Sign in to follow this  
நவீனன்

கண்ணை மறைக்கும் ஆத்திரம்: ரபாடாவின் சாதனையும் வேதனையும்

Recommended Posts

கண்ணை மறைக்கும் ஆத்திரம்: ரபாடாவின் சாதனையும் வேதனையும்

 

 
RABADAKB1

சாதனையாளார் ரபாடாவின் அடக்க முடியாத உணர்வு. எதிரில் ஸ்மித்.   -  படம். | ராய்ட்டர்ஸ்.

போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் வாயை அடைக்கும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்காவின் சாதனையாளர் கேகியோ ரபாடா என்றால் மிகையாகாது. 11 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

கேப்டன் ஸ்மித்தே முதல் இன்னிங்சில் ரபாடா வீசிய ஒரு ஸ்பெல்லை ‘ரியல்லி வெரி டிஃபிகல்ட் (உள்ளபடியே மிகக்கடினமானது) என்று வர்ணித்தார், எதிரணியின் கேப்டன்களில் பலர் இப்படி மனம் திறந்து இன்னொரு அணியின் வேகப்பந்து வீச்சாளரைப் பாராட்டுவது அரிது.

28 டெஸ்ட் போட்டிகளில் 4வது முறையாக அவர் ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதித்துள்ளார். டேல் ஸ்டெய்ன், மகாய நிடினியை விடவும் இவர் குறைந்த வயதில் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

23 வயதுக்குள்ளாகவே 4 முறை டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வக்கார் யூனிஸ் சாதனையையும் சமன் செய்துள்ளார் ரபாடா. இதன் மூலம் கிளென் மெக்ரா, ஆண்டர்சன், ஆலன் டோனல்ட், வால்ஷ், ஆம்புரோஸ், ஃபிரெட் ட்ரூமேன் போன்ற மேதை வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் சேர்ந்தார் ரபாடா.

கபில்தேவ் இருமுறைதான் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஷான் போலாக் ஒருமுறை கைப்பற்ற பிரெட் லீ ஒரு முறை கூட 10 விக்கெட்டுகளை ஒரு டெஸ்ட் போட்டியில் கைப்பற்றவில்லை. இந்தத் தொடருடன் ஓய்வு பெறும் மோர்னி மோர்கெல் 84 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இன்னமும் ஒரு 10 விக்கெட் பவுலிங்கை வீசியதில்லை.

தற்போது 28 டெஸ்ட் போட்டிகளில் 135 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 21.45 என்ற ஸ்ட்ரைக் ரேட் ரபாடாவின் தனித்துவமானது.

இவையெல்லாம் இவரது சாதனை, இது ஒரு புறமிருக்க அவரது ஆத்திரம் அவரது கண்களை மறைத்துள்ளது, வெள்ளைகார கிரிக்கெட் வீரர்களைப் பார்த்து சூடுபோட்டுக் கொள்ளும் பூனை போல நம் ஊரில் விராட் கோலி, அங்கு ரபாடா, உணர்ச்சிவயப்படுதல், அப்படிப்பட்டால்தான் கிரிக்கெட்டில் தான் இருக்கிறோம் என்ற (அசட்டு) நம்பிக்கை போன்றவை ரபாடாவையும் விட்டுவைக்கவில்லை. ஆனால் கோலி, ஸ்மித், வார்னர், லயன், பெரிய இடத்துப் பிள்ளைகள் அவ்வளவு சுலபத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது, ரபாடா போன்றவர்கள் அப்படியா? இதை அவர் உணரவைல்லை.

இதனால்தான் ஸ்மித்தை தோளில் இடித்து ஏற்கெனவே தடையின் விளிம்பில் இருந்த ரபாடா இப்போது தடை செய்யப்பட்டுள்ளார்.

