Jump to content

பிச்சைக்காறனின் வெட்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாழும் நாட்டுக்கு அகதியாய் நான் வந்த புதுசு, எம்மவர்களுக்கு சொந்தமான ஒரு உணவகத்தில் கோப்பை கழுவும் வேலை கிடைத்தது, வேலை கஷ்டமானதுதான், மனசளவில் அடுத்தவன் சாப்பிட்ட கோப்பையை கழுவுறோமே என்ற சிறு அருவெருப்பும்தான், என்ன செய்ய எனது சூழ்நிலை, என்னை நம்பியிருக்கும் எனது குடும்பத்தின் சூழ்நிலை என்பதை நினைச்சு ஆறுதலடைந்து வேலை செய்யவேண்டிய நிலமை..

வேலை பார்த்தது எம்மவர்களிடம் என்றாலும், எந்த நிலையிலும் அவர்கள் மனசால்கூட என்னை கீழ்தரமாக நடத்தியதில்லை , நல்லவர்கள்!  ஒழுங்கா படிக்காம ஊரைவிட்டு ஓடிவந்த என்னை போன்றவர்களுக்கு வேறு என்ன வேலைதான் பார்க்க தகுதியிருக்கும்? 

வேலைக்கு போகவும் வரவும் பொது போக்கு வரத்துதான், வழமையான போய்வரும் நாளில் ஒருவர்...

‘தமிழோ?’ எண்டு குறுக்க வந்து கேட்டார், நான் ஓம் எண்டேன்...

‘நான் யாழ்ப்பாணம்,அங்கே... ‘இந்த ஊர்’...  தேவையில்லாம பொடியளோட சேர்ந்து திரிஞ்சதால சண்டை,அது,இது எண்டு திரிஞ்சு உள்ள தூக்கி போட்டுட்டாங்கள்.. போன கிழமைதான் வெளியில விட்டவங்கள்..

நான் நல்ல வசதியாய் வாழ்ந்தவன்  கிரிமினல் கேசில சிக்கினதால வீடு ,கார்,வேலை எல்லாம் பறிபோயிட்டுது, மனிசி கோவத்தில பிள்ளைகள கூட்டிக்கொண்டுபோய் , இனி நான் இருக்கிற 2 கிலோமீட்டர் சுற்றளவுக்கு வரகூடாது எண்டு பொலிசில கேசும் பைல் பண்ணீட்டுது, என்ன செய்யுறது எண்டே தெரியல்ல,

சோறும்,உறைப்பு கறியும் சாப்பிட்டே  கனகாலம்,தமிழ்கடையில சாப்பாடு வாங்க சின்ன ஒரு உதவி செய்யுங்கோ எண்டு கண் கலங்கினார்...

என்னால் முடிந்த என்னோட ஒன்றரை மணிநேரத்துக்கு சமமான ஊழிய/ஊதிய தொகையை உடனேயே அவர்கிட்ட கொடுத்தேன்..

நாட்டுக்கு வந்த புதுசில் நம்மவர்களில் பண நெருக்கடியில் 90% பேர் அவரைவிட மோசமான பிச்சைக்காரர்கள்தானே,

..நான் அவர்களில் ஒருத்தன். அது மிக பெரிய தொகை அந்த நேரம் எனக்கு, ஆனாலும் அவர் நிலமையை நினைச்சு சத்தம் வராத குறையா  மனசுக்குள் அழுதிட்டேன்... ஆனால் அவருக்கு சின்னதா ஒரு உதவி செய்ததில் மனசுக்கு திருப்தி.

மூன்று மாதங்களுக்கு பிறகு... வேலைக்கு கொஞ்சம் லேற் ஆச்சு எண்டு விழுந்தடிச்சு தொடரூந்து எஸ்கலேட்டரில் இரண்டு இரண்டு படியாக பாய்ஞ்சு பாய்ஞ்சு ஓடினேன்,  அதே குரல்...

‘’’’

நான் யாழ்ப்பாணம், ‘இந்த ஊர்’...  தேவையில்லாம பொடியளோட சேர்ந்து திரிஞ்சதால சண்டை,அது,இது எண்டு திரிஞ்சு உள்ள தூக்கி போட்டுட்டாங்கள்.. போன கிழமைதான் வெளியில விட்டவங்கள்..

