Recommended Posts

                                                                                                                       நான் காணும் தொ.ப.

 

            ஒருவரது சான்றாண்மையால் ஈர்க்கப்பட்டோர் அவரைத் தத்தமது பார்வையில் காண முயல்வர். அச்சான்றோரின் அடிப்படைத் தத்துவங்கள் எல்லோருக்கும் பொதுவாக அமையினும், பார்வைகள் சற்றே விலகி வேறுபடலாம். அவ்விலகலும் வேறுபாடும் அச்சான்றாண்மைக்கு மேலும் அணி சேர்ப்பதாகும். நான் காணும் அறிஞர் தொ.பரமசிவன் அறிவுலகில் தமக்கென தடம் பதித்தவர். அவரை அறியாதார்க்கு சில அறிமுகச் சொற்கள். திருநெல்வேலிப் பகுதியான பாளையங்கோட்டையில் பிறந்து, வளர்ந்து, பேராசிரியராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்று சொந்த ஊரிலேயே வாழ்பவர். மானுட வாசிப்பில் துறை போகியவர். சமூகப் பிரச்சனைகளில் தமது கருத்துக்களை வெளியிடுவதில் எவ்விதத் தயக்கமுமின்றி எழுதுகோலை ஆயுதமாய்க் கொண்ட சமூகப் போராளி. எடுத்துக்காட்டாக பல நூற்றாண்டுகள் உறுதியுடன் இருந்து யூதர்கள் இஸ்ரேலைக் கண்டது போல இலங்கைத் தமிழருக்கு ஈழம் அமையும்; அமைய வேண்டும் என விரும்புபவர். சிங்களப் பேரினவாதத்திடம் சமரசம் என்பதே விழலுக்கிறைத்த நீர் என நம்புபவர். அவரது படைப்புகளில் சமயங்களின் அரசியல், வழித்தடங்கள், செவ்வி, விடுபூக்கள், பரண் முதலியவை பரவலான வரவேற்பைப் பெற்றவை. அவரது முனைவர் பட்ட ஆய்வான 'அழகர் கோவில்' மதுரை காமராசர் பலகலைக் கழக வெளியீடாக வந்தது. இன்றளவும் நாத்திகரான தொ.ப.வே ஆத்திகர்க்கும் மதுரை அழகர் கோவிலுக்கான சிறந்த வழிகாட்டி. சர்க்கரை நோயினால் ஒரு காலை இழந்த போதும் சமூகத்தின் மீது கொண்ட நம்பிக்கையால் வாழ்பவர். மரபு இலக்கியமானாலும் பின் நவீனத்துவமானாலும் பண்பாட்டு ஆய்வானாலும் இன்னும்  அவரைத் தேடி வந்து பாடம் கேட்போருக்கும் விவாதம் செய்வோர்க்கும் குறைவில்லை.

 

            மேற்கூறிய அனைத்தும் அவரை அறிந்தோர் அறிந்தவை. அறியாதார் குறைந்த பட்சம் அறிய வேண்டுபவை.  அருகாமையில் வசிப்பதாலும் அவர் பணிசெய்த நிறுவனத்திலேயே பணி செய்ததாலும் (அவர் தமிழ்ச் சான்றோர்; நான் கணித மாணவன்) அன்னாரை அடிக்கடி சந்திக்கும் பேறு பெற்ற நான் என்னைப் பாதித்த தொ.ப.வை இங்கு பதிவு செய்ய விழைகிறேன். கலைஞர் கருணாநிதியின் அரசியலை விமர்சிப்பவர் என்றாலும், கலைஞர் கூறியது போல் தமிழ் வருடப் பிறப்பு தைத்திங்களாக அமைவதே சாலப் பொருத்தம் எனக் கட்டுரையொன்றில் வாதிட்டவர் தொ.ப. அன்னாரைப் பற்றி சித்திரைத் திங்கள் ஆரம்பத்தில் எனக்கு எழுதத் தோன்றியது நகைமுரணே !  இனி நான் காணும் தொ.ப.

 tho-paramasivan.jpg

             வீட்டின் பரணிலோ புறக்கடையிலோ (அட, நம்ம Loftம், Store Roomம் தாங்க!) நம்மில் சிலர் இன்னும் முறம், உரல், அம்மி, உலக்கை போன்றவற்றை பழமையின் சின்னங்களாக, அரிய பொருட்களாகப் போட்டு வைத்திருக்கலாம். எப்போதாவது மகனிடமோ மகளிடமோ காண்பித்து “இவை உன் வேர்கள்” எனச் சொல்லத் தோன்றுகிறதே ! மகள் முறத்தைப் பார்த்து, “இது என்னப்பா?” எனக் கேட்கும்போது, “சங்க காலத்தில் இதைக் கொண்டுதானே நீ புலியை விரட்டுவாய்?” எனக் கேட்கத் தோன்றுகிறதே ! நம்மிடையே இதுபோன்ற வியப்புகளையும் கேள்விகளையும் எழுப்புபவர்தாம் தொ.ப. பழம்பொருட்களை விற்கும் கடைகளில் தேடித் தேடி அக்கால விளக்குகளையும் உழக்குகளையும் அவர் கொணர்வது நம்மிடையே கூட அவ்வேட்கை எழச் செய்கிறதே! பொருட்களின் அருமை தெரியாதோர் அவற்றைக் காற்காசுக்கு விற்றுப் புறந்தள்ளியமை மூப்பினால் உடல் தளர்ந்த பெற்றோரையும் உற்றோரையும் முதியோர் இல்லத்தில் தள்ளியதைப் போன்ற நெருடல். அம்மூத்தோரை வாஞ்சையுடன் நம் வீட்டிற்கு அழைத்து வந்ததைப் போன்ற உவப்பு அப்பழம்பொருட்களை நம் வீட்டில் கொண்டு சேர்த்தமை.

