்த அதே நாளில் கொண்டிருந்த மையலில் ஓரிழையைக் கூடத் தவறவிடாமல், இப்போதும்கூட அவரை அதே கண்களுடன் பார்க்க முடியும். ஆனால், வாழ்வதற்கு என்ன செய்வதென்று அவளுக்குத் தெரியாது. வாழ்தலும், வாழ்தலுக்கான யத்தனமும் இரண்டு துருவங்களாக அவள் முன் நின்றன.

   அதனால்தான் குழந்தைகளின் ஆற்றாமையை, அவை தகப்பனின் மீது வெளிப்படுத்தும் அவமரியாதையைக்கூட அவளால் அவருக்குக் கடத்த முடிந்ததே இல்லை. ஆனாலும் அவரால் உணர்ந்துகொள்ள முடிந்தது. இந்த வாழ்வை நகர்த்த வேண்டுமெனில் இப்போதைக்கு உறுதியான தவணைகளில் பணம் வேண்டும். இதற்கு மேலும் இந்தக் குறுவிவசாயத்தின் நிச்சயமற்ற தன்மையில் உழல முடியாது. அதற்கு ஒரு வேலை வேண்டும். அப்படி யோசித்தபோது அந்த இரும்புக் கதவை அனிச்சையாக இறுகப் பற்றினார்.

   ‘இப்போது நான் வசந்தாவைப் பார்க்க வந்திருப்பது, உன் புருஷனிடம் சொல்லி எனக்கு ஒரு வேலை வாங்கிக் கொடு என்று கேட்பதற்குத்தானா...?’

   இல்லை... இல்லை...! இந்த மூச்சு முட்டும் அலைக்கழிப்பிலிருந்து நான் வெளியேற வேண்டுமெனில், அழுத்தும் இந்த வயதிலிருந்து முதலில் வெளியேற வேண்டும். ஏதோ ஒன்றிற்கு நான் திரும்பிப் போகவேண்டும். எனக்குக் கொஞ்சம் சக்தி வேண்டும். இந்த வறுமையை நான் சகிக்க வேண்டும். என் குழந்தைகள் யோசிப்பதுபோல, நான் தோற்றுப்போனவன் அல்ல... பிழைக்கத் தெரியாதவன் அல்ல... நான் வெறும் விவசாயி மட்டும் அல்ல... நான் வெறும் கூலியாள் மட்டும் அல்ல... சரி, நீ வேறு யார்...? நீ வேறு யார்...?

   ஆமாம்... நான் யார்...? இதோ இந்த சுப்ரமணி எழுதிய தேர்வை நானும் எழுதி எளிதாகத் தேறியிருக்க முடியும். பிறகு ஏன் அதைச் செய்யவில்லை...? சதா பதற்றத்துடன், புத்தகமும் அடுக்களையும் அம்மாவின் முந்தானையுமாகத் திரிந்த, சிறார்களின் கிண்டலுக்கு ஆளான சுப்ரமணியா நான்...? இதே வசந்தாவை மிகவும் நிதானமாக என் வீட்டுப் பத்தாயத்தில் சாய்த்துவைத்து முத்தமிட்ட போது, இந்த சுப்ரமணி பார்த்திருந்தால்கூட அவனுக்கு அங்கு என்ன நடக்கிறது என்று புரிந்திருக்காது. ஆனால் வசந்தாவின் சுபாவம் தனக்கும் சுப்ரமணிக்கும் இடைப்பட்ட தாக இருந்தது என்று நினைத்தார்.

   அந்த முத்தத்துக்கு ஒன்றும் அவள் பதறியிருக்கவில்லை. ஆனால் அங்கிருந்து அவள் குடும்பம் நகரத்துக்குக் குடியேறி, அவள் படிப்பைத் தொடர்ந்த போது, ராமமூர்த்தி பன்னிரண்டாவதுடன் படிப்பை நிறுத்திக்கொண்டு தன்னை இளம் பண்ணையாராக உருவகித்துக்கொண்டிருந்தான். சுப்ரமணியோ அந்த வங்கி வேலையில் சேர்ந்திருந்தான். அதண்டு பேசாத சுப்ரமணி, ராமமூர்த்தியின் அப்பாவிடம் தனக்கு வேலை கிடைத்து விட்டதைச் சொல்லி ஆசீர்வாதம் வாங்க வந்த போது, “எங்க மனு போடணும், எப்படி அந்தப் பரீட்சையை எழுதணும்னு நம்ம ராமமூர்த்திக்கும் சொல்லுடா...” என்று அவனிடம் சொன்னார். “சரி பெரியப்பா...” என்று அவனும் ஆமோதித்திருந்தான். ஆனால் ராமமூர்த்தியிடம் சுப்ரமணி அதுகுறித்துப் பேசியதில்லை, அவரும் கேட்டதில்லை.

   ஒடுக்கமாக இருந்தாலும் தன்னளவில் கெட்டிக்காரத்தன மாக இருப்பது ஒருவித சுபாவம். அது எந்தக் காலத்திலும் ராமமூர்த்திக்குக் கைவந்த தில்லை. நிலங்கள் குறைந்து, அப்பா இறந்து, சொத்துகள் பிரிந்து, இதோ இந்த கேட்டைப் பிடித்துக்கொண்டு நிற்கும் இப்போது கூட, ஒன்று மட்டும் ஆழமாக, மிக ஆழமாக உயிர்ப்புடன் இருந்துகொண்டே இருக்கிறது. ஒருவித வேட்கை. புறச் சாதனைகளை அற்பத்தனம் என்று வரையறுத்துவிடுகிற, அதில் பிரமிப்பு கொள்ளாத ஒரு வித விலக்கம். ஆனால், வயது கூடக் கூட அந்த அழுத்தம் வாழ்வை மறுபரிசீலனை செய்யச் சொல்கிறது. கொஞ்சம் நெகிழ்ந்துகொடு என்கிறது. அடங்கிப் போயேன் என்கிறது. குனிந்து கொடுக்காமல் நீ இனி தப்பித்துக்கொள்ள முடியாது என்று இப்போது அறிவிக்கிறது.

   அதுதான் வசந்தாவின் வீட்டு வாசலில் இப்போது கொண்டுவந்து அவரை நிறுத்தியிருக்கிறது. கழுத்து வரை நெல் நிறைக்கப்பட்டிருந்த அந்தப்  பத்தாயத்தின் மறைவில் வைத்து அவளை அணைத்தபோது, அது அவள்மீதான தீராத காதல் என்று நினைத்தபோது, அது குறித்து எந்த மறுபரிசீலனையுமற்று, பெரும் களிப்பும் உன்மத்தமுமாக அவளது உதட்டில் முத்தமிட்ட போது அந்த இளம் ராமமூர்த்தியிடம் இருந்த ஏதோ ஒன்று இப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. அதை அணைக்கவே முடியவில்லை. அதைத் தணிக்கவே முடியவில்லை. இந்த லௌகீகத்தில் ஒட்டவிடாமல் அதுதான் அவரைத் துரத்திக்கொண்டே இருக்கிறது. அது கொஞ்சம் அடங்கி எரிந்திருந்தால், வங்கிப் பரீட்சை எழுதியிருக்கலாம், அப்போதே வேறு வேலைக்குப் போயிருக்கலாம், ஒரு உரக்கடை வைத்திருக்கலாம், கொஞ்சமாக வட்டிக்குக் கொடுத்து வாங்கியிருக்கலாம், கொஞ்சம் தந்திரமாக, வேலையில் இருக்கும் ஒருத்தியைக் கட்டிக்கொண்டிருக்கலாம், நான்கு குழந்தைகள் என்று அசட்டையாக இருந்திராமல் இரண்டோடு நிறுத்தியிருக்கலாம். ஏதோ ஒன்று இதிலிருந்தெல்லாம் தன்னைத் துண்டித்து விட்டது. ஒரு தீராத அலைக்கழிப்பை நோக்கி உந்தி, இப்போது அதன் எல்லையில் கொண்டுவந்து நிறுத்தி யிருக்கிறது. அதே துடிப்பு மீண்டும் மனசு முழுக்கப் பரவிக்கொண்டே இருக்கிறது.

   “வசந்தாவிடமிருந்து எனக்கு என்ன வேண்டும் இப்போது...” என்று கேட்டுக்கொண்டார். மனதின் உள்ளே உள்ள உரையாடலாக அல்லாமல் அவரையுமறியாமல் சப்தமாகக் கசிந்தது, பிரார்த்தனையைப் போல.

   ‘நீ தோற்றுப்போனவன் அல்ல... நீ வேறொருத்தன்... அபூர்வமானவன்... என்று அவள் சொல்லவேண்டுமா...?’ - பதில் தேட முயன்ற கணத்தில் அந்த உரையாடலுக்கு வெளியிலிருந்து ஒரு குரல் அதை  இடைவெட்டியது.

   “நீங்களா.... வாங்க.. வாங்க... ஏன் அங்கே போயி நிக்கிறீங்க... உள்ள வாங்க...” வசந்தா வந்துவிட்டிருந்தாள்.

   அங்கிருந்தபடியே, நிலைப்படியை ஒட்டி நின்றுகொண்டிருப்பவளின் ஆகிருதியைப் பார்த்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு கல்யாண வீட்டில் வைத்து அவரிடம் நலம் விசாரித்தவளின் அதே உடல்மொழி. அவளது உடலின் வனப்பிலும் அளவிலும் எந்த மாற்றமும் இல்லை. அவளது முகத்தில் சிநேகமோ வெறுப்போ இல்லை. துள்ளலோ சோகமோ இல்லை. வயதோ இளமையோகூட இல்லை.

   “இல்ல... இல்ல.... சும்மாதான்” என்று சொல்லிவிட்டு அவளை நோக்கி நடந்தார்.

   “குளிச்சிட்டிருந்தேன்...” என்று சொல்லிவிட்டு, நிலைப்படியில் ஏறி, கூடத்தை அடைந்தவள் அங்கிருந்து அவரைத் திரும்பிப்  பார்த்து “உள்ள வாங்க... ஏன் திரும்பவும் அங்கேயே உக்காருறீங்க...” என்றாள்.

   உள்ளே போய் உட்கார்ந்தார்.  அவளும் அவருக்கு எதிரே இருந்த சோபாவில் உட்கார்ந்துகொண்டாள். பிறகு சம்பிரதாயமாக அவரின் மனைவி குழந்தைகளைப் பற்றி விசாரித்தாள். அவளிடம் பிள்ளைகளின் படிப்பைப் பற்றிச் சொல்வதில் அவருக்கும் ஆர்வமாக இருந்தது. அவளின் மகன்கள் இருவரும் படிப்பு முடிந்து வெளியூரில் வேலையில் இருப்பதாகச் சொன்னாள். ஒருவன் பெங்களூரில் இருந்தான். இன்னொ ருவன் சென்னையில் இருந்தான். பத்து நிமிடங்கள் இருவரும் பேசிக்கொண்டி ருந்தார்கள். சமீபத்தில் தெருவில் நடந்த கல்யாணம், தொண்ணூறு வயதில் செத்துப்போன ராசம் கிழவி என்று பேச்சு ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தது. இதற்கிடையில் ராமமூர்த்திக்கு வேலைக்காரப் பெண் காபி கொடுத்திருந்தாள். அவர் அதை ஆற்றி, பேச்சினூடே குடித்து முடித்திருந்தார். 

   இவ்வளவு விரைவாக அவளுடனான உரையாடல் முடிவுக்கு வந்துவிடும் என்பது அவருக்குத் திகைப்பாக இருந்தது. அவள் மௌனமாக இருக்கும் நேரங்களில் அவரால் அந்த சோபாவில் சாய்ந்து உட்கார்ந்திருக்க முடியவில்லை. ‘அப்படியான நேரங்களில் ஒரு வித நெருக்குதல் தோன்றுகிறதே, ஏன்?’ என்று நினைத்தார். ‘இல்லை... இல்லை... அப்படியிருக்க வாய்ப்பில்லை. தன்னிடம் இதைத்தாண்டி எப்படி ஒருத்தி இலகுவாகப் பேசமுடியும்?’ என்று சமாதானம் செய்துகொண்டார். ஒரு கட்டத்தில், “என்ன இத்தனை வருஷத்துல திடீர்னு வந்திருக்கீங்க...” என்று கேட்பாள் என்று எதிர்பார்த்தார். பிறகு அவள் அப்படிக் கேட்டுவிடக் கூடாது என்றும் அலைக்கழிந்தார். ஆனால் அவள் மிதமான மனநிலையில், அவரது இருப்பின் எந்த நெருக்குதலும் இல்லாமல்  அவரின் கண்களை, முகத்தை, ஜன்னலை, அருகில் கிடந்த ஒரு வார இதழை எனப் பார்த்துக்கொண்டே பேசினாள்.

   அவர் இரண்டு விநாடிகள் அமைதிக்குப் பிறகு “சரி நான் கிளம்புறேன்... சும்மா இந்தப் பக்கம் வந்தேன். அப்படியே வந்துட்டு போலாம்னு தோணுச்சு...” என்று சொல்லிக்கொண்டே எழ யத்தனித்தார். “ஏன் உடனே கிளம்புறீங்க...” என்று அவள் கேட்கவேண்டும் என்று எதிர்பார்த்ததைப்போல உடல் இன்னும் இருக்கையின் ஆழத்திலேயே அழுந்தியிருந்தது. “ஓ... அப்படியா...” என்று சொல்லிவிட்டு அவள்தான் முதலில் எழுந்தாள்.

   அவர் வெளியே வந்து பெஞ்சில் கிடந்த துண்டை எடுத்துத் தோளில் போட்டுகொண்டார். திடீரென நினைவு வந்தவராக, “ஆமா... செவுத்து ஓரமா கொஞ்சம் வாழக்கன்னு கெடக்குதே... எங்க வைக்கிறதுக்கு... பேத்து நாலஞ்சு நாள் ஆவும் போலயே...?” என்று கேட்டார். ‘ஓ... அதுவா... நான்தான் கொண்டுவரச் சொன்னேன்... இந்தப் பக்கம் வைக்கலாமேன்னு..’ என்று அவர் உத்தேசித்திருந்த பக்கமாகக் கைகாட்டினாள்.

   “வைக்கவேண்டியதுதான...?”

   “வைக்கிறதுக்கு ஆளு வரச் சொல்லியிருந்தாங்க... அவன் இன்னும் வரல....”

   “மம்புட்டி இருக்கா வீட்ல...”

   “ம்ம்ம் இருக்கே...”

   அந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த வேலைக்காரப் பெண் உள்ளே போய், மாடிப்படிக்குக் கீழே இருந்த மண்வெட்டியைக் கொண்டுவந்து அவரின் முன்னால் வைத்தாள்.

   அவர் சட்டையைக் கழற்றிச் சுருட்டி வெளிப்புற கேட்டின் கம்பி இடைவெளியில் செருகி வைத்தார். தோளில் கிடந்த துண்டை முண்டாசாகக் கட்டினார். வேட்டியைத் தழைத்து இடுப்பைச் சுற்றி இறுக்கிக் கட்டிக்கொண்டு, ஆக்கையைப் பிரித்துக் கன்றுகளை எடுத்து வரிசையாக அடுக்கினார். ஏழு கன்றுகள் இருந்தன. குழி வெட்டி, கன்றுகளைப் புதைத்து, பாத்தி கட்டி, தண்ணீர் ஊற்றியபோது, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆகியிருந்தது. தண்ணீர்க் குழாயை அந்தப் பெண்ணிடம் கொடுத்து, பிடித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, கைகால் முகத்தைக் கழுவிக்கொண்டார். முண்டாசை அவிழ்த்து ஈரத்தைத் துடைத்துக்கொண்டு சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டார். மனம் அதன் சுணக்கத்தின் ஆழத்துக்குப் போய்க்கொண்டே இருந்தாலும், உடம்பில் ஒரு புத்துணர்ச்சி வந்ததுபோல இருந்தது. கொஞ்ச நேரம் நிற்கவும் உட்காரவும் உள்ளே போகவுமாக இருந்த வசந்தாவை இப்போது அங்கு காணவில்லை.

   அவர் கிளம்ப யத்தனிப்பதற்கும் அவள் வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.

   “வேற யாரா இருந்திருந்தாலும் இவ்வளவு நறுவுசா செஞ்சிருக்க முடியாது...” என்று பாராட்டும் தொனியில் சொன்னாள். ஆனால் அதற்குப் பிறகு ஏதோ சொல்வதற்காக அவள் தயங்குவது போலத் தோன்றியது. பிறகு சடுதியான வேகத்தில் உள்ளே போய்விட்டுத் திரும்ப வந்தாள். அவளது கையில் ஒரு நிறைந்த எடை கூடிய மஞ்சள் பை இருந்தது. அதன் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.

   “இந்தாங்க, இத வீட்டுக்கு எடுத்துட்டுப் போங்க...” என்று அவரிடம் கொடுத்தாள்.

   ‘அது என்ன...?’ என்று கேட்பதற்கு அவருக்கு தைரியம் வரவில்லை. அதே அச்சம். தன் வாழ்நாள் முழுக்கத் தன்னைப் பின்தொடரும்  ஆதி அச்சம் என்று நினைத்தார். அந்தப் பையை வாங்கிக்கொண்டு அவளிடம் விடைபெற்று அந்த நீண்ட தெருவின் முனைக்கு வந்து இடது புறமாகத் திரும்பியபோது அந்த இடத்தில் கற்குவியல் ஒன்று இருப்பது கண்ணில் பட்டது. அதில் வைத்து அந்தப் பையில் என்ன இருக்கிறது என்று பார்த்தார். பை நிறைய அரிசி. பச்சரிசி. அந்த வெயிலுக்கு அவ்வெண்மை ஒளிர்ந்தது. கொஞ்ச நேரம் எந்தப் பிரக்ஞையுமற்று அங்கேயே நின்றுகொண்டிருந்தார். பிறகு பையை எடுத்துத் தோளில் வைத்துக்கொண்டு பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தார்.

