Jump to content

Recommended Posts

கண்ணாடி

ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

 

47p1.jpg

பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றின் தலைமை உதவி ஆசிரியரும், சினிமா ஆர்வலருமான `கே.கே.எம்’ என்று அழைக்கப்படும் கவுண்டனூர் கே.மூர்த்தி (55), முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை இன்று காலை உடைத்துவிட்டார். ஆனால், அவரோ இதை மறுக்கிறார். அதை அவர் உடைக்கவில்லை என்றும், கண்ணாடியே தானாகக் கீழே விழுந்து உடைந்துவிட்டதாகவும் சொல்கிறார்.

வீட்டில் யாரும் இல்லாதபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளதால் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை. அவர் பத்திரிகையாளர் என்றாலும் இந்தச் சின்ன விஷயத்தில் பொய் சொல்ல மாட்டார் என்றே நம்பப்படுகிறது.

சென்னை கோயம்பேட்டை அடுத்த நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவரது மனைவி சுதா. இவர்களது உறவினர்தான் மூர்த்தி. இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சம்பளமற்ற விடுப்பில் - பரோலில் அல்ல - வெளியே வந்து, இங்கு தங்கி கடந்த சில நாட்களாகச் சிகிச்சை பெற்றுவருகிறார். அப்போதுதான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தச் சம்பவத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்போல காணப்பட்ட அவர் நம் செய்தியாளரிடம் கூறியது: “கண்ணாடி கீழே விழுந்து நொறுங்கியதும், நான் கால்களை அசைக்காமல் அதே நிலையில் அமர்ந்திருந்தேன். கண்ணாடிச் சில்லுகள் பாதங்களைப் பதம் பார்த்துவிடும் என்பதால் மட்டுமல்ல, கண்ணாடி விழுந்த விதம் என்னை வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருந்தது. என் கண்ணெதிரிலேயே மாடியிலிருந்து விழுந்து ஒருவன் தற்கொலை செய்துகொண்டதுபோல அது இருந்தது. அதன் சட்டகம்கூட அப்படித்தான் கவிழ்ந்திருந்தது. அதைச் சுற்றி ரத்தம் தெறித்துக்கிடந்ததுபோல ரசம் பூசப்பட்ட கண்ணாடிகள் சிதறி இருந்தன. 47p2.jpg

தகரத்தால் ஆன அந்தச் சட்டகத்தை எடுத்துப் பார்த்தேன். அதில் இரண்டு சில்லுகள் மட்டும் ஒட்டிக்கொண்டிருந்தன. சட்டகத்தை தரையில் தட்டி அவற்றையும் உதிர்த்துவிட்டு சுவரில் சாய்த்து வைத்தேன். பாதத்தை அசைக்காமல் எழுந்து நின்று நாற்காலியைப் பின் பக்கமாக இழுத்துப் போட்டு உட்கார்ந்துகொண்டேன். வெறுமையுடன் இருந்த சட்டகத்தையும், சிதறிக்கிடந்த கண்ணாடிச் சில்லுகளையும் பார்த்துக்கொண்டு சங்கடமான மனநிலையில் அமர்ந்திருந்தேன். இந்தச் சம்பவம் என்னுடைய சிறு வயதில் நடந்த ஒரு சம்பவத்தை ஞாபகப்படுத்திவிட்டது” என்றார். அந்தச் சம்பவத்தை பின்வருமாறு அவர் விவரித்தார்...

“சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம் அது. அப்போது எனக்கு பதினோரு வயது. ஆறாம் வகுப்பு பரீட்சை எழுதிவிட்டு கோடை விடுமுறையைக் கழிக்க சென்னைக்கு அருகே உள்ள பெரிய
பாளையத்துக்கு வந்திருந்தேன். என் தாய் மாமா வீட்டில் தங்கியிருந்தேன். என் நச்சரிப்பு தாங்காமல் அம்மாதான் கொண்டு வந்து விட்டுப் போயிருந்தார்கள். ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் நான் மாமா வீட்டுக்கு வருவது வழக்கம்தான். கிராமத்திலேயே, அதுவும் நிலத்தில் தனித்திருந்த வீட்டில் பிறந்து வளர்ந்தவன் என்பதால், இந்த ஊர் எனக்கு ஆச்சர்யங்களை அளித்தது. அதுவும் இல்லாமல் இங்கு உடன் விளையாடுவதற்கு நிறையச் சிறுவர்கள் இருந்தார்கள். அவர்களுடைய பழக்கவழக்கங்களும், விளையாட்டுகளும், அவர்கள் சேகரித்துவைத்திருந்த பொருள்களும் வினோதமாக இருந்தன.

