Jump to content

ஒரு மலேசியத்தமிழரின் ஈழப்பயண அனுபவம்


Recommended Posts

29386887_10209200878613573_584066072583487421_n

விமான நிலையத்தில்

ஒவ்வோர் ஆண்டும் தொடங்குவதற்கு முன்னரே அந்த ஆண்டுக்கான வல்லினத்தின் செயல்திட்டங்களைக் குழுவாக அமர்ந்து விவாதிப்பது வழக்கம். பெரும்பாலும் திட்டமிடப்படும் 95 சதவிகிதம் நடவடிக்கைகள் செயலாக்கம் பெற்றுவிடுவதுண்டு. திட்டங்கள் வகுப்பதில் இரண்டு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறோம். முதலாவது, அது தனி ஒருவருக்கு மட்டும் பலனளிக்கும் விதமாக அமைந்துவிடக்கூடாது. அடுத்தது, அத்திட்டம் ஏதோ ஒருவகையில் மலேசியத் தமிழ் இலக்கியத்தை ஒருபடி முன்னகர்த்திச் செல்ல வேண்டும். இலங்கைப் பயணம் அப்படி மனதில் தோன்றியதுதான். ‘வல்லினம் 100’ களஞ்சியத்தை இலங்கையில் அறிமுகம் செய்வதன் வழி மலேசிய – சிங்கப்பூர் நவீன தமிழ் இலக்கியம் மட்டுமல்லாது சமகாலத்தில் இந்நாட்டின் அரசியல், சமூகச் சூழலையும் இன்னொரு நிலப்பரப்புக்குக் கடத்த முடியும் எனத்தோன்றியது.

பொதுவாகவே ஒரு நாட்டின் பொருளியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களோடு அந்நாட்டில் பல்லடுக்கு நிலையில் வாழும் மக்களையும் எவ்வித ஆய்வும் இன்றி பொருத்திப் பார்ப்பது மந்தமான பார்வை. மலேசியத் தமிழர்கள் கலை வெளிப்பாட்டின் சாதக, பாதகங்களை அறிய அவர்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் உள்வாங்க வேண்டியுள்ளது. ‘வல்லினம் 100’ களஞ்சியம் அத்தகையதொரு குறுக்குவெட்டு பார்வையை வழங்கவே திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. எனவே அதை சிங்கப்பூர், தமிழகத்தை அடுத்து இலங்கையில் பரவலான கவனத்திற்கு எடுத்துச் செல்வது உலகத் தமிழர்கள் பார்வைக்கு மலேசியத் தமிழ்ச் சமூகத்தின் ஒரு பக்கத்தைக் காட்டும் பணி என்றே உருவகித்துக்கொண்டோம்.

பயணம் தொடங்கும் முன்னரே இரு குழப்பங்கள் உருவாயின. முதலாவது மலிண்டோ விமானத்தில் ஐவருக்கு மட்டுமே டிக்கெட் இருப்பதாகக் காட்டியது. பகல் நேர விமானம். விலையும் மலிவாக இருந்தது. பகலில் சென்றால் ஓய்வெடுக்க நேரம் கிடைக்கும் என ஐவருக்குப் பதிவு செய்ததும், விமானத்தில் இருக்கைகளின் எண்ணிக்கை குறைந்தபடியால் மேலும் இருவருக்கான டிக்கெட் இருப்பதாகக்கூறி விலையை அதிகரித்துக்காட்டியது. எனவே அதே நேரத்தில் பயணமாகவிருந்த ஏர் ஆசியாவில் டிக்கெட்டை பதிவு செய்தேன். அடுத்ததாக, பயணத்துக்கு இரு வாரம் இருக்கும்போது மலிண்டோ தனது பயண நேரத்தை இரவுக்கு மாற்றி மன்னிப்பும் கேட்டுக்கொண்டது. விமானச் சேவை நிலையங்களின் மன்னிப்புக் கோரல் காதலிகளின் மன்னிப்புக் கோரலை ஒத்தது. அதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். மறுத்தால், அடம்பிடித்தால் சிக்கல் நமக்குத்தான். எனவே மார்ச் 18 காலையில் ஏர் ஆசியா விமானத்தில் ஶ்ரீதர் ரங்கராஜும் சரவண தீர்த்தாவும் இலங்கைக்குப் பயணமாக நாங்கள் (நான், அ.பாண்டியன், விஜயலட்சுமி, தயாஜி, கங்காதுரை) நள்ளிரவில் இலங்கையை அடைந்தோம்.

இது எனக்கு இரண்டாவது இலங்கைப் பயணம். 2011இல் முதல் முறை சுற்றுப்பயண நிறுவனத்தின் ஏற்பாட்டில் சென்றதால் அம்மாவின் கைப்பிடித்துச் செல்லும் குழந்தையைப்போல வேடிக்கை பார்த்தபடியே இழுக்கும் இடமெல்லாம் கேள்விகள் இன்றித் திரிந்தேன். இப்போது அப்படியில்லை. முழுப் பயணத் திட்டத்தையும் நானே வடிவமைத்திருந்தேன். எனவே ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. பள்ளியிலும் தொடக்ககால வல்லினம் நண்பர்களுடனும் இவ்வாறு பயண ஏற்பாடுகளைச் செய்த அனுபவம் உண்டு. பயண உற்சாகத்தைக் கெடுப்பவர்கள் இரு ரகம். ஒன்று குசுகுசுவென குழுவில் யாருடனாவது ஒருவர் ரகசியமாகப் புலம்பிக்கொண்டே இருப்பதைக் காணலாம். அவர் ஒருவரே குழுவின் மொத்த மன உந்துதலையும் நஞ்சாக்குபவராக இருப்பார். அவர் குறைகள் வெளிப்படையானவை அல்ல. எல்லாவற்றிலும் சிறு சலிப்பையும் அதிருப்தியையும் பிசுபிசுவென நத்தைச் சுவடுபோல் இழுத்துச் செல்வார். அடுத்தது புகார்களுடனேயே சுற்றும் நண்பர்கள். அவர்களிடம் எப்போதும் ஒரு குற்றப்பத்திரிகையும் அதற்கு சரியான தீர்வுகளும் இணைந்தே இருக்கும். ஆலோசனை வழங்குவதில் திறம் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் எந்தக் காரியத்திலும் ஈடுபட்டுச் செய்யமாட்டார்கள்.

இது இலக்கியம் சார்ந்த பயணம் என்பதாலும் கட்டுப்பாடான செலவுகளுக்குட்பட்டது என்பதாலும் இதில் உண்டாகும் அசௌகரியங்களுக்கு நான் மட்டுமே பொறுப்பில்லை என்பதில் நண்பர்களுக்கும் தெளிவிருந்ததால் கொஞ்சம் இலகுவாகவே பயணம் தொடங்கியது. 14 பேர் அமரக்கூடிய பெரிய வேனுடன் வந்தார் திலிப். அடுத்த 7 நாட்கள் எங்களுடனே பயணம் செய்யப்போகிறவர். போர்க் காலத்தில் அரசு சார்பற்ற இயக்கமான unicefஇல் பணியாற்றியவர். இப்போது அவ்வியக்கத்தின் தேவை குறைந்துவிட்டதால் வாகன ஓட்டுனராகப் பணியாற்றுகிறார். வண்டி இரவோடு இரவாக கண்டியை நோக்கிச் சென்றது.

19.3.2018 – கண்டி

32

எம்.ஏ.நுஃமானுடன்

பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் எங்களுக்காகக் காத்திருந்தார். 70 வயதைக் கடந்துவிட்டது என அவர்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார். அவ்வதிகாலையில் அவரது சுறுசுறுப்பு ஆச்சரியமாக இருந்தது. கமலஹாசனின் ஒப்பனையாளர் மூலம் வயதைக் கூட்டிக்காட்டுகிறாரோ என ஐயம் எழாமல் இல்லை. எப்போதும்போல மாறாத அன்பு. சரவண தீர்த்தாவும் ஶ்ரீதரும் பேராசிரியர் மகேஸ்வரன் அவர்களின் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். மறுநாள் பேராதனை பல்கலைக்கழகத்தில் நடக்கவிருந்த எங்களது முதல் சந்திப்புக்கூட்டம் சாத்தியப்படாதென புறப்படும் முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர் போராட்டம் தொடர்ந்து நடந்ததால் நுவரெலியா செல்வதெனத் திட்டமிட்டோம். கடந்த முறை பயணத்தில் என்னை அதிகம் கவர்ந்த மாவட்டம். கிட்டத்தட்ட கேமரன் மலை. ஆனால் பிரேசரைப் போன்ற திடுக்கிடவைக்கும் வளைவுகள். வளைவுப் பாதையில் நுழைந்த ஒரு மணி நேரத்தில் காலையில் உண்ட சம்பலில் கலந்திருந்த தேங்காய்பூ ஒத்துக்கொள்ளாமல் குமட்டியது. பாதி மலையில் இறங்கி வாந்தி எடுத்தேன். பின் சீட்டில் அமர்ந்திருந்ததால், வளைவுகளின் தாக்கம் அதிகமாக இருந்தது. பயணத்தில் எங்களுடன் பேராதனைக் கல்லூரி மாணவன் டர்ஷனும் இணைந்துகொண்டார். பயணத்தில் பெரும்பாலும் அமைதியாக வந்தவர் பின்னர் மெதுவாக “நீங்கதான் நவீனா?” என்றார். கேள்விப்பட்டிருப்பதாகக் கூறினார். நல்லபடியாகத்தான் கேள்விப்பட்டுள்ளார் என அவர் முகத்தில் தெரிந்தது. இலக்கியம் வழி நெருக்கமானார்.

01கண்டியில் இருந்து சில மணி நேர பயணத்துக்குப்பின் நுவரெலியாவில் எங்களைப் பேராதனைப் பல்கலைக்கழக  விரிவுரையாளர் சரவணகுமார் வரவேற்றார்.  மலையகத் தமிழர். பேராசிரியர் எம்.ஏ.நுஃமானின் மாணவர். நிறைந்த அக்கறையுடன் எங்களுக்கு விளக்கங்கள் வழங்கினார். மலேசிய இலக்கியம் குறித்தும் நாங்கள் வந்த நோக்கம் குறித்தும் உரையாடினோம். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மலேசியத் தமிழ் இலக்கியத்தை அறிமுகம் செய்துவைக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டோம். மலேசியத் தமிழ் இலக்கியம் என்பது எழுத்தாளர் சங்கம் கொண்டு செல்லும் சத்தற்ற சதைப்பிண்டம் இல்லை என்றும் அதன் உயிர்ப்பான பகுதிகள் மறைக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினேன். அவரும் இலங்கை இலக்கியங்களில் வாசிக்கப்பட வேண்டிய நூல்கள் குறித்துக் கூறினார்.

29594449_1666276790075724_1872431180308015054_nஅவர் வழிகாட்டலில் ஆங்கிலேயர்கள் ஆட்சியின் எச்சங்களை ஆங்காங்கு பார்க்க முடிந்தது. பிரிட்டிஷ் ஆட்சியில் உருவாகி இன்றும் செயல்பட்டு வரும் முதன்மை தபால் நிலையம் அங்கு வரலாற்றுத் தடமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மலைப் பிரதேசங்களில் காணப்படும் வெண் கட்டிடங்களாக இல்லாமல் சிவப்பு செங்கற்களால் தனித்துத் தெரிந்தது. நிறைய வீடுகளை நெருக்கி ஒட்டிவைத்ததைப் போல தொலைவில் இருந்து பார்க்கும்போது அந்தத் தபால்நிலையம் காட்சியளித்தது.  பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்தே விடுமுறைத்தளமாக உள்ள இந்தப் பகுதியில் புராதன வரலாற்றுத் தடங்கள் என ஒன்றும் இல்லை என்றார் சரவணகுமார். ஆனால் தொன்மங்கள் இருந்தன.