   நிறுத்தத்துக்கு முன்பு பிரமாண்டமான பெருமாள் கோயில். சற்று யோசித்தவர் அதன் உள்ளே நுழைந்து வெளிப்புறப் பிராகாரத்தைக் கடந்து தெப்பக்குளத்தைச் சமீபித்தார். படிகளில் இறங்கினார். படிக்கட்டுகள் சூட்டில் கொதித்தன. தோளில் இருந்த துண்டை எடுத்து கடைசிப் படியில் போட்டு அதில் உட்கார்ந்தார். கணுக்கால் வரை  தண்ணீரில் நனைந்தது.

   கற்படிகளின் சூட்டுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாமல் தண்ணீர் ஜில்லென்று இருந்தது. அந்தக் குளுமை உடலின் மீது கவிந்த கதிர்களின் சூட்டை ஒன்றுமில்லாமலாக்கியது. ஒரு பிடி அரிசியை அள்ளி, குளத்து நீரில் விசிறினார். சில விநாடிகள் எந்தச் சலனமும் இல்லை. பிறகு சலசலவென மீன்கள் குவிவது தெரிந்தது. மிக மெதுவாகப் பையிலிருந்த எல்லா அரிசியையும் குளத்தில் தூவி முடித்தார். அந்த மீன்களின் மீது இனம்புரியாத கனிவு வந்தது. வெயிலில் ஒளிரும் அரிசி நீரில் மூழ்குவது வசீகரமாக இருந்தது. குளம் தனது தனித்த அமைதியுடன் அசைவற்று இருந்தது.
   https://www.vikatan.com/
  • By நவீனன்
   பித்தளை நாகம் - சிறுகதை
    
    
   இவனுக்கு, இப்போது பஞ்சாலையின் இதயமான `கார்டிங்’ பிரிவின் இயந்திரப் பராமரிப்புத் துறையில் பணி. துறையில் மொத்தம் இரண்டு குழுக்கள். இயந்திரத்தை அக்கு அக்காகக் கழட்டி மாட்டுபவரை பொருத்துநர் எனலாமா? அல்லது... கழட்டி? பெருசுகள்கூட ``ஆ...மா இவுரு பெரிய கழட்டி, போடா மூடிட்டு!’’ என்பார்கள்.

   இந்தப் பிரிவின் `கழட்டி’ வின்சென்ட். கழட்டிக்கு ஓர் `எடுபிடி’ ஜெயக்குமார். எடுபிடிக்கு ஓர் `அல்லக்கை’ குமரவேல். ஆக, மூவர் உள்ளிட்ட `பழுதுபார்க்கும் குழு’. இரண்டாவது குழு `சுத்தக்குழு’. இந்தக் குழுவினர் ஓடிக்கொண்டிருக்கும் இயந்திரங்களை முறைவைத்து வாரம் ஒருமுறை நிறுத்தவேண்டும். பிறகு அவற்றின் உடைகளைக் களைந்து, `கம்ப்ரசர்’கொண்டு காற்றில் குளிப்பாட்டவும், இண்டு இடுக்குகளில் சேர்ந்த பஞ்சும் தூசுமான அழுக்குத் திரிகளை நீக்கித் துடைக்கவும் வேண்டும். பற்சக்கரங்களின் பல்லிடுக்குகளில் கெட்டித்து இறுகிப்போய் உயவு நெய்க்கட்டிகள், ஓடி ஓடித் தேய்ந்து உதிர்ந்த உலோகத்துகள்கள், வறண்ட பிசிறுகள் போன்றவற்றை மிகக் கவனமாகக் கிளறி எடுத்துத் துடைத்துவிட்டு, புதிய உயவுக் களிம்பை அதற்கான பிரத்யேகமான துப்பாக்கி வாயிலாக வார்க்க வேண்டும்.

   இவன் தலைமையிலான இந்தக் குழுவில் மொத்தம் ஐந்து பேர். இரண்டு பொடியன்கள், இரண்டு பெருசுகள். பெருசுகள் இரண்டும் சுவாரஸ்யக் கேந்திரங்கள். அதிலும் அந்த முருகன் என்கிற அக்கிரமக்காரக் கிழவனின் பேச்சு இருக்கிறதே... பையன்கள், கிழவனின் பேச்சுக்கு போதையாகித் திரிந்தார்கள். பேசுவது எல்லாமே இரட்டை அர்த்தம்தான்.

   காலை 7 மணி ஷிஃப்ட்டுக்கு, வீட்டிலிருந்து 6:30 மணிக்கு சைக்கிளை எடுத்திருக்க வேண்டும். 6:30 மணிக்கு சைக்கிளை எடுக்கவேண்டுமென்றால், 6:15 மணிக்குச் சாப்பிட்டிருக்க வேண்டும். 6:15 மணிக்குச் சாப்பிட வேண்டுமென்றால், 6 மணிக்குக் குளித்திருக்க வேண்டும். 6 மணிக்குக் குளிக்க வேண்டுமென்றால், 5:30 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். இவனுக்கு 5:30  மணிக்கு  எழுவதில் சிரமம் எதுவுமில்லை.

   இதற்குமுன் பார்த்த வேலைக்கு அதிகாலை 3:30 மணிக்கு  எழவேண்டும். செய்தித்தாள் போடும் வேலை. கேரளத்திலிருந்து போத்தனூருக்கு 4 அல்லது 4:15 மணிக்கு வரும் ரயிலிலிருந்து `மாத்ருபூமி’ பொட்டலத்தை எடுத்துக்கொண்டு நிலையத்தின் வாசலுக்கு வந்தால், பெட்டிக்கடைக்காரர் ஏற்கெனவே பிரித்து வைத்திருக்கும் தினமணியையும் இந்தியன் எக்ஸ்பிரஸையும் கொடுப்பார். அவற்றையும் வாங்கிக்கொண்டு வந்து ஏதாவது ஒரு கடை வாசலில் உட்கார்ந்து கூடுதல் பக்கங்கள், துண்டுப்பிரசுரங்கள், இணைப்புகளைச் சேர்த்து எண்ணி, தரையோடு ஒரு தட்டு, பக்கவாட்டில் ஒரு தட்டுத் தட்டிச் சேர்த்து, சைக்கிளில் கட்டிக்கொள்ள வேண்டும்.

   சைக்கிளை ஓட்டியபடியே கையை நீட்டி உருவினால், தாள் கிழியாமல் வர வேண்டும். ரங்கசாமி அண்ணனெல்லாம் மழைக்காகிதத்தையும் சேர்த்துக் கட்டியிருப்பார். மழை வந்தாலும் நனையாது. உருவினாலும் புதுப்பணம் மாதிரி மணக்க மணக்க வரும். எந்த வீட்டுக்கு தினமணி, எந்த வீட்டுக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் என நினைவுவைத்துப் போட வேண்டும். ஆங்கிலப் பள்ளிக்குப் போகும் பையனின் சீருடையைப் பார்த்து இந்தியன் எக்ஸ்பிரஸைப் போட்டுவிட்டு அடுத்த நாள் அந்தப் பையனின் தாத்தாவிடம் இவன் வாங்கிக்கட்டிக்கொண்ட வசவு இருக்கிறதே..! எந்த வீட்டுக்கு உள்ளே போட வேண்டும், எந்தெந்த வீடுகளில் கதவில் செருக வேண்டும், எல்லாவற்றையும் நினைவுவைத்திருக்க வேண்டும். மழை வந்தால் போச்சு, `நனைந்த தாளில் செய்திகளை எப்படிப் படிக்க முடியும்?’ எனக் கேட்டு, காசு தராமல் தவிர்ப்பார்கள். பிறகு நாய்கள் தொல்லை. பழகும்வரைதான். அப்புறம் வாலாட்டும்.

    நல்ல வேலைதான். சின்னச்சின்னப் பிரச்னைகளும் இருக்கத்தான் செய்யும். ஆனால், இவன் அம்மாவைப் பொறுத்தவரை உலகத்திலேயே கௌரவமான தொழில் என்றால், அது பஞ்சாலையில் பணிபுரிவதுதான்.

   மோகண்ணன் ``எங்க மில்லுல ஆளெடுக்குறாங்க’’ என்றதும்

   ``எப்படியாவது இவனை அங்கே சேர்த்துவிட்ரு மோகா’’ என்று சொன்னதோடு மட்டுமல்லாது, ``கூடவே போ’’ என்று அனுப்பியும்விட்டது.

   சேர்ந்த புதிதில் 11 மணிக்கு மதியச் சாப்பாட்டு நேரத்தில் வெள்ளியங்கிரியண்ணன், ``ஏனப்பா, உன்ற சோத்துமூட்டை எங்கியப்பா? எடுத்தா போ’’ என்றார், அவருடைய ஐந்து அடுக்குகளைப் பிரித்தவாறு.

   இவன், வாரச்சீட்டு வசூல்செய்பவர் வைத்திருப்பது போன்ற கிச்சுப்பைக்குள்ளிருந்து சின்ன டிபன்பாக்ஸை எடுக்கவும், சிரித்தார்.

   ``தம்பி... வூட்ல என்ன இருந்தாலும் சரி,  பழைய சோறும் பச்சமொளகாயானாலும் அடுக்குல கொண்ட்டு வரணும் தெரியுமா?”

   இவன் பதில் ஒன்றும் சொல்லாமல் சாப்பிட ஆயத்தமானான். வெள்ளை உப்புமா. ஆங்காங்கே கடுகு தெரிய அழகாக இருந்தது. அதைப் பார்த்ததும் கோபித்துக்கொண்டார்.

   ``அடே... ஆர்றாவன் திருவாத்தானாட்டாம்.’’

   “தம்பி... மில்லுக்கு வேலைக்குச் சேந்தாச்சுன்னா பஞ்ச நாம திங்கற மாதிரியிருக்கணும். பஞ்சு நம்பள தின்னுறக் கூடாது, புரியுதா?’’

   ஒரு கிண்ணத்துச் சாப்பாட்டில் குழம்பை ஊற்றி, இவன் பக்கமாகத் தள்ளி ``ரெண்டையும் தின்னோணும் சரியா?’’ என்று ஏறக்குறைய மிரட்டினார்.

   நூற்றுக்கு நூறு சரி. `மில்லுக்காரன் சாப்பிடுற மாதிரி’ என்றொரு வழக்குண்டு. அப்படிச் சாப்பிட்டால்தான் மாடு மாதிரி பாடுபட முடியும். மாதிரியெல்லாம் இல்லை மாடேதான்! படுத்த அடுத்த நிமிடத்தில் தூங்கிப்போவதும் இந்த உழைப்பு தரும் வரம்தான். அசதியென்றால் மெஷினை இறக்கி மாட்டும் வாரத்தில் வரும் அசதிபோலிருக்க வேண்டும். தோளும் நெஞ்சுப்பட்டையும் கெண்டைக்காலும் விரல்களும் தினவுக்குத் தகுந்த வேலை செய்து விடைத்திருக்க, குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வந்தால் அம்மாவோ அக்காளோ புதுப்பொண்டாட்டியோ துண்டை எடுத்துத் தர, முழுவதும் ஈரம் உலராத உடலோடு ஆவி பறக்கும் சோற்றில் கையை வைப்பதொரு சுகமென்றால், வெயிலில் சுக்காய்க் காய்ந்த பனியனும் வேட்டியும் தரும் மிதவெப்பத்தோடு குளிர்ந்த வெறுந்தரையில் தலையணையை இட்டு படுப்பது ஒரு சுகம். அப்போதுதான் அவள் கேட்டாள். இவன்தான் தொடங்கினான்...

   ``ஏதாச்சும் கேளுபுள்ள வாங்கித்தர்றேன்.’’

   ``ஒண்ணும்வேண்டா!’’

   ``அட கிறுக்கீ... கேள்றீன்றேன்!’’

   ``ம்ம்... வேண்டான்னா சும்மாயிரேன்.’’

   ``ஓ... ரொம்பத்தான் பண்ணுவா!’’

   ``அய்யே, ஆமா... பண்றாங்க அஞ்சாறு.’’

   ``பின்னென்ன, ப்ச், ஏய்... கம்மல் குத்துதுடீ!’’

   ``அய்யிய்யோ வலிக்குதா? ம்ம்... சரி, நான் ஒண்ணு கேப்பேன். மாட்டேங்காமக் கொண்டாரணும்.’’

   ``ஏய், சொல்றீ!’’

   ``நீயி மில்லுக்குள்ளாற பாம்பு புடிப்பியாமா?’’

   சின்னப்பையனாக இருக்கும்போது விளையாட பொம்மைகள் கிடையாது. அப்புறம் எப்படி விளையாடுவது? பூச்சி, புழு, கோழி, ஆடு, அணில், ஓணான், குருவி இவற்றோடுதான். அணில், ஓணான், குருவியெல்லாம் இவன் கைக்கு எப்படிச் சிக்கும்? வேடிக்கை பார்க்கத்தான் முடியும். கட்டி வைத்திருக்கும் ஆட்டைத் தொட்டுப்பார்க்கலாம். அடித்துக்கூடப் பார்க்கலாம். அது குதிரை மாதிரி முன்னங்கால் இரண்டையும் தூக்கி முட்டினால், கீழே விழுந்து அலறலாம். தொரத்தொரவென ஊற்றும் அதன் மூத்திரத்தில் கையை நனைத்துச் சிரிக்கலாம். புழுக்கைகளைச் சேகரித்து விளையாடலாம். யாராவது சேவக்கோழியைப் பிடித்து, கொண்டுவந்து காட்டினால், அதன் சொரசொரப்பான செங்கொண்டையைப் பிடித்துத் திருகலாம்.

   நெஞ்சில் சேகரித்து வைத்திருக்கும் தானியப் பொதியை அழுத்தி `அரிசீ...’ என்று கண்ணை விரித்துக் கத்தலாம். அவ்வளவுதான். மேயும்போது பிடிக்கப்போனால், பொக் பொக்கெனக் கத்திக்கொண்டே கொத்த வரும். அதனால் பூச்சிகள்தான் பொம்மைகளைவிடவும் சுவாரஸ்யம். சாவி கொடுக்காமலேயே சுருளும் ரயில் பூச்சி! கறுப்பும் மஞ்சளுமான ரயில் பூச்சியைத் தொட்டால் சுருள்வதும் கொஞ்ச நேரம் கழித்து விரிந்து ஊர்வதும் எவ்வளவு ஆச்சர்யம்! சாகும் வரையிலும் சாதுவாகவே இருக்கும் பிள்ளைப்பூச்சி, தொட்டால் தீக்குச்சியை உரசினாற்போல் துளி நெருப்பைச் சிந்தும் தீப்பூச்சி, கருவண்டு, சிவப்புத்தலை பொன்வண்டு, பச்சைப் பொன்வண்ணச் சிறுவண்டு, சிவப்பில் கறுப்புப் பொட்டுள்ள வண்டு, மயில் நிறத்துக் குளவி, சிவப்புத் தலையும் கோடுபோட்ட றெக்கைகளும் உடைய பெரிய ஈ, மஞ்சள் பட்டாம்பூச்சி, ராணி பட்டாம்பூச்சி, மணல் பட்டாம்பூச்சி, உலர்ந்த இலை நிறத்திலும், தளிர்ப்பச்சை நிறத்திலும் தயிர் கடையும் முக்கோணத் தலைப்பூச்சி, தும்பி, வெட்டுக்கிளி, சிறுபாம்பு... சிறு பாம்போடு விளையாடினால் உடம்பெல்லாம் வரிவரியாய்த் தடித்துவிடும். அப்புறம் பொட்டப்புள்ள மூத்திரத்தில் அடுப்புச் சாம்பலைக் கரைத்து அம்மணமாய் நிற்கவைத்துப் பூசிவிடுவார்கள். மறுநாள் சரியாகிவிடும். பாதிப்பு அவள்களுக்கென்றால், நம்முடைய மூத்திரம் கொட்டாங்குச்சியில் குறிபார்த்து அடிக்கும்போது கூச்சமும் மகிழ்ச்சியுமான கலவையால் சிரிப்பு வந்துவிடும்.

   அன்றைக்கு சீமைக்கருவேல மரத்திலிருந்து மாட்டுக்கொம்புப் பூச்சிகளைப் பிடித்துவந்து திண்ணையின் வழுவழுப்பான தரையில் தலைகீழாய் நிறுத்திச் சுழலவிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தபோது, வாசலில் வந்து நின்ற பெண்ணைப் பார்த்தான். அவள் தோளில் தொட்டில் மாதிரி ஒரு மூட்டை. கையில் இருந்த தட்டில் படமெடுத்த நிலையில் ஒரு பாம்பு. ஆர்வம் பொங்க ஓடிப்போய்ப் பார்த்தான். சந்தனக் குங்குமப் பொட்டுடன் பளபளத்து மின்னிய பித்தளை நாகம். அழகோ அழகு! `அப்படியே ஊர்ந்து கீழிறங்கி, இவனது கையில் ஏறிக்கொள்ளாதா?’ என்று ஏக்கமாக இருந்தது. ஆனால், அரளிப்பூவையும் துளசியையும் விளக்கையும் தாண்டி அது நகரவேயில்லை.

   ``யம்மா... தாயீ... வாழத்தோட்டய்யங்கோயிலுக்குக் காணிக்க போடம்மா மகராசி!’’

   அம்மா குருணையரிசியைக் கொண்டுவந்து அவள் தோளிலிருந்த தொட்டில் பையில் கொட்டும்போது, இவன் கையை நீட்டி நாகத்தைத் தொட்டுப்பார்த்தான். வெயிலிலும் சில்லென்றிருந்தது. இவனுடல் அனிச்சையாகச் சிலிர்ப்பில் உதறிக்கொண்டது.

   இவனது பள்ளிக்கு ஒருமுறை `பாம்பு மன்னன்’ பார்த்தசாரதி வந்தார். அத்தனை பேரையும் மைதானத்தில் அமரவைத்தார்கள். விதவிதமான பாம்புகளைக் காட்டி. “சாரைப்பாம்புக்கும் தண்ணீர்ப்பாம்புக்கும் விஷமில்லை. பாம்புகளுக்குக் காதுகள் கிடையாது. அவற்றுக்குப் பழிவாங்கத் தெரியாது” என்றெல்லாம் விளக்கிக்கொண்டிருந்தவர், ``யாராவது ஒருத்தர் வாங்க’’ என்றபோது இவன் போனான்.