அதே தெருவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் ஒரு சின்ன சினிமா புரொஜெக்டரையும், நிறைய படச்சுருள்களையும் வைத்திருந்தான். அவனுடைய அப்பாவும் அம்மாவும் வேலைக்குப் போன பிறகு - அவர்கள் ஆசிரியர்களாக இருந்தார்கள் - அவன் வீட்டுச் சுவரில் படம் காண்பிப்பான். கையில் இயக்கும் அந்த புரொஜெக்டரில் ஒரு மின்விளக்கு இருக்கும். அன்று மின்சாரம் தடைபட்டிருந்ததால் வெளிச்சத்துக்கு சூரிய ஒளியைப் பயன்படுத்த முடிவு செய்தோம். வெளியே பொழியும் சூரிய ஒளியை திசை திருப்பி ஜன்னல் வழியாக உள்ளே அனுப்ப வேண்டும். அதற்கு முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று தேவைப்பட்டது. அதுபோல் கையில் எடுக்கும்விதமாக சிறு கண்ணாடி எதுவும் அவன் வீட்டில் இல்லை. என்னைக் கொண்டுவரச் சொன்னான். நானும் மாமாவின் மனைவியிடம் கெஞ்சிக் கேட்டு வாங்கிக்கொண்டு போனேன். அந்தப் பையனின் உத்தரவுப்படி, ஜன்னலுக்கு வெளியே இருந்து உகந்த கோணத்தில் கண்ணாடியைத் திருப்பிக்கொண்டிருந்தேன். அப்போது அது என் கையிலிருந்து கீழே விழுந்து நொறுங்கியது.
47p3.jpg
இந்தச் சம்பவம் மாமா வீட்டில் பெரிய பிரளயத்தையே உண்டு பண்ணிவிட்டது. மாமாவின் மனைவி கொதித்தெழுந்துவிட்டாள். என் மீதான வெறுப்பையெல்லாம் கொட்டித் தீர்த்துவிட்டாள். நான் வந்து அங்கே தங்கியிருப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்த்தும்விதமாக அது இருந்தது. மாமா அலுவலகத்திலிருந்து வந்ததும் இந்தப் பெரிய அநியாயத்தை அவரிடம் முறையிட்டாள். அவளைப் பற்றி தெரியுமென்பதால் அவர் இதைப் பெரிதுபடுத்தவில்லை. ஆனால், அந்த ஞாயிற்றுக்கிழமையே என்னை கிராமத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டார். இந்தச் சம்பவத்தை அம்மாவிடம் சொன்னதும், பகை முற்றி அம்மாவுக்கும் அந்தப் பெண்மணிக்கும் பேச்சுவார்த்தையே முறிந்துபோனது. மாமாதான் வீட்டுக்கு வந்து போய்க்கொண்டிருந்தார். மாமா இப்போது உயிருடன் இல்லை. சங்கடம் என்னவென்றால் இப்போது நான் தங்கியிருப்பது அந்த மாமா மகன் ஜெகனுடைய வீடு.”

