Jump to content

நன்னயம் செய்துவிடேல்!


Recommended Posts

நன்னயம் செய்துவிடேல்!

 

 
k3

"வரப் போறாளாமா? வரட்டும்... வரட்டும்... நாக்கைப் புடுங்கற மாதிரி நாலு கேள்வி கேக்காம உட மாட்டேன் நான். இப்பதான் ஒடம்பொறப்பு தெரிஞ்சுதாமா? அம்மா செத்துப் போயி இந்தச் சித்திரை வந்தா பதினாலு மாசம் ஆகுது. மொத வருசம் திதி குடுக்கும்போது பாத்ததுதான்... அப்பறம் ஒரு கடிதாசி கூடப் போடலியே? இப்ப கூட வரப்போறோம்னு எதுக்காகப் போட்டிருக்கா தெரியுமா? தேவியம்மா வரப் போறங்கள்ல... நாங்க எங்கியாவது வேற ஊருக்குப் போயிட்டா என்ன செய்யறது? அவ வர்றது வேஸ்டாப் பூடுமில்ல... அதுக்காகத்தான். எல்லாம் ஒரே காரியவாதிதான்.


 ஆமாம்... இப்ப அவளுக்கு எல்லாக் காரியமும் முடிஞ்சு போச்சு... பசங்க எல்லாம் படிச்சு வேலக்கிப் போயிட்டாங்க. கட்டினவனோ பேங்கில ஆபீசரு. பணமோ கூரையைப் பிரிச்சுக் கொட்டுது... கொட்டட்டுமே எனக்கென்னா? ஒன் பணம் பெரிசுன்னா ஒன்னோட... என் காசு என்னோட... என் புள்ளைங்களும்தான் நல்லாப் படிச்சாங்க... இப்ப கல்யாணம் செஞ்சுகிட்டு மாரியாத்தா புண்ணியத்துல நல்லா இருக்காங்க... ஒன்னை மாதிரி லட்சம் லட்சமா சேத்து வைக்கலதான்... ஆனாலும் ஏதோ ஆயிரம் ஆயிரமா வச்சிருக்கோம்ல... நாங்களும் ஒண்ணும் கொறைஞ்சு போயிடல...
 இப்பகூட எதுக்கு வராளாம்? பொண்ணுக்குக் கல்யாணமாம்... பத்திரிகை வைக்க வராங்களாம்... வரட்டும், வரட்டும்... நான் சும்மா மட்டும் இருக்கமாட்டேன்... நல்லா சத்தமா கேக்காம உட மாட்டேன். அவ ஊட்டுக்குப் போனா ஒரு தடவையாவது சண்டை போடாம அனுப்பி வச்சிருக்காளா? கடைசியா எப்ப பாத்தேன்னு சொன்னேன்? ஆமா... அம்மாவுக்கு மொத வருசம் திதி குடுக்கப் போன போதுதான். அதைக் கூட இங்கியே வச்சுக்கலாம்னு சொன்னேன்... அவ கேக்கலயே... அங்க போனா எல்லாம் அவ நாட்டாமைதான். எல்லாத்துக்கும் அவளைக் கேட்டுக்கிட்டுதான் செய்யணும்... அதுக்குதான் அங்கியே வரச் சொல்றா... கேட்டா லீவு கெடைக்காதாம்.
 உசிரு உட்ட எடத்துல காரியம் செஞ்சாப் போதும்டி... வருசத் திதி இங்கியே வச்சுக்கலாம்னு படிச்சுப் படிச்சுச் சொன்னேன்... அவ கேக்கலயே... வாணாம்டி... இங்க மாடுகன்னு இருக்கு, வயலுக்குக் களையெடுக்கணும்... கரும்பு வெட்டணும்... மல்லாட்டையைப் புடுங்கியாந்து போட்டா காவலுக்கு ஆளு வேணும்னு சொன்னேன்... அவ பாட்டைத்தான் அவ படிக்கறா...''