   இவன் கழுத்தைச் சுற்றி மாலையாக ஒரு மலைப்பாம்பை அணிவித்தார். நல்ல பாரமாக இருந்தது. ஒருவித நெடியும். ``ஒண்ணும் செய்யாது தைரியமாப் புடி’’ என்றார். படபடவென பையன்கள் கைகளைத் தட்ட இவன் கண்ணும் நெஞ்சும் விரியச் சிரித்தான். பாம்பு, அம்மாவின் பைபிளில் கெட்டதாகவும் அப்பாவின் சாமிப்படங்களில் நல்லதாகவும் இருந்தது. முருகன் காலடியில் நின்று, இல்லாத கைகளைக் குவித்து வணங்குகிறதே! ஆனால், இந்த மயில் ஏன் அதை மிதித்துக்கொண்டிருக்கிறது? யார் மேலாவது தெரியாமல் கால் பட்டாலே தொட்டுக் கும்பிட வேண்டும் என்கிறார்கள். முருகனும் சிரித்தபடி அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது குழப்பமாய் இருக்கிறது. உண்மையில் பாம்பு என்னவாக இருக்கிறதென்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தான்.

   ``சொல்லு... நீயி மில்லுக்குள்ளாற பாம்பு  புடிப்பியா?’’

   ``ஆரு சொன்னா?’’

   ``தெரியி!’’

   ``ஹே... சொல்றீ! ஆரு சொன்னா?’’

   ``அய்யோ  கத்தாத... அம்மாதான் சொல்லுச்சு. நீ கேட்றாத!’’

   ``ஓஹோ!’’

   `` ‘அவன் ஸ்கூலுக்குப் போயிட்டு வர்றப்ப அணிலு, நாய்க்குட்டி, மைனா, பொரிக்குயிலுன்னு எதையாச்சும் புடிச்சுட்டு வந்திருவான். இப்போ மில்லுக்குள்ள சும்மா இருக்காம பாம்பைப் பிடிக்கிறானாட்டம் தெரியுது பாப்பா. இனிமேலும் சின்னப்பையனாட்டம் அதையெல்லாம் செய்யக் கூடாதுன்னு கட்டன்ரைட்டா சொல்லிரு சாமீ. ஒரு நேரம் மாதிரி ஒரு நேரமிருக்காது’ன்னுச்சு’’

   ``அதுக்கென்ன இப்போ?’’

   ``பிடிச்சா கொண்ட்டுவர்றியா... தொட்டுப் பார்க்கணும்.’’

   ``வளத்தறியா!’’

   ``அய்யெ ச்சீ!’’

   ``அது என்னடி, எல்லாப் பொம்பளைங்களும் ஒரே மாதிரி இருக்கீங்க? தொட்டுப் பார்க்கோணும். ஆனா, வளத்தறதுக்கு மனசில்ல.’’

   ``பயமாவும் இருக்கு. கொஞ்சூண்டு ஆசையாவும் இருக்கு. ஆனா, பிரியமெல்லாம் கெடையாது.’’

   இந்தக் கொஞ்சூண்டு ஆசையில்தான் எல்லாமே தொடங்குகின்றன.

   சரக்கு ஊர்தியிலிருந்து டன் கணக்கிலான எடையில் இருக்கும் இயந்திரத்தை, செயின் பிளாக் உபயோகித்து இறக்கி, ஆலையில் அதிகாரிகள் குறிப்பிடுகிற இடத்தில் சேர்க்க வேண்டும். காலை 7:30 மணிக்கு எட்டுப் பத்து பையன்களை இவன் வசம் ஒப்படைத்துவிட்டால், மதியம் சாப்பாட்டுக்குக் கைகழுவும்போது சொன்ன இடத்தில் இயந்திரம் உட்கார்ந்திருக்கும் என்பதால், மேற்பார்வை அலுவலர் `கங்காணி’ சம்பத்தும், பராமரிப்புத் துறை அதிகாரி ராஜ்குமாரும் இவனையே சிக்கவைப்பார்கள்.

   இவனுக்கும் அது பிடித்திருந்தது. அவ்வளவு பெரிய இயந்திரத்தின் மீது பத்துப் பேரின் புஜபலங்களும் நெம்புக்கோல் போட்டு `ஐலசா’ பாட, அது `க்க்ர்ர்க்க்க்’ என அனத்தி, ஓர் அங்குல தூரம் நகரும். நெம்புகோல் என்பது நீங்கள் நினைப்பதுபோல் கடப்பாரைகள் அல்ல. தடிச்சிகளின் கெண்டைக்கால் அளவுள்ள இரும்புக்குழாய்கள். முந்தைய வாரத்திலேயே பட்டறையில் ஆறுமுகம் சம்மட்டி கொண்டு பட்டை தட்டிய நுனியைக்கொண்ட ஆறடி நீளக்குழாய்கள். பையன்கள் பெரும்பாலும் உடையாம்பாளையத்து கோதாப்பட்டிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். நல்ல பீமராயன்கள்போல் இருக்கும் பையன்கள் அருகில் வந்து பேசும்போதுதான் சிறு வயதுடையவர்கள் என்பதே  தெரியும்.

   ``நீங்க போத்தனூரா அண்ணா? அங்கே ஒரு பாய் கடை இருக்காமா... நிறைய கறியும் எலும்புமா ருசியா இருக்கும்னு பசங்க சொல்வானுக. ஒருநாள் வரணும்ணா’’ என்பான் மணி.

   ``வாடா... வந்து நல்லா மலைப்பாம்பு மாதிரி முழுங்கு’’ என்பான் இவன்.

   இவர்களைத் தவிர சசி, செந்தில்பிரபு என்கிற இருவர் எப்போதும் இவனுடனே இருப்பவர்கள். `வைண்டிங்’ பிரிவில் பாம்பு புகுந்துவிட்டதாக குணசேகரன் வந்து கூப்பிட்டபோது, அதிர்ந்து இவனைப் பார்த்த சசியும் செந்திலும் ஒருவிதமான பரபரப்போடு கூடவே வந்தார்கள். பெண்கள் மட்டும் வேலைசெய்யும் பிரிவில் ராஜமரியாதையோடு போக யாருக்குக் கசக்கும்? பாம்பையும் பெண்களையும் பார்க்கும் ஆவல், குறுகுறுப்பு எல்லாம் சேர்ந்து சசிக்குச் சிரிப்போ சிரிப்பு!

   ``அவன் சிரித்துச் சிரித்து பயத்தை மறைக்கிறான்’’ என்று செந்தில் கிண்டல்செய்தான். அங்கே பாம்புக்கு பயந்து பெண்கள் கதவுக்கு வெளியே நிற்க, பெண்களுக்கு பயந்து, தண்ணீர் வெளியேறுவதற்காகப் பதித்திருந்த சிமென்ட் குழாய்க்குள் பதுங்கிச் சுருண்டிருந்தது கண்ணாடிவிரியன். பொன்னிறத்தில் சாம்பல் கலந்தது போன்ற பின்னணியில் கடுங்காப்பி வண்ணத்தில் நெளி நெளியான கோலங்களுடன் பாக்யராஜின் மஃப்ளர்போல் இருந்தது. அம்பு மாதிரி இருந்த தலையின் பக்கவாட்டில், குறுமிளகை பாலீஷ் செய்து வைத்ததுபோல் இரண்டு கண்கள்.

   ``பெட்ரோல் வேணும்’’ என்றான் இவன்.

   கண்ணெடுக்காமல் ``சசி’’ என்றார் கங்காணி.

   ``கம்புக்குச்சி ஒண்ணை எடுத்துட்டு வாடா தம்பி’’ என்று செந்திலையும் அனுப்பினான். குடுவையில் பெட்ரோலோடு வந்தான் சசி. பெண்கள் இவனைப் பரிகாரம் செய்யும் சாமியாரைப் பார்க்கிற மாதிரி பயபக்தியோடு பார்த்தார்கள். அவர்களில் மையிட்ட பெரிய கண்களுடன் இருந்த ஒருத்தியும் இருந்ததைப் பார்த்தான்.

   ``எதுக்குடா இவ்வளவு?’’

   ``வேணும்கிறதை எடுத்துட்டுக் குடுண்ணா.’’

   கலர் பென்சிலின் சுற்றளவில் இருந்த நீளமான ஏர் ஹோஸ் குழாயை எடுத்து செந்திலிடம் கொடுத்து, பாம்பு சுருண்டிருந்த சிமென்ட் குழாயின் பின்பக்கமிருந்து நுழைக்கச் சொன்னான். அவன் விரியனின் உடம்பில் முட்டும் வரை குழாயின் முனையைச் செலுத்தி மறுமுனையைக் கொண்டுவந்தான். இப்போது விரியனை நேருக்குநேர் பார்த்தபடி இவனும் பின்பக்கமாக செந்திலும், பெட்ரோல் குடுவையை வாங்கியபடி பெண்களிடம் சொல்வதாக மைக்காரியைப் பார்த்தபடி சொன்னான்.

   ``பாம்பு வெளியே வேகமா வரும். சத்தம் போட்டு பசங்களை பயமுறுத்திடாதீங்க.”

   வாயில் கொஞ்சமே கொஞ்சம் பெட்ரோலைக் கவிழ்த்துக்கொண்டு, குடுவையை மூடி சசியிடம் கொடுத்துவிட்டு, குழாயில் வாயை வைத்து வேகமாய் ஊதினான். பெட்ரோலுக்கு, பாம்பு நெருப்புக்கீடாக பயப்படும். பெட்ரோல் கலந்த காற்று அதன்மேல் படவும் எதிர்பார்த்ததுபோலவே விரியன் படுவேகமாய்க் குழாயிலிருந்து வெளியேறி இவன் பக்கமாய் வந்தது. எதிர்பார்த்ததுபோலவே பெண்கள் அலறினார்கள். எதிர்பாராதவிதமாய் ``ஐயோ பாத்து!’’ என்றாள் மைக்காரி.  தலையை வாகாகப் பிடித்ததும் அழுத்தியிருந்த கம்பை எடுத்துவிட்டு விரியனோடு நடந்தான். பெண்கள், குரலிசைக் கலைஞர்கள்போல ஒரே சுரத்தில் `ஆ’வென்றார்கள். இவனுக்கு மிதப்பாயிருந்தது.

   ``ணா... எப்படிண்ணா இவ்ளோ தைரியமா புடிக்கிற? யார்ணா சொல்லிக்குடுத்தா?’’ விரியனை வெறித்த கண்களுடனே கேட்டான் சசி.

   ``அது ரொம்ப ஈஸிடா! தலைய மட்டும் புடிச்சுட்டா போதும், ஏண்ணா?’’ என்ற செந்திலை

   ``எங்க நீ புடி பாக்கலாம். ணா, அவன்கிட்ட குடுண்ணா’’ என்க, செந்தில் ``குடுண்ணா’’ என்றான் கையை நீட்டாமல்.

   ``பேசாம வாங்கடா’’ என்று அதட்டி நடக்க, கூட்டம் கூடிவிட்டது.

   வித்தை காட்டுகிறவன் பின்னால் பொடியன்கள் நடப்பது மாதிரி நடக்கிறார்கள். இவன் பிடியிலிருந்து விரியன் முடிந்தவரை உடலை முறுக்குகிறான். மில்லின் பின்பகுதிக்கு வந்ததும், சசியின் நண்பர்கள் கற்களையும் கம்புகளையும் எடுத்துக்கொள்ள...

   கங்காணி சம்பத் ``சட்டுன்னு கொன்னுட்டு வாங்கய்யா. ரெண்டு மெஷினு லத்தேடாயி நிக்குது’’ என்றார்.

   சசியின் நண்பர்களைக் காட்டி ``சார், இவனுங்களைக் கூப்பிடுங்க’’ என்றான் இவன்.

   அவரும் ``சசி, நீ ப்ளூ ரூம் போயிடு... டேய் செந்தில், அந்த மெஷினை ஓட்டிவிடு’’ என்க.

   செந்தில் இவனைப் பரிதாபமாய்ப் பார்த்து ``ணா... சொல்ணா’’ என்றான்.

   இவனோ இரக்கமின்றி ``போடா... போயி மெஷினை ஓட்டிவிடு’’ என்றான்.

   ``ணா கொன்ன உடனே போயிறலாம்... நீ போயிக் கை கழுவு. நான் போய் மெஷின ஓட்டிவிட்டுட்டு வர்றேன்.’’

   ``இப்போ இதைக் கீழ விடுண்ணா. ஓடவிட்டு அடிக்கலாம்’’ என்றவனை முறைத்து

   ``போடான்னா...?’’ என்று துரத்தினான்.

   கையில் இருந்த கல்லை செந்தில் வீசியெறிந்ததில் இவன் மேலிருந்த கோபம் தெரிந்தது.

   இப்போதெல்லாம் இவன் வ.உ.சி பூங்காவுக்குப் போவதில்லை. போகவும் பிடிக்கவில்லை. முன்பெல்லாம் அடிக்கடி போவான். போனால் மிருகக்காட்சி சாலையில் புறா, வாத்துக் கூண்டுகளைத் தாண்டி, வண்ணமயில், வெள்ளை மயில்களைக் கடந்தால் இடதுபுறம் வட்டமடித்துக்கொண்டே இருக்கும் குள்ளநரி, உள்ளே கிடக்கும் மாமிசத்துண்டு, அடுத்த கூண்டில் வெள்ளெலிகள், அதற்கடுத்ததில் பச்சைக்கிளிகள், ஆப்பிரிக்கக் காதல் கிளிகள் அப்புறம் ஆமைகள், முயல்கள் இவற்றையெல்லாம் தாண்டினால் கழுகுகளும் ஒட்டகங்களும் இருக்கும் இடத்துக்கு முன்பாகக் கண்ணாடித்தடுப்புக்கு அந்தப் பக்கம் ஏராளமான சாரைகள், நாகங்கள், மலைப்பாம்புகூட இருக்கிறது. கண்ணாடி விரியன்கள் பெருங்குடும்பமாய் பின்னிக்கொண்டு சுருண்டபடியும் ஊர்ந்தபடியும் இருக்க, இவன் அவற்றை வெறித்துப் பார்ப்பான்.

   ``அட என்ன யோசனை? புடிச்சுட்டு வந்து காட்டுவியா?’’

   ``ம்ம் கொண்டாறேன்.”

   ``என்னத்த கொண்டுவருவ... நாகத்தைக் கொண்டாருவியா?”

   ``நாகமா?”

   ``என்ன மாமா யோசிக்கிற?”

   ``....”

   ``அட என்ன?”

   ``ப்ச் ஒண்ணுமில்ல.”

   பஞ்சாலையில் உள்ள தொழிலாளர்களின் கழிவறை, புதிதாகப் பார்ப்பவர்களைக் குழப்பும். வரிசையாக இருக்கும் பத்துப்பதினைந்து கழிவறைகளில் முன்னால் உள்ள நான்கைந்து கழிவறைகள் மட்டும் உபயோகத்துக்கு! மற்ற கோப்பைகளில் மணலை நிறைத்து அடைத்திருப்பார்கள். புதுக்கருக்கு மாறாதிருக்கும் அவை, ஓய்வறைகளாகவும் பயன்படும். அங்குதான் எந்நாளும் தீராத பெண்ணுடல் குறித்த சந்தேகங்கள், (வயித்துக்குள்ளாற இன்னொரு வயிறு இருக்கும் தெரியுமா?) திரையுலகம், அரசியல் பற்றிய விவாதங்கள், மேஸ்திரிகள், அதிகாரிகளின் மண்டையைப் பிளப்பது குறித்த ஆலோசனைகள் உள்ளிட்டவை இடம்பெறும்.

   அன்றைக்கு அங்கே தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த சில்க்ஸ்மிதாவின் உடலை `பட்டறைக்கார’ ஆறுமுகமும் `கொண்டை வண்டி’ சுப்பிரமணியும் சேர்ந்து இறக்கி வைத்தார்கள். கழிவறைக்குப் பின்புறமிருந்து நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. எலெக்ட்ரீஷியன் சுந்தரம், பனியென்றும் பாராமல் சத்யராஜ் திராட்சைக் கொத்தோடு போட்டோ பிடிக்க வந்திருப்பதைச் சொன்னதும் சட்டென சிலுக்கு உயிர்த்து போஸ் கொடுக்கத் துவங்க `சிம்ப்ளக்ஸ்’ செல்வம், ராணுவச் சிப்பாய் சீருடையோடு பிரபு ஊருக்குள் வந்துகொண்டிருப்பதைச் சொன்னதும், `அந்தப் புள்ள’ அரை நொடியில் அரைப்பாவாடைக்கு மாறி, கொட்டாங்குச்சி வயலினை வாசிக்கத் தொடங்கியது. `தம்பி ராமகிருஷ்ணா’ என்று கக்கூஸிலிருந்து யாரோ முக்கலோடு சத்தம் கொடுத்தார்கள். கூளயனாகத்தான் இருக்கும்! அவனுக்கு ஏத்தம் ஜாஸ்தி! இரண்டு மூன்று நாய்கள் தொடர்ந்து குரைக்கவே சலித்துக்கொண்ட மாதேஸ்வரன் மூத்திரக் கோப்பையில் கால் வைத்து சூரிய வெளிச்சத்துக்கான சாளரத்து வழியே வெளியே பார்த்துவிட்டு

   ``ஒண்ணுமில்ல நாயிக சண்டைபோடுது’’ என்று சொல்லிவிட்டுக் கீழிறங்கி ஸ்மிதாவின் தாவணியை எட்டிப்பிடிக்கப் பார்த்தான்.

   பொடியன் சசிதான் எட்டிப்பார்த்துவிட்டு, ``அய்யோ..! ணா, இங்கே வந்து பாரு! எவ்ளோ பெரிய நாகம்!’’ என்றான்.

   ``நாகமா, எங்க?’’

