Sign in to follow this  

Recommended Posts

சோதனை

 

 

மாலதி தன் வீட்டிலுள்ள பூஜை அறைக்குள் உட்கார்ந்திருந்தாள். கண்களை மூடியபடி இறைவனிடம் பிரார்த்தனைகளைக் கூறத் தொடங்கினாள். பொதுவான  வழிபாடு முடிந்ததும் ஒவ்வொருவர் சார்பிலுமான வேண்டுதலைத் துவங்கினாள்.  ‘‘அம்மாவுக்கு மூட்டு வலி தொடங்கி இருக்கு. அது அதிகமாகாமல்  சரியாயிடணும். இதற்கு உன் அருள் வேண்டும்...’’ கூடத்தில் அம்மா வாய்விட்டு எதையோ அரற்றிக் கொண்டிருந்தாள். ‘‘இப்ப பார்த்து இந்த மாலதிக்கு  நொய்டாவுக்கு மாற்றலாகியிருக்கே. அது எங்கேயோ தில்லியைத் தாண்டி இருக்காமே.  பதவி உயர்வு இப்ப ரொம்ப அவசியமா? சோதனைகளைத்தான் வேண்டிய  மட்டும் அனுபவிச்சாச்சே...’’
8.jpg
கூடத்தில் அம்மா இப்படி தனக்குத்தானே அடிக்கடி உரத்துப் பேசிக் கொண்டிருப்பதும் அதனால் பூஜை அறையில் மாலதியின் தியானம் தடைபடுவதும் அடிக்கடி  நடப்பதுதான். முன்பெல்லாம் அம்மாமீது இது தொடர்பாகக் கோபம் வந்து கொண்டிருந்தது. என்ன செய்ய, கண்களை மூட இமைகள் உள்ளன. காதுகளுக்கு  அப்படியொரு வசதி இல்லையே. ஆனால், சமீபகாலமாக அம்மாமீது கோபம் வருவதில்லை.  தனக்கு அவள் செய்திருக்கும் உதவி, அண்ணனை விட்டு விட்டுத்  தன் வீட்டுக்கு வந்து தங்கியது. இரண்டுமே குறிப்பிடத்தக்கவைதான். மாலதி பிரார்த்தனையைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

‘‘சிறுநீரக அறுவை சிகிச்சைக்குப் பிறகு தன் வீட்டில் ஓய்வெடுக்கும் அண்ணன் முழுமையாக குணமடைய வேண்டும்...’’அம்மாவும் தன் அரற்றலைத்  தொடர்ந்து கொண்டிருந்தாள். ஒருவேளை கூடத்திலிருந்தே அவள் பேசிக் கொண்டிருப்பது கூட கடவுளிடம்தானோ? ‘இந்தக் காலத்திலே இப்படியும் ஒரு  பெண்ணா? அவளும்தான் சம்பாதிப்பதையெல்லாம் தனக்காகத்தான் சேமித்து வைத்துக் கொள்கிறாள். ஆனால், இந்த மாலதி மட்டும் அண்ணனின் மருத்துவச்  செலவுக்காக இப்படி வாரி வழங்கி இருக்கிறாளே. யாராலே இப்படிச் செய்ய முடியும்! இவளுக்குச் சீக்கிரமே ஒரு நல்ல இடத்தில் கல்யாணம் நடக்கணும். 

நடக்குமா? ஈஸ்வரா...’’கடைசி இரண்டு வார்த்தைகளைக் கூறும்போது அம்மாவின் குரல் உடைந்தது. அவள் கண்ணீர் விடுகிறாள் என்பதை மாலதியால் பூஜை  அறையிலிருந்தே உணர முடிந்தது. நல்லவேளையாக அதற்குப் பிறகு கூடத்திலிருந்து எந்த ஒலியும் வரவில்லை. அண்ணனை கவனித்துக் கொள்ள அண்ணி  இருக்கிறாள்தான். தவிர மிக மெதுவாகவே தேறி வரும் மகனோடு கூட இருக்கத்தான் அம்மாவும் விருப்பப்படுகிறாள். தானும் அவர்களோடு இருக்க வேண்டும்  என்பதுதான் அம்மாவின் ஆசை. இந்த ஏற்பாட்டுக்கு அண்ணனும், அண்ணியும் ஒப்புக் கொண்டாலும் அவர்களுக்கு அதில் ஒரு தயக்கம் இருக்கும் என்றுதான்  மாலதி கருதினாள்.

