Sign in to follow this  
நவீனன்

'90 சதவிகித பெண்கள் தங்கள் உடலை வெறுக்கின்றனர்'- ஏன்?

Recommended Posts

'90 சதவிகித பெண்கள் தங்கள் உடலை வெறுக்கின்றனர்'- ஏன்?

 

'90 சதவிகித பெண்கள் தங்கள் உடலை வெறுக்கின்றனர்', உடல் மீதான பெண்களின் சுயவெறுப்புக்கு அவர்களுடைய தாயின் பொறுப்பும் முக்கியமானது.

பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"13 வயதாக இருந்தபோது என்னை பார்ப்பவர்கள் வயதுக்கு மீறிய வளர்ச்சி என்று சொல்வார்கள். அப்போது 5.6 அடி உயரம் இருந்த என்னைப் பற்றி அம்மா மிகவும் கவலைப்படுவார். அதைப் பார்த்து என் உடல் மீது எனக்கு வெறுப்பு வரும். என் வயதில் உள்ள மற்றவர்களுக்கு இருந்ததைவிட அதிக கட்டுப்பாடுகளுக்கு காரணமான எனது தோற்றத்தை வெறுத்தேன்" என்கிறார் ஃபரீதா.

தற்போது 42 வயதாகும் ஃபரீதாவுக்கு, 30 ஆண்டுகளுக்கு பிறகும் அந்த நினைவுகள் பசுமையாக இருக்கிறது. "நான்கு குழந்தைகளுக்கு தாயான என் அம்மா, தனது மார்பக உள்ளாடையை அணிந்துக் கொள்ள என்னை வற்புறுத்துவார். 13 வயது சிறுமியான எனக்கு அது ஏற்படுத்திய கோபத்தையும் வலியையும் இன்னும் என்னால் மறக்கமுடியவில்லை. இதுபோன்ற பல்வேறு விடயங்கள் எனக்கு மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தின. என் உடல் மீதான சுயவெறுப்பை அதிகப்படுத்தின."

தீபா நாராயணனின் இந்தியப் பெண்களின் மெளனத்தை உடைப்போம் என்ற பொருள்படும் ''CHUP: Breaking the Silence About India's Women' என்ற புத்தகத்தில் ஃபரீதாவின் கதை சொல்லப்பட்டுள்ளது

அண்மையில் வெளியான இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஃபரீதாவின் தன் உடல் மீதான சுயவெறுப்புக்கு அவருடைய தாய்க்கும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்த்த மேலே குறிப்பிடப்பட்ட சில வரிகளே போதுமானது.

பெண்கள்படத்தின் காப்புரிமைDEEPA NARAYAN

சுமார் 600 பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளிடம் பேசிய தீபா, இந்தியாவில் 90% பெண்கள் தங்கள் உடலை நேசிப்பதில்லை, வெறுக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்தார்.

ராணியின் கதை

ராணி என்கிற பெண்ணும் தீபாவிடம் தனது அனுபவத்தை பகிர்ந்துக் கொள்கிறார். "அப்போது எனக்கு சுமார் 13 வயது இருக்கும். என் பிறந்த நாளை கொண்டாட வீட்டிற்கு வருமாறு தோழிகளிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தேன். அன்று என்ன உடை அணிந்திருந்தேன் என்பதுகூட நன்றாக நினைவிருக்கிறது. வீட்டின் மாடிப்படி ஏறும்போது ஒருவர் கீழே இறங்குவதைப் பார்த்தேன். அவருக்கு வழிவிடுவதற்காக நான் ஒதுங்கி நின்றேன். ஆனால் வேகமாக வந்த அவர் என் மீது மோதினார். என் தலை சுவரில் மோதியதில் எனக்கு மயக்கம் வந்துவிட்டது. அதற்குப் பிறகு நடந்த எதுவும் நினைவில் இல்லை."