03

அசோகவனத்தில்…

இங்கு சீதா கோவில் உள்ள இடம்தான் சீதை இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த அசோகவனமாக நம்பப்படுகிறது. கோயிலுக்கு அருகில் ஓடும் நதிக்கு எதிர்ப்புறம் காடுடன் ஒட்டியிருக்கும் பெரும்பாறையில் உள்ள பள்ளம் அனுமனின் பாதமாக வணங்கப்படுகிறது. குரங்குகள் நிறைந்த வனப்பகுதி. பத்துமலையில் திரிவதைப்போன்ற குரங்குகள்தான் என்றாலும் இவை வேறு ரகம். தலைமுடி மட்டும் நடுவில் வகிடெடுத்து சீவியதுபோல இருந்தது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் அந்த நதி பெரும் வீச்சில் பாய்ந்திருக்கும். பின்னிருக்கும் கானகம் மிரட்டும் முரட்டுத்தோற்றத்தில் இருந்திருக்கும். இரண்டுக்கும் நடுவில் ஒரு பெண் தன்னந்தனியாக நின்றிருந்தால் எப்படி இருக்கும் எனக் கற்பனை செய்து பார்த்தேன். தொன்மங்கள் அவ்வாறு கற்பனையைக் கிளறுபவைதான். அந்தக் கற்பனையைச் சுமந்துகொண்டுதான் ஆதாரங்களை அதற்கேற்ப திரட்டித் திரட்டி உருவாக்குகிறார்கள். அங்கிருந்த சில ஏரிகளைப் பார்த்துவிட்டு மலையக மக்களைப் பார்க்கச் சென்றோம்.

தோட்ட வீடுகள்

மலையக லயங்கள்

மலேசியத் தமிழர்களைப் போலவே 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தேயிலை, ரப்பர், காப்பி முதலிய தோட்டப்பணிகளுக்காகத் தமிழ்நாட்டில் இருந்து அழைத்துவரப்பட்ட மலையகத் தமிழர்களைச் சந்தித்து உரையாட ஆர்வம் இருந்தது. இவர்களுடன் தெலுங்கர்களும் மலையாளிகளும் உடன் வந்திருந்தாலும் பெரும்பாலும் இங்கு தமிழ் பேசுபவர்கள் வாழ்ந்ததால் பொது மொழி தமிழாக உள்ளது. மலேசியா போல தோட்டத்தில் வேலை செய்தால்தான் வீடு வழங்கப்படும் எனும் சட்டமெல்லாம் அங்கு இல்லை. ஆனால் நாங்கள் பார்த்த தோட்ட வீடுகள் மலேசியாவில் 70களில் இருந்த லயன் வீடுகளை நினைவுபடுத்தின. ஒரே காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து மலேசியாவுக்கும் இலங்கைக்கும் குடிபெயர்ந்திருந்தாலும் மலையகத்தமிழர்கள் மலேசியத்தமிழர்கள் அடைந்துள்ள வளர்ச்சியை எட்டாமல் இருப்பது வருத்தத்தைக் கொடுத்தது. அவர்கள் இரண்டாந்தர குடிமக்களாகவே நடத்தப்படும் நிலை, குறைந்த நாள்கூலி, அரசு வேலை வாய்ப்பில் பாகுபாடு, மிக சமீபத்தில் வழங்கப்பட்டுள்ள ஓட்டுரிமை என சரவணகுமார் அவர்களின் வாழ்வியல் சிக்கல்களை கொஞ்சம் விளக்கினார்.  வீடுகளின் அருகில் இருக்கும் நிலங்களில் பயிர் செய்கின்றனர். நிலம் அவர்களுக்குச் சொந்தம் இல்லை. ஆனால் பயிர் செய்யவோ அதை விற்கவோ தடையில்லை. நாங்கள் ஒரு குடும்பத்தினரிடம் பேச்சுக் கொடுத்தோம். அவர்கள் கன்னடத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். தமிழைச் சரளமாகப் பேசினர். வீட்டின் உட்புறம் பார்க்க அனுமதி கொடுத்தனர். தொடக்ககாலத்தில் கட்டித்தரப்பட்ட வீடுகள் இன்னமும் சில எஞ்சியிருந்தன. உபயோகத்தில் இல்லாத அவற்றில், ஆரம்பகால மலேசியத் தோட்ட வீடுகளின் கதவுகள் இரண்டாகவும் நான்காகவும் இருப்பதுபோன்றே பகுக்கப்பட்ட கதவுகள். ஆனால் தமிழக கிராம வீடுகளைப்போல சிறிய செவ்வக பரப்பில் அடக்கப்பட்ட வாழ்வு.

மதிய உணவுக்கு இரு குழுவாகப் பிரிந்து சென்று மீண்டும் சந்தித்தபோது நண்பர்களுக்கு முகம் கொஞ்சம் வெளிரிதான் இருந்தது. அமர்ந்த கடையில் ஈழப்போர் குறித்து வேகமாகப் பேசிக்கொண்டிருக்க அவ்வூர் தமிழர் “இப்பதான் கொஞ்சம் நிம்மதியா வாழறோம். ஏதும் இப்படி பொதுவுல பேசாதீங்க” என எச்சரித்ததாகச் சொன்னார்கள். அதன்பின் பயணம் முடியும்வரை நண்பர்கள் பொது இடங்களில் பெரும்பாலும் உஷாராகவே இருந்தனர். போர் முடிந்துவிட்டாலும் அதன் தாக்கமும் பயமும் அவ்வூர் காற்றில் கலந்துள்ள குளிர்போல வியாபித்தே இருந்தது.

02

சரவணகுமாருடன்

விரிவுரையாளர் சரவணகுமாரிடம் விடைபெறும்போது ‘வல்லினம் 100’இல் சில பிரதிகளை வழங்கினேன். அவர் அதை பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் வைப்பதாகச் சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது. மீண்டும் கண்டியை நோக்கி இறங்கும்போது பாண்டியன் வாந்தியெடுத்தார். அதற்குப்பின் பெரும்பாலும் அவர் சோர்ந்தே பயணத்தில் இருந்தார். நான் அப்படியல்ல. வாந்தி எடுத்துவிட்டால் உற்சாகமாகி விடுவேன். அப்படி ஒரு வரம். இடையில் சுற்றுலா பயணிகளுக்கென விற்கப்படும் கலைப்பொருட்களின் விற்பனைக்கூடம் ஒன்றில் வண்டி நிறுத்தப்பட்டது. அதன் அருகில் தேயிலை தூள் கண்காட்சிக்கூடமும் விற்பனை மையமும் இருந்தன. பொதுவாகவே அதுபோன்ற விற்பனை மையங்கள் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளுக்கானவை. விலை பன்மடங்கு அதிகம். எனவே கவனமாக இருக்கும்படி நண்பர்களிடம் எச்சரித்தேன். கூடத்தின் உள் புகுந்து நாசுக்காக விற்பனைக்கூடத்தின் மேல் ஏறிச் சென்றேன். சுற்றிலும் மூன்று அருவிகள் பாலாக வடிந்துகொண்டிருந்தன. மாலை நெருக்கத்தில் கிரங்கடிக்கும் காட்சி. சரவணதீர்த்தா எனக்கு முன் கிரங்கிக் கிடந்தார். கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு கீழே இறங்கினால் விற்பனைக்கூட ஊழியர் ஶ்ரீதரிடம் அன்பொழுக விடைகொடுத்துக் கொண்டிருந்தார். தன் வாழ்நாளில் அந்த விற்பனை முகவர் அத்தனை அன்பை யாருக்கும் கொடுத்திருக்கமாட்டார். ஒரு புத்தர் சிலையை மலேசிய மதிப்பில் 300 ரிங்கிட் கொடுத்து ஶ்ரீதர் வாங்கியதன் உற்சாகம் கடைக்காரனுக்கு. அன்புக்கும் உண்டோ அடைக்கும்தாழ்.

20.3.2018 – மட்டக்களப்பு

05காலையிலேயே கண்டியில் இருந்து மட்டக்களப்புக்குப் புறப்பட்டோம். பயணம் முழுவதுமே உரையாடல்கள்தான். பெரும்பாலும் அரசியல், சினிமா, இசை எனப் போனது. இசை குறித்த பேச்சு வரும்போதெல்லாம் நான் பெரும்பாலும் வாயை மூடிக்கொண்டேன். நான் வரிகளின் மூலம் பாடலை அணுகிச் செல்பவன். சரவணதீர்த்தா, ஶ்ரீதர், கங்காதுரை கொஞ்சம் விலாவாரியாகவே இசையமைப்பாளர்கள் குறித்தும் சில பாடல்களின் சிறப்புகள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தனர். இடையில் பொலனறுவையில் வண்டி நிறுத்தப்பட்டது. இலங்கையில் சோழர்கள் ஆட்சி நடந்தது எனக் கேள்விப்பட்டிருந்தேனே தவிர அதன் தடயங்கள் குறித்து அவ்விடத்தில் வண்டி நிற்கும்வரை அறிந்திருக்கவில்லை; கேள்விப்பட்டதுமில்லை. உள்ளே சென்று சுற்றிவர இரண்டு மணி நேரம் ஆகும் என்றார் திலிப். அப்போது நேரம் நண்பகலைக் கடந்திருந்தது. மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் ஏதும் பாதகம் வந்துவிடுமோ எனப் பயமாக இருந்தது. இலங்கை செல்வதென முடிவானதிலிருந்து நண்பர் கணேசன் திலிப்குமார் மட்டக்களப்பு நிகழ்ச்சி ஏற்பாட்டில் மும்முரமாகியிருந்தார். எங்களுக்கான போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்ததும் அவர்தான். எனவே இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக அங்கு இருப்பது அவசியம் எனப்பட்டது. ஏதும் எங்களால் தாமதமானால் இன்னொருவரின் உழைப்பைக் கொச்சைப்படுத்துவதாகிவிடும். ஆனால் பொலனறுவை அவ்வளவு சீக்கிரம் எங்களை வெளிவரவிடவில்லை.

04

பொலனறுவையில்

பொதுவாக ஒரு வரலாற்று தடமுள்ள இடத்துக்குச் செல்லும் முன் அது குறித்து ஓரளவு வாசித்துச்செல்வது வழக்கம். பழங்கால கோயில்களின் சிற்பங்களை வரலாற்றுப் பின்புலம் இல்லாமலும் ரசிக்க முடியும். ஆனால் சிதைந்து எஞ்சியிருக்கும் ஒரு நகரம் அப்படியானதல்ல. போதுமான விளக்கமோ வாசிப்போ இல்லாமல் என்னால் பொலனறுவையைக் கிரகிக்க முடியவில்லை. ஆர்வம் தோன்றித் தோன்றி துண்டிக்கப்பட்டப்படி இருந்தது. பின்னர் அறை திரும்பியபின் தேடி வாசித்ததில் அது கி.பி 10 நூற்றாண்டு முதல் கி.பி 13 நூற்றாண்டு வரை இலங்கையின் தலைநகரமாக இருந்த நகரம் எனத் தெரியவந்தது. பண்டுகாபய மன்னனால் (இவர் யார் என தேடி வாசித்தால் இவர் சிங்களவர் என்றும் தமிழர் என்றும் இரு வேறு கருத்துகள் உள்ளதைக் காண முடிகிறது) கி.மு. 377இல் அனுராதபுர இராட்சியம் நிறுவப்பட்டுள்ளது. 1,500 ஆண்டுகள் நடந்த இந்த ஆட்சியில்தான் புத்த மதம் இலங்கையில் அறிமுகமானதாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்த அனுராதபுர இராட்சியம் சோழர்களால் கைப்பற்றப்பட்ட பின்னர் அவர்களால் இலங்கையில் உருவாக்கப்பட்ட தலைநகரமே பொலனறுவை என்று குறிப்புகள் இருந்தன. இப்படி கடாரத்தில் (மலேசியா – கெடாவின் ஒரு பகுதி) நடந்த ஒரு ஆட்சியைத்தான் சோழர்கள் அழித்தார்கள் என முன்பு டாக்டர் ஜெயபாரதி கூறியுள்ளார். அவர் கடார ஆய்வுக்காக தன்னை முழுக்கவே அர்ப்பணித்துக்கொண்டவர். அப்படி அழிக்கப்பட்ட ஆட்சி எதுவென்றுதான் முழுமையான ஆய்வுகள் இல்லை. ஆனால் பொலனறுவையில் உள்ள பழங்கால தட்டையான செவ்வகக் கற்கள் பூஜாங் பள்ளத்தாக்கில் உள்ள சண்டிகளை நினைவுறுத்தின.