அவர்கள் இப்போதே தன் கண்களைச் சந்திப்பதைத் தவிர்க்கிறார்கள். ஆண்டவனிடம் அடுத்த வேண்டுகோளை முன்வைத்தாள் மாலதி. ‘‘எங்கிருந்தாலும்  கிருஷ்ணா நன்றாக இருக்க வேண்டும்...’’ இந்த வேண்டுதலுக்குப் பிறகு நெடுநேரம் மெளனமாக இருந்தாள் மாலதி. எழுந்திருக்கலாமென்று அவள்  தீர்மானித்தபோது மதுசூதனனின் நினைவு வந்தது. அவளது கல்லூரி நண்பன். மிகுந்த நட்புடன் கண்ணியமாகப் பழகுபவன். தன் திருமணத்துக்குக்கூட  அழைத்திருந்தான். போக முடியவில்லை. அதற்குப் பிறகு மூன்று வருடங்கள் கடந்து விட்டன. 

சென்ற முறை சந்தித்தபோது அவனிடம் ஏதோ ஒரு விரக்தி தென்பட்டது. பேருந்து நிலையத்தில் சந்தடியான பின்னணியில் மாலதி அவனைக் கேட்டாள்.  ‘‘உன்கிட்டே ஏதோ ஓர் ஆழமான வருத்தம் தெரியுது மது. பகிர்ந்துக்கலாம்னா சொல்லு. இல்லேன்னா தப்பு இல்லே... ஒருவேளை நான்கூட தவறாகக் கற்பனை  செய்திருக்கலாம்...’’ ‘‘உன்னுடைய கண்ணியம் எனக்குத் தெரிஞ்சதுதான் மாலதி. கல்யாணமாகி மூணு வருஷம் தாண்டிடுச்சு. பார்க்கிறவங்க எல்லாம் ஒரே  கேள்வியைத்தான் கேட்கறாங்க. சந்தோஷமான பதிலைத்தான் சொல்ல முடியலை...’’

சில நொடிகள் மெளனமாக இருந்த மாலதி ஆறுதலாகக் கூறினாள். ‘‘கவலைப்படாதே. சீக்கிரம் நல்லது நடக்கும். அடுத்த முறை உன்னைப் பார்க்கும்போது நீ  எனக்கு நல்ல செய்தியை சொல்லத்தான் போறே. உனக்காக நானும் வேண்டிக்கிறேன்...’’ மதுசூதனன் நன்றியுடன் தலையசைத்தான். அன்றும் அதைத்  தொடர்ந்து சில நாட்களும் மதுசூதனனுக்காகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்தாள். அதற்குப் பிறகு அண்ணன் சிறுநீரகப் பிரச்னை தொடங்கியது. வீடே  ரணகளமானது. இதில் மதுசூதனனை அவள் மறந்துவிட்டாள் என்பதே உண்மை. ஏனோ இன்று அவன் நினைவு வந்தது.

பிரார்த்தனை தொடர்ந்தது. சாலையில் நடந்து கொண்டிருந்தபோது அன்று மதுசூதனனைச் சந்திப்போம் என்பதை அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ‘‘மை காட். இன்னிக்குக் காலையிலேதான் உன்னைப்பத்தி நினைச்சேன். இப்ப என்னடான்னா கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தமாதிரி என்பாங்களே,  அதுமாதிரி உன்னைச் சந்திக்கிறேன்...’’ என்று வியப்பை வெளிப்படுத்தினாள். ‘‘நல்ல வேளை நீ ஆங்கிலத்திலே இதை வெளிப்படுத்தலே. திங் ஆஃப் தி  டெவில்னு நீ தொடங்கலே...’’ என்றபோது அவன் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. ‘‘வா மாலதி, ஒரு கப் காபியாவது சாப்பிடலாம்...’’ என்றான். 

‘‘வீட்டுக்கே வரலாமே. நான் போடும் காபி இன்னும் நல்லாயிருக்கும்...’’ என்றாள் மாலதி புன்னகையுடன். ‘‘அதிலே எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.  ஆனால், அலுவலக விஷயமா நான் வேறொருவரை சந்திக்கணும். அப்புறம் ஒரு நாள் உன்னைச் சந்திக்கிறேன். அடுத்த மாதம் கங்காவும் இங்கே வந்துடுவா.  நாங்க மூணு பேருமே உன் வீட்டுக்கு வர்றோம்...’’ அருகில் இருந்த ஹோட்டலில் காபிக்கு ஆர்டர் கொடுத்த பின் மேஜையில் மதுசூதனனின் கைகள்  தாளமிட்டன.  மெதுவாக ஒரு பாடலை அவன் விசிலடித்தான். அவன் உடல் மொழியே பெரும் மகிழ்ச்சியை பலவிதங்களில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
‘‘கங்கா எப்படி இருக்காங்க?’’