மேலும் அவர் சொன்னார், “ஜெகனும் அவனுடைய மனைவியும் இப்போது அலுவலகம் போயிருக்கிறார்கள். அவர்கள் இருக்கும்போது உடைந்திருந்தால்கூட இவ்வளவு சங்கடம் ஏற்பட்டிருக்காது. அவர்கள் வந்ததும் இதைச் சொல்லாமல் இருக்க முடியாது. என்ன நடந்தது என்பதை அவர்களுக்கு விளக்க வேண்டும். அவர்களுக்கு என் மீது பிரியம் உண்டு. இந்தச் சின்னக் கண்ணாடி உடைந்ததற்காக அவர்கள் வருந்தப்போவதில்லை. வயதான ஒருவன், அதுவும் நோய்மையுற்ற நிலையில் தன் தவறுக்காக விளக்கம் அளிப்பது அவர்களுக்கு என் மீது அனுதாபத்தையே ஏற்படுத்தும். அதுவும் ஜெகனின் மனைவி ரொம்ப வருத்தப்படுவாள். காரணம் இரண்டு நாட்களுக்கு முன்புதான் இது போன்ற வேறொரு சம்பவம் நிகழ்ந்தது” என்றார் அவர்.

“வழக்கமாக ஜெகன்தான் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வான். அன்று அவன் அலுவலகத்திலிருந்து வரத் தாமதமானதால், அவன் மனைவி என்னை அவளது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றாள். மருத்துவரைப் பார்ப்பதற்கு முன்னால் ரத்த அழுத்தமும் எடையும் பரிசோதிக்க வேண்டும். ரத்த அழுத்தச் சோதனை முடிந்ததும் எடை எந்திரத்தைக் காண்பித்தாள் செவிலி. பகட்டான அந்த நவீன மருத்துவமனைக்கு ஏற்ற நவீன எடை எந்திரமாக அது காணப்பட்டது. அதில் எடையைக் காட்டுவதற்கு முள்ளுக்குப் பதில் எண்கள் ஒளிர்ந்தன. அதில் எப்படி நிற்பதென்று எனக்குத் தெரியவில்லை. அதனால் நான் தயங்கினேன். இதற்கு முன் யாராவது அதில் எடை பரிசோதிக்கும் போது கவனித்திருக்க வேண்டும். ஆனால் நான் கவனிக்கத் தவறிவிட்டேன். ‘ஏறி நில்லுங்கள், ஒன்றும் ஆகாது’ என்று தைரியம் சொன்னாள் செவிலி. ஒரு பாதத்தை எடுத்து அதன் மேல் வைத்தேன். இன்னொரு பாதத்தை எடுத்துவைக்கும் போது அது ஒரு பக்கமாக மேலெழுந்தது. நான் அச்சத்துடன் பின்வாங்கி, வைத்திருந்த பாதத்தையும் அதிலிருந்து எடுத்துவிட்டேன். அப்போது ‘டப்’பென்று ஒரு சத்தம். அந்த எடை எந்திரம் சிறுசிறு துண்டுகளாக உடைந்து நொறுங்கிவிட்டது. நான் செய்வதறியாது கொஞ்சம் நேரம் திகைத்து நின்றுவிட்டேன். எனக்கு முன் எவ்வளவோ பேர் அதில் எடையைப் பரிசோதித்திருப்பார்கள், அதில் ஸ்தூல சரீரிகளும் இருந்திருப்பார்கள். அப்போதெல்லாம் உடையாத அந்த எந்திரம் - சுமார் 60 கிலோ எடை மட்டுமே உள்ள - நான் ஏறி நிற்கும்போது - நிற்கக்கூட இல்லை - ஏன் உடைந்தது? ராமனின் பாதங்களுக்காகக் காத்திருந்த அகலிகையைப்போல அது சாபவிமோசனம் பெற்றுவிட்டதா என்ன? ஏதோ துடுக்குத்தனம் செய்துவிட்டு மாட்டிக்கொண்ட ஒரு சிறுவன்போல நான் நின்றிருந்தேன். மருத்துவக் கட்டணத்துடன் அன்று எண்ணூறு ரூபாய் கூடுதலாக அழ வேண்டியிருந்தது” என்றார் மூர்த்தி.

சிந்தனைவயப்பட்டவராகச் சிறிது நேரம் கண்களை மூடியிருந்துவிட்டுப் பிறகு கேட்டார், “கண்ணாடிக்கும் எனக்கும் அப்படி என்னதான் பகை?” அவரே பதிலும் சொன்னார், “ஏதோ இருக்கிறது. இல்லையென்றால், தொடர்ச்சியாக இப்படிச் சம்பவங்கள் நடக்காது. இப்போது மட்டுமல்ல, சில மாதங்களுக்கு முன்புகூட நடந்திருக்கிறது.”