 "எல்லாம் மாமன் பாத்துப்பாரு... நீ வந்திருக்கா'' அப்படி இவரைத் தனியா உட்டுட்டுப் போயி நான்தான் வழிகாட்டிட்டுட்டேன். இல்லன்னா கத்துவா... அவ கடுதாசி போட்ட ஒடனே நாம போயிடணும்... அதுவும் ரெண்டு நாளு நெருக்கத்துலதான் போடுவா... எனக்குப் பேப்பர் திருத்த திருச்சிக்குப் போகணும்... நீ ஒடனே கௌம்பி வர்றது''
 அங்க போன ஒடனேயே பேச்சுல வெஷம்தான் இருக்கும்... ""நான் என்னைப் பாக்கவா வரச் சொன்னேன்... நீ ஒங்கம்மாவைப் பாத்துக்கணும்ல... அதுக்காகத்தான்.''
 அம்மா கீழே ஒண்ணும் படுக்கையில கெடக்கல... ஆனா ஒரு கையி வராது. காலுகூட இழுத்துதான் நடப்பா... ஆனா அதை ஒரு கையை வச்சுக்கிட்டு அவ எம்மா வேலை செஞ்சா தெரியுமா? அவ இல்லாட்டி இந்த ரெண்டு கொழந்தைகளும் அவ வளத்திருப்பாளா?
 வேலையெல்லாம் முடிஞ்சு போயி பசங்க எல்லாம் பெரிய படிப்பு படிக்க வந்தபோதுதான் ஆரம்பிச்சா... அவ கேட்டா கூடப் பரவாயில்ல... அவ புருசன் அதான் நானும் என் ஊட்டுக்காரும் பாத்துக் கட்டிவச்சவருதான், "ஏன் நீங்க கொண்டுபோயி ஒங்க அம்மாவை வச்சுக்கக்கூடாதா? நாங்களேதாம் வச்சுக்கணுமா? நாங்கதாம் ரெண்டு பேரும் வேலக்குப் போறோம்ல... அம்மா இங்க ஊட்ல பகல்ல பூரா தனியாதான இருக்கா... பாவம்தான.''
 அவளாவது ஏங்க இப்படிப் பேசறீங்கன்னு கேக்கல... ""மாட்டாங்க... அவங்கள கூப்பிட்டுக்குட்டுப் போவ மாட்டாங்க... இங்க நம்ம தலையில கட்டிட்டு அவங்க ரெண்டு பேரும் நிம்மதியா இருக்காங்க. நாமதான் ஒடம்புக்கு வந்தா ராக்கண்ணு முழிக்கணும்... வேலக்கும் போயிட்டு வரணும்... அவங்களுக்கு என்னா கெடக்குது?''ன்னுசொல்றா அவ.


 நானும் கேட்டேன்... "ஏன்டி நீதான கல்யாணம் ஆன ஒடனேயே அம்மா என் கூடவே இருக்கணும்னு சொன்னே... இப்ப புள்ளங்க எல்லாம் பெரிசாப் போயிடுச்சேன்னு இப்படிப் பேசறியே''ன்னு கேட்டேன். "அதுக்காக என் தலையிலேயெ கட்டிடணுமா?''ன்னு கேக்கறா.
 என்ன விட பத்து வருசம் பின்னாடி பொறந்தவ மாதிரியா அவ பேசறா... அவளை நான்தான் எங்க போனாலும் அப்பல்லாம் இடுப்புல தூக்கி வச்சுச் சொமந்துட்டு போவேன். அப்பாவும் செத்துப்போயி அம்மாவுக்கும் பக்க வாதம் வந்த ஒடனேயே எந்த ஒறவுக்காரங்களும் வந்து என்னான்னு கூடப் பாக்கல... வந்தா எங்க புடிச்சுக்குமோன்னு எல்லாருக்கும் ஒரே பயம்... அப்ப இவளுக்கு வேற டீச்சரு வேலக்குப் படிக்கறதுக்கு ஆர்டரு வந்திருச்சு... எல்லாரும் போகக் கூடாதுன்னு ஒரே புடிவாதம் புடிச்சாங்க... நானும் எங்க ஊட்டுக்காரரும்தா ஒரு கால்ல நின்னு அவளச் சேத்தோம்... அவ படிப்புல கெட்டி... நல்லாப் படிச்சு வேலைக்கும் போயிட்டா. அவளை மேல மேல படிக்கச் சொன்னவரே எங்க ஊட்டுக்காருதான்... எதோ ஒரு நல்ல எடமா பாத்துக் கல்யாணமும் செஞ்சு வச்சோம்...
 கல்யாணத்துக்கு எங்கப்பாரு பணம் நகையெல்லாம் வச்சிருந்துதான் போனாரு... நாங்க ஒடலுழைப்பைதான் குடுத்தோம். அதுக்கே அவளுக்கு சரியா வரன் ரொம்ப நாளு அமையல... எல்லாரும் அவளுக்குக் கல்யாணம் செய்யவாபோறா அக்காக்காரி... பாத்துடுவோம்னு பேசினாங்க. இப்படி எல்லாம் பேச்சுக் கேட்டுக்கிட்டுதான் நாங்க எல்லாம் செஞ்சோம்...