   இவன் தவ்வி ஏறிப்பார்த்தபோது இடைவிடாது குரைத்தபடி இருந்த நாய்கள் மட்டும் தெரிந்தன. சசியைத் தள்ளியிருக்கச் சொல்லி, அங்கிருந்து பார்த்தால் தலை மட்டும் தெரிந்தது. கறுத்த கோதுமைப் பழுப்பில் பாதாணி இலை அளவு படத்தை விரித்து சீறிக்கொண்டிருந்தது. உறுமி உறுமிக் குரைக்கும் இந்த ஆறேழு நாய்களும் வீட்டுநாய்களுமல்ல, தெரு நாய்களுமல்ல. காட்டு நாய்கள்! ஆலையையொட்டி இருக்கும் காடு மாதிரியான பகுதியில் பிறந்து வளர்ந்த நாய்கள். குப்பை நிறத்திலும் கறுப்பு, செம்மண் கலந்த நிறத்திலும் இருந்தன. அவை வெறியோடு குரைத்தபடியே இருக்க, நாகம் சுவரோடு ஒண்டிக்கொள்வது குறித்து இவனுக்கு சந்தேகமாக இருந்தது. சசியும் அவனோடு சிலரும் கற்களை அள்ளிக்கொண்டதைப் பார்த்ததும் இவனுக்குக் கோபம் வந்தது.

   ``டேய் கேன, கல்லைக் கீழ போடுறா’’ என்றான்.

   ``சசிணா, உயிரோடு புடிக்கிறியாண்ணா? இது பெருசுண்ணா!’’ என்று சொல்லிவிட்டு ``ஹோய்... ஓடுங்கடா!’’ என்றபடி கையில் இருந்த பிரம்பை நாய்கள் மீது வீசினான். அவை கொஞ்சம் விலகி நின்று மீண்டும் குரைத்தன. இவன் கழிவறையின் பின்பக்கம் வந்து ஆமணக்குச் செடியின் நட்சத்திர இலைகளைக் கிளையோடு வளைத்துப்பார்த்த கணத்தில் `திக்’கென்றது.

   ``இல்லேங்காம ஏழடி இருக்கும்.’’

   வால் நுனியைத் தேடினான். இதயம் கோம்பர் மெஷினைப்போல `திப்புடுதக் திப்புடுதக்’ என்று சத்தமிட்டது. இந்தச் சத்தம் `கோதுமை’க்குத் தெரிந்துவிடப்போகிறது என்று மறைப்பதைப்போல சட்டைக்காலரை மூடிவிட்டுக்கொண்டான். கோதுமை, வாயைத் திறந்து மூடியது. இதென்ன `ஒரு நொடிக் கொட்டாவி’யா அல்லது கத்துகிறதா?

   தசை முறுக்குள்ள நல்ல வலுவான பாம்பு. உடலெங்கும் சாய் சதுர, இணைகரக் கண்ணாடிகள், வளைந்திருந்த இடத்திலெல்லாம் மின்னின. விரிந்த படத்தின் மத்தியில் வெள்ளையும் கறுப்புமாய் அந்தச் சின்னம். ரொம்பச் சின்னதான ஒரு வாளியின் கைப்பிடிக் கம்பியைக் கழட்டி தலைகீழாய் நெஞ்சில் பதித்துக்கொண்டது  மாதிரி, ஆங்கில `யூ’ மாதிரி, மேனேஜர் மகேந்திரன் நெற்றி நாமம் மாதிரி, அது என்ன சுழியத்திலிருந்து சுழியம் வரை... வாழ்க்கையின் தத்துவமா? ஒன்றுமில்லாமையிலிருந்து ஒன்றுமில்லாமைக்கு! அவற்றின் மொழியில் அதனதன் பெயரா? இல்லை கூட்டத்தின் பெயரா? சாதியோ? சிலதுக்கு ஒரேயொரு வட்டம் இருக்கும். இவன் பார்த்திருக்கிறான்.

   சத்தமின்றி முன்னேறி வந்த செவலை நாயை விரட்டியபோது நாகம் இவன் பக்கம் திரும்பியது. உடல் உதற பயந்தான். அந்தக் கண்கள்...! இதுவரையில் அவன் பார்த்த மற்ற பாம்புகளுக்கெல்லாம் கறுத்த கண்களாயிருக்கும். இதற்குப் பச்சையாயிருந்தன. பச்சையில்லை.ஒருவிதமான பச்சை. நீலப்பச்சை... இல்லை சமுத்திரப்பச்சை! ம்ஹூம், இது வெளுத்த பச்சை. ஆமாம்! மொச்சைப்பயற்றைப் பதித்தாற்போல் வெளிர்ப்பச்சை! நிர்மலக் கண்கள். ஒருவேளை குருடோ? இதயம் இப்போது `திக்குரு திக்குரு’வுக்கு மாறி ஓடுகிறது. அதிர்கிற தன் நெஞ்சைத் தானே ஓங்கி அறைந்தான். தைரியத்துக்கு இரண்டொரு வசவுகளைச் சிதறவிட்டான். ரெண்டடி எடுத்து வைத்தான். இயந்திரத்திலிருந்து காற்றுக்குழாய் பிய்த்துக்கொண்டதுபோல் `ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்க்’கென சீறிப் பின்வாங்கியது.

   இவனுக்கு ஒரு சந்தேகம். `நாய்களும் பக்கத்தில் இல்லை. நாலடி தூரத்தில்தான் நாமும் நிற்கிறோம். இந்நேரம் நாகம் காணாமல்போயிருக்க வேண்டுமே! யாருக்கோ காத்திருப்பதுபோல் படம் எடுத்தபடியே நிற்பானேன்?’ என்று. 

   குழம்பியவனிடம் செந்தில் லேப்பு கம்பியைக் கொண்டுவந்து நீட்டினான். அது ரெண்டு விரல் தடிமனில் ஐந்தடி நீளமுள்ள இரும்புப் பிரம்பு. ஒரு பக்கம் மட்டும் உள்ளங்கை அகல இரும்பு வட்டோடு இணைக்கப்பட்டிருக்கும். விரல் நுனியில் வட்ட பிஸ்கட்டை வைத்து விஷ்ணுசக்கரம்போல குழந்தைகள் காட்டுமே அதுபோல. அப்படியே அழுத்தினால் கம்பியின் எடைக்கும், வட்டத்தின் அகலத்துக்கும், இவனது வலுவுக்கும் மலைப்பாம்பேயானாலும் தலை நசுங்கிப்போகும்.

   ``அடிணா!’’ என்றான் செந்தில் வழக்கம்போல.

   `வயித்துப்புள்ளத்தாச்சிய வீட்டுல வெச்சுட்டு ஏதாச்சும் பூச்சி கீச்சிய அடிச்சுறாத சாமீ’ நெஞ்சில் கை வைத்தபடி அம்மா சொன்ன வாக்கியம் நெஞ்சுக்குள் பாம்பாய் நெளிய, தயக்கத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல், ``சசி, குடிக்கத் தண்ணி கொண்டாடா’’ என்றான்.

   சசியும் செந்திலும் சிரித்தபடி ஆளுக்கொரு பாட்டிலைக் காட்டினார்கள். ஒன்றில் தண்ணீர், மற்றொன்றில் பெட்ரோல்!

   ``தெரியும்ணா... இப்படி ஏதாவது சொல்லி எங்களைத் தொரத்துவேன்னு சொல்லித்தான் சூப்பாங்கிட்டயே ஸ்பெசல் பர்மிட் வாங்கிட்டு வன்ட்டன்... அடிணா’’ என்றான் செந்தில்.

   ``ஏய்... எந்திரிடி!’’

   ``என்ன?’’

   ``எந்திரி..!’’

   ``என்ன மாமா, தண்ணி வேணுமா?’’

   ``ஷ்ஷ்ஷ்... கத்தாத!’’

   ``அய்யோ... என்ன சொல்லு!’’

   ``வெளிய வா.’’

   ``எதுக்கு?’’

   ``சத்தம் போடாம எந்திரிச்சு வாடி வெளிய.’’

   ``ஹூம்... என்னன்னு சொல்ல மாட்டியா? சொல்லு.’’

   ``ஸ்ஸ்... வெளிய வான்னா..?’’

   கதவைத் திறக்கப் போனவளை எட்டிப்பிடித்துத் தடுத்தான்.

   பின்கதவைக் காட்டி, கிசுகிசுப்பாக ``இந்தப் பக்கம்... இந்தப் பக்கம்...’’ என்றான்.

   திறந்து வெளியே வந்ததும் ``சொல்லு...’’ என்றவளைத் தாண்டி சந்துக்குள் நடந்து சாலைக்குப் போய் நின்றான். இவள் தயங்கித் தயங்கி போய் சந்து நுனியில் ஒண்டிக்கொண்டு ``என்ன... சொல்லித்தொலை’’ என்றாள். கொட்டாவியோடும் கலைந்த முடியோடும் அழகாய்த் தெரிந்தாள். இவன் ``டட்டடொயிங்’’ என்றபடி பனியனுக்குள் கையை விட்டான். அவள் ``பூவா?’’ என்றாள் சுவாரஸ்யம் குறைந்த குரலில். ``இல்ல...’’ திரும்பி விளக்குக் கம்பத்தை நோக்கி நடந்தான். இவள் ரகசியக் குரலிலேயே கத்தினாள்.

   ``யோவ் நில்லுங்கறேன்!’’

   ``ப்ச் வாடி...’’

   ``மணி எவ்வளோ தெரியுமா?’’

   ``தெரியும்... 12:30!’’

   ``என்ன, கிறுக்கா புடிச்சிருக்கு? அம்மா பார்த்தா திட்டும்!’’

   `நீ சத்தம் போடாம வா!’ என்பதைக் சைகையிலேயே சொன்னான்.

   வந்தாள். கையில் இருந்த மழைக் காகிதப்பையைக் காட்டினான்.

   ``ஹை! கருகுமணியா?’’

   முகம் முழுக்கச் சிரித்தாள். கை அருகே நெருங்கியவளை மறுகையால் தடுத்து, பை இருந்த கையை இவளுக்கு எதிர்த்திசையில் விலக்கினான். அவள் அப்போதுதான் பார்த்தாள் கருகுமணி நெளிவதை.

   ``அய்யூ... மாமா... பாம்பா! அய்யயூ...’’ என்றாள் பயமும் ஆர்வமுமாக. `தூக்கத்திலிருந்து எழுந்ததினாலா? இந்த மஞ்சள் வெளிச்சத்தினாலா? எதனால் இவ்வளவு அழகாயிருக்கிறாள்?’ என அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

   ``படமெடுக்க வை... படமெடுக்க வை’’ என்றாள் சிறுமியாக.

   ``இது விரியன்டி... கட்டுவிரியன்! அதுவும் குட்டி... படமெல்லாம் எடுக்காது.’’

   ``பரவால்லை... கீழ விடு.’’

   ``விட்டா போயிரும்.’’

   ``ம்ம்... போட்டும்... நீ விடு.’’

   மழைக் காகிதத்தின் முடிச்சை அவிழ்த்தான்.

   ``ஏது? எங்க கெடச்சது?’’

   ``மில்லுக்குள்ளதான்... மழை பேஞ்சது, கேன்ல தண்ணி விழுந்தா எழையெல்லாம் வீணாப்போகுமுன்னு தள்ளிவெச்சிட்டிருந்தேன். கேனுக்கு அடியில கெடந்தது... நானும் புள்ளங்க பாசிதானாக்கும்னு நெனச்சேன்... பார்த்தா நெளியுது... அழகா இருக்குல்ல?’’

   கீழே விட்டான். கீழே விழுந்ததும் ஒரு நொடி தயங்கி, பிறகு சுதாரித்து வேகமாய் ஊர்ந்த விரியன் குட்டி. அடர்கறுப்பில் அளவெடுத்த இடைவெளிகளில் வெள்ளைக்கோடுகள்! இளந்தோல் என்பதால் கூடுதல் மினுமினுப்பு! இவனுக்கு, `அவளது மஞ்சள் பூசிய மார்புக்கு இடையில் வைத்துப்பார்த்தால் இந்தக் கறுப்பு எவ்வளவு எடுப்பாயிருக்கும்!’ என்று ஒரு நினைப்பு.

   ``அழக்க்க்கா இருக்குங்க’’ என்றாள் மகிழ்ந்து.

   விளக்கைத் தாண்டி வெளிச்சத்தைத் தாண்டி சாக்கடையோரம் போய் மறைந்தது.

   ``இப்ப சந்தோஷமா?’’

   ``ம்ம்ம்ம்... ரொம்ப்ப்ப!’’ தலையை ஆட்டினாள்.

   ``சரி, போய்ப் படு.’’

   ``ம்ம்ம், நீயும் வா.’’

   ``நீ போ... நா ஒரு தம்மடிச்சுட்டு வர்றேன்’’ என்று பனியனுக்குள் இருந்து சிகரெட்டை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு குந்தியமர்ந்து தொட்டியோரத்தில் ஒளித்து வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்தான்.

   ``நீ அடி, நான் இங்கே இருக்கேன்.’’

   ``ப்ச்! போன்னா போ.’’

   பொய்யாக முனகிக்கொண்டே போனாள்.

   பற்றவைத்து ஆழமாக இழுத்து மெதுவாகப் புகையை விட்டான்.

   ``என்னணா யோசிக்கிற?’’ என்றான் செந்தில்.

   ``நா வேணா இழுத்துப் போடட்டுமா?’’ என்றான் சசி ஆர்வமாக.

   ``எங்க போடு? போடுறா பார்க்கலாம்...” என்று அவனைச் சீண்டினான் செந்தில் ``ணா, நீ சொல்ணா’’ என்றான் சசி.

   ``இந்தப் பக்கம் இழுத்துப் போடு, அடிச்சுடாத’’ என்றான் இவன்.

   சொன்னதுதான் தாமதம். சசி பரபரப்பாய் முன்னேறி கம்பியைக் கோதுமையின் தலைக்கு அருகில் கொண்டுபோய் கீழிறக்கி சரேலென இழுத்துப் போட்டான். இழுத்தவனே ``அய்யோ..!’’ என்று அலறவும் செய்தான்.

   நிஜமாகவே ஏழடிதான்! நீளத்தைப் பார்த்துதான் அலறியிருக்கிறான் என நினைத்தால் ``அண்ணா ரத்தம்! காயமாயிருக்கு” என்றான். நாகத்தின் வயிறு கிழிந்து குடல் குந்தாணியெல்லாம் வெளியே சிதறியிருக்கின்றன. மலமும் ரத்தமும் வழிய வாயைத் திறந்து மூடியது. நாய்கள் குதறியிருக்கின்றன. ரொம்ப நேரமாக இந்தப் போராட்டம் நடத்திருக்கிறது. உடல் முழுவதும் காயங்கள். ``சீ. பாவம்ணா’’ என்றான் செந்தில். சசி ஒன்றும் சொல்லாமல் அமைதியாக நாகத்தையே வெறித்துப் பார்த்தான். தலையைத் தரைக்குக் கொண்டுபோய் நெளிவதும் பிறகு உயர்த்துவதுமாக இருந்தது.

   வேகம் இல்லை. தளர்வு தெரிந்தது.

   ``என்னடா பண்றீங்க?’’ என்று கேட்டவாறு சீனிப்புளியங்காயைப் பறித்தவாக்கில் வந்த வெள்ளியங்கிரி அண்ணனும் இவனைப் பார்த்து ``மெஷின ஓட்டி உடோணும். மூணு பேரையும் சம்பத்து வரச்சொன்னாப்ல’’ என்று சொல்லிவிட்டு, திரும்பவும் இரண்டு காய்களைப் பறித்து இடுப்புப் பைக்குள் வைத்துக்கொண்டார். திரும்பி இவன் அருகில் வந்து கீழே கிடந்த இதைப் பார்த்ததும்,

   ``அடேய்... என்னடா இது? இந்தப் பெருசா இருக்கு! அடிச்சிட்டீங்களா?’’

   ``இல்லைண்ணா, நாய் கடிச்சுவெச்சிருக்கு’’ என்றான் சசி.

   ``பெரிய ஜீவனப்பா’’ என்றார். சசி, சம்பத்துக்கு பயந்து இவனிடம் ``ணா நான் முன்னாடி போறேன்... கை கழுவுற இடத்துக்கு வந்துரு” என்று சொல்லிவிட்டு லேப்பு கம்பியைக் கையில் கொடுத்துவிட்டு நகர்ந்தான்.

   ``ணா, அடிச்சுருணா போலாம். நேரமாச்சு” என்றான் செந்தில். இவனும் ``நட போலாம்!’’ என்க. வெள்ளியங்கிரியண்ணன் திரும்பிப் பார்த்து ``ஏண்டா அடிக்கலையா?’’

   ``ம்ஹூம்.’’

   ``அட, ஏன்?’’

   ``அதைப் போயி என்னனு  அடிக்கிறதுண்ணா?’’

   ``விட்டியினா... அந்த நாயிக வந்து திரும்பக் கொதறும். இல்லைன்னா எறும்பு அரிச்சே கொன்னுரும். ஏற்கெனவே வலி திங்குது. பாவமுடா. இந்த வேதனைக்கு அதைக் கொன்னுர்றதுதான் நல்லது.’’

   ``மனசு கேக்க மாட்டேங்குதுண்ணா.’’

   ``வா’’ என்ற வெள்ளியங்கிரியண்ணன் நாகத்தின் அருகில் போய் வீரமண்டியிட்டு அமர்ந்து இரண்டொரு விநாடி மௌனமாகப் பார்த்தார்.

   ``யப்பா... நாகராசா! உன்னிய வைத்தியம் பார்த்துப் பொழைக்கவெக்க எங்களுக்குத் தெரியாது. பண்ணாலும் காப்பாத்துறது கஷ்டம் சாமி! இப்பிடியே உட்டுட்டுப்போகவும் மனசு வல்ல’’ என்று சொன்ன கையோடு பாட்டிலைத் திறந்து பாம்பின் தலைமீது தண்ணீரைக் கொஞ்சமாக ஊற்றிவிட்டு எழுந்து இவனைத் தீர்க்கமாகப் பார்த்து,

   ``தலைய நீட்டிக் காட்டுனா அடி! ஒரே அடியில கொன்னுரு. இல்லைன்னா... விட்டுட்டு வந்துரு.”

