• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

முள் - சிறுகதை

சபீதா, ஓவியங்கள்: ஸ்யாம்

 

ருந்ததிக்கு, அத்தனை நேரம் இருந்த குதூகலம் கொஞ்சம் கொஞ்சமாக வடிய ஆரம்பித்தது. அம்மா சொன்னதைக் கேட்காமல் இந்த இரவில் தனியாகப் பயணிக்க நினைத்தது தவறோ? வீட்டில் தங்கிவிட்டு நாளை பகலில் கிளம்பியிருக்க வேண்டுமோ?

''சொன்னாக் கேளுடி, நாளைக்குப் போகலாம். காலம் ரொம்பக் கெட்டுக்கெடக்கு. உன் வீட்டுக்காரர்கிட்ட வேணும்னா நான் பேசறேன்.''

''ம்மா... நான் என்ன சின்னக் குழந்தையா? சின்ன வயசுலதான் 'அங்க போகாத, இங்க போகாத, இருட்டுறதுக்குள்ள வீடு வந்து சேரு’னு அதிகாரம் பண்ணிட்டே இருப்ப... இப்பவுமா? எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சு.''

''ம்ம்ம்... உனக்குக் கல்யாணமே ஆனாலும், நீ பேரன் பேத்தியே எடுத்தாலும் எங்களுக்கு நீ குழந்தைதான்'' என்று கோபமாக அம்மா சொன்னாள்.

வழக்கமாக விழுப்புரம் வந்தால் திட்டமிட்டபடி சென்னை திரும்பியதே இல்லை. இரண்டு நாட்களாவது கூடுதலாகத் தங்குவது வழக்கம்தான். அம்மா மடி எத்தனை வயதானாலும் சுகம் இல்லையா?

''பிக்-அப் பண்ண நான் வரணுமா, இல்ல நீயே ஆட்டோ பிடிச்சு வந்துடுவியா?'' என்று கதிர் கேட்டதற்கும்கூட...

''ஒண்ணும் வேணாம். நானே ஆட்டோல வந்துடுவேன்'' என்று அமர்த்தலாகச் சொல்லிவிட்டேன்.

p76e.jpg

தனியாக இந்த இரவில் பயணிக்க ஏன் இத்தனை ஆர்வமாக இருந்தேன் என ஆச்சரியமாக இருந்தது. இரவு எப்போதும் என்னை வசீகரிக்கக்கூடியதாகவே இருந்திருக்கிறது. இரவில்தான் என் புலன்கள் அனைத்தும் விழித்துக்கொள்வதை நான் உணர்ந்திருக்கிறேன். இரவு எனக்கே எனக்கானது. அப்போது நான் யாராகவும் இல்லாமல் நானாக மட்டுமே இருப்பேன்.

கல்யாணத்துக்கு முன்பான இரவுகளை நான் எத்தனை கொண்டாடியிருக்கிறேன். இரவு என்பது எனக்கொரு விழா. அப்பா-அம்மா உறங்கச் சென்றதும் அறையைத் தாழிட்டுவிட்டு பாடல்கள் கேட்பேன்; புத்தகம் வாசிப்பேன்; படம் வரைவேன்; அலங்காரம் செய்துகொள்வேன். தனியாக எனக்கு மட்டும் கேட்குமாறு பொய்க் குரலில் பாடுவேன். அல்லது இது எதுவும் செய்யாமல் ஜன்னலின் வழியாக நெடுநேரம் அமர்ந்து இரவை உற்று வெறித்துக்கொண்டிருப்பேன். அந்த நேரத்தில்தான் எனக்குத் தோன்றியிருக்கிறது 'என்னால் இரவை வேடிக்கை மட்டும்தானே பார்க்க முடிகிறது; அதற்குள் இறங்கிச் செல்ல முடிவதில்லையே’ என்று. பின் அது ஒரு ரகசிய ஏக்கமாகவே மாறிவிட்டிருந்தது.

ல்யாணம் ஆன சில வாரங்களில் ''கதிர்... என்னை வெளியில கூட்டிட்டுப் போறீங்களா?'' என்று இரவு 11 மணிக்கு ஜோராக டிரெஸ் செய்துகொண்டு கேட்டதும் அவன் விநோதமாகப் பார்த்தான்.

''எங்கம்மா போறது?''

''பீச்...''

''போலீஸ் துரத்தி அடிக்கும்.''

''ஏன்?''

''நாம பலான பலான பார்ட்டினு நினைப்பாங்க.''

''என்னது? நாம புருஷன்-பொண்டாட்டிதான?!''

''அது உனக்கும் எனக்கும் தெரியும். ஆனா, நம்ம கல்யாணத்துக்கு அந்த போலீஸ்காரர் வரலியே'' என்பான்.

ஆனாலும் பப், நண்பர்கள் வீடு என்று அழைத்துச் செல்வான்தான். அது எனக்கு அத்தனை உற்சாகத்தைத் தரவில்லை. இந்தச் சுவர்களுக்கு நடுவில் இருந்து வேறொரு சுவருக்கு நடுவே செல்வது போலவே இருந்தது. இந்தக் கூடாரத்தில் இருந்து மற்றொரு கூடாரத்துக்கு வெட்டவெளி இரவு, வாசலில் ஏங்கி நின்று அழைத்துக்கொண்டே இருந்தது. என்னால் முடிந்தது எல்லாம் சில இரவுகளில் மொட்டைமாடியில் சென்று உலாவுவதுதான்.

'மோகினிப் பிசாசு’ என்பான் கதிர்.

p76d.jpgட்டோ பிடித்து பஸ் ஸ்டாண்ட் வந்ததும் சென்னை செல்லும் பஸ்ஸைத் தேடிப் பிடித்து ஏறி அமர, 20 நிமிடங்கள் ஆனது. உள்ளே ஏறும்போதே கண்டக்டர் ஏற இறங்கப் பார்த்தார். ஒருவேளை ஊதா நிறத்தில் சமிக்கி வேலைப்பாடுகள் செய்த பளபள புடைவை காரணமாக இருக்கும். அதுவேதான் காரணம் என பேருந்தில் ஏறியதும் புரிந்தது. பெரும்பாலும் பேருந்தில் இருந்த எல்லோருடைய கண்களும் என் மீது ஒரு நொடி நிலைத்து விலகியது. ஏதேனும் சௌகரியமான உடை அணிந்து வந்திருக்கலாம். ஆனால், அப்படி ஒன்று இருக்கிறதா என்ன? உட்காருவதற்கு இடம் தேடினேன்.

இந்த உலகம் ஆண்களால் மட்டுமே நிரம்பியதுபோல ஒரு தோற்றம். எல்லா இருக்கைகளையும் ஆண்களே ஆக்கிரமித்து இருந்தார்கள். டீன் பருவத்தில் ஒரே ஒரு பெண் மட்டும் தென்பட்டாள். அவளுக்கு அருகில் அவளது அப்பாவைப் போல ஒரு மனிதர் இருந்தார். அவர்களுக்கு முன்னும் பின்னும் இருக்கைகள் காலியாக இல்லை. கண்களால் மெள்ளத் துழாவி டிரைவர் இருக்கையில் இருந்து மூன்றாவது இருக்கை காலியாக இருக்கக் கண்டு, சென்று அதில் அமர்ந்தேன்.

எனக்கு என்னவோ பதற்றமாக இருந்தது. ஏதோ ஓர் அசௌகரியம். இந்த நாள் வழக்கமான ஒன்றல்ல. ஏதோ வேறுபாடு இருக்கிறது. பையை முன் சீட்டின் அடியில் வைத்துவிட்டு அமர்ந்தேன். நெருங்க முடியாத தைரியமான ஒரு பெருமாட்டியைப் போல தோற்றமளிக்க விரும்பித் தோற்றேன். இன்னமும் பரபரப்பு அடங்கவில்லை.

பேருந்து மெள்ளக் கிளம்பியது. கண்ணாடி ஜன்னலைத் திறக்க முயன்றேன். இறுக்கமாக இருந்தது. எவ்வளவு முயற்சித்தும் திறக்க முடியவில்லை. மூச்சு முட்டுவதுபோல இருந்தது. கண்டக்டர் இங்கும் அங்கும் டிக்கெட் தருவதில் முனைப்பாக இருந்தாலும்கூட, நான் ஜன்னலைத் திறக்கச் சிரமப்படுவதை ஓரக்கண்ணால் பார்த்தும் தன் பாட்டுக்கு நகர்ந்துகொண்டிருந்தார். எரிச்சலாக இருந்தது. யாரிடமாவது உதவி கேட்கவும் தயக்கம். 'இல்லை... நான் பலவீனமானவள் அல்ல. இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் என்னால் திறக்க முடியும்.’

'எக்ஸ்க்யூஸ் மீ...’ என்று மிக அருகே, அநேகமாக காதுகளுக்குள் ஒரு குரல். பின் பிடரியில் சூடான மூச்சு. நாசி தொட்டுச் செல்லும் வியர்வை வாசனை. திடுக்கிட்டுத் திரும்பியதும் அவன் முகம் மிக மிக அருகே தெரிந்தது. வழுக்கைத் தலை, முன் தொப்பை, இன் செய்யப்பட்ட சட்டை, கண்ணாடி... என இவற்றை வைத்து தயங்காமல் வங்கி அதிகாரி என்றோ பேராசிரியர் என்றோ கணிக்கலாம்.

''ரொம்ப நேரமாச் சிரமப்படுறீங்க. நான் ஹெல்ப் பண்ணட்டுமா?'' என்று பதிலை எதிர்பார்க்காமல் சர்ரென இழுத்ததில் ஜன்னல் திறந்துகொண்டு காற்று முகத்தில் சிலீரென அறைந்தது. வெட்கமாக இருந்தது.

''தேங்க்ஸ்ங்க'' என்றேன்.

'அண்ணா’ அல்லது 'அங்கிள்’ எதைச் சேர்த்துச் சொல்வதென குழப்பமாக இருந்தது.

கண்டக்டர் அருகில் வந்து ''சென்னையா?'' என்றார்.

''ஆமா...''

''ஒண்ணா?'' என்றார்.

p76c.jpgஇதென்ன கேள்வி நான் ஒருத்திதானே இருக்கிறேன். நான் ஏன் இப்படி எரிச்சலடைகிறேன். இதுபோல எல்லோரிடமும் கேட்டுப் பழக்கமாக இருக்கும். டிக்கெட்டை வாங்கி கைப்பையில் வைத்ததும் ஐ-பாடை எடுத்து ஹெட்போனைக் காதுகளுக்குள் திணித்தேன். பாடல் மெள்ளக் கசியத் தொடங்கியதும் மனது இறகாகத் தொடங்கியது.

ஜன்னலின் வழியே இருண்ட வானை நோக்கினேன். நிலா. நான் வீட்டில் இருந்தோ மொட்டைமாடியில் இருந்தோ பார்த்த நிலா அல்ல. இது முற்றிலும் வேறானது. நிலா ஒரு பட்டமாகி அதன் நூல் எனது விரல்களில் இருப்பதுபோல பேருந்து செல்லச் செல்ல என்னுடனே ஓடிவரத் தொடங்கியது. ஆஹா..! இதைத்தானே ஆசைப்பட்டேன். கண்களை மூடி பாடல்களுக்குள் லயிக்கத் தொடங்கினேன். இந்த இரவு மறக்க முடியாத ஒன்றாக இருக்கப்போகிறது. மறுபடியும் குதூகலம் வந்து தொற்றிக்கொண்டது.

பேருந்து குலுங்கி நிற்பதுபோல இருந்ததும் கண்களைத் திறந்தேன். யாரோ கை காட்டி நிறுத்தி இருக்கிறார்கள்போலும். ஒரு பெண் பேருந்தினுள் ஏறினாள். தன்னந்தனியாக. என்னைப் போல. என்னைப் போலவா? இந்த அத்துவானக் காட்டில் தனியாகக் கை காட்டி பேருந்தை நிறுத்துகிறாளா?! இந்த அகால நேரத்தில் என்ன துணிச்சல் இவளுக்கு?! அவள் நேராக என் அருகே வந்துதான் அமர வேண்டும். வேறு வழி இல்லை. ஏனோ எனக்கு அது பிடிக்கவில்லை. அவளைப் பிடிக்கவில்லை. முதல் பார்வையில் காரணமே இன்றி சிலரைப் பிடித்தோ, பிடிக்காமலோபோகும் இல்லையா? அதுபோல அல்லது அவள் அணிந்திருக்கும் இந்த ஆடை அவள் வயதுக்கு சற்றும் பொருந்தாமல் இருக்கிறது. அது பிடிக்கவில்லை. அதைப் பற்றி எனக்கென்ன? என்ன இது மேல்தட்டு ஆணவம்? இதுதான் நானா? இந்த முழு இருக்கையையும் நான் சொந்தம் கொண்டாட முடியாது அல்லவா. அருகில் வந்து அவள் அமர்ந்ததும் மற்றவர்கள் எனக்கு செய்ததைப் போல நானும் அவளை நோட்டமிடத் தொடங்கினேன். நடுத்தர வயதுப் பெண்மணி போல இருந்தாள். கொஞ்சம் மலிவான ஆனால், பளிச்சென்ற நிறத்தில் சேலை உடுத்தியிருந்தாள். அது அவளது நிறத்துக்கு சற்றும் பொருந்தாமல் இருந்தது. அவளது தோற்றத்தை வைத்து அவளை வேறு எதுவும் கணிக்க முடியவில்லை.

கண்டக்டர் விளக்கை அணைத்ததும் பேருந்தின் உள்ளே செல்போனின் மங்கிய விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. அந்த டீன் ஏஜ் பெண் தனது இரு கைகளாலும் அநாயாசமாக செல்போனை நோண்டிக்கொண்டிருந்தாள். அவளது முகம் யாருடனோ பேசிக்கொண்டிருப்பதைப் போன்றதொரு பாவனையில் இருந்தது. அவளது அப்பா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

திடீரென இத்தனை நேரமாகியும் ஏன் கதிரிடம் இருந்தோ, அம்மாவிடம் இருந்தோ ஓர் அழைப்புகூட வரவில்லை என்பது நினைவில் வந்தது. கைப்பையைத் திறந்து மொபைலை எடுத்தேன். நெட்வொர்க் சுத்தமாக இல்லை. பேட்டரியும் சிவப்பாக (அபாயம் என்பது போல) எரிந்தது. இன்னும் 10 நிமிடங்கள்கூட தாங்காது.

p76b.jpg

''சே..! சார்ஜ் போட மறந்துவிட்டேன்'' - 'தட்’ என்று அனிச்சையாக முன் நெற்றியில் அடித்துக்கொண்டேன். பக்கத்தில் அமர்ந்திருந்த அவள் உணர்ச்சியற்ற பாவனையில் என்னைத் திரும்பிப் பார்த்து பின் தலையைக் குனிந்துகொண்டாள். வழியில் ஏதேனும் விபத்து நடந்தால், யாருக்கு எப்படித் தகவல் சொல்வது? பேருந்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், என்ன செய்வது? வேறு பேருந்து பிடிக்க வேண்டும். அதுவரை ஒன்றும் நேர்ந்துவிடாதே. இந்தப் பயணம் பாதுகாப்பானதுதானா? கால்களின் வழியாகக் குருதி வடியும் படங்களும் முள்புதரின் உள்ளே கிழிந்த ஆடையுடன் கிடைக்கப்பெற்ற பெண் சடலத்தைப் பற்றிய செய்திகளும் நினைவில் வந்து, மேலும் பீதியை அதிகரித்தது. எங்கோ வாசித்த நினைவு. இதுதான் நோமோஃபோபியாவா? என்ன நான் இப்படிக் கோழையாக இருக்கிறேன். நான் உறுதியான பெண் இல்லையா? மொபைல் இல்லையென்றால் உலகுடன் ஆன ஒட்டுமொத்தத் தொடர்பும் அற்றுப்போகுமா என்ன? ஏன் காரணமே இல்லாமல் மனம் இப்படிச் சஞ்சலப்படுகிறது? அம்மாவைத்தான் குற்றம் சொல்ல வேண்டும். பொத்திப் பொத்தி வளர்த்தது அவள் தவறு. இனியேனும் தனியாக இப்படியான பயணங்களை மேற்கொள்ள வேண்டும். நான் மன திடம் உள்ளவள். பாரதியைப் படிக்கிறவள். கல்லூரியில் என்.சி.சி-யில் இருந்திருக்கிறேன். லேசாகப் புன்னகைத்துக்கொண்டு மறுபடியும் இருண்ட வானை ஆராயத் தொடங்கினேன்.

உறங்குவதற்கு விருப்பம் இல்லை. இந்த இரவின் ஒவ்வொரு நொடியும் மிக முக்கியமானது. இதை நான் இழக்கத் தயாராக இல்லை என்று எண்ணினாலும்கூட, கண்கள் சுழற்ற ஆரம்பித்தன. மெள்ளக் குளிர் அதிகரிக்கத் தொடங்கியதும் முந்தானையை முதுகைச் சுற்றிப் போத்திக் கொண்டு உறங்க ஆரம்பித்தேன்.

எத்தனை நேரம் ஆனது என்று தெரியவில்லை. பின்னங்காலில் ஏதோ நெருடல். நகங்களால் சுரண்டுவதைப் போல... ஆமாம், யாருடைய கால்களோதான். திரும்பிப் பார்த்ததும் அவன் லேசாக முறுவலித்தான். கால்களை முன்னே நீட்டிப் படுத்திருப்பானாக இருக்கும். மன்னிப்புக் கோரும் பாவனையில் லேசாக முறுவலித்தான். நான் தலையைத் திருப்பிக்கொண்டேன். உறங்கினால் தேவலாம் போல இருந்தது. பாட்டும் வேண்டாம்; நிலாவும் வேண்டாம். மெள்ள நான் நழுவி விழ ஆரம்பித்தேன். இதோ கீழே கீழே வீழ்கிறேன்.

p76a.jpgயாரோ என்னை இறுகப் பற்றுவது போல. இதென்ன கனவா? பயண உறக்கத்திலும்கூட கனவு வருமா என்ன? இல்லை நிஜமாகத்தான். யாரோ எனது இடுப்பைப் பற்றுகிறார்கள். மெள்ள விரல்கள் ஊருகின்றன. ஆயிரம் கரப்பான்கள் ஒன்றாக ஊர்வதைப் போன்ற அசூயையில் சட்டெனத் திரும்பிப் பார்த்தேன். கரப்பான்கள் ஓடி ஒளிந்துகொண்டன. பின் இருக்கையில் அவன் மட்டும்தான். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவனைப் போன்றதொரு பாவனையில் இருந்தான். வாயைப் பிளந்துகொண்டு உண்மையாகவே உறங்குவதைப் போல அவன் நடிப்பதைப் பார்க்க அருவருப்பாக இருந்தது. வேண்டுமென்றேதான் செய்கிறான்.

இப்போது நான் என்ன செய்ய வேண்டும். இந்த அனுபவம் எனக்குப் புதிது. உரக்கச் சத்தமிட வேண்டுமா? ஊசியால் அவன் கைகளில் குத்த வேண்டுமா? கண்டக்டரிடம் சொல்லி அவனைப் பேருந்தில் இருந்து இறக்கிவிடச் சொல்ல வேண்டுமா? என்ன செய்வது? சரி தொலையட்டும். நான் திரும்பி முறைத்தேன் என்பதை அவன் அறிந்திருப்பான். இன்னொரு முறை இப்படி முயற்சிக்க மாட்டான்.

இப்போது கண்களை மூடிக்கொண்டேன் உறக்கம் என்னைவிட்டுக் காத தூரம் ஓடியிருந்தது. அவன் கால் விரலோ கைகளோ என்னை நோக்கி வருகிறதா என எச்சரிக்கையாகக் கவனித்துக்கொண்டே இருந்தேன். இன்னும் ஒரு மணி நேரம்தான் ஊர் சென்று சேர்ந்துவிடலாம் என்பது ஆசுவாசமாக இருந்தது. கதிர், அழைக்க வந்தால் நன்றாக இருக்கும்.

இதென்ன... ஐயோ... இதென்ன மறுபடியும் அவனது கைகள் எனது இருக்கையின் பக்கவாட்டில் நுழைகிறது. பொந்தினுள் நுழையும் பாம்பைப் போல அத்தனை லாகவமாக. நான் அந்த விரல்களை நெரித்து அந்த எலும்புகளை நொறுக்கப்போகிறேன். இனி அவன் யாருக்கும் இதைச் செய்யத் துணியக் கூடாது. அந்த விரல்கள் இடுப்புக்கும் மேலே... மேலே... பற்றி... அழுத்தி... என்னால் இந்த அவமானத்தைத் தாங்க முடியவில்லை. நான் சுதாரிப்பதற்குள் எனது மூளை துரிதமாக வேலை செய்யத் தொடங்கும் முன்... ''ஆ...'' என் அழுகையும் ஆத்திரமும் சேர்ந்து க்ரீச்சிட்டேன்.

p76.jpg''என்னாச்சு... என்ன... என்ன?'' என்று பல குரல்கள் கேட்டன. கண்டக்டர் விளக்கைப் போட்டதும் டிரைவரும் வண்டியை நிறுத்திவிட்டார். ''என்னமா ஆச்சு?'' என்று சத்தமாக கண்டக்டர் கேட்கவும், எனக்குக் குரலே எழும்பவில்லை. என்ன நடந்திருக்கும் என எல்லோரும் யூகிக்கத் தொடங்கியிருப்பார்கள். நான் ஏன் இப்படி நிலைகுலைந்துபோனேன்? என் தவறு என்ன இதில்? என் பேச்சு எங்கே ஓடி ஒளிந்துகொண்டது? என் தைரியம் எங்கே முக்காடிட்டுப்போனது? சில நிமிடங்கள் எல்லோரும் செய்வதறியாது நின்றுகொண்டிருந்தார்கள். உறக்கம் அளைந்த முணுமுணுப்பில் சிலரும், ''இந்தப் பொம்பளைங்க ஏன் ராத்திரியில தனியாப் பயணம் கிளம்பறாங்க? அப்புறம் அங்க தொட்டான் இங்க தொட்டான்னுக்கிட்டு...'' என்று பலரின் மனக்குரல்களையும் என்னால் உணர முடிந்தது.

இத்தனை களேபரங்களுக்கும் காரணமான அவன் அப்போதுதான் விழித்தவன்போல ''என்ன நடந்தது?'' என்று குழம்பியவனைப் போல... என்ன ஒரு தேர்ந்த நடிப்பு? நான் சொன்னால் இவர்கள் நம்புவார்களா? உதவிக்கு வருவார்களா? இல்லை... உண்மையிலேயே எனக்கு அப்படி எதுவும் நிகழவில்லையா? கெட்ட சொப்பனம் ஏதும் கண்டேனா?

'டும்’ என ஒரு சத்தம். என்ன நடந்தது எனத் தெரியவில்லை. அவன் பின் சீட்டில் கால்களைப் பரப்பி விழுந்துகிடந்தான். கைகளால் கன்னத்தைப் பிடித்திருந்தான். அவனது கண்ணாடி கண்களைவிட்டு இறங்கிச் சற்றே சரிந்துகிடந்தது. கண்களை மூடித் திறப்பதற்குள் 'தப்’ என்று மறுபடியும் ஒரு சத்தம். காலணி கழற்றப்படாத கால்களால் அவனது நெஞ்சில் ஓங்கி ஓர் உதை உதைத்தாள், என் அருகில் இருந்த பெண்மணி. எழுந்து நிற்க முயன்ற அவன், மறுபடியும் தடுமாறி விழுந்தான். வலி தாங்க முடியாமல் அவனது முகம் அஷ்டகோணலானது. பின் சரமாரியாக அவள் அவனது முகத்திலும் மார்பிலும் உக்கிரமாக அடிக்கத் தொடங்கினாள். அவளது ரௌத்திரம் அடங்க நேரமானது. திகைத்து நின்ற ஆண்கள், தங்களது நல்தன்மைகளை நிலைநாட்டவும் தம் வீட்டுப் பெண்கள் நினைவில் வந்ததாலும் அவர்களும் அவளுடன் சேர்ந்துகொண்டு கும்பலாக அடித்து ஒரு வழியாக்கிவிட்டனர். அவன் பை வெளியே தூக்கி எறியப்பட, அவனைப் பேருந்தில் இருந்து அடித்து விரட்டி நடுக்காட்டில் கட்டாயமாக இறக்கிவிட்டனர்.

நெடுநேரம் வரை நான் தலைகுனிந்து அமர்ந்திருந்தேன். என்ன நடந்தது என்று நினைவுபடுத்திப் பார்க்க முயன்றேன். அவள் எனது கைகளை மெள்ள அழுத்தினாள். ''விட்டுத்தள்ளுப்பா... அவன் பொறம்போக்கு நாயி...'' என்று சிநேகமாகச் சிரித்தாள். அவள் தலை கலைந்து புடைவை விலகி அலங்கோ லமாக இருந்தாள். பையில் இருந்த சீப்பை எடுத்து பின்னலை அவிழ்த்து மறுபடியும் நேர்த்தியாக பின்னத் தொடங்கினாள். பின் ஒரு வெள்ளைக் கவரில் இருந்த கனகாம்பரப் பூவை சூடி, இரு பக்கமும் சமமாக இருக்கிறதா எனச் சரிபார்த்துக்கொண்டாள். லேசான பவுடரும் லிப்ஸ்டிக்கும் பூசி, சிறிய வட்ட வடிவக் கண்ணாடியில் தன் ஒப்பனையைப் பார்த்துத் திருப்தியானாள். அவளுக்கு ஒரு போன் வந்தது. ''அஞ்சே நிமிஷம் சார். வயலெட் கலர் சேலை கட்டியிருப்பேன். சிகப்பு கலர் டி ஷர்ட்டா... யமஹா பைக்கா?'' என்று ஏதேதோ தொடர்பு இல்லாமல் பேசினாள். பேருந்து நின்றதும் விடுவிடுவென பேருந்தைவிட்டு இறங்கிச் சென்றாள்.

நானும் இறங்கினேன். அவளைத் தேடினேன். அதோ தூரமாக அந்த போஸ்ட் மரத்தின் கீழே நிற்பவனை நோக்கி வேகமாகச் சென்றுவிட்டாள். அவன் இளைஞனாக இருந்தான். அவன் அவளுக்காகத்தான் காத்திருக்கிறான் போலும்.

நான் இந்தச் சம்பவத்தை கதிரிடமோ அம்மாவிடமோ பகிர்ந்துகொள்ளவே இல்லை. எனக்குப் பயணங்கள் வேண்டியிருக்கிறது. ஆனால், எத்தனையோ இரவுகளில் உறக்கத்தின் நடுவே நான் திடுக்கிட்டு விழித்திருக்கிறேன். அவனை எனது கரங்களால் நான் ஓர் அடிகூட அடிக்காததும், அவளுக்கு வாயைத் திறந்து 'நன்றி’ என்று சொல்லாததும் என்றென்றைக்கும் ஒரு முள்ளாக என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது!

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this  

 • Similar Content

  • By நவீனன்
   ஷரோனின் மோதிரம் - சிறுகதை
   நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... சுப்ரபாரதிமணியன், ஓவியங்கள்: அரஸ்
    
   கூரியரில் மோதிரம் வந்தது.
   அருணகிரிக்கு கத்த வேண்டும் போல் இருந்தது. 'கண்டேன் சீதையை!’ என்று அனுமன் கத்தியது, சம்பந்தமே இல்லாமல் ஞாபகம் வந்தது.
   'அடப்பாவி... கிளம்பிட்டியா?!'' என்றுதான் கத்தினான். உடனே அவளைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. கைபேசியை முடுக்கினான்.         மஞ்சள் சுடிதாரில் அவள் சிரித்துக்கொண்டிருந்தாள். அவள் தேவி... 30 வயதில் அவள் முகத்தில் இல்லாத அழகை எல்லாம் அவன் கண்டிருக்கிறான். தினமும் 100 குறுஞ்செய்திகள் அனுப்பிய காலமும் உண்டு. 'பிரியலாம்’ என்றுகூட ஒரு குறுஞ்செய்தியில் சொல்லித்தான் பிரிந்தார்கள். அனுப்பியவள் தேவி.
   குறுஞ்செய்தியும், இப்போது இந்தக் கூரியரும்... மோதிரம் போன்ற வஸ்து சுலபமாகத் திருடுபோகாமல் கூரியரில் பத்திரமாக வந்து சேர்ந்தது, அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது. தொலைந்திருந்தாலும் 5,000 ரூபாய் நஷ்டமாகி இருக்கும். தொலைந்தது தெரியாமல்கூடப் போயிருக்கலாம். மோதிரம் அவளிடம்தான் இருக்கிறது என்று அருணகிரி நினைத்திருப்பான். இப்போது தேவி, உறவை முறித்துக்கொண்டது நிச்சயமாகிவிட்டது.
   'யூ டூ ஷரோன்' என்று வாய்விட்டுச் சொன்னான்.
   அவளை 'ஷரோன்...’ என்றுதான் அழைப்பான். கூரியர் முகவரி பார்த்தான், மீண்டும் தேவி ஆகிவிட்டிருந்தாள்.

   தேவி, பனியன் கம்பனி மெர்சன்டைஸிங்கில் சேர்ந்தபோது அந்தப் பிரிவு மேனேஜர் 'யூ டூ கம்பம்'' என்றார்.
   தேவி முழித்த முழி, சாயப்பட்டறைகள் மூட உத்தரவிட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கேட்ட சாயப்பட்டறை தொழிலாளியின் திகைப்புப் போலத்தான் இருந்தது. அவனே விளக்கமும் சொல்லிவிட்டான் கேட்காமலே.
   ''உங்க ஊரும் கம்பமா? கம்பம் பள்ளத்தாக்கு எனக்குப் பிடிச்ச இடம். பூரா பச்சையாக் கெடக்கும் அந்த ஊர்ல இருந்து எதுக்குப் பஞ்சம் பொழைக்க வர்றீங்கனுதான்?'
   அருணகிரி, அண்ணாமலை தீபம் ஊர்க்காரன். பல ஏக்கர் பரப்பளவில் இருந்த பனியன் கம்பனியில் மற்றோர் ஓரத்தில் உள்ள பேக்கேஜ் செக்ஷனில் அவனுக்கு வேலை. வழக்கமான சந்திப்புகள், புன்முறுவல்கள், அப்புறம் காபி ஷாப்கள், சோடா ஷாப்கள், இன்டர்நெட் சென்டர்கள் என்று திரிந்தபோது, பிரிவு அவஸ்தை தருவது என்பது தெரிந்தது.
   ஊரின் மத்தியில் இருந்தது மொழிப் போர் நினைவுச்சின்னம். மழை, லேசாகத் தூறிக்கொண்டிருந்தது. ஒதுங்கி நிற்பதற்கு இடம் இல்லை என்பது போல் நினைவுச்சின்னத்தின் அருகில் ஒதுங்கிக்கொண்டார்கள். ஒரு தொழிற்சங்கம், அதன் அழுக்குத்தனத்துடன் ஓரமாக நினைவுச்சின்னத்தை ஒட்டியிருந்தது.
   'அதென்னங்க 'அ’ நொண்டியடிக்குது..!''
   'நானும் ஒருநாள் ஆச்சரியப்பட்டுத்தான் ஒதுங்கிப் பார்த்தேன். அப்புறம்தான் தெரிஞ்சது தமிழ் அ-தான் அது. அகரம் முதல் எழுத்து. இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலே செத்துப் போனவங்க நினைவுச்சின்னம் இது.'
   'பனியன் கம்பனி, ரெண்டு கட்டிங் டேபிள், ரெண்டு பவர் டேபிளுக்கு இருக்கிற மரியாதை இந்த ஊர்ல எந்தச் சிலைக்கோ, எந்த நினைவுச்சின்னத்துக்கோ இல்லைதான்.'
   மழை, சற்றே வலுக்கத் தொடங்கியிருந்தது. ''இன்னும் கொஞ்சம் ஒதுங்கி, ஏதாச்சும் சிலைக்கு அடியிலயாவது ஒதுங்கியிருக்கலாம்.''
   'ஒதுங்கிறதே நம்ம பொழப்பாப் போச்சு; இன்னம் கொஞ்சம் தள்ளிப் போயிருக்கலாம்.''

   இன்னும் கொஞ்சம் தள்ளி அண்ணாவும் பெரியாரும் பக்கம் பக்கம் நின்றிருந்தார்கள். அவர்களின் தலைக்கு மேல் ஒரு கூடாரமும் இருந்தது. அந்தச் சிலைகளுக்குக் காவல் துறையினர் எப்போதும் காவல் இருந்தார்கள். முன்பு நாலைந்து பேர். இப்போது அவர்கள் இருவராகி இருந்தனர். அண்ணாவும் பெரியாரும் இருவர். காவல் துறையினரும் இருவர் அவர்களின் காவலுக்கு.
   அங்கு கொஞ்சம் நின்று, வலது பக்கம் பார்த்தால் குமரன் நினைவுச்சின்னம் இருந்தது. குமரன் நினைவுச்சின்னம் இருக்கும் இடத்துக்கு அருகில் அண்ணாவும் பெரியாரும் நிற்பது பலருக்குப் பிடிக்கவில்லை. 'குமரனுக்கு முக்கியத்துவம் இல்லை, மாற்ற வேண்டும்’ என்று சத்தம் போட்டார்கள். கொஞ்சம் கடுசாகவே வார்த்தைகள் வந்துவிட்டன. காவல் துறை, அண்ணாவையும் பெரியாரையும் காத்துக்கொண்டிருந்தார்கள்.
   காதர்பேட்டையில் இருந்து திமுதிமுவென்று நாலைந்து நைஜீரியர்கள் அவர்களைக் கடந்து சென்றனர். தூறல் மழை, அவர்களின் உடல் நிறக் கறுப்பை இன்னும் அழுத்தமான கறுப்பாக்கி இருந்தது. மழையில் நனைந்து போகும் யானையைப் போல் இருந்தனர்.
   'இவங்களையும் வாழவைக்கிற ஊர், நம்மள வாழவைக்காதா?'
   'அதுதான் வாழவைக்குதே, அப்புறம் என்ன கேள்வி?''
   'வாழவைக்கிறதுனா அந்த அர்த்தமா.
   10 மணி நேரம் வேலை, கொஞ்சம் காசு, கொஞ்சம் சொகுசுனு... அதில்லை...''
   'அப்புறம்...''
   'உன்னை நான் நேசிக்கட்டுமா?''
   'அட சக்கை... இவ்வளவு அழகான தமிழ்ல கேட்டுட்டே! 'லவ் யூ’னு கேட்கிறதுக்குப் பதிலா இப்படி பெர்மிஷனோட வந்தது நல்லா இருந்துச்சு.'
   மழைக்காக ஒதுங்கிக்கொண்டாலும் இருவரும் நெருங்கி நின்றுகொண்டே இருந்தனர். கதகதப்பு, சட்டென கூடிக்கொண்டிருந்தது. மழை கொண்டுவந்த லேசான குளிரை, அவர்கள் எல்லாத் திசைகளிலும் கடத்திக்கொண்டிருந்தார்கள். சிலைகளும், மொழிப் போர் நினைவுச்சின்னமும் அந்தக் கதகதப்பில் ஈரம் தவிர்த்து தங்களைச் சற்றே சூடாக்கிக்கொண்டன.
   அடுத்த முறை நொய்யல் கரையில்தான் சந்தித்துக்கொண்டார்கள். சாயத் தண்ணீரும் சாக்கடைக் கழிவுகளும் பல வண்ணங்களில் ஓடிக்கொண்டிருந்தன.
   'என்ன... இங்க வரச் சொல்லிட்டீங்க..?'
   'அதோ பார்..!''
   'வளம்’ நினைவுச்சின்னம், நொய்யலின் மத்தியில் நின்றிருந்தது. நொய்யல் ஓர மேட்டைச் சரிப்படுத்திப் பாலம் ஏற்படுத்தி இருந்தது வளம் அமைப்பு. அதன் நினைவாகத் தூண் ஒன்று சிமென்ட் நிறத்தில் நின்றுகொண்டிருந்தது.
   'ஊருக்குள்ள இருக்கிற சிலைகளை, நினைவுச்சின்னங்களை ஒரு ரவுண்டு கூட்டிக்கிட்டுப் போயிக் காட்டறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா?''
   ''இந்த ஊர்லே டாலர், பவுண்ட்னு இருக்குதே தவிர, காட்டறதுக்கு வேற என்ன இருக்கு?''
   'இருக்கே... இதோ!'' - கறுத்த நிறத்தில் நொய்யல் சலசலத்து ஓடிக்கொண்டிருந்ததைக் காட்டினாள். நொய்யல் நதியின் மத்தியிலும் அங்கும் இங்குமாகப் பல வண்ணங்களில் பாறைகள் இருந்தன. அந்தப் பாறைகள், அவ்வப்போது வண்ணம் அடித்துக்கொண்டன; ஏதோ விசேஷம் என்று சொல்லிக்கொண்டன. சமீபத்திய விசேஷம், பொங்கல் விழா. நாலைந்து நாட்கள் கரகாட்டம், கும்மியாட்டம், அண்ணன்மார் சுவாமி கதை என்று அந்தப் பகுதியில் மேடை போட்டு நடத்தினார்கள். எல்லாவற்றுக்கும் கூட்டம் சேர்ந்தது.
   ''ஷங்கர் படத்துல கல், ரோடு எல்லாத்துக்கும் பெயின்ட் அடிச்சிவிட்ட மாதிரி பாறைகளுக்கு பெயின்ட் அடிச்ச ஊர் இதுவாத்தான் இருக்கணும்.''
   அவள் மல்லிகைப் பூ கேட்டாள்.
   'என்ன திடீர்னு?''
   'ஏதாச்சும் கேட்கணும்னு தோணுச்சு. தலைங்கிற பாறையில கொஞ்சம் வெள்ளைப் பெயின்ட் அடிக்கலாம்னு. வேற... இங்க சுண்டலும் பலூனுமா கிடைக்கப்போகுது?''
   'கொஞ்ச தூரம் போனா 'மெக்டுவல்’ ஹோட்டல் இருக்கு.'
   அவன் அலைந்து திரிந்துகொண்டிருப்பது, அவனின் வெஸ்பா சத்தம் ஆங்காங்கே கேட்டதில் தெரிந்தது. யுனிவர்சல் திரையரங்கின் ஓரத்தில் தெரிந்த தையல் செக்ஷன் பக்கம் இருந்து ஏதோ இயந்திரங்களின் பலத்த ஓசை கேட்டது. அவள் அம்மா, தையல் வேலை செய்தவள். ரவிக்கைகளும் பழைய துணிகளும் தைத்து, அவளை பள்ளிப் படிப்பு வரை படிக்க வைத்திருந்தாள். அவளுக்கும் பனியன் கம்பெனி என்றதும் தையல் செக்ஷன்தான் ஞாபகம் வந்தது. தையல் மெஷினில் உட்கார்ந்து ஓயந்துபோனதற்குக் காரணம், தையல் மெஷின் கொடுத்த சூடும், அது சார்ந்த கொப்பளங்களும் வியாதிகளும்தான். தையல்காரியின் மகளாக அவள் தொடர வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தாள்.
   அவன் திரும்பி வந்தபோது, அவன் கையில் மினுமினுக்கும் ஜரிகைப் பொட்டலம் ஒன்று இருந்தது.
   'மல்லிகைப் பூவே கெடைக்கல. நாளைக்கு முகூர்த்தம் வேற. இது கல்யாண சீஸன். பெரிய டிமாண்ட்.''
   மினுமினுக்கும் ஜரிகையில் ஒளிந்திருந்தது சிறிய தங்க மோதிரம்.
   ' 'பொன் வெக்கிற இடத்துல பூ’னு தன்னோட கையாலாகாத் தனத்தைச் சம்பிரதாயமா மறைச்சு சொல்வாங்க. இங்க அதுக்கு மாறா... தலைகீழா, பூ வெக்கிற இடத்திலே பொன்.''
   'தலையில பூவும் வெச்சு விட்டுட்டீங்க. ஒதுங்க இடம் தேடுற மாதிரி... அதுக்கு பெர்மிஷன் கேட்கிற மாதிரி.'
   நினைவுச்சின்னங்களும் சிலைகளும் பார்த்து அலுத்துப்போகவே, கொஞ்சம் லாட்ஜ் பக்கமும் ஒதுங்க ஆரம்பித்தார்கள்.
   ''கல்யாணம் செய்துகொண்டால் வெட்டிப் போட்ருவாங்க'' என்று அவள் சொன்னாள்.
   அவனும் அதையேதான் சொல்ல வேண்டியிருந்தது, ''பொட்டலம் கட்டி பாலாறுல வீசிருவாங்களே!'
   'நொய்யல்லியே அதுக்குச் சௌகரியம் இருக்கு. சாயத்தண்ணியில அடையாளம் காணாமப்போகப் பண்றது சுலபம்.''
   சேர்ந்து வாழலாம் என்று தீர்மானம் எடுத்தபோது, சில மாதங்கள் ஓடியிருந்தன. சாயப்பட்டறைகள் மூடல்கள் என்று வந்த பின்பு ஊரில் நிறைய கம்பெனிகள் காலியாகிச் சும்மா கிடந்தன. நாலு பெரிய கம்பெனிகள், பார்கள் ஆயின. ஏழு சாயப்பட்டறைகள் பால் கம்பெனிகள் ஆயின. நொய்யல் கரையில் இருந்த ஒன்பது சலவைப்பட்டறைகள் ஈமு கோழிப் பண்ணைகள் ஆயின.
   ''இந்தச் சமயத்திலே ஊடு புடிக்கிறது சுலபம். நிறைய வூடுக சும்மா கெடக்குது. சாதி, மதம்னு விலாவாரியாக் கேட்க மாட்டாங்க.'
   ஊர்விட்டு ஊர் வந்த பின்பு, இந்த நகரத்தில் தங்களின் சாதி அடையாளம் தெரியாமல் திரிவது அவர்களுக்கு சுலபமாக இருந்தது. அதற்காகவே புழுதி, வெயில், சாயக்கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் மீறி அவர்களுக்கு ஊர் பிடித்துவிட்டது.
   ''நல்ல காசு. டாலர் பவுண்ட்னு பத்தே வருஷத்துல நம்ம பர்ஸ்ல புழங்கும். சாயம், அழுக்கு எல்லாத்தையும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.'
   ''சாதி கேட்காட்டியும், 'புருஷன் பொண்டாட்டியா?’னு கேட்காமலா இருப்பாங்க..?'
   'கேட்டா ஆமான்னு சொல்லிட்டாப் போச்சு.''
   'என்ன ஆமான்னு சொல்லப்போறீங்க..'
   'எல்லாத்துக்கும் ஆமாதான். உங்கூடப் படுத்து சொகம் காண்றதுக்கு எவ்வளவு வேண்ணா ஆமா போடலாம்.'
   எல்லாம் சுலபமாகவே நடந்தன. லைன் வீடுகளைத் தவிர்த்தார்கள். தனியாக ஒரு வீடு தென்பட்டது. வீட்டுக்காரர், நான்கு வீதி தள்ளி இருந்தார். அது பெரிய சௌகரியம். அவளுக்குக் கமலி பெண்கள் விடுதியில் இருந்த அவஸ்தை முடிந்தது. அவன் லாட்ஜில் மாத வாடகையில் இருந்த உப்பசம் தீர்ந்தது.
   'சின்னதா ஒரு நஷ்டம்.'
   ''தெரியலையே!'
   'முந்தியெல்லாம் மீட் பண்றப்போ நான் ஒரு குட்டிக் கதை... நீங்க அறுவை ஜோக் ஒண்ணு சொல்லிப்போமே!'
   'ஆமா... அது கட்டாயிருச்சுல்ல!'
   'சரி... குட்டிக் கதை ஒண்ணு சொல்றேன். உலகின் கடைசி மனிதன் இருந்த வீட்டுக் கதவு தட்டப்பட்டது.'
   'இது நான் படிச்சதுதான். உபயம் சுஜாதா..'
   'நான் என் பங்குக்கு, மெக்சிகோ சலவைக்காரி ஜோக் சொல்றேன்.''
   'அதுவும் உபயம் சுஜாதாதானா?'
   ''இன்னமும் இதை ஃபாலோ பண்ணணும். ஞாயிற்றுக்கிழமையாச்சும் குட்டிக் கதை, கடி ஜோக்ஸ் சொல்லிக்கணும்.''
   ஒரு ஞாயிற்றுக்கிழமை, மாடியில் நின்று பட்டம் விட்டார்கள். பட்டத்துக்கு மாஞ்சா போடுவதிலும், டீல்விட்டு அறுத்துவிடுவதிலும் அவன் மன்னன். சாயப்பொடி, கோந்து, கண்ணாடித் தூள் கலந்து பசை தயாரிப்பான். அன்று பட்டம் விட்டபோது பட்டத்தைக் கடந்து சென்ற விமானத்தைக் காட்டிச் சொன்னான், 'உன்னோட, இதுல பறக்கணும்.' அங்கு குடிபோய் ஒரு வாரத்துக்குப் பிறகு, இது எதுவுமே தொடரவில்லை. எல்லாம் தலைகீழாகிவிட்டன.
   இரண்டாம் நாள், தேவி அவளின் தூரத்து உறவினர் ஒருவரை அவள் குடிபோன வீதியில் பார்த்தாள்.
   'இந்த வூட்லே என்ன பண்றே?''
   'இங்க இருக்கிறவையப் பார்க்க வந்தன்.'
   'காலியாத்தானே கெடந்தது. யாரு இருக்கா?'
   'ஒரு குடும்பம்.'
   'குடும்பம்னு இருந்த மாதிரி தெரியலயே!'
   அவரை அந்த வீதியில் அடிக்கடி பார்ப்பதாகத் தோன்றியது. அவரும் வேவு பார்ப்பதாகத் தோன்றியது. பிரமையும் பயமும் அவளை அலைக்கழித்தன. ஊரில் இருந்து தொலைபேசி அழைப்பு வரும். அருவாள் சகிதமாக நாலைந்து பேர் வருவர் என்பது அவன் அணைப்பில் அவள் கிடந்தபோது விருக்கென்று தள்ளிப் போகச் செய்திருக்கிறது.
   'வேறு இடம் பார்த்துடணும்.'
   'நிறைய அட்வான்ஸ் குடுத்திருக்கோம்.''
   'அட்வான்ஸுக்காக அடிபட முடியுமா? வெட்டி, பொட்டலமாக் கட்டிருவாங்க. ரெண்டு பக்கமும் சாதி வெறி பிடிச்சவங்கதானே இருக்காங்க.''
   கமலி பெண்கள் விடுதிக்கு, தேவி திரும்பி விட்டாள். அழுக்குப் படுக்கை, பாத்ரூமுக்கு க்யூ, கலர்கலராக அஜினமோட்டா சாதங்கள். அலுத்துவிட்டது எப்போதோ அவளுக்கு.
   ''என்ன... கமல்-கவுதமினு சொல்லிட்டிருந்தே. ஊத்திருச்சா..?'
   'என்ன... திருப்தி பண்ண முடியலையா..? யார்... எவர்?''
   'நல்ல திருப்திதான். உசுரு எப்போ போகுமுனு ஊசலாட்டம்...''
   இதற்கு இடையில் தேவியும் மெர்சன்டைஸில் இருந்த கிராக்கி காரணமாக, வேறு கம்பெனிக்குப் போய்விட்டாள். அவனைத் தவிர்த்தாள்.
   'என்னைய அவாய்ட் பண்றியா?'
   ''இப்போ நெனச்சாலும் உடம்பு நடுங்குது. யோசிச்சுப் பார்த்தா ஒர்க்-அவுட் ஆகாதுனு தீர்மானமாத் தெரிஞ்சது. நீயும் படுக்கை சபலம் எல்லாம் இல்லாம யோசிச்சுப் பாரு.'
   முன்பு இன்டர்நெட் கபேயில் இருவரும் சென்று பொழுதுபோக்கியபோது ஒருநாள் அருணகிரி, 'பேஸிக் இன்ஸ்டிங்ட்’ படத்தில் இடம் பெற்ற உடலுறவுக் காட்சிகளைக் காட்டினான். அதன் பின்னரான சந்திப்புகளில் அவள் அந்தப் படத்து கதாநாயகி ஷரோன் ஸ்டோன் போலத்தான் அவனுடன் படுக்கையில் இயங்கினாள்.
   ''ஷரோன் ஸ்டோன் நடிச்ச மத்த படங்களைப் பார்க்கிறயா?''
   'இது ஒண்ணுக்கே இடுப்பு வலி தீரலை.''
   அதற்கப்புறம் அவளைச் செல்லமா 'ஷரோன்’ என்றுதான் கூப்பிட ஆரம்பித்தான்.
   'வாழ்க்கையில யாரையாச்சும் முன்னுதாரணமா வெச்சுட்டு ஃபாலோ பண்ணணும்.''
   'எனக்கு ஷரோன்... உங்களுக்கு?''
   'உனக்கு இப்பதான் ஷரோன். எனக்கு எப்பவும் மு.வ-தான்.'
   'அவர் ஒழுக்கத்தை கம்பெல் பண்றவர்.''
   'லிவிங் டுகெதர் பத்தியும் கதை எழுதியிருக்கிறார்.''
   அவளுக்கு அவன் அணிவித்து இருந்த மோதிரம் திரும்பி வந்துவிட்டது. நிச்சயதார்த்த மோதிரமா... நட்புச் சின்னமா... எதுவும் இல்லை. இனி ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. சரி என்னதான் சொல்கிறாள் என்று தெரிந்துகொள்ளலாமே என்று அவளின் கைபேசி எண்ணை முடுக்கினான். இன்னும் எண் மாறவில்லை. குறுஞ்செய்தியில் பிரிவு சொல்லி பிரிந்தவள், எடுப்பாளா... நிராகரிப்பாளா?
   'சௌக்கியமா தேவி?'
   'சௌக்கியம். எப்பவாச்சும் இப்பிடி ஹலோ சொல்லிக்கலாம்... அதுதான் நல்லது.'
   'சரி...' அவனுக்கு, தொண்டை கமறியது.
   'உனக்குத் தொண்டை கமறலயா ஷரோன்.'
   'அதைத் தாண்டி வந்திட்டேன். உசுரு முக்கியம் இல்லையா? என்ன ஷரோன்னுட்டிங்க..?'
   'ரொம்ப நாளா அப்படிக் கூப்பிட்டுப் பழக்கமாயிருச்சே!''
   ''நீங்கதானே யாரையாச்சும் ஃபாலோ பண்ணணும். உங்களுக்கு மு.வ-ன்னீங்க..'
   'உனக்கு ஷரோன்னே!''
   'உம்.''
   'மோதிரத்தைத் திருப்பி அனுப்பியிருக்கீங்க.''
   'அதுவும் ஷரோன் வழிதான். அவங்க வழி தனி வழி...'
   'எப்படி?''
   'டாம்டாம் பத்திரிகை. இந்த இஷ்யூ 35-ம் பக்கம் பாருங்க.''
   பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப் பள்ளி முக்கில் இருந்த பெட்டிக்கடையில் டாம்டாம் அந்த வார அட்டையில் திரிஷாவுக்கும் நயன்தாராவுக்கு என்னென்ன வித்தியாசங்கள் என்று தலைப்பிட்டு திரிஷா மார்பைக் காட்டி சாய்ந்து சிரித்தாள். 35-ம் பக்கத்தைப் புரட்டினான்.  
   எனக்குத் தேவை 'பேஸிக் இன்ஸ்டிங்ட்'' ஷரோன் ஸ்டோன்.
   35-ம் பக்கம். அட... 35-ம் பக்கம் நடுப்பக்கம் அல்லவா! ஷரோன், மார்புகளின் பிளவு தெரிய தொடையை அகல விரித்துக்கொண்டு மேசை மேல் உட்கார்ந்திருந்தாள். ஷரோன் பற்றிய செய்தியை பரபரவென்று படிக்க ஆரம்பித்தான்.
   'ஷரோன் ஸ்டோன், கூரியரில் காதலனுக்கு மோதிரத்தைத் திருப்பி அனுப்பியிருந்தாள்.’
   https://www.vikatan.com/
  • By நவீனன்
   ஃபர்ஸ்ட் ரேங்க்- சிறுகதை
   சிறுகதை: மாதவன் ஓவியங்கள்: செந்தில்
    