 மனத்தின் உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. "சரி, அவ உனக்கு எதுவுமே செய்யவில்லையா?''
 "ஐயோ, ஐயோ... அது மாதிரி சொன்னா என் நாக்கு அழுகிப் பூடும்... என் ரெண்டு பசங்களையும் அவதான் டவுன் படிப்பு நல்லா இருக்கும்னு கூட்டிட்டுப் போயி நல்லாப் படிக்கவச்சா... அதுங்களும் அவ பேச்சுக்கு இன்னிக்கும் வேற பதில் சொல்லாது. ஆமாம். எங்க உட்டேன். கூட்டிட்டுப் போயிடுன்னு சொன்னாங்க... நான் ஒண்ணும் பதில் சொல்லல... நாங்களே கிராமத்துல இருக்கோம். இங்க குளிக்க, கக்கூசு போவல்லாம் வசதி கம்மி... டாக்டருகிட்ட போகணும்னா கடலூருக்குதான் போவணும்... இதெல்லாம் நான் சொல்லல... ஒடனே இவருக்குக் கடுதாசி போட்டேன்... காரு ஒண்ணு எடுத்துட்டு வரச்சொல்லி... அவரும் காரோட ரெண்டாம் நாளு வர்றதா பதில் போட்டுட்டு காரோடேயெ வந்துட்டாரு... அவ அம்மாவப் போக உட்டாளா? அப்பறம் அவ பிடிப்பு போயிடும்ல... அனுப்பலங்க... பேச்சு மட்டும்தான் கூப்பிட்டுப்போ கூப்பிட்டுப்போன்னு சொல்றது.


 உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. "சரி, விடு... உன் கூடப் பிறந்தவள்தானே?''
 "அப்படித்தான் நான்தான் எல்லாத்துக்கும் பொறுத்துக்குனு போயிட்டிருக்கேன். அதுக்காக என் மொதப்புள்ளயும் மருமவளும் அங்க பாட்டியைப் பாக்க வந்தவங்கள வச்சுக்கினு என்னா பேச்சுப் பேசினா தெரியுமா?''
 உள்குரல் கேட்டது. ""சொன்னால்தானே தெரியும்?''
 ""நாங்க அவளுக்கு ஒண்ணுமே செய்யலயாம்... அவதான் எங்களுக்கு எல்லாம் செஞ்சாளாம். இதைக் கேட்டு எனக்குக் கோபமே வந்திடுச்சு... ஆனா, "சரிடிம்மா... இத்தோட உட்டுடு. நீயே எல்லாம் செஞ்ச... நாங்க ஒண்ணுமே செய்யல... எனக்குன்னு ஒரு மனச்சாட்சி இருக்கு... அதுக்கு எல்லாம் தெரியும்' னு சொல்லிட்டு நான் அதுக்கப்பறம் ஒண்ணும் பேசல. நான் ஒடனே ஒடனே ஓடினதுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்னு நெனச்சுகிட்டேன். வருசப்பொறப்புக்குக் கூட ஒரு தடவ அவ "மாமன் அங்க தனியாதான இருக்காரு. இங்க வரச்சொல்லேன் அக்கா'ன்னு சொல்ல மாட்டாங்க. கல்யாணத்துக்கப்பறம் யாரும் தனக்கு வாணாம், பணம் போதும்னு நெனச்சுக்கிட்டா போலிருக்கு


