Jump to content

துவரங்கேட்டியும் அகப்பை காம்பும்


Recommended Posts

 

வேலாயுததத்தின் வீடு.

 வீட்டை சுற்றி  பலா கமுகு பப்பாசி என மரங்கள் சூழ்ந்து சோலையாய் இருக்கின்றது,பின் பக்கம் மாதுளையும் தேசிமரமும், மரத்துக்கடியில் அடுப்பெரித்த சாம்பலை வேரை கரையான் அரிக்கமல் கொட்டிவிடுவது வழக்கம். மத்தியாண வெக்கைக்கு  வீட்டு நாய்களும் படுத்திருக்கும்  கோழிகளும் சாம்பல் அவ்வப்போது சம்பல் குளிக்கும். 

முன்பக்கம்  சுவர் நீட்டுக்கும் நந்தியாவட்டையும்       பக்கவாட்டில் குரோட்டன்களும் நாலுமணிப்பூச் செடிகளும் எப்போதும் செழிப்பாக இருக்கும் . வீட்டுக்கு ஈசான மூலையில் கிணற்றில் இருந்து குளிக்கும் தண்ணி சுவரோர பூச்செடிகளை எப்போதும் பசுமையாக வைத்திருக்கின்றது.. வீட்டு வாசலுக்கு இரண்டுபக்கமும்  திண்ணைகள் மத்தியாணத்திலும் குழுமையாக இருக்கும்.. திண்ணைக்கு நேர முன்னுக்கு பலாமரம்  முற்றத்தை நிழலாக வைத்திருக்கும்.

வேலாயுதத்துக்கு ஒரு பொடியன் பதினொரு வயதிலிருக்கின்றான். வைரவநாதன். வீட்டுப்பெயர் நாதன். நாதனின் நண்பன் அடுத்ததெருவில் இருக்கும் சிவன் என்கின்ற சிவனேசன்.

சிவன் அன்று பள்ளியால் வந்ததும்  கழுசானைக் கழட்டி ஒருகாலை வெளியே எடுத்து அடுத்தகாலால் தூக்கி எத்திவிட்டான் கழுசான் கணக்காக உடுப்பு போடும் கொடியில்    விழுந்தது. அனேகமாக ஒற்றைக் காலால் எத்திவிடும் கழுசான்கள் சரியான இடத்தில் விழும்.  அன்றும் அப்படிஎத்திவிட்டு வீட்டுக்கு போடும் கழுசானை மாற்றிக்கொண்டு குசினிக்குள் போய் அம்மா போட்டு மூடிவைத்த சாப்பட்டை அவசரமாக விழுங்கிவிட்டு நாதன் வீடு நோக்கி விழையாட வெளிக்கிட்டான்.

 வழமையாக நாதன் வீட்டை போனதும்   திண்ணையில் கொஞ்ச நேரம் இருந்து வைரவநாதன் வந்ததும் அவனோடு போய் பிள்ளையார் கோயில் மரத்தடியில் விழையாடுவார்கள். அன்று படலையை துறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும் திண்ணையில் வேலாயுதம்  கையில் உழவுமாட்டுக்கு அடிக்கும் துவரம் கேட்டியுடன் உரத்த குரலில் கததுகின்றார். முன்னால் ஊமையன் பிலாமரத்தடியில் நீ அடித்தாலும் பரவாயில்லை என்று ஏட்டிக்கு போட்டியாக கத்துகின்றான். 

ஊமையனின் குரல் ஆ.. ஊ. என்று மட்டுமே வரும் முகபாவனைகளும் கை அசைவுகளும் பதில் வார்த்தைகளை விட ஆவேசமாக இருக்கின்றது.. கடும் காற்றில் கமுக மரங்களின் அசைவுகள்   முறிந்துவிடும போல் இருக்கும் ஆனால் முறியாததை காற்று நின்ற பின்தான் உணரமுடியும். அதுபோல் ஊமையன் சொல்வது இரவு நித்திரைக்கு பாயில் படுக்கும் போது ஒருவேளை உணரமுடியும்.

வேலாயுதத்துக்கு பின்னால் அவரின் மனிசி தெய்வானையக்க வாசல் கதவு நிலைக்கு முண்டுகொடுத்துக்கொண்டு நிற்கின்றா.  வழமையாக அந்நேரத்துக்கு தேசிமரத்தடியில்  படுத்திருக்கும் நாய்  ஊமையனுக்கு அருகில் நின்று புரியாத புதிராக வேலாயுதத்தைப் பார்த்துக்கொண்டு நிற்கின்றது. 

படலையை துறந்துகொண்டு போன சிவன்   வீடடு படலைக்கும் முற்றத்துக்கும் இடையில் நின்ற செவ்வரத்தம் பூ மரத்தோடு நின்றுவிட்டான்..வேலாயுதத்தை பார்க்க அவனுக்கும் பயமாய் தான் இருந்தது.. துவரம் கேட்டியால் தனக்கும் அடித்துவிடுவாரோ என்ற பீதி சம்மந்தமில்லாமல் வந்தது.

