Sign in to follow this  
நவீனன்

ஒரிஜினல் ரஜினியா... டூப்ளிகேட் எம்.ஜி.ஆரா?

Recommended Posts

ஒரிஜினல் ரஜினியா... டூப்ளிகேட் எம்.ஜி.ஆரா?

 
 

ப.திருமாவேலன்

 

ந்திரன் ரஜினி இப்போது ‘எம்.ஜி.ஆர்’ ரஜினியாக மாறிவிட்டார். அவரது எம்.ஜி.ஆர் பக்தியைப் பார்க்கும்போது புல்லரிக்கிறது. இவ்வளவு எம்.ஜி.ஆர் பக்தியை ஏன் அவர் இவ்வளவு நாளும் வெளியிடாமல் மறைத்து வைத்திருந்தார் என்பது புரிய வில்லை. அரசியல் ஆசை அவரை எம்.ஜி.ஆர் தொப்பியை அணியத் தூண்டியிருக்கிறது.

‘‘அரசியல்ல ஜெயிக் கணும்னா திறமை, புத்திசாலித் தனம், உழைப்பு மட்டும் பத்தாது. சந்தர்ப்பம், சூழ்நிலை, நேரம்... இந்த மூன்றுக்கும் மிகப் பெரிய இடமுண்டு. அரசிய லுக்கு நான் வந்திருக்கணும்னா 1996-லயே வந்திருக்கணும். என்னைக் கட்டாயப்படுத்தி வரவைக்க முடியாது. கட்டாயப் படுத்திக் கல்யாணம் பண்ணினா வாழ்க்கை நல்லாவா இருக்கும்? வரணும்னு நினைச்சா நாளைக்கே ஏற்பாடு பண்ணிடுவேன். ஆனா, அவன் சொல்லணும்” என்று 2008-ல் சொன்னார் ரஜினி. இதோ இப்போது ‘அவன்’ சொல்லி விட்டான் போல!

p16b_1520590912.jpg

‘‘எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது. சினிமாவிலிருந்து அவரைப் போல யாரும் அரசியலில் ஜொலிக்க முடியாது என்கிறார்கள். சத்தியமாக யாரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது. அவர் ஒரு யுக புருஷர். பொன்மனச் செம்மல். மக்கள் திலகம். நூறு அல்ல, ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவரைப் போல யாரும் வரமுடியாது. அவரே மீண்டும் பிறந்து வந்தால்தான் உண்டு. எம்.ஜி.ஆரைப் போல ஒருவர் வருகிறேன் என்று சொன்னால், அவனைவிட பைத்தியக்காரன் யாரும் இருக்க முடியாது. ஆனால், அவர் தந்த நல்லாட்சி, ஏழை மக்களுக்கான ஆட்சி, சாமான்ய மக்களுக்கான ஆட்சி,மத்தியஸ்த குடும்பத்தாருக்கான ஆட்சியை என்னாலும் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு” என்று எம்.ஜி.ஆர் சிலைத் திறப்பு விழாவில் சொன்னதன் மூலமாக...

‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை’ என்று முள்ளும் மலரும் படத்தில் கையை விரித்த ரஜினி - ‘ஒரு கட்சியும் வேண்டாம் கொடியும் வேண்டாம்’ என்று ராஜாதி ராஜாவில் அலட்சியம் காட்டிய ரஜினி - ‘கட்சியெல் லாம் இப்ப நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு’ என்று முத்து படத்தில் லந்து காட்டிய ரஜினி - மொத்தப் பாடல்களையும் பொய்யாக்கி ‘பொன்மனச் செம்மல்’ ஆக முயல்கிறார்.

‘எம்.ஜி.ஆர் எனக்குச் செய்த உதவிகள்’ என்று ரஜினிகாந்த் அந்த விழாவில் வெளியிட்ட நிகழ்வுகள் பலருக்கும் புதியவை. அதே எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் நடந்த சில சம்பவங் களை ரஜினி சொல்லவில்லை. ‘காலம் மறந்திருக்கும், நாமும் மறப்போம்’ என்று நினைத்திருக்கலாம்.