நான் என் நினைவில் இருந்துதான் பொலனறுவையை மீட்டுக்கொண்டிருந்தேன். ஒருவேளை அதன் முழு வரலாறு தெரிந்திருந்தாலும் எங்களால் அதிக நேரம் செலவழித்திருக்க முடியாது. நேரக்கட்டுப்பாடு அப்படி. பாண்டியன் எப்படியோ உட்புறங்களில் நுழைந்து சில படங்கள் பிடித்து வந்திருந்தார். சொற்பமான நேரத்தில் அவரால் அதைச் செய்ய முடிந்திருந்தது. எப்படி எனக்கேட்டேன். “உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்புக்காகக், ஜப்பானில் கட்டுப்படுத்தப்பட்ட இடத்தில் குறுகிய நேரமே அனுமதி கிடைக்க, எம்.ஜி.ஆர் மிகுந்த வேட்கையோடு கேமராவைத் தூக்கிக்கொண்டு ஓடியதாக ஒரு கதை உண்டு. அப்படி கேமராவை தூக்கிக்கொண்டு ஓடினேன்” என்றார். அதிக நேரம் செலவளிக்க வேண்டிய இடமென அவர் சேகரித்த காட்சிகளைப் பார்க்கும்போது தோன்றியது. அப்படித் தோன்றினால் அங்கு மீண்டும் செல்வேன் எனப்பொருள்.

சுற்றுலா விடுதி

சுற்றுலா விடுதி

மட்டக்களப்பு சென்றபோது கணேசன் திலிப்குமாரின் ஏற்பாடுகள் பரவசப்படுத்தின. கடல் அருகில் தங்கும் விடுதியை ஏற்பாடு செய்திருந்தார். தென்னை அபிவிருத்தி சபையின் சுற்றுலா விடுதி அது. தென்னந்தோப்புக்கு நடுவில் வீடு. சூழ்ந்த அமைதி. அவரது அம்மாவின் சமையலில் தடபுடலான உணவுடன் உற்சாகமாக உபசரித்தார். வல்லினம் செயல்பாடுகள் குறித்து நன்கு அறிந்து வைத்திருந்தார். வித்தியாசமான கேசம் அவருக்கு. எளிதில் நெருக்கமாகிவிடும் குணம். பேசிக்கொண்டே சாப்பிட்டோம். வெப்ப சீதோஷண நிலையால் குளித்துவிட்டு வந்தவுடன் வியர்த்தது. நான்கு மணி நிகழ்ச்சிக்குச் சற்று தாமதித்தே நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குச் சென்று சேர்ந்தோம். மட்டக்களப்பு நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நிகழ்ச்சி. இருபது பேர் கொண்ட சிறிய கூட்டத்துடன் அறை இருந்தது. உரையாடல் நிகழ்ச்சிகளில் வருகையாளர் எண்ணிக்கை குறித்த கவலைகள் இல்லை. எத்தனை பேர் இருந்தாலும் உரையாடல் என்பது ஒன்றுதான். எங்கள் நோக்கத்தை சரியாகப் புரிந்துகொண்ட ஒருசிலரின் அறிமுகம் கிடைத்தாலே வந்த நோக்கம் நிறைவேறியது போல்தான். அவர்கள் மூலமே அடுத்தடுத்த நகர்ச்சிகள் சாத்தியம். விவாதங்களும் கேள்விகளுமே ஒரு கூட்டத்தை வெவ்வேறு கோணங்களுக்கு இட்டுச்செல்கின்றன. ஆனால் நிகழ்ச்சியில் அதற்கான சாத்தியம்தான் குறைந்திருந்தது.

09

மௌனகுரு

மட்டக்களப்பு பெரியார் வாசகர் வட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் தொடக்கமாக கணேசன் திலிப்குமார் உரையாற்றினார். எச்.ராஜா தமிழகத்தில் பெரியார் சிலையை உடைப்பதைக் கண்டித்து அவரது படத்தை எரித்தபோது நான் திடுக்கிட்டுத்தான் போனேன். மேலும் அதற்கு எதிர்வினையாக இலங்கையில் பெரியாருக்குச் சிலை வைக்கப்போவதாகக் கூறினார். தமிழகத்தில் ஒரு சிலை குறைந்தால் இலங்கையில் அதற்கு மாற்று உருவாகும் என்பதாக அவர் பேச்சு அமைந்தது. அதன் பின்னர்  எழுத்தாளர் கௌரி பாலன், வல்லினம் 100இல் இடம்பெற்ற நேர்காணல் மற்றும் விமர்சனக்கட்டுரைகள் குறித்து விரிவாக உரையாற்றினார். ‘மறுகா’ எனும் சஞ்சிகையை நடத்தும் எழுத்தாளர் மலர்ச்செல்வன் வல்லினம் 100இல் உள்ள சிறுகதைகள் மற்றும் கவிதைகள் குறித்து தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.  கணேசன் திலிப்குமார் கட்டுரைகள் மற்றும் பத்திகள் குறித்து தம் கருத்துகளைக் கூறினார். நிகழ்ச்சிக்கு இடையில் மௌனகுரு வந்து சேர்ந்தார். நாடக ஆய்வாளர், பயிற்சியாளர், இயக்குநர் என பல ஆளுமைகள் கொண்டவர். அவரும் பொதுவான தனது இலக்கிய அபிப்பிராயங்களைப் பகிர்ந்துகொண்டார். தனது நூல்கள் சிலவற்றைக் கொடுத்தார். பெரும்பாலும் நிகழ்ச்சி மையம் இல்லாமல் இருந்தது. அவரவர் பேச தனிப்பட்ட கருத்துகள் இருந்ததால் ஆங்காங்கு தனித்தனியாகப் பேசிக்கொண்டிருந்தனர். மலேசியாவில் இருந்து வந்துள்ளவர்கள் என்ன பெரிதாகச் சொல்லிவிடப்போகிறார்கள் என்ற எண்ணம் காரணமாக இருக்கலாம். கவனம் குவித்து செவிமடுக்கும் சிலருக்காகப் பேசிக்கொண்டிருந்தோம் எனச் சொல்லலாம். ஆனால் அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான கணேசன் திலிப்குமார் பொறுப்பேற்க முடியாது என அறிவோம். மூத்தவர்களைக் கட்டுப்படுத்துவதில் அவருக்குத் தயக்கமும் சிக்கலும் இருந்தது.

06

கணேசன் திலிப்குமாருடன்

நிகழ்ச்சி முடிந்து விடைபெற்று மீண்டும் வீட்டுக்குச் சென்றோம். இரவில் மீண்டும் கணேசன் திலிப்குமார் அம்மாவின் சமையலில் நண்டுக்குழம்பு கிடைத்தது. உண்டு ஓய்வெடுத்தோம். அவரவர் அவரவருக்குப் பிடித்த இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். எனக்கு மனம் சோர்வடைந்திருந்தது. நாங்கள் இலங்கை சென்ற நோக்கம் மிகத் தெளிவானது. மிக உறுதியாக  அதில் சுயநலம் இல்லை. அங்கிருந்த நாட்களில் யாருமே தத்தம் படைப்பிலக்கிய முயற்சிகள் குறித்த தனிப்பட்ட உரையாடல்களை ஏற்படுத்த முயலவில்லை. மொத்த மலேசியத் தமிழ் இலக்கியத்தில் எங்களின் பங்களிப்பு என்னவென்று பேசவே விரும்பினோம். ஆனால் அதற்கான செவிமடுக்கும் கூட்டம் இல்லாமல் போனது வருத்தம். தங்கள் கருத்துகளைச் சொல்ல வேறொரு அரங்கை பயன்படுத்துபவர்கள், தங்களை அறிவுஜீவிகளாகக் காட்ட சதா முனைப்புடன் இருப்பவர்கள் இலங்கையிலும் இருப்பதை அறிய ஒரு சந்தர்ப்பம் என நினைத்துக்கொண்டேன்.

நிகழ்ச்சி முடிந்து இரவில் கணேசன் திலிப்குமாரிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஆளுமை வழிபாடு ஆரோக்கியமான செயல் அல்ல என்பதை பெரியார் சிலை அமைப்பு மற்றும் எச்.ராஜா புகைப்பட எரிப்பை மையமாக வைத்துச் சொன்னேன். இதுபோன்ற செயல்களில் இறங்கும்போது ஏற்படும் மனஎழுச்சி தற்காலிகமானது. அது பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாது என்றேன். அவர் மனதை என்னால் அறிய முடிந்தது. நானும் முன்பு அப்படித்தான் இருந்திருக்கிறேன் எனத்தோன்றியது. செயலூக்கம் மிக்க அவரிடம் மனதில் படுவதை விளக்குவதுதான் சரியெனப்பட்டது. அதுவே நான் அவருக்குத் தெரிவிக்கும் நன்றியாக இருக்கும். நகுதல் பொருட்டன்று நட்டல் அல்லவா.

21.3.2018 – மட்டக்களப்பு முதல் முல்லைத்தீவு வரை

எந்த நாட்டிலும் அங்குள்ள அரசு ஆரம்பப்பள்ளிகளே அந்நிலத்தை எளிதாகப் பிரதிபலிக்கும் அடையாளங்கள். நான் அவ்வாறு செல்லும் ஊர்களில் பள்ளிகளில் நுழைந்து பார்த்து விடுவதுண்டு. கணேசன் திலிப்குமாரிடம் கேட்டுக்கொண்டதன்படி எங்களை அங்குள்ள ஆரம்பத் தமிழ்ப்பள்ளி ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். வாழைச்சேனை இந்துக்கல்லூரி என பெரிய பதாகை இருந்தது.

தமிழகம் போலவே ஒரே வளாகத்தில் ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளிகள் இயங்கிய வளாகம் அது. கணேசன் திலிப்குமார் பயின்ற அப்பள்ளியில் அவருக்குப் போதித்த ஜெய ஜீவன் என்ற ஆசிரியர் இப்போது தலைமை ஆசிரியராக இருந்தார். அவரே எங்களை வாசல் வரை வந்து வரவேற்றார். இடைநிலைப்பள்ளிக்கான சோதனை நடப்பதால் ஆரம்பப்பள்ளி வகுப்புகளை மட்டும் பார்வையிட்டோம்.

12

தலைமை ஆசிரியருடன்

அரசின் முழு மானியத்தில் பள்ளிகள் இயங்குகின்றன. பெற்றோர்- ஆசிரியர் சங்கக் கட்டணத்தைத் தவிர வேறெந்தக் கட்டணமும் பல்கலைக்கழகம் வரை மாணவர்களிடம் வாங்கப்படுவதில்லை. பாடநூல்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன. உடைகளுக்கும் பற்றுச்சீட்டு கொடுக்கிறார்கள். ஒரு வருடத்தில் ஒரு ஜோடி உடையை அதைக்கொண்டு இலவசமாகப் பெற இயலும்.  மலேசியாவில் எல்லா மக்களுக்கும் மலாய் கட்டாய மொழியாக இருப்பதுபோல சிங்களம் இலங்கையில் கட்டாயப் பாடமாக இல்லாதது ஆச்சரியமளித்தது. ஆனால் பணியிடத்தில் உயர் பதவிகளுக்குச் செல்ல சிங்களம் பயில்வது அவசியம் என்றார்கள். தமிழ்ப் பள்ளிகளின் பயிற்றியல் மொழி முழுக்கவே தமிழில் நடக்கிறது.

நாங்கள் ஒவ்வொரு வகுப்பாகச் சென்றோம். அப்போது ஓய்வு வேளை. மாணவர்கள்11வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த உணவுகளைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். எல்லோருடைய உணவும் ஏறக்குறைய ஒன்றுபோலவே இருந்தது. பள்ளியில் மாணவர்களுக்கு உணவுப்பட்டியல் வழங்கப்படும் என்றும் ஒவ்வொரு நாளும் பெற்றோர்கள் அந்தப் பட்டியலின் அடிப்படையில் உணவைத் தயாரித்து வழங்க வேண்டும் எனவும் விளக்கப்பட்டது. வழங்கப்பட்ட பட்டியலில் உள்ள உணவுகளை பெற்றோர்கள் அவரவர் திறனுக்கும் ரசனைக்கும் ஏற்ப வித்தியாசமாகச் சமைக்கலாம். எனவே ஒரு மாணவனிடம் பொரித்த முட்டை இருந்தால் மற்றுமொரு மாணவனிடம் அவித்த முட்டை இருந்தது. ஏற்றத்தாழ்வற்ற மனநிலையை மாணவர்களிடம் விதைக்க இந்த ஏற்பாடு என்றும் இது இலங்கையில் அனைத்துப் பள்ளிகளிலும் அமுலில் உள்ளது என்றும் தலைமை ஆசிரியர் விளக்கினார். எனக்கு ‘டோட்டோ சான் ஜன்னலின் ஓரம் சிறுமி’ நூல் நினைவுக்கு வந்தது. அந்தப் பழைய இரயில் பெட்டியில் பயின்ற ஜப்பானிய மாணவர்கள் கடலில் இருந்து கொஞ்சமும் மலையில் இருந்து கொஞ்சமும் உணவை வீட்டிலிருந்து கொண்டுவந்து உண்ணும் காட்சி விரிந்தது. அந்த நூலில் உள்ளதுபோலவே இம்மாணவர்களும் உணவு கொண்டுவராத மாணவர்களுடன்  உணவுகளைப் பகிர்த்து கொள்கின்றனர்.