நான் நல்ல வசதியாய் வாழ்ந்தவன்  கிரிமினல் கேசில சிக்கினதால வீடு ,கார்,வேலை எல்லாம் பறிபோயிட்டுது, மனிசி கோவத்தில பிள்ளைகள கூட்டிக்கொண்டுபோய் , இனி நான் இருக்கிற 2 கிலோமீட்டர் சுற்றளவுக்கு வரகூடாது எண்டு பொலிசில கேசும் பைல் பண்ணீட்டுது, என்ன செய்யுறது எண்டே தெரியல்ல,

சோறும்,உறைப்பு கறியும் சாப்பிட்டே  கனகாலம்,தமிழ்கடையில சாப்பாடு வாங்க சின்ன ஒரு உதவி செய்யுங்கோ’’’’’’

அவர் என்னோட முகத்தை மறந்துபோயிட்டார்,

கூட வேலை செய்த நண்பன் சொன்னான் இவர்கள் ஒரு குரூப்பாம், ஒவ்வொரு ஸ்டேசனிலயும் மாறி மாறி  ரொட்டேசனில வருவார்களாம்,ஒருத்தரும் கல்யாணம் கட்டவில்லை, ஒரே காட்ஸ் விளையாட்டு,தண்ணீ,கஞ்சா...கையில காசு இல்லாம போனா மறுபடியும்,’கூட்டு தொழில் முயற்சி’!

 ஒருவர் முதல் பிச்சை எடுத்த இடத்துக்கு வர மூன்று மாதம் ஆகுமாம்,  சோறு கறிக்கு என்று அவர்கள் கேட்கும் சிறிய தொகை ஒரு குப்பி விஸ்கி வாங்குவதற்கு சமமான தொகையாம்...

அதனாலதான் அந்த தொகையை குறிவைத்து கேட்கிறார்களாம் என்றான்...

ஒரு நிமிஷம்  எச்சில் கோப்பை கழுவுற என்னை ஏமாத்திட்டாங்களே என்ற கோவம் வந்தது...

ஆனாலும், இங்கே புலம்பெயர்ந்து கோடீஸ்வரர்கள் தொடங்கி ,குட்டி குட்டி பணக்காரர்கள், கல்வியாளர்கள்,தொழில்நுட்ப வல்லுனர்கள் என்று இப்போது வாழும் பலரின் வண்ணமிகு புலம்பெயர் வாழ்விற்கு பின்னால்,அவர்களின் ஆரம்ப புலம்பெயர் நகர்விற்கு  நேரடியாகவும்/மறைமுகமாகவும்.. 

பல வருஷங்கள் முன்னாடி புலத்திற்கு வந்து கோப்பை கழுவி உதவி செய்த  பல கடின உழைப்பாழிகளின் கடன் உதவி இருந்திருக்கும் என்ற அசைக்கமுடியாத ஒரு நம்பிக்கை, அப்படி ஒன்றும் நீ அசிங்கமானவன் இல்லை என்று சொல்லி என்னை ஆசுவாசபடுத்தியது..

யாழ்களத்தின் 20_வது அகவையில் சுய ஆக்கங்கள் பலதை படைக்கும் ஒவ்வொருவரும்,சாதாரண கருத்து பகிர்வோரைவிட  எழுத்தாற்றலில் கண்டிப்பாக எல்லோரையும்விட ஒருபடி ஆற்றல் மிக்கவர்களே...

விசுகு அண்ணா, உங்களது சுய ஆக்கம் நிச்சயமாக வித்தியாசமானது/ விவாதத்துக்குரியது,

அதனாலதானே பலபேர் தொடர்ந்து கருத்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள், அதில் நானும் ஒருத்தன்!

 

Link to comment
Share on other sites

வளவன், இவ்வளவு எழுதியுள்ளீர்கள். சுயமான ஆக்கம் படைக்கும் திறமை உங்களிடம் உள்ளது.

முன்னர் சொன்னது போன்று ஒருசிலருக்கு மட்டும் பிச்சை போட்ட இதே போன்றதொரு அநுபவம் எனக்கும் ஏற்பட்டது. 