இப்போது மாதிரி அல்ல, அப்போது ரஜினி. நிஜத்திலும் பாட்ஷா மாதிரி இருந்த காலம் அது. அவர்மீது சென்னை ராயப்பேட்டை காவல்நிலை யத்தில் ‘மூக்குத்தி’ பத்திரிகை ஆசிரியர் ஜெயமணி ஒரு புகார் கொடுத்தார். ‘என்னை ரஜினி மிரட்டினார்’ என்பதுதான் புகார். இன்ஸ்பெக்டர் சோமசுந்தரமும், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்டினும் இந்தப் புகாரை விசாரித்தார்கள். 1979-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி ரஜினிகாந்த் கைது செய்யப் பட்டார். ‘ஜெயமணி என்னைத் தாக்கி எழுதினார். காரில் போய்க்கொண்டு இருந்த நான், ரோட்டில் அவரைப் பார்த்தேன். அதுபற்றிக் கேட்க விரும்பி காரைப் பின்பக்கமாகச் செலுத்தினேன்.அவர் செருப்பைக் கழற்றினார். நான் அவரது சட்டையைப் பிடித்தேன்’ என்று ரஜினி வாக்குமூலம் கொடுத்ததாக அன்றைய ‘மாலை முரசு’ நாளிதழ் செய்தி வெளியிட்டது. அன்று கைது செய்யப்பட்ட ரஜினி, உடனடியாக ஜாமீன் பெற்றார். இதேபோலத்தான் ஹைதராபாத் விமான நிலையத்திலும் ஒரு நிகழ்வு நடந்தது. அந்த ரஜினி இப்போது எவ்வளவோ மாறிவிட்டார். அவரை மாற்றியது, அவர் இப்போது சொல்லி வரும் ஆன்மிகமாகவும் இருக்கலாம்!

p16c_1520590933.jpg

ஆன்மிகமும் அவரிடம் பிற்காலத்தில் சேர்ந்ததுதான். ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் (1981 பிப்ரவரி 26) மிகமிக எளிமையாக நடந்தது. அந்த திருமணத்துக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரைத் தான் ரஜினி அழைத்திருந்தார். திருப்பதி கிளம்பிச் செல்வதற்கு முன்னதாக நிருபர்களைத் தனது வீட்டுக்கு வரவழைத்துப் பேசினார் ரஜினி. ‘நீங்கள் யாரும் வர வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார். அப்போது, ‘‘சிறு வயது முதல் எனக்குச் சடங்கு சம்பிரதாயங் களில் நம்பிக்கை இல்லை. திருமணம் என்றால் பல மணி நேரம் மந்திரம் சொல்ல வேண்டும் என்பதை நம்ப வில்லை. என்ன செய்தாலும் தாலி கட்டுவது, மாலை மாற்றுவது எல்லாம் இரண்டு நிமிடங்களில் முடிந்துவிடும். திருமணத்தில் முக்கியமான சடங்கே இதுதான். இது என் கல்யாணத்திலும் உண்டு. சிக்கனமாகக் கல்யாணம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் போதும்’’ என்று சொன்னார். சடங்கு, சம்பிரதாயங்களில் பெரிய நம்பிக்கை இல்லாத ரஜினிதான், இன்று ஆன்மிக அரசியலுக்குத் தேர் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

‘‘ஆன்மிக அரசியல் என்றால் என்ன என்று என்னிடம் கேட்கிறார்கள். உண்மையான, நேர்மையான, வெளிப்படை யான சாதி மதச் சார்பற்ற அறவழியில் நடப்பதுதான் ஆன்மிக அரசியல். தூய்மை தான் ஆன்மிகம். எல்லா ஜீவன்களும் ஒன்றுதான். அனைத்துமே பரமாத்மா. இறைநம்பிக்கை இருப்பதுதான் ஆன்மிக அரசியல்’’ என்று ரஜினி சொல்லியிருப்பது எம்.ஜி.ஆர் சொன்ன ‘அண்ணாயிச’த்தைவிட அதிகக் குழப்பத்தை உண்டாக்குகிறது.

