Jump to content

சினிமா செய்திகள்:


Recommended Posts

சினிமா செய்திகள்: ‘பையா‘ பாணி கதைக்களத்தில் கார்த்தியின் அடுத்த படம்

 
காலா

விரைவில் வெளியாகிறது ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா‘ படப்பாடல்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கியிருக்கும் படமான ‘காலா‘வின் டீசர் அடுத்த மாதம் 27ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2ம் தேதியே வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் ஒரு புறம் டப்பிங், இன்னொரு புறம் பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் என்று படத்தின் இறுதிக்கட்ட வேலையை இயக்குநர் முடுக்கிவிட்டுள்ளார்.

டப்பிங் வேலைகளை முடித்துவிட்டு ரஜினிகாந்த் தன்னுடைய அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கிவிட்டார்.

ரஞ்சித்

படத்தில் வில்லனாக நடித்துள்ள நானா படேகர் தன்னுடைய காட்சிகளுக்கு வசனம் பேசி கொடுத்துள்ளார். காலா திரைப்படம், தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாவதால் இரண்டிற்கும் குரல் கொடுத்து முடித்துவிட்டார் நானா படேகர்.

இதையடுத்து மீதமுள்ள நடிகர்களின் டப்பிங்கையும் முடித்து, இறுதிக்கட்ட பணிகளில் இறங்க திட்டமிட்டிருக்கும் ரஞ்சித் இந்த மாத இறுதியில் காலா படத்தின் பாடல்களை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்.

புதுமுக இயக்குர் ரஜத் இயக்கத்தில் கார்த்தி

கார்த்தி

‘கடைக்குட்டி சிங்கம்‘ படத்தை தொடர்ந்து புதுமுக இயக்குநர் ரஜத் இயக்கும் புதுப் படத்தில் கார்த்தி நடிக்கிறார். அதற்கான படப்பூஜை நடந்து முடிந்துள்ளது.

காதல், காமெடி ஆக்‌ஷன் என கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த பையா போன்ற கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகவிருக்கிறது.

இந்தப் புதுப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். கார்த்தி நடித்த எந்தப் படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தது இல்லை.

மேலும் ‘தீரன் அதிகாரம் ஒன்று‘ படத்தை தொடர்ந்து கார்த்தியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.

இந்த படத்திற்கான வேலைகள் தொடங்கிவிட்டாலும், அதற்கான தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தீபாவளிக்கு வரயிருக்கும் விஜயின் 62வது படம்?

ஜோசப் விஜய்

விஜய் நடிக்கின்ற 62வது படத்திற்கான படப்பிடிப்பு இப்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இங்கு படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் அமெரிக்கா செல்லவிருக்கின்றனர்.

இயக்குநர் ஏ. ஆர் முருகதாஸ் இயக்குகின்ற இந்தப் படத்தில் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். வில்லன் கதாபாத்திரத்தில் ராதரவி நடிக்கிறார். அரசியல் தலைவர் பழ. கருப்பையாவும் ஒரு பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

கதாநாயகியாக கீர்த்தி சுரேஷை ஏற்கனவே இப்படத்துக்கென ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் தற்போது வரலட்சுமி சரத்குமாரையும் சேர்ந்துள்ளனர்.

வரலட்சுமிக்கு கதாநாயகி வேடம் இல்லை என்றாலும் கதாநாயகிக்கு நிகரான கதாபாத்திரம் என்றும், இதன் மூலம் வரலட்சுமிக்கு சிறப்பான பெயர் கிடைக்கும் என்றும் கூறுகின்றனர்.

விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி நடிப்பில் உருவாகிவரும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு ஹீரோவை இயக்கும் ‘இருமுகன்‘ திரைப்படப் புகழ் ஆனந்த் சங்கர்

சினிமா

கடந்த ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘அர்ஜூன் ரெட்டி‘

இந்த படத்தில் ஹீரோவாக நடித்த விஜய் தேவரகொண்டாவை தமிழ் திரைப்படத்தின் ஹீரோவாக வைத்து படம் ஒன்றை இயக்குகிறார் ஆனந்த் சங்கர்.

அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இவர் ஏற்கெனவே இயக்கியுள்ளார்.

நோட்டா

"நோட்டா" என்ற பெயரில் நாடக வகையில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

ஷூட்டிங் வேலைகள் வேகமாக நடைபெறும் இந்த படத்தில் மெக்ரீன் கதாநாயகியாக நடிக்கிறார்.

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்‘ படத்தில் இவர் நடித்திருக்கிறார்.