 உள் குரல் கேட்டது. "சரி, இப்பொழுது உன் வீடு தேடி வருகிறவர்களிடம் நீ என்ன கேட்கப்போகிறாய்?''
 "என்னா கேக்கப்போறானா? என் மொத மவன் கல்யாணத்துல என்னா ஆட்டம் ஆடினாங்க தெரியுமா? ஆறு மாசத்துல நோயில கெடந்து பொழைச்ச புள்ள அது. பொண்ணு பாக்க அவளையும்தான் கூப்பிட்டுகிட்டுப் போனேன். எல்லாம் சரியாத்தான் இருந்தது. பாக்கு வெத்தல மாத்தி நிச்சயம் செய்யறதுக்கு நாளு வச்சிட்டோம்... அப்ப பாத்து அவளோட நாத்தனாரு ஒருத்தி செத்துப் போயிட்டா... இத்தனைக்கும் அவளோட அவ்வளவா பேச்சு வார்த்தை கூட இல்ல. ஒடனேயே என் தங்கச்சிக்காரியும் அவ புருசனும் நிச்சயம் செய்யற தேதியை மாத்துன்னு சொன்னாங்க... "ஏன்டி செத்துப் போனவங்களுக்குக் காரியம்தான் முடிஞ்சு போயிடுதேன்னு சொன்னேன்... அத்தோட நிச்சயம் நின்னா பொண்ணு ஊட்ல என்னா நெனப்பாங்க... பாவம்''னு சொன்னேன். அதுக்கு, ""நாங்க இன்னும் நாலு பொண்ணு பாத்துச் செய்வோம்... கவலைப்பட்டாதே''ன்னு சொல்றாரு அவரு. எனக்கு ரொம்பக் கோவம்... ஆனா வெளியே காட்டிக்கல...


 நிச்சயம் தேதியை நான் மாத்தாதது அவங்களுக்குக் கஷ்டம்தான். அதுக்காக அதுலேந்து ரெண்டு பேரும் கருவம் கட்டிக்கிட்டு ஆரம்பிச்சுட்டாங்க போலிருக்கு... நிச்சயம் செஞ்சுட்டு புள்ளய ஆசிர்வாதம் செய்ய அவ ஊட்டுக்கு கூப்பிட்டுப் போறோம் நானும் இவருமா... எங்கள வாங்கன்னு கூப்பிடலைங்க... அன்னிக்கு ராவு பூரா நான் தூங்கலிங்க... ஒரே அழுகையாதான் வருது. கூட இருக்கற ஒரே ஒடம்பொறப்பு இவ ஒருத்திதான? இப்படி செய்யறாளேன்னு ரொம்ப வருத்தம். கல்யாணத்துல ஒரே மனசு கஷ்டம்தான். துக்கத்தை அடக்கிக்கொண்டுதான் கல்யாணம் செஞ்சு வச்சோம்.
 அவரு எதுலயும் பட்டுக்கல... எங்க ஊட்டுக்காரருதான் மானம் கெட்டுப்போயி ஒரே சகலருதான இருக்காருன்னு எல்லாத்துக்கும் போயிக் கூப்பிட்டா பெரிய மனுசன் மாதிரி "நடக்கட்டும் நடக்கட்டும்'னு சொல்லிட்டு ஒதுங்கிப் போயிட்டாரு. பொண்ணழைப்பு நடக்குது... யாரோ முன்ன பெரியாதவங்க ஊட்டுல நடக்கற மாதிரி ரெண்டு பேரும் வேடிக்கை பாக்கறாங்க, எங்க மனசு எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கும் சொல்லுங்க? அம்மா அப்பல்லாம் நல்லா நடந்துகிட்டுதான் இருந்துச்சு... ஆனா அம்மாவ அவ்ளோ சுலபமா அவ அழைச்சுக்கிட்டு வந்தாளா? என்னை அழ அழ வச்சா: அம்மாவும் மனசில நூறு ஆசை இருந்தாலும் அவகிட்டதானெ இருக்கணும்னு அடக்கிக்கிட்டா...


 கல்யாணத்துக்கு அன்னிக்கு சாயந்தரம் மவனையும் மருவளையும் கோயிலுக்கு என் அம்மா கூட அழைச்சுக்கிட்டுப் போகலாம்னு சொன்னா அதுக்கு அவ, "அம்மாவால நடக்க முடியாது... ஆட்டோ கோயில் வாசல் வரைதான் வரும்... கோயில் உள்ள நடந்துதான போவணும்''னு மறுத்துட்டா...
 நானும் மனசை அடக்கிக்கிட்டேன் அதையெல்லாம் இப்ப கேக்கணும்தான? கல்யாணம் முடிஞ்சு அவ புருசங்காரன் தாம்பூலம் கூட எடுத்துக்கல... எப்ப ரெண்டு பேரும் போனாங்களோ? யார் ஊட்டுக் கல்யாணத்துக்கோ வந்துட்டுப் போன மாதிரி நடந்துக்கிட்டாங்களே... எம்மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்... வேதனைப்பட்டிருக்கும்? அதை அவங்களும் படணும்ல...
 உள்ளிருந்து குரல் கேட்டது. "அதற்காக என்ன செய்யப்போகிறாய்?''