பள்ளிகளில் தொடக்கநிலை மாணவர்கள் ஆங்கிலத்தைத் பேசுவதற்கே அதிகம் முக்கியத்துவம் தருகிறார்கள். காலம் செல்லச் செல்லவே எழுத்து வாசிப்பு என கவனம் தரப்படுகிறது. அறிவியல், கணிதமெல்லாம் தமிழில்தான் போதிக்கப்படுகிறது. சில வகுப்புகளில் சமயப் பாடம் நடந்துகொண்டிருந்தது. இந்து மத போதனை எனச் சொன்னாலும் சைவமே பிரதான பாடமாக இருந்தது. வகுப்பில் கிருஸ்தவ மாணவர்களும் இருப்பதால் எல்லா வகுப்புகளிலும் இரு மத தெய்வ உருவங்களும் இணைத்து வைக்கப்பட்டு ஒரே மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. கிருத்துவ மாணவர்களுக்கு வேறு வகுப்பில் கிருத்துவ சமய கல்வி போதிக்கப்படுகிறது என்றும் முஸ்லிம் மாணவர்களுக்கென தனியாகத் தமிழ்ப்பள்ளிகள் உள்ளன என்றும் தலைமை ஆசிரியர் விளக்கினார். ஒரு பள்ளியில் பயிலப் போகும் மாணவர்கள் அவ்வட்டாரத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது அவசியம் என்றும் அப்பள்ளியின் முன்னாள் மாணவர்களின் குழந்தைகள் என்றால் பள்ளியில் உடனடியாகச் சேர்த்துக்கொள்ளப்படுவர் என்றும் தலைமை ஆசிரியர் விளக்கம் கொடுத்தார். நான் எழுதிய ‘வகுப்பறையின் கடைசி நாற்காலி’ நூலை அவரிடம் கொடுத்தேன். மேலும் வல்லினம் பிரசுரத்தில் பதிப்பிக்கப்பட்ட சில நூல்களை நூலகத்தில் வைக்கும்படி வழங்கிவிட்டு திருக்கோணேஸ்வரம் கோயிலை நோக்கிப் புறப்பட்டோம்.

இராவணன் வெட்டு

இராவணன் வெட்டு

திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரம் கோயில் ஞானசம்பந்தராலும் அருணகிரிநாதராலும் பாடல்பெற்ற தளம். ஏற்கனவே இலங்கைச் சுற்றுலாவுக்கு வந்தபோது எங்கள் சுற்றுலா வழிகாட்டி அங்குள்ள இராவணன் வெட்டு பாறையையே அதிசயமாகக் காட்டியது நினைவுக்கு வந்தது. இராவணன் வாளால் வெட்டிப்பிழந்த பாறை என்ற நம்பிக்கையால் அப்பெயர் இடப்பட்டிருந்தது. கோயிலின் வரலாற்றை மறந்துவிட்டு அனைவரும் அந்தப் பாறைப்பிளவையே வாய்பிளக்க பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போதெல்லாம் திறன் கைபேசி இல்லாததால் பேராசிரியர் நுஃமானை அவ்வப்போது அழைத்து தெளிவுபெற்று நான்தான் அக்கோயிலின் வரலாற்றுச் சிறப்புகளை விளக்குபவனாக இருந்தேன். இப்பயணத்தில் அனைவருமே எளிதாக அந்தத் தகவல்களை அறிந்துகொண்டனர். ஆனாலும் அப்போதுபோலவே இப்போதும் இராவணன் வெட்டில் சில்லரை காசை பிளவுகளில் படாமல் வீசுவது சுவாரசியமாக இருந்தது. தரை கொதித்தது. கடும் உஷ்ணம். இளநீர் வாங்கிக் குடித்தோம். ஓய்வெடுத்தோம். தனியாக வந்த சீனப் பெண்ணிடம் கங்காதுரையும் சரவணதீர்த்தாவும் கடலைபோட அனுமதித்தோம். பின்னர் யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணம் தொடர்ந்தது.

பொதுச்சந்தையாழ்ப்பாணத்தை அடையும் முன்பு இறுதிக்கட்ட ஈழப் போர் நடந்த முல்லைத்தீவுக்குச் சென்றோம். போரின் அடையாளமாக உள்ள வட்டுவாகல் பாலத்தில் நிற்பது சிறுநடுக்கத்தை ஏற்படுத்தியபடி இருந்தது. பல லட்சம் உயிர்ப்பலியைப் பார்த்த பாலம். அருகிலேயே இராணுவ முகாம். ஒருவகையில் இது முல்லைத்தீவின் வாயில் எனலாம்.  முல்லைத்தீவு புலிகளின் கட்டுப்பாட்டுக்குச் சென்ற பின்னர் குண்டு வீச்சிலும் சுனாமி பேரலையாலும் பாதிக்கப்பட்ட பாலம் இன்னமும் ஒரு முதியவனைப்போல அலட்டல் இல்லாமல் நீண்டு படுத்திருந்தது. பாலத்தில் சென்றால் சுடப்படுவோம் எனப் பயந்து நீரில் இறங்கி சென்றவர்களும் சுடப்பட்டு சடலங்களாக மிதந்தனர் என திலிப் சொன்னபோது அகோரக்காட்சி மேலும் மேலும் விரிந்தது. அங்கிருந்து புறப்பட்டு முள்ளிவாய்க்காலுக்குள் நுழைந்தோம். சிங்களப்படையின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கற்கள் இருந்த இடத்தில் வண்டி நின்றது. முன்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட கற்கள் இருந்ததாகவும் இப்போது அவை அகற்றப்பட்டு விட்டதாகவும் திலிப் சொன்னார். இப்படியே சிதிலமடைந்த சந்தை, வீடுகள், சாலைகள் என பார்த்தபடியே பயணித்தோம்.

பிரதான சாலை ஓரங்கள் மட்டுமே ஒப்பேற்றப்பட்டிருக்கும் முல்லைத்தீவின் உட்பகுதிக்குச்பொதுச்சந்தை 02 சென்று பார்ப்பதென முடிவெடுத்தபோது வேனில் மௌனம் சூழ்ந்துகொண்டது. உட்புறமாகப் பயணத்தைத் தொடர போரின் உக்கிர வடுக்களைக் காண முடிந்தது. பொதுமக்கள் சிலரிடம் பேச முயன்றோம். இன்னும் அவர்களிடம் அச்சம் தொற்றியிருந்தது. மனம் திறந்து பேச மறுத்தனர். ஒரு மாது, குண்டு போடும்போது வீட்டில் அமைக்கப்பட்டிருந்த குழிகளில்தான் பதுங்கிக்கொள்வோம் என்றும் குழிகளின் மேல் பனை மட்டையைப் போட்டு அதன் மேல் இன்னும் சில தடுப்புகளைப் போட்டு மூடிக்கொள்வோம் என்றும் சொன்னார். அப்படியானால் தப்பிவிடுவீர்களா என அப்பாவியாகக் கேட்டோம். “அந்தக் குழியிலதான் என் அம்மா தலை துண்டாகி விழுந்தது” என்றார்.

அரசு சார்பற்ற இயக்கங்களின் உதவிகள் கிடைத்தாலும் இயல்பான வாழ்வுக்கு அவர்கள் இன்னமும் திரும்பவில்லை எனத்தெரிந்தது. மீண்டும் முல்லைத்தீவின் பிரதான சாலைக்கு வந்தபோது மக்கள் நடமாட்டம் இருந்தாலும் ஒருவித அமைதி படர்ந்திருந்தது. ஒரு கடையில் அமர்ந்து கொத்துப்பரோட்டாவுக்கு ஆர்டர் செய்தோம். ஒரு தாள லயத்துடன் பரோட்டாவை கொத்தும் சத்தம் எங்களை இயல்பு நிலைக்கு மீட்க முனைந்தது.

22.3.2018 – யாழ்ப்பாணம்

யோ.கர்ணனுடன்

யோ.கர்ணனுடன்

யோ.கர்ணனும் தேவா அண்ணனும்தான் முதல் நாள் இரவில் எங்களை விடுதிக்கு அழைத்துச் சென்றனர். பீச் ரோட்டில் (கொய்யாத் தோட்டம்) அமைந்திருந்த விடுதி அது. தேவா அண்ணன் எனக்கு மலேசியாவில் நடந்த பகுத்தறிவாளர் மாநாட்டின் வழி அறிமுகமானவர். அப்போது அவர் சுவிட்சர்லாந்தில் இருந்தார். போருக்குப் பின் இலங்கைக்குத் திரும்பியிருந்தார்.  ‘குழந்தைப் போராளி’, ‘அனோனிமா’, ‘அம்பரய’  போன்ற மிக முக்கியமான மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியவர். யோ.கர்ணனை ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ சிறுகதைத் தொகுப்பின் மூலமே அறிவேன். அவரை அப்போதே மலேசியாவுக்கு அழைத்துவரும் முயற்சி நிறைவேறாமல் போனது. ‘கொலம்பஸின் வரைபடங்கள்’, ‘சேகுவேரா இருந்த வீடு’ என மேலும் இரு தொகுப்புகளை வெளியிட்டுள்ளது அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது. இலங்கையில் அடுத்த தலைமுறை படைப்பாளிகளில் முக்கியமானவர்களில் ஒருவர் யோ.கர்ணன்.

29

கடல் கோட்டை

மறுநாள் காலையிலேயே எங்களை காரை நகர் கடல் கோட்டைக்கு அழைத்துச் செல்ல இருவரோடு நண்பர் சத்தியனும் வந்திருந்தார். அம்மாச்சி உணவகத்தில் காலை பசியாறல் என முடிவானது. மலேசியாவில் நெடுஞ்சாலை உணவகங்கள் போன்ற அமைப்பில் அவ்வுணவகம் இருந்தது. இது விவசாயத்துறை அமைச்சினால் நடத்தப்படும் உணவகம். அவ்வமைச்சில் மாதர் சங்கங்கள் தங்களை இணைத்துக்கொண்டு தங்கள் உறுப்பினர்களில் சிரமப்படும் பெண்களுக்கு உணவகம் நடத்த வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. ஒருநாளைக்கு 400 ரூபாய் மட்டுமே வாடகை. மலேசிய பணத்துக்கு 10 ரிங்கிட். அரசே அடுப்பு உள்ளிட்ட சமையல் தளவாடங்களை வழங்கி விடுகிறது. சமைப்பதற்கான பொருள்களை அவரவர் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். இலங்கையின் பாரம்பரிய உணவுகளுக்கே இங்கு இடம். வண்ணக் கலவைகள் சுவை கூட்டிகள் இல்லாத உணவுகளாகத் தயாரித்து விற்பனை செய்ய மட்டுமே அனுமதி. சிங்கள மொழியில் ஹெல போஜன (இலங்கை உணவுகள்) என்று தொடங்கப்பட்ட திட்டம் அம்மாச்சி உணவகம் என தமிழ்ப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் அமோகமான ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது. நண்பர்கள் மிகவும் விரும்பியே கடைக்குக் கடை தாவிச் சென்றனர். சுவையான சைவ உணவு கிடைத்ததில் சரவண தீர்த்தாவும் ஶ்ரீதரும் மிகுந்த உற்சாகமாகக் காணப்பட்டனர்.

அம்மாச்சி உணவகம்

அம்மாச்சி உணவகம்

சரவண தீர்த்தாவுக்கு இலங்கையில் எங்கும் காணும் சுத்தம் பிடித்திருந்தது. அதை புகழ்ந்துகொண்டே இருந்தார். அவர் கடந்த ஆண்டு எங்களுடன் தமிழகம் வந்திருந்ததால் சுத்தத்துக்கு தமிழக மக்கள் காட்டும் அலட்சியத்தை அறிந்தே வைத்திருந்தார். குப்பையை குப்பைத் தொட்டியில் போடுவதற்கு ஜனத்தொகையைக் காரணம் காட்டுவதற்கும் பெரும் போருக்கும் அழிவுக்கும் பின்பும் தங்களின் சுற்றுவட்டாரங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ளும் பண்புக்கும் அவரால் வித்தியாசம் காண முடிந்தது. எங்கும் தைரியமாக அமர்ந்து சாப்பிடலாம் எனும் அளவும் தூய்மை பேணப்பட்டது. கழிவறைகள் சுத்தமாக இருந்தன. கை கழுவும் இடங்களில் சிறு கூடைகள் வைக்கப்பட்டு கையில் ஒட்டியுள்ள மிச்சங்கள் அதில் தேங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதனால் கைக்கழுவும் தொட்டி எப்போதும் சுத்தமாக இருந்தது.