   சொல்லிவிட்டு நடந்தார். வெள்ளியங்கிரியண்ணனின் குரல் இதுவரை இவன் கேட்காத குரலாயிருந்தது.

   ``இந்தாளே நாகப்பாம்பு மாதிரிதான் இருக்காப்ல, கருவளையக் கண்ணு... மூக்கு மட்டும் விரிஞ்சு கூமாச்சியா, நடையே ஒரு மாதிரி பின்னிப் பின்னித்தான் போறாப்ல.’’

   அவரையே பார்த்துக்கொண்டிருந்தவன் திரும்பிக் கீழே பார்த்தான். இவனுடல் அனிச்சையாகச் சிலிர்ப்பில் உதறிக்கொண்டது. நாகம் தன் படத்தைச் சுருக்காது விரித்தபடியே தலையைத் தரையோடு தாழ்த்தி இவன் காலடியில் வைத்தது.
    
   https://www.vikatan.com
  • By நவீனன்
   கம்போடியா பரிசு - சிறுகதை
       தமிழ்மகன் - ஓவியங்கள்: ஸ்யாம்
    
   தோளில் பாந்தமாக அழுத்திய அந்த விரல்கள் சரவணனு டையவை என நினைத்தேன். மிக மிருதுவாக அழுத்திய படி இருந்தன அந்த விரல்கள். எதிரில் அமர்ந்திருந்த ரமேஷ் சிரிக்கவேதான் சந்தேகம் வந்தது. கண்களைத் தாழ்த்தி, அழுத்திய அந்த விரல்களைக் கவனித்தேன். இரண்டு கைகளின் விரல்களிலும் செக்கச் சிவப்பாய் நகப்பூச்சு. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். இன்னும் சிவப்பாய் உதட்டுச் சாயம் பூசிய கறுப்பு ஸ்கர்ட் போட்ட ஒரு பெண் நின்றிருந்தாள். மேலும் திடுக்கிட்டு எழுந்து நின்றேன்.

   அந்தப் பெண் சிரித்தாள். ``உட்கார்’’ என்றாள் ஆங்கிலத்தில். ராகம்போல இழுத்துப் பேசும் அவளின் உச்சரிப்பு பாணியும், கெஞ்சலான அல்லது கொஞ்சலான குரலும் பதிலுக்குச் சிரிக்கவைத்தன. `சின்னப் பெண். என்ன துணிச்சலில் என்மீது கை வைத்து அழுத்துகிறாள்?’

   ``நோ’’ என்றேன்.

   அவள் உரிமையோடு என் கையைப் பிடித்து அழுத்தி உட்காரவைத்தாள். நண்பர்கள் அனைவரும் சிரித்தனர். எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. நானும் சிரித்தேன். சிரிப்பதைத் தவிர்த்து வேறு என்ன செய்வது எனத் தெரியவில்லை. நண்பர்களின் ஏற்பாடு இது எனத் தெளிவாகப் புரிந்தது. கம்போடியா வந்து இன்று ஆறாவது நாள். ஆயிரம் வருஷத்து அங்கோர்வாட் தமிழ்க்கோயிலில் ஆரம்பித்து நாம்பென் நகரத்து நவீனயுகம் வரை பார்த்தாயிற்று. நாளை சென்னைக்குக் கிளம்ப வேண்டும். அதற்குள் என்னை வைத்து அவர்களுக்கு ஒரு விளையாட்டு தேவையாக இருக்கிறது.
   சரவணன் நெருங்கி வந்து கண் சிமிட்டி, `என்ன சொல்றே?’ என்றான் பார்வையாலேயே நான் ``ஆளை விடுங்கப்பா’’ என எழுந்தேன்.

   அந்தப் பெண் என்னைத் தோளில் அழுத்தி, தன்மேல் சாய்த்துக்கொண்டு, ``ஃபிப்தி தாலர்’’ என்றாள். அதிகம் பாலூற்றிய தேநீரின் நிறத்தில் இருந்தாள். மஞ்சளுக்கும் வெண்மைக்கும் இடையில் ஒரு நிறம். லிப்ஸ்டிக் தீட்டிய உதடு. இங்கு எல்லாப் பெண்களுமே தீட்டியிருக்கிறார்கள். உதடும் கண்களும் சேர்ந்து சிரித்தன. நான் அவளைப் பார்க்கிறேன் என்பது தெரிந்ததும் போலீஸுக்கு அளவெடுக்க நிற்பதுபோல சற்றே விறைப்பாக நின்று அவளைச் சரிபார்த்துக்கொண்டாள். மங்கிய வெளிச்சத்தில் கறுப்பு உடையில் அவளுடைய நிறம் மட்டுமே தெரிந்தது. ``ஃபிப்தி தாலர் ஓகே?’’
   ``என்னம்மா சொல்றே?’’ என்றேன்.

   ``தமிழ்ல கேட்கிறான் பாரு... ஃபிப்டி டாலர் கேக்கறாப்பா’’ என்ற ரகு, ``ஓகே... ஓகே’’ என்றான் அவளைப் பார்த்து.

   ``உனக்கு ஓகே-ன்னா நீ கூட்டிட்டுப் போ... என்னை வம்புல மாட்டிவிடாத.’’

   ``ஒண்ணும் பண்ணிட மாட்டா. பயப்படாமப் போடா.’’

   மணி, நள்ளிரவைக் கடந்துவிட்டது. இரவு மையம் கொள்ளக் கொள்ள பெண்கள் அதிகமாக நடமாடுவது தெரிந்தது.

   நாம்பென் நகர பார் ஒன்றில் இப்படி என்னை ஏடா கூடமாகச் சிக்கவைக்க, நண்பர்கள் திட்டமிட்ட சம்பவத்தின் பின்னணியில் என்னுடைய டீடோட்டலர் விரதம் முக்கிய காரணமாக இருந்தது. எனக்காக ஒருவர் ஐம்பது டாலரை எடுத்துக் கொடுக்க, ஒருவர் என் அறை எண்ணை அவளிடம் சொல்லி அரை மணி நேரம் கழித்து வரச் சொல்ல, என்னை உடனே மூட்டை கட்டி ரூமுக்குச் சென்று தயாராகச் சொல்ல... எல்லாமே சில விநாடிகளில் நடந்தன.

   ``உனக்குப் பிடிக்கலைன்னா... மசாஜ் பண்ணச் சொல்லிட்டுப் போகச் சொல்லிடு. புரொஃபஷனல் மசாஜ் டிரெய்னர்ஸ் இவங்கள்லாம்’’ என என் காதருகே கிசுகிசுத்தான் ரகு.

   ஒரு மாதிரியாக மனதைத் தேற்றிக்கொண்டு, அறைக்குக் கிளம்பினேன். எங்கள் மூவருக்குமே தனித்தனி அறைகள். அறையில் போய் டிவி போட்டுவிட்டு `கியாமித்தாய்... கிச்சாய்... மியாய்’ என அவர்கள் கெமர் மொழியில் இழுத்து இழுத்துப் பேசும் விவாத நிகழ்ச்சி ஒன்றைச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். ஜில் ஏசி-யில் சின்னச்சின்ன வியர்வைத் துளிகள் அரும்பிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.

   `டிங்... டிங்...’

   இதயம் நின்று துடித்தது. மனைவிக்குத் துரோகம், பிறன்மனை நோக்கும் சிற்றாண்மை, பொதுவெளியில் சொல்லத் தயங்கும் செயல் என்ற குற்ற உணர்வு, குறுகுறு எதிர்பார்ப்பு... எல்லாமாக வயிற்றிலிருந்து புறப்பட, எச்சில் விழுங்கி... கதவைத் திறந்தேன்.

   அவ்வளவு கிட்டத்தில் வந்து ``ஹாய்...’’ என்றாள். இன்னும் அழகாக மாறியிருந்தாள்.

   ``ஹாய்!’’

   பெர்ஃப்யூம் வாசனை.  கட்டிலின் மேல் துள்ளி அமர்ந்து குஷன் அதிர்வில் அப்படியே மகிழ்ந்து ஆடினாள். வாட்சைக் கழற்றி போன் அருகே வைத்தாள்.

   ``இரவில் இந்த பாரில்தான் தங்குவியா?’’

   ``இல்லை... தினமும் என் வீட்டுக்குப் போயிடுவேன்.’’

   ``வீடு எங்கே?’’ - இது தேவையற்ற கேள்வி. எனக்கு, நான் இருக்கும் ஹோட்டலின் பக்கத்துத் தெருவில் விட்டாலே திரும்பி வருவதற்கு வழி தெரியாது.

   ஆனால், அவள் பதில் சொன்னாள். ``இங்கிருந்து 15 கிலோமீட்டர். ஒரு கிராமம். எங்கள் ஊரிலிருந்து நான்கு பேர், இங்கு உள்ள பார்களில் வேலைசெய்கிறோம்.’’

   தேவையில்லாத... தேவைக்கு அதிகமான விளக்கம். பேச்சு போதும்போல இருந்தது. அவளுக்கும் அப்படி இருந்திருக்க வேண்டும்.

   ``குளித்துவிட்டு வந்துவிடட்டுமா?’’ என்றாள்.

   ``நிச்சயமாக.’’

   சரக்கென ஜிப்பை இழுத்து அவளுடைய மேலாடையை அகற்றினாள். பதறிப்போய் ஓடி அறைக் கதவைச் சாத்தினேன். அதுவரை அது திறந்தே கிடந்தது. அவள் சிரித்தாள். ஸ்கர்ட்டைக் கழற்றினாள். இரட்டை ஆடையில் மேலும் வெள்ளை வெளேர் எனத் தெரிந்தாள். குளியல் அறைக் கதவைத் திறந்து வழிகாட்டினேன். கழற்றிய இரண்டு துணி வகையறாவையும் தோளில் போட்டுக்கொண்டு லேசாக உரசியபடி உள்ளே சென்றாள்.

   ``நீ குளிக்கவில்லையா?’’ என்றாள்.

   ``அப்பவே குளிச்சுட்டேன்.’’ தமிழில்தான் சொல்ல வந்தது. அவள் புரிந்துகொண்டு, கதவைச் சாத்திக்கொண்டாள். ஷவர் சத்தம் கேட்டது. இதுதான் தருணம் என வெளியில் ஓடி, பாரில் கிண்டலடித்து உட்கார்ந்திருக்கும் நண்பர்களுடன் ஐக்கியமாகிவிடலாமா என நினைத்தபோது, அவள் வெள்ளை டர்க்கி டவலை நடுவாகக் குறுக்கில் கட்டிக்கொண்டு வெளியே வந்தாள்.

   ``நான் தயார்.’’

   அருகே வந்து அணைக்க நினைத்தவள், இன்னொரு கையால் பாத்ரூம் கதவை இழுத்து அறைந்து சாத்தினாள். `க்ளுக்’ என ஒரு சத்தம் கேட்டது. அது, சாத்திய கதவிலிருந்து வந்தது.

   கண்களை அழகாக உருட்டி... `என்ன சத்தம்?’ என்பதாகப் பார்வையால் கேட்டாள். நான் முன்வந்து கதவை ஒருமுறை தள்ளித் திறக்கப் பார்த்தேன். திறக்கவில்லை. அவளும் நான் என்ன செய்கிறேன் என்பதைக் கவனிக்க ஆரம்பித்தாள். குளியல் அறையைத் திறப்பதற்கான குமிழைத் திருகித் திறக்க முயன்றேன். அது அசையவில்லை. அவளும் சேர்ந்து என் கையோடு சேர்த்து குமிழைத் திறக்க எத்தனித்தாள். உட்பக்கம் தாழிட்டுக்கொண்டது தெரிந்தது.

   மூர்க்கமாக இரண்டு மூன்று முறை இழுத்தும் திருகியும் பார்த்தாள். நான் மெள்ள என் கைகளை எடுத்துக்கொண்டேன்.

   ``ஏன் திறக்கவில்லை?’’ என்றாள்.

   ``உள் பக்கம் பூட்டிக்கொண்டுவிட்டது’’ சைகையும் ஆங்கிலமுமாகச் சொன்னேன்.

   ``என் டிரெஸ் எல்லாம் உள்ளே இருக்கிறது’’ அவள் கண்கள் பதறுவதைப் பார்த்தேன்.

   கடிகாரத்தைப் பார்த்தேன். இரவு 1:50.

   ஒரு திருப்புளி இருந்தால் தாழ்ப்பாள் இருக்கும் இடத்துக்குள் விட்டு நெம்பிப் பார்க்கலாம். பாக்கெட்டில் இருந்த பால்பாயின்ட் பேனாவால் ஏதாவது செய்ய முடியுமா என நம்பிக்கையில்லாமல் முயன்றேன்.

   ``திறக்கவில்லையா?...’’ என்றது அவளுடைய பெருமூச்சுடன் வந்த குரல்.

   உள்ளே சென்று வேறு உபகரணங்கள் கிடைக்குமா எனப் பார்த்தேன். கப், டிஷ்யூ பேப்பரில் சுற்றிய கண்ணாடி டம்ளர், சர்க்கரை நிரப்பிய சாஷே, ஸ்பூன்.

   ஸ்பூனை எடுத்துக்கொண்டு கதவு அருகே வந்தேன். அது உள்ளே செல்ல வழியில்லை. அதை வைத்து இப்படியும் அப்படியும் குத்திப்பார்த்தேன். அவள் ஏதோ அமானுஷ்யம் நிகழ்த்திக்காட்டுவேன் என, விழி பிரமித்துக் காத்திருந்தாள். அவள் பார்ப்பதை நானும் பார்த்தேன்.

   ``ப்ளீஸ்!’’ என்றாள்.

   டெலிபோன் அருகே சென்று அதில் ஒட்டப்பட்டிருந்த அவசர சேவைக்கான எண்களைப் பார்த்தேன். ரூம் சர்வீஸ் - ஒன்று பூஜ்ஜியம் பூஜ்ஜியம்.

   வெகுநேரம் அடித்தது. நம்பிக்கையிழந்த நேரத்தில் ஒருவன் எடுத்தான். `கிய்ய முய்ய’ என என்னவோ சொன்னான். அந்தப் பெண்ணிடமே கொடுத்து விளக்கச் சொன்னேன்.

   அவள் வாங்கிப் பேசினாள். ஏமாற்றத்துடன் போனை வைத்தாள். ``காலை 10 மணிக்குதான் கார்ப்பென்டர் வருவாராம்.’’

   ``என் சட்டையையும் ஷார்ட்ஸையும் போட்டுக் கொண்டு போய்விடு... நாளைக்கு உன் ஆடைகளை எடுத்துவந்து அந்த பாரில் கொடுத்து விடுகிறேன்.’’

   நல்ல யோசனைபோல முகத்தில் ஒரு மலர்ச்சி ஏற்பட்டு அடுத்த விநாடியே மறைந்து விட்டது. ``இல்லை... அம்மா திட்டுவார். நான் இப்படிச் செய்வது வீட்டில் தெரியாது.’’

   ``எப்படிச் செய்வது?’’

   ``பாரில் வேலை செய்வதற்கு மட்டும்தான் அனுமதி. 3 மணிக்கு பார் மூடிவிடுவார்கள். எங்களை எங்கள் கிராமத்துக்கு அழைத்துச் செல்ல டுக் டுக் வந்துவிடும்.’’

   டுக் டுக் என்பது, நம் ஊர் ஆட்டோ போன்ற ஒரு வாகனம். கடிகாரத்தைப் பார்த்தாள். 2:20.

   அவளுக்கு அழுகை வந்தது. எந்த உணர்ச்சியும் இல்லாமல் கண்ணில் மட்டும் நீர் கொட்டிக்கொண்டிருந்தது. ``அழாதே’’ என்றேன். துடைத்துவிட நினைத்து தைரியம் இல்லாமல் தவிர்த்துவிட்டேன்.

   முதலில் அவள் பதற்றத்தைப் போக்க வேண்டும். வென்டிலேஷனுக்காக மேலே சிறிய திறப்பு இருந்தது. ஸ்டூலை இழுத்துப் போட்டு அதன் வழியாக எட்டிப்பார்த்தேன். அந்தவழி, கண்ணாடிப் பட்டைகளால் ஏணிபோல வரிசையாக அடுக்கி மூடப்பட்டிருந்தது. ஆனால், அதை உள்பக்கம் இருந்துதான் ஒவ்வொன்றாக எடுக்க முடியும். உடைத்து அகற்றலாம். ஆனால், அதன் வழியாக உள்ளே செல்ல முடியுமா எனத் தெரியவில்லை. கையில் கைக்குட்டையை நன்றாகச் சுற்றிக்கொண்டு ஒரு குத்து விட்டேன். கண்ணாடிச் சில்லுகளை அகற்றிவிட்டு, தலையை மெள்ள உள்ளே நுழைக்க முயன்றேன். காது வரை மட்டுமே உள்ளே போனது. தலையை பத்திரமாக வெளியே எடுத்தேன்.

   ``உள்ளே தாழ்ப்பாள் எதுவும் இல்லை. இது எலெக்ட்ரானிக் தாழ்ப்பாள்போல் இருக்கிறது.’’

   அவளுக்குப் புரியவில்லை. ``என்னால் போக முடிகிறதா பார்க்கிறேன்’’ என்ற அவள் என்னைக் கீழே இறங்கச் சொன்னாள். இறங்கி, அவள் ஸ்டூலில் ஏறுவதற்கு உதவினேன். அவளுக்கு அந்த வென்டிலேஷன் எட்டவில்லை. ``கொஞ்சம் தூக்கிவிடுங்கள்.’’

   அவளுடைய கால்களைப் பிடித்துத் தூக்கினேன். எதிர்பாராத விதமாக அந்த டர்க்கி டவல் அவிழ்ந்து என் மேல் விழுந்தது. அவள் பதறி, கீழே குதித்து டவலை வாங்கிக் கட்டிக்கொண்டாள். ``சிறிய வழி. அதற்குள் போக முடியாது.’’