“என்னையும் என் அணியையும் தலைகுனியச் செய்து விட்டேன். இதை கற்றுக் கொள்ளும் ஒரு பாடமாக கருதுகிறேன். நான் இதனால் மகிழ்ச்சியடையவில்லை. காலம் நகரும்” என்றார் விரக்தியுடன். கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் தடை பெற்றார். தற்போது இன்னொரு டெஸ்ட் தடை, இதனால் தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை 1992 மறுவருகைக்குப் பிறகு தங்கள் மண்ணில் தொடரை வெல்லும் வாய்ப்பு பெரும் சிக்கலாகியுள்ளது.

http://tamil.thehindu.com/sports/article23168418.ece

Share this post


Link to post
Share on other sites

ரபாடா எந்திரம் அல்ல; வார்னர் விவகாரம் இதை விட மோசமானது: பாரபட்சம் குறித்து டுபிளெசிஸ் சாடல்

 

 
duplessis

படம். | ஏ.எஃப்.பி.

வார்னருக்கு ஒரு சட்டம் ரபாடாவுக்கு ஒரு சட்டமா? வார்னர் நடத்தை மோசமானது, ஆனால் அவருக்கு தடை விதிக்கப்படவில்லை ஏன்? என்று கேட்கிறார் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டுபிளெசிஸ்.

ஸ்மித்தை வழியனுப்பி அவரை உரசியதால் ஏற்கெனவே உள்ள தகுதியிழப்புப் புள்ளிகளுடன் கூடுதல் புள்ளிகள் சேர 2 டெஸ்ட் போட்டிகளுக்கு தென் ஆப்பிரிக்க நட்சத்திர பந்து வீச்சாளர் ரபாடா விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் வார்னர் விவகாரம் இதைவிடவும் மோசமானது என்று கூறி ஐசிசி தகுதி இழப்புப் புள்ளிகள் முறை மீது தென் ஆப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ் சாடியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியது:

கிரிக்கெட் உணர்ச்சிகரப் பக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு சம்பவமும் கேமராவில் உள்ளது, இதைப்பார்த்தாயா, அதைப்பார்த்தாயா... என்று ஆர்வம் கொப்புளிக்கிறது ரசிகர்களிடையே. இது டெஸ்ட் கிரிக்கெட், ஆஸ்திரேலியா அவர்கள் வழியில் டெஸ்ட் போட்டியை ஆடுவது பற்றி எங்களுக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. அது ஒருவிதத்தில் ஆட்டத்துக்கு நல்லதுதான்.

கேகிஸோ ரபாடா ஓடி வந்து 15 ஓவர்கள் வீசுகிறார், அவுட் ஆக்க கடுமையாக முயற்சி செய்கிறார் அதில் வெற்றியடையும் போது அவர் உணர்வை வெளிப்படுத்தவே செய்வார், இல்லையெனில் எதற்கு மனிதர்கள் கிரிக்கெட் ஆட வேண்டும், ரபாடாவுக்குப் பதில் பந்து வீச்சு எந்திரத்தையும் பேட்ஸ்மென்க்குப் பதில் ரோபோவையும் ஆடவைக்கலாமே.

ரபாடாவுக்கு எதிரான புகார் லெவல் 2 ஆகும். இதற்கு 3 தகுதியிழப்புப் புள்ளிகள். அவர் சட்டையை உரசினார். ஆனால் வார்னர் விவகாரம் இன்னும் மோசமானது. ரபாடா ஸ்மித் உடல் தொடர்பு மிக குறைந்தபட்சமாகும். ஆனால் வார்னர் விவகாரம் இப்படியல்ல, இந்த இரண்டையும் ஏன் ஒரே விதமான விதிமீறலாகப் பார்க்க வேண்டும், வார்னர் விவகாரம் இன்னும் அதிகமானது.

மேலும் ஒரு முக்கியத் தொடரின் சூழலையும் அதிகாரிகள் கவனிக்க வேண்டும், இரண்டு டாப் அணிகள் மோதுகின்றன. சிறந்த வீரர்கள் விளையாடுவது உறுதி செய்யப்பட வேண்டும். அவர்கள் இது உடல் ரீதியான மோதல் என்கின்றனர், ஆனால் இது வெறும் சட்டை உரசல்தான். மேலும் இது வேண்டுமென்றே செய்யப்பட்டதல்ல. ஆட்ட நடுவர் கூறுவது போல் இதைவிடவும் பெரிய விஷயம் இங்கு நடந்து வருகிறது. பெரிய தொடர் என்பதால் டேவிட் வார்னர் லெவல் 3 நடத்தை மீறல் என்றாலும் தடை செய்யப்படவில்லை. அதுதான் ஏன் என்கிறேன்.