காரை நகர் கடல் கோட்டைக்குச் செல்லும் வழியெங்கும் பனைமரங்கள் புதிய நிலத்தில் பயணிக்கும் உணர்வை ஏற்படுத்தியபடியே இருந்தன. காரை நகர் கடல் கோட்டையை அடைந்தபின் அனைவருக்கும் உற்சாகம் கூடியது. கடலில் படகு வழியாகவே பயணித்து கோட்டைக்குச் செல்ல வேண்டும் என்பதை குதூகலமான அனுபவமாக உணர்ந்தோம். இயந்திரப்படகும் சவாலான வளைவுகளை உருவாக்கி எங்களை கோட்டையில் இறக்கியது.

30

தேவா

யாழ்ப்பாணக் கடல் வழிப்பாதையிலே காரைதீவு  அமைந்திருப்பதனால் அது முன்பிருந்தே முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகின்றன. 17ஆம் நூற்றாண்டின் மத்தியில் போர்த்துகீசியரால் சுண்ணாம்பைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்ட கோட்டைதான் கடல் கோட்டை. ஏறக்குறைய மலேசியாவின் A famosa கோட்டையைப் போல என நினைத்துக்கொண்டேன். போர்த்துக்கீசரிடம் இருந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய டச்சுக்காரர்கள் 1680இல் அப்பகுதியிலிருந்த ஐயனார் கோயிலை இடித்து, அதன் கற்களைக் கொண்டு கற்கோட்டையைக் கட்டியிருக்கலாம் என கோட்டையின் நுழைவாயிலில் பொறுப்பாளர் விளக்கினார். இந்தக் கோட்டையில் இருந்து, யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்க்க முடியும் என்றார் பொறுப்பாளர். கற்களைத் தடவிப் பார்த்தேன். பல இடங்களில் கடலில் இருந்து எடுத்த பவளப்பாறைகளை இணைத்திருந்தனர். நவீன விடுமுறை விடுதியாக மாற்றப்பட்டுள்ள இந்தக் கோட்டையில் உள்ள சிறைகள் நன்கு பராமரிக்கப்படுகின்றன. சிறை அனுபவம் வேண்டுமானாலும் 2,000 ரூபாய் செலுத்திவிட்டு தங்கலாம் என்றார்கள். வெளிப்புறத்தைவிட சிறை குளுமையாகவே இருந்தது.

ரோகண விஜயவீர

ரோகண விஜயவீர

டச்சுக்காரர்களிடமிருந்து  இலங்கையைக் கைப்பற்றிய பிரிட்டி‌‌ஷார், இதனை பிற்காலத்தில் குஷ்டநோய் மருத்துவமனையாகவும் பயன்படுத்தினர் என விளக்கம் கொடுத்தார். இந்த கோட்டையில் 1971ஆம் ஆண்டு ஜேவிபி கிளர்ச்சியின்போது கைதான ஜனதா விமுக்தி பேராமுன என்ற அந்தக் கட்சியைத் தோற்றுவித்த ரோகண விஜயவீரவும் அவர் சகாக்களும்  பாதுகாப்புக் கருதி சிலகாலம் சிறை வைக்கப்பட்டனர் என்று பொறுப்பாளர் தெரிவித்தார். ரோகண விஜயவீர கற்களால் கீறி வரைந்த எழுத்துகளை அங்கே காண முடிந்தது. தேவா அண்ணனும் கர்ணனும் ரோகண விஜயவீர குறித்து விளக்கினர்.

சிங்களவரான இவர் ஒரு மார்க்சியப் புரட்சியாளர் என்றும் அவர் அமைத்த ஜே.வி.பி என அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணி தீவிரவாத இயக்கமாகக் கருதப்பட்டதாகவும் நாட்டில் புரட்சி செய்ததால் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதும் சுருக்கமான வரலாறு. மீண்டும் படகில் திரும்பி அங்கிருந்த விடுதியில் வயிறார உணவு உண்டோம். இலங்கை மக்கள் பராமரிப்பார்கள் என்றால் அங்கேயே தங்கி விடலாம்போல் தோன்றியது.

யாழ் நூலகம்

யாழ் நூலகம்

திரும்பும்போது யாழ் நூலகத்துக்குச் சென்றோம். 1981இல் இந்த நூலகம் எரிக்கப்பட்டு புத்துருவாக்கம் பெற்றிருந்தது. இலங்கை இனக்கலவரத்தின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் இந்தச் சம்பவத்தை ஒட்டி ‘புத்தரின் படுகொலை’ என பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் எழுதிய கவிதை பிரபலமானது. முன்பு நான் பயணம் வந்தபோதே இந்நூலகத்தை முழுமையாகச் சுற்றிப் பார்த்திருந்ததால் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டேன். வழக்கமான முதுகெலும்பு வலி. இப்போதெல்லாம் வலியின் காத்திரம் மூளைக்கு வருவதில்லை. மூச்சுவிட சிரமமாக இருந்தால் நானாக முதுகுத்தண்டில் வலி இருப்பதை கூர்ந்து அவதானித்துக்கொள்வேன். நண்பர்கள் நூலகத்தில் இருந்த பழமையான ஓலைச்சுவடிகளைப் பார்க்கச் சென்றனர். விஜயலட்சுமி நூலகத் தலைமை நிர்வாகியிடம் பேச வேண்டும் என்றதால் அவரை நண்பர் சத்தியனின் பொறுப்பில் அங்கேயே விட்டுவிட்டு நாங்கள் வீடு சென்று நிகழ்ச்சிக்குக் கிளம்பினோம். சத்தியன் அந்ந நூலகத்தில் நன்கு அறிமுகமானவர். விஜயலட்சுமியும் நூலகர் என்பதால் அவருக்கு அச்சந்திப்பு முக்கியத்துவமானதாக இருந்தது.

குளித்து புதுப்பித்துக்கொண்டு மீண்டும் நிகழ்ச்சிக்குச் செல்லும் வழியில் விஜயலட்சுமியும் சத்தியனும் ஏறிக்கொண்டனர். ‘வல்லினம் 100’ களஞ்சியம் யாழ் நூலகத்துக்குச் சில பிரதிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி நல்லூர் பவனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவகத்தை ஒட்டிய சிறிய கலாபூர்வமான அறை. அருகில்தான் நல்லூர் கந்தசுவாமி கோயில் இருந்தது.

18நிகழ்ச்சி திட்டமிட்டபடி சரியாக நான்கு மணிக்குத் தொடங்கியது. கிருஷ்ணன் அறிமுக உரையாற்றினார். வல்லினம் செயல்பாடுகள் குறித்து விரிவாகவே விளக்கம் கொடுத்தார். தொடர்ந்து நான் மலேசியத் தமிழ் நவீன இலக்கியத்தின் தோற்றம் அதன் வளர்ச்சி இப்போதைய அதன் தேவை எனும் அடிப்படையில் பேசினேன். வல்லினம் 100 களஞ்சியத்தில் பிரசுரமான கட்டுரைகள் குறித்து தேவா அண்ணனும் கவிதைகள் குறித்து கவிஞர் கருணாகரனும் சிறுகதைகள் குறித்து ரமேஷ் உரையாற்றினர். மூன்றும் வல்லினம் 100ஐ நன்கு உள்வாங்கப்பட்ட உரைகள். தொடர்ந்து அ.பாண்டியன் மலாய் இலக்கியம், கங்காதுரை சீன இலக்கியம், விஜயலட்சுமி கெ.எஸ்.மணியத்தை அடிப்படையாக வைத்து ஆங்கிலத்தில் எழுதும் தமிழ் எழுத்தாளர்கள் என சுருக்கமாக உரையாற்றினர். தொடர்ந்து கேள்வி பதில் அங்கம் நடந்தது. பல்வேறு கேள்விகளுக்கு நண்பர்கள் பதில் கூறினர். ஆச்சரியமாக மட்டக்களப்பில் கேட்கப்பட்ட கேள்விகளை ஒத்தே யாழ்ப்பாணத்திலும் எனக்கான கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

கேள்விகளின் சாரத்தை இவ்வாறு தொகுத்துக்கொள்ளலாம். வல்லினம் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் செயல்பாடுகளுடன் சார்புநிலை கொண்டதா? ஜெயமோகன் எனும் ஆளுமை வழிபாட்டின் வழி மலேசிய இலக்கியம் வளருமா? வல்லினம் குழு ஜெயமோகனுடன் அதிகம் இணக்கம் காட்டுவது ஏன்? ஜெயமோகன் கறாரான விமர்சனம் வைப்பதுபோல ஆரோக்கியமற்ற முறையில் நான் அவரைப் பின் பற்றி விமர்சனம் வைக்கிறேனா?

17

அ.பாண்டியன்

நான் கொஞ்சம் கடுமையான தொணியிலேயே இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்தேன். மட்டக்களப்பிலும் கடுமையைச் சொற்களில் ஏற்றியே பேசினேன். முதலாவது வல்லினம் பல எழுத்தாளர்களை மலேசியாவுக்கு அழைத்து வந்து இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளது. நான் தனிப்பட்ட முறையில் பல எழுத்தாளர்களுடன் நெருக்கமான நட்பு கொண்டுள்ளேன். ஆனால் இந்தக் கேள்வி ஜெயமோகனை மட்டுமே வட்டமிடுவது கேட்பவர்களின் பலவீனத்தையே காட்டியது. மேலும் என் தனிப்பட்ட நட்பும் பகையும் வல்லினத்தின் நிலைபாடுகளில் சேராது.

16

கங்காதுரை

முதலில் வல்லினம் விஷ்ணுபுரம் வட்டத்துடன் இணங்கி செயல்பட்டிருக்கிறதா என்றால் ஆம். சீ.முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்தபோது இணங்கி, ஒத்துழைத்து ஆர்வத்துடனே செயல்பட்டோம். அதுமட்டுமல்ல 2015ல் கொடுக்கப்பட்ட வல்லினம் விருது விஷ்ணுபுரம் விருது செயல்பாட்டு முறையை உள்வாங்கிய ஒரு  முயற்சிதான். விருது பெறுபவரின் எழுத்துகளை நூலாக்குவதையெல்லாம் நான் அங்கிருந்துதான் கிரகித்தேன். மேலும் மூத்த படைப்பாளிகளைக் கவனப்படுத்துவது இளம் படைப்பாளிகளை அடையாளப்படுத்துவது எனத் தொடங்கி மொழி பெயர்ப்பாளர் எம்.ஏ.சுசிலா போன்றவர்களின் பணிகளை அங்கீகரித்து ஊக்குவிப்பது வரை விஷ்ணுபுரம் இலக்கியக் குழுவின் செயலூக்கத்தில் எனக்கு எந்தப் புகாரும் இல்லை.