ஊமையனுக்கு வயது 45 க்கு மேலிருக்கும். அவருடைய குடும்பம் எங்கிருக்கின்றது என்று யாருக்கும் தெரியாது. நாலுவருடத்திற்கு முன்பு எங்கிருந்து வந்தார் என்றும் தெரியாது. ஊரில் முக்கால்வாசிப்பேர் அவர் பால் அன்பாகவே இருப்பார்கள்.ஒருவித இரக்கத்துடன் கூடிய அன்பு. பக்கத்தில் பிள்ளையார் கோயிலில் பொங்கினாலும் சரி, அயல் வீடுகளில் அந்தியோட்டி  துவசம் பாறணை என்றாலும் அயலவர்கள் கூப்பிட்டு சாப்பாடு கொடுப்பார்கள். தோட்க் காவலில் நின்றால் சிலர் சைக்கிளில் சாப்பாடு கொண்டுபோய் கொடுப்பார்கள்.

தெய்வானையக்க சற்று உரத்த குரலில்          அவன்தான்    நாலுவருசமா இங்க தோடடக் காவிலில் நிக்கிறானே அவன்ர சம்பளததை கொடுத்துவிடுங்கோவன். இந்த பாவம் எல்லாத்தையும் எங்கபோய் கழுவிறது....

வேலாயுதம் அண்ணை இப்படி இருந்து ஒருபோதும் பார்த்ததில்லை.  ஊமையன் எங்கள் ஊருக்கு வந்ததில் இருந்து அவருக்கு சாப்பாடு கொடுத்து உதவ பலர் இருந்தாலும் இருப்பிடம் வேலை கொடுக்க யாரும் முன்வரவில்லை. வேலாயுதமண்ணை முன்வந்தார். தன் கூடவே வைத்திருந்தார். கழிவாற்றங்கரையில் உள்ள அவரது தோட்டக் கொட்டிலில் தங்கவைத்து தோட்டக் காவலுக்கும் வைத்துக்கொண்டார். அவர் வீட்டில் உள்ளவர்கள் என்ன உண்டு குடிக்கின்றார்களோ அதையே ஊமையனுக்கும் கொடுத்தார்..

என்ன நடந்திருக்கும்...? சிவன குழம்பியபடியே அவனுள் பல கேள்விகள்.. 

 ஊமையனுக்கு மலேரியா வரும்போதெல்லாம் சைக்கிளில் பின்னுக்கு ஏத்திக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு மருந்தெடுக்க பலமுறை போனதை பார்த்திருக்கின்றான்..

ஒருமுறை பிள்ளையார் கோயிலடியில்        கிளித்தட்டு விழையாடிய பொடியள் ஊமையனோடு சேட்டை விட்டு ஊமையன் குழம்பியடித்தபோது அந்த இடத்தால் வந்த வேலாயுதமண்ணை கோபத்துடன் உறுமினார்..

யாராவது ஊமையனோடு சொறிராத்தினால் துவரங்கேட்டியல் விளாசுவன்....

அதற்கு பிறகு ஒருவரும் சொறிச்சேட்டை செய்வதில்லை.

என்னமோ பெரிய பிரச்சனை.. நாதன் வெளியில் வந்தால் தான் அறியலாம் அவன் என்னும் குசினிக்குள்ள தின்னுறான் போல கிடக்கு.. திண்ணையை கடக்க சிவனுக்கு தைரியம் இல்லை.

முதல்ல இந்த கம்ப அங்கால வையுங்கோ..தெய்வானையக்க துவரம்கேட்டியை இழுத்து கதவுக்கு பின்னால் வைத்துவிட்டா

அப்பாடா என்று சிவனுக்கு கொஞ்சம் நிம்மதி..

கொஞ்ச நேரம் கழித்து நாதன் வண்டியை தடவிக்கொண்டு வெளிய வந்தான்.

அம்மா கோயிலடிக்கு போட்டு வாறன் என்று பதிலுக்கு காத்திராமல் கிளம்பினான்..

போறவளியில் சிவன் கேட்டான் .. என்ன பிரச்சனை?

ஊமையன் வேணுமென்று தோட்டத்து கண்டாயத்தை திறந்து விட்டுட்டான்.  இரவு மாடு பாய்ஞ்சு எல்லாத்தையும் சுத்தமா துடைச்சு மேஞ்சுட்டுது.. அப்பா வேலையை விட்டு போக சொல்லிட்டார் அவன் காசு கேட்டுக்கெண்டு நிக்கின்றன்.

குடுக்க வேண்டியதுதானே ?

பயிர் அழிஞ்சதுக்கு சம்பளக்காசு தான் மிச்சம் எண்டுறார் அப்பா..

ஏன் வேணுமெண்டு துறந்து விட்டவர்? யார் கண்டு பிடிச்சது ?