இவ்வாறு கூறினார் டுபிளெசிஸ்.

http://tamil.thehindu.com/sports/article23214531.ece?homepage=true

Share this post


Link to post
Share on other sites

தடை விதிக்கும் அளவுக்கு ரபாடா அப்படி என்ன செய்துவிட்டார்? #SAvsAUS

 
 

ககிசோ ரபாடா... போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகன்; சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் -1 பெளலர்; டெஸ்ட் அரங்கில் நான்கு முறை பத்து விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது தென்னாப்பிரிக்கா பெளலர்; ரிவர்ஸ் ஸ்விங்கில் மிரட்டுபவர். இருந்தும் என்ன பயன்? ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கேப்டவுன், ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் போட்டிகளில் விளையாட அவருக்குத் தடை விதித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். 

ரபாடா #SAvsAUS

 

ஸ்டீவ் ஸ்மித் - ஆகச் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன். அவர் விக்கெட்டை எடுப்பது எதிரணி பெளலர்களுக்கு சவால். அதனால்தான், போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித்தை எல்பிடபுள்யு முறையில் ஆட்டமிழக்கச்செய்த பின், கொஞ்சம் ஓவராக உணர்ச்சிவசப்பட்டுவிட்டார் ரபாடா. ஸ்டீவ் ஸ்மித் முகத்துக்கு நேராக yes yes yes எனக் கத்தியதோடு நின்றிருக்கலாம். அல்லது ஸ்மித்தைக் கடந்து செல்லும்போது அவருக்குப் பின்புறமாக தோள்பட்டையோடு உரசாமல் இருந்திருக்கலாம். ரபாடா இங்குதான் உணர்வைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டார். வழக்கமாக ஆஸ்திரேலியலர்கள்தான் `எப்படா’ என `ஸ்லெட்ஜிங்’ செய்யக் காத்திருப்பர். ரபாடா தன்னை  உரசிவிட்டுச் சென்றதை ஸ்டீவ் ஸ்மித்தும் உணர்ந்தார். இருந்தாலும், ரபாடா வேண்டுமென்றே அப்படிச் செய்திருக்க மாட்டார். இயல்பாக நடந்திருக்கும் என ஸ்மித் வம்பை வளர்க்கவில்லை. அதைவிட தன் விக்கெட்டைக் காப்பாற்றிக்கொள்வதே அப்போது அவருக்கு முக்கியமானதாகத் தெரிந்தது. ரிவ்யூ கேட்பதில்தான் ஸ்மித் குறியாக இருந்தார். 

ஸ்மித் உன்னிப்பாகக் கவனிக்கவில்லையே தவிர, மேட்ச் ரெஃப்ரி ஜெஃப் க்ரோவ் இதைக் கவனிக்காமல் இல்லை. ``ரபாடா, ஸ்மித் இடையே உரசல் ஏற்பட்டதைக் கவனித்தேன். இந்த உரசல் தேவையில்லாதது. வேண்டுமென்றே செய்ததுபோல இருந்தது. இந்த உரசல் நிகழாமல் இருப்பதற்கான சாத்தியம் இருந்தது. எனவே, இது இயல்பாக நிகழ்ந்தது என்ற வாதத்தை ஆதரிப்பதற்கான சான்று இருப்பதாகத் தெரியவில்லை. எல்லாவற்றையும் விட, இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் இரு அணிகளையும் அழைத்து நடத்திய கூட்டத்தில், பரஸ்பரம் எதிரணியினரை மதிப்பது குறித்தே அதிகம் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அப்படி இருந்தும் இதுபோன்ற சம்பவம் நடப்பது ஏமாற்றம் அளிக்கிறது. ரபாடா போன்ற திறமையான இளம் வீரர் சஸ்பெண்ட் செய்யப்படுவது மகிழ்ச்சியளிக்கவில்லை. இருந்தாலும், அவர் பலமுறை ஐ.சி.சி-யின் நடத்தை விதிமுறைகளை மீறிவிட்டார்’’ என்றார் க்ரோவ். 