ஒரு நாள் வேலை நிமித்தமாக பரிசின் தென் பகுதிக்குச் செல்லவேண்டியிருந்தது. அதிகாலை 7 மணிக்கு அங்கு நிற்க வேண்டியிருந்ததால் 6.30 ற்கு அங்குள்ள ரெயில் நிலையத்திற்கு வந்துவிட்டேன். எந்தத் திசையில் போக வேண்டும் என்று கூகிளிடம் கேட்டுக் கொண்டிருந்தபோது வணக்கம் அண்ணா என்ற தமிழ்க் குரல் கேட்டது. 30 வயது மதிக்கத்தக்க சாதாரண உடை அணிந்த ஒருவர் பணிவுடன் அருகில் நின்றிருந்தார். அவரின் முதல் வசனமே அவரைப் பாண்டிச்சேரித் தமிழராகக் காட்டியது. 

அவர் சொன்ன கதை சுருக்கமாக : நான் என் குடும்பத்துடன் பாரீசிலிருந்து 200 கிலோமீற்றரில் இருக்கிறேன். எனது இருப்பிட முகவரி இங்குள்ள ஒருவரின் வீட்டில் உள்ளது. நேற்று விசா எடுப்பதற்காக என் குடும்பத்துடன் நேற்று வந்தேன். மறுபடி அதிகாலை வருமாறு கூறினார்கள். திரும்பவும் எனது இருப்பிடத்திற்குப் போய் வர வசதியில்லை. வேறு யாரயும் இங்கு தெரியாது. அருகிலுள்ள தேவாலையத்தில் இரவு தங்கியிருந்தோம். கடைசிப் பிள்ளைக்குப் பால்மா வாங்கப் பணமில்லை. தயவு செய்து உதவி செய்ய முடியுமா ? நாங்கள் எப்படியாயினும் சமாளித்துக் கொள்கிறோம். ஆனால் குழந்தைக்குப் பால்மா இல்லாமல் சமாளிக்க முடியாது. 8 மணிக்கு அருகிலுள்ள பார்மசி ஒன்று திறக்கும், அங்கு பால்மா வாங்க வேண்டும். என்றார். இறுதி வசனம் சொல்லி முடிக்கும்போது அவர் குரல் தளதளத்தது. கண்களில் நீர் நிறைந்தது. எனது கண்களும் ஈரமாயின. நேரம் அதிகமில்லை. 20 யூரோத் தாள் ஒன்றே இருந்தது. தயக்கமின்றி அவரிடம் நீட்டினேன். நன்றியுடன் பெற்றுக் கொண்டார்.

ஆபத்தில் இருந்த ஒருவருக்குத் தக்க தருணத்தில் உதவிய எனது பெருந்தன்மையை நானே மெச்சியபடி வீறுநடை போட்டுக் கொண்டிருந்தேன்.

சில மாதங்களின் பின்னர், எனது வழமையான ரெயில் நிலையத்துக்கு அருகில் தமிழர் ஒருவரைத் திடகாத்திரமான ஆபிரிக்க இளைஞன் ஒருவன் கட்டியணைத்து ஆறுதல் செய்துகொண்டிருந்தான். அவன் கண்களிலும் கண்ணீர். அடடா இது நாம் உதவி செய்த பாண்டிச்சேரித் தமிழர் அல்லவா ? 

ஒரு கணத்தில் அந்த இளைஞனிடம் போய் இவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்று கூறுவோமா என்று தோன்றியது. அடுத்த கணமே அடக்க முடியாமல் வாய்விட்டுச் சிரிக்க வேண்டும்போல் தோன்றியது. தமிழன் ஒருவர் ஆபிரிக்கன் ஒருவனை ஏமாற்றுகிறான் என்ற அற்ப சந்தோசமோ அல்லது என்னைவிடச் சாமானியன் ஒருவன் ஏமாற்றப்பட்டு விட்டான் என்ற சுய இன்பமோ தெரியவில்லை. அவர்களைத் தாண்டி ஏதும் தெரியாததுபோல் நடந்து சென்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, இணையவன் said:

முன்னர் சொன்னது போன்று ஒருசிலருக்கு மட்டும் பிச்சை போட்ட இதே போன்றதொரு அநுபவம் எனக்கும் ஏற்பட்டது. 