சுப்: பிரேக்கிங் த சைலன்ஸ் ஆஃப் இண்டியா`ஸ் உமன் புத்தகத்தை எழுதிய தீபா நாரயணன்படத்தின் காப்புரிமைDEEPA NARAYAN Image captionசுப்: பிரேக்கிங் த சைலன்ஸ் ஆஃப் இண்டியா`ஸ் உமன் புத்தகத்தை எழுதிய தீபா நாரயணன்

"நான் கண் விழித்தபோது என்னை சுற்றி நின்ற குடும்பத்தாரின் கவலை என்ன தெரியுமா? "நான் இப்போதும் கன்னியா? அந்த மனிதன் என்னிடம் தவறாக நடந்துக் கொண்டானா? ஆம் என்றால் அடுத்து என்ன செய்ய வேண்டும்? இல்லை இது ஒரு இயல்பான விபத்தா? யாருக்கும் என்னை பற்றியோ, என் உடல், மன வேதனை பற்றிய கவலை இல்லை."

இந்த சம்பவம் தொடர்பான தனது கருத்தை தீபா சொல்கிறார், "இதுபோன்ற சூழ்நிலைகளே பெண்கள் தங்கள் உடலை வெறுக்க காரணமாகிறது."

98 சதவிகித பெண்கள் தங்கள் வாழ்க்கையில் எதாவது ஒரு கட்டத்தில் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதில் 95 சதவிகித பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்வது குடும்ப உறுப்பினர்களே என்பது தான் அதிர்ச்சியான செய்தி.

பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதேபோல் மற்றொரு உண்மை சம்பவத்தை தீபா பகிர்ந்துக் கொள்கிறார், "பெங்களூருவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கலந்துக் கொண்டார்கள். பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானவர்கள் எழுந்து நிற்கவும் என்று கேட்டுக்கொண்ட போது அங்கிருந்த அனைவருமே எழுந்து நின்றார்கள். ஒருவர்கூட அமர்ந்திருக்கவில்லை."

தீபா கூறுகிறார், "புனிதமாக கருதப்படும் வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள், வீடு, கடை, பொது இடம்… இப்படி எல்லா இடங்களிலும் பெண்கள் பாலியல் ரீதியான கொடுமைகளை எதிர்கொள்கின்றனர். அதுபற்றி பேச நான் அணுகியபோது அதை அவர்கள் பகிர்ந்துக் கொண்டார்கள்."

பிறருக்கு விருப்பத்தை ஏற்படுத்தும் பெண்களின் உடல் அவர்களால் ஏன் வெறுக்கப்படுகிறது?

பால்ய பருவத்தில் இருந்தே பெண்களுக்கு இதற்கான மனோபாவம் வளர்த்தெடுக்கப்படுகிறது என்கிறார் தீபா. சமூகத்தின் வார்ப்புகள் தானே நாம்?

பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

உடலை வெறுக்கும் பெண்கள்

"பொண்ணா லட்சணமா அடக்க ஒடுக்கமாக உட்கார வேண்டும்"

"இவ்வளவு இறுக்கமா உடை போடனுமா என்ன?"

எந்தவித காரணமும் இல்லாமலேயே வீட்டில் பெரியவர்கள், ஆண்கள், அம்மா, அப்பா, சகோதரர்கள் என அனைவரும் பெண்களின் உடல் தொடர்பாக அவர்களுக்கு கூறும் அறிவுரை தவறானது என்று சொல்ல முடியாது. ஆனால் அது பிஞ்சு மனதில் ஏற்படுத்தும் தாக்கம் என்னவாக இருக்கும்? தன்னுடைய வயதையொத்த சகோதரனுக்கோ வேறு ஒரு சிறுவனுக்கோ இந்தவித கட்டுப்பாடுகள் இல்லாத போது, தன்னுடைய உடலின் காரணமாக கட்டுப்படுத்தப்படும்போது பெண் குழந்தைகள் தங்களின் உடலை தாங்களே வெறுக்கத் தொடங்கிவிடுகின்றனர்."

