Jump to content

முடி கழிஞ்சது... நரம்பு வலிச்சது... முகம் பெருசா ஊதிடுச்சு!'' - புற்றுநோயிலிருந்து மீண்ட வைதேகி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

" 'யாரையும் பார்க்கப் பிடிக்கலை. என் முகத்துல யாரும் முழிக்காதீங்க. என்னை நானே வெறுக்கிறேன்' என்ற என்னுடைய குரல்தான் இந்த வீட்டுச் சுவர் முழுக்க ஒலிச்சுட்டு இருந்துச்சு. என் தோற்றமும் உடல் ஏற்படுத்திய வலியும் என்னைச் சுற்றியுள்ள அன்பானவர்களை அடையாளப்படுத்திச்சு'' எனத் தன்னம்பிக்கை ததும்ப பேசுகிறார் வைதேகி. புற்றுநோயிலிருந்து மீண்டுவந்துள்ள மங்கை. 

வைதேகி

 

அன்பான கணவர், குறும்புக்கார மகள் எனச் சராசரி குடும்பத் தலைவியாக சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருந்த வைதேகியின் வாழ்க்கை, 2014-ம் ஆண்டில் தடம் மாறியது. வலி மிகுந்த அந்த நாள்களைக் கண்ணெதிரே கொண்டுவருகிறார். 

''நான் பிறந்து, வளர்ந்தது சென்னையில். படிப்பு முடிஞ்சதும் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை. காலையில் எழுந்து சுறுசுறுப்பாக வீட்டு வேலைகளை முடித்து, குழந்தையைப் பள்ளிக்குக் கிளப்பி, அலுவலகத்துக்கும் செல்லும் பல லட்சம் பெண்களைப் போன்றே என் வாழ்க்கையும் ஓடிட்டிருந்துச்சு. நான் எந்தக் காய்கறியையும் ஒதுக்காமல் சாப்பிடுவேன். ரொம்ப ஹெல்த்தியா இருக்கிறதா நம்பிட்டிருந்தேன். அந்த நம்பிக்கையில் கீறல் விழுந்துச்சு'' என்ற வைதேகி, கனத்த குரலில் தொடர்கிறார். 

வைதேகி

''ஒருநாள் என் வலதுபுற கழுத்துல கட்டி மாதிரி இருந்துச்சு. தொண்டையும் பயங்கரமா வலிச்சது. காது, மூக்குத் தொண்டை நிபுணரிடம் காண்பிச்சு, மாத்திரைகளைச் சாப்பிட்டேன். ஒரு துளி வலிகூடக் குறையலை. ஃபேமிலி டாக்டரிடம் போனேன். எஃப்.என்.ஏ.சி பரிசோதனை செய்யச் சொன்னாங்க. அந்தப் பரிசோதனை முடிவில் கேன்சர்னு தெரிஞ்சதும் குடும்பமே நிலைகுலைஞ்சுப் போச்சு. 'lymphoma' என்ற வகை புற்றுநோய் இரண்டாவது கட்டத்தை எட்டியிருந்துச்சு. கீமோதெரபி, ஸ்டெராய்டு, நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் ஊசிகள் என எல்லாமே கொடுத்தாங்க. அந்தச் சிகிச்சைக்கான பக்கவிளைவும் ஏற்பட்டுச்சு. தலைமுடியை கொத்துக் கொத்தாக இழந்தேன். நரம்புகள் பயங்கரமா வலிக்க ஆரம்பிச்சது. வயிறு ரொம்ப பசிக்கும். ஆனால், எதையுமே சாப்பிட முடியாது. நீர்ச்சத்தினால் முகம் ஊதிப்போகும். எடையும் அதிகமாக ஆரம்பிச்சது. கண்ணாடியில் என்னைப் பார்க்கவே பிடிக்கலை. பலமுறை கதறி அழுதிருக்கேன்'' என்றவர், சில நொடி மௌனத்துக்குப் பிறகு தொடர்ந்தார். 