 

இரு வேறு நாடுகளில் வாழ்ந்தாலும், நாங்கள் இருவருமே சேர்ந்து ஒரே அனுபவத்தை சந்தித்திருக்கிறோம், 

இப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை என்று இனி எவரும் வந்து குறுக்கே சந்தேகங்களை எழுப்பமுடியாதபடி,

 அனுபவத்தை பகிர்ந்த உங்களுக்கு நன்றி இணையவன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வெயில் காண்டவன நேரம் ரோட்டில் கானல் நீர் தகித்துகொண்டு இருந்தது ஊரின் எல்லையில் இருந்த வீட்டில் இருந்து கவனித்த போது ஒரு பெண் குடையுடன் தனித்து நடந்து வருவது தெரிந்தது வந்தவ தயக்கத்துடன் உங்க அம்மா அப்பாவுடன் கதைகலாமோ என்று கேட்க்க நம்ம காவலாளி பயல்கள் மத்தியான நேர சாப்பாட்டு கடுப்பில் இருந்தவை பாய்ந்துவர அந்தபெண்ணோ பயத்தில் ஒருவித ஆற்றாமையில் பெரும் குரலெடுத்து சத்தமிட நாங்களும் எங்கள் பங்குக்கு பாய்ந்து வந்த நாய்களை  விரட்ட ரெண்டும் முன்னாள் வீட்டில் உள்ள வேலியை கண்ணிமைக்கும் நேரத்தில் துவாரம் போட்டபடி காணாமல் போயின .

 

அதற்கிடையில் பக்கத்து வீட்டு ஆட்கள் சத்தம் கேட்டு வந்துவிட்டனர் .அந்த பெண்ணோ நாகரீகமாக சாறி அணிந்து தலை குனிந்து ஹாலில் இருந்து தண்ணீரை அருந்தும்போது ஒரு அவசரம் தெரிந்தது.அப்பத்தா கிழவி வழக்கம்போல் அம்மாவை திட்டிக்கொண்டு இருந்தா அதற்குள் மாமர் சைக்கிளில் வந்து கிழவிக்கு ரெண்டு டோஸ் விட்டபடி உள் ஹோலுக்கு வரவும் அந்த பெண் மறுபடியும் கைகளை விசித்திரமாக வளைத்து வணக்கம் சொல்லியபடி எலும்ப  இருக்க சொல்லியபடி மாமர் அமர்ந்துகொண்டு நீங்கள் தானே வாடகைகாரில் சந்தியில் வந்து இறங்கினநீங்கள் என்று கேட்க்க ஓம் என்று தலையாட்டினா. மறுபடியும் நாய்கள் அரவம் கேட்க்க உனக்குத்தான் அடங்குங்கள் இவ போகும் மட்டும் கட்டில் போடு என்று மாமர் சொல்ல சங்கிலியை கையில் எடுத்தவுடன் நாய்கள் குரங்காகி விடும் நம்ம வீட்டில் என்று அம்மா அடிக்கடி சொல்வது உண்டு அன்று எனக்கு ஏகத்துக்கு போக்கு காட்டி பிடிபட்டன இரண்டும் .

 