   விடியற்காலை ஐந்து மணி இருக்கும். அப்பாவின்  போன்தான் அழைத்தது.  எடுத்தார்.

      ``யாரு?’’

   ``எப்போ?’’

   ``சரி இந்தா வரேன்.’’

   போன் சத்தத்தினால் விழித்த என்னையும் அம்மாவையும் பார்த்து, “பார்வதி அம்மா போயிடுச்சாம்”  என்று  பெருமூச்சு விட்டார்.

   ``ஐயோ! எப்போ?’’ பதறினாள் அம்மா.

   ``காலைல மூணு மணிக்காம்.  வேட்டியை எடு, கிளம்பணும்.’’

   வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியே வரும்போது தெருவில் பெரிதாக ஒன்றும் வெளிச்சம் இல்லை.  மார்கழி மாதக் குளிர்காற்று காதுக்குள் உய்ய் என்றது. அம்மா அழுதுகொண்டே நடந்து வந்தாள். ஞானம் ஐயர் வீட்டில் மக்கள் வரத்தொடங்கியிருந்தனர்.  பார்வதி அம்மாளின் எல்லாமுமாக இருந்தவர் ஞானம் ஐயர். அதனால், அவரைக் கணவர் என்ற வார்த்தையில் மட்டும் சுருக்கிவிட முடியாது.

   `குட்டி ஐயர்’ என்று அவரை ஊரில்  சொல்வதற்குக் காரணம் அவருடைய உயரம்தான்.  எங்கள் வீட்டு சோபாவில் சாய்ந்து அமர்ந்தால் அவரின் கால் தரையில் படாது.  எனக்கு நினைவு தெரிந்து நாலு, ஐந்து முறைதான் அவரை சட்டையுடன் பார்த்திருப்பேன். அவர் துண்டைத் தோளில் போட்டிருக்கும்போது மார்பு எலும்புகள் வரி வரியாய்த் தெரியும்.  எப்போதும் சவரம் செய்து, வகிடு எடுத்துச் சீவி, திருத்தமாக இருப்பார்.  சதுரமா, உருண்டையா என்று எளிதில் முடிவுக்கு வரமுடியாத முகம்.  நெற்றியில் தவழும் வெள்ளி முடிகள் காற்றில் ஆடும்போது வெள்ளைக்கோடிட்டிருக்கும் விபூதி தெரியும். எப்போதும் சிரிப்பு, எல்லாவற்றுக்கும் சிரிப்பு. கவலை ரேகைகளை அவரின் முகத்தில் பார்க்கவே முடியாது.  ஊரில் யார் வீட்டு விசேஷத்திலும் ஐயரைப் பார்க்கலாம்.  ஓமகுண்டத்தின் புகை மூட்டத்திற்குள் `சிவ சிவ’ என்று எழுதப்பட்டிருக்கும் காவி வேட்டியும் `நமோ நாராயணா’ போட்ட துண்டுமாக நானே பல இடங்களில் பார்த்திருக்கிறேன். 

   அம்மாதான் நெஞ்சில் அடித்தவாறு ஐயரின் வீட்டிற்குள் ஓடினாள். வீட்டின் மையப்பகுதியில் பார்வதி அம்மா சலனமின்றிப் படுத்திருந்தாள். மாலைகளுக்கு மத்தியில் மஞ்சள் பூசிய முகம் ஓரளவுக்குத்தான் தெரிந்தது. உள்ளே போய் ஒருமுறை பார்த்துவிட்டு அப்பா வெளியே வந்தார். வீட்டின் வெளித் திண்ணையில் உட்கார்ந்திருந்த ஞானம் ஐயர் எங்களைப் பார்த்து மெதுவாகத் தலையை அசைத்தார். அப்பா அவரின் அருகில் போய் உட்கார்ந்தார். மூலையில் உள்ள கிணற்றையும், துளசி மாடத்தையும் வெறித்துக்கொண்டிருந்தார் ஐயர். தாங்க முடியாத மௌனம் நிலவியது. ஐயர் அப்பாவைப் பார்த்து  ``எல்லாம் முடிஞ்சது மாப்ள” என்றார். 

   பார்வதி அம்மாளைக் குளிப்பாட்ட வெளியே தூக்கி வந்தார்கள். “பாத்து பாத்து” என்று ஞானம் ஐயர் கத்தினார்.  வீட்டின் முற்றத்தில் பார்வதி அம்மாளைக் கிடத்தினார்கள். அதற்குள் வீட்டின் வெளியே போடப்பட்டிருந்த அவசரக் கொட்டகையில் வாடகை சேர்கள் வந்திறங்கியிருந்தன.

   ``மார்கழி மாசம் செத்திருக்கு பார்வதி, கண்டிப்பா சொர்க்கத்துக்குத்தான் போவா” என்றது ஏதோ கிழவியின் குரல்.

   ``எட்டு வருஷமா படுத்தபடுக்கையா கிடந்த பார்வதிக்கு மூத்திரமும் பீயும் அள்ளிக்கொட்டுன புண்ணியத்துக்கு ஞானமும்தான் போவாரு” என்றது இன்னொரு குரல். தண்டோராவுக்குச் சொல்லி ஆளனுப்பி, பாடைக்கு முன்பணம் கொடுத்துவிட்டு உள்ளே வந்த அப்பா  சேர்களைப் பரப்பிக்கொண்டிருந்த என்னிடம் “எத்தனை சேர் வந்திருக்கு?” என்றார்.

   ``நூறு’’ என்றேன்

   ``ஞானம் எங்க?’’ என்றார். 

   பார்வதி அம்மாளின் பின்னால் உட்கார்ந்திருந்தவரைச் சுட்டிக்காட்டினேன். ``தூக்குறது எத்தன மணிக்கு வச்சுக்கலாம்? சோதா கிளம்பிட்டானா?’’

   ``இப்போதான் போன் போட்டேன். வந்திட்டிருக்கானாம்’’ என்றார் ஐயர்.

   மணிகண்டன் என்கிற சோதா, ஐயரின் ஒரே மகன். என்னைவிட ஆறு வயது பெரியவன். நல்ல நிறம். அபாரமாய்ப் படிப்பான். ஸ்கூலில் எல்லா டீச்சர்களுக்கும் செல்லப்பிள்ளை. நல்லா கணக்கு போடுவான். பெரிய பெரிய ஆங்கில வார்த்தையெல்லாம் சாதாரணமாகப் பேசுவான். உதாரணமாக, நான் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால், ``வாடா ரெடிகுலஸ்” என்பான். அதன் அர்த்தம் புரியும்வரை அதுதான் என் பட்டப்பெயராக இருந்தது தெருவில். ``ரெடிகுலஸ் இங்க வா’’, ``ரெடிகுலஸ் கடைக்குப் போ’’. ``ஐயா எடிகுலசு, அந்த வெத்தலப் பொட்டிய எடு”ன்னு பக்கத்து வீட்டு தங்கம் பாட்டி சொல்லும்போது புல்லரித்துப்போய் நின்றிருக்கிறேன், அர்த்தம் புரியாமல்.

   அவன் அதிகபட்சமாக உடலை வருத்தி விளையாடும் விளையாட்டு கோலிக்குண்டாகத்தான் இருக்கும். எப்போதாவது கிரிக்கெட் விளையாட வருவான்.  நேரடியாக பேட்டிங் டீமில் சேர்ந்துகொள்வான். பேட்டிங் செய்துவிட்டு, ``அவுட் சைடு ஆஃப் தி ஆஃப் ஸ்டம்ப் போடு’’, ``ஸ்லிப் வச்சுக்கோ” என்று ஃபீல்டிங்குக்கு ஐடியா கொடுத்துவிட்டுப் போய்விடுவான்.  திருவிழாக்கடைகளில் விற்கும் பாட்டுப் புத்தகங்களிலிருந்து, `தியோசோபிகல் சொசைட்டியின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்று என் மூளைக்கு எட்டாத புத்தகங்கள் வரை அவன் படிக்கும்போது அவனையே வெறித்துப்பார்த்துக் கொண்டிருப்பேன். கோபமாய் வரும், ஒருவேளை பொறாமையாகக்கூட இருந்திருக்கலாம்.

   அந்தநேரம் சோதா பனிரெண்டாவதில் நான்கு இலக்கத்தில் மதிப்பெண் எடுத்து அரசுக் கல்லூரியில் சேர்ந்திருந்த நேரம்.  நான் ஏழாவது  படித்துக் கொண்டிருந்தேன். ஞானம் ஐயர் தன் மகனின் வாசிப்பைப்பற்றிப் பெருமையாய்ப் பேசுவார். ``எப்படி அண்ணா நீ மட்டும் நல்லா படிக்கிற?” என்று கேட்டால், வாயில் ஆட்காட்டி விரல் வைத்து ``உஷ்... ரகசியம்” என்பான். அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ள அவன் பின்னாலேயே அலைந்தேன். கடைசியில் சம்மதித்தான் ரகசியத்தைச் சொல்வதாக. ஆனால் ‘ஒரு நிபந்தனை’ என்றான்.

   அது அவ்வளவு கஷ்டமானது என்று ஆரம்பத்தில் நினைக்கவில்லை. ஆனால், சோதா தேன் தடவிய நாக்குக்குச் சொந்தக்காரன். எதையும் ஒத்துக்கொள்ள வைக்கும் சூட்சுமம் அவனுக்கு நன்றாகவே தெரியும். அவனுக்குக் காரியம் ஆகவேண்டுமானால், எதுவும் செய்வான். ஆனால், முதலில்  ஆசையைத்தான் தூண்டுவான்.

   ``நீ ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கிட்டனா உங்க அப்பாகிட்ட என்ன வாங்கித்தரச் சொல்லுவ?” என்று கேட்டான்.

    ``சைக்கிள், இல்ல கிரிக்கெட் பேட், இல்ல வீடியோ கேம் செட்தான் கேட்பேன்’’ என்றேன்.

   ``மூணையுமே கேளுடா, கண்டிப்பா உங்கப்பா வங்கித் தருவார். ஏன்னா, நீதான் இதுவரை ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்ததே இல்லையே” என்று சிரித்தான்.

   நெஞ்சுக்குள் சுருக்கென்றாலும் அதுதான் உண்மை.

    ``எனக்கு ஒரே ஒரு  உதவி மட்டும் செய், உன் ஃபர்ஸ்ட் ரேங்க்குக்கு நான் பொறுப்பு’’ என்றான்.

   ``அப்படி என்ன பிரமாதமான வேலை?’’

   ``நீ ஓகேனு சொல்லு, அப்புறம் சொல்றேன்.’’

   வாழ்க்கையின் முதல் ஃபர்ஸ்ட் ரேங்க் மயக்கத்தில் இருந்ததால், “நடுராத்திரியில் சுடுகாட்டுக்குப் போகச் சொன்னாலும் போறேண்ணா” என்றேன்.

    “அவ்வளவு பெரிய வேலையெல்லாம் இல்ல, ஒரு பொருளை நான் சொல்ற இடத்திலிருந்து எடுத்து வரணும்” என்று சொல்ல, எனக்கு மூச்சிரைக்க ஆரம்பித்தது. ``எங்க வீட்டுக்கு நைட் 8 மணிக்கு வா, விவரமாய்ச் சொல்றேன். இது யாருக்கும் தெரியக் கூடாது” என்று மெதுவாய், அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டே சொன்னான்.

   அவன் போனபிறகு நான் பாத்ரூமிற்கு ஓடினேன். ``உனக்கு எதுக்குடா ஃபர்ஸ்ட் ரேங்க்? முட்டாள், சோதா பேச்சைக் கேக்காதே’’ என்று பாத்ரூம் கண்ணாடி சொல்லியது. மாணவர்களின் கரவொலிக்கு மத்தியில் நடந்து சென்று ரேங்க் கார்டை ஆசிரியரிடம் வாங்கி, ``பெஸ்ட் ஆஃப் லக் டாப்பர்” என்ற சொற்கள் என் செவிப்பறைகளில் விழுந்தாகவேண்டும் என்ற பிடிவாதம் ஒருபுறம் என்னை கடிகாரத்தைக் கண்கொட்டாமல் பார்க்கவைத்தது. நொடிமுள்ளின் ஒவ்வொரு சுழற்சிக்கும் சைக்கிளும், வீடியோ கேம் செட்டும் தோன்றி மறைந்தன. சில சமயம் கிரிக்கெட் பேட், அதுவும் பாச்சா வைத்திருக்கிற அதே பிரிட்டானியா பேட் சிவப்பு லேபிள், கடிகாரத்தின் கண்ணாடியில் பளபளத்தது.  கடைசியில் ஆசைதான் ஜெயித்தது.

   ஆர்வமா, பயமா என்று பெயரிட முடியாத உணர்வுடன் என் வீட்டை விட்டுக் கிளம்பினேன். ``சோதாகிட்ட டவுட் கேட்டுட்டு வரேன்மா” என்று கொல்லையில் இருந்த அம்மாவிடம் கத்திச் சொல்லிவிட்டு, அவளுக்குக் கேட்டிருக்கும் என்ற நம்பிக்கையோடு புறப்பட்டேன்.

   முற்றத்தில் ஐயர் உட்கார்ந்துகொண்டு அரைகுயர் நோட்டைப் பார்த்துக்கொண்டிருந்தார்.  எதிரில் உட்கார்ந்திருந்தவர் ஐயரையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார். ஏதோ ஜாதக விவகாரம் எனத் தோன்றியது.  அவர்கள் வீட்டு டைகர் என்னைப் பார்த்து சம்பிரதாயத்துக்கு ஒரு `லொள்’ளிட்டுவிட்டுப் படுத்துக்கொண்டது. வால் மட்டும் எதற்கோ துடித்துக்கொண்டிருந்தது. பாவம், பொங்கலும் புளியோதரையும் மட்டுமே சாப்பிடும் பிராணி.

   ``வாடா மாப்ள!’’ (அது என்ன கணக்கோ தெரியல. ஐயருக்கு நானும் மாப்பிள்ளைதான். என் அப்பாவும் மாப்பிள்ளைதான். கிராமங்களில் ஜாதிகள் உறவுகளைத் தீர்மானிப்பதில்லை) ``என்ன இருட்டுக்குள்ள வர்ற, அப்பா எதாவது சொல்லிவிட்டாரா?’’

   ``இல்ல, அண்ணாவப் பார்க்க வந்தேன்” மாமா.

   ``உள்ளதான் இருக்கான் போ” என்று திறந்திருந்த கதவைச் சுட்டிக்காட்டினார். கதவின் காலடியில் அகல்விளக்கு எண்ணெய்க்காகக் கண் சிமிட்டிக்கொண்டிருந்தது.

   ``வாடா ரெடிகுலஸ்... பரவால்லயே கரெக்டா வந்துட்டியே” என்று அறையின் மூலையில் நாற்காலியின் மீது அமர்ந்து எழுதிக்கொண்டிருந்த சோதா அழைத்தான். நான் ``ஆமாம்” என்பதுபோல சமாளித்துச் சிரித்தேன். “வந்து என் பக்கத்தில் உட்கார்” என்று தன் இடது கையால் நாற்காலியை இரண்டு தட்டு தட்டினான்.  என் படபடப்பு அதிகமானது. டேபிளின் மீது திறந்திருந்த மை வாசத்தையும் பக்கத்து அறையிலிருந்து வரும் பார்வதி அம்மாளின் சோக இருமலையும் ஒருசேர கவனித்துக்கொண்டிருந்த என்னை, ``என்னடா ஒரு மாதிரியா இருக்க” என்ற சோதாவின் குரல் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து நிகழ்காலத்துக்குக் கொண்டுவந்தது.

   ``ஒண்ணுமில்லையே!’’

   ``சரி , நான் சொன்னதப் பத்தி யோசிச்சுப் பார்த்தியா?’’

   ``பயமா இருக்குண்ணா, அதான் வேண்டாம்னு...’’

   ``என்னது, வேண்டாமா?’’ என்று கோபமாய்க் கேட்டான்.

   ``அப்போ நீ டியுஷன் போறேன்னு சொல்லிட்டு கிரிக்கெட் விளையாடப் போறதையெல்லாம் உங்கப்பாகிட்ட சொல்லிடவேண்டியதுதான்.’’ அவனது அடுத்த அஸ்திரத்தை எடுத்து விட்டான். என் பயத்தை வைத்தே என்னைப் பகடையாக மாற்ற முயன்றான்.

   ``வேண்டாம்ணா, திருடுறது பாவம்!’’

   ``திருடுறதா யாருடா சொன்னா? உபயோகமில்லாமல் சும்மா இருக்கிற பொருளை நாம பயன்படுத்துறதுல என்ன தப்புங்குற?’’

   ``இல்லைதான். . .”

   ``பயப்படாம நான் சொல்றதைக் கவனமா கேளு” என்று, நான் உள்ளே வந்த வாசலையும், பார்வதி அம்மாளின் இருமல் சத்தத்தையும் கவனித்துவிட்டு மெதுவாய்ப் பேச ஆரம்பித்தான். ``உனக்கு நம்ம ஊர் லைப்ரரி தெரியும்ல?”

   ``ம் தெரியுமே’’

   ``சமத்துப் பையன்” என்று கன்னத்தைக் கிள்ளிவிட்டு, ``அங்க போய் ஒரு புத்தகத்தை எடுத்துட்டு வரணும் அவ்ளோதான்” என்றான். என் மூளை ஞானம் வீட்டில் பாத்ரூம் எங்கே இருக்கும் என்று நினைவுகளில் படிந்திருந்த வீட்டின் `புளூ பிரின்ட்டை’ அலசியது.

   ``நிறைய பேர் இருப்பாங்களே, கஷ்டமாச்சே?!’’

   ``ஒருத்தர் ரெண்டுபேர்தான்டா இருப்பாங்க. ஈஸிதான்.’’

   ``அப்புறம் என்ன, நீயே போய் எடுத்துக்கிட்டு வரலாம்ல?’’

   ``உனக்கு ஃபர்ஸ்ட் ரேங்க் வேணுமா, வேண்டாமா? உனக்கு இதெல்லாம் சாதாரண விஷயம்டா, பயப்படாம பண்ணு.’’

   ``பயமில்ல...’’

   “அதானே, பயம்னா பைசாக்கு எவ்வளவுனு  கேக்குற ஆள் ஆச்சே நீ” என்று சிரித்தான்.  அந்தச் சிரிப்பில் என்னை ஒப்புக்கொள்ளவைத்துவிட்ட பெருமிதம் தெரிந்தது. அது உண்மைதான். நான் தயாராகிவிட்டேன்.
   `‘புது சைக்கிள் வந்தவுடன் எனக்கு ஒரு ரவுண்டு கொடுக்கணும் பாலா. இனிமே கிரிக்கெட் விளையாட சைக்கிளிலேயே போலாம். உன் அப்பாகிட்ட கேட்டு நல்ல பேட் வாங்கிக்கோ . நான் உனக்கு கவர் டிரைவ் ஆட கத்துத்தர்றேன். பாச்சாகிட்டகூட ஒரு பேட் இருக்கில்ல?” என்று என்னை ஓரக்கண்ணால் பார்த்தான். அவனுக்கு என் ஆசைகள் முழுவதுமாய்த் தெரிந்திருந்தது.

   குசுகுசு குரலில், ``வர்ற சனிக்கிழமைதான் சரியான நாள், லைப்ரரி இன்சார்ஜ் சாப்பிடக் கிளம்புறப்போ, படிச்சிட்டு இருக்கவங்களையெல்லாம் கிளம்பச் சொல்லுவாங்க. அதுதான் டைம், நீ தூக்கிடு.”

   ``ம்’’ என்று நேர்க்கோட்டில் தலையை அசைத்தேன்.

   ``புத்தகத்தை எப்படி வெளில எடுத்திட்டு வருவ?’’

   ``முதுகுக்குப் பின்னாடி வச்சு மறைச்சுக் கொண்டுவர்றேன்.’’

   ``சுத்தம். கவனமா பாரு” என்று டேபிளின் மீதிருந்த புத்தகத்தைக் கையிலெடுத்து எழுந்து நின்றான். சட்டையைத் தூக்கி வயிற்றில் சுருட்டியிருந்த வேட்டிக்குள் பாதிப் புத்தகத்தை மறைத்து, சட்டையைக் கீழே இறக்கி விட்டான். உள்ளே புத்தகம் இருப்பதற்கான அடையாளம் சுத்தமாகத் தெரியவில்லை. இது அவனது அனுபவ அறிவாகத்தான் இருக்க வேண்டும் எனத் தோன்றியது.

   ``நல்லாப் பாத்துகிட்டியா, ஒண்ணும் குழப்பம் இல்லையே?’’

   ``இல்ல. நீங்க ஏற்கெனவே இப்படிப் பண்ணியிருக்கீங்களா?’’

   வேட்டிக்குள் இருந்த புத்தகத்தை வெளியே எடுத்து மூலையில் நின்றுகொண்டிருந்த அலமாரியின் கதவைத்திறந்து உள்ளே வைத்தான்.

   ``எவ்வளவு புத்தகம்?!’’

   கதவைச் சாத்திவிட்டு, ``என்ன கேட்ட?” என்றான்.

   ``இல்ல இதுக்கு முன்னாடி இப்படி. . .’’

   ``ச்சீய் ச்சீய், இல்லவே இல்ல’’ என்றான். அது பொய் என்று என் உள்மனது சொல்லியது.  மணி ஒன்பதாகியிருந்தது. ``நான் வீட்டுக்குக் கிளம்புறேண்ணா, அந்தப் புத்தகம் பேரு சொல்லவே இல்லையே?’’
   ``இப்பவாவது கேட்டியே, `வாடிவாசல்’.  இன்னிக்கு வியாழன், இன்னும் ஒரு நாள் இருக்கு சனிக்கிழமைக்கு’’ என்று தலையைக் கோதி விட்டான். சோதாவைப் பார்க்கக் கொள்ளைக்கூட்டத் தலைவனாய்த் தெரிந்தான். கதவினருகே இருந்த விளக்கு காற்றுக்கு இரையாகியிருந்தது.

   ``கிளம்பிட்டியா மாப்ள?” என்றார் ஐயர்.

   ``ஆமா மாமா.’’

   ``ரோட்ல ஓரமா போகணும், சரியா?’’

   ``சரி மாமா.’’

   டைகர் `உர்ர்ர்’ என்பதோடு நிறுத்திக்கொண்டது. ஐயர் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். வீட்டைக் கடக்கும்போது ``நேரங்காலம் நன்னா இல்லையேடா அம்பி” என்பது மட்டும் தெளிவாய்க் கேட்டது. அன்றிரவு என்னால் கண்ணை மூடக்கூட முடியவில்லை. அதையும் மீறி மூடினால் வாடிவாசல், கைத்தட்டல்கள், டாப்பர், சைக்கிள்... இப்படி ஒவ்வொரு கண்ணியாகச் சேர்ந்து அது ஒரு சங்கிலித்தொடராக மாறியிருந்தது.
   மறுநாள் பள்ளியிலும் இதே நிழலாட்டங்கள். கணக்கு வகுப்பில் ஃபார்முலா பழனியப்பன், `உருளையின் கன அளவு’  கேட்டது, நான் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு நின்றது, அவர் குச்சியால் என் ட்ரவுசரில் உள்ள புழுதியைப் பறக்கவிட்டது எல்லாம் எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. மற்ற நாளாக இருந்திருந்தால் அன்றிரவு குப்புறப்படுத்துத்தான் தூங்கவேண்டும். என் கண்ணெதிரே ராட்டினம் சுற்றுவது போல் இருந்தது. ராட்டினத்தில் உள்ள ஒவ்வொரு பெட்டியும் சைக்கிளாக,  வாடிவாசலாக, கிரிக்கெட் பேட்டாகச் சுற்றியது. ஆனால், ராட்டினத்தின் மையப்புள்ளி ஃபர்ஸ்ட் ரேங்காக இருந்தது. ஆனால், சோதாவுக்கோ அது அஞ்ஞாடியாகத்தான் இருந்திருக்கும்.

   மற்றொரு சிவராத்திரியைச் சந்தித்த பின் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சனிக்கிழமை வந்தது.  குளிக்கும்போது அரைஞாண் கயிற்றை ஒரு முறை இழுத்துப் பார்த்துக்கொண்டேன். வலுவாகத்தான் இருந்தது. நூலகத்துக்குள் நான் நுழையும்போது அவ்வளவு கூட்டமில்லை. வலது பக்கமும் இடது பக்கமும் போடப்பட்டிருந்த, இரும்புச்சட்டங்களால் ஆன அலமாரிகளில் புத்தகங்கள் நெருக்கமாக  அடுக்கப்பட்டிருந்தன.  சில இடங்களில் புத்தகங்களின் இடைவெளி வழியே பின்னால் இருக்கும் வெள்ளைச்சுவர் தெரிந்தது. இந்த இடைவெளியெல்லாம் சோதாவின் கைங்கர்யம் என்று தோன்றியது. அஞ்ஞாடியைத் தேடுவதற்குப் போதுமான சூரியவெளிச்சம் உள்ளே இருந்தது. நூலகத்தின் பொறுப்பாளர் நடுவே உட்கார்ந்திருந்தாள். எனக்கு அவளை நன்றாகத் தெரியும். ஒன்றிரண்டு முறை பேசியிருக்கிறேன். அவளின் பின்னால் இருந்த சுவரில் புத்தகத்தைப் பற்றிய கவிதைகள் எழுதப்பட்டிருந்தன. சோதா விதிமுறைகளைத் தெளிவாகச் சொல்லியிருந்தான். நூலகத்திற்குள் நுழைந்தவுடன் வலது பக்க அலமாரியில் ஏதாவது புத்தகத்தை எடுத்துக்கொண்டு அலமாரியை எதிர்நோக்கி உட்கார்ந்துகொள்ள வேண்டும். இதுதான் எனக்குக் கொடுக்கப்பட்ட முதல் விதிமுறை.

   அடுத்து, கையிலிருக்கும் புத்தகத்தைப் படிப்பதுபோல் எதிரே நிற்கும் அலமாரியில் `அந்த’ புத்தகத்தைத் தேடவேண்டும். காணவில்லையென்றால் பொறுமையாக எழுந்து அடுத்த அலமாரியில் தேட வேண்டும். யாரிடமும் அந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேசக்கூடாது .கண்டுபிடித்த பின்னர் யாராவது கவனிக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். பின் சரியான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்க வேண்டும். இது விதிமுறை இரண்டு.

   முதல் இரண்டையும் சரியாகச் செய்துவிட்டேன். வலது பக்க  அலமாரியில்  இருந்த புத்தகங்களில் என் தேடுதல் வேட்டையைக் கண்களால் ஆரம்பித்தேன். அதோ அந்த மூலையில்... .அதுதானா. . .  அதுவேதான். நாஞ்சில்நாடனுக்கும், வையாபுரிப்பிள்ளைக்கும் நடுவே! மண்டைக்குள் ராட்டினம், கைத்தட்டல்கள், சைக்கிள்.  பொறுப்பாளரைத் திரும்பிப் பார்த்தேன். மும்முரமாக பேப்பர் படித்துக்கொண்டிருந்தாள். காத்திருந்தே. . . . . . . . . ன்.
   இறுதியாக அந்த நிமிடம் வந்தது. வெளியில் யாரோ மாலதி என்று அழைக்க அவள் எழுந்து போனாள். (ஆம் அவள் பெயர் மாலதிதான். ‘வாடிவாசல்’ அவசரத்தில் மறந்துவிட்டேன். மன்னிக்கவும்!) இப்போது அறையினுள்ளே நான் மட்டும்... கண்ணெதிரே புத்தகம். மெதுவாக எழுந்து அலமாரியின் அருகே சென்றேன். கை படபடத்தது. ஊர்த் தலைவரின் உபய மின்விசிறியால் கூட என் வியர்வையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கைகளால் அந்தப் புத்தகத்தை எடுத்துப்பார்த்தேன். கனமாக இருந்தது.  பெயர் சரிதானா என்று தெளிவு செய்த பின்னர், மண்டைக்குள் சோதா ``தூக்கிடு’’ என்று  உச்சஸ்தாயியில் கத்தினான்.  நான்  வேகமாகப் புத்தகத்தை அடிவயிற்றினுள் செருகிக்கொண்டிருக்கும்போதுதான் அலமாரியின் அப்பால் இருந்த மாலதியின் ஜோடிக்கண்கள் கனல் பறக்க என்னையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். கையும் களவுமாக, இல்லை, வயிறும் களவுமாக மாட்டிக்கொண்டேன். தொண்டை அடைத்தது. அழுகை வரும்போலிருந்தது. தொண்டைக்குள் பம்பரம் சுற்றியது.

   எனக்கு நேராய் வந்து நின்று, ``எத்தனை நாளாய் இந்தத் திருட்டு வேல?’’ என்றாள்.

   ``இதுதான் ஃபர்ஸ்ட் டைம்” என்று மூளைக்குள் உதயமான வார்த்தைகள் வாயை வந்தடையவில்லை.

   “நட, உங்க வீட்டுக்குப் போலாம்” என்றாள்.

   ``அக்கா ப்ளீஸ்க்கா வேண்டாம்க்கா. . .’’

   ``இத இப்படியே விட்டா தப்பாகிடும். வா உங்க அப்பாகிட்ட சொல்றேன்” என்றதும் அண்டசராசரமும் அஸ்தமித்துவிட்டது.

   பரவாயில்லை, நான் பயந்ததுபோல் அடி விழவில்லை என்ற எண்ணம் அலையாகத் தோன்றும்போது கன்னத்தில் `பளார்’ என்று அறை விழுந்தது. கன்னத்தில் தீப்பிடித்ததுபோல் இருந்தது. நிலைதடுமாறி சுதாரிப்பதற்குள் அடுத்த கன்னத்திற்கும் தீப்பரவியது. ``இவன இப்படியே விட்டா இன்னும் திருடுவான்” என்ற சோதாவின் குரல், மயங்குவதற்கு முன் தெளிவாய்க் கேட்டது.

   தெளிந்து உட்காரும்போது சோதாவும் மாலதியும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தனர். மாலதிதான் குடிக்கத் தண்ணீர் தந்தாள். ``இப்படியா அடிக்கிறது? இங்க பாரு செவந்து போச்சு கன்னம்” என்று பச்சாதாபப்பட்டாள்.

   ``இவன் பண்ண காரியத்துக்கு...’’ என்று பற்களை நறநறவென்று கடித்தான் அந்த உத்தமன்.

   என் கன்னத்தைத் தடவிக்கொண்டே, ``இனிமே இப்படிப் பண்ணக்கூடாது சரியா” என்று மாலதி சொல்லிக்கொண்டிருக்கும்போதே,  ``வாடா போலாம் உங்க வீட்டுக்கு’’ என்று என் கையைப் பிடித்துத் தரதரவென அவன் வீட்டிற்கு இழுத்துச் சென்றான்.

   ``கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்கிட்டியே ராஸ்கல்!’’

   ``அடுத்த தடவை ஒழுங்கா பண்ணிடுறேண்ணா’’

   ``தொர, நீங்க பண்ணதே போதும். போய்டு!’’

   ``அந்த ஃபர்ஸ்ட் ரேங்க் ட்ரிக் . . .’’

   ``பல்லப்பேத்துடுவேன் போய்டு. . .’’

   அதன் பிறகு சோதாவிடம் அவ்வளவாக பேசவேயில்லை.  என் ராட்டினம் சுக்குநூறாக உடைந்துபோனது. முதல் ரேங்க்கைச் சந்திக்காமலேயே நான் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டேன். அவனுக்கு பெங்களூரில் வேலை கிடைத்திருப்பதாக ஐயர் சொன்னார். கடைசியாக சோதாவை அவன் கல்யாணத்தில் பார்த்தது. மீசையை எல்லாம் வழித்துக்கொண்டு வடநாட்டுக்காரன் மாதிரி இருந்தான். அதன் பின், இதோ காரைவிட்டு இறங்கி, குழந்தையைத் தூக்கிக்கொண்டு வருகிறானே இப்போதுதான் பார்க்கிறேன்.

   நாலடி தூரத்தில் அவன் மனைவி நடந்து வந்தாள். எல்லோரையும் பார்த்து மெதுவாகத் தலையை ஆட்டினான்.  கண்ணாடிப்பெட்டிக்குள் கிடத்தியிருந்த  பார்வதி அம்மாளைத் தரிசித்துவிட்டு ஓரமாய் ஒதுங்கி நின்றுகொண்டான்.  குழந்தை  காரணம் புரியாமல் அழுதுகொண்டிருந்தது. ஐயர் கண்ணாடிக் குடுவையின் பக்கத்தில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தார். மரணம் ஜனித்த வீடுகளில் நேரமும் மரணித்துவிடுகிறது. அம்மாளின் கடைசி ஊர்வலத்தில் , வஸ்துக்களின் துணையோடு சிலர் ஆடிக்கொண்டிருந்தனர். சோதா கயிற்றில் கட்டப்பட்டிருந்த மண்பானையைத் தூக்கிக்கொண்டு முன்னால் சென்றுகொண்டிருந்தான். சலனம் இல்லா விழிகளோடு ஐயர் நடந்து வந்தார். எல்லாம் முடிந்து வீட்டிற்குள் நுழையும்போது மணி பத்தாகிவிட்டது.

   ஐந்தாம் நாளே காரியம் வைத்திருந்தார் ஐயர். வெகுசிலரே வந்திருந்தனர். நானும் அப்பாவும் சென்றபோது புகை சமாச்சாரங்கள் முடிவடைந்திருந்தன. வெளியே போடப்பட்டிருந்த வாடகை சேர்களில் சோதாவும் அவன் மனைவியும் இருந்தார்கள். எங்களைப் பார்த்தவுடன் ஐயர், அப்பாவிடம் வந்து ஏதோ சொன்னார்.

   சோதாவிற்கு எதிரே இருந்த சேரில் உட்கார்ந்துகொண்டே, ``ஏன்டா சோதா, உங்க அப்பாவையும் கூட்டிட்டுப் போயிடு பெங்களூருக்கு. ஏன் சொல்றேன்னா, இங்க ஒத்தையா கெடக்குறதுக்கு உன்கூட இருந்தா கொஞ்சம் சந்தோஷமாய் இருப்பாரு பாரு” என்றார் அப்பா.

   ஐயரை முறைத்துவிட்டு, பின் அப்பாவிடம் திரும்பி, ``அது சரியா வராது. வாடகை வீடு. எங்க மூணு பேருக்கே சிரமமா இருக்கு. அதோட, இவர் அங்க வந்து என்ன பண்ணப்போறார்? பேசாம இங்கயே இருக்கட்டும். அங்க அவருக்கும் கஷ்டம், எங்களுக்கும் கஷ்டம்” என்றான் கடுப்பாக.  ``அதான் மாசாமாசம் பணம் அனுப்புறேன்னு சொல்றேன்ல, அப்புறம் என்னவாம் இவருக்கு?’’