மேலும் இரண்டு சம்பவங்களை அவர் சொன்னார். அவையும் கேட்கச் சற்று வினோதமாகத்தான் இருந்தன.

அவர் சொன்னார், “ஆரணி பேருந்து நிலையத்தில் நான் திருவண்ணாமலை செல்லும் அரசுப் பேருந்துக்காகக் காத்திருந்தேன். அது கோடைக்காலத்தின் ஒரு மதிய நேரம். வர வேண்டிய நேரத்தைக் கடந்தும் பேருந்து வரவில்லை. வருமா என்பதும் தெரியவில்லை. அதனால் சோர்வடைந்த நான், அப்போது புறப்பட்டுக்கொண்டிருந்த, போளூர் வரை செல்லும் ஒரு தனியார் பேருந்தில் ஏறி, பின் இருக்கையில் இடம்பிடித்து உட்கார்ந்தேன். உடனே பயணச்சீட்டைக் கிழித்துக் கொடுத்து என் வருகையை உறுதி செய்துகொண்டான் அதன் நடத்துனன். இருந்தும் என்னுடைய கவனமெல்லாம் அந்த அரசுப் பேருந்தின் மீதே இருந்தது. நான் பின்னால் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தேன். போளூர் போனால் திருவண்ணாமலை செல்லும் எந்தப் பேருந்திலும் உட்காருவதற்கு இடம் கிடைக்காது என்பது உறுதி. அன்று ஏனோ அவ்வளவு கூட்டம். பேருந்தில் ஏறி நேர்த்திக்கடன் செலுத்த வந்தவர்கள்போல எல்லோரும் கிளம்பி வந்திருந்தார்கள். பேருந்து புறப்பட்டு, மெல்ல நகர்ந்தது; நிலையத்தைவிட்டு யோசனையுடன் வெளியே வந்தது. அப்போது கடைசியாக ஒருமுறை பின்னால் திரும்பிப் பார்த்த போது அந்த அரசுப் பேருந்து வருவது தெரிந்தது. என் மனம் துணுக்குற்றது. அதே நேரம், வெடிச் சத்தம்போல ஒன்று கேட்டது. நான் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அந்த அரசுப் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி சிலந்தி வலை போல விரிசலுற்று உடைந்து நொறுங்கியது” என்றார் அவர். அந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட வியப்பு இன்னும் அவரிடம் அடங்கியிருக்கவில்லை என்பது அவரது முகத்தில் தெரிந்தது.