 

            “குரவர் பணி அன்றியும்

             குலப்பிறப்பாட்டி யொடு இரவிடைக்

             கழிதற்கு என் பிழைப்பறியாது”

 

            என மாதவி மூலமாய் அறிவோமே, “குரவர் பணி” நம் தலையாய பண்பாடு என்று. எனவே தொ.ப. நம் தொன்மங்களைச் சுட்டுவதால் தாம் மட்டும் அவற்றில் வாழ்ந்து இன்புறவில்லை. நம்மை அவ்வெளிக்கு அழைத்துச் சென்று நமது தற்கால வாழ்வியலோடு இவற்றை இணைக்கும் பாலமாக அரும்பணியாற்றுகிறார். சங்க இலக்கியச் செல்வங்கள் அனைத்தையும் வெளிக் கொணர்ந்து உலகின் தலைசிறந்த நாகரிகத்திற்குச் சொந்தக்காரன் தமிழன் என உலகிற்கு உணர்த்தினாரே தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் ! பிற்கால மரபுகளைச் சுட்டி நம் வேர்களை வெளிக் கொணர்ந்து நம்மை நமக்கே உணர்த்துபவர் தொ.ப. !

 

            ஐரோப்பிய மெய்காண் முறைமையானது (European Epistomology) நமது மரபு வழி வாழ்க்கை முறை பற்றி நல்ல மதிப்பீடுகளை உருவாக்கவில்லை. மரபு வழித் தொழில்நுட்பம் (Traditional Technology) பற்றிய தெளிவான கண்ணோட்டம் நம்மிடம் இல்லை அல்லது ஆங்கிலேயக் கல்விமுறையில் இழந்து விட்டோம். இந்த முறைமைக்குச் சவாலானது தொ.ப.வின் புழங்கு பொருள் பற்றிய ஆய்வும் எழுத்தும். உரல் பற்றி, உலக்கை பற்றி சுவையாகப் பேச முடியும், எழுத முடியும், பயில முடியும் என நிறுவியவர் தொ.ப. உதாரணமாக சுளகிற்கும் முறத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு நமக்குத் தெரியாது. முறம் அகன்ற வாயுடையது; பச்சைத் தானியத்தைப் (Raw Grains – நெல், புல், சாமை, வரகு போன்றவை) புடைக்க வல்லது (Winnowing). சுளகு குறுகிய வாயுடையது; உடைத்த தானியத்தைப் (Processed Grains அரிசி, உளுந்து, காணம் போன்றவை) புடைப்பது. (அக்கால) நகர்ப்புறத்தாரிடம் இருந்தது சுளகு. சுளகில் உள்ள வண்ணக் கோலங்கள் தொல் பழங்காலத்தைச் சேர்ந்தவை. பொதுவாக கோலங்களின் சிறப்பினை ‘கோலம்’ என அவர் வரைந்த கட்டுரையில் நிரம்பக் காணலாம் (“பரண்” எனும் சமீபத்திய அவரது கட்டுரைத் தொகுப்பில்). கோலத்தின் புள்ளிகளும் வளைவுகளும் தற்கால “Dot matrix and Graphics” உடன் ஒத்து நோக்கற்பாலது என்பது நம் கேள்விஞானம். ஒரு முறை, “மெய்யெழுத்துக்குப் புள்ளி வைப்பதைப் பற்றி யார் முதலில் சொன்னது?” என்ற சுஜாதாவின் கேள்விக்கு தொ.ப.வின் பதில் :

 

            “மெய்யின் இயற்கை

             புள்ளியொடு நிலையல்” என்ற தொல்காப்பியனே!

 

            “பல்லாங்குழி” எனும் கட்டுரையில் அவ்விளையாட்டினை சொத்துடைமைச் சமூகத்தை அங்கீகரிப்பதன் குறியீடாகவும், எங்கெல்ஸின் சொத்துடைமை பற்றிய கருத்தின் மேற்கோளாகவும் தொ.ப. குறிப்பது அவரது ஆய்வின் திறம். இந்தக் கட்டுரை இடதுசாரித் தோழர்களின் பார்வைக்கே தப்பியது தொ.ப.வின் மனக்குறை. மனித சமூக வரலாறு பற்றிய அவரது கண்ணோட்டம் மார்க்சீயத்தைப் படித்து உணர்ந்ததன் விளைவே என்பது அவரது ஆழ்ந்த கருத்து.