   சம்பந்தமில்லாமல் அந்த வழியையும் தாழ்ப்பாளையும் பார்த்தேன். ``நேரமாகிவிட்டது. வண்டி வந்துவிடும்.’’

   தோள்பட்டையால் மோதி கதவை உடைத்துத் திறக்கும் கதாநாயக உத்திகள் எடுபடவில்லை. கெட்டியான மரக்கதவு அது. இரண்டு அங்குல தடிமன் இருக்கலாம். கம்போடியாவில் மரத்துக்குப் பஞ்சமில்லை. கொத்தி, இடித்து, உடைத்து, நெம்பி என இருக்கும் வாய்ப்புகள் எதுவுமே சரியாக வராது என நன்றாகத் தெரிந்தது. 3 மணிக்கு இன்னும் 10 நிமிடங்களே இருந்தன.

   எல்லாமே எலெக்ட்ரானிக்ஸ். கதவைத் திறக்க ஒரு காந்த அட்டை கொடுத்திருந்தார்கள். அதைக் காட்டினால்தான் வெளிக்கதவு திறக்கும். அதை உள்ளே சுவரோடு பிணைத்த காந்தப் படிப்பானில் செருகினால்தான் மின் இணைப்பு கிடைக்கும். சிறு யோசனை. அந்தக் காந்தத் தகட்டை எடுத்தேன். ஒரு நிமிடத்தில் விளக்குகள் அனைத்தும் அணைந்தன. அவள் அருகில் நிற்கிறாள். வாசனையும் மூச்சும். ``என்ன?’’ என்றாள் ராகமாக.

   மீண்டும் அந்தத் தகட்டைச் செருகினேன். விளக்குகள் எரிந்தன. ஏசி மோட்டார் சத்தம். நான் மெள்ள பாத்ரூம் கதவைத் திறந்து பார்த்தேன். சரக்... திறந்துகொண்டது. அவளுக்கு ஆச்சர்யம் தாளவில்லை. வேகமாக உள்ளே நுழைந்து ஆடைகளை அணிந்தாள். சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி 3 ஆக 5 நிமிடம் இருந்தது.

   ``ஸோம் ஆர்குன்!’’

   நன்றி சொல்கிறாள்.

   வெளியே செல்ல நினைத்தவள், ``ஓ... நீ இன்னும் எதுவும் செய்யவில்லையே!’’ என நின்றாள்.

   ``பரவாயில்லை. உனக்கு நேரமாகிவிட்டது.’’

   ``வெரி ஸாரி... இந்தா உன் நண்பர் கொடுத்த பணம்.’’

   50 டாலரில் 10 டாலர் மட்டும் எடுத்துக்கொண்டாள். ``இந்த `10 டாலரை என் பார் முதலாளிக்குக் கொடுக்க வேண்டும். அது முறை.’’

   ``பரவாயில்லை. 50 டாலரையும் வைத்துக்கொள்.’’

   ``எதற்கு?’’

   ``உன் செலவுக்கு.’’

   ``வேண்டாம்.’’

   ``பிரச்னையில்லை.’’

   வாங்கிக்கொண்டாள். ``நாளைக்கும் இருப்பீர்களா?’’

   ``இல்லை. காலை 10 மணிக்குக் கிளம்பிவிடுவோம்.’’

   சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள். இன்னும் ஒரு நிமிடத்தில் என்ன செய்துவிட முடியும்?

   இறுகக் கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்தாள். அவள் கண்கள் நீர் துளிப்பதற்கு முன்பான சிவப்பில் மாறியிருந்தன. நன்றி, அன்பு, இயலாமை, மன்னிப்பு எல்லாம் கலந்திருந்த முகம்.

   ``என் பெயர் நவி. மீண்டும் எப்போது வருவீர்கள்?’’

   ``தெரியாது.’’

   லிஃப்டுக்குள் பட்டனை அழுத்திவிட்டுக் காத்திருந்தாள். புன்னகைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தேன். லிஃப்ட் அவளைக் கவ்விய நேரத்தில், சிறிய இடைவெளியில் மலர்ச்சியுடன் ``ஐ லவ் யூ’’ என்றாள். நானும் சொல்லலாம் என நினைத்தபோது மூடிக்கொண்டது.

   கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே வந்தேன். அவளுடைய வாட்ச் டெலிபோன் அருகே இருந்தது. அடடா... எங்கோ ஒரு டுக் டுக் கிளம்பும் சத்தம் கேட்டது. அவளும் அவள் தோழிகளும் அவர்களின் கிராமத்துக்குச் செல்லும் அந்த வாகனமாக இருக்கலாம். பால்கனி வழியாகப் பார்த்தேன். மீகாங் ஆறு, நாம் பென் நகரத்தின் வண்ண விளக்குகளில் ஜாலம் காட்டியது. சில்லென்ற காற்று. பெண்களால் ஆன நகரம். கடைகளில், ஹோட்டலில், படகில், பாரில்... எங்குமே பெண்கள். விவசாயம், டிரைவிங் என ஆண்களின் அடையாளங்கள் பெண்களுக்குப் பின்னால் பதுங்கியிருந்தன.

   திடீரென்று போன் ஒலித்தது. மனைவி. `இந்தியாவில் இப்போது என்ன நேரம்?’

   ``என்னங்க... சாப்பிட்டீங்களா?’’

   ``பொழுது விடியப்போகுது...’’

   ``ஓ... அங்க என்ன டைம்?’’

   ``மூணு.’’

   ``இங்க ஒன்றரை. திடீர்னு ஒரு கெட்ட கனவு...’’

   ``ஒண்ணுமில்ல... தைரியமாத் தூங்கு. நாளைக்கு வந்துடுவேன்.’’

   ``எனக்கு என்ன வாங்கிட்டு வர்றீங்க?’’

   குறிப்பாக அவளுக்கென்று எதுவும் வாங்கவில்லை. காலையில் வாங்குவதற்கும் நேரம் இருக்காது.

   ``வாட்ச்!’’ என்றேன் அவசரமாக.
   https://www.vikatan.com
  • By நவீனன்
   வாரணாசி - சிறுகதை
     நரன் - ஓவியங்கள்: ரமணன்
    
   பெரும்பாலும் ஒரே மாதிரியான சிறிய ரெட்டைத் திண்ணைகளும், திண்ணையின் மேலிருந்து சரியும் தாழ்வார ஓட்டு முகப்பை இரண்டு மரத்தூண்களும் தாங்கிக்கொண்டிருக்கும் படியான வளைவான செருகு ஓடு வேயப்பட்ட வீடுகள் இருக்கும் பழைமையான தெருவுக்குள் அந்த வாகனம் நுழைந்தது. எல்லா வீட்டின் முற்றங்களிலும் விடுபடாமல் நெளிவு நெளிவான வெள்ளை நிறக் கோலங்கள் இருந்தன. பாலாமணி கையைக் காட்டி, கோலமிடப்படாத இடதுபக்க வீட்டின் முற்றத்தில் வாகனத்தை நிறுத்தச் சொன்னான். வெளியே வயதான நான்கைந்து ஆண்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.

   இறங்கி, வண்டியின் முகப்பைத் தெருவிலிருந்து வெளியேறும் பாதை நோக்கித் திருப்பி நிறுத்துமாறு ஓட்டுநரிடம் சொன்னான். பாலாமணியின் ஒரு கையில் கறுத்த கோழியும், மறு கையில் அரசு முத்திரை பதிந்த ஓரிரு காகிதங்களும் இருந்தன. வீட்டுக்குள் நுழையப் போனவனை நிறுத்தி ஒரு பெரியவர் சொன்னார்,

   ``ஏன்டா பாலாமணி, நீயாவது அவகிட்ட சொல்லக் கூடாதா? ஏற்கெனவே அஞ்சாறு வருஷம் படுக்கையில கிடந்த உடம்பு. அவ்வளவு தூரம் தாங்காதுடா. பூரணிகிட்ட சொல்லு. சட்டுபுட்டுன்னு இங்கேயே எல்லா ஈமக் காரியத்தையும் முடிச்சுடலாம்.’’

   ``நீங்க செத்த நேரம் கம்முனு இருங்க மாமா’’ என்றவாறு வீட்டுக்குள் நுழைந்தான். மாதவனின் இறந்த உடலின் தலைமாட்டில் பாந்தமாய் சிறிய திரி நாவிலிருந்து விளக்கு ஒன்று சுடர்விட்டுக்கொண்டிருந்தது.

   பழைமையான மூன்று கட்டு வீடு. நடுக்கட்டில் கிடத்தியிருந்தார்கள். அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து வயதான பெண்கள் சிலர், பாலாமணியின் மனைவி, அவரின் இரண்டு பெண் குழந்தைகள், வீட்டின் நுழைவாயிலில் திண்ணையில் நான்கைந்து ஆண்கள் அவ்வளவுதான் கூட்டம்.

   பூரணி, பாலாமணியைப் பார்த்ததும் கேள்விக்குறிபோல் முகத்தை வைத்து அவனைப் பார்த்தாள். அவன் வீட்டின் சமையல்கூடத்துக்கு அவளை வரச்சொல்லி சைகை காட்டிவிட்டு, முன்னால் போனான். இடுப்பில் சுற்றியிருந்த மங்கிய மஞ்சள் நிறப் பையிலிருந்து பணத்தை எடுத்து அவளிடம் கொடுத்தான் .

   ``நாலஞ்சு இடத்துல அலைஞ்சுட்டேன். பிணத்தை ஏத்திக்கிட்டு வாரணாசி வரைக்கும் வர, எந்த ஆம்புலன்ஸ் வண்டியும் தயாரில்லை. வர ஒப்புக்கிறவனும் நோக்கத்துக்கு வாடகை கேட்கிறான். இந்த வண்டிக்காரன் மட்டும்தான் ஒப்புக்கிட்டான். வாடகை குறைச்சல்தான். ஆனா, வண்டி கொஞ்சம் பழசு. பின்னாடி குளிர்ப்பதனமெல்லாம் நல்லாவே வேலைசெய்யுது. மூணு, நாலு நாள் ஆனாலும் உடம்பு தாங்கும். கெடாது. அவன்கிட்ட கேட்டுட்டேன். `மூணாம் நாள் சாயங்காலத்துக்குள்ள போயிடலாம்’னு சொன்னான்.’’

   பூரணி அவனைப் பார்த்தபடி இருந்தாள்.

   ``இந்தா...’’ கையில் இருந்த அரசு முத்திரைக் காகிதத்தைக் கொடுத்தான். ``அவ்வளவு தூரம் எடுத்துட்டுப் போறச்ச, வழியில போலீஸ்காரங்க மறிச்சு ஏதாவது கேட்க வாய்ப்பிருக்கு. அதான் கவர்ன்மென்ட் டாக்டரைப் பிடிச்சு `டெத் சர்ட்டிஃபிகேட்’ வாங்கிட்டு வந்தேன். பத்திரமா வெச்சுக்கோ.’’
   வாங்கிக்கொண்டாள்.

   தலையைத் திருப்பிக் காசிப்பானையைப் பார்த்தவாறு சொன்னான், ``மன்னிக்கணும் பூரணி என்னால வர முடியலை.’’

   அவளின் உதடுகள் நீர் படாமல் உலர்ந்து ஒட்டிக்கொண்டு பிரிய முடியாமல் பிரிந்தன. `` பரவால்ல...’’ அவ்வளவுதான் பேசினாள்.

   பாலாமணி, பூரணியின் பெரியம்மா மகன். சகோதரன் உறவு. ஓரிரு வயதுதான் அவளினும் குறைவாய் இருக்கும். பூரணிக்கு நாற்பதை நெருங்கும் வயது. குழந்தைப்பேறில்லை. உறவினர்கள் யாரும் அவளோடு பெரிதாகப் புழக்கத்திலில்லை. காண்போரிடமெல்லாம் பூரணி பணம் கேட்பாள் என்பதுதான் அவர்களின் பெரும்பாலான குற்றச்சாட்டு. ஓரளவுக்கு அது உண்மைதான். இப்போதுகூட மாதவனின் இறப்புக்கு அதிகம் பேர் வராததற்குக் காரணம் அதுவாகத்தானிருக்கும்.

   படுக்கையில் விழுவதற்கு, ஆறேழு வருடத்துக்கு முன்னர் வரை மாதவன் கும்பகோணம் விசாலம் சிட்ஸில் உதவி மேலாளராக வேலைபார்த்தான். கைநிறைய சம்பளம். வேலைப்பளு எனக் காரணம் சொல்லி, மெள்ள குடிப்பழக்கத்தையும் சீட்டாட்டத்தையும் தொடங்கினான். வாரக் கடைசியில் மீனாட்சி லாட்ஜில் அறை எடுத்து இரவெல்லாம் குடியும் சீட்டாட்டமும் தொடர்ந்தன. அப்போதெல்லாம் சனிக்கிழமை மாலை தொடங்கும் ஆட்டம், ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை நீளும். ஒருசிலர் மட்டும் வீட்டுக்குப் போய்த் தலையைக் காட்டிவிட்டு வந்து ஆட்டத்தைத் தொடர்வார்கள். மாதவனுக்கு இரவு வேலை. `கணக்கு முடிக்க லேட்டாகிவிட்டது’ எனக் காரணம் சொல்வான். பூரணி கொஞ்சம் கடுமை காட்டத் தொடங்கியதும், மதுவாடை போன பிறகு லாட்ஜிலிருந்து அதிகாலை கிளம்பி உறக்கக் கலக்கத்தோடு வீட்டுவாசலைத் தட்டி நிற்பான்.

   ஒருநாள் அதிகாலையில் மதுபோதையோ, உறக்கக் கலக்கமோ அல்லது ரெண்டும் கலந்துமா எனத் தெரியவில்லை, வீட்டுக்கு வரும் வழியில் விபத்தாகி ரத்தக்காயத்தோடு கிடந்தான். எதிலோ மோதியோ அல்லது எதுவும் மோதியோ தெரியாது, விபத்தில் தண்டுவடம் உடைந்துவிட்டது. உயிரை மீட்டெடுக்கப் பெரும்பொருட்செலவு.

   மாதவனின் அலுவலகத்தில் சொற்பமாகப் பணம் கொடுத்தார்கள். வீட்டில் சமீபத்திய சேமிப்பு என்று பெரிதாக ஒன்றும் இல்லை. கையில் இருந்த கடைசி நகை வரை விற்றும் மருத்துவச் செலவு அடைபடவில்லை. அப்போது ஆரம்பித்ததுதான். உறவினர்களிடம் கடன் கேட்கத் தொடங்கியது. எவ்வளவு செலவு செய்தாலும் மாதவனை முழுதாய் மீட்க முடியவில்லை. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புகையில், ``இனி கழுத்துக்குக் கீழ் நிரந்தரமா இயக்கமிருக்காது. மீதி வாழ்நாளை படுக்கையில்தான் கழிக்க முடியும். வேறு வாய்ப்பில்லை’’ என்று சொல்லிவிட்டார்கள் மருத்துவர்கள்.

   வீட்டுக்குத் தூக்கிவந்துவிட்டாள். மாதவனின் வயதான பெற்றோர், இவளைத்தான் குறை சொன்னார்கள். ``ஆரம்பத்திலேயே குடிப்பதை அறிந்து கண்டிப்பாக நடந்திருந்தால், இப்படி நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை’’ என்று சொல்லிவிட்டு, அவளை அப்படியே கைவிட்டு விட்டுக் கிளம்பிவிட்டார்கள். ஏறக்குறைய எல்லா உறவினர்களுமே எந்த மாற்றமும் இல்லாமல் அப்படித்தான் செய்தார்கள். அதன் பிறகு இப்போது வரை யாரும் இந்த வீட்டுக்கு வருவதில்லை. பாலாமணி மட்டும் அடிக்கடி வந்து பண உதவிகள் செய்தான்.

   ஆரம்பத்திலெல்லாம் மாதவன் பூரணியைப் பார்த்துக் கண்ணீர் வடிப்பான். தன்னால்தான் பூரணியின் வாழ்வு இவ்வளவு மோசமான நிலையை அடைந்துவிட்டதாகப் புலம்புவான். திறந்த மனதோடு அவளிடம் மன்னிப்பு கேட்பான். அதுவும் சிறிது நாளைக்குத்தான். பிறகு அவனும் ``நீ ஆரம்பத்திலேயே என்னைக் கண்டுகொள்ளாமல் விட்டதால்தான் நான் இப்படியான நிலையை அடைந்து விட்டேன்’’ என, புகார் கூறத் தொடங்கினான். பூரணி எப்போதும்போல் எதுவும் பதில் பேச மாட்டாள். மௌனமாய் ஓரிரு துளி கண்ணீர் வடிப்பு. அவ்வளவுதான், அங்கிருந்து நகர்ந்துவிடுவாள்.

   எது என்னவானாலும் மாதவனை அதிகாலையிலேயே குளிப்பாட்டிவிடவேண்டும். பிறகு நல்ல வெளுத்த வேட்டியை உடுத்திவிட்டு… கிழக்கு திசைக்கு அவனைக் காட்டி நெற்றியில் திருமண் இடச் சொல்லுவான். இயக்கமற்றுத் துவண்டு கிடக்கும் கரங்களை அவளிடம் சொல்லி அள்ளி எடுத்து ஒருசேர வைத்து சுவாமிகளின் திரு உருவப் படங்களை நோக்கி ஒரு கும்பிடு, விஷ்ணு சகஸ்ரநாமம், பிறகு சில மந்திர உச்சரிப்புகள், அதன் பிறகுதான் உணவூட்டச் சொல்வான். இறுதியில் மருந்திட்டு அவனைக் கிடத்துவாள். இடையில் சிறுநீர், மலம் கழிக்க வேண்டுமென்றால், கத்தி அழைப்பான். பூரணிதான் அள்ளிப்போட்டுவிட்டுத் துடைத்தெடுப்பாள்.