ரஜினி சொல்லும் உண்மை, நேர்மை, அறவழி, தூய்மை ஆகியவைதான் அரசியலுக்கே அடிப்படையானவை. இவற்றுக்கும் ஆன்மிகத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இதில் கூடுதலாக ஒரு வார்த்தையைச் சொல்கிறார் ரஜினி. அதாவது, ‘இறை நம்பிக்கை இருப்பதுதான் ஆன்மிக அரசியல்’ என்கிறார். தமிழ்நாட்டு முதலமைச்சர் நாற்காலியில் இருந்த ஓமந்தூர் ராமசாமி, ஒரு நாளைக்கு ஆறு தடவை இறைவழிபாடு செய்யக் கூடியவர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் பக்தர்தான் பி.எஸ்.குமாரசாமி ராஜா. இராஜாஜி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் பக்தி நாடு அறியும். அண்ணாவும் கருணாநிதியும் மட்டும்தான் நாத்திகர்கள். இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பழுத்த ஆன்மிக வாதி. இன்னும் கட்டப்படாத கோயில் தவிர அனைத்துக்கும் சென்று வந்தவர் ஓ.பன்னீர் செல்வம். இதில் என்ன புதிதாகச் சொல்லவருகிறார் ரஜினி?

அவர் சொல்லாமல் விட்டது, பி.ஜே.பி-யின் முதலமைச்சர் வேட்பாளர் தான்தான் என்பதை. ‘நல்ல ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்’ என்றால், யாரோடு சேர்ந்து? பி.ஜே.பி-தான் அவரது வருகைக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறது. அந்தப் பாதையை முன்கூட்டியே அறிவிப்பது தனக்கு நல்லதல்ல என்று ரஜினி நினைப்பது மட்டுமல்ல, ‘தனக்கும் நல்லதல்ல’ என்று பி.ஜே.பி நினைக்கிறது. க்ளைமாக்ஸ் நேரத்தில் அந்த மர்மம் வெளிப்படும். அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடாது என்பதால், முன் கூட்டியே சொல்லப்படுவது தான் ‘ஆன்மிக அரசியல்’ என்ற முழக்கம்.

பொதுவாகவே மத்திய அரசோடு நட்பில் இருப்பார் ரஜினி. அது எந்த மத்திய அரசாக இருந்தாலும், பகைத்துக் கொள்ள மாட்டார். 1986-ல், ‘ராஜீவ் காந்தி மிகச் சிறந்த அரசியல்வாதி’ என்று பேட்டி அளித்தவர் அவர். அதன்பிறகு 1990-களில் பிரதமராக இருந்த நரசிம்ம ராவைச் சென்று சந்தித்தவர். பிரதமர் வாஜ்பாயும், துணைப் பிரதமர் அத்வானியும் அவரை அடிக்கடி சந்தித்துள்ளார்கள். இன்றைய பிரதமர் மோடி, அவரது வீட்டுக்கே வந்துள்ளார். ‘சிஸ்டம் சரியில்லை’, ‘அரசியல் வெற்றிடம்’ என்றெல்லாம் பேச ஆரம்பித்துள்ள ரஜினி, மத்திய சிஸ்டம் பற்றி வாய் திறப்பது இல்லை. பி.ஜே.பி-க்கு எதிரான எதிர்க்கட்சி அந்தஸ்து வெற்றிடம் பற்றியும் அவர் கவலைப்படுவது இல்லை.

இப்போது தமிழ்நாட்டைக் குறிவைக்கும் காரணத்தை அவரே சொல்லிவிட்டார்... ‘ஜெயலலிதா இறந்துவிட்டார், கருணாநிதி உடல்நலமில்லாமல் இருக்கிறார். அதனால்தான் நான் வருகிறேன்’ என்று. அதற்காகத்தான் ரஜினி, ரஜினியாக இல்லாமல் பி.ஜே.பி ஆசைப்படி எம்.ஜி.ஆராக வருகிறார். இரட்டை இலையை வைத்திருந்தாலும் எடப்பாடியோ பன்னீரோ எம்.ஜி.ஆரின் வாக்குகளை அள்ள முடியாது என்பதை பி.ஜே.பி தலைமை உணர்ந் துள்ளது. அதனால்தான் எந்த வேஷம் போட்டாலும் பொருந்தக்கூடிய சூப்பர் ஸ்டாரை அழைத்து வருகிறார்கள். சொந்த முகமாக இல்லாமல் இரவல் முகமாக இருப்பதுதான் இடிக்கிறது. ஏனென்றால், பல டூப்ளிகேட் எம்.ஜி.ஆர்களைத் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துச் சலித்து விட்டார்கள்.