20

கருணாகரன்

இன்னும் சொல்லப்போனால் மலேசியாவின் தீவிர இலக்கியப்போக்கை முன்னெடுக்கும் வெளிநாட்டவர் அனைவருடனும் ஏதாவது ஒருவகையில் வல்லினம் இணங்கியே செயல்பட்டுள்ளது. பலரை மலேசியாவுக்கு அழைத்து வந்து நிகழ்ச்சிகள் நடத்தியிருந்தாலும் வெகுசிலரே மலேசிய இலக்கியத்தை வெளியே எடுத்துச்செல்ல முனைப்பு காட்டுகின்றனர். எனக்குத் தெரிந்து எழுத்தாளர் இமையம் மட்டுமே தொடர்ந்து மலேசியப் படைப்புகள் குறித்து கட்டுரைகள் எழுதி வருகிறார். ஷோபா சக்தி ‘குவர்னிகா’ தொகுப்பில் மலேசிய நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்தவேண்டும் என முனைப்புக்காட்டியபோது அதில் தொகுப்பாசிரியர்களில் ஒருவராகப் பங்காற்றினேன். அந்த நூலையும் மலேசியாவில் வெளியீடு செய்துக்கொடுத்தோம். தமிழவன் தனது சிற்றேடு இதழ்களில் தொடர்ந்து மலேசிய இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தபோது மலேசியாவில் சந்தாதாரர்களை உருவாக்கி இதழ்களை விற்பனை செய்துக்கொடுத்தோம். இதன் உச்சமாக சீ.முத்துசாமிக்குக் கிடைத்த விஷ்ணுபுரம் விருதும் அதை ஒட்டிய கலந்துரையாடல்களும் மலேசிய இலக்கியத்தின் மேல் பெரும் வெளிச்சத்தைப் பாய்ச்ச உதவியது எனலாம். எனவே  பத்து ஆண்டுகளாக மலேசியாவின் தரமான படைப்பிலக்கிய முயற்சிகளை மலேசியாவுக்கு வெளியில் கொண்டுச்செல்லும் எங்கள் முயற்சியை  சுருக்கி “நீங்க அவங்க குரூப்பா?” எனக்கேட்பது சங்கடமாக இருந்தது. அது அத்தனைக்கால உழைப்பை முற்றிலும் புரிந்துகொள்ளாமல் எளிமைப்படுத்தும் பாணி.

21

தேவா

அடுத்தது, ஜெயமோகனின் கறாரான இலக்கிய விமர்சனப்போக்கில் எனக்கு முழு உடன்பாடே. ஆனால் இந்த உடன்பாட்டை வல்லினத்தின் உடன்பாடாகத் திரிக்க முடியாது. அந்தப் பாணியை நான் பின்பற்றுகிறேனா என்றால் நிச்சயம் அதற்கான தேவை மலேசிய – சிங்கப்பூரில் உண்டு. அவ்வாறான விமர்சனப்போக்கு இல்லாமல்தான் கல்விக்கூட திறனாய்வுகள் மூலம் எழுதப்படும் எல்லாமே இவ்விரு நாட்டுச் சூழல்களிலும் இலக்கியங்களாகி விடுகின்றன. ஆனால் எனது இலக்கியப் பார்வையும் ரசனையும் ஜெயமோகனை அடியொட்டியதா என்றால் இல்லை. நான் உரையாடியவரை/ வாசித்தவரை ஜெயமோகனின் ரசனையில் சாதத் ஹஸன் மண்டோ, காஃப்கா, காம்யூ, கூகி வா தியாங்கோ போன்றவர்களுக்கு இலக்கியத்தில் உச்ச இடங்கள் இல்லை. ஆனால் எனக்கு அப்படியல்ல. நான் எழுதும் பல கட்டுரைகளில் இவர்கள் படைப்புகள் குறித்துப் பேச முனைகிறேன். என்னை பாதித்தப் படைப்பாளிகள் இவர்கள். என்னளவில் நான் வாசித்து என்னை ஈர்க்கும் படைப்புகள் குறித்தே எழுதவும் பேசவும் செய்கிறேன். நாளை எனது இந்த அபிப்பிராயங்கள் மாறலாம். வாசிப்பின் வளர்ச்சி என்பது அதுதானே. ஆனால் மலேசிய- சிங்கை சூழலில் நிராகரித்துப் பேசும் படைப்புகள் குறித்த மாற்று அபிப்பிராயம் இருக்காது என்றே நம்புகிறேன். கலைப்படைப்பின் தொழில்நுட்பக் குறைபாடு, கருத்தியல் முரண்பாடு, தத்துவப் பிசகு போன்றவற்றுக்கும் வெற்று தொழில்நுட்பத்தின் எழுத்துக்குவியலுக்கும் வித்தியாசம் உண்டல்லவா.

19

ரமேஷ்

நான் கடுமையான தொணியில் பதில் சொல்ல இக்கேள்விகள் உருவான மனநிலையே காரணமாக இருந்தது. இந்த மனநிலை குறிப்பிட்ட தேசம் என இல்லாது தமிழ் நிலங்களெங்கும் வியாபித்துள்ளது. முதலில் ஜெயமோகனின் மேல் உள்ள மிரட்சி இவர்களை எளிய பரிகாசத்தை கைக்கொள்ள வைக்கிறது. நான் இவ்வாறான நபர்களை அதிகம் சந்தித்துள்ளேன். ஓர் ஆளுமையைப் பற்றிக் கூறியவுடன் எதிர்த் தரப்பில் இருந்து காலம் காலமாக அவர்மேல் வைக்கப்பட்டு வரும் ஒரு விமர்சனத்தைத் தூக்கி வீசுவார்கள். பாரதியைப் பற்றிப் பேசினால் அவர் கஞ்சா பித்தனென்றும் ஷோபா சக்தியைப் பற்றி பேசினால் அவர் தமிழினத் துரோகி என்றும் சொல்லப்படுவதை சாதாரணமாக இன்றும் செவிமடுக்கலாம். அதைத்தாண்டி ஒரு மொழியில் அவர்களது சாதனைகளை அறிந்திருக்கவே மாட்டார்கள். அது குறித்து ஒரு தெளிவும் இருக்காது. ஆனால் இந்த வசைகளால் அவர்களும் இலக்கியப் பரப்பில் ஜீவிப்பதாக ஒரு பாவனையை உருவாக்குவார்கள். அதன் வழி முகத்தில் பரிகாசச் சிரிப்பை வைத்துக் கொள்வார்கள். இன்னும் சிலர் தனிப்பட்ட தங்களது அனுபவத்தைப் பொது அனுபவமாக மாற்ற முனைவார்கள்.

காழ்ப்புகளுடன் மை ஸ்கில்ஸ் அறவாரியம் குறித்தும் வழக்கறிஞர் பசுபதி குறித்தும் அவதூறுகள் எழுந்தபோது அவர் சமூகத்துக்கு ஆற்றிய சேவைகள் குறித்து நான் விரிவான கட்டுரை ஒன்றை எழுதினேன். அறம் வீழும்போது அதன் அருகில் நிற்பது எழுத்தாளனின் கடமை. அப்போது ஒன்றைக் கவனித்தேன். அவருடன் தனிப்பட்ட பிணக்குகளைக்கொண்ட சிலர் அவர்களுக்கும் பசுபதிக்குமான தனிப்பட்ட அனுபவங்களைக் கண்ணில் ரத்தம் கொப்பளிக்கக் கூறினர். எழுத்தாளர் சங்கத்தலைவர் ராஜேந்திரன் இயக்கத்தின் மூலமாக மலேசிய இலக்கியத்தை மலினமாக்குவதாக எழுதியபோது அவர் தனக்கு தனிப்பட்ட உதவிகள் செய்த கதையை ஆனந்தக்கண்ணீர் தழும்ப கூறியதையும் இந்த மனநிலையோடுதான் ஒப்பிட இயலும்.

என்னளவில் இவர்கள் பரிதாபமானவர்கள். தங்களை மிகச் சிறியதாய் உணரும் அற்பத்தனத்திலிருந்து பேசத் தொடங்குபவர்கள். ஆளுமை வழிபாட்டுக்கு நான் எதிரானவன். ஆனால் விமர்சனம் என்பதை மொத்தப் பரப்பையும் கவனத்தில்கொண்டு வைக்கவேண்டும். ஒருவரின் குறிப்பிட்ட ஒரு செயலை/ கருத்தை விமர்சிப்பதும்; மொத்தமாக அவரது ஆளுமையை விமர்சிப்பதும் வெவ்வேறு அளவீடுகளைக் கொண்டது. காந்தி தொடங்கி கார்ல் மார்க்ஸ் வரையில் முன்வைக்கும் கருத்துகள் விமர்சனத்துக்கு உட்பட்டவைகளே. அப்படியே ஜெயமோகனதும். சமகாலத்தில் இத்தனை தீவிரமாக புனைவிலக்கியம், விமர்சனம், இலக்கியச் செயல்பாடுகள் என இயங்கிக்கொண்டிருக்கும் ஒருவரை நமட்டுச் சிரிப்புடனும் வெற்றுக் கோஷத்துடனும் பொதுவெளியில் அணுகுவதை நான் அனுமதிப்பது ஒருவகையில் வல்லினத்தை முன்வைத்த எங்கள் செயல்பாடுகளை நானே அவமதிப்பதுபோலத்தான்.

என் விளக்கத்துக்குப் பின்னர் கவிஞர் கருணாகரன் மட்டும் கைத்தட்டி “சரியான பதில்தான்” என்றார். மற்றபடி மொத்த அமைதி. மலேசிய கவிதைப்போக்கு குறித்து பேச்சு எழுந்தபோது 2005இல் அப்படி ஒரு உற்சாகமான போக்கு எழுந்து வந்ததையும் பின்னர் மனுஷ்யபுத்திரன் நகல்களாக தேங்கி விட்டதையும் கூறினேன். என் வாசிப்பில் மலேசியத் தமிழ்க் கவிதைக்கென தனி அடையாளம் இல்லை என்றும் 2006 -டன் அதன் எழுச்சி அமிழ்ந்துபோய்விட்டதையும் எஞ்சி இருக்கும் அடையாளங்களுடன் யோகி போன்றவர்கள் தமிழகப் பதிப்பாளர்கள் மூலம் கவிஞர்களாகக் காட்டப்படும் பரிதாபநிலையையும் சுட்டிக்காட்டினேன்.

கேள்வி எனது ‘மசாஜ்’ கதை குறித்து திரும்பியது. அதில் இறுதியாக வரும் இலங்கை பெண்ணைப் பாலியல் தொழிலாளியாகச் சித்தரிப்பதாகவும் அது தமிழ்ச் சூழலில் இலங்கை மக்களின் மேல் உள்ள பரிதாபத்தை அதிர்ச்சி மதிப்பீட்டின் மூலம் கவனப்படுத்தும் முயற்சியா எனும் தொணியில் அமைந்தது. ஒரு வகையில் நக்கீரனும் சிவபெருமானும் பேசிக்கொள்ளும் சங்கதிதான். சிவபெருமான் மங்கையின் கூந்தல் மணத்தைப் புகழ்ந்திருப்பார். நக்கீரர் அதை மிகவும் புறவயமாக உள்வாங்கி பெண்கள் கூந்தலில் இயற்கையில் மணம் உண்டா என வாதத்தை வைப்பார். நக்கீரர் தமிழ் அறிந்தவர்தான். ஆனால் இலக்கிய நுட்பம் புரியாதவர் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு பதில் சொல்லப்போனால் நான் அச்சிறுகதையுள் பேச முனையும் மெல்லிய உணர்ச்சிகள் எல்லாம் கவனிக்கப்படாமல் “அப்படியானால் இலங்கைப் பெண்களெல்லாம் மோசமா?” என விவாதம் திசை திரும்பிவிடலாம். எனவே அமைதி காத்தேன். ஶ்ரீதர் அக்கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருப்பதாகச் சொன்னதால் அப்படியான இலங்கை தமிழகப் பெண்கள் மலேசியாவில் உள்ளனர் என்றும் ஆனால் கதை அதை மையப்படுத்தியதல்ல என்றும் கூறினேன். வேறு எது குறித்தும் விவாதம் செய்யலாம். ஒரு படைப்பாளி தன் படைப்பை தற்காத்து விவாதம் செய்வது மகா கொடுமை. அதிலிருந்து விரைந்து தப்பினேன்.

மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் ஜெயமோகன் குறித்து கேள்வி எழுப்பியவர்கள் பின்னர் நண்பர்களாகவே கட்டியணைத்துப் பிரிந்தனர். உண்மையில் எனக்கு அவர்கள் மேல் கோபம் இல்லை. எல்லா பெரிய முயற்சிகளையும் முன்னெடுப்புகளையும் தங்களின் குறுகிய பார்வையைக்கொண்டு அதற்கேற்ப அதை உள்வாங்கி, தங்களுக்கு இருக்கும் எளிய கருத்துகளைக்கொண்டு கோஷம் எழுப்பும் ஒரு பெரும் திரளின் மேல் உள்ள கோபம் அது. வலுவான எதிர்க் கருத்தை உருவாக்க உழைப்பில்லாத கூட்டத்தைப் பார்த்து பார்த்து உருவான கசப்பின் வெளிப்பாடு அது. இந்தக் கசப்புகளை காதுபடவே கேட்டுக்கொண்டுதான் முன்னகர வேண்டியுள்ளது. சிலசமயம் நம்முடனே இருப்பவர்கள் உருவாக்கும் அவதூறுகளைப் பொறுத்துக்கொண்டுதான் செயல்பட வேண்டியுள்ளது.