47p4.jpg

சிறு அமைதிக்குப் பிறகு அடுத்த சம்பவத்தையும் அவர் சொன்னார், “விடுப்பில் வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன்புதான் அது நடந்தது. எங்கள் பத்திரிகை அலுவலகம் மூன்றாவது மாடியில் இருந்தது. அந்தக் கட்டடத்தின் முதல் மாடியில் ஒரு தனியார் வங்கி இயங்கி வருகிறது. அதன் நுழைவாயிலுக்கும், மேலே செல்லும் படிக்கும் மத்தியில், அந்த வங்கியின் ஏடிஎம் மையம் இருந்தது. வங்கிக்கும் அதற்கும் தனித்தனி காவலாளிகள். மாலையில் நான் அலுவலகம் செல்ல படி ஏறும்போது ஏடிஎம் மையக் காவலாளி வணக்கம் சொல்வான். அந்த நகரத்தில் அவ்வப்போது சாதிக் கலவரம் நடக்கும். குறிப்பாக எங்கள் அலுவலகம் இயங்கி வந்த பகுதியில்தான் அது தீவிரம் கொள்ளும். அதனால் அப்பகுதி எப்போதும் அரசாங்கத்தால் அறிவிக்கப்படாத பதற்றமான பகுதியாக இருந்தது. அப்படி கலவரம் நடந்த ஒருநாள் இரவு, எங்கிருந்தோ பறந்துவந்த ஒரு கல் அந்த ஏடிஎம் மையத்தின் கண்ணாடியைக் கச்சிதமாக உடைத்து நொறுக்கியது. இதனால் அந்தக் காவலாளி வருத்தத்தில் இருந்தான். ஒருநாள் என்னிடம் குறைபட்டுக்கொண்டான், “எந்த நாதேறுன்னுத் தெரியல, கண்ணாடிய ஒடைச்சிடுச்சி. ஒடைஞ்சி பத்து நாளு ஆவப்போவது இன்னும் கண்ணாடி போட்டுக்குடுக்க மாட்டேன்றாங்க” என்றான். அதற்குப் பிறகு ஒருநாள் பார்த்தபோது ஆட்கள் இரண்டு பேர் அதற்குப் புதுக்கண்ணாடியை பொருத்திக்கொண்டிருந்தார்கள். எனக்கு வணக்கம் சொன்ன காவலாளியின் முகத்தில் சந்தோஷக் களை தெரிந்தது. அதற்கு மறுநாள் இரவு அது. பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காகப் படி இறங்கி வந்தேன். அப்போது பணம் எடுக்கும் யோசனை வந்தது. ஏடிஎம் மையத்தின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனேன். அந்தக் காவலாளி உள்ளே ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். என்னைப் பார்த்ததும் “வெளிய ஊர்ப்பட்ட கொசு சார்” என்றான். அப்போதுதான் விளங்கியது கண்ணாடிக்காக அவன் ஏங்கியதன் ரகசியம். நான் பணம் எடுத்துக்கொண்டு திரும்பினேன். கதவை இழுத்துத் திறந்தபோது ஒரு சத்தம். கண்ணாடி நொறுங்கிக் கீழே கொட்டியது. எதன் மீதும் மோத வாய்ப்புஇல்லை. ஆனால் அப்படி நடந்தது. நான் திகைத்து நின்றுவிட்டேன். காவலாளி உடைந்த கண்ணாடியையும் என்னையும் பரிதாபத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். மறுநாள் அதற்காக மூவாயிரத்து ஐநூறு ரூபாயைத் தண்டமாகக் கொடுத்தேன்” என்றார்.

சற்று யோசனையுடன் காணப்பட்ட அவர் சொன்னார், “இந்தக் கண்ணாடிகளைப் பார்த்தாலே இப்போது அச்சம் தட்டுகிறது. அதற்கும் எனக்கும் ஏதோ உறவிருப்பது போலத் தோன்றத் தொடங்கிவிட்டது. அது பகை உறவா, நல்லுறவா... தெரியவில்லை. ‘டின் டிரம்’ படத்தில் வரும் சிறுவனைப் போல என்னை உணரத் தொடங்கிவிட்டேன். உடல் வளர்ச்சி தடைபட்டுள்ள சிறுவன் அவன். புறக்கணிப்பையும், துரோகத்தின் வலியையும் சுமந்த அவன் எப்போதும் தன்னுடன் ஒரு டின் டிரம்மை வைத்திருக்கிறான். அவனுடைய ஒரே சந்தோஷம் அதை இசைப்பதுதான். அதை யாராவது அவனிடமிருந்து பிடுங்கும்போது அவனுக்கு ஆத்திரம் வரும். ஆவேசத்தில் அவன் வீரிடும்போது அவன் பார்வையில்படும் கண்ணாடிகள் எல்லாம் உடைந்து நொறுங்கும்... ‘ரன் லோலா ரன்’ படத்தில் கூட இதுபோன்ற சம்பவம் ஒன்று வருகிறது...”47p5.jpg

ஏதோ சித்தம் கலங்கியவர்போல அவர் காணப்பட்டார். பேச்சுக்கூட அப்படித்தான் இருந்தது. அவர் கேட்டார், “மனிதர்களின் ஆன்மாக்களுக்கும் கண்ணாடிகளின் ஆன்மாக்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? நாம்தான் அதை உணரத் தவறிவிட்டோமா?”