p16_1520590894.jpg

நடிகர்கள் அரசியலுக்கு வருவதும், அவர்களை அழைத்து வருவதும் தமிழ்நாட்டுக்குப் புதுசு அல்ல. அதில் நின்று நிலைத்தவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு யாருமில்லை. 1984 - 1989 காலகட்டத்தில் என்ன நடந்ததோ, அதுதான் இப்போதும் நடக்கிறது. ‘பாக்யராஜ் என் வாரிசு’ என்று எம்.ஜி.ஆர் அறிவித்ததும், தி.மு.க-வில் டி.ராஜேந்தர் சேர்ந்ததும் ஒரே ஆண்டில்தான் நடந்தது. அதே ஆண்டில்தான் தீவிரமாக அ.தி.மு.க-வில் செயல்படத் தொடங்கினார் ஜெயலலிதா. ‘‘எம்.ஜி.ஆருக்கு அடுத்து எனக்குத்தான் அதிக செல்வாக்கு இருக்கிறது என்று ரசிகர்கள் கடிதம் எழுதுகிறார்கள்’’ என வெளிப்படையாகவே சில்க் பேட்டி அளித்தார். ‘காக்கி சட்டை’ பட வெற்றி விழாவை மதுரையில் நடத்த கமல் வெளியில் கிளம்பினார். காங்கிரஸ் கட்சியிலிருந்து சிவாஜி விலகினார். தமிழக முன்னேற்ற முன்னணி தொடங்கினார். ஜானகியும் அரசியலுக்கு வந்தார். முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டார். ஜெயலலிதாவைச் சந்தித்து ராமராஜன், அ.தி.மு.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார். இதுபோலவே இப்போது நடக்கிறது... ரஜினி, கமல் என்று. 

ரஜினியைச் சூழ்நிலையும் நெருக்கடியும் சேர்ந்து உள்ளே தள்ளிவிடுகின்றன. நெருக்கடி என்பது ஏற்கெனவே சொன்ன பி.ஜே.பி நெருக்கடிகள். சூழ்நிலை என்பது கமல் உருவாக்கியது. அவர்கள் இருவரும் நண்பர்களாகக்கூட இருக்கலாம். ஆனால், அவர்களைச் சமூகம் நண்பர்களாகப் பார்க்கவில்லை. இருக்க விடுவதும் இல்லை; விடப்போவதும் இல்லை. திரையில் இருந்த போட்டி இதோ அரசியலிலும். ‘ரஜினி வந்துவிடுவார்’ என்பதே கமலின் அவசரத்துக்கான தூண்டுதல். ‘கமலே வந்து விட்டாரே’ என்பதுதான் ரஜினியின் வேகத்துக்கான தூண்டுதல். ‘‘இதற்கு மேலும் வராமல் இருந்தால், பயந்து விட்டேன் என்பார்கள்” என்று சொல்கிறாராம் ரஜினி. அவரது பயத்தை பி.ஜே.பி பயன்படுத்திக் கொள்ளப் போகிறது.

p16a_1520590963.jpg

1986-ம் ஆண்டு ஓர் ஆங்கில இதழுக்கு பேட்டி கொடுத் திருந்தார் ரஜினி. சினிமாவில் நடிப்பதை விட கண்டக்டர் வாழ்க்கைதான் தனக்கு அதிகம் பிடித்தது என்று ரஜினி அப்போது சொன்னார். ‘‘நீங்கள் சினிமா துறையில் நீண்ட நாள் நிலைத்து நிற்க விரும்பவில்லையா?’’ என்று கேட்டபோது, ‘‘நிச்சயமாக ஒரு சினிமாக்காரனாகச் சாவதை நான் விரும்பவில்லை. மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன்’’ என்று சொன்னார். ‘‘அப்படியானால் அரசியலில் இறங்குவீர்களா?’’ என்று கேட்டபோது ரஜினி மறுத்தார்.

‘‘அரசியலா? அது ஒரு குப்பைமேடு. நெருப்பில் குதிப்பதற்குச் சமமானது. என்னை ஒரு அரசியல்வாதியாக யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’’ என்று சொல்லி விட்டு ஓர் அதிர்ச்சி தரும் வாசகத்தைச் சொன்னார் ரஜினி. அதை அவரால் மட்டும்தான் திருப்பிச் சொல்ல முடியும்!

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this