   ``எவ்வளவு?’’

   ``2000.’’

   ``போதுமா?’’

   ``ஏன்? ஒரு ஆளுக்குத் தாராளம்!’’

   அந்தச்சத்தம்... ஐயோ! அப்பா பல்லைக்கடிக்கிறார். சோதாவின் பின்னால் கையை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு அப்பாவைப் பார்த்து இடவலமாகத் தலையை ஆட்டினார் ஐயர்.

   மண் தரையில் சோதாவின் மகன் விளையாடிக்கொண்டிருந்ததை அவன் கால் இடறிக் கீழே விழுந்து வீலிடும் வரை யாரும் கவனிக்கவில்லை.  சோதாவும் அவன் மனைவியும் குழந்தையைத் தூக்க ஓடினார்கள். ஞானம் ஐயர் மெதுவாக அப்பாவிடம் வந்து, ``வேணாம் விட்ருங்கோ  மாப்ள’’ என்றார் மெதுவாக. அவரின் குரல் உடைந்திருந்தது. ஞானம் ஐயருக்கும் அழுகை வருமா? துண்டைக் கண்களில் ஒற்றிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டார்.

   குழந்தையின் உதடெல்லாம் மண். தலையில் ஒட்டியிருந்த தூசிகளைத் தட்டிக்கொண்டே, “சே ஹலோ டு தெம்” என்றான் சோதா, குழந்தையைப் பார்த்து.

   “ஹலோ” என்று அழகாய் வாயைச் சுழித்தது குழந்தை.

   அதன் கன்னத்தைக் கிள்ளிக்கொண்டே, ``உம் பேரு என்ன?” என்றார் அப்பா.

   ``அபினவ்.’’

   ``ஸ்கூல்ல சேர்த்திட்டியாடா சோதா?’’

   ``என்ன இப்படிக் கேட்டுட்டீங்க... செகண்ட் ஸ்டாண்டர்டு போறான்.’’

   ``நல்லா படிக்கணும் அபினவ், சரியா?’’ என்றார் அப்பா.

   குழந்தையை சோதாவிடமிருந்து வாங்கிக்கொண்டே அவன் மனைவி, ``படிப்பில அப்படியே அவங்க அப்பா மாதிரி, எப்பவும் ஃபர்ஸ்ட் ரேங்க்தான்’’ என்றாள்.

   சோதா பெருமையாய்ச் சிரித்தான்.
   https://www.vikatan.com
  • By Kavallur Kanmani
    
    
    
                                           
                                                                                  குடை ராட்டினம்
    

    
    

   கண்ணுக்குள் நூறு கனவு.
   ஒரு பார்வை ஒரு உதட்டசைவு ஒரு புன்முறுவல்
   அடடா.. இதைத்தான் விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்து என்று பாடி வைத்தார்களோ? வந்த வேலை மறந்து மீண்டும் மீண்டும் அதே தேடல்..
   பார்த்த விழி பூத்திருக்க அங்கே ஒரு மௌன நாடகம் அரங்கேறியது.
   ஆரம்பப் பாடசாலையை முடித்து இன்று உயர்தர பாடசாலையில் சேர்வதற்காக வந்திருக்கும் பல்லின மாணவர்களின் கூட்டம் அழகிய மலர்த்தோட்டம்.
   இத்தனைபேர் நடுவில் அவள் மட்டும்.....

   என்ன இது... பார்வையை எங்கும் அலைமோத விடாமல் ஒரே இடத்தையே காந்தமாய் கட்டிப்போட்டது
   பதினாறின் பருவங்கள் உள்ளுக்குள் உமிழ்ந்து உடலெங்கும் மின்சாரம் பாய்ச்ச....
   அவளுக்குள்ளும் அதே நிலைதானோ? அவளது பார்வையும்; அடிக்கொரு தடவை மின்வெட்டி மீண்டது.
   பாடசாலை ஆரம்ப முதல்நாள்.
   வகுப்பறைக்குள் நுழைந்ததும் அவர்களாகவே பக்கத்து பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.
   படிப்பில் அதி சுட்டியான பிறேம் அது முதல் படிப்பில் அதிக கவனம் செலுத்த முடியாதபடி காதல் அந்த இரு இளம் உள்ளங்களையும் ஆட்சி செய்ய....
   அங்கு கல்வி பின்தள்ளப்பட்டு காதல் முன் வைக்கப்பட்டது.
   இரவு பகலாக கைத்தொலைபேசியுடனேயே காலம் நகர்ந்;தது.
   அபிநயாவும் பிறேமும் காதல் வானில் சிறகடிக்க சுற்றியுள்ள உறவுகளோ உலகமோ அவர்களுக்கு துச்சமாகியது.
   எங்கேயும் காதல் எதிலும் காதல் என்ற உலகத்தில் அவர்களைத் தவிர யாருமில்லை.
   இருவர் வீட்டிலும் விடயம் தெரிந்து எல்லைகள் போடப்பட்டு அறிவுரைகள் கூறப்பட்டு எதுவுமே அவர்களிடம் எடுபடவில்லை.
   அவர்களது நண்பர்குழாம் அவர்கள் காதலுக்கு வெற்றிக்கொடி கட்ட காலமும் கை கொடுக்க பதினெட்டு வயதை எட்டியதும் பதிவுத் திருமணம் செய்து தம் காதல் வாழ்வை ஆரம்பித்தனர்.
   அதன்பின்தான் அவர்களுக்கு உண்மையான யதார்த்த வாழ்க்கை புரியத் தொடங்கியது.
   இருவரும் மேற்படிப்பைத் தொடராததினால் நிரந்தரமான தரமான தொழில் தேட சிரமம்
   வருமானம் குறைவு
   செலவு அதிகம்
   வாழ்க்கையின் மேடு பள்ளங்கள்
   முதிர்வடையாத மனநிலை
   இளமையின் எதிர்காலக் கனவுகளில் ஏறுமாறான எதிர்பார்ப்புகள்
   யார் யாருக்கு விட்டுக்கொடுப்பது
   யார் யாரை அனுசரித்துப் போவது
   யார் யாரை திருப்திப் படுத்துவது
   யார் யாருக்கு உண்மையாக இருப்பது
   யாருடைய அன்பு அதிகமானது
   யாருடைய அன்பளிப்பு பெறுமதியானது
   யார் தமது நேரத்தை அதிகமாக குடும்பத்திற்காகச் செலவழிப்பது
   தாய்மை அடைந்திருந்த அவள் அவனது அண்மையை அருகாமையை பராமரிப்பை அதிகம் விரும்பினாள்.
   அவனோ குடு;ம்பச் சுமையை சமாளிக்க பெரும் பாடுபட்டான்

   பிறேம் தன் நண்பர்களுடன் வெளியே செல்வதை அபிநயா அறவே வெறுத்தாள்
   முன்பு போல் விதவிதமான உடை அணியவோ விதவிதமாக றெஸ்ரோரண்டில் சாப்பிடவோ நேரம் அரிதாகியது
   காதலித்தபோது தன்னைத் தாங்கியவன் கல்யாணத்தின் பின் தன்னை உதாசீனம் செய்வதான உணர்வு
   காதலித்தபோது விதவிதமான பரிசளித்தவன் கல்யாணத்தின்பின் தன்னை மறந்து விட்டதாக மனதுக்குள் குறுகுறுப்பு
   காதலித்தபோது பிரியாய் நடந்தவன் இப்போ தன்னைப் பிரிந்து நடப்பதாய் மனதுக்குள் வெறுமை
   காதலித்தபோது கொஞ்சிக் கொஞ்சிப் பேசியவன் இப்போ கடமைக்காகப் பேசுவதாய் ஏக்கம்
   காதலித்தபோது தினமும் பரிசாக வாங்கிக் குவித்தவன் இப்பொழுது பரிசு தருவது காதலர் தினத்துக்கு மட்டு;தான்
   மனமே வெறுமையாகி விட்டதுபோன்ற உணர்வில் தவித்தாள் அபிநயா.

   வயிற்றினுள் குழந்தை உதைப்பதுகூட அவன் தன்னை அடிப்பதுபோல மனதுக்குள் மாயத் தோற்றம்
   பிறேமின் மனநிலையும் அதேதான்
   அபிநயாவின் மின்னல் வெட்டிய பார்வையில் வெறுமை
   கவர்ச்சி காட்டிய இதழ்களில் கயமை
   தேன் சொட்டிய அவளது வார்த்தைகளில் கசப்பு
   காதல் பொழிந்த அவர்களது கைத்தொலைபேசி அடிக்கடி கடும் சொற்களை மட்டுமே தாங்கி கிணுகிணுத்தது.
   இருவரின் நெருக்கமும் நாளுக்கு நாள் விரிவடைந்து ......
   சில சமயங்களில் ஒட்டியும் பல சமயங்களில் ஒட்டாமலும் ஏனோ தானோ என்று வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி விளையாட்டாக.....
   காதலும் கடந்து போகும் என்று இதைத்தான் சொன்னார்களோ....                                                                                                                                                                                                      
   அனுபவ எழுத்தாணி கொண்டு எழுதி முடிக்கும் புத்தகம் வாழ்க்கை இதில் இவர்கள் எழுதுவது எத்தனை பக்கங்களோ?
    
                                                                                     -x-x-
  • By நவீனன்
   ஓனர் - சிறுகதை
   சிறுகதை: கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி, ஓவியங்கள்: ஸ்யாம்
    
   ‘`விகடனுக்கு ஒரு கதை அனுப்பணும்’’

   ‘`சூப்பர்டா… எப்பக்குள்ள அனுப்பச் சொல்லிக் கேட்ருக்காங்க?’’

   இன்றுவரை அவன் அந்தக் கேள்வியை சீரியசாகக் கேட்டானா இல்லை கிண்டலுக்காகக் கேட்டானா என்று தெரியவில்லை.

   செய்யும் வேலையில் அவ்வப்போது சிற்சில சாதனைகள் செய்துவந்தாலும், அதற்கான பாராட்டுகள், அங்கீகாரங்கள், கைத்தட்டல்கள் கிடைக்கப்பெற்றாலும், இந்த ஆசை மட்டும் தீரவே இல்லை. ஆனந்த விகடனுக்கு ஒரு கதை அனுப்பணும்.

   இதில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். கதை விகடனில் பிரசுரமாக வேண்டும் என்பதைப் பற்றி அதிகம் சிந்தித்ததில்லை. முதலில் விகடனுக்கு அனுப்ப ஒரு கதை எழுத வேண்டும். இதுதான் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

   ‘`செமடா. சீக்கிரம் அனுப்பு. செலக்ட் ஆச்சுனா கெத்துதான். அந்த மேட்டரை ஸ்டேட்டஸா போட்டேனு வை, லைக்ஸ் பிச்சுக்கும். அதுக்கப்புறமா ஒரு ரெண்டுமூணு நாள் கழிச்சு புரொஃபைல் பிக்சர் மாத்து. வரலாறு காணாத லைக்ஸ் கிடைக்கும்.’’

   இவனுக்குக் கதையைவிட அதுகுறித்த ஃபேஸ்புக் வரவேற்பில்தான் கவனம். யாருக்கு இல்லை? ஆனால், இவன் சொல்லும் கணக்கும் நிஜம்தான். ஃபேஸ்புக்கைப் பற்றிய இவனது கணிப்புகள் பெரும்பாலும் சரியாகவே இருக்கும். எந்தப் போஸ்ட்டை, எந்தப் படத்தை, எந்த நேரத்தில் போட்டால் அதற்கு வரவேற்பு அதிகமாகக் கிடைக்கும் என்பது இவனுக்கு அத்துப்படி.

   சரி கதைக்கு வருவோம். எப்படி எழுதினால் சரியாக இருக்கும் என்ற குழப்பத்தில் சில முக்கியமான கதைகளைக் கட்டாயத்தின் பேரில் வாசித்தேன். இப்படித்தான் என்றில்லாமல், எப்படியிருந்தாலும், நன்றாக   இருந்தால்தான் அந்தக் கதை எந்தப் பத்திரிகையிலும் பிரசுரமாகியிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தபின், கதை எழுதுவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளில் இறங்கினேன்.

   முதலில், நாலைந்து வலுவான வாக்கியங்களை எழுதத் துவங்கினேன்.

   ‘அந்தி சாயும் வேளையில், மஞ்சள் வானின் கீழ், முகத்தில் மென்சோகம் ஏந்தியபடி, வாசற்படி ஓரம் காத்திருந்தாள்.’’

   அடடா… உரைநடைக் கவிதை! இந்த வாக்கியத்தை எழுதி முடித்தபின், கிட்டத்தட்ட இலக்கியவாதி ஆகிவிட்டதைப் போன்ற ஓர் உணர்வு. என்ன அருமையான நடை, எத்தனை அழகான வார்த்தைத் தேர்ந்தெடுப்பு, என்ன மாதிரியான ஓர் உணர்வுக்கலவை என்று இன்னும் பிரசுரமாகாத அந்த வாக்கியத்தையே படித்துப் படித்துப் பூரிப்படைந்தேன்.

   ‘அவள் சொன்ன வார்த்தை, அவனின் ஆழ் மனத்தினுள் ஆழப் புகுந்து, தீராத ஆசையின் மேல் ஒரு சிறு கல்லெறிந்து போனது.’

   இது அடுத்த வாக்கியம். இந்தக் கட்டத்தில், நான் ஓர் இலக்கியவாதி ஆகிவிட்டிருந்தேன்.

   ‘கடந்து வந்த பாதைகளில் தென்பட்ட அத்தனை முட்களையும், குத்திய அத்தனை சொற்களையும் ஆற்ற வல்லது அந்த ஒரு நிமிட வாஞ்சை.’

   இதை ஏன் விகடனுக்கு அனுப்ப வேண்டும்? புக்கர் போன்ற போட்டிகளுக்கே அனுப்பலாம் என்ற கர்வம் வந்துவிட்டது.

   ‘ஞாபக அடுக்குகளில் படுத்துப் புரளும் போதெல்லாம், நெருஞ்சி முள்ளாய்க் குத்துகிறது கடந்த காலக் கசப்புகள்.’

   புக்கரைத் தாண்டிய விருது என்ன?

   இப்படி வாக்கியங்களை வடிவமைத்துக் கொண்டிருந்தபோது, இன்னொரு நண்பனைச் சந்திக்க நேர்ந்தது.

   ‘என்ன கதைடா எழுதுற?’

   ‘விகடனுக்குக் கதை எழுதறேன்டா’

   ‘அதுசரிடா… என்ன கதை எழுதுற... என்ன மேட்டரு?’

   ஒரு கணம் ஆடித்தான் போனேன். இவனுக்கு என்ன பதில் சொல்ல. இந்த வாக்கியங்களுக்குப் பின்னால் இருக்கும் உணர்வெழுச்சியை உணர்ந்துகொள்ளும் அளவிற்கு இவனுக்கு இலக்கியம் தெரியுமா? இல்லை, இது ஏற்படுத்தும் அலாதி அனுபவத்தை உணர்ந்துகொள்ளும் அளவிற்கு இவன் வாழ்க்கையைப் படித்திருக்கிறானா?

   இல்லை. இல்லவே இல்லை. ஒரு சிறு புன்சிரிப்புடன் அவனை வழியனுப்பி வைத்தேன். ஆனால் அவன் விட்டுச் சென்ற கேள்வியின் எச்சம் இன்னும் எஞ்சியிருந்தது. (அட…இன்னொரு வாக்கியம்!)

   கதை. நாம் என்ன கதை எழுதப் போகிறோம். இந்த அத்தனை அற்புதமான வாக்கியங்களையும் இணைக்கப் போகும் அந்தக் கதை எங்கே கிடைக்கப்போகிறது. இந்த வாக்கியங்களைத் தாங்கிக்கொள்ளும் அளவிற்கு அந்தக் கதைக்கு வலுவிருக்குமா, இந்தளவிற்கு அந்தக் கதைக்கு இலக்கியச் செறிவு இருக்குமா தெரியவில்லை. ஆனாலும் அவசரத் தேவை, ஒரு கதை.

   ‘கதை நம்மைச் சுற்றி இருக்கிறது. கடந்து போகும் மனிதர்களிடம் இருக்கிறது. பார்க்கும் உலகத்தில் இருக்கிறது’ என்று என்றோ சக இலக்கியவாதி ஒருவர் எழுதியதைப் படித்தது நினைவுக்கு வந்தது. கதை தேடும் படலம் துவங்கியது.

   சுற்றி நடக்கும் அத்தனையையும் கூர்மையாகப் பார்த்தேன். பிறர் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள் என்ற பிரக்ஞையற்று, செய்யும் செயலில் அவ்வளவு தீர்க்கமாக இருந்தேன். காலையில் டீ போடும் மாஸ்டரிலிருந்து, பெட்ரோல் போடும் பையனிலிருந்து, தண்ணீர் போடும் சிறுவனிலிருந்து, சாப்பாடு பரிமாறும் பெரியவரிலிருந்து, போண்டா புரட்டும் ஆளிலிருந்து, மாவுப் பாக்கெட் கட்டும் பெண்ணிலிருந்து என எதுவும், எதுவும் என் பார்வைக்குத் தப்பவில்லை. சொல்லப்போனால், அன்றிலிருந்து நான் வாழ வில்லை. என் வாழ்வை ஆவணப்படுத்திக் கொண்டிருந்தேன்.

   ஒரு நாளில் எத்தனை நிகழ்வுகள். டீ மாஸ்டரின் ஒருநாள் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. இயந்திரம் போல் இயங்கிக்கொண்டிருந்தார். சார்லி சாப்ளின் ஞாபகம்தான் வந்தது. போண்டா போடுபவன் மாவு பிசைகையில், அவ்வளவு நெற்றிவியர்வையையும் கலந்து பிசைந்ததைப் பார்த்தபின் அந்தக் கடையில் போண்டா சாப்பிடுவதை நிறுத்தினேன். தண்ணீர் போடும் சிறுவன், வேறு இரண்டு மூன்று இடங்களிலும் வேலை செய்கிறான். சொல்லப்போனால் என்னைவிட அதிகமாகவே சம்பாதிக்கிறான். அதற்குமேல் அவனைத் தொடர என் ஈகோ அனுமதிக்கவில்லை. மாவுப் பாக்கெட் விற்கும் அக்காவைப் பின்தொடரப் போய், அவளின் சராசரி ஆணாதிக்கக் கணவனின் சந்தேகப்பார்வைக்குள் அகப்பட்டுக் கொண்டபின் இந்தத் தேடுதல் படலத்தை நிறுத்தினேன்.  யதார்த்தத்தில் இந்த முறை அவ்வளவு உசிதமாக இல்லை.

   எல்லா மனிதர்களும் கதைசொல்லிகள்தானே. நேராக அவர்களிடமே கதையைக் கேட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்தேன். பக்கத்து வீட்டில் தங்கியிருக்கும் பெருமாள் அண்ணன்தான் முதல் போணி.

   ‘‘அண்ணே, சொல்லுங்கண்ணே… உங்க கதை என்னண்ணே?”

   ``என் கதையா… அது எதுக்கு உனக்கு?”

   ``கதை எழுதப் போறேண்ணே… உங்க கதை, கதையா வர்றது எவ்ளோ பெரிய விஷயம்.’’

   ‘`ஒரு மசிரும் வேணாம். மூடிட்டு போய்ப் பொழப்பப் பாரு. இவரு கதை எழுதறதுக்கு நாங்க பழசக் கிளறி அழணுமோ? டிவில இருந்துதான் முன்னாடி இப்படி சொந்தக் கதையச் சொல்லி அழறதுக்கு ஆள் எடுக்க வந்தானுங்க. இப்ப இவனுங்களும் ஆரம்பிச்சுட்டானுங்க போல’’ என்று திட்டியபடி சென்றார். அவரிடமிருந்து இதை நான் சத்தியமாக எதிர்பார்க்க வில்லை. அன்றிலிருந்து அவர் கதையை நான் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?

   அதன்பின், ரோட்டில் வடை விற்கும் ரோசி அக்கா, பட்டாசு விற்கும் பாலு அண்ணன், குடித்தபடி நியாயம் பேசும் லதா அக்கா, இரவு ஆட்டோ ஓட்டும் ஆறுமுகம் அண்ணன், பணத்திற்காகப் பெண்களைக் கூட்டிக்கொடுக்கும் பிச்சைமுத்து என என் வாழ்விலும் யாராவது இருக்கிறார்களா என்று சல்லடை போட்டுத் தேடிவிட்டேன். இல்லை. இல்லவே இல்லை. எந்தத் தனித்துவத்துடனும் எவருமே என் வாழ்வில் இல்லையா? அப்படித் தெரிந்த ஒன்றிருவரும்கூட, நான் போய் பேச அமர்ந்தால், மிகவும் மேலோட்டமாக அன்றாட விஷயங்களைப் பேசி உடனே அனுப்பிவிடுகின்றனர். என்னை, அவர்களுள் ஒருவன், ஒரு கதைசொல்லி, ஓர் ஆவணப்படுத்தி (?) என்று புரிய வைக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. எனக்குத் தேவை வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் அவர்களின் கதைதானே.

   இப்படி ஒருநாள், சேர்ந்திருந்த குறிப்புகளை அலசிக் கொண்டிருந்தபோதுதான் அந்த வார்த்தையை மீண்டும் எதிர்கொண்டேன்.

   ‘`என்ன ஓனரு… ஊர்ப்பக்கம் ஆளே காணோம். இங்கயே செட்டில் ஆய்ட்டியோ?’’

   திரும்பினால், வாசற்கதவில் மாரி அண்ணன் (மகிழ வேண்டாம். மாரி அண்ணனிடம் எந்தக் கதையும் இல்லை).

   சிரிப்பு, வரவேற்பு, குளிக்க சுடுதண்ணி, ஊர்க்கதைகள், 4 இட்லி, ஒரு டீ, கொஞ்சம் புரணி, அரைப் பாக்கெட் சிகரெட், தண்ணி பாட்டில், டாட்டா.

   மாரி அண்ணன் ஊருக்குக் கிளம்பியபின் மீண்டும் அந்த வார்த்தையைக் கண்மூடி அசைபோட்டேன். ஓனர். வாழ்க்கையில் நாம் எத்தனை ஓனர்களைச் சந்திக்கிறோம். வீட்டு ஓனர், கடை ஓனர், மில் ஓனர், ஆபீஸ் ஓனர் என்று எத்தனையோ ஓனர்களைச் சந்தித்தாலும், எந்த ஓனரையும் நமக்கு ஏன் பெரிதாகப் பிடிப்பதில்லை? நம்மைவிட அதிகமான பணம், இடம், வீடு, தொழில், சம்பாத்தியம் போன்ற ஏதோவொன்றை வைத்திருப்பதால்தான் ஓனர்களை நமக்குப் பிடிப்பதில்லையோ?

   ஆனால், நான் அப்படிப்பட்ட ஓனர் இல்லை. ஆமாம், நானும் ஒரு ஓனர்தான். அப்போது எனக்கென்று எதுவும் சொந்தமாக இல்லை. ஆனாலும் நான் ஓனர்தான். நான் ஓனரான வரலாறு சுவாரஸ்யமானது. சின்னதுதான்!

   ஊரில் அப்பா கடை ஒன்றை வைத்திருந்தார். ஐந்து பக்கமும் மரத்தட்டிகளைக் கொண்டு கட்டிய ஒரு கடை. உள்ளேயும் மர அடுக்குகள் தான். பின்னால் ஒரு பெரிய மரத்தட்டி இருக்கும். வலது பக்கம் ஒன்று. இடது பக்கம் ஒன்று. மேலே இருக்கும் மரத்தட்டியில் பல பொருள்கள் தொங்க விடப்பட்டிருக்கும். அப்பா அமர்ந்திருக்கும் இடம் மட்டும் சிமென்ட்டால் கட்டப்பட்டிருக்கும். கடையின் முன்பக்கத்தில் ஒரு தட்டி. கடையில் ஒரு பக்கம் அரிசி, பருப்பு என மளிகைச் சாமான்கள் நிறைந்திருக்கும். அது மளிகைக் கடை. கடையின் வலதுபக்கம், இன்னொரு தட்டியை நிமிர்த்தி வைத்து, பீரோ போல் சுற்றிலும் மூடப்பட்டு அதில் ஜவுளிக் கடை வீற்றிருக்கும். ஜவுளி என்பதால் அந்தத் தட்டி மட்டும் கண்ணாடியால் மூடப்பட்டிருக்கும். அந்தப் பெரிய தட்டியில் 50, 60 துணிகள் இருக்கும். ஒரே இடத்தில் இரண்டு கடைகள். இப்போது அதுபோன்ற கடைகளைப் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், அப்போது ஊர்ப்பக்கம் இதுபோன்ற கடைகள் நிறைய இருந்தன. எங்கள் ஊரில் எங்கள் கடை மிகவும் ஃபேமஸ். அர்ச்சுனன் கடை என்றால் மக்களுக்கு அலாதி பிரியம். அப்பா ராசியானவர் என்ற பேச்சு அதற்குக் காரணமாக இருக்கலாம். மூன்று தெருக்கள் சந்திக்கும் முக்கில் இருக்கும் கடை அது. அத்தனை தெருக்களுக்குமான அடையாளமும் எங்கள் கடைதான்.

   கல்யாணத்துக்கோ காதுகுத்துக்கோ, மளிகைச் சாமானோ துணிமணியோ எடுக்கும்போது, ‘என்ன அர்ச்சுனா சும்மா குடுக்கற. ஒரு வார்த்தை வாழ்த்திட்டுக் கொடு’ என்று ஆசையாகக் கேட்பார்கள். அப்பாவும் சிரித்தபடி, ‘நான் வாழ்த்த என்ன இருக்கு. உன் புள்ள எட்டூரு வியக்குற மாதிரி வாழும் பாரு’ என்று வாழ்த்திக் கொடுப்பார். அப்பா மனதார வாழ்த்திக் கொடுப்பாரா இல்லை வியாபாரத்துக்காக வாழ்த்திக் கொடுப்பாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவர் வாழ்த்தை எங்கள் ஊர் பெரிதாக நினைத்தது. சொன்னாற்போல் அந்தப் பிள்ளைகளும் ஊர் மெச்சும்படி வாழவே, கடைக்கு நல்ல வியாபாரம் ஆனது. நல்ல நாளைவிட ஊரில் எழவு விழுந்த நாளில் வியாபாரம் இன்னும் ஜோராக நடக்கும். அப்பா மல்லுத்துணிகளைத் தயாராக வைத்திருப்பார். வந்திருப்பவர்கள் முகம் இறுக்கமாக இருந்தாலும், துணி வாங்குகையில் ஓர் ஆர்வம் ஒளிந்திருப்பதை நான் கண்டிருக்கிறேன்.

   அப்பா ஆறடி இருப்பார். நன்றாக முறுக்கிய - அதை முறுக்கிய என்றுகூடச் சொல்ல முடியாது - மேல்நோக்கி வளைத்துவிடப்பட்ட மீசை. சரியான உடல்கட்டு. தனியாக உடற்பயிற்சி எல்லாம் கிடையாது. கடை வேலைகள்தான். வீட்டில் இருக்கும்போது வீட்டு வேலைகள் அத்தனையும் இழுத்துப் போட்டுச் செய்வார். உடல் கட்டுமஸ்தாக இருந்தாலும் அப்பாவுக்கு உடம்புக்கு ஏற்றாற்போல் தொப்பையும் இருக்கும். வெளியே இருந்து பார்த்தால் தெரியாது. சட்டையை அவிழ்த்தால்தான் தெரியும். இரவில் படுக்கும்போது, அந்தத் தொப்பைக்கும் மார்புக்கும் இடைப்பட்ட கதகதப்பான வெளியில் நான் நிம்மதியாக உறங்குவேன். இதற்காகவே அப்பாவிடம்தான் தூங்குவேன்.

   எல்லோரையும்போல அப்பாவுக்கும் ஒரு குறை இருந்தது. அப்பா கூத்தியாள் வைத்திருந்தார். இது ஊருக்குள் அரசல் புரசலாக அல்ல, வலுவாகவே தெரியும். அப்பாவும் அதை மறைக்க நினைக்கவில்லை. தனக்கு இப்படியொரு உறவு இருக்கிறது என்று வீட்டில் சொன்னதே அப்பாதான். அம்மாவுக்கு அழுவதைத் தவிர எதுவும் தோன்றவில்லை. மூன்று நாள் அழுதுகொண்டே இருந்தாள். அதன்பின் அப்பாவுக்கு எப்போதும்போல் ஊழியம் பார்க்கத் தொடங்கிவிட்டாள். அதற்குப் பின்னும் கூட அம்மாவுக்கும் அப்பாவின் மீதான அன்பும் மரியாதையும் குறைந்ததுபோல் தெரியவில்லை. ஊரிலும் அப்பாவின் மீதான மரியாதையும் ராசியும் குறையவில்லை. சொல்லப்போனால், சிலர் அவரைப் பொறாமையுடன் பார்த்திருக்கின்றனர்.  இதேபோல் ஒரு விஷயத்தை அம்மா செய்திருந்தால் அதை அப்பா எப்படி எதிர்கொண்டிருப்பார் என்று இப்போது யோசித்துப் பார்க்கத் தோன்றுகிறது.

   ஊரில் என்னைக் கடைக்காரர் மகன், அர்ச்சுனன் பையன் என்று வெவ்வேறு பெயர்களில் அழைப்பார்கள். ஒருநாள், என் வயது நண்பர்கள் ஐந்தாறு பேர் சேர்ந்து, ஒரு நண்பன் வீட்டுக் கொல்லைப்புறத்தில், தும்பை மரத்தின் கீழ் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தோம். அந்த விளையாட்டு போரடிக்கவே வேறு விளையாட்டிற்குத் தாவ எண்ணி, என்ன விளையாடலாம் என்ற சிந்தனையில் இருந்தபோது, மணியன் சொன்ன ‘டாக்டர் விளையாட்டு’ ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

   பெரிய சிக்கலான விளையாட்டெல்லாம் கிடையாது. ஒருவன் டாக்டர். மற்ற அனைவரும் பேஷன்ட்டுகள். ஒவ்வொரு வராக வந்து ஒவ்வொரு குறையாகச் சொல்ல வேண்டும். அவன் அதற்கேற்றாற்போல், துண்டுப் பேப்பரில் ஏதோ எழுதித் தருவான். அதைப் பக்கத்திலிருக்கும் கம்பவுண்டரிடம் காட்டி, அவன் தரும் உதிர்ந்த பூ மாத்திரைகளை வாங்கி வர வேண்டும். சில சமயம் ஊசியும் உண்டு. இப்போது யோசித்தால், சுவாரசிய மற்றதாய்த் தோன்றும் இந்த விளையாட்டை, அப்போது வெகு சுவாரசியமாக்கியது எதுவோ தெரியவில்லை. ஆனால், இதுபோன்ற விளையாட்டுகளை ரசிக்க மனமில்லாமல் ஒதுக்கியபிறகுதான் வாழ்க்கையே சிக்கலாகிப்போனதுபோல் இருக்கிறது.

   இப்போது விளையாட்டுக்கு வருவோம். வருபவர்களிடம் பேர் என்ன, என்ன வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்பார் டாக்டர். இன்ஜினீயர் மணியன், மேஸ்திரி பாபு, ட்ரெயின் டிரைவர் அப்துல், வாத்தியார் ரகு ஆகியோருக்குப் பிறகு வயிற்று வலியுடன் நான் உள்ளே சென்றேன். அமரச் சொன்ன டாக்டர் என் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, ‘`என்ன வேலை செய்றீங்க?’’ என்று கேட்டார். `‘நான் மளிகைக் கடை ஓனரா இருக்கேன்’’ என்று வயிற்றில் கை வைத்துக்கொண்டு சொன்னேன். டாக்டர் சடுதியில் சிரிக்கத் தொடங்கினான். என்னவென்று புரியாமல் நான் பார்க்க, ‘`பெரிய இந்தக் கடை…ஓனராம்ல... தம்மாத்துண்டு பெட்டிக் கடை...அதுக்கு இவரு ஓனராம் ஓனரு’’ என்று அவன் சொல்ல, மற்றவர்களும் அவனுடன் சேர்ந்து சிரிக்கத் தொடங்கினர். எல்லோரும் சிரிக்கச் சிரிக்க எனக்கு அது என் அப்பாவையே கேவலப்படுத்தியது போலிருந்தது. மேற்கொண்டு அங்கே இருக்கப் பிடிக்காமல், வயிற்று வலியை மறந்து வீட்டுக்கு ஓடி வந்துவிட்டேன்.

   ‘`சாப்பாடு வைக்கட்டுமாடா?’’

   அம்மாவுக்கு பதில் சொல்லாமல் உம்மென்று கொல்லையில் உட்கார்ந்திருந்தேன்.

   ‘`டேய்… உன்னைத்தான்டா… சாப்பாடு வைக்கட்டா’’

   ‘`என்னை ஓனர்னு கூப்பிட்டாதான் நான் சாப்பிடுவேன்.’’

   அம்மா சிரித்தது மேலும் கோபப்படுத்தியது. அப்பாவின் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டேன். கோபத்தோடேயே தூங்கிவிட்டேன்.

   கதவு தட்டப்பட்டுக்கொண்டிருந்த சத்தம் கேட்டு முழித்தேன். எழுந்து அமைதியாகக் கட்டிலில் அமர்ந்திருந்தேன். கதவு மேலும் இரண்டு மூன்று முறை தட்டப்பட்டது. பின் எந்தச் சத்தமும் இல்லை. அதற்குப் பின் சில விநாடிகள் கழித்து அப்பாவின் குரல் கணீரெனக் கேட்டது.

   ‘`டேய் ஓனரு… வெளிய வாடா’’

   சந்தோஷமா, பயமா, எதுவென்று தெரியவில்லை. வேகமாகப் போய் கதவைத் திறந்தேன். என்னையே உற்றுப் பார்த்தபடி அப்பா நின்றுகொண்டிருந்தார். பின்னால் அம்மா, பாட்டி எல்லாம்.

   ‘`வாங்க ஓனரு… வந்து சாப்புடுங்க.’’

   அன்றைக்கு அப்பாவே ஊட்டி விட்டார். என்ன சாப்பாடு என்று தெரியாமல் சாப்பிட்டேன். சாப்பிட்டு வாய் துடைத்து விட்டதும், `‘இனிமே எல்லோரும் அவனை ஓனருன்னுதான் கூப்டணும்’’ என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லிவிட்டு அப்பா கடைக்குச் சென்றுவிட்டார். ஏன் எதற்கு என்று எதையும் அப்பா கேட்கவில்லை. ஆனால், அதிலிருந்து வீட்டில் எல்லோரும் என்னை ஓனர் என்றுதான் கூப்பிட்டனர். அவர்கள் அதைப் பட்டப்பெயரைப்போல் சிரித்துச் சிரித்துக் கூப்பிட்டாலும் எனக்கு அது ஒரு பெரிய பெருமிதத்தைக் கொடுத்தது. நாளாக நாளாக, சிரிக்காமலேயே அந்தப் பெயரைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். கொஞ்சம் கொஞ்சமாக மாமா, அத்தை, சித்தப்பா, சித்தப்பா பையன்கள், பிறகு பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று தொடங்கி ஊரில் என்னைப் பார்க்கும் அனைவரும் ‘`ஓனர் ஓனர்’’ என்றே கூப்பிட ஆரம்பித்தனர். பட்டப்பெயரைப்போல் வேகமாய்ப் பரவும் விஷயம் ஊரில் எதுவுமில்லை. அடுத்து வந்த நாள்களில் நான் முழுமையாக அனைவருக்கும் ஓனராகிப்போனேன்.

   கடையில் அப்பா இருந்தாலும்கூட, ‘`இன்னைக்கு வெங்காயம் என்ன வெல ஓனரே’’ என்று என்னிடம் கேட்க ஆரம்பித்தார்கள். அப்பாவும் சிரித்தபடியே பதில் சொல்லி வியாபாரம் செய்வார். நான் ஓனரான கொஞ்ச நாள்களில், கடையில் வாசல் தட்டியின் மேல், ஒரு பெரிய மரப்பலகையைப் போட்டு, அதன் மேல்பகுதியில் எட்டாகப் பிரித்து, அதில் காய்கறியை வைத்து விற்க ஆரம்பித்தார் அப்பா. உள்ளே அரிசி, பருப்பு போன்றவை இருக்கும். ஜவுளிக் கடையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தம்மாத்துண்டுக் கடை என்று ஏளனம் பேசிய அந்த டாக்டரைப் பார்த்து ‘`இப்ப பாருடா என் கடைய’’ என்று சொல்லவேண்டும்போல் இருந்தது.

   அந்தக் கடைக்குப் பெயரெல்லாம் எதுவும் இல்லை. ஆனால், அப்பா அந்தக் கடையை மிகவும் நேசித்தார் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. காலையில் நாலரை மணிக்கு எழுந்து, பெரிய மார்க்கெட்டுக்குச் சென்று காய்கறிகள் வாங்கி வந்து, வீட்டிலிருந்து தேவையான ஜவுளியை எடுத்துக்கொண்டு கடைக்குச் செல்வார். கடையை தினமும் கூட்டிப் பெருக்கி, இரண்டடி தள்ளியிருந்து அழகு பார்த்த பின்தான் உள்ளே செல்வார். கடையில் ஒரு சின்ன தூசு கூட இருக்காது. அவ்வளவு சுத்தமாக வைத்திருப்பார். கடைக்கு வாங்கும் ஒவ்வொரு பொருளையும் அப்பா பார்த்துப் பார்த்து வாங்குவார். தக்காளியோ வேறு ஏதோ காய்கறியோ கொஞ்சம் கெட்டிருந்தாலும் வாங்க மாட்டார். ‘`அட பத்தோடு ஒண்ணு. தள்ளி விடு அர்ச்சுனா’’ என்பவர்களிடம் ‘`எனக்கு ஒம்போது விக்குற லாபம் போதுண்ணே’’ என்றுவிடுவார்.

   கடையின் மீதும் கடைக்கு வருபவர்கள் மீதும் அப்பாவுக்கு அவ்வளவு பிரியம். ஒரு நெருக்கடியான சமயத்தில், அந்தக் கடையைக் கைமாத்திவிடலாமா என்று வேறு வழியே இல்லாமல் அம்மா கேட்டதற்காக, மூன்று நாள் அம்மாவோடு அப்பா பேசவில்லை. கடையையும் மூன்று நாளாகத் திறக்கவில்லை. எப்படியோ அந்தப் பணத்தை அப்பா ஏற்பாடு செய்துகொடுத்தபின், ஒருநாள் அப்பாவுக்கு முன் எழுந்துபோய் அம்மா கடையைக் கூட்டிப் பெருக்கி சுத்தப்படுத்தி வைத்திருந்தாள். அதற்குப் பின்தான் அப்பா முகத்தில் சிரிப்பு வந்தது. அம்மா எவ்வளவுதான் சொன்னாலும், கடையில் அக்கௌன்ட் வைத்திருந்து பணம் தராதவர்களிடம் அப்பா, பணத்தைச் சீக்கிரம் தருமாறு கேட்டதில்லை.  `‘அவங் கஷ்டத்துல இன்னொன்ன சேக்கச் சொல்றியா’’ என்றவாறு அதைத் தவிர்த்துவிடுவார். என்றைக்காவது ஒருநாள் பெரிய மார்க்கெட்டுக்கு என்னையும் கூட்டிப் போவார். சைக்கிளின் முன் கம்பியில் அமர்ந்துகொண்டு சில்லென்ற காற்று முகத்தில் பட, வேகமான அந்தப் பயண சுகத்தை இன்றுவரை வேறெந்த வாகனத்திலும் அனுபவிக்கவில்லை.

   அப்பாவுக்கு என் மேல் அவ்வளவு பிரியம். ஒருநாள், நண்பன் வீட்டில் ஏதோவொரு விளையாட்டுப் பொருளைப் பார்த்து அதை அம்மாவிடம் கேட்டு, அம்மா முடியாதென்று சொல்லிவிட, அடம்பிடித்து அழுதபடியே தூங்கிவிட்டேன். தூக்கத்தில் அந்தப் பொருளின் பெயரைச் சொல்லிப் புலம்பியிருப்பேன்போல. மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்த அப்பா, அதைக் கேட்டுவிட்டு, பெரிய பஸ் ஸ்டாண்டு இருக்கும் இன்னொரு ஊருக்கு சைக்கிளில் சென்று அந்தப் பொருளை வாங்கி வந்திருக்கிறார். நான் கண்முழித்ததும் எதிரில் அதைப் பார்த்து, அம்மாவைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தேன். அப்பா சிரித்தபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தார். கடையில் எவ்வளவு வியாபாரம் இருந்தாலும், மதியம் சாப்பாட்டுக்கு அப்பா எப்படியும் வீட்டுக்கு வந்துவிடுவார். இரவு வீட்டுக்கு வராத நாள்களில் அம்மா அழுதபடி இருப்பாள்.

   அப்பா பணம் எண்ணுவது எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஒவ்வொரு நோட்டாக லேசாகத் தொட்டு, அப்படியே அதைப் பெருவிரலால் பிடித்து வலதுபக்கம் கொண்டு சென்று, வலதுகையில் வைத்துக்கொண்டு, இடது கையில் இருக்கும் அடுத்த நோட்டை இடதுகை கட்டைவிரலால் நெம்பி எண்ண ஆரம்பிப்பார். அப்பா கையில் அதிகமாகக் காசு இருப்பது எனக்கு அதிக சந்தோஷம் தந்திருக்கிறது. அப்பா எப்போதும் காசு எண்ணிக்கொண்டே இருக்கவேண்டும் என்று எனக்கு ஆசையாய் இருக்கும்.

   ஒருமுறை, மளிகை சாமான் வாங்க ஓர் ஆள் வந்திருந்தார். ஒவ்வொரு பொருளாய்த் தேர்ந்தெடுத்து வாங்கிக்கொண்டிருந்தார். குள்ளமாக, சிவப்பாக, பெரிய மூக்கோடு வித்தியாசமாய் இருந்ததால் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். நிறைய பொருள்கள் வாங்கினார். நிறைய ரூபாய் வரும் என்று தோன்றியது. அப்பா அந்தப் பணத்தை எண்ணுவதைப் பார்க்க ஆவலாய் இருந்தேன். எல்லாப் பொருள்களையும் அப்பா கட்டி வைத்துக்கொண்டிருக்கும்போது, திடீரென அந்த ஆள் முகம் மாற ஆரம்பித்தது. பையில் அங்கும் இங்கும் கையை விட்டுத் தேடினார். சுற்றிமுற்றிப் பார்த்தார். கீழே குனிந்து தேடினார். பதற்றமாகவே இருந்தார். அப்பா இதையெல்லாம் கவனித்தாரா என்று தெரியவில்லை. மூட்டை கட்டி முடித்தபின், அதை எடுத்துப் பலகை மேல் வைத்தவர், அவரையே பார்த்தார்.

   `‘என்னண்ணே… பணத்தைக் காணோமா?’’

   அவர் வியர்த்தபடி நின்றுகொண்டிருந்தார்.