தீபாவின் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் இதே போன்ற கட்டுப்பாடுகளை வாழ்க்கை முழுவதும் எதிர்கொண்டுள்ளனர். பெண்களுக்கான கட்டுப்பாட்டை அவர்களின் வயது கட்டுப்படுத்துவதில்லை. 7 வயது குழந்தையாக இருந்தாலும், 70 வயது மூதாட்டியாக இருந்தாலும் இந்திய பெண்களுக்கான கட்டுக்கள் மட்டும் தளராமலும், குலையாமலும் இருக்கின்றன.

பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தமன்னாவின் விருப்பம்

தீபாவின் புத்தகத்தின் ஒரு காதாபாத்திரம் தமன்னா.

தமன்னா நவீனகால யுவதி. தனக்கு பிடித்த நவநாகரீக உடைகளை அணிவதில் விருப்பம் கொண்டவர். ஆனால், இளைஞர்களின் சீண்டலுக்கு பயந்து, உடலை முழுவதும் மறைக்கும் ஆடைகளை அணிந்துக்கொண்டு நடன வகுப்புக்கு செல்ல முடிவெடுத்தார் தமன்னா.

தமன்னாவின் முடிவு தவறு என்று சொல்லும் ஷீலா, ஒரு துப்புரவுத் தொழிலாளி.

தனக்கு விருப்பமின்றி பிறருக்காக முழு ஆடை அணியும் தமன்னாவின் முடிவுக்கு ஷீலா எதிர்ப்பு தெரிவித்த காரணம் என்ன தெரியுமா?

ஷீலா சொல்கிறார், "ஆட்டோவில் கணவருடன் சென்றுக் கொண்டிருந்தேன். ஆட்டோவை நிறுத்தி போலிஸ்காரர்கள் சோதனை செய்தார்கள். ஆண் காவலர்கள் என் மார்பையும், இடுப்பையும் தடவி சோதனை செய்தார்கள். எனக்கு கோபம் வந்தாலும், என் கணவரை கைது செய்துவிடக்கூடாது என்று எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன்."

பெண்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஷீலா உரத்த குரலில் இறுதியாக என்ன சொன்னார் தெரியுமா? "அப்போது நான் புடவை அணிந்திருந்தேன். புடவை அணிவது மரியாதைக்குரியது, யாரும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டார்கள் என்று நினைக்கிறோம். ஆனால் நமது உடையைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. ஒரு பெண்ணின் உடல் மட்டுமே அவர்களின் இலக்கு."

அந்த ஏழு விஷயங்கள்

பெண்களை கட்டுப்படுத்தும் முக்கியமான ஏழு விஷயங்களை தீபா பட்டியலிடுகிறார்.

  • பெண்களின் உடல், அவர்களின் மெளனம்
  • பிறரை திருப்திபடுத்தவேண்டும் என்ற பெண்ணின் விருப்பம்
  • பெண்ணின் பாலினம்
  • தனிமை
  • ஆசைகள்
  • கடமை தொடர்பான பொறுப்புணர்வு
  • பிறரை சார்ந்து இருப்பது

இந்தியாவில் ஒரு பெண் எப்படி பார்க்கப்படுகிறார்?

ஒருவரின் மகள், ஒருவரின் தாய், ஆணின் மனைவி, குடும்பத்தின் குலவிளக்கு, ஒருவரின் சகோதரி அல்லது மைத்துனி. இந்தியப் பெண்களின் உணர்வுகள், உறவுகள் என்ற முகமூடிகளால் பின்னிறுத்தப்படுகிறது. இந்தியப் பெண் தன் வாழ்க்கையை தனக்காக எப்போதுமே வாழ்வதில்லை.

(அமெரிக்காவில் வசிக்கும் தீபா நாராயண், வறுமை, பாலின பாகுபாடு போன்ற முக்கிய விஷயங்களில் 15 க்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ளார். தீபா, ஐ.நா மற்றும் உலக வங்கியுடன் நீண்ட காலமாக இணைந்து பணியாற்றி வருபவர்.)

http://www.bbc.com/tamil/global-43440326

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this