‘‘அவ இப்ப நல்லாதான் இருக்கா...’’ என்ற மதுசூதனனின் முகம் சட்டென்று கொஞ்சம் இறுகியது. பிறகு ஒரு சிறு இடைவெளிக்குப் பின் மெதுவாக ‘‘அவள்  கருப்பையிலே ஒரு கட்டி. அது புற்றுநோய் கட்டி என்பதால் கருப்பையை நீக்கிட்டாங்க. இது நடந்து ஒரு வருஷம் ஆகுது...’’ என்றான். மாலதிக்கு மிக  வருத்தமாகவே இருந்தது. தன் பிரார்த்தனைக்குச் செவி சாய்க்காத இறைவன்மீது கோபம்கூட வந்தது.  ஏதாவது சொல்லி மதுசூதனனின் வருத்தத்தை மாற்றியாக  வேண்டும். ‘‘மூணு பேரும் என் வீட்டுக்கு வரதா சொன்னீங்களே. உங்க அம்மாவும் இங்கே வரப்போறாங்களா?’’

‘‘இல்ல மாலதி. நானும், கங்காவும் எங்களுடைய மூணுமாசக் குழந்தை ரவிராஜும்தான் உங்க வீட்டுக்கு வரப்போறோம்...’’‘‘என்னது இவ்வளவு நல்ல  விஷயத்தை என்னிடம் ஏன் ஏற்கனவே சொல்லவில்லை?’’ என்று கடிந்து கொண்டவள் இறைவனிடம் மானசீகமாக ஒரு மன்னிப்பைக் கேட்டுக் கொண்டாள்.  அப்போதுான் அவளுக்கு ஒரு முரண் உறைத்தது. ஒரு வருடத்திற்கு முன் கங்காவின் கருப்பை நீக்கப்பட்டது என்றால் இப்போது மூன்று மாதக் குழந்தை எப்படி? குழப்பத்துடன் வெளிப்பட்ட அவள் பார்வையில் கோபமும் கொஞ்சம் புலப்பட்டதை மதுசூதனன் உணர்ந்து கொண்டான்.

‘‘மாலதி, என்னைத் தவறாக நினைக்காதே. நான் இரண்டாவது கல்யாணம் எதுவும் பண்ணிக்கலே. ரவிராஜ் எங்கள் தத்துப் பிள்ளையும் இல்லை. வாடகைத்  தாய் மூலமாகப் பிறந்தவன். அவன் பிறந்து இன்றைக்குச் சரியாக மூன்று மாதங்கள் ஆகுது...’’அட, சரியாக மூன்று மாதங்களா! மாலதி வியந்து கொண்டிருக்க,  மதுசூதனன் தொடர்ந்து கொண்டிருந்தான்.‘‘அவன் வந்தபிறகு கங்காவுக்கும் எனக்கும் வாழ்க்கையிலே எக்கச்கக்க பிடிப்பு வந்துடுச்சு. அவன் சிரிச்சா உலகமே  அழகாத் தெரியுது எங்களுக்கு.

அவன் கீழ் உதட்டின் நடுவிலே இருக்கிற சின்ன மச்சம் அவன் சிரிப்பை மேலும் அழகாக்குது...’’மாலதி வீட்டுக்கு வந்தபோது அவளது இறுகிய முகத்தைக்  கண்ட அவள் அம்மா ‘‘என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு நேரம்?  சாப்பிடலாம் வா...’’ என்றாள். ‘‘சீக்கிரமே நான் நொய்டாவுக்குக் கிளம்பப் போறேன்.  தொலைவிலே இருந்தால்தான் நல்லதும்மா...’’ என்று உடைந்த குரலில் கூறியபடி மாலதி பூஜை அறைக்குள் நுழைவது ஏன் என்று அவள் அம்மாவுக்குப்  புரியவில்லை.  மகளின் கைகள் ஒருவித தவிப்புடன் அவளது அடிவயிற்றைத் தடவிக் கொண்டிருந்ததன் காரணமும் விளங்கவில்லை.

http://www.kungumam.co.in

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this