   ‘`பரவால்லண்ணே... எடுத்துட்டுப் போங்க…விசேஷத்துக்கு வாங்கறேன்னு வேற சொன்னீங்க.’’ அந்த ஆளுக்கு இப்போது இன்னும் வியர்த்தது. சில நிமிடம் தயங்கியபடியே நின்று கொண்டிருந்தார். பிறகு பையை எடுத்தபடி வெடுக்கெனப் புறப்பட்டுவிட்டார். அவர் பொய் சொல்கிறார் என்று எனக்குத் தோன்றியபடியே இருந்தது. ஆனால், அதை அப்பாவிடம் சொல்ல தைரியம் வரவில்லை.

   பின் வெகுநாள்களுக்குப் பிறகு, நானும் அப்பாவும் பெரிய மார்க்கெட் சென்றிருக்கும்போது, அங்கே இந்த ஆளைப் பார்த்தேன். கையில் மூன்று பைகளுடன் சென்று கொண்டிருந்தார். அவரும் என்னைப் பார்த்து விட்டார். எங்கோ பார்த்த ஞாபகத்தில் நிமிர்ந்தவர், அப்பாவைப் பார்த்ததும் பதற்றமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார். நான் திரும்பித்திரும்பி அவரையே பார்த்துக்கொண்டு வந்தேன். அப்பா அவரைப் பார்த்தாரா இல்லையா என்று தெரியவில்லை.

   வீட்டில் இருக்கும்போது அப்பா வாய்நிறைய ``ஓனர் ஓனர்’’ என்று அழைத்தபடியே இருப்பார்.

   ‘ஓனரு... அம்மாட்ட ஒரு காப்பி கேளுங்க…’

   ‘`என்ன ஓனரே... இன்னைக்கு என்ன சாப்பாடாம்?’’

   `‘செடிக்குத் தண்ணி ஊத்துங்க ஓனரே...’’

   ‘`மாமா வீட்டுக்குப் போய் இந்தக் கறியைக் கொடுத்துட்டு வாங்க ஓனரே’’ என்று எதற்கெடுத்தாலும் ஓனர்தான். நான் ஓனராகவே வாழத் தொடங்கிவிட்டிருந்த காலகட்டம் அது.  ஒருநாள் இரவு கடையைப் பூட்டிவிட்டு அப்பாவுடன் நடந்து வந்துகொண்டிருந்தேன்.

   ‘`என்ன ஓனரே... தூக்கம் வருதா?’’

   `‘இல்லங்கப்பா…’’

   அப்பா  ஏதோ  பேசியபடி  வந்துகொண்டிருந்தார். எதிரில் சாமுண்டி அம்மா அலறியபடி ஓடிவந்து கொண்டிருந்தார். பின்னால் சாமுண்டி ஓர் உலக்கையை எடுத்து அவரைத் துரத்தியபடி வந்துகொண்டிருந்தான். சாமுண்டி கொஞ்சம் மனநலம் பிசகியவன். சரியான குடிகாரன். குடித்ததால் மனநலம் பாதிக்கப்பட்டதா, மனநலம் பிசகியதால் குடிக்கிறானா என்பதெல்லாம் தெரியாது. சாமுண்டி அம்மா கத்தியபடி வந்து அப்பாவின் பின்னால் மூச்சு வாங்கியபடி நின்றுகொண்டார்.

   ‘`அர்ச்சுனா... காப்பாத்து அர்ச்சுனா…மண்டையப் பொளக்க வர்றான்.’’

   நான் அப்பாவின் கையைப் பிடித்தபடியே சாமுண்டியையும் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பாவின் முன்னால் உலக்கையோடு நின்று கத்தினான் சாமுண்டி.

   `‘ஏ… மரியாதையா வெளிய வா… இல்ல மண்டைய உடச்சுருவேன்.’’

   ‘`டேய் குடிச்சிருக்கியா... வீட்டுக்குப் போடா…காலைல பேசிக்கலாம்.’’

   அப்பா அமைதியாக, ஆனால் திடமாக எச்சரிக்கும் தொனியில் சொன்னார்.

   `‘நீ தலையிடாத… குடிக்கக் காசு கேட்டா, பெரிசா வியாக்கானம் பேசுறா அவ… இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரியணும்’’ என்றபடி உலக்கையைத் தூக்கியபடி அம்மாவை நோக்கி ஓடிவந்தான் சாமுண்டி. என்னருகே வந்ததும் பயத்தில் நான் முகத்தைத் திருப்பிக்கொண்டேன். ஒரு நொடிதான். என் கையை விடுவித்த அப்பா, சாமுண்டியை ஓங்கி ஓர் அறை விட்டார். உலக்கை பத்தடி தள்ளிப் போய் விழுந்தது. சாமுண்டியின் பேன்ட் நனைந்து உச்சா நாத்தம் அடித்தது.

   `‘நீ போம்மா… காலைல பேசிக்கலாம்’’ என்றபடி என் கையை மீண்டும் பிடித்தபடி நடக்க ஆரம்பித்தார்.

   ‘`என்ன ஓனரே... தூக்கம் போயிருச்சா?’’

   நான் பதில் ஏதும் பேசாமல் அமைதியாக வீட்டுக்கு வந்தேன். அதற்குமுன் அப்பா இப்படி அடித்தோ கத்தியோ திட்டியோ நான் பார்த்ததில்லை. அன்றைக்குப் பிறகு, அப்பா என்னை எப்போது ஓனர் என்று கூப்பிட்டாலும் கொஞ்சம் தயக்கமோ பயமோ இருந்துகொண்டே இருந்தது.

   பிறகு நான் டென்த், ப்ளஸ் டூ படித்து, வேறு ஊரில் காலேஜில் இடம் கிடைத்து படிக்கச் சென்றேன். இந்த நேரத்தில், கடையில் வியாபாரம் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்தபடி வந்தது. பெரிய பெரிய கடைகள் எங்கள் ஊருக்கு வரத்தொடங்கியிருந்தது. எங்கள் கடையைவிட அங்கே விலை அதிகம்தான் என்றாலும் அத்தனை கூட்டமும் அந்தக் கடைகளுக்குத்தான் சென்றது. ஜவுளிக்கென்று தனியாக இரண்டு மூன்று கடைகள் வந்துவிட்டிருந்தன. எங்கள் கடையின் ஜவுளிப் பிரிவில் முன்புபோல் கூட்டமில்லை.  என்னை பஸ் ஏத்திவிட வந்திருந்தார் அப்பா. தின்பண்டங்கள் இருந்த பையைக் கையில் கொடுத்துவிட்டு, ‘`காசு ஏதாவது தேவைன்னா எழுதிப் போடுங்க ஓனரே… தயங்கிட்டே இருக்காதீங்க’’ என்று அப்பா சிரித்தபடி ரூபாய் நோட்டுகளை எண்ணிக் கையில் தந்தபோது எனக்கு அழுகை வந்தது. நல்லவேளை பஸ் கிளம்பிவிட்டது. வேகமான காற்று கண்ணீரைச் சிதறடிக்க அழுதபடியே சென்றேன்.

   அதன்பின், நான் ஊருக்கு வரும் வேளைகளில், எல்லோரும் ``ஓனர் ஓனர்’’ என்று கூப்பிடும்போது, இந்த வயதில் அது பெரும் கூச்சத்தையும் சங்கடத்தையும் கொடுத்தது. இரண்டு மூன்று முறை அதை மாற்றுவதற்கு முயற்சி எடுத்தேன். ஆனால், ஓர் ஊர் முழுவதும் பரவிவிட்ட அந்தப் பெயரை மாற்ற முடியாது என்று தெரிந்தது. இப்போது ஊருக்குப் போகும்போது மட்டும் அந்த ஓனர் என்ற வார்த்தை காதில் விழும். அப்போதெல்லாம் ஏதோ ஒரு வெட்கம் மேலோங்கும். கடை கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துகொண்டே வந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். `‘தம்மாத்துண்டுக் கடை’’ என்ற டாக்டரின் ஏளனம் நினைவில் வந்து ஒருமாதிரியான அவமான உணர்வும் தலைதூக்கும்.

   கொஞ்சம் கொஞ்சமாய் பெரும் கம்பெனிகள் காலூன்ற ஆரம்பித்த நேரம் அது. டூரிங் டாக்கீஸ்கள் அழிந்துகொண்டே வந்தன. ஜவ்வு மிட்டாய்கள் காணக்கிடைக்கவில்லை. மிட்டாய் வாட்ச், சர்க்கஸ், பயாஸ்கோப் போன்ற ஒரு காலத்தின் அத்தனை அடையாளங்களும் இப்போது அரிதாகிக்கொண்டே வந்தன. இது ஒவ்வொன்றும் நிகழும்போதும் எனக்கு எங்கள் கடைதான் ஞாபகத்துக்கு வரும். எங்கள் கடையும் எங்கள் காலத்திற்கான அடையாளமோ என்று தோன்றும். ஆனால் அரிசி பருப்பும், துணிமணியும் எந்தக் காலத்திற்கும் தேவைதானே என்ற சமாதானத்தினால், கடைக்கு ஒரு பெரிய பாதிப்பும் இருக்காது என்று மனம் அமைதி கொள்ளும்.

   வருடம் முடிந்து ஊருக்குச் சென்றபோது, கடை நொடிந்துதான் போயிருந்தது. ஜவுளிக்கடையெல்லாம் இப்போது இல்லை. வெறும் மளிகைக் கடை மட்டும்தான். அப்பாவின் ராசிக்கு இப்போது என்னாயிற்று என்று தெரியவில்லை. வாசலில் ஒரு ரூபாய் போன் ஒன்றை மாட்டி வைத்திருந்தார் அப்பா. சொல்லப்போனால், அந்தப் போன் பேச மட்டும்தான் கூட்டம் வந்தது என்று நினைக்கிறேன்.
   நான் கல்லூரியில் இறுதி வருடம் முடிக்கும்போது செல்போன் வந்தது.

   இப்போது நான் ஊருக்குப் போய் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. வேலையில் ஏதாவது ஒன்று சாதித்த பின்தான் ஊருக்குச் செல்ல வேண்டும் என்று ஒரு கங்கணம், அல்லது இந்த வாழ்க்கை தரும் சௌகர்யம் பிடித்திருக்கும் சுயநலமா தெரியவில்லை. அவ்வப்போது வீட்டுக்கு போன் பேசுவதோடு சரி. அதுவும் அம்மாதான் அடிக்கடி போன் செய்து ``சாப்பிட்டியா, இளைச்சுட்டியா’’ என்று கேட்பாள். அப்பாவைப் பற்றிக் கேட்கும்போது அழத்தொடங்கிவிடுவாள். கடையை அந்த வீட்டுக்காரி எழுதி வாங்கிக்கொண்டதாகவும், அவர்கள் அதை இடித்து வேறு ஏதோ கட்டுகிறார்கள் என்றும் சொல்வாள். அப்பா மிகவும் நொடிந்துபோய் உள்ளதாகவும் சொல்வாள்.

   ஒருநாள் நடு இரவில் போன். பயத்துடன்தான் போனை எடுத்தேன். அம்மா ஓவென்று அழுகிறாள். பயம் அதிகரிக்க, ‘`என்ன என்ன’’ என்று பதற்றத்துடன் கேட்டபின், விசும்பியபடி ‘`அப்பா குடிச்சுட்டு வந்துருக்காருடா’’ என்றபடி மீண்டும் அழத்தொடங்கினாள். அப்பா சாமுண்டியை அடித்ததுதான் நினைவுக்கு வந்தது.

   அதன்பின் அம்மா அப்பாவைப் பற்றி அழுததில்லை. `‘இப்போ பரவாயில்லைடா…மறுபடியும் கடை வைக்க இடம் தேடிட்டு இருக்காரு’’, ‘`இடம் தள்ளிப் போகுதுடா’’ ‘`இன்னொரு கடை வருது… அத வாங்கலாமான்னு பாக்குறாரு’’ என்றே சொல்வாள். நடுவில் சிலமுறை அப்பாவும் பேசியதுண்டு.

   `‘நல்லாயிருக்கீங்களா ஓனரே…’’

   அதற்குப்பின் அப்பாவின் அந்தத் தடுமாற்றமான குரலைக் கேட்கும் சக்தி எனக்கிருக்காது. எவ்வளவு கம்பீரமான குரலாக இருந்தாலும் ஒருகட்டத்தில் உடைந்துதான் போகிறது. என்னவிதமான இயற்கை அமைப்பு இது?

   தொழில், போட்டி, தடைகள், வெற்றிகள் என்று எனது வாழ்வை நோக்கிய போராட்டமே பல வருடங்களை அபகரித்துக்கொண்டது. இப்போது மாரி அண்ணன் வந்துபோன பிறகுதான் அப்பாவைப் பற்றிய நினைவுகள் நெஞ்சு முழுதும் நிறைந்துவிட்டது. அப்பாவைப் பார்க்கப் போகலாமா என்ற எண்ணம் எழுந்தது. அம்மாவுக்கு போன் செய்தால், போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. சரி, உடனே போய்ப் பார்த்துவிட்டு, இரண்டு நாள்களில் வந்துவிடலாம் என்று கிளம்பிவிட்டேன்.

   காலை பெரிய பஸ் ஸ்டாண்டு வந்து சேர்ந்தேன். இங்கிருந்து இன்னொரு பஸ் பிடித்து 20 நிமிடங்கள் செல்ல வேண்டும். பஸ் ஸ்டாண்டு கூட நிறைய மாறிவிட்டிருந்தது. கட்டடமாக மாறியிருந்தது. அறிவிப்பு போர்டுகள் டிஜிட்டலில் இருந்தன. 

   பஸ் மாறி எங்கள் ஊருக்கே வந்துவிட்டேன். இது நிச்சயம் என் ஊர் அல்ல. என் ஊர் பெயரில் இருக்கும் வேறு ஒரு ஊர். இதுதான் என் மொத்த உணர்வும். பார்க்கும் எல்லாவற்றிலும் மாற்றங்கள். ஒயின் ஷாப், மார்வாடி கடையைத் தவிர அத்தனையும் மாறி விட்டிருந்தது. Survival of the Fittest?

   மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது நமக்குப் புரியும் போது எல்லாமும் மாறிவிட்டிருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாய் ஊரின் அத்தனை மாற்றங்களையும் உள்வாங்கியபடி நடந்துகொண்டிருந்தேன். ஏகப்பட்ட ஏசி ஐவுளிக்கடைகள் வந்துவிட்டன. மல்லுத்துணிக்கெல்லாம் எங்கே போவார்களோ தெரியவில்லை. எங்கள் கடைத்தெருவுக்கு வந்ததும் கால்கள் மெதுவாகின. எங்கள் கடை இருந்த தெருமுனை அப்படியேதான் இருந்தது. அதில் மாறுவதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால், எங்கள் கடை இருந்த இடத்தில் ஒரு செல்போன் ரீசார்ஜ் செய்யும் கடை இருந்தது. கூடவே ஜெராக்ஸும். கூட்டமாகவும் இருந்தது. கடைக்குள் எட்டிப் பார்க்க முயன்றேன். ஏதும் தெரியவில்லை. முழுக்கக் கட்டடம். மாடியும் இருந்தது. அதில் ஓர் இன்டர்நெட் சென்டர். அதற்கு மேல் அங்கே நிற்கத் தோன்றவில்லை. நகர எத்தனிக்கையில்,
   ‘`ஏய்… ஓனரு’’ மணியனின் அப்பா.

   `‘என்னடா… பேந்தப் பேந்த முழிச்சுட்டிருக்க… ஊரே மாறிப் போயிருக்கோ… இங்கேயே இருந்தா எதுவும் தெரியாது…மெட்ராசுக்குப் போய்ட்டு அஞ்சு வருசத்துக்கு ஒருவாட்டி, பத்து வருசத்துக்கு ஒருவாட்டி வந்தா…’’

   `‘நல்லா இருக்கீங்களாப்பா. மணியன் என்ன பண்றான்?’’

   ‘`அவன் சவுதியில இன்ஜினீயரா இருக்கான். அவனும் இப்படித்தான். வந்தா ஊரையே மொறச்சுப் பாத்துட்டு இருப்பான். என்ன இங்கயே நின்னுட்ட?’’

   `‘இல்ல... கடை…’’

   ‘`ஓ... ஆமாம்ல… நல்ல கடைய்யா இது. உங்கப்பன் கடைக்குப் போனியா?’’

   மனதுள் ஏதோ ஒரு பெருமித உணர்வு மீண்டும் தலைதூக்கியது. `அப்பா மறுபடியும் கடை ஆரம்பித்துவிட்டாரா? அம்மா எதுவும் சொல்லவில்லையே. அன்று அம்மா போனில் சொன்ன அந்தக் கடையே கிடைத்துவிட்டதா இல்லை வேற கடையா?’

   ‘`ஏய்… என்னய்யா யோசிக்கற… உங்கப்பன் கடைக்குப் போனியா?’’

   ‘`இல்லப்பா... இப்பதான் வர்றேன். கடை எங்க இருக்கு?’’

   ‘`அட முட்டாப்பயலே… கடையே தெரியாதா உனக்கு. சரியாப்போச்சு போ… நேரா போய், அந்த முக்குக் கோயில் ரோட்டுல வலதுபக்கம் திரும்பு… மூணாவது கடை. நல்ல புள்ளைங்கப்பா’’ என்று பேசியபடி சென்றார். மீண்டும் அப்பாவைப் பார்க்கப்போகும் ஆவலைவிட, மீண்டும் அப்பாவின் கடையைப் பார்க்கப்போகும் ஆவல்தான் அதிகமாக இருந்தது. `என்ன மாதிரியான கடையாக இருக்கும்? எப்படியும் மரக்கடையாக இருக்காது. இருக்கட்டும், என்ன இப்போ? எப்படியிருந்தாலும் எங்கள் கடையின் அழகு வருமா? மளிகைக் கடை மட்டுமா இல்லை ஜவுளிக் கடையும் வைத்திருக்கிறாரா தெரியவில்லையே. இப்போது அப்படியெல்லாம் வைக்க முடியுமா என்ன?’

   என்னென்னமோ யோசனைகளோடு கோயில் தெருவில் வலதுபக்கம் திரும்பினேன். ரோட்டை விசாலப்படுத்தியிருந்தார்கள். மூன்றாவது கடை அருகே நின்றேன். ரோட்டின் இருபுறமும் கடைகள் இருந்தன. `இதில் எது அப்பாவின் கடை? இடது பக்கமாக ஒரு பெரிய செல்போன் விற்பனைக் கடை. வலது பக்கமாக ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட். அப்பா நிச்சயம் செல்போன் கடை வைக்க மாட்டார். வலது பக்கக் கடையாகத்தான் இருக்கும். ஆனால் இவ்வளவு பெரிய சூப்பர் மார்க்கெட் எப்படி? அதுவும் என்னிடம் எதுவும் சொல்லாமல்?’

   ஒரு காய்கறி வண்டி வந்து நின்றது. `‘ஏய்… லோடு இறக்கணும், வாங்கப்பா’’ என்ற குரல் கணீரென ஒலித்தது. அப்பாதான். நேரில் இன்னும் அந்தக் குரலின் கம்பீரம் குறையவில்லை. இப்போதெல்லாம் மார்க்கெட்டுக்குச் சென்று காய்கறி வாங்குவதில்லைபோல. மீண்டும் அப்பாவை, அப்பாவின் கடையில் பார்க்கப்போகிறேன். வரிசையாய், இரண்டு மூன்று பேர் கருநீலச் சட்டை பேன்ட்டில் படிகளில் இறங்கி ஓடி வந்தார்கள். யூனிஃபார்ம் போல. வேகவேகமாக வெங்காயம், தக்காளி என்று ஒவ்வொரு மூட்டையாக எடுத்துக் கொண்டு ஓடினார்கள்.

   `‘சீக்கிரம் சீக்கிரம்... அங்க போப்பா’’ அப்பாவின் குரல் வெகு அருகில் கேட்டது. சற்றே தலைதூக்கிப் பார்த்தேன். அதே கருநீலச் சட்டை பேன்ட்டில், கையிலும் பாக்கெட்டிலும் ஏதோ ஒரு பெயர் முத்திரை குத்தப்பட்டிருக்க வேகவேகமாகப் படிகளில் இறங்கி வந்தார் அப்பா.

   முட்டை இருந்த ஐந்து ட்ரேக்களை எடுத்துக்கொண்டு வேகமாக உள்ளே சென்றார். அப்படி மெலிந்திருந்தார். தொப்பைகூட இல்லை. ஒட்டிய முகத்தில் மீசை மட்டும் மேல்நோக்கி வளைந்திருந்தது. தொண்டை அடைத்தது. திக்கித்து நின்றிருந்தேன். மீண்டும் ஏதோ பேசியபடி வந்தார் அப்பா. இம்முறை ஒரு பெரிய மூட்டையை எடுத்துப் போனார்.  ஒரு கறுப்பு நிறக் கார் லோடு வண்டியின் அருகே வந்து நின்றது. அதிலிருந்து ஒருவர் இறங்கி அந்த லோடு வண்டியை ஓட்டி வந்தவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்பா வேகமாக அவர் அருகே ஓடிவந்தார். அவர் அப்பாவிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார். அப்பா கையிலிருந்த சீட்டைப் பார்த்துப் பார்த்து பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

   உள்ளேயிருந்து ‘`அர்ச்சுனா அர்ச்சுனா’’ என்ற இளவயதுக் குரல் கேட்டது. அப்பா வலதுபுறம் லேசாகத் திரும்பித் திரும்பிக் கடையைப் பார்த்தபடி காரில் வந்த ஆளிடம் பேசியபடி இருந்தார். மூன்றாம் முறை அர்ச்சுனா என்ற குரல் சத்தமாகக் கேட்டபோது, அப்பா இடதுபுறம் திரும்பி, என்னைத் தாண்டிக் கடைக்குள் பார்த்தபடி கத்தினார், ‘`ஐயா… வந்துட்டேன். ஓனர் வந்திருக்காருங்க…’’ அடுத்த பஸ்ஸைப் பிடித்து சென்னை வந்து சேர்ந்துவிட்டேன்.

   அப்பா  என்னைப் பார்த்தாரா இல்லையா என்று சத்தியமாகத் தெரியவில்லை.
   https://www.vikatan.com
  • By நவீனன்
   மூங்கைப் பெருந்தவம் - வரவணை செந்தில்
   ஓவியங்கள் : வேல்
    
   அது, பூனைக்கண்ணு பாறையின் கீழ் வந்து முடிந்த 15 அடி புதுதார்ரோடு. அதன் இறுதியில், ‘சாலை ஒப்பந்த விபரம்’ என்ற தலைப்பில் `புதுச்சின்னாம்பட்டி முதல் மயானம் வரை - 990 மீட்டர் சாலைப்பணி’ என்று குறிக்கப்பட்ட அறிவிப்புப் பலகை நடப்பட்டிருந்து. கடல் மட்டத்திலிருந்து 105 மீட்டர் உயரத்தில் இருந்தது பூனைக்கண்ணு பாறை. அதன்மீது ஏறிப் பார்த்தால் நேர் மேற்கே ராக்காச்சி கரடு தெரியும். அந்தக் கரடை ராக்காச்சியின் தலைமாடாகக்கொண்டால், பூனைக்கண்ணு பாறைதான் கால்மாடு. கால்பரப்பிக்கிடக்கும் அவளின் தனங்களாக வடக்கே ‘பூதல் நத்தம்’ கிராமமும் தெற்கே’ பீமராவ் அருந்ததியர் காலனி’யும் போதுமான இடைவெளியுடன் சற்று சமமான உயரத்தில் இருந்தன.

   `காதலியே! உள்ளமெனும் காயத்தோடும்
   கனத்துவரும் மூச்சோடும் கண்ணீரோடும்
   வாதையுறவோ இவனைக் காதலித்தாய்?
   சாதலுறவோ இவனைக் காதலித்தாய்?
   புல்லைப்போல் மெலிந்த உனைக் காதல் நோயால்
   புண்ணாக்கி மென்மேலும் மெலியவைக்கும்
   கல்நெஞ்சக்காரனை ஏன் காதலித்தாய்?
   களம்நின்ற வீரனை ஏன் காதலித்தாய்?
   சுகங்காட்டும் காதலர் தோள்கள்மீது
   துயில்கொள்ளும் எழில்மாதர் வாழும் மண்ணில்
   முகங்கூடக் காட்டாது களத்தே வாழும்
   முண்டத்தை ஏனம்மா காதலித்தாய்?
   பொறு கண்ணே! போர் வாழ்வு நெடுநாள் இல்லை!
   பூக்கட்டும் தமிழாட்சி! மறுநாள் உன்றன்
   சிறுகாலில் விழ ஓடி வருவேன் அத்தான்!
   தித்திக்கும் முத்தம் உன் செவ்வாய்க்கேதான்!’

   - காசி ஆனந்தன் கவிதையை மூச்சுவிடாமல் உணர்ச்சி பொங்கப் பாடியபடி அவன் மேடையில் புகுந்து, மைக் முன்னால் நின்றுகொண்டிருக்கும் ‘டான்ஸ் காமிக் - திராவிட ரம்பை’ கரூர் பி.ஆர்.கே.விஜயவல்லியின் தாடையை ஆறுதலாக நிமிர்த்துகிறான். வேறொரு வகையில் அவனின் நுழைவு இருக்குமென தளர்வாக அமர்ந்திருக்கும் கூட்டம், உருக்கமான காதல் காட்சிகண்டு இறுக்கமாகிறது.

   ``யோவ் நீ பப்பூன்யா... ராஜபார்ட்டுனு நெனப்பாக்கும்’’ என்று விஜயவல்லி பகபகவெனச் சிரிக்க... கோமாளியின் வேடிக்கை புரிந்துகொண்டவுடன், மந்தைச்சனமே குலுங்கிச் சிரிக்கிறது.

   ``அட ஆமால்ல...’’ என்று அவன் கேனைச்சாயல் செய்து தலை சொறிய, மறுபடியும் சிரிப்பு.

   ``நான் வர்றதுக்கு முன்னாடி இங்கே கடவுள் வாழ்த்துப் பாடிட்டுப் போனானே நாரதர்ப் பய... அவன் கமண்டலத்துல என்னமோ வெச்சிருந்தான். அதை ஒரு மடக்குக் குடிச்சுப்புட்டேன். அதான் டங் ஸ்லிப் ஆகிடுச்சு... பிளடி நான்சென்ஸ்... மிக்ஸிங்கே பண்ணாம வெச்சிருக்கான் கஞ்சப்பய...’’ என்று தொண்டையைக் கட்டி எம்.ஆர்.ராதா குரலில் சொல்ல... முன்வரிசையில் மட்டுமே போடப்பட்டிருந்த ஒற்றை வரிசை வயதான சேர்கள், சிரிப்பில் இளமைக்குச் சென்று மீள்கிறது.

   ``யோவ்... அவரை அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. அவரு பெரிய முனி.’’

   ``சரி... நீ குனி.’’

   ``என்னாது...’’ விஜயவல்லி கோபமாகத் திரும்பினாள்.

   ``இல்லம்மா நான் பப்பூன்ல... அதான் பச்சைக்குதுர கிச்சக்குதுர தாண்டி வேடிக்கை காட்டணும்ல... அதுக்குச் சொன்னேன்...’’

   வகைதொகையில்லாமல் வெடிக்கும் சிரிப்புகள் அடுத்த ஒரு மணி நேரத்துக்கு அடங்காமலிருந்தன.

   திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள நாடகக் கலைஞர்களில் டபுள் எம்.ஏ முடித்திருப்பது ‘குயிக் விட் மாஸ்டர் - காமிக் மேஸ்ட்ரோ’ எல்.பி பெத்தவாண்டு மட்டுமே. கடவுள் வாழ்த்துப் பாடி முடித்தவுடன் உள்ளே வரும் பெத்தவாண்டு, அலாரம் வைத்ததுபோல் சரியாக 60 நிமிடங்கள் மேடையை அமளி துமளி ஆக்கிவிட்டுப் போவார்.

   ``ஒரு நிமிடம் தோழர்களே... ஒரே ஒரு நிமிடம்’’ கைகளைக் குவித்து வைத்துக்கொண்டு, கொப்பி தட்டினால் எழுமே அந்த ஓசை கேட்டது.

   நத்தம் பக்கத்தில் விடிய விடிய நாடகத்தைப் போட்டு முடித்துவிட்டு, திண்டுக்கல் வந்து, ஈரோடு பஸ்ஸில் ஏறி பெத்தவாண்டு, `சீன் - தாளம்’ பிரகாசம் மாஸ்டர், சிங்கம்புணரி `வெல்வெட்’ லதா மூவரும் தூங்கிக்கொண்டு இருக்கையில்தான் மேற்படிச் சத்தம் கேட்டது. மூவருக்கும் அவல்பூந்துறையில் அன்று இரவே நாடகம் இருந்தது. பெத்தவாண்டின் ஊர் ஆன் தி வேயில் இருப்பதால், அவர் மட்டும் இறங்கி ஒரு எட்டு போய் வருவதாகத் திட்டம்.

   சத்தம் கேட்டு பெத்தவாண்டு கண்களைத் திறந்தார். திகுதிகுவென எரிந்தன.

   ``யோவ்... அங்கிட்டு மொகரையத் திருப்புய்யா... என்னய்யா ‘ரத்தகண்ணு மாயாண்டி’ கணக்கா இருக்கே?’’

   அத்தனை உடல் அசதிக்கிடையிலும் ‘சீன் - தாளம்’ பிரகாசம் மேடையைப் போலவே இங்கேயும் பெத்தவாண்டைச் சீண்டினார்.

   ``ஏன் விஜயகாந்து மாதிரினு சொல்ல மாட்டியா?’’ என்றபடி மீண்டும் கண்களை அழுந்தத் தேய்த்துவிட்டு, பஸ்ஸின் முன் பகுதியில் சத்தம் வந்த பக்கம் பார்த்தார் பெத்தவாண்டு.

   சத்தம் எழுப்பிய இளைஞனை ஜாதிகவுண்டன்பட்டி பக்கம் பார்த்ததுபோல் இருந்தது.

   ``யாத்ரு தம்பா, எனதாரு தொந்தரே’’ சிவப்புக்கொடி, பின்னால் உண்டியலுடன் ஓர் ஆள், கைகொள்ளா துண்டறிக்கைகள்... எனப் பார்த்தவுடன் கம்யூனிஸ்ட்கள் என்று தெரிந்தாலும், பெத்தவாண்டு வேண்டு மென்றே கிண்டலுக்காகக் கன்னடத்தில் ‘மாத்தாடி’ப் பார்த்தார். அந்த இளைஞன் இவரின் விழிகளை எதிர்கொள்ளாமலே பேசத் தொடங்கினான்.

   ``அருமைத் தோழர்களே, எளிய மக்களே, பாட்டாளிச் சொந்தங்களே! வேடசந்தூரின் அருகே உள்ள `சன் பார்க்’ நூற்பாலையில் மூவாயிரம் தொழிலாளிகள் வேலைசெய்கிறார்கள். இந்த பஸ்கூட அந்த வழியாகத்தான் செல்கிறது. ஏன் உங்களின் உறவினரோ, நண்பரோ, குடும்பத்தினரோகூட அதில் வேலை பார்த்துக்கொண்டிருக்கலாம். திருப்பூர், கோவை, போன்ற பகுதிகளில் பல்வேறு மில்களை நடத்திவரும் ஒரு பெரு முதலாளி மேற்படி மில்லை வாங்கிவிட்டார். இது குறித்து அங்குள்ள தொழிலாளிகளையும் சரி, தொழிற்சங்கத்தினரையும் சரி, வாங்கிய, விற்ற இருதரப்பும் கலந்து ஆலோசிக்கவில்லை. ஏற்கெனவே போனஸ், முறையான கூலி உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னைகள் நிலுவையில் இருக்கும் நிலையில், மில்லை எதேச்சதிகாரமாகக் கைமாற்றிவிடுவதைக் கண்டித்து பல்வேறு கேட் கூட்டங்கள் போட்டுப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கச் சொன்னோம். நிர்வாகம் அசைந்து கொடுக்காத காரணத்தால், ஸ்ட்ரைக் அறிவித்தோம். ஸ்ட்ரைக் வாசலுக்கு வெளியே நடந்துகொண்டிருந்தபோது பேச்சுவார்த்தைக்கு உள்ளே அழைத்தனர். உள்ளே போன தொழிற்சங்கத்தினரை மரியாதைக்குறைவாக நடத்தி அனுப்பினர். அதேநேரத்தில் விஷமிகளைவிட்டு மில்லுக்குள் போலி வெடிகுண்டுகளை வீசி, கலவரம் ஏற்படுத்தி, போராட்டக்காரர்களை போலீஸைவிட்டுக் கலைத்தனர். இதில், நமது தோழர்கள் எஸ்.ஜி.பாண்டியன்,

   ஜி.ஆர்.கே.கணேசன் உள்ளிட்ட ஆறு பேர்மீது வெடிகுண்டு வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆகவே, வழக்கு நிதிக்காகாகவும் தொழிலாளர் போராட்டத்தில் தங்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காகவும்... தங்களால்…’’

   “என்னாதூ... போண்டா கணேசன் வெடிகுண்டு கேஸுல அரெஸ்ட்டா…’’ அந்தப் பையன் கடகடவென ஒப்பித்துக் கொண்டிருக்கும்போது பெத்தவாண்டு பெரிய சத்தத்துடன் எழுந்தார்.

   அவரையும், அந்தச் சூழலையும் எப்படி எதிர்கொள்வது என்கிற குழப்பத்துடன் அந்த இளைஞர் பார்த்துக்கொண்டி ருந்தபோதே, வேகமாகப்போய் அந்த ‘யாத்ரூ, தம்பா’வைத் தாண்டி பின்னால் துண்டறிக்கையுடன் நின்றவரிடம் ஒரு நோட்டீஸை வாங்கிக்கொண்டு, 500 ரூபாய்த் தாள் ஒன்றை உண்டியலில் போட்டார்.

   ``இந்தா... இந்த அம்பது ரூவாயைத் தனியா வெச்சுக்க... ஜெயிலுக்குப்போய்க் கணேசனைப் பார்க்கும்போது, பெத்தவாண்டு வாங்கிக் கொடுத்தார்னு பூ மார்க் பீடி ரெண்டு கட்டு கொடுத்துரு. பெரிய கலா ரசிகன்யா அந்தாளு...’’ என்று சொல்லிவிட்டுத் துண்டறிக்கையைப் படித்தபடி சீட்டுக்குத் திரும்பினார்.

   பார்த்தாலே பாகவதர் கிராப்பும், மை பென்சில் மீசையுமாக நாடகக் கலைஞன் என்று தெரியக்கூடிய ஒருவர், இடதுசாரித் தொழிலாளர் போராட்டத்துக்கு இவ்வளவு பெரிய பங்களிப்பு செய்திருப்பதை முதன்முதலில் கண்ட அந்தத் துண்டறிக்கைத் தோழர், புரட்சிக்கான அத்தனை சாத்தியங்களும் நெருங்கிவிட்டதை உணர்ந்தார். மேலும், பெத்தவாண்டுவின் கண்களும் கீழைச் செவ்வானம்போல் சிவந்திருக்க, அதன் பார்வைகள் செம்மீன்களாகத் தோன்றி பல்வேறு புரட்சிகரக் குறியீடுகளை அவருக்கு உணர்த்தின. அடர்த்தியான நம்பிக்கையுடன் அந்த உண்டியலைக் குலுக்கும்போது எழும் நாணயங்களின் ஓசை அதிகார வர்க்கத்துக்குப் பேரிடியாகக் கேட்கும் என அவருக்குத் தெரிந்தது.

   இவர்களின் உண்டியலோசைக்கிடையே டிரைவர், சீட்டிலிருந்து எழுந்து படிக்கட்டுகளின் அருகே வந்து, ``டீசல் பம்ப் லாக் ஆகிடுச்சு... 20 நிமிசம் ஆகும்ங்க...’’ என்றார்.

   கீழிறங்கிய பெத்தவாண்டு பிளாக் சிகரெட்டைப் பற்றவைத்து, கிராம்பு மணக்கும் புகையைவிட்டுக் கொண்டிருந்தபோதுதான் பார்த்தார்... கையில் கன்னங்கரேல் என்ற நாய்க்குட்டியை வைத்துக் கொண்டு படியின் அருகே ஒரு பெண் நின்றிருந்தாள்.

   பக்கத்தில் போய் ``இது என்ன நாய்க்குட்டிம்மா?’’ என்றபடி நாய்க்குட்டியின் பின்மண்டைத் தோலைப் பிடித்துத் தூக்கினார். ``கிர்ர்ர்....’’ என்று உறுமியது.

   ``முப்பது நாள்தான் இருக்கும். அதுங்காட்டியும் குட்டி உறுமுது...’’ அதை உடனே வாங்கிக் கொண்டுபோக வேண்டும் என விரும்பினார் பெத்தவாண்டு.

   ``உள்ளார பஸ்ஸெல்லாம் வளையும்ல... அந்தத் தண்ணி டாங்க்குக்குக் கீழே ஒரு நாயி குட்டி போட்டிருந்துச்சு. காலையில பஸ்ஸில மாட்டி, பெருசு செத்துப்போச்சு. இது அதோட குட்டி... மொத்தம் ரெண்டு குட்டி. ஆட்டோ ஸ்டாண்டு அண்ணே ஒண்ணைத் தூக்கிருச்சு. இதைப் பாரதிபுரத்துல எங்கக்கா வேலை பார்க்குற தறியில கொண்டு விடப்போறேன்...’’ என்றாள் பதினைந்து வயதிலிருந்த அந்தப் பெண் பிள்ளை.

   ``இந்தா... போற பக்கமெல்லாம் எதையாவது தூக்கிட்டுத் திரியாத. அதை அங்கிட்டு எங்கியாவது விட்டுட்டு வீட்டுக்குக் கெளம்பு’’ என்று அந்தப் பிள்ளையைப் போறபோக்கில் சொல்லிவிட்டு, நான்கு காலி ரேக்குகள் தாண்டி நின்ற அடுத்த பஸ்ஸை நோக்கி நடந்தான் அந்தத் துண்டறிக்கை இளைஞன். இவளின் அண்ணன்போல. கலர் ஜெராக்ஸ் மாதிரி அச்சுப் பிசகாத ஜாடை.

   பெத்தவாண்டுவுக்குத் தங்கையின் நினைவு வந்தது. எல்லம்மாள் ரொம்ப நாளாக நாய் வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தாள். காலனியில் நாயே இல்லை. ஒரே ஒரு பொட்டை நாய் ‘பிளாக்கி’ இருக்கிறது. தன் தொத்தல் உடம்பைவிடப் பெரிய அளவில் உள்ள எட்டு பால்காம்புகளைக் குலுக்கிக்கொண்டு, மற்ற நாய்களைப்போல மனிதர்கள் யாருடனும் ஒட்டிக்கொள்ளாமல் திரிகிறது. அது எப்போது சினையாக இருந்தது, எப்போது ஈன்றது என்றே தெரியாது. பிளாக்கியைப் பொறுத்தவரை காலனி, புருஷன் வீடு. எங்கேயோபோய் குட்டிபோட்டு, அவை கண் திறந்ததும் விட்டுவிட்டு வந்துவிடும். யாருக்கும் வால்கூட ஆட்டியதாக நினைவில்லை. அஞ்சல் குறிப்புகளில் `பூதல் நத்தம் காலனி’ என்று குறிப்பிடப்பட்டாலும், எப்படி பீமராவ் காலனிக்கும் அந்த ஊருக்கும் சம்மந்தமில்லாமல் காலம் செல்கிறதோ, அதுபோல பிளாக்கி ஊருக்குள் போகும்போது `ச்சூ... காலனி நாய்’ என்ற ஒரு சொல்லையும் கல்லையும் வாங்கிக்கொண்டு ஓடும். ஆனால், காலனியிலோ கடித்துத் துப்பிய மாட்டெலும்பைக்கூட யாரும் அதற்குப் போட்டுப் பார்த்ததில்லை.

   ``எவரேனி புரோகிராமுக்கு பிலுவலன்டாகூட நுவ்வு டெய்லி எக்கடியாச்சும் போட்சேவு... இன்ட்டிக்கு நாக்கு தோடுங்க ஏமி உந்தி’’ என்று தனக்கு நாய்க்குட்டி வேண்டுமென்று கேட்கும்போதெல்லாம் எல்லம்மாள் சொல்வாள்.

   அப்பாவுடன் வாழ மாட்டேன் என்று அம்மா தீர்த்துக்கொண்டு போனபின், அப்பா தன்னுடன் எல்லம்மாளைத் தூக்கிச் சென்றுவிட்டார். பத்து வருடங்களாகத் தோல் ஷாப்பில் வேலைசெய்த அப்பா ‘பொட்டுலிசம்’ வந்து செத்துப்போனார். அப்பா இறந்த பின், தங்கையைப் பெத்தவாண்டு கூட்டிவந்துவிட்டார். பன்னிரண்டாவது முடித்த எல்லம்மாள் என்ன கெஞ்சியும் மேற்கொண்டு படிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாள்.

   போன மாதம் தங்கை சொன்ன விஷயம்தான் `கண்டிப்பாக வீட்டுக்கு ஒரு நாயை எடுத்துட்டுப் போகணும்’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. நான்கு வீடு தள்ளியிருக்கும் ‘ஊசிக்குண்டியான்,’ ``பெரிய பின்னும்மா... பெத்தவாண்டு சார்ஜரு கொடு... அதான் சின்ன பின்னு’’ என்று அடிக்கடி வீட்டுக்கு வருகிறானாம். ``பப்பூன் வீடேறி வந்தே டபுள் மீனிங் பேசுறியாடா?’’ என ‘சப்’ என்று அடித்தால் மறுபேச்சில்லாமல் வாங்கிக்கொள்வான். துளிகூட மானம் என்று ஒன்று இல்லாதவன். வீசி வீசி விரட்டியும், பறந்துவிட்டு மாட்டு வாலில் மீண்டும் வந்து உட்காரும் ஈ போன்ற குணம் அவனுக்கு. மனைவியும் உடன் இல்லை. ஊர்க்காரர்களிடம் பீடிக்குக்கூடத் தொன்னாந்து நிற்பான். ஏதாவது வேலை சொன்னார்கள் என்றால், ``நானே இடுப்புச் செத்தவன். நல்லாயிருந்தா என் பொண்டாட்டி கூடல்ல இருந்திருப்பா’’ என்று தன்னையே தாழ்த்தி ஊரைச் சிரிக்கவிடுவான். அவனுக்குத் தேவையெல்லாம் குடிப்பதற்குச் சாராயம். ஊரினுள் கெடாவெட்டு, நல்லது பொல்லது என்று கறி காய்ச்சினாலே போதும்... யாராவது ஒரு கிழவியை தாஜா செய்து, சட்டியைக் கையில் கொடுத்து அனுப்பிவிடுவான். பல்லைக் கெஞ்சியபடி, கால்கடுக்க நின்று அவர்கள் வாங்கி வரும் மிச்சம் மீதாறியை ஏதோ சாதித்த நினைப்புடன் சப்புக்கொட்டித் தின்பான். `ஆளில்லாதப்ப நாய் இருந்தாலாச்சும் கண்ட நாய்லாம் வீட்டுக்கு வராம தங்கைக்குத் துணையா இருக்கும். இந்தக் குட்டி நல்லதாகத் தெரிகிறது. வாங்கிக்கொண்டு போக வேண்டும்’ என்று முடிவு செய்தார்.
   அந்தப் பிள்ளையிடம் ``பொரோட்டா சாப்பிட்டுக்க...’’ என்று 50 ரூபாய் கொடுத்து நாய்க்குட்டியைக் கேட்டார். ஒன்றுமே சொல்லாமல் கொடுத்துவிட்டாள். பெத்தவாண்டு வண்டியில் ஏறிச் சீட்டின் கீழிருந்த தனது பெரிய பையை நகர்த்தி, மடித்துவைக்கப்பட்டிருந்த டர்க்கி துண்டில் நாய்க்குட்டியைப் படுக்கவைத்து இரண்டு நிமிடம் நீவிக்கொடுத்தார். சத்தம் காட்டாமல் தூங்க ஆரம்பித்தது.