நிகழ்ச்சி முடிந்ததும் வீடு திரும்பினோம். யோ.கர்ணனும் தேவா அண்ணனும் உடன் இருந்தனர். நிகழ்ச்சி எனக்கு பிடித்திருந்ததைச் சொன்னேன். நல்ல ஏற்பாடு. இலங்கை, மலேசிய இலக்கியங்கள் குறித்த தொடர் உரையாடல்களை உருவாக்குவது பற்றிப் பேசினோம். கர்ணன் இலங்கையில் வெளியாகும் தீபம் இதழ் பணியில் தன்னை இணைத்துக்கொண்டபின் பெரும்பாலும் புனைவிலக்கியம் எழுதுவதை நிறுத்தியிருந்தார். அவரது ‘தேவதைகளின் தீட்டுத்துணி’  என்னைக் கவர்ந்த தொகுப்புகளில் ஒன்று. அவர் மீண்டும் எழுதவேண்டும் எனக்கேட்டுக்கொண்டேன். அவர் அமைதியாகவே புன்னகைத்தார். எப்போதும்போல.

23.3.2018 – கிளிநொச்சி

22

தமயந்தியுடன்

காலையில் கவிஞர் தமயந்தியுடன் பேசிக்கொண்டிருந்தோம். அவர் முதல் நாள் இரவே வந்திருந்தார். ஆனால் அமர்ந்து பேச நேரம் கிடைக்கவில்லை. எங்களுக்காகச் சுவையான மீன் குழம்பு வைத்திருந்தார். ஈழப்போர் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். அப்படியே இலக்கியம் குறித்து பேச்சு போனதும் ஆதிரை நாவல் குறித்து பேசினேன். அநேகமாக அங்கிருந்த நாட்களில் பெரும்பாலும் ஆதிரை குறித்து பேசிக்கொண்டிருந்தேன். ஒரு முக்கியமான படைப்பு குறித்து தொடர்ந்து பேசுவதை பிறரையும் வாசிக்கத் தூண்டும். அக்னி நதி, நீலகண்ட பறவையைத் தேடி போன்ற நாவல்களை அவ்வாறு தொடர்ந்து பேச்சில் கேள்விப்பட்டே வாசிக்கத்தொடங்கினேன். தமயந்தி ஷோபாவின் படைப்புகளோ சயந்தனின் நாவலோ உண்மையின் மேல் கற்பனையை ஏற்றும் படைப்புகள் என்றும் அதில் உண்மையான போர் வரலாற்றை அறிய முடியாது என்றும் கூறினார்.. முழு வரலாற்றை உள்வாங்கி எழுதக்கூடியவர்கள் (வரலாறு அறிந்தவர்கள்) தன்னுடன் சேர்த்து நான்கைந்து பேர் மட்டுமே உண்டு என்றார். அப்படியானால் அப்பணியைச் செய்யச் சொன்னேன். பொதுவாக இதுபோன்ற வரலாற்று நிகழ்வுகளுக்கு ஏராளமான முகங்கள் உள்ளன. அதில் எந்த முகம் சரி அல்லது தவறு என கூறுவது கடினம். அதுவும் இந்த விசயத்தில் அதிகம் தெரியாத என்னைப்போன்ற அறைகுறைகள் அடக்கி வாசிப்பதுதான் நல்லது. தமயந்தியிடம் வேறொன்றும் பேச இயலாது. அவர் சொல்வதை அவர் அனுபவத்தின் வழி உள்வாங்கலாம். ஆனாலும் அதுவும் ஒரு தரப்பு மட்டுமே என்று மனம் சொல்லிக்கொண்டே இருந்தது.  நான் நாவல் எனும் கலைப்படைப்பின் புனைவுநிலை குறித்து பேசுபவன். வரலாற்றின் அதன் நம்பகத்தன்மையை ஆராய்வது என் பணியல்ல. புனைவின் பணியும் அதுவல்ல. சற்று நேர உரையாடலுக்குப் பின் யாழ்பாணம் புறப்பட்டோம்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் செல்வதென்பது நீண்ட பயணம்தான். ஆனால் நண்பர்களுடன் பேசிக்கொண்டே செல்லும்போது பயணக் களைப்பு தெரியாது. மேலும் வேடிக்கை பார்த்தபடியே செல்லலாம் என்பதால் பகல் நேரப் பயணத்துக்கு முடிவெடுத்திருந்தேன். போகும் முன் நண்பர்கள்  கந்தசுவாமி ஆலையத்தில் வழிபட வேண்டுமென விரும்பினர். பிரம்மாண்டமான ஆலயம்.

கொழும்புக்குச் செல்வதற்கு முன் கவிஞர் கருணாகரன் இல்லத்திற்குச் செல்லலாம் எனத் திட்டம். ஈழத்தின் முக்கியமான தமிழ்க் கவிஞர் கருணாகரன். ஈரோஸ் அமைப்பில் இணைந்து ஈழவிடுதலைப் போராட்டத்தில் செயற்பட்டவர். நான் 2011ஆம் ஆண்டு இலங்கைப் பயணத்தில் யோ.கர்ணன் அறிமுகப்படுத்தலில் அவரைச் சந்தித்தேன். அப்போது தொடர்ந்து அரசியல் பத்திகளை எழுதிவரும் எழுத்தாளராகவே அறிமுகமானார். பல துறைகளைச் சேர்ந்தவர்களையும் உள்ளடக்கிய நூற்றுக்கு மேற்பட்ட நேர்காணல்கள் அவரால் செய்யப்பட்டுள்ளன என்றும் ‘வெளிச்சம்’ என்ற கலை, இலக்கிய ஏட்டின் ஆசிரியராக நீண்டகாலம் செயல்பட்டிக்கும் அவர்,  தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் பணியாளராகவும் இருந்துள்ளார் என்றும் அப்போதைய உரையாடலின் வழி உள்வாங்கிக்கொண்டேன். ஈழப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் ஒரு போராளியாகச் செயற்பட்ட கருணாகரன், அந்தப் போராட்டத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் களத்தில் நின்றே கண்ட அனுபவத்தைக் கொண்டவர் என்பதால் அப்போதைய உரையாடலில் இலக்கியத்தைவிட ஈழ அரசியலே அதிகம் இருந்தது. ஆனால் விடைபெறும்போதே பல்வேறு கவிதை, சிறுகதை, கட்டுரைத்  தொகுப்புகள் எழுதியுள்ளார் என அறிந்துகொள்ள முடிந்தது.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி, சேரன் போன்றவர்களை அறிந்து வாசிக்க முடிகிற சூழலில் இலங்கையில் தீவிரமாக இயங்குகிற படைப்பாளிகளை அறிய முடியாமல் போனது அப்போது கூச்சமாகவே இருந்தது. முதல் பயணத்தில் கிடைத்த நூல்களை வாசித்ததில் ஓரளவு அங்குள்ள இலக்கியச் சூழலை அறிய முடிந்தது. கருணாகரன் படைப்புலகை கவிதைகள் வழியே நெருக்கமாக அறிந்திருந்தேன். எனவே பல்வேறு படைப்பிலக்கியத்துறை சார்ந்து இயங்கினாலும் அவரைக் கவிஞராக அடையாளப்படுத்துவதே எனக்கு உவப்பாக உள்ளது.

கருணா

கருணாகரனுடன்…

அவரது இல்லம் கிளிநொச்சியில் இருந்தது. சுற்றிலும் சிறிய தோட்டங்களோடு  பண்ணை வீடுபோல அமைப்பு. கருணாகரன் எங்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். பேச்சு இலக்கியத்தில் தொடங்கி ஈழப்போருக்குத் திரும்பியது. அப்படித் திரும்பும் என அனுமானித்ததுதான். கருணாகரன் விரிவாகவே ஈழப்போர் குறித்து விளக்கினார். நான் ஜி.புஷ்பராஜாவின் ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியங்கள்’ நூலை முன்பே வாசித்திருந்தேன். காத்தான் குடி பள்ளிவாசல் உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக்கொள்ளப்பட்ட பட்டியல், பொது மக்கள் மீது நடத்திய தாக்குதல்கள், சகோதர இயக்கங்களை அழித்தது என  சான்றுகளுடன் எழுதப்பட்ட நூல் அது. அதேபோல ‘அகாலம்’ என்ற புஷ்பராணியின் (இவர், ஈழவிடுதலைப் போராட்டம் ஆயுதப்  போராட்டமாக உருவெடுத்தபோது அதில் பங்கெடுத்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர். அப்படி மாறியபோது சிறை சென்ற முதல் பெண் போராளியும் ஆவார்.) நூலும், புலிகள் நடத்திய போர் இராணுவ ரீதியாக முக்கியமானவையாக இருக்கலாம் ஆனால் தார்மீக ரீதியில் பயங்கரவாதமானது எனச் சொல்லி சான்றாய் நின்றது. ஆனால் இந்த அனுபவங்களுக்கு அல்லது கருத்துகளுக்கு முற்றிலும் மாறுபட்ட நியாயங்களும் இல்லாமல் இல்லை. ‘கொலைநிலம்’ என்ற உரையாடல் நூலில் ஷோபாசக்தியிடம் தியாகு வைக்கும் வாதங்கள் அப்படி ஒரு எதிர்த்தரப்பு எனலாம். கடைசியாக தமிழினி எழுத்தில் நான் வாங்கிய ‘ஒரு கூர்வாளின் நிழலில்’  என்ற நூலை இதுபோன்ற குழப்பங்களாலேயே முழுமையாக வாசிக்காமல் வைத்துவிட்டேன். எந்த எதிர்க்கருத்து கொண்ட நூலுக்கும் திரிக்கப்பட்ட வரலாறு என விமர்சனங்கள் எழுவது வாசிப்புக்குத் தடையாக உள்ளது என கருணாகரனிடம் கூறினேன்.

கருணாகரன் மிகத்தெளிவாக சில விளக்கங்கள் கொடுத்தார். அவரது கருத்துகள் சார்பற்ற சமநிலையில் இருந்தது. அந்நூல் ஏன் அசலானதாக இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்களைச் சொன்னார். தன்னுடைய அனுபவத்தில் தான் கண்ட நிஜங்களின் அடிப்படையில் உள்வாங்கிக்கொண்ட வரலாற்றை விரிவாகப் பேசினார். பேச்சு பிரபாகரன் குறித்து போனது.

கருணாகரன் வீட்டில்

கருணாகரன் வீட்டில்

கருணாகரன் பிரபாகரனின் மூன்றாவது மகனான பாலச்சந்திரன் குறித்து பேசும்போது தோளில் கைலியைப் போர்த்தியவாறு பலகை பெஞ்சில் அமர்ந்திருக்கும் அச்சிறுவனின் அப்பாவிக் கண்கள் நினைவுக்கு வந்தது. யார் எதைக்கொடுத்தாலும் எவ்வளவு நெருங்கிப் பழகியிருந்தாலும் எதையும் வாங்கி உண்ணமாட்டான் என அவர் சொன்னபோது இராணுவப்பிடியில் அவன் அருகில் இருந்த குவளை நினைவுக்கு வந்தது. அதன் பின்னர் அவனுக்கு நேர்ந்த கொடூரமும் மனதில் கரும்புகைபோல பரவியது. அப்படம் இணையத்தளங்களில் வெளிவந்தபோது மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டிக்கொண்டே இருந்தது. ஒட்டுமொத்த மானுடமும் நசிந்துவிட்டதுபோன்றதொரு பெருவலி. தொண்டை வரை வந்த கேள்வியை விழுங்கிவிட்டேன்.

கருணாகரன் மீண்டும் மீண்டும் தான் அனைத்தையும் மறக்கப் பழகுவதாகக் கூறினார். உள்நோக்கிச் சுருங்கி அதற்கு எதிர்நிலையில் வெடித்து சிதறும் கவிஞர்களின் மனம் அவரிடம் இயல்பாகவே பேச்சில் தொணித்தது. “சாலையில் போகும்போது ஒரு ஆர்மிகாரனைப் பார்க்கிறேன். பக்கத்திலேயே ஒரு கால்களை இழந்த சிறுமியும் இருக்கிறாள். சிறுமி அப்படி ஆக ஆர்மி முன்பொரு காலத்தில் காரணமாக இருந்திருப்பான் என்பதை நான் மறந்தால் மட்டுமே இந்த நிலத்தில் வாழ்வது சாத்தியம்” என்றார்.