சிங்கமண்ணை கருக்கல்ல வயலுக்கு போகேக்க மாட்ட உள்ள விட்டு கண்டாயத்த சாத்தியிருந்தத பார்த்து ஊமையன எழுப்பி மாட்ட விரட்டினதெண்டு மூர்த்தியண்ணைக்கு சொன்னவராம்.

அப்படி இருக்காது என்றான் சிவன்

டேய் எனக்கும் ஊமையனை பாரக்க பாவமாய் இருக்கு ஒண்டு சொல்லவா ? யாரெட்டையும் சொல்லாத

ம்..

இரவு சாப்பாடு கொடுத்திட்டு வரேக்க நான்தான் கண்டாயத் தடியை கொழுவ மறந்துட்டன்..

டேய்...

ஓமெடா ...... உமையன் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள இரண்டு மாடுகள் உள்ள போட்டுது.. சாப்பிட்டு கொஞ்ச நேரத்தால ஊமையன் படுக்க போகேக்க கண்டாயத்த பாத்து மாடு உள்ளுக்கு இருக்கிறது தெரியாம சாத்தி விட்டான்..

நீதான் மறந்திட்ட எண்டுறது அவருக்கு தெரியுமே !

ஓம் ஆனா சொல்ல மாட்டார்.. அப்பா என்க்கு துவரம்கேட்டியால அடிச்சுப்போடுவார் என்று ஊமையனுக்கு பயம்..

டேய் பாவமெடா  பேசாம சொல்லிவிடடா..

அடிச்சே சாக்காட்டிபோடுவார்..

நீ இந்த பத்தேக்க ஒளிஞ்சிரு நான் தண்ணி குடிக்கிறது போல போய் கொம்மாட்ட சொல்லுறன்.. கொப்பற்ர கோவம் போனதும் பொழுதுபடேக்க வீட்ட போவம்.. எங்கட அப்பாவ கூட்டிக்கொண்டு போவம்...

ஒருமாதிரி சம்மதித்தான் நாதன்

சிவன் பயத்துடன் நாதன் வீட்டை போனான்

 தெய்வானையக்க தண்ணி வேணும்

குசினிக்க கிடக்கு எடுத்துக் குடி..

தெய்வானையக்காவை குசினிப்பக்கம் வர வைக்கோலாது போல கிடக்கே !

கையெல்லாம் மண்.. வாத்து தாங்கோ..

தெய்வானையக்க பின்பக்கம் போக அவ பின்னாலயே போய் குசினிக் கதவடியில் வைத்து நாதன் சொன்னதை சொன்னான் சிவன்

எங்க அந்த கழுசடை ?

பயத்தில எங்கட வீட்டை போறான் இரவு வாறானாம்

சொன்னது தான் சிவன் முன்பக்கமாக போகாமல் பின்பக்கம் வேலிக்குள்ளால பூந்து கோயில் நோக்கி விரைந்தான்..

சிவனும் நாதனும்  பத்தைக்குள்ள மறைந்திருந்து தகப்பன் துவரம் கேட்டியுடன் வருகின்றாரா என்று பதபதைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்...

ஏன்டா கொம்மா சொல்லியிருப்பாவே.. என்னும் கொப்பர காணேல்ல

அதுதாண்டா நானும் யோசிக்கிறன்..

ஒரு மணித்தியலத்தின் பின் படலையை திறந்துகொண்டு வேலாயுதத்தின் சைக்கிள் வயல்பக்கம் புறப்பட்டது.. பின்னால  ஊமையன் இரண்டு கைகளையும் கரியரில் இறுக்க பிடித்தபடி இருந்தார் ...

ஊமையனும் தகப்பனும் சமாதானமாகினது பெரும் நிம்மதியாய் இருந்தாலும் இரவு என்ன பூசை நடக்கும் என்ற பீதி நின்றபாடில்லை..

டேய் கொம்மாட்ட முதல் போவம்.. என்று பிள்ளையார் கோயிலடி பத்தையை விட்டு தெய்வானையக்காவிடம் நாதனை இழுத்துக்கொண்டு போனான் சிவன்..

தெய்வானையக்க அடுப்பு ஊதுற குழலால குசினிக்குள்ள புகைக்கிற அடுப்பை ஊதிக்கொண்டிருந்தா..

நீ குசினிக்குள்ள போடா என்றான்..

நாதன் திண்ணையோட நின்றுவிட்டான்.. முதல் ஒருக்கா பயித்தங்கொடியை பாரடா என்று நாதனிடம் சொல்லிவிட்டு உரமெடுக்க போய்வாறதுக்குள்ள ஆற்றங்கரை கூழா மரத்தில் ஏறி குழம்பழம் தின்ன குரங்குகள் பயித்ததங்கொடிகளை மொட்டை அடிச்சுபோட்டுது. அண்டைக்கு தகப்பன் துவரங்கேட்டியால் இழுத்த குறி என்னும் குண்டியில இருக்கு.  குறுக்க வந்த தெய்வானையக்காவுக்கும் முதுகில ஒண்டு விழுந்தது. 