   வண்டி வேடசந்தூர் ஆத்துமேட்டில் பெத்தவாண்டை இறக்கிவிட்டுக் கிளம்பியது.

   கடகம், கொப்பு, திருகு, மகரம், மகுடம், வாளி, காறை கம்பி, குதம்பை, தூக்கம், தோடு... எனச் சகல காதணிகளும் அணிந்த பேரிளம் பெண் மாதிரி பெத்தவாண்டுவின் ‘டி.வி.எஸ் 50’ அலங்காரமாக நின்றுகொண்டி ருக்கும். இரண்டு பக்கமும் பெட்டிகள். அதில் `எல்.பி.பி’ என்கிற இனிஷியல். இரண்டு பார் வைத்த ஹேண்டில்... அதில் வண்ண வயர்கள். இரண்டு வீல்களில் ஒவ்வொரு ஃபோக்ஸ் கம்பியிலும் கட்டப்பட்ட பிளாஸ்டிக் குஞ்சம். பிரேக் அடித்தால் பாட்டுப் பாடும் ஹாரன், இரண்டு வீல்களிலும் சைனா லைட்கள்... என வண்டி முழு ஜோடிப்பில் கரகாட்டப் பெண்போல இருக்கும். அந்தப் பக்கத்து மக்கள் எல்லோருக்குமே அந்த வண்டி பரிச்சயமாகி இருந்தது. அதிலும், பேருந்து கடக்கும் நொடிகளில்கூடக் கணித்துவிடும்படி அந்த வண்டி ஆத்துமேட்டில் வண்டிக்கடை களின் அருகே நிற்கும்.

   ``காடு களைந்தும் கழனி அமைத்தும் கதறிடும், உழவனின் கண்ணீர் துடைக்க, ஓடி வருகிறான் உதயசூரியன்...’’ பட்டப்பகலிலேயே ஹனிபா பாடிக் கொண்டிருந்தார். மீட்டிங் நடப்பதற்கான கூறு எதுவும் தென்படவில்லை. பின்னர்தான் நினைவுக்கு வந்தது... அன்று கலைஞர் பிறந்தநாள். ரேடியோ செட்டுச் சத்தத்துக்கு நாய்க்குட்டி ``மீச்... மீச்...’’ என்று கத்திக்கொண்டே பையிலிருந்து குதிக்கப் பார்த்தது. உள்ளே தள்ளிவிட்டு, பையைத் தூக்கிக்கொண்டு பஸ் ஸ்டாப்பின் அருகிலிருந்த டாஸ்மாக்குக்குள் நுழைந்தார்.

   பெத்தவாண்டுக்கு அவர்கள் சுற்றத்தில் யாருக்கும் இல்லாத ‘அசால்ட்டு’தனம் இயற்கையிலே உண்டு. அத்தகைய அசால்ட்டுடன், அறுக்கக் கொண்டுபோகும் வாத்தைப் பிடித்திருப்பது போல் `மோர்பியஸ் புளு’ பிராந்தி ஃபுல் பாட்டிலின் கழுத்தைப் பிடித்துக் கொண்டு பாரினுள் போய் அமர்ந்தார். ஒரு நாடகத்துக்கு 6,000 ரூபாய் சம்பளம். ஒரு மணி நேரம் பஃபூன் டான்ஸ். நாடகம் தொடங்கியபின் இடையில் ஓரிரு சீன்களில் மட்டும் வந்துவிட்டுப் போவார். அவ்வளவுதான். ஆனால், பெத்தவாண்டு பெயர்போட்ட நாடக நோட்டீஸ்கள் பெரிதும் மதிக்கப்பட்டன.

   ``நாயக்கரு நல்லவரா, கெட்டவரா?’’ மேடையில் நுழைந்ததும் இப்படி ஒரு கேள்வியைக் கேட்பார்.

   ``அவருக்கென்ன தங்கத்துக்கு... அட்வான்ஸ் கொடுத்துட்டு அப்புராணியா போயிட்டாரு. மித்த ஆளுங்க ஒரு இளிப்பாவது இளிப்பாய்ங்க...’’ என்றபடி மேடையின் கீழே பக்கவாட்டில் உட்கார்ந்திருக்கும் மனிதரைப் பார்த்து டான்ஸ் காமிக் பெண் கிண்டலாக வணக்கம் வைப்பார்.
   ``யெம்மா... நான் ஊர் நாயக்கரைச் சொல்லலை. அவரும் நல்லவருதான். எனக்குக்கூட நாடகம் முடிஞ்சவுடனே வெடக்கோழியும் மூத்திரம் நாறாத குவார்ட்டரும் கொடுத்துவிடுறேனு சொல்லியிருக்காரு. ஆனா, நான் கேட்டது நம்ம நாயக்கரை, எங்க சாமி பெரியாரை...’’

   பக்திமயமான கோயில் திருவிழாவில் கரன்ட் பாக்ஸில் கைவைப்பதுபோல இப்படித்தான் எதையாது பேசிவைப்பார்.

   ``எதுத்தாப்டி மொத வரிசையில புளு சேலையில சேர்ல உக்கார்ந்திருக்கிறது யாரு தெரியுமா... எங்க மாமன் மக. இப்ப இந்த ஊரு பிரசிடெண்டு. மாதாரிக இப்படி ஊருக்கு முன்ன நடுநாயகமா உக்கார யாரு காரணம்? இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்த அவருதான் காரணம். அப்படி உக்காரவுடுறதுக்கு ஊர்ப் பெரிய மனுசங்களுக்குப் பெரிய மனசு வர்றதுக்கும் யார் காரணம்? எல்லாம் அந்த நாயக்கருதானே... அப்ப அவரு நல்லவருதானே...’’ வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது மாதிரி சொன்தும், யாரோ இரண்டு இளவட்டம் உணர்ச்சிவசப்பட்டுக் கைதட்ட, அதில் ஊரும் சேர்ந்துகொள்ளும். இதுவே பட்டிவீரன்பட்டி மாதிரியான ஊருக்குப்போனால் அங்கே ``ஆதித்தனார், டபுள்யூ.பி.ஏ.சௌந்திரபாண்டியன்...’’ என அந்தந்த ஊருக்குத் தொடர்பான தலைவர்களின் புகழைப் பேசி உள்ளே நேக்காக அரசியலைக் கலந்துவிடுவார்.

   ஏறுவெயிலில் முதல் ரவுண்டு. ஜிவ்வென்று ஏறியது. போனை எடுத்தார்.

   ``கண்ணு, உனக்கு ஒரு நா குட்டி புடிச்சிருக்கேன்...’’

   ``அல்சேஷனாணா?’’

   ``ம்... ஆதிசேஷன். நல்ல குட்டிதான். உறுத்தா இருந்துச்சு வாங்கிட்டு வந்தேன்.’’

   ``கடுவனா, பொட்டையா?’’

   ``ஏன் சாமி, கட்டிக்கவா போறே... கடுவன் குட்டிதான்.’’

   ``பேரு வைக்கிறதுக்குக் கேட்டேன்ணா... கடுவன்னா ‘பூச்சி’னு வைக்கலாமா?’’

   ``ஆமா இவ பெரிய ‘பொம்மக்கா’. `பூச்சி’னு பேருவெச்சு சங்கிலியைக் கட்டி, கூட்டிட்டு அலையப் போறவ’’ என்று சிரித்தார்.

   வீடு போவதற்குள் பத்து முறையாவது மிஸ்டு கால் கொடுத்திருப்பாள் எல்லம்மாள். வீட்டினுள் நுழைந்து குட்டியை இறக்கிவிட்டார். ரயில்வே கரிக்கட்டி மாதிரி அட்டைக் கறுப்பாக இருந்த அந்தக் குட்டிநாயை யாருக்குத்தான் பிடிக்காது. அள்ளிக்கொண்டாள் எல்லம்மாள்.  

   விரலை நாய்க்குட்டியின் வாயில் வைத்தாள். காம்பென்று நினைத்துச் சூப்பிப் பார்த்தது. பின்னர் அல்லை வாங்கிக் கடவாயில் வைத்துக் கடிக்கத் தொடங்கியது.

   ``ம்... கடி பழக்காத தாயீ, ஊர்வம்பை வாங்கிப்புடும்...’’ என்றபடி சாப்பிட உட்கார்ந்தார்.

   ``ஏண்ணே... நம்ம ஊர்லதான் ஏற்கெனவே பிளாக்கி இருக்குல்ல... இதுக்கு ‘பிளாக்கன்’னு பேருவைக்கவா?’’

   ``ஏன்... அதுக்குக் கருப்பன்னு வைக்கலாமே.... சரி வேணாம் விடு... ‘கரியன்’னு வைய்யி நல்லாத்தான் இருக்கு.”

   வரிசைக்கு எட்டு என எதிரெதிரே காலனியில் இருந்த பதினாறு வீடுகளுக்கும் கரியனைக் எடுத்துக்கொண்டுபோய்க் காட்டிவிட்டு வந்துவிட்டாள் எல்லம்மாள். ஒரே நாளில் காலனிக்கே அறிமுகமானான் கரியன். கீரிப்பூச்சி மருந்து, தடுப்பூசி எல்லாம் போட்டு வளர்க்க ஆரம்பித்தாள். பெத்தவாண்டு ஊரூராகப் போகவும் வரவுமாக இருந்தார். எல்லம்மாளுக்கு இருபத்தைந்து பவுன்களைச் சேர்த்து வைத்திருந்தார். வங்கியிலும் பணம் கொஞ்சம் கிடந்தது.

   கரியன் வந்த பதினைந்தாவது நாள் ஊசிக்குண்டியான் எங்கிருந்தோ ஒரு நாய்க்குட்டியைப் போதையோடு போதையாகத் தூக்கி வந்தான். தொத்தலாக, பரிதாபமாக இருந்த அந்த நாய்க்குட்டிக்கு ‘ராஜா’ என்று பெயரெல்லாம் வேறு வைத்தான். பார்ப்போரிடமெல்லாம் வாலைக் குழைத்துக்கொண்டு போனதால், அதை ‘சலுப்பை’ என்றே கூப்பிடத் தொடங்கினார்கள். ஆனால், வளர வளர கரியனின் விளையாட்டுத் தோழனாகியது சலுப்பை.  

   கோம்பை நாய் என்றால் நெஞ்சு அகலமாயிருக்கும். முன்காலை ஊன்றி, பின்காலை மடக்கி உட்கார்ந்திருக்கும்போது இரும்புச் சேரை மடக்கிவைத்ததுபோல அகலஞ்சகலமாக இருக்கும் நெஞ்சுப்பகுதி. ஆனால், கோம்பை ரகத்தில் உயரம் அவ்வளவாக இருக்காது. ஆனால், ராஜபாளையத்து நாயின் உயரத்தைவிட கொஞ்சம் கூடுதலாகவே இருந்தான் கரியன். நெஞ்சும் முகமும் கோம்பையைப்போல் இருந்தது. வயிறு கன்றிப்போய், சிப்பிப்பாறை நாய்களை மாதிரி உள்ளொடுங்கி இருந்தது. இன்ன நாய் என்று சொல்ல முடியாமல், அதேநேரம் புது ஆள் யாராவது பார்த்தால், விசுக்கென்று பயப்படும் உருவத்தில் கரியன் இருந்தான். மாட்டுக்கொழுப்பைச் சட்டியில் வணக்கி அதில் சோறு கலந்து ஒருநாள், வாரைக் காய்ச்சி உருக்கி எடுத்த பன்றி நெய்யை உப்பில்லாத சோற்றில் போட்டுப் பிரட்டி ஒருநாள், மீன் வறுத்த எண்ணெயைச் சோற்றில் பிசறி ஒருநாள்... எனப் பல வருஷம் கழித்துப் பிறந்த பிள்ளையைப் பார்த்துப் பார்த்து வளர்ப்பதுபோல் கரியனை வளர்த்தாள் எல்லம்மாள். கடுவன் நாயாக இருந்தாலும் சரி, பெட்டையாக இருந்தாலும் சரி, எட்டாவது மாதத்தில் பருவத்துக்கு வந்துவிடும். கரியன் குரல் இறுக்கமாகி, உறுமல் குரைப்பாக மாறத் தொடங்கியது. நன்றாகக் குரைக்க வேண்டி, குழவிகள் வளர்ந்து பறந்து போய்விட்ட வெறும் குழவிக்கூடுகளாக மரத்தில் தேடி எடுத்து வந்து அம்மியில் வைத்து நெறுநெறுவென நுணுக்கி, அதைப் பச்சைமுட்டையில் கலந்து கொடுத்தாள்.

   ‘பவ்’ என்ற குரைப்பில் புதியவர்களின் ஈரக்குலை ஆடியது. ஊருக்கும் காலனிக்கும் நடுமேற்கே உள்ள ராக்காச்சி பாறையில் ஏறி உட்கார்ந்துகொள்வதை வழக்கமாக வைத்திருந்தான் கரியன். சலுப்பைப் பாறை வரை துணைக்குப் போய்விட்டு, பின்னர் காலனிக்கு ஓடி வந்துவிடும். கரியனுக்குக் காலனி என்பது தன் ஆளுகைப் பகுதி. பாறையில் ஏறி உட்கார்ந்து, காலனியைப் பார்த்தபடி இருப்பான். வீட்டு வாசலில் அடுப்புகூட்ட, பின்னால் வேலிப் பக்கமாக எல்லம்மாள் வந்து சுள்ளி எடுப்பதைப் பார்த்தவுடன்தான், அய்யாரு பாறையில் இருந்து கிளம்புவார். இது இல்லாமல் யாராவது புதிய ஆள் காலனிக்குள் நுழைந்தால் போச்சு, சும்மா சூறைக்காத்து கணக்காக வந்து நிற்பான். தெரியாத ஆள் என்றால், `பவ் பவ்’தான். எதிர்ப்பையும் மறுப்பையும்கூடப் பணிந்தே தெரிவித்து வந்த அந்தக் காலனி உருவான காலத்தில் இருந்து, இப்படி ஓர் ஆக்ரோஷமான குரலைப் பிறர் கேட்டதில்லை. பெத்தவாண்டுகூட நைச்சியமாகவோ, வேடிக்கை பேசியோதான் ஊர்க்காரர்களின் கருத்தை மறுப்பான்.

   ஆனால், எல்லம்மாளின் ``ச்சூ... பேசாம இரு...’’ என்ற ஓர் அதட்டுக்குக் கரியன் அப்படியே அடங்கிக்கொள்வான்.

   பெத்தவாண்டுக்குக்கூடச் சமயங்களில் கடுங்காப்பியும் வெறும் தேயிலைத் தண்ணியுமே கிடைத்தன. ஆனால், ஒருநாள் விட்டு ஒருநாள் கால்கடுக்க நடந்து ஊருக்குள்ளிருக்கும் சொசைட்டிக்குப்போய் எருமைப்பாலை வாங்கி, ‘கண்ணு பட்டுவிடும்’ என்று முந்தானையில் மறைத்துக் கொண்டுவந்து கரியனுக்கு ஊற்றினாள். அப்படி சொசைட்டிக்குப் போகும்போது கரியன் எல்லமாளைவிட்டு அஞ்சாறு எட்டுப் பின்னாடி தள்ளியே அமைதியாக நடந்து வருவான். ஊரில் இருக்கும் நாய்களின் வால், தன்னறியாமல் கால்களுக்கு இடையே போகும். கொஞ்சம் துணிச்சலான நாய்கள், இருக்கும் சொற்பத் தெருக்களில் இரண்டைத் தாண்டிப்போய் முகம் காட்டாமல் குரைத்துக் கரியனின் வருகைக்குத் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தன.

   சலுப்பையைச் சில மாதங்களுக்குப் பிறகு ஊசிக்குண்டி யான் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டான். சலுப்பையும் அவனைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. எப்போதாவது அவன் உருவம் தென்பட்டால், மீனாட்சியம்மன் கோயிலில் மயில்தோகை விசுறுவதுபோல் சாஸ்திரத்துக்கு மெதுவாக இரண்டு ஆட்டு வாலை ஆட்டியது. ஆனால், எல்லம்மாள் கரியனை வளர்க்க, கரியனோ சலுப்பையை வளர்த்தான். தனக்குப்போட்ட சாப்பாட்டை முக்கால்வாசி சாப்பிட்டுவிட்டுச் சலுப்பைக்கென்று கொஞ்சம் மீதம்வைத்தான். சலுப்பைக்கோ அதுவே போதுமானதாக இருந்தது. மேலும், பொறுக்கித் தின்பதில் சலுப்பைக்கு இன்பமாகவும் இருந்தது. கரியனோ யார் கொடுத்தாலும் சாப்பிடாமல் கெத்தாகவே இருந்தான். காலேஜுக்குப்போகும் பசங்கள் கரியனுடன் பழக விரும்பி முட்டை மணக்கும் கேக்குகளைக்கூட முழுதாகப் போட்டுப் பார்த்தார்கள். குனிந்து நுகர்ந்து பார்த்துவிட்டுச் சட்டை செய்யாமல் போய்விடுவான். கரியன், சலுப்பைக்குத் தன் சோற்றைப் பகிர்வதை எல்லம்மாள், கண்டுபிடித்துவிட்டாள். ஆனால், ஒன்றும் சொல்வதில்லை. ஆயினும், சலுப்பைக்குத் தன் கையால் சோறு போட அவள் விரும்பவில்லை. அதைப் பார்த்தால் ஊசிக்குண்டி யான் ஏதாவது சொல்வான் என நினைத்தாள்.

   ``நாயா... கண்டுகுட்டியா பெத்தவாண்டு, நீ வளக்குறது...’’ என ஒருநாள் அட்வான்ஸ் கொடுக்க வந்த தென்னம்பட்டி பிரசிடென்ட் வாயைப் பொளந்து கேட்கவும். அவர் போனவுடனே கரியனுக்குச் சுத்திப்போட்டாள் எல்லம்மாள். கரியன் மற்ற நாய்களைப்போல எங்கு போனாலும் பின்னாடியே தொன்னையாட்டம் வந்து சங்கடத்தை ஏற்படுத்துவதில்லை. ‘வெளியே போறேன்... வீட்டுலேயே இரு’ என்று சொல்லிவிட்டால் போதும்... பிட்டுக்கூட நகராமல் அங்கேயே இருப்பான்.

   ஊர்க்காரர்கள் ராக்காச்சி மேட்டுக்கு அந்தப் பக்கம் உள்ள தோட்டத்து வீடுகளுக்குப் போகவும், குறுக்கு வழியால் மெயின் ரோட்டுக்குப் போகவும் மட்டுமே காலனிக்குள் வந்தனர். அப்படி வந்தவர்கள் கரியனைக் கண்டு மிரண்டனர். புதியவர்களைக் கண்டால் ‘வாளுயுர்த்திக் களம் புகும் சண்டமாருத சாகசக்காரனைப் போல்’ வாலை நிமிர்த்திக்கொண்டு ``உர்ர்ர்ர்...’’ என்று கரியன் வெளியிடும் உருமலில் எதிர்படுபவரின் உயிர்போய் வந்தது. குரைத்தாலோ இதயமே நின்று துடித்தது.

   தொண்டூழியத்தின் காலம் முடிந்து விட்டது. நினைத்த மாதிரி ஏவ முடியாது. காலனிக்குள்ளும் பன்னாட்டு பிராண்டுகள் நுழைந்துவிட்டன. ஜீன்ஸும் சுடிதாரும் எப்போதாவது போட்டதிலிருந்து மாறி, பாறைமேட்டிலும், ஓடைப்பால சுவற்றிலும் நாளும் துவைத்துக் காய்ந்தபடியியேருக்கும் உடைகளாகின. ‘உட்காரும் இடத்தில்’ சாயம் போயிருந்தாலும், பெண்கள் நைட்டியிலேயே இருந்தனர். இவை எல்லாவற்றையும்விடச் சுத்து வட்டாரத்தில் இல்லாத அளவுக்கு முரட்டு நாய்கள்கூட வளர்க்கத் தொடங்கிவிட்டார்கள். இவர்கள் எல்லோரும் சொன்ன சொல்லுக்கு ஓடி வந்த, கும்பிட்டு நின்ற இனிமையான கடந்த காலங்களைப் பூதல் நத்தத்தின் ஊர்த்திண்ணைகள் மாலை வேளைகளில் பகிர்ந்துகொண்டன.

   ``அவய்ங்க வளக்கறதைவிட மொரட்டு நாய் ஒண்ணு, எங்க அம்மாவோட அப்பன் வச்சிருந்தாரு. கொடகனாத்து மேட்டுல அவரு புல்லட்டு வண்டி ஏறும்போதே இங்க காத வெடச்சிக்கும். மலுச்சின்னு தரையில இருந்து பத்தடி ஓட்டுமேல தாவி மோட்டெலியைப் புடிச்சிப்புடும். மாமரத்துப்பட்டி வலையருக வேட்டைக்கு இந்தப் பக்கம் கிராஸாகும்போதெல்லாம், ‘சாமி, இந்த நாயா... சித்த கொடுங்க எங்க பொட்ட நாய்கட்டவிட்டு ரெண்டு ஈத்தெடுத்துட்டுத் தாரோம்மினு கெஞ்சா கெஞ்சுவாங்க.’ கழுத்துல வாரைக்கட்டி சங்கிலியைப் புடிச்சுகிட்டுப்போக அதுக்குன்னே ஒரு பண்ணைக்காரனும் இருந்தான். ஒரு நா பாட்டனாரு நாயோட நிற்கிறப்ப பண்ணைக்காரன் வந்திருக்கான். நாய் வாலை ஆட்டியிருக்கு. அப்பவே வாலை இழுத்துவெச்சு நறுக்கிப்புட்டாராம். தெக்கோரம் முனியப்பன் கோவிலுல குதிரைக்குக் கீழ அத்தசோடு நாயி செலை, அந்த நாயைக் கணக்கு வச்சுத்தான் செஞ்சது. இப்ப என்னடான்னா நாயை விலைக்கு வாங்கி எவனெவனோ வளர்க்குறாய்ங்க...’’ பொன்னுச்சாமி கவலையாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.

   பெத்தவாண்டின் வீடு இருந்த வரிசையின் பின்புறம் வானம் பார்த்த காடு. வெங்கக்கற்கள் பாவியபடி கிடக்கும். அதில் மழை பெய்தால் உளுந்தோ, கேப்பையோ காட்டு வெள்ளாமைக்கென தூவிவிட்டுப் போவார்கள். அதன் மேவோரம் ராக்காச்சி கரடு. இவர்கள் இருந்த வீட்டு வரிசையின் பின், நாட்டுக்கருவ வேலியும் கற்றாழையும் ஓர் ஆள் மட்டத்துக்குச் சுவரைப்போல் வளர்ந்து நின்றன.

   ஊர்க்கார இளசுகள் இரவுகளில் பெண்கள் கொல்லைக்கு ஒதுங்கும் பக்கம் பைக்கில் வந்தால், வேண்டுமென்றே லைட்டை அணைத்து வந்து அவர்களின் அருகே வரும்போது படீரென்று ஒளிரவிட்டுக் கெக்கலித்துப் போவார்கள். கூசிப்போய், சங்கடப்பட்டுச் சட்டென்று எழுந்து தலை கவிழ்த்தி நிற்பார்கள் பெண்கள். மறுநாள் பஸ்களிலோ, சந்தைகளிலோ பார்க்க நேர்ந்தால் சாடை பேசி உக்கிப்போக வைப்பார்கள். இந்த வேலையில், சாதாரண டி.வி.எஸ் எக்ஸெல் முதல் ஹோண்டா ஷைன் வரை எந்த வேறுபாடும் இல்லை.

   ஆனாலும், கவர்மென்ட் காசு கொடுக்கும் வரைக்கும் கக்கூஸ் கட்ட ஒருவனுக்கும் உறைக்கவில்லை. பெருமைக்கு இரண்டு டிகிரியைப் பேருக்குப் பின்னால் போட்டுக் கொண்டு, கோமாளிக்கூத்துக்கட்டும் பெத்தவாண்டுக்குக்கூட வயசுக்கு வந்த தங்கைக்கு `பேண்டு மோள’ கக்கூஸ் வேண்டுமென்ற நினைப்பில்லை.

   அன்று அப்படித்தான் தூறிக்கொண்டு இருந்தது. மசங்கும்பொழுது. எழவு சொல்லப் போய்விட்டு ஊருக்குக் காலனி வழியாக வரும் ரோட்டில், வந்துகொண்டிருந்த பசங்களின் கண்களில் ரோட்டோரத்தில் யாரோ ‘உட்காந்திருப்பது’ தெரிந்தது. வண்டிச் சத்தம் கேட்டு, சுதாரித்து எழுந்து, சீலையைக் கீழே இறங்கும் முன்பு லைட்டைப் போடும் எண்ணத்தில், முறுக்கி வந்து நெருங்கும்போது விளைக்கைப் போட்டார்கள். குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தது கரியன். வானளந்த கருப்புசாமி எழுந்து நிற்பதுபோல் விளக்கைப் போட்டதும் வெளிச்சத்தை எதிர்க்கொள்ள எழுந்தான். ``பொவ்...’’ என்று அவன் குரைத்த ஒற்றைக் குரைப்பில், அடித்திருந்த பாடாவதி ‘ஹனி டே’ பிராந்திப் போதை நொடியில் இறங்கிவிட்டது இருவருக்கும். வண்டி வந்த வேகத்துக்கு நேராகப் போக வடக்கேயும் தெற்கேயுமாக ஆளுக்கொரு பக்கம் விழுந்து எழுந்தனர்.

   காலனியிலிருந்து திடுதிடுமென ஆள்கள் ஓடி வந்து தூக்கிவிட்டனர்.

   ``என்னய்யா நாய் வளத்து ஏவுறீங்களா...’’ சில்லு மூக்கு பேந்து சட்டையெல்லாம் ரத்தமாக நின்றவனைக் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டிருந்த இரண்டாவமவன் கேட்டான்.

   ``அந்த நாய் தேவையில்லாமா குலைக்காதுங்க...’’ என்றான் ஊசிக்குண்டியான். பைக்கில் ஏறி உட்கார்ந்து பட்டனைத் தொட்டான். ஸ்டார்ட் ஆனது, ஊர் நோக்கிப் போனார்கள். விழுந்து எழுந்து போனதைவிட, ஊசிக்குண்டியான் அதிசயமாக நியாயம் பேசியதுதான் அன்றைக்கு அங்கு பேச்சாக இருந்தது.

   மறுநாள் மாலை. திடும் திடுமென வேட்டு அதிரத் தொடங்கின. ஊரில் விழுந்த எழவில் பொணத்தைத் தூக்குகிறார்கள் என்று அந்த வெடிப்புகள் சொல்லின. வடக்கம்பட்டி வேட்டு ஒவ்வொன்றும் பத்து மைலுக்கு அங்கிட்டும் ஒலித்தன.

   பதினைந்து பைக்குகள் இருக்கும். மொத்தமாகக் காலனிக்குள் நுழைந்தன. கர்லா கட்டை சுற்றுவதற்குக் கையைத் தூக்கியதுபோல அரிவாள் ஏந்திய கையைத் தூக்கிய கருப்பசாமி பொம்மை ஒன்று காலனி தொடங்கும் இடத்தில் சாய்ந்திருக்கும். அத்தனை வண்டிகளும் அங்கே நின்றன. இருபது இருபத்தைந்து பேர்கள் இறங்கி வந்தார்கள். வந்தவர்களில் கையில் தடிவைத்திருந்த இளசுகள் காலனி வீடுகளின் பின்னால் போய்த் துழாவத் தொடங்கினார்கள்.

   வீடுகளிலிருந்து ஆண்களும் பெண்களும் ஏதோ பிரச்னை என்று புரிந்து, இருண்ட முகத்துடன் வெளிவரத் தொடங்கினார்கள். ஊர்க்கூட்டத்தில் வாத்தியார் வேலைக்குப் போகும் நகரத்து முகம்கொண்ட ஒருவன் ``நாகராஜு, இங்கே வா...’’ என்று ஊசிக்குண்டியானைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டான்.

   கரியன் நேற்று குரைத்ததுதான் பிரச்னை என்று புரிய ஆரம்பித்தது காலனி மக்களுக்கு. பெத்தவாண்டும் கலைந்த தலையும் தூக்கமுமாக எழுந்து வந்து நின்றான். அவனுக்கு முதல்நாள் கதை தெரியாது.எல்லம்மாளுக்குச் சின்னப்பயல்கள் கையில் தடியுடன் தன் நாயைத் தேடுவது கண்டு விம்மிக்கொண்டு வந்தது. அந்த இளம் வாத்தியாருக்கு அருகில்போய் லேசாகச் சிரித்த முகமாக ``சொல்லுங்க சார்...’’ என்றான் ஊசிக்குண்டியான்.

   `பொளேர்’ என்று விழுந்தது அறை.

   ``பிச்சைக்காரத் தாயளி... கட்டிங் மசுரு ஓசியில வாங்குறதுக்கு நாலு மணி நேரம் நிக்கிற நீயெல்லாம் நேத்து பயலுககிட்ட நாயம் பேசி அனுப்பியிருக்க...’’ என்று மீண்டும் ஓர் அறை கொடுத்தான்.

   எங்கிருந்தோ கூட்டத்துக்குள் வந்த சலுப்பை, ஊசிக்குண்டியானை அடித்தவனைப் பார்த்து ``வள்... வள்’’ என்று குரைத்துக்கொண்டு நின்றது. அதன் உடலையும் சைஸையும் பார்த்துச் சிரித்தபடி ஒருவன் உதைத்தான். அவனை நோக்கிக் கடிக்கப் பாய்வதாகப் போக்குக்காட்டி மீண்டும் குரைத்தது.

   நின்றிருந்த ஒருவன் கைலிக்குள் வைத்திருந்த அரிவாளால் அதன் நடுமுதுகில் ஒரு வெட்டு போட்டான். ``வீச்...’’ என்ற சத்தத்துடன் இரண்டு துண்டாகி விழுந்தது சலுப்பை.

   எல்லம்மாளுக்கு நைட்டியோடு முத்திரம் முட்டிக் கால்களுக்கிடையே வழிந்தது. அப்படியே சுவரோடு ஒட்டியபடி வீட்டின் பின்னுக்குப் போனாள். இதயம் அதிர்வது அவள் காதுக்கே கேட்டதுபோல் உணர்ந்தாள்.

   பெத்தவாண்டு கையெடுத்துக் கும்பிட்டு, இனி நாயைக் கட்டி வைப்பதாகக் கெஞ்சுவதும் சலுப்பையின் நன்றியைக் கண்கொண்டு பார்த்துவிட்ட நாகராஜூ, ஆற்றாமையோடு வாயைக் கோணிக்கொண்டு் தேம்புவதும் கரைந்துகொண்டிருக்கும் சித்திரம்போல அவளின் நினைக்குள் அதிர்ந்தது.
   கொல்லைப் பக்காமாக நின்று விம்மிக்கொண்டி ருந்தாள் எல்லம்மாள். தடதடக்கும் இதயத்தின் துடிப்பையும் கண்முன்னே துண்டாகி விழுந்த அப்பாவி உயிர் கொடுத்த அச்சத்தையும் மீறி மனதுக்குள் தோன்றியது. `கரியன் எங்கே..?’

   சலுப்பையின் “வீச்...” கேட்டுவிட்டதுபோல. ராக்காச்சி ஏவிவிட்ட `சண்டிக்கருப்பு’ மாதிரி, கரும்புயல்போலத் தாண்டுகாலில் காலனி நோக்கி ராக்காச்சி கரட்டிலிருந்து பறந்து வந்துகொண்டிருந்தான் கரியன். கையில் பிடித்து எறிந்த வாணம்போல ஓடிவந்த வேகத்தில் வேலிக்கு அந்தப் பக்கமிருந்து பத்தடி உயரத்துக்குப் பாய்ந்தான் கரியன்.

   எப்படித்தான் அந்தச் சின்னச் சிறுக்கிக்கு இவ்வளவு வெலம் வந்ததோ, ‘கூடைவைத்துச் சிட்டுக்குருவியைப் பிடிப்பதுபோல்’ அம்பாகத் தாவி அந்தப் பக்கமிருந்து பாய்ந்த கரியனை இரு கைகளாலும் கட்டிப்பிடித்து கொல்லையில் உருண்டாள்.

   திமிறிய அவனின் வாயை ஒரு கையால் இறுக்கிப் பிடித்துக்கொண்டாள். ``ம்ம்ம்ம்ம்....’’ என்ற மெல்லிய உறுமல் அவனிடமிருந்து வந்தது.

   ``சாமி... நீ எங்களுக்கு வேணுஞ்சாமி. நீ இப்ப போனா கொன்னேபுடுவாங்க சாமி. நீ சண்டை போட்டியானா நல்லாத்தான் இருக்கும். ஆனா, நீ உயிரோட இருக்கிறதுதான் சாமி... அவங்க செஞ்சதுக்குப் பதிலா இருக்கும். வாயில இருந்து கையை எடுக்கிறேன் கொலைச்சிப்புடாத சாமி...’’ என்று சொன்னபடி அதன் வாயை இறுக்கிப் பிடித்திருந்த கையை எடுத்தாள் எல்லம்மாள். என்ன புரிந்ததோ மெலிதாக உறுமியபடி அமைதியாக இருந்தான் கரியன்.

   அவனைக் கட்டிப்பிடித்தபடி எவ்வளவு நேரம் படுத்திருந்தாள் எனத் தெரியவில்லை. பெத்தவாண்டு வந்து ``மூத்திரம் அடிக்கிற எடத்துலயா கண்ணு படுத்திருக்க... எந்திரிச்சு நாலு செம்பு ஊத்திக்கிட்டு வா...’’ என்று உசுப்பிவிட்டான்.

   காலையில் எல்லம்மாள் எழுந்து பார்த்தாள். எப்போதோ வாங்கிவைத்திருந்த வார்ப் பட்டையைக் கரியனின் கழுத்தில் கட்டி, அதில் சங்கிலியைப் பிணைத்து க்  கட்டிவைத்திருந்தான் பெத்தவாண்டு.

   ``கன்னிவாடியில மதுரை வீரன் நாடகம் இருக்கு கண்ணு. சங்கத்து வேலை கொஞ்சம் இருக்கு. திண்டுக்கல்லுக்குப் போயிட்டு அப்படியே நாடகத்துக்குப் போறேன். நாளைக்குக் காலையில வந்திருவேன். கரியனப் பாத்துக்க...’’ என்றபடி வண்டியைக் கிளப்பினான்.

   நம்பினால் நம்புங்கள், அதன் பிறகு பேயனும் பெரியனுமாகிய அந்தக் கரியன் எப்போதும், எதற்காகவும் குரைக்கவேயில்லை.
   https://www.vikatan.com
  • By நவீனன்
   கண்ணன் - சிறுகதை
       சிறுகதை: ஷான் கருப்பசாமி, ஓவியங்கள்: ஸ்யாம்
    
   லாரி விரைந்து கொண்டிருந்தது. பரமசிவம் வெளியே தலையை நீட்டி புளிச்சென்று வெற்றிலை எச்சிலைத் துப்பினான். அது காற்றில் சாரலாகி மறைந்தது. இருபது வருடங்களாக லாரி ஓட்டுகிறான். இந்தியாவின் எல்லா மூலைகளுக்கும் எல்லாவிதமான சரக்குகளையும் ஏற்றிக் கொண்டு சென்றிருக்கிறான். காதை மறைத்துக் கட்டியிருந்த உருமாலைக் கட்டு குளிருக்குக் கதகதப்பாக இருந்தது. நாக்பூரிலிருந்து கிளம்பி ஒரு மணி நேரம்தான் ஆகியிருந்தது.

   இன்னும் பிலாஸ்பூர் வரை செல்லவேண்டியிருந்தது. பீடி கையிருப்பு வேறு குறைவாக இருந்ததால் இன்னொரு பீடியைப் பற்ற வைக்கும் யோசனையைக் கைவிட்டான். தவிர அவனுக்கு இன்னொரு முக்கியமான வேலை இருந்தது. ஆளரவமற்ற இடம் ஒன்றைத் தேடிப் பிடிக்க வேண்டும். அதற்காகவே தேசிய நெடுஞ்சாலையை விட்டு இவ்வளவு விலகி லாரியை ஓட்டிக்கொண்டிருந்தான். கண்ணில் கடைசி வாகனம் தென்பட்டு அரை மணிநேரம் இருக்கும்.

   பக்கத்தில் நல்ல தூக்கத்தில் இருந்த கண்ணனை ஓரக்கண்ணால் பார்த்தான். முப்பது வயதுக்கு மேல் இருக்கும். களையான கறுப்பு நிறம். ஐந்து நாள்கள் முன்பாக அவனைப் பார்த்த போது லாரி புக்கிங் ஆபீஸ் வாசலில் குத்த வைத்து அமர்ந்திருந்தான். தாடியும் மீசையும் புதர் போல் மண்டியிருந்தன. தலை சிக்கடைந்து கிடந்தது. அவ்வப்போது தலையைச் சொறிந்துகொண்டிருந்தான்.

   “எந்திரிச்சுப் போடா.. யாவாரம் பண்ற எடத்துல வந்து...”

   பரமசிவம் அவனை விரட்டத் தொடங்கிய போது செந்தாமரை இடைமறித்தான். அவன் அங்கே புக்கிங் ஏஜன்ட்.

   “அட தொரத்திப் போடாத... எங்கியாவது ஓடீட்டான்னா எழுவத்தஞ்சாயிரம் நீதாங் குடுக்கோணும்... பாத்துக்க..”

   பரமசிவத்துக்கு உடனே புரிந்தது. இது ஒன்றும் புதிதல்ல. மோட்டார் தொழிலில் நடப்பதுதான். இப்படியான நிலைமையில் இருப்பவர்களை லாரிகளில் ஏற்றிச் சென்று காட்டுப் பகுதிகளிலோ கண்காணாத இடங்களிலோ இறக்கிவிட்டு வரவேண்டும். கணிசமான தொகை கிடைக்கும். லாரி முதலாளியும் ஏஜன்ட்டும் டிரைவரும் பிரித்துக்கொள்வார்கள். பரமசிவம் இதுவரை அப்படி ஒரு காரியத்தில் ஈடுபட்டதில்லை. அது அவன் மனதுக்கு ஒப்பவில்லை. சிலர் கேட்டபோது மறுத்திருக்கிறான். செந்தாமரை எதற்கும் தயங்காத ஆள். எனவே இந்த மாதிரி வேலைகள் அவனைத் தேடி வரும்.

   “யாரோ சித்தப்பங்காரன்னு கூட்டீட்டு வந்தான். நாந்தான் கிருஷ்ணபரமாத்மான்னு சொல்லிட்டுத் திரியறானாமா... இத்தனை நாள் அம்மாகாரி எப்பிடியோ கூட வெச்சுப் பாத்திருக்கறா... போன மாசம் அவளும் போய்ச் சேந்துட்டாளாமா.... நீயா நானான்னு சண்ட போட்டுட்டு சொந்தக்காரங்க எல்லாம் கைக்காசப் போட்டுக் கொண்டாந்து உட்டுட்டுப் போயிட்டானுங்க...”

   “பாத்தா சாதுவாத்தான இருக்கறான்...”

   “அப்பப்ப வெறி வந்து ஆடுவானாம்.. ஒரு மாமங்காரனை வெறகுக் கட்டைல அடிச்சு மண்டையக் கிழிச்சுப் போட்டானாமா... குறுக்க போன அத்தைகாரிக்கும் அடி... ரெண்டு பேரும் ஆஸ்பத்திரியில... போலீஸ்ல கேசு குடுத்தாலும் நிக்காதில்ல.. அதுனாலதான் ஏற்பாட்டுக்கு வந்தாங்க....”

   பரமசிவம் யோசனையாக அவனைப் பார்த்தான். பார்த்தால் அப்படி ஆபத்தானவனாகத் தெரியவில்லை. பூனைபோல் இருந்தான். ஒரு மஞ்சள் பையை இறுகப் பிடித்தபடி அமர்ந்திருந்தான். உள்ளே நீளமான குச்சி போல் ஏதோ இருந்தது. ஏதோ முணுமுணுத்தபடி இருந்தான். இவனைப் பார்த்து சிநேகமாகச் சிரித்தான்.

   “செரி, உனக்கெதுக்கு அதெல்லாம்... நீதான் உத்தமனாச்சே.. இதெல்லாம் பண்ண மாட்டே... லாரி செட்டுல நிக்குது. எடுத்துட்டு லோடு அடிச்சுட்டு வா.. மொதல்ல நாக்பூர் அப்பறம் பிலாஸ்பூர்.. ரிட்டன் அங்க இருந்தே சரக்கு வருது...”

   சாவியை எடுத்துக் கொடுத்தான் செந்தாமரை. வாங்கிக்கொண்டு திரும்பியவன் மனதில் ஒரு போராட்டம். பரமசிவனுக்கு மூன்று தங்கைகள். அப்பா அவனுடைய சிறு வயதிலேயே இறந்துவிட்டார். முதலிரண்டு தங்கைகளுக்கும் இழுத்துப்பிடித்துத் திருமணம் செய்தாகிவிட்டது. மூன்றாவது தங்கையின் திருமணம் தள்ளிப் போயிருந்தது. இடையில் தனது  திருமணத்தைப் பற்றியெல்லாம் யோசிக்கவே நேரமில்லை.  இப்போதுதான் ஒருவழியாக மூன்றாவது தங்கைக்கு வரன் அமைந்திருந்தது. கடன் வாங்க இயலும் இடங்களிலெல்லாம் முன்பே வாங்கியாகிவிட்டது. அம்மாவுக்கும் வர வர உடம்பு முடிவதில்லை. நிறைய மருந்து மாத்திரை செலவுகளும். சற்றுத் தொலைவு நடந்தவன் அப்படியே திரும்பினான். செந்தாமரை டீயை ஊதி ஊதிக் குடித்துக் கொண்டிருந்தான்.

   “நான் வேணா ஏத்தீட்டுப் போவட்டுமா” என்றான் அவனிடம் தயக்கமாக.

   “என்னத்த ஏத்தீட்டுப் போறே.. ” என்றான் செந்தாமரை குழப்பமாக.

   “அதா அவனத்தான்...” என்று பார்வையால் சுட்டினான் பரமசிவம்.

   “இதென்றா அதிசயமா இருக்குது... நீதாம் பண்ண மாட்டயே இதெல்லாம்...”

   பரமசிவம் சில விநாடிகள் தயங்கிவிட்டுச் சொன்னான்.

   “கடசியாளுக்குக் கல்யாணம் வெச்சிருக்குது... கொஞ்சம் நெறயாவே கையக் கடிக்குது... கெளம்பறப்பக் கூட அம்மாகிட்ட ஒரே சண்டை...உங்கிட்ட கேக்கலாம்னுதான் இருந்தேன்... இந்த இருவத்தஞ்சாயிரம் கெடைச்சா வெச்சு சமாளிச்சுப்போடலாம்.”