வைதேகி

''என்னைவிட அதிகமா என் பொண்ணு உடைஞ்சுட்டா. அப்போ எல்கேஜி படிச்சுட்டிருந்தா. ஸ்கூலில் எல்லாரையும் அடிக்கிறது, யார் பேச்சையும் மதிக்காததுனு அவள் பிஹேவியர் மாறிடுச்சு. ஃபோன் பண்ணி கம்ப்ளைன்ட் பண்ணினாங்க. அப்போதான் என் பிரச்னையை மிஸ்கிட்ட சொன்னேன். அப்புறம் அவள் மேலே கேர் எடுத்து பார்த்துகிட்டாங்க. 'எங்க அம்மா வலிக்குனு அழறாங்க. அம்மாவைக் கட்டிப்பிடிச்சு நான் தூங்கவே முடியலை. பக்கத்து ரூம்லதான் தூங்கறேன்'னு மனசுல அடக்கி வைச்சிருக்குற எல்லா பாரத்தையும் மிஸ்கிட்டே சொல்லியிருக்கா. நான் மொட்டைத் தலையை மறைச்சுக்க தொப்பி போட்டுக்கிட்டதும் என் பொண்ணுக்குப் பிடிக்கலை. நான் பூ வெச்சுக்க முடியாததால், அவளும் வெச்சுக்க மாட்டா. அந்தக் காலகட்டத்தில் நானும் எல்லாரிடமும் கடினமாவே நடந்துப்பேன். அந்த நேரம் எப்படி ரியாக்ட் பண்றென்னே தெரியலை. என் கணவரும் குடும்பத்தாரும்தான் பார்த்துகிட்டாங்க. எனக்காக, என் கணவரும் மொட்டை போட்டுட்டு வந்தார். எல்லோரின் அன்புக்காகவது நான் சீக்கிரம் மீண்டு வரணும்னு நினைச்சுப்பேன். 

''நாலு மாசம் சிகிச்சையின் வலியை, ஒரு வருஷத்தும் மேலே அனுபவிச்சேன். அப்புறம் புது மனுஷியா வாழ ஆரம்பிச்சேன். சத்தான காய்கறிகளைச் சாப்பிட்டேன். உடம்பை ரொம்பவும் ஹெல்த்தியா பார்த்துகிட்டேன். கேன்சர் வந்துட்டாலே நாம செத்துப் போயிருவோம்னு நினைக்கக் கூடாது. அப்படி நினைச்சுட்டா அந்த வலியிலிருந்து மீண்டுவரவே முடியாது. முக்கியமா, மனக்குழப்பத்தை தவிர்க்கணும். வலி மிகுந்த காலகட்டத்தில் செத்துப்போயிடலாம்னு தோணும். வாழ்ந்து காட்டி மத்தவங்களுக்கு வழிகாட்டியாக இருக்கணும்னு நினைக்கணும். புற்றுநோய் எனக்கு நிறைய பாடங்களைக் கற்றுக்கொடுத்துச்சு. அன்பான நண்பர்களை அடையாளம் காட்டிச்சு. உறவுகளின் நம்பகத்தன்மையை உணரவெச்சது. 

வைதேகி

இப்போ என் கூந்தல் நல்லா வளர்ந்துடுச்சு. எல்லோரை மாதிரி இயல்பா வேலைக்குப் போயிட்டு, வீட்டையும் கவனிச்சுக்கிறேன். என் பொண்ணு ரொம்ப சந்தோசமா இருக்கா. மொட்டைத்தலையோடு இருந்த நாள்களில் நான் பூ வைக்காததால் என் பொண்ணு இப்போவரை பூ வெச்சுக்கிறதில்லே. என் மேல இவ்வளவு பாசமா இருக்கும் மகளுக்காகவும் என்னை அதிகமா நேசிக்கும் கணவருக்காகவும் புதுசா வாழத் தொடங்கியிருக்கேன். அதோடு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனைக கொடுத்து மனதளவில் திடப்படுத்த கிடைக்கும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் செய்யறேன். என் வாழ்க்கை நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்திருக்கு. அதை நாலு பேருக்குக் கற்றுக்கொடுக்கிறேன். வாழ்க்கை வாழ்வதற்கே. நாம நினைச்சால், சாவையும் ஈஸியா கடந்துடலாம்'' எனப் புன்னகைக்கும் வைதேகி முகத்தில் தன்னம்பிக்கையின் சுடர்.

https://www.vikatan.com/news/tamilnadu/119379-vaidehi-shares-her-painful-experiences-of-being-treated-for-cancer.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை வாழ்வதற்கே. நாம நினைச்சால், சாவையும் ஈஸியா கடந்துடலாம்''   தன்னம்பிக்கைக்கு  ஒரு   சபாஷ் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லட்ஷத்தில் ஒருவருக்கும் இப்படி தன்னம்பிக்கை வருவது அபூர்வம் ......!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.