“சமீபகாலமாக என் கனவுகளில்கூட கண்ணாடிகள் வருகின்றன. கண்ணாடியால் ஆன வீடு, கண்ணாடியால் ஆன அலுவலகம், கண்ணாடி பொம்மைகளாலும் பாட்டில்களாலும் நிறைந்த படுக்கையறைகள், கண்ணாடிச் சிதிலங்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் தெருக்கள், பனியாக உறைந்த நீர் நிலைகள், விரைத்த நிலையிலான மனித உடல்கள்... செய்தியாளர்களாகிய நாம் நடந்த சம்பவங்களை எழுதுகிறோம், ஏன் நடக்காத சம்பவங்களையும்கூட எழுதுகிறோம். ஆனால் கனவுகளை எழுதுவதுஇல்லை. அதற்கான மொழி நம்மிடம் இல்லை...”

நம்பிக்கை வற்றிய ஏளனப் புன்னகை ஒன்று அவரிடம் வெளிப்பட்டது. அவர் கேட்டார், “இன்று காலையில் நடந்த சம்பவம், அதை நீங்கள் நம்பவில்லை இல்லையா? என்னுடைய தவறால்தான் அது உடைந்திருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள். அப்படிஇல்லை, என் தவறு எதுவும் இல்லை. ஜெகன் இன்று மாலை என்னை வேறு ஒரு மருத்துவரிடம் அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருந்தான். ஒரு வாரமாகச் சவரம் செய்யாததால், நரை தாடி அதிகம் வளர்ந்துவிட்டிருந்தது. முகத்தைப் பார்க்கவே சகிக்க முடியவில்லை. அது இன்னும் என்னைத் தீவிர நோயாளியாகக் காண்பித்தது. கணவன் மனைவி இருவரும் அலுவலகம் போன பிறகு சவரம் செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தேன். வரவேற்பறையில் கைகழுவும் தொட்டிக்கு மேல் இருந்த கண்ணாடி அதற்கு உகந்ததாக இல்லை. ஜன்னல் வெளிச்சம் அதில் பிரதிபலித்ததால், முகம் சரியாகத் தெரியவில்லை. மேலும், அங்கு நின்றபடிதான் சவரம் செய்துகொள்ள முடியும். என்னால் அது இயலாது. அதனால் சின்னக் கண்ணாடி ஒன்றை அலமாரியிலிருந்து எடுத்து வந்து ஜன்னலில் மாட்ட முயன்றேன். அது நிற்கவில்லை. ஒரு வொயரைத் தேடி எடுத்துவந்து கண்ணாடியை ஜன்னல் கம்பியில் கட்டினேன். பிறகு பிளாஸ்டிக் நாற்காலி ஒன்றைக் கொண்டு வந்து ஜன்னலுக்கு எதிரே போட்டு உட்கார்ந்தேன். முகம் கண்ணாடியில் கச்சிதமாகத் தெரிந்தது. ஒரு மக்கில் தண்ணீரைக் கொண்டுவந்து வைத்துக் கொண்டு ரெடிமேட் ரேஸரால் சவரம் செய்யத் தொடங்கினேன். அந்த நிலை சௌகரியமாக இருந்தது. முகம் நரை நீங்கி பொலிவு பெற்றது. எல்லாம் முடியும் தருவாயில்தான் அது நடந்தது, கண்ணாடி மெல்ல இறங்கத் தொடங்கியது. நான் பார்த்துக் கொண்டிருக்கவே இறுகக் கட்டிய அந்த வொயரை அவிழ்த்துக்கொண்டு கண்ணாடி கீழே விழுந்தது; பல சில்லுகளாக உடைந்து நொறுங்கியது. நான் அதைத் தடுக்கவோ, கைகளை நீட்டி ஏந்திக்கொள்ளவோ செய்யாமல் உறைந்த நிலையில் அமர்ந்திருந்தேன். அது ஒரு குழந்தையின் விளையாட்டுப்போல இருந்தது. விழும்போது அதில் ஒரு சிரிப்புத் தோன்றி மறைந்ததையும் நான் பார்த்தேன்” என்றார் அவர்.  

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணாடியில் பாதரசம் இருக்கும், பூதமும் இருக்குமா.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.