   பூரணி தனது கடமையாக நினைத்து எல்லாவற்றையும் சரியாக எந்த முகச்சுளிப்பும் எரிச்சலும் இல்லாமல் செய்து வந்தாள். மாதவன்தான் எதற்கெடுத்தாலும் நொட்டை சொல்லிக்கொண்டிருப்பான். உப்புச் சேர்மானம் சரியில்லை என உணவை அவள் முகத்தில் துப்புவான். பூரணியை வீட்டின் நிலைப்படி தாண்ட விடமாட்டான். மளிகை, காய்கறி என எதற்கும் கடைவீதிக்குப் போக விட மாட்டான். போனவள் திரும்ப வீடு வர மாட்டாள்; தன்னை இப்படியே விட்டுவிட்டு, வேறு யாருடனோ பேருந்து ஏறிவிடுவாள் என பயம்கொள்ளத் தொடங்கினான். எந்தப் பொருள் என்றாலும் மளிகைக் கடையில் சொல்லி வீட்டில் எடுத்து வந்து சேர்க்கும்படி சொல்லச் சொல்வான்.

   மளிகைக்கடையிலிருந்து பொருள்கள் கொண்டுவருபவன் இளம் வயதினனாய் இருந்துவிட்டால் அவ்வளவுதான். நிமிடத்துக்கு ஒருமுறை அவள் தன் கண்முன்தான் இருக்கிறாளா எனச் சோதித்துக்கொண்டே இருப்பான். அவன் கண்களிலிருந்து ஐந்து நிமிடம் அவள் நகர்ந்தால் போதும். ``எவனோடு படுத்த? என்னால முடியலைன்னுதானே இப்படிப் பண்ற?’’ என்று கத்திக் கூப்பாடுபோடுவான். ஊரிலிருக்கும் அத்தனை கடவுளையும் கூப்பிட்டு ``என்னை ஏன் இப்படி ஆக்கிட்ட. பகவானே, வேகமா என்னை எடுத்துக்கோ’’ என்று அழுது அரற்றுவான். பூரணியின் சிவந்த நிறமும் இளமையும், அவனது இயலாமையையும், கையாலாகாத்தனத்தையும் உறுத்திக் கொண்டேயிருக்கும் .
   உறவுகளில் பாலாமணி ஒருவன்தான் இவளுக்குப் பல வகைகளிலும் உதவியாக இருப்பவன். மாதவன், பல நேரங்களில் பாலாமணியையும் இவளையும் இணைத்துப் பேசுவான். ``நீ இவ்வளவு அழகா இருப்பதால்தான் அவன் உனக்குப் பணம் அளிக்கிறான்’’ என்று வாயும் மனதும் கூசாமல் பழிபோடுவான். பாலாமணிக்குத் தெரிந்து, அவன் ``இந்த ஆளை விட்டுவிட்டு, என் வீட்டுக்கு வா’’ என்று கோபமாய் ஏசினான். மறுத்துவிட்டாள்.  சில நேரத்தில் சொற்களால் அனுதினமும் தன்னைச் சாகடிக்கும் இவனை, கழுத்தை நெரித்துக் கொன்றுவிடத் தோன்றும் அவளுக்கு.

   பூரணியிடம் இப்போதெல்லாம் உடல் முழுக்க இறுக்கமும் பெரும் அமைதியும் குடிகொண்டுவிட்டன. மோசமான சொற்களைக் கேட்டுக் கேட்டு அவளின் உடல் இறுக்கமான கற்களைப்போன்று மாறிவிட்டது. ஆனால், காதுகள் மட்டும் நெகிழ்வான சதைத் துளையாய் இருக்கிறதாய் உணர்கிறாள். எவ்வளவு முயன்றும் அதுமட்டும் கல்தன்மைக்கு மாறாமல் இருக்கின்றன. அதுவும் அப்படியாக மாறிவிட்டால், எந்தச் சொல்லும் தன்னைக் காயப்படுத்தாது என நம்பத் தொடங்கினாள். மாதவனின் வைத்தியத்துக்கு என, சுற்றி இருந்த அத்தனை மனிதர்களிடமும் கடன் வாங்கிவிட்டாள். பாலாமணியிடமும் கணக்கு வழக்கில்லை. இப்போதெல்லாம் அவன் வீட்டுக்குள் வருவதில்லை. வாசலிலேயே பணத்தைக் கொடுத்துவிட்டு நிமிடத்துக்குள் கிளம்பிவிடுவான்.

   ஐந்தாறு வருடமாய் படுக்கையில் கிடந்து மாதவனின் உடல் மிகவும் தேய்மானமாகிவிட்டது. கைகளும் கால்களும் சூம்பி, தலை மட்டும் பருத்துத் தெரிந்தது. இறுதியாக சேஷாத்திரி டாக்டர்தான் சொன்னார், ``இன்னும் சொற்ப வாழ்நாள்தான். மூணு மாசம்கூட அதிகம். எந்த ஒளிவுமில்லாமல் மாதவனின் முன்னால்வைத்தே சொல்லிவிட்டார். மாதவன் ஓங்கி ஓங்கி அழுதான். வாழ பிரயாசை கொண்டவனைப் போல் அரற்றினான். தாரை தாரையாய்க் கண்ணீர்விட்டான். பூரணியின் காது கொஞ்சமாய் கல்லின் தன்மைக்கு மாறிவிட்டது போல. எந்த அதிருப்தியும் இல்லை; திருப்தியும் இல்லை.

   ஓர் அதிகாலையில் நீராடிவிட்டு சுவாமியை வழிபட்டு முடிந்ததும் பூரணியிடம் கேட்டான், ``பூரணி, எந்த ஜென்மத்தின் கடனோ நீ எனக்காக நிறைய செஞ்சுட்ட. பார்த்த இடத்துலலாம் கடன் வாங்கி வைத்தியம் பண்ணிட்ட. கடைசியா எனக்காக இந்த ஒண்ண மட்டும் செஞ்சுடு.’’ பூரணி `என்ன?’ என்பதுபோல் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். ``எனக்கு அடுத்த பிறப்பு வேண்டாம். வேதத்தையும் சாஸ்திரத்தையும் நம்புறவனா சொல்றேன். சாஸ்திரப்படி இறந்த உடலை வாரணாசிக்குக் கொண்டுபோய் எரிச்சு, அந்தச் சாம்பலை கங்கையில கரைச்சுட்டா, எனக்கு பிறப்புச் சங்கிலி அறுபட்டு மறுஜென்மம் இல்லாமப்போகும். எனக்காக இந்த ஒரு காரியத்தை மட்டும் மறுக்காமச் செய்வியா?’’ என்றபடி ஒருவித வணங்குதலோடும் நன்றியோடும் பார்த்தான். பூரணி, லேசாகத் தலையை ஆட்டினாள்.

   இருவருமே இறப்பின் நாளை எதிர்நோக்கி, அந்த நாளுக்காகக் காத்திருந்தார்கள். மாதவன் இருக்கும் நாள்களை முழுக்கப் பார்த்துவிட வேண்டும் என இரவும் பகலுமாய் முழுக்க உறங்காமலேயே இருந்தான். அடிக்கடி பூரணியை அருகில் அழைத்து அமர்த்தி, அவளின் முகத்தைப் பார்த்துக்கொண்டேயிருந்தான். தீடீரென வெடித்து அழுதான். பூரணி எப்போதும்போல் இறுக்கமாக இருந்தாள். மாதவன் அடிக்கடி கேட்டுக் கொண்டேயிருந்தான். ``நான் இறந்ததும் நீ வேறொரு கல்யாணம் பண்ணிப்பல. நீ பாவம் பூரணி, கட்டிக்கோ! என்னைக் கட்டிக்கிட்டு ரொம்பக் கஷ்டப் பட்டுட்ட. அவன் முகத்தை ஏறிட்டு எந்தச் சலனமுமில்லாமல் பார்த்தாள். சிறிது நேரம் கழித்து பூரணியை அழைத்து, ``நீ வேற கல்யாணம் பண்ணிக்காத பூரணி. உன்னை வேற யாரும் தொடக் கூடாது. இப்படியே இருந்துடு. ஏன்... இருக்க முடியாதா? அப்படித்தான் இருக்கணும்’’ என்று கூறி, பற்களைக் கடித்துக்கொண்டு அழுவான்.

   பூரணி இப்போதும் அவன் முகத்தை ஏறிட்டு, எந்தச் சலனமுமில்லாமல் பார்த்தாள். காது முழுக்க நிரம்பிக் கிடக்கும் இந்தச் சொற்களையெல்லாம் செரிக்கமாட்டாமல் கிடந்தாள் பூரணி.

   இன்று அதிகாலையில்தான் உயிர் பிரிந்தது. இன்று அழுகையில்லை. இப்போதும் இறுக்கமாய் முகத்தில் சிறு சலனமுமில்லாமல் அவன் முகத்தை ஏறிட்டபடி வீட்டுக்குள் நின்றுகொண்டிருந்தாள். மாதவனின் உடலை முகம் மட்டும் தெரியும்படி வெள்ளை காடாத் துணியால் ஒருவன் சுற்றினான். சிறிய கைப்பையில் இரண்டு மாற்றுத்துணிகளை எடுத்து வைத்துக்கொண்டு பாலாமணியின் மனைவி வந்தாள்.

   வெளியே வண்டியை பாலாமணி காட்டிய திசைக்குத் திருப்பி வைத்துவிட்டு, காரிலிருந்து நட்ராஜ் தரைக்கு இறங்கினான். ஏதோ ஒரு வீட்டிலிருந்து தீக்கங்குக்குள் பால் சாம்பிராணியைப் போட்டு வாசனையைப் பெருக்கிக்கொண்டிருக்கிறார்கள்போல. வாசனை, வீட்டிலிருந்து தெருவுக்குள் இறங்கி வந்துகொண்டிருந்தது. வேறொரு வீட்டிலிருந்து கிருஷ்ணனின் பிருந்தாவனப் பாடல்களின் ஓசை தம்புராவின் பின்னணியோடு அறுந்து அறுந்து செருமலோசையோடு கசிந்து வந்தது. யாரேனும் ஒரு பெண் பழகிக்கொண்டிருப்பாள்போல. நடுவிலிருந்து கொஞ்சம் பசுஞ்சாணம், ஈர வைக்கோல் வாடை கலந்த தொழுவத்தின் வாசனை அடித்தது. நட்ராஜுக்கு 41 வயது. மனைவி, இவனிடமிருந்து விலகி வேறு திருமணம் செய்துகொண்டாள். எவர்மீதும் அவனுக்கு திடகாத்திரமான நம்பிக்கையில்லை. சிறுவயதிலிருந்து மோட்டாரில் இருக்கிறான். நான்கு ஆண்டுகளாய், சொந்தமாக இரண்டாம் கை மாறிய ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று வைத்து ஓட்டுகிறான்.
   ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைக்க நெருப்புக்குச்சி தேடி எங்கிருந்தோ பற்றவைத்துவிட்டு வந்தான். பாலாமணி ``கிளம்பலாமா?’’ என்று கேட்டான். தலையசைத்ததும் ``வந்து ஒரு கை பிடிக்க முடியுமா?’’ என்று கேட்டான். நட்ராஜ் மறுத்துவிட்டான். பிறகு மனது கேட்காமல் பாலாமணியின் முதுகை நோக்கி நடக்க ஆரம்பித்தான். வீட்டுக்குள் நுழைந்ததும் முதலில் பூரணியைத்தான் பார்த்தான். இந்த இறப்புக்காக அல்லாமல், பல ஆண்டுகளாய் வேரூன்றிய சோகம்கூடிய முகம். பாலாமணி, தலைமாட்டில் பிடிக்கும்படி சொன்னான். பாலாமணியும் வேறொருவரும் உடலைப் பிடித்துக் கொள்ள நட்ராஜ் பின்னோக்கித் தெருவுக்கு நடந்தான். வாகனத்தின் இரண்டு கதவுகளும் தன் நெஞ்சைத் திறந்துகொண்டு நிற்பதுபோல் நின்றன.

   நட்ராஜ் மேலேறி, தலையை வாகனத்துக்குள் நுழைத்தான். முழு உடலும் நுழைந்ததும் பூரணி வீட்டிலிருந்து வெளியேறினாள். அவள் பாதங்கள் அந்தத் தெருவில் நடந்தே பல ஆண்டுகள் ஆகியிருந்தன. வண்டியில் ஏறி அமர்ந்தாள். சில வீடுகளிலிருந்து பெண்கள் எட்டிப்பார்த்து ஏதோ பேசிக் கொண்டார்கள். பாலாமணி, மாற்றுத்துணி அடங்கிய கைப்பையை அவள் காலடியில் வைத்தான். வேறொருவன் இரு கால்களும் கட்டியிருந்த கறுத்த கோழியை மாதவனின் உடல் இருக்கும் சிறு கட்டில் மாதிரியான அமைப்பின் கால்மாட்டில் கட்டிவைத்தான். `இது எதற்கு?’ என்பதுபோல் பாலாமணியைப் பார்த்தாள்.

   ``இது சாஸ்திரம். சனிப் பொணமில்லையா!’’ என்று சொல்லிவிட்டு, கதவடைத்தான். அந்தக் கோழியும் இவளைப்போலவே எந்தச் சத்தமும் இல்லாமல் இறுக்கமாய் இருந்தது. சிறிது நேரத்தில் வாகனம் கிளம்பியது. கதவின் மேல் பொருத்தியிருந்த வெளிப்படையான கண்ணாடியின் வழியே பார்த்தாள். எல்லா வீடுகளும் பின்னோக்கிச் சென்றுகொண்டிருந்தன. பாலாமணி மூடிய கதவின் வெளி நின்று ஏதோ பேசினான். வாசலில், திண்ணையில் நிற்கும் மனிதர்கள் ஏதேதோ பேசினார்கள். அவளுக்கு எதுவும் கேட்கவில்லை. ஒரு நிமிடம் காது முழுக்க இறுகிக் கல்லாய் மாறிவிட்டதாகத் தோன்றியது.

   கடந்துபோகும் கும்பகோணத்தின் தெருக்களைப் பார்த்தபடியிருந்தாள். எந்த நினைவுகளும் காட்சிகளும் உள் தங்காது கலைந்துகொண்டேயிருந்தன. வாகனம் கும்பகோணத்தின் வெளிப்புறம் வந்து அகலமான கறுப்பு நிறச் சாலைக்கு வந்தது. உடலில் சட்டெனக் குளிர் அறைந்தது. தான் இருக்கும் இடத்தை உணர்ந்தாள். தப்ப முடியாத இறுக்க மூடிய சிறிய அறைக்குள் இருப்பது மாதிரி உணர்ந்தாள். எதிரே இருக்கும் மாதவனின் உடலின் வாயைப் பார்த்தாள். அந்த வாய் எப்போது வேண்டுமானாலும் திறந்து தன்னை மோசமாகப் பேசக்கூடும் என்று பயப்படத் தொடங்கினாள். தன்னால் இந்த உடலோடு இவ்வளவு தூரம் பயணம் செல்ல முடியாது. மறுபடியும் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய் அங்கேயே எரித்துவிடலாம் என நினைத்தாள். சட்டென மூச்சு முட்டுவதைப்போல் உணரத் தொடங்கினாள். பார்வையை வேறு எங்கோ மாற்ற நினைத்து, கோழியின் மீது எடுத்துச் சென்றாள். கோழி அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.

   வாகனத்தின் முன் பக்கத்துக்கும், அதன் பின் பக்கத்துக்கும் தொடர்பில் இருக்கும் சிறிய கண்ணாடிக் கதவைத் திறந்து நட்ராஜை வண்டியை நிறுத்துமாறு சொன்னாள். அவனுக்குக் கேட்கவில்லை. கதவைத் திறக்கச் சொல்லி சத்தமாய் அவனிடம் சொன்னாள். வண்டியை ஓர் ஓரமாக நிறுத்தினான். ஒரு கணம், ‘தன்னால் பேச முடியுமா? என் நாவுகள் கல் நாவு அல்ல’ என்பதுபோல் நினைத்துக் கொண்டாள். கதவு திறக்கும் ஓசைக்காகக் காத்திருந்தாள். திறக்கப்பட்டதும் கீழே வேகமாக இறங்கி நன்றாக மூச்சு எடுத்தாள். ஆசுவாசமாய் இருந்தது. தனிமையான சாலையைப் பார்த்தாள். சாலையோரங்களில் வரிசை தப்பாமல் மரங்கள் இருந்தன. இந்த ஏழு ஆண்டுகளில் தன் கண்கள் இதைக்கூடப் பார்க்கவில்லையே என்று தன்னைத்தானே நொந்துகொண்டாள். ``அந்தக் கோழியின் கட்டை அவிழ்த்து, அதை விடுவிக்க முடியுமா?’’ என்று கேட்டாள். அவன் கோழியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு மறுகையால் கட்டை அவிழ்த்து தரையில் இறக்கி விட்டான். அது புளியமரத்தின் ஓரமாகச் சத்தமிட்டவாறு ஓடியது.

   மீண்டும் தன்னால் மாதவனின் அருகில் போய் அமர்ந்திருக்க முடியாது என நினைத்தபடி அந்த உடலைப் பார்க்காமல் கதவைச் சாத்தச் சொன்னாள். நட்ராஜ் குழப்பத்துடன் கதவைச் சாத்தினான். அவள் வாகனத்தின் முன் இருக்கையை நோக்கி நடந்தாள். தனக்கு அடிக்கடி சிகரெட் பிடிக்க வேண்டும் என்று நட்ராஜ் சொன்னான். அவள் எந்தச் சலனமுமில்லாமல் நடந்து முன்னிருக்கையில் அமர்ந்தாள். அவனும் வந்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தபடி ``பின்னாடிதான் குளிர்ப்பதனம் இருக்கிறது. முன்னால் வெக்கைதான்’’ என்று சொன்னான். அவள் வெறுமனே கண்ணாடியின் வழியாகச் சாலையை நோக்கி உறைந்த கண்களால் பார்த்தபடியிருந்தாள். வாகனம் கிளம்பியது.