 

            "தமிழ்நாட்டில் ஏறத்தாழ நூறு கோயில்களைச் சைவர்களும் வைணவர்களும் சமண, பௌத்தர்களிடமிருந்து அபகரித்திருக்கலாம். கோயில் ஒன்றைக் கள ஆய்வு செய்தால் பத்தே நிமிடத்தில் அது பிடுங்கப்பட்ட கோயிலா இல்லையா என்பதைக் கண்டுபிடித்து விடலாம்” என ‘சமயங்களின் அரசியல்’ மூலம் பதிவு செய்கிறார் தொ.ப. இவ்வரிய பணியை இயன்ற வரையில் கோயில் கள ஆய்வில் தோய்வுடைய தொ.ப. செய்ய வேண்டும் என்பதே நம் விருப்பம். அப்போதுதானே திருவிழாவில் தாத்தாவின் தோளில் அமர்ந்த பேரன் அவரைக் காட்டிலும் வெகுதூரம் பார்ப்பதைப் போல், பின்னாள் சந்ததியினரும் அந்த ஆய்வினை மேலும் கொண்டு செல்ல ஏதுவாகும் !

 

            தொன்மையும் ழமையுமே தொ.ப. என்றில்லை. பின் நவீனத்துவத்திலும் (Post-modernism)  அவர் துறைபோகியவர் என அவரை அறிந்தவர் அறிவர். ‘இராமர் பாலம்’, ‘டங்கல் என்னும் நயவஞ்சகம்’, ‘தமிழ்ப் புத்தாண்டு’ என அவரது கருத்தாக்கங்களை அலச இக்கட்டுரை போதாது.

 

            பக்தி இலக்கியங்களிலும் சமய தத்துவார்த்தங்களிலும் அவருடைய ஆளுமை குறைந்தன்று. சைவத்தின் ‘சுபக்கம்’, ‘பரபக்கம்’ மற்றும் வைணவத்தின் “எனக்கான விடுதலையன்று; நமக்கான விடுதலை” போன்ற அடிப்படைத் தத்துவங்களும், இச்சமயங்களுக்கு எதிரான சமண, பௌத்தத்தின் ஆன்மா மறுப்புக் கொள்கையும் தொ.ப.வின் பள்ளியில் நமக்குப் பால பாடம்.

 

            வேர் வரை சென்று ஆய்வது பண்பாட்டில் மட்டுமல்ல,  சொற்களையும் அவர் ஆய்வு (Etymology) செய்யும் பாங்கில் காணலாம். மேற்கோளாக ஒன்று. ‘வனதுரை’ என அவர் தம் அலுவலக உதவியாளரை அழைத்த போது, வனதுரையா அல்லது வனத்துரையா எனக் கேட்டேன். அதற்கு தொ.ப. “வனம் தமிழ் இல்லை, துரையும் தமிழ் இல்லை. எனவே தமிழுக்குரிய புணர்ச்சி விதி பொருந்தாது. வனதுரைதான்” என்றார். மேலும் விளக்க, “கோசாலை, தர்மசாலை” என எடுத்துரைத்தார். ‘சாலை’ தமிழ்தானே என்றதற்கு இந்த சாலை (ஷாலா) ‘இடம்’ என்பதைக் குறிக்கும் சமக்கிருதச் சொல். வழியைக் குறிக்கும் ‘சாலை’ தமிழ்ச்சொல். ஏரின் முனையில் உள்ள கொழு கிழித்த வழி ‘சால்’ எனப்பட்டது. அக்கோட்டினை ஒத்ததால் அகன்ற வழித்தடம் ‘சாலை’ ஆனது என்றார். கோடு போட்டால் ரோடே போடும் விவரஸ்தன் என்பார்களே! தமிழன் கோடு போட்டுத்தான் ‘ரோடு’ போட்டான் என்பது புரிந்தது. இப்படி ஒன்று கேட்டால் ஒன்பது அறியலாம் என்றால் அவர்தானே சான்றோர் !

 

            எனவே எழுத்தில் மட்டுமல்ல, பேச்சிலும் அறிவொளி பரப்புபவர் தொ.ப. பண்டைய இலக்கியமானாலும் பின் நவீனத்துவமானாலும் சான்றாண்மை பெற்ற அறிஞரோடு பேசிட, பழகிடக் கிடைத்தமை நாம் அனைவரும் பெற்ற பேறு. வாசிப்புக்கும் மறுவாசிப்புக்கும் உள்ளாகும் அறிஞர் தொ.ப.

                                                                                                                                             -  சுப. சோமசுந்தரம்

                                                                                                                                                                                                                                                                       

Edited by சுப.சோமசுந்தரம்

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now