   “அட என்னப்பா... நான் கணேசங்கிட்ட வேற சொல்லிப்போட்டனே...” என்றான் செந்தாமரை போலி ஏமாற்றத்தோடு.

   பரமசிவம் அமைதியாக நின்றான். செந்தாமரை பலமாக யோசிப்பதுபோல் பாவித்துவிட்டுத் தொடர்ந்தான்.

   “செரி, நீயுந் தெரிஞ்ச ஆளாப் போயிட்ட... நான் ஒண்ணு பண்றேன்... கணேசங்கிட்ட ஒரு அஞ்சாயரத்தைக் குடுத்து சமாளிச்சுக்கறேன்... உனக்கு இரவதாயிரம்... பழக்கமில்லாத ஆளு.. பாத்து செரியாப் பண்ணிருவியா?”

   பரமசிவத்துக்கு அந்த ஐந்தாயிரத்தைச் செந்தாமரைதான் வைத்துக் கொள்வான் என்று தெரியும். ஆனாலும் தலையாட்டினான். இருபதாயிரம் இன்றைய சூழலில் அவனுக்குப் பெரிய பணம்.
   “செரி, நீ போய் வண்டிய லோடு அடிச்சு எடுத்துட்டு வா... நான் இவனுக்குக் கொஞ்சம் சேவு பண்ணிட்டு நல்ல துணிமணி போட்டு வெக்கறேன்... எந்த ரூட்டுல போயி எப்பிடி எறக்கியுடோணும்னும் சொல்லறேன்... அதே மாதிரி பண்ணுனாப் போதும்.”

   பரமசிவம் திரும்பி வந்தபோது கண்ணன் அடையாளம் தெரியாமல் மழுமழுவென்று மாறியிருந் தான். சிரைக்கும்போது திமிறியிருக்க வேண்டும். மேவாயில் ஓரிரு வெட்டுகள் இருந்தன. சுத்தமான பேன்ட் சட்டையில் இருந்தான். அவ்வப்போது வானத்தைப் பார்த்துப் பேசினான்.

   “டேய் கண்ணா.. இங்கே வா” என்று செந்தாமரை அழைத்ததும் அவசரமில்லாமல் திரும்பிப் பார்த்தான். “நீ இங்கே வாடா” என்றான் செந்தாமரையைப் பார்த்து. செந்தாமரையின் முகம் மாறியது. ஆனால் எழுந்து சென்றான். 

   “இங்க பாரு, இவர்தான் பரமசிவம். உன்னைய துவாரகைக்குக் கூட்டீட்டுப் போறாரு... அவரு சொல்றதக் கேட்டுச் சத்தங்கித்தம் போடாம கூடப் போவோணும்... இல்லைன்னா வழீலயே எறக்கி உட்டுருவாரு...”
   “இவர்தான் என் சாரதியா”

   பரமசிவத்தைப் பார்த்து சிரித்தான். அதன் பிறகு பரமசிவம் நடந்தால் நடந்தான். நின்றால் நின்றான். ஒரு நிழலைப்போலத் தொடர்ந்தான். சாப்பிடும் இடங்களில் அமைதியாக சாப்பிட்டான். பெரும்பாலும் பேசவில்லை. இயற்கை உபாதைகளுக்கு மட்டும் சைகை காட்டுவான். ஒரு கட்டத்துக்குப் பிறகு தானே துரத்தினாலும் அவன் ஓடிவிடமாட்டான் என்று பரமசிவத்துக்குப் புரிந்தது.

   லாரியை எடுத்துக் கிளம்பியபோது சுயம்பு கண்ணனைக் கேள்வியாகப் பார்த்தான். அவனுக்கு வயது இருபது. ஐந்து வருடங்களாக பரமசிவத்தின் லாரியில் க்ளீனராக ஓடுகிறான். பத்து நிமிடங்களில் கண்ணனைப் பற்றி அவனுக்குப் புரிந்துபோனது. கொஞ்சம் விவரமான பயல். மூன்று நான்கு மொழிகள் சரளமாகப் பேசுவான்.  அவன் முகம் சுண்டிவிட்டது.

   “பரமண்ணே... இதெல்லாம் நமக்குத் தேவையாண்ணே... பாவம்ணே” என்றான் பதற்றமாக.

   “போடா... அஞ்சாறு பாவ புண்ணியம் பாத்து மயிராச்சு. இவனப் பாரு... இவன் தெக்க இருந்தா என்ன வடக்க இருந்தா என்ன..?”

   “என்னண்ணே... நீயே இப்பிடிப் பேசற... எனக்கு சரியாப் படலைன்னே.”

   “டேய், மூடீட்டு உக்காரு...” என்றான் பரமசிவம் கோபமாக, அதே நேரம் சுயம்புவின் கண்களைத் தவிர்த்தவாறே.


   சுயம்பு சமாதான மாகவில்லை. அப்பாவின் மரணத்தால் பத்தாவது படிப்போடு லாரிப் பட்டறைக்கு வந்தவனுக்குப் பரமசிவம்தான் அடைக்கலம். அவனுக்குப் புத்தகங்களை வாங்கித் தந்து பன்னிரண்டாவது எழுதச் சொன்னான்.

   “எங்கப்பா சாவறப்ப எனக்கு உன் வயசுதான்... உன்ன மாதிரியே குடும்பத்தைக் காப்பாத்த இந்தத் தொழிலுக்கு வந்தேன்... படிப்பு ஏறாதுங்கறது ஒரு பக்கம்... ஆனா நீ கெட்டிக்காரன்டா...  எப்பிடியாவது பன்னண்டு பாஸ் பண்ணீரு.. அப்பறம் தபால்ல டிகிரி படிச்சுக்கலாம். லாரி ஓடறப்ப சும்மாதான இருப்ப.. அப்ப உக்காந்து படி...”

   மற்ற டிரைவர்களெல்லாம் க்ளீனர்களை எப்படி நடத்துகிறார்கள் என்று சுயம்புவுக்குத் தெரியும். தன்னை ஒரு தம்பி போல் நடத்தும் பரமசிவத்தின் மீது கூடுதல் பாசம். அதனாலேயே அவன் இப்படி ஒரு காரியத்தில் ஈடுபடுகிறான் என்றபோது கோபமும் வந்தது.  அமைதியாக இருளில் கடந்து கொண்டிருந்த மரங்களைப் பார்த்தபடி வந்து கொண்டிருந்தான்.

   கண்ணன் இந்த நான்கு நாள்கள் பயணத்தில் எந்தவிதத் தொல்லையும் தரவில்லை. தனியாக ஏதாவது பேசிக் கொண்டிருப்பான். பெரும்பாலும் கீதை வசனங்களாக இருக்கும். பசிக்கும்போது மட்டும் சுயம்புவின் தோளைத் தட்டி வயிற்றைத் தடவுவான். கண்ணன் அசந்திருந்த தருணத்தில் அவனுடைய பையில் என்னதான் வைத்திருக்கிறான் என்று தேடினான் சுயம்பு. ஒரு புல்லாங்குழலும் சில மயிலிறகுகளும் இருந்தன. ஒரு வெண்சங்கு இருந்தது. சுயம்புவிடமிருந்து வெடுக்கென்று பையைப் பிடுங்கிக்கொண்டான் கண்ணன்.

   அன்றைய காலை நேரத்தில் ஒரு ஏரிக்கரையில் குளிப்பதற்காக லாரியை நிறுத்தியிருந்தார்கள். கரையில் சில மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. சுயம்பு லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு வேப்பமரத்தின் குச்சியை ஒடித்து மென்றுகொண்டிருந்தான். திடீரென்று எழுந்த குழலோசைக்குத் திரும்பிப் பார்த்தான். கண்ணன்தான் வாசித்தான். சுயம்புவுக்கு இசை குறித்தெல்லாம் அதிக ஞானம் இல்லை. ஆனால், கண்ணன் வாசித்தது அவன் காதுகளுக்கு அத்தனை இதமாக இருந்தது. மனதை உருக்கும் ஒரு கதையை அவன் தனது புல்லாங்குழலில் சொல்ல முனைவது போலிருந்தது. மாடுகள் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு முனைப்பாக மேய்ந்துகொண்டிருந்தன. சுயம்பு பல்குச்சியை மெல்ல மறந்து கேட்டுக் கொண்டிருந்தான். ஆசுவாசமாக வந்த பரமசிவம் கூச்சலிட்டான்.

   “என்னடா இங்க கச்சேரி மசுரு நடக்குது... நிறுத்தச் சொல்லுடா”

   “ஏனுங்ணா... அருமையா வாசிக்கறான்... கொஞ்ச நேரம் கேக்கலாமே...”

   “மூடீட்டு நிறுத்தச் சொல்லு... ஊலு ஊலுன்னு ஊளையுடறாப்ல”

   கண்ணன் கண் மூடி வாசித்துக்கொண்டிருந்தான். சுயம்பு பழையபடி முரண்டு பிடிக்கும் முகபாவத்துக்கு மாறினான்.  

   “வேணுமுன்னா நீங்களே நிறுத்தச் சொல்லுங்க.. ஒருவேளை இதுக்குத்தான் மாமங்காரன் மண்டைய ஒடச்சானோ என்னுமோ?”

   சொல்லிவிட்டுப் பல் துலக்குவதில் தீவிரமானான் சுயம்பு. ஒரு விநாடி தயங்கிவிட்டு லாரியில் சென்று ஏறிக்கொண்டான் பரமசிவம். அதன் பிறகு மதிய சாப்பாட்டின்போது துவாரகை எப்போது வரும் என்று கண்ணன் கேட்டபோது ராத்திரி போயிடலாம் என்றான் பரமசிவம். பெரும்பாலும் ஒரு புன்னகையுடன் சாலையையும் நகரும் நிலக்காட்சிகளையும் பார்த்தபடி வந்தான் கண்ணன்.

   இப்போது அவனை இறக்கிவிடத்தான் வாகான இடம் தேடிக் கொண்டிருந்தான் பரமசிவம். அவன் நோக்கம் புரிந்த சுயம்புவின் முகம் இறுகிக் கிடந்தது. எப்போதாவது கடக்கும் வாகனங்களின் விளக்கொளியில் கம்பளிக்குள் புதைந்து உறங்கும் கண்ணன் தெரிந்து மறைந்தான். கிசுகிசுப்பாக சுயம்புவிடம் பேசினான் பரமசிவம்.

   “டேய்... நான் நிறுத்தற எடத்துல பாத்ரூம் போறாப்ல எறக்கிக் கூட்டீட்டுப் போ.. நூறடி தள்ளி உட்டுப்போட்டு ஓடியாந்துரு... நான் லாரிய ரன்னிங்லயே வெச்சிருக்கறேன்...”

   “பரமண்ணா... இந்த மாதிரி அத்துவானக் காட்டுக்குள்ள உட்டா அவன் எங்கீங்கண்ணா போவான்.. கொஞ்சமாச்சு மனுச நடமாட்டமிருக்கற பக்கம் எறக்கியுடுவோம்...”

   “மூடீட்டு நான் சொல்றதப் பண்ணீட்டு வா... யாரும் பாக்காம இருக்கறதுதான் நல்லது...”

   சொல்லிவிட்டானே தவிர ஏனோ லாரியை நிறுத்தவில்லை. சில இடங்களில் வேகத்தைக் குறைத்துவிட்டு நிறுத்த மனமின்றி மீண்டும் அதிகரித்தான். அவன் தனக்குள்ளே ஒரு போராட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருப்பது சுயம்புவுக்குப் புரிந்தது.

   “அண்ணா... உங்களுக்கே புடிக்காத ஒரு விஷயத்தை எதுக்குப் பண்ணோணும்.. ஏதாவது இல்லத்துல சேத்தியுட்டரலாம்...”

   சுயம்புவுக்கு அவன் மனதை மாற்றிவிடலாம் என்று லேசான நம்பிக்கை வந்திருந்தது. பரமசிவம் ஏதோ சிந்தனையோடு லாரியின் வேகத்தை அதிகரிப்பதும் குறைப்பதுமாக இருந்தான்.

   “டேய் சுயம்பு...” அவன் குரல் மாறியிருந்தது. லேசான பதற்றம்.

   “என்னங்ணா”

   “பின்னால ஒரு வண்டி வருதுடா.. நான் நின்னா நிக்குது.. நவுந்தா நவுருது...”

   சுயம்பு எட்டிப்பார்த்தான். தூரத்தில் விளக்கொளி தெரிந்தது.

   “ஆமாங்கண்ணா... வண்டில என்ன லோடு?”

   பரமசிவம் நினைவு வந்தவனாகத் தலையில் அடித்துக்கொண்டான்.

   “ஐயோ... சிகரெட்டுடா...”

   வழக்கமாக சிகரெட், எலக்ட்ரானிக்ஸ், மசாலாக்கள் ஏற்றி வரும்போது கவனமாக இருப்பார்கள். தேசிய நெடுஞ்சாலைகளிலிருந்து விலகாமல் பயணிக்க வேண்டும். நாக்பூர் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் லாரியை மடக்கி டிரைவரைக் கொன்றுவிட்டுத் திருடுவது சாதாரணம். இதன் காரணமாகவே குழுவாக இணைந்து செல்வார்கள். இன்று கண்ணனுக்காக நெடுஞ்சாலையிலிருந்து விலகி இத்தனை தூரம் வந்து விட்டிருந்ததால் அந்தக் குளிரிலும் பரமசிவத்தின் முகம் வியர்த்துவிட்டது.

   கியரை ஓசையுடன் மாற்றிப் போட்டு லாரியை வேகமாக ஓட்டத் தொடங்கினான். பின்னால் வந்த வண்டியும் வேகமெடுத்தது. விரட்டிக் கொண்டு வந்தார்கள், அல்லது பரமசிவத்துக்கு அப்படித் தோன்றியது. தலை தெறிக்க ஓட்டத் தொடங்கினான். பின்னால் வந்தது சுமோ போன்ற ஒரு வாகனம். வேகமாக வந்து இவர்களை ஒட்டிக்கொண்டது. பழக்கமில்லாத சாலை, எங்கு செல்கிறோம் என்று தெரியவில்லை. பெயர்ப் பலகைகள் எதுவும் இருளில் தெரியவில்லை. பரமசிவனும் சுயம்புவும் வெலவெலத்துப் போயிருந்தார்கள்.

   அகலமான ஓர் இடத்தில் பின்னால் வந்த வாகனம் முரட்டுத்தனமாக ஒதுங்கி சாலையோரப் புதர்களை நசுக்கிக்கொண்டு முந்திச் சென்றது. அது ஒரு டாடா சுமோ. உள்ளே ஆட்கள் இருந்தார்கள். இப்போது பின்னால் இன்னொரு வாகனம் தெரிந்தது. அவர்கள் ஒரு கூட்டமாக வந்திருப்பது புரிந்தது பரமசிவத்துக்கு.

   “பரமண்ணா... வண்டிய நிறுத்திடலாமாண்ணா... ”

   “கைல கெடச்சா கொன்னு போடுவாங்கடா” அவன் குரல் மெலிதாக நடுங்கியது. முன்னால் சென்ற வாகனம் இவர்களை இடம் வலமாக வளைத்து நிறுத்த முயன்றது. பரமசிவம் வேகத்தைக் குறைப்பதாக இல்லை. சுமோவின் பின்பக்கக் கண்ணாடி திறந்து உள்ளே இருந்து பிரகாசமான விளக்கொளி ஒன்று பரமசிவனின் கண்களில் பாய்ந்தது. பரமசிவம் தடுமாறிப்போனான். ஏதோ ஒன்றைத் தூக்கி இவன் வண்டியின் முன் எறிந்தார்கள். மறுவிநாடி முன்சக்கரம் வெடித்தது போல் உணர்ந்தான் பரமசிவம். லாரியின் வேகம் தானாகவே குறைந்தது. எவ்வளவு முயன்றும் இடது பக்கமாக இழுத்துக்கொண்டு சென்றது. சாலையிலிருந்து இறங்கி மரங்களுக்குள் ஓடியது. அந்தப் பிரகாச வெளிச்சம் பரமசிவத்தின் பார்வையை முழுதாக ஆக்கிரமித்திருந்தது. பலத்த சத்தத்துடன் எதன் மீதோ லாரி மோதியது. பிறகு மொத்தமும் இருண்டு போனது.

   இரண்டு சுமோக்களும் அரைவட்டமடித்துத் திரும்பி வந்தன. உள்ளே இருந்து பத்துப் பதினைந்து பேர் இறங்கினார்கள். முகத்தில் துணி கட்டியிருந்தார்கள். பிரகாசமான டார்ச் ஒன்றை அடித்தார்கள். லாரியின் முன் பகுதி ஒரு மரத்தில் மோதி நொறுங்கியிருந்தது. பரமசிவம் ரத்தம் தோய்ந்து பாதி உடல் வெளியில் தொங்கிக் கொண்டிருந்தான். கண்ணனும் சுயம்புவும் இருந்த இடம் தெரியவில்லை. வந்தவர்கள் எந்த சலனமும் இல்லாமல் லாரியின் பின்புறம் ஏறி தார்ப்பாயைக் கிழித்தார்கள். பத்து நிமிடங்களில் இன்னொரு லாரி வந்தது. பெட்டிகளை அதற்கு மாற்றத் தொடங்கினார்கள். பெரிதாக சத்தம் எழுப்பவில்லை. அந்தப் பகுதி சாலையிலிருந்து கொஞ்சம் உள்வாங்கியிருந்தது. அவர்கள் வேலையில் ஓர் அவசரம் இருந்தது. சொல்லி வைத்தது போல சிகரெட் இருந்த பெட்டிகளை மட்டும் எடுத்துக்கொண்டார்கள். வேறு சில பார்சல்களைக் கிழித்துப் பார்த்துவிட்டு வீசியெறிந்தார்கள். அரை மணி நேரத்தில் தங்களுக்குத் தேவையானவற்றை ஏற்றிக் கொண்டு இவர்கள் லாரியின் மீது சில மரக் கிளைகளை வெட்டிப் போட்டு மறைத்துவிட்டுப் போய்விட்டார்கள்.

   சுயம்பு கேபினுக்குள் கிடந்தான். அவனுக்கு சுய நினைவு வந்தபோது விடிந்து லேசான வெளிச்சம் வந்திருந்தது. முகத்தின் மீது கண்ணாடித் துகள்கள் கிடந்தன.  வாயில் இரும்பின் சுவை. கால்களை அசைக்க முடியவில்லை. தலையைத் தூக்கிப் பார்த்தான். ஒரு பெரிய மரத்தின் மீது மோதி லாரியின் முன்பாகம் நசுங்கியிருந்தது. பரமசிவம் அவன் பேரைச் சொல்லித்தான் கதறிக்கொண்டிருந்தான்.

   “அண்ணா... இங்க இருக்கேன்…”

   “சுயம்பு.. டேய்... தண்ணி தெவைக்குது... தாகமா இருக்குதுடா... செத்துருவேன் போல இருக்குடா... வலிக்குதுடா...”

   சுயம்பு மெள்ள எழ முயன்றான். கண்ணைத் திறக்க முடியாமல் பிசுபிசுவென்று ஒட்டியது ரத்தம். இடது காதுக்கு மேல் ஏதோ தீயாக எரிந்தது. உடலை இழுத்து நகர்த்தி கேபினில் இருந்து குதிக்க முயன்றான். இடது கால் ஏதோ ஓர் உலோகக் குவியலில் சிக்கி நசுங்கியிருந்தது. அசைத்தாலே உயிர் போனது. அவர்கள் இருந்த இடம் சாலையிலிருந்து குரல் கேட்காத, பார்வை படாத தொலைவில். மரங்கள் அடர்ந்திருந்தன. சாலையில் எப்போதாவதுதான் ஒரு வாகனம் சென்று கொண்டிருந்தது.

   சுயம்பு பெருங்குரலில் அலறினான். காப்பாற்றும்படி அவனுக்குத் தெரிந்த அத்தனை மொழிகளிலும் கத்திப் பார்த்தான். பறவைகளின் சப்தமே பதிலாகக் கிடைத்தது. அவனுக்கும் தொண்டை வறண்டுகொண்டே வந்தது.

   எவ்வளவு நேரம் கத்தியிருப்பானென்று தெரியாது. சூரியன் உச்சியை அடைந்திருந்தது. பரமசிவத்திடமிருந்து இப்போது சத்தமில்லை. இறந்திருப்பானோ என்று தோன்றியது. தனக்கும் அதே கதிதான் என்று நினைத்தான் சுயம்பு. மெள்ள நினைவு மயங்கத் தொடங்கியது. கனவில் மனிதக் குரல்கள் கேட்டன. இந்தியில் கட்டளைகள்.

   “உயிர் இருக்கிறது” என்றது ஓர் ஆண் குரல்.

   “டிரைவருக்கும்... ஆனால் அடி அதிகம்... லாரியை இழுத்துதான் வெளியே எடுக்க வேண்டும்... ஆம்புலன்ஸ் வந்துகொண்டிருக்கிறது... போலீசுக்கும் சொல்லிவிட்டோம்” இது மற்றொரு ஆண் குரல்.

   “ரோட்டுல சங்கு ஊதி நம்மை நிறுத்தினானே, ஒருத்தன் அவன் எங்கே... அவனுக்கும் உடம்பெல்லாம் காயம் இருந்தது...”  இது ஒரு பெண் குரல்.

   “இங்கதான் இருப்பான்... ஆனா அவனுக்குப் பெரிய காயம் எதுவும் இல்லை...” மறுபடி முதல் ஆண் குரல்.

   சுயம்புவுக்கு யாரோ லாரிக்குள் ஏறி தண்ணீர் கொடுத்தார்கள். மறுபடி நினைவு வந்தபோது இடதுகாலில் உயிர் போகும் வலி. தன்னை ஒரு ஆம்புலன்ஸில் படுக்க வைத்திருப்பதை உணர்ந்தான். சுற்றிலும் இருந்த மரங்கள் இன்னும் அதே வனப்பகுதியில்தான் இருப்பதை அவனுக்கு உணர்த்தின. வெகு அருகில் சிறு இயந்திரங்கள் இயங்கும் சத்தம் கேட்டது. மனிதர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

   நீண்ட நெடிய அரை மணி நேரத்துக்குப் பிறகு இன்னொரு ஸ்ட்ரெச்சரில் பரமசிவம் அவனுக்கு அருகில் வந்து சேர்ந்தான். கண்கள் மூடியிருந்தன. வயிறு சீராக ஏறித் தாழ்ந்தது.

   “கவலைப்படாதே... உனக்குக் காலில் ஒரு ஃப்ராக்சர்தான்... அவருக்குதான் நிறைய டேமேஜ்... ஆபத்தில்லை.. வலி தாங்க செடேட் பண்ணியிருக்கோம்... பொழைச்சுக்குவார்... ஆனா நடக்க ரொம்ப நாளாகும். உங்க கூட இன்னொருத்தர் இருந்தாரா?”

   சுயம்பு தலையாட்டினான்.

   “தேடிட்டிருக்காங்க... ஆனா யாரையும் பக்கத்துல காணோம்...” என்றான் வெள்ளுடை அணிந்த ஒரு வட இந்தியன். பட் பட்டென்று டிரைவர் கேபினின் பின்பகுதியில் தட்ட ஆம்புலன்ஸ் அவசரமாக நகர்ந்தது.
   இருளைக் கிழித்துக்கொண்டு எங்கிருந்தோ புல்லாங்குழல் ஒலிக்கத் தொடங்கியது. சுயம்பு விம்மி விம்மி அழத்தொடங்கினான்.
   https://www.vikatan.com
  • By நவீனன்
   யாமினி அம்மா - சிறுகதை
   போகன் சங்கர், ஓவியங்கள்: ஸ்யாம்
    
   அந்த இடத்துக்கு அவர்கள் எப்படி வந்து சேர்ந்தார்கள் என்று தெரியவில்லை. ஏன் வந்து சேர்ந்தார்கள் என்பதும் சரியாகத் தெரியவில்லை. எதனிடம் இருந்தோ தப்பித்து வந்திருக்கிறார்கள். நான் அவர்களிடம் எதற்குப் போய்ச் சேர்ந்தேன், எப்படிப் போய்ச் சேர்ந்தேன் என்பதற்கும் அதே காரணம்தான். எதனிடம் இருந்தோ தப்பித்துக்கொள்ள...
   ''இந்த ஊர்ல தங்க, ஒரு இடம் கிடைக்குமா?'' என்றதற்கு ஒரு கணம், அங்கிருந்த ஒரே டீக்கடையில் நெடுநேரம் மௌனம் நிலவியது.
   கடைசியாக ''ஏன் இங்கே  தங்கணும்?'' என்றார் ஒருவர் சற்றே விரோதமாக.
   நான் தயங்கி, ''நான் ஒரு எழுத்துக்காரன்'' என்றேன்.
   யாரும் பேசாது இருந்தார்கள். நெய்யாறு புழையின் ஈரக் காற்று ஒரு மாதிரி இரும்பு வீச்சத்துடன் மேலே மோதியது. தூரத்தில் ரட்ரட்டென்ற சத்தத்துடன் சிறிய இன்ஜின் பொருத்திய படகுகளில் மாணவிகள் சீருடைகளுடன் வந்துகொண்டு இருந்தனர். நான் டீயை வைத்துவிட்டு எழுந்தேன்.
   ''அந்த சிறீதரன் வீட்டு மாடியைக் கேட்கலாம்!'' என்று ஒருவர் சொன்னார்.
   ''பாவம்... அவ கைச்செலவுக்கு ஆகும்.''
   'யாமினி போட்டோ ஸ்டுடியோ’வின் மாடியில் நான் இப்படித்தான் குடிவந்து சேர்ந்தேன்.

   யாமினி, அந்த வீட்டின் பெண் குழந்தை. சிறீதரன், அவளின் அப்பா இல்லை என்று பின்னால் தெரிந்தது. உண்மையில் நான் தங்க நேர்ந்ததுதான் ஸ்டுடியோ. ஆனால், அது எப்போதாவது அதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்குமா என்பது சந்தேகம் தரும்படி இருந்தது. அந்த ஊரில் யார் புகைப்படம் எடுத்துக்கொள்ளப்போகிறார்கள்?
   இரட்டை மரக்கால்களில் கவட்டையை விரித்து நிற்கும் விநோதப் பூச்சி போல பழைய கேமிரா ஒன்று. அதன் மீது தூசு படிந்த ஒரு கறுப்புப் போர்வை. பின்னால் கிச்சன்போல் இருந்த அறையைத்தான் இருட்டு அறையாக சிறீதரன் உபயோகப்படுத்த உத்தேசித்து இருந்தான் என்பது தெரிந்தது. மரத்தளம் முழுவதும், சிந்திக்கிடந்த டெவலப்பரின் கறைகள். ஜன்னலை இறுகப் பூட்டிவைத்திருக்க, நான் அதைத் திறக்க முயன்றபோது யாமினி, ''பூச்சி வரும் அங்கிள்...'' என்றாள்.
   யாமினிக்கு லேசாகப் பூனைக் கண்கள். சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழுந்தது. ஆனால், போஷாக்குக் குறையின் காரணமாக ஒட்டிய கன்னங்கள். சிறுத்து நீண்ட கைகள். அவள் எப்போதும் அணிந்திருக்கும் பினஃபோரில் நூல்கள் பிய்ந்து காற்றில் அலைந்துகொண்டு இருந்தன. உற்றுக் கவனித்தால் அவள் உடல் எப்போதும் மெலிதாக நடுங்கிக்கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
   யாமினியின் அம்மா பெயரை நான் ஒருபோதும் அறிந்தது இல்லை. அவள் எனக்கு மட்டுமல்ல, நாட்டுக்காரர்களுக்கும் 'யாமினியம்மா’தான். அவள் முதலில் நான் தங்கிக்கொள்ள அனுமதி அளிக்கவில்லை. ''முடியாது'' என்று சொல்லிவிட்டு முற்றத்தைப் பெருக்க ஆரம்பித்துவிட்டாள். அவள் தலைமுடியில் எண்ணெய்ப்பசையே இல்லை என்பதைக் கவனித்தேன். காய்ச்சலில் விழுந்தவள்போல் இருந்தாள். ஆனால், அழகி என்பது அவள் நகரும்போது தெரிந்தது.  குனியும்போது, சட்டென்று நினைவு வந்தாற்போல் முண்டின் மீது துண்டை இழுத்துக்கொண்டாள். அப்போது அவள் முகத்தில் செம்மை படர்ந்தது.
   ''முடியாதுனு பறஞ்சதல்லோ?'' - அவள், என் கண்களைப் பார்க்கவே இல்லை என்பதைக் கவனித்தேன். அவற்றை என்னைப் பார்க்க வைத்துவிட்டால், ஒருவேளை அவள் சம்மதித்து விடலாம் என்று தோன்றியது. யாமினிதான்  நிமிர்ந்து கண்கள் கூச என்னைப் பார்த்தாள். நான் அவளைப் பார்த்தபடி  ''பணம் தர்றேன்'' என்றேன்.
   அவள் கையில் பெருக்குமாறுடன் கொஞ்ச நேரம் அப்படியே தூரப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள். பிறகு மெல்லிய குரலில், ''எத்தனை தரும்?''
   சிறீதரன் எப்போது வருவான் போவான் என்று யாருக்கும் தெரியவில்லை. அவன் ஒரு குடிகாரன் என்று டீக்கடைக்காரர் சொன்னார்.
   ''இந்தக் குட்டி அவன்கிட்டே எப்படியோ மாட்டிக்கிட்டுது'' என்றார்.
   ''வட கேரளத்துல எங்கோ நல்ல தரவாட்டுக் குட்டினு தோணுது. வர்றப்போ ஒரு சூரியப் பிரபை போல இங்கே வந்தா. பின்னே தொடங்குச்சு அடியும் பிடியும்...''
   பிறகு, அவர் என்னைக் கூர்ந்து பார்த்து ''பின்னே ஒரு காரியம். தனிச்சப் பொண்ணுனு உங்க பாண்டித்தனத்தைக் காட்ட வேண்டா.அப்படி சேட்டை பண்ணின இவிடத்து சட்டாம்பி ஒருத்தனைக் கைக்கத்தியால அறுத்து எறிஞ்சிட்டா!''
   யாமினி, நெட்டாவில் இருந்த கிறிஸ்துவப் பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தாள். புழுதி ஒரு போர்வைபோல கிடக்கும் சாலையில் ஏறக்குறைய இரண்டு கிலோமீட்டர் நடந்து போய்வருவாள். கேரளத்துக்கும் தமிழகத்துக்கும் நடுவே சட்டவிரோதமாக மரம், மணல் பிற விஷயங்களைக் கடத்தும் லாரிகள் பிசாசுத் தனமாக விரையும் பாதை அது. மழை பெய்யும் தினங்களில் அந்தச் சாலை வெள்ளத்தில் மிதக்கும். கேரளம், தமிழகம் இரண்டாலும் கைவிடப்பட்ட ஒரு முனை.
   எனக்கு இரவுச் சாப்பாடு ஒரு பிரச்னையாக இருந்தது. டீக்கடை நாயரிடம் காலை தோசை சாப்பிடுவேன். சிலநேரம் புட்டும் பயறும். மதியம் நெட்டாவில் ரப்பர் வாரிய ஆபீஸுக்கு எதிரே ஒரு கடையில் சோறும் ஆற்று மீனும் கிடைக்கும். இரவு என்பது அந்த இடத்தில் தனித்து இருப்பவருக்கான இடம் அல்ல. நெடுமங்காடு ரோடு வரை சில நேரம் போகவேண்டியிருக்கும்.
   ஒருநாள் அப்படிப் போய்விட்டு, ஒரு லாரியில் நடு இரவில் திரும்பிவந்தேன். மாடிப்படியில் கால் வைத்ததும் கீழே விளக்கு போடப்பட்டது.
   ''ஆரு?'
   நான் தயங்கி, ''நான்தான் சாப்பிட நெடுமங்காடு ரோடு வரைக்குப் போய்வந்தேன்!''
   வெளிச்சம், சற்று நேரம் மௌனமாக இருந்தது. பிறகு அணைக்கப்பட்டது.
   மறுநாள் காலையில், நான் எழுந்து வெளியில் போனபோது வாசலில் யாமினியின் அம்மா கொடியில் துணிகளை உலர்த்திக்கொண்டி ருந்தாள். அவளைக் கடக்கும்போது முகம் பார்க்காமல், ''இனி ராத்திரி வெளியே போ வேண்டாம்'' என்றாள்.
   ''சக்கரம் கொடுத்தா, கொஞ்சம் கஞ்சியும் கிழங்கும் பப்படமும் வைப்பேன்...''
   அவ்விதமே அது முடிவாயிற்று. ஆனால், இதில் ஒரு சிரமம் இருந்தது. எனக்கு மாலையில் நிறைய நேரம் இருந்தது. ''மலைப் பகுதிகளில் இரவுகள் மிக நீளமானவை. துணையாக மதுவோ, மங்கையோ இல்லாதவருக்கு, அது பாவியின் நரகம்போல நீண்டுகொண்டே போகும்'' என்று டீக்கடைக்காரர் சொன்னார்.தவிரவும் பல நேரங்களில் மின்சாரம் இருக்காது.  
   நான், மாடியின் வெளி வராண்டாவில் ஒரு உடைந்த நாற்காலியைப் போட்டுக்கொண்டு, தூரத்தில் புழையில் அலையும் வெளிச்சப் புள்ளிகளைப் பார்த்தவண்ணமே இருப்பேன். கீழே அவ்வப்போது யாமினி படிக்கும் சத்தம் அல்லது பாதரசத் திட்டுகள் போல அவள் அம்மா சிந்தும் சிறுசிறு பாத்திரச் சத்தங்கள் கேட்டபடியே இருக்கும்.
   ஒருநாள் யாமினியின் அம்மா பாடினாள். நான் அந்தப் பாட்டைக் கேட்டது இல்லை. அது ஓர் இடைக்கால மலையாளச் சினிமாப் பாட்டு.
   ''அ ராத்திரி மாஞ்சு போயி...
   ஒரு ரத்த சோகமாய்..'' - அப்போது அவள் குரல் எப்படி நடுங்கியது என்று நான் நினைத்துக்கொண்டேன்.
   ''ஆயிரம் கினாக்களும் போயி மறைஞ்சு...''
   எம்.டி.வாசுதேவன் நாயரின் கதையில் ஹரிஹரன் இயக்கத்தில் வந்த ஒரு படம். நான் அந்தப் படத்தை திரிச்சூரில் ஒரு தியேட்டரில் பார்த்தேன். அந்தப் படத்தை என்னுடன் பார்த்த பெண் தூக்கு மாட்டி, பிறகு செத்துப்போனாள். எனக்குச் சட்டென்று அந்தப் பாடலைக் கேட்டதும் படத்தில் நடித்த நடிகையின் முகம் நினைவுக்கு வந்தது. மிக அழகான பெண். அவளே பின்னால், நீலப் படங்களில் எல்லாம் நடிக்க நேர்ந்தது ஒரு துயரம். ஒரு சாயலில் யாமினியின் அம்மாவுக்கு அந்த நடிகையின் சாயல் இருக்கிறதாக எனக்கொரு மயக்கம் தோன்றியது.
   பாட்டு முடிந்ததும், சட்டென்று அந்த இடத்தை ஒரு பெரிய மௌனம் சூழ்ந்துகொண்டது. அதைத் தாங்க முடியாதது போல இரவுப் பூச்சிகள் கூட்டமாக இரைய ஆரம்பித்தன. பின்னர் அவையும் நின்று தொலைவில் நீர் தளும்பும் ஓசை மட்டும் 'மெதுக் மெதுக்’ என்று கேட்டுக்கொண்டிருந்தது. நான் அவ்விதமே தூங்கிவிட்டேன்.
   மறுநாள் ஏனோ என்னால் எழுந்திருக்க முடியவில்லை. கீழே யாமினி பள்ளி கிளம்பும் சத்தம் கேட்டது. பிறகு நிசப்தம். சற்று நேரத்தில் யாமினியின் அம்மா வீட்டுக்குள் நடமாடும் சத்தம், நதியில் துடுப்பு போடும் சத்தம் போல கேட்டது. அவள் வீடு ஒரு சிறிய நதி. அதனுள் இங்கும் அங்கும் அலையும் படகு அவள் என்று நான் நினைத்தேன். சற்று நேரம் கழித்து அவள் உடலை ஆடைகள் உரசும் சத்தம். அவளது இறுகிய தொடைகள் அவள் உடுத்தியிருக்கும் ஒற்றை வேஷ்டிக்குள் நகரும் சத்தம் என்றும்  தோன்றிற்று. புன்னகைத்துக் கொண்டேன்.
   அவள் 10 மணிக்கு மேல் பக்கத்தில் இருக்கும் அண்டி ஆபீஸுக்கு வேலைக்குப் போவாள்.   2 மணிக்கு வருவாள். நான் நாளை அந்த அண்டி ஆபீஸில் வேலை கேட்டுப் போகலாம் என்று நினைத்தேன். பகலில் சும்மா இருப்பது இரவில் துயரத்தை அதிகரிக்கிறது. ஆனால், நாளை. இன்று போக முடியாது. ஏனோ உடல் ரொம்ப வலிக்கிறது.
   விழித்தபோது, வெயில் வீட்டின் மறுபக்கத்துக்கு வந்திருந்தது. யாரோ வாசலில் கதவுக்கு அப்பால் நிற்பதுபோல் இருந்தது. மூச்சுக் காற்று; நிழல்; நான் படுக்கையில் இருந்தவாறே அதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். என் பிரமை என நினைத்துக் கண் மூடப் போகும்போது, ''என்னாச்சு... புறத்தப் போகலியா?'' - யாமினி யின் அம்மா!
   ''கொஞ்சம் பனிபோல இருக்கு. ராத்திரி ரொம்ப நேரம் பனியில உட்கார்ந்திருந்தது...''
   ''இது விஷப் பனியாக்கும். உட்காரக் கூடாது!''
   ''நேத்து நீங்க பாடினீங்க..?'' என்றேன் நான்.
   நிழல் அசையாது இருந்தது. பிறகு ஒன்றும் பேசாமல் கீழே போனது. கொஞ்ச நேரம் கல்போல இறுகிய மௌனம். ஒரு ஈ, ஈஈஈஈஈவென்று கத்திக் கத்தி அதை உடைக்க  முயன்று தோற்றுப்போய்விட்டது.
   மீண்டும் விழித்தபோது என் அருகில் யாமினி நின்றிருந்தாள்.
   ''அங்கிள் இதைச் சாப்பிடுங்க!''
   அவள் கையில் பாத்திரம் நிறைய சூடு கஞ்சியும் மரவள்ளிக்கிழங்கு பப்படமும் இருந்தன. ''இதைக் குடிச்சப்புறம் கட்டன் சாயா தரலாம்னு அம்மா சொன்னா...''
   நான் அவள் கன்னத்தை வருடி, ''உங்க அம்மா பேர் என்ன?'
   அவள் கன்னத்தில் நண்டுகள் ஆற்று மணலில் உருவாக்குவது போல குழிகள் தோன்ற,
   ''அம்மாவோட பேரு... அம்மாதன்னே..!'' என்று சிரித்தாள்.
   எனக்கு மூன்று நாட்கள் காய்ச்சல் இருந்தது. இரண்டாவது நாள் கஞ்சியோடு வருகையில் யாமினி, ''அம்மா, உங்ககிட்டே கொஞ்சம் காசு கேட்டா...'' என்றாள். நான் 100 ரூபாய் எடுத்துக் கொடுத்தேன்.
   காய்ச்சல் கழிந்து இறங்கிய அன்று யாமினியம்மா வழக்கம்போல துணி உலர்த்திக்கொண்டுஇருந்தாள். நான் நின்று, ''தேங்க்ஸ்...'' என்றேன். அவள் கேட்காததுபோல தொடர்ந்து துணியை விரித்துக்கொண்டிருந்தாள்.
   பிறகு தயங்கி, ''உங்க அண்டி ஆபீஸ்ல எனக்கு எதுவும் வேலை கிடைக்குமா?'
   அவள் பேசவில்லை.
   அன்று இரவு யாமினி கஞ்சியுடன் மேலே ஏறி வந்தாள். வந்தவள், ''அங்கிள் நீங்க கதை எழுதறவரா?'' என்று கேட்டாள்.
   அப்படித்தான் யாமினிக்கு நான் கதை சொல்ல ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் அவளுக்குச் சொல்ல ஆரம்பித்த கதை, எனக்கு நானே சொல்லக்கூடியதாகவும் ஆகிப்போனது; பின்னர் யாமினியின் அம்மாவுக்கும். நான் சொல்லும் கதைகளை அவளது அம்மாவும் கூர்ந்து கேட்கிறாள் என்பதை நான் மெள்ளப் பின்னர் உணர்ந்தேன். பாதியில் உறங்கிவிடும் யாமினியைத் தூக்கிக்கொண்டு போய்விடும்போது எல்லாம், அவளிடம் இருந்து ஒரு நீண்ட பெருமூச்சை கதவின் பின்னால் இருந்து உணர்ந்திருக்கிறேன்.
   ஒருதடவை யாமினி, ''நீங்க நேத்திய கதையை முடிக்க வேணாம்னு அம்மா சொல்லச் சொன்னா. அது ரொம்ப அழுகையா இருக்காம்!'' - அது ஆலிவர் ட்விஸ்ட்டின் கதை.
   யாமினிக்குப் புராணக் கதைகளைப் பிடித்திருந்தது. நிறைய ராட்சஸர்கள் வரும் கதை. ஆனால், அவர்களை அழிக்கக் கூடாது; புத்திசொல்லி விட்டுவிடவேண்டும் என்று ஒருநாள் சொன்னாள்.
   ''அப்பாவை 'ராட்சஸன்’ என்று அம்மா சொல்வா...''
   அவள் 'அப்பா’ என்று யாரைச் சொல்கிறாள் என்று எனக்குக் குழப்பமாக இருந்தது; கேட்கவில்லை.
   எனக்கு அண்டி ஆபீஸில் வேலை கிடைத்தது; யாமினியின் அம்மா சொல்லித்தான். கணக்கு வேலை. ஒவ்வொருத்தர் தொலி உரிக்கிற அண்டிப் பருப்புகளின் அளவையும் கணக்கு வைக்கிற வேலை. பெரிய வேலை இல்லை; பெரிய சம்பளம் இல்லை. ஆனால், ஒரு வேலை. வேலை இல்லாவிடில் நம் உடல் துருப்பிடிக்கிற ஓசை நமக்கே கேட்கிறது.
   ஒரு சனிக்கிழமை யாமினியை அழைத்துக் கொண்டு நான் நெடுமங்காடு போனேன். ஓணம் நெருங்கி வந்துகொண்டிருந்தது. அவளது பினஃபோர்கள் முற்றிலும் தூர்ந்துபோய்விட்டன. அவளுக்கு சில செட் பாவாடைச் சட்டைகளும் பின்னர் யோசித்து யாமினியின் அம்மாவுக்கு ஒரு கசவுப் புடைவையும் வாங்கினேன். தங்கக் கரையிட்ட அந்தப் புடைவையில், தலைக்கு நன்றாக எண்ணெய்ப் பூசி, நெற்றிக்கு ஒரு சந்தனக் குறியும் அணிந்து வந்தால், அவள் மிக அழகாக இருப்பாள் எனத் தோன்றியது.
   ''இது அம்மைக்கு'' என்று யாமினியிடம் சொல்லிக் கொடுத்தேன். அன்று இரவு மிக ஆழமாக உறங்கினேன். உண்மையில் நெடுநாட்களுக்குப் பிறகு நான் எனது சொந்தத் துயரங்களை எல்லாம் மறந்து, முகத்தில் புன்னகை ஒரு வண்டல் போலத் தேங்கத் தூங்கிய இரவு அது. ஆனால், எல்லாம் காலை வரும் வரைதான்!
   காலை கதவைத் திறக்கும்போது கதவையொட்டி நான் கொடுத்த புடைவைப் பொதி இருந்தது. நான் மிகச் சோர்வையும் தன்னிரக்கத்தையும் உணர்ந்தேன். திடீரென்று நான் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்றொரு கேள்வி எழுந்தது. இந்த இடத்தைவிட்டுப் போய்விடவேண்டும் என்று தோன்றிவிட்டது. இன்று இரவு நான் இங்குத் தங்கக் கூடாது. அன்று நான் கீழே இறங்கி வரவில்லை; வேலைக்குப் போகவும் இல்லை. மாடியில் இருந்து யாமினியின் அம்மா வழக்கம்போல வேலைக்குப் போவதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அவள் மேல் ஏனோ கடும் சினம் எழுந்தது. முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.
   பிறகு, தோள் பையை எடுத்து எனது துணிகளை அதில் அடைத்தேன். சில நூறு ரூபாய்களை ஒரு பேப்பரில் சுற்றி அவள் வீட்டுக் கதவின் கீழ் வைத்துத் தள்ளினேன். ஒரு கணம் 'போகிறேன்...’ என்று ஒரு குறிப்பு எழுதிவைக்க யோசித்துத் தவிர்த்தேன். எதற்கு? அவள் அதைப் பொருட்படுத்தப் போவதே இல்லை. பையை எடுத்துக்கொண்டு ஆலமரங்கள் ஊடே வெயில் தூண்கள் போல இறங்கும் சாலையில் நடந்தேன். அங்கே போனால் அருமனைக்கு பஸ் கிடைக்கும்.
   மனம் வெகு மௌனமாக இருந்தது. அதே சமயம் புறத்தே எதையும் கவனிக்கவும் இல்லை. ரொம்ப ஆழ இறங்கிவிட்ட கிணற்று நீர் போலாகிவிட்டது போதம். ஆகவே, என் முன்னால் தட்டென்று வந்து நின்ற மோட்டார் சைக்கிளை முதலில் நான் கவனிக்கவில்லை. அதன் பின்னால் இருந்து ஒரு கன்னியாஸ்திரி வேகமாகக் குதித்தாள். நான் அவள் கால்களைக் கவனித்தேன். அவள் காலெல்லாம் ஏன் சேறாக இருக்கிறது?
   ''நிங்கள்தன்னே யாமினியொட அச்சன்?''
   நான் அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், ''ஏன்?' என்றேன்
   ''ஒரு சிறிய பிரஸ்னம். யாமினிக்கு ஒரு ஆக்சிடெண்ட் ஆயி'' என்றாள் அவள்.
   நான் அஞ்சியது நிகழ்ந்துவிட்டது. யாமினி, ஒரு லாரிக்குள் விழுந்துவிட்டாள். துரத்தி வரும் தாசில்தாரிடம் இருந்து பறந்து வந்த ஒரு மணல் லாரி, அவள் கால் மீது ஏறிவிட்டது.
   பாதிரியாரின் காரில் நாங்கள் அவளை காரக்கோணம் மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டுபோனோம். அவள் முற்றிலும் மயங்கி இருந்தாள். அவளது அம்மாவின் மடியில் தூங்குவதுபோல கிடந்த அவளை யாராவது கூப்பிட்டுக்கொண்டே இருந்தார்கள். அவள் எதற்கும் பதில் சொல்லவே இல்லை. அவள் வலது கால் இருந்த இடம் ரத்தச் சகதியாக இருந்தது. அதன் மீது போத்தியிருந்த துணி சிவந்துகொண்டே இருந்தது. அவள், நான் வாங்கிக்கொடுத்த புதிய பினஃபோரில் இருந்தாள்.
   வளர்த்த எதுவும் இல்லை. அவள் காரக்கோணம் போவதற்கு முன்பே அதிக ரத்தச் சேதம் காரணமாக இறந்துபோனாள். அவளை வீட்டுக்கு அதே காரில் திரும்பக் கொண்டுவந்து, சற்று தூரத்தில் ரப்பர் மரங்களிடையே எரித்தோம். அந்தச் சிறிய ஊரின் மொத்த ஆணும் பெண்ணும், அந்த மாலை அங்கு இருந்தார்கள். எல்லோரும் யாமினியின் அம்மாவிடம் பேசிக்கொண்டே இருந்தார்கள். அவள் யாரிடமும் பேசவே இல்லை. அவள் கண்களைப் பார்த்தால் பயமாக இருந்தது.
   ''நீ அவளைக் கொஞ்சம் கவனிச்சுக்கணும்...'' என்றார் டீக்கடைக்காரர்.
   அன்று இரவு முழுவதும் தொலைவில் யாமினியின் உடல் பொலிந்து பொலிந்து எரிந்து அணைவதைப் பார்த்தபடியே, அவள் வீட்டின் முன்னால் அமர்ந்திருந்தேன். எரிபூச்சிகள், ஒரு பெரிய மேகம் போல எழுந்து வீட்டின் மீது  இங்கும் அங்கும் அலைந்துகொண்டு இருந்தன. நான் அப்படியொரு காட்சியை முன்பு கண்டதே இல்லை. வீட்டின் உள்ளே எந்தச் சத்தமும் இல்லை. ஒருமுறை எழுந்து கதவுக்கு அருகில் போய் காதை வைத்துக் கேட்டேன். தள்ளிப் பார்த்தேன். இடைவெளி வழியாகக் கண்ணை இடுக்கிப் பார்த்தேன்.
   உள்ளே நடு அறையில் யாமினியின் அம்மா அமர்ந்திருந்தாள். மேலே தொங்கும் ஒற்றை பல்பின் வெளிச்சம் அவள் தலை மேலே, ஒரு தங்க வட்டம் போல சிதறிக்கொண்டிருந்தது. அவள் எதையோ படித்துக்கொண்டிருந்தாள். எதைப் படிக்கிறாள்? நான் திரும்பி வந்து நாற்காலியில் அமர்ந்துகொண்டேன். சட்டென்று எனக்கு விளங்கியது. அது யாமினியின் பாடப்புத்தகம்.
   நான் இன்னவென்று தெரியாத பதற்றத்துடன் அங்கேயே வெகுநேரம் கால்கள் நடுங்க அமர்ந்திருந்தேன். ஒருகட்டத்தில் சட்டென்று தாங்க முடியாது உடைந்துவிட்டது போல போதம் இளகியது. 'இனி என்ன?’ என்பது போன்ற ஒரு சோர்வு எழுந்து மனதை மூடியது.
   எத்தனை மணிக்கு மாடிக்கு ஏறிப் போனேன்? எப்போது தூங்கினேன்? எதனால் விழித்தேன்?... என்பது தெரியாது. மார்பில் எதுவோ கனமான ஓர் உணர்வு. யாமினியின் அம்மா! அவள் கண்ணீர் என் மார்பின் மீது அருவியாகச் சொட்டிக்கொண்டிருந்தன. அவள் உடல் முழுவதும் வெட்டி வெட்டி அதிர்ந்துகொண்டே இருந்தன. அவள் முதுகு, பாம்பின் படம் போல சுருங்கி விரிந்து சுருங்கி விரிந்துகொண்டிருந்தது. நான் அவள் முகத்தை நிமிர்த்த அவள் நீண்ட ஒரு கேவலுடன் என்னைக் கட்டிக்கொண்டாள்.
   ''எண்டப் பொன்னு மோள் யாமினியே''  என்றவள் பெருங்குரல் எடுத்து அழத் தொடங்கினாள்!
   https://www.vikatan.com
  • By நவீனன்
   ஆனந்தி வீட்டு தேநீர்! - சிறுகதை
   நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... வா.மு.கோமு, ஓவியங்கள்: ஸ்யாம்
    
      சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தினுள் சாய்வு இருக்கையில் 10 நிமிடங்களாக அமர்ந்து, எதிரில் தெரிந்த பெரிய மானிட்டரையே வெறித்துப் பார்த்தபடி இருந்தான் முருகேசன்.
   எந்தெந்த ஊர்களுக்குச் செல்லும் ரயில்கள், எந்தெந்த நேரத்தில் கிளம்பும் என்ற தகவல்கள், அங்கு இருந்த தகவல் பலகையில் நிதானமாக ஓடிக்கொண்டிருந்தன. பலத்த இரைச்சலுக்கு இடையிலும் இவன் காதினுள் தேனை ஊற்றுவது போல் ஒரு பெண்ணின் குரல், 'பயணிகளின் கனிவான கவனத்துக்கு’ என்று ஆரம்பித்து ஊற்றியது.
   எப்போதுமே பரபரப்பாக இருக்கும் இடம் என்பதுபோல, பயணிகள் வருவதும் போவதுமாகவே இருந்தனர். யாரும் ஒரு கிடையில் அமர நேரம் இல்லாதவர்கள் போலவே தென்பட்டார்கள்.
   பயணக் களைப்பில் தன் தோளில் சுமக்க முடியாமல் புளி மூட்டை போன்ற பேக் ஒன்றைச் சுமந்து தள்ளாடி வந்த ஜீன்ஸ் அணிந்த யுவதி, தன் அம்மாவைத் திரும்பிப் பார்த்து, ''மம்மி ப்ளீஸ்..!'' என்றாள். யுவதியின் அம்மாவோ இரண்டு தோளிலும் பேக்கைச் சுமந்தபடி மூச்சு வாங்க வந்துகொண்டிருந்தாள். முருகேசன், தன் கால் சந்தில் வைத்த இரண்டு புளிமூட்டைகளும் களவு போய்விட்டதோ என்று குனிந்து பார்த்து நிம்மதியானான்.
   சென்னையில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்புவது என்பது, அங்கு பணி நிமித்தமாகப் பல மாதங்கள் தங்கி இருந்தோருக்கு எவ்வளவு பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கும் என்பதை எழுத்தில் காட்டிவிடுவது முடியாத சமாசாரம். இமயம் அளவு, வானம் அளவு என்று 99 வாட்டி சொல்லிவிட்டார்கள். புதிதாக என்றால், முருகேசனின் பல மாத ஆபீஸ் டென்ஷன்களையும், பெற்றோரை நேரில் காணாத வருத்தத்தையும் நேற்று மாலை கழுகு ஒன்று கொத்திப்போய்விட்டது என்று சொல்லலாம்.

   முருகேசனின் சொந்த ஊர் ஈரோட்டுக்குப் பக்கத்தில் சென்னிமலை. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரனும் இருப்பான் என்பதுபோல சென்னிமலையிலும் குமரன் வீற்றிருந்தான். சென்னிமலையில் தயிர் புளிக்காது என்பது ஐதீகம். ஊர் முழுதும் ஜன நடமாட்டத்துக்கு இணையாக குரங்குகள் நடமாட்டமும் இருக்கும். தவிர, மூன்று திரை அரங்குகள். தினமும் நான்கு காட்சிகள் ஓடிய காலம் போய், இப்போது ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் ஊர் முழுக்க போஸ்டர் மட்டுமே தின்று வளர்ந்த ஆடுகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டன.
   கொமரப்பா செங்குந்தர் பள்ளியில் உயர் கல்வி கற்று, ஈரோடு வாசவி கல்லூரியில் வேதியியல் துறையில் பட்டம் பெற்றவன். ஊருக்குள் இவன் நண்பர்களைப் போலவே பைசா பிரச்னையால் தறி குடோனுக்குச் செல்ல முயற்சித்தான். இவன் அப்பா வாசற்படியில் வெள்ளைத் துண்டு போட்டு, தாண்டிப் போனால் சுத்தப்படாது என்று தடை போட்டார். அதற்கு, சின்ன வயதில் இருந்தே அப்பாவின் சொல்பேச்சு என்ற வெள்ளைத் துண்டுக்கு மதிப்பு கொடுத்து வந்த முருகேசன், நேஷனல் ஜியோகிராபியில் புலி, சிங்கம், யானைகளின் குடும்ப வாழ்க்கையைப் பார்த்தபடி டி.வி-யின் முன் கிடந்தான்.
   இவன், வீட்டாரிடம் சொல்லிக்கொள்ளாமல் சென்னைக்குப் பறந்துவிடவும், வாழ்க்கையில் முன்னேற ஊர்விட்டு ஊர் பறந்துவிட வேண்டும் என்ற பழைய தத்துவத்தை மறுபடியும் இவன் காதினுள் புகுத்திய ஆனந்தி, அந்தச் சமயத்தில்தான் முருகேசனுக்கு தோழியானாள். ஆனந்தி, இவனுக்குப் பக்கத்து வீடுதான். ஆறு மாதங்களுக்கு முன்பாகத்தான் அவர்கள் குடும்பம், மூன்று மாதங்கள் காலியாகக்கிடந்த வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தது. நான்கு மாதங்கள் கழித்துத்தான் அந்த வீட்டில் தாவணி அணிந்த, பார்க்க அழகான பெண் ஒருத்தி இருப்பது இவனுக்குத் தெரியவந்தது. ஆனந்தி, இவனைவிட இரண்டு வயது மூத்தவள்.
   கரூரில் எப்போதோ அரசினர் பள்ளியில் 10-வது முடித்தவள், இவனைவிட தெளிவாகவும் அறிவாகவும் பேசினாள். அதனால், எல்லாப் பெண்களும் அறிவாளிகள்தான் என்ற முடிவுக்கும் வந்திருந்தான். இவனுக்கு ஏற்கெனவே தெரிந்த இரண்டு அறிவாளிகள் இவன் அம்மாவும் அக்காவும்.
   பல இளைஞர்களின் கனவாக இருக்கும் சினிமா ஆசை, இவன் மனதிலும் அப்போது இருந்தது. கையில் இரண்டு ஸ்கிரிப்ட்களை வைத்திருந்தான். அதுபோகவும் மனதில் முடிக்கப்படாத சில ஸ்கிரிப்ட்களும் கிடந்தன. முருகேசனின் முதலாவது ஸ்கிரிப்ட் சென்னிமலையிலேயே ஆரம்பித்து ஊருக்குள்ளேயே முடிந்துவிடும் காதல் கதை.
   இரண்டாவது ஸ்கிரிப்ட், செக்கோஸ்லோவியாவில் ஆரம்பித்து திருப்புக்காட்சியில் சென்னிமலைக்குள் நடப்பது போல அமைத்திருந்தான். தயாரிப்பாளர் பெரிய கையாக இருக்க வேண்டும். தவிர, நாயகிக்கு இரட்டை ரோல் வேறு. மனிதனாகப் பிறப்பெடுத்த யாரும் அளவுக்கு அதிகமாக ஆசைப்படவேண்டும் என்ற கொள்கை உடைய முருகேசன், சீக்கிரமே சோத்துக்கு சிங்கியடிக்கும் நிலைக்கு சென்னை வீதியில் தள்ளப்பட்டான். தன் ஆசைகளை சில காலம் மனதில் பூட்டிவைத்து விட்டு, பத்திரிகை ஒன்றில் தன்னை நிருபராக ஒப்படைத்தான்.

   போஸ்ட்மார்டனிசம், வாதை, கலாசாரம் என்று பேசிக்கொண்டிருந்த பத்திரிகை, இவனுக்கு மூன்று வேளை சாப்பாட்டுக்கும், அறை வாடகைக்கு மான ஊதியத்தை மகிழ்வுடன் அளித்தது. நல்ல கால நேரத்தில் வேறு வாரப் பத்திரிகைக்குத் தாவிவிட்டான். ஊதியம் அதிகம் என்பதால், ஊருக்கு மாதம் தவறாமல் அம்மா லட்சுமி பெயருக்கு ரூபாய் 4,000 செக் அனுப்பத் தொடங்கினான் முருகேசன்.
   ஆபீஸில் இவன் துணைக்கு வரும் போட்டோகிராபர் ஸ்வீட்டி, மாநகர மங்கை. மாநகரங்கள் இப்படி ஸ்வீட்டிகளுக்காகவே உருவாகி நிற்கின்றன போலும். ''ஏனுங்கோ சித்தெ நில்லுங்கோ, வெசயா போவாதீங்கோ'' என்று கோவை சரளா மாதிரி கொங்கு பாஷையில் கூப்பிட்டு இவனைத் தடுமாறச் செய்வாள். மற்றபடி தடை செய்யப்பட்டதைத் தடையின்றி மென்றுகொண்டிருப்பாள். ''இதெல்லாம் தப்புங்க'' என்று சொல்வான் முருகேசன்.
   ''ஐ டோண்ட் லைக் அட்வைஸ் குட்டிப் பையா!'' என்பாள். ''சண்டே என் ரூமுக்கு வாடா குட்டிப் பையா. நம்ம கார்ட்ஸ் போடலாம், போரடிக்காது'' என்றவளுக்குச் சலிப்பையே பதிலாகத் தந்துகொண்டிருந்தான். முன்பு கையில் வைத்திருந்த ஸ்கிரிப்ட்டில் பல மாற்றங்கள் செய்ய வேண்டும் என இவன் கை அரித்துக் கொண்டே இருந்தது!
   கோவை எக்ஸ்பிரஸில் பக்கத்தில் அமர்ந்திருந்த பாப்பாவிடம் 10 வார்த்தைகள் மட்டும் பேசித் தூங்கிப் போனவன், ஈரோடு வந்துதான் விழித்தான். ஈரோடு அவனை 'வாடா டுபுக்கு...’ என்று வரவேற்பதாக நினைத்து இவனாகச் சிரித்துக்கொண்டான். ரயில்வே ஸ்டேஷனில் எந்த மாற்றங்களும் இல்லை. அதே சிவப்பு உடை அணிந்த போர்ட்டர்கள் டிராலிகளைத் தள்ளிக்கொண்டு போனார்கள்.
   ஈரோடு பேருந்து நிலையம் போய், அதன் சமீபத்திய அழகைக் கண்டு சென்னிமலை பேருந்து ஏறலாம் என்ற திட்டத்தை ஒதுக்கிவிட்டு, வழியே வந்த பேருந்திலேயே நெரிசலில் ஏறிக்கொண்டான். நண்பர்களில் யார் யாரைச் சந்திப்பது என்று திட்டம் போட்டபடி நின்றுகொண்டே பயணித்தான்.
   முருகேசனின் முதல் ஸ்கிரிப்ட்டின் நாயகியை, அவள் தந்தை அரச்சலூர் மாப்பிள்ளைக்குக் கட்டிக்கொடுத்து வருடங்கள் ஆகிவிட்டன. அவளை, குழந்தை குட்டியுடன் தேர்த் திருவிழாவில் பார்த்ததாக நண்பன் யாராவது சொன்னால், இவனால் பெருமூச்சு ஒன்றை விட முடியும். இவனின் இரண்டாவது ஸ்கிரிப்ட்டின் டபுள்ரோல் நாயகி, பங்கஜம் காலனியில் கணவனுக்காக கேஸ் அடுப்பு பற்ற வைத்து வடைச்சட்டி எடுத்துவைத்துக்கொண்டிருந்தாள்.
   முருகேசன் மேலபாளையத்தில் தன் வீட்டினுள் நுழைந்தபோது, அக்கா தன் கணவரோடு வந்திருந்தாள். அம்மா இவனைப் பார்த்ததும் கூவென அழுகையை ஆரம்பித்துவிட்டாள். ''கடைச்சோறு தின்னு எப்புடி எளச்சிப்போயிட்டான் பாருங்க'' என்று அழுத அம்மாவை, அப்பாதான் அடக்கினார்.
   முருகேசன், அப்பாவுக்குத் தன் பேக்கில் இருந்து வேட்டி-சட்டை எடுத்து நீட்டினான். அம்மாவுக்கும் அக்காவுக்கும் சேலைகள் கொடுத்தான். அக்காவின் பிள்ளைகளுக்கு வாங்கி வந்திருந்த உடைகளை அவர்களிடமே கூப்பிட்டுக் கொடுத்தான். அப்பா இவன் பிறந்த நாளுக்காக வாங்கிவைத்திருந்த, 'என் பெயர் பட்டேல்’ நாவலை கவரில் இருந்து எடுத்துக் கொடுத்தார்.
   ''ஈரோடு புத்தகக் காட்சிப் பக்கம் போயிருந்தேண்டா. இவதான் ஒரு நாள்கூட உருப்படியா ரசம் வெச்சதே இல்லையே. அதான் இவளுக்கு ரசம் வைப்பது எப்படி? புத்தகத்தைத் தேடிப்புடிச்சு வாங்கிட்டு வந்து குடுத்தேன். இப்ப என்னடான்னா வாயில வைக்க முடியாத அளவுக்கு ரசம் வைக்கிறா'' என்றார் அப்பா.
   ''இப்ப அவன் கேட்டானா ரசத்தைப்பத்தி உங்க கிட்ட? உங்க வாய் இருக்கே சாமீ! நீ போய்க் குளிச்சுட்டு வாடா. இவரு இனி ஒண்ணொண்ணா ஏதாச்சும் சொல்லிட்டேதான் இருப்பாரு'' என்று அம்மா சொல்லவும், துண்டை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்கு நகர்ந்தான்.
   அப்பாவும் அம்மாவும் இன்னமும் சந்தோஷமாகவே இருக்கிறார்கள். ஒரு நாள்கூட அப்பா, அம்மாவை கைநீட்டி அடித்தது இல்லை. அம்மாவைப் போல தனக்கும் ஒரு துணை அமைந்துவிட்டால் வாழ்வில் டைவர்ஸ் பிரச்னையே இருக்காது என்று யோசித்தபடி முதல் சொம்பு தண்ணீரைத் தலைக்கு ஊற்றினான்.
   குளித்து முடித்து சாப்பிட்டுவிட்டு சோபாவில் அமர்ந்தவன் முன்னால், குட்டிப் பையன் புது டிரெஸ் அணிந்து ஓடிவந்து அழகு காட்டினான். ''மாமா பேன்ட் பெருசாப் போச்சுனு உங்கக்கா கீழ ரெண்டு மடிப்பு மடிச்சு உட்டிருக்கா! சட்டை பெருசா போச்சுனு வவுத்துக்குள்ள உட்டு இன் பண்ணி பெல்ட் போட்டு உட்டுட்டா'' என்று அழகு காட்டினான்.
   ''இதான் சாமி இப்பத்த பேசனு! ஜம்முனு இருக்கு மாப்பிள்ளை மாதிரி'' என்றதும் ஓடிப்போய் உள் அறையில் அக்காவிடம், ''உன் தம்பி சொல்லுது ஜம்முனு இருக்கேனாம்'' என்று சொல்லிக்கொண்டிருந்தான்.
   ''ஆனந்தி கல்யாணப் பத்திரிகை உனக்கு வந்துச்சாடா முருகேசா? உன்னோட அட்ரஸை என்கிட்டத்தான் வந்து கேட்டு வாங்கிட்டுப் போனா.
   நீ எப்படியும் அவ கல்யாணத்துக்கு வருவேனு நாங்க பார்த்துட்டு இருந்தோம்'' - அம்மா இவனிடம் சொல்லிக்கொண்டே வெங்காயம் உறித்துக்கொண்டிருந்தாள். அப்பா, கறி எடுத்துவர பையை தூக்கிக்கொண்டுப் போய்விட்டார்.

   முருகேசனுக்கு, ஆனந்தியின் கல்யாணத்துக்கு வர முடியாமல் போன துக்கம் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது. இவனின் இரண்டு ஸ்கிரிப்ட்களையும் படித்த ஒரே தோழி அவள்தான். படித்ததும் ஒன்று சொன்னாள். ''உனக்கே ரெண்டு வருஷம் போனாப் புரிஞ்சிடும் முருகேசு. அப்படி இல்லீனா இதே புரிய வெச்சிடும்!''
   ஆறு மாதத்திலேயே புரிந்துகொண்டான் முருகேசன். அன்றில் இருந்து ஆனந்தி வெறும் தோழி மட்டுமல்ல, தீர்க்கதரிசினி இவனுக்கு. அம்மாவிடம் நேம்பாக விசாரித்தான். ''ஆனந்தியை எந்த ஊருக்குக் கட்டிக் குடுத்திருக்கும்மா?''
   ''இங்கதாண்டா இருக்கா கொமராபுரியில. அவ அம்மாகிட்ட எவத்திக்கின்னு கேட்டு ஒரு எட்டு போயிட்டு வந்துடு. போறப்ப சும்மா வெறுங்கையை வீசிட்டுப் போயிடாதே. எனக்கு வாங்கிட்டு வந்தியே சேலை பச்சைக் கலர்ல... அதை எடுத்துட்டுப் போயி குடு. எனக்குப் புடிக்கலை. ஆறுமுகங் கடையில வேற பொடிக்கலர்ல எடுத்துக் குடு'' - அம்மா சொன்னதும் சிரித்துக்கொண்டான்.
   ''நான் பச்சைய எடுத்துக்குறேன். எம்பட ஊட்டுக்காரருக்கு நீலக் கலரு புடிக்காது'' உள் அறையில் இருந்து அக்காவின் குரல் கேட்டது!
   கொமராபுரியில ஆனந்தியின் வீட்டைக் கண்டுபிடிப்பதில் இவனுக்கு சிரமம் எதுவும் இல்லை. என்ன... பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டிவிட்டான். கதவு நீக்கி வந்த அம்மாள், இவனுக்குப் பக்கத்து வீட்டைக் கை காட்டிவிட்டு மீண்டும் சாத்திக்கொண்டாள். உள்ளே டி.வி-யில் கிரிக்கெட் மேட்ச் ஓடிக்கொண்டிருந்தது. கிரிக்கெட் ரசிகை போலும் என நினைத்தான்.
   நல்லவேளை... 'நீ யாரு, எந்த ஊரு, உங்க அப்பா என்ன வேலை பண்றாரு, கைல என்ன பொட்டணம், உங்க அம்மா ஹவுஸ் வொய்ஃபா, என்ன பாட்டு வேணும்’ என்றெல்லாம் கேட்காமல் விட்டதே என்று ஆனந்தி வீட்டுக் கதவைத் தட்டினான். கதவு நீக்கிய ஆனந்தி, முகத்தில் ஆச்சரியம் கால் கிலோ அளவு காட்டி இவனை உள்ளே அழைத்தாள். பழைய, 'ஹாய்டா...’ சொல்லவே இல்லை. திருமணத்துக்கு வராத கோபமாக இருக்குமென நினைத்துக்கொண்டான். ஆனால், அதற்கெல்லாம் கோபித்துக்கொள்பவள் இவன் தீர்க்கதரிசினி அல்லவே!
   ''வாழ்த்துகள் ஆனந்தி. உன் கல்யாணத்துக்கு வர முடியலை. மன்னிச்சுடு!''
   ''பரவால்ல விடு முருகேசு. இப்படி சோபாவுல உட்கார்ந்து இந்த போட்டோ ஆல்பத்தைப் புரட்டி பார்த்துட்டு இரு. நான் டீ கொண்டு வர்றேன்'' என்று சமையலறைக்குள் போய்விட்டாள்.
   ஆனந்தி, இவன் மடியில் வைத்துவிட்டுப்போன கனத்த ஆல்பத்தை விரித்தான். மாலையும் கழுத்துமாக ஆனந்தியின் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தவரைப் பார்த்ததும் அதிர்ந்தான் முருகேசன். ஆனந்திக்கு சித்தப்பா மாதிரி இருந்தார் அவர். தலைமுடி சாயம் பூசப்பட்டு இருந்தது, அப்படியே அப்பட்டமாகத் தெரிந்தது. 'இந்த ஆல்பத்தை என்னவென்று இனி பார்க்க? சொக்க விக்கிரகத்தைக் கொண்டுபோய் இவனிடம் ஒப்படைத்து இருக்கிறார்களே! இதற்கு சொந்தபந்தங்கள் வேறு சாட்சி. இந்த உலகம் ஏன் இவ்வளவு கோரமாகிவிட்டது? ஏன் இங்கு வாழ்பவர்களும் இவ்வளவு கோரமாக மாறிவிட்டார்கள்?’ மனதில் ஏற்பட்ட கசப்புக்கு வார்த்¬தகளில் வடிவம் கொடுத்தான்.
   ஆனந்தி, இவனுக்கு  டீ கொண்டுவந்து கொடுத்தாள்.
   ''அப்புறம் முருகேசு... லீவுல வந்தியா? சென்னைல எப்படிப் போயிட்டு இருக்கு பொழப்பு? அவர் ஈரோடு மருத்துவமனையில மருந்து ஆளுநரா இருக்கார். இப்ப வர்ற நேரம்தான். வந்தா என்னை 730 கேள்விகேட்டு அடிச்சுடுவாரு'' என்று நிதானமாகச் சொன்னாள். 'கிளம்பீட்டின்னா நல்லது’ என்பதைச் சற்றே நீளமாகச் சொல்கிறாள் என்றே நினைத்தான்.
   இருந்தும், ''மேரேஜ் ஆகி, மூணு மாசம் இருக்குமில்ல'' என்று சம்பந்தம் இல்லாமல் கேட்டான். ''94 நாள் ஆச்சு'' என்றாள். எல்லாமும் நினைப்பதுபோல் நடந்துவிடுகிறதா என்ன!
   சட்டென்று ஆனந்தியின் கணவர், ''வாசக்கதவைத் தொறந்துபோட்டு வெச்சிருக்கியா நீயி?'' என்றபடி வந்தார். மரியாதைக்காக இவன் எழுந்து நின்றான். அவர் இவனைக் கண்டுகொள்ளாமல் தன் அறைக்குள் நுழைந்தார்.
   ''இங்க வா ஆனந்தி'' என்று உள் அறையில் இருந்து குரல் கொடுத்தார். ''டீ எடுத்துட்டு வர்றனுங்க மாமா'' என்றவள், டீ தம்ளரோடு அறைக்குள் சென்றாள். உள்ளே நிமிடத்தில் டீ தம்ளர் உருளும் சத்தமும், ''சர்க்கரை எதுக்குடி இத்தனை போட்டு எடுத்துட்டு வந்திருக்கே?'' என்ற அவரின் குரலும் கேட்டன.
   ''இதோ ஒரு நொடியில வேற போட்டு எடுத்துட்டு வந்துடறேனுங் மாமா'' - சொன்ன ஆனந்தி, தம்ளரோடு வெளிவந்தவள், கண்களில் ஈரம் மின்ன இவனைப் பார்த்து கை எடுத்துக் கும்பிட்டாள். இவன் எழுந்து வாசல் கதவு வருவதற்குள் வேகமாகப் பின்னால் வந்தவள், இவன் கையில் சேலை கவரைத் திணித்து, ''சாரிடா! உன் அக்காவுக்கு இதைக் குடுத்திடு ப்ளீஸ்!'' என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றாள். முருகேசன், முன் கதவைச் சாத்திவிட்டு பாதையில் இறங்கினான்.
   வீடு வந்தபோது அம்மாதான், ''ஏன் இப்படி பேய் அடிச்சா மாதிரி இருக்கே? கொண்டுபோன சேலைக் கவரையும் திருப்பிக்கொண்டு வந்துட்டே! ஆனந்திய பார்த்தியா... பேசுனியா?'' என்று கேட்டாள். ''புதுசா கல்யாணம் ஆனவங்களை கைல புடிக்க முடியுமா? அண்ணமார் தியேட்டருக்கு ஒண்ணாப் படம் பார்க்கப் போயிட்டாங்களாம். பக்கத்து வீட்டுல சொன்னாங்க'' என்றான் முருகேசன்.
   ''போச்சாது... நாளைக்குப் போயி பார்த்துட்டாப் போவுது போ'' என்றாள் அம்மா.
   ******
   https://www.vikatan.com
  • By நவீனன்
   பந்தல் ஏறிய கொள்ளுக்கொடி! - சிறுகதை
   பி.ச.குப்புசாமி, ஓவியங்கள்: ம.செ.,
    
     மரங்களின் மீதும் காடுகளின் மீதும் தனிக் காதல்கொண்டவர் என் நண்பர். அவரை முதலில் அறிமுகப்படுத்திவிடுகிறேன்.
   என் நண்பருடைய தந்தை ஃபாரஸ்ட்டராகப் பணிபுரிந்தவர். தாயை இழந்த என் நண்பரும் அவர் சகோதரியும், இளம் வயதில் அடிக்கடி காட்டிலே இருந்த தந்தையிடம் போய்த் தங்குவது உண்டு. தாவரங்களின் மீதான அவரது காதல், அப்போது இருந்து மூண்டிருக்கும் என்று நினைக்கிறேன். அதோடுகூட, அவர் கொஞ்ச காலம் ஒய்.எம்.சி.ஏ-வில் தங்கிப் பயின்றவர். எதிலும் அறிவியல்பூர்வமான மனோபாவம் செலுத்துபவர். எல்லாம் சேர்ந்து அவரை வார்த்தன என்றும் சொல்லலாம்.
   தாவரங்களை அவர் ஏதோ சத்தியங்கள் போல் பேணினார்.
   ''நீங்க ரெண்டு தொட்டி எடுத்துக்கங்க. மண்ணும் விதையும் ஒரே தரமா இருக்கட்டும். அப்படிப் பார்த்து மொளைக்கப் போடுங்க. ரெண்டு தொட்டிக்கும் ஒழுங்காத் தண்ணி ஊத்துங்க. செடியா அதுங்க வந்ததும், ஒரு செடிக்கு, கடன் கழிக்கிற மாதிரி தண்ணி ஊத்துங்க. இன்னொரு செடிகிட்ட உட்கார்ந்து பேசி, அதைத் தொட்டுத் தடவி நீவிக் கொஞ்சி அப்புறம் தண்ணி ஊத்துங்க. ரெண்டு செடியில எது நல்லா வளரும்னு நெனைக்கிறீங்க?'' என்று ஒரு டெமான்ஸ்ட்ரேஷன் சொல்வார். கேட்டுக்கொண்டிருப்பவர்கள், 'உட்கார்ந்து தொட்டுப் பேசற செடிதான் நல்லா வளரும்’ எனத் தாங்களாகவே சொல்லிவிடுவார்கள்.
   அடிக்கடி என்னை அழைத்துக்கொண்டு காட்டுக்குப் போவார். அப்படிப் போகும்போது வடிவில் அழகியதான சில மரங்களைக் காணும்போது, '''தயவுசெய்து என்னை வெட்டாதீர்கள்’னு ஒரு கார்டுபோர்டில் எழுதி இங்கே மாட்டிருவோமா?'' என்பார்.
   அப்புறம் அவரே, ''வேணாம்... வேணாம். ஏதோ விசேஷமான மரம் போலனு நினைச்சு, அதுக்காகவே வெட்டிடுவானுங்க!'' என்று முடிப்பார்.
   ''மண்ணுக்குள்ளே போடுற எல்லாமே மக்கிப்போவுது, வெதை மட்டும் முளைச்சி வெளியே வந்துடுது. மண்ணுக்கும் வெதைக்கும் என்ன மர்மமான ஒப்பந்தம் பார்த்தீங்களா?!'' என்று வியப்பார். தன் வீட்டின் சிறு தொட்டிகளில் எப்போதும் ஏதாவது ஒரு விதையை முளைக்கப் போட்டுக்கொண்டிருப்பார். அது அவருக்கு வாரக்கணக்கில் நீளும் ஒரு விளையாட்டு!
   எங்கள் பக்கம் கிராமப்புறங்களில், 'கொள்ளுக்கொடி, பந்தல் ஏறப்போவுதா?’ என்று ஒரு பழமொழி உண்டு. கொள்ளுக்கொடிகள், தாவவும் பற்றவும் முயன்று தோற்றவைபோல் சோர்ந்து தரையிலேயே சஞ்சரித்து, தங்கள் பசுமையை மட்டும் கொஞ்சிக்கொண்டிருக்கும். ஆனால், என் நண்பரின் வீட்டில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது.

   அவர் வீட்டின் காரை போட்ட திறந்த வாசலின் ஓரம், ஒட்டியிருந்த ஒரு சுவரின் இடுக்கில், எப்படியோ தப்பி நுழைந்த ஒரு கொள்ளுத்தானியம், வாழ்ந்து வளர்ந்தோங்கு வதற்கான உத்தரவாதமே சுத்தமாக இல்லாத அதன் வாழ்வியல் விதிக்கு எதிராக முளைத்து எழுந்தது. விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதுபோல அது வெகுவாக ஊட்டம் கொண்டிருந்தது. அதற்கு என் நண்பர் அக்கறையாகத் தண்ணீர் ஊற்றி வந்தார். அந்தச் செடிக்குக் கொடிகள் பிறக்க ஆரம்பித்தவுடன், ஓட்டுக் கூரை வரை நூல் கயிறு கட்டி ஏற்றினார். 'பந்தல் ஏற முடியாது’ என்று பழமொழி பெற்றுவிட்ட அந்தக் கொள்ளுக்கொடி, குயவர்  ஓடுகள் பதித்த அவரது வீட்டுக் கூரையில் ஏறி, அதையும் கடந்து மாடிச் சுவரைத் தொட்டது. மாடிக்குப் போன பின்பு மேலே வழி? டி.வி-க்கள் புதிதாக வந்த காலம் அது. வீட்டு மாடியில் உயரமாக நின்ற டி.வி. ஆன்டெனாவில் அந்தக் கொடியை ஏற்றிக் கட்டினார்.
   ஆயுளின் நெடும் பயணத்துக்கு ஓர் அந்தம் உண்டுதானே? அவ்வாறு அது மெள்ள வாடி உலர்ந்த பின்பு, அதை லாகவமாகப் பெரிய ஒரு  வளையமாகச் சுருட்டிச் சுருட்டி எடுத்துப் பத்திரமாக வைத்திருந்தார். அறிமுகமாகிற நண்பர்களுக்கு எல்லாம் அதைக் காட்டுவார். எனக்கு அது ஓர் பெரிய அதிசயம்தான்.
   நாங்கள் காடுகளை நோக்கிப் போகிறபோது, வழியிலே கரும்பாறைகளின் மேலே ஒரு மர வரிசையைக் கண்டோம். அந்த மரங்கள், பிப்ரவரி மாதத்தில், இலைகளையெல்லாம் இழந்து, உள்ளங்கை விரித்தாற்போல பெரிய பெரிய மஞ்சள் நிறப் புஷ்பங்களைத் தாங்கி நிற்கும். என் நண்பர் தன் தந்தையாரிடத்து விசாரித்ததில், அவற்றுக்கு 'காட்டுப் பருத்தி’ என்ற பெயரைக் கேட்டு வந்து சூட்டினார். ஆனால், ஜவ்வாது மலையிலே வாழும் முதுபெருங்கிழவர் ஒருவரிடம், நாங்கள் அந்த மரங்களைப் பற்றிக் குறிப்பிட்டுக் கேட்டபோது அவர், ''அட... அது கோங்கு!'' என்று கூறினார்.
   கோங்கு என்றதும் எனக்கு மிகவும் குதூகலமாகிவிட்டது. அது சங்க இலக்கியங்களில் உள்ளது. கோங்கின் அரும்பை பெண்களின் மார்பகத்துக்கு உவமையாக வைத்திருப்பார்கள். அந்த அரும்பைப் பார்க்க வேண்டும் என்று எங்களுக்கு விருப்பம் ஏற்பட்டது. பிப்ரவரி மாதத்தில் அது பெரிதாக மலர்கிறது என்றால், டிசம்பர் ஜனவரி மாதங்களில் அதன் அரும்புகள் தோன்றுமல்லவா?