 "ஒண்ணுமில்ல... பத்திரிகை எடுத்துக்கிட்டு நீங்க ரெண்டு பேரும் என் புள்ள கல்யாணத்தை நல்ல்லா நடத்திக் குடுத்தீங்களே? அதைப்போல நாங்களும் நடத்தறோம்னு சொல்லப்போறேன்... போதும்ல...''
 உள்ளிருந்து குரல் கேட்டது. "அதாவது உன் மகன் திருமணத்தில் நீ அடைந்த மன வேதனையை அவர்கள் வீட்டுத் திருமணத்தில் அவர்கள் அடைய வேண்டும் இல்லையா?''


 "ஆமா... ஆமா...''
 உள்குரல் இப்போதும் கோபமாகப் பேசியது போல் இருந்தது. "அவள் யார்? உன் தங்கை... உன்னைவிட வெளி அனுபவம் குறைவானவள்... அவளுக்குப் பேசத்தான் தெரியும்... நீ தூக்கி வளர்த்தவள் மனம் வேதனைப்பட்டல் அது உன் வேதனை அல்லவா? அவள் வேதனைப்படலாமா?''
 "அதுக்காக அவ என்னைத் துன்பப்படுத்தியது மறந்து போயிடுமா?''
 "அவள் உன்னை விடச் சிறியவள்... அவளுக்காக நீ கேட்ட பேச்சுகள் எல்லாவற்றையும் அவள் பொருட்டுப் பொறுத்துக்கொண்டுதானே இருந்தாய்? அப்பாவும் இறந்துபோய் அம்மாவிற்கும் உடல் நலம் கெட்டுவிட உன் உறவெல்லாம் எப்படிப் பேசினார்கள்... வந்த வரன் எல்லாம் தட்டிப்போய்விட உன் தங்கைக்குத் திருமணம் செய்யும் எண்ணமே இல்லாமல்தான் நீங்கள் இருவரும் இருக்கிறீர்கள் என்றெல்லாம் பேசினார்களே?''
 "ஆமாம் எல்லாம் நெனவுல இருக்கு... என்னை என்னா செய்யச் சொல்றே?''


 "ஒண்ணும் பேசாமல் மகிழ்ச்சியாகப் பத்திரிக்கையை வாங்கிக்கொள்... அவள் குழந்தைகளும் உன் குழந்தைகள் போல்தானே? நீதானே தங்கையை அழைத்துக்கொண்டு வந்து பிரசவம் பார்த்தாய்? அவர்களைவிடச் சிறப்பாக முன்நின்று நீ திருமணத்தை நடத்திக் கொடுத்துக் கடைசிவரை இருந்து மண்டபத்தைக் காலி செய்து வா.''
 "அப்ப என்னை தோத்துப் போடின்னு சொல்ற?''
 "இல்லை... இதுதான் வெற்றி... நீ செய்வதைப் பார்த்து அவர்கள் தாங்கள் முன்பு செய்தது தவறு என்று வருந்த வேண்டும்... நீர் அடித்துத் நீர் விலகிவிடாது. நாம் பெற்ற இன்பத்தைத்தான் பிறர் பெற வேண்டும் என நாமெண்ண வேண்டும். நாம் துன்பம் அடைந்திருந்த சூழலை அவர்களுக்கு நாம் தரக்கூடாது.''
 "அப்படியா செய்யச் சொல்ற?''
 "ஆமாம். அவள் செய்தவற்றால் நீ ஒன்றும் குறைந்து போய்விடவில்லை... நான் சொல்வதுபோல் செய்... உறவும் உள்ளமும் தெளிவாகும்''
 "சரி... செஞ்சுதான் பாப்போம்'' எனச் சந்தேகத்துடனும் சந்தோஷத்துடனும் சொன்னேன்.

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.