ரபாடா #SAvsAUS

``இதெல்லாம்தான் டெஸ்ட் கிரிக்கெட். 15 ஓவர்கள் கடுமையாகப் பந்துவீசி, கடைசியாக ஒரு முக்கியமான விக்கெட்டைக் கைப்பற்றும்போது ஒரு பெளலர் தன் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தத்தான் செய்வார். இதெல்லாம் கூடாது என்றால், நீங்கள் ஒரு பெளலிங் மெஷினை வைத்து ஒரு ரோபோவைத்தான் பேட்டிங் பிடிக்கச் சொல்ல வேண்டும்’’ என்றார் தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளெஸ்ஸி. கேப்டன் என்ற முறையில் அணியின் வீரனுக்கு ஆதரவாக நிற்க வேண்டியது டு பிளெஸ்ஸி கடமை. ஆனால், ரபாடாவுக்குத் தடை என்ற செய்தி வெளியானதுமே, `ஆஸ்திரேலியர்கள் செய்யாத ஸ்லெட்ஜிங்கா? தடை என்பதெல்லாம் ஓவர். இது திட்டமிட்ட சதி’ என அவருக்கு ஆதரவாக சோசியல் மீடியாவில் விவாதம் நடந்தது. 

ரன் அவுட் செய்துவிட்டுக் கீழே விழுந்து கிடந்த டி வில்லியர்ஸ் அருகே பந்தைப் போட்டுச் சென்றபோது, நாதன் லியான் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவின் கோரமுகம் வெளிப்பட்டதாகவே விமர்சனம் எழுந்தது. அந்த அநாகரிகச் செயலுடன் ஒப்பிடும்போது ரபாடா உணர்ச்சிவசப்பட்டது தவறில்லை. ஆனால், ரபாடா அடிக்கடி இப்படி உணர்ச்சிவசப்படுவதுதான் இப்போது பிரச்னை. கடந்த ஒன்பது மாதங்களில் மூன்றாவது முறையாக, பேட்ஸ்மேன்களை ரபாடா முறைதவறி வழியனுப்பி வைத்துள்ளார்.

கடந்த மாதம் ஜூலையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின்போது, பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தியபின், கெட்ட வார்த்தையில் திட்டினார் ரபாடா. கடந்த மாதம் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஷிகர் தவன் விக்கெட்டை வீழ்த்தியபின், டாடா காட்டி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதும் சர்ச்சையைக் கிளப்பியது. போர்ட் எலிசபெத் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை எடுத்த பின் அவரிடம் உரசியது மட்டுமல்லாது, இரண்டாவது இன்னிங்ஸில் டேவிட் வார்னர் விக்கெட்டை வீழ்த்தியபின்பும் ஓவராக ஆர்ப்பரித்தார். ஆக, ஒவ்வொரு முறை விதியை மீறும்போதும், எச்சரிக்கை மட்டுமின்றி  ஐ.சி.சி-யின் நடத்தை விதிமுறைகளை மீறியதற்கான புள்ளிகளையும் சேர்த்தே பெற்றுவந்தார். எல்லாம் சேர்த்து மொத்தமாக வந்தது வினை. 