வீட்டுக்குள் புகும்போது திமிர் பிடிச்ச அப்பத்தாவே அழுதுகொண்டு இருந்தது அதிசயமாய் இருந்தது . என்ன என்று அங்கிருந்த ஆட்களை பார்த்தபோது  அந்த பெண் ஒருவிதமாய் ஒரு கையால் மறு கையை மூளை சுகமில்லாதவர்கள் போல் தேய்த்துக்கொண்டு இருந்தா கொழும்பு கலவரத்தில் அவர்களின் வீடு எரிந்துவிட்டதாம் கணவனின் ஒரு காலை சிங்களவர்கள் வெட்டி விட்டார்களாம் ஆள் இப்ப பெரியாஸ்பத்திரியில் இருக்கிறாராம் இவ பரத நாட்டிய ஆசிரியாராக வேலை பார்த்தவராம் இரண்டு பெண்ணும்  இரண்டு பொடியளுமாய் நான்கு பிள்ளைகள் இங்கு நீர்வேலியில் பரம்பரை வீடு ஒன்று உள்ளது அங்கிருப்பவர்கள் உள்ளே விடுகிறார்கள் இல்லையாம் தற்போது kks உள்ள தற்காலிக தங்குமிடத்தில் பிள்ளைகளும் தாயும் இருக்கினம் என்று சின்னவன் முழு விபரமும் சொன்னான் .உடனே துணைக்கு  ஓரிரு பெண்களுடன் அந்த பெண்ணையும் அழைத்துக்கொண்டு நீர்வேலிபக்கம்  கார் புழுதியை கிளப்பிக்கொண்டு போனது மனதும் அந்த சம்பவத்தை மறந்துவிட்டது . கொஞ்ச நாள் கழித்து மாமர் சைக்கிள் கரியரில் ஒரு செவ்வாழைப்பழ குலையுடன் வந்த இறங்க அப்பத்தா கிழவி அந்த கொழும்பு பிச்சைக்காரியிடம் வேண்டிக்கொண்டு வருகிறாய் ஆக்கும் என்று நக்கல்  சவுண்டு விட மாமரும் ஓம் அவை இப்ப பழைய வாழ்க்கைக்கு வந்து விட்டினம் அயலவர்களுக்கு ஒவ்வொரு சீப்பாய் வெட்டி வெட்டி அனுப்பிக்கொண்டு இருந்தார் . நீண்ட காலம்களுக்கு நாப்பது வருடம்களுக்கு மேல் இந்த தலையங்கத்தை காணும் வரை அந்த பெண் எப்படி முகத்தை வைத்து உதவி கேட்டு இருப்பா ?    ...........................கடைசி மட்டும் இந்த தலையங்கத்தில் உள்ளது போல் இருக்காது  என்று மனது நினைத்து கொள்ளுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

ஒரு முறை... நான்  வீட்டு வாசலில் உள்ள வீதியை....  கூட்டிக்  கொண்டு இருந்த போது, 
60,000 ஐரோ  பெறுமதியான காரில், வந்த ஒருவர்...
நான்... வேறு மாநிலத்தில் வசிப்பவன்,
எனது... அம்மா, இந்த ஊரில் தான்... வசிக்கின்றார். 

ஒரு,  பூங்  கொத்து வாங்க    20  ஐரோ  ....  தர முடியுமா?  
வரும் போது... தனது  பணத்தை எடுத்து வர மறந்து விட்டேன்.  உன்னால் முடியுமா? என்று கேட்டார்.

அதற்கு அத்தாட்சியாக தனது, அடையாள அட்டையை... தந்து விட்டுப் போய்...
திரும்ப... அந்தப் பணத்தை தரும்,  போது ....  அடையாள அட்டையை   திரும்ப பெற்றுக்  கொள்கின்றேன் என்ற மனிதனின் சோகம் புதைந்த  முகம், இன்றும் கண் முன் நிற்கின்றது.

உண்மைதான்  சிறி

ஒவ்வொரு கணமும் மனித  வாழ்வு எம் கண்  முன்னே இவ்வாறே  நகர்கிறது

அவற்றில் ஒருசில  பாடாகப்படுத்துகிறது

நன்றி சிறி

நேரத்துக்கும் கருத்துக்கும்

18 hours ago, கலைஞன் said:

தெருவில் ஆங்காங்கே சந்திகளில், கடுகதிபாதை முடிவடையும் இடங்களில் உதவுமாறு கேட்டு எழுதப்பட்ட மட்டைகளை பிடித்துக்கொண்டு ஆட்கள் நிற்பார்கள். நான் சில்லறை காசு இருந்தால் ஒரு டொலரோ இரண்டு டொலரோ எனக்கு விருப்பம் என்றால் கொடுப்பேன்.

நான் ஒருமுறை அமெரிக்காவில் நின்றபோது மிகப்பெரியதொரு பாதையில் ஓர் பெண் சுமார் முப்பது வயது இருக்கும் அழுக்கடைந்த உடை, மிகவும் வெட்கத்துடன் வாகனத்தில் வருபவர்களை பார்த்துகொண்டு இருந்தார் ஏதும் தருவார்களா என்று. எனது வாகனம் 75 நீளமான பாரவூர்தி. என்னை கிட்ட அணுகவும் இயலாது. ஆனால், எனக்கென்னவோ அந்தப்பெண்ணை தூரத்தில் கண்டதும் எனது உள்ளுணர்வு கூறியது அவளுக்கு சிறுதொகை கொடுக்கவேண்டும் என்று. நான் கோனை அடித்து சைகைகாட்டி கூப்பிட்டேன். சிரமப்பட்டு எனக்கு கிட்டவாக வந்தாள் பாதைகள கடந்து; நான் பத்து அமெரிக்க டொலர்களை கொடுத்தேன். அவள் விறுக்கென்று வாங்கிவிட்டு என்னை ஒரு பார்வை பார்த்தாள். கண்களில் பிரகாசம், ஒரு ஒளி; இருவருக்குமிடையிலான கண்தொடர்பு அந்த உரையாடல் ஒரு செக்கனே, நான் எனது மார்க்கத்தில் பயணிக்க அவள் தன்வழியில் சென்றாள். அது ஆத்மார்த்தமான ஒரு வினாடி.

நான் ஆட்கள் தெருவில் உதவி கேட்டு நிற்கும்போது அவர்களை மதிப்பீடு Judge பண்ணுவது இல்லை. நான் நூற்றுக்கணக்கிலோ அல்லது ஆயிரக்கணக்கிலோ கொடுக்கப்போவது இல்லை, உதவி கொடுப்பதும் எப்போதாவது. ஒரு நாளைக்கு எத்தனைவிதமாக எல்லாம் நான் காசை செலவளிக்கின்றேன். என்னைப்போன்ற ஒரு ஜீவன் தெருவில் வந்து வெட்கத்தைவிட்டு உதவி கேட்கின்றது. அதற்கு ஒரு டொலரோ இரண்டு டொலரோ கொடுத்தால் எனது குடிமூழ்கிவிடாது. அதேசமயம் எம்மிடம் எத்தனை கோடீஸ்வரர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ பகல்கொள்ளை அடிக்கின்றார்கள். அவர்களை எண்ணி பார்க்கையில் ஒருவனுக்கு சில ரூபாய்களை கொடுப்பது ஒன்றும் பெரிய பாரதூரமான விடயம் இல்லை. 

உங்கள் காசு, உங்கள் உழைப்பு, கொடுப்பது கொடுக்காதது உங்கள் விருப்பம். ஆனால், நான் உங்களுக்கு கூறக்கூடிய ஒருவிடயம் அடுத்ததடவை யாருக்காவது உதவி செய்யும்போது அவர்களின் கண்களை பாருங்கள். கண்களினூடு அந்த ஆத்மனுடன் உறவாடுங்கள். Eyes are the windows to the soul. இந்த வாழ்க்கை குறுகியது. நான் சாகும்போது ஒன்றையும் கொண்டுபோகப்போவது இல்லை. 

 

அந்த  கலங்கிய  கண்கள்  இப்பவும் குடுக்கச்சொல்கின்றன

அவரை  மீண்டும் காணவில்லை

வழமையாக  வருபவர்கள் வந்தவண்ணமே இருக்கிறார்கள்

அவர்  மீண்டும்  வந்தால்  நான் ....??

வராதவரை  அவரது கண்கள் எனக்கு ஞாபகமிருக்கும்

 

எல்லோருமே  இவற்றை  கவனித்திருக்கின்றோம்

யோசித்திருக்கின்றோம்

மனதுக்குள் போராடி  இருக்கின்றோம்

 

நன்றி கலைஞன்

நேரத்துக்கும் கருத்துக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழில் நின்றபோது ஒரு பெண் பின்னால் வந்து கையை நீட்டினார். பார்க்க அவர் நிலை மோசமாக இல்லை. என்றாலும் அவர் கேட்டவுடன் நான் என் கைப்பையைத் திறக்க என்னுடன் வந்த கணவர் நேற்றும் இதே மனிசிக்கு நீ குடுத்தனி. இண்டைக்கு வேண்டாம் வா என்றார். எனக்கோ கை நீட்டிய பெண்ணுக்கு எதுவும் கொடுக்காது செல்ல மனம் இடங்கொடுக்கவில்லை. கணவர் கூறியது அந்தப் பெண்ணுக்குக் கேட்டதுபோல. சரியான பசி. இரண்டு பிள்ளையள் பசியோடு இருக்குது என்றவுடன் வாருங்கள் என்று அவரைக் கூட்டிச் சென்று மலேயன் கபேயில் அவருக்கு மூன்று உணவுப் பொதிகள் வாங்கிக் கொடுத்துவிட்டு ஆயிரம் ரூபாய் தாளையும் ஒன்றைக் கொடுத்துவிட்டு வர நீ திருந்தமாட்டாய் என்றார் கணவர். எவ்வளவு காசைச் செலவளிக்கிறம். இது ஒரு மனத் திருப்தி என்றுவிட்டு நடந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நிஜ பிச்சை காரர்களையும் போலியாக  நடிப்பவர்களையும் இனம் காண நாம் தான் தடுமாறுகிறோம்.  பிச்சை எடுத்து , சேமித்து இறக்கும் போது  கோடிக்கணக்கான   பணம்   வங்கியில்இ ருந்ததையும்  கேள்விப்பட்டு இருக்கிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிலாமதி said:

 நிஜ பிச்சை காரர்களையும் போலியாக  நடிப்பவர்களையும் இனம் காண நாம் தான் தடுமாறுகிறோம்.  பிச்சை எடுத்து , சேமித்து இறக்கும் போது  கோடிக்கணக்கான   பணம்   வங்கியில்இ ருந்ததையும்  கேள்விப்பட்டு இருக்கிறோம். 

டெல்லி: டாப் டென் பணக்காரர்கள் லிஸ்ட்டுகளை பார்த்து இருப்பீர்கள். ஆனால் இந்தியாவின் டாப்-5 பணக்கார பிச்சைக்கரர்கள் லிஸ்ட் பார்த்திருக்கிறீர்களா? பிச்சை எடுத்து கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றனர். அவர்களை பட்டியலிட்டு டாப் 5 பிச்சைக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/india/top-5-richest-beggars-india-better-than-sw-job/articlecontent-pf157324-227611.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏமாந்திருக்கிறேன் பிச்சைய்க்காரர்களிடமல்ல (மன்னிக்கவும்,இவர்களை பிச்சைய்க்காரர்கள் என்று சொல்ல விரும்பவில்லை ) சீட்டுக்காரர்களிடமும் உறவுக்காரர்களிடமும். அதனால் அவர்களைவிட இவர்கள்மேல் எப்போதுமே எனக்கு மதிப்பும் மரியாதையுமுண்டு. சாப்பாடு வாங்க தேவையான பணம் குடுப்பேன் அல்லது ரெஸ்டூரண்ட் டிக்கட் கொடுப்பதுண்டு, (நானே என்ர பொடியலிட்ட  புடுங்கிறது). ஒருபோதும் சில்லறை தந்து என்னையும் அவர்களையும் வித்தியாசப்படுத்த  நினைப்பதில்லை.அன்று வசதியில்லை என்றால் மன்னிக்கவும் பிறகுவாறன் என்று சொல்லிவிட்டு போய்விடுவேன்....!

அப்படியே இங்கு பெரிய கடைகளில் சேவை அமைப்புகள் வண்டில்கள் வைத்திருப்பினம். அதற்குள் பால், நூடில்ஸ் அல்லது குஸ்குஸ் போன்றவற்றை வாங்கி கொடுப்பதுண்டு.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு வின் அனுபவப் பகிர்வு அழகு.

வாழ்த்துகள்...

புலம்பெயர் நாட்டில் பிச்சை போடுவது அரிது.

ஒரே ஒரு முறை தான் போட்டு இருக்கிறேன்.

கதைகள் சொல்லி பிச்சை கேட்கவில்லை.

பிச்சைக்காரரின்  கண்களை  தற்செயலாக பார்த்த போது....  கெஞ்சல் பார்வை ... கலங்கிய பார்வை...  பார்க்க முடியாமல் போய்விட்டது.  குடிபோதையில் இருந்த கண்களா....! ம்.... தெரியவில்லை.

அப்போது  பிச்சை போட்டது.

அன்றில் இருந்து பிச்சை போடுபவர்களின் கண்களை பார்ப்பது இல்லை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பிச்சை போடுவது மிகவும் குறைவு.  அவுஸ்திரெலியாவிற்கு புலம் பெயர்ந்தபோது ,ஒருமுறை சிட்னியில் இருந்து 90நிமிடப்பயண தூரத்தில் இருக்கும் புளுமவுண்டன் பகுதியில் இருக்கும் "3 சகோதரிகள் " என்று அழைக்கப்படும் சுற்றுலா இடத்துக்கு , சென்றிருந்தேன்.  அங்கே அவுஸ்திரேலியா ஆதிக்குடிமகன் ஒருவன் இசைக்கருவியினை வாசித்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். ஆளைப் பார்க்க நன்றாக சுத்தமாகவே இருந்தான்.  ஒரளவு வசதியாகவும் இருந்தான். ஆனாலும் அவன் , ஏனோ எனக்கு பரிதாபகமாகத் தெரிந்தார்.  அவனையும், என்னையும் ஒன்றாக ஒப்பிட்டுப்பார்த்தேன். நான் பிறந்தமண்ணில் ,  அன்னியவனான  சிங்களவன் ஆட்சி செய்கிறான். என்னுடைய உறவுகளை அழித்து, சொந்த இடங்களை அபகரித்து, கல்வியிலே தரப்படுத்தல்கொண்டுவந்து உயர்கல்விக்கு வேட்டுவைத்து ,எங்களை இரண்டாம் பிரசையாக வைத்திருக்கிறான். இதே போல பிரித்தானியாவில் வந்த வெள்ளைகள் , ஆதிக்குடிமகனின் நாட்டுக்குவந்து அவர்களின் இனத்தினை, மொழியை , மதத்தினை அழித்து, பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை அபகரித்து , அடிமைகளாக நடாத்தி இப்பொழுதுதான் அவர்களுக்கு ஓரளவு சுதந்திரம் வழங்கியிருக்கிறான்.  கையில் இருந்த  20 வெள்ளிகளையும் அவனுக்கு வழங்கினேன் .   நாங்களும், வெள்ளைகளும் இங்கே குடியேறி பிரசாவூரிமையுடன் வாழ்கிறோம். ஆனால்  இந்தமண் அவனது மண். சிங்களதேசத்தில் இல்லாத சுதந்திரத்தை எனக்கு தந்த அவுஸ்திரெலியா மண்ணின் உண்மையான மைந்தனொருவனுக்கு மிகவும் சிறிய உதவி செய்ததை  நினைத்து இன்றும் நான் திருப்தியடைகிறேன்  .   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/16/2018 at 8:24 AM, புங்கையூரன் said:

விசுகரின் அனுபவம்...ஒரு அருமையான பகிர்வு!

எவ்வளவு தான் இறுக்கிப் பிடித்தாலும்....மனிதம்...சில வேளைகளில் தன்னை...இனங்காட்டிக் கொள்கின்றது!

அது தான்...இந்த உலகத்தை இயக்கிக் கொண்டுமிருக்கின்றது!

எனக்கு மூன்று குழந்தைகள்....ஆபிரிக்காவில் இருக்கின்றன!

இரண்டு வளர்ந்து ...தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளும்..நிலைக்கு வந்து விட்டன!

மூன்றாவது குழந்தைக்குப் ...பதினோரு வயதாகின்றது!

உங்களுக்கு ஒருபிள்ளை என்றுதானே இவ்வளவு காலமும் நினைத்தேன்.  புதுக்கதையாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கந்தப்பு said:

உங்களுக்கு ஒருபிள்ளை என்றுதானே இவ்வளவு காலமும் நினைத்தேன்.  புதுக்கதையாக இருக்கிறது.

இதில் போய்ப்பாருங்கள், கந்தப்பு!

நீங்களே உங்களுக்குப் பொருத்தமான குழந்தையைத் தெரிந்து கொள்ளலாம்!

https://www.worldvision.org/sponsor-a-child

 

இலங்கையிலும் கூடக் குழந்தைகள் இருக்கிறார்கள்! 

image.thumb.png.81ece5734cac457d576e07290c2d6e99.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புங்கையூரன் said:

இதில் போய்ப்பாருங்கள், கந்தப்பு!

நீங்களே உங்களுக்குப் பொருத்தமான குழந்தையைத் தெரிந்து கொள்ளலாம்!

https://www.worldvision.org/sponsor-a-child

சில காலம் யாழ்ப்பக்கம்  வரவில்லை. உங்களைத் தப்பாய்நினைத்துவிட்டேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.