   மதிய உணவுக்காக வாகனத்தை நிறுத்தினான் நட்ராஜ். அவள் ``விருப்பமில்லை’’ எனச் சொல்லி மறுத்தபடி தலையசைத்துவிட்டாள். நட்ராஜ் போன வேகத்தில் ஒரு தேநீர் மட்டும் பருகிவிட்டு வந்துவிட்டான். அவனுக்கு சிகரெட் பிடிக்காமல் என்னவோபோலிருந்தது. ``சாப்பிட எதுவும் வேண்டுமா?’’ என்று மீண்டும் ஒருமுறை அவளிடம் கேட்டான். அவள் மறுத்து லேசாகத் தலையசைத்தாள். வாகனத்தை இயக்கி மீண்டும் கிளம்பினான். புதிய புதிய ஊர்களை, மனிதர்களை, மரங்களை, பறவைகளை, மலைகளை, கால்நடைகளை, வயல்வெளிகளை இறுக்கமான முகத்தோடு பார்த்தபடியே கண்களால் அந்தக் காட்சிகளைப் பருகிக்கொண்டே வந்தாள். அவளின் முகம், சிறிது சிறிதாய் இறுக்கம் தளர்ந்துகொண்டே வருவதைப்போலிருந்தது. வெயில் முடிந்து ஒரு புள்ளியில் மாலை நேரம் தொடங்கி அவள் முகத்தில் மெதுவான குளிர்ந்த காற்று அடித்து, கண்கள் செருகி, பிறகு அயர்ந்து உறங்கிவிட்டாள். `பாவம் எத்தனை நாளின் உறக்கமோ!’ என்று நட்ராஜ் அவளை எழுப்பாமல் விட்டுவிட்டான். இரவு நெடுநேரத்துக்குப் பிறகுதான் எழுந்தாள்.

   தெலுங்குப் பாடல்கள் ஒலிக்கும் ஏதோ ஒரு ஹோட்டலின் முன்னால் வாகனம் நின்றுகொண்டிருந்தது. சட்டென விழித்துப் பார்த்தாள். வண்ண வண்ண சிறு விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. பெரிய கல் அடுப்பில் வெள்ளைப் புகை மேலெழும்ப, தோசை வார்த்துக்கொண்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கில் லாரிகள் நின்றுகொண்டிருந்தன. வாகனத்திலிருந்து இறங்கி நட்ராஜைத் தேடினாள். முழுக்க முழுக்க அங்கே ஆண்கள்தான் இருப்பதுபோலப்பட்டது. நிறைய பேர் அவளைப் பார்த்துக்கொண்டிருப்பதுபோலிருந்தது. சிறிது தூரம் முன் நடந்ததுமே எதிரில் அவளைப் பார்த்தபடி வந்துகொண்டிருந்தான்.

   ``சிறுநீர் கழிக்கவேண்டுமா?’’ என்று கேட்டான். இவ்வளவு நேரம் மறந்து இருந்துவிட்டு இப்போது சட்டென சிறுநீர்ப்பை நிரம்பி கனமேறிக் கடுப்பது போலிருந்தது. ஆமாம் என்பது போல் தலையை ஆட்டினாள். அவன் முன் நடக்க, தொடர்ந்து போனாள். கொஞ்சம் தூரமாய் இருளுக்குள் ஆங்காங்கே நின்றபடி ஆண்கள் சிறுநீர் கழித்தபடி இருந்தார்கள். ஒரு நிமிடம் அவள் தன்னையும் இப்படியான இருளுக்குள் நின்று சிறுநீர் கழிக்கச் சொல்வான் என நினைத்தாள். அவன் கடைக்குள் சென்றான். தூரத்தில் ஒரு பெண்ணிடம் பேசுவது தெரிந்தது. அவளைக் கடையின் உள்ளே அழைத்தான். கடையின் உள்ளே போய் பின்னால் ஒரு பாதை சென்றது. அங்கே அந்தக் கடைப் பெண் பயன்படுத்தும் ஒரு கழிவறை இருந்தது. கதவைத் திறந்துகொண்டு வெளியே வருகையில் அவன் ஓரமாய் நின்று புகைபிடித்துக் கொண்டிருந்தான்.

   சிறிய மஞ்சள் குண்டு பல்பின் வெளிச்சத்தில் அவனை முதன்முறையாகப் பார்த்தாள். ஓரளவு சிவந்த நிறம், முகம் முழுக்கச் செழிப்பாயிருந்த தாடி, கொஞ்சம் முரட்டு உருவமாய்க் காட்டியது. முகத்தில் நிறைய மலையாளத் தன்மையிருந்தது. அவன் அவளைப் பார்த்ததும் சிகரெட்டை அணைக்கவில்லை. தூக்கி வீசவுமில்லை. அவன் அவளிடம் ``ரெண்டு நிமிஷம்’’ என்று சொன்னான். ``அடிக்கடி பிடிப்பவன். மதியத்திலிருந்து பிடிக்கவில்லை’’ என்று சொன்னான். முடிக்கும் வரை அவள் நின்றுகொண்டிருந்தாள். அந்த இரண்டு நிமிடத்தில் ஒரு புதிய ஆடவனோடு எந்த உறுத்தலுமில்லாமல் எப்படி சகஜமாக இருக்க முடிகிறது என்று நினைத்துக்கொண்டாள்.

   அவன் அணைத்துவிட்டு வந்தான். கையைக் கழுவிவிட்டு சாப்பிட்டு வரச் சொன்னான். அவள் மறுத்து வாகனத்தை நோக்கி நகர்ந்தாள். பின்னாலேயே அவனும் வந்துவிட்டான். `சாப்பிடலையா?’ என்பதுபோல் அவனைப் பார்த்தாள். அவன் பதில் பேசாமல் வாகனத்தில் சாவியை நுழைத்தான். நமக்காக ஏன் ஒருவன் சாப்பிடாமல் கிடக்கிறான் என நினைத்தபடி, ``நீங்க சாப்பிட வேண்டியதுதானே!’’ என்று கேட்டாள்.

   ``எனக்குத் தெரிஞ்சு நீங்க மதியத்திலிருந்து சாப்பிடலை. எப்ப இருந்து நீங்க சாப்பிடலைனு எனக்குத் தெரியாது. ஆனா, நம்மகூட இருக்கிற ஒருத்தர் சாப்பிடாம இருக்கும்போது நமக்கு சாப்பிட எப்படி மனசு வரும்?’’ என்று கேட்டான்.

   ``சாப்பிடப் போகலாம்’’ என்று சொல்லி, கீழே இறங்கினாள்.

   காலையிலிருந்து நீர்கூடப் பருகவில்லை. நீரைப் பார்த்ததும் கடகடவென எடுத்துப் பருகினாள். தன் முன் இருக்கும் உணவில் சுவை எல்லாம் தெரியவில்லை. ஏதோ சாப்பிட்டாள். பிறகு வாகனத்தை நோக்கி நடந்தாள். சட்டென ஞாபகம் வந்தவளாய் ``சாப்பிட்டது சைவ உணவா... அசைவ உணவா?’’ என்று கேட்டாள். ``எனக்குத் தெரியும்... உங்களுக்கு சைவம்தான்’’ என்று சொன்னான். சட்டென நிம்மதியாக இருந்தது.

   வாகனத்தைக் கிளப்பினான். அவன் மணிக்கட்டில் நேரம் என்ன ஆகிறது எனப் பார்த்தாள். மணி இரண்டைத் தாண்டியிருந்தது. சாலையோரங்களில் இருளுக்குள் வயல்கள் கறுப்பு நிறமாய்த் தெரிந்தன. மைல்கல்களில் தெலுங்கிலும் ஆங்கிலத்திலும் ஊரின் பெயர்கள் எழுதியிருந்தன. எப்படியும் இன்னும் ஆயிரத்தி சொச்சம் கிலோ மீட்டர்களைக் கடக்க வேண்டும் என நினைக்கும்போதே அவளுக்கு அயர்ச்சியாய் இருந்தது. மறுபடியும் உறங்கிவிட்டாள்.

   காலையில் சிறிய தேநீர்க் கடையின் முன்னால் வாகனம் நின்றது. படிக்கும்போதிருந்தே அவள் பலமுறை நினைத்திருக்கிறாள், `பெண்ணுக்கான குறைந்த சுதந்திரம் என்பது ஒரு தேநீர்க் கடைக்குப் போய் ஒரு தேநீர் சொல்லிவிட்டு அங்கேயே மர பெஞ்சில் அமர்ந்து தினசரி வாசித்தபடியே அதைப் பருக வேண்டும்’ என. யாரோ ஒருவர், தெலுங்கு தினசரியை வாசித்துக்கொண்டிருந்தார். அவளே `இரண்டு தேநீர்’ எனச் சொல்லலாம் என வாய் திறக்கையில், நட்ராஜ் அழைத்தான். ``பல் துலக்கவும் காலைக்கடன் கழிக்கவும் பின்னால் இடம் இருக்கிறது’’ என்றான். சிறிது நேரத்துக்குப் பிறகு வந்து அவள் தேநீர் பருகினாள். தேநீர்க் கடைக்காரர் ஏதோ கேட்கவும் அவன் வாகனத்தின் பின் பாகத்தைச் சுட்டிக்காட்டி அவளையும் காட்டி தெலுங்கில் ஏதோ சொன்னான். அப்போதுதான் அவளுக்கு மீண்டும் மாதவனின் ஞாபகமே வந்தது. சட்டென ஒரு நிமிடம் அவளுக்குள் எல்லாமே இருண்டன. முழுவதும் பருக முடியாமல் மீண்டும் வாகனத்தில் போய் அமர்ந்தாள்.

   ஆங்காங்கே நிறுத்தி நட்ராஜ் சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டான். மதியம் அவன் எவ்வளவோ வற்புறுத்தியும் அவள் சாப்பிட மறுத்துவிட்டாள். நட்ராஜ் ஓரிரு வார்த்தைகள் பேசத் தொடங்கினான். மாதவன் இங்கே என் முதுகுக்குப் பின்னால்தான் இருக்கிறான் என்ற உணர்வே அவளை மீண்டும் இறுக்கமாக்கியது. அவனோடு பேச மறுத்தாள். நட்ராஜ் அவளை மிகவும் கனிவாய் நடத்தினான். சிறிது நேரத்துக்கு ஒருமுறை நீர் குடிக்கச் சொல்லி வற்புறுத்தினான். மாலை 4 மணிதான் இருக்கும். சாலை முழுக்க இருள் சூழ்ந்திருந்தது. தூரத்தில் எங்கேயோ மழை பெய்துகொண்டிருக்கிறதுபோல, குளிர்காற்று வீசத் தொடங்கியது. கண்ணாடி இறக்கிவிடப்பட்ட பகுதியில் முழங்கையைத் தாங்கியபடி அமர்ந்திருந்தாள்.

   ஓரிரு கிலோமீட்டர்கள் முன் நகர்ந்துபோனதும் மழைத் தூறல்கள் அவளின் முழங்கையில் பட்டன. `ஒரு துளி மழை தன் மேல் பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன’ என நினைத்தாள். முழங்கையை வெளிநோக்கி மேலும் தள்ளினாள். வெளியே மழை கொட்டியது. நிறைய துளிகள். நட்ராஜ் தன் பக்கத்துக் கண்ணாடியை மேலேற்றி அடைத்தான். அவள் தன் உடலை மெள்ளச் சரித்து, கழுத்தையும் மழை விழும் பக்கம் சரித்தாள். அவள் உடலெல்லாம் நீர்த்துளி பட்டு நனைந்தது. நட்ராஜ் வாகனத்தை அகலமான ஓர் ஆற்றுப் பாலத்தில் நிறுத்தி அவளை மழைக்குள் இறங்கச் சொன்னான். `இறங்கின... பாத்துக்கோ!’ சட்டென மாதவனின் குரல் எங்கிருந்தோ கேட்டதும் உள்ளொடுங்கி அமர்ந்தபடி மழையில் இறங்க மறுத்து அப்படியே தன்னை உள்ளேயே இருத்திக்கொண்டாள். எதற்கோ பயந்தவளைப் போல் கண்ணாடியை விரைந்து ஏற்றி மழைத்துளி தன்மேல் படாமல் தடுத்துக்கொண்டாள்.

   நட்ராஜ் வேகமாக இறங்கி அவளின் புறத்துக் கதவைத் திறந்து அவளின் கரத்தைப் பிடித்துச் சட்டென வெளியே இழுத்தான். அவள் எதிர்பார்க்கவேயில்லை. ஒரு நிமிடத்தில் மழைக்குள் வந்துவிட்டாள். மழை, அவள்மீது கொட்டித் தீர்த்தது. மழையின் சத்தத்துக்குள் நின்று ஹோ... வெனக் கதறி அழ ஆரம்பித்தாள். தன் கல் பாரம் நீரோடு மெள்ளக் கரையக் கரைய நெடுநேரம் அழுதாள். மழையின் ஓசை நின்றும் அவளின் அழும் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. இனி அழ ஒன்றுமில்லை என்பதுபோல் அழுதாள். நட்ராஜ் அருகில்கூட வரவில்லை, விட்டுவிட்டான்.
   அழுது முடித்து, சோர்ந்து நின்று கொண்டிருந்தாள். பருத்தித் துண்டு ஒன்றை எடுத்து அவளின் தலைமீது வைத்தான். அவள் அப்படியே நின்றாள். அப்படியே முகத்தின் மீதும், உடல் முழுக்கவும் இருந்த கல் போன்ற இறுக்கமான கல் தன்மை நீங்கி ஒரு குழந்தையின் முகம்போல் இருந்தது. பருத்தித்துண்டை எடுத்து அவளின் தோள்மீது போட்டான். அவள் கொஞ்சமாய்த் துவட்டிக்கொண்டாள். வாகனத்தில் ஏறி அமர்ந்தாள். வயல்வெளியும், நீண்ட ஆறுகளும் சட்டென எல்லாப் புறங்களும் ஈரமாகி அவளை நெகிழ்த்தின. ஓரிடத்தில் தேநீர் குடிக்க நிறுத்தச் சொன்னாள். அவளே ``ரெண்டு தேநீர்’’ என்று சொன்னாள். பருகிவிட்டு, மீண்டும் மீண்டும் தேநீர் சொல்லிப் பலமுறை பருகினாள். நட்ராஜுக்கு இது விநோதமாய் இருந்தது.

   மைல்கற்களில் தெலுங்கு  எழுத்துகள் மறைந்து ஹிந்தி எழுத்துக்கள் தோன்றின.  நட்ராஜுக்கு மழைக்கு முன் வேறொரு பெண்ணோடும் மழைக்குப்பின் வேறொரு பெண்ணோடும் பயணிப்பதுபோல் தோன்றியது. ஈர ஆடையை நெகிழ்த்திவிட்டு வேறொரு ஆடையை அணிந்துகொள்ளச் சொன்னான். அவள் இந்த ஈரம் என் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கட்டும் என்று சொல்ல நினைத்தபடி, ‘இருக்கட்டும்’ என்று மட்டும் சொன்னாள். தொடையிடையில் பிசுபிசுப்பை உணர்ந்தவள், சட்டென ஏதோ சரியில்லாததுபோல் இருக்க, குனிந்து ஆடையைப் பார்த்தாள். உதிரப்போக்கு. நீல நிறச் சேலையெங்கிலும் முன்புறம் சிவப்பு படர்ந்திருந்தது. நட்ராஜும் பார்த்துவிட்டான். செல்லும் வழியெங்கிலும் எங்கேனும் நாப்கின் கிடைக்கிறதாவெனப் பார்த்தான். கொஞ்சம் பெரிய கிராமமொன்றில் ஒரு கடையில் கிடைத்தது. வாகனத்தை நிறுத்தி, பின்புறம் ஏறி மாற்றிக்கொள்ளும்படி சொன்னான். மாதவனின் முன்னால் ஒருபோதும் நிர்வாணமாய் நிற்க முடியாது என நினைத்துக்கொண்டு, ‘முடியாது’ என்று மட்டும் சொல்லிவிட்டு இருளில் வயல்வெளியின் நடுவே அகன்ற ஒரு மரத்தின் பின்னால் நின்று மாற்றிக்கொண்டாள். இரவு உணவெடுத்துவிட்டு அயர்ந்து உறங்கினாள். குளிர் அதிகமெடுத்தது. நட்ராஜ் வண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டு தனது இரண்டு போர்வைகளை வைத்து அவளை மூடி, கதவிலிருக்கும் கண்ணாடியைக் குளிர் நுழையாதவாறு உயர்த்திவிட்டான். புகைமூட்டமான அதிகாலையில் வாரணாசிக்குள் வாகனம் நுழைந்தது. பூரணியை எழுப்பினான். அந்த அதிகாலைக் குளிரிலும் கங்கையின் கல்படியின் ஓரத்தில் அவ்வளவு பேர் நீத்தார் சடங்குகள் செய்துகொண்டிருந்தார்கள். நிறைய ஆண் பெண் தலைகள் முங்கி எழுந்து கொண்டிருந்தன. புரோகிதர்களும் சாதுக்களும் பசுக்களும் பிணங்களும் அலைந்து கொண்டிருந்தனர். ‘அரிச்சந்திரன் படித்துறை’ எங்கிருக்கிறதென ஒருவரிடம் விசாரித்தான். விறகுகளின் மேல் மாதவனைக் கிடத்தி நெருப்பிட்டார்கள். சடசடவென உடல் எரிந்தது. நெருப்பு தூய்மையின் அடையாளம்.  அது எல்லாவற்றையும் அழித்து வேறொரு புதிய பொருளை நமக்கு வழங்கிவிடுகிறது என்று ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் எரிப்புச் சடங்கின் பிந்தைய சடங்குகளுக்காக கங்கையில் மூழ்கியெழுந்து  கல்படிக்கு வர பூரணியை அழைத்தார்கள். பூரணி நட்ராஜிடம் தான் விடாய்த் தீட்டிலிருப்பதாய்ச் சொன்னாள். ‘அந்த தெய்வமும் அங்கிருந்துதான் வந்திருக்கக் கூடும். ஒன்றும் தீட்டில்லை’ என்றான்.

   ஒரு நிமிடம் அவளுக்கு அவன் மீது அன்பு பெருகி அணைத்துக்கொள்ளத் தோன்றியது.குறைந்தபட்சம் அவன் கரங்களை இறுகப் பற்றிக்கொள்ளவாவது தோன்றியது.
   https://www.vikatan.com/