நாதன் தகப்பன் வாறாரோ என்று படலையும் பார்த்தபடி திரும்ப அகப்பைக் காம்போடு தாய் குசினிக்குள்ளால வாரவோ எண்டு இரண்டுபக்கமும் மாறிமாறி பார்த்து முழுசிக்கொண்டிருந்தது சிவனுக்கு பாவமாக இருந்தது. 

பொழுதுபட்டுவிட்டது. இனி சிவனும் நிக்கேலாது..  நாதனை விட்டு போறது பாவமாக இருந்தது. இருந்தாலும் ஒன்றும் செய்யேலாது.. 

நான் போறன்டா என்றுவிட்டு சிவன் வெளிக்கிட்டான். படலைதாண்டி சொட்டு தூரத்தில் நாதன் அம்மா அம்மா என்று குழறுவது கேட்டது.. இனி செய்யமாட்டன் அம்மா என்று குழறுவது கேட்டது.. 

விடிய நாதன் பம்மிக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கு வெளிக்கிட்டு வந்து சிவன் வீட்டு படலையடியில் சிவனுக்கு காத்துக்கொண்டிருந்தான்..

சிவனின் தகப்பன் சிற்றம்பலத்தார் ஆத்திப் பட்டைகளை காலில் உழக்கி கையால் ஆத்திநாரை உரித்துக்கொண்டிருந்தார்.. நாதனைக் கண்டதும் 

என்னடா இரவு நல்ல பூசைபோல கிடக்கு.. நாதன் முழுசிக்கொண்டு நிண்டான்

ஏண்டா கொப்பன் கஸ்டப்பட்டு பயிக்கொடி வளர்த்தா அதன மாட்டுக்கும் குரங்குக்கும் தின்னக் குடுத்தா என்னத்த உருப்படுறது ?  அத்தோட சிற்றம்பலத்தார் உரித்த ஆத்தி நாரை எடுத்துககொண்டு பின்பக்கம் போய்விட்டார்..

சிவனும் நாதனும் பள்ளிக்கூடத்துக்கு நடந்துகொண்டே

ஏன்டா காலம கோயில்கு போய் வாறியோ? திருநூறு எல்லம் வைச்சிருக்கு

இல்லடா அம்மா பூசிவிட்டா..

ஏன்டா கொப்பரும் அடிச்சவரோ ?

இல்லை.. அம்மா அடிச்சதோட அழுகொண்டு சாப்பிடாம நித்திரயாபோனன்.. அப்பா ஆத்திரத்தோட தான் வந்தவர் ஆனா அம்மா அடிச்சு ஆழுதுகொண்டு படுத்திட்டதால அப்பா இரவு பத்துமணிபோல எழுப்பி சாப்பிட வைச்சார்.. ஒண்டும் சொல்லேல்ல.. 

ம்.. என்றான் சிவன் எதிர்பார்த்தது போல.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவுக்கு துவரம் தடி,அம்மாவுக்கு அகப்பை காம்பு .....வீட்டுக்கு வீடு வாசல்படி.....! வாங்கிற அடியில வரி வரியாய் வீங்கி ரத்தம் எட்டிப் பார்க்கும். எல்லாம் கொஞ்ச நேரம்தான்....!

நறுவிசான கதை .....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, சண்டமாருதன் said:

என்னடா இரவு நல்ல பூசைபோல கிடக்கு.. நாதன் முழுசிக்கொண்டு நிண்டான்

துவரம் தடியை விட அகப்பைக் காம்பு பரவாயில்லை.

நாங்களும் அகப்பைக் காம்பால் எத்தனை அடி வாங்கி இருப்பம்.

என்ன அம்மா அடித்து ஒருநாளும் அழுததில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகப்பைக்காம்பு , கேட்டிக்கம்பு , பூக்கம் பாளைகள், பனைமட்டை , பிரம்பு என்பன பிள்ளைகளை நல்ல பிரஜைகளாக்கியது எனலாம் அந்தக்காலத்தில் அதென்னவோ அம்மா ,அப்பா அடித்ததெல்லம் வலித்ததில்லை இதுவரைக்கும் .

Link to comment
Share on other sites

எனக்கென்னமோ, ஏறத்தாள பகலவன் தனது பதிவில் குறிப்பிட்ட சுமை தான் இங்கும் பேசப்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது? சிறுவன் தன்னால் ஊமையினிற்கு அடிவிழுந்ததையும், அதற்கான சரியான தண்டனையில் இருந்து தான் தப்பித்துவிட்டேன் என்றும் நினைக்கும் ஒரு குற்ற உணர்ச்சியாக நேரடியாகப் புரிந்து கொள்ளினும்,  இல்லையேல் குறியீடாக ஒரு சமூகத்தின் குற்ற உணர்ச்சியாகப் புரிந்து கொள்ளினும் பேசப்படுவது குற்றவுணர்ச்சி சுமக்கும் சுமையே என்று தோன்றுகிறது.

மேலும், குறியீடோ நேரடியோ, அது இன்றைக்குத் தான் குற்ற உணர்ச்சி. குற்றம் நடந்தபோது பச்சைப்பலேலென்ற தோட்டங்களும், கொழுத்த மாடுகளும், காட்சியிலும் நறுமணத்திலும் கிறங்கடித்த பூங்கன்றுகளுமாக குற்றம் நடந்த இடம் அன்றைக்கும் இன்றையும் கிழர்ச்சியூட்டுவதாகவே உள்ளுரப் பதிந்து கிடக்கிறது என்பதையும் உள்ளடக்கியுள்ளது அற்புதம்.

தொடர்ந்து எழுதுங்கள் சுகன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு துவரங்கேட்டியுமில்லை அகப்பைகாம்புமில்லை....
ஒன்லி பூவரசங்கேட்டிதான். செய்த திருகுதாளத்திற்கேற்ப பூவரசம் மரத்திலை கம்புகள் முளைச்சிருக்கும். எந்த கம்பு தேவையெண்டதை தெரிவு செய்யும் பாக்கியம் அண்ணருக்கும் அம்மாவுக்கும் தான் இருக்கு..tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

அம்மா அடித்து ஒருநாளும் அழுததில்லை

கோழி மிதித்து குஞ்சு முடம் ஆகிவிடாது.

சண்டமாருதன்,

பத்தி நன்றாக இருக்கிறது.

ஊமையை மையப்படுத்தி கதை சொல்லி இருந்தால் இதைவிட நன்றாக இருந்திருக்கும்.

உங்களுக்குஅதிகம் பிடிக்குமோ? இரண்டு இடத்தில்விளையாடிஇருக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சண்டமாருதன் அனைவரையும் சம்பவம் இடம்பெற்ற சூழலுக்கு அழைத்துச் சென்ற விதம் அருமை. அன்றைய அப்பாக்களினதும் அம்மாக்களினதும் அடியும் கண்டிப்பும்தான் இன்றைய நாம் வாழும் கட்டுப்பாடான வாழ்க்கைமுறை.
அதுசரி எப்படி வேலாயுதமும் ஊமையனும் சமாதானமானார்கள். அன்று அகப்பைக்காம்புகள் மறக்கமுடியாது. நல்லதொரு பதிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடும், வளவும், தோட்டமும் துரவும் அப்படியே கண்முன்னால் வந்தது. செய்யாத குற்றத்திற்கு ஊமையனுக்கு தண்டனை கிடைக்கக்கூடாது என்று இள வயதில் நினைக்கும் அளவிற்கு பண்புடன் வளர்ந்தவர்களுக்கு அகப்பைக் காம்பால் அடி போடாமல் விட்டிருக்கலாம். ஆனாலும் அடி விழும் என்ற பயமே பலரை குழப்படிகள் செய்யாமல் தடுத்தது என்பதும் உண்மைதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துவரம்கேட்டி எண்டால் என்ன சண்டமாருதன்.இதுவரை நான் அச் சொல்லைக் கேல்விப்பட்டதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது தான்....வாசித்து முடித்தேன்....சண்டமாருதன்!

எனக்கும் இது போல சில...சம்பவங்கள் நடந்திருக்கு!

அகப்பைக் காம்பு...அதிகம் இல்லாவிட்டாலும்...மிளகாய்த் தூள் வரைக்கும் போயிருக்கு!

இருந்தாலும் இந்த அப்பா மாரின் அன்பு...மிகவும் வித்தியாசமானது தான்!

கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வரும்போது...சில வேளைகளில் இரவாகி விடும்!

ஒழுங்கையில் திரும்பி...வீட்டுக்குப் போகும் வழியில்...அப்பா..வாசலடியில்..நின்றது ...நிலவு வெளிச்சத்தில் மெல்லிதாகத் தெரிந்தது!

வீட்டுக்குள் சென்று...சைக்கிளை நிப்பாட்டும் போது..அம்மா..தான்..தம்பி..ஏனப்பு இவ்வளவு நேரம்! ரோட்டில..ஆமிக்காரர் தொல்லை...ஒரு பக்கம் என்று கேட்க.....அப்பா..படுக்கையறையில் இருந்து ....என்ன...துரை...வந்திட்டார் போல...என்று கேட்பதும் கேட்கும்!

இப்படித் தான் ....யாழ்ப்பாணத்துத்...தகப்பன் மகன் உறவு இருக்கும்!

தொடர்ந்தும்  எழுதுங்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இதில் இதில் ஊமையனின் பாத்திரமே பிடித்தது.


சிறுவயதில் நான் இவரை போல பலரை கண்டுள்ளேன். இவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? என எந்தவித விபரமும் தெரியாது? ஆனல் குடும்பத்தில் ஒருவராக இருப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

துவரம்கேட்டி எண்டால் என்ன சண்டமாருதன்.இதுவரை நான் அச் சொல்லைக் கேல்விப்பட்டதில்லை.

இதுக்குத்தான் சொல்லுறது பிள்ளையளை அப்பப்ப அடிச்சு வளர்க்கோணுமெண்டு...:cool:

Link to comment
Share on other sites

 

கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்.

 

விருப்பு புள்ளியிட்டும், தங்கள் அனுபவத்தோடு தொடர்புபடுத்தி கருத்திட்டுள்ள அனைவருக்கும் நன்றிகள். 

நீங்கள் எழுதிய பின்னூட்டங்களுக்காக சில குறிப்புகள். 

நான் கதை என்று எதையும் இதுவரை எழுதி பதிந்தில்லை. இதுதான் முதன் முதல் முயற்சித்தது..

------

ஊமையனும் வேலாயுதமும் சமாதானமானபோது சிவன் பக்கத்தில் இல்லை. அதானால் விபரிக்க முடியவில்லை.

--

மேலும் சிவன் 1987ல் ஊரைவிட்டு வெளியேறிவிட்டான். பின்னர் அறிந்துகொண்டவைகள்...

 

1988 ல் வேலாயுதம் அண்ணனோடு வயலில் நின்று வேலைசெய்த இரண்டு இளம் பெடியள் தூரத்தில் ரோந்து வந்த இந்திய இராணுவத்தை கண்டு பயத்தில் காடுநோக்கி ஓடியுள்ளனர். அவர்களை புலிகள் எனக் கருதிய இந்திய இராணுவத்தினர் சுட்டுள்ளனர். வெடிச்சத்தம் கேட்டதும் வேலாயுதம் அண்ணனும் பெடியள் பின்னால் ஓடியுள்ளார். பெடியள் இருவரும் தப்பிவிட்டனர். காட்டு  எல்லையை எட்ட முன் வேலாயுதமண்ணை முதுகில் வெடிபட்டு இறந்துபோனார். அன்று அவர்கள் ஓடியிருக்கத்தேவையில்லை என்று எல்லோரும் கதைத்துக்கொண்டதாக தகவல். 

 

1991 இல் நாதன் தாய்க்கு உதவியாக வவுனியாவில்  பேக்கரி ஒன்றில் வேலைசெய்தபோது  சந்தேகத்தின் பெயரில் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு விசாரணையின் போது அடித்து கொல்லப்பட்டார். 

 

அதே ஆண்டு தெய்வானையக்க நோய்ப்பட்டு இறந்துபோனார்.

 

1993 ல் ஊமையனை மடுக்கோவில் முகாமில் கண்டதாக சிலர் சொல்லியுள்ளனர். தற்போது இருக்கின்றாரோ இல்லையோ தெரியாது.

 

வேலாயுதமண்ணை வளர்த்த நாய் சிற்றம்பலத்தார் அரவணைப்பில் சில வருடங்கள் இருந்தது பின்னர் செத்துப்போனது.

 

 தெய்வானையக்காவின் சொந்தக்காரரின் பராமரிப்பில் காணி உள்ளது. வேலாயுதமண்ணை நட்ட பல மரங்கள் என்னும் காணியில் நிற்கின்றது.

 

ஊரில் தற்போது சிற்றம்பலத்தார் மட்டும் அதேகாணியில் இருக்கின்றார். ஒருகால் ஏலாது இருந்தும் தன்னாலான வரை தென்னம்பிள்ளை வாழை தேசிமரம் நட்டு  பாராமரித்துவருகின்றார்.----

சில பாதிப்புகளும் உயிர்வாழும். சிவனைப்பொறுத்தவரை நாதன் அடித்துக்கொல்லப்பட்டது அவனோடு கூடவே வாழும் ஒரு சம்பவம். அதை ஜீரணித்து கடந்துசெல்லுதல் முடியாதபோது நிகழ்வுகள் அன்றாட வாழ்வோடு தங்கிவிடுகின்றது.

வேலாயுதம் அண்ணன் சுட்டுக்கொல்லப்பட்டது ஒரு தனிமனிதனின் சரீரத்தின் அழிவு அல்ல. அந்த சரீரததை உயிரற்றதாக்கி அகற்றும் போது அவர்வாழ்ந்த பூமியில் ஒரு வெற்றிடம் ஏற்படுகின்றது. அவ்வெற்றிடத்தில் அவரால் பாராமரிக்கப்பட்ட மரங்கள் தோட்டங்கள் மாடுஆடுகள் நாய்கள் அவரை அண்டி வாழ்ந்த மனைவி மகன் எல்லோரது துயரமும் தொடர்கதையாகின்றது. 

------

நாதனின் மரணத்திற்கு முந்திய சிறுபிராயத்து நிகழ்வுகளின் நினைவே துவரங்கேட்டியும் அகப்பைக்காம்பும். பின்னர் நடந்த சம்பங்களை கதையாக தொடர விருப்பமில்லை. அதனால் குறிப்பாக குறிப்பிட்டுள்ளேன். 

------

குறியீடுகள்:

 

ஊரில் உள்ளவர்களின் பெயர்கள் பொதுவாக வணங்கும் கடவுள்களோடு தொடர்புபட்டே இருக்கும். உதாரணமாக ஊரில் மயில்வாகனம் கந்தசாமி வேலும் மயிலும் பொன்னம்பலம் பெருமாள் கணபதி கார்த்திகோசு என்று பெரும் பட்டியலை தொடரலாம்.. கதையில் பெயர்களை இந்த அமைப்பில் இருந்து மாற்றவில்லை. அதுவே குறியீடாகவும்  அமைகின்றது. எம் மண்ணில் பல உயிர்கள் கடவுள்கள் சார்ந்த தத்துங்களை விட உயர்ந்தது என்ற நிலையில் பிரிந்துள்ளது என்பது வாழ்வியல் சார்ந்த எனது நம்பிக்கை. 

-----

துவரம் கேட்டி என்பது துவர மரத்தில் வெட்டி எடுக்கும் தடி.(துவரம்பருப்புச் செடி வேறு) கறுப்பு நிறத்தில் இருக்கும். அடித்தால் லேசில் உடையாது ஆனால் மிகவும் வலிக்கும். தடிகளில் அதுவே அதிகம் வலிக்கும் என்பார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சண்டமாருதன் said:

வேலாயுதம் அண்ணன் சுட்டுக்கொல்லப்பட்டது ஒரு தனிமனிதனின் சரீரத்தின் அழிவு அல்ல. அந்த சரீரததை உயிரற்றதாக்கி அகற்றும் போது அவர்வாழ்ந்த பூமியில் ஒரு வெற்றிடம் ஏற்படுகின்றது. அவ்வெற்றிடத்தில் அவரால் பாராமரிக்கப்பட்ட மரங்கள் தோட்டங்கள் மாடுஆடுகள் நாய்கள் அவரை அண்டி வாழ்ந்த மனைவி மகன் எல்லோரது துயரமும் தொடர்கதையாகின்றது. 

 

இந்திய இராணுவகாலத்தில் ,இந்திய வானொலிகள் வரும்  'வெற்றிமாலை', 'அன்பு வழி' போன்ற நிகழ்ச்சிகளில்  புலிகளைக் கொன்றதாக செய்திகள் வரும். அவற்றில் பெரும்பான்மையானோர்
வேலாயூதம் போன்ற அப்பாவிகள்.  இப்பொழுதும் நக்சலைட்டுக்கள், காஸ்மீர் திவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்திகள் வருகின்றன. அவற்றின் பின்னாலும் எத்தனை துயரங்கள்..

Link to comment
Share on other sites

சுகன்,

கதையால் நேரப்பயணத்தை உருவாக்கி காட்டி இருக்கிறீர்கள். எழுத்துக்கள் மறைந்து காட்சிகள் நிலைக்க செய்து இருக்கிறீர்கள்.

உலக அரசியலை ஒற்றை பந்தியில் உணர்த்தி இருக்கிறீர்கள். பெரிய அடிக்குபதிலாக சின்ன தட்டு தட்டிவிட்டு எல்லாம் சரியாக போய்விட்டது என்று ஆறுதல் தரும் அரசியல். இதை எழுதும் போது ஜெனிவாவில் நடந்துகொண்டிருக்கிறது. 

தொடர்ந்தும் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு அழிவுகளை தான்  அந்த மண்ணும் மக்களும் சந்தித்துவிட்டார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்த 17வயது மாணவர் ஒருவரை இந்திய இராணுவம் 87ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தெல்லிப்பளையில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்தது. அவர் இன்னும் உயிருடன் வரவில்லை. அவருடைய தகப்பனார் அம்மாணவரின் பிறந்தநாளின் போது (88ம் ஆண்டில்)நெஞ்சுவலியுடன் காலமானர். இந்திய இராணுவம் பலாலியில் இருந்து  காங்கேசன் துறைவீதியாக யாழ்ப்பாணத்தினைப் பிடிக்க வெளிக்கிட்டபோது , முதலாவது  நாளில் கைதுசெய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களில் இம்மாணவனும் ஒருவன்.   மாலையில் இந்திய வானொலியில் 90 விடுதலைப்புலிகளைக் கைது செய்ததாக செய்திவெளியிட்டார்கள்.  தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் கல்வி கற்ற அம்மாணவனின் பெயர் பிரேமானந்தன்.

Link to comment
Share on other sites

ஒவ்வொரு வரியும் விசுவலாக காட்சியை மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டு செல்கின்றது,

ஊமையன் அநியாயமாக தண்டிக்கப்படக் கூடாது எனும் சிவனின் அறம் சார்ந்த குணமும், அதை ஏற்றுக் கொண்ட நாதனின் நேர்மையும்,  பிழையை உணர்தவுடன் ஊமையனுடன் சமாதானமாகிய வேலாயுதத்தின் பண்பும் எம் மண் இப்படியும் ஒரு காலத்தில் மக்களை கொண்டிருந்தது என வியக்க வைக்கின்றது.

ஆனால் போர் இன்று வேலாயுதங்களையும் நாதன் போன்ற மகன்களையும் பறித்தெடுத்தும், போரில் இருந்து தப்பிய சிவன்களை காயங்களை சுமக்க வைத்தும் விட்டுச் சென்று இருக்கு.

சுகன், இது உங்கள் முதல் கதை என்பதை நம்பமுடியுது இல்லை.  பின் குறிப்புகள் ஒவ்வொன்றும் தன்னகத்தே பெருங் கதைகளை சுமந்து நிற்பதால் அவை தேவையா என்ற கேள்வியையும் முன் வைக்கின்றது.

Link to comment
Share on other sites

20 hours ago, கந்தப்பு said:

எனக்குத் தெரிந்த 17வயது மாணவர் ஒருவரை இந்திய இராணுவம் 87ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தெல்லிப்பளையில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்தது. அவர் இன்னும் உயிருடன் வரவில்லை. அவருடைய தகப்பனார் அம்மாணவரின் பிறந்தநாளின் போது (88ம் ஆண்டில்)நெஞ்சுவலியுடன் காலமானர். இந்திய இராணுவம் பலாலியில் இருந்து  காங்கேசன் துறைவீதியாக யாழ்ப்பாணத்தினைப் பிடிக்க வெளிக்கிட்டபோது , முதலாவது  நாளில் கைதுசெய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களில் இம்மாணவனும் ஒருவன்.   மாலையில் இந்திய வானொலியில் 90 விடுதலைப்புலிகளைக் கைது செய்ததாக செய்திவெளியிட்டார்கள்.  தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் கல்வி கற்ற அம்மாணவனின் பெயர் பிரேமானந்தன்.

இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலத்தில் நிறைய துயரங்கள் நடந்துள்ளது ஆனால் பரவலாக அவைகள் பேசப்பட்டதில்லை. அப்போதைய ஊடக நிலமையும் அதற்கொரு காரணம். 

 

11 hours ago, நிழலி said:

ஒவ்வொரு வரியும் விசுவலாக காட்சியை மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டு செல்கின்றது,

ஊமையன் அநியாயமாக தண்டிக்கப்படக் கூடாது எனும் சிவனின் அறம் சார்ந்த குணமும், அதை ஏற்றுக் கொண்ட நாதனின் நேர்மையும்,  பிழையை உணர்தவுடன் ஊமையனுடன் சமாதானமாகிய வேலாயுதத்தின் பண்பும் எம் மண் இப்படியும் ஒரு காலத்தில் மக்களை கொண்டிருந்தது என வியக்க வைக்கின்றது.

ஆனால் போர் இன்று வேலாயுதங்களையும் நாதன் போன்ற மகன்களையும் பறித்தெடுத்தும், போரில் இருந்து தப்பிய சிவன்களை காயங்களை சுமக்க வைத்தும் விட்டுச் சென்று இருக்கு.

சுகன், இது உங்கள் முதல் கதை என்பதை நம்பமுடியுது இல்லை.  பின் குறிப்புகள் ஒவ்வொன்றும் தன்னகத்தே பெருங் கதைகளை சுமந்து நிற்பதால் அவை தேவையா என்ற கேள்வியையும் முன் வைக்கின்றது.

கருத்துக்கு நன்றிகள்

எம் மண் இரவும் பகலும் சரிசமமாக உள்ள மண் என்றும் எண்ணத்தோன்றும். பிற இனங்களில் இருந்து தனித்தே உணரப்படுகின்றோம். பல விசயங்களில் உச்சநிலைகளே உள்ளது. வீரமும் கோழைத்தனமும் தியாகமும் துரோகமும். நன்றியும் நன்றிகெட்டதனமும். கட்டுக்கடங்காத கோபமும் ஆழமான அன்பும். எமது துயர நிலைக்கு எமது குணங்களுக்கும் உள்ள தொடர்புகுறிதது எவ்வளவோ திட்டித்தீர்த்தாகிவிட்டது. எத்தனையோ இனங்களுடன் பழகும் அனுபவம் கிடைப்பதால் அவ்வனுபவத்தில் இருந்து உணர்ந்துகொள்வது ஒன்றுதான் எம்மண்ணும் மக்களும் அடிமைநிலையில் இருந்தாலும் ஏகப்பட்ட முரண்பாடுகளை கொண்டிருந்தாலும் எம்மண்ணில் எம்மக்களில் ஒருவனாக பிறந்தது ஏதோ ஒரு உன்னத உணர்வு. 

பின்குறிப்பு எழுதும எண்ணம் முதலில் இருக்கவில்லை அதனால் கதையுடன் அதை இணைக்கவில்லை ஆனால் ஒரு சிறு உறுத்தலின் நிமிர்த்தம் பின்னர் பதிந்துவிட்டேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.