வேனில் ஏறி புலிகளின் நிர்வாகத்தில் இருந்த பகுதிகளைப் பார்வையிட்டோம். இன்னும் சில இடங்களில் இராணுவ நடமாட்டம் இருந்தது. பெரும்பாலான கட்டடங்கள் தரைமட்டமாகியிருந்தன. 2002ஆம் ஆண்டு புலிகள்  அனைத்துலக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திய மண்டபம் தரைமட்டமாக்கப்பட்டிருந்தது. அந்தச் சந்திப்புக்குச் சென்ற அக்கினி (மலேசிய பத்திரிகையாளர்) எழுதிய ‘மண்ணே உயிரே’ நூல் மூலம் அந்நிலம் உயிர்ப்புடன் இருந்த ஒரு காலத்தை கற்பனையிலேயே கண்டிருக்கிறேன். இப்போது அது செத்துக்கிடந்தது.

26

போராட்டத்தில்

மீண்டும் மையச் சாலைக்கு வந்தபோது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி வவுனியாவில் மக்கள் நடத்தும் போராட்டத்தைக் காண முடிந்தது. ஒரு வருடத்திற்கும் மேலாக நடத்தப்பட்டுவரும் இந்தப் போராட்டத்துக்கு தங்களுக்கான தீர்வு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து தொடர்ந்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நாங்கள் அதில் ஈடுபட்டிருந்த ஒரு தாயிடம் பேசினோம். கடந்த வருடம் ஜனவரி மாதம் 23இல் இப்போராட்டம் தொடங்கியதாக கூறிய அவர் தாங்கள் காணாமற்போன பிள்ளைகளுக்காக போராட்டம் மேற்கொள்ளவில்லை. காணாமல் போகச் செய்யப்பட்ட பிள்ளைகளுக்காகவே போராட்டம் மேற்கொண்டு வருகின்றோம் என்றார். காணாமல் போனவர்களின் படங்களைத் தாங்கிய பதாகைகள் சுற்றிலும் இருந்தன. நான் யார் இதில் உங்கள் மகன் என்றேன். அவ்வளவு நேரம் துடிப்புடன் பேசிக்கொண்டிருந்தவர் “என் மகனா?” என்ற கேள்வியுடன் சட்டெனத் தாயாக மாறினார். அவர் முகத்தில் அத்தனை சிரிப்பு. தன் மகனை வாரியனைத்து தூக்கப்போகும் உற்சாகச் சிரிப்பு. ஓடிச்சென்று ஒரு சிறிய மங்கலான படத்தைக் காட்டினார்.

வண்டியில் ஏறும்போது மனம் கனத்துக் கிடந்தது. கருணாகரன் எல்லாவற்றையும் தெளிவாக விளக்கிக்கொண்டே இருந்தார். நான் வீட்டில் அடக்கி வைத்திருந்த அந்தக் கேள்வியைக் கேட்டேவிட்டேன். “பாலச்சந்திரனின் சுடப்பட்ட படத்தைப் பார்த்தபோது எல்லா மரணங்களையும்போல அதையும் ஏற்றுக்கொள்ளும் வலு இருந்ததா?” ஒருவகையில் இது அபத்தமான கேள்வி. இன்னும் சொல்லப்போனால் மானுட நுண்ணுணர்வு அற்றவர்களிடம் வெளிப்படக்கூடிய கேள்வி. ஆனால் அதை நான் கேட்டுத்தான் ஆகவேண்டும் எனத்தோன்றியது. அதன் நியாயம் என்னவென்று பல நேர்காணல்களைச் செய்த அவரால் புரிந்துகொள்ள முடியும். அவர் பதில் கொடுத்தார். சொற்கள் சிக்கிக்கொண்ட நெஞ்சடைக்கும் பேரழுகையை பதிலாக அவர் கொடுத்தார். வேனில் மௌனம் அப்பியது.

காணாமல்போன குழந்தையின் நினைப்பு எழும்போது தாயிடம் எழும் சிரிப்பும் மாண்ட குழந்தைக்காக கருணாகரனின் அழுகையும் ஒரே உக்கிரத்தைக் கொடுப்பதுதான். இரண்டும் இயலாமையின், இழப்பின் பிரதிபலிப்பு. நம் கண்முன் துன்பத்தில் உழலும் ஒவ்வொருவரும் யாரோ ஒருவரின் குழந்தைகள் என நினைப்பு வரும்போது எழும் வலியின் பிரதிபலிப்பு.

24.3.2018 – கொழும்பு

முதல்நாள் இரவில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில்தான் தங்கியிருந்தோம். பேராசிரியர் நுஃமான் அவர்களின் ஏற்பாடு. வசதியான அறை என்றாலும் இலங்கை சீதோஷண நிலை உஷ்ணமாக இருந்ததால் புழுக்கம் தாள முடியாமல் இருந்தது. எல்லோரிடமும் பொதுவாக சோர்வு காணப்பட்டது. பயணக் களைப்புடன் போர் காலச் சிதைந்த காட்சிகள் காரணமாக இருக்கலாம். பல சமயங்களில் நமக்கு ஏற்படும் உணர்வு மாற்றங்களையே நாம் ஆராய்வதில்லை. புலன்களின் வழி அவை மனதை சுரண்டிக்கொண்டே இருக்க அறிவை வேறெங்கோ அலைய விட்டுவிடுகிறோம். ஒரு சிறிய உறக்கத்துக்குப் பின் பாண்டியனிடம் பேசினேன். “புலிகள் போரில் வென்று நிரந்தர ஆட்சி அமைத்திருந்தால் இப்போது எழும் எதிர்வினைகள் எல்லாமே அர்த்தம் இல்லாமல் போயிருக்கலாம்” என்றார். அது உண்மைதான். வரலாற்றை அதிகாரங்களே உருவாக்குகின்றன. ஒருவேளை இராணுவம் எஞ்சிய தடயங்களை அழிக்காமல் வைத்திருந்தால் சோழர்கள் ஆண்ட தடயங்களைப் பார்க்கச் செல்வதுபோல பல வருடங்களுக்குப் பின் அது வரலாற்றில் ஒரு பெருநிகழ்வாக நிலைக்கலாம். அதைச்சுற்றி பல புனிதப் புனைவுகள் உருவாகலாம். சோழர்கள் தம் மக்களை கொல்லாமலா பெரும் ராஜியங்களை உருவாக்கியிருப்பர். எல்லாமே ஒரு துளி அதிகாரத்தில் இருந்து தொடங்குபவை. ஆனால் வரலாற்றில் எல்லாவற்றுக்கும் இடம் உண்டு. நேர்மையைப் போல வஞ்சகத்துக்கும். எழுச்சியைப் போல வீழ்ச்சிக்கும்.

மேமன்

மேமன் கவியுடன்

அன்று காலை பத்து மணிக்கு பூபாலசிங்கம் புத்தகக் கடையில் மேமன் கவி அவர்கள் சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியைவிட நான் தெளிவத்தை ஜோசப் அவர்களைச் சந்திக்க வேண்டும் என ஆர்வம் கொண்டிருந்தேன். அவர் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமானவர். அவரது ‘குடை நிழல்’ நாவலை வாசித்திருந்தேன். ஆனால் சந்திப்புக்கு அவரால் வர முடியாமல் போனது. அதை நண்பர்களுடனான ஒரு சிறிய சந்திப்பு எனலாம். மிகச் சிலர் வந்திருந்தனர். வல்லினத்தில் உள்ள அனைவருமே பேசினோம். நிகழ்ச்சியில் இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர் வந்திருந்ததால் இலங்கை படைப்பாளிகளை மலேசியாவுக்கு வரவழைத்துக் கலந்துரையாடல் நடத்த விரும்பும் எங்கள் திட்டத்துக்கு உதவும்படி கேட்டுக்கொண்டேன். மேமம் கவி விரிவாக பல கேள்விகள் கேட்டு பதிவு செய்துகொண்டார். அன்று நாங்கள் தங்கியிருந்த கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நிகழ்ச்சி ஒன்று நடப்பது பலரும் வர முடியாததற்குக் காரணம் என்றார். மேமன் கவி அக்கறையானவர். வாயில் வடை சுட்டுக்கொண்டிருக்காமல் எழுத்தில் இயங்குபவர். வல்லினம் பதிப்பில் வந்த இரண்டு நூல்கள் குறித்து முன்பே விரிவான கட்டுரைகள் எழுதியுள்ளார். அவ்வாறான முயற்சிகள்தான் அயலகங்களில் தேவை. ஸ்ரீதரசிங் பூபாலசிங்கம் அவர்களும் அக்கறையுடன் கவனித்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தார். வருங்காலத்தில் விரிவான சந்திப்புகள் நடத்த இணைந்து செயல்படலாம் என உறுதியளித்தார்.

நாடகம்

சாவித்திரி

கடல் ஓரம் மதிய உணவுக்குப் பின் நண்பர்கள் நினைவுப் பொருட்களை வாங்கச் சென்றனர். நான் வேனிலேயே அமர்ந்திருந்தேன். திலிப்புடன் பேசிக்கொண்டிருந்தேன். இலங்கையில் இருந்தாலும் எங்களுடனான இந்தப்பயணம் அவருக்கும் புது அனுபவம்தான். ஶ்ரீதர் மற்றும் சரவணதீர்த்தாவுக்கு விமானம் முன்னரே கிளம்புகிறது என்பதால் வாடகை வண்டியில் புறப்பட்டனர். அடுத்த சில மணி நேரத்தில் எங்கள் விமானம். குளிக்க விருப்பம் இன்றி எல்லோரும் ஒவ்வொரு மூலையில் கிடந்தோம். கீழே மண்டபத்தில் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. பேச்சுச் சத்தம் உரக்கக் கேட்டுக்கொண்டே இருந்தது. கீழே இறங்கினேன். சத்தியவான் சாவித்திரி நாடகம் அரங்கேற்றம் கண்டிருந்தது. பின்னால் சாயம் வெளுத்த பழைய திரைச்சீலை. பழக்காலத்து பாணியிலான நாடகம். ஆண்களே பெண் வேடமும் போட்டிருந்தனர். கூட்டம் நிறைந்திருந்தது. பலரும் நாடகத்தை ரசித்தனர். இடையில் போனதால் எனக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. சோகமும், கோபமும், அச்சமும் என கதாபாத்திரங்கள் காட்டும் வெவ்வேறு உணர்வுகளை உற்சாகமாக உள்வாங்கினர் பார்வையாளர்கள். புராணங்கள் அவ்வாறு எல்லா உணர்ச்சிகளையும் தள்ளி நின்று ரசிக்க வைத்துவிடுகின்றன. மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு ஒரு சகஜமான கதையாக மனதில் நிலைத்து விடுகிறது. ஈழத் தமிழர்களின் சோக வரலாறும் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டதுதான். இன்னும் சகஜமாகாமல் ஒவ்வொருமுறையும் நெஞ்சை குத்தி ரணமாக்குவது மட்டும் ஏனென்று தெரியாமல் பெட்டிகளைக் கட்டினேன்.

திலிப் நெருங்கிய நண்பராகியிருந்தார். “இலங்கையில் பனங்கள் பிரபலம். நீங்கள் அதை இறுதிவரை முயலவே இல்லை” என்றார். அது குறித்த பெரிய திட்டங்கள் இல்லாவிட்டாலும்  சம்பந்தமில்லாமல் ‘வெள்ளையானை’ நாவலின் இறுதி காட்சி நினைவுக்கு வந்தது. மனிதர்களை வதைத்து தயாராகும் ஐஸ் கட்டியினுள் ரத்தம் உரைந்திருப்பதாக ஆங்கிலேயன் ஒருவனுக்குத் தோன்றும். ஐஸ் கட்டி தயாராகும் தொழிற்சலையில் நடக்கும் மானுட சித்திரவதைகளைத் தடுக்க முடியாமல் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த தனது குற்ற உணர்ச்சியை வெல்ல வலுக்கட்டாயமாக அதை விஸ்கியில் கலந்து குடிப்பான்.

இங்குள்ள பனைமரங்கள் இரத்தம் குடித்து உதிரக்கள்ளை உற்பத்தி செய்திருக்குமா என அப்போது தோன்றியது. “சீச்சீ” எனச்சொல்லிக்கொண்டேன். எப்படி இருந்தாலும் குற்ற உணர்ச்சி அழியாமல் அப்படியே இருக்கட்டும் என நினைத்துக்கொண்டேன்

http://vallinam.com.my/version2/?p=5191

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.