அஜித் - சிவா கூட்டணியில் "விசுவாசம்"

அஜித்

‘விவேகம்‘ படத்தை தொடர்ந்து அஜித் - சிவா கூட்டணியில் "விசுவாசம்" என்ற படத்திற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது.

கடந்த ஜனவரி மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கி, 2018 தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர்.

ஆனால் நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட பணிகள் தாமதமாகிவிட்டதால் ‘விசுவாசம்‘ படப்பிடிப்பு தள்ளிச்சென்றது. எல்லா வேலைகளும் முடிந்துள்ள நிலையில் சிவா படப்பிடிப்புக்குத் தயராகியுள்ளார்.

இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிய வருகிறது.

இதற்கு ஹைதராபாத் ராமோஜி ராவ் ஸ்டூடியோவில் செட் அமைக்கப்படுகிறது. அந்தப் பணிகள் கிட்டதட்ட முடியும் தருவாயில் உள்ளன.

வட சென்னை போன்று செட் அமைக்கப்படுகிறது. குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகவிருக்கும் விசுவாசம் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

ரோபோ சங்கர், யோகி பாபு, தம்பி ராமையா ஆகியோர் நகைச்சுவை பாத்திரங்கிளில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

அஜித் நடிப்பில் உருவாகும் இந்த 58வது படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு முழுவதும் ஹைதராபாதில் நடைபெறும் நிலையில், பாடல் காட்சிகளை படமாக்க மட்டும் வெளிநாடு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரே கட்ட படப்பிடிப்பில் முழு படத்தையும் படமாக்க இந்தப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனை சத்ய ஜோதி நிறுவனம் சார்பில் தியாகராஜன் தயாரிக்கவுள்ளார்.

இயக்குர் சமுத்திரகனி இயக்கத்தில் நாடோடிகள் 2

நாடோடிகள்

2009ம் ஆண்டு சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார், விஜய் வசந்த், அனன்யா, அபிநயா, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்து, வெளியாகி வெற்றியடைந்த படம்தான் நாடோடிகள்.

நட்புக்கு முக்கியதுவம் கொடுக்கும் இந்தப்படம், ரூ.7 கோடி செலவு செய்து எடுக்கப்பட்டது. படத்துக்கு ரூ.35 கோடி வசூலானதாக கூறப்பட்டது.

இந்த திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தற்போது அந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கிறார் சமுத்திரகனி.

இதற்கான படப்பிடிப்பு கடந்த வெள்ளி கிழமை தொடங்கியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த சசிகுமார், பரணி ஆகியோர் நாடோடிகள் 2ல் நடிக்கின்றனர்.

மேலும், இயக்குநர் சமுத்திரக்கனியும், நடிகை அஞ்சலியும் படத்தில் இணைந்துள்ளனர். மெட்ராஸ் எண்டர்பிரைஸ் நிறுவனம் சார்பில் நந்தகுமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

ஜெய்

கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான ‘நீயா‘, 39 ஆண்டுகளுக்குப் பின் ‘நீயா 2 

கமல்ஹாசன் நடிப்பில் 1979ம் ஆண்டு ‘நீயா‘ திரைப்படம் வெளியானது. பாம்பை கதைக்களமாக கொண்டு இதனை படமாக்கியிருந்தார்கள்.

அந்த திரைப்படம் வெளிவந்து 39 ஆண்டுகள் கழித்து நீயா 2-வை திகில் படமாக சுரேஷ் என்பவர் இயக்குகிறார். விமல் நடிப்பில் வெளியான ‘எத்தன் ‘படத்தை சுரேஷ் இயக்கியுள்ளார்.

நடிகர் ஜெய் கதாநாகனாகவும், கேத்ரின் தெரசா, வரலட்சுமி சரத்குமார், ராய் லட்சுமி (லட்சுமி ராய்) ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். ராய் லட்சுமி பாம்பாக நடிக்கிறார்.

படப்பிடிப்பு விரைவாக நடைபெற்று வருகிறது.

அம்பிகாவின் மகன் கதாநாயகனாக நடிக்கும் "கலாசல்"

சினிமா

கலைத்தாய் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.சி. பாலு தயாரிக்கும் படம் "கலாசல்". நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் கதாநாயகனாக இதில் அறிமுகமாகிறார்.

நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா நாயகியாக அறிமுகமாகிறார். ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன்பாப், அபிஷேக், பானுசந்தர், சாய்பிரியா ஆகியோர் இத்திரைப்படத்தில் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இதனை இயக்குபவர் அஸ்வின் மாதவன்.

http://www.bbc.com/tamil/arts-and-culture-43358822

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.