   எனது நண்பர், அடுத்த டிசம்பர் வரை காத்திருந்து, கவனமாகக் காட்டுக்குச் சென்று, காவியப் புகழ்பெற்ற அந்தக் கோங்கின் அரும்பைக் கொண்டுவந்து காட்டினார். எவ்வளவு பெரிய இனிய ஏமாற்றம்!?
   கோங்கின் அரும்பை இதற்குள் நீங்கள் கற்பனை செய்திருக்கக்கூடும். ஆனால், உண்மையான கோங்கின் அரும்பு உங்களையும் எங்களையும் ஏமாற்றுகிற மாதிரி, ஒரு சுண்டு விரலின் முதல் கணுவில் பாதி அளவே இருந்தது. ஆனால், அதன் வடிவம் மட்டும் அற்புதமாக, பெண்களின் மார்பகத்தை அப்படியே பிரதிபலித்தது.
   அழிந்துகொண்டிருக்கிற கூந்தல் பனையைக் கண்டால், வண்டியில் இருந்து இறங்கி நின்று அதைக் கும்பிடுகிற அளவுக்கு, தாவரங்களின் மீதான அவரது வழிபாடு வளர்ந்து வந்தது.
   இத்தகைய, இயற்கையின் மீதான எங்கள் நாட்டம் அதிகரித்த காலையில், நான் எப்படியோ ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் மூன்று ஏக்கர் நிலம் வாங்கினேன். எனக்குத் தெரிந்து எங்கள் பரம்பரையில் ஏழு தலைமுறைகளாக யாரும் நிலம் வாங்கியது கிடையாது. இவ்வாறு இந்த நிலம் வாங்குவதற்கு என்னை ஊக்கப்படுத்தியவர் என் நண்பர்தான். நான் நிலம் வாங்கிய பிறகு, என் நண்பருக்கு அவர் விரும்பியபோதெல்லாம் வந்து தங்கி அவர் பொழுதைக் கழிப்பதற்கு வசதியாகிவிட்டது.
   எனது நிலத்தில் அதிகாலை வேளைகளில் சேவல்களின் கூவலைவிடவும் மயில்களின் அகவல்தான் அதிகம். ஆடு, மாடுகள் வந்து பயிரை மேய்வதைக் காட்டிலும் மான்களும் காட்டுப்பன்றிகளும் வந்துதான் அதிகம் மேயும். அத்தகைய நிலம் அது. என் நிலத்தில் ஒரு காலை வைத்து, ஜவ்வாது மலையின் மீது அடுத்த காலை வைக்கலாம்.
   என் நண்பர் இன்னொரு காரியம் செய்தாரே!
   அவர் வீட்டில் எங்கிருந்தோ வந்த ஒரு பலாப்பழத்தை அறுத்தார்கள். அதன் சுளைகள் மிகவும் இனிப்பாக இருந்தன. அதிலிருந்து பலாக்கொட்டைகளை எடுத்து முளைக்கப் போட்டார். அது முளைத்து ஒரு சாண் உயரம் வந்ததும், அதிலே ஒரு செடியைக் கொண்டுவந்து எனக்குக் கொடுத்தார். அதை நான் தகுந்த இடமாகப் பார்த்து என் நிலத்தில் நட்டேன். அது நன்கு வேரூன்றிப் பதிந்து மெள்ள வளர ஆரம்பித்து. கடந்த 10 வருடங்களில் பெரிய ஒரு மரமாயிற்று. ஒரு செடி மரமாவதை எவ்வளவு சுலபமாக எழுதிவிட முடிகிறது. மிகமிக மெதுவாக நெடுங்காலம் நடைபெறும் மாபெரும் ஒரு வேள்வி அல்லவோ அது!
   அந்தப் பலாச்செடியின் துளிர்கள் எத்தனை அதிகாலைகளைக் கண்டிருக்கும்! அவற்றின் மீது நிகழ்ந்த உச்சிச் சூரியனின் வருகைகள்தான் எத்தனை! காத்திருந்து காத்திருந்து கல்பாந்தக் காலத்துத் தவம் போன்றது அல்லவா, அது இவ்வளவு பெரிய மரமானது!
   அப்போதெல்லாம் என் நண்பர் அங்கே வந்துகொண்டிருந்தார். தான் கொண்டுவந்து கொடுத்த செடிக்குக் கொழுந்துகள் தோன்றுவதையெல்லாம் ரசித்துக்கொண்டுதான் இருந்தார்.
   அந்தப் பலாமரம் வளர வளர எனக்கு ஏனோ, 'குறும்பலவின் ஈசர்’ என்று தமிழ் இலக்கியத்தில் எங்கேயோ வந்த வரி ஒன்று கவனம் வந்துகொண்டே இருந்தது.
   நான் என் நண்பரிடம் சொன்னேன். ''இது இன்னும் கொஞ்சம் வளரட்டும். இதன் அடியிலே ஒரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, அதற்குத் 'தட்சிணாமூர்த்தி’ என்று பெயர் வைத்துவிட வேண்டும்!''
   நான் ஒன்றும் பழுத்த பக்திமான் இல்லை. ஆத்திகர்கள் மத்தியில் இருக்கும்போது எனக்கு நாத்திக மனோபாவம் உண்டாகிறது. நாத்திகர்கள் மத்தியில் இருக்கும்போது ஆத்திக மனோபாவம் ஏற்பட்டுவிடுகிறது. கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா, இல்லையா என்ற குழப்ப நிலைதான் எனக்கு. ஆனால், எனக்கு வழிபாடுகள் பிடிக்கின்றன. நல்ல கவிதைகளில் மட்டும் கடவுள் இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. இல்லாத கடவுளை இருப்பதாக வைத்துக்கொண்டால், அதன் பின்பு நமது பாவனைகள்தான் எவ்வளவு அழகாகி விடுகின்றன. மனிதக் கற்பனையின் உச்சம் அல்லவா கடவுள். எனது கற்பனைகள் எல்லாம், என் நண்பருக்கு ஏதோ நிதர்சனங்கள் போல் இன்பம் அளித்துக்கொண்டிருந்தன.
   இந்த இடைக்காலத்தில் என் நண்பர் கொஞ்சம் நோய்வாய்ப்பட்டார்.
   பலா மரம், முதல் முறையாகப் பூ பூத்துப் பிஞ்சுகள்விட்டது. பிஞ்சுகள் எல்லாம் உதிர்ந்தன. அவை பொய்ப் பிஞ்சுகளாம். முதல் வருஷம் அப்படித்தான் உதிருமாம்.
   அடுத்த வருஷம் ஏழெட்டுப் பிஞ்சுகளுக்கு மேல் உறுதியாக நிலைத்து நின்று தொங்கின. நண்பரை அழைத்து வந்து காட்டினேன். அவர் கண்கள் கலங்கக் கரங்கள் கூப்பி நின்று அதைக் கண்டார். மரத்தின் முதல் பழத்தை அவர் வீட்டுக்குக் கொண்டுபோய்க் கொடுத்தேன்.
   இதற்குச் சில மாதங்கள் பிறகு என் நண்பர், தனது நோயின் காரணமாக - மூளையின் ஒரு பகுதியில் ரத்தம் உறைந்துவிட்டதாகக் கூறினார்கள். உள்ளூர் டாக்டர், வெளியூர் ஆஸ்பத்திரி என்கிற கண்டங்களுக்கு உள்ளாகி, மெள்ள மெள்ளக் காலமாகிப்போனார். என் மனைவியின் இறப்புக்குப் பிறகு எனக்கு ஏற்பட்ட இன்னொரு மாபெரும் இழப்பாக நண்பரின் மரணத்தைக் கருதினேன். அவர் தலைப்பிள்ளை, ஆகையால் அவரைத் தகனம் செய்தார்கள்.
   மறுநாள் அவரது அஸ்தி திரட்டப்பட்டது. நான் என் நிலத்துக்குப் போனேன். பலாமரம் ஒரு மாபெரும் குடை போன்று கவிழ்ந்து நின்றிருந்தது.
   அந்தப் பலாக்கொட்டையை முளைக்கப் போட்டவர், மரத்தில் மறைந்தது மாமத யானை என்பதுபோல், மறைந்துவிட்டார். காதுகளில் கேட்கும் ஒலிக்கருவியைப் பொதிந்தவாறும், கைகளில் ஒரு கேமராவைப் பிடித்தவாறும் காட்டின் பாதைகளில் திரிந்த ஓர் ஆத்மாவின் சரீரம் மறைந்துவிட்டது. சிறு புதர்களில் இடப்பட்டிருக்கும் காடைகளின் முட்டைகளை எல்லாம் அலாதி அக்கறையுடன் காவல் காத்தவர் மறைந்துவிட்டார். ஒவ்வோர் இலை துளிர்க்கும்போதும், அதிலே ஒரு பிறவி கண்டவர் இல்லாமலாகிவிட்டார். மலைச் சாரலில் ஒரு மான் மேயக் கண்டு, யாரோ ஒருவர் துப்பாக்கியை எடுத்து வர ஓட, அதற்குள் அதிவேகத்தில் வேலிகளையும் செடிகளையும் தாண்டி ஓடி, 'ச்சூ... ச்சூ!’ என்று அந்த மானை விரட்டி அதன் உயிர் காத்த மகானுபவர் மறைந்துவிட்டார். இயற்கையின் ரகசியங்களை அறிந்து ஆனந்திக்கும் கலையை எனக்குக் கற்பித்த ஆசானை தற்போது காண்பதற்கு இல்லை.
   எனவே, நான் ஒரு காரியம் செய்தேன். அந்தப் பலாமரத்தின் அடியிலே இடுப்பனை உயரத்துக்கு ஒரு பீடம் எழுப்பினேன்.
   திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் சாலையில், ஏழைச் சிற்பத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் ஒரு சிவலிங்கம் செய்து தருமாறு கேட்டுக் கொண்டேன். ஆவுடையாரோடு அவர் செய்து தந்தார். நந்திதான் அவரால் செய்ய முடியவில்லை. சர்வோதயாக் கடையில் ஒரு பொம்மை நந்தியை வாங்கிக்கொண்டேன்.

   ஆகம விதிகள், ஐயர்-கிய்யர், சாஸ்திரம்- கீஸ்திரம் என்று ஏகப்பட்ட விஷயங்கள் என் வேகத்தின் குறுக்கே வந்தன. அதைப் பற்றி அணுவளவும் கவலைப்படாமல் செயல்பட்டேன் எனக்குத் தெரிந்த ஒரு பள்ளித் தலைமையாசிரியர், ஒரு மராத்தியர். சிவாஜி மகாராஜாவின் காலத்தில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மானியங்களான நிலங்களில் வாழ்ந்துவருகிறவர் அவர். அவரை அழைத்து, ''நீங்கள்தான் எங்கள் பிரஹஸ்பதி என்று கூறி, அந்த சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்ய வைத்தேன். அவர் ஒரு சம்ஸ்கிருத மந்திரத்தையும் உச்சரிக்கவில்லை. நான்தான், 'பொன்னார் மேனியனே...’ என்று பாடி அந்தப் பொழுதுக்கு மந்திரம்போல் ஒரு மயக்கத்தைக் கூட்டினேன்.
   எனது பழைய கனவான, 'ஸ்ரீதட்சிணாமூர்த்தி’ என்பதை மாற்றி சிவலிங்கத்துக்கு 'ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர்’ என்று நாமகரணம் சூட்டினேன். கறுப்புப் பளிங்குக் கல் ஒன்றில் மஞ்சள் வர்ணத்தில் அதை எழுதிவைத்தேன்.
   என் நிலம் அமைந்திருக்கிற குக்கிராமத்தில் வேடியப்பன் கோயில், மாரியம்மன் கோயில், பெருமாள் கோயில், பிள்ளையார் கோயில் எல்லாம் உண்டு. ஆனால், ஒரு சிவன் கோயில் இல்லை. 'ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர்’ அந்தக் குறையைத் தீர்ப்பவராக ஆனார்.
   பள்ளிக்குப் போகிற பிள்ளைகள் எல்லாம் அங்கே வந்து திருநீறு இட்டுச் செல்லத் தொடங்கினர். கோயிலின் எதிரே ஒரு குச்சிவள்ளிக் கிழங்குத் தோட்டம் இருக்கிறது. அந்தத் தோட்டத்தில் களை கொத்தக் கூலிக்கு வருகிற பெண்மணிகள் எல்லாம், தங்கள் பின்புறத்தைச் சாமிக்குக் காட்டாத வண்ணம், அவருக்குத் தங்கள் முகத்தைக் காட்டிக்கொண்டுதான் தோட்டம் கொத்துகிறார்கள்.
   என் நண்பரை நான் சரியான இடத்தில் சாய்த்து உட்காரவைத்த மாதிரி அந்தப் பலாமரமும், அதனடியில் ஒரு கோயிலும் இருந்துகொண்டிருக்கின்றன.
   நான் முதலிலேயே கூறியிருக்க வேண்டும். என் நண்பரின் பெயர் அருணாச்சலம்!
   https://www.vikatan.com
  • By நவீனன்
   எனக்கான முத்தம் - சிறுகதை
   ப்ரியா தம்பி, ஓவியங்கள்: ஸ்யாம்
    
      ஊரில் நான் படித்த பள்ளியை, என் மகளுக்குச் சுற்றிக் காண்பித்துக்கொண்டிருந்தேன்.
   ''இங்கதான் என் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் கிளாஸ் ரூம் இருந்தது'' என்ற இடத்தில், இப்போது எட்டாம் வகுப்பு B செக்ஷன் செயல்படுவதாக கரும்பலகை சொன்னது. அரை சுவரும் அதற்கு மேல் ஓட்டுக் கூரையுமாகக் கட்டடம் அப்படியே இருந்தது.
   ''இதுல நீ எங்க உட்காந்திருந்த... ஃபர்ஸ்ட் பெஞ்சா?''
   ''அப்பல்லாம் பெஞ்ச் இல்லை, தரையிலதான் உட்காருவோம்.''
   ''அப்ப உன் ஃப்ரெண்ட் யாரு?''
   எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு வரவில்லை. என் ஞாபகத்திறனின் போதாமையை அவள் அறிவாள். மேற்கொண்டு வற்புறுத்தவில்லை.
   ''கால் வலிக்குது... போலாமா ப்ளீஸ்?''
   அவளைத் தூக்கிக்கொண்டு நடக்கும்போதுதான் கவனித்தேன். நாளை மறுநாள், கோயிலில் கொடியேற்றப்போவதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
   சித்திரை மாதம்தானே திருவிழா நடைபெறும். இதென்ன வைகாசி மாதத்தில்? வீட்டில் நுழைந்ததுமே இதைத்தான் கேட்டேன்.
   ''நீ இங்க இருந்து போய் ரெண்டு வருஷம் கழிச்சு ஒரு சித்திரையில ஊருக்குள்ள சண்டை வந்துதுல்லா... அப்ப வைகாசியில மாத்தினது. அப்புறம் வைகாசின்னே ஆகிப்போச்சு. அடிக்கடி ஊருக்கு வந்தாத்தான இதெல்லாம் தெரியும்'' - தோளில் தூங்கிப்போயிருந்த மகளை வாங்கிப் படுக்கையில் கிடத்தியபடியே பதில் சொன்னாள் கவிதா.

   ''தூக்கிட்டு வார... கை வலிக்கலியா?''
   ''பிள்ளையைப் பெத்துட்டு கை வலிக்குதுனு சொன்னா முடியுமா?''
   ''அதுவும் சரிதான்'' - சிரித்தாள்.
   கவிதாவும் நானும் பள்ளித் தோழிகள். ஆறாம் வகுப்பில் இருந்தே ஒன்றாகப் படித்தவர்கள். கல்லூரி இறுதி ஆண்டிலேயே நான் வேலைக்காக ஊரில் இருந்து பெட்டியைக் கட்டிவிட, இதே ஊரில் திருமணம் ஆகி இங்கேயே நிலைகொள்ளும்படியான வாழ்க்கை அவளுக்கு.
   ''ஆமா... சுசீந்திரம் தேருகூட வருஷத்துக்கு ரெண்டு தடவை நகருது. எனக்கு எங்க..? கன்னியாக்குமரியைத் தாண்டினா கடல்லதான் போய் விழணும். இங்கேயே நிலைச்சாச்சு ஒரேயடியா... சாப்பிடலாம் வா!'' - சிரித்தபடியே போனாள். கவிதா இப்படித்தான். நூற்றாண்டு சலிப்பைக்கூட வாய் ஓரத்தில் சிரிப்பு இல்லாமல் அவளால் சொல்ல முடியாது.
   ''இப்பத் திருவிழா இருக்கும்னு நினைச்சே பார்க்கலை கவிதா!''
   ''என்னத்தத் திருவிழா... அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கிறதே கிடையாது. பத்தாநா திருநாக்கு சப்பரம் வரும்போது, தேங்கா, பழத்தை வாசல்ல குடுக்கிறதோட சரி. கோயில்ல போய் கும்பிட்டதுக்கெல்லாம் கோபுரம் கட்டியாச்சு!''
   ''ஏன் நாடகம்லாம் கிடையாதா இப்ப?''-  கேட்டதுமே விழுந்து விழுந்து சிரித்தாள்.
   ''ஓ... அப்படிப் போகுதா கதை!'' - அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டே இருந்தாள்.
   ''பார்த்து... சோறு விக்கிக்கப்போகுது.''
   ''எனக்கு விக்காது... அங்க விக்கியிருக்கும் இந்நேரம்!''
   ''யாரைச் சொல்ற?''
   ''நீ யாரை நினைக்கிறியோ... அவனைத்தான்!''
   எனக்குமே சிரிப்பு வந்தது. அவனை நினைத்தாலே முகத்தில் ஒளி கூடுவதை, மறைக்க முடியவில்லை. வாழ்க்கையின் ஒரு பகுதியில் என் கூடவே வந்தவன். கனவு மட்டுமே காணத் தெரிந்த அந்த வயதில், என் இரவுகளை பார்வைகளாலும் முத்தங்களாலும் நிறைத்தவன்.
   ''என்ன இப்பவே கனவுல போயாச்சா?''
   ''நாடகம் இல்லியானு கேட்டனே?''
   ''அவன் போனதோட நாடகமும் போச்சுதே?''
   ''ம்...''
   ''அவனை இன்னும் மறக்கலியா?''
   ''உன்னையே மறக்கலை. அவனை எப்படி மறப்பேன்?''
   ''அட நாயே'' - இடுப்பில் கிள்ளிச் சிரித்தாள்.
   ''ஒண்ணு சொன்னாக் குதிப்ப பார்த்துக்க... காலையிலே சொல்ல வந்தேன். இவோ அப்பா இருந்ததுனால சொல்லலை. உன் ஆளு வந்திருக்கான்ல!''
   ''யாரு பாபுவா?!'' - நம்பவே முடியவில்லை. தலை நிஜமாகவே ஒரு முறை சுற்றி நின்றது.
   ''அவன் சைனாவோ எங்கயோ இருக்கிறதா சொன்னாங்க!''
   ''எங்கப் போனாலும் இதான அவன் ஊரு. வந்து ஒரு வாரம் இருக்கும்னு நினைக்கிறேன்.''
   அந்த நொடியே அவனைப் பார்க்க வேண்டுமென மனம் பரபரத்தது.
   ''போய் ஏழெட்டு வருஷம் இருக்கும்னு நினைக்கிறேன். இடையில ஒருக்கா வந்து கல்யாணம் பண்ணிட்டுப் போனவன் மறுபடியும் இப்பத்தான் வந்திருக்கான்.''
   ''நீ பார்த்தியா, பேசினியா?''
   ''கோயிலுக்குப் போயிட்டு இப்படித்தான் ரெண்டு நாளும் போனான். என்னதோ கேக்க வந்து நிறுத்துனான் பார்த்துக்க. உன்னையத்தான் இருக்கும்னு நினைக்கேன். பொண்டாட்டி இருந்ததுனால கேக்காம விட்ருப்பான். மூணு வயசில ஒரு பொண்ணும் இருக்கில்லா?''
   ''ம்...''
   ''என்ன... குரலு இறங்குது? அவனுக்கு மூணு வயசுல புள்ளைன்னா, உனக்கு அஞ்சு வயசுல இருக்கில்லா... அப்புறம் என்ன?''
   ''அய்யே... மூடு நீ!''
   ''நீங்க ரெண்டு பேரும்தான் கல்யாணம் பண்ணுவீங்கனு நினைச்சேன்... பார்த்துக்க!''
   ''நாங்களே நினைக்கலை.. நீ ஏன் நினைச்ச?''
   ''உங்கிட்ட பேசினா எனக்குத்தான்  பைத்தியம் பிடிக்கும். வேலையத்தவ நீ!'' - சாப்பாட்டை எடுத்துவைக்கத் தொடங்கினாள்.
   ''அவன் பொண்டாட்டியும் நல்லாத்தான் இருக்கா. சிரிக்கச் சிரிக்கப் பேசுறா பார்த்துக்கோ.'' - கரண்டியை ஒவ்வொன்றாக சிங்க்கில் போட்டபடியே சொன்னாள்.
   ''அவன் பொண்டாட்டி மேக்க உள்ளவளா... பேச்சு அப்படியே இழுக்குது...'' - சாப்பிட்ட இடத்தில் தண்ணீர் தெளிக்கத் தொடங்கினாள்.
   ''நீ எதுக்கு 'அவன் பொண்டாட்டி, அவன் பொண்டாட்டி’னு இத்தனை தடவை சொல்ற. நான் கேட்டனா?''
   ''அந்த அநியாயம் வேறயா?'' - அவள் துடைப்பம் எடுத்து பெருக்கத் தொடங்கினாள்.
   ''நான் பார்க்கணும் அவனை.''
   ''வீட்டுக்குப் போய்ப் பாரு.. ஆனா, அவன் பொண்டாட்டி இருப்பா அங்க!'' - கடுப்பேற்றினாள்.
   இரவு மொட்டை மாடியில், கவிதாவும் நானும் குழந்தைகளோடு படுத்துக்கிடந்தோம். குழந்தைகள் கதை கேட்டு நச்சரிக்க, நான் என் கதையைச் சொல்லத் தொடங்கினேன். கதையின் வாயிலாக கடந்து சென்ற வாழ்க்கையைப் பிடித்து இழுத்து நிறுத்த முயற்சித்தேன். கதை தொடங்கிய சில விநாடிகளில் மொட்டை மாடி, கவிதா, குழந்தைகள் யாவரும் மறைந்துபோக... பாபு மட்டுமே எங்கும் நிறைந்திருந்தான்.
   ''உனக்கு நினைக்கணும்னா குப்புறப் படுத்துக்கிட்டு நினை. அதை எதுக்குப் புள்ளைகளுக்குச் சொல்லிக்கிட்டு...'' என காதில் கடித்த கவிதாவை மொட்டை மாடியில் இருந்து தள்ளிவிட்டால் என்ன என்று தோன்றியது. நான் சொல்லிக்கொண்டிருந்தேன், எல்லாவற்றையும் ஒரு கதைபோல சொல்லிக்கொண்டிருந்தேன்.
   அப்போதெல்லாம் திருவிழா தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்னதாகவே திடல் களை கட்டும். கதாகாலட்சேபம், வில்லிசை, சினிமா, ஆர்கெஸ்ட்ரா எனத் தொடரும் நிகழ்ச்சிநிரலில், நாங்கள் பரபரப்பாகத் தேடுவது நாடகங்களைத்தான். அதிலும் பாபுவின் நாடகங்களுக்கு ரசிகைகள் அதிகம்.  
   முதல் அரை மணி நேரம் சரித்திர நாடகம். அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு சமூக நாடகம். இரண்டிலுமே ஹீரோ பாபுதான். நடிப்பு, எழுத்து, இயக்கம் என எதில் பாபுவின் பெயரைக் கண்டாலும் போஸ்டருக்கே விசில் அடிக்கும் அளவுக்கு, அவன் மேல் பைத்தியமாக இருந்தோம். பாபுவின் நாடகம் ஒன்பது மணிக்கு என்றால், ஏழு மணிக்கே பிளாஸ்டிக் சாக்கு விரித்து முன் வரிசையில் இடம் பிடிக்கத் தொடங்கினோம்.
   நாடகத்தில் நடிப்பவர்கள், தங்களுக்குள் காசு பிரித்து நாடகச் செலவுகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். பெண் வேடங்களையும் ஆண்களே ஏற்றுக்கொள்ள, கதாநாயகியை மட்டும் வெளியூரில் இருந்து அழைத்து வருவார்கள். நாடகம் போடும் அன்று காலை கதாநாயகி செந்தில்குமாரி வந்து இறங்கும்போது ஊரே பரபரப்பாகும். ரிகர்சல் நடக்கும் குமாரியின் வீட்டைச் சுற்றி தலைகளாக இருக்கும். அந்தப் பெண்ணோடு ஒரே ஒரு பாட்டுக்கு மட்டும் ஆட, நாடகத்தின் மொத்த செலவையும் ஏற்கத் தயாராக இருப்பார்கள். ஆனாலும், எல்லா நாடகங்களிலும் அந்தப் பெண்ணோடு பாபுதான் ஆடினான். பச்சை, சிகப்பு, மஞ்சள் என மாறும் ஒளியில் அந்தப் பெண்ணை அவன் தூக்க, எங்கள் பற்கள் நறநறவெனக் கடிபடும் ஓசையை ஒருவருக்கொருவர் கேட்கவே செய்தோம்.
   மேடையில்தான் ஆட்டம் எல்லாம். பகலில் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் தலையை லேசாகக் குனிந்தபடி முடி காற்றில் அலைய அவன் வேகமாக நடக்கும்போது, கை கோத்து உடன் நடந்தால் எந்தப் பிரச்னையையும் எட்டி மிதிக்கலாம் எனத் தோன்றும். ஏற்றிக் கட்டிய லுங்கியோடு பைக்கில் அவன் செல்லும்போது, அவன் இடுப்பில் அணைத்தபடி பின்னால் உட்கார்ந்து அலட்சியமாகப் பறக்கத் தோன்றும்.
   ஊரெல்லாம் பெண்கள் அவனுக்காகக் காத்திருக்க, எதிர்பாராத ஒரு மதியத்தில் நூலகத்தில் என் முன் வந்து நின்றான். என்னிடம் பேசுவதற்காக வெகுநேரம் காத்திருப்பதாகக் கூறினான்.
   இரண்டு புத்தக அடுக்குகளின் இடையே வழிமறித்தபடி, 'உன் பேர் என்ன?’ என அவன் கேட்டபோது, பயத்தில் கை விரல்கள் ஆடத் தொடங்கின. ஒரு தடவை பார்க்க மாட்டானா என ஏங்கவைத்தவன், 'உன்னைப் பிடித்திருக்கிறது’ என எதிரே நின்று சொல்கிறான். யாராவது பார்க்கிறார்களா எனச் சுற்றிலும் பார்த்தேன். இந்த வார்த்தைகள் எங்கே போய்த் தொலைந்தன. எதற்காக இத்தனைப் பதட்டம்.
   ''எனக்குப் பிடிச்சிருக்கு. உனக்கும் பிடிச்சிருந்தா பேர் சொல்லு'' - முகத்தை வெகு அருகில் வைத்து, கண்களை நேராகப் பார்த்துக் கேட்டான். அன்றுதான் அவ்வளவு அருகில் அவனைப் பார்த்தேன்.
   ''உன் பேரு எனக்குத் தெரியும். ஆனாலும் நீ இப்ப உன் வாயால சொல்லணும்!'' - முகம் இன்னும் நெருக்கமாக இருந்தது. எவ்வளவு அழகாகச் சிரிக்கிறான்.
   ''ஏன்... என்னைப் பிடிக்கலையா?''
   ''வழி விடுங்க.. நான் போகணும்!''
   ''முடியாது'' - அதே சிரிப்போடு நின்றான். அவன் வெகுநேரம் அப்படியே நிற்கவேண்டும் நகரவே கூடாது எனத் தோன்றியது. நான் மீண்டும் சொன்னேன்.
   ''வழி விடுங்க... ப்ளீஸ்!''
   ''போகணும்னா அப்படித் திரும்பிக்கூட போகலாமே?'' - என் பின்னால் கை காட்டினான்.
   ''என் பேர் ராகினி.''
   ''அப்பப் பிடிச்சிருக்கு'' - கண்களை நேராகப் பார்த்துச் சிரித்தான். அதை எதிர்கொள்ள முடியாமல் என் தலை கவிழ்ந்துகொண்டது. பச்சை நிற ஜீன்ஸ், வெள்ளை நிறச் சட்டையில் கால் வளைத்து நின்ற அவனது தோற்றம் அப்படியே சித்திரமாக மனதில் பதிந்துகிடக்கிறது.
   அவன் என்னோடு பேசுகிறான் என அறிந்ததும் தோழிகள் பேச்சை நிறுத்தினர். ''நானும் அவனும் ஒரே ஜாதி. எப்படியாவது கல்யாணம் நடக்கும்னு நினைச்சேன். அவனுக்கு ஏண்டி உன்னைப் பிடிச்சுது?'' - கோயிலில் வைத்து கவிதா கதறிக் கதறி அழுதாள்.
   கோபத்தில் வீட்டில் போய் சொல்லிவிடுவாளோ எனப் பயமாகக்கூட இருந்தது.
   ''நான் வேணாப் பேசலை. நீ அழாத!''
   ''நடிக்காத போடி'' - கோபித்துக்கொண்டு போய்விட்டாள். மறுநாளே சமாதானமானாள்.
   கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு, வேலைக்காக அவன் காத்திருந்த நாட்கள் அவை. நான் முதல் ஆண்டு கல்லூரிக்குப் போக ஆரம்பித்ததும், பஸ் ஸ்டாப் வரை பின்னால் வருவது, பஸ்ஸில் ஏறி பார்த்தபடியே நிற்பது, கோயிலில் உடன் நடந்து வருவது, நூலகத்தில் எனக்காகக் காத்திருப்பது... எனப் பெரும்பாலான நேரங்கள் பாபு என்னோடு இருக்கத் தொடங்கினான். ஆனால், நாங்கள் மொத்தமாகப் பேசிய வார்த்தைகளை ஏ-4 காகிதத்தின் ஒரு பக்கத்தில் அடக்கிவிடலாம். தனியாகப் பேசவோ, பார்க்கவோ வாய்ப்பற்ற அந்த ஊரில் மினி பஸ்களும் கோயில்களும் இல்லாவிட்டால் 'காதல்’ என்ற வார்த்தையே இல்லாமல் போயிருக்கும்.
   ஆலம்பாறைப் பேருந்தில் டிரைவரின் இடதுபக்கம் இருந்த நீளமான இருக்கையில் நான் உட்கார்ந்திருக்க, பாபு பின்னால் நின்றிருந்தான். அவன் கண்களால் பேசியவற்றை எனக்கு ஏற்றமாதிரி நான் புரிந்துகொண்டிருந்தேன். தினமும் பயணிக்கும் பேருந்து என்பதால் கண்டக்டர் என்னைப் பார்த்துச் சிரிக்க, நான் பதிலுக்குச் சிரித்தேன். ஒரு முறையோடு நிறுத்தாமல் அவர் மீண்டும் மீண்டும் சிரிக்க, பாபு இருவருக்கும் இடையே வந்து நின்றுகொண்டான். ''ஆளுங்க ஏற வேண்டாமா? உள்ள போய் உட்காருங்க'' - கண்டக்டரை ஒரு பார்வையில் அடக்கினான்.
   ''யாரைப் பார்த்தாலும் பல்லைக் காட்டாத. இனி இந்தச் சீட்ல உட்காந்தா கொன்னுடுவேன்'' என்று என்னை மெதுவாக மிரட்டினான். எனக்கு எரிச்சல் வந்தது.
   ''நீங்க மட்டும் செந்தில்குமாரியைத் தூக்கித் தூக்கி ஆடுவீங்க. நான் சிரிச்சா தப்பா?'' - கடுப்பாகச் சொன்னேன். அதற்கு அவன் பதில் சொல்லவில்லை. வண்டி போய்க்கொண்டு இருக்கும்போதே இறங்கிப் போய்விட்டான். சொல்லியிருக்க வேண்டாமோ, இனி பேசுவானா? படபடப்பாக இருந்தது.
   ''பொறுக்கிப் பசங்க'' - கண்டக்டர் முணுமுணுத்தார்.
   ''அவன் ஒண்ணும் பொறுக்கி இல்லை'' - வேகமாகப் பதில் சொல்லிவிட்டு, நாக்கைக் கடித்துக்கொண்டேன்.
   பேருந்தில் இருந்து இறங்கும்போது கலுங்குப் பாலத்தில் உட்கார்ந்திருந்தான். அது ஒரு மழை மாதத்தின் இருட்டத் தொடங்கியிருந்த ஒரு மாலை. என்னோடு இறங்கியவர்கள் இடது புறம் சென்றுவிட, நான் என் வீட்டுக்குச் செல்லும் வழியைத் தவிர்த்து கலுங்குப் பாலம் வழியாக நடக்கத் தொடங்கினேன் மிகவும் மெதுவாக. அசையாமல் உட்கார்ந்திருந்தவன், நான் அவனைக் கடக்கும் நொடியில் கையைப் பிடித்தான்.
   ''உக்காரு!''
   ''அய்யோ..! நான் மாட்டேன். யாராவது வந்திடுவாங்க'' எனப் பதற, இழுத்து உட்கார வைத்தான்.
   ''நான் யாரு உனக்கு?''
   ''பாபு...''
   ''அது தெரியாதா... உனக்கு நான் யாருன்னு சொல்லு!''
   ''நீயே சொல்லேன்!''
   ஒன்றும் சொல்லாமல் என் முகத்தையே பார்த்தான். ஏதோ செய்யப்போகிறான் எனத் தெரிந்ததும், அதை மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்க்கத் தொடங்கினேன். யாராவது பார்ப்பார்கள், வீடு அருகே இருக்கிறது என்ற பயங்கள் விலகத் தொடங்கின. வலது கையால் தோளோடு அணைத்து நெற்றியில் முத்தமிட்டான். ஏன் நெற்றியைத் தேர்ந்தெடுத்தான் எனத் தெரிய வில்லை. ஆனால், ரொம்பப் பிடித்திருந்தது. பதிலுக்கு முத்தமிடத் தோன்றியது. எழுந்து கொண்டேன். சிலிர்த்துக் குளிர்ந்திருந்த உடல், குளிர் காற்றில் நடுங்கத் தொடங்கியது.
   ''சும்மா இப்படியே பார்த்துட்டு இருப்பேன்னு நினைக்காத. தூக்கிட்டுப் போயிடுவேன்.. பார்த்துக்க!''
   ''யார் வேண்டாம்னு சொன்னது'' - கேட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். வெறும் பார்வை, சின்ன ஸ்பரிசம், பேரன்பு எனத் தொடர்ந்த எங்கள் உறவுக்கு, நாங்கள் 'காதல்’ என்று பெயரிட்டுக்கொண்டோம். என் நினைவின் எல்லா நொடியிலும் அவனே நிறைந்திருந்தான்.
   கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் தொடர்ந்த எங்கள் காதல், அந்தத் திருவிழாவோடு முடிவுக்கு வந்தது. வழக்கத்துக்கு மாறாக அந்தச் சித்திரையில் மழை வெளுத்து வாங்கியது. ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்பட்டன. அதிசயமாக நான்காம் திருவிழா அன்று வானம் வெளுக்கத் தொடங்கியது. அன்றைக்குத்தான் பாபுவின் நாடகம். ஈரமாக இருந்ததால் மணலில் உட்கார முடியாமல் ஆங்காங்கே கடை வராந்தாக்களிலும் சுவர்களிலும் உட்கார்ந்து நாடகம் பார்க்கத் தொடங்கினார்கள். நான் ஒரு வீட்டுச் சுவரில் சாய்ந்து நின்றுகொண்டேன்.
   பார்வையாளராக நான் மட்டுமே இருப்பதாக எண்ணிக்கொண்டு என்னைப் பார்த்தே வசனங்களைச் சொல்லிக்கொண்டிருந்தான் பாபு. எனக்கு மட்டுமேயான அவனது மனதின் குரல் என்றே நானும் அதை உள்வாங்கிக் கொண்டிருந்தேன். அன்றைய மகிழ்ச்சியின் உச்சமாக அவன் செந்தில்குமாரியோடு ஆடவோ, அவளைத் தூக்கவோகூட இல்லை.
   நாடகம் முடிவதற்கு முன்பாகவே அதே மேக்கப்போடு மேடைக்குப் பின்னால் வந்து நான் நின்றிருந்த சுவர் அருகே வந்தான். சுற்றிலும் ஆட்கள் நிற்க ஏதாவது சொல்லிவிடுவானோ எனப் பயமாக இருந்தது. ''குமரேஷைத் தேடி வந்தேன்'' என யாரிடமோ சொல்லிவிட்டு என் காதுக்கு அருகே வந்து, ''லவ் யூ'' என சொல்லிப்போனான். முதன்முதலாக 'லவ் யூ’ என்று அவன் சொன்னது அன்றுதான். அந்த இரவில் என்றென்றைக்குமாக அவனைப் பிடித்துப்போனது.
   மறுநாள் காலை, 'பாபு, செந்தில் குமாரியோடு ஓடிப் போய்விட்டான்’ என்ற செய்தியோடு தான் விடிந்தது. கூடுதல் தகவலாக பாபு அங்கங்கே வைத்து என்னோடு பேசுகிற விஷயமும் வீட்டுக்குத் தெரிந்தது. எல்லாம் முடிந்துபோக அந்த வதந்திகள் போதுமானதாக இருந்தன. 'அந்த நாடகக்காரிக்கு காலேஜு போற பையன் இருக்கானாம். வெக்கம் இல்லாமப் போயிருக்கான் பாரு’ - ஊர் என்னென்னமோ பேசியது. 'ஒழுங்காப் படிக்கப் போறியா... இல்ல இப்படியே ஊர் சுத்திக்கிட்டுத் திரியப்போறியா?’ என்ற வீட்டின் கேள்விக்கு, நான் யோசிக்காமல் 'படிக்கிறேன்’ என்று பதில் சொன்னேன்.
   'வேற ஆள் இல்லாமத் தேடிருக்கா பாரு ஒருத்தனை’ என்றரீதியில் திட்டுகள் நிறைய விழுந்தன. எந்தப் பேச்சும் என் மனதில் இருந்து அவனுடைய நினைவுகளையோ, பிம்பத்தையோ மாற்றவில்லை. பேருந்தில், சாலையில் என எதிர்ப்படுபவர்கள் எல்லாம் அவன் சாயலைக்கொண்டு இம்சிக்கத் தொடங்கினார்கள். படிப்பை விட்டுவிட்டு அவனோடு போக வேண்டும் என்றோ, அவனைத் திருமணம் செய்துகொண்டு வாழ வேண்டும் என்ற கனவுகளோ எனக்கு இல்லை. அவனோடு பேசப் பிடித்தது, அவனோடு நடக்கப் பிடித்தது, அவன் சிரிப்பு பிடித்தது... மொத்தத்தில் அவனைப் பிடித்திருந்தது. அவ்வளவுதான். அதன் பிறகு பாபுவை அவனது அப்பா வெளியூர் அனுப்பிவிட்டதாகக் கேள்விப்பட்டேன்.
   ''நீ வந்திருக்கனு சொன்னதும் அப்படி ஒரு சந்தோஷம் அவனுக்கு. பாவம் நல்ல பையனை ஊர் எப்படியெல்லாம் பழி போட்டுச்சு.
   அஞ்சு மணிக்கு வீட்டுக்கு வர்றேன்னு சொன்னான். இனி பார்த்து என்ன பண்ணப்போற?'' - கவிதா புரியாமல் கேட்டாள். நான் பதில் சொல்லாமல், தயாராகத் தொடங்கினேன்.
   கல்லூரிக்குச் சென்ற காலத்தில் அவனுக்காகப் பார்த்துப் பார்த்து தயாராவது போல், பத்து வருடங்களுக்குப் பிறகு அவனுக்காக பிரத்யேகமாகத் தயாராகத் தொடங்கினேன். அவனைப் பார்க்கப்போவது தெரிந்தால், 'புடவை கட்டேன் ஒரு நாள்’ - அவன் எப்போதோ கேட்டது நினைவுக்கு வந்தது. நீல நிறப் புடவையில் நான் நன்றாக இருப்பதாக கவிதா சொன்னாள்.
   ''ஐ ப்ரோ பென்சில் இல்லையா உங்கிட்ட?''
   ''உன்னைப் பொண்ணா பார்க்க வர்றான்... போதும் இதெல்லாம்!''
   ''குடுறி ஒழுங்கா...''
   ''ஒண்ணும் சரியாப் படலை'' சிரித்துக் கொண்டே எடுத்துத் தந்தாள்.
   மொட்டை மாடியில் இதோ பக்கத்தில் பாபு. இடைப்பட்ட வருடங்கள் அவனில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. அதே சிரிப்பு, அதே மீசை, அதே உடல்.
   ''அப்படியே இருக்க பாபு.''
   ''நீ நிறைய மாறிட்ட... வெயிட் போட்டுட்டல்ல. ஆனா, அழகா இருக்க. புடவையில இன்னிக்குத்தான் பார்க்கிறேன்!''
   அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல், வழக்கம்போல் கண்கள் நிலம் நோக்கின.
   ''உன்னைப் பார்ப்பேன்னு நினைக்கவே இல்லை. ரொம்ப சந்தோஷமா இருக்கு'' - இப்போதுதான் பாபுவை ஒருமையில் அழைக்கிறேன்.
   ''எப்பவும் நினைப்பேன் உன்னை. உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னுதான் சந்திக்க முயற்சிக்கல!''
   நான் அமைதியாக இருந்தேன்.
   ''உனக்காவது புரிஞ்சுதா என்ன?'' - குரலில் சின்னப் பதட்டம் இருந்தது.
   ''எனக்குத்தான புரியும்!'' - என் பதில் அவன் முகத்தில் நிம்மதியைத் தந்தது. அவன் எதைக் கேட்டான், நான் எதைப் புரிந்ததாகச் சொன்னேன்? யோசித்தெல்லாம் பேசவில்லை. ஆனால், அப்படித்தான் பதில் சொல்ல முடிந்தது.
   அவன் இயல்பாக அருகில் வந்து என் வலது கையை தன் இரு கைகளுக்குள் எடுத்து வைத்துக்கொண்டான். வருடங்கள் பின்னோக்கிப் போய்... நானும் அவனும் மட்டுமேயான ஓர் உலகத்தில் இருப்பதாகத் தோன்றியது.
   ''பஸ்ல கூட வருவல்ல... அப்ப ஒரு மாதிரி கம்ஃபர்ட்டா ஃபீல் பண்ணுவேன். நாம பேசவே மாட்டோம். ஆனாலும் அந்த ஃபீல் இருக்கும். அதை அப்புறம் நான் நிறைய நேரத்துல வேற எங்கெங்கயோ, யார் யார்கிட்டயோ எதிர்பார்த்து ஏமாந்திருக்கேன். இப்ப நீ வந்ததும் டக்குனு அந்த ஃபீல் வந்து ஒட்டிக்குது!'' - இவ்வளவு நீளமாக அவனிடம் பேசுவது இதுவே முதன்முறை.
   ''இத்தனை வருஷத்துல ஒருநாள்கூட உன்னை நினைக்காம இருந்தது இல்லை. எவ்ளோ நல்லா இருந்தது அப்பல்லாம். உனக்காக வெயிட் பண்ணி, உன்னைப் பார்த்த அந்த சந்தோஷம்லாம் அப்புறம் வரவே இல்லை ராகி'' - சிரித்தான். அவன் கைகளுக்குள் இருந்த என் கையை அழுத்தினான்.
   ''நாடகம் எல்லாம் இனி இல்லையா பாபு?''
   ''நீ பார்க்கிறேன்னா சொல்லு... உனக்காகப் போட்டுடலாம்!''
   ''நீ போடுறேன்னா சொல்லு... முதல் வரிசையில உக்காந்து பார்க்கிறேன். இப்ப விசில் அடிக்கக்கூட நல்லாத் தெரியும்.''
   சிரித்தான்.
   ''இனிதான் உனக்காகப் போடணுமா என்ன? போட்ட நாடகம் எல்லாமே உனக்காகத்தானே! உன்னைத் தவிர எதிர்ல வேற யாரைக் கவனிச்சேன்னு நினைக்கிற?'' என்றதும், எனக்கு பறப்பது போல் இருந்தது. வருடங்கள் கடந்தும் எனக்கான வார்த்தைகளை பத்திரமாகச் சேமித்து என்னிடம் ஒப்படைக்கிறான். அந்த சந்தோஷத்தை இங்கே வார்த்தைகளில் நான் எப்படிச் சொல்ல?
   கவிதாவின் மகளோடு என் மகள் மேலேறி வந்தாள். ''பொண்ணு... அக்‌ஷயா..!'' - மகளை அறிமுகப்படுத்தினேன்.
   தூக்கிக்கொண்டான்.
   ''என்ன படிக்கிற?''
   ''ஸ்கூல் போறேன்.''
   ''அங்கிள் பேரு பாபு...''
   ''என் பேரு அக்‌ஷயா.''
   ''அக்ஷயா எப்ப வந்தீங்க?''
   ''எப்ப வந்தோம்மா?'' - என்னிடம் கேட்டாள். நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை.
   ''அக்‌ஷயாவோட அப்பா பேர் என்ன?''
   உன் புருஷன் பேர் என்ன என்று என்னைக் கேட்காமல், மகளிடம் அவள் அப்பா பற்றிக் கேட்டது பிடித்திருந்தது. காற்றில் அலைந்த அவன் முடியைக் கலைத்துவிட வேண்டும் போல் இருந்தது.
   என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தோம். நிறையப் பேசியது போலவும், எதுவும் பேசாதது போலவும், எவ்வளவு பேசினாலும் தீராதது போலவும் இருந்தது அந்த மாலை. இருட்டத் தொடங்கியதும் கிளம்பினான்.
   ''இனி என்னிக்குப் பார்ப்போம்?''
   ''இதுமாதிரி என்னிக்காவது பார்ப்போம்.''
   ''பார்க்கணும்... பார்ப்போம்!'' எனச் சொல்லிவிட்டு குழந்தையைத் தூக்கி அவள் நெற்றியில் முத்தமிட்டான். ''வர்றேன்'' என என் தலை கோதி விடைபெற்றான்.
   தொலைபேசி எண்ணைக் கேட்கவோ, கொடுக்கவோ இல்லை. அதெல்லாம் தேவையும் இல்லை எனத் தோன்றியது.
   இதேபோன்ற ஒரு நாளுக்காக, இந்தத் தலைகோதலுக்காக, இனியும் காத்திருப்பதை நினைத்தபோதே உடல் சிலிர்த்தது. எதிரே நீண்டு கிடக்கும் வாழ்க்கைக்கு, மேலும் ஓர் அர்த்தம் சேர்ந்திருப்பதாகத் தோன்றியது. தெருவை எட்டிப் பார்த்தேன். தெருமுனையில் திரும்பும் இடத்தில் நின்று கை காண்பித்தான். தெரு விளக்கின் மங்கிய ஒளியில் அவன் இன்னும் அழகாக இருப்பதாகத் தோன்றியது.
   சந்தோஷத்தில் மகளைத் தூக்கி அவள் நெற்றியில் முத்தமிட்டேன். அப்படியாக... எனக்கான அவன் முத்தத்தை நான் திரும்ப எடுத்துக்கொண்டேன்!
   ************
   https://www.vikatan.com