Rabada #SAvsAUS

ஐ.சி.சி-யின் திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, களத்தில் அநாகரிகமாக நடக்கும் வீரர்களுக்கு Level 1, Level 2, Level 3 பிரிவுகளின் கீழ் demerit புள்ளிகள் வழங்கப்படும். அதாவது எதிரணி வீரர்களுடன் உடல் ரீதியான மோதலில் ஈடுபட்டால் Level 3 பிரிவின் மூன்று புள்ளிகள், அநாகரிகமான சமிக்ஞை செய்தால் Level 1 பிரிவின் கீழ் ஒரு புள்ளி, அபராதம் விதிக்கப்படும். மொத்தமாக நான்கு புள்ளிகளைப் பெற்ற வீரருக்கு, ஒரு டெஸ்ட் போட்டியிலோ அல்லது இரண்டு ஒருநாள் போட்டிகளிலோ பங்கேற்கத் தடை விதிக்கப்படும். (அந்த அணி அடுத்து உடனடியாக எந்தத் தொடரில் பங்கேற்கிறதோ அதைப் பொறுத்து தடை அமலுக்கு வரும்.) எட்டுப் புள்ளிகள் எனில்  இரண்டு டெஸ்ட் அல்லது நான்கு ஒருநாள் போட்டிகளுக்குத் தடை விதிக்கப்படும். கடந்த ஒன்பது மாதங்களில் ரபாடா எட்டு demerit புள்ளிகளைப் பெற்றிருக்கிறார். ஷிகர் தவனை பெவிலியன் அனுப்பியபோதே ரபாடாவின் புள்ளிகள் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்து விட்டது. எனவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் எந்த வம்பு தும்புக்கும் போகக் கூடாது. மீறி உணர்ச்சிவசப்பட்டால் டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாமல் போகலாம் என முன்பே அறிவுறுத்தப்பட்டிருந்தார். ஏனெனில், இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் நான்கு புள்ளிகளைப் பெற்றதும், ஒரு டெஸ்ட் மேட்ச்சில் விளையாடும் வாய்ப்பை இழந்திருந்தார் ரபாடா. இவ்வளவு நடந்தும் அவர் தன்னைக் கட்டுப்படுத்தவில்லை. 

Rabada #SAvsAUS

ரபாடாவின் ஆக்ரோஷம் மட்டுமல்ல, இந்த டெஸ்ட் தொடரில் பல களேபரங்கள் நடந்தன. டர்பன் டெஸ்ட் போட்டியில், மார்க்ரமை ஏகத்துக்கும் ஸ்லெட்ஜிங் செய்தனர் ஆஸ்திரேலிய வீரர்கள். விக்கெட் கிடைக்காத ஒவ்வொரு பந்துக்கும் மிச்செல் ஸ்டார்க் கெட்ட வார்த்தைகளை உமிழ்ந்தார். போர்ட் எலிசபெத் டெஸ்ட்டில், டிரெஸ்ஸிங் ரூமுக்குத் திரும்பும் வழியில் டி காக் - வார்னர் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். இதற்காக வார்னருக்கு 3 demerit புள்ளிகள், டி காக்குக்கு ஒரு புள்ளி கொடுக்கப்பட்டது. ரபாடா பந்தில் விக்கெட்டை இழந்தபின் அவரைத் திட்டியதற்காக மிச்செல் மார்ஷுக்கு அபாரதமும் ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது. டி வில்லியர்ஸ் அருகே பந்தைப் போட்டதற்காக நாதன் லியானுக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது. ஆக, இரு தரப்பிலும் போட்டிபோட்டுக்கொண்டு demerit புள்ளிகளைப் பெற்றுவருகின்றனர். விக்கெட் வீழ்த்துவதில் மட்டுமல்லாது அந்தப் புள்ளிகளைப் பெறுவதிலும் ரபாடா முதலிடத்தில் இருப்பதுதான் இப்போதைய சிக்கல்.

 

ரபாடா இல்லாத தென்னாப்பிரிக்காவை கேப் டவுன் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா எளிதில் சமாளிக்கும். ``இனிமேல் என் ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் அது என் அணியைப் பாதிக்கிறது. என்னையும் பாதிக்கிறது. அதேநேரத்தில் என் உணர்வுகளை முழுமையாகக் கட்டுப்படுத்தவும் முடியாது. வேண்டுமென்றால் பேட்ஸ்மேன்களிடம் இருந்து விலகிச்சென்று என் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவேன்’’என்றார் ரபாடா. அதுதான் சரி. ஏனெனில், ஒரு நல்ல பெளலர் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது அழகல்ல!

https://www.vikatan.com/news/sports/119129-rabada-handed-twotest-suspension